Wednesday, December 31, 2008

கொலை

"கொலையைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன்" என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் பேராசிரியர் முத்து என்பவர் அமெரிக்காவில் இருந்து ஒருமுறை அதைப் பற்றிக் கேட்க, நான் எழுத வேண்டியதாயிற்று. இப்பொழுது பழையதைக் கிண்டிக் கொண்டிருந்த போது, இதை வலைப்பதிவில் போடலாமே, பலருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்தி தானே என்று தோன்றியது. இப்பொழுது சிறு சிறு மாற்றங்கள் செய்து அதை இங்கு இடுகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் விதப்பான (special) சில சொல்லாட்சிகள் உண்டு. இந்தச் சொல்லாட்சிகள் அந்தந்த மொழி பேசும் மக்களின் தனித்த சிந்தனையாலும், குமுகச் சிந்தனையாலும் ஏற்படுகின்ற சில புதிய பொருட்பாடுகளை (meanings) முன்வைத்து புழக்கத்திற்கு வருகின்றன. இந்தச் சொல்லாட்சிகள் எழுந்தமுறை மிக எளிதாகவே இருக்கலாம். இருப்பினும் இரண்டு வெவ்வேறு சொற்களை ஓரிடத்தில் அடுத்தடுத்துப் பொருத்தும் போதோ, அல்லது ஒரு அடிப்படையில் தோன்றிய கருத்தை இன்னொரு நிகழ்விற்கு உருவகம் செய்யும் போதோ, புதிய பொருட்பாடு அந்த மொழிக்கென வந்து விடுகிறது.

இரண்டு சொற்களைப் பொருத்தி முற்றிலும் புதிதான ஒரு பொருட்பாடு கொள்வதற்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டைக் கீழே கொடுக்கிறேன்.

"உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது பையன்?" இந்த வாக்கை எப்படி முயன்றாலும் ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். இந்த "எத்தனையாவது" என்ற சொற்கூட்டில் "எத்தனை" என்பதையும் "ஆவது" என்பதையும் தனித்தனியே ஆங்கிலத்தில் பெயர்க்க முடியும். ஆனால் சேர்ந்து வரும் போது ஒரு புதிய பொருட்பாடு வருகிறது பாருங்கள். அதைத் ”தமிழுக்குரிய விதப்பு” என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? (இது போல ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் போதும் சில இடையூறுகள் உண்டு.)

உருவகத்தால் வரும் புதிய பொருட்பாட்டிற்கும் இங்கே ஒரு எடுத்துக் காட்டைக் கொடுக்கிறேன்.

எதிர்பாராத தன்னேர்ச்சி (accident) ஒன்று நாம் போகும் சாலையில் நடக்கிறது; ஒருவர் சாகக் கிடக்கிறார். அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று இன்னொருவர் பார்க்கிறார். கூட்டத்தில் நிற்கும் மற்றொருவர் சென்னைத் தாழ்நிலை மக்களின் பேச்சுவழக்கில், "இன்னாபா, மெய்யாலுமே பூட்டானா?" என்று கேட்கிறார். . உயிர் போவதை "போய்விட்டார்" என்ற சொல்லால் தமிழில் இப்படி உணர்த்துவதை எவ்வளவு தலை கீழாக நின்றாலும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியுமோ? இத்தனைக்கும் ஆங்கிலத்தில் இதற்கு "gone" என்ற நேரடிச் சொல் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்ற உருவகம் இங்கே உள்ளடங்கி நிற்பதை நாம் உணருகிறோம் அல்லவா? (இதே போல ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மொழியை அப்படியே தமிழில் பெயர்க்க இயலாத நிலைகள் உண்டு.)

குமுகச் சிந்தனையில் கிளரும் பொருட்பாட்டிற்கு தொல்காப்பியத்தில் வரும் ஒரு கூற்றையே எடுத்துக் காட்டாகக் கூறலாம்:

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே

இப்படி, சொல்லுபவன் நிலையைப் பொருத்துச் சொல் தொடுக்கும் பழக்கம் மேலை மொழிகளில் பெரும்பாலும் கிடையாது.

சரி, பேராசிரியர் முத்துவின் கேள்விக்கு வருவோம். ”murder என்பதைத் தமிழில் சொல்ல முடியுமா?” என்று முதலில் கேட்டிருந்தார். அதற்கு விடையாக நான் சில சொற்களைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே அவர்
---------------------------------------------------------
தமிழில் "murder" என்ற சொல்லுக்கு இணையான சொல் என்று ஒரு சொல்லைக் கூற முடியுமா? இருக்க வேண்டிய அவசியமோ, இல்லாதது ஒரு குறையோ அல்ல. தமிழ் மொழி தமிழர் பண்பாட்டை ஒட்டியே இருக்கும். கொல்வது என்ற செயலே (வஞ்சத்தினாலோ, தற்காப்புக்காகவோ, வேட்டையிலோ, அறியாமலோ, விபத்தினாலோ) குற்றமாகக் கருதப்பட்டால், ஒரு சொல்லே போதும்; ஒரு மனிதப்பிறவி மற்றொரு மனிதப்பிறவியை, வஞ்சனையால் கொல்வது மட்டுமே குற்றமெனக் கருதப்பட்டால் (இன்றைய தமிழ்ச்சமூகம் மற்றும் மேல்நாட்டுச் சமூகப் பண்பாட்டுப் படி) அப்போது, அந்தச்செயலைக் குறிக்க ஒரு தனிச்சொல் வேண்டும். உதாரணமாக, "Indira Gandhi was assasinated" என்பதைத் தமிழில் "இந்திரா காந்தி கொல்லப்பட்டார்" என்றும், "My cat killed a mouse" என்பதை, "என் பூனை ஒரு எலியைக் கொன்றது" என்றும் ஒரே விதமாகக் கூறுகிறோமே அன்றி, வித்தியாசமாகக் கூறுவதில்லையே! தமிழ் இலக்கியத்தில் இவ்விரு செயல்களும்- உதாரணமாகக் கம்ப இராமாயணத்தில் இராமன் வாலியைக் கொன்றதையும், மனுநீதிச்சோழனின் மைந்தன் தேர் ஓட்டி பசுங்கன்றை மாய்த்ததையும்- வேறு வேறு சொற்களால் வருணிக்கப் பட்டிருக்கின்றனவா?
-----------------------------------------------------------------------------------------

என்று மீண்டும் விரிவாகக் கேட்டிருந்தார். நண்பர் சிரீவாசும் அந்தச் சொற்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்.

Cambridge International Dictionary of English என்ற ஆங்கில அகரமுதலியில் murder என்பதற்கு the crime of intentionally killing a person என்றே போட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லின் வரலாற்றை இலத்தீன், இந்தோயிரோப்பியன் வரை போய்ப் பார்த்தால் அங்கே வெறும் இறப்பு என்ற பொருட்பாடு தான் இருக்கிறது. (The ultimate source of murder is the Indo-European base *mor-, *mr- 'die' (source also of English mortal). "வேண்டும் என்றே கொலை செய்தல்" என்ற இந்தக் காலத்துப் பொருட்பாடு அந்தக் காலத்தில் இல்லை. எங்கேயோ இடைப்பட்ட காலத்தில் (பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டில்) ஏற்பட்டிருக்கலாம். அந்த *mor- என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மற்ற சொற்களான mortality, mortuary, போன்றவற்றைப் பார்த்தாலும் வெறும் இறப்பு என்ற பொருட்பாடே உள்ளே தொனித்து நிற்கிறது. "*mor- என்ற வேரின் பொருள் என்ன? அது எப்படிப் பிறந்தது?" என்ற விளக்கம் அங்கு இல்லை.

தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள் துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு என்கிறோம். சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும் நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும் தமிழில் போலியாகி நிற்கும்)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும் தமிழில் ஒன்றுதானே!

மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை = mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.

மேலே கூறியது போல், இந்தச் சொற்களில் எல்லாம் இறப்பு என்ற கருத்து இருக்கிறதே ஒழிய கொலை என்ற கருத்து உடன் வரவில்லை. பிறகல்லவா "வேண்டும் என்ற கொலை"?

கருத்து வளர்ச்சியில் சொற்கள் விளைவதை ஒரு படி முறை போலப் பார்க்க வேண்டும். முதலில் இறப்பு; "பிறகு எதனால் இறப்பு?" " கொலையால் இறப்பு". அடுத்த கேள்வி: "வேண்டும் என்ற கொலையா?" இது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படியைத் தமிழில் ஒரே சொல்லில் சொல்லவியலாது. ஒரு சொற்தொகுதியால் மட்டுமே சொல்ல முடியும். அந்தக் கொலையில் இட்டம் (இழ்+தம் = இட்டம். இழ்+ஐ = இழை>இழைவு; இழைத்தல் என்பது ஈடுபாட்டோடு செய்தல். இட்டத்தை இஷ்டம் என்று வடமொழியில் சிலர் மாற்றுவது உண்டு. ஈடுபாடு = intention) இருக்க வேண்டுமானால் மரியிழைத்தல் என்று சொல்லலாம். இருப்பினும் "வேண்டும் என்றே செய்த கொலை" என்று நீட்டிச் சொல்வதே தமிழுக்குப் பழக்கப் பட்டது. கீழே இருப்பது ”முயன்றால் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்” என்று பரிந்து
உரைப்பது.

"இந்த மரியிழைப்பைச் செய்தவர் யார்? (who comitted this murder?) மரியிழையர் = murderer; இல்லையென்றால் வேட்கொலையன் (வேள் = வேண்டுதலின் அடிச்சொல்) என்று கூடச் சொல்லலாம். வேட்கொலை = murder.

இனி நண்பர் சிரீவாசின் கேள்விக்கான விடை:

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இருந்து இயல்பாக இந்த நாவலந்தீவில் கிளைத்த மொழி தமிழ். நாகரிகம் அடையாத காலத்தில் இருந்தே இங்கு ஒலியும் சொல்லும் கருத்துக்களை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தன; ஆனால் மெதுவாக நூற்றாண்டுக் கணக்கில் வளர்ந்த மொழி. இதில் எந்தக் கருத்தில் இருந்து எந்தக் கருத்து கிளைத்தது என்பதை தட்டுத் தடவி மொழியியலார்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொல்லுதல் என்ற வினை அறுதப் பழங்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாந்த நூலார் சொல்லும் படி, தம் உயிர் வாழ்வே முதன்மை என்ற நிலையில், தனக்குப் போட்டியான யாரும் ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற போக்கில், மாந்தர்கள் ஒருவரை ஒருவர் கல்லாலும் மரத்தாலும் உணவைத் தேடும் வேட்டையில், அடித்துக் கொன்று திரிந்திருக்க வேண்டும். பின் நெடுநாட்கள் கழித்து, உலோகம் கண்ட பிறகு, உலோகமே மரக்கருவிகளையும், கற்கருவிகளையும் போல அமைந்தாடி (imitate)க் காட்டத் தொடங்கினாலும், சொல்வரலாறு அடித்தளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலான அடிதடிச் சொற்களும், கொல்லுதற் சொற்களும் உலோகத்தைப் பயன்படுத்தும் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே தமிழ்ச் சொல் வரலாறு காட்டுகிறது.

காட்டாக,

மரத்தின் அடியில் இருந்து பிறந்த வினை அடித்தல்.
மரத் தாளில் இருந்து பிறந்த வினை *தாள்க்குதல்>தாக்குதல்.
மரக் காலில் இருந்து பிறந்த வினை *கால்த்துதல்>*காத்துதல்>காதுதல். (போட்டு காத்திட்டான்யா>போட்டுக் காச்சிட்டான்யா!)

மரத்தின் அடி பெருத்துத் தட்டித்துக் கிடந்ததால் அது தட்டு>தட்டி>தடி; இது மூங்கிலுக்கே சிறப்பாக வந்த பெயர். மூங்கில் தட்டை, மூங்கில் தடி என்ற சொற்கூட்டுகளைப் பார்த்தால் இது புரியும். தமிழன் நாவலந்தீவிலே தன் நாகரிகம் அறியா நிலையில் திரிந்தான், வேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு "மூங்கில்அடி"ச் சொற்களே கூட ஆதாரம் ஆகும்; இவையே இந்த வன்சொற்களின் மூலம் வெளிப்படுகிறது. மூங்கில் என்னும் நிலத்திணை நடுவண்நிலக் கரை (mediteranian and middle east countries) நாடுகளில் இருந்ததாகப் புதலியல் (botany) சொல்லவில்லை. மூங்கிலின்
பயன்பாடு பழந்தமிழ் மாந்தனின் வாழ்வில் மிகவும் அதிகம். மூங்கில் தடியால் தட்டலாம். தடி தறியாகும். பின் தறித்தலையும் தரும். தறித்தல் = அடித்தல். இன்னும் கொஞ்சம் நீண்டு, தட்டு தண்டாகும்; தண்டு என்னும் விதப்பான பெயர் பின் பொதுமை நிலைக்கு வந்து மற்ற மரங்களின் தண்டிற்கும் பெயர் கொடுக்கும். மாந்தரின் கணக் கூட்டம் வளர, வளரத் தண்டில் இருந்து தண்டனையும் எழும்.

அடிதடியில் தொடங்குகிற கருத்து, சோர்வுக்கும், தளர்ச்சிக்கும், சாய்வுக்கும், சரிவுக்கும் நீண்டுப் பின் முடிவில் இறப்பிற்கும் ஆகப் பொருட்பாடு நீளுவது தமிழின் இயற்கை. இந்த வன்முறையில் குத்துவது, வெட்டுவது, அடிப்பது எனப் பல்வேறு வகைகளில் தாக்குதல்கள் இருக்கும். கற்கருவிகளும், மரக் கருவிகளும் ஒரே நேரத்தில் மாந்தனுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், கல்லை வைத்து மாந்த நாகரிக வளர்ச்சிக்குக் காலம் சொன்ன மாந்த நூல் கட்டையையும் தடியையும் அவ்வளவு பெரிது படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.

நான் முன்னே சரமிட்ட சொற்களுக்குக் (series of words) கூடிய மட்டும் விளக்கம் தருகிறேன்.

முதற்சொல் எருக்குதல்:

கல்லாலும் கூர்மையான மரத்தாலும் குத்துவது மட்டும் அன்றி ஈர்தலும் செய்ததால் தான் இரண்டு என்பதற்கே இந்த இல்>ஈல்>ஈர் என்பது அடிப்படையாகியது. இல்லுதல் = குத்துதல், புள்ளியிடுதல்.
இல்>ஈல்>ஈர்>ஈர்து>இருடு, இரடு, இருது, இரண்டு
இல்>ஈல்>ஈள்>ஈள்+து>ஈட்டு+ஐ>ஈட்டி (இட்டி என்றும் இதைச் சொல்லுவர்.)
இல்>ஈல்>ஈர்தல்>ஈர்க்குதல்>எருக்குதல்= இரண்டாக வெட்டுதல், தாக்குதல்; குத்திக் கிழிப்பதாலும், தடியால் அடித்தும் இரண்டாக்கலாம். முடிவில் எருக்குதல் என்பதற்குக் கொல்லுதல் என்றும் பொருள் வந்தது.

அடுத்த சொல் எற்றுதல்.

எல் என்பது பெருமை, திரட்சி என்ற கூட்டுப் பொருளின் வேர். எல்லாம், எல்லோரும் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே எல்லுதல் = திரளுதல், சேர்த்தல் என்ற அடிப்படைப் பொருள் புலப்படுகிறது.
எல்+து = எற்று = திரண்ட மரம்
எற்றுநூல் = மரக் கோட்டம் பார்க்கும் நூல், மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல்.
எற்று>எறு>எறுழ் = தண்டாயுதம், தடி, செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.
எற்றுதல் = கொல்லுதல்

[இங்கே ஒரு சின்ன இடைவிலக்கு (diversion).

தமிழில் சில விதப்பான மரங்களே கூட அடிதடி வினைகள், கருவிகளைத் தோற்றுவித்தனவோ என்று தோற்றுகிறது. கடம்புக்கு அடிச்சொல் கடு. கட்டை என்ற சொல் கடம்பின் தொடர்பால் வந்ததோ என்று தோன்றுகிறது. யா மரத்தை ஆச்சா மரம் என்றும் சால மரம் என்றும் சொல்வதுண்டு; இதன் தொடர்பால் சால்>சால்+து = சாற்று என்று வந்ததோ?; "அவனைப் போட்டுச் சாத்திட்டாங்கப்பா" என்ற சொல்லாட்சியை எண்ணிப் பாருங்கள்.

மூங்கிலுக்கே தட்டை என்ற சிறப்பான பெயர் உண்டு. மேலே சொன்னேன். "தடிச்சுப் போச்சு" என்ற வழக்கையும் நோக்குங்கள். மூங்கிலின் குருத்தான பிரம்பை வைத்து அடித்தால் தடிக்காமல் வேறு என்ன செய்யும்? கிள்>கிளை>கிழி எல்லாமே மூங்கிலுக்குரிய மற்ற சொற்கள். இதே போல கழி என்பதும் மூங்கிலுக்கான சிறப்புச் சொல். "போட்டுக் கிழிகிழின்னு கீழ்ச்சிட்டான்ய்யா"; (துணிக்குக் கிழி என்று பெயர் வந்தது நாகரிகம் வந்ததற்குப் பின் இருக்க வேண்டும்.)

புளியம் விளாறை வைத்து விளாத்துதல், விளாசுதல் என்றாகும்.

குருந்த மரம் குந்தம் என்றும் சொல்லப் படும். திரண்டு இருக்கும் ஆயுதம் குந்தம் என்று சொல்லப் படும்.

அத்தி மரத்தின் இன்னொரு பெயர் அதம். அதம் பண்ணுதல் என்பது அடிதடி செய்தல்.

அதே போல இங்கே எற்றிற்கும் எறுழுக்கும் உள்ள தொடர்பை மேலே பாருங்கள்.

நான் பலகாலம் சொல்வதுண்டு. விதப்பான சொற்களே (specialized words) பொதுவான கருத்துக்களுக்கு (generic ideas) வித்திட்டன.]

எறியல் = கோடரி (கோடு= மரக்கிளை; மரக்கிளையை அரிவது கோடரி)
எற்றுதல் = திரண்ட மரத்தால் அடித்தல், உதைத்தல், தாக்குதல் (விட்டேற்று என்பது கோலைக் குறிக்கும்)
எற்றியது= அடித்தது; இங்கே மரத்தை உயரத் தூக்கிக் கீழே இறக்குகிறோம் அல்லவா? இந்தக் கருத்தில் இருந்து மேலும் வளர்ந்த கருத்துத்தான் எறிதல்; பின் அது கல்லெறிவிற்கும் பயன்பட்டிருக்க வேண்டும்.

ஒழித்தல் என்ற சொல் அடுத்தது.

உல் = தேங்காய் உரிக்கும் கருவி, கழு, மரம்
உல்லடைப்பு = மரத்தால் ஆற்றிற்கு இடும் அணை.
உல்>உல்லு>உல்லேற்றுதல் = கழுவேற்றுதல் = பிரஞ்சுப் புரட்சியில் இருந்த guilletine போல, ஆனால் மாறுபட்ட ஆயுதம். இதில் கழு நிலைத்து நிற்கும். கொல்லப் பட வேண்டிய ஆள் (man to be murdered; அய்யா முத்து, தமிழில் இபடித்தான் கொல்லப் பட வேண்டிய ஆள் என்று சுற்றி வளைத்தே சொல்ல வேண்டும்.) மேலே இருந்து தூக்கி எறியப் படுவார். கழுவேற்றப் பட்ட சடலம் பின் கோட்டையில் சார்த்தப் பட்டுத் தொங்கிக் கிடக்கும். இதற்கு ஆங்கிலத்தில் spiking என்று சொல்லுவார்கள். கீழை நாடுகளில் எல்லாம் கழுவேற்றுதல் தான். (சப்பான் நாட்டிலும் இதுதான்.
Shogun புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ?)
உல்லு>உல்லக்கு>உலக்கு=குத்துதல்
உலக்கு>உலக்கை = குத்துகிற மரம், கருவி, தடி, தண்டு
உலக்கு>உழக்குதல் = மிதித்தல், உழுதல், கொன்று திரிதல்
உல்லு>உல்லித்தல்>உலித்தல்(> உலைத்தல்>)*உழித்தல்>ஒழித்தல் = கொல்லுதல், அழித்தல்

மூன்றாவது சொல் காதுதல்:

கல்>கால்>கால்தல் = ஊன்றுதல், இயங்குதல்
கல்>கர்>கரு>கருவி = கூர்மையான ஆயுதம் (கற்கருவி என்பது இப்படித்தான் வந்தது. முதலில் கொல்லப் பயன்பட்ட கருவி பின் கையில் பிடித்தவைக்கெல்லாம் உள்ள சொல்லாகப் பொருள் நீட்டம் கொண்டது.)

கள் = கூட்டப் பொருள்.
கள்>களி>கழி= மூங்கில்; மூங்கில் கூட்டமாகத் தான் வளரும். பின் தனித்து ஒடித்த மூங்கிலுக்கும் கழி என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடச் சட்டாம்பிள்ளைகள் பிரம்புக் கழி இல்லாமல் இருப்பது இல்லை.
கள்>களை>கழை = மூங்கில்
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்ததும் கள். அந்தக் கள்ளை நீக்கினால் தான் பயிர் வளரும்.
களை = நீக்கு, அழி. கூட்டத்தில் இருந்து நீக்கப் படுகிற மாந்தர்களும் களையெடுக்கப் பட்டார்கள்.

கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது (கண்டம் துண்டமாக என்பது இரட்டைக் கிளவி. உப்புக் கண்டம் என்பது உப்புப் போட்டு உலரவைக்கப் பட்ட கறித் துண்டு; கற்கண்டு = திரண்டு, கண்டு கண்டாய் வெட்டப் பட்ட வெள்ளைச் சருக்கரை.)
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம். (மதுரையை அடுத்தவனம் கடம்ப வனம். ஒரு வேளை மிகப் பழங் காலத்தில் வெண்கடம்பு தமிழகத்தில் மிகவும் கூடுதலாய் இருந்ததோ, என்னவோ? இல்லாவிட்டால் இந்த அளவு சிவநெறியிலும், சங்க இலக்கியத்திலும் கடம்பு இவ்வளவு பேசப் படவேண்டிய காரணம் என்ன?)
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு

கடு என்ற கடம்ப மரம் விதப்பில் இருந்து பொதுமையாகி காட்டையே குறித்தது. பொதுமைப் பொருளில் நிலைத்தது. இதே போல கடு என்பது காட்டிற்கு மட்டும் அல்லாது கூடிக் கிடந்த மலைத் தொகுதியையும் குறித்தது.
கடு>கடம் = காடு,மலை

கடம் ஆர்ந்து (நிறைந்து) கிடந்தது கடாரம்; இன்றைய மலேசிய நாட்டின் கெடா மாநிலம். தமிழன் நாகரிகம் அடைந்து வரலாற்றுக் காலத்தில் சில குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்கொண்ட நாடு. இதே போல யா மரம் அடர்ந்து கிடந்த நாடு யாவகம்>ஜாவகம்= Java. இந்தோனேசியாவின் முகன்மையான தீவு. இதைச் சாலித் தீவு என்றும் சொல்வது உண்டு. மேலே சொன்னது போல் யா மரம், சால மரம் என்றும் அழைக்கப் பட்டது. இரண்டு பெயர்கள் அந்தத் தீவிற்கு; இரண்டிற்குமே தமிழ் மூலம் தான். ஆனாலும் "இங்கெல்லாம் வடமொழியே பரவியது; தமிழா, அது எங்கே?" என்று கேட்பவர்களும் உண்டு.

கடு>கடினம்
கடிதல் = காலால் உதைத்தல்
கடு>கடவுதல், கடாவுதல், கடத்துதல் = அடித்தல், ஒரு விலங்கை அடிக்க முற்பட்டு ஓங்கிக் கொண்டே போக அது ஓடத் தொடங்குகிறது. எனவே செலுத்துகிற கருத்து அடிக்கிற கருத்தில் இருந்து பிறக்கிறது. இங்குதான் கடாவுதலில் உள்ள நெட்டொலியின் பொருட்பாடு புரிய வேண்டும். ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துப் பிறக்கும் நேரத்தில் நெட்டொலி துணைக்கு வரும். அதை நீட்டிப் பாருங்கள்; அடிக்கப் போனது விலங்கைச் செலுத்துவதில் கொண்டுவந்து சேர்ப்பதைக் காட்சியில் பார்ப்பீர்கள்.

கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு

கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)
கந்து>கந்தன் = முருகன் (கந்திற்கும், கடம்பிற்கும் உள்ள தொடர்பைப் போல இன்னொரு சொல்லான மரா = கடம்பு என்பதில் இருந்து பிறந்த சொல் மராகன்>மருகன்>முருகன்; முருகு= அழகு என்பது முதற்பொருள் அல்ல; வழிப் பொருள். கந்தைச் சுற்றிப் படர்ந்த கொடி வள்ளி. கொடியைப் பெண்ணாகவும், கந்தை ஆணாகவும் உருவகம் செய்திருக்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவது, இந்த நாகரிகம் புரியாக் காலத்தில் எழுந்த இறையுணர்வால் தான்.)
கந்து = பற்றுக் கோடான தூண்
கந்து+அழி = கந்தழி = தனக்குப் பற்றுக் கோடானதையே அழிக்கும் நெருப்பு

[கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் சொற்றம் (சூத்திரம்) 1034-ல் வரும் கந்தழி நெருப்பையே குறிக்கிறது. கொடிநிலை மாறாது என்பது நிலைத்து நிற்கும் சூரியனையும் வள்ளி என்பது வளர்ந்து குறையும் நிலவையும் குறிக்கிறது. சூரியன், நெருப்பு, திங்கள் மூன்றும் கடவுள் வாழ்த்தைப் பாடும் போது வரவேண்டியவை என்று தொல்காப்பியர் சொல்கிறார். இவை முதலானவை என்பதால் தான் சோழர் குலம் சூரிய குலம் என்றும், பாண்டிய குலம் திங்கட்குலம் என்றும் சேரர்குலம் அழற் குலம் (அழல்= நெருப்பு; அழனி>அக்னி) என்றும் கருதப் பட்டது.]

கல்>கள்ளில் இருந்து திரட்சிப் பொருளில் பிறந்த மற்றொரு சொல் கம்பு

நாலாவது சொல் கோறல்:

அகத்தியத்தில் நண்பர் அரி சிலம்பில் உள்ள "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்ற வரியை எடுத்துக் காட்டினார் குல்>கோல் (குல்லில் இருந்து பிறந்தது தான் குத்து) கோல் வளைந்தது. கோலைக் கொண்டவன் கோன். செங்கோல் நேரான, வளையாத கோல்.

கோல் என்பது ஆட்சியையே குறித்தது. கடுங்கோல் என்பது வளைந்த ஆட்சி. "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?" என்ற சொலவடையில் தண்டல்காரன் தடி வைத்திருத்தலை உணர்த்துவதைக் காணலாம். கோல் என்பது காட்டு விலங்காண்டி காலத்தில் உயிரைக் காக்கும் ஆயுதம் அல்லவா?

கோல்>கொல்
கோல்+து>கோறு = தண்டால் அடி

கொல்லுக்கும் kill க்கும் உள்ள இணையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஐந்தாவது சவட்டல்

சவளி என்ற தலைப்பில் உள்ள புலவர் இளங்குமரன் கட்டுரையை தமிழ் உலகத்தில் முன்பு இட்டிருந்தேன். மறுபடியும் அதைச் சொல்வதில் இந்தக் கட்டுரை நீண்டுவிடும். சவள்/சவளம் என்பதெல்லாம் தண்டாயுதங்களைக் குறிக்கும். தண்டாயுதத்தால் அடிப்பது சவட்டுதல்.

ஆறாவது படுத்தல்:

அடி, தாள், கால் போல படுவது என்பது படிவது, பதிவது, பாதம் என்றெல்லாம் பொருள் நீளும். படுத்துவது என்பது ஒருவனை கீழே வீழ்த்துவது. பட்டுவது படுவாகும். படு+ஐ = படை எனக் கிளரும். படை என்பது முதலில் தண்டாயுதம் தான். பிறகுதான் மற்றவை எல்லாம்.

மடிவித்தல்

சாய்வித்தல் மடிவித்தலாகும். இது எளிதாகப் புரியும் என்பதால் விடுக்கிறேன்.

மாய்த்தல்

மாய் = இருள்; மாயோன் = இருளன்; திருமால், இறப்பு என்பது அசைவைக் குறித்துப் பின் மறைவையும் குறிக்கிறது. மாய்த்தல் என்பது இருளுக்குள் போகச் செய்வது. இது கொஞ்சம் நாகரிகம் வந்த காலத்தில் தான் பொருள் நீட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்.

முருக்கல்

கடுவில் இருந்து காதுதல் பிறந்தது போல மராவில் இருந்து பிறந்த சொல் முருக்கல். இன்னொரு மரத்திற்கும் முள் முருக்கு, புனைமுருக்கு, புரச மரம், பலாச மரம் என்றெல்லாம் பொருள். புரசைவாக்கத்தின் பெயர்க் காரணத்தை முன்பு தமிழ் உலகத்திலோ, அகத்தியரிலோ சொல்லியிருந்தேன்.

வீட்டுதல்

வீழ்த்துதல் வீடுதல் என்றும் ஒலிக்கப் பெறும் பொருள் வெள்ளிடை மலை எனத் தெரிகிறது.

இன்னும் விரிவாகச் சொல்லலாம். இத்தோடு தவிர்க்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, December 23, 2008

குடும்பம் - 2

இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம்.

நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக் குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இந்தக் குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை என்னும் அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் ஓர் அகன்ற குடும்பத்தையே குறிக்கிறது. இந்தக் காலத்து நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப் போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut; nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை எப்படியெல்லாம் இந்தக் காலத்தில் தமிழ் வழியே நெற்றுப் பூதியலைச் (nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக் கொள்ளலாம் என்பது விளங்கும். நாம் தான் இருப்பதைத் தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று தவிப்பவர்கள் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக் கொண்டிருந்தால் எப்படி?) அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்கள் புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.

குல்>குலம்;

குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம் சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்> குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர் குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம் பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம் என்று போட்டிருப்பார்கள்.

பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல் என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல் உருவாக்கமுறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகு வளர்ச்சியும், ஏற்பட்டிருக்கிறது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.

அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட உண்டு.

எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர் இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..

கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும். இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்லுவார்கள். “தேரோடத் துகள் கெழுமி” என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.

இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்

என்ற சொற்களும்,

துள்> ........தழு> தழுவு> தழும்பு என்ற சொல்லும் மேலே சொன்ன வினையாக்கமுறையை உணர்த்தும்,

இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில் தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின் வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக் கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். நீர்த் திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.

அடுத்து, துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு = வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார்கள். தொழும்பரும் தொண்டரும் ஒரே பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல் ஏற்படுகிறது..

இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு> பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி என்பார் உண்டு. [எத்தனை சொற்களைத்தான் வடசொல்லெனச் சொல்வார்களோ? எத்தனை எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தங்களின் நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவர்களை என்னசொல்லி அறிவுறுத்த இயலும்?] .

இதே போல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே இந்தக் காலத்தில் சொல்லுகிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் = கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும் சொல். [கிளம்புதல் கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல் தான்.]

...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப் புரிபடவில்லையா?]

பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும் சொல்லுவார்கள். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப் புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது உடல் என்னும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு ம்பு என்று முடியும் ஈற்றைப் பாருங்கள்.]

ழகரம் டகரமாவதற்கு மேலும் நமக்குச் சான்று வேண்டும் என்றால் புடலங்காய்க் கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை) இருக்கும் காய் புடலங்காய்.

யாரோ கேட்கிறார்கள், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்கள்? வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால், புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..

நான் சொல்லிக் கொண்டே போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்று சொல்லும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள். அதை மசாலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.) பொருள் ஒன்று சேர்ந்து கலங்கிக் கிடக்கும் சாறைத் தான் சொல்லுகிறோம், இல்லையா?

குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று குழியம் என்றசொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக் குறிக்கும். கோளம் கூடக் குல் என்னும் வேரில் பிறந்தது தான். குழுவல் = கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடையே விதப்பாகக் கையாளும் குறி. குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப் பொருளுக்கு வாகாகச் சொல்லமுடியும்.

குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில் மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும் உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல் கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முது பெண்டிர் வாயில் இன்றும் பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடுமியைத் தேங்காய்க் குடும்பி என்று பலுக்குவார்கள்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள ஓர் ஈறு. வடமொழியில் அது மிக மிக அரிதாகவே காணப் படுவது. மற்ற இந்தையிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்று சொல்பவர்கள் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன் காட்ட முயலாது இருக்கிறார்கள். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அதோடு பல வடபுலச் சொற்களையும் முடிந்தவரை இணை காட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதும் என்ற அளவிலேயே ”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடர்களை எடுத்துக் காட்டும் போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis properly instead of just quoting this or that saying to support our assertions.}

இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில் வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம் பாட்டின்(சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில் காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும், இல்லையெனில் கடும்பு என்ற சொல் ஆளப் படமுடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி குடும்பம் தானே?

அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் என்னும் விகுதி செறிவு, திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர் கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.

புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” என்னும் போது ”ஒரு குடும்பத்தில் பிறந்த” என்ற பொருளைத்தான் சொல்லுகிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம் காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற பொருளைத்தான் உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல் இன்று பொருள் விரிந்து குடியரசு வரைக்கும் வந்துவிட்டது. ஆனாலும் தொடக்கப் பொருள் குடும்பம் தான். குடும்பு என்றசொல் பூங்கொத்து, காய்க்குலை ஆகியவற்றையும் கூடக் குறிக்கும். family என்றபொருளில் பேரரசுச் சோழர் காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய பெருமக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப் பட்டிருக்கிறது.

இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவு நிலத்தின் பரப்பையும் கூட வழிப்பொருளாய்க் குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)

குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்ற சொல் களிற்றுக் கூட்டம் அல்லது திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக் கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைத் தான் குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தைய வளர்ச்சி சங்க இலக்கியத்தில் காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில் கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழமண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம் ஆகவில்லையா? அழிம்பு>அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப் படுவதில்லையா? துளைப் பொருளில் வரும் குழி என்ற சொல்லும் குழும்பு என்ற மாற்று வடிவில் ஆளப் பட்டிருக்கிறது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர” மதுரைக் 273]

இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம், கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.

அந்தக் காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில், சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக் குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு நூலில் தமிழர் உறவுமுறை பற்றிய ஒரு வியப்புக் குறிப்பு வரும்.]

அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” என்றே சொல்லப் பட்டது. அந்தக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடி வாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரச கட்டளையால் மக்கள் கூடி வாழத் தலைப்பட்ட colony யும் கூடக் குடி என்றே சொல்லப் பட்டது. இந்தையிரோப்பியச் சொல்லான colony யும் தொடக்கத்தில் குலம் தொடர்பான சொல் தான். தமிழ் நாடெங்கணும் விரிந்து கிடக்கும் ’குடி”களைப் பார்த்தால், குடியின் பொருள் விளங்கும். குடியேறுதல் என்ற சொல்லும் ஓர் அகன்ற குடும்பம் இடம் விட்டு இடம் புகுந்து வாழ முற்படுவதைக்
குறிக்கும் வினைச்சொல்லையே குறிக்கும்.

[சோழநாட்டில் இருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய நாட்டுக் கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின் அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர், சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர். பின்னால் இளையாற்றங்குடியாரில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு குடியினர் பிரிந்தனர். இன்றைக்கு் ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற குடும்பத்தார் தான். இவர்கள் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப் படுவர். குடும்பச் சொத்தில் பங்கு இருக்கும் தந்தை வழி உறவினரைப் பங்காளிகள் என்றே எங்கள் பக்கம் அழைப்பார்கள்.] குடும்பு/குடும்பம் என்பதும் குடி என்பதும் ஒன்றுதான் என்பதற்கு இந்த விவரத்தைச் சொன்னேன்.

குடும்பம் என்பதைத் தமிழில்லை என்று சொன்னால், அப்புறம் மேலே கூறிய பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடுகும் வினைச்சொற்களையும் தமிழில்லை என்று சொல்ல வேண்டும். ”அப்புறம் முடிவெங்கே இருக்கிறது?” என்று எண்ணிப் பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படையான பொருள். அது இல்லாமல் ஓர் இயல்மொழி இருக்க முடியுமா?

குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருள் அல்லாமல், வளைவுப் பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு. இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக் குறிக்கும் சொற்களாகும். [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள் மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப் பொருளில் இருந்து எப்படி வந்ததென்று என்று அங்கு விளக்கப் படவில்லை.].

முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன் பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச் சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்குச் சங்க இலக்கியத்தில் ஒரு நேரடிச்சான்று இல்லைதான். என்ன செய்வது? எப்பொழுதும் நான் சொல்லுவது போல ”சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலி அல்ல. அது நமக்குக் கிடைத்த ஓர் இலக்கியப் பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சில தான். தருக்கத்தின் வழி உய்த்து உணர வேண்டியது ஏராளம்.”

அன்புடன்,
இராம.கி.

குடும்பம் - 1

அண்மையில் மின் தமிழ் மடற்குழுமத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப் பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். 'இல்வாழ்க்கை', 'மனை மாட்சி' என்றே குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தவிர, அந்தச் சொல் “தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா, வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்ததா?” என்றும் கேட்டிருந்தார். உடனே, “குடும்பம், குடும்பகம் - இரண்டும் வட சொற்களே. ‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’ என்று மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார்கள். ’பரந்த மனமுடையோர்க்கு உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்று பொருள் கொள்ளலாம். உறவினர், மக்கள், வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது" என்று திரு.தேவு சொல்லியிருந்தார். ஆனால்,

ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||

""This is my own and that a stranger" - is the calculation of the narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"

என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவே இல்லை என்று சர்வேஷ் திவாரி என்பவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார். (http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-Hitopadesha/blog-148.htm). {மேலும், இந்த வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதே பொழுது இந்தச் சொற்றொடர் பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப் பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப் படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்கு முன்னால் பஞ்ச தந்திரக் கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாவது அதிகாரத்தில் ஏழாவது அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில் அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆவது அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச் சொலவங்களிலும் இந்தச் சொற்றொடர் ஆளப்பட்டிருப்பதாக திவாரியின் கட்டுரைகள் சொல்லுகின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எந்த இடத்தில் இந்தச் சொற்றொடர் ஆளப்பட்டிருக்கிறது என்று அதிகாரம், வரிக் குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக இருக்கும்.

பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற சொல் சண்டோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி ஆகியவற்றில் ஆளப் படுவதாகத் தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி குறிப்பிடுகிறது.]

மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோராலும் கருதப் படுகிறது. ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள் நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம் புத்தருக்கும் முற்பட்டது என்று சொல்லுவார்கள். வேத நெறி பயிலாத (ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளர்களிடம் பெரிதும் புழங்கியவை பஞ்ச தந்திரக் கதைகள். தொடக்க காலத்தில் அவற்றைப் பயன்படுத்த வேத நெறி பெரிதும் தயங்கியது. பின்னால், நெடுங்காலம் கழித்தே, வேத நெறி தன் பரப்புரைகளில் ஒரு சில பஞ்ச தந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது. உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400 வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.

குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென அறுதியிட்டுச் சொல்ல முடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின் சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால், அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]

பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோவொரு காரணங் கருதி மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே சுருங்கியது), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமயநெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி, முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும், குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும் புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர் போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆய்வு செய்யப் படாமலே அழிந்து கொண்டிருக்கிறது. ”வரலாற்றுத் திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக் கொண்டிருக்கின்றன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும் வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள் சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்கள் உண்டு என்பதை மறுக்கிறார்கள். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில் பொருளென்ன இருக்கிறது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே இப்படி எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசல் என்று முட்டிக் கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் தான் என்ன குடி முழுகியா, போய்விடும்? புதுக் காற்றுத் தான் தென்றலாய் வந்து அடிக்கட்டுமே?

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 30, 2008

ஒட்டியாணம் - 4

”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார் சொல்லாய்வறிஞர் அருளி. யா - என்னும் வேர்ச்சொல்லுக்கு கருமைப் பொருளும், பொருந்தற் பொருளும், வினாப் பொருளும் சொல்லி அந்தப் பொருட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு சொற்பிறப்புகளையும் அதில் தருக்கித்து நிறுவியிருப்பார். கூடவே பல சொற்களில் யா>ஞா>நா என்ற ஒலித்திரிவு
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார். அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.

அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர் பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல், இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு), யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார். இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர் பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன். [பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]

யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல் என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ் இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான். சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும். இனி விளக்கங்களுக்கு வருவோம்.

யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப் பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல் என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச் செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின் ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக் கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி, சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின் மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி, தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும் பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி, வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி, குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர் காட்டியிருப்பார்.

அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63] என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன் ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார். இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு” என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.

{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -இராம.கி}

ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால் உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண் என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்” என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம் என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” - இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி (=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று இந்தச் சொல் அமைந்திருக்கிறது.

ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய, சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில் இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]

அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.

யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப். திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]

[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம் தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க: சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67] [சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும் தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக் குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும், இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]

இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.

யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp, Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான் "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்

சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற் கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர் ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி வகுப்பதாகும்.

அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர் “விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்) சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126] சடை> (Sanskrit) Jataa = matted hair

சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர். இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின் Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது. இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre from bark of East Indian plants of genus Corchorus used for sacking, mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.

அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491 இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17, “ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம், காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58 என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124, ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும் இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.

{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும் மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?” - இராம.கி.}

அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் = கட்டு

கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக் கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.

{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் = கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும் சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப் பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்டு என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள் இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத் திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது. “கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க் கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்” வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது, போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}

அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும் அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர் அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால், நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும் அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப் போங்கள் :-).

அன்புடன்,
இராம.கி.

Monday, November 24, 2008

ஒட்டியாணம் - 3.

[ஓட்டியாணம் என்ற இந்தக் கட்டுரைத் தொடரை ஒட்டி மின்தமிழ்க் குழுமத்தில் எழுந்த பின்னூட்டுக்களில், ஓட்டக் கூத்தரைப் பற்றிய பேச்சும் எழுந்தது. தமிழில் பெரும்பாலான புலவர்களின் பெயர்கள் இயற்பெயர்களாய் இல்லாமல் காரணப்பெயர்களாகவே காட்சியளிக்கின்றன. ஒட்டக் கூத்தர் என்னும் பெயரும் அப்படியே இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய பெயர் மூன்று வகையால் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று, அவர் ஒட்ட நாட்டின்
கூத்தராய் இருந்திருக்கலாம். [ஒட்ட நாடு = ஒரிசா. இது கடற்கரையை ஓட்டி ஒடுங்கிய நாடு. அதன் வட மேற்கில் காடுகளே மிகுத்து இருந்ததால், மக்கள் கூட்டம் ஓர் ஒடுங்கிய பகுதியிலேயே வாழ்ந்திருக்கிறது. ஒட்டு என்று சிறு குன்றுகளையும் அழைப்பது உண்டு. சிறு குன்றுகளால் ஆன நாடு, ஒட்ட நாடு என்று கூடச் சொல்லப்பட்டிருக்கலாம். அதே பொழுது, சோழநாட்டுக்காரர் என்று பொதுவாக அறியப்படும் ஒட்டக் கூத்தர் ஒட்ட நாட்டுக்காரராய் இருக்க வாய்ப்புக் குறைவு.] இரண்டாவது பட்டுமை(possibility)யில், ஓட்டக் கூத்து என்பது ஒட்ட நாட்டுக் கூத்தாக இருக்கலாம். ஒருவேளை இந்தக் கால ஒட்டியக்கூத்து> ஒடியக்கூத்து>ஒடிசிக்கூத்து பேரரசுச் சோழர் காலத்தில் ஒட்டக் கூத்தாக அறியப் பட்டிருக்கலாம். ஒட்டக் கூத்து அறிந்தவர், அல்லது ஒட்டக் கூத்துக் கலையில் வல்லவர்களின் கொடிவழியில் வந்தவர் ஒட்டக் கூத்தர் என்று பொருள் கொள்ளலாம். மூன்றாவது வகையில் வேறு மாதிரிப் பொருள் கொள்ளலாம். ஒட்டு என்ற சொல்லிற்கு ஆணை, சூள், பந்தயம் என்ற பொருளும் உண்டு, ஒட்டேற்றுதல் என்பது சூளுரைத்தலைக் குறிக்கும். பலர்முன் ஒட்டேற்றி (சூளுரைத்துப்) பாடி வெல்லும் கூத்தராய் ஒட்டக் கூத்தர் இருந்திருக்கலாம். பலரோடும் புலமைப் பந்தயத்தில் இறங்கி அதில் தோற்றோரின் காதுமடல்ளை ஒட்டக் கூத்தர் பறித்ததாகத் தொன்மக் கதைகள் உலவுகின்றன. மூன்று பட்டுமைகளுல் எது இங்கு சரியென்று என்னால் கூற முடியவில்லை. மேலும் பல தரவுகளைக் கொண்டு மற்ற ஆய்வாளர்கள் ஆழ்ந்து நோக்கலாம்.]

இனி ஒட்டுதல் என்னும் சொல்லுக்கு வருவோம். இந்தச் சொல்லிற்கு ”ஒன்று சேருதல், உடன் வருதல்” என்ற மற்ற பொருட்பாடுகள் உண்டென்றாலும், [அதே போல பந்தயப் பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது என்றாலும்] அவற்றை ஒதுக்கி, முன்னே சொன்னது போல், ஒடுங்கற்
பொருளை மட்டுமே பார்ப்போம். ஏனெனில், ஓட்டியாணத்தின் பொருளைப் புரிந்து கொள்ள ஒடுங்கற் பொருளே அடிப்படையாகும். மேலே சொன்ன ஒடுங்கும் பொருளை ஆழமாய் உணரும் வகையில் ஒட்டு என்ற சொல்லின் பொருளையும் அறியும் வகையில் மற்ற சொற்களையும் பார்க்கலாம்.

ஓட்ட = இறுக “ஓட்டக் கட்டு”
ஒட்டகம் = பாலைவனப் பயணத்திற்கு உதவும், நீண்டநாள் உண்ணாதிருக்கும் ஒரு விலங்கு; ஓட்டு = பட்டினி. ஒட்டகம் = பட்டினி கிடக்க வல்ல விலங்கு, அதாவது ஒடுங்கவல்ல விலங்கு.. ஒட்டுதல் = ஒடுங்குதல், பட்டினி கிடக்கும் போது வயிறு ஒடுங்கிப் போகும். வயிற்றை இறுகக் கட்டுவதும் பட்டினி தான். (ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும் - தொல்.பொரு.56. ஓங்கு நிலை ஓட்டகம் துயில் மடிந்தன்ன - சிறுபாண் 154.)
இனி, அது போன்ற ஒருவிலங்கு நீண்ட கழுத்துப் பெற்றதனால், ஒப்பு நோக்கி, நீண்ட கழுத்துப் பெற்ற நெருப்புக் கோழி ஒட்டகக் கோழி என்று வழிப்பொருளால் சொல்லப் பெறும். ஒட்டகப் பறவை, ஓட்டகச் சிவிங்கி என்ற சொல்லாட்சிகளும் இப்படி வழிப்பொருளில் அமைந்தவைதான்.
ஒட்டப் பிடித்தல் = இழுத்துப் பிடித்தல் (வின்சுலோ அகராதி)
ஓட்டப் போடுதல் = பட்டினி கிடக்கச் செய்தல் (வின்சுலோ அகராதி), மெலிய வைத்தல். ஓட்டிய வயிறு என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். வயிறும் இடுப்பும் ஒன்றோடு ஒன்றாகத்தான் அமைகின்றன.
ஒட்டற் காது = குறுகிய காது. (வின்சுலோ அகராதி)
ஒட்டறுதல் = வற்றுதல்
ஒட்டிப் போகுதல் = வற்றுதல் (கன்னம் ஒட்டிப் போயிருக்கிறது.)
ஒட்டு = சிறுமை (அற்பம்; சூடாமணி), ஓரம் (அந்தக் குழந்தை ஒட்டிலேயே இருக்கிறது.)
ஒட்டுக் காயம் = பட்டினி கிடக்கை (திருநெல்வேலி வழக்கு)
ஒட்டுக் குஞ்சு = சிறு குஞ்சு (வின்சுலோ அகராதி)
ஒட்டுக் குடித்தனம் = ஒட்டிய குடித்தனம், சிறு குடித்தனம்
ஒட்டுக் குடுமி = தலை உச்சியில் இருக்கும் சிறு குடுமி
ஒட்டுக் கை = துண்டுக் கை மரம்.
ஒட்டுத் திண்ணை = பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறம் கட்டப்படும் சிறு திண்ணை; வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையில் உள்ள மிகச் சிறிய தெருத் திண்ணை. (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இது இல்லாது ஒரு பெருந்தனக்காரர் வீடு இருக்காது.)
ஒடியல்>ஒடிசல் = ஒல்லி
ஓட்டியன்>ஒடியன் = ஆமை
ஒடியிடை = ஒடுங்கிய இடுப்பு
ஒடிவான் = அற்பன்
ஒடிவு = குறைவு “ஒடிவில் பொற்கிழி நல்கி” (திருவிளை. இரசவா. 10)
ஒடுக்கு எடுத்தல் = நெளிவு எடுத்தல் (ஒடுக்கு = நெளிவு)
ஒட்டியம் = ஓட்டியாணம்
ஒட்டில் = சிறுமை.

வின்சுலோ அகராதியைப் பார்ப்பவர்கள் ஒருங்கு சேரப் பார்க்கவேண்டும். ஒரு சொல்லை மட்டும் பார்க்கக் கூடாது. இதே போல கலைக்களஞ்சியம், சென்னைப் பல்கலைக் கழக அகராதி போன்று பார்ப்பவர்களும் ”ஆழ்ந்து பாருங்கள்” என்று தான் நான் சொல்லுகிறேன்.

இனி அகராதிகளுக்கு முன்னிருந்த நிகண்டுகளுக்குப் போகலாம். திவாகரம், பிங்கலாம் எல்லாம் 8,9 ஆம் நூற்றாண்டு நிகண்டுகள். கிட்டத்தட்ட அண்மைக் கால (14 ஆம் நூற்றாண்டு) நிகண்டாய், சூடாமணி நிகண்டைச் சொல்ல முடியும். அதிலும் கூட எல்லா இடுப்புச் சொற்களும் பதிவு செய்யப் படவில்லை. இடை (waist) பற்றிய சொற்களாய், சூடாமணி நிகண்டு "நடு, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்" என்ற ஐந்து சொற்களையும், மருங்கின் பக்கத்துப் பெயராய் ஒக்கலையையும் (hip) காட்டும். [இது போக அரை, குறுக்கு என்ற சொற்களையும் இடுப்பிற்கு மாற்றாய்ப் புலவோர் சொல்லுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் வைரமுத்து கூட ஒரு திரையிசைப் பாடலில் “குறுக்குச் சிறுத்தவளே” என்று பாடியிருப்பார்.]

இவற்றில் நடு என்பது உடம்பின் நடுப் பாகத்தைக் குறிக்கும். நடுவம்>நடுமம் என்பது நடுவில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லாகும். வடக்கே போகக் போக, டகரம் அழுத்தி ஒலிக்கப் பட்டு, நகரியின் இரண்டாம் டகரமாகிப் ( நடுமம்>நட்டுமம்; அழுத்தி ஒலிக்கும்போது டகரம் இரட்டிப்பது தமிழிலும் உள்ள பழக்கம் தான்; நட்ட நடு என்று சொல்லுகிறோமே, அதை இங்கு எண்ணிப் பாருங்கள்.) பின் வடபுலத்துப் பேச்சுத் திரிவில் நட்டுமம் “நத்துமம்” என்று ஒலிக்கப் படும். இனி, தமிழில் நகர, மகரப் போலிகள் மிகுதியும் உண்டு. நம் பேச்சில் நுடம் முடம் ஆகும், நுதல் முதல் ஆகும், நுப்பது/முப்பது, நுனி/முனி, நுணுத்தல்/முணுத்தல் என்பது போன்ற திரிவுகளும் தமிழில் பலவாறாக ஏற்படும். இதில் என்ன வியப்பு என்றால், நகர/மகர தமிழியச் சொற்களில், இந்தையிரோப்பியத்தில் பொதுவாக இணை காட்டும் சொற்கள் மகர ஒலிப்பிலேயே அமைகின்றன, இந்தவகையில் நத்துமம்>மத்திமம் ஆகும். (குற்றியலுகரம் குற்றியலிகரமாகப் பலுக்கப் படுவதும் ஓர் இயல்பான திரிவுதான்.) இதே போல, நட்டம்> நட்யம்> நத்யம்> மத்யம்> மத்தியம்> median, நுணுத்து>minute போன்ற மாற்றங்களையும் பார்க்கமுடியும். பின்னால் நடு என்னும் தமிழ்ச்சொல்லின் வளர்ச்சியான மத்திமம் என்ற வடசொல் மீண்டும் இடைக்காலத் தமிழில் கடன்வாங்கப் பட்டு உடம்பின் நடுப்பாகத்தைக் குறித்திருக்கிறது. நடுமம் என்று சொல்ல நாம் தான் தடுமாறுகிறோம்.

அடுத்து இடை என்னும் பாகம், நுணுகிய (=சிறுத்த) பகுதியாதலால், நுணுகுதலின் வேரான நுல்லில் இருந்து நுல்>நுரு>நுருங்கு>நருங்கு என்ற வளர்ச்சியும், நுள்>நுறு>நுறுங்கு>நறுங்கு என்ற வளர்ச்சியும் ஏற்பட்டு உடம்பின் நுணுகிய/ஒல்லிய பகுதியைக் குறிக்கும். ஒல்லியாய் இருக்கும் பெண்ணைச் சிவகங்கைப் பக்கம் “என்னது இந்தப் பொண்ணு கொஞ்சம் நருங்குனாப்/நறுங்குனாப் போல ஒடிசலா இருக்கு, பார்த்தா வாட்ட சாட்டமா இருக்க வேணாமா?” என்று சொல்லுவார்கள். நருங்கு/நறுங்கு என்பது ஒடுங்கிய நிலையைக் குறிக்கும் சொல். வழக்கம் போல மகர நகரப் போலியில் நருங்கு மருங்கு ஆகும். மருங்கு மருங்குல் என்றும் புடைத்து நிற்கும்.

இனி நுள்>நுசு>நுசுப்பு என்பதும் நுணுகிய மகளிர் இடையையே குறிக்கும். [பொதுவாகப் பேச்சுவழக்கில், ளகரவொலி யகரமாய்த் திரிந்து பின் சகரமாய் மாறும். வாழைப் பழம் வாயப் பயம் என்று வட ஆர்க்காட்டாரால் ஒலிக்கப் படுவதை நோக்குக.]

இதே போல, உக்கம், ஒக்கல், ஒக்கலை, ஆகியவற்றைப் பற்றி இந்தத் தொடரின் முதற் பகுதியிலும், இடை, இடுப்பு ஆகியவற்றை இதன் இரண்டாம் பகுதியிலும் பார்த்தோம்.

அதே பொழுது, முன்னே சொன்னது போல், ஒடு, இடு என்பவற்றிற்கு அடிச்சொல் உடு என்பதே. இடுப்பு என்னும் பொருள் கொண்ட இந்தச் சொல் உடு>உடை, ஒடு>ஒடு என்று தமிழிலும், உடு>ஒடி எனத் தெலுங்கிலும், கன்னடத்திலும் திரியும். ஒடி = இடுப்பு. ஒடி என்பது வடபுல அழுத்தத்தில் ஒட்டி என்று பலுக்கப் படும். ஒட்டியாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் உடு யாண் / உடு ஞாண் / உடு நாண். உடு நாண்>ஒட்டு நாண் என்றும் திரியும். இதை உடை நாண் என்றும் சொல்லுவார் உண்டு. ”உடுத்த பஞ்சிமேற் கிடந்து உடைஞாண் பதைத்து இலங்க” - சீவக 2240. சீவக சிந்தாமணி இல்லையென்றால் இந்தச் சொல்லாட்சியை அறிந்திருப்போமோ? இடு>இடை என்பது போல உடு>உடை என்பதும் இடுப்பையே குறித்திருக்கிறது. மலையாளத்தில் உடஞாண், ஒட்டியாண், ஒட்டிஞாண் என்றும், கன்னடத்தில் உடேநேண், உடெ நூல், ஒட்ட்யாண, ஒட்யாணை என்றும், தெலுங்கில் ஒட்டாணமு, ஒட்யாணமு, ஒட்யாண்டு என்றும், துளுவில் ஒட்யாண என்றும் சொல்லப் படுகிறது. பலரும் புரட்டிப் பார்க்கும் பர்ரோவின் Dravidian Etymological Dictionary இதைத் திராவிடச்சொல் என்றே பதிந்திருக்கிறது.

அதே பொழுது வடமொழிச்சொல் என்று சொல்லுவது, அறியாமல் சொல்லுவது என்றேு மோனியர் வில்லியம்சின் Sanskrit English Dictionary யைப் பார்த்தால் புலப்படும். ஒட்டியாண(ம்) என்ற சொல்லே நான் பார்த்தவரை அங்கு காண முடியவில்லை. நான் தவறாய்ச் சொன்னால் என்னைத் தெளிவு படுத்துங்கள். [வடமொழியில் ஒகரம் கிடையாது, ஓகாரம் மட்டுமே உண்டு. ஓகார வரிசையில் இந்தச் சொல்லைக் காணோம். இந்தச்சொல் உகரவரிசையிலும் பதிவு செய்யப் படவில்லை. அந்தநிலையில் லலிதா சஹஸ்ரமநாமத்தில் எடுத்தாளப் படுகிறது என்றால் அதன் கடன் வாங்கியது என்றே பொருள். வடசொல் என்பவர்களுக்கு நான் மீண்டும் உரைப்பது: “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

இனி, உடைஞாணைப் போலவே, உடை தாரம் என்ற சொல்லும் தமிழில் உண்டு. அது அரையில் அணியும் அணிவகையைக் குறிக்கும். இதே போல், உடை மணி = குழந்தைகளின் அரையணி, மேகலை. நமக்கும் எல்லாம் தெரிந்த இன்றையத் தமிழில் உள்ள உடைவாள் என்ற சொல் உடையில் (இடுப்பில்) செருகும் வாளைக் குறிப்பது தான். உடைவாளுக்கும் உடை ஞாணுக்கும் உள்ள நெருக்கம் கூடவா நமக்குத் தெரியாமற் போயிற்று? அப்புறம் எப்படி ஒட்டியாணை (உடையாண்/உடை ஞாணின் திரிவு தானே?) தமிழில்லை என்று சொல்லுகிறோம்? [ஒட்டுஞாண் என்பது மலையாளத்தில் உள்ள பலுக்கல்.]

ஒட்டியாணம் என்பது முனிவர்கள் அணியும் ஓகப் பட்டையையும், மாதர் இடையில் அணியும் அணிகளில் ஒன்றையும் குறிக்கும். கிடைத்தவற்றுள் பழமையான குறிப்பு திருமந்திரத்திலேயே இருக்கிறது. திருமந்திரம் 811 ஆம் பாடல் கேசரியோகம், சகஸ்ராரத் தியானம் பகுதியில்

மண்டலத்துள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டு, அகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டி,
பண்டு அகத்துள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே!

என்று வரும். மன ஒட்டியாணம் என்ற கருத்திற்குள் நான் போக முற்படவில்லை. ஆனால் ஒட்டியாணம் என்ற சொல்லாட்சி தெளிவாக இடுப்புப் பட்டையையே குறிக்கிறது.

இனி யாணத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அது ஒரு தெரிதல்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 23, 2008

ஒட்டியாணம் -2

உகரச் சொற்கள் பலுக்கற் திரிவில் இகரச் சொற்களாய் மாறுவது இயல்பு. அதே பொழுது ஒடுக்கம், சிறுமை, நெருக்கம் என்ற அடிப்படைப் பொருட்பாடுகளைச் சுட்டிய படியே அவை தம் அடையாளம் காட்டும். ஒடுக்கம் என்பது உடலின் ஒடுக்கம், வெளியின் ஒடுக்கம், உட்கொள்ளும தன்மை, மற்றவற்றைப் பார்க்கச் சிறுக்கும் தன்மை ஆகியவை மேலே காட்டிய சொற்களிலும், இனி வரப்போகும் சொற்களிலும் பொருள் காட்டி நிற்கும். ஒடுக்கத்தின் வழிப்பொருள்கள் நெருக்கமும் செறிவும் ஆகும்.

உடு>இடு>இடை = உடலில் உள்ள ஒடுங்கிய அல்லது சிறுத்த உறுப்பு. [36-24-36 என்று சொல்கிறார்கள் இல்லையா? அந்த 24 இதுதான்.]
இடு>இடுப்பு = இடையின் பக்கம் [இந்தக் காலத்தில் இடையையே இடுப்பு என்று சொல்லுகிறோம்.]
இடு>இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல்
இடுகு>இடுக்கு>இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி
இடுக்கு>இடுக்கி = ஒடுக்கி (அல்லது நெருங்கிப் பிடிக்கும்) கருவி [இன்றைக்கும் நாட்டுப்புறங்களில் உள்ள சொல்]
இடுக்கு என்பது இதுக்கு/இசுக்கு என்றும் தென்மாவட்டங்களில் ஒலிக்கப் பெறும். ”இதுக்குனோண்டு/இசுக்குனோண்டு/இத்துனோண்டு இடம் இருக்கு”

[ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]
இடுக்கம் = நெருக்கம், இடைவெளியொடுக்கம்
இட்டளம் = நெருக்கம், தளர்வு (”பரம பதத்தில் இட்டளமுந் தீர்ந்தது” ஈடு 3:8:2)
இட்டிடை = சிறுத்த இடை “இட்டிடையின் மின்னிப் பொலிந்து” திருவாசகம் 7:16; “இட்டிடை இடைதனக்கு” கந்தபு. தெய்வயா. 183.
இட்டிது = சிறிது “ஆகாறளவு இட்டிதாயினும்” குறள் 478.
இட்டிமை = சிறுமை, ஒடுக்கம்.
இட்டிய = சிறிய (ஐங்குறு 215)
இட்டேறி = சிறிய வண்டிப்பாதை
இட்டி = சிறு செங்கல்
இட்டிகை = மிகச் சிறிய செங்கல்
இடுக்கண் = நெருக்கு வட்டில் ஏற்படும் துன்பம் “இடுக்கண் வருங்கால் நகுக - குறள் 621”
இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம்
இடுக்கிடை = நெருக்கம்
இடுகுதல் = ஒடுங்குதல் “கண்களை இடுகக் கோட்டி” (சீவக. 2086), சிறுகுதல் “இடுகிடைத் தோகாய்” (கம்ப ராமாயணம். சித்திர. 19)
இடுங்குதல் = உள்ளொடுங்குதல் “கண்ணிடுங்கி” (த்வ்ய. பெரிய திருமொழி. 1:3:4)
இடும்பை -= துன்பம் “ஏமஞ் சாலா இடும்பை” - தொல் பொருள்.50)
இடுவல் = இடுக்கு
இண்டு = மிகச்சிறிய இடைவெளி; இண்டும் இடுக்கும் என்பது உலக வழக்கு.

இனி இன்னொரு வளர்ச்சித் தொடரைப் பார்ப்போம்.

உல்>ஒல்>ஒல்குதல் = சுருங்குதல் ”ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்” குறள் 136.
ஒல்கு>ஒற்கு>ஒற்குதல் = குறைதல் “ஒற்காமரபிற் பொதியில் அன்றியும்” - சிலப் 25:117
ஒற்கு> ஒற்கம் = குறைவு “ஒற்கத்தின் ஊற்றாந் துணை” குறள் 414; வறுமை (தொல்.சொல்.360)
உடு>ஒடு>ஒடுங்குதல் = சுருங்குதல், குவிதல், “தாமரையின் தடம் போது ஒடுங்க” திவ்வி.இயற்.திருவிருத்த. 76
ஒடுங்கி = ஆமை
ஒடுக்கு = அடக்கம்
ஒடு>ஒடி>ஒடிதல் = முறிதல்
ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல்
ஒடி>ஒசி [ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]

பேச்சு வழக்கில் உகரச்சொற்கள் அகரச்சொற்களாய்த் திரிவதும் உண்டு.

ஒடுங்கு>அடுங்கு>அடங்கு>அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல்
அடங்கு>அடக்கு>அடக்கம் = அடங்கிய நிலை “அடக்கம் அமரருள் உய்க்கும் - குறள் 121”
ஒடுங்கு>ஒதுங்கு>ஒதுக்கு>ஒதுக்கம் = ஒடுங்கியநிலை
ஒதுங்கு>அதுங்கு>அதுக்கு>அதுக்கம்; அதுங்குதல் = ஒடுங்கியநிலை.
அதுக்குதல் = வாயில் அடக்குதல்
அதுக்கு = ஒடுக்கு, கல நெளிவு
ஒதுங்கு>ஒருங்கு>ஒருங்குதல் = ஒடுங்குதல் “உரம் ஒருங்கியது ...... வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர.90) [ஒப்பு.நோ. விதை>விரை]
ஒருங்கு>ஒருக்குதல் = அடக்குதல் “மனத்தை ஒருக்கு ஒருக்கத்தின் உள்ளே” (பதினொரு. திருவிடைமும். 24) [இனி ஒடுங்கு>ஒருங்கு என்றுமாம்.

ஒ.நோ. அடுக்கங்கடை>அடுப்பங்கரை, படவர்>பரவர்]

ஒன்று சேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும், ஒடுங்குதலைக் குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும் வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்தில் சாதற் கருத்துக்கு இடமின்மை காண்க.

இனி,
உல்கு>ஒல்கு>அல்கு. அல்குதல் = சுருங்குதல்
அல்கல் = குறைவு “அல்கலின் மொழி சில அறைந்து” (நைடத. அன்னத்தைக் கண்.66)
பெண்ணின் உடலில் அல்கிய இடம் அல்குல். இதை இடை என்று ஓரோவழி சொல்லுவாரும் உண்டு; பெரும்பாலோர் ஒக்கலுக்கும் கீழே பெண்குறி நோக்கி, உடலின் மேற்பாகம் குறுகுவதைக் குறிப்பாரே மிகுதி.
அல்கு>அஃகு. அஃகுதல் = அளவிற் குறுகுதல் (நன். 60); சுருங்குதல் “கற்பக் கழிமடம் அஃகும்” (நான்மணி.20); குவிதல் “ஆம்பல் ..... மீட்டு

அஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104); நுண்ணிதாதல் “அஃகி அகன்ற அறிவு - குறள் 175”
அஃகல் = சிறியதாகை (திவாகரம்)
அல்கு>அற்கு>அற்கம் = அடக்கம் “அற்கம் ஒன்றும் அறிவுறாள்” (திவ்.திருவாய்.6:5:4)

அடுத்த பகுதியில் ஓட்டு, ஒட்ட, ஓட்டி என்ற விதப்பான சொற்களுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 18, 2008

ஒட்டியாணம் - 1

அண்மையில் மின்தமிழ் மடற்குழுமத்தில் ”ஒட்டியாணம் தமிழ்ச்சொல்லா?” என்று திரு. கல்யாணக் குருக்கள் கேட்க, அதற்கு “ஓட்யாணம் வடமொழிச் சொல். ’ஓட்யாண பீடநிலயா’ –ன்பது லலிதா ஸஹஸ்ர நாமம். சாக்த நெறி தேர்ந்தவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். ஸ்ரீ பாஸ்கர ராயரின் விரிவுரையிலும் விளக்கம் தேடலாம். தமிழில் ஒட்டியாணம்” என்று திரு. தேவ் மறுமொழிக்க, பின் வின்சுலோ அகரமுதலியில் இருந்து ”மேகலை என்பது ஒட்டியாணத்தைதான் குறிக்கும். ஆனால் இது வடமொழி மூலத்திலிருந்து வந்த சொல் என்றுதான் வின்ஸ்லோ அகராதி சொல்கிறது:

*s.* A woman's girdle, or zone, மாதர்இடைக்கட்டு. 2. The swelling sides of a
mountain, மலைப்புடைப்பு. W. p. 672. ME KHALA. 3. A woman's jewelled girdle,
இ டையணியுளொன்று. 4. A garment worn by women, ஆடை. 5. A row or ridge of peaks
on Mount Meru, மேருகிரிச்சிகரம்.

என்று நண்பர் ஹரிகி ஒரு குறிப்பை எடுத்துத் தந்து ”ஒட்டியாணம் வடசொல் தான்” என்று உறுதி செய்ய, நான் கொஞ்சம் சலித்துப் போனேன்.

அளவிற்கு மீறிய வடமொழிப் பயனாக்கத்தின் வழிப்பட்டு, நம்மில் பலரும் பெரிதும் மயங்கி விடுகிறோம். ஏதொரு சொல்லையும் ”அது தமிழ்ச்சொல்லா, வடசொல்லா?” என்று பார்ப்பதற்கு, ”வெறுமே அதில் போட்டிருக்கிறது, இதில் போட்டிருக்கிறது” என்று சொல்லி அமைந்துவிட முடியாது. குறிப்பிட்ட சொல்லோடு தொடர்புடைய மற்ற பல சொற்களையும் (சில சமயம் 2, 4, 10, 100, 1000 சொற்களையும் கூடப்) பார்க்க வேண்டும். ”அந்தக் கருத்து எப்படி எழுந்தது, எப்படிப் பிறக்கலாம், இணைக்கருத்துக்கள் உண்டா, இந்தச் சொல்லைக் கடன் வாங்கியது என்றால்,மற்ற இணைச் சொற்கள் எல்லாம் எப்படிப் பிறந்தன?” என்றெல்லாம் கூட அலச வேண்டும். அப்புறம் மெதுவாக ஒரு முடிவிற்கு வர வேண்டும். அதுவும் கூடப் புதிய தரவுகளினாலே மாறலாம்.

விடாது நான் சொல்லும் கருத்தை மீண்டும் எல்லோருக்கும் சொல்லுகிறேன். சங்க இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை என்பதாலேயே ஒருசொல்/கருத்து தமிழ்ச்சொல்/தமிழ்க் கருத்து இல்லை என்று சொல்லுவது புரியாமல் சொல்லுவதாகும். தமிழ் என்பது ஒரு “மூதிக” மொழியல்ல, அது இயல்பாய் வளரும் மொழி. புதுச் சொற்கள்/புதுக் கருத்துக்கள் தமிழில் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கின்றன. சங்க காலத்திற்கு அப்புறமும் சொற்கள்/கருத்துக்கள் கடன் வாங்காமல் உள்ளிருந்தே கிளைத்திருக்கின்றன. (ஒருசில கடன் வாங்கியும் அமைந்திருக்கின்றன.) அதேபொழுது குதிரைக்குக் குர்ரம் என்று சொன்னால், யானைக்கு அர்ரம் என்று சொல்லமுடியுமோ? பொதுவாகக் ”கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

ஒட்டி யாணம் (ஒட்டி+யாணம் என்ற கூட்டுச் சொல் அது), கலி யாணம் (கலி+யாணம்) ஆகிய எல்லாம் நல்ல தமிழ்ச் சொற்கள் தான். அவற்றை வடமொழியில் ஒலிபெயர்த்து ஒட் யாணம், கல் யாணம் என்று போட்டு விட்டதாலேயே, அப்படி ஒலிபெயர்த்த சொற்களை லலிதா சஹஸ்ரநாமத்தில் போட்டு விட்டதாலேயே, அவை வடமொழியாகி விடாது. ”சங்கதமே மேடு, தமிழ் பள்ளம் - மேட்டிலிருந்து தான் பள்ளத்திற்கு நீரோட வேண்டும்?” என்ற சிந்தனை கொண்டிருந்தால், நாம் நெடுந்தொலைவு செல்லமுடியாது.

ஒட்டி, யாணம் என்ற இரண்டு தமிழ்ச் சொற்களையும் தனித் தனியாகப் பார்ப்போம். இதுவும் ஒரு கட்டுரைத் தொடர் தான்.

ஒட்டியின் வேர் அறிய உல்லில் இருந்து தொடங்க வேண்டும். உல் என்னும் வேர் தமிழில் ஆயிரக் கணக்கான சொற்களைத் தந்திருக்கிறது. உல் என்னும் வேரில் இருந்து ஒடுங்கற் பொருளிற் பிறந்த சில சொற்களை மட்டும் இங்கே நாம் பார்ப்போம். [வழக்கம் போல, பாவாணர், அவர் வழி வந்தோருக்கு, குறிப்பாக சொல்லாய்வு அறிஞர் அருளிக்கு, நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களின் கருத்தை பல இடங்களில், சிலபோது வரிக்கு வரி எடுத்து எழுதியும் என் உரையை ஊடாகவும் இங்கு கலந்து தருகிறேன். என் இடைப்பரட்டும் உண்டு.]

கீழே வருவது பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் - 1, தமிழ்மண் பதிப்பகம் பக்கம் 71-77 ல் இருந்து எடுத்தது.

உல்>உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல்.
உல்>உல்லி>ஒல்லி = உள்ளொடுங்கிய ஆள், மெலிந்த ஆள். (உடற் சுற்றளவு சிறுத்தவன் ஒல்லியானவன்.)
உல்லாடி>ஒல்லாடி = மெல்லிய ஆள்.
உல்குதல்>உள்குதல் = உள்ளொடுங்குதல்.
உல்>உள்; that which is inside.
உள்>உள்ளம்
உள்>உளுக்கு>உளுக்கார்தல் = ஒடுங்கியிருத்தல், கீழிருத்தல்
உளுக்கார்தல்>உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல் (எங்ஙனம் அமர்ந்திருப்பினும் நிற்கும் நிலையினும் உட்கார்ந்திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.]

உள்குதல்>உட்குதல் = அஞ்சுதல் “நண்ணாரும் உட்கும் என் பீடு” குறள் 1088
உட்குதல்>உக்குதல் = மெலிதல் (=துயரத்தால் மெலிதலை உக்கிப் போதல் என்பர். உக்கின மரம் என்பது உலக வழக்கு.), உளுக்குதல் (= உரங்கெடுதல்). உள்குதல் என்பதன் பிறவினைச்சொல் உளுக்குதல்

உக்கு>உக்கம் = ஒடுங்கிய இடை (மலையாளம்: உக்கம்). “உக்கம் சேர்த்தியது ஒருகை” - திருமுருகாற்றுப் படை. 108.
உக்கு>உக்கல்>ஒக்கல் = இடுப்பு
உக்கல்>உக்கலை>ஒக்கலை = இடுப்பு.
உக்கி = இரு காதையும் இரு கையால் மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தண்டனை வகை.
உளுக்கு>உடுக்கு = இடையொடுங்கும் பறை
உடுக்கு>உடுக்கை = இடையொடுங்கும் பறை. “நிலையாய் உடுக்கை வாசிப்பான்” (S.I.I.Vol.II,254.)
உடுக்கை> Skt. Hudukka

அடுத்து இரண்டாம் பகுதிக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 14, 2008

பொத்தகம் - 4

இனி, பஞ்சை இழுத்து இழையாக்கி, பின் அதை மேலும் நீட்டி (நூலுதல்> நீலுதல்> நீளுதல்> நீளம்) நூலப்பட்டது நூல். இது ஒரு துகிற்துறைச் (textile) சொல். அதே பொழுது ஒரு குறிப்பிட்ட கருத்தை/கதையை/நிகழ்வை நீட்டிக் கூறுதலும் நுவலுதல் என்றே சொல்லப்படும். அப்படி நுவலியதும் (நுவல்>நூல்) நூல் என்று ஆகும். இந்த நூலும் அந்த நூலும் பார்ப்பதற்கு ஒன்றே போல் இருந்தாலும் நுண்ணிய அளவில் அவற்றின் சொற்பிறப்பில் வேறுபட்டவையாகும். இனிப் பல இழைகளைச் சேர்த்துப் பன்னி, முறுக்கேற்றி வலிமை கொடுத்தது பனுவல் (= பன்னப் பட்டது; பல்>பன்னுதல்>பனுவல். இதே சொல்லை இந்தோயிரோப்பியம் (காட்டாக ஆங்கிலம்) spinning என்று சொல்லும்.) பருத்தியை விளைத்து நூலாக்கிய நாவலந்தீவின் சொற்களே துகலியற் தொடர்பில் உலகெங்கும் பெரிதும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை விவரித்தால் இன்னும் விரியும். (பனுவல் என்பது துகிற்துறையில் மட்டுமல்லாமல், சொல்/ யாப்பு/ நூல் ஆகிய துறைகளிலும் பழகிய சொல்லாகும். (நாலாயிரப் பனுவல்) இது போன்ற சொற்களின் இரட்டைத் தோற்றம் ஆழ்ந்து உணரப்பட வேண்டிய ஒன்றாகும்.

இனித் துல்லுதல் என்பது இணைத்தல், சேர்த்தல் என்ற பொருளை உணர்த்தும். துல்லுதல் என்பது துல்குதல் என்றும் ஆகும். அதன் அடுத்த வளர்ச்சியாய், லகரம் தொலைந்து துகுதல் என்றும் ஆகும். துகுத்தது துகில் = textile என்ற பெயர்ச்சொல் அப்புறம் விளையும். துகிலில் நூல் தொகுப்புமுறை துகுப்பு (texture) என்று சொல்லப்படும். வார்ப்பிலும் (warp) ஊடிலும் (weft) மாறி மாறி புதிய புதிய அடவுகளில் (designs) நூலைக கொடுத்து நெய்வது வெவ்வேறு துகுப்பை நமக்குத் தருகிறது. சட்டைத் துணியின் துகுப்பு ஒரு மாதிரியும், சேலையின் துகுப்பு இன்னொரு மாதிரியுமாக இருக்கிறதல்லவா? நூற்றுக் கணக்கான துகுப்புக்களைச் செய்யத் தெரிந்தன் பெருந் துகிலியலாளன் ஆகிறான்.

இதே போலச் சொற்கள் பலவும் நேர்த்தியாய்ப் பொருந்திய வாக்கியங்களை அடுத்தடுத்து அடுக்கி ஒரு கட்டுரை/கதை/கவிதை எனத் துகுத்ததை text என்றே இந்தையிரோப்பியத்தில் சொல்லுகிறார்கள். தமிழில் துல்கு என்று தேவைப்பட்ட இடங்களிற் சொல்லலாம். இனித் துல்ந்தது துன்னப் பட்டது என்றும் தமிழில் வரும். இந்தக் காலத்தில் தையற்காரர்கள் என்று நாம் சொல்லுகிறோமே, அவர்களைச் சங்க காலத்தில் துன்னகாரர்கள் என்றே சொன்னார்கள். அதாவது வெட்டிய துணியைச் சேர்த்துத் தைப்பவர் துன்னகாரர் ஆனார். (துகைப்பவர் பேச்சுத் தமிழில் தைப்பவர் ஆனார்.) இவ்வளவும் ஏன் சொல்லுகிறேன் என்றால் சேர்த்தல், தொகுதியாக்கல் என்னும் அடிப்படைக் கருத்து பலவிடத்தும் கிளைத்துப் புதிய புதிய சொற்களை உருவாக்கியிருக்கிறது. இங்கு எழுத்திற்கு இணையான துகிலியல் துறைச் சொற்களை மட்டும் எடுத்துக் காட்டாய்ச் சொன்னேன்.

அதே போல பொத்துதல் என்ற வினையும், சேர்த்தல், பெருத்துதல், கட்டுதல், தொகுத்தல் என்ற பொருளை உணர்த்தும். பொத்தப் பட்டது பொதி (= தொகுதி). போத்து ஓலைகளை அடுக்கித் தொகுத்தது பொத்தகம். பெருங்கதை உஞ்சைக் காண்டத்தில் யாழ் கைவைத்த காதையில் (34 ஆம் காதையில்) 26 ஆம் வரியில் வரும், “நிறைநூற் பொத்தகம் நெடுமனை ஏற்றி” என்ற வாசகத்தை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நிறைநூற் தொகுதி இங்கு பொத்தகம் எனப்படுகிறது. இதே போல, நாலடியார் 318 ஆம் பாட்டில்,

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் -- மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு

தொகுத்தல் பொருள் வருகிறது. இந்தக் கால எடுவிப்பில் (edition) மேலே உள்ள நாலடியார் வெண்பாவில் “புத்தகம்” என்அ சொல்லாட்சி இருந்தாலும் அதன் முதற் பதிப்பில், ஏட்டுச் சுவடியில், பொத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா, புத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா என்று இந்தக் காலத்தில் சொல்லமுடியாது இருக்கிறது. தொகுத்தற் பொருளை நோக்கும் போது, புத்தகத்தைக் காட்டிலும் பொத்தகமே பெரிதும் பொருந்துகிறது.

இதே போல ஏலாதி 63 ஆம் பாட்டில்

“ஊணொடு கூறை, எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து

என்னும் பாட்டிலும் புத்தகம் என்ற சொல் சுவடி என்ற பொருளிலேயே பயின்றிருக்கிறது. இங்கும் இதன் முதற்பதிப்பில் பொத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா, புத்தகம் என்று சொல்லாட்சி இருந்ததா எனச் சொல்ல முடியாது இருக்கிறது.

இதுபோக, South Indian Inscriptions Vol III - இல் 80 ஆம் கல்வெட்டில் “பொத்தகப்படி குழி” என்ற சொற்றொடர் பயிலப்பட்டிருப்பதாய் சென்னைப் பல்கலைக் கழக Tamil Lexicon சொல்லுகிறது. ஆனால் என்னால் அந்தக் கல்வெட்டை இந்தியத் தொல்லியற் துறை வெளியிட்ட நூலில் காணமுடியவில்லை. ஆழத் தேடிப் பார்க்கவேண்டும்.

பொத்தகம் என்னும் இந்தச் சொல் இன்று கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் அப்படியே பயிலவில்லை தான். அதே பொழுது, சங்க இலக்கியம் என்பது தமிழில் அக்காலத்துப் பயின்ற எல்லாச் சொற்களின் அகரமுதலித் தொகுதி அல்ல. அது ஒரு சிறுதொகுதி. இவை தவிர, நமக்குக் கிடைக்காமல் அழிந்துபட்ட நூல்கள் இன்னும் ஏராளம் என்றே தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். [இந்த அடிப்படைக் கருத்தை ஒதுக்கி, சங்க இலக்கியத்தில் நேரடியாக இல்லையென்றால் ”குறிப்பிட்ட சொல் தமிழில்லை, அது வடமொழியில் இருந்து வாங்கிய கடன்” என்று முட்டாள் தனமாகச் சொல்லும் “வல்லாளர்கள்” பலரும் உண்டு. ஏனென்றால் ”ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற நாட்டு வழக்கு அவர்களுக்குத் தெரியும்.]

நாட்பட, நாட்படப் பனையோலையைச் செதில் அரிக்கத் தானே செய்யும்? அதனால், கிட்டத்தட்ட ஒரு 120 - 150 ஆண்டுகளுக்கு மேல் எந்தவோர் ஓலைச்சுவடியும் தாங்காது. அதை அடுத்த எடுவிப்பில் படியெடுக்க வேண்டும். 1900 வாக்கில் ஒரு சுவடி கிடைக்க வேண்டுமானால் கி.மு.300 ஆம் ஆண்டில் முதற்பதிப்பு என்றால், கிட்டத்தட்ட 14 ஆம் பதிப்பிற்கு அப்புறமே கி.மு.1900ல் 15வது பதிப்பு கிடைக்கும். எனவே இன்றைக்கு நம் கையில் கிடைத்திருக்கும் சங்க நூற் சுவடிகள் 12, 13, 14, 15 ஆம் பதிப்புகளாகவே இருக்கும்.

ஓவ்வோர் எடுவிப்பிலும், ஏற்படும் கவனக் குறைவால் எழுத்துப் பிழைகளும், சொற்கூட்டுப் பிழைகளும் கூடிவர வாய்ப்புண்டு. இந்தப் பட்டுமைகளால், பொத்தகம் என்ற சொல் புத்தகம் ஆகப் பெரிதுமே வாய்ப்பிருக்கிறது. சுருங்கச் சொன்னால் போத்து ஓலைகளைப் (பனையோலைகளைப்) பொத்திக் கட்டியது பொத்தகம். ஏட்டுக் கட்டு, ஓலைச்சுவடி என்னும் இணைச்சொற்களால் இந்தச் சொற்பிறப்பை நாம் உணர முடியும்.பனையின்றிப் பொத்தகம் என்ற சொல் எழ வாய்ப்பில்லை. கூடவே பனைப்புழக்கம் உள்ள பகுதியில் இருந்தே பொத்தகம் என்றசொல் எழுந்திருக்க முடியும் என்பதையும் உணரலாம்.

இப்படிச் சுருக்கமாகப் பொத்தகத்தின் சொற்பிறப்பை ஒரு பத்தியில் எழுதியிருக்கலாம் தான். இவ்வளவு விரிவாக மற்ற தொடர்புடைய சொற்களோடு பொருத்தி இந்தத் தொடரை நான்கு பகுதிகளில் எழுதியது மற்ற சான்றுகளை உணர்த்தவே என்று கொள்க!

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 13, 2008

பொத்தகம் - 3

இனிப் பனையின் பல்வேறு பெயர்களைப் பார்ப்போம். [இந்தப் பெயர்களை அறிவது, பொத்தகத்திற்கும், பனைக்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்து கொள்ள உதவும்.]

பெண்ணை, தாலம், புல், தாளி, போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே

என்று திவாகர நிகண்டின் 700 ஆம் நூற்பா சொல்லும்.

பனை என்ற சொல் பன்னை என்ற சொல்லின் தொகுப்பாய் இருந்திருக்க வேண்டும் என்று புலவர் இளங்குமரன் சொல்லுவார். பல் எனும் அடிச்சொல் முதலில் வெண்மைப் பொருளைச் சுட்டி உருவாகியிருந்தாலும், பின்னால் அந்தச் சொல் தன் பொருள் நீட்சியில் பன்மை, கூர்மை ஆகிய பொருட்பாடுகளைச் சுட்டியிருத்தலையும், பல்லினின்று பல வழிச்சொற்கள் உருவாகியதையும், அவர் எடுத்துக் காட்டுவார்.

தன் வாயின் வெளியே நீண்ட கோரைப்பல் கொண்டிருக்கும் விலங்கு அந்தப் பல்லின் காரணமாகவே (பல்+ந்+றி) பன்றி என்றே சொல்லப் படுகிறதல்லவா? அதே போல மரத்தின் தண்டு முழுதும், (வெள்ளை நிறமாய் இல்லாவிட்டாலும்) பற்களைப் போன்ற கூர்மையான செறும்புகளை உடையதால், இந்த மரத்தை பல்+நை = *பன்னை என்றே சொல்லியிருக்க முடியும். பின்னால், பன்னையைத் தொகுத்து பனையாகியிருக்க வேண்டும். [இத்தகைய தொகுப்பு தொல்காப்பிய காலத்திற்கும் முன்னால் நடந்திருக்க வேண்டும்.] பன்னை எனும் சொற்பிறப்பு ஏரணத்திற்கு அணைவாகத் தென்னை, புன்னை என்ற மற்ற மரங்களின் பெயர்களையும் இளங்குமரன் எடுத்துக் காட்டுவார். தெல்+நை = தென்னை; புல்+நை = புன்னை. தெல்>தெள்>தெளிவு, தெள்>தெளிவு என்பது கள்/பதநீரைக் குறிக்கும்.] தெல்>தேன்>தேம் என்பதெல்லாம் கள்ளைக் குறிப்பதே. அந்த வகையில் தெல்லை/தெள்ளை(=கள்ளை)க் கொடுக்கும் தெல்மரம்(=கள்மரம்) தெல்நை>தென்னை. [இந்த மரம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து நம்மூரில் இறங்கியதாகப் புதலியலார் கூறுவார்கள்.

அடுத்த சொல்லான பெண்ணை என்பது பன்னையின் திரிவே. பன்னை>பண்ணை>பெண்ணை என்ற வளர்ச்சி தமிழில் இயல்பாக அமையக் கூடியது. தென் பாண்டிப் பகுதியில் இன்றைக்கும் நாட்டுப் புறத்தினரால் பல ககரச்சொற்கள் கெகரச் சொற்களாய்ப் பலுக்கப் படும். (”இன்னாரைக் கட்டினான்” என்பதை ”இன்னாரைக் கெட்டினான்” என்று சொல்லுவார்கள்), இதுபோலப் பகரச் சொற்கள் பெகரச் சொற்களாய் ஆவதும் தமிழில் இயற்கையான பலுக்கற் திரிவே. (”கொஞ்சங்கூடப் பலமில்லாதவன்” என்பதைக் கூடக்“கொஞ்சங்கூடப் பெலமில்லாதவன்” என்று தெற்கே சொல்லுவார்கள்.)

அடுத்தது புல் என்னும் சொல். இது ஒரு வகையாக்கச் (classification) சொல்; பனை, தென்னை, கமுகு, (ஏன், வாழை, பப்பாளியைக் கூடச் சொல்லலாம்.) போன்ற மரங்கள் அவற்றின் வளர்ச்சியில் கிளை, சினை, கொப்பு, இலை, பூ, காய், கனி, விதை எனப் பரவாமல், ஒரு புல்லைப் போல, வேர், அடித் தண்டு, இலைத் தொகுதி, பின் பூந்தண்டு, காய், கனி, விதை என்றே சினை, கிளை, கொப்பு இல்லாமல் வளருகின்றன. இவை ஒருவகையான, புல்லைப் போன்ற, விதப்பான, மரங்கள். பனை மரம் புல் என்றே பொதுமையாய்ச் சொல்லப் பட்டது ஓர் இயல்பான புரிதல் தான். [இன்னொரு வகையில் பார்த்தால், பனை மரம் வேர், தண்டு, கிளை, ஈர்க்கு எனப்பிரிந்து ஒவ்வோர் ஈர்க்கிற்கும் இரண்டே இரண்டு பக்க இலை இருப்பதாகவும் கொள்ள முடியும். இந்த இலைகள் பனையில் ஒன்றை ஒன்று ஒட்டிக் கொண்டு ஒலைத் தொகுதியைக் காட்டும். தென்னை. கமுகு போன்றவற்றில் இலைகள் ஒட்டாமல் ஒரு தோகையாய் நமக்குக் காட்டும்.]

புல்வகையின் உறுப்புக்களைச் சொல்லும் போது, தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 1586 ஆம் நூற்பா,

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்

என்று விவரித்துச் சொல்லும்.

அடுத்தது தாளி (மற்றும் அதன் வடபால் வழக்கான தாலம் என்ற சொல்). இதைப் புரிந்து கொள்ள வாழைமரச் செய்திகளை ஓர்ந்து பார்க்கலாம். “வாழை குலை தள்ளியது” என்று சொல்லுகிறோம் அல்லவா? அது என்ன குலை தள்ளுவது? ஒன்றின் உள்ளிருந்து இன்னொன்று வெளியே வருவதையும், ஒன்றின் இடத்தை மாற்றுவதையும் தள்ளுதல் என்ற வினையாற் சொல்லுகிறோம். பொதுவாகப் புல்வகை மரங்கள் தாங்கள் வாழும் காலத்தில் ஒருமுறை தான் குலை ஈனுகின்றன. அந்தக் குலையிலேயே, பூ, காய், கனி என்ற வளர்ச்சியை அவை காட்டும். [காட்டாக வாழைப்பூவின் அடியில் வாழைக்காய் தோன்றுவதும், அது பழுத்துக் கனியாவதையும் ஓர்ந்து பார்த்தால், இந்த வளர்ச்சி புலப்படும். அதே போலத்தான், பனம்பூ, பனங்காய், பின் பனம் பழம். இளம் பனங்காய்ச் சுளையைத் தான் நுங்கு என்று சொல்கிறோம்.]

புல்மரக் குலையைத் தான் தார் என்று சொல்லுகிறோம். (வாழைத்தார் என்ற சொல்லை இங்கே ஓர்ந்து பாருங்கள். தள்>தரு>தார் என்ற திரிவையும் கூட இங்கே எண்ணிப் பார்க்கலாம். தருதல் என்ற வினையையே தள் என்னும் வேரில் இருந்து தோன்றியதாகப் பாவாணர் காட்டுவார். இதே போல வருதல் என்பற்கும் வள் என்னும் வளைதல் வேரைக் காட்டுவார். கள்>கரு>கார் என்னும் கருமைக் கருத்து வளர்ச்சியும் இதே போன்று அமைந்தது தான்.) இனி ரகர/லகரப் போலியை எண்ணிப் பார்த்தால் தால் என்ற சொல் தாரைக் குறிக்க முடியும் என்று உணரலாம். தால்>தாலம், தால்>தாள்>தாளி என்ற வளர்ச்சியும் இயற்கையானது தான். தாளி என்ற சொல் பனையைக் குறித்தது இப்படித்தான். பனந்தார்/பனங்குலையைத் தரும் மரம் தாலம்/தாளி.

இனிப் பனையின் தாளியைக் கத்தி கொண்டு கீறினால் சற்றே பால் நிறத்தில் சருக்கரை நீர் அதனின்றும் இழியும். அதைப் பால் என்றே சொல்லுவார்கள். பனம் பால், தென்னம் பால், கமுகம் பால் என்ற சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். (அரப்பர் - Rubber - பாலும் இது போன்ற பால் தான்; ஆனால் அது மரத்தைக் கீறிவருவது. தார் என்னும் உறுப்பு அதற்குக் கிடையாது.] பால் வருவதால் தாளுக்குப் பால்>பாள்>பாளை என்றும் பெயர் உண்டு. பனம் பாளை, தென்னம் பாளை, கமுகம் பாளை என்ற சொற்களை அறிந்திருக்கிறீர்களா? பாளை கொண்ட மரங்களைப் பாளை மரங்கள் என்றே புதலியலார் சொன்னார்கள். palmyra என்பது பாளைமரத்தின் ஆங்கில ஒலிபெயர்ப்புத் தான். [நாம் தான் சொற்பிறப்பு அறியாமல் இருக்கிறோம்.] பின்னால் அதையே பொதுப்படையாக்கி வெவ்வேறு palm trees பற்றிப் புதலியர் சொன்னதும் இதன் வளர்ச்சி தான். புல்மரக் குடும்பங்களுக்கு புதலியற்பெயர் வந்தது தமிழின் அடிப்படையிலே தான்.

பெரும்பாலான பாளை மரங்களில் இருந்து பாளையைக் கீறி வடியும் பாலைச் சற்று நேரம் ஒரு ஏனத்தில் வைத்திருந்தால், காற்றில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் அதனுள்ளே புகுந்து தம் நொதிப்பொருள் (enzyme) கொண்டு பாற்சர்க்கரையை மிக எளிதில் வெறியமாக்கி (alcohol) விடும். இப்படி அமைவது தான் கள். [சரியான அளவு நேரம் நொதிப்பு இருந்தால், குறைந்த சருக்கரையும், மிகுந்த வெறியமும் சேர்ந்த இளங்கள்ளாய் இருக்கும். இன்னும் கூடநேரம் நொதிப்பு அமையுமானால், வெறியத்தின் ஒருபகுதி மேலும் வேதி மாற்றம் அடைந்து, சாலியக் காடியாக (acetic acid) உருவாகி, மொத்தத்தில் அது கடுங்கள்ளாகும்.கடுந்தன்மை உடையது காடி. காடியை ஆம்பலம்>ஆமிலம்>அமிலம் என்று சொன்னது புளியம்பழம் என்னும் விதப்புப் பொருள் பற்றியாகும்.] தாளில் இருந்து கள் கிடைப்பதால் அது தாளி ஆயிற்று. வட மாநிலங்களில் தாளியைத் தாரி/தாடி என்று பலுக்குவார்கள். வெள்ளைக்காரன் அதையே toddy என்று ஒலிபெயர்த்துக் கொள்ளுவான். நாமோ மூலம் தெரியாமல் திகைக்கிறோம். அப்படி மூலம் காட்டினாலும், நம்மில் ஒருசிலர் ஏற்க மறுத்து, எகிறிக் கொண்டு ஏளனம் செய்வதிலேயே கருத்தாய் இருக்கிறோம். அந்த அளவிற்கு வடமொழி நம் கண்ணைக் கட்டுகிறது. :-).

பனையின் இன்னொரு பெயர் போந்தை (போந்து+ஐ). போந்தின் சொற்பிறப்புக் காணுவது சற்று சரவலானது. போத்து என்பது புதுக்கிளை அல்லது இளங்கிளை. ”போத்து விட்டிருக்கிறது” என்பது நாட்டுப்புற வழக்கு. பனம்பாளையைப் பனையின் இளங்குருத்து/இளங்கிளை என்றே சொல்லலாம். முதுகிளையிலும் பார்க்க, எந்த இளங்கிளைக்குள்ளும் நீர் கூட இருக்கும். பனையைப் பொறுத்த மட்டும், பாளையில் கிடைக்கும் (சருக்கரை)நீர் விதப்பானது. பனம்போத்தில்/பனம்போந்தில் (சருக்கரை)நீர் நிறைந்து கிடக்கிறது. அதனால் தான், பாளையைக் கீறினால் சருக்கரை நீர் இழிகிறது. முன்னே சொன்னது போல் பனம் பூ, பனங்காய், பனங்கனி என்ற வளர்ச்சியும் போந்தில் இருந்தே அமைகிறது. பொந்துதல் என்பது வினைச்சொல்; அது பொருந்துதல், விரிதல், பெருகுதல், சேர்தல், நிறைதல் என்று பொருட்பாடுகளைக் குறிக்கும். பொந்திக்கை = பொருந்துகை, பொந்திகை = நிறைவு, த்ருப்தி, பொந்தி = பருமை இளங்கிளையை இளங்குருத்து என்று சொல்லும் போதும் குருத்தல் = தோன்றுதல் என்ற பொருள் தோன்றுவதை எண்ணிப் பார்க்கலாம். [குருத்து>குருந்து ஆகியவை தென்னை, பனை முதலியவற்றின் இளவிலையைக் குறிக்கின்றன.] பூத்தல் என்பதும் தோன்றுதலே.

புகு>பூ>போ>போத்து = இளங்கிளை,
போந்து = பனங்குருத்து,
போது = அரும்பிற்கும், மலருக்கும் இடைப்பட்ட நிலை. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய் - குறள் 1227.

பாளை விரிந்த நிலையில் இருப்பதாலும் போந்து என்ற சொல் பொருந்தும். போந்தி என்பது வீங்கிய காலைக் குறிக்கும்; வீங்குதல் = விரிதல், பெருகுதல், சேர்தல். போத்து என்பது பிங்கல நிகண்டின் படி, போதகம் என்றும் சொல்லப்படும். போந்தை என்ற சொல் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியல் 1006 ஆம் நூற்பாவில் வெட்சித் திணையின் கரந்தை முதலிய பிற பகுதிகளைக் குறிக்கும் இடத்தில், வேந்தர்களின் பூவைச் சொல்லும் முகமாய்,
.......................................................உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

என்று வருகிறது. இங்கே போந்தை என்பது பனையையே குறிக்கிறது. இதை விளக்கும் வகையில் இளம்பூரணர் குறிக்கும் வெண்பா:

குடையவர் காந்தள் தன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழுந்
தேர் அதிரப் பொங்கும் திருந்துவேல் வானவன்
போர் எதிரில் போந்தையாம் பூ

-புறப். பொது 1

என்று அமையும். போந்தைப்பூ என்பது பனம்பூ. [வாழைப்பூ போல, ஆனால் மிகச் சிறியதும் மஞ்சள் நிறம் உடையதும் ஆகும். பனம் பூ சூடினான் என்பது பனம்பாளை சூடுதலே. இன்றைக்கும் நீர்க்கலசத்தில் பனம்பாளை செருகி வைப்பதை மதுக்குடம் என்று தென்பாண்டி நாட்டில் சொல்லுவார்கள். இதே போல தலைப் பாகையில் பனம்பாளையைச் சூடிக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையைப் பார்த்தால், பனை,ஆர், வேம்பு என்ற மூன்று பூக்களும் மிகச் சிறியவை. அந்தக் குலைகளையே வேந்தர்கள் சூடிக் கொண்டிருக்க வேண்டும்.]

நச்சினார்க்கினியத்தில் பனை பற்றிக் கூறிய வெண்பா

ஏழகம் மேற்கொண்டு இளையோன் இகல்வென்றான்
வேழம் இவனேற வேந்துளவோ? - ஏழுலகும்
தான் தயங்கு நாகம் தலை தயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து.

என்று அமையும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 28, 2008

பொத்தகம் - 2

ஓலுதல் என்பது தமிழில் ஓசையிடுதலையே குறிக்கிறது. ”ஓவென்று ஓலம் இட்டான்” என்ற வாசகத்தை ஓர்ந்து பார்க்கலாமா? ஓலுதலின் வழி ஓலம் என்னும் பெயர்ச்சொல்லையும் நாம் பெறுகிறோம். காற்று வீசும் பொழுது சரசரவென்ற ஓசையை பனைமரத்தினின்று கேட்கிறோம் அல்லவா? அப்படி ஓலுகின்ற இலை, ஓலை என்றே சொல்லப் பட்டது. பனையோலையானது, வேய்வதற்கும், கள் அல்லது பதநீரைக் கொள்ளுவதற்கும் / பருகுவதற்கும் அல்லாமல், எழுத்தாணியால் அதன் பட்டையில் கீறுவதற்கும் அந்தக் காலத்தில் பயன்பட்டது. (பனையின் பயன்கள் மிகப் பல. ”வேண்டியது தரும்” என்ற பொருளில் மிகைப்படுத்திக் கற்பகத் தரு என்றும் பனையைச் சிலர் சொல்லுவார்கள். (கருப்பகத்தரு என்பது கற்பகத்தரு ஆகிப் பின் தொன்மப் போக்கில் வேறொரு பொருளை இன்று காட்டி நிற்கிறது. கற்பகத் தரு என்னும் தொன்மம் பனையில் இருந்து எழவே பெரிதும் வாய்ப்புக்கள் உண்டு.)

நாளா வட்டத்தில் நாவலந்தீவின் பெரும்பாலான இடங்களில் பனையோலைப் பட்டை ஒரு பெருவுதியான (priority) எழுதுபொருளாகவும், பருத்தித் துணி, மரப்பட்டை போன்றவை நுணவுதியான (minority) எழுதுபொருளாயும் ஆகிப் போயின. ஓலைமட்டை என்பது நிரவலாக (average) 20, 30 ஈர்க்குகளையும், ஈர்க்குகளின் இடையே பட்டைகளையும் கொண்டது. ஓலைமட்டையில் இருந்து ஒவ்வொரு ஈர்க்கையும், அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் பட்டைகளோடு தனியாக எடுத்து நீளமாய்ப் பிரித்து வருவதை ஓலை என்று சொல்லுவார்கள். [பேச்சு வழக்கில் ஓலைமட்டையையும் ஓலை என்றே நாட்டுப் புறத்தார் சொல்லுவது உண்டு.] ஓர் ஓலையின் பட்டையை இரண்டாய் ஈல்வது (=பிரிப்பது) ஈல்க்கு>ஈர்க்கு; இரண்டு என்ற சொல்லின் வேரும் ஈல் என்பது தான். [ஈழம் என்ற சொல்லின் வேரும் கூட ஈல் தான். அந்தத் தீவு முகனை நிலத்தில் (mainland) இருந்து ஈல்க்கப் பட்டது. எனவே அது ஈல்>ஈழ்>ஈழம் ஆனது. ஈழம் என்ற விதப்பான பெயரையும், பின்னால் பொதுவான பொருளாய் உருவான eeland>eisland>island என்று இந்தையிரோப்பியத் திரிவையும் பேசினால் வேறு எங்கோ போய்விடுவோம். எனவே அதைவிடுத்து நம் புலனத்திற்குள் வருவோம்.]

ஓலைப் பட்டையைத் தாள் என்றும், ஏடு என்றும் சொல்லுவார்கள். ஈர்க்கை எடுத்தும் எடுக்காமலும் பனையோலைப் பட்டையை எழுதப் பயன்படுத்தினார்கள். [இளஞ்சிறாருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுக்க மாட்டார்கள். பெரியவருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுத்து விடுவார்கள்.] பட்டையில் இருந்து வேறு ஈறு கொண்டு உருவாக்கிய சொல் பட்டம். பட்டம்> பத்ரம் என்ற சொல்வளர்ச்சி நாவலந்தீவில் பனையில் இருந்து தொடங்கியது. பனை வளராத வடபுலத்து இடங்களில் பிர்ச் - birch - மரப் பட்டைகள் பதப்படுத்திப் பயன்பட்டன. birch > book என்ற இந்தோயிரோப்பிய சொற்தொடர்பை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நாவலந்தீவின் வடபால் மொழிகள், சங்கதம் ஆகியவற்றில் உள்ள சொற்கள் book என்னும் மேலைச் சொல்லுக்கு நெருங்கி வரவில்லை. வடபாற் சொற்கள் எல்லாம் பனையோலைப் பட்டையையே உணர்த்துகின்றன.

இன்னொரு செய்தியும் உண்டு. பனையோலைப் பட்டையின் எளிமையையும், அதே அளவிற்கு மற்றோர் எழுதுபொருளை உருவாக்குவதன் கடினத்தையும் உணர்ந்தால், நாவலந்தீவின் பனையோலைப் பகுதிகளிலேயே படிப்பறிவும், விதப்பாக எழுத்தறிவும், வளர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். எழுத்தைப் பெரிதும் போற்றிய ஆசீவகம், செயினம், புத்தம் போன்ற சமய நெறிகள் நாவலந்தீவில் பனையோலையைப் பெரிதும் போற்றின. [காரணமில்லாமல் செயினமும், புத்தமும் மகதத்தில் வளரவில்லை. ஆசீவகம் இன்னொரு பனையோலைப் பகுதியான தென்னாட்டில் எழுந்திருக்கலாமோ என்று கூட அண்மைக் கால ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.] பனைமரபு பழகாத வேத நெறி, தன் தொடக்க காலத்தில், இந்தியாவின் வடமேற்கில், எழுத்தைப் பெரிதாகவே கருதவில்லை; வேதம் என்பது முதலில் எழுந்தபோது ஓர் எழுதாக் கேள்வி தான். பனை வளராத பகுதியில் எழுதுதலின் அருகிய நிலை உங்களுக்குப் புரிகிறதா? [சங்கத மொழியில் முதன்முதலிற் செய்தி எழுதப் பட்டது கி.பி.150க்கு அருகில் சக அரசன் உருத்ரதாமன் காலத்திற் தான் என்பதை இங்கு நினைவிற் கொள்ளுக. அதற்கு முன்னால் வடக்கே பாகதத்தில் தான் கல்வெட்டுக்கள் எழுந்தன.]

முன்னே சொன்னது போல், ஓலைப்பட்டையின் இன்றொரு சொல்லான தாலப் பட்டை, ஐ என்னும் ஈற்றிற்கு மாறாக, அம் என்னும் ஈறு கொண்டு வடபுலம் போய், தாலப் பட்டம் > தாலப் பத்தம் என்று ஆகும். பின்னால் தாலம் எனும் முன்னொட்டுச் சொல், பேசுகிறவர்களால் உள்ளார்ந்து உணரப் பட்டு, பேச்சு வழக்கில் அதைத் தவிர்த்து பத்தம் என்று தனித்தே சொல்லப் பட்டது. (அளவு கூடிக் குமிந்து கிடந்த பெருநீர் ”ஜலசமுத்ரம்” என்று தொடங்கிப் பின்னால் ஜலம் என்பது சொல்லப் படாமல் சமுத்ரம் என்பது மட்டுமே சங்கதத்தில் தனித்துக் குறித்ததை எண்ணிப் பாருங்கள்.) பத்தம் என்ற சொல் வட்டார வழக்கில் வெவ்வேறு பலுக்கலைப் பெற்றது. மற்ற பாகதக் கிளைமொழிகள் போலல்லாது, காந்தாரக் கிளைமொழியில் அது பத்ரம் என்றே பலுக்கப் பட்டது. காந்தாரக் கிளை மொழியின் பெரும்வளர்ச்சியான சங்கதத்திலும் அவ்வாறே சொல்லப் பட்டது.

[காந்தாரக் கிளைமொழி புழங்கும் இடத்தில் பிறந்தவன் தான் பாணினி என்னும் இலக்கணி. ககர/சகரப் போலியைப் புரிந்து கொண்டால் பாணினி இலக்கணத்தின் அடிப்படை மொழியான சந்தஸிற்கும், காந்தாரத்திற்கும் இருக்கும் உறவைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் வேதம்-அது-இது என்று வழிபாட்டுப் பூசனைக் கருத்துக்களைக் கொண்டுவந்து நம்மை ஒடுக்கி விடுகிறவர்கள் சங்கதத்தின் ஊற்றங்காலைச் சரியாக அறியவா விடுகிறார்கள்? நம்மை மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்துவரும் ஆய்வாளர்களையும் குழப்பிவிட அவர்கள் என்றுமே முனைப்பாக இருக்கிறார்கள். தமிழையும் செந்தமிழையும் வெவ்வேறு மொழிகளாய் நாம் எண்ணிக் குழம்புவதில்லை; ஆனால், இவர்களோ பாகதம் என்னும் பொது மொழியையும், அதன் ஒரு வட்டார மொழியின் வளர்ச்சியான சங்கதத்தையும் வெவ்வேறாக்கி, ”சங்கதம் தான் முந்தியது, பாகதம் அதிலிருந்து சிதைந்து வந்தது” என்று சொல்லி பேரனைத் தாத்தனாக்குவார்கள்; நாம் ஒரு காலத்திலும் செந்தமிழில் இருந்து தமிழ் வந்தது என்று சொல்லுவதில்லை. அதோடு மட்டுமல்லாது, பாகதத்தின் சமகால மொழியான தமிழின் பங்களிப்பையும் குறைத்து, ”சங்ககாலம் என்பது நந்தர்கள் காலத்திற்குச் சற்று முன்னால் இருந்து (கி.மு.500) தொடங்கி கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை” என்று எத்தனை முறை பல்வேறு சான்றுகளை வைத்துச் சொன்னாலும், அதைப் புறந்தள்ளி, கிளிப்பிள்ளை போலத் தாங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி அதற்கு அணைவாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்து ஆய்வாளர்களின் கூற்றையே சான்றுகளாய் அடுக்கி (குறிப்பாக வையாபுரியாரின் கருத்தின் மேல் கோபுரம் கட்டி), கிறித்துவுக்கு அப்புறமாய்ச் சங்க நூல்களைக் கொண்டு வந்து, தொல்காப்பியத்தைச் சங்க நூல்களுக்கு அப்புறமாய் 5ஆம் நூற்றாண்டிற் கொண்டுவந்து வைத்துச் சங்கத நூல்களை மிகப் பின்னதாகக் கொண்டு போவதே வழக்கமாய்ப் போன சில “தமிழ் அறிஞர்களின்” முயற்சிகள் இருக்கும் மட்டும் இந்தக் குழப்படிகள் இருந்து கொண்டே இருக்கும்; என்ன செய்வது?]

பட்டம்> பத்தம்> பத்ரத்திற்கு மீண்டும் வருவோம். இந்திய வடமேற்குச் சொல்லான பத்ரத்தை மீண்டும் கடன் வாங்கித் தமிழில் பத்திரம் ஆக்குவார்கள். பத்ரங்கள் பல கொண்டது பத்ரிகை. [தனித்தமிழில் அதைத் தால்>தாள்>தாளிகை என்று இந்தக் காலத்திற் சொல்லுவோம். தாள் பற்றிய அதிக விளக்கத்தைப் பின்னால் கீழே பார்ப்போம்.] ஆகப் பட்டம்> பத்ரம்> பத்ரிகை என்ற வளர்ச்சியின் சூல்க்குமம் பனையோலைப் பட்டைக்குள் இருக்கிறது. [NCBH பதிப்பகம் "மரங்கள்” பற்றி வெளியிட்ட தொகுதியின் நாலாம் பாகத்தில் பனை பற்றிய கட்டுரையில் 1992 அளவில், இந்தியா எங்கணும் இருக்கும் பனை மரங்களில் கிட்டத்தட்ட 58% மரங்கள் தமிழ்நாட்டிலேயே விளைவதாகக் கூறியுள்ளார்கள். ஆகக் காலங் காலமாய், இந்த நாட்டில் பனை நிரம்ப வளர்வது நம்மூரில் தான். தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளப் பனை முகன்மையானது. ஆனால், இந்தக் காலத் தமிழர், பனை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துக் கொள்கிறோம்? அதை எவ்வளவு கண்டுகொண்டோம்? சொல்லுங்கள்?:-) செடார், பைன் பற்றித் தெரியாத இரோப்பியன் எங்காவது இருப்பானா? அதே பொழுது, பனை பற்றித் தெரியாத தமிழர் மிகப் பலர் இருக்கிறார்கள் அல்லவா?]

இதே போல ஏடு என்பதும் ஓலைப் பட்டத்தையே குறிக்கும். பனை ஏடு, பனையோலை, ஓலை ஏடு, ஏட்டோலை, தாலப் பட்டம் ஆகியவை எல்லாம் ஒரு பொருட் சொற்கள் தாம்.

ஓலைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நறுக்கி, அவற்றை நீரில் ஊறவைத்து, தேவைப் பட்டால் சற்று வெதுவெதுப்பான நீரில் புடம் போட்டு, வளைவில்லாமல் நேராக்கி, பின் மஞ்சள் தடவி எழுத்தாணி கொண்டு கீறி (கீற்றுதல், scribe என்ற சொற்களைப் பற்றியெல்லாம் இங்கே எண்ணிப் பார்க்கலாம்], பின் கீற்றெழுத்துக்கள் சட்டென்று தெரியுமாப் போல் கரிப்பொடிக் கலவையையும் பூசி அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளை உருவாக்குவார்கள். [50 ஆண்டுகளுக்கு முன்னால் கூட ஓலையில் எழுதிப் படிக்கும் பழக்கம் நம்மூரில் இருந்தது. எங்களைப் போன்றவர்கள் தங்கள் சிற்றகவையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அப்படித்தான் படித்தோம். அந்தப் பட்டறிவில் தான் நான் இங்கு சொல்லுகிறேன்.]

ஓர் ஓலையாய் இருந்தால் அதைச் சுருட்டி ஓர் ஓலைக் கொட்டானுக்குள் வைத்து விடலாம். (கொட்டான் என்பது சிறியது; பெட்டகம் அல்லது கடகம்/கடகாம் என்பது பெரியது. இந்தச் சொற்கள் தென்பாண்டி வழக்கு.) அப்படிச் சுருட்டி வைப்பதை ஓலைச் சுருள் என்பார்கள். மாறாக ஒன்றிற்கு மேற்பட்ட ஓலை நறுக்குகளானால், அவற்றைச் சேர்த்து வைக்க வாய்ப்பாக, ஒவ்வொரு ஓலை நறுக்கிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் ஒரு பெரிய துளையைப் போட்டு, அதன் வழியாக ஒரு நூற்கயிற்றைச் செருகி, கயிற்றின் ஒருமுனையில் பெரிய முடிச்சையும் போட்டு இன்னொரு முனையோடு கயிற்றால் ஓலை நறுக்குகளைக் கட்டி வைப்பது ஓலைக் கட்டு. அதை ஏட்டுக் கட்டு என்றும் சொல்லுவது உண்டு. இன்னும் சிறப்பான பெயர் ஓலைச் சுவடி. இங்கே சுவடி என்பதற்குத் தொகுதி என்று பெயர். கல்வியில் முன்னேற, முன்னேற, ஏடுகள் இந்தத் ஓலைச் சுவடியில் கூடிக் கொண்டேயிருக்கும். [சுவள்> சுவடுதல் = சேர்தல், தொகுதல், சுவடி என்ற பெயர்ச்சொல் சுவடுதல் என்ற வினையிலிருந்து எழும். அதன் விதப்பான பொருளாய் இரட்டைத் தன்மை கொள்ளப் பட்டு சுவடி>சோடி என்றும் திரியும். இந்தக் காலத்தில் சோடி என்பது இரட்டைக்கும், சுவடி என்பது பன்மைத் தொகுதிக்கும் உரிய சொற்களாய் ஆளப் படுகின்றன. சோடியை ஜோடியாய்ப் பலுக்கி மீண்டும் நம் மூலத்தைத் தொலைத்து அதையும் வடமொழி என்று ஒருசிலர் மறுகுவது இன்னொரு சோகம்.]

கோரைப் புல்லான papyrus இலிருந்து எகிப்தில் paper உருவானதையும் இங்கே ஒருசேர எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சொல் கோரைப்புல்லின் தோகையைக் குறித்த சொல். bublos என்பதும் ரகர/லகரத் திரிவில் papyrus இன் இன்னொரு ஒலிபெயர்ப்புத் தான். இதன் அடுத்த வளர்ச்சியாய், bublos>biblio>bible என்ற திரிவை எண்ணிப் பார்க்கலாம். சில புதல்களின் தோகை தமிழில் தாள் என்றே குறிக்கப் படும். நல்ல மணம் பொருந்திய மஞ்சள் நிறம் வாய்ந்த ஒரு தோகையை தாள்>தாளம்பூ>தாழம்பூ என்ற புதற் பெயரால் அறிகிறோம் அல்லவா? தாழம்பூத் தோகையில் (முல்லைப்) பித்தியைக் கொண்டு வண்ணக் குழம்பில் தோய்த்து எழுதுவதும் அந்தக் காலத்திற் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் இது போன்று எழுதுவது வெகு எளிதில் அழிந்துவிடுவதாலும், தண்ணீர் தெறித்தால் அது நிலைக்காததாலும், நாட்பட நிற்க வேண்டிய ஆவணங்களை தாழம்பூத் தோகையில் பொதுவாக எழுத மாட்டார்கள். பனையோலையில் கீறுவதையே விரும்பினார்கள்.

அன்புடன்,
இராம.கி.

Monday, October 27, 2008

பொத்தகம் - 1

ஓரிரு மாதங்களுக்கு முன், விக்சனரிக்கான கூகுள் மடற்குழுவில், "பொத்தகம் என்ற சொல் தமிழீழத்தில் இப்பொழுது புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. முன்பு புத்தகம் என்பதே இருந்தது" என்ற செய்தியைச் சொல்லி, "பொத்தகம் சரியா? புத்தகம் சரியா?" என்று திரு.T.K.அருண் என்பவர் கேட்டிருந்தார். அவர் கேள்விக்கு யாரும் அப்பொழுது மறுமொழிக்காததால், அப்படியே அது தொங்கி நின்றது. நானும் வேறு வேலைகளில் ஆழ்ந்திருந்ததால், உடனே அதற்கு மறுமொழிக்க முடியவில்லை.

இப்பொழுது, இங்கு தனிப்பதிவாக, "பொத்தகம்" பற்றியும் அதன் தொடர்பான செய்திகளையும் நான் அறிந்தவரையில், இடுகிறேன்.

இந்தக் காலத் தமிழ் அகரமுதலிகளில் பொத்தகம், புத்தகம் என இரண்டுமே சுட்டிக் காட்டப் படுகின்றன. ஆனாலும் பொத்தகம் என்ற சொல்லே முந்தையது; வேர்ப்பொருள் பொதிந்து வருவது; இணைச்சொற்கள் கொண்டது; நம் பனையோலை மரபோடும் ஒத்து வருவது. [பனை பற்றிய சிந்தனை இல்லாமல் பொத்தகம் பற்றி அறியமுடியாது.] புத்தகம் என்பது பொத்தகத்தின் மரூஉ. ஒகரம் உகரமாவது தென்மாவட்டங்களில் பெரிதும் உள்ள பழக்கம். ”கொடுத்தானா?” என்பதைக் ”குடுத்தானா?” என்று சொல்வது பெரும்பாலோருக்கு உள்ள பழக்கம். ”குடுத்தல்” என்ற இந்தச் சொல்லாட்சி பேரரசுச் சோழர்களின் கல்வெட்டுக்களில் கூடப் பெரிதும் புழங்கும். இது போன்றதொரு பலுக்கற் சிதைவிற் பொத்தகம் என்பது புத்தகம் என்று ஆகும்.

சங்கதம் தவிர்த்த வடபால் மொழிகளிலும் (potthaka - Pali, Putha - Prakrit, Puuthi - Kashmiri, pothu - Sindhi, Pottha - Punjabi, Pothi - Kaumuni, Nepali, Assamese, Pothaa - Bengali, Oriya, Maithili, Poothi - Bhojpuri, Potha - Awadhi, Pothuu - Gujarati, Pothi - Marathi,), ஏன் சிங்களத்திலும் கூடப் (Pota) என்றே அமைந்து, பொத்தகம் எனும் பலுக்கிற்கு நெருங்கி வரும். சங்கதத்தில் மட்டுமே பொத்தகம் புத்தகம் ஆகிப் பின் மேலும் திரிந்து புஸ்தகம் ஆகும். இந்தக் கால வடபால் மொழிகளிற் சிலவும் “புஸ்தக்” என்ற சங்கதப் பலுக்கலையே எடுத்தாளுகின்றன. இது புரியாது, நம்மில் பலரும் புஸ்தகம் தான் தமிழிற் புகுந்து புத்தகம் ஆயிற்று என்று எண்ணிக் கொள்கிறோம். அதையே சிலர் சாதிக்கவும் செய்வார்கள். உண்மை அதுவல்ல.

தமிழராகிய நாம், நம்முடைய மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்குத் தான் இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" என்னவோ புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலம் கண்டு நொந்துகொள்ளுவதைத் தவிர்த்து, வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) எதைச் சொன்னாலும், ”அது எப்படிச் சங்கதம் வழிவந்ததை இவன் மறுக்கலாம்?” என்ற முட்டாள் தனமான பூசனைப் போக்கில், ”தமிழ்வெறியன்” என்று சாடுவதே நடக்கும் நிலையில் ’அளவிற்கும் அதிகமாகப் பிறசொற் பலுக்கல்களை நம்மொழியின் இடையே ஆளுவது’ பற்றி என்னைப் போன்றவர் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது,சொல்லுங்கள்?

(இன்னொரு திராவிட மொழியின் நிலையும் இங்கு எனக்கு நினைவிற்கு வருகிறது. பலோச்சி என்னும் மொழியை அளவிற்கு மீறிக் கலந்த திராவிடமொழியான பிராகுயி இன்று 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே திராவிடச் சொற்களைக் கொண்டிருக்கிறதாம். ”இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போகக் கூடிய திராவிடமொழி அது” என்றும் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். இதனால், கூடிய விரைவில் பிராகுவிக்கள் தங்களை பலோச்சி என்றே அடையாளப் படுத்திக் கொள்வார்களாம். இதே போல, அளவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பைப் பற்றி இத்தாலி மொழியினர் கூடக் கவலைப் படுகிறார்கள் என்று பி.பி.சி. வலைத்தளத்தில் படித்தேன். இடைவிடாமல் ஆங்கிலம் பழகும் தமிழ் இளையர் கூட
எதிர்காலத்திற் தங்களைத் தமிழர் எனச் சொல்லாது தமிங்கிலர் என்று அடையாளப் படுத்திக் கொள்வார்களோ, என்னவோ?)

பொத்தகம் பற்றிப் புரிய வேண்டுமானால், நாம் பனையோலையில் இருந்து, (கூடவே பனை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டு) தொடங்க வேண்டும். பட்டம்>பத்ரம், தால்>
தாள்> தாளி, தாலம், சுவடி, பனுவல், பொத்துதல், ப(ன்)னை, பாளை, போந்தை போன்ற சொற்களின் வழி, நம் புரிதலைக் கொண்டுசெல்ல வேண்டும். [இந்தக் கட்டுரையில் பாவாணர
கருத்துக்கள் அடியூற்றாய் இருக்கச் சொல்லறிஞர் ப.அருளியின் ”தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியல் உரைகள்” என்ற நூலில் உள்ள “புத்தகம்” என்னும் கட்டுரையில் வரும் பல செய்திகளும், புலவர் இரா. இளங்குமரனின் “தமிழ் வளம்-சொல்” என்ற நூலில் வரும் “பல்” என்னும் கட்டுரைச் செய்திகளும், முனைவர் கு.அரசேந்திரனின் “தமிழறிவோம்-தொகுதி 2” இல் இருந்து “தாளி” என்ற கட்டுரைச் செய்திகளும் கூட நிறைந்து உடன் வருகின்றன. இந்தச் செய்திகளின் ஊடே என் தனிப்பட்ட இடைப்பரட்டும், முன்னவர்களில் இருந்து மாறிவரும் கருத்துக்களும் இருக்கின்றன.]

செய்திகள், கருத்துக்கள், கணக்குகள், குறியீடுகள் ஆகியவற்றை மரம், கல், ஓடு போன்றவற்றில் எழுதிய தமிழன், ஒரு காலத்தில் ஓலையிலேயே பெரிதும் எழுதினான். துணைக் கண்டக் கடற்கரையை ஒட்டிய மாநிலங்களில் எல்லாம் பனை எனும் எழுது பொருள் பெரிதும் பரவியிருந்தது. எங்கெல்லாம் முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் விரவிக் கிடந்தனவோ, அங்கெல்லாம் பனை பெரும்பாலும் வளரும். [ஆனாலும் அண்மையில் இரு மாதங்களுக்கு முன், வடபுலம் போன போது ஒரு வியந்தையைக் கவனித்தேன். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இருவுள் பாதை (Railway), பெருவழிச் சாலைகள் (Highways) ஆகியவற்றின் இருமருங்கிலும் பனை மரத்தைக் கண்டேன் இல்லை; எனக்கு அது வியப்பாகவே இருந்தது; ஒருவேளை அம்மாநிலங்களில் பனை அரிதாகவே இருக்கும் போலும். ஆனாலும் பீகாரில் பனை பெரிதும் இருந்தது. (வங்காளத்திலும் அவ்வாறே இருக்கிறதாம்.) இந்தப் புதலியல் பட்டகை(fact)யைப் புதலியலார் - botanists - தான் உறுதி செய்யவேண்டும்.]

சரி, புலனத்திற்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 22, 2008

மெய் புதுவித்தல் (body refreshing)

அண்மையில் மெய்யைப் புதுவிக்கும் (body refreshing) துறையை ஒட்டிய massage, shower, spa என்ற சொற்களுக்கு இணையான பரிந்துரைகளை திரு. சத்திய நாராயணன் விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார். அவற்றைத் தருவதற்கு முன்னால், ஒரு கவன ஈர்ப்பு.

பொதுவாக, மொழியாக்கத்தில் இணையான தமிழ்ச்சொல்லைத் தேடும் போது குறிப்பிட்ட கருத்தின் உள்ளே துலங்கும் வினைச்சொல்லை அடையாளங் கண்டு, அதன்பின் பெயர்ச் சொல்லிற்கு வடிவங் காணுவது ஓர் ஒழுங்கான முறையாகும். தமிழில் வேர்> வினை> பெயர்> மீண்டும் வினை> மீண்டும் பெயர்> இப்படியாகச் சிந்தனை விரிந்து கொண்டே போய் எழுகைச் சுற்றாய்ச் சொற்கள் (helical circuit) பிறக்கும். அதே பொழுது, இந்தச் சுற்றுக்கள் எல்லையற்றுப் போகாது; பெரும்பாலும், இரண்டு மூன்று சுற்றுக்களுக்கு அப்பால் உண்டாகும் சொல்லின் அசைநீளம் கூடிவிடுவதால் அவ்வப்பொழுது அசைகளின் எழுத்துத் திரிவும், எழுத்துக் குறைப்பும் நடக்கும். மறந்து விடாதீர்கள். தமிழ்ச் சொற்களின் மீநீளம் மூன்றசையே; மிகமிக அரிதாக நாலசை ஏற்படும். நிரவலான சொல்லின் நீளம் இரண்டிலிருந்து மூன்றசை தான்.

இனிக் கேட்டிருக்கும் சொற்களுக்கு வருவோம்.

massaging என்பது, சித்த மருத்துவம் (அதன் வழிப்பட்ட ஆயுர் வேதம்), வருமக் கலை, களரிப் பயிற்சி போன்றவற்றைக் கற்கும் போது சொல்லித் தரப்படும் ஒரு கலையாகும். இந்த அறிவு இன்றைக்கும் நம்மூரில் குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் போன்ற மண்டலங்களில் மீந்து இருக்கிறது. இதை மல்லுப் பிடித்து விடுதல் என்று பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். மற்ற மாவட்டங்களில் தசையைப் பிடித்துவிடுதல் என்றே சொல்லுகிறார்கள். தசை என்பது பொக்குள்>தொப்புள்>தொப்புழ் என்பதைப் போல சதையின் metathesis ஆகும்.

முல் எனும் பொருந்தற் கருத்து அடிவேரில் இருந்து, மல் என்னும் கிளைவேர் பிறக்கும். மல்தல் = பெருகுதல், திரள்தல், பொதுவாகத் திரண்ட சதையை மல் என்று குறித்தார்கள். இன்னும் விதப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் படி, பருத்துத் திரண்ட மார்புச் சதை, மல் என்று அழைக்கப் பட்டது. திரண்ட சதை கொண்டவன் மல்லன் என்று அறியப் பட்டான். மல்லன்>மள்ளன் என்றும் திரியும்.. மல்லம் = மற்போர், வலிமை., வளம். மல்லகச் சாலை = மல்வித்தைச் சாலை. மல்லரங்கம் = மற்போர்ச் சாலை. மல்லாத்தல் = முதுகு கீழாக, மார்பு மேலாக, ஆக்கிப் போடுதல். அதாவது மல்லை உயர்த்தி வைத்தல், மல்லுக் கட்டுதல். = மற்போர். மல்லுப் பிடித்தல் என்பது மல்லுக் கட்டுதலையும் குறிக்கும்.

மல்லில் இருந்தே மலிதல், மாழை (metal), மந்தை, மருவுதல், மருகன், மருவுகை (marriage), மருந்து, மார்பு, மரபு போன்ற பல்வேறு சொற்களும் எழுந்தன. [பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகளில் முல் என்னும் பொருந்தற் கருத்து வேரைப் படித்தால், கணக்கற்ற சொற்களின் தோற்றம் விளங்கும். இந்தக் கட்டுரைக்கு அடிப்படை பாவாணரே.)

முல்+து = முத்து. சிப்பியில் திரண்ட சுண்ணப் பொருள், முத்தம் = வாயிதழ், வாயிதழோடோ, கன்னத்தோடோ குவிந்த, திரண்டு, பொருந்தும் செயல்; முத்தித்தல், முத்துதல் என்பது முத்தச் செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாகும். முத்தை என்னும் இன்னொரு முடிப்பும் திரட்சியையே குறிக்கும். குறுமுத்தம் பழம் என்பது தென்பாண்டியில் உள்ள ஒரு பழம்; மற்ற மாவட்டத்தினர் இதை மிதுக்கம் பழம் என்பார்கள்.

மொலு>மொது; மொதுமொதுவெனல் என்பதும் திரட்சியைக் குறிக்கும். மொதுமொதுவென்று மக்கள் குவிந்தார்கள். மொத்துதல் = உரக்க அல்லது வலுக்க அடித்தல்.

மொத்தம் = பொருட்கள், எண்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுதி. மொத்தன் = தடித்தவன்.

மொத்திகை>மத்திகை = குதிரையை அடிக்கும் சாட்டை. ஒகரச்சொல் அகரச்சொல்லாய் மாறுவது தமிழில் உள்ள பழக்கம் தான். கொம்பு>கம்பு, ஒட்டு>அட்டு, தொண்டையார் பேட்டை>தண்டையார் பேட்டை போன்றவற்றைக் கூர்ந்து பாருங்கள்.

மொத்தளம்>மத்தளம் =இருபக்கமும் அடிக்கும் பெரிய மதங்கம் (= ம்ருதங்கம்) மத்தளம், மதங்கம் இரண்டும் தமிழே.

மொத்தையான பயிறு மொச்சைப் பயிறு (மொத்தை>மொச்சை),
மொத்தை>மோத்தை = செம்மறியாட்டுக் கடா,
மொத்து>மொந்து>மொந்தன் = பெரு வாழை.
மொந்தை = பருத்தது, சோற்றுருண்டை.

மொத்து>மத்து. கீழே குண்டும், மேலே தடியுமாய், தயிர் கடையப் பயன்படும் ஒரு கருவி. பருப்புக் கீரையைக் கடையவும் இது பயன்படும். இந்தக் கருவியின் அடி மொத்தையாய் இருப்பதால் இது மத்து என அழைக்கப் பட்டது.

இந்தப் பெயர்ச்சொல்லில் இருந்து மத்தித்தல் என்ற இன்னொரு வினை பிறக்கும். மத்தித்தல் = மத்தை வைத்துக் கடைதல். பொதுவாகக் கடைதல் என்பது ஒருமுறை கடிகைச் சுற்றில் (clockwise direction) திருகி, பின் நிறுத்தி, எதிர்க் கடிகைச்சுற்றில் திருகி, இப்படியாக மாறி மாறிச் சுற்றுதலாகும். இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் மத்தின் தண்டை வைத்து திருக்கை முறையில் (application of torque) தான் நாம் தயிர் கடைகிறோம். கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்ததாக ஒரு தொன்மம் உண்டல்லவா? அதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

மத்தித்தல் என்ற பிறவினைச்சொல் மத்தித்தல்>மதித்தல் என்ற படி, அதே கடைதல் பொருளை உணர்த்திச் சுருங்கும். இப்படி மத்திக்கப் பட்ட பொருள் குழையும் அல்லவா? எனவே பொருள் நீட்சி பெற்று மதிதல் என்ற தன்வினை உருவாகிக் குழைதல் என்னும் பொருளைச் சுட்டும். மதிதல்>மதியல் என்பதன் திரிவாய் மதியல்>மசியல் என்று ஆகிக் குழைந்த வியஞ்சனத்தைக் (= வேகவைத்த காய்கறியைக்) குறிக்கும். மசி, மசகு போன்ற சொற்கள் இதிலிருந்து இன்னும் விரியும்.

இனி massage என்பதற்கு வருவோம். தொடையின் சதையை, மத்துக் கடைவது போல, ஒருமுறை கடிகைச் சுற்றில் திருகி, இன்னொரு முறை எதிர்க்கடிகைச் சுற்றில் திருகுவதும், ஆகிச் சதையை நெகிழ்த்துவதே massage ஆகும். எனவே ஒப்புமை கருதி மத்தித்தல்>மத்திகை என்னும் சொல் massage என்பதற்கு இணையாகும். தமிழ் அகரமுதலிகளில், மத்தித்தல் என்ற வினைக்குக் கடைதல், அடித்தல், தேய்த்தல், மருந்து கலத்தல் என்ற பொருட்பாடுகளைக் காட்டுவார்கள். இந்தச் செயல்கள் அனைத்தும் massage - -இல் நடைபெறுகின்றன அல்லவா? மத்தாக ஆக்கிக் கடைந்தாற்போல், மாறுபட்ட திசைகளில் சதைத் திரளைப் பிடித்துத் திருகி நெகிழவைத்து, தேவைப்பட்டால் சதைத் திரட்சியைத் தேய்த்தும், அடித்தும், மேலும் மருத்துக்கலவை கொண்ட எண்ணெய்ப் பிழியைச் சூடுபறக்கத் தேய்த்து விட்டும் செய்வது தானே massaging?.

மத்தித்தல் = to massage
மத்திகை = massage (noun)
மத்திகையாளர் = person who carries out the massage

இனி shower என்ற சொல்லிற்கு வருவோம். தூறுதல் என்பது துளித் துளியாய் நீர் வீழும் நிலை. (துள்>தூறு; தெறித்தல், சிதறுதல், தூவுதல் போன்ற சொற்கள் எல்லாம் இதே பொருள் கொண்ட வினைச் சொற்கள் தாம்.) துளிகள் இணைந்து சாரி சாரியாய் (வரிசையாய்) அமைவது சாரல். சால் என்பதும் வரிசையே. சார்தல் = சேர்தல், திரளுதல், சாரிகள் இணைந்து ஒரு தொடர்க் கம்பியாய் வெள்ளப் பெருக்கு (volumetric flow) கூடி அமைவது பெய்தல்/பொழிதல் வினை. காற்றோடு சேர்ந்து மழை பெய்தல் என்பது அடித்து ஊற்றுதல் என்று சொல்லப் படும். மழை கொட்டுகிறது என்பதும் இதே பொருள் தான். வெள்ளமாய்க் கொட்டுகிறது என்று சொல்கிறோம் இல்லையா?

இத்தனை சொற்களில், நடுத்தரமாய்ச் சொல்லக் கூடிய வினைச்சொல் சாரல் என்பதே. ”குற்றாலத்தில் சாரல் தொடங்கிவிட்டது”; ”சாரல் அடிக்கிறது, சாளரத்தை மூடு” என்ற உரையாட்டுக்கள் எல்லாம், தூறலும் இல்லாமல், பெய்தலும் இல்லாமல, நடுநிலையான பெருக்கையே குறிக்கின்றன. என்னைக் கேட்டால், shower என்பதற்குச் சாரல் என்பதையே பரிந்துரைப்பேன்.

shower = சாரல் (அவன் நீர்ச் சாரலில் குளித்தான். அது மழைச் சாரலாய் இருந்தால் என்ன, வீட்டுக் குளியலறையில் உள்ள தூம்பு வழிச் சாரலாய் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

showerhead = சாரல் கொண்டை.

அடுத்தது spa. இது சுனைநீர் நிறைந்த குளம். உள்ளிருந்து சுனைநீர் ஊற்றெடுத்துப் பெருகும் இடம். இந்த நீர் வெதுவெதுப்பாகவும், மருந்து/மூலிகை கல்ந்ததாகவோ, மண்ணூறல் (mineral) கலந்ததாகவோ இருக்கலாம். இது போன்ற குளத்தை இலஞ்சி என்று பழந்தமிழில் கூறுவார்கள். அதையே பொருத்தமாய் இங்கு கூறலாம்.

spa = இலஞ்சி

அன்புடன்,
இராம.கி.