Sunday, October 31, 2021

மொழிபெயர் தேயம்

 கீழே உள்ளது நான் சேர்த்த வாக்கியத் தொகுதி அல்ல. இது இணையத்தில் பார்த்தது. ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. இங்கு தட்டச்சியது மட்டுமே  நான். ஒரு வாக்கியம் எப்படி அடுத்தடுத்து சிச்சிறிதாய் மாறுவதைப் பாருங்கள்.

தமிழ்: ஆசையே ஒற்றைப் பாதை, வேறு அனைத்தும் பாதையற்றவே

தமிழ்-தெலுங்கு: ஆசையே ஒகற்றைப் பாதை, வேறு அனைத்தும் பாதையற்றமே 

தெலுங்கு: ஆசையே ஒகட்டிப் பாந்தை, வேது அனைத்தும் பாந்தையற்றமு 

தெலுங்கு-மராட்டி: ஆசயே ஒகடிப் பாந்த, வேஷு அனைஷ்ஷும் அல்பாந்தயம்

மராட்டி-குஜராத் ஆசயே ஒவடிப் பாந்த, வேஷு அனைஷ்ஷும் அல்பாந்தயம்.

குஜராத - ராஜஸ்தான் ஆசயே ஔபடிப் பாந்த, வேஷு அனைஷ்ஷம் அபாந்தயம்

ராஜஸ்தான் - பஞ்சாப்: ஆசே யே அபடேப் பாந்த, வேஷு அனைஷ்ஷம் அபாந்தயம்

Old Indian/Rig Vedic: abade pantha he ashae, visha anyaesham apantham

Old Iranian/Avestan: aevo pantao yo ashahe, vispe anyaesham apantam (Yasna 72.11) 


ஐ எழுத்தின் வடிவம்

இதுபற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவில் எழுந்தது. ”அகர இகரம் ஐகாரm ஆகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்க காலத்தில் ஐக்கொரு தனி வடிவம் இருந்திருக்கும்” என்றும், ”நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்கு மாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப் பட்டன. இச் சிக்கலுக்கு முடிவுகாண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப் பாராது தமிழின் உயிர், மெய் எழுத்து வடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் காண்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங் கூடச் சேர்த்துப் பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.) 

[அதேபோது தொடர்புள்ள இன்னொரு புலம்பலை இங்கு சொல்லவேண்டும். உயிர்மெய்க் கீற்றுக்கள் எல்லாமே எழுத்துவடிவத் தொடக்கத்தில் மேலும், கீழும், பக்கவாட்டின் இருபுறமும் இழுக்கப்பட்ட கிடைக்கோடுகளின் மாற்று வடிவங்களேயாகும். ”எவ்விடத்தில் இடுகிறோம்?” என்பதைத் தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச் சிறுத்த, பொருட் படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க் கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும்  விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கம் எது? எவற்றைக் குறிக்கின்றன? - என்றுகூட யாரும் எங்கும் பதியவில்லை. ஆயினும் எழுதுந்தேவை கருதி அக்காலத் திண்ணைப்பள்ளிகளில் ”உயிர்மெய்க் குறியீடுகள்” என்றே பெயரிட்டுச் சொல்லிக் கொடுத்தார். 65 ஆண்டுகளுக்கு முன் இளமையில் அப்படிக் கற்ற பட்டறிவு எனக்குண்டு. 

இக்கால ஒருங்குறி ஆவணங்களில் இவற்றை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்று பிழையாய்க் குறிப்பர். ”கால்” என்பதே ஆகார உயிர்க் குறியீடெனில் ஆகார உயிரின் கீழ்மாட்டில் வருஞ் சுழி பின் என்ன குறியீடாம்? அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ள வில்லையே? மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேம் என்று அடம்பிடித்தால் எப்படி? தமிழிலக்கண வழிகாட்டல்களை மறுத்து ”தமிழெழுத்து வரிசையை அபுகிடா” என்று தப்புந் தவறுமாய் வரையறுத்த ஒருங்குறி ஆவணத்தைப் பின்பற்றி இற்றைத் தமிழாய்வாளர் பிழைச் சொற்களைக் கையாள்வது கொஞ்சங் கொஞ்சமாய் நம் மரபைப் போக்கடிக்கும். (ஒருங்குறிக்கு வால்பிடிப்போர் தூண்டுதலால் பலவிடங்களில் vowelized consonant markers என்பதற்கு மாறாய் vowel markers எனக் கேட்கையில் எமக்கு வருத்தமே எஞ்சுகிறது. வணிக வல்லாளுமை கொண்ட ஒருங்குறியின் போதாமையைப் பேசத் தொடங்கினால் மாளாது வேறு வழியின்றி இதைப் பொறுத்துக்கொண்டு எல்லோரும் ஆளவேண்டியுள்ளது.]  

இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். படவெழுத்துக்களில் தொடங்கி, குத்துக்கோடுகள், கிடைக்கோடுகள், வளைவுகளாலான எழுத்துகளை உருவாக்கி மாறியபோது கல், மரம், ஓடு, மாழை போன்றவற்றிற் கீறியே தமிழர் எழுதினர். (சொற்பிறப்பியலின் படியும் இழுத்தது எழுத்து ஆயிற்று என்பார் பாவாணர். நம் ”எழுத்தும்” மேலையிரோப்பிய ”letter” உம் பொருளிணை காட்டுவதைச் சொன்னால் இராம.கி.க்கு எப்பொழுதுமே பொல்லாப்பு.) மரத்தில் எழுதியது பின் பட்டையில், ஓலையில் எழுதுவதற்கும் விரிந்தது. கல், மரம், ஓடு, மாழை போன்ற எழுது பொருட்களில் எழுதுவதற்கும், நெகிழும் ஓலையில் எழுதுவதற்கும் நுணுகிய வேறுபாடுள்ளது. ஓலையின் நீட்டுவாக்கில் நார்களுள்ளதால், எழுத்தின் கிடைக்கோடுகள் ஓலையைக் கிழித்துவிட வாய்ப்புகளுண்டு. இதைத் தவிர்க்கும் முகத்தான், ஓலைப் பயன்பாடு கூடக்கூட, எழுத்துக்களின் கிடைக்கோட்டு நீளங் குறைந்து, குத்துக்கோடுகள் வளைந்து எல்லா எழுத்துக்களும் வளைவுகளும் வட்டங்களும் கொள்ளத்தொடங்கின. 

ஒரு நுட்பியலென்பது எழுத்துக்களை மாற்றவுஞ் செய்யும்; நிலை பெறவுஞ் செய்யும். கல்/மரம்/ஓடு/மாழை போன்றவற்றில் வெட்டியது சிற்சில மாற்றங்களுடன் எழுத்துக்களை ஓரளவு நிலைக்கவே வைத்தது. அதே பொழுது ஓலையிற்/தாளிற் கீறியது காலவோட்டத்தில் எழுத்துக்களை மாற்றியது. ஏனெனில் சுவடிகளைப் படியெடுக்கையில் ஒருவர் கையெழுத்துப் போல் இன்னொருவர் கையெழுத்து இருக்காது அல்லவா? ஓர் ஓலைச்சுவடியின் ஆயுட் காலம் ஏறத்தாழ 150 ஆண்டுகளே எனும்போது இன்றுள்ள சங்க இலக்கியங்கள் 13/14 ஆம் எடுவிப்புகள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இற்றையெழுத்தில் நாம் படிக்கும் சங்க இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்தில் முந்தை எழுத்து வடிவிலேயே இருந்தன. நம்மில் யாரும் 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சுவடியைப் பார்த்ததேயில்லை. 

(இற்றை இகரங் கூடத் தாளால் மாறிய தோற்றமே காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டு இகரம் இதனினுஞ் சற்று மாறுபட்டது. இதைப் பேசினால் நம்மை வேறுபக்கங் கொண்டு செல்லும். என்னைக் கேட்டால் 13/14 ஆம் நூற்றாண்டு இகர வடிவிற்கு நாம் மாறினால் இற்றைத் தமிழ் அச்சு/கணியெழுத்துகளில் இருக்கும் வடிப்புச் சிக்கலைத் தீர்க்கலாம். வடிப்புக் கிறுவியலைப் பற்றி யெலாம் பேசும் அளவிற்குத் தமிழ்க் கணிமை வந்துவிட்டதா, என்ன?. தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலேயே எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம்?) 

ஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சு நுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன் வந்த கணி நுட்பியலும், இவற்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புது நுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர் பெயரைச் சொல்லிச் சிறார் கல்வியைக் காரணங் காட்டிச் சீர்திருத்தம் பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு.  

எழுத்துத் திரிவை மேலும் பார்ப்போம். வட்டார எழுதுபொருட் பயன்பாடு அந்தந்த நாடுகளுக்கேற்ப மாறியது. பனையோலை பெரும்பாலும் வறண்ட பாண்டியிலும், தென் சேரலத்திலுமே கிடைத்தது. அதற்காக வட சேரல, சோழ நாடுகளில் பனையோலை கிடைக்கவே இல்லையென்று சொல்ல முடியாது. விழுக்காட்டு மேனி தென்பகுதிகளிலே அதிகங் கிடைத்தது, அவ்வளவு தான். எப்பகுதிகளில் அதிக ஓலை கிடைக்க வில்லையோ, அங்கு இலக்கிய ஆவணங்கள் குறைந்தே பேணப்பட்டன. தமிழ்ச்சுவடிகள் தென்பாண்டியில் பெரிதுங் கிடைத்தது அப்படித் தான். ஓலை மிகா இடங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே மிகுந்தன. முன் சொன்னது போல் தமிழியெழுத்து பெரிதும் உருவம் மாறாது ஓலையிலா எழுது பொருட்களில் இருந்து வந்தது. அதே பொழுது ஓலை பெரிதும் பயன்பட்ட பாண்டியிலும், தென்சேரலத்திலும் தமிழி யெழுத்து கொஞ்சங் கொஞ்சமாய் வளைந்து நெளிந்து வட்டெழுத்தாய் மாறியது இயல்பான ஒன்றுதான். எல்லாம் கை பண்ணிய வேலை. 

கடுங்கோன் வழியினரைத் தோற்கடித்து விசயாலய வழியினர் பாண்டியரை இல்லாமற் செய்த நிலையில் (குறிப்பாக இராசராசன் காலத்தில்) தம் ஆட்சி நன்கு செயற்பட எழுத்தை மாற்ற வேண்டிய தேவை சோழருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வட்டெழுத்தின் அளவு மீறிய வளைவால் எழுத்துக்களின் தனியடையாளங் குலைந்து பொருள் புரியாது போகும் நிலை ஏற்கனவே பாண்டி நாட்டில் இருந்தது. அரசாணை மூலம் வட்டெழுத்தைத் திருத்தாமல், சோழ எழுத்தையே பாண்டிய, தென் சேரல நாடுகளில் புழங்க வைக்கும் படி சோழர் ஆணையிட்டார். அதனால் வட்டெழுத்து முடிவுற்றது. தென் சேரலத்தில் மட்டும் மேல்தட்டு வருக்க அரண்மணைப் புழக்கங்களில் வட்டெழுத்து நீடித்தது. 

1600களில் வட்டெழுத்துக் குழப்பம் போக்கும் வகையிலும், அளவிற்கு மீறிய சங்கதப் புழக்கத்தை நேரியப் படுத்தும் வகையிலும் வடசேரலத்தில் புழங்கிய கிரந்தத்திலிருந்து மலையாள எழுத்துக் கிளைத்து, தென்சேரலத்திற்கும் பரவியது. தனியெழுத்துப் புழக்கத்தாலேயே மலையாள மொழி என்பது நிலை பெற்றது. இல்லா விட்டால் அது தமிழின் வட்டாரக் கிளை மொழியாய் நிலைத்திருக்கும். (இப்பொழுதுங் கூடத் தமிங்கிலத்தைத் தனிமொழியாய் நிலைக்க வைக்கும் வாய்ப்பாகத் தமிழ் ஒருங்குறிக்குள் வேற்றொலி எழுத்துக்களைக் கொணரச் சிலர் விடாது முயல்கிறார். தமிழர் சற்றே கண்ணயர்ந்தாலும் மலையாளம் வேற்றம் 2.0 மீண்டும் ஏற்பட்டு விடலாம். ”ஐயையோ, சங்கதத்தைத் தான் நாங்கள் காப்பாற்றுகிறோம், தமிழுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை” என்று சிலர் சொல்வது வெறுங் கண்கட்டு வித்தை. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். நான் கிரந்தத்திற்கு எதிரியில்லை. ஆனால் தமிழுக்குள் கிரந்தம் தேவையற்று நுழைய வேண்டாம் என்பவன்.)  

அதே பொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப் படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகர வரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப் பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதே போலப் பழந் தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப் புகுந்தால், வேறு புலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி> பெருமி, தமிழி> கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)    

கடந்த நூறாண்டு காலக் கல்வெட்டாய்வின் மொத்தப் பலனாய், இன்று இணையமெங்கும் சுற்றிக் கொண்டிருக்கும், History of Tamil Script என்ற படம் தமிழி>பல்லவ>சோழ எழுத்தில் ஏற்பட்ட வெவ்வேறு உயிர், மெய்த் திரிவுகளை நமக்கு இனங் காட்டும். வெவ்வேறு எழுத்துக்கள் எக்கால கட்டத்தில் இற்றை வடிவத்திற்கு வந்து சேர்ந்தன என்பதைச் சற்று ஆழ ஆய்ந்தால் மேலுஞ் சில உண்மைகள் புலப்படும். 

காட்டாக உயிரெழுத்துக்களில் அ என்பது 8 ஆம் நூற்றாண்டிலேயே இற்றை வடிவத்திற்கு வந்துசேர்ந்து விட்டது. ஆ என்பது 13 ஆம் நூற்றாண்டில் இற்றை வடிவம் பெற்றிருக்கிறது. இ என்பது 12/13 ஆம் நூற்றாண்டில் நிலைத்த உருவம் பெற்று அச்சுத் தொழில் காரணமாய் 19 ஆம் நூற்றாண்டில் சட்டென இற்றை உருவம் பெற்றுள்ளது. அதாவது நிலைத்த உருவம் சட்டென மாறிப் போனது.. ஈ என்பது 12 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவங் கொண்டது.  உ -வும் ஊ-வும், எ-யும் 5/6 ஆம் நூற்றாண்டுகளில், இற்றையுருவம் பெற்றுவிட்டன. ஐ- யும் ஒ -வும் 9 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவம் பெற்றன. ஏ, ஓ, என்பன வீரமாமுனிவருக்கு அப்புறம் வடிவம் பெற்றன. ஔ என்ற எழுத்து 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சுவடிவம் வந்தபிறகே உருவம் பெற்றிருக்கின்றது. 

மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க், ங், ச், ஞ், த், ந், ய், ர், ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம் பெற்று முற்று முழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றுள்ளன. ழகரம் மட்டும் 17 நூற்றாண்டு தான் இற்றைவடிவம் பெற்றது. இதுவும் ஒருவேளை அச்சுத் தொழிலால் பெற்ற மாற்றமோ, என்னவோ?,  

8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழராட்சி சோழநாட்டில் ஊன்றிப் பல்வேறு கல்வெட்டுகளை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக் காக்கத் தொடங்கியது. இக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப் பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத் தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம்  வந்த அரசர் செந்தரப் படுத்தப்பட்ட எழுத்தையே பயன் படுத்தியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது. சோழரின் கல்வெட்டுப் பயன்பாடே இற்றைத் தமிழெழுத்தை உறுதிப்படுத்தியது. 

இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புது வடிவம் என்பது புரியும். இந்தப் புரிதலோடு  

-------------------

அகர இகரம் ஐகாரமாகும் 

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

-------------------

என்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்ல வருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்? ஐ தேவை தான்.

அன்புடன்,

இராம.கி.  

நண்பர்கள் கவனத்திற்கு

முகநூலில் Linguistic coincidences and curiosities குழுவில் பல்வேறு மொழிகளுக்கு இடையே இருக்கும் தற்செயல் அமைவுகள், விந்தைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு எழுதுவார். இதில் உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களும், உருபுகளும், இலக்கணக் கூறுகளும் ஒப்பிடப் படும். ஒருமுறை Miŋ Q Kim என்பார் , 

#ProtoUralic *niŋä /niŋæ/ "woman"

#Spanish niña /niɲa/ "girl"

PU *niŋä is the origin of Hungarian nő, Mansi нэ̄, and Tundra Nenets не. Spanish niña is the feminine equivalent of niño....

என்று எழுதியிருந்தார். வெவ்வேறு உறுப்பினர் அவருக்குத் தோன்றிய செய்திகளை இங்கு குறிப்பிட்டார். நான் ”In Tamil, nangai = woman” என்று சொன்னேன். உடனே, Aaron Marks என்பார், ”I mean, all languages come from Tamil, so that's cheating“ என்று சொன்னார். நான் என் மறுமொழியாக, ”I never said that. Why do you attribute motive to me? I only said nangai = woman in Tamil. Should I keep quite when I see some correspondence? Is this a forum for just some exclusive people? Pl respond to what I said and nothing more. This is a forum to indicate linguistic coincidences and curiosities “ என்று சொன்னேன். 

மீண்டும் Aaron Marks தன் மறுமொழியில் “Lol, sorry, wasn't trying to impugn you personally, just have heard the Tamil theory a bunch from different people recently and decided to call it out, just for fun  ;) “ என்று சொன்னார். அதோடு, இடுகையிட்ட Miŋ Q Kim என்பாரே “Making a joke that Tamil is mother language of all languages is a meme” என்று சொல்லிக் கூடவே ”search Tamil in this group” என்று சொன்னார்.

இந்த உரையாடலை நான் ஏனிங்கு வெளியிடுகிறேன் எனில், தமிழராகிய நாம், வெளியில் எப்படி மதிக்கப்படுகிறோம் என்று அறிந்து கொள்ளத் தான். நம்மிற் பலரும் இணையமெங்கும், குறிப்பாய் முக நூலில், “தமிழே உலகத் தாய்மொழி, உலகின் எல்லா மொழிகளுக்கும் அதுவே முதல்” என்று தன் முனைப்பாக, வானத்தில் பட்டம் விடுவது போல், ஏதேதோ சொல்லி விடுகிறோம். இதுநாள் வரை  நம்மை அடக்கி வைத்த சங்கதத்தை மீறுவது தேவை தான். (அது உள்ளூர்ச் சிக்கல்.) அதற்கும் ஆதாரங்கள் வேண்டும். அதற்கு அடுத்தாற் போல் இந்தையிரொப்பியன் - தமிழ் தொடர்பையும் பேசத் தான் வேண்டும். அதிலும் தவறில்லை அதிலும் நாம் சொல்ல நினைப்பதை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.

ஒன்றைக் கவனித்தீர்களா? நாம் சொல்வதெல்லாம் நம் ஆதாரங்கள் மட்டுமே1 பிற மொழிகளோடு ஒப்பிட வேண்டுமெனில் அம்மொழிகளில் நமக்குப் புலமை வேண்டும். சுமேரியன், அக்கேடியன், எகிப்து, சீனம் இப்படிப் பழம் மொழிகளில் நமக்குப் புலமை இல்லாத போது, வானத்தை வில்லாய் வளைக்க முடியாது. வேற்று மொழிச் செய்தி தெரிந்தால், அது போல் நம்மூரில் செய்தி யிருந்தால் அதற்கு நம்மூர் ஆதாரஞ் சொல்லி “இப்படி இருக்கிறது” எனலாம். அதற்கு மேல் ஏதுஞ் சொல்ல முடியாது. நான் அறிந்தவரை தமிழே உலக மொழிகளுக்குத் தாய் என்று சொல்ல நம்மிடம் இருக்கும் தரவுகள் பற்றாது. (அதே பொழுது உலகின் பழைய செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்லக் கட்டாயம் வாய்ப்புண்டு.)  

எதையும் ஆதாரமின்றிச் சொல்வோமானால், உலகம் அதைப் பார்த்துக் கொண்டு நிற்காது. நம்மைக் கேலி செய்யும், ஒதுக்கும், மறுக்கும், முடிவில் நாம் பேசுவது எதுவுமே இணையவுலகில் எடுபடாது போகும். நண்பர்களே! உள்ளமையைப் புரிந்து கொள்வோம். ஒருபக்கம் பாவாணரைக் கொண்டாடுவது சரியே. அதே பொழுது, இன்னொரு பக்கம் மாற்றார் கூற்றையும் படியுங்கள். ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள். இரண்டும் முரண்படலாம். அதில் தவறேயில்லை. சற்று பொறுமை கொள்ளுங்கள். மாற்றாரோடு நல்லுறவைப் பேணுங்கள். இது கற்க வேண்டிய காலம். நம்மிருப்பை மாற்றாருக்குச் சொல்ல வேண்டிய காலம். சொல்லாமலே பல காலம் தூங்கி விட்டோம். இனியாவது அதைச் செய்வோம்.


மதுரைக் கோட்டை அகழியின் கீழே ஒரு சுருங்கை வீதி

கீழடி அகழாய்வு என்பது இப்போது ஏழாங் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஒரு பெருநகருக்கு அருகில் வெறும் 12 கிமீ.யில் இன்னொரு நகரிருக்க வழியில்லை. மதுரையென்னும் பெருநகர் 2,3 முறை அழிந்திருக்கிற்து. (சிலம்பில் சொல்லப் படும் அழிவு, இடைக்காலப் பாண்டியரின் மதுரை, நாயக்கர் காலத்து மதுரை, கான்சாகிப் காலத்து மதுரை என்று பலமுறை அழிந்து மீண்டும் கட்டப் பட்டுள்ளது. தவிர வைகையாறும் தடம் மாறி ஓடியிருக்கிறது. எனவே நாம் இப்போது சொல்லும் கீழடி ஒருக்கால் பழ மதுரையாய் இருந்திருக்கலாம். அதை அடையாளங் காண ”சிலம்பு” ஒரு வழி சொல்லுகிறது. இது பற்றி என் சிலம்பு ஐயங்கள் தொடரில்  https://valavu.blogspot.com/2019/09/27.html என்ற பகுதியில் சொல்லியுள்ளேன். 

சிலம்பில் மதுரைக் கோட்டையில் உள்ள அகழிக்கடியில் ஒரு சுருங்கை வீதி இருந்தது சொல்லப்படும்.  

-------------------------------

இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

இலங்குநீர்ப் பரப்பின் வ்லம்புண ரகழியில்

பெருங்கை யானை இளநிரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கிற் போகிக்

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்

காயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு

வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்

    - ஊர்காண் காதை 63-69   

-----------------------

இதன் பொருள்:

கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டோடு வளைந்து கிடக்கும்

நீர்ப்பரப்பின் வலப்பக்கம் புணரும் அகழியின் கீழ்

பெருந் துதிக்கை கொண்ட யானைகள்

கூட்டமாய்ப் பெயரும் சுருங்கை வீதியின் மருங்கிற் போய்

ஆங்கு

ஆயிரங்கண் இந்திரனுடைய அருங்கலச் செப்பின் வாய் திறந்தது போல்

தோற்றும் மதிலக வரப்பின் (= gate complex) முன்னே

அகழியும், சுருங்கை வீதியும் அதற்கப்பால்

இலங்குநீர்ப் பரப்பும், ஆற்றின் மருதந்துறையும்

இருப்பதைச் சொல்லும். பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க் காணும் அகழிப் பாலத்திற்கு மாறாய் இங்கே முற்றிலும் புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கை வீதி (கவனித்துப் பாருங்கள் வீதி. யானைகள் கூட்டமாய்ப் போகும் அளவிற்கு ஒரு வீதி ஆற்றின் அடியில்) ஒன்று சொல்லப் படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. (கீழடியை ஆய்வு செய்வோர் இக் குறிப்பைப் படித்தாரா என்று தெரியாது. ”கோட்டை வாசலில் ஒரு சுருங்கை, அகழிக்கடியில் இருந்திருக்கிறது”. இதைக் கண்டுபிடித்தால் பழம் மதுரைக்கு அருகில் வந்து விட்டோம் என்று பொருள்.) இது போன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்த சாற்றங் கூட இப்படிக் காட்டாது.

மணிமேகலை  12 ஆம் காதையில்  79 ஆம் அடியில், ”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி” என்ற கூற்று குளத்திலுள்ள மதகுக்கு அடுத்து உள்ள சிறு வழியில், இது குழாயாகலாம். இன்றும் இப்பழக்கம் குளம், கண்மாய், ஏரிகள் இருக்கும் ஊர்களில் உண்டு. இதன் பெயர் ”சுருங்கைச் சிறுவழி” வெறும் ”சுருங்கை” அல்ல. சுருங்கை என்பது பூமிக்கடியில் தோண்டியது என்று பொரூள் கொள்ளும். சிறு வழி  என்ற சொல் இல்லையென்றால் பொருள் வேறு. மேலே சுருங்கை வீதி என்ற விரி பொருள் கூட்டுச் சொல்லுக்கு வந்ததை நினைவு கொள்ளுங்கள்.

மணிமேகலை 28 ஆம் காதையில் ”சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கல்லவை நீரும்” என்பதில் வரும் சுருங்கித் தூம்பு தான் இங்கு வடிகால் என்ற பொருள் கொள்ளும். அதிலும் சுருங்கைக்கு அந்தப் பொருளில்லை. தூம்பிற்குத் தான் அந்தப் பொருள் சுரங்கமாய்த் தோண்டிப் பொருத்திய தூம்பு என்று பொருள். தூம்பு = குழாய் = tube.

அன்புடன்,

இராம.கி.   


சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்களா?

என்னைக் கேட்டால், அப்படி இருக்கத் தேவையில்லை என்பேன். பல தமிழாசிரியர் அப்படிச் சொல்வதாலேயே அது உண்மை ஆகிவிடாது. கல்கியின் ”பொன்னியின் செல்வனும்”, விக்கிரமனின் பல்வேறு புதினங்களும், பாலகுமாரனின் ”உடையாரும்” இது போல் தொடர்ச்சிக் காப்பியங்களா, என்ன? கிடையாது. ஒரே பின்புலத்தில் தத்தம் புனைவுகளை 20 ஆம் நூற்றாண்டின் வெவ்வேறு காலங்களில் கல்கி, விக்கிரமன், பாலகுமாரன் ஆகியோர் செய்தனர். அவர் மூவரும் சம கால ஆசிரியரும் அல்லர். அடுத்தடுத்து வந்த அம் மூவரும் பொ.உ.900-1100 ஆண்டு சோழப்பேரசைத் தத்தம் புனைவு வடிவில் எடுத்துக் காட்டினார். அவ்வளவு தான். இதே போன்ற பார்வையில் சிலம்பையும் மேகலையையும் பாருங்கள்.   

மேகலைச் செய்திகளைச் சிலம்போடு ஒட்டி ஒன்றின்பின் ஒன்றாய் நடந்தது போல் சிலர் கொள்வது எனக்குச் சரியென்று தோன்றவில்லை. (ஆழ்ந்து பார்த்தால், 2 காப்பியங்களுக்கும் கதைத் தொடர்ச்சி இல்லை. இயற்கைத் தொடர்பின்றி உழைத்துச் செய்த கணுக்கங்களே (laboured connections) எனக்குத் தெரிகின்றன. சிலம்பின் முதலிரு காண்டக் களன் ஏறத் தாழ 15 ஆண்டுகளுள் முடிந்துவிடும். அதற்கப்புறம் வஞ்சிக்காண்டத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கண்ணகியின் கோயில் எழும்பிவிடும். இப் 18 ஆண்டு ஓட்டத்தில் சிலம்பில், உண்மை நிகழ்வுகள் நிறையவும், உட்கட்டமைப்பு சரியானதாகவும், புனைவு மிகக் குறையவும் உள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. (புனைவின்றி எக்காப்பியமும் இல்லை.) 

சிலம்பின் அடிப்படை நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். சிலம்பு முழுதையும் புனைவென்பது தமிழர் வரலாற்றைக் குலைக்கும் முயற்சியே. (என்னைக் கேட்டால், நம் வரலாற்றை  முறையாய் எழுத உதவுவது சிலம்பு நூல் என்பேன். அதில் தப்பு விட்டால், தமிழர் வரலாறே தாறுமாறாகும்.) சிலம்பைச் சங்கநூல் என்றே நான் சொல்வேன். என் கணிப்பில் சிலம்பின் காலம் பொ.உ.மு.75.  இதற்கான ஏரணமும், வாதங்களும், பட்டகைகளும் (facts) ”சிலம்பின் காலம்” நூலில் அடங்கியுள்ளது. என் நூலை அருள்கூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.  

சிலம்பிற்கு 460/470 ஆண்டுகள் கழித்து, ஏறத்தாழ பொ.உ. 385/395 களில் பெரும்பாலும் களப்பிரர் காலத்தில் எழுந்திருக்கக் கூடிய மேகலையில் புனைவுகள் மிகுதியாகவும் கதை உள்ளீடு குறைந்தும், பண்பு, நீதி வெளிப் படுத்தும் செயற்கைகள் கூடியும் தென்படும். செயின ”நீலகேசி” போல், புத்த ”மணிமேகலை” தம் சமய வெற்றியைக் குறிக்கவெழுந்தது. தமிழ்நாட்டில் புத்தம் உயர்நிலை அடைந்தது பொ.உ.300-500 களில் தான். மேகலைக் காப்பியம் காஞ்சியில் முடிவதும் கூட புத்தமத உயர்ச்சிக் கூறலுக்கே. கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகவு இருந்ததைச் சிலம்பு சொல்வதால், அதைக் கருத்தில் கொண்டு, இன்னொரு புனைகதை எழுப்பி, 460/470 ஆண்டுகளுக்குப் பின் ”மணிமேகலை” எழுந்திருக்கிறது. 

சிலம்பின் தொடர்ச்சி போல் இதைச் சொன்னால், புத்தமதக் கருத்துகளுக்கு மக்களிடை ஏற்பிருக்கும் என்று சில நிகழ்ச்சிகளை அங்குமிங்கும்  இணைத்து முடிவில் நீலகேசி போலவே ”சமயப் பட்டிமண்டபம்” கொண்டுவந்து இக் காப்பியம் முடிக்கப்பட்டுள்ளது என்பதே இப்போதைய எனது சிந்தனை. இப்போதெலாம் மறைந்த காஞ்சி சந்திரசேகரர் பற்றிப் புதுப் புதுக் கதைகள் சொல்லி அவரைத் தெய்வ நிலைக்குச் சிலர் ஏற்றிப் போகிறாரே, அதுபோன்ற மனப்பான்மை மணிமேகலைக் காப்பியக் காலத்தில், இக் காப்பியத்தின் வழி ஏற்றப்பட்டு இருக்கலாம். ஒரு புத்தமதப் பரப்புரை நூலை ”முழுதும் உண்மை சார்ந்தது” என்று சொல்லிவிட முடியாது. இலங்கையின் மகாவம்சம் என்பது முழுதும் உண்மையா, என்ன? அதிற் சில உண்மைகள் இருக்கும். கூடவே புனைவுகளும் உண்டு. 

மணிமேகலையை ஆழ்ந்து அலசாது, ஒருசிலர் அதைவைத்துச் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்துக் கொண்டுள்ளார் என்றே நான் சொல்வேன். அவரவர்க்கு ஏதோவொரு நிகழ்ப்பு என்று நகர வேண்டியது தான்.,  மேகலையில் வரும் நிகழ்ச்சிகள், குறிப்பாக கடலால் ஏற்பட்ட புகார் அழிப்பு, மேகலையின் காலத்தைப் பெரிதும் பின்னால் கொண்டு செல்கிறது. இந்தொனேசியா சுமத்திராவில் பொ.உ.385 க்கு அருகில் (2004 இல் நாம் பார்த்த அளவோ, அல்லது அதற்கும் மேலோ) ஒரு பெரிய ஆழிப்பேரலை ஏற்பட்டது பற்றிச் சீனக் குறிப்புகளிலும், இற்றை அறிவியல் ஆய்வாலும் வெளிப்பட்டுள்ளது. ”மணிமேகலையின் காலம்” பற்றிய நூலெழுதும் முயற்சியிலுள்ள நான் ஒரு சமயம் இக்குறிப்புகளைத் தேடித் தேடிச் சேர்த்தேன். அவற்றை ஒரு சேர வெளிப்படுத்தி என் ஏரணத்தைப் பின்னால் காட்ட முயல்வேன்.

புகாரில் இன்றுமுள்ள பல்லவனீச்சுரம் பற்றிப் பேசுவோர் அக் கோயிலுக்குப் பின்னால் இன்றுமுள்ள சம்பாதி கோயில் இடிபாடுகளையும், பல்லவனீச்சுரம் கோயிலுக்கு முன் (இற்றை நகரத்தார் சத்திரத்திற்கு அடுத்துள்ள) அகழ்ந்து எடுக்கப்பட்ட புத்தபீடிகைக் கோயில் பற்றியும் பேசவேண்டும். பொதுவாகப் பிடாரி கோயிலும் (இங்கே ஊர்த் தெய்வமான சம்பாதி கோயில்; அந்த ஊரின் மற்றொரு பெயர் சம்பாதிப் பட்டினம் தானே?) வேதமறுப்புப் பள்ளிகளும், விகாரங்களும், ஆராமங்களும் சங்ககால மரபின் படி ஊருக்கு வெளியில் தான் இருந்தன. எனவே இற்றைப் பல்லவனீச்சுரம் இருக்குமிடம் பழம் புகாருக்குச் சற்று வெளியில் என்று சொல்லலாம். 

கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகளைப் பார்க்க வந்த போது ஊரின் அகலமான ஒரு காதத்தை கடந்து வருவர். பொதுவாகப் பழ நகரங்களின் விகிதமுறையாய், ஒரு காதம் அகலம் இருந்தால் 2 காதம் நீளமிருப்பது வழக்கம். (எப்படி 1:2:4 அ்ளவில் செங்கல் செய்தாரோ, அதுபோல) 1:2 என்ற முறையில் ஊரளவு இருந்திருக்கலாம். தென்புல முறைப்படி 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ என்பர். வடபுல முறைப்படி, 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ  சிலம்பில் தென்புல முறையே பயன் பட்டுள்ளது. அப்படியாயின், பல்லவன் ஈச்சுரத்திலிருந்து குறைந்தது 7 கி.மி. தள்ளியே, கிழக்கே அந்தக் காலத் கடற்கரை, துறைமுகம் ஆகியவை இருந்திருக்க முடியும்.

அதாவது இற்றைக் கடற்கரைக்கும் 4 கி.மீ. தள்ளியே பழங் கடற்கரை இருந்திருக்கும். இற்றை NIO, HANCOCK ஆகியோரின் கடலாய்வின் வழி 4,5 கி.மீ தள்ளியே பல கட்டிடச் சுவர்களைக் கடலுக்குள் பார்த்துள்ளார். எனவே புகார் அழிந்தது உண்மை. அது எப்போது அழிந்தது என்பதிற்றான் குழப்பம். இப்போதையப் புரிதலின் படி அது பொ.உ.4 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றே எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் கடற்கோள் நடந்ததாய் இதுவரை எந்த அறிவியல் ஆய்வும் சொல்லவில்லை. ஆனால் ஆழிப்பேரலை ஏற்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார். 

பூம்புகாரின் பரப்பளவு கிட்டத்தட்ட 90 சதுர கி.மீ இருந்திருக்கலாம். அந்த ஊரை நிலைத்த, அசையாத, நிலங் கொண்டதாய்க் கருத முடியாது. சி்லம்பின் விவரணம் படிக்கும் போது அது இற்றைக் கொச்சி, எரணாகுளம் போல் [ஊடுவரும் உப்பங்கழிகள், சேற்றுப் பகுதிகள், மரப் பாலங்கள், சேற்றுக்குள் மரக்கால்கள் ஊன்றிச் செய்யப்பட்ட பெட்டிக்கடைகள் என்று தமிழர் அறியாத, (ஆனால் மலையாளிகள் நன்றாய் அறிந்த) ஆற்றுமுகம்] புகாரில் இருந்திருக்கலாம். கவனிக்க: ”லாம்” என்கிறேன். ஒருமுறை எழுத்தாளர் செயமோகனின் கொற்றவையையும் படியுங்கள். அவருடைய பூம்புகார் கற்பனை விவரிப்பு நமக்கு வேறு தோற்றத்தைத் தரும். உறையூர், மதுரை போன்று புகாரை எளிதில்  விவரிக்க முடியாது. இற்றைக் கொடுங்கோளூர் (பழைய வஞ்சி) போல் அதைப் பாருங்கள்.  .

மணிமேகலைக் காப்பியம் பற்றி இன்னொன்றையுஞ் சொல்லவேண்டும். சிலம்பில் ”மதுராபதிக் கோயிலின் வெளிச் சுற்றாலையிலிருக்கும் ஒரு மண்டபத்தில் சாத்தனார் தங்கியிருந்த போது கண்ணகி வந்து மதுராபதியோடு (மதுராபதி விவரிப்பு இற்றை அங்கயற்கண்ணியின் விவரிப்பைப் போலவே இருக்கும். படிக்கும் போது நாம் வியக்காது இருக்க முடியவில்லை) பேசிக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் கேட்டதாகவும் இளங்கோவிடமும், செங்குட்டுவனிடமும் கூறுகிறார்”. புத்த மதஞ் சார்த்த ஒரு புலவர், இது போன்று வெளிக் கோபுரங் கடந்து சுற்றாலைக்கு (பிரகாரத்திற்கு) வந்து ஒரு மண்டபத்தில் படுத்துக்கிடப்பாரா? அந்த ஊரில் பெரும் புத்தப்பள்ளிகளும் ஆராமங்களும் இருக்குமே? ஏன் அங்கு இவர் போகவில்லை? 

ஓர்ந்து பார்த்தால் முரணாகவில்லையா? எனக்கென்னமோ சிலம்பில் வரும் சாத்தனார் புத்த நெறி சார்ந்தவராய்த் தோன்றவில்லை. 

அதே போல் இளங்கோ ஒரு செயினர், ஒரு துறவி, செங்குட்டுவனின் தம்பி என்பதையும் நான் ஏற்பவனில்லை. அதற்கான விளக்கத்தை என் நூலில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அவர் சிலம்பின் ஆசிரியர். அவ்வளவு தான். ஒருவேளை செங்குட்டுவனுக்கு வேண்டப் பட்டவராயும் இருக்கலாம். அது பற்றிய கதை நமக்கு வேண்டாம்.) சிலம்புச் சாத்தனாரும், மேகலையை எழுதியதாய்ச் சொல்லப்படும் புத்தநெறிச் சாத்தனாரும் வெவ்வேறு ஆட்கள் என்றே நான் முடிவுசெய்வேன். அளவிற்கு மீறி பல்வேறு உரையாசிரியர் ஊகங்களுக்கு ஆட்பட்டு விட்டோம். உரையாசிரியரை ஒதுக்க வேண்டாம் ஆனால் மூலங்களை வைத்து ஓர்ந்துபாருங்கள்.

இரைப்பையில் சிக்கிய நாணயம்

சில திங்கள்களுக்கு முன் ஒரு சிறுவனின் இரைப்பைக்குள் சிக்கிக் கொண்ட நாணயத்தை ஒரு சீன மருத்துவர் புத்திசாலித் தனமாய் வெளியே எடுத்த் செய்தி ஒரு விழியக் கோப்பின் வழி இணையமெங்கும் வெருவியாய்ப் (viral) பரவியது, இது எப்படி சாத்தியப் பட்டது என்ற பெரிய கேள்வியும் எழுந்தது.    

ஒரு செரிமானக் கட்டகம் (digestive system) என்பது வாய், தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று போகும்.  இதில் உணவுக்குழல் (food pipe) என்பது இரைப்பையோடு சேர்ந்து கணுக்கிய அமைப்பு. ஆனால் தொண்டைக்கும்  உணவுக்குழலுக்கும் இடையே நேரடித் தொடர்பு கிடையாது. தொண்டை உணவுக்குழலுக்கு நேர்மேல் இருந்தாலும் எந்தக் கணுக்கமும் (connection) கொள்ளாது அமைந்துள்ளது.  உணவுக்குழலை மூடினாற் போல் ”ஓர்திசை திரும்பா வாவி (unidirectional non-return valve)” ஒன்றும் உள்ளது. அது இரைப்பையையும் அதோடு சேர்ந்த செரிமானக் கட்டகத்தையும் மூடி வைக்கிறது. செரிமானச் சாறுகளும் (digestion juices), உருவான வளிகளும் (gases) தானே வெளிவரா. 

செரிமானக் கட்டகம் என்பது ஊதும அழுத்தத்திலோ (atmospheric pressure), அதற்கு மேலோ இயங்கலாம். (மேலே என்றால் பெரிதும் இல்லை. ஒருசில mm water column அழுத்தம் கூடியது) நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் மேற்சொன்ன வாவியின் வழி உள்ளே போகிறது. கவளத்தோடு நீரும் காற்றும் செல்லலாம். சாப்பாடு செரிமானம் ஆகி மேலும் சில வளிகள் (குறிப்பாய் கரிம இரு அஃகுதை-carnon-di-oxide) உருவாகலாம். இதனால் சிலருக்கு செரிமானக் கட்டகத்தின் அழுத்தம் (pressure) கூடவே இருக்கும். சாப்பிட்டுச் சிறிது நேரத்தில் அழுத்தங்கூடி தொந்தி பெரிதாவதும், செரிமானத்தின் பின்,தொந்தி குறைவதும் எல்லோருக்கும் நடப்பது தான். இரைப்பை அழுத்தம் கூடியவருக்கு ஏற்படும் சிக்கல்கள் பல்வேறு விதம்.  சிலருக்குச் சதா ஏப்பம் வரலாம். சிலருக்கு அதுமுற்றித் தூங்கமுடியாது போகலாம். சிலருக்கு Gastroesophageal reflux disease, or GERD என்ற சிக்கல் வரலாம். அவற்றை  நான் இங்கு விவரிக்கவில்லை. இவையெல்லாமே அந்த வாவியின் குறைகள் பண்ணும் சிக்கல்கள் தாம்.

பொதுவாய்ச் சிறு பிள்ளைகளுக்கு  செரிமானக் கட்டக அழுத்தம் (digestive system pressure) ஊதும அழுத்தமாகவே இருக்கும். சிறாருக்குத் தொந்தி இராது. இந்தக் குழந்தை விளையாட்டுத் தனமாய் தன் வாய்க்குள் போட்ட  நாணயம் பெரும்பாலும் உணவுக் குழலுக்கு நேர்கீழே இரைப்பையின் தாழ்சுவரில் கிடந்திருக்கும். விழியத்தில் மருத்துவர் குழந்தையைப் படுக்கப் போட்ட நிலையைக் கவனியுங்கள். 

ஒரு சிறு நெகிழிக் (elastic) குழாயை  வாய், தொண்டை வழியே உள்நுழைத்து இரைப்பையின் தாழ்சுவர் வரை அதைக் கொண்டுபோய் நாணயத்தோடு ஒட்டிவைத்து விடுகிறார். இப்பொழுது வெளித்தெரியும் நெகிழி முனையோடு ஓர் உறிஞ்சு குழலைச் (syringe) சேர்த்து நெகிழிக் குழலுக்குள் இருக்கும் காற்றை உறிஞ்சுகிறார் (sucks). இதனால் நெகிழிக் குழலின் காற்றழுத்தம் (ஊதும அழுத்தத்தை விட க்) குறைந்து  நொகை (negative) அழுத்தம் ஆகிவிடுகிறது. இதனால் நாணயம் நெகிழிக் குழாயோடு அழுத்தமாய் ஒட்டிக் கொள்கிறது. இப்போது நெகிழிக் குழாயைச் சட்டென வேகமாய் இழுக்கையில் நாணயம் வாவியிதழில் (valve diaphragm) சிக்காது, வாய்க்கு வெளியிலும் வந்து விடும். 

வெறும் எளிதான பூதியல் விளையாட்டு (physics play).புத்திசாலி மருத்துவர்.

அன்புடன்,

இராம.கி.  

சுவாசம்

முல்குதல் என்பது முன்வருதலைக் குறிக்கும். ”முல்கியது முல்கிறது முல்கும்” என்பது முக்கால இடைநிலைகள் வடிவம். முல்குதலின் லகரத்தைத் தொகுத்து முகுதல் என்றுஞ் சொல்லலாம். முகுதலில் பிறந்த பெயர்ச்சொல் வடிவங்களே முகம்/முகல்/முகர் என்பவையாகும். தலையில் முன்வந்திருக்கும் உறுப்பு முகம். முல்குதலின் பிறவினைச் சொல் முல்க்குதல்> முற்குதல்> முக்குதல். முன்வரச் செய்தல். முக்குதலில் பிறந்த இன்னொரு பெயர்ச் சொல் மூக்கு. முகத்திலும் முன்வந்தது மூக்கு எனப்படும். முகத்திலிருந்து இன்னும் நீட்டியதை முகஞ்சுதல் என்றுஞ் சொல்லலாம். முகஞ்சு>முகஞ்சி> மூஞ்சி என்பது முகமும் மூக்குஞ் சேர்ந்த உறுப்புப் பெயர். இப்படி விதப்பாயிருக்கும் உயிரியை மூஞ்சூறு என்கிறோம். .

மூக்கு இரு வேறு செயல்களைச் செய்யும். ஒன்று மணம் உணர்வது. (முகர் என்னும் பெயர்ச் சொல்லிலிருந்து முகர்தலெனும் தொழிற்பெயர் எழும்) இன்னொன்று மூச்சை குறிப்பிட்ட நேரம் உள்ளிழுத்து பின் குறிப்பிட்ட நேரம் வெளிவிடுவது. இச்செயலை. மூஞ்சுதல்?மூசுதல் என்ற தொழிற்பெயரால் சொல்வோம். மூசுதலிலிருந்து மூச்சு எனும் பெயரெழும். விடுதலை மூச்சோடு சேர்த்து மூச்சு விடுதல் என்றும் உருவாக்குவோம். மூச்சு விடுதலை உள்ளிழுத்தல்/உள்ளீர்த்தல், வெளிவிடுதல் என்ற இரு வினைகளாய்ப் பிரிக்க இயலும். உள்ளீர்த்தல் என்பதை உள்தல்> உய்தல்> உய்ஈர்தல்> உயிர்தல் என்றுஞ் சொல்லப் படும். உய்தல்/உயிர்தல் என்பதன் வழி உள்ளிழுத்து நுரையீரல் நிறைந்து பின் காற்று வெளி வருவதைச் சொல்ல முடிகிறது. (இதுவே வாழ்விற்கு முதலடையாளம் என்று ஆதிமாந்தர் அறிந்தார்.) 

உள்விட்ட காற்று உடலுள் பயனுற்றது போக மிச்சம் வெளி வந்தே ஆகவேண்டும் என்பதால் உள்ளிழுப்பதே முகன்மையானது. உயிர்தலில் பிறந்த பெயர்ச் சொல் உயிர். பேச்சுவழக்கில் இது உசிரென்றுஞ் சொல்லப்படும். உயிர் உள்ளே போய் வெளி வருதலை உய்வு>உசிவு என்றுஞ் சொல்வர். “அவன் உசு உசு என மூச்சு விடுகிறான்” என்கிறோமே? உசிவாய்/உசுவாய் இருத்தல் உசிவாயம்> உசுவாயம்> உசுவாசம்= உயிருள்ள நிலை. இது வட மொழியில் கடன் பெறப்படும்போது உகரம் தொலைத்து சுவாசம் எனப்படும். அகலச் சுவாசம் என்பது சீராகக் குறைந்த கதியில் (ஒரு மணித்துளிக்கு எத்தனை மூச்சு விடுவதென்பது ஒரு கணக்கு. இக்கணக்கில் குறைந்த எண்ணிக்கையில் மூச்சுவிட்டால் அது அகல் சுவாசம்> ஆல் சுவாசம்>ஆ சுவாசம் ஆகும். ஆ சுவாசத்தின் பொருள் இளைப்பாறல். அதாவது குறை எண்ணிக்கையில் மூச்சு விடல். சுவாசம், ஆ சுவாசம் போன்றன இருபிறப்பிகள். உள்ளிருப்பது தமிழ். ஆனால் சங்கத மொழி விதிகளும் ஊடே வருகின்றன. உய்தல்/உயிர்தல் போன்றவையும், அகலுய்தல்.அகலுயிர்தல் போன்றவையும் இவற்றிற்கு ஈடான நல்ல தமிழ்ச்சொற்கள் 

இதை முடிப்பதற்கு முன் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதலைத் தன்வினையாய் மட்டும் பார்க்காது மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதியை (அதன் வழி ஆன்மாவை) ஓர் உறுப்பாயும், உடலை இன்னொரு உறுப்பாயும் கருதி, முதற்பகுதியைத் தானென்றும், தன்னுடலைப் பிறன் என்றுங் கருதி, பிறவினையாயும் சில சொற்கள் எழுகின்றன. உய்வு= வாழ்வு. உய்வித்தல் = வாழ்வித்தல் உய்வித்தல்>உசீவித்தல்>சீவித்தல் (உகரந் தொலைத்த வடிவம்). சங்கதத்தில் சீவிதம்>ஜீவித என்றாகும். ஜீவித என்பதற்கு வாழ்வு என்ற பொருளை மட்டுங் கொடுப்பர். ஷுவாஸ் என்பதற்கும் ஜீவித என்பதற்குமான உறவு மோனியர் வில்லியம்சு அகரமுதலியில் சொல்லப்பட மாட்டாது. அதுவே, இச்சொற்கள் இரண்டுங் கடன் வாங்கப் பட்டவை என்பதை உணர்த்தும். இரண்டிற்கும் சொல்லப்படும் தாதுக்கள் வேறுபட்டும் பொருந்தாமலும் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.


stroke

இந்தச் சொல், எழுத்துருவியல் துறையில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். upward stroke, downward stroke, stroke width, stroke contrast போன்றவை சில எடுத்துக் காட்டுகள். தேடிப் பார்த்ததில் 'கீறல்' என்னும் சொல்லே stroke எனும் சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல்லாகத் தென்படுகிறது. ”வேறு சொல் ஏதும் கிடைக்குமா? புதிய கலைச்சொல் பரிந்துரையாக இருப்பினும் நன்றே” என நண்பர் முத்து. நெடுமாறன் கேட்டிருந்தார். விடை சற்று பெரிது. எனவே தனிப்பதிவாகிறது. நண்பர் முத்து என் பதிவிற்கு வருமாறு வேண்டுகிறேன்.

எழுத்தென்பது எழுதுபொருள், எழுதுகருவியோடு தொடர்புற்றது. முதலிற் கருங்கல்லில் எழுதிப். பின்பு செம்பு, இரும்பு, ஓடு, ஓலையெனத் தமிழர் மாறினார். செம்பு ஆதிச்ச நல்லூரிலும், ஈழத்திலும், பின் வடபுலத்திலும் கிடைத்தது. இரும்பு சேலத்திலும் (கொங்கு), திருவண்ணாமலையிலும் (நடுநாடு) கிடைத்தது. பொ.உ.மு. 1800 அளவில் செம்பு நுட்பமும், பொ.உ.மு.1500-1200 களில் இரும்பு நுட்பமும் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. பொ.உ.மு. 490 இல் பானை ஓடுகளும், மாழைப் பொறிப்புகளும் பொருந்தலில் இருந்ததாலும், அண்மையில் நடந்த தொல்லியல் அகழ்வுகளின் காரணமாய்ச் சங்க இலக்கியக் காலத்தைப் பொ.உ.550-பொ.உ.250 என்று முன்தள்ள வேண்டி இருப்பதாலும், (எப்போது எழுந்ததென உறுதிசொல்ல முடியாவிடினும்) பனை யோலைப்பழக்கம் சங்ககாலத் தொடக்கத்தில் ஏற்பட்டிருக்கலாம். என்று எண்ணவேண்டியுள்ளது.
செய்தி பரிமாற, சிந்தனை விளக்க, கருங்கல், மாழை, ஓடு, ஓலை, தாழை மடல் போன்றவற்றில் கீறுவதும் பொறிப்பதுமே (பொளி>பொறி =. புள்ளியிடு) பழந்தமிழர் பழக்கம். கீறுவது என்பது கிறுவுதல் என்றுஞ் சொல்லப்படும். (ஒழுங்கிலாது கிறுவுவது கிறுக்குதல் எனப்படும்.) இது தவிர. தெரித்தல்/ தீட்டல், வரைதல்/ வரித்தல் என்ற சொற்களும் எழுதல், படம் போடுதலுக்கான பெயர்களாகும். கீற்றுக் கருவிகளாய் உளி, எழுத்தாணி போன்றவையும், தெரித்தல்/தீட்டல் கருவிகளாய்த் தோகை/தூலிகை போன்றவையும் (இவை பறவைச் சிறகுகளே காட்டு மயிற்பீலி. சிறகுகளின் அடி இள்ளிகளைப் - fibres - பிய்த்து நுனி இள்ளிகளை மட்டும் வைத்துக்கொண்டு மை தோய்த்து எழுதத் தோகைக் கருவி பயன்பட்டது. நுண்கம்பில் பருத்தி இள்ளிகளைக் கட்டிச் செய்தது தூலிகைக் கருவி), வரைதல்/வரித்தல் கருவிகளாய் கரி, சுண்ணம், தாவரப் பிழிவுகள் போன்றவையும் பயன்பட்டன.
முன் சுட்டிய எழுதுபொருள்களில் சிற்றழுத்தத்தோடு பொளித்துப் பள்ளம் ஏற்படுத்திக் தொடர்ந்திழுப்பதே தமிழெழுத்தின் தொடக்கமாய் இருந்தது. சொற்பிறப்பைச் சொல்கையில் இழுத்ததே பட எழுத்து ஆயிற்றென்பார் பாவாணர். படவெழுத்தே அசையெழுத்தாய் வளர்ந்தது. எகுபதியர், (ஈர மண் தட்டைகளில் எழுதிச் சூட்டும், உலர்த்தியும் காப்பாற்றிய) சுமேரியர், சிந்து சமவெளியர் எனப் பலரும் நாம் பயன்படுத்திய எழுதுபொருள்களையே அவரவர் பகுதி மரபிற்குத் தக்கப் பயனுறுத்தினார். பனையோலை, நம்முடைய விதப்பான பொருள். இது நடுவண் கிழக்கிலோ, எகுப்திலோ இருந்தது போல் தெரியவில்லை. சிந்து சமவெளியில் பனை இருந்திருக்கலாம். பனையோலை இல்லாத குளிரிடங்களில் பிர்ச்சு மரப் பட்டை எழுதப் பயன்பட்டது. பிர்ச்சுப் பட்டைகள் (குளிர்ப்பகுதியினரின் பொத்தகம்/book அப்படியானதே) பிரித்தெடுக்கப் பட்டு, பிசுறுகளைப் போக்கி மழித்தெடுத்து அவற்றில் தூலிகை/தோகை கொண்டு சாயந் தோய்த்து எழுதினர்.
வரி, பொறி, கீற்று, இலகை, அக்கரம், கணக்கு போன்றவை நம்மூரில் எழுத்தைக் குறிக்கும் வேறு சொற்களாகும். வரி என்பது மேற்சொன்ன வரைதல்/ வரித்தல் வினையில் எழுந்தது. (நண்பர் நாக. இளங்கோவன் அவர் ஆக்கங்களில் ’வரி’யைப் பயனுறுத்துவார்.) பொல்லல்>பொள்ளல் வினையில் பொறி எழுந்தது. கீறல் வினையில் கீற்று பிறந்தது.

இல்லுதல்>இலுதல்>இலக்குதல் வினையில் எழுந்த சொல் இலகை. (வட புலத்தில் இது இரகை>இரேகை ஆகும்.) இலக்கு= எழுத்து என்ற பொருளில், இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் எழுந்தன. இலக்கப் பட்டது இலக்கு. இலக்கை இயம்புவது இலக்கியம். இலக்கை அணங்குவது இலக்கணம். அக்கர என்ற பாகதச் சொல் அகரம் என்ற தமிழ்ச்சொல் கொண்டு உருவானது. அக்கர என்ற பாகதச் சொல் அக்ஷர என்ற சங்கதச் சொல்லாய் மாறும். இது போக, இலுதல் என்பது இழுதல் என்றுந் திரியும். to draw out என்று பொருள்
தமிழிய மொழிகளும் இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டவை என்று விடாது சொல்கிறேன். நம்பத் தான் ஆட்களைக் காணோம். வெறும் மிளகுத் தண்ணியையும், கட்டு மரத்தையும் மட்டுமே தமிழ் வழி போன உறவாய்க் கொள்வோரே அதிகம். அந்த அளவிற்கு மேலைத் தமிழறிஞரின் தாக்கம். வையாபுரியாரின் தாக்கம், நம்மிடம் உள்ளது. கேட்டால் சென்னைப் பல்கலைத் தமிழ்க் களஞ்சியத்தைச் சிலர் விவிலியம் போல் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். எப்படியாயினும் நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன். நம்முடைய கீறல், scribe, scripture, inscription ஆகிய இந்தையிரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றது. கீற்று, glyph ஒடு தொடர்புற்றது. கிறுவுதல், graph ஒடு தொடர்புற்றது. பொள், பொறி bore point என்பவற்றோடு தொடர்புடையவை. தெரிந்தல்/தெரிப்பு, draw வோடு தொடர்புற்றது. வரைதல், வரிதல் write ஓடு தொடர்புற்றது. இழுத்து/இழுப்பு letter, literature என்பவற்றோடு தொடர்புற்றது. மேலே சொன்ன எல்லாமே தன்னேர்ச்சி ஒத்திசைவு (accidental coicidences) என்று சிலர் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கில் தமிழுக்கும் இந்தையிரோப்பியன் மொழிகளுக்கும் சொல்லொப்புமை கண்டுள்ளேன். ஆனாலும் நம்ப மறுப்பார். (குதிரையை நீர்குடிக்கக் குட்டைக்குக் கொண்டு வரத்தான் முடியும். குடிக்க வைக்கவும் முடியுமா?).
என்னைக்கேட்டால் இழுக்குங் குறிப்பை வைத்து, குறிப்பாகப் பனையோலை கருதி, அதன் மாற்றான தாள் (காகிதம்), பின் கணித்திரை கருதி, இழுத்து அல்லது இழுப்பு என்ற சொல்லையே stroke -இற்கு இணையாய்ப் புழங்கலாம். அதாவது இழுப்புகள் அடங்கியது எழுத்து. கிடையிழுப்பு (horizontal stoke), குத்திழுப்பு (vertical stoke), வளையிழுப்பு (curved stoke) சுழியிழுப்பு (spiral stroke) என்று வெவ்வேறாய் வகைப்படுத்தலாம். நண்பர் செல்வமுரளி கூறிய கோடு (இதன் பொருள் வளைவு) என்ற சொல்லும் பயன்பட்டுப் பார்த்துள்ளேன். கிடைக்கோடு, குத்துக்கோடு, வளைகோடு, சுழிக்கோடு, நேர்கோடு என்றுஞ் சொல்லலாம். ஆனால் கோடு என்பதற்கு நீளமான line என்ற பொருளும் இருப்பதால் நானதைத் தவிர்க்கிறேன். line என்பதற்குச் சில இடங்களில் கோட்டிலிருந்து வேறுபடுத்தி இழுனை என்ற சொல்லையும் நான் ஆண்டிருக்கிறேன்.
சரி stroke என்ற சொல் எப்படியெழுந்தது? நான் சொல்லுவதை மறுபடியும் நம்ப மாட்டீர்கள். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் stroke (n.): "act of striking," c. 1300, probably from Old English *strac "stroke," from Proto-Germanic *straik- (source also of Middle Low German strek, German streich, Gothic striks "stroke"); see stroke (v.). The meaning "mark of a pen" is from 1560s; that of "a striking of a clock" is from mid-15c. Sense of "feat, achievement" (as in stroke of luck, 1853) first found 1670s; the meaning "single pull of an oar or single movement of machinery" is from 1731. Meaning "apoplectic seizure" is from 1590s (originally the Stroke of God's Hand). Swimming sense is from 1800. என்று போட்டிருப்பர். நாம் ”எழுதுவது” தொடர்பாய்ப் பார்க்கிறோம். இதன் தோற்றம் பொ.உ.1500 எனப்படுகிறது. பெரும்பாலான மேலையிந்தோயிரொப்பியச் சொற்களின் தோற்றம் இலத்தீன், கிரேக்கம் சார்ந்தது. இலத்தீன், கிரேக்கமோ எத்ரசுக்கன் தாக்கமுற்றது. அது இன்னும் போனால் phonecian சார்ந்தது. முடிவில் எகுப்து, இட்டைட், மித்தனி, சுமேரியா, பாபிலோனியா என வந்து நிற்போம். இப் பகுதிகள் எல்லாம் தமிழரோடு ஒரு காலம் தொடர்பு கொண்டவையே.
மேலையிந்தை யிரோப்பியச் சொற்களுக்கும் தமிழியச் சொற்களுக்கும் இடையே ஒப்புமை காண்கையில், மொழிமுதலில் s சேர்ப்பதைக் காணலாம். தவிர எல்லா இந்தையிரோப்பிய மொழிகளிலும் வல்லின மெய்யில் தொடங்கும் சொற்களில் முதல் உயிர்மெய்யை உடைத்து மெய்+ உயிர் என்றாக்கி இரண்டிற்கும் நடுவே ரகரம் நுழைத்துப் பலுக்குவது பல சொற்களில் காணப்படுகிறது. தோகையில் தோ என்பதை த்+ஓ எனக்கொண்டு, ஊடே ரகரம் சேர்த்தால் த்+ர்+ஒ = த்ரோ என்றாகும். தோகை>த்ரோகெ>troke என்றாகும். இதில் s ஐ முன்னே ஓட்டினால் stroke என்றாகும். இற்றைப் பலுக்கல் முறையில் ஸ்ட்ரோக் என்று சொல்லப்படும். அதாவது தோகைக் கருவியில் உருவாகும் இழுப்பையும் தோகை என்றே சொல்லியிருக்கிறார். செய்தொழிலும், செயப்படு பொருளும் ஒன்றாய்ச் சொல்லப் படுகின்றன. அது அவர் வழக்கம் அவ்வளவு தான்.
stroke இற்கான என் பரிந்துரை இழுப்பு/இழுத்து.
அன்புடன்,
இராம.கி.

stall

"நமக்குத் தெரிந்த 2000, 3000 தமிழ்ச்சொற்களோடு, முன்னொட்டு அல்லது பின்னொட்டுப் பெய்து தமிழ் நடையைப் புதுச்சிந்தனைக்கு ஏற்ப ஒப்பேற்றி விடலாமெனப் பலரும் நினைக்கிறார். இதன் தொடர்பாய் சியார்ச்சு ஆர்வெலின் ”1984” புதினம் தான் நினைவிற்கு வருகிறது. good, better, best என்பதற்கு மாறாய் good, plus good, double plus good என்னும் போக்கை இப்போது எல்லாம் சொல்லாய்வுக் குழுக்களிற் பார்க்கிறேன். கொஞ்சங் கொஞ்சமாய் தமிழும் ஊன்சர மொழி (sausage language) நிலைக்கு வந்துவிடும் போலும். குதிரை விழிகளுக்கு இரு பக்கம் அடைப்பிட்டதுபோல், இந்த மாதிரி  எல்லைக்குள் நின்றே சொல்லாக்க வேண்டுமென ஏன் தளைப்படுத்திக் கொள்கிறோம்? - என்பது புரியவில்லை. . 

தமிழில் வேர்களும், வினைகளும், பெயர்களும் ஏராளமுள்ளன. ஆனாலும் நம்மிற் பெரும்பாலோரின் (என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன்.) கையிருப்புச் சொற்றொகுதி குறைவாயுள்ளது. அகர முதலிகளையும், இலக்கியங்களையும்., வட்டார வழக்குகளையும் விடாது சலித்து நமக்குத் தெரிந்த சொற்களைக் குறைந்தது 30000 ஆவது ஆக்கினால் தான் ஒழுங்கான சொல்லாக்கங்களை நம்மாற் செய்ய முடியும். ஓர் ஆங்கிலச் சொல்லைப் பார்த்தால் அதன் முழுப் பொருள் நாடி, சொற்பிறப்பு உணர்ந்து, தமிழின் இயல்பான தொகுதி பார்த்து, பரந்த பார்வையில் சொல்லாக்கத்தை அணுக வேண்டும். தமிழ் வளம் பாராது சொல்லாக்குவது நமக்கு நலம் பயக்காது. அவ்வகையில் stall என்பது வெறுமே மேம்போக்காகப் பார்க்கும் சொல் அல்ல. கொஞ்சம் ஆழம் புகவேண்டும். 

துல்> தல்/துள்> தள் வேரில் துளைப்பொருளிற் கிளைத்தது தல் எனும் வேராகும். இதுவே தங்குதலின் தொடக்கம். இடத்தைக் குறிக்கும் தலம் என்பதும் தமிழே. தலம் நீண்டு தாலமாகியும் நிலத்தைக் குறிக்கும்; “தால முறைமையிற் பரிந்து காத்தான்” என்பது திருவாலவாயுடை .36:1. தாலம் என்பது தானமென்றுந் திரியும். (லகர ஒலி, னகர ஒலியாவது தமிழின் பலசொற்களில் பொருள் மாறாது நடந்துள்ளது.) இந்துத்தானம், படித்தானம், என்றெலாஞ் சொல்கிறோமே? அவை இடப்பொருளைக் குறிக்கும். தள்>தர்>தரு>தா>தானம் என்று கொடைப்பொருளைக் குறிக்கும் சொல் வேறு வகையில் பிறந்ததாகும். இரு வேறு தானங்களையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. 

பேச்சில் சில ஒலிகளைத் தொகுக்கும் பழக்கத்தால் தல்ங்கல் என்பது தங்கல் ஆகும். இருத்தல், படிதலும் போன்ற சொற்கள் கூட இல், பள் எனும் துளைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டவை. தள்+கு= தட்கு எனத் திரியும். “அஞ்சுவரத் தட்கு மணங்குடைத்துப்பின்” மதுரைக் 140; “ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” புறநா.193.4. மெய்ம்மயக்கத்தில் தட்கல் என்பது தக்கலாகும். தள்ங்கியது தட்டும் பெரும்பாலான அசைவுகளுக்கு ஈடு கொடுக்கும் நிலை (stability தொடர்பில்) தட்டையாகும். தட்டுமை = stability. (பெரும்பாலான இந்தை யிரோப்பியன் சொற்களில் குளிர் நிலத்தின் இயல்பாக ஸகர உரசலோசை முன்னொட்டாய்ச் சேரும். ஸகரத்தை ஒதுக்கினால் உள்ளிருக்கும் தமிழ்த் தொடர்பு ஓரளவு புலப்படும். இதை நான் செய்வதாலேயே பலருமென்னை வசை பாடுகிறார்.) 

தட்டுக் கெட்டது நிலையாது. தட்டட்டி = சென்னை terrace, மாடித் தளப்பகுதி. கூம்புக்கூரைப் பட்டவத்திலிருந்து (pattern) இப்போது பலரும் மாறி தட்டட்டியை விழைகிறார். நம்மூர் வெதணத்தில் (climate) அதிகம் தட்டட்டி செய்வது சரி யில்லையென மரபுக் கட்டிடவியலார் சொல்வார். நாட்டோடுகளில், தட்டையோடு தட்டோடாகும். பனையோலையால் தட்டைச் சதுரஞ் செய்து தடுக்கென்பார். உட்கார / தங்கப் பயன்படும். தடுக்கைத் தட்டியென்றுஞ் சொல்வார். தென்னந் தடுக்கை விடப் பனந் தடுக்கு நெடுநாள் உழைக்கும். தடையும் தள் எனும் வேரில் கிளைத்ததே. நகர விடாது தட்டி வைக்குங் காரணத்தால் தடுப்பு/தடையாயிற்று. தள்ளில் பிறந்த இன்னொரு சொல் தவங்கல் = தடைப்படுதல்.

தள்ளின் இன்னொரு பெயர்ச் சொல் தளம். செங்கல், கருங்கல், சுதைமா பாவிய தரையைக் குறித்தது. இன்று எல்லாக் கட்டுமானங்களாலும் ஆன தட்டு, மேடையைக் குறிக்கிறது. இதற்கு அடி, அடிப்படைப் பொருள்களுமுண்டு. அடியென்ற சொல்லைப் பேச்சுவழக்கில் நிலையப் (station) பொருளில் பயன் உறுத்துவார். தேரடி = தேர் நிலையம். “ரயில்”அடி = தொடரி நிலையம். ”கார்” அடி = car parking. ”பஸ்” அடி = பேருந்து நிலையம். தண்டென்பது படை, அதிகாரம் போன்றவற்றைக் குறிக்குஞ் சொல். தண்டடி = படைவீடு (army encampment). இது தண்டியென்றும் பேச்சுவழக்கில் திரியும். சென்னை வேளச் சேரி, பல்லவர் காலத்தில் ஒரு சதுர்வேதி மங்கலம். அவ்வூருக்கு அருகிலுள்ள சிவன் கோயில் தண்டியீசுரம். இன்று வேளச்சேரி ஊருக்குளேயே வந்துவிட்டது. தண்டீசன் = படைக்கல ஆசான். (தண்டுபற்றிச் சொல்ல நிறையவுண்டு. ஆனால் இங்கே பெரிதும் விலகிப்போகும் என்பதால் தவிர்க்கிறேன்.)

தள்ளின் இன்னொரு சொல் தளி. இதன் முதற் பொருள் இடம். விதப்புப் பொருள் கோயில். 2 ஆம் பொருளையே இன்று பலருங் கொள்கிறார் (தளிப் பெண்டுகள் = தேவதாசிகள், தளிச் சேரி. போன்ற சொற்கள் கல்வெட்டுக்களில் உண்டு. வைரமுத்து/ஆண்டாள் என ஊர்கூடிப் பேசுகையில் தளித் தொடர்புச் சொற்களையும் எண்ணிப் பார்க்கலாம்.) “அடிசில் தளியன் நெய்வார்ந்து” என்று சீவக.2579 இல் இடப்பொருள் பயனுறும். சுவடி/நூல் தாங்கியைப் (stack) “பொன்னின் தளிகை மிசைவைத்து” என்று திருவிளை. திருமுகம் 24 ஆம் வரி சொல்லும். தளிமம், திண்ணையைக் குறிக்கும். 

தள்ளில் பிறந்த இன்னொரு சொல் தளை. கட்டெனும் பொருள் கொள்ளும். பாக்களில் சீர் கட்டுவது தளைத்தலாகும். வித விதமானத் தளைகளுண்டு. செட்டி நாட்டில் பெரும்வீடுகளில் முதற்கட்டு, இரண்டாங் கட்டு, மூன்றாங் கட்டு, பந்திக்கட்டென வெவ்வேறு தளைகள் சொல்லப்படும். அடுக்களையின் முடிவில் வரும் அளையும் தளைப்பொருள் கொள்ளும். அடுக்களை = அடுக்குங் கட்டு. தளைத்தல் = கட்டல், சிறைத்தல், பள்ளத்திலிடல். தள்>தண் திரிவால் தண்ணுதலும் தங்குதலைக் குறிக்கும். தண்ணாத்தல் = தாழ்த்தல் ”தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய்” திவ். திருவாய். 49:1. தணிதல் = தாழ்கை; தணித்தல் = தாழ்த்தல். திருத்தணிகை = முருகன் தங்கியிருக்கும் படைவீடுகளில் ஒன்று. தண்ணடை = நாடு, மருதநிலத்தூர் “பிணங்குகதிர் அலமருங் கழனித் தண்ணடை” புறநா.285

தள்ளல் நீண்டு தாளுதலாகித் தாங்குதலைக் குறிக்கும். நாம் தங்குகிறோம். புவி நம்மைத் தாங்குகிறது. (தமிழ் மொழியின் ஏரணம் புரிகிறதா?). தாள = தாங்க; தாளாத = தாங்காத. தாளுகை/ தாளுறுங்கை = tolerance. ஓர் ஆண்பகுதி, இன்னொரு பெண்பகுதிக்குள் போகவேண்டுமெனில் தேவையான தாளுகை இருக்க வேண்டுவது பொறியியற் கட்டியம் (condition). தாளுகையின்றி எந்தக் கணுக்கமும் (connection) இணைப்பும் (joint) ஏற்படாது இசையில் தாளம் என்கிறாரே அது தாளும் நேரத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட சுரம் எவ்வளவு நேரம் நிலைக்கவேண்டுமென அளவிடப்படும் நேரம். ஆங்கிலத்தில் lingering என்கிறாரே? அது தாளத்தோடு தொடர்புடையது. தாளென்பது பள்ளம், அடியென்றும் புரிந்து கொள்ளப்படும். 

தாளின் இன்னொரு திரிவு தாழ். தாழ்தல்/தாழல் என்பவை அடியுறுதல் பொருள் கொள்ளும். தாழ்= சுவர்ப்புறத்தில் / தூணின்மேல் காணப்படும் நீண்ட தாங்கு கல் blocks in a wall to support; கோயில் தூண்களில் கல் உத்தரங்களைத் தாங்கும்படி வேலைப்பாடோடு அமைந்த டகர வடிவக் கல். வீட்டு நிலைகளிற் கதவுகளைப் பொருத்தும் வாகாய் தாழக்கோல்/ தாழ் அமைப்பு இருக்கும். [தாழக்கோல் (bolt) ஆண்பகுதி; தாழ் (depression) பெண் பகுதி.] சேரலத்திலும் குமரி மாவட்டத்திலும் பூட்டுத் திறக்கும் குயவுக் குச்சியை (key) தாழக் குச்சி/ தாழக் கோல் என்றே சொல்வர். வட மாவட்டங்களில் போர்த்துகீசியச் சொல்லான சாவியையே பலரும் புழங்குவார். ’தாழ்க்கோல்’ தமிழில் தொலைந்தே போய்விட்டது. பூட்டு என்பதிலும் பூழ் என்பது குழிவையும் புழுக்கை, ஆண்பகுதியுங் குறிக்கும். பூழ்+து = பூட்டு. இதனோடு தொடர்புடைய அவையிற் சொல்லத் தகாத பால்வகைச் சொல்லும் உண்டு,  

தாழ்வு = தங்குதல். தாழ்வயம் = தங்குதலுக்கான பெயர்ச் சொல். தாழம்/தாழ்வம் என்பது தங்குமிடம். தாழ்வம்>தாழ்மம்>தாமம் என்பது இடத்தையே குறிக்கும். தாழ்வயம்> தாழ்மயம்> தாழ்மசம்> தாமசம் என்று மலையாளத்தில் இன்றுஞ் சொல்வர். “எத்ர நாளு அவடெ தாமசம்?” தமிழர் பேச்சுவழக்கில் தாமசம் தாமதமாகும். தாவளம் என்ற சொல் கல்வெட்டுகளில் தங்கும் இடத்தைக் குறிக்கும்.,”மன்னர்க் கெல்லாந் தாவளஞ் சமைந்தன்ன” என்பது ஒட்டக்கூத்தரின் உத்தர ராமாயணம். அசுவமேத. 23 இல் வரும். இது மருத நிலத்தூரென்றும் பொருள் கொள்ளும். தாவளம் போடுதல் = தங்கிவிடுதல்

வாழைப்பழம் வடமாவட்டப் பலுக்கலில் வாயப்பயம் ஆவதுபோல் தாழம் என்பது தாயமாகும். ”பரம பத விளையாட்டைப்” பாம்பு/ஏணித் தாயக்கட்டம் என்பார். தாயம் = தங்குமிடம். 100 தாயக்கட்டம் = 100 தங்குங் கட்டம். தாயத்தில் உருட்டுங் கட்டை தாயக் கட்டை (dice) ஆகும். ’ஒன்று” போட்டால் தான் தாயம் தொடங்கலாம் என்பதால் ஒன்று போடலும் ”தாயம் போடல்” ஆகும்.. தாழ்வித்தல்> தாவித்தல்> தாபித்தல் என்றாகி வடமொழித் தோற்றங் கொள்ளும். தாவித்தலோடு நிறுத்தினால் முற்றிலும் தமிழே. அதன் பொருள் install என்பதே. ”சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறியாரே” என்பது திருமந். 1842. தாவித்தலின் இன்னொரு வகையாய்த் தாவனம் என்ற சொல் ”ஏற்படுத்தல்” பொருளில் ஆளப் படும். ”கந்த மாதனத்திலே தாவனஞ் செய் முக்கண் மூர்த்தி தன்னை” என்பது சேது புராணம் இராமநா. 2. தாவளம் என்பது தாவணம் என்றுந் திரியும். தாவளி>தாவணி என்பது விலங்குகளைக் கூட்டித் தங்க வைத்து விலை பேசும் இடம்/சந்தை. மதுரையில் மாட்டுத் தாவணி என்னும் இடம் மிகுந்த பெயர்பெற்றது. தாழ்வு>தாவு= உறைவிடம். இசைத் தாவு=  isotope. ஒன்றிற்கொன்று இசைந்த ஒரே அணுவெண் கொண்ட அதே பொழுது நிறை வேறுபடும் அணுக்களை இசைத்தாவுகள் என்பார்..

இப்பின்புலத்தோடு பார்த்தால் கீழ்வருஞ் சொற்களை ஒருங்கே தமிழிற் சொல்லலாம். இவற்றிற்கு மாற்றுச் சொற்கள் உண்டு தான். அவற்றைப் பலரும் எண்ணிப் பார்க்கவும் சொல்லவும் முடியும். இங்கு நான் சொல்லவருவது இவையொரு தொகுதி என்பது மட்டுமே.

state = a condition in which a person or a thing is = தட்டம்; 

static = தட்டிகை (= நிலைக்கை); 

station = தட்டியம் (=நிலையம்); 

stationary = தட்டியப் பொருள் (= நிலைத்த பொருள்); 

statistics = தட்டுறும் விவரம், புள்ளியியல்; 

statue = தடிகை; 

stature = தாட்டி; 

status = தாட்டிகை; 

stay = தாயுறு; 

stall = தாழ்; 

install = தா(ழ்)வி. 

fair என்பதை வெறுமே கண்காட்சி என்று நான் சொல்லியதில்லை. அதை வியந்தை என்றே சொல்லிவந்திருக்கிறேன். என் பெயரோடு இச்சொல்லைக் கூகுளிற் தேடிப்பார்த்தால் சொற்பிறப்பு கிடைக்கும்., Book fair என்பதைப் பொத்தக வியந்தை என்பேன். ”இராம.கி. சொல்லியதை ஏற்கக் கூடாது” என்று கங்கணங் கட்டியவர் வியந்தைத் தாழ்களைக் (fair stalls) குறைந்தது கண்காட்சிக் கடையடி என்றாவது சொல்லுங்கள். அது அறையல்ல.

அன்புடன்,

இராம.கி.


Saturday, October 30, 2021

Regression

 ஆங்கிலச் சொற்பிறப்பியல் தளத்தில் grade என்பதை

1510s, "degree of measurement," from French grade "grade, degree" (16c.), from Latin gradus "a step, a pace, gait; a step climbed (on a ladder or stair);" figuratively "a step toward something, a degree of something rising by stages," from gradi (past participle gressus) "to walk, step, go," from PIE *ghredh- "to walk, go" (source also of Lithuanian gridiju "to go, wander," Old Church Slavonic gredo "to come," Old Irish in-greinn "he pursues," and second element in congress, progress, etc.). Replaced Middle English gree "a step, degree in a series," from Old French grei "step," from Latin gradus. 

என்று வரையறுப்பார். இதற்கு தரம், பிரிவு என ஏதேதோ சொற்களை நாம் இனையாகச் சொல்கிறோம். மாறாக இதைக் கட்டு என்று சொன்னால், நம்மால் மேலே நகர முடியும். சிவகங்கை மாவட்டத்தில் பென்னம்பெரிய வீடுகளில் முதற்கட்டு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு, நாலாங்கட்டு, பந்திக்கட்டு, சமையற்கட்டு என்று பல்வேறு கட்டுகள் கட்டப்படும். ஒவ்வொரு கட்டிற்கும், கடவும் கதவும் உண்டு. கடவு = கதவு பொருந்தும் நிலை = frame. கதவு = முன் சொன்னநிலைக்குள் பொருந்தும் மூடுபலகை. ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் இங்கே சொல்லப்படும் gradus என்பதும் ஒருவகைக் கட்டு தான். ஒரு கட்டிலிருந்து இன்னொரு கட்டுக்கு நாம் அடுத்தடுத்து நகர்கிறோம். ஆங்கிலத்திற் சொன்னால் We move from one grade to another. gression என்பது கட்டும் தொழில். re-gression என்பது மீள்கட்டு. 

இப்பொழுது இச்சொல்லின் பொருத்தத்திற்கு வருவோம். 5 பந்துறா வேறிகளும் (independent variables), ஒரு பந்துறு வேறியும் (dependent variables) இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். இப்பொழுது புள்ளிவிவரச் சேகரத்தின் (collection statistics) மூலம் நாம் கணிசமான (sufficient) புள்ளிகளைப் (ஒவ்வொன்றும் 1,5 என்ற வேறிகளைக் கொண்டது.) பெற்ற பின் புள்ளிவிவரச் செய்முறைகள் (statistical methods) முலம் ஒரு மீள்கட்டைச் (regression) செய்கிறோம். மீள்கட்டிய பந்துறு வேறியையும் (regressed dependent variable) நாம் சோதனை மூலம் ஏற்கனவே அளந்தெடுத்துப் பெற்ற பந்துறு வேறியையும் (raw dependent variable) ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றிடையே அமையும் செந்தர வேற்றம் (standard variation) குறையும் படி மீள்கட்டின் கெழுக்களைச் (regressional parameters) சரி செய்கிறோம். முடிவில் உருப்படியான ஒரு மீள்கட்டை (proper regression) உருவாக்குகிறோம்.

regression க்கு என் பரிந்துரை மீள்கட்டு என்பதே. Linear Regression = இழுனை மீள்கட்டு. Linear- க்கு நேர் என்பதை நான் பயன்படுத்துவதில்லை. direct என்பதற்கு மட்டுமே நேர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். Linear க்கு இழுனை (இழுத்து வருவது) என்றும், non-linear க்கு இழுனா என்றும் பயன்  படுத்துகிறேன். இப்பயன்பாட்டில் இதுவரை ஒரு சிக்கலும் வந்ததில்லை. தவிரச் சொல்லும் சிறிதாகவுள்ளது.   Logistic Regression = மடக்கடி மீள்கட்டு exponential = மடக்கை. logarithm = மடக்கடி. exponential series = மடக்கைச் சரம். logarithmic series = மடக்கடிச் சரம்.  

இனிக் கூகுளில் இருந்து ஒரு பத்தியைத் தமிழாக்கிக் காட்டுகிறேன்.

தமிழ்:

ஒரு நிகழ்வின் பெருதகையை (probability) மதிப்பிடும் போது, ஒன்றோ, பலவோ ஆன விளக்கவேறிகள் (explanatory variables) மூலம் அது தாக்குறலாம் இப் பெருதகையை மடக்கடி மீள்கட்டின் (logistic regression) மூலம் போல்மஞ் (model) செய்கையில் மடக்கடி வங்கங்கள் (Logistic functions) பயன்படுகின்றன. மடக்கடி வங்கம் என்பது மக்கள்தொகை ஈனியலில் (population genetics) முதன் முதலில் எழுந்தது. இவ்வங்கத்தை p=f(a+bx) என்று எடுத்துக்காட்டலாம். இதில் p = பெருதகை; x = விளக்கவேறி; a,b போல்மக் கெழுக்கள் (model parameters). f(a+bx) = 1/[1+exp(ax+b)] எனப்படும் செந்தர மடக்கடி வங்கம் (standard logistic function). (இதை சிக்மாய்டு வங்கம் என்றுஞ் சொல்வர்.) பொதுவாக மடக்கடி மீள்கட்டும் வேறு மடக்கு-இழுனைப் போல்மங்களும் (log-linear models) மாகனக் கற்றலிற் (machine learning) பயன்படுகின்றன. மடக்கடி வங்கத்தை இன்னும் பொதுமைப்படுத்தி சொவ்வை-மீகும ஆற்றுவ வங்கமாய்ச் (softmax activation function) சொல்லுவர். இவ்வங்கம் பல்முனை மடங்கடி மீள்கட்டைச் (multinomial logistic regression) செய்யப் பயன்படுகிறது. 

ஆங்கிலம்:

Logistic functions (மடக்கடி வங்கங்கள்) are used in logistic regression (மடக்கடி மீள்கட்டு) to model how the probability (பெருதகை) p of an event may be affected by one or more explanatory variables (விளக்க வேறிகள்): an example would be to have the model p=f(a+bx) where x is the explanatory variable and a and b are model parameters (போல்மக் கெழுக்கள்) to be fitted and f is the standard logistic function (செந்தர மடிக்கடி வங்கம்) 1/[1+exp(ax+b)]. Logistic regression and other log-linear models (மடக்கு-இழுனைப் போல்மங்கள்) are also commonly used in machine learning (மாகனப் படிப்பு). A generalisation of the logistic function to multiple inputs is the softmax activation function (சொவ்வை மீகும ஆற்றுவ வங்கம்), used in multinomial logistic regression (பல்முனை மடங்கடி மீள்கட்டு).

Numerical variable = எண்ணுதி வேறி, எண்ணுதியாகச் சொல்வது numerical - ஆகச் சொல்வது. எண்ணுதலில் எழுந்தது எண்ணுதி.

Categorical variable = கட்டுக்கூறு வேறி category = கட்டுக்கூறு

அன்புடன்,

இராம.கி.

Random

மேலே உள்ள சொல்லோடு, ”இராம.கி" என்ற பெயரையும் சேர்த்துக் கூகுளில் இட்டால் 17000 தரவுகள் கிடைக்கும். அவை எல்லாமே இங்கு குறிப்பிட்ட இரண்டோடும் தொடர்புள்ளவை என்று பொருளில்லை. random, இராம, கி என்ற மூவேறு சொற்களின் இருப்பைத் தனித்தனியாகவும் சேர்ந்தும் வரும் இடங்களையும் கூகுள் காட்டும். (பல சொற்கள் சற்றும் தொடர்பிலாது தோற்றும். கூகுள் என்ன மாதிரி ஏரணம் பின்பற்றுகிறது என்பது எனக்குத் தெரியாது.) சிலபோது இவற்றின் கூறுகளையும் கூடக் காட்டும். random + இராம.கி. + வளவு என்று இட்டால் 638 இடங்களைக் காட்டும். அதற்குள் தேடினீர்கள் என்றால் ”அறவட்டு, விருட்டெண்” என்ற சொற்கள் எந்தக் கட்டுரையில் வந்துள்ளன என்பதைக் காட்டும். 

கூகுளின் மூலம் குறிப்பிட்ட சொல்லைத் தேடுவது என்பது ஒரு கலை. அதைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பட்டறிந்தே கண்டுகொள்ள முடியும்.. ”நாம் ஒரு வேண்டுகோள் வைத்தால், இந்த ”வேலைகெட்ட” இராம.கி. எல்லாவற்றையும் எடுத்துத் தருவான்” என்று சிலர் அமைவது முயலாமை. தவிர, எல்லாச் சொற்களுக்கும் என் கட்டுரைகளில் நான் விளக்கந்தந்ததும் இல்லை. வேண்டும் எனில் அதைப் போய்த் தேடத்தான் வேண்டும் ”விருட்டெண்” பற்றி ”எண்ணியல் - 3” என்ற கட்டுரையில் சொல்லியுள்ளேன். (பல்வேறு எண்கள் பற்றிய தொடர் அதுவாகும்.)

---------------------------------------

மற்ற வகை எண்களில் முதலிற் சொல்ல முற்படுவது random number என்பதாகும். 6 முகங் கொண்ட ஒரு பகடைக்காயை வீசி எறிகிறோம், 4 என்ற எண் மேலே தெரியும் முகத்திற் தெரிகிறது. 12 சோழிகளைத் மேலே தூக்கி எறிகிறோம். 7 முகங்கள் மல்லாக்கவும், 5 முகங்கள் குப்புறவும் விழுகின்றன. (ஏழையோ, ஐந்தையோ, எல்லோரும் ஒப்பும் முறை வைத்து விழுந்த எண்ணாக எடுத்துக் கொள்ளுகிறோம்.) இன்னதென்று சொல்ல முடியாதபடி சட்டென்று, விருட்டு என்று வந்து விழும் இந்த எண்களை விருட்டெண்கள் (random numbers) என்று கணிதத்தில் அழைப்பார்கள்.

["having no definite aim or purpose," 1650s, from at random (1560s), "at great speed" (thus, "carelessly, haphazardly"), alteration of M.E. randon "impetuosity, speed" (c.1300), from O.Fr. randon "rush, disorder, force, impetuosity," from randir "to run fast," from Frankish *rant "a running," from P.Gmc. *randa (cf. O.H.G. rennen "to run," O.E. rinnan "to flow, to run"). In 1980s college student slang, it began to acquire a sense of "inferior, undesirable." Random access in ref. to computer memory is recorded from 1953.] 

இந்த விருட்டெண்கள் அப்படியொன்றும் கையாள முடியாதவை அல்ல. பகடைக் காயை நெடு நேரம் தூக்கிப் போட்டால், 1 இல் இருந்து 6 வரை எல்லாமே வந்து விழக் கூடும். அதே போல சோழி வீழ்ச்சியிலும் ஒன்றிலிருந்து 12 ஆம் எண்வரை எது வேண்டுமானாலும் நெடுநேரம் விளையாண்டாற் கிடைக்கும். இது போல அடுத்தடுத்து வீழும் எண்கள் அல்லது தோயங்களில், எல்லாத் தோயங்களுக்கும் (digits), எண்களுக்கும் (numbers) ஒரே மாதிரி விழும் வாய்ப்பு இருக்குமானால், அப்படி விழும் போது முதலில் விழுந்த எண்/தோயம் அடுத்து விழும் எண்/தோயம் அமைவதற்கு எந்த வகையிலும் வழிகாட்டுவது இல்லை என்றால், அந்த எண்கள்/தோயங்களை விருட்டெண்கள் அல்லது விருட்டுத் தோயங்கள் என்று சொல்லுவார்கள். 

[random numbers = a sequence of digits or numbers with the property that, in the long run, all digits or numbers in the sequence will occur equally often, and in which the occurrence of any one digit or number in a particular position in the sequence is no guide to the occurrence of earlier or later members of the sequence.] விருட்டெண்கள் கிடைக்கப் பகடை, சோழி என்ற இரு முறைகள் மட்டுமல்ல, நூற்றுக் கணக்கான முறைகள் உண்டு.

----------------------------------------

இனி அறவட்டு என்பதை அற+ வட்டு என்று புரிந்துகொள்ள வேண்டும். ”அற” என்றாலே ”அறம்” என்பதோடு தொடர்பு கொள்வது தமிழ் அறியாமையைக் காட்டுகிறது.. (அதில் தவறு இல்லை. ஆனால் அதுவே தமிழ் என்றும் மற்றவர் தமிழ் “புரியாத் தமிழ்” என்று சொல்ல முற்படுவதும் சற்று அதிகம்.) தமிழ்ச் சொற்கள் பற்றி ஆர்வமுள்ளவர், அவ்வப்போது தமிழ் அகரமுதலிகளைப் புரட்டிக் கொண்டிருக்க வேண்டும். ”அற” என்பதற்கு ”முழுதும், மிகவும், தெளிவாக, செவ்வையாக” என்ற பொருட்பாடுகளுண்டு. பேச்சுவழக்கில் “அறவே இப்படிச் செய்யாதே” என்றால் ”முற்றிலும்- கொஞ்சங் கூட - இதைச் செய்யாதே” என்று பொருள். உங்களூரில் இப்படிச் சொல்லமாட்டீர்களோ?

“வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோர் ஆறு”

என்பது தெரிந்துசெயல் வகை அதிகாரம் குறள் 465. ”எல்லா வகையானும் சூழாது எழுதல், பகைவனை, அவன் வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்யும்” என்று ஒரு மானகையியல் (management) குறிப்பை இக்குறளில் வள்ளுவர் தருவார். வட்டு என்பது சூதாடும் பரப்பு, பலகை, தட்டு, வட்டாட்டம்= சூதாட்டம். வட்டுக்காய்கள் என்பனவற்றை ஆங்கிலத்தில் dice என்பார். random என்பதை கணக்கியலில் சூதாட்டம் ஒட்டித்தானே சொல்கிறார்? தமிழர் ஆடாத சூதாட்டமா? 

சூதாட்டம் தொடர்பாய் எழுந்த சொல் அறவட்டு. இதன் பொருள் ”முற்றிலும் சூதாட்டமாய்” என்பது தான். அற என்பது முழுமையைக் குறிக்கும். எந்தத் தந்திரமும் (loaded dice) இல்லை என்பதற்காக அது முன்னொட்டானது. சிவகங்கை மாவட்டத்தில் ”அறவட்டு” என்பது இன்றும் பழக்கத்திலுள்ள சொல். “இப்படி தீடீர்னு அறவட்டாய்ச் சொன்னால் எப்படி? முன்னேயே ஒரு கோடு எங்களுக்குக் காட்டியிருக்க வேண்டாமா?” என்பர். (உங்கள் வட்டார வழக்கைக் கூர்ந்து கவனித்து வாருங்கள். படியாதோரை இழிவு செய்து நாமிழந்தது மிக மிக அதிகம்.) அறவட்டைக் காட்டிலும் random ற்குச் சிறந்த சொல் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அது sanitized word இல்லை. சூதாடித் தோற்ற நம் பழமரபை அறிவு பூருவமாய் மாற்றுகிறது.

இனி ஒரு பொதுவான கூற்று. இதைச் சொல்வதற்குப் பலரும் என்மேல் கோவப் படலாம். கலைச் சொற்கள் என்பன முழ நீளத்திற்கு விளக்கந் தருவன அல்ல. அளவிற்கு மீறிப் படித்தோர் தரும் சொற்கள் பலவும் இப்படி விளக்கந் தரும் சொற்களாகவே உள்ளன. அருள் கூர்ந்து இப்படிச் செய்யவேண்டாம் என உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சொற்சுருக்கம், துல்லியம் போன்றவை கலைச் சொல்லாக்கத்தில் முகன்மையானவை. என்னை இழிவுசெய்வது ஒருபக்கம் இருக்கட்டும். தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடன்,

இராம.கி..

புனவாசல்

இது எங்களுக்கு அருகிலுள்ள ஊர். அதனால் பேசுகிறேன்.  இவ்வூரை ஒட்டினாற் போல் தெற்கே ஓடுவது பாம்பாறு. அது பாம்பு போல் வளைந்து வளைந்து பம்பி ஓடுவதால் ஏற்பட்ட பெயர். கிட்டத்தட்ட நெற்குப்பைக்கும் முன்னால் அது தோன்றி 70 கி/மீ.க்கும் மேல் ஓடும் ஆறு அது. மழைக் காலத்தில் மட்டுமே ஓடும் காட்டாறு. சில போதுகளில் கரை புரண்டு ஓடுவதைக் கண்டுள்ளேன். 1000/2000 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு இன்னும் பெரிதாய் ஓடியதா என்ற விவரம் எனக்குத் தெரியாது. நான் படித்த தேவகோட்டை வழியாகவும் இவ்வாறு. ஓடி வந்ததால் இதைப் பற்றி ஒரு சில செய்திகளை ஆழ்ந்து அறிந்தேன். 

புனவாசலிலிருந்து 3,4 கி.மீ இல் கடல் வந்துவிடும். புனவாசலின் மட்பாங்கு நெய்தல் சார்ந்ததே. இங்குள்ள பழம்பதி நாதர் கோயில் மிகவும் பெயர் பெற்றது. அதற்குப் பெரும்பணி செய்தவர் தேவகோட்டை சமீன்தார் வீட்டினர். இராமநாத புரம் சேதுபதி மரபினருக்கு பல்வேறு நிதிவுதவிகள் செய்த காரணத்தால் தேவகோட்டையாருக்கு இங்கு பெருஞ்செல்வாக்கு ஏற்பட்டது. கோயில் பற்றி எழுதுவதென்றால் பல பக்கங்களுக்கு எழுதலாம். (கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளேன். பார்க்க வேண்டிய கோயில்.) இந்த ஊருக்குப் புனவாசல் என்ற பெயர் ஏற்பட்டிருக்க மூன்று இயலுமைகளே உண்டு. 

1. புனம்+வாயில்> புனவாயில்>புனவாயல்>புனவாசல் (இங்குள்ள பூகோள அமைப்பில் இது சரி வராது.. புனம் என்பது மலைச்சாரலில் வளர்ந்து கிடக்கும் காடு. இங்கே அதுபோன்ற மலையும் காடும் கிடையாது. எப்போதும் இருந்ததில்லை. 

2. புனல்+வாயில் = புனவாயில்>புனவாயல்>புனவாசல். புனல் = நீர். முன் சொன்னதுபோல் பாம்பாறு ஓராண்டின் பல நாட்களுக்கு ஓடும் ஆறல்ல. (அறுத்தது ஆறு புல்>புன்= துளை. புன்னித் துளைத்துப் போவது புனல்.) இந்த ஊருக்குப் பக்கத்தில் பெரும் மதகுகளை நான் கண்டதில்லை. புனல் வாயில்= மதகு என்பதற்கும் வழியிருப்பதாய்த் தோன்றவில்லை. ஆனால் இவ்வூரைச் சுற்றிலும் ஏராளம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் உண்டு. எல்லாம் மழைப் பிடிப்பை எதிர்பார்த்துள்ளவை. அவைகள் எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப் பட்டவையாகவும் தோன்றவில்லை. இங்குள்ள வேளாண்மை வானம் பார்த்தது. புன்செய் நிலங்களே 98/99 %. மதகுகள். இங்கு பெரிதாகி யிருந்தால் அதற்கேற்ற வேளாண்மைப்.பொருளியல் அமைந்திருக்கும். அப்படி அமையாததால் புனல்வாயிலென்று நீரையொட்டிப் பெயர் அமைந்ததாய்ச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு முன் பாம்பாற்றில் வெள்ளம் பெரிதாய் ஓடியிருக்குமா? பழம்புதலியல் (Paleobotany) ஆய்வுகள் இங்கு நடந்ததாய்த் தெரியவில்லை. அதெல்லாம் தெரியாமல், இங்கு பாலும் தேனும் ஓடியது என்று சொல்வது வெறும் ”புருடா”.

3. புல்>புன்>புன்னை>புனை + வாயில் = புனைவாயில்> புனவாயில்> புனவாயல்> புனவாசல். இதுவே ஏற்கக் கூடிய சொற்பிறப்பு. இங்கே இன்றும் புன்னை மரங்கள் (callophyllum ionophyllum epetulum) உண்டு. “வளம் தரும் மரங்கல் - பகுதி 4” (பி.எஸ்,மணி, என் சி பி எச், 1992 pak. 277-285) என்ற நூலைப் படியுங்கள். புன்னை எண்ணெய் இன்றும் இங்கு கிடைக்கும். அந்தக் காலத்தில் வழலைக் கட்டி / சவர்க்காரக் கட்டி செய்யப் புன்னை எண்ணெயைப் பயனுறுத்துவார். இன்றுமுள்ல இயற்கை புன்னையை குறித்துக் காட்டுகிறது. புன்னைமரம் படகுகள், கப்பல் செய்யப் பெரிதும் பயன்படும் மரம். இன்றும் அதற்குப் பயன்படுகிறது.

அதேபொழுது திருவையாறு, திருநெய்த்தானம், திருமழபாடிக்கு அருகில் கொள்ளிடக்கரையில் இன்னொரு புனவாசல் உள்ளது. அதன் பெயர் ஒரு வேளை நீரையொட்டி எழலாம்.

அன்புடன்,

இராம.கி.           


புகழ்

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற குறளுக்கு உரையாசிரியர் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணக்குடவர் “பிறக்கில் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று" என்று சொல்வார் 13 ஆன் நூற்றாண்டு பிற்பகுதியைச் (பொ.உ. 1271) சேர்ந்த பரிமேலழகரும், “பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக் குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று” என்பார். 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாவாணரும், “ஒருவர் இவ்வுலகத்தில் பிறக்கின் புகழ்க்கு ஏதுவான குணத்தோடு பிறக்க, அக்குணமில்லாதவர் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது” என்பார். இதுபோல் இன்னும்பல உரையாசிரியருஞ் சொல்வர். இவர்கள் எல்லோரும், தோன்றுதலுக்குப் பிறத்தல் என்ற பொருளையே கொள்வார். 

பிறக்கும்போது புகழோடு தோன்றல் என்றால், முற்பிறப்பு, நல்வினை, தீ விணை, முன்வினைப் புகழ்” என்று கருத்துகளே (உரையாசிரியர் சொல்லா விட்டாலும்) இவற்றில் ஆழ்ந்துள்ளன. சென்ற பிறப்பை உணர்ந்தார் யார்? தோன்றல் என்ற சொல்லுக்குக், ”கண்காணல், வெளிப்படல், அறியப்படல், விளங்கல், நிலைகொள்ளல், வரல், சாரியை முதலியன சொற்களிடையே வரல்” போன்ற பொருள்களும், “பிறத்தல், முனைத்தல், உண்டாதல் போன்ற பொருள்களையும் அகரமுதலியில் சொல்வர். பிறவி என்பது நம் விருப்பத்தால் நிகழ்வதன்று. முற்பிறப்பு தொடர்பான செய்திகளைத் தவிர்த்து இம்மை நிலை பற்றியே பொருள் கொள்ள முயன்றால், ”கண்காணல், வெளிப்படல், அறியப் படல், விளங்கல், நிலைகொள்ளல், வரல்” போன்றவையே சரியென விளங்கும். 

நூறுபேர் இருக்கும் அவை என்று வையுங்கள். இறை வாழ்த்து முடிந்து, வரவேற்புரை தொடங்குகையில், மேடையில் 10 பேர் தோன்றுகிறார். வரவேற்பில் விருந்தினரின் புகழும், குறிப்பிட்ட விழாப் புலனத்திற்கு அவர் எப்படி தொடர்புள்ளவர் என்றும் தானே சொல்லப்படுகிறது? வந்தார் போவாரை எல்லாங் கூப்பிட்டு அங்கு தோன்ற வைப்பாரோ? மேடை யென்றில்லை. கலந்துரையாடும் அரங்கிலும் அப்படித் தான். ஏன் ஒரு வீட்டில் விருந்தினராய்ச் சென்றாலும் இதே தான். (திறமை, குமுகப்பணி, அதிகாரம், செல்வம், ஈகை, அருஞ்செயல் என) ஏதோ ஒருவகையில் புகழ் பெற்றோரைத் தானே மேடையில் ஏற்றுவார்? அல்லது பொதுவில் சொல்வார்? ஒவ்வொரு மாந்தனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான். அதன்படி, (திறமை, குமுகப்பணி, அதிகாரம், செல்வம், ஈகை, அருஞ்செயல் என) ஏதோ ஒரு வகையில் புகழ்பெறுக! - என்கிறான். (தவறான செயலில் புகழ்பெறுவது இங்கு குறிக்கப்படவில்லை.) 

நானறிந்து, இக்கருத்தை முறையாக விவரித்தவர் பாவலரேறூ பெருஞ்சித்திரனார் மட்டுமே. அவருடைய திருக்குறள் மெய்ப்பொருளுரை 4 ஆம் பகுதியில் இக்குறளுக்குப் பொழிப்புரையாக, ஒருவர் உலக மக்களிடத்துத் தாம் விளங்கித் தோன்ற விரும்பினால், தம்மை அவர்கள் புகழ்கின்ற வகையில் விளங்கித் தோன்றுக. அவ்வாறு இல்லாதவர் (தம்மை இகழும் வகையில்) அறிமுகம் ஆவதைவிட) அவ்வாறு தோன்றாதிருப்பதே நல்லது. 

பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் உரையைப் படிக்குமாறு பரிந்து உரைக்கிறேன். குறளின் உரைகளைப் படித்து அருள்கூர்ந்து அப்படியே கொள்ளாதீர். ஒவ்வொன்றிலும் ஒரு சமய, மெய்யியல் தாக்கம்  உள்ளது. ஏரணங் கொண்டு உங்களுக்குச் சரியென்று தென்பட்டபடி, வள்ளுவனின் குறளைப் பாருங்கள்.

அன்புடன்,

இராம.கி.   . 


Friday, October 29, 2021

கேட்பு

quote (v.)

late 14c., coten, "to mark (a book) with chapter numbers or marginal references," from Old French coter, from Medieval Latin quotare "distinguish by numbers, number chapters," from Latin quotus "which in order? what number (in sequence)?," from quot "how many," from PIE *kwo-ti-, from pronominal root *kwo-. The sense development is via "to give as a reference, to cite as an authority" (1570s) to "to copy out or repeat exact words" (1670s). Modern spelling with qu- is from early 15c. The business sense of "to state the price of a commodity" (1866) revives the etymological meaning. 

தமிழில் ”விலை பகர்”, ”விலை கூறு”, ”விலை என்ன?” என்று விதம் விதமாய் ஒன்றின் பொருள் விலையை விற்பனையாளரிடங் கேட்போம். இதைக் கேட்பு விலை (asking price) என்பர். இங்கு நடக்கும் வினை கேட்பது/வினவுவது.. ஆங்கிலத்தில் quote, ask, query, வாங்குகிறவர் கேட்கிறார். விற்பவர் கூறுகிறார். நடப்பது இருவர் தொடர்பான ஒரு வினை. இது போன்ற வினைகளுக்குத் தமிழில் இரு வேறு சொற்கள் கருத்தாவின் பார்வை கருதிப் பயனுறும். பெயர்ச் சொல்லின் வழி வாங்குவோர் செய்வது கேட்பு. விற்போர் செய்வது கூற்று. ஆங்கிலத்திலோ quote என்பது கேட்பு, கூற்று என்ற இரண்டிற்கும் பொதுவாய் வரும். மொழிமரபு கருதி நாம் சொற்களைப் பயனுறுத்த வேண்டும். ”எங்களின் கேட்பிற்கு உங்கள் கூற்று என்ன?” என்பது வாங்குவோரின் தமிழ் வாக்கியம். “உங்கள் கேட்பிற்கு எங்கள் கூற்று இவ்வளவு” என்பது விற்போர் வாக்கியம். ஆங்கில மரபைத் தமிழ் மரபில் கலந்து சிலர் சொல்வது குழப்பத்தையே ஏற்படுத்தும்.  

இன்னொரு விதமாயும் கேட்பு என்ற சொல் நம் வாழ்விற் புழங்குகிறது. பெரிதாய் எழுத்துப் பரவாத காலத்தில் படிப்பறியாப் பொது மக்கள் தங்களிடை பேசிக் கொள்கையில், ”இப்படிக் கேட்டேன்/ கேள்விப் பட்டேன், அது சரியா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று அச் சூழ்நிலை அமையும். இங்கும் quote = கேட்டது, கேட்டிகை. இதைக் கேட்பு என்றாலுஞ் சரி தான். இதைச் சங்கத் தமிழில் பலவிடங்களில் பயனுறுத்தியுள்ளார். பதிற்றுப்பத்து 52. “மலர்மறி யாவெனக் கேட்டிகும்” கேட்டிகுத்தல் = கேட்டிருத்தல்; கேட்டிகுத்தலின் பெயர்ச் சொல் கேட்டிகை. கேட்டிகுத்தல் என்பது கேட்டிசித்தல் என்றும் வரும். “பிறர்பிறர் கூறவழிக் கேட்டிசினே” புறம் 150, 2. ”அடுபோர் அண்ணல் கேட்டிசின் வாழி” மதுரைக் காஞ்சி 208. நானிங்கே கொடுத்தது 3 காட்டுகள். இதுபோல் பல காட்டுகளை சங்க நூல்களில் காண முடியும். விலை கேட்டலுக்கும் முன்கேட்ட பேச்சிற்குமான பொருள் நீட்சி ஏற்படுவது இயற்கையே. இதே பொருளிற்றான் question = கேள்வி. கேட்டம் என்ற சொல்லை நாம் ஆள்கிறோம். வினவு/வினா என்ற சொல்லும் இதற்குண்டு. querry என்பதும் கேள்வி தான் கேட்டிகை என்ற சொல்லை மேற்கோள் தொடர்பாகக் கையாளலாம். 

அதே பொழுது ”உங்கள் quote என்ன?” என்பதற்கு ” உங்கள் கூறுவிலை என்ன?” என்று,  quote செய்வோர் “உங்களுக்கான எம் கூறுவிலை இது” என்றும் பயிலலாம். கூறுதல். கேட்டல் என்பது யார் என்பதைப் பொறுத்தது. தமிழ்ப் பழக்கம் மறவாதீர்.

ஒரு சங்கச் சொல்லை விடுத்து மேற்கோள் என்ற சொல் பரவியது, ’அருவி’ இருக்க ’நீர்வீழ்ச்சி’ பரவியது போலத் தான். நம்மை அறியாது தமிழை ஆங்கில மரபிற்கு உகந்ததாய் நாம் ஆக்கிக் கொண்டுள்ளோம். அதே பொழுது தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவை நான் அழுந்தச் சொல்வேன். என்னை எத்தனை முறை சிலர் இழித்துப் பேசினாலும் இது உண்மை. இதெல்லாம் accidental coincidence ஆக இருக்க முடியாது. ஒரு சொல்லிற்கான இரு வேறு பொருள்கள், மூன்று நான்கு பொருள்கள் இரு வேறு மொழிக் குடும்பங்களிலில் இருக்குமெனில் அது தன்னேர்ச்சியாய் இருக்க முடியாது. ஒரு பொருள் மட்டும் ஒத்திருந்தால் அப்படிச் சொல்லலாம். இன்னதென்று சொல்ல முடியாத பழங்காலத்தில் (வரலாற்றுக் காலத்திற்கு முன்னும் இருக்கலாம்.) இரு மொழிக் குடும்பங்களுக்கும் இடையே ஏதோவொரு உறவு இருந்திருக்கலாமோ என ஐயுறுகிறோம். ஐயுறுவதில் என்ன தடை? நான் இப்பொழுது எந்தத் தேற்றையும் முன்வைக்க வில்லை. இணைச்சொற்களை மட்டுமே தேடுகிறேன். இவற்றின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாகிறது. . 

சங்கதத்திற்கும் மேலை மொழிகளுக்கும் இடையே தான் கண்ட 200,300 சொற்களை வைத்தே வில்லியம் சோன்சு இந்தையிரோப்பியன் என்ற மொழிக்குடும்பத்தை உரைத்தார். ”எப்படி இந்த 200 சொச்சம் சொற்கள் ஒன்றாகின? எனற விளக்கத்தையோ, தேற்றையோ அவர் சொல்ல வில்லை. ஆனாலும் அவர் சொன்ன ஏரணத்தை மொழியாளர் உணர்ந்தார். கொஞ்சங் கொஞ்சமாய் அவர் கருத்து வலுப்பட்டது. இன்று அச்சொற்றொகை 2000, 3000 ஆக விரிந்து நிற்கிறது. இது போல் தான் பாவாணர் வழிப்பட்ட எம் போன்றோர் இந்த இணைச்சொற்களை எடுத்து வைக்கிறோம். கேட்பவர் கேட்கட்டும். கேட்காதவர் விலகி நிற்கட்டும். ஆனால் ”மேலையரை மதிப்போம், இன்னொரு உறவு சொன்ன பாவாணரைப் பழிப்போம்” என்பது ஏரணம் இல்லாத பேச்சு. பாவாணரின் சொற்பிறப்பியல் கூற்றும். ”தமிழன் பிறந்தகம் குமரி நிலமே” என்பதும், ”தமிழே முதற்றாய்மொழி: என்பதும் அருகருகே நிற்கும் வெவ்வேறு கூற்றுக்கள். ஒன்றை ஏற்பதால் இன்னொன்றையும் ஏற்பதாய்ச் சொல்ல முடியாது. பூதியல் பற்றி ஏராளஞ் சொன்ன ஐசக் நியூட்டன், அல்கெமி என்னும் மாழைமாற்று வேதியலில் 16 ஆண்டு காலம் பற்றுக் கொண்டிருந்தார். இதனால் நியூட்டனின் பூதியல் விளக்கங்களைத் தூக்கியா எறிந்தோம்? நியூட்டனின் மாழைமாற்று வேதியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் முன்னகர வில்லையா? பாவாணர் காட்டிய வழியில் நம் தேடல்களைத் தொடர வேண்டியது தான்.   


Thursday, October 28, 2021

பூச்சாண்டி

ஆண்டான் என்பவன் ஆள்பவன். இச்சொல் பெரிய மாந்தரை மட்டுமின்றி இறைவனையுங் குறிக்கும். ஆள்வானுக்கு அடியவன் ஆண்டை அல்லது ஆண்டி என்றறியப்படுவான். தேனிப் பக்கம் சிவனாண்டி (சிவனுக்கு அடியவன்), மாயனாண்டி> மாயாண்டி (மாயனுக்கு அடியவன்), விருமனாண்டி> விருமாண்டி (விருமனுக்கு அடியவன் = பெருமானுக்கு - ப்ரம்மனுக்கு - அடியவன்) என்று பெயரிடுவார். அந்தந்த அடியவர் தத்தம் ஆண்டானுக்குரிய சின்னத்தை உடல் முழுதும் அணிவர். (பிரமனுக்கு உரிய சின்னம் எதுவென்று எனக்குத் தெரியாது.) 

இப் பெருந்தெய்வங்களன்றி பெரியகருப்பு, சின்னக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு, முனி எனப் பல்வேறு சிறு சிறு தெய்வங்களையும் நாட்டுப் புறங்களில் தொழுவர். இத்தெய்வங்களின் திருமேனிகள் இன்றும் ஐயனார் கோயில்களில் இருக்கும். இந்த உருவங்கள் கருப்பாகவும், சற்று கோர முகத்துடனும், கையில் அரிவாளுடன் அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இதுபோன்ற ஓர் உருவம் தான் நாளங்காடி பூதமாய் சிலம்பிற் சொல்லப்படும். தவிர புகார் நகரத்துப் பூத சதுக்கத்தில் இருக்கும் பூதம் தவறுசெய்தோருக்குத் தண்டனை அளிப்பதாயும் பெரும் ஓலமிடுவதாயும் சொல்லப்படும். இதுபோன்ற சதுக்க பூதங்கள் [புகார், வஞ்சி போன்ற ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கின்றன.]

சதுக்க பூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப் பட்டது என்று பேரா. ந.சுப்பிரமணியன் தன்னுடைய ”Tamil polity" நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்க பூதம் இருந்தது. சதுக்க பூத விவரிப்பு அப்படியே இற்றைப் பிள்ளையார் விவரிப்புப் போல் இருக்கும். சதுக்க பூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.

சிவனாண்டி, மாயாண்டி, விருமாண்டி போலப் பூதாண்டிகளும் அக்காலத்தில் இருந்திருக்க முடியும். ஆனால் எல்லா ஆண்டிகளும் ஏதோவொரு பூச்சைத் தன் உடம்பு முழுதும் பூசினார். அது சாம்பலாய் இருக்கலாம் கரியாகலாம், மஞ்சளாகலாம். அல்லது கலவையாகலாம். எங்கள் ஊர்ப்பக்கம் மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் வெவ்வேறு கோயிற் சாமியாடிகள் தங்கள் முகம், உடம்பில் பல்வேறு பூச்சுக்களைப் பூசிக் கொண்டு பெருஞ்சூலம், தண்டம், அரிவாள், வேல் போன்றவற்றைக் கையில் வைத்துக்கொண்டு தேருக்கு அருகில் வந்து நிற்பர். தேரை இழுக்கு முன்பு ஊர் மக்கள் சாமியாடிகளைத் தொழுது ஆசிபெற்றுக் கொள்வர். பெரியவர்கள் இதைச் செய்யும் போது சிறியவர்கள் சாமியாடிகளுக்கு அருகிலே வரத் தயங்குவர். அச்சப் படுவர். சாமியாடிகளைக் கண்டாலே எல்லாக் குழந்தைகளுக்கும் அச்சம் தான். பூச்சாண்டிகளை இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும். தென்பாண்டியில் எல்லாவூர்களிலும் நடப்பது இதுவே. அவர்கள் சிறுதெய்வங்களுக்கான சாமியாடிகள். சாமியாடிகளில் ஒருவரே பெரும்பாலும் ஐயனார் கோயில் பூசாரியாயும் அமைவார். வேலன் என்ற சொல் வேல் கொண்டு ஆடும் சாமியாடியே.

சாலுதல் என்பது இறைவனைச் சாருதல்/சாற்றுதல்; அதாவது பூசைப் பொருட்களைச் சாற்றுதல், சால்+த்+த்+அன் = சாற்றன்>சாத்தன் பெரும்பாலான நாட்டுப்புறப் பூசாரிகள்; சாமியாடிகள் சாத்தன்/சாத்தைய்யா என்றே அழைக்கப் படுவார். பூசாண்டச் சாத்தன் வடக்கே பௌசாண்ட சாத்தான் ஆகி மீண்டும் தமிழுக்குத் திரும்ப வரும்போது பாசாண்ட சாத்தன் ஆகிப் போவான். இப் பெயர் சிலப்பதிகாரத்திலும் உண்டு. சாத்தனின் மெல்லோசைச் சொல் சாந்தன். சாந்திக்காரன் என்று மலையாளத்தில் சொல்வார். சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி என்பவன் தலைமைப் பூசாரி. சாத்தன் / சாந்தன் என்பவன் பூசாரி தான். அதே போல சாலுகின்ற கூட்டத்துப் பெண்மகள் சாலினி (= பூசாரிச்சி). 

பூச்சாண்டி பற்றி நான் சொல்ல நினைத்தது இது தான். சண்டி எனும் அதர்வண வேத மாந்திரிக யாகத்திற்கும் இச் சொல்லிற்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதாய் நானறியேன். நான் பார்த்தவரை பூ என்ற சொல்லிற்கு பிள்ளை என்ற பொருளை எந்த அகரமுதலியும் கொடுக்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.   

தமிழைச் சீர்திருத்த முற்படும் விந்தைப் பேர்வழிகள்

திருக்குறளைச் சில காலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த் துறை ஆட்சித் தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப் பிழைகள் உள்ளதாய்” ஒரு முடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்கும் இங்கும் உள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படி யிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இங்கு தான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்து கொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்டினார்களாம். 

தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்று பிற்பகல் ஓய்விலிருந்தார். கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தார். துபாசி விதயத்தைச் சொன்னார். கேட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப் படித்து, அதிலேயே பிழை கண்டு வெள்ளைக்காரர் ஒருவர் திருத்தஞ் சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச் சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறு வழியின்றித் திண்ணையில் அமரச் சொல்லி, “என்ன விவரம்?” எனக் கேட்டாராம். துரை தான் வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான் கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டாராம். ”அறத்துப் பாலில் நடுவு நிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்,

தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்

எச்சத்தால் காணப்படும் 

என்று வருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளை குட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறிய முடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்ல வில்லையே? தவிர 2 ஆம் அடியில் பாருங்கள், எதுகை தட்டுகிறது. இதுபோன்ற எதுகை தட்டும் குறள் வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமா? எனவே தான் இதை மாற்றி

தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்

மக்களால் காணப்படும் 

என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்த கணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத் தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப் பெரிய வெள்ளைத் துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள் தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்று விட்டாராம். அந்தக் கதை தான் இங்கு எனக்கு ஞாவகம் வருகிறது. 

ஒருசில மெத்தப் படித்த மேதாவிகள், ”தமிழில் பல்வேறு ஒலிகளைக் கையாள முடியவில்லை. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த வேண்டும்” என்று சொல்ல முற்படுகிறார். இவர்கள் தமிழ் மொழியைத் திருத்தப் போகுமுன், தம் அடிப்படைத் தமிழறிவைக் கூட்டிக் கொள்வது நல்லது. அரைகுறை அறிவில் உளறக் கூடாது. அப்புறம், அந்த வெள்ளைத் துரையின் நிலையே வந்து சேரும். 

தமிழில் வல்லின மெய்களில் ஓரெழுத்துக்கு ஓரொலியென என்றும் அமைவதில்லை. (சங்கதம். நகரியைப் பிடித்துக் கொண்டு அப்படியே தமிழில் அமைக்க முற்பட்டால் தமிழில் 33 அடிப்படை எழுத்துகள் இராது. 51 எழுத்துக்கள் வந்து சேரும். பேசாமல் கிரந்தத்திற்கு மாற வேண்டுமென வெளிப்படையாகவே இவர்கள் சொல்லலாமே? நாங்களும் மலையாளம் விருத்தம் 2.0 என்று அதைப் புரிந்து கொள்வோம். அப்படி விழைவோர் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதிக் கொள்ளலாம். தமிழில் எழுதுவதானால் தமிழ் விதிகளைக் கடைப்பிடியுங்கள். .

கால்பந்து ஆடவேண்டுமானால் அதன் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு விதிகளை உள்ளே கொண்டுவந்து கந்தரகோளம் பண்ணக் கூடாது. மட்டைப் பந்தோ, கொக்கிப் (hockey) பந்தோ வேண்டுமெனில், அந்தந்த ஆட்டத்தில் அந்தந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மீறிக் கலந்தால் ஆட்ட நடுவர் வழுச் செய்ததாய்ச் சொல்லி விளையாடுவோரை வெளியில் தான் நிற்க வைப்பார். அதே போல பரத நாட்டியம் ஆடுமிடத்தில் குத்தாட்டம் ஆட முடியாது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையுண்டு. அதே போல ஒவ்வோர் இசைக்கும் ஒரு முறை இருக்கிறது. கலப்பிசை, கலப்பு நாட்டியம் வரக்கூடாதென நாங்கள் யாரும் சொல்லவேயில்லை. ”அதைத் தமிழெனச் சொல்லாதீர். வேறெதோ பெயரிட்டுக்கொள்ளுங்கள். உமக்குத் தோன்றிய படி நடந்துகொள்ளுங்கள். அதை யாரும் மறுக்க மாட்டார். தமிழைக் கொஞ்சம் விட்டு விடுங்கள்” என்று மட்டுமே சொல்கிறோம். தமிழில் வல்லின மெய்யெழுத்துகளுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட ஒலிகளுண்டு. அம்மெய் சொல்முதலில் வருகிறதா, சொல்லிடையில் வருகிறதா என்று பார்க்க வேண்டும். இடையில் வருவதிலும் 3 வகைகள் உண்டு.  

1.சொல் தொடக்கத்திலும், சொல்லிடையில் தம்மின வல்லின மெய்களைத் தொடர்ந்து வரும்போதும், வல்லின மெய்கள் தம் இயல்பான ஒலியைப் பெறும்

2. சொல்லிடையில் ஒரு மெல்லினம் வந்து அதைத் தொடர்ந்து அதன் இனமான வல்லினம் தென்படின், குறிப்பிட்ட வல்லினம் அதிரொலி பெறும்.

3. சொல்லிடையில் ஓர் உயிர்மெய் வந்து, அதைத் தொடர்ந்து இன்னொரு வல்லின உயிர்மெய் வருமானால், இரண்டாவது உயிர்மெய் (ககரத்திற்கும், சகரத்திற்கும்) சற்று உரசியோ, (டகரம், தகரம், பகரத்திற்கு) சற்று அதிர்ந்தோ ஒலிக்கும். இவ்வகையை உயிரிடையொலிப்பு (intervocalic pronunciation) என்று சொல்வர்.  

காட்டுகள்:

க   1. கடல் (Kadal), மக்கள் (MakkaL) - இயல்பொலி                  2. மங்கை (Mangai) - அதிர்வொலி       3. மகள் (MahaL) - உரசொலி

ச   1. சடை (Chadai), மிச்சம் (Michcham) - இயல்பொலி           2. மஞ்சள் (ManjaL) - அதிர்வொலி        3. காசு (Kaasu) - உரசொலி

ட   1 டாடா (taada), பாட்டன் (Pattan). - இயல்பொலி                2. பண்டை (PaNdai) - அதிர்வொலி       3. பாடு (Paadu) - அதிர்வொலி

த   1. தள்ளை (ThaLLai), வித்தை (Viththai) - இயல்பொலி      2. விந்தை (Vindha)i - அதிர்வொலி     3. விதை (Vidhai). - அதிர்வொலி

ப   1.பட்டம் (Pattam), கப்பல் (Kappal) - இயல்பொலி                2. வேம்பு (Veembu) - அதிர்வொலி          3. சாயுபு (Chayubu)  - அதிர்வொலி 

டாடா என்றெழுதினால் தமிழ் மரபுப் படி taada என்று தான் ஒலிக்கும். டாட்டா என்றெழுதினால் தமிழ்மரபுப் படி Tata என்றொலிக்கும்.

மேலே சொல்லியது ஒலிப்பு பற்றி மட்டுமே. தமிழ்ப் பேச்சில், தமிழெழுத்தில் இன்னொரு விதியும் உள்ளது. ”மொழி முதலில் என்ன எழுத்துக்கள் வரும்?, மொழிக் கடையில் என்ன எழுத்துகள் வரும்?” என்பது பற்றியது. 

அதையேற்றால் டாட்டா என்பது தமிழ்முறைப் படி தவறு. தாட்டா என்று தான் சொல்ல முடியும். அப்படிச் சொல்ல உங்களுக்கு முடியாதென்றால் டாட்டா என்று சொல்லிப் போங்கள், நாங்கள் புரிந்து கொள்வோம். அல்லது (இ)டாட்டா என்று எழுதுங்கள். அதையும் புரிந்து கொள்வோம். உகப்பு உங்கள் கையில். செய்வதைப் புரிந்து செய்யுங்கள் என்று மட்டுமே நாங்கள் சொல்கிறோம். 

நாங்கள் ஒன்றும் தமிழ்மொழிக்குப் பட்டாப் போட்டுக் கொண்டு வரவில்லை. சும்மா தொணதொண என்று கீறல் விழுந்த தட்டாய் குறைப் பாட்டை எழுத்துச் சீர்திருத்த வாதிகள் போட்டுக்கொண்டு இருக்கிறார். இவரை அறிந்து கொண்ட நாள் முதலாய் இதே பாட்டைக் கேட்டுச் சலித்துவிட்டது. ”ஒரு சிறு ஒலிப்பு விதியைக் கூடக் கற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் தமிழைத் திருத்த முற்படுவேன்” என்று முனைந்து நிற்போருக்கு நாங்கள் என்ன சொல்வது?. எங்கள் மண்டையில் நாங்களே அடித்துக் கொள்வது தவிர வேறு வழியில்லை. ஆண்டவனே! இவர்களுக்கு புத்தியைக் கொடு!

அன்புடன்,

இராம.கி..


Wednesday, October 27, 2021

பர ஆர்த்தனையும், பிறவும்

பலரும் பூசையின் தமிழ்மை குறித்துப் பேசுவார். ஆனால், ”ப்ரார்த்தனை” பற்றி யாரும் பேசுவதில்லை. பரவல் என்பது தமிழில் வாழ்த்தைக் குறிக்கும். ”பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 84 ஆம் நூற்பா. உரிச்சொல் பொருள்கள் சட்டெனப் பலருக்கும் புரியாததால் தான் தொல்காப்பியர் உரிச்சொற்களைப் பட்டியல் இட்டார். “பரவலும் புகழ்ச்சியும்” என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 27 இல் பாடாண் திணை தொடர்பாய்ச் சொல்லப் படும். ”பரவலும் புகழ்ச்சியும்” அக்காலத் தலைவனுக்கும் கடவுளுக்கும் பொதுவானதே.

இறைவன், கோயில் போன்ற சொற்களும் பொதுவானவையே. பரவல் என்ற சொல் விரித்தல் பொருளுள்ள பர-த்தல் வினையில் எழுந்து விதப்பான பொருளில் விரிந்தது. பல்வேறு பெயர்களால், புகழுரைகளால் விரித்துக் கூறி, போற்றி, “எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என வேண்டுவதே பரவலுக்கான பொருள் .அரசனையும் வேண்டலாம், இறைவனையும் வேண்டலாம். பரவுதல் என்பது பரசுதல், பராவுதல் என்றுந் திரியும். நிலவு>நிலா ஆவதைப் போல் பரவு>பரா ஆகும். பரவுதும் = வேண்டுதும், to praise, worship

”பரவல் பழிச்சுதல்” என்பது பரிபா.10, 116. ”செந்நாவலர் பரசும் புகழ்த் திருப் பெருந்துறை” என்பது திருவாசகம் 34.1. ”யாழிற் பரவுமின்” என்பது கல்லாடம். 10. “தற்பராய் நின்று” என்பது புறப்பொருள்.வெண்பா மாலை.10.15 யின் உரை). "நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்" என்பது நாலா. பனு. நாச். திருமொழி 9.6.2 ஆம் வரி. ”பரவு நல்லொழுக்கின் படி பூண்டது” என்பது கம்பராமா.ஆற்றுப்.12. ”கைதொழுது இரந்து வேண்டிப் பரவி மீண்டு” என்பது திருவிளையா.மெய்க்கா.21. ”பரவு அருமணிகள் விளங்கிய” என்பது திருவாதவூர்ப் புராணம் திருப்பெருந்.படலம் 3. ”சண்டேசன் தாள் பிரசமலர் இறைத்து இறைஞ்சிப் பரசுவோமே” என்பது சேதுபுராணம் கடவுள் வாழ்த்து 12

இது போல் இன்னும் பல்வேறு காட்டுகளைக் கொடுக்க முடியும். ஆர்த்தல் = ஒலித்தல். ஆரவாரம் என்பது உங்களுக்குத் தெரியுமே? பர ஆர்த்தல் = பரவார்த்தல்> பரார்த்தல் என்று பேச்சு வழக்கில் திரியும். பரார்த்தலில் உருவான வினையாலணையும் பெயர் தான் பரார்த்தனை. அதை ப்ரார்த்தனை என்று சங்கதம் போல் சிலர் ஒலிக்கத் தொடங்கியதால் நாம் மயங்குகிறோம். பரவுதலென்பது முற்றிலும் தமிழே. எந்தப் பழந்தமிழ் இலக்கியமும் பாராது, இரண்டாம் வழி, மூன்றாம் வழி ஊற்றுகளைப் பார்த்துத் தமிழர் தவறான முடிவுக்கு வருவது வேதனையளிக்கிறது. ’சங்கதம், சங்கதம்’ என்போருக்குப் பலரும் இரையாவது எங்குபோய் நிற்கும்? இருக்கும் வளங்களைப் பறிகொடுத்து நிற்காதீர். நம் வீட்டுக் கூரையையே நெருப்புக்கு இரையாக்கலாமா? இச்சொல்லோடு தொடர்புடைய இந்தையிரோப்பியன் சொல்லுண்டு. 

pray (v.)

early 13c., "ask earnestly, beg," also (c. 1300) "pray to a god or saint," from Old French preier "to pray" (c.900, Modern French prier), from Vulgar Latin *precare (also source of Italian pregare), from Latin precari "ask earnestly, beg, entreat," from *prex (plural preces, genitive precis) "prayer, request, entreaty," from PIE root *prek- "to ask, request, entreat" (source also of Sanskrit prasna-, Avestan frashna- "question;" Old Church Slavonic prositi, Lithuanian prasyti "to ask, beg;" Old High German frahen, German fragen, Old English fricgan "to ask" a question).

இதை விளக்கிச் சொன்னால், ப்ரஸ்னாவின்/ப்ரச்னை தொடர்பானவற்றைச் சொல்லவேண்டும். பிறகு வேறெங்கோ பேச்சு நீளும். எனவே தவிர்க்கிறேன். பரார்த்தனையும், பூசையும் தமிழே. வேறு சட்டை போட்டிருப்பதால் அவை மாறிவிடா. நம் பிள்ளைகளை ஊரார் பிள்ளைகளென்று சொல்லலாமா? 

இன்னொன்றுஞ் சொல்லவேண்டும். அது அருச்சனை பற்றியது. அதற்குமுன் மக்கள் வழக்கில் நடக்கும் ஒரு நடைமுறை பற்றிச் சொல்லவேண்டும். 

பலநாள் பழகியதொரு கூட்டுச்சொல்லில், முற்சொல்லையோ, பிற சொல்லையோ தவிர்த்து, மீந்துள்ள சொல்லையே கூட்டுப் பொருளுக்கு உற்றதாய் ஆக்கிக் கொள்வது பேச்சு வழக்கில் இயல்பு. காட்டாகத் தமிழில் மின்சாரம் என்ற சொல் 70/80 ஆண்டுகளுக்குப் பழகிய பின், சாரத்தை விட்டு இப்போது மின்னென்றே சுருங்கப் பயன்படுத்துகிறோம் அல்லவா? தொழில் நுட்பத்தில் தொழிலை விடுத்து நுட்பம், நுட்பியல் என்று பழகிறோம் அல்லவா? அது போல் ”நீர்க்குவியல்” என்று பொருள் படும் ”ஜல சமுத்ர” எனும் சங்கதக் கூட்டுச்சொல்லில் (இதன் வேரும் தமிழே. இங்கதை விளக்கினால் சொல்வது விலகிப்போகும்.) ’ஜல’வைத் தவிர்த்து ”சமுத்ர” என்றாலே பெருங்கடலைக் குறிப்பதாய்ச் சங்கதத்திற் கொள்வர். இதுவும் நாட்பட்ட புழக்கத்தால் ஏற்படும் மாற்றம். 

பர ஆர்த்தலில் பர-வைத் தொக்கவைத்து ஆர்த்தலென்றாலே இறைவனைப் போற்றலென்ற பொருள்கொள்ளத் தொடங்கியது. ”ஆர்த்தி” என்ற முன்னிலை வினைமுற்றில் ’ஆர்த்யி’ என்று சங்கதத்திலும் ’ஆர்ஜ்ஜி’ என்று பாகதம், பாலி மொழிகளிலும் மாறும். மீண்டும் ’ஆர்ச்சித்தாய்’ என்று தமிழிற் கடன் வாங்குவோம். பாகதமும், தமிழும் சங்ககாலத்தில் ஊடாடிய மொழிகள். ஆர்ச்சித்தல் என்பது metathesis இல் அருச்சித்தலாகும். அருச்சனையை அப்படியே வழக்கில் கொணர்ந்தோம். நம்மூர்ச் சங்கதப் பரப்புரையாளரால் அது அர்ச்சனையானது. இறைத் திருமேனியின் முற்செய்யும் ஒவ்வோர் அருச்சனையிலும் தேங்காயுடைத்து, பழத்தைக் கிள்ளி, நீர் தெளிப்பதும், பூவைத் தெறிப்பதும் மட்டும் நடப்பனவல்ல. ஐயர் தன்வாயால் இறைவனின் பல்வேறு பெயர்களைச் சொல்லிப் போற்றி, “அருச்சனை செய்பவருக்கு எல்லா நலமும் அளிப்பாயாக” என்ற வேண்டலுஞ் செய்கிறார். அருச்சனை என்ற இருபிறப்பிச் சொல் பர ஆர்த்தனையின் இன்னொரு வடிவே. இந்த ஊடாட்டம் புரியாது அருச்சனையைத் தமிழல்ல என்பதும் தவறாகும்.

ஆராதனையும் தமிழே. ஆலாத்தல் என்பது தீச் சுவாலையை இறைத் திருமேனியின் முன் மேலுங் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றியாட்டிக் காட்டி அவனழகை நமக்குக் குருக்கள் உணர்த்துகிறார். ஆலாதனை சங்கதத்தில் ஆராதனாவாகும். மீளக் கடன் வாங்கி ஆராதனை என்போம். ”ஆல வட்டம், ஆலாத்தி, ஆலாவனை  (>ஆலாபனை)” என்ற பல்வேறு சொற்களையும் இவற்றோடு பொருத்தி உணருங்கள்.  ஆகமம் என்பது தமிழர் வழக்கம். வேதமென்பது வடவர் பழக்கம். சிவநெறியிலும், விண்ணவநெறியிலும் இன்றுள்ள நடைமுறை வேதப் பழக்கங் கலந்த ஆகம வழக்கமே. ஆகம முறையை ஒட்டிக் கோயில்களில் இன்று நடக்கும் எல்லாச் சடங்குகளும் தமிழர் மரபுகளின் (முன்னோர் படையல்களின் ஊடாக நாம் செய்யும் பழக்கங்களின்) தொகுப்பே. இவற்றில் எது வேதம், எது ஆகமம் என்ற தெளிவு நமக்கிருந்தால் போதும். தமிழ் வழக்கங்களை மீட்டுவிடலாம்.    

அன்புடன்,

இராம.கி. 



பரமக்குடி

ஒரு சமயம் பரமக்குடியும், வேலிக்கருவஞ் செடியை எரிப்பதால் கிடைக்கும் பணம் பற்றிய பேச்சு இணையத்தில் எழுந்தது. வேறு ஊராய் இருந்தால் நான் படித்துவிட்டு நகர்ந்திருப்பேன். பரமக்குடி எங்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ளது. விட்டு நகர மனமில்லை. பரமக்குடிக்குப் பரம்பைக்குடி என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்திருக்குமென்று சிலர் சொல்வார். பரம்பை என்பது வன்னி மரமே. வன்னி என்பது மரத்தின் வன்மை (வலிமை) கருதி ஏற்பட்ட பெயர் (வன்>வன்னி = hard wood). வீட்டு நிலைகளை வைக்க வேண்டுமானால் வன்னி மரத்தைத் தச்சு வேலைக்குப் பயன்படுத்துவர். அவ்வளவு வலிமை யானது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம். இதைப்பற்றி இராசத்தானில் பல கதைகள் உண்டு. அவற்றை இணையத்திற் படிக்கலாம். பஞ்ச காலத்தில் ஒன்றுங் கிடைக்கா நிலையில் வன்னிப் பழங்களை உண்டு பசியாறுவாராம். 

வன்னிமரம் சிவநெறியில் பெரிதாகவே கருதப்பட்டது. வன்னிமரம் சான்றுக்கு வந்ததிலிருந்து பல கதைகள் அதற்குச் சொல்லப் படுகின்றன. அகத்தியான் பள்ளி (அகஸ்தியர்கோயில்), அரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), திருவாமாத்தூர் (ஆமாத்தூர்), திரு ஈங்கோய்மலை, திருக்காட்டூர் (கோட்டூர்), திருச்செம்பொன்பள்ளி, திருப்பட்டீசுவரம், பச்சிலாசிரமம் (திருவாசி), பந்திக் கொடுமுடி, திருவான்மியூர், திருப்பேணுப் பெருந்துறை (திருப்பந்துறை), திருப் பாம்புரம், திருமறைக்காடு (வேதாரண்யம்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), குமாரவயலூர் (வயலூர்), திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் (ஆண்டான் கோவில்), திருக்காட்டுப்பள்ளி, திருத்தளிச்சேரி (காரைக்கோவில் பத்து), திருக்கொள்ளிக்காடு (கோவிலடி), திருப்பூந்துருத்தி (மேலப்பூந்துருத்தி), திருப்பெருவேள் (மணக்கால் அய்யம்பேட்டை), திருவன்னியூர் (அன்னியூர்), திருமுண்டீச்சுரம் (கிராமம்), திருவாடானை, திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி), திருமணஞ்சேரி என 26 தலங்களில் வன்னியே தலமரம். இதில் கடுவாய், கொள்ளி என்பதுங் கூட வன்னியைக் குறிக்கலாமென்று எண்ணத் தோன்றுகிறது. 

பரம்பு/பரம்பை என்பது வன்னிமரத்திற்கு நிலத்தால் ஏற்பட்ட பெயர். பரம்பு நில மரம். இது பரவுவதால் ஏற்பட்ட பெயரல்ல. எத்தனையோ மரங்கள் பரவுகின்றன. வேறு விதப்பான காரணம் உண்டு. இன்றைக்கும் பரமக்குடியில் உள்ள வேளாண் ஆய்வுநிலைய வெளியீடுகளை இணையத்தின் வழி பாருங்கள்.        

Agricultural Research Station, Paramakudi is located in the southern bank of the river, Vaigai on Madurai - Rameswaram National Highway. In 1952, it was established as Research station under State Department of Agriculture. Then, it was recognized as Paddy research Sub-center from 1952 to 1958. Later it was changed as State Seed Farm from 1958 to 1978. Again it was renamed as Multi-Crop experiment sub-station from 1978 to 1981.  Finally it was established as Agricultural Research Station under Tamilnadu Agricultural University from 1981 onwards.

Agricultural Research Station, Paramakudi represents rainfed tracts of Ramnad and Sivagangai districts of Tamilnadu. The extent of the experimental farm is about 9.36 ha, which is located at latitude of 9° 21’N and longitude of 78° 22’E and an altitude of 39.83 m MSL. Annual average rainfall is 740 mm of which 60 per cent is received from Northeast monsoon. Soil type is clay loam low in available nitrogen, medium to high phosphorus and potassium. The organic matter content of the soil is very low. Soil is slightly saline with a pH of 8.0

இங்கிருக்கும் மண் 55% களி (clay), 30% களிச்சேறும் (loam) மணலும் (sand) கலந்த கலவை, 15% ஆற்று வண்டல் (river alluvial) சேர்ந்தது. நீர்வற்றிய நிலையில் இங்குள்ள களிப் பாங்கான கருமண் சென்ற ஆண்டிருந்த நீரோட்டத்தால் சிறுசிறு உருளைகளாய்த் திரண்டு கட்டிபட்டுக் கிடக்கும். ஈரச்சத்து அடிப்படையில் இல்லாததால் இந்த நிலத்தை உழுதாலும் புழுதி பறக்கும். இந்தச் சிறு உருளைக் கற்கள் பரபர/ பொருபொரு என பரலாய்க் (granule) பெரும்பிக் கிடக்கும் போது அதன் மேல் நடந்தால் சிறுமுட்களால் குத்துவது போல உணர்ச்சி எடுக்கும். வைகையாற்றில் எப்பொழுதெல்லாம் நீரோடுகிறதோ அப்போது மட்டுமே இந்நிலம் ஈரங் கொள்ளும். இதன் அயனிச் செறிவு 8 என்பதால் நெல் விளைச்சலும் குறைவே. வறண்ட நிலங்களில் பரம்பு நிலம் என்பது இன்னொரு வகை. இவ்வூரின் கிழக்கே பெரும்பச் சேரி எனும் சிற்றூருண்டு. ஆழ்ந்துபார்த்தால் பரம்பச்சேரி> பெரும்பச்சேரியின் பொருள் புரியும். 

பரம்பைக் குடி எப்படிப் பரமக் குடியானது என்பதற்கு வரலாற்றினுள் போக வேண்டும். பின்னாள் பாண்டியாரில் 12 ஆம் நூற்றாண்டிற் பங்காளிச் சண்டை ஏற்பட்ட போது ஒரு சக்களத்தி மகன் சோழர் ஆதரவில் மதுரையைப் பிடித்துக் கொண்டதால், மூத்தாள்மகன் தன் மாமனான சிங்கள பராக்கிரம பாகுவைச் சரணடைந்தான். அவன் ஒரு தண்டல்நாயகனை அனுப்பி வைத்து மதுரைப் பாண்டியனைத் தோற்கடித்துத் தன் மருமகனைப் பட்டத்தில் ஏற்றினான். (பாண்டியருக்கும் சிங்களருக்குமான உறவு பல்லாண்டுக் கதை. அதைப் பேசினால் மாளாது. அதனாற்றான் தமிழ் ஈழத்தார் “விடுதலைப் புலி” என்றார். பாண்டியரின் நெருக்கமே வேண்டாம் என்ற நினைப்போ என்னவோ?) பராக்கிரம பாகுவின் தண்டல் நாயகன் தங்கியிருந்தது இந்த ஊர். தன் அரசன் பெயரால் இவ்வூரைப் பாராக்கிரமக் குடியாக்கினான். அது பராகமக் குடியாகிப் பரமக் குடியாயிற்று. ஆகச் சிங்களன் ஒருவன் இப்பகுதியைப் பல்லாண்டுகள் ஆண்டிருக்கிறான். அச் செய்தியை இன்னும் இப்பெயரால் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். மாறாகப் பரம்பைக் குடி என்றே பழைய பெயருக்குப் போகலாம்.

இப்பொழுதெல்லாம் வன்னியை எங்கே கண்டு கொள்கிறார்? எல்லாம் பாழாய்ப் போன வேலிகாத்தான் எனும் சீமைக் கருவேலந் தான். அதை வயல்களில் வளர விட்டு வெட்டிப் பின் குவித்து மூட்டம் போட்டு கரியாக்கி வெட்டி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். பரமக்குடிக்கு அருகிலுள்ள பார்த்திபனூரிலிருந்து நாளொன்றைக்கு ஒரு சரக்குத் தொடரி கிளம்பிய காலமும் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தவிர சிறு சிறு வேலைக்கருவங் குச்சிகளை வைத்து எரித்துச் செங்கற் சூளையில் செங்கல் உருவாக்குவதற்கு அருகிலுள்ள கண்மாய்களில் கிடந்த வண்டல், களி மண்ணைத் திருடி ஏராளமானவர் பணக்காரர் ஆகி விட்டார். கொஞ்ச நஞ்ச ஈரமும் பாழானது. வறண்ட மாவட்டம் என்று posting போட்டு வரும் அரசதிகாரிகள் பலர் இதிலிறங்கி ஓராண்டில் பணஞ் சம்பாரித்து ஊர் திரும்புகிறார். ஆக வன்னியிலும் கோரமான முறையில் வளம் பிறக்கிறது. காலம் கலிகாலம் அல்லவா?      

அன்புடன்,

இராம.கி.

பண்டிதர், பண்டிகை

வேடிக்கை என்னவெனில், பண்டிதரென்ற சொல்வளர்ச்சியிலும் பெரும்பாலான படித்தோர் சங்கதப் பார்வையே கொண்டு வருகிறார். அதன் தமிழ்ப்பின்புலம் கடைசிவரை இவருக்குப் புரிவதில்லை. பட்டதென்பது வாழ்ந்து அறிந்தது. பட்டுவ (passive) வாக்கியம் இன்றைக்குப் பெரிதும் ஆளப் படுகிறது. பட்டறிந்ததை (அநுபவித்ததை) இன்றைக்குப் பட்டறிவென நாம் சொல்வதை, பட்டுவித்தல்> பட்டித்தல் என்றே அன்று புரிந்துகொண்டார். பட்டித்தல் என்ற பிறவினையிலிருந்தே ’படித்தல்’ என்ற தன்வினைச்சொல் பிறந்தது. படித்தலின் மூலம், முன்னோர் பட்டுணர்ந்ததை, முன்னுணர்ந்ததை, முன்னறிந்ததை, பழையதைத் தெரிந்து கொள்கிறோம். அது பல்வேறு துறைகளில் இருக்கலாம். பள்+து என்பது பட்டானால், பள்+ந்+து என்பது ந் என்னும் இறந்தகால இடைநிலையால் பண்டு என்றாகும். பட்டித்தல்> பண்டித்தல்> பண்டிதர் என்ற வளர்ச்சி தமிழில் மிக இயல்பானதே. பண்டு என்பது முடிந்துபோனது, அறிந்தது. பண்டைக்குப் பழமை என்ற பொருள் உண்டு தானே? பண்டித்தல் = (பண்டையதைப் படிக்கச் சொல்லிக் கொடுத்தல். பண்டித்தம்>பண்டிதம்= ஏற்கனவே பெற்ற பட்டறிவால், தம் படிப்பறிவால் புதியவருக்குச் சொல்லிக் கொடுப்பது. பண்டை என்ற சொல்லுக்கு அறிவென்ற பொருளையும் தமிழ் அகரமுதலிகள் கூறும். நான் புரிந்துகொண்டவரை, ”பண்டிதர்” தமிழே.   

படிப்பென்றால் என்னவென்று பாருங்கள். ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று சங்கதச் சிக்கலுக்குள் மாட்ட வேண்டாம். நிரம்பும் காலத்திற்கு இதில் வலியப் போய் மாட்டிக் கொண்டாயிற்று. சென்னை அகரமுதலி சொல்லியது என்றவுடன் கண்ணை மூடி ஏற்பதற்கு மாறாய், சற்று ஐயப்படுங்கள். அதிலுள்ள தப்பு-தவறுகள் ஏராளம். 

அப்புறம் ஒன்று சொல்ல மறந்தேன். பண்டிகை என்ற சொல் தமிழியச் (திராவிடச்)  சொல் தானாம். நானொன்றும் புனைந்து சொல்லவில்லை. (இராம.கி. சொல்லி யார் மதிப்பார்?) ஆனானப் பட்ட மேலையர் பர்ரொ-எமனோ சொல்கிறார். அவருடைய Dravidian Etymological Dictionary 1998 edition Munshiram Manoharlal OPublishers Ovt. Ltd edition 1998. page 262. Entry 3221 இப்படிச் சொல்கிறது. Ta. paNtikai festival. Ma.paNtika id Te' panduga. (பண்டிகையையும் வடசொல்லெனச் சொல்லும் விடாக் கண்டர் கொடாக் கண்டரும் இருக்கிறார்.) 

பண்டிகை = பண்டு + இகை. பண்டு = பழைமை. இகுதல் = இறங்கி வருதல்.. இகுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லாட்சிகள் சங்க நூல்களில் உண்டு. தேடினாற் கிடைக்கும். இகுதலில் உண்டான பெயர்ச் சொல் இகை. (இகை யென்று தேடினால் சங்க இலக்கியத்தில் கிடைக்காது. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். சங்க இலக்கியத்தில் ஒரு வினைச் சொல் கிடைத்தால் அதிலிருந்து உருவாகும் பெயர்ச் சொற்கள் எல்லாமுங் கிடைக்காது. பெயர்ச் சொல் கிடைத்தால் அதில் மறைந்திருக்கும் வினைச் சொல் கிடைக்காது  இதுவே உள்ளமை நிலை. இது தமிழில் மட்டுமல்ல. எல்லா மொழிகளுக்கும் அவரவர் இலக்கியங்களில் உள்ளது. சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலியல்ல. அதேபோல் சங்கத நூல்களும் அகராதிகள் அல்ல. இவையெல்லாம் மொழியின் இயலுமைகளைச் சொல்கின்றன. சரியான படியாற்றத்தை (application) நாம் தான் உய்த்து உணர்ந்துகொள்ள வேண்டும்.) பண்டு இகுந்துவந்த நிகழ்வே பண்டிகையாகும். பொங்கல் விழா, தேர்த் திருவிழா, பூச விழா இன்ன பிற பண்டிகைகள் இப்படித் தான் பொதுமையடைகின்றன. இவற்றின் மூலம் பழசைக் கொண்டாடுகிறோம். மரபைத் தொடர்கிறோம்.

சரி பண்டிகையை ஏனிங்கு சொன்னேன்? பண்டிகை இருந்திருப்பின் அதனோடு தொடர்புடைய (பழையதைச் சொல்லிக் கொடுக்கும்) பண்டித்தலும் பண்டிதமும் இங்கு இருந்திருக்கும் தானே? ஓர்ந்து பாருங்கள். ”ஒரு சொல் தமிழில்லை” என்று சொல்வதெளிது. கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அது opinion தானே? சொல்லாய்வுக்குழு என்பது opinion களைத் தெரிவிக்கும் இடமாய் மாறிவிடக் கூடாது. இருக்கிறது என்று சொல்லத் தான் ஏராளம் ஆதாரம் வேண்டும். அந்த ஆதாரங்கள் உண்டு. ஒரு சிலவற்றை மேலே சொன்னேன்.         


பதக்கம்

ஆழ்ந்து பார்த்தால் இது வட சொல்லாய்த் தெரியவில்லை. பதக (padaka) என்ற சொல் வடசொல்லாய் இருந்திருப்பின் அதைக் கடன் வாங்கும் தமிழ் பதகம் என்றே கடன் வாங்கி யிருக்கலாமே?. அதைப் பதக்கமென அழுந்திச் சொல்லும் தேவையென்ன? (உள்ளே தமிழ்த் தாக்கம் இருக்கக் கூடியது, உங்களுக்குப் புரியவில்லையா?) பதக என்ற சொல்லிற்குத் தொடர்பானதாய் மோனியர் வில்லியம்சில் எந்த வினைச் சொல்லும் கொடுக்கப் படவில்லை. தவிர, இது திவ்யாவதனாவின் பத பாடத்தில் இருப்பதாய் அங்கு குறிப்பிடப் படுகிறது. எந்த வேர்ச்சொல்லுங் கொடுக்கப் படவில்லை. நானறிந்த வரை திவ்யாவதனா என்பது பாணினிக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து எழுந்த சொற்றொகுதி நூல். அது சங்கதம் கடன் வாங்கிய சொற்களையும் சேர்த்தே பட்டியலிடும்.

மாறாகப் பதக்கமென்ற சொல் தமிழில் கழுத்திலணியும் அணிகலனையே குறிக்கும். நம்மூர்ப் பொன்னாசாரிகளை வினவினால் இது விளங்கும். பதக்கம் என்பது தங்கம், வெள்ளி போன்ற மாழையில் பல்வேறு அடவுகளில், வேலைப் பாடுகளில், வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றைப் பதித்து ஒரு சங்கிலியில் (அல்லது ஆரத்தில்) படக்கிப் (படங்கு அடிப்பாகம். படக்குதல் = பள்ளமாக்குதல்) பட்டையாகச் சேர்க்கக் கூடியதையே பதக்கமென்று தமிழிற் கூறுவர். (படக்கம்>பதக்கம்) பதக்கஞ் சேர்ந்த ஆரத்தைக் கண்டி, கண்டிகை என்றுஞ் சொல்வர். 

இது தவிர, பள்ளத்தில் படிவதை பதிதல் என்போம். பதிக்குஞ் செயலைச் செய்வது பாதம். பதிக்குஞ் செயல் பெறுவது பாதை. பாதத்தில் அணிவது பாதுகை. பதிதல்= முத்திரை அழுந்தல். பதிங்குவது பதுங்குவது என்றும் திரியும். பதுங்கு= பள்ளம். பதிவு= அழுந்துகை, பள்ளம், பதித்தது வெளியாருக்குத் தெரியாமல் இருந்தாலும் அதைப் பதுங்குதலென்பர். பதுங்கு பிடித்தல்= மேல்தளங்களில் சிறுகல் பாவுதல். படக்கம்>பதக்கம் என்பது போல், பதுக்கம்>பதிக்கம், பதுக்கம்>பதக்கம் என்றுந் திரியலாம். எப்படி இச்சொல் திரிந்தது என உறுதிபடச் சொல்லமுடியாது. 

விளையாட்டுப் பதக்கங்களில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பது ஒருபக்கமெனில், இன்னொரு பக்கம் ”என்ன அமைப்பு, என்ன விளையாட்டு, என்ன இடம்” போன்ற விவரங்களும் முகன்மை தான். அவை தாம் பதிக்கங்களின் மேலுள்ள முத்திரையால் பதிக்கப்படுகின்றன. மாழையைக் காட்டிலும் முத்திரைக்கே மதிப்புக் கூட. எனவே படக்கம்>பதக்கம், படிக்கம்> பதிக்கம்> பதக்கம் என்ற சொல் பெரும்பாலும் தமிழாக இருக்கவே வாய்ப்பு அதிகம். பெரும்பாலான மாழை அணிகலன்கள் (குறிப்பாகத் தங்க அணிகலன்கள்) தெற்கிருந்தே உருவாகி வடக்கே போயின என்பது வரலாற்றுப் புரிதல். வடக்கே கிடைத்தது செம்பு மட்டுமே. வெள்ளியும் அங்கு சிறிதே கிடைத்தது. வயிரம், மணி, பவளம், முத்து என எல்லாமே இந்திய நாட்டில் தெற்கிருந்தே வடக்கு போயின. இவற்றின் வணிகத்தைத் தெற்கே நெடுநாட்கள் கட்டுப்படுத்தியது. எனவே பதக்கம் என்ற அணிகலன் சொல்லும் தெற்கிருந்து வடக்கு ஏகவே வாய்ப்பு அதிகம். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.    

எக்கேள்வியும் இன்றி 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இணைய இழுனையில் இருக்கும் (on-line), “spoken sanskrit" அகர முதலியை முற்றும் நம்பி ”தமிழுக்குப் பதக்கம் இறக்குமதி” என்று சொல்லத் துணிந்தவர், இப்போது ”<தெற்கிருந்தே உருவாகி வடக்கே போயின என்பது > எனில், பதக்கம் எனும் சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளதா? அது என்று அறிமுகமானது?” என்றும் கேட்பார். இறக்குமதி என்னுமுன் ”சங்கத இலக்கிய மூலம் எதையாவது பார்த்தீர்களோ? இது போன்ற கேள்விகளை அங்கு கேட்டீர்களோ? சங்கதமெனில் கேள்வி கேட்பாடே இன்றி ஏற்கும்போது, தமிழெனில் பல்வேறு கேள்விகள் எழுமோ?.தமிழ்மேல் அவ்வளவு அவநம்பிக்கையா? இந்நிலை விதைத்தவர் யார்?” என்று கேட்கத் தோன்றுகிறது. 

8 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் ”பதக்கம் கண்டிகை ஆரமாப் பகர்வர்” என்று வருகிறது..இதைடும் சிலர் ஏற்பாரா? ஏற்கமாட்டார். மாறாக ”தமிழ் இலக்கியத்தில் எங்குள்ளது?” என்று கேட்பார். நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியங்கள் என்பன நானறிந்தவரை அவையெழுந்த ஆண்டுகளின் அவ் வளவு தமிழ்ச் சொற்களையும் பட்டியலிடும் சொற் களஞ்சியங்கள் அல்ல. பலமுறை வெவ்வேறு உரையாடல்களிற் சொல்லி விட்டேன். சங்க இலக்கியம், அற்றைத்தமிழின் சிறுபகுதி. அது பதியாத சொற்கள் மிக மிகப் பல. இந்த இலக்கியங்களில் வினைச் சொல் இருந்தால், தொடர்புடைய பெயர்ச்சொல் இருக்காது, பெயர்ச்சொல் இருந்தால் ஒரு குறிப்பிட்ட விகுதி மட்டுமே யிருக்கும். இன்னொரு விகுதி இருக்காது. நான் இது போன்ற குறைகளைச் சொல்லிகொண்டே போகலாம். 

பொதுவாகச் சங்க இலக்கியம் என்பது ஓர் இயலுமையை மட்டுமே காட்டும். மற்ற இயலுமைகளை நாம் தான் உன்னித்து ஊகிக்க வேண்டும். ஆங்கிலச் சொற்பிறப்பியலிலும் கூட அப்படி ஒருபால் இயலுமை மட்டுமே காட்டுவார். ஆங்கிலத்திற்கோ, சங்கதத்திற்கோ காட்டாத கறார்த் தனத்தை தமிழுக்கு காட்டும் பலரின் பலக்குமை (complexity) எனக்குப் புரிவதில்லை. அது ஒருவகை உச்சநிலைப் பலக்குமையா (superiority complex) ? அன்றித் தாழ்நிலைப் பலக்குமையா (inferiority complex)? தெரியவில்லை. தமிழாய்வாளன் சட்டெனப் பொய் சொல்வான் என்பது சிலரின் கணிப்பா? - என்றும் தோன்றும். இதே கேள்விகளை ஒருசொல் சங்கதம் எனச் சொல்வோரை நோக்கியுங் கேளுங்கள். அப்போது தான் நீங்கள் நொதுமல் தன்மை பேணுகிறீர்கள்..

இருப்பினும் ”பதிந்த” என்ற சொல்லிற்கு சங்க இலக்கியத்தில் நான் கண்ட 2 காட்டுகளைத் தருகிறேன். என்னைப் பொறுத்தவரை பதிந்த (அதுவும் கடினமான ஒரு பொருள் நெகிழ்வான ஒன்றில் பதிந்ததைக் குறிக்கும்) என்பதைக் காட்டும் ஆழமான காட்டுகள். முதலில் வருவது ”குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி” எனும் மதுரைக் காஞ்சி 637 ஆம் வரி. ”தொடைக்கு இடையில் பதிந்த கூர்நுனை கொண்ட குறும்பிடி வாள்” இங்கு குறிக்கப்படுகிறது. அடுத்தது அகம் 253, 24-26 ஆம் வரிகள். 

”மாக விளிம்பில் திலகமொடு பதித்த

திங்கள் அன்னநின் திருமுகத்து

ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே”

”அகன்று விரிந்த வானத்தில் திலகமொடு (இங்கே நிலவின் கரும்புள்ளிகள் திலகமாய்க் குறிக்கப்படுகின்றன) பதிந்த திங்கள் போல, மத்தக மணி பதித்த காதணி மாட்டிய நின் திருமுகப் பார்வையை தலைவர் என்றும் நினைப்பார்” என்று தோழி தலைவிக்குச் சொல்வாள். இவ் வரிகள் மிக முகன்மையானவை. ஒரு பதக்கத்திலோ, காதணியிலோ, மோதிரத்திலோ, இருப்பதிலே  பெரிய வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றையே பெரும்பாலும் பதிப்பர். அது தலைவி குடும்பத்தின் செல்வத்தைக் காட்டும் அடையாளம். பெரிய கல்லை ”மதக்க மணி” என 12/13 ஆம் நூற்றாண்டு உரைகாரர்  சொல்வர். இதைச் சுருக்கி பதக்கத்தின் பொருளாய் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடாமணி நிகண்டு ”மதாணி” என்று காட்டும். 

”வானத்தில் பதிந்த நிலவு போல், உன் காதுக் குழையணியில் ஒண்சூட்டு அவிர்(கல்) பொருந்தியுள்ளது”. என்று தோழி தலைவியின் திருமுகத்தை விவரிக்கிறாள். குழையிருந்த நாட்டில், கழுத்தில் தொங்கும் பதக்கம் இருந்திருக்குமா, இருந்திருக்காதா? பதக்கமென்ற சொல்லுக்கு ஊன்றாய் நிலவு பதிந்த வானம் என்று சொல்லப் படுகிற்தே? அப்புறமுமா ஐயம்? ”பதிந்த” இருந்தால், “பதக்கம் என்ற சொல் இருக்காதோ”? தாயிருந்தால் தந்தை யிராரோ? (”சரி, ’பதிந்த’ தானே இருக்கிறது. ’பதக்கம்’ இல்லையே?” என்று இப்போது சிலர் கேட்டாலும் கேட்பார்.) நாம் எங்கே போய்க்கொண்டுள்ளோம் ஐயா? சங்கதத்தை நம்புவோம், தமிழை நம்ப மாட்டோமா? இனி .........தங்கல், .................துங்கல் என உருவாகும் சொற்களைப் பார்ப்போம். (யாப்பில் அகர உயிர்மெய்க்கு உகர உயிர்மெய் எதுகையாய் வரலாம்.) 

அதங்கல் = கசங்கல், குதம்பல், கெடல், அடங்கல்; இதங்கல் = இதமாதல்; உதங்கல் = மேடாதல்; ஒதுங்கல் = விலகல்; கதுங்கல் = அதங்கல்; குதங்கல் = மலவாய் வழி வருதல்; சதங்கல் = சலங்கல், ஒலித்தல்; செதுங்கல் = சிதறல்; நதுங்கல் = அவிதல் கெடுதல், மறைதல்; நுதுங்கல் = நினைந்து இளகல், ஈரமாதல், நுது நுது என்றாதல்; பதங்கல் = திண்மப்பொருள் ஆவியாதல், குழியாதல், பதங்கு = குழி, ஒட்டுவரிசை, பிளந்த பனையின் பாதி. இந்தப் பதங்கில் தான் வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றைப் பதிப்பார். இந்த விளக்கத்தை ஒரு சங்கத அகரமுதலியில் கண்டுபிடியுங்கள். பார்ப்போம். பதக்கம் செய்வதற்கான செய்முறை இச்சொல்லில் இருக்கிறது. அதாவது நுட்பியற் செய்முறை இச்சொல்லில் புலப்படுகிறது. சங்கதத்தில் பதகம் என்ற பயன்பாடு மட்டுமே இருக்கிறது. பருத்தியுங் கொட்டையும் வளர்த்தவனை மூலன் என்று காட்டுவீர்களா? cotton என்ற சொல்லை வரித்துக் கொண்டவனை மூலன் என்பீரா? 

பிதுங்கல் = அமுக்குதலால் உள்ளீடு கிளம்பல்; புதுங்கல் = புதுவாதல்; பொதுங்கல் = வருந்தல், விலகல், மறைதல், புகையில் பழுத்தல்; மதங்கம் = சிறு வாத்திய வகை, யானை, முகில், ஒரு மலை, ஓர் ஆகமம், கலம்பக உறுப்பு பதினெட்டனுள் ஒன்று; மதங்கல் = மயங்கல், வதங்கல், சோர்தல்; மிதங்கல் = நீரின் மேல் மிதந்து கிடத்தல்; முதங்கல் = முன்வருதல்; மெதுங்கல் = மெதுவாதல்; மொதுங்கல் = மொது மொது என்றாதல்; வதங்கல்/வதுங்கல் = வாடல், வருந்தல்; விதங்கல் = விதமாதல்; வெதுங்கல் = வெப்புறுதல்; இவ்வளவு சொற்களை  ஏன் சொன்னேன் என்றால், பதங்கல் என்று ஏற்படுவது இயல்பே  என்று நிலைக்காட்டத் தான். 

அன்புடன்,

இராம.கி.


 .