Friday, June 16, 2006

கண்ணகி பற்றிய நயனன் பதிவும், அதில் நடந்த உரையாடலும்

கண்ணகி பற்றிய திரு. நயனனின் பதிவும், அதையொட்டிய என் சென்ற மூன்று பதிவும் இங்கே ஒருசிலரைக் கொதிக்க வைத்திருக்கிறது போலும். திரு. SK நயனனின் பதிவில் ஒரு பின்னூட்டு அளித்திருந்தார். அதைப் படித்த பின்னால், என் மறுமொழியைப் படியுங்கள்.
-----------------------------------------------------
திரு.SK,

இந்த ஓராண்டு வாதம் ஏன் நகைப்புக்குரியது?

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். சிலம்பில் இருப்பதைத்தானே சொல்ல முடியும். உங்கள் கற்பனையில் இருப்பதையா சொல்ல முடியும்?

மாதவி அரங்கேற்றுக் காதையில் வரும் பொழுது அவளுக்கு அகவை 12 என்று ஒப்புகிறீர்கள். அதற்குப்பின் கால ஓட்டத்தைக் காட்ட விரும்பிய இளங்கோவடிகள், கரிகாலன் இமயம் வரை சென்று திரும்பிய வரிகளைப் போடுவதாகச் சொல்லுகிறீர்கள். [புகார்க்காண்டம் இந்திர விழவூரெடுத்த காதை 89 - 98]. அப்படியானால், கோவலன் மாதவி காலத்தில் இருந்த அரசன் கரிகாற் சோழன் என்கிறீர்களா? பாட்டின் வரிகளை ஒழுங்காகப் படியுங்கள், அய்யா! நீங்கள் காட்டும் வரிகள் முன்னோர் புகழ்ச்சி.

"இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅ
செருவெங் காதலில் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கின் என்வலி கெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போக்கிய அந்நாள்"

என்பது பழங்கதை. சிலம்பில் இந்த இந்திர விழாக் காலத்தைப் பார்க்கும் போது கரிகாலன் காலம் அந்நாள் (past); ஆய்வாளர் கருத்துப் படி அந்த அந்நாள் என்பது குறைந்தது 150, 200 ஆண்டுகளுக்கு முன்னே. சேயோனை மகன் காலத்திற்குக் கொண்டுவந்தால் எப்படி? கரிகாலனைத் தூக்கி சிலம்பின் கதைக் காலத்திற்குக் கொண்டுவந்து ....... நண்பரே, சிலம்பையும், கொஞ்சம் புறநானூற்றையும், பதிற்றுப் பத்தையும், அகநானூற்றையும் ஆழ்ந்து படியுங்கள்; அப்புறம் சொல்லுங்கள்.

சரி கரிகாலன் இல்லை என்றால், யார் தான் சிலம்பு காலத்தில் இருந்த சோழ மன்னன்? இதற்கு மறுமொழி சொல்ல, இரண்டு இடங்களைப் பார்க்கவேண்டும்.

முதல் இடம். வாழ்த்துக் காதையில் வரும் உரைப்பாட்டு மடை. இதில்

"குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்"

என்ற வாசகத்தில் வரும் ஞாயிற்றுச் சோழன் யார்?

இரண்டாம் இடம், நீர்ப்படை காதை. இதில் "நெடுஞ்செழியன் மறைந்த பின்னால் பாண்டிய நாட்டில் என்ன நடந்தது?" என்று மாடல மறையோனிடம் செங்குட்டுவன் கேட்கிறானே, அப்பொழுது மாடலன் சொல்லுவதையும் பார்க்க வேண்டும்.

"நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்"

என்று சொல்லுகிறான். அதாவது "உன் மைத்துனன் பெருங்கிள்ளியொடு ஒத்துப் போகாமல், அந்த இளைய அரசனைப் பொறாத, அவன் ஏவல் கேளாத, சோழவளநாட்டை அழிக்கும் குணம் கொண்ட, ஒன்பது அரசரின் ஒன்பது குடையும் ஒரே பகலில் ஒழித்து, உன் மைத்துனனின் சக்கரத்தை (ஆட்சியை) ஒருவழிப் படுத்தினாய்!"

அப்படியானால் செங்குட்டுவன் காலத்தில் சோழநாட்டை ஆண்ட அரசன் பெயர் என்ன? அவன் பெயர் பெருங்கிள்ளி. இவன் ஞாயிற்றுச் சோழனின் மகன். செங்குட்டுவன் தாய் நற்சோணையின் தம்பி. இந்தப் பெருங்கிள்ளியைப் பெருநற்கிள்ளி என்றும் சொல்லுவர். பெரும்பாலும் இவன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்றே பல தமிழறிஞரும் முடிவு செய்கின்றனர்.

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து பற்றிய பதிகத்தில்,

"ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை, நேரிவாயில் நிலைச்செரு வென்று" என்றும், "ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து, நிலைச்செருவினால் தலையறுத்து" என்றும் வருவதால், மேலே பெருநற்கிள்ளி காலத்திய நிகழ்வுகள் இன்னொரு இடத்தில், உறுதி செய்யப் படுகின்றன. நீங்கள் சிலம்பை எப்படித் தலைகீழாகப் படித்தாலும் வேறு இடைப்பரட்டு (interpretation) ஏற்பட வழியில்லை.

அடுத்து, "13 வயதில் 'இவர்கள்' கூற்றுப்படி மாதவி மணிமேகலையைப் பெற்றிருக்க முடியாது!" என்று சொல்லியிருக்கிறீர்கள். இவர்கள் என்பது நானும், நாக. இளங்கோவனுமா? அல்லது இளங்கோவடிகளா? மாற்றுக் கூற்றை எடுத்துக் காட்டுங்களேன். சும்மா, உங்கள் எதிர்பார்ப்புக்களைக் கூறிக் கொண்டிருந்தால் எப்படி?

13 அகவையில் பிள்ளை பெற முடியுமா? ஒரு காலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்னால், நம் பாட்டி மார்கள் 14, 15 அகவையில் கூடப் பிள்ளை பெற்றார்கள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். பெண்கள் சமைகின்ற பருவம் 12 இலும் அமையலாம் என்றுதான் கேட்டிருக்கிறேன். நம்முடைய இந்தக் கால விழுமங்களை அந்தக் காலத்தில் பொருத்தாதீர்கள் என்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நான் சொல்லும் கணக்குகள் சிலம்பில் கொடுத்துள்ள தரவுகளை வைத்து ஒருவிதக் கணிப்புத் தான். அதில் ஒரு நாலைந்து மாதங்கள் தவறலாமே ஒழிய, முற்றிலும் மாறி இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது தவறென்றால், நிறுவித்துக் காட்டுங்கள். உங்கள் ஊகங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.

"கோவலனும் கண்ணகியின் ஆடை அணிகலன்கள், நகைகள் இவற்றையெல்லாம் மாதவிக்கு வழங்க நேரம் வேண்டும்!"[புகார்க்காண்டம் கனாத்திறம் உரைத்த காதை 69 - 70] என்று ஒரு நக்கல் அடித்திருக்கிறீர்கள். அதில் அவன் மாதவிக்கு அத்தனையும் கொடுத்ததாகச் சொல்லவில்லை. மீண்டும் வரிகளைக் கூர்ந்து படியுங்கள்.

"சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடில்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு"

என்றே இளங்கோ சொல்லுகிறார். "அந்த வஞ்சகமானவளோடு கூத்தாடியதில், என் பொருள் குலைந்த இலம்பாடு (பொருள் இல்லாது இருத்தல்) எனக்கு நாணம் தருகிறது" என்று கோவலன் சொல்லுகிறான். இங்கே "பொருளைத் தூக்கிக் கொடுத்தான்" என்ற நேர்பொருள் இல்லை. மற்றோர் உரையை வைத்து அதன் வழியே இடைப்பரட்டாமல், "வேறு எந்த வழியில் வணிகத்தைச் சரிவரப் பார்க்காத ஒருவனுக்குப் பொருள் தொலையும்?" என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். [நீங்கள் ஒரிடத்திற்குப் போய்க் கேட்டிருந்தால், உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திருக்கும். அங்கு போகவொட்டாமல் யாரோ ஒரு நண்பர் உங்களை ஒரு பொழுது இருத்திக் கொண்டுவிட்டார். அப்புறம் கொடுபட்ட பணத்தை கடைசிவரை வாங்கவே முடியவில்லை. இப்பொழுது பண இழப்பு ஏற்பட்டது எதனால்? எப்படி அதைப் புரிந்து கொள்வீர்கள்? நிலைமையைப் புரியாது, உங்கள் நண்பரிடம் அந்தப் பணத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுவீர்களா?] அது என்ன அய்யா, அவ்வளவு வெறுப்பு மாதவி மேலும், கோவலன் மேலும், நக்கல் அடிக்கும் அளவிற்கு?

"மாலையை விலைக்கு வாங்கிய பண்பிலாக் கோவலன், மாதவியுடன் மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு களித்திருந்தான் என்பதை இளங்கோ அடிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதை மறுக்க முடியுமா?" என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் மறுக்கிறேன். என் கருத்தை என் பதிவிலும் இங்குமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். "கோவலன் மாதவியொடு பல்லாண்டு களித்ததாய் எங்கு இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார்?" என் று சான்று கூட்டிச் சொல்லுங்கள், காத்திருக்கிறேன்.

இந்த வாதத்திற்கிடையில் நாக. இளங்கோவன் சீதையை இழுத்தது முற்றிலும் சரி என்றே எனக்குப் படுகிறது.

இத்தனை பேரை இலங்கையில் இராமன் கொன்றிருக்க வேண்டாமே, சீதையை அனுமன் தூக்கிச் செல்ல அணியமாய் இருந்தானே? பிறகு ஏன் இவ்வளவு உயிர்ச்சேதம்? இராமாயணம் புரிந்த அளவிற்கு சிலம்பு புரிந்ததா என்பதே என் கேள்வி.

"என் இராமனுக்கு இழுக்கு" என்று பிராட்டியார் செய்ததும் எனக்குச் சரி. அதே போல "பட்டாங்கில் யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்று கண்ணகி செய்ததும் சரி. "சீதையைத் தொடக் கூடாது, கண்ணகியை இழிவு படுத்தலாம்" என்பதில் எனக்கு ஒருப்பாடு கிடையாது. எனக்கு இருவருமே போற்றத் தகுந்தவர்கள்.

அன்பிற்குரிய இளங்கோ,

இந்தப் பின்னூட்டம் நீண்டு போனதால், அதே பொழுது நான் எழுதிவரும் பதிவிற்கும் ஒரு தொடர்ச்சியாய் இருக்கும் என்பதால், என்னுடைய பதிவிலும் இந்தப் பின்னூட்டத்தை ஒரு படி போடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, June 14, 2006

கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 3

அடுத்து வரும் காதைகளான இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற் காதை ஆகியவற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு தேடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான மறுமொழிகள் கொண்டவை அவையல்ல. இந்திர விழவு என்பது சித்திரை மாத முழு நிலவில் தொடங்குகிறது. எத்தனை நாள் நடந்திருக்கும் என்று சிலம்பின் வழி சொல்ல முடியவில்லை. பொதுவாக நம்மூரில் திருவிழாக்கள் என்பவை 10 நாட்கள் அளவில் நடைபெறுவது உண்டு. ஆனால் இது 28 நாட்கள் நடந்ததாக மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் அறிகிறோம். இந்த இந்திர விழவிலும், மாதவி நடனம் ஆடுகிறாள். ஆடிய நாளின் அதே மாலையில் கோவலனும் மாதவியும் கடலாடுகிறார்; அதன்பின் ஓய்வாக இருந்த நேரத்தில் கானல் வரி எழும்புகிறது. (கானல் வரியின் சிறப்பை எழுத முற்படாமல் என்னை நானே தடுத்துக் கொள்கிறேன்:-).)

"கானல் வரி யான் பாடத் தானொன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று கானல் வரியின் முடிவில், மனம் வெதும்பி, ஏவலாளர் சூழ் தரக் கோவலன் மாதவியை விட்டுப் போகிறான். அத்தோடு கோவலன் மாதவியின் உறவு முறிகிறது.

கோவலன் மாதவி உறவு இருந்த காலம் ஓராண்டிற்கும் குறைவானது தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓராண்டு இருக்கும். இதற்குள் மாதவிக்கு மகவும் பிறந்து விடுகிறது. (மணிமேகலை பற்றிய செய்திகளைப் பின்னால் பார்க்கலாம்.) ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள். உண்மை இப்படி இருக்க, அதை உணராமல், பல ஆண்டுகள் கோவலன் கண்ணகியைப் பிரிந்தான் என்று திரு. ஞானியும், திரு.மாலனும் சொல்வது எனக்கு வியப்பாகிறது. "அய்யா, சிலம்பைத் திரும்பப் படியுங்கள்" என்று தான் நாம் சொல்ல முடியும்.

மாலன் தன் அண்மை வலைப்பதிவில் சொன்னது:

"முன்னுதாரணமாகக் கொள்ளத் தக்கவள் தானா கண்ணகி? கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. அவன் மலை போன்ற குடும்பச் சொத்தை அந்த இன்னொரு பெண்ணிடம் தொலைத்து விட்டு வந்த போதும் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. சிலப்பதிகாரத்தின் முன் பகுதி முழுவதும், ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள் தான் கற்புக்கரசி என்பதை நிலை நிறுத்தும் பாத்திரமாகத் தான் கண்ணகி வடிக்கப்பட்டிருக்கிறாள். வீட்டித்குள்ளேயே முடங்கிக் கிடப்பவளாக ('வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்') அவள் சித்தரிக்கப்படுகிறாள். நீதி தவறியதற்காக நெடுஞ்செழியன் மீது காட்டிய அறச் சீற்றத்தில் நூற்றில் ஒரு பங்கை, ஊதாரியான, பெண் சபலம் கொண்டவனான, சந்தேக புத்தி கொண்டவனான (இந்திரவிழாவில் மாதவி மீது எழுந்த ஐயம் ஓர் எடுத்துக் காட்டு) கோவலன் மீது காட்டியிருந்தால் அவன் திருந்தியிருக்கக் கூடும். "

மாலன் இங்கு சொல்வது சிலம்பின் வரிகளுக்கு இடையில் தன்முனைப்பாகப் பலவற்றைச் சேர்த்துச் சொல்வதாக எனக்குப் படுகிறது. ஒவ்வொரு செய்தியாகப் பார்ப்போம்.

பல ஆண்டுகள் கோவலன் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. ஓராண்டிற்கும் குறைவாகத் தான் கண்ணகி வருந்தி அழுதாள் என்பதே உண்மை; உடனே "விலகி வாழ அவள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று மாலன் சொல்வது எனக்கு வியப்பாகிறது. இக்கால இந்தியச் சட்டம் கூட மணவிலக்குப் பெற விழையும் இருவரும் ஓராண்டு காலமாவது தனித்து இருக்க வேண்டும் என்று சொல்கிறது. கேட்டவுடனே அது மணவிலக்கைத் தந்துவிடவில்லை; ஏனெனில், "ஒருவேளை மனம் மாறி, ஆணும் பெண்ணும் ஒன்று சேரலாம், அதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்" என்று இக்கால நயன்மை அவை (court of justice) எதிர்பார்க்கிறது. உடனே "தாட் பூட் தஞ்சாவூர், தனியே போ, மண விலக்கு வாங்கு, பிரிந்து செல், கடிந்து கொள்" போன்ற கனமான சொற்கள் ஏன் வரவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. Why not we give the benefit of reconciliation to KaNNaki? Why are we so cruel to her?

கண்ணகி, மற்றும் கோவலனின் அகவை அப்பொழுது என்ன என்று எண்ணிப் பார்க்கலாமா?

திருமணம் செய்யும் போது கோவலனுக்கு அகவை 16, கண்ணகிக்கு 12; ஓராண்டு கழித்து வேறு வைக்கும் சடங்கு நடந்திருக்கிறது. அதற்குச் சில யாண்டுகள் கழித்து கோவலன் மாதவியைப் பார்க்கிறான். அதுவரை கோவலன் கண்ணகிக்கு காதலன்/ கொழுநன் ஆகவே அன்பு பாராட்டி இருக்கிறான். கோவலன் முதன் முதலில் பார்க்கும் போது மாதவிக்கு அகவை 12. மாதவிக்கும் கோவலனுக்கும் மிகுந்த அகவை வேறுபாடு இருக்க முடியாது. பொதுவாகத் தமிழகத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் 12 ஆண்டுகளுக்கு மேல் அகவை வேறுபாடு வைக்க மாட்டார். பெருந்திணை (அகவை மீறியவரிடம் ஏற்படும் காமம்) என்பது தமிழ் இலக்கியத்தில் பாராட்டிச் சொல்லப் படுவது இல்லை. (இன்றைக்கும் இரண்டாம் தாரமாய் அன்றி முதற் கல்யாணத்தில் அகவை வேறுபாடு பன்னிரண்டிற்கும் மேல் இருப்பது மிக மிக அரிது.) 12 என்று கொண்டால், கோவலனின் அகவை, மாதவியை முதலிற் சந்திக்கும் போது 24 என்று ஆகும். அது கொஞ்சம் அதிகம் என்றே ஓர்மை ஏற்படுகிறது. ஏனென்றால், மாதவியிடம் இருந்து பிரிந்த பின்னால், காடுகாண் காதையில் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் கூட்டிச் செல்லும் போது, "அவர் என் மக்கள்" என்ற பேச்சால் "அவ்வளவு பக்குவம் பெறாதவர்" என்றே நமக்கு உணர்த்துகிறார். அப்படியானால் கோவலனின் அகவை 21ஐச் சற்று தொட்டால் போலத் தான் இருக்க முடியும். ஒரு பேச்சுக்கு, 21 என்று எடுத்துக் கொண்டால், கானல் வரியின் போது கோவலனுக்கு அகவை 21, கண்ணகிக்கு 17, மாதவிக்கு 13.

ஆக, கோவலன் கண்ணகியோடு இல்லறம் நடத்தியது மொத்தம் 5 ஆண்டுகளே இருக்கக் கூடும். மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. அந்த ஓராண்டிலும் அவன் மாதவி வீட்டிலேயே இருந்தானா, அல்லது சின்ன வீட்டிற்கும் பெரிய வீட்டிற்குமாய் மாறி மாறிப் போய் வந்தானா, அதில் எழுந்த சிக்கல்கள் எவை, கண்ணகி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மாதவி வீட்டிற்குப் போவதை நிறுத்த வில்லையா? [உண்மையில் சிலம்பையும் மணிமேகலையையும் படித்தால், இரண்டு சக்களத்திகளான கண்ணகிக்கும் மாதவிக்கும் ஒருவருக்கு இன்னொருவர் மேல் மதிப்பு இருந்திருக்கிறது என்றே புலப்படுகிறது. மாதவி கண்ணகியை இற்கிழத்தி என்றே சொல்கிறாள். தவிர, 5 ஆண்டு வாழ்க்கையில் கண்ணகிக்குப் பிள்ளை பெறாது இருந்திருக்கிறது. மாதவிக்கோ, உறவு ஏற்பட்ட குறுகிய காலத்திலேயே மகவு பிறந்திருக்கிறது. ஒரே ஊரில் இருக்கும் கண்ணகிக்கு மாதவி வீட்டு நிகழ்வுகள் எல்லாம் தெரிந்து தானே இருக்கும்? அவள் மணிமேகலையை மகள் என்றே எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு. பின்னால் மாதவி மணிமேகலையை வளர்க்கும் போது, கண்ணகியை மணிமேகலையின் தாய் என்றே சொல்கிறாள். மணிமேகலைக் காப்பியத்தில் கூட, வஞ்சிமாநகரில் உள்ள கண்ணகி கோயிலுக்கு மணிமேகலை வரும் பொழுது, கண்ணகி மணிமேகலையை மகளே என்றுதான் சொல்கிறாள்.] மாசாத்துவானும், மாநாய்கணும் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கிடந்தார்களா? இரு பக்கத்துச் சுற்றத்தாரும் அலர் - பழிச்சொல் (இக்காலக் கிசுகிசு) பேச வில்லையா? எனப் பல கேள்விகள் எழுகின்றன. அவையெல்லாம் காப்பியத்தின் ஓட்டத்திற்குத் தேவையில்லை என்று இளங்கோவடிகள் கொடுக்கவில்லை. [இக்காலத் திரைப்பட நெறியாளர் இச் செய்திகளை ஒரு திரைப்படத்தில் தருவாரோ?]

மாலன், ஞானி போன்றவரிடம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. இக்கால மன நிலையை அக்காலத்திற்குப் பொருந்திச் சொல்வது எவ்வகையில் தகும்? கண்ணகி ஏன் விலகி வாழ எண்ணிப் பார்க்கவேண்டும்? அக்கால மணம் என்பது 2 குடும்பங்கள் சேர்வது. பிள்ளைப் பேறு இன்றி இருந்த மருமகளை மாசாத்துவானும் அவன் மனைவியும் அணைத்துத் தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பின்னால் மருமகளின் பெற்றியை அவர் பாராட்டித் தான் இருக்கிறார். மாநாய்கன் குடும்பத்தாரின் ஆதரவும் இருந்திருக்கும். மணவிலக்குச் செய்ய என்ன முகந்தம்?

அப்படி என்ன தான் நடந்துவிட்டது? கண்ணகியின் கணவன் அவளை விட்டுச் சற்று விலகிப் போனான். ஓர் இற்பரத்தை வீட்டில் ஓராண்டு இருந்துவிட்டான். அது தப்புத் தான். ஆனால் அவன் ஊர்மேய வில்லையே? இற்பரத்தை ஒரு பிள்ளை பெற, தன் மகளுக்குத் தன் குலதெய்வப் பெயரையும் (மணிமேகலை) இட்டுச் சீராட்டினானே? அவன் இரு தாரம் கொண்டிருந்தான். அவ்வளவு தான். இரு தாரம் செய்தவனெல்லாம் குமுகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவன் எனில் அப்புறம், நாவலந் தீவின் தொன்மங்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கடலில் தூக்கி எறியுங்களேன். முருகனையும், விண்ணவணையும் இனிமேல் தொழுகாதீர். பிறவா யாக்கைப் பெரியவனோடு உமையையும் கங்கையையும் தொடர்பு படுத்தாதீர், மாபாரதப் பாஞ்சாலியைப் பெருமைப் படுத்தாதீர். தயரதனைச் சொல்லிக் காட்டாதீர். ஏகபத்தினி விரதனான இராமன் கூட தன் மூன்று அன்னையரைச் சாடவில்லை. நான் சொல்லிக் கொண்டே போகலாம். (நண்பர்களே, நான் இரு தார மணத்தைச் சரி என்று சொல்லி அணி செய்ய வரவில்லை; அக்கால ஒழுங்கில் கோவலனும் ஒரு பகுதி என்று மட்டுமே சொல்கிறேன். கோவலன் இன்னொரு பெண்ணை நாடியது இன்றைக்கு வேண்டுமெனில் தப்பாகலாம். அன்றைக்கு, ஓர் ஆணாதிக்க குமுகாயத்தில், அரச குடும்பத்தினரும், பெரிய செல்வந்தரும் பல்வேறு காரணம் கருதி பலதார மணஞ் செய்த காலத்தில், அது மரபாய் இருந்தது தானே?) மாதவி என்பவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள்.

"மலை போன்ற குடும்பச் சொத்தை இன்னொரு பெண்ணிடம் தொலைத்து விட்டு வந்த போதும் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. சிலப்பதிகாரத்தின் முன் பகுதி முழுவதும், ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள்தான் கற்புக்கரசியா?" என்று மாலன் கேட்கிறார்.

மாதவியிடம் ஆட்பட்டதில் கோவலனுடைய அரத்தின வணிகம் குலைந்து தான் போயிற்று. அவன் மரக்கலத்தில் வரும் பொருள்களை வாங்கி விற்று, அல்லது உள்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதியாளருக்கு விற்று வணிகம் செய்தவன். ஆங்கிலத்தில் சொன்னால் அவன் ஒரு trader. இது கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகியிடம் திரும்பிவந்து சிலம்பைப் பெற்றுக் கொண்டு சொல்லும் உரையால் தெரிகிறது. கலம் வரும் நேரத்தில் துறையில் இருந்து வணிக வாய்ப்புக்களைப் பார்க்காது இருந்தால் ஆகும் நிலை தான் அவனுக்கு ஏற்பட்டது. செம்மீன் படம் பார்த்திருக்கிறீரோ? அதில் பரிக்குட்டிக்கு நடக்கும் நிலை என்ன? அவனுடைய வணிகம் எப்படிச் சீரழிகிறது? வாய்ப்புக்களைத் தவறவிட்டதால், உழைமுதல் (working capital) (கருத்தம்மாவின் தகப்பனுக்குக் கடன் கொடுத்துத் திரும்பவராமல்) குறைந்து போனதால் அவன் வணிகம் சீரழிகிறது. தேவைப்பட்டால் அவன் வாப்பாவிடம் பணம் கேட்டு மீண்டும் உழைமுதலைக் கூட்டிச் சரி பண்ணியிருக்க முடியும். இருந்தாலும் அவன் கூடப் பிறந்த பெருமிதம் தடுக்கிறது. அதே போலத்தான் கோவலனுக்கு; மாசாத்துவானோ, மாநாய்கனோ, கோவலன் கேட்டால் உதவாமலா போவார்? ஆனாலும் கோவலனின் பீடு (pride) தடுக்கிறது. அவன் மாதவியிடம் மயங்கி தன் வணிக வாழ்க்கையைக் குலைத்துக் கொண்டான்; செல்வம் போயிற்று. இன்றைக்கும் நகரத்தாரிடையே மகன்களுக்கும் தந்தையார்களுக்கும் இடையே பீடு, ஊடே வந்து கொண்டே இருக்கும். வாய் திறந்து உதவி கேட்காத வரை எந்த உறவினரும் உதவி செய்ய மாட்டார். இந்த அருத்தம் புரியாத மானம் என்பதைப் பெரிதாக நோக்குகிற மாந்தர் இன்றும் இருக்கிறார். நான் தோற்றுவிட்டேன் என்பதைத் தந்தையிடம், மாமனிடம் ஒப்புக் கொள்ளாத ஆட்கள் பலரும் இருக்கிறார்.

சரி, இப்படிச் செல்வத்தைத் தொலைத்தானே, கண்ணகி கேட்டிருக்க வேண்டாமா, என்றால் அது ஆணாதிக்க குமுகாயம் (இன்றைக்கும் 99 % ஆணாதிக்கப் போக்குகள் இல்லையா, என்ன?) கணவன் முதலைத் தொலைத்தான். ஆனால் இப்பொழுது தவறு அறிந்து வந்திருக்கிறான். அறிவுள்ள பெண், அந்த நேரத்தில் சண்டை போடுவாளா, அல்லது அவனை அணைத்துப் போவாளா?

தெரியாமல் நடந்துவிட்ட செயலுக்காக, குமுகம் ஏற்றுக் கொள்ளாததைத் தான் ஏற்றுக் கொண்டு, தண்ணீர் ஊற்றி "நீ ஒரு கங்கையடி; உன்னை ஒன்றும் இது செய்யாது" என்று ஒரு தாயின் கூற்றைச் சொல்லி அக்கினிப் பிரவேசம் காட்டிய செயகாந்தன் இம் முற்போக்குவாதிகளுக்குச் சரியாகத் தெரிவார்; திருந்தியவனை ஏற்று மேற்கொண்டு மேலே ஆக வேண்டியதைப் பார்த்த கண்ணகியோ, அதைப் பதிப்பித்த இளங்கோவடிகளோ, இவருக்கு முட்டாள்களாகத் தெரிகிறார். இது என்ன ஒரு கண்ணில் விளக்கெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?

ஆழ்ந்து அமர யோசித்தால் கண்ணகி செய்தது நடைமுறைத் தனம் என்பது புலப்படும். தப்பு என்று ஒப்புக் கொண்டபின்னர், அவனைத் தண்டித்து என்ன ஆகப் போகிறது?

"ஆண் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பவள் தான் கற்புக்கரசியா?" என்று கேட்கிறார் மாலன். அவள் ஒன்றும் சகித்துக் கொண்டு இருக்கவில்லை. அக்கால வழக்கம் தெரிந்து இருந்தாள், வேறு வைத்த பின்னால், இனி கோவலனும் இவளும் எடுக்கும் முடிவு தான். கணவன் சின்ன வீடு சென்று விட்டான். இவள் சண்டை போட்டாளா, இல்லையா என்பது சிலம்பின் வழியாக நமக்குத் தெரியவில்லை. வரிகளுக்கு நடுவில் நாம் பொருளைத் தேடிக் கொண்டு இருக்க வேண்டாம். செல்வம் போனது, வணிகம் குன்றியது எல்லாம் அவளுக்குத் தெரிந்து தான் இருந்திருக்க வேண்டும். அவள் அதை மறுத்து ஒரு நாடகக் காட்சியை உருவாக்கி இருந்தால் சிலம்பில் இன்னொரு காதை வந்திருக்கும். அவ்வளவு தான். அவள் ஏன் பொறுத்து இருந்தாள் என்பதை அறிய அடுத்த காதையான கனாத்திறம் உரைத்த காதைக்குப் போகவேண்டும்.

உண்மையில் வாய்ப்புக் கிடைத்தவுடன், கணவனை வேறுபக்கம் கண்ணகி நகர விடவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, June 13, 2006

கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 2

அடுத்தது அரங்கேற்று காதை. இன்னொரு தலைமகளான மாதவி, சிலப்பதிகாரம் எனும் நாடக அரங்கினுள் நுழைகிறாள். ஐந்து அகவையில் தண்டியம் (நட்டுவனார் கோல்/தண்டு வைத்திருக்கிறார் , அதனால் தண்டியம் ஆயிற்று.) பிடிப்பித்து, ஏழாண்டு நடம் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டில் மாதவி அரங்கேறுகிறாள். அவளுக்கு 12 அகவை முடிந்து 13 நடக்கும் வேளையில், அரசவையில் தான் கற்ற நாட்டியத்தை ஆடிக் காட்டுகிறாள்; அரசனது பச்சை மாலையையும் (இது மரகத மாலை; அக்காலத்தில் மரகதம் கிடைத்தது இலங்கையிலும், நம் கரூருக்கு அருகில் கொடுமணலிலும் தான்; ஆனாலும் பச்சை மாலை என்ற விளக்கத்தை அடியார்க்கு நல்லார் மட்டுமே குறிக்கிறார்; எதனால் அப்படிச் சொன்னார் என்பது விளங்கவில்லை; இளங்கோவடிகள் தெளிவாகக் குறிக்கவில்லை. இளங்கோ குறிப்பது பசும் பொன் மாலை. பசும் பொன் என்பது குளிச்சிறை என்னும் ஒருவகைப் பொன்), தலைக் கோல் பட்டமும் பெறுகிறாள். தலை வரிசையாக 1008 பொற் கழஞ்சும் பரிசாய்ப் பெறுகிறாள்.

தான் பெற்ற மாலையைக் கூனி கையில் கொடுத்து, "யாரொருவர் 1008 பொற்கழஞ்சு இந்த மாலைக்கு விலை கொடுக்கிறாரோ அவரைக் கூட்டி வா, அவரே எனக்கு மணமகன்" என்கிறாள். [குறித்து வைத்துக் கொள்ளுங்கள், மணமகன் என்றே சொல்கிறாள். கதையின் படி மாதவி, விலைப் பரத்தை அல்ல. அவள் ஓர் இற்பரத்தை; she was not a prostitute but a concubine. சங்க காலமும், சங்கம் மருவிய காலமும் ஆணாதிக்கக் குமுகாயமாய் இருந்தாலும், விலை மகளிரைத் தலை மகளாக தமிழில் எந்த இலக்கியமும் பேசியதில்லை. அதே பொழுது விலைமகளிர் குமுகத்தில் இருந்தார் என்பது சங்க இலக்கியங்களில் சில இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. விலைமகளிர், மற்றும் இற்பரத்தை ஆகியோரை வரைவின் மகளிர் என்று திருக்குறள் குறிக்கும். வரைவு (= திருமணம்) இல்லாத மகளிர் வரைவின் மகளிர்.]

இத்தொடர் முழுதும் நாம் காலங்கள் பற்றியே பார்க்கப் போகிறோம். முழுக் கதையையோ, சிலம்பின் விளக்கங்களோ பற்றி அல்ல. காலம் கணிப்பதற்குத் தேவையான விளக்கம் மட்டுமே இங்கு தருகிறேன்.

இத் தொடரில் நான் சார்ந்திருந்தவை 3 நூல்கள்.

1. சிலப்பதிகார மூலமும், அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் - உ.வே.சா. பதிப்பு
2. சிலப்பதிகாரம் - மூலமும், உரையும், வேங்கடசாமி நாட்டார் பதிப்பு
3. பஞ்ச மரபு - சேறை அறிவனார் இயற்றியது - முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு.

ஊடே என் இடைப் பரட்டும் (interpretation) உள்ளது.

மாதவியின் அரங்கேற்றம் நடந்தது எந்தக் காலம் என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஓரளவு சொல்லலாம். பொதுவாக தமிழ்நாட்டில் கார்காலத்திற்கு முன்னால் தான் கோயில் விழாக்களும் மற்றவைகளும் கொண்டாடப் படும். எனவே அரங்கேற்றம் நடந்தது சித்திரையிலிருந்து ஆடிக்குள் இருக்க வேண்டும். (இளவேனிற் காலமாய் இருக்க பெரும் வாய்ப்பு உண்டு என அடுத்துவரும் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் குறிப்பால் உணர்த்தப் படுகிறது.)

அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில், ஒருபக்கம் கோவலனும் மாதவியும் இன்புற்று இருப்பதும், இன்னொரு பக்கம் கண்ணகி வாடி இருப்பதும் சொல்லப் படும். அதில் வரும்

குடதிசை மருங்கில் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கில் காரகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலை பிறந்த சந்தனம் மறுக

என்ற வரிகள் பருவ மாறுதலால் ஏற்படும் பழக்க மாறுதலைச் சொல்கின்றன.

வெள் அயிர் என்பது வெண்மை நிறச் சாம்பலாய்க் காட்டும் மணப்பொருள். அயிர் என்பது நுண்மணல் என்ற பொருள் படும். (It is a term to express fineness.) [அயிர் என்ற சொல்லின் நீட்சி தான் நாம் ஆயிரம் என்று சொல்லும் எண். நூறுவது (=நொறுக்குவது, பொடித்தல்) நூறானது போல் அயிர்த்தது ஆயிரமாயிற்று.] இங்கே வெள் அயிர் என்பது பெரும்பாலும் சாம்பாணியாக இருக்க வாய்ப்பு உண்டு (சாம்புதல் = எரிதல்; எரிந்தபின் வெள்ளைச் சாம்பலாய்த் தோற்றம் காட்டும். சாம்பாணி = எரிதலில் இடும் பொருள். வழக்கம் போல ரகரம் உள்நுழைந்து சாம்பாணி>சாம்ப்ராணி ஆக வடமொழித் தோற்றம் காட்டும்.) சாம்பாணி தமிழருக்கு மேற்குத் திசையில் இன்றையப் பாரசீகம் மற்றும் வளைகுடா நாடுகள், அந்தக் கால மிசிர நாடு (= எகிப்து) ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருள். (அயிரை வார்கரைக் குடகடல் என்பது தோலாமொழித் தேவரின் சூளாமணியில் சொல்லப் படும் வரி.)

கார் அகில் என்பது கருமை நிறத்து அகிற் கட்டை. இது பெரும்பாலும் தமிழருக்குக் கிழக்கில் உள்ள தீவுகளில் (செம்மத்தத் தீவு அல்லது சமுத்திரத் தீவு = Sumatra, மலையகம் = மலேயா, யாவகத் தீவு = கருப்பர் தீவு = java, வாரணத் தீவு = போர்னியோ) இருந்து பெறப்பட்டது.

வான்கேழ் வட்டம் = வானைப் போன்ற நிறங் கொண்ட வட்டக் கல்; பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி ஆற்றுக் கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக் கம்மம். இது சாலக் கம்மம்> சாலக்கிராமம்> சாளக்கிராமம் எனத் திரியும். யால மரமே சால மரம் என்றும் ஆச்சா மரம் என்றும் இக் காலத்தில் சொல்லப் படுகிறது. 

இது போகச் சாலக்கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite. கருஞ்சாயம் தான் வான் கேழ் (sky colour; கேழ் = colour) என்று சிலம்பில் சொல்லப் படுகிறது. கருஞ்சாயக் கல் முனைகள் மழுங்கி கூழாங்கல் போல் ஆகியிருக்கும். 

நம்மூர்க் கூழாங்கல் ஒளி காட்டும். சாலக் கம்மமோ கருநிற ஒளி காட்டும். சாலக் கம்மத்தை விண்ணவன் அடையாளமாய் விண்ணெறியாளர் கொள்வர். சாலக் கம்மத்தைக் கொண்டு, சந்தன மரக் கிளையில் தேய்த்தால் சாந்து திரண்டு வரும்.

பின்பனிக் காலத்தில் எழும் குளிரைத் தாங்கும் வகையில் வீடுகளில் அகிற் கட்டை எரித்து அதில் அவ்வப்போது வெள்ளைச் சாம்பாணியை இட்டு மணப்புகை நுகர்வது தமிழர் பழக்கம். அதே போல, வேனிற் காலத்தில் வெறும் உடம்பில் சந்தனம் பூசிக் குளிரைத் தேடுவதும் தமிழர் வழக்கம். 

பின்பனிக் காலத்தில் புகை போட்டுக் குளிரோட்டுவது போய், வேனிற் காலத்தில் சந்தனம் பூசிக் கொள்வது வந்து சேர்ந்தாயிற்று என்று சொல்லிக் காலம் மாறியதை இளங்கோவடிகள் மேலே 4 வரிகளில் பதிவு செய்கிறார். 

அப்படி ஆனால், இளவேனிலில் தான் மாதவியின் அரங்கேற்றம் நடைபெற்றிருக்க வேண்டும். அதற்கு ஓரிரு மாதங்களில் முதுவேனிற் காலத்தில் அந்திமாலைச் சிறப்பு செய் காதையின் தொடக்கம் வருகிறது. 

ஒருபக்கம், மாதவியும், கோவலனும் முதுவேனிலில் சாந்து பூசித் திளைக்கிறார். இன்னொரு பக்கம் கண்ணகி தனித்து இருப்பதை விவரிக்கிறார். தொடர்ந்து துயரத்தை விவரிக்கும் போதே காலம் கடந்து செல்வதை 2 இடங்களில் சொல்கிறார். முதல் இடம் கீழ்க்கண்ட வரிகளில் வருகிறது.

ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து

வெய்யில் காலத்தில் வெக்கை தாங்காமல், உசு உசு என்று சூடான காற்றை மூச்சாய் விடுகிறோம் அல்லவா? அந்நேரத்தில், உலையின் கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப் போல நம் மூக்கு ஆகிறதாம். அம்மூக்கில் அழல் (=நெருப்பு) என உயிர்த்தவர் (= மூச்சு`விடுபவர்) ஒடுங்குகின்ற வேனிற் பள்ளியில் தங்காது, அது கழிந்து, அதன் பின்வரும் காரும் (புரட்டாசி, ஐப்பசி), கூதிர்ப் பள்ளியும் (கார்த்திகை, மார்கழி) முடிந்து காலம் நகர்கிறது. கண்ணகி இன்னும் பிரிவிலேயே நிற்கிறாள். கூதிர் (கூதிர் என்பது முற்றிலும் குளிரல்ல, குளிருக்குச் சற்று முன் இலைகள் கூடிக் கொள்ளும் காலம்.) முடிகின்ற மாதம் மார்கழி. அமைந்த மாதக் கணக்கின் (அமைந்தம்> அமாந்தம் = அமாவாசை) படி இது பள்ளியெழுச்சி நடக்கும் மாதம்; பூரணை (பூரணை> பௌரணை> பௌர்ணமி) மாதக் கணக்குப் படி தைநீராடல். மார்கழி / தை வந்தாயிற்று என்பதை அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் ஒரு நாலு வரியால் அறிந்து கொள்கிறோம்.

பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விரிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப

குவளை மலர்கள் விழிப்பதற்காகப் பாடுகின்ற வாய் (=பாண் வாய்) கொண்ட வண்டு நோதிறம் பாடுகிறதாம். (இங்கே குவளை மலர்கள் விண்ணவனைக் குறிக்கலாம்.); காலை முரசு முழங்கினவாம்; புள்ளிமயிர்ச் சேவல்கள் துள்ளிக் கூவினவாம்; சங்குகள் முறை முறையாய் எங்கும் பொங்கி ஆரவாரித்தன. எல்லாமே பெருமாள் கோயில் திருப்பள்ளி எழுச்சித் தாக்கம் காட்டும் செய்திகள்.

அது என்ன நோதிறம் (நொய்ந்த திறம் நோதிறம்)? [இதை நேர் திறம் என்று சொல்லும் பாட பேதமும் உண்டு.]

இதன் பொருள் அறிய தமிழிசையின் ஆழம் போகவேண்டும். அதை முழுதும் சொன்னால், சொல்ல வந்த கருத்தினின்று பெரிதும் விலகிப் போய்விடுவோம். சிலம்பு தமிழிசையின் கருவூலம். மேலோட்டமாய் இங்கு சொல்கிறேன்.

7 சுரங்கள் / நரம்புகள் கொண்ட பண்களுக்கு பெரும்பண்கள் என்று பெயர். (அவை செம்பாலை - அரிகாம்போதி, படுமலைப்பாலை - நட பைரவி, செவ்வழிப் பாலை - இருமத்திமத் தோடி, அரும்பாலை - சங்கரா பரணம், கோடிப்பாலை - கரகரப்பிரியா, விளரிப் பாலை - தோடி, மேற்செம்பாலை - கல்யாணி). 6 நரம்புப் பண்களுக்குப் பண்ணியல்கள் என்றும், 5 நரம்புப் பண்களுக்குத் திறப்பண்கள் என்றும் பெயர். பண்ணியல்கள் ஆறு வகை, திறப்பண்கள் பதினைந்து வகை.

பண்ணியல்களும், திறப்பண்களும் பெரும்பண்களில் இருந்தே பெறப் படுகின்றன. செம்பாலைக்கு முல்லையாழ் என்றும் பெயருண்டு. முல்லையாழில் இருந்து பெறப்பட்ட திறப்பண் முல்லைத் தீம்பாணி - இக்கால மோகனம் (= தேவார காலத்தில் சாதாரிப் பண்). இதை முல்லையந் தீங்குழல் என்றும் இளங்கோ சொல்வார். இதேபோல இன்னொரு திறப்பண் கொன்றையந் தீங்குழல் (இக்கால சுத்த சாவேரி). மூன்றாம் திறப்பண் ஆம்பலந் தீங்குழல் (உதயரவிச் சந்திரிகா). இது போன்ற திறப்பண்களில் இன்னொன்று வைகறைப் பாணி, இதற்குப் புறநீர்மை என்றும், நோதிறம் என்றும் இன்னும் இரு பெயர்கள் உண்டு. இது பள்ளியெழுச்சி பாடுவதற்காகவே உள்ளது. இது கோடிப்பாலையில் (=கரகரப்பிரியா) இருந்து கிடைக்கும் திறப்பண். 1950-70 களில் வானொலி நிலையத்தில் (திருச்சி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நினைவுக்கு வருகிறதா?) இறைவன் இன்னருள் கூட்டக் காலை நேரத் தொடக்கப் பண்ணாகப் பயன்படுத்துவார்.

ஆக அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முதுவேனிற் காலத்து அந்தியில் தொடங்கி, கூதிர் காலம் முடிந்து, மார்கழி கடைசியில் அல்லது தை தொடக்கத்தில் காலை வேளையில் பெருமாள் கோயில் பள்ளி எழுச்சியில் முடிகிறது. நடந்து முடிந்த மாதங்கள் ஆடியில் தொடங்கி மார்கழி/தை வரை ஆகும்.

இனி அடுத்த காதைகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, June 12, 2006

கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 1

"கண்ணகி ஒரு முட்டாள் பெண், கற்பென்ன கற்பு, கோவலனைத் தூக்கியல்லவா எறிந்திருக்க வேண்டும், தனக்கு நடந்த கொடுமைக்காக இவள் ஊரையே எரிக்கலாமா, இவளா தமிழ்க் குமுகத்திற்கு எடுத்துக் காட்டாய் இருப்பவள்" என்றெல்லாம் இன்றைக்கு ஒரு சிலர் பேச முற்படுகிறார். கண்ணகியைச் சாடுவது ஒரு முற்போக்குத் தனம் என்றும் இவர்கள் நம்புகிறார். இந்த எண்ணத்தின் வழியே ஒருமுறை, திரு ஞானி ஆனந்த விகடனில் எழுதியிருந்தார்.

சிறு அகவையில் கரடிப் பொம்மை வைத்து விளையாடிப் பழகிய ஒரு பெண், அப் பழக்கத்தில் இருந்து விடுபடாமல், பேரகவையிலும் கரடிப் பொம்மையை அருகில் வைத்துத் தூங்குவது போல, கலைஞர் பழைய பழக்கத்தை விடாமல், இன்னும் கண்ணகியின் புகழ் பாடி சிலை நிறுவிக் கொண்டு இருக்கிறார் என்று அவர் கட்டுரை சொல்லியது; அதை மறுத்துக் கலைஞரும் கண்ணகி சிலை திறப்பில் நெகிழ்ந்து உணர்வு பூருவமாய் ஒரு சில சொன்னார். நண்பர் நாக இளங்கோவன் ஒரு திறந்த மடலொன்றை ஞானிக்கு எழுதி, அதைத் திண்ணை வலையிதழிலும் நயனம் என்ற தன் வலைப்பதிவிலும் இட்டிருந்தார். இளங்கோவனின் பதிவு என்னைச் சில விளக்கங்கள் எழுதத் தூண்டியது.

"முற்போக்கு வாதிகளே! கொஞ்சம் கதையை ஒழுங்காகப் படித்துப் புரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்" என்று மட்டுமே இங்கு சொல்ல முற்படுகிறேன்.
------------------------------------------------------
சிலம்பின் கதை இரு வீட்டாரும் திருமணம் பேசி முடித்துக் கொண்டு, ஊருக்குள் கல்யாணஞ் சொல்வதில், தொடங்குகிறது. திருமணம் நடந்த போது கதை நாயகன் கோவலனுக்கு பதினாறு அகவை. கண்ணகிக்கோ பன்னிரண்டு. (திருமணஞ் செய்வது இவ்வளவு இளமையிலா என்று இந்தக் கால விழுமங்களோடு நாம் பார்க்கக் கூடாது. அந்தக் காலத்தில் நம்மூர்ப் பழங்குடிகளின் இடையே இதுபோன்ற இளமைத் திருமணங்கள் நடந்தன. ஆனாலும் பெண் பூப்படைந்த பின்னால் தான் திருமணம் நடந்தது. பழந்தமிழ்க் குமுகாயத்தில் பெண் பூப்படைதல் என்பது ஒரு பெருஞ் சடங்கு. பூப்படைந்த பின்னால் தான் திருமணம் செய்யவேண்டும் என்று அவர் உணர்ந்து தான் இருந்தார். பிற்காலத்தில் வடவர் பழக்கம் நமக்குள் பெருகி, அதனால் பரவிய குழந்தைத் திருமணத்தை முன்னாள் பழந்தமிழர் ஏற்றதாகச் சங்க இலக்கியங்கள் சொல்லவில்லை.)

மங்கல வாழ்த்துப் பாடலின் முடிவில், கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் முடிந்து, ஓராண்டு கழிந்ததை

"................................................................எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே"

என்ற வரிகளின் மூலம் இளங்கோவடிகள் உணர்த்துகிறார். "எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன்" என்பது "எங்கும் சுட்டெரிக்கும் சினங் கொண்ட சூரியனை"க் குறிக்கிறது. அவன் இன்னொரு வட்டம் உருட்டினான் என்று சொல்வதால், இன்னொரு ஆண்டு கழிந்தது என்று புரிந்து கொள்கிறோம். இப் புரிதல் சரிதான் என்பதை அடுத்து வரும் மனையறம் படுத்த காதையால் தெரிந்து கொள்கிறோம். (கண்ணகி கோவலன் திருமணம் முதுவேனிற் காலம் முடிந்து பெரும்பாலும் ஆவணி தொடக்கத்தில் நடந்திருக்க வாய்ப்புண்டு. என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. இன்னும் படிக்க வேண்டும். செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் என்பதும் முதுவேனில் முடிந்து மேலும் ஓராண்டு கழிந்ததாய்ப் புரிந்து கொள்ள இடமுண்டு.)

இளங்கோவடிகள் எனும் கதையாசிரியர் நாடகக் காப்பியம் எழுதியதால், கிட்டத்தட்ட இக்காலத் திரைப்படம் போல, அங்கும் இங்குமாய் கதையை வெட்டிக் காட்சிகளை மட்டுமே தருகிறார். அப்படித் தரும் காட்சிகளுக்கு நடுவே, ஆசிரியன் கூற்றாய், உரைபடு கட்டுரை என்ற உத்தியைக் கையாளுகிறார். நாடகக் காட்சிகளுக்கு நடுவே, பின்னால் இருந்து, வெறும் ஒலிப்பாக, ஒரு சிலவற்றைச் சொல்வார்களே, அதைப்போல இந்த உரைபெறு கட்டுரைகள் அமைகின்றன.

மனையறம் படுத்த காதையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நகரத்தார் வழக்கங்கள் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தார் வழக்கில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது (ஓரோவழி) மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார். தனிக் குடித்தனம் என்றவுடன், அது தனி இருப்பிடம் என எண்ண வேண்டாம். ஒரே வளவிற்குள் (வளவு என்பது கூட்டுக் குடும்பத்தின் முற்றம்; முற்றத்தைச் சுற்றிலும் ஒரு பத்தியும், அதையொட்டித் தனித் தனி அறைகளும் உண்டு. அந்த அறைகளே வீடென்று சொல்லப் படும்.) மகனுக்கென தனி வீடு (அறை) கொடுத்து, அவருக்கெனத் தனியே ஓர் அடுப்படியும் கட்டி, தனியொரு குடும்பமாய் மகனையும், மருமகளையும் வைத்து, அவரே தமக்குச்  சோறு வடித்து உண்ணுமாப் போல வைப்பார். (இதுவரையில் தகப்பனுக்கு மட்டுமே வீடு இருந்தது, இனிமேல், தனிக் குடித்தனம் வைத்த நாளாய், தகப்பன் வீடு பெரிய வீடென்றும், மகன் வீடு தனியாயும் குறிக்கப் பெறும்.) மகனைப் பெற்றவரும், மருமகளைப் பெற்றவரும் இப் புதிய நடைமுறைக்கு வேண்டியவை சேர்த்து, ஆவன செய்வார். இது ஒரு தனிச் சடங்காகவே நடைபெறும். இப்படி மகனைப் பெரிய வீட்டிலிருந்து வேறு வைத்தலைத் தான் மனையறம் படுத்தல் என்று சொல்வார். (இளங்கோவடிகளே வேறு வைத்தல் என்ற சொல்லாட்சியை ஆள்கிறார்.)

நகரத்தார் நடுவே உறவினை விளிக்கும் முறையில் சில வேறுபாடுகள் உண்டு. தந்தை வழிச் சுற்றத்தார் (குறிப்பாக அண்ணன், தம்பிகள், அப்பாவின் கூடப் பிறந்தார், அவர் மக்கள், தாத்தாவின் வழி வரும் ஆண் சுற்றத்தார் ஆகியோர்) பங்காளிகள் எனப் படுவர். பங்காளிகள் என்பது ஏனெனில் அவர் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்கக் கூடியவர் என்பதாலேயாகும். தாய் வழி உறவினர் ஆணாகிலும், பெண்ணாகிலும் தாய பிள்ளைகள் எனப் படுவார். இது போக, தந்தைவழி அமையும் பெண்ணுறவினர், இன்னும் மற்றோர், பொதுவான சொல்லான சொந்தக்காரர் என்பதால், அழைக்கப் படுவார். [சொந்தல் என்பது சொத்து எனும் பெயர்ச்சொல்லுக்கு அடிப்படையாகும் வினைச் சொல்; ஆனால் இற்றைப் புழக்கத்தில் இல்லாது போன சொல்.]

வேறு வைத்த பிறகு, மருமகளுக்குச் சில சிறப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இனிமேல், தன் தாய்வீட்டுச் சொந்தக்காரரை தானே, தன் மாமியார் இடையூறு இன்றி, விருந்திற்கு அழைத்து தனித்து வடித்துப் போட்டு தானும் ஒரு தலைவி என்று காட்டிக்கொள்ளும் சிறப்பு. பங்காளி வீட்டுப் பெண்டுகள் இவளையும் இவள் மாமியாரைப் போலவே தனி ஆளாக மதித்து எந்த விழவிற்கும் முறை வைத்துக் கூப்பிட வேண்டியதற்கான உரிமை. கிடைத்துவிடும். அறக் காரியம் ஏதேனும் நடைபெற்றால், இவளும் இவள் கொழுநனும் தனித்துப் பரிசாரம் செய்யலாம். மொத்தத்தில் இச் சடங்கிற்கு அப்புறம் மருமகளுக்குக் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. மகனையும் தனிப் புள்ளி என்றே கரைக் கூட்டத்தில் சொல்வார். (He is counted as a full-fledged member.) இந்த ஆளுமை கிடைக்கும் சடங்கை பொதுவாக, மருமகப் பெண்கள் பெரிதாகக் கருதுவார். (This is nothing but a tribal custom; from this day onwards, the daughter-in-law is considered equal in all respects to her mother - in - law in the community activities.) இச் சடங்கின் முகன்மை கருதியே சிலம்பில் ஒரு காதை மனையறம் படுத்ததாய்த் தனித்து வருகிறது.

மனையறம் படுத்த காதையில் எழுநிலை மாடத்தின் (எழுநிலை மாடம் என்றால் raised balcony என்று பொருள். ஏழு நிலை மாடம் என்ற பொருள் இல்லை. கோயில், அரண்மனை என்று வந்தால் ஒருவேளை அப்படி நினைத்துப் பார்க்கலாம்) அருகில் இருந்தவாறு கோவலன் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே" என்கிறானே, அது வேறுவைத்த சடங்கு நடைபெறுவதற்கு முதல்நாள் இரவு நடந்த உரை. பலரும் (தமிழறிஞரும் கூட) ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார். அது தவறு. அந்த ஓராண்டில் அவருக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான் இப்படிப் பலவும் பாராட்டுகிறான். அதற்கு அப்புறம் பல ஆண்டுகள் நடந்தவற்றை இளங்கோவடிகள் ஏழே வரிகளில் அடக்கிவிடுகிறார்.

"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்"

ஒலிதல் என்றால் தழைதல் = நீண்டு கிடத்தல் என்று பொருள்; தழையத் தழைய கிடக்கும் கூந்தல் என்று சொல்கிறோம் இல்லையா? வார் ஒலிக் கூந்தல் என்றால் வாரிச் சேர்க்கக் கூடிய, தழைத்துக் கிடக்கும் கூந்தல் என்று பொருள்; வாரொலிக் கூந்தல் என்பது கண்ணகிக்கான புகழ்ச்சி.

பேரியற் கிழத்தி = பெரிய வீட்டுப் பெண்;

மறப்பருங் கேண்மை = பெண்வீட்டுச் சுற்றத்தார். மாநாய்கன் வீட்டுப் பெண் திருமணமாகி மாசாத்துவான் வீட்டிற்கு வந்தாலும், பெண் வீட்டுக் கேளிரை மறக்கவொண்ணுமோ, எனவே பெண்வீட்டுச் சுற்றத்தாரை மறப்பருங் கேண்மை என்றார்.

அறப் பரிசாரம் = அறக் காரியங்களில் ஈடுபடுவது, துறவிகளை வருவித்துப் பூசிப்பது போன்றவை.

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை = மகனும் மருமகளும் தங்களுக்கு வேண்டப்பட்டவருக்கு விருந்து கொடுக்கலாம். மகனின் பெற்றோருக்கு அவர் வேண்டப் பட்டவரா, இல்லையா என்பது பொருட்டில்லை;

உரிமைச் சுற்றம் = சொத்தில் உரிமை கொண்ட பங்காளிகள். இந்த உரிமைச் சுற்றமொடு ஒரு தனிப் புள்ளியாகப் புணர்ந்து கொள்ள (= தழுவிக் கொள்ள, உறவாடிக் கொள்ள)

இப்படியாக இற்பெருங் கிழமையில் (= தனி வீடு தரும் பெரிய உரிமையில்), கண்ணகிக்கு ஏற்பட்ட காண் தகு சிறப்பில், யாண்டு சில கழிந்தன
ஆக கோவலனுடன் கண்ணகி சில ஆண்டுகள் காண் தகு சிறப்பில் வாழ்ந்திருக்கிறாள். சரி, எத்தனை யாண்டுகள் பிரிந்து இருந்தாள் என்பதை அடுத்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, June 04, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 5

தாளில் இருந்து கணிக்கு:

மின்னியல் உலகு என்றவுடன் என்னமோ, ஏதோ, என்று தெரியாதோர் மயங்குற வேண்டாம். கற்சுவர், மரப் பட்டை, துணி, தோல், ஓலை, தாள் என்று ஒவ்வொரு எழுது பொருளையும் தாண்டி, இன்று கணி வழி ஒரு புதிய எழுது பொருளுக்கு வந்திருக்கிறோம், அவ்வளவு தான்.

கணி என்பது "இருக்கிறது (ஒன்று), இல்லை (சுழி)" என்னும் இருமைத் தட (binary state) நிலையை வைத்து இயங்கும் ஒரு பொறி. தவிர காந்தப் புலத்தின் மூலம் இருமைத் தடங்களைச் சேகரித்துக் கிடங்கில் (storage) வைக்க முடியும் என்பதால், இருமை எண்களையும் சேகரிக்கக் கூடிய வாய்ப்பு, கணியில் இயங்கும் கடுந் துரவிகள் (hard-drives) மூலமாகவும் வளைப்பித் துரவிகள் (floppy drives) மூலமாகவும், இன்னும் சில முறைகளாலும் நமக்குக் கிடைக்கிறது. இப்படி ஒரு கணியில், பல்வேறு இருமைத் தடங்களை நம்மால் சேமிக்கவும் முடிகிறது. பல்வேறு இருமைத் தடங்களை அருகருகே வைத்து பெரிய பிணைப்பு(combination)களையும் மடக்கு(permutation)களையும் ஏற்படுத்திப் பலக்கிய(complex) முறையில் எண்களையும், கட்டியங்களையும் (conditions) புனைய வைத்து அலசவும் முடிகிறது.

சரியாகச் சொன்னால், அத்தனை அலசல்களையும் கணிப்பாகவே (computation) கொண்டுவரும் ஒரு பொறிதான் கணி என்று அழைக்கப் படுகிறது. கணிக்குள் இரும (binary) இலக்கங்களும், எண்ம (octal) இலக்கங்களும், பதினறும (hexadecimal) இலக்கங்களும் பயில்கின்றன. ஆனால் நாம் பெரிதும் ஏற்கனவே பழகியிருந்த பதின்ம (decimal) இலக்கங்கள் என்பவை கணிக்கு ஏந்தாக இருப்பதில்லை. அதே பொழுது மாந்தர்கள் பதின்ம இலக்கங்களுக்கே பெரிதும் பழகியதால், அவருக்குப் புரிவதற்காக வெறும் வெளிப்பாட்டுக் கருவிகளில் (output devices) மட்டும் பதின்ம இலக்கங்கள் ஆளப் படுகின்றன.

இந்தக் கணியை உள்ளீட்டுக் கருவியும் (input devices), நடுவச் செலுத்தியும் (central processor), வெளியீட்டுக் கருவியுமாக (output devices) நாம் புரிந்து கொள்ள வேண்டும். எளிதாகச் சொன்னால் நாம் பொத்தான்களை அழுத்தும் குயவுப் பலகை (key board) என்பது ஓர் உள்ளீட்டுக் கருவி; நாம் காணும் கணித்திரை என்பது ஒரு வெளியீட்டுக் கருவி. நடுவச் செலுத்தி என்பது மேலே சொன்ன இருமத் தடங்களை (binary states) வைத்து அலசி நமக்கும் விடை சொல்லும் ஒரு கருவி.

இன்னொரு வகையில் பார்த்தால், கணித்திரை என்பது கிட்டத்தட்ட ஒரு மெய்நிகர் (virtual) தாள் தான். இந்தத் தாளில் தான் நாம் இப்பொழுதெல்லாம் அச்சடித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மெய்நிகர் தாளிற்குப் பகரியாக, மெய்யான தாளிலேயே கூட அச்சிடவும் முடியும். தவிரக் கணியில் இருந்து எங்கோ ஒரு காந்தப் புலச் சேமிப்பால் நாம் அச்சிட வேண்டியதைச் சேமிக்கவும் முடியும். அந்தச் சேமிப்பை, மீண்டும் மீண்டும் வேண்டும் போது, கணித்திரைக்குக் கொண்டு வரவும் முடியும். இந்தச் சேமிப்பு மற்றும் கணித்திரை சேர்ந்த தொகுதியைத் தான் ஓமின்னியல் உலகுஔ என்று சுற்றி வளைத்துச் சொல்லுகிறோம். தாளுக்கு மாறாக இந்தச் சேமிப்பு ஏந்துகள், பல்வேறு வகை வட்டுக்கள், தொடர்புகள், இணையம் என ஏராளமாய் மாறி இருக்கின்றன. வட்டுக்கள், தொடர்புகள், இணையம் எனக் கணுத்தப் பட்ட (கணுத்தல் = to connect) ஒரு கணி மூலம் நாம் எழுத முடிகிறது; படிக்க முடிகிறது; இவை எல்லாமே மின்னியல் வாயிலாய் முடிகிறது. மொத்தத்தில் கணி என்பது இன்றைக்கு ஓர் எழுது பொருளாகவும் ஆகிவிட்டது.

எண்களின் அடிமானக் குறியேற்றம் (encoding of number basis):

கணி என்பது எண்களைக் கையாளுவது. எண்களோ முடிவில்லாத வரம்பிலிகள் (infinities). அவை எல்லாவற்றையும் எப்படிக் கையாளுவது?

மாந்தன் முதலில் அறிந்தது தொகு எண்களே (integer numbers); பின்னால், அவற்றை நீட்டி அறுக்கை எண்கள் (பகு எண்கள் = rational numbers), அறுக்கொணா எண்கள் (பகா எண்கள் = irrational numbers), நொகை எண்கள் (negative numbers), இயல் எண்கள் (natural numbers), பலக்கிய எண்கள் (complex numbers) என ஒவ்வொரு மட்டத்திலும் வளர்ச்சியுற்று, இன்று எண்கோடு (number line) என்பது நீண்டுவிட்டது. முழு எண்கோட்டையும் கணி எப்படிக் கையாளுகிறது என்று கேட்டால், உட்பக்கமாடுதல் (approximation) என்னும் முறையால் என்றே விடை சொல்ல முடியும். [proxi = பக்கம் proximate = பக்கமாடுதல், approximate = உட்பக்கமாடுதல்; ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு இன்னும் அருகில், உட்பக்கம், உட்பக்கம் என அருகிலும் அருகாய்ப் போய் குறித்துக் காட்டுவது approximation)]

தொகு எண்களை, பெரும எண்களை (prime numbers;) வைத்துக் கூட்டிக் கூட்டிப் பெற முடியும். அறுக்கை எண்களைத் தொகு எண்களின் வகுத்தல் முறையால் பெற்றுவிட முடியும். உட்பக்கமாடலை ஏற்றுக் கொண்டுவிட்டால், பிறகு நம்முடைய தாளுகையைப் (tolerance; தாளுதல் = þயலுதல், பொறுத்தல்) பொறுத்து, ஒரு அறுக்கை எண் வாய்பாட்டை உருவாக்கி அதன் அண்மதிப்பைச் (near value) சொல்லி விடலாம். அதே போல பை எýனும் இயலெண்ணைச் சொல்ல உட்பக்கமாடல் எýனும் கருத்துப் பயன்படும். பலக்கிய எண்களையும் இதே போல ஒன்றித்த செலுத்தத்தால் (unique process) காட்டிவிட முடியும். ஆக வெறும் பெரும எண்களை வைத்துச் செயற்படத் தெரிந்தால் கணியில் எல்லாமே செய்யமுடியும்..

இந்தப் பெரும எண்களையும், மற்றவற்றையும் இரும அடிமானத்தால் (binary basis), எண்ம அடிமானத்தால், பதினறும அடிமானத்தால் குறியேற்றிக் காட்ட முடியும். இங்கே குறியேற்றம் என்பதும் பரத்திக் காட்டுதலும் (representation) ஒன்று தான். ஒரு குறியேற்றம் உயர்த்தி, இன்னொரு குறியேற்றம் தாழ்த்தி என்று யாரும் சொல்வதில்லை. எந்தச் செயலுக்கு எது உறுதுணையாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்துகிறோம்.

வேதியல் எளிமங்களின் அடிமானக் குறியேற்றம் (encoding of the basis of chemical elements):

இனி வேதியலுக்கு வருவோம். வேதியல் என்பது வேதித்தல் (= வேறுபடுத்தல்) என்ற சொல்லிலிருந்து எழுந்தது. இந்தச் சொல் படிப்படியாகத் தாழ்ந்த மாழையை (metal) உயர்ந்த மாழையாய் மாற்றுதல், புடமிடுதல், ஆவி, புகை முதலியவற்றால் வெம்மை செய்தல் இப்படிப் பல பொருள்களைக் குறிக்கத் தொடங்கியது. இந்தக் காலத்தில் இதன் பொருளை இன்னும் நீட்டி, முழு chemical action க்கும் இணையாகச் சொல்லுகிறோம். ஒரு மொழியின் சொல் நீட்சி இப்படித்தான் நிகழும். வேதியலில் 103 எளிமங்களால் (elements), [இன்று அதற்குமேல் உரேனியத்திற்கும் துரந்ததாய் (trans-Uranic; துரத்தல் = தள்ளிப் போதல்; trans என்னும் முன்னொட்டிற்கு இணையாகத் துரந்த என்ற சொல்லை Óன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ பயனாக்கலாம்.) எளிமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.] பல்வேறு கூட்டுப் பிணைப்புகளும் (compounds) உருவாக்குகிறோம். எந்தவொரு வேதிப் பிணைப்பையும் வேதியல் வாய்பாட்டில் காண்பிக்க 103 எளிமங்களை அடிமானங்களாய்க் கொள்ளுகிறோம்.

வேதியலுக்கு இன்னும் கீழே போய், அணுப்பூதியல் (atomic physics) கண்ணோடு பார்த்தால், அணுவின் அடிப்படையாய், முன்னி(proton), மின்னி(electron), நொதுவி(neutron) எனப் பலவும், இன்னும் ஆழம் போய் கீழணுப் பொருள்களாய் (sub-atomic particles) குவார்க்காலும் (quarks) கண்ட பிறகு, 103 அடிமான அணுக்கள் வேண்டாம்,. வெறுமே கீழணுப் பொருள்களான முன்னி, மின்னி, நொதுவி ஆகியவற்றின் சேர்ப்பாக ஓவ்வொரு அணுவையும் காட்டத் தோன்றும்.

காட்டாக, நீரகமா (hydrogen),
அது ஒரு முன்னி + ஒரு மின்னி, கூடவே ஒன்றோ, இரண்டோ நொதுவி கொண்ட எளிமம்,

இதே போல எல்லியமா (helium),
அது இரண்டு முன்னி + இரண்டு மின்னி, வேணும் என்கின்ற அளவிற்கு நொதுவி

என்று சேர்த்துச் சொல்லலாம். இது போல ஒவ்வொரு எளிமத்தையும் முன்னி, மின்னி, நொதுவி ஆகியவற்றின் கூட்டாகச் சொல்லலாம் தான்.

இப்படிச் செய்தால், முழு வேதியலுக்கும் ãன்று அடிமானங்களே போதும் என்று ஆகிவிடும். ஆனால் அது அன்றாட வேதியலுக்கு வாகாய் வருமோ? அன்றாட வேதியலை மிகவும் பலக்கியதாய் அது காட்டி விடாதா? எந்தவொரு வேதியலாராவது இதை ஒப்புவாரா? பூதிவேதியல்காரருக்கு (physical chemists) வேண்டுமானால் அது சரியாக இருக்கும். மற்றவருக்கு அது மேற்கொண்டு சிந்திக்க விடாத அடித்தளக் கட்டு.

மொழியியல் அடிமானங்கள்:

அது போலத்தான் மொழியியலில். உயிர்மெய் எழுத்துக்கள் என்பவை 12 உயிர்கள், 18 மெய்களின் சேர்க்கையால் உருவானவை என்ற போதிலும், உயிர்மெய் எழுத்துக்களைத் தவிர்த்து வெறும் உயிரையும், மெய்யையும் வைத்து ஓரொரு முறையும் பிரித்துச் சொல்வேம் என்பது பொதுவானவருக்கு உகந்ததாய்ப் படாது. ஆனால் இலக்கணிகளுக்கு அது உகந்ததாய் இருக்கும். வெறும் வல்வழக்காய், உயிர்மெய் என்பதற்கு குறியேற்றமே தேவையில்லை என்று சொல்லுவது இலக்கணிகளின் பார்வையைச் சார்ந்தது என்றே நான் சொல்லுவேன்.

தமிழ்மொழியின் அன்றாடப் பயன்பாட்டிற்கு அடிமானமாய்த் தமிழ் நெடுங்கணக்கையும், தமிழ்மொழியின் இலக்கணப் பயன்பாட்டிற்கு அடிமானமாய் தமிழ்க் குறுங்கணக்கையும் கொள்ளுவதே சரியானது என்பது என்னுடைய புரிதல்.

அன்புடன்,
இராம.கி.