Wednesday, July 29, 2020

மாறியும் வேறியும் - 1

”மாறு-தல் போல் வேறு-தல் என்ற வினைச்சொல் கிடையாது. வேறு என்பது பெயர்ச்சொல் மட்டுமே” என்றுசில தமிழறிஞரும். தமிழார்வலரும் சொல்லப் புகுந்து நான் வேறி (variable) என்ற சொல்லைக் கையாண்டதைப் பேரா. செல்வாவின் முகநூல் பக்கத்தில் கிடுக்கியிருந்தார். இங்கே எழுதுவது அதற்கான மறுமொழி. என் வலைப்பதிவிலும் முகநூல் பக்கத்திலும் சேமிக்க வேண்டித் தனியே இடுகிறேன். பந்தாளியைப் பந்தாடுவது சிலர்க்கு வழக்கமாய்ப் போனது. வாதங்கள் பலநேரம் குழாயடிச் சண்டையாய் ஆகிவிடுகின்றன. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என் சொல்லாக்கங்களை விரும்புவோர் பயிலுங்கள். விரும்பாதோர் உங்கள் விழைவின்படி போங்கள். என்ஞாயத்தைக் கேட்போருக்குச் சொல்லத்தான் செய்கிறேன். என்மேல் பொரிம்பு (brand) குத்த  நினைப்போருக்கு, “வேறிடம் பாருங்கள்” என்றுசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். I don't have to be apologetic. Period.

இனிச் செய்திக்குள் வருவோம். மாறு என்பது வளைவுப் பொருளில் விழைந்த சொல். மாறுதலின் சொற்பிறப்பையும் அது வளர்ந்த விதம் பற்றியும் இங்கு நான் சொல்லவில்லை. வேறு என்ற சொல் துளைத்தல், பிளத்தல், பிரித்தல் பொருளில் பிறந்தசொல். நான் ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கொள்கையை நம்புகிறவன். தவிர, தமிழில் பெயர்ச்சொற்கள் எண்ணிக்கையில் ஏராளம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் அடியில் ஒரு வினைச்சொல்லாவது இருக்கவேண்டும் என்ற கொள்கையும் உடையவன். இடைச்சொற்கள் என்று நாம் என்னுவன கூட ஒரு கால் வினையிலெழுந்து இன்று உருத்தெரியாது மாறியிருக்கலாம்.

அவ்வகையில் வேறு என்பதைப் பார்க்கலாம். முதலில் (வேறு, வேற்று) நிலை, (வேறு, வேற்றுப்) புலம், (வேறு, வேற்று) முகம், (வேறு, வேற்று) இடம் என்ற 4 சொல்லிணைகளைப் பாருங்கள். வேறு என்பது வெறும் பெயர்ச்சொல் (அதற்கு எந்த வினைப்பகுதியும் அடிப்படையில்லை) எனில், அச்சொல் எப்படிப் பிறந்தது? தானாய்ப் பிறக்குமா? எந்தப் பெயரிணைகளில் இதுபோல் றகரம் இரட்டித்து ஒரே பொருள் தந்திருக்கிறது? இதுபோல் இரட்டித்து கிட்டத்தட்ட ஒரே பொருள் வரும் வினைச்சொற்களைப் பாருங்கள். காயம் (ஆறு-தல், ஆற்று-தல்), ஏதோவொன்று (ஏறு-தல், ஏற்று-தல்), வாயிலிருந்து (காறு-தல், காற்று-தல்), சாறு-தல், சாற்று-தல் = பெருகு-தல், விரி-த்தல்,  நீர் (தூறு-தல், தூற்று-தல்), உடம்பு (தேறு-தல், தேற்று-தல்), சுண்ணம் (நீறு-தல், நீற்று-தல்), பாறு-தல், பாற்று=தல் = அழி-தல், அழி-த்தல், துணி (பீறு-தல், பீற்று-தல்), நிலை (மாறு-தல், மாற்று-தல்), பொருளை (வீறு-தல், வீற்று-தல்) = பிரித்தல். 

இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொல்லும் இருக்கிறதா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் பதிவாகாமல் இருக்கலாமே?   
  
இன்னொரு சொல்லும் பார்ப்போம். தோற்றுதல் = காட்சியளித்தல். தோறும் என்பது இடைச்சொல். பல மொழியாளர் ”என்றும்” என்ற இடைச்சொல்லின் பின்னால் என்னுதல் என்ற வினைச்சொல் இருக்கிறது என்று ஊகித்தறித்தது போல், தோறும் என்ற இடைச்சொல்லின் பின் தோறுதல்= காணல் என்ற வினை இருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.  அப்போது (*தோறுதல், தோற்றுதல்) என்ற சொல்லிணை மேலுள்ளது போல் அமையும்.     

இனி வேற்றலம் என்ற சொல்லுக்கு வருவோம். இச்சொல் காற்றுக்கு எப்படி வந்திருக்கும்? வேறு+தலம் என்பது சரியாகுமா? அல்லது வேற்று+அலம் என்பது சரியாகுமா?  காற்று. வீறிக் கொண்டு, வேறிக் கொண்டு இருந்தால் தானே வேற்றலம் என்ற சொல் எழமுடியும்? வேற்றலத்திற்குள் அமையும் வினைச் சொல் தான் என்ன? இன்னொரு இணைக்கு வருவோம். வேற்றவன் = பகைவன்; வேறு செய்தல் = பகை விளைத்தல். இங்கே வேறு, வேற்று என்ற தொடர்பு எப்படி ஏற்பட்டது? வேறல், வேற்றல் = பகைத்தல் என்ற பொருள் இவற்றிற்கு இருந்தால் தானே இரு பொருளும் ஒன்றாகும்?.  வேறாள் = வேற்றாள் = அயலான்; இங்கும் வேறு, வேற்று தொடர்பு உள்ளது.  எப்படி ஏற்பட்டது?

வேற்றுநர் = மாறுவடிவங் கொண்டவர் இப்படி ஒரு சொல்வடிவம் எழவேண்டும் எனில் வேற்று-தல் அல்லது வேறு-தல் என்ற வினைவடிவம் இல்லாமலா? வேற்றுமை = பெயரின் வேறுபட்ட தன்மை. இப்படி ஒரு மை விகுதி கொண்ட பெயர் எழவேண்டுமாகில் வேற்று- என்பது குறிப்பு வினையாகவோ, இயல் வினையாகவோ இருக்க வேண்டும் தானே?  வேற்றான் என்றாலும் அயலான், வேற்றுவன்  என்றாலும் அயலான் என்று அகரமுதலிகள் சொல்கின்றன. இது எப்படி முடியும்?.வேற்றல் என்ற வினை இதனுள் இருக்கவேண்டும் அல்லவா?

முடிவில் வேறல் = வெல்லல், வெற்றிகொளல் என்ற சொல்லுக்கு வருவோம். இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழி திரு. மு.சண்முகம் பிள்ளை வெளி யிட்டது.  வேறல் என்பது பெயர்ச் சொல் வைத்து வரவில்லை. வலப்பக்கம் இருக்கும் வெல்- எப்படி வினைச்சொல்லின் பகுதியோ, அதேபோல் இடப்பக்கம் இருக்கும் வேறு- என்பதும் வினைச்சொல் பகுதி தான். இன்னும் சொன்னால் வெல்லுதல் என்பது விலங்காண்டி காலத்தில் இன்னொருவனைக் குத்திக் கொல்வதே. வெல்லும் கருவி வேலாயிற்று. வெல்>வெள்>வெட்டு என்பதும் குத்திக் கிழித்தலே. வெற்றி என்ற பெயர்ச்சொல்லின் பின் வெற்றுதல் என்ற சொல் உள்ளது. வெற்றுதலும். வெட்டுதலும் ஒரே பொருளன. வெற்று-தல்> வேற்று-தலை உருவாக்கும். வேற்று-தல் = பிரி-த்தல் (உடம்பையும் உயிரையும் பிரித்தல்) வேற்று-தலிலிருந்து வேறு-தல் உருவாகமுடியும். அதிலிருந்து வேறல் என்ற மேலே சொன்ன வினைச்சொல் உருவாகும். வேறு-தல், வேற்று-தல் என்பதை மறுக்கிறவர் வெற்றி என்பதையும் மறுக்கிறார் என்று பொருள்.

ஆங்கிலத்தில் parsimony என்ற கொள்கையைச் சொல்வார். அறிவியலிலும் அப்படியே. மீக்குறைந்த கருதுகோள்களைக் கொண்டு மிக நிறைந்த விளக்கம் கொடுக்கமுடியுமானால் அதுவே சிறந்தது.  வேற்று-தல், வேறு-தல் என்ற இணைச்சொற்களை  இருந்தன என்று ஏற்றுக்கொண்டால், மேலே கூறிய அத்தனையும் தமிழில் தொங்கி நிற்காது. We need to infer the existence of வேறு-தல் and வேற்று-தல். After all research is inference. Not just the blind following of facts. 

அகரமுதலியை நான் என்றும் மொழியின் சேகரம் என்று கொண்டவனில்லை. அதுவொரு வழிகாட்டி. அதற்கு மேல் ஏரணம் வேண்டும் என்று நம்புவேன். அகரமுதலிகள் சில பெயர்ச் சொற்களைக் கொடுக்கும். அடியிலுள்ள வினைச்சொல்லைக் கொடுக்காது. சில வினைச்சொற்களைக் கொடுக்கும். அவற்றில் விளையும் பல்வேறு பெயர்ச்சொற்களைக் கொடுக்காது. printed salvation ஐ எப்படி மறுக்கிறேனோ, அதேபோல் dictionary salvation ஐயும் நான் மறுப்பேன். எனக்கு இலக்கியம். பேச்சுவழக்கு, கொஞ்சம் ஏரணம், simple common sense ஆகியவை முகன்மை என்று எண்ணுவேன். இதை மறுத்து, ”மாறி என்று தான் சொல்வேன்” என்போர் சொல்லிப் போங்கள் எனக்கு ஒன்றுமில்லை.  நான் வேறியும் மாறியும் சொல்லிப் போவேன். வேறியில் தவறில்லை.   

அன்புடன்,
இராம.கி.          

தீங்கனி இரவம் - 3

இருவேல் மரம் கிழக்கிந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், பர்மா, தாய் லந்திலும் வளரும் மரம். நம் இரு தொடர்ச்சி மலைகளிலும் உண்டு. மஞ்சட் கடம்பு, வேங்கை, பூவன், தேக்கு, கருமருது போன்ற மரங்கள்நிறைச் சோலைகளில், இதுவும் வளரும். சற்று ஈரப்பதம் இருந்தால் வெகு எளிதில் இது முளைத்து கோணல் மாணலாய் வளர்ந்துவிடும். இம்மரத்தின் இலை, தளிர், பூ போன்றவற்றைக் கால்நடைகள் விரும்பி உண்ணா என்பார்.  இருள், இருள, யெருள், இருவேல்,  எர்ரா சென்னங்கி, ஜம்பு என்று இம்மரப் பெயர்கள் தென்னிந்திய மொழிகளில் வரும்.  

Burma Ironwood, Pyinkado • Assamese: চিম চপা shin shapa • Bengali: লোহা কাঠ loha kat • Hindi: जंबू jambu, जांबु jambu • Kannada: ಬೆಟ್ಟದಾವರಿಕೆ ಮರ bettadavarike mara, ಹೊನ್ನಾವರಿಕೆ honnavarike, ಇರುಳ್ irul, ಜಂಬೆ jambe, ಷಿಲ್ವೆ shilve, ತಿರುವ tiruva • Konkani: जांबा jamba • Malayalam: ഇരുൾ irula, കടമരം katamaram • Marathi: जांभा jambha, सुरिया suriya, येरूळ yerul • Mizo: thinguk • Nepali: जांबु jambu • Odia: କଙ୍ଗଡ଼ା kangara • Sanskrit: कनककुली kanakakuli, शिंशपा shinshapa • Tamil: இருவேல் iruvel • Telugu: బోజ boja, ఎర్ర చెన్నంగి errachennangi, కొండ తంగేడు konda tangedu • Tulu: ಚಿರುವೆ chiruve, ತಿರುವೆ thiruve • Mizo: Thing-uk

எளிதில் இலையுதிர்க்கும்  இம்மரம்  18 மீ உயரம், 60 செ,மீ தண்டுவிட்டம் கொண்டது. நடுமரத்தில் பொந்தெழலாம். மெதுவான, செஞ்சாயை கொண்ட, சாம்பற்பட்டை பெருந்துண்டுகளாய் உதிர்ந்துபோகலாம். இதன் மரவயிரம் செஞ்சாயைக் கருநிறங்காட்டும். அதனால் இருள்மரமென்றார் போலும்.  இது இருவுள் (rail) அடிக்கட்டையாகப் பயன்படுகிறது. மரத்தின் கூர்ந்த இரட்டைக் கூட்டிலை நீள்காம்பில் 2-4 இணைகளாய் 3-6 செ,மீ நீளத்தில் உருவாகும்,  இலைக்கு மருத்துவப்பயன் சொல்லவில்லை. பட்டையும், விதையும் சீழ்ப் புண்களைக் குணமாக்கும். மார்ச்சு- ஏப்ரல் மாதங்களில் வெள்ளை நிறச் சிறு பூங்கொத்துகள் பூக்கும். காம்பிலாப் பூக்கள் மீச்சிறியவை. திசம்பரில் நெற்றுக்களைக் காணலாம். இம்மரத்தில் பழங் காணமுடியாது. 10-15 செ,மீ. நீளமுள்ள வளரி போல் வளைந்த கடினத் தட்டை நெற்றுகளே உண்டு. நெற்றில் 6-10 விதைகள் இருக்கும்.  இருள்மரமெனப் பெயர் பெற்றாலும் ”தீங்கனி இரவம்” இதுவல்ல. 

அடுத்து இலந்தைக்கு (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம். இதன் மாற்றுப் பெயராய் இரந்தை, இரத்தி/தை, இரம், குவலி, கோண்டை, கோல், கோலம், கோலி, கோற்கொடி, வதரம், வதரி,  ஆகியவையுண்டு. இதில் இலந்தை, இரந்தை, இரத்தி/தை போக மற்றவை பழத்தால் எழுந்தவை. இலந்தை= முள்மரம் (இல்-தல்=குத்தல். இலந்தல்= குத்தல். இலந்தை= குத்தும் மரம். லகரமும் ரகரமும் தமிழில் போலிகள். எனவே இரந்தை; மெல்லொலி சிலபோது வல்லொலி ஆவதால் இரத்தி/தை.  இரு+அம் = இரம். குவலி = குவல்ந்து காணும் பழம். குவல்> குவள்> கோள்> கோள்+ந்+து+ஐ = கோண்டை. குவல்>கோல்; கோல்>கோலம், கோலி, கோல்கொடி (கொடி ஏன் சேர்ந்தது? விளங்கவில்லை.) வற்றம்>வத்தம்>வதரம்/வதரி; பழத்தை வற்றவைத்தும் சாப்பிடலாம். சங்கதத்தில் வதரி, badri ஆகும். 108 பெருமாள்தலங்களில் ஒன்றாய், அலகநந்தா  ஆற்றின் மேற்குக்கரையின் இலந்தைக்காடு (சங்கதத்தில் பத்ரிக ஆரண்யம்) சொல்வர்.   

”இரவம்” இலந்தைக்குக் பொருந்துமா? - எனில் பொருந்தும். இல்>இரு>ஈர் என்று புழங்கியுள்ளது. ஈர்த்தல் = குத்திப் பிளத்தல் இரு>இரள்>இரண்டு. ஒன்றை இரண்டாய் இரள்ந்தது இரண்டு. இர(ள்)வு என்பதன் பேச்சுவழக்கில் ளகரம் குன்றி இரவு ஆகும் இரவு>இரவம் முள் மரத்தைக் குறிக்கும். இரு>இருள் என்பதும் இரள்போல் குத்தலைக் குறிக்கும். இரவம் = இருள்மரம் என்றது குத்தும் மரமான இலந்தையைக் குறிக்கலாம். இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கு இதழிகளைச் சேர்ந்த, முட்களுள்ள குறுமரம்  பழத்தை வைத்து மரம் பெயரிடப்பட்டதால், ”தீங்கனி இரவம்” என்ற கூற்றுப் பொருந்துகிறது  சங்க இலக்கியத்தில். இலந்தையை ஒட்டி 3 காட்சிகளுண்டு. 

முதல் காட்சி 
”உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் புல்அரை இரத்தி பொதிப்புற பசுங்காய் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்” (நற் 113/2) என்ற வரிகள் மூலம் ”மான் அண்ணாந்து தழை தின்றதால், வளையும் உயர் கிளைகளையும், புல்லிய அடிமரத்தையும் உடைய இலந்தையின் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் பசிய காய்கள் மலைசார்ந்த சிறு பாதையில் உதிர்ந்து பரவிக் கிடக்கும்” காட்சி. 

இரண்டாம் காட்சி 
”இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து - புறம் 34/12” என்ற அடியின் மூலம் ”ஓங்கிய இலந்தை மரம் கொண்ட அகன்ற இடத்தையுடைய பொதியின் விவரிப்பு. 

மூன்றாம் காட்சியில் 
”மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/11,12” என்ற வரிகளால், ”வலிய பொதியிலில் உலர்ந்த தலையையுடைய இலந்தை மரத்தின் அசையும் நிழலில் மென்தலைச் சிறுவர் அம்பெய்து விளையாடும் காட்சி.

3 காட்சிகளும் இலந்தையின் சிறப்பை உணர்த்தும், 5-12 மீ உயரம் கொண்ட புதராகக் காட்சியளிக்கும் இம்மரக் கிளைகளில் முள் நிறையவே இருக்கும். நெருங்கிய குருணைகளோடும் (close-grained), நுணுகத் துகுப்போடும் (fine-textured) காட்சியளிக்கும் இம்மரம் சிவந்து, கடினமாய், உறுதியாய், நாட்பட உழைக்கும் படி, மட்டஞ்செய்யச் சீய்ப்பதற்கும் பளிச்சுக் காட்டவும்  கூடியதாய் இருக்கிறது. இது கொண்டு, கிணறுகளுக்கு அணைகொடுக்கவும், கட்டிற்கால்கள் செய்யவும். படகு விலாமட்டைகள் செய்யவும். வேளாண் கருவிகள் செய்யவும், வீட்டுத் தூண்கள், உத்தரங்கள், கருவிக் கைப்பிடிகள், நுகங்கள் எனப் பல பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது.  இம்மரம் எரிக்கவும் பயன்படுகிறது. இலை, பழம், விதை, வேர் பற்றிய புதலியல் (botany) விவரங்களைத் தவிர்க்கிறேன். ஏற்கனவே இணையத்தில் உள்ளவற்றைத் தேடிவிடமுடியும். மருத்துவக் கூறுகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன். 

https://www.femina.in/tamil/health/home-remedies/elanthai-pazham-medicines-817.html என்ற வலைத்தளத்தில்,

”இலந்தைப் பழம் போல் அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தையின் கொழுந்திலை ”சீழ் மூலம், அரத்த அதிசாரம், மெய் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்த மேகம் ஆகியப் பிணிகளைப் போக்க சித்த மருத்துவத்தில் பயனாகிறது. இலந்தம் பட்டையை நன்றாகத் தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்துச் சிரங்குகள், காயம்பட்ட விரணங்களின் மேல் தடவிக்கொண்டுவர ஆறும் எனக்குறிப்பிடப்படுகிறது. கொழுந்து இலவம் இலையை நன்றாக அரைத்து எந்தவிதமான கட்டிகளுக்கும் மேல்வைத்துக் கட்டிக்கொண்டுவர அடங்குவதாகக் குறிப்புகள் உள்ளன”.

http://mooligaikal.blogspot.com/2012/04/blog-post_22.html என்ற வலைத்தளத்தில்,

இல‌ந்தை பழ‌த்‌தி‌ல் ‌நிறைய ச‌க்‌தி‌க‌ள் உ‌ள்ளன. அதே‌ப்போல இல‌ந்தை இலை‌யிலு‌ம் அ‌திக மரு‌‌த்துவ ச‌க்‌திக‌ள் உ‌ள்ளன. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும். இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும். இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

http://nammalvar.co.in/2017/12/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/ என்ற தளத்தில்,

இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக் காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.

https://www.tamilmithran.com/article-source/NjQzNjU0/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D என்ற தளத்தில், 

இலந்தை இலையை அரைத்து நாள்பட்ட புண்களில் வைத்து கட்டினால் புண் விரைவில் ஆறும். இலை மற்றும் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து குளித்தால் கை, கால்களில் ஏற்படும் குடைச்சல், வலி போன்றவை நீங்கும்.

என்று குறிப்பிடபடுகிறது. வெட்டுக்காயத்திற்கு இந்த மர இலைகளை அரைத்து இழுதாய் போட்டு இழுகுவது முடியும் போலும். இருப்பினும் ஒரு சித்தமருத்துவர் இதைச் சொன்னால் நாம் உறுதி கொள்ளலாம்.

என்னுடைய பரிந்துரை இன்னும் இலவமாகவே இருக்கிறது. ஆனால் நான் சித்தமருத்துவம் தெரியாதவன். என்னுடைய முடிவை ஏரணத்தின் வழி பெற்றேன். ஒரு மருத்துவரைப் பார்த்து உசாவியே இலந்தையின் இயலுமை அறியவேண்டும். பட்டகை (fact) ஏரணத்தை (logic) விடப் பெரிதல்லவா?

அன்புடன்,
இராம.கி.

தீங்கனி இரவம் - 2.

கருங்கடுகு (black mustard- Brassica nigra), கேழ்க்கடுகு (brown mustard- B. juncea), வெண்சிறு கடுகு (white mustard- B. hirta/Sinapis alba) என 3 கடுகுகள் உண்டு.  ஐ, எனும் ஓரெழுத்தொருமொழி, நுண்மை, வெண்மை குறிப்பதால், ஐயவி,  வெண்கடுகாகும். [நீரில் அவித்தலை மட்டுமின்றி, நெருப்பிலிட்டதும் முன்பு அவியே. (அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்... )]  கொழுமைக்கும் (health) கடுகு பயனாகும். வெண்கடுகைத் தின்றாலோ, புகை நுகர்ந்தாலோ, தொண்டைத் தொற்று போகுமாம் . காயத் தொற்று போகுமா? தெரியாது. ”வெண் கடுகு, நாய்க்கடுகு  (Cleome viscosa) சமமாயெடுத்து நாளும் புகைத்தால், நோய்க் கிறுமிகள், நச்சுப்பூச்சிகள் வீட்டை அண்டாதாம்”. உடற்புண் குணமாக 10 கி. வெண்கடுகு இலைகளை 100 மி.லி. நெய்யிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, அவ்வெண்ணெயைப் புண்ணின்மேல் பூசலாமெனுங் குறிப்பையும் பார்த்தேன். 

கடுகெண்ணெய் 2 விதம். 1. செக்கு நெய். 2. பொடியோடு, நீரைக் குடுவையில் இட்டுச் சூடாக்கி இன்னொரு குடுவையில் ஆவிபிடித்துக் குளிர்விப்பது.  2 ஆம் முறையை நீராவித் துளித்தெடுப்பு (steam distillation) என்பார்.  இந்தக் கடுகு ஆவிப்பு எண்ணெயில் காடி வேதிப்பொருள்கள் குறைந்திருக்கும். இது சங்க காலத்தில் இருந்ததா? தெரியாது. ஆனால் செய்வதொன்றும் கடினமில்லை. கடுகெண்ணெயைப் புயவுள்ள பட்டுயிரி ஈரி (powerful antibacterial agent) என்பார். கேடு விளைக்கும்  E. coli, salmonella, staph, listeria போன்ற பட்டுயிரிகளையும், சில கொதியங்கள் (yeasts), பூஞ்சைகளையும்  (fungii) கடுகாவிப்பு எண்ணெய்  அழிக்குமாம். வேர்வை நாளங்களைத் தூண்டி, வேர்வை எழ வைத்து உடம்பின் வெம்மை குறைக்கவும்  இவ்வெண்ணெய் தடவலாம். காய்ச்சல் காலத்தில் பயன்படும். 

வெண்கடுகைக் கத்தூரிமஞ்சள், சாம்பாணியோடு (சாம்ப்ராணி) அரைத்துப் போட்டால் சுளுக்கு குணமாகுமாம். வெண்கடுகை அரைத்து வீக்கம், கைகால் வாதமுள்ள இடங்களில் அப்பின், உடல்வீக்கம் வற்றுமாம். (தலைவன் காயத்தோடு  உடல்வீக்கம் இருக்கலாம்.)  இத்தனை மருத்துச் செய்திகளையும் சித்த மருத்துவரே உறுதிசெய்ய வேண்டும். நாட்டு மருத்துப் பொருள் விற்க, இணையத்தில் பலர் இப் புறப்பாட்டைப் பேசுவார். எல்லாம். heresay, வெட்டி யொட்டிய தப்புந்தவறுமான கூற்றுகள்.  உருப்படியான மருத்துவர் கூற்றாக ஒன்றும் காணவில்லை. நம்நிலை பரிதாபத்திற்குரியது.  எதையும் அறிவியல் வழி  ஆய நாம் அணியமாகவில்லை. புண்ணில் பூசிய மைக்களிம்பில், ஐயவி எண்ணெயோ, தூளோ கலந்திருந்ததா? தெரியாது.  

கருங்கடுகு எண்ணெயின் காரம் allyl isothiocyanate வேதிப்பொருளால் எழும். உடம்பின் பல்லாயிரக் கணக்கான சில் (cell) சுவர்களில் இருக்கும் ( வலி, குளிர், எரிச்சல் உணர வழிசெய்யும்) வாய்க்கால்களுக்கு இப்பொருள் ஊறு செய்யுமாம். எனவே கடுகெண்ணெய் அதிகம் தடவுவதும் சிக்கல்.. வெண் கடுகில்  allyl isothiocyanateக்குப் பகரியாக, காரங் குறைந்த வேறு isothiocyanate இருப்பதால், ஐயவி எண்ணெயைப் பலவிடங்களில் விரும்புவர். இப் புறப்பாட்டில் ஐயவி பயன்பாடு அதனால்தான் சொல்லப் படுகிறது போலும். நான் சொன்ன எந்த வேதியல் காரணமும் பழந்தமிழர்க்குத் தெரியாது. ஆனால் வெண்கடுகு எண்ணெய் நல்லதென பட்டறிவில் அறிந்தது பாட்டில் வெளிப் படுகிறது. 

அடுத்து இரவந்தழை. இரவம் = ஒருவகை மரம், இருள்மரம், Ironwood of Ceylon, Mesua ferrea என அகரமுதலிகளில் குறிப்புண்டு. நாம் முன்நகர அக்குறிப்பு உதவவில்லை. இரவை இருளெனக் குறித்தாரா? இருளேன் மரங்குறிக்கும் விதப்பானது? மரநிறம் கருப்பா? இருளில் பூக்குமா?  புரியவில்லை. இது இலங்கையின் தேசிய மரம். நம் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உண்டு. பொதுப் புழக்கம் அரிது. இலங்கை விகாரைத் தோட்டங்கள், சாலைகளில் இம்மரம் உள்ளதாம்.  வெவ்வேறு மொழிகளில்  பொதுப்பெயராய். கீழுள்ளவை குறிக்கப்படும்  இவற்றில் இருள்மரக் குறிப்பைக் காணோம். அகராதிப் பணியாருக்கும், புதலியருக்கும் (botanists) இடையே எந்தக் கலந்தாய்வும் நடைபெறவில்லை என்றே தோன்றுகிறது. (நான் நம்மூர் அகர முதலிகளைச் சற்று ஐயத்தோடே பார்ப்பேன். பெரும்பாலும் தமிழறிஞர் மட்டுமே செய்திருப்பார். துறையறிஞர் ஆலோசனை மீக்குறைவு.  பெரிய உசாவலும் அதிலிருக்காது.  

Common name: Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut • Assamese: নাহৰ nahor, নোক্তে nokte • Bengali: নাগেশ্বর nagesar • Garo: kimde • Gujarati: નાગકેસર nagkesar • Hindi: नागेसर nagesar • Kannada: ನಾಗಕೇಸರ nagakesara, ನಾಗಸಂಪಿಗೆ nagasampige, Atha • Kashmiri: नागकेसरः nagkesarah • Konkani: नाग चम्पो nag champo, व्हडलो चम्पो vhadlo champo • Malayalam: നാഗകേസരം nagakesaram, Churuli, Nagapoovu, Nanku, Vayanavu, Nagacampakam • Manipuri: নাগেসৰ nageshor • Marathi: नागचाफा nag chafa, नागकेशर nagkeshar • Mizo: herh-sê • Nepali: नाग केशर nag keshar • Oriya: ନାଗକେଶର nagakeshara • Pali: नाग naga • Sanskrit: नागकेसर nagakesara • Tamil: நாகமரம் nakamaram • Telugu: నాగకేసరము naga-kesaramu • Tibetan: na ga ge sar • Tulu: ಬೈನಾವು bainavu, ಕೇಶರ keshara தமிழில்  மலைநங்கை, நாகசுரம், நாகப்பூ, நாங்கு, நாங்கில், நாங்குல், சுருளி என்றும் அழைக்கிறார்.  
 
13-15 மீ உயரம் வளரும் மரத்தின் அடிவிட்டம் 90 செ,மீ. ஆகலாம். குறுகிய, நீளவாட்டில்  (oblong 7-15 செ,மீ. நீளம்) உள்ள இலைகளின் மேற்பக்கம் அடர்பச்சை; அடிப்பக்கம் வெண்மை. இளந்தளிர்கள் சிவந்தோ, பொன் பூஞ்சையாகவோ (yellowish pink) தொங்கும்.  இளமரப் பட்டை வெடிப்போடு சாம்பல் நிறத்திலிருக்கும். எளிதில் பட்டையைப் பிய்க்கலாம். முதிர் மரங்களின் பட்டை செம்பழுப்பு  வீச்சுடன், கருஞ்சாம்பல் நிறம். பட்டையினுள் ஆழ்சிவந்த இம்மரத்தின் அடர்த்தி (15% ஈரப்பதத்தில்) 940 - 1,195 kg/m3. வெகு எளிதில் மரத்தை அறுக்க முடியாது, இருவுள்களின் (rails) அடிமரக் கட்டையாகவும்,  கட்டமை மரமாகவும் (structural timber) நெடுநாள் பயனாகிறது. பழங்காலத்தில் ஈட்டி செய்யவும் பயன்பட்டது. 

மரவுறுதியால் இரும்பை உணர்த்தும் ஆங்கிலப் பெயர் (Ironwood of Ceylon, Mesua ferrea) ஒட்டியே, ”இருள்மரம்” அகராதிகளில் எழுந்தது போலும். இந்திய மரபில் அப்படிக் குறிப்பில்லை. நம்மூர்ப் பெயர் பூவால் ஏற்பட்டது.  4 வெள்ளை இதழ்களும் ( விட்டம் 4-7.5 cm) நடுவில் ஏராளம் மஞ்சள் கேசரங்களும் (stamens) கொண்ட மணப் பூ. . முகரும் நறையமும் (perfume),ஊது வத்திகளும் பூவிலிருந்து செய்கிறார். நம் இலவம்பஞ்சு போல், இதன் காய்ந்தபூவைச் சிலநாடுகளில் தலையணைகளில் பொதிவாராம், முற்றலர்ந்த கேசரங்கள் சம்பங்கி போன்றும், இதழ்கள், படமெடுக்கும் நாகம் போன்றும் தெரிவதால் நாக சம்பங்கி, நாகப்பூ, நாக கேசரம் என்ற பெயர்கள் எழுந்திருக்கலாம். 

இம்மர இலைகளை அரைத்து நெற்றியில் பற்றிட்டால், தீவிரத் தடுமன் விலகுமாம். வித்துநெய்யை அரிப்பு, எரிச்சல், காயம், வாதம் ஆகியவற்றிற்குத் தடவலாம். அரவ நஞ்சை முறிக்க, மர வேர் பயன்படுமாம்.  மூல அரத்தக் கசிவிற்கும், சளியோடு கழியும் வயிற்றாலைக்கும் காய்ந்த பூவிதழ்கள் பயன்படும். பெருந்தாகம், அளவு மிஞ்சிய வேர்வை, இருமல், செரிமானம் இன்மை ஆகியவற்றிற்கு அன்றலர் பூவிதழ்கள் தின்பது நல்லதாம். மொத்தத்தில் பூ, இலை, விதைகள், வேர்கள் மூலிகை  மருந்தாய் பயன்படுகின்றன. 

ஆனால், மேற்கூறிய எந்தப் புதலியல் குறிப்பும் பழத்தைப் பற்றிச் சொல்ல வில்லை. ”தீங்கனி இரவம்” எனும் விதப்பு, பாட்டில் வருவதால் ”இது இல்லையோ?” என்ற ஐயம் எழுகிறது., இம்மர அடையாளம் சரியானால், இப் பழம் பொதுப் பயன்பாட்டில் இன்றுகூட இருந்திருக்கவேண்டுமே? அப்படிக் காணோமே?. தவிர, நாகசம்பங்கி மரம் நம்மூர் மரபில் பூவால் விதப்புற்றது.  வெட்டுப்புண்ணுக்கு ”மைபோல் மரப்பொருள் அரைத்த இழுதை” இழுகுவது கூட மேலே புதலியல், மருத்துவக் குறிப்புகளில் புலப்படவில்லை. இந்த ஆய்வின்பின் என் முடிவு ”தீங்கனி இரவம்” நாக சம்பங்கி அல்ல.  இனி, இருள்மரம் எனும் இருவேல (Ironwood tree, Xylia xylocarpa)மரத்திற்கும், இலந்தைக்கும் (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

தீங்கனி இரவம் - 1

அண்மையில் நண்பர் நாக. இளங்கோ புறம் 281 பாடலை மிகச் சிறப்பாக விளக்கியிருந்தார். கூடவே ”தீங்கனி இரவத்தின்” அடையாளம் பற்றிக் கேள்வியும் எழுப்பினார். நான் "இலந்தை (Jujube-tree. Zizyphus jujuba)' என்றேன்.  நண்பர் இரவாவோ, “நாக சம்பங்கி” என்றார் புறநானூற்று உரைசெய்த இக்கால முகன உரையாளர் பலரும், தம் உரைகளில் நாக சம்பங்கியின் தாவரப் பெயரான, “Mesua ferrea (Cylon Ironwood tree) ”-ஐக் குறிப்பார். 3 ஆவதாய், இருள்மரம் (இருவேல (Burma Iron wood tree, Xylia xylocarpa) என்பதும் இயலுமை காட்டும்.  இரவப் பெயருக்கு 3  மரங்களும் சொந்தங் கொண்டாடும்.  ஆழம் போகாது சரியான மரம் அடையாளங் காணமுடியாது. என் பார்வை கீழே விளக்குகிறேன்.

இப் புறப்பாட்டின் தலைவன் சாத்தாரனல்லன். குறுநிலக் கிழானில் பெரியவன் ஆகலாம். பாடியவரும் கிழாரே.  அரிசிலாற்றங்கரை சேர்ந்தவூர் அவரதென ஔவை. சு. துரைசாமி சொல்வார். தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், வேளாவிக்கோமான் பதுமன், அதியமான் நெடுமானஞ்சி, வையாவிக் கோப்பெரும் பேகன், அதியமான் எழினி போன்றோரை அரிசில்கிழார் பாடினார். பாட்டின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 140-135. பாட்டினுள் 3 வகைச் செயல்கள் சொல்லப்படும். முதலாவது வீட்டின் தாழ்வாரத்தில் தழைகள் செருகுவது. அடுத்தது வீட்டுவளாகத்தில் சிலர் யாழ், பல்லியம் இசைப்பது, மூன்றாவது வெட்டுப்பட்ட வீரனுக்கான மருத்துவப் பணிகளைச் சொல்லித் தலைவி  தோழியை அழைப்பது. அரிசில்கிழார் பாட்டின் (புறம் 281. திணை: காஞ்சி துறை: தொடாக் காஞ்சி) அடிகளைப் பொருள்புரியத் தோதாக, சற்றேமாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். 

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, 
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க,  
கைபய பெயர்த்து, மையிழுது இழுகி, 
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, 
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, 
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ, 
வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறி 
கழற்கால் நெடுந்தகை புண்ணே, 
காக்கம் வம்மோ காதலம் தோழி

பெருவீரர் நடக்கையில்  டங்கென ஓசையிடும் காலணித் தண்டையை இசை மணி என்பர். 10000 பேரை வெற்றி கொண்டோரே இதை அணியலாமெனச் செ.ப. அகரமுதலி உயர்ந்து நவிலும். பெரும்பாலும் வெட்டு, கையில் ஏற்பட்டிருக்கலாம். அடிக்கடி போர் நடந்த சங்க காலத்தில் ( சிச்சிறு இனக்குழுக்களோடு பொருதிக் கரைந்து, சேரர், சோழர், பாண்டியர் எனும் முப்பெரும் இனக்குழுக்கள் சேர்ந்துவந்த காலம். போரும், மண உறவுகளும், பொருளியல் தொடர்புகளும் நிறைந்த காலம்,) ஓயாது சண்டை. பல வீட்டுத் தலைவர்  வெட்டுறுவதும், புண்ணாற்றுவதும், அதற்கென ஆள். பேர், அம்பு இருப்பதும் தொடர்கதை ஆகியிருக்கலாம். It must have been frequent. 

ஏனெனில் தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல்  24 ஆம் நூற்பாவில், ”இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்” என்று தனித் தொடருண்டு. ”பேய்ப் புண்ணோன்= பெரும் புண்ணோன்; துன்னுதல் கடிந்த= நெருங்கமுடியா அளவிற்கு; தொடாக் காஞ்சி= தொடாது ஆற்றும் செயல்” எனக் கொள்ளலாம். இங்கே புறப் பாட்டில், வெட்டுப்புண் திறந்துகிடந்தது. தைக்கவியலா நிலை. மெதுவே காய வேண்டும். வீட்டையும், மருந்துப் பணிகளையும் தலைவி ஒருசேர நிருவகிக்கிறாள். அரிசில்கிழார் அவள்திறன் கண்டு வியந்து, தலைவி பார்வையில் பாடுகிறார். பேய்க்காஞ்சி எனச்சில உரைகளிலும் தொடாக் காஞ்சி என வேறுசில உரைகளிலும் துறை குறித்துள்ளார். பாட்டின் நிலை விவரிப்போம்.

பட்டுயிரிகளோ (bacteria), வெருவிகளோ (virae), பூஞ்சைகளோ (fungii) புண்ணுள் சேரக்கூடாதெனில், வீட்டுள் வெளியார் வரக்கூடாது. இதை அறிவிக்க வேப்பந் தழையை வெளித் தாழ்வாரத்தில் செருகுகிறார். பெரியம்மை,, சின்னம்மை,  தட்டம்மை போட்டால், வெளியாருக்கு வெருவி பரவக் கூடாதென எழுதருகையாக (warning) இன்றும் வேப்பந்தழை செருகுவோம். வெட்டுப்புண் பட்டால், வேறு சிக்கல். ”உள்ளாருக்குப் பரவக்கூடாது.” பழமரபில் இதற்கும் வேப்பந்தழை செருகுவர் போலும். சூடணி வெருவிக் (corona virus)காலத்தில்  எளிதில் நோய்க்கு ஆட்படுவோர்/ மூத்தோர் வீட்டிலிருந்தால், ”வெளியிருந்து வெருவி நுழைய வேண்டாம்” என உணர்த்த, இன்றுஞ்சிலர் தழை செருகிறாரே? . 

அடுத்து வெட்டுப்புண்ணை வெளியார்க்கு உணர்த்த, தீங்கனி இரவந்தழை செருகுகிறார். (வெட்டுக்காயம்  அடிக்கடி ஏற்பட்டதென்றேனே?) இரவந்தழை இதன் குறியீடு. வெட்டுப் புண் உற்றோன் வலியால் துடித்துத் துயிலின்றி முனகுகிறான். அவனைத் தூங்கவைக்க, யாழிசை, பல்லியம் (பல கருவிகள்) முற்றத்தில் சேர்கின்றன. முழவோசைக் குறிப்பு பாட்டிலில்லை.) வலி ஆறலுக்காக இசை எழுந்ததோ? வெட்டுக்கையைப் பையப் பெயர்த்து, மைபோல அரைத்த இழுதை (nicely ground paste. என்ன இழுதென்று பார்ப்போம்) புண்ணின்மேல்   இழுகி (= அப்பி), புண்தோலில் ஐயவி சிதறி (ஐயவி, ஆகு பெயராய் கடுகெண்ணெயைக் குறிக்கும். நேரே கடுகையல்ல ), எரிச்சல் போக்க மூங்கிலால் ஊதுவார். (ஆம்பல்= மூங்கில். அல்லித்தண்டென சிலர் அறியாது சொல்வார். உடம்பெரிச்சலுக்கு இன்று மின்விசிறி  போடுகிறோமே? பழங்காலத்தில் காற்றூதினார் போலும்). 

காற்று நகர்வால் தண்டோசை எழக்கூடாதென இசைமணி எறிந்து ( =கழற்றி), தலைவன் தூங்கும்படி காஞ்சிப்பண் பாடத் தலைவி, தோழியை அழைக்கிறாள்.   [காஞ்சியை, “நிலையா உலகத்தில் நிலைப்பேறு எய்தல்” என்பார். வெட்டுற்றவன், ”நிலையோம்” என மயங்க, நிலைப்பாயென உறுதிதரக்  காஞ்சிப்பண். இரங்கலுக்கான விளரிப்பண் என்றும் ( வீ.ப.கா. சுந்தரம். தமிழிசைக் கலைக்களஞ்சியம். பா.தாசன் பல்கலை.... பக் 75-76.)  தூங்கவைக்கும் பண் என்றும் சொல்வர்.  செம்பாலையின் விளரியைக் குரலாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டும் பெரும்பண் இது. ( அரி காம்போதியின் தைவதத்தைச் சட்சமாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டுவது தோடி. ஆரோசை: ச ரி1 க1 ம1 ப த1 நி1) துன்புற்றாருக்கு நம்பிக்கைதரப் பாடும் தோடி.. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின்,“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் வந்துதித்த ---” என்ற பாடலை இங்கு நினைவு கொள்க.] 

அதே பொழுது, மற்ற சேடியர் நீள்வீட்டின் வரம்புகள் (= சுவர்கள்) அருகே (இக்காலச் சாம்பிராணிப் புகை போல) அக்கால அகிற்புகை எழும்பச் செய்கிறார். தணலுள் வெண்சிறு கடுகும் இடப்படுகிறது.  கடிநறை strong fragrance எனப் பாடலில் வருகிறது.; வீடு நெடுகிலும் புகை எழாது, பெரும்பாலும் முற்றஞ்சுற்றி இருக்கலாம்.  மருத்துவத்தை விவரித்து, ”அன்புத் தோழியே! வேந்தனுறும் விழுமந் தாங்கிய, பூம்பொறி கழலைக் காலில் வேய்ந்த, என் நெடுந்தகையின் (=கணவனின்) புண் காக்க வருவாயோ” என்று தலைவி அழைக்கிறாள். அடுத்த பகுதியில் ஐயவியின் விவரத்தினுள் போய், பின் தீங்கனி இரவத்தை அடையாளங் காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, July 25, 2020

ion

ion (n.) ஏகன்

coined from Greek ion, neuter present participle of ienai "go," from PIE root *ei- "to go." So called because ions move toward the electrode of opposite charge.

cation (n.) கீழேகன்

from Greek kation "going down," katienai "to go down," from kata "down" 

anion (n.) ஏறேகன்

from Greek anion "(thing) going up," anienai "go up," from ana "up" 

electron = மின்னி
ionic = ஏகன
ionize = ஏகனாக்கு
ionosphere = ஏகனக் கோளம்

Tuesday, July 21, 2020

நிகண்டு

அண்மையில் வழக்குரைஞர் Murugesan Maruthachalam நிகண்டின் பெயர்க் காரணம் பற்றித் தமிழ்ச்சொல்லாய்வில் ஓர் இடுகை இட்டிருந்தார். ”தமிழ் நிகண்டை வடசொல் என்போர் உளர். நிகர் சொற் கண்டு சுருக்கமாக நிகர் கண்டு. மிகச்சுருக்கமாக நிகண்டு ஆனது. நீண்டதொடர் நூல்சுருணை நூற்கண்டென்பர். சொற்கள் தொடராக இருந்தால் சொற்றொடர். சொற் கண்டு. நிகரான சொற்கண்டு நிகண்டு. கற்கண்டு - இனிப்பு. கற்கண்டு - கண்டு கற்றல்.. நிகண்டு தமிழே” என்பது அவர் மொழி. நான் வேறுபடுவேன். நிகண்டு பற்றி வேறு பலரும் இவருக்கு முன் கேட்டிருந்தார். அப்போதெலாம் வெவ்வேறு வேலைகளால் ஆழ்ந்ததால், மறுமொழியாது இருந்தேன். இப்போது முயல்கிறேன்

முதலில் பொறுமையோடு, மணிப்பவள நடையில் இருக்கும் திருவரங்கக் கோயிலொழுகின் அருங்கதை ஒன்றைப் படிப்போமா?    இந்த அரிய பொத்தகம் (முதற்பகுதி) ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணம் ஆசார்யர் வெளியிட்டது.  [214, கீழை உத்தர வீதி (விக்ரம சோழன் திருவீதி), திருவரங்கம் திருச்சி 620006] பக்கம் 84-86. ”சுந்தர பாண்டியத் தேவர் கைங்கர்யம்” என்பது குறிப்பின் தலைப்பு. கி.பி.1250- 84 இல் இருந்த முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பற்றியது. பிற்காலப் பாண்டியரில் பென்னம்பெரு வெற்றி பெற்றவன் கிட்டத்தட்ட முழுத் தமிழ்நாடும் அவன் கையில் வந்து சேர்ந்தது. (இவன் முன்னோன் மாறவர்மன் சுந்தரபாண்டியனும், இவனும் சோழ குலத்தையே இல்லாது செய்தார். திருவரங்கக் கோயிலுக்கு ஏராளம் திருப்பணி செய்திருக்கிறான்.

”சுந்தரபாண்டியத் தேவர் சேரன் சோழன் வல்லாளதேவன் (ஹொய்சாள மன்னர்கள்) முதலானாரை ஜயித்து, ”எம்மண்டலமு கொண்ட பெருமாள்” என்ற விருது செலுத்தி, அந்த த்3ரவ்யங்களாலே, ராஜமாஹேந்த்ரன் திருவீதி முதலாக, இந்நாலு வீதியும் இருபத்துநாலு துலாபுருஷ மண்டபமுங் கட்டி துலாபா4ரந் தூக்கி, திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடங் கட்டி, அதில் ஒரு ஓடத்திலே தச்சு முழத்திலே ஏழு முழமிருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுத4ங்களுடனேயிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்குச் சரியாக ஸ்வர்ணம் முத்து முதலான நவரத்திநங்களும் ஏற்றி, ஆனை துலாபுருஷந் தூக்கி......” என்று அச் செய்தியின் சொற்றொடர் நீண்டு போகும்.

நமக்குத் தேவை ”துலாபுருஷம்” என்பதைப் புரிந்து கொள்வதே. (கஜ துலா பாரம் என்றும் கோயிலொழுகு சிறப்பிக்கும்.) இன்றும் பெரிய பெருமாள் கோயில்களில் நடக்கும் துலாபாரம் பார்த்திருப்பீர்கள்.. 40 கிலோ அரிசி கொடுக்க, ஒரு பலங்கையில் 40 கிலோ கல்லையிட்டு, இன்னொரு பலங்கையில் அரிசியைக் கொட்டி துலை சமமாக, நிகராக, நிற்கும் அளவு அரிசியைச் சொரிவர். 40 கிலோ கல்லிற்கு நிகரான அரிசி கொடையாகும். ஒரு யானை+ சுந்தர பாண்டியன்+ ஆயுதங்கள் அளவிற்குத் தங்கம், (முத்து போன்ற ஒன்பான் மணிகள்) இடவேண்டுமெனில். துலையில் இது நடவாது. இரு ஓடங்களைக் காவிரியில் நிறுத்தி மிதக்கவிட்டு, பாண்டியன் இதைச் செய்துள்ளான். ஆர்கிமிடிசு விதி அவனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் செய்து காட்டல் (demonstration) நடந்திருக்கிறது. ஓர் எடைக்கு நிகரான பொருள் காணும் அழகைப் பாருங்கள்.

சரி இரு வேறு கோடுகளிடையே  அல்லது பரப்புகளிடையே ஒப்பிட வேண்டுமா? ”அளந்து பார்” என்போம். ”எதற்கு எது நிகர்?” என்று தெரிந்து விடும்.  நீட்டளவு என்பது தமிழில் அடிப்படை அளவு. பரப்பளவை வழிநிலை (derived) அளவையாகக் கொண்டு, சதுரக் கருத்தீட்டால் பரப்பு அளப்பார். ஒரு கோல் = 5.5 அடி. ஒரு தண்டம் = 11 அடி. ஒரு தண்டச் சதுரம் = 121 ச.அடி. (வடக்கே 144 ச.அடி. நடுக்கிழக்கு நாடுகளிலும், மீட்டருக்கு முந்தைய கால இரோப்பிய நாடுகளிலும்) ஒரு தண்டச் சதுரத்தைக் குழி என்போம். பின்னால் மா, வேலி போன்ற பரப்பளவுகள் வரையறுக்கப்படும்.

இதேபோல் முப்பரிமான அளவையை நீர்மங்களன்றிக் கூலம்,  பருப்பு,  துகள்/குருனைகளுக்குச் செய்யமுடியாது. ஏனெனில் கையாளும் துகளியல்பு பொறுத்து மொத்தைத் திணிவு (bulk density) மாறும். குருனைகளும், அவற்றின் இடையுள்ள காற்றுவெளியும் படுத்தும்பாடு இதன் காரணமாகும் .  இதற்கும் மேல் இன்னொரு பலக்குமையும் (complexity) உண்டு. ஏனத்துள் துகளை அழுத்தியடைத்தால் மொத்தைத் திணிவை மேலும் மாற்றலாம்.  பொதுவாய் அடைவு (packing) வேறுபாட்டுக் காரணமாய், வெள்ள (volume) அளவீட்டிற்கு  ஒரு செந்தர முறை  வேண்டும். இல்லெனில் ஒவ்வொரு முறையும் முப் பரிமானக் கொண்மை (capacity)மாறும்.

நிகரிமை என்பது மேற்சொன்ன அளவீடுகளில் மட்டுமின்றி, நாம்கொள்ளும் விலைமதிப்பிலுமுண்டு. நாணயம் புழங்காக் காலத்தில் ஒரே மதிப்புக் கொண்டவற்றை ஏதோவகையில் மாற்றிக் கொண்டார். காட்டாக, 10 மூடை உப்பும் ஒரு மூடை நெல்லும் ஒரே மதிப்பு என்பது ஒருகால மரபு. இன்றிது மாறலாம், பின்னால் சோழி, முத்து, பவளம், தங்கம், வெள்ளி, தாள் போன்றவையும் வெவ்வேறு நாணயங்களும் மதிப்பைக் காட்டுதற்கு நிகராக வந்தன. ஆக, ஒவ்வொரு ஒப்புமைக்கும் அடியில் ஓர் அலகு இருக்கிறது. நீளம், கொண்மை, எடை, விலைமதிப்பு என இந்த அலகுகள் மாறும்.

சொற்களை ஒப்பிடும் போதும் இதுபோல் அலகுகள் மாறலாம்.  கோடி, கோடிகம் , படாம், கோசிகம், கூறை, பஞ்சி, சாடி, நீவியம், சீரை, சம்புடம், கலை, கலிங்கம், சூடி, காடிகம், புட்டம், தூசு, காழகம், வட்டம், ஆடை, ஆவரணம், தானை, அறுவை, அம்பரம், ஆசாரம், மடி, பரிவட்டம், சேலை, வத்திரம், உடுக்கை, வாசம், இலக்காரம் என்னும் 31 சொற்களை ”சூடாமணி நிகண்டின்” வழி, புடவை எனும் அலகால் ஒப்பிடலாம். ஒவ்வொரு நிகண்டு நூலிலும் இதுபோல் 1000க் கணக்கான அலகுகளுண்டு. நிகண்டிற்கு நிகண்டு அலகுகள் மாறுபடலாம். அந்தந்த அலகில் ஒப்பிடும் சொற்களை நிகண்டில் பட்டியலிட்டிருப்பார்.

நிகண்டில் வருவது 2 வகைச் செய்திகள். 1. சொற்கள் தொகுக்கப்படும் அலகுகள். 2. ஒவ்வோர் அலகிற்குமான சொற்கள். சில அலகுகளில் ஓரிரு சொற்கள் தேறும்,. சில அலகுகளில் அதிக எண்ணிக்கை இருக்கும். சரி, நிகர் சொற்களைத் தொகுக்கும் நூலை நிகரி எனலாமே? ஏன் நிகண்டெனப் பெயரிட்டார்?  வடசொல்லென வழக்கம்போல் சிலர் உரிமை கொள்கிறாரே? 2 கேள்விகளையும் ஆழமாய்ப் பார்ப்போம். குறைந்தது 2700 ஆண்டுப் பழமையான தொல். பொருள். உவம இயலின் 11 ஆம் நூற்பா, 5 ஆம் வரியில், ”நிகர்ப்ப” என்பது வரும். இச்சொல் எப்படி அங்கு எழுந்தது?

நுல்> நுள் என்ற வேர்  பொருந்தற் பொருளில் 2 வகைகளில் சொற்கள் வளர்ச்சி காட்டும் நுள்> நள் என்பது ஒரு வகை. நள்ளல், நளி, நட்பு, நடி, நடம், நட்டம், நாடகம், நணி, நணுங்கு, நயம், நசை, நத்து போன்றவை இவ் வகை சாரும். இவற்றை வேறு கட்டுரையில் பார்க்கவேண்டும்.  நுள்> நிள் என்று திரிவது இன்னொரு வகை. நுள்> நிள் > நிர்> நிரத்தல் = நெருங்கல், கலத்தல், பரத்தல், நிரம்புதல்; நிள்> நிர்> நிரல் = வரிசை அடுத்தடுத்துப் பொருந்தலால் வரிசையாகும். நிள்> நிர்> நிரை = வரிசை; நிள்> நிர்> நிரவு> நிரவல் = வரிசை, சமனாக்கல்; நிள்> நிர்> நிரம்பு> நிரம்புதல் (=நிறைதல்); நிரை> நிறை; நிள்> நிர்> நெர்> நெரு = காலத்தால் நெருங்கிய; நெரு> நெருநல்> நென்னல் = காலத்தால் நெருங்கிய நேற்று; நிள்> நெர்> நெரி> நெரிசல் (ஒருவரை ஒருவரும் நெருக்கி ஏற்படும் நிலை); நெரு> நெருங்கு (நெருவின் வளர்ச்சி); நெரு> நேர்> நேர்தல்  happening.

நெரு> நேர்> நேர்த்தி =பொருந்தியமையும் அழகு; நெரு> நேர்= ஒப்பு; நேர்> நேரம்= பொருந்துங் காலம்; நெள்> நெய்= ஒரு துகள் இன்னொன்றோடு பொருந்தி வழலுதல்,  வார்ப்பும் (warp) ஊடும் (weft) என நூல்களமையும் முறை; நெய்> நெய்த்துவர் = சிவப்பாய் நெய்போல் அமையும் அரத்தம்; நெய்> நேயம்> நேசம் = பொருந்திக் கொள்ளும் அன்பு; நெய்> நெய்ஞ்சு> நெஞ்சு = நெய்த்தோர் கையாளும் குருதயம் (heart) இருக்கும் பகுதி.; நெய்> நெய்தல், நெசவு = வார்ப்பும் ஊடும் பின்னிக் கொள்வது. இதே வளர்ச்சியில் நிள்> நிழு> நிகு> நிகழ் என்பது காலத்தால் கண்முன்னே பொருந்துவது. அடிப்படையில் இறந்த காலமும் எதிர்காலமும் மட்டுமே உண்டு. நிகழ் காலம் என்பது நம் வசதிக்குத் தக்க நாம் பொருத்திக் கொள்ளும் காலம். ஒரு நொடி, ஒரு நுணுத்தம் (minute), ஒரு மணி, ஒரு நாள், ஒரு மாதம், ஓர் ஆண்டு என்று நம் சிந்தனை கூறுபோட்டுக் கொள்ளும். அப்பொருத்திற்குத் தக்க நிகழ்காலம் மாறும்.

நிகு> நிகள்> நிகர் = ஒப்பு.  இதில் நிகள்தல் என்றசொல்  வருமா? - என்பது இன்னொரு கேள்வி. பொதுவாக ளகரமோ, லகரமோ தான் ரகரமாய்த் திரியும். அவ்வகையில் நிகள் என்பது ஓர் இயலுமை. இதற்குக் காட்டு முன்னால் சொன்ன கோயிலொழுகில் உள்ளது. அதே பொத்தகம் முதல் பகுதி பக்கம் 40-44 இல் வரும் ”நந்தசோழன்  கைங்கர்யத்தில்” உறையூர் நகரம் நிகளாபுரி எனப்படும். நிகளாதல் = நிகரில்லாது ஆதல். ஈடு இணையற்ற ஊர் என வெற்றிப்பொருள் சொல்வதற்காக அவ்வூர் நிகளாபுரி என்ற பெயர் பெற்றது. (உறந்தை, திருக்கோழி, கோழியூர், குக்குடபுரி, வாரணபுரி, உரகபுரம் என்ற பெயர்களும் அதற்குண்டு). எனவே நிகள்தல்> நிகர்தல் என்பது சரிதான். கோயிலொழுகில் இச்சொல் பயின்றாலும் நம்மூர் அகர முதலிகளில் இது ஏறவேயில்லை. இப்படி எத்தனை சொற்களைப் பதிவு செய்யாது போனோமோ? நான் படித்தவரை, மணிப்பவள  நூல்களுக்குள்  அருமையான தமிழ்ச்சொற்கள் பல உள்ளன. நாம் தாம் அறியாமையால் அவற்றை ஒதுக்கி இழக்கிறோம்.

நிகளல் என்பது இறந்தகாலத்தில் நிகள்ந்தது> நிகண்டது என்றும், நிகழ் காலத்தில் நிகள்கிறது என்றும், எதிர்காலத்தில் நிகளும் என்றும் வரும்.  வேள்ந்தது> வேண்டது என்பது போல், கள்ந்தது> கண்டது போல், கொள்ந்தது> கொண்டது போல், நிகண்டது என்பது முற்றிலும் சரி. நிகண்ட சொற்கள் நிகருற்ற சொற்கள் தாம். நிகண்டு நூல் = நிகர்ச் சொற்கள்  அடங்கிய நூல். ஜலசமுத்ரத்தில்/நீர்க்கடலில், ஜலத்தை/நீரை விட்டு,  சமுத்ரம்/கடல் என்று பயில்வது போல்,  நிகண்டுநூல் நிகண்டாய் நின்று உரியபொருளை  உணர்த்துகிறது. கோயிலொழுகு படிக்காவிடில் நிகண்டின் சொற்பிறப்பு எனக்குப் புரிந்திருக்காது.

சரி, வடமொழி என்று சொன்னாரே? அதையும் பார்த்துவிடுவோம்.  எடுகோட்டில் உள்ள மோனியர் வில்லியம்சு போய்ப் பார்த்தால், நிகண்ட் என்பதற்கு,

निघण्ट
(H1) नि-घण्ट [p= 546,2] [L=108157] m. ( √ घण्ट् , to speak? ; cf. घण्टा , a bell) a collection of words , vocabulary Cat.
[p= 546,2] [L=108158] N. of a दानव Katha1s.

என்று நி+கண்ட் என்று சொல்லுடைத்துப் போட்டிருப்பார்.  கண்ட் என்பதைத் தாது என்பார். (அடிப்படையில் அதன் பொருள் தொண்டை). இங்கே பேசுதல் என்று கேள்விக் குறியோடு போட்டிருப்பர். அதாவது பேசுதலாய் இருக்குமோ என ஊகிக்கிறார். கண்டா எனில் மணி. இங்கே நிகரான சொல் தொகுதி எனும் பொருளே வரவில்லை. என்னைப் பொறுத்தவரை a collection of words , vocabulary Cat என்பது பயன்பாட்டைப் பொறுத்து, குருட்டாம்போக்கில் சொற்பிறப்பு சொல்ல முயல்வதாகும் அவருக்கு நிகண்டின் சொற்பிறப்புத் தெரியவில்லை. எனவே தோன்றிய ஊகத்தைச் சொல்கிறார். சொற்களை உடைத்துப் பொருள்சொல்வது சங்கத அகரமுதலிகளின் இயல்பான வழக்கம். இதை ஏற்பதும் ஏற்காததும்  உங்கள் உகப்பு. நான் ஏற்கமாட்டேன். என் முடிவில் நிகண்டு என்பது தமிழே. ஒவ்வோர் அலகிற்கும் நிகரான சொற்றொகுதிகள் அடங்கிய நூல் என்பது அதன் பொருள்.

அன்புடன்,
இராம.கி. 

ஆனந்தம் -3

இனி நந்தி என்ற சொல்லைப் பார்ப்போம். வயிறு பெருத்த எருதை நந்தி என்பார்.  இங்கும் பெருகல் பொருளே அடிப்படை. எருதுப் பொருள் சங்கதத்தில் இல்லை. one of the attendants of siva என்று மட்டுமே அங்கு கொடுப்பார். அதாவது நந்தியைத் தேவராக்கும் தொன்மம் மட்டும் குறிப்பர். சிசுனதேவனை (அதுதாங்க, சிவனைக் கேலியாகச் சிசுனதேவன் என்பர்.) அவர் ஏற்றபின் நந்தியைத் தேவர் என்றாரே, அப்பிற்காலக் குறிப்பு மட்டுமே  சங்கத அகரமுதலியிலுள்ளது.  (இதே போல் நந்தகோபன் சொல்லிருக்கும். cowherd என்பார். ஆனால் cow = நந்தி சொல்ல மாட்டார். நான் புரிந்துகொண்ட வரை, ”நந்தின்” சொற்பயன்பாடு சங்கதத்தில் பின்னால் தான் எழுந்தது.

தமிழில் பல இடங்களில் நகரமும் தகரமும் போலிகள். நந்தியின் போலி துந்தி>தொந்தியும் வெளித்தள்ளும் வயிறு குறிக்கும். இச்சொல்லும் அங்கில்லை.. நந்தியென்ற பெயர் சிவனுக்கும் உண்டு. திருமூலருக்குப் பிடித்த சொல். அதைச் சங்கதம் ஏற்கும். ஆனால் எருது ? ஏற்கவில்லை. நந்தியோடு தொடர்புடைய வேறு சொற்களும் தமிழ் அகரமுதலியிலுண்டு,  ,அவற்றையும் சங்கதத்தில் காணோம். இவ்வளவு ஏன்? நந்தவனம் = மரங்களை நட்டு வளர்க்கும் தோட்டம், மோனியர் வில்லியம்சில் இல்லை. இன்னும் வியப்பான  இன்னொரு செய்தியும் பார்ப்போம்.

நத்தலென்பது தமிழில் ஒற்றைப் பரிமான முன்வரல், நகர்ச்சி காட்டும் உயிரியின் செயலைக் குறிக்கும். சங்குப் பூச்சிக்கும் இதே வகை ஒற்றைப் பரிமான நகர்ச்சி உண்டு. சங்கதத்தில் ”நந்திர்கு” நத்தைப் பொருளில்லை. 55000, 60000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரைவழி நகர்ந்துவந்த ஆதி மாந்தன் நத்தை, சங்கு போன்ற உயிரிகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் சாப்பிட்டே உயிர்வாழ்ந்ததாய் தொல்லியலும் மாந்தவியலும் சொல்கின்றன. இந்த வழிப்பாதையில் கடற்கரை ஓரங்களில்  நத்தைக் கூடுகள் நிறையக் கிட்டுவதாய்த் தொல்லியலார் சொல்கிறார்.  அதைப பற்றிய  ஆய்வும் அண்மைக் காலங்களில் சோமாலியா, தெற்கு ஏமன் கடற்கரைகளில் தீவிரமாகியுள்ளது.

இப்பழக்கம் உண்மையானால், நந்து, நத்தை போன்ற சொற்கள் ஆதி மாந்தரிடம் வெகுநாள் இருந்திருக்கும். ஆதி மாந்தரே (இவரை நெய்தல் மாந்தர் coastal people -என்பார் Spencer Wells) ஈரான். கூர்சசரம், மராட்டியம், கருநாடகம் வழி பழந்தமிழ்க் கடற்கரைக்கு வந்தார். அப்படி வந்தபோதே இவரிடம் மொழியிருந்தது என்றும் ஆய்வாளர் சொல்கிறார். அம்மொழி தமிழா, அதன்பின் தமிழெழுந்ததா என இன்று தெரியாது. ஆயினும் நந்து, நத்தை, நாகு என்பவை தவிர இவ்வுயிரியைக் குறிக்க வேறு சொற்கள் தமிழில் இல்லவேயில்லை   அதேபொழுது நந்து/நத்தை போன்றவை நிலம்வழி இந்தியாவினுள் நுழைந்த steppe மக்களிடமும் இல்லை. சங்கதத்தில் śambūka (snail),jala-manthara (water snail), vṛntāka (sea snail) போன்ற சொற்களே உள்ளன. ஓர்ந்து பாருங்கள். நந்து தமிழா, சங்கதமா?

என்னைக் கேட்டால் நிறைவுப் பொருளில் ”நந்தம்” பெரும்பாலும் தமிழில் இருந்து சங்கதம் போனதென்பேன். அங்கிருந்து  இங்கு வந்திருப்பின் நந்தென நத்தைக்கு நாம் சொல்லியிருக்க முடியாது. (நிறைவில் எழுந்த நந்தும் நத்தையான நந்தும் வெவ்வேறு வேரில் தோன்றியனவாய்த் தோன்றவில்லை. நந்தலுக்கு நகர்தல்  பொருளிருந்தால் பெருகல், வளர்தல், தழைத்தல் எனும் எல்லாமே நந்தோடு தொடர்புடைய பொருள்கள் தாம்) இப்போது சிக்கலுக்குள் வருகிறோம்.”நந்தம்” சொல்லை வடக்கிலிருந்து தமிழ் கடன்கொண்டது என்போமெனில் நத்தையில் ஏன் disconnect தென்படுகிறது? எண்ணிப் பாருங்கள். 55000 ஆண்டுகள் முன்வந்த AASI முந்தியவரா? கி.மு.1800 -1500 இல்  உள்நுழைந்த steppe மக்கள் முந்தியவரா? - (இதற்குத் தோதாகத் தான் சில ஆய்வாளர் தமிழரை அடிப்படை AASI ஓடு தொடர்புறுத்தாமல், சிந்து மக்களோடு சேர்ப்பார். தொடர்புகளைத் திரிப்பதில் அவ்வளவு முனைப்பு.

இனி நந்தின் சொற்பிறப்பு காண்போம். நுல்>நுல்+ந்+து>நு(ல்)ந்து>நுந்து>நந்து என இச்சொல் வளரும். நுந்தென்ற வடிவம் சங்கதத்தில் இல்லை. நுந்துதலும் முந்துதலும் ஒன்றிற்கு ஒன்று போலிகள். இரண்டிற்குமே  முன்வரல் பொருள் உண்டு. நுந்து, நுல்லில் கிளைத்த பெயர்ச்சொல் நுந்து, பின்னால் வினைப் பகுதியாகி நுந்தினேன்/ நுந்தினாய்/நுந்தினான்/ நுந்தினாள்/ நுந்தினர்/ நுந்தியது/ நுந்தின என்றெலாம் அமையும். நுல் பகுதியிலிருந்து நுந்து எனும் பகுதி உருவாகியிருக்கிறது. நுல் எனும் வேரைச் சங்கதம் காட்டாது. நுல்> நுல்வு>நூவு>நூவுதல் என்பது நீரை முன்தள்ளுதல். தோணியில் போகும் போது நீரை நூவியே/நாவியே நாம் நகர்கிறோம்.  நூவுதலுக்கு ”நீரை முன் இரைத்துப் பாய்ச்சுதல் = to irrigate” என்ற பொருளும் உண்டு. விளக்குத் திரியைத் தூண்டும் செயலையும் நூவுதல் என்பார், 

கட்டுரை முடிவிற்கு வந்துவிட்டோம். நான் நுல்லில் வளர்ந்த சொற்களை இங்கு கூறவில்லை. அவை ஏராளம். நந்தோடு தொடர்புடையவற்றை மட்டுமே கூறுகிறேன். நந்த காலம் = உச்சிக்கு அப்புறம் கிழக்கே நிழல் நீண்டு செல்லுங் காலம். பிற்பகல் என்றுஞ் சொல்கிறோம். நத்தம் = residential area. ஊர் வளர்கிறதெனில்  குடியிருப்புப் பகுதி வளரவேண்டும். எனவே வளரும் பகுதி நத்தமாயிற்று. (அழிந்து போன ஊருக்கும் நத்தம்  என்ற பெயர் எழலாம். முன்னால் கெடுதல் பொருள் பற்றிச்சொன்னேன்.)  பொன்னியின் செல்வனில் எதிர்முனையில் வருவாளே? நந்தினி. அவள் பெயரின் பொருள், “காமதேனுவின் மகள்”. நந்துதல் = தள்ளுதல், தூண்டுதல். அந்த திரியைச் சற்று நந்து. சோலை நன்கு விளங்கட்டும்,.

நுந்தலின் ஒலிப்பில் நகரம் தவிர்த்தது நுதல். முன்னுள்ள நெற்றி. நகரமும் மகரமும் போலிகள். எனவே முதலும் முன்வந்த பொருளைக்  குறிக்கும். நுந்து, நந்து தமிழில்லையானால் முதலும் தமிழில்லை. (ஒரு சொல்லை மட்டும் பாராதீர், ஒரு தொகுதி பார்த்து, “வடசொல்லா, தென்சொல்லா” என முடிவு செய்யச் சொல்வதன் முகன்மையை உணருங்கள்.) எந்தப் புனைவிலா நூலிலும் ”என்ன சொல்லப் போகிறோம்?” என முதலில் குறித்துப் பின் நூலுக்குள் விளக்குவது ”நுதலிப் புகுதல்” எனப்படும். நுதியும் நுனியும் ஒரே பொருளின் இரு வடிவங்கள்.

இனி முகரச் சொற்களைக் காண்போம். முத்தி= நிறைவு. பிறவிச் சுழற்சியின் முடிவாய் முத்தியைச் சொல்வர். அற்றுவிகம், செயினம், புத்தம், சிவம், விண்ணவம், வேதம் எனப்பல நெறிகள் முத்தியை நாடும். விதம் விதமான சொற்களால் அழைக்கும். First என்கிறோமே, முதல்; அதுவும் நுந்தோடு தொடர்புள்ளதே. முதலிலுள்ளவன் தலைவன்,. முதலி என அழைக்கப் பட்டான். இன்று சாதிப்பெயரானதால், முற்பொருள் பலருக்கும் தெரியாது போகிறது.  நத்தை போலவே மெதுவாய் முந்தி (=நகர்ந்து) ஒற்றைக் கோட்டில் போவதால் முதலை எனும் உயிரிப்பெயர் எழுந்தது.  முந்தல், முற்பிறந்தவன் என்ற பொருளில் வளர்ந்து, முது, முதியன், முந்தையனென்ற சொற்களை உருவாக்கியது. ஒரு பழத்தின் பருப்பு அதன் சதைக்கு வெளியே முந்தித் துருத்திக் கொண்டு இருந்தது முந்திரி. இன்னொரு முந்திரியும் உண்டு. பின்னத்தில் 1/320 என்பது முந்திரி எனப்படும். முந்து இருப்பது முந்து+இரி = முந்திரி,

மேலே கூறிய இத்தனை சொற்களையும் மறுத்தே ஆனந்தம் தமிழில்லை என்று சொல்ல முடியும். என்னைக் கேட்டால், ஆலும் நந்தமும் தமிழ். இரண்டையும் முதலில் கூட்டுச் சொல்லாய்ச் சேர்த்தது சங்கதம்..

அன்புடன்,
இராம.கி.

Monday, July 20, 2020

ஆனந்தம் - 2

ஆனந்தமெனும் அறுபுலச் சொல்லுக்கும் பின் ஏதோவோர் ஐம்புலச் சொல்/நிகழ்வு அடியிலிருக்குமே?  அது என்ன? ஓர் இயலுமை சொல்கிறேன். யாரோ வறியவர் 2 நாள் சாப்பிடாது பசியால் துடித்து நாடி வருகிறார். இரக்கமுள்ள நீங்கள் உணவளித்து, ஓம்புகிறீர்கள். சாப்பிட்டவுடன்,  “வேறு ஏதேனும் வேண்டுமா?” எனக் கேட்கிறீர்கள். “வயிறு நிறைந்தது, ஆனந்தம்” என்கிறார். நிறைவு- ஆனந்தம் தொடர்பு விளங்குகிறதா? physical action இன் முடிவில்  mental expression ஆய் ”ஆனந்தம்” எழும். இன்னும் பல இயலுமைகளை எண்ணலாம். நான் புரிந்து கொண்ட  வரை ”ஆனந்தத்தின்” முதற்பொருள் பெருக்கமும் நிறைவுமே. fulfilment உங்கள் வயிறோ, வேறு சினைகளோ, அதைக் காட்டிக் கொடுக்கின்றன.
     
இதன் இணைச்சொல்லான மகிழ்ச்சிக்கும் மகுதல்> மிகுதல் பொருளுண்டு. சிவகங்கை மாவட்டத்தில் மழையால் ஏரிநிறைந்து பெருக்கெடுத்தால், ”கண்மாய் மகுந்து வழிகிறது” என்பார். மகுந்து இழிதல் (இறங்குதல்) மகிழ்தலாகும். இங்கும் பெருக்கெனும் பூதிகச் செயல் முதலாகும். fulfilment. அதற்கப்புறமே satisfaction. இனி, “இன்பம்” பார்ப்போம். இல்> இன்> இன்பு> இன்பம் எனச் சொல் வளரும். இல்லல் = பொருந்தல், ஏன அளவிற்கும் மேல் உள்ளீடு நிறைந்தால், பொருந்தினால் பெருமகிழ்ச்சி, பெருநிறைவு, பேரின்பம், beyond satisfaction ஏற்படத் தான் செய்யும். இன்னொன்றும் சொல்லலாம். முன்சொன்னது போல், ஆனந்தம், தனிச்சொல் அல்ல, ஒரு கூட்டுச்சொல். ஆல்+நந்தம் = ஆனந்தம். சங்க நூல்களில் கூட்டுச்சொல் தேடின், கிடைக்காது போகலாம். நந்தமே போதுமென இருந்தார் போலும். அச்சொற்கூட்டு சங்ககாலத்தில் எழவில்லை. கிடைத்த தரவுகளின் படி, பற்றி>பத்திக் காலத்தில் எழுந்தது.

ஆல் = அகலின் திரிவு. கிளைகளும், விழுதுகளும் விட்டு அகன்றுபோகும் மரம் அகல>ஆல மரமாகும். அகலல் என்பது, பெரும்பாலான இடங்களில் செடி கொடிகளைப் பொறுத்து, 2 பரிமான விரிவை உணர்த்தும். நீள அகலம் எனும்போது அகலம் 2 ஆம் பரிமானத்தையே குறிக்கும்.  இங்கே ஆல், நந்தத்தின் முன்னொட்டு, சங்கதத்திலும் அப்படியே. ”ஆல்” அங்கு ”ஆ” ஆகும். மோனியர் வில்லியம்சும்,  ஆநந்தத்தை (அங்கு னகரமில்லை.. ஆநந்தம் என்பார்.) ஆ+ நந்தம் என்று பிரித்து, ”அம்” ஈற்றைத் தள்ளி. ”ஆ”வை முன்னொட்டாக்கி (அதன் பொருள் அகல, நிறைய என்பார்) நந்தைப் பாணினியின் தாதுபாடம் iii, 30 என்பதாகக் காட்டி, பல  பயன்பாடுகளை முன்சொன்னபடி இருக்குவேதம் தொடங்கிக் காட்டும். ஆக, ஆல்+நந்தம் என்ற கூட்டு இருக்கு வேதத்திலேயே பதியப் பட்டுள்ளது. இதுபோல் கூட்டு ஆக்கும் புதுச்சிந்தனை இன்னொரு மொழியில் ஏற்படுவதில் வியப்பில்லை. 

இக் கூட்டு தமிழில் பத்தி இலக்கியங்களில் தான் முதலில் பதியபட்டது என்பதும் உண்மை. சங்கதத்தில் nandati வினைச் சொல்லிற்கு, to rejoice, delight, to be pleased or satisfied with என்று பொருள் சொல்வர். (2ஆம் பொருள், நிறைவைச் சுட்டுவோர், பெருக்கெனும் முதற் பொருள் சுட்டார்.) இப்பொருள் சங்கதத்தில் எப்படி வந்ததென்றுஞ் சொல்லார். தமிழில் பிரிப்பது போல் சங்கதத்திலும் ஆ(ல்)+நந்தம் என்று பிரிப்பதும் விந்தையே. அடிப்படைப் பொருள் தமிழைப் போலவே நந்தமென்ற சொல்லினுள் இருப்பது இன்னும் வியப்பாகிறது. இங்கே சங்கதத் தாதுக்கள் பற்றி இடைவிலகல் சொல்லவேண்டும். பலரும் சங்கதத் ”தாது”வும் தமிழ் “வேர்ச்சொல்லும்” ஒன்றெனல்க் கருதுவார்.  கிடையாது. இரண்டும் வெவ்வேறு.

தாது என்பது செடி, மரம் போன்றவற்றின் அடித் தண்டு/ மரம் போன்றது. அதனால் தான் சங்கதத்தில் 2200, 2300 தாதுகளை அடையாளங் காட்டுகிறார். வேரோ, தண்டிற்கும் கீழ்ப்பட்டது. எம் மொழியிலும் 2200, 2300 வேர்கள் உள்ளதாய்க் கேள்விப்பட்டதில்லை. அடிப்படையில் தாது என்பது வினை, பெயர்ச்சொற்களில் வரும் பகுதியே. ”நடந்தேன்” இல்  இலக்கணக் கூறுகள்/ morphemeகளைப் பிரித்தபின் எஞ்சுவது ”நட” எனும் பகுதி. இதையே சங்கதத்தில் தாதென்பார். ”நட” எப்படி வந்தது? இதற்கும் கீழே உள்ளது என்ன? - எனில் சங்கத இலக்கணம் விடை சொல்லாது.  பெரும்பாலும் சங்கத அகரமுதலிகளில் தாதுக்களுக்குக் கீழே யாரும் போவதில்லை. இங்கேயும் nand தாதுவை அடையாளங் காட்டி நகர்வார்.

தமிழில் அப்படியில்லை. இன்னும் ஆழம் போவோம். எனைக் கேட்டால் தமிழ் வேர்ச்சொற்கள் பெரும்பாலும் 100க்குள் என்பேன். (வேறு கட்டுரையில் சொல்வேன். தரவுகள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திலேயே உள்ளன.) இப்படிச் சிற்றெண்ணிக்கையில் இருந்தே சில விதிகளைக் கொண்டு பெருந்தோப்பாய்த் தமிழ்மொழி எழுந்துள்ளது. சரி.  ஆலை ஒதுக்கி, நந்தம் ஆய்வோமா? காலப் பரிமானத்தில் உணரும் ”பெருகல், தழைத்தல், விளங்கல்” என்ற பொருள்களில் (i.e. all these meanings denote dynamic processes), 

30 இடங்களிலும் [நந்த (11), நந்தி(7), நந்திய (7), நந்தும் (2), நந்தின(1), நந்துக (1), நந்துவள் (1)],
நந்தன் எனும் இயற்பெயரில் 2 இடங்களிலும், 
நத்தை/சங்குப் பொருளில் 4 இடங்களிலும்,
நந்தியாவட்டைப் பூவைக் குறித்து 1 இடத்திலும்

ஆக 37 இடங்களில் ஆக்கப்பொருளில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டில், ”நந்து” பயிலும். கெடுதல், அகலல் பொருளில் 6 இடங்களில் பயிலும். பதினெண் கீழ்க்கணக்கிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும்  ”நந்தம்” பழகியது. (தொகுக்காது, ஒரு காட்டு மட்டும் தருகிறேன். ”நில நலத்தால் நந்திய நெல்லே போல”- நாலடி 179) ஆக நந்தம் பெரிதும் பழகிய சொல்லே. அதன் தொடக்கம் கி.மு.600 க்கும் முந்தியுமாகலாம். இன்னொரு குறிப்பும் உண்டு. ஆல்+நந்தம் ஒரு வரிசையெனில், நந்து+ஆல்+ வட்டை = நந்தியால் வட்டை இன்னொரு வரிசை.  அடிச்சொற்களை இப்படி மாற்றிப் பொருத்திச் சொல்விளையாடுவது முதல்மொழியால் மட்டுமே முடியும். கடன் வாங்கி முடியாது. நந்து + ஆல்  வரிசையைச் சங்கதத்தில் நான் கண்டதில்லை. 

இனி நந்தன் எனும் மாந்தப் பெயருக்கு வருவோம். இப்பெயர் (மோரியருக்கு முந்தைய அரச குலத்தார் பெயர்) கெடுதற் பொருளில்  எழுந்திருக்க வழி யில்லை. ”பெருகியவன், பெரியவன் பொருளே இருந்திருக்க முடியும். நந்தருக்கும் தமிழருக்கும் நல்ல உறவே இருந்தது. அவரின் செல்வத்தை வியந்து மாமூலனார் பாடுவார். நந்தர் காலத்திற்கு முன்னும் அங்கு தமிழர் இருந்ததைத்  தமிழரே உணருவதில்லை. அக்காலத்தில் வடபுலத்தில் தமிழிய மொழிகள் இருந்தன. தமிழிய மொழிகளிடை வடமேற்கு மொழியான பாஷா ஊடுருவியது. பாகதம் என்ற கலப்பு மொழி அதன்வழி உருவானது. பாகதத்துள் தமிழ்ச்சொற்கள் பலவுமுண்டு. அதை ஆய்வு செய்யத்தான் ஆட்களைக் காணோம்.   

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இன்னும் ஒரு பகுதியுண்டு.

Sunday, July 19, 2020

குமரி முனை

”கன்யா குமரியில் கன்னி, குமரியென ஏனிரண்டு பெண்பாற் பெயர்கள்?” என்று தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். என் மறுமொழி இது

குல், கும் ஆகிய வேர்கள் திரட்சி, சேருதல், கூடுதல் ஆகிய பொருள்களைத் தர வல்லன. கும்முதல் என்ற வினை திரளும் வினையைக் குறிக்கிறது, கும்>கொம்>கொம்மை என்பது திரட்சியைக் குறிக்கும். கும்>குமர்>குமரி என்பது உடலால் சிறுத்த சிறுமி, பருவம் வரும் போது, உடலால் திரட்சி அடைவதைக் குறிக்கிறது. கும்மித் திரண்டு எழுந்த பெண் என்ற பொருளிலேயே குமரி என்று அழைக்கப் படுகிறாள். குமர்ப் பருவம் என்பது பெரிய பெண் பருவம். அதே போல, ஒரு கண்டத்தின் முனையாய் குறுகிக் கூர்ந்து போகாமல், அகண்டு திரண்டு இருந்ததோடு, முனையாயும் ஆகிப் போனதால், தமிழகத்தின் தென்முனை குமரி முனை என்று அழைக்கப் படுகிறது.. அதற்கு மதப்பொருள் கொடுக்கவேண்டாம்.

இங்கே இன்னொரு சொல்லும் விளையாரும். முனையைக் குறுகியது எனும் சிறுமைப் பொருளில் குல்>குன்>குன்னி என்பது தமிழ்மரபு. குன்னி என்பது கன்னியாகவும் திரியும். சிறியவளாய் இருந்தவள் சட்டெனப் பெரியவளாகிவிட்டாள் என்று பூப்பு நீராட்டுவோம். எனவே கன்னிக்கு ஒருபால் சிறுமைப் பொருளும் உண்டு. அளவிற்கு மீறிய  கூர்மை இல்லாது அதேபொழுது திரண்ட முனை இருப்பதால், குமரியை  முனை என்று சொல்லியே கன்னியென்று அழைத்தார்.

குமரிக்கன்னியைச் (குமரி முனையை) சங்கத மொழி  கன்யா குமரி என்றது. கன்னா>கன்யா  என்று திரிப்பது சங்கதப் பழக்கம். இலத்தீன், பிரஞ்சு, இசுப்பானியம், இத்தாலியம் போன்ற செண்டம் இந்தையிரோப்பிய மொழிகளில் ”நல்ல பையன்” என மாட்டார். ”பையன் நல்ல” என்பார். இந்த வழக்கம் பொதுவாக செருமானிய மொழிகளில் அமையாது, அவர், ”நல்ல பையன்” என்றே சொல்வர். சங்கதத்தில் இருவேறு வழக்கமும் உண்டு.  இங்கே ”கன்யா குமரி” என்பது, “முனை குமரி” என்பது போன்றது. தமிழர் “கன்யா குமரி” என்னும் போது தம்மை அறியாது சங்கத வழக்கத்தைப் பின்பற்றுகிறார். (நாம் மூளைச் சலவை செய்யப்பட்டு வெகுநாட்கள் ஆயின.) தமிழ் மரபைக் காப்பாற்றவேண்டுமெனில் ”கன்யா குமரி:” என்னாது, ”குமரிமுனை” என்று சொல்லவேண்டும்.

குமரிமுனையைக் காப்பாற்றும் குமரியம்மன் அருள் பாலிக்கட்டும்.        

ஆனந்தம் -1

கடந்த சூலை 10 இல், மரு. செம்மல் (Semmal Manavai Mustafa) தன் முகநூல் பக்கத்தில், “ஆனந்தம் தமிழ் சொல்லா ? இல்லையா ?” எனக் கேட்டார். பலரும் தாம்கொண்ட கருதுகோள் அடிப்படையில், ”வடசொல்” என்றார். சிலர் பாவாணரைக் காட்டி, ”தமிழ்ச்சொல்” என்றார். “வடமொழிக்” கூற்று அதிகச் சத்தம் போடுவது நம்மூர் வழக்கம். சங்கதக் கருத்தாக்கம் நம் சிந்தனையை ஆட்டிப் படைக்கிறது. முடிவில், “டும் டும் டும். இதனால் அறிவது என்ன வெனில், ஆனந்தம் எனும் sanskrit சொல்லை தமிழ்ச்சொல் என்ற பாவாணரும், ’ஆனந்தம்மே யாறா வருளியும்(திருவாச.2, 106)’ என்றெழுதிய மாணிக்க வாசகரும் தமிழ் மொழியை சரியாக அறியாதவர்கள் டம் டம் டம்” என்று நகைப்பாக மருத்துவர் இன்னொரு இடுகையிட்டார்.

”அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை என்று பாடிய வள்ளலாருக்கு ஜோதி என்பது வடமொழி என்று தெரிந்திருக்காதோ? பக்தி இலக்கிய காலத்துக்குள் எண்ணற்ற பல வடசொற்கள் தமிழிலக்கியத்தில் சேர்ந்து விட்டன. இன்றுநம் இலக்கியத்தில் ஆங்கிலச் சொற்கள் கலந்ததுபோல. மேயர், பால்கனி என்ற சொற்களைத் தமிழ் என்று வாதிடுவோர் உண்டு. ஆனந்தம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லையெனில் அது பிற்காலத்தில் வடமொழியிலிருந்து வந்து கலந்த சொல்தான்” என்று திரு.மணிவண்ணன் முன்னிகையிட்டார். பேரா. செல்வாவோ, ”என் கருத்து இந்த 'ஆனந்தம்' எனும் சொல்லைப்பற்றியதன்று. ஆனால் நீங்கள் அடிக்கடி கூறும் இக் கருத்து"சங்க இலக்கியத்தில் இல்லையென்றால் அது பிற்காலத்தில் வடமொழியில் இருந்து வந்து கலந்த சொல் தான்" எனும் உங்கள் கூற்று மிகவும் தவறானது மிகவும் அடிப்படையான பிழை கொண்டது” என மறுமொழித்தார்..

திரு. மணிவண்ணன், “இருக்கலாம். ஆனால் சங்க காலத்திலேயே ஆனந்தம் என்ற சொல் வடமொழி இலக்கியங்களில் பரவலாக இருக்கும்போது, தமிழில் அவை மிகக்குறைவாக இருக்கும் போது, அந்தத் தரவை எளிதில் புறக்கணிக்க முடியாது. மேலும், தமிழ் போல் ஒலிக்கும் சொற்களை யெல்லாம் தமிழாகவே கருதும் பழக்கம் தமிழர்களிடையே இருக்கிறது. மேயர், பால்கனி போன்ற சொற்கள் தமிழிலிருந்து தான் ஆங்கிலத்துக்குச் சென்றன என்று கூறுவோரைக் கேட்டிருக்கிறேன். அகராதி பார்த்தாலே எந்தச் சொல் தமிழிலிருந்து வந்தது, எது வடமொழியோடு தொடர்புள்ளது என்று சொல்லமுடியும். அகராதிச் சொற்பட்டியலில் தமிழ் வேருள்ள சொற்கள் ஏனைய தமிழ்ச்சொற்களோடு புணர்ந்து பல புதுச் சொற்களைக் கிளைத்திருக்கும். வடமொழி இரவற்சொற்கள் பிற வடமொழிச் சொற்களோடு புணர்ந்து தமிழிலக்கிய வழக்கில் இல்லாத, தமிழ்ப் பேச்சில் இல்லாத சொற்களைக் கிளைத்திருக்கும். எல்லாமே தமிழிலிருந்து வந்தது என்ற கண்ணோட்டத்தை ஒழித்து விட்டுப் பார்த்தால் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.” என மறுமொழி எழுதினார்.

இவ்வுரையாடல் நடக்கையில், வேறுவேலையில் ஆழ்ந்ததால், நான் பங்குகொள்ளவில்லை. தவிர, சிலவற்றைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. சரிபார்த்த பின் இவ்விடுகை எழுதுகிறேன். ஆனந்தம் வடசொல் என்றவர்,  ”மற்ற இந்தையிரோப்பியனில் இதுபோல் உண்டா?” -என்று பார்த்தாரா? தெரியவில்லை. அப்படியொரு தேடலே இன்றி முன்முடிவில் வடசொல் என்பது தருக்கப் பிழை. மற்ற இந்தையிரோப்பியனில்  bliss, joy, happiness, felicity, rejoice போன்றவை தாம் உள்ளனவே  (இச்சொற்களுக்கீடான மேலை இந்தையிரோப்பியச் சொற்களைப் பார்த்தே சொல்கிறேன்) தவிர, ”ஆனந்தத்தின்” இணையாய் அங்கெதையும் கண்டேனில்லை. அதுவே சிந்திக்க வைக்கிறது. சங்கதம் எங்கு இச்சொல்லைப் பெற்றது?

தவிர, சங்க காலத்திலேயே  வடமொழி இலக்கியங்களில் "ஆனந்தம்" பரவல் என்றவர்,  ”மூலங்களைப் போய்ப் பார்த்தாரா?” தெரியவில்லை. பொதுவாகச் ”சங்கதத்தில் அது, இதுவுண்டு” என்போரில் பெரும்பாலோர் கேள்வி ஞானத்தில் Rhetorical ஆய்ப் பேசுவார். வெகு சிலர் தவிர, பலரும் மூல ஆவணங்களைத் தேடுவதில்லை. தமிழ்ச்சான்று கேட்கும் இவர் மோனியர் வில்லியம்சாவது பார்க்கவேண்டும்,  அவ்வகரமுதலியின் 139 ஆம் பக்கம் சொற்பதிவிற்கு அணைவாகக் கொடுத்த எடுகோள்களில், இருக்கு வேதம் (கி.மு.1200), யசுர் வேதம் சுக்கில பக்கம் Vaajasaneyi Samhita (1200-800 BCE), Tittriiya upanishad (600 BC) என 3  தவிர்த்து வேறெதுவும் சங்க இலக்கியத்திற்கும் முற்பட்டுத் தெரியவில்லை. இந்நூல்களிலும் எத்தனை இடங்களில் ஆனந்தம் பயின்றதென ஆயவேண்டும். எனக்குச் சங்கதம் கொஞ்சமே தெரியும். எனவே தேடலுக்கு மாறாய், இம்மூன்றில் நிறைய இடங்களில் உள்ளதாகவே கொள்கிறேன்.

ஆனந்தம் பயனுற்றதாய் அந்த அகரமுதலியிற் சொல்லப்படும் மற்றவை எல்லாமே சங்க காலம். அல்லது பிந்தையவை, [அதர்வ வேதத்தின் காலக் கணிப்பு சிக்கலானது. அதர்வ வேதத்தை 800-600 BC எனப் பலர் சொல்லினும், அருத்த சாற்றம் (இதிலும் 400 CE வரை இடைச்செருகுண்டு), மனு ஸ்மிருதி ( கி,பி,200) ஆகிய நூல்கள் வேதங்கள் மூன்றென்றே சொல்லும்.  அடுத்து இராமயணம் (400 BC-300 CE), yajnavalkya (300-500 CE), Raghuvamsa (500 CE), Bhattikavya (700 CE), Giitagovindam (1200 CE) என்ற நூல்களை ஒதுக்கலாம்.]  தமிழில்  இச் சொல் நிலை இனிக் காண்போம். கூடவே 9 ஆம் நூ. திவாகர நிகண்டு ”ஆனந்தம் இன்பம் அகமகிழ்ச்சி ஆகும். தொய்யலும் கட்டியும் அப்பெயர் சிவணும்” என்ற 1464 ஆம் நூற்பாவின் வழி ஆனந்தத்தின் பொருளையும் பார்ப்போம்.   ஆனந்தத்தின் முதல் தமிழ் வெளிப்பாடு இதுவல்ல.  9 ஆம் நூ,வின் முன்னும் இச்சொல் பயின்றது.

அப்பர் 5 இடங்களிலும், மணிவாசகர் 41 இலும் பயனுறுத்தினார்.  யாருங் காணா இறைவனை, தான் நேரே காண வாய்ப்புற்ற மணிவாசகருக்கு முழுமுதல் ஆனந்தத்தில் அப்படி ஈடுபாடு. ”கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்டுகொண்டு இன்றே” என்று கோயில் திருப்பதிகம் 6:4 இல் விவரிப்பார். தன்னை ஆட்கொண்டருளியதை வியந்து அதிசெயப்பத்தும் பாடுவார். யார் கதையில் இத்தனை  திருவிளையாடல்கள் நடந்தன?  மணிவாசகர் காலத்தை களப்பிரருக்குச் சற்றுமுன், 3 ஆம் நூ.முடிவு, 4 ஆம் நூ. தொடக்கத்திற்குக் கொண்டு போவேன். பலரும் இதை ஏற்காது, அடம் பிடித்து  9 ஆம் நூ. என்பார். மணிவாசகரைத் தவிர்த்தால், இச்சொல் தொடங்கிய காலம் கி.பி.6 ஆம் நூ. ஆகலாம். பதினெண்கணக்கு நூல்களிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும், சங்க இலக்கியத்திலும் ஆனந்தம் எனுங் கூட்டுச்சொல்லில்லை. (ஆனால், அதன் பகுதியான நந்தம் உண்டு. கீழே காண்போம்).

அடுத்து, ’ஆனந்தம்’ கருத்துமுதல் வாதத்தில் எழுந்ததாய்த் தோற்றுகிறதே? பொருள்முதல் வாதமாய் எப்படிப் பார்க்கலாம்? - என்றாய்வோம்.  (நான் கொஞ்சம் கட்டுப்படி. கருத்துமுதல் வாதச் சொற்களை ஏற்பதில்லை.)  எங்களூரைச் சேர்ந்த  T.பக்கிரிசாமி என்பார், ”அறுபுலன் சொற்கள் ஐம்புலன் சொற்களிலிருந்தே தொடங்கும்.” என்பார். அது உண்மைதான். ”நல்லது, கொடியது, பண்பு, சிறப்பு, அறம்” போன்ற கருத்துமுதற் சொற்களை (conceptual words) அறுபுலன் சொற்கள். (கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு) எனும் ஐம்புலன்களால் இவற்றை அறிய ஒண்ணுமோ? How does a conceptual word form? எண்ணிப் பாருங்கள்.

நெல்லை ஐம்புலனால் அறியலாம். நெல்> அரிசி> சோறு வழி பசியாறலாம். பசியாறின் மனம் அமைதியுறும்.  “நல்லது” என்ற சொல் ஏற்பட நெல் வழிவகுக்கும். சென்னையில் சிலகாலம் நான் வசித்தபகுதி சோழகங்க நல்லூர். அது பல்லவ அரசரால் பார்ப்பனர் அல்லாதாருக்குத் தானமாய்க் கொடுக்கப்பட்டது. ஏரி வேளாண்மை இருந்த ஊர். இங்கே நெல்லூர்>நல்லூர் ஆயிற்று. இதுபோல் தமிழகமெங்கும் உள்ள நல்லூர்கள் எல்லாம் நெற் பின்புலத்தையே காட்டும். பொதுவாக மொழி வளர்ச்சியில் ஐம்புலன் சொற்களே சற்று உருமாறி அவற்றிற்கு அருகில் அமையும் ஆறாம்புலன் சிந்தனைகளுக்குப் பெயராகும். இன்னும் 2 காட்டுகள் பார்ப்போம்.: மதி = சந்திரனைக் குறிக்கும் ஐம்புலச்சொல்.  மதிப்பு, அதிலெழுந்த அறுபுலச் சொல். அரத்தம்,  ஐம்புலச்சொல். அரத்து (= சிவப்பு)  அறுபுலச்சொல். நான் ஆய்ந்தவரை, பெரும்பாலான ஆறாம் புலச் சொற்கள் இப்படியே உருவாகின்றன.

அன்புடன்,
இராம.கி.

Saturday, July 18, 2020

பொதினி / பழனி

பொதினி / பழனி பற்றிக் கேட்டிருப்பதற்கு என் மறுமொழி. என் புரிதலையே நானிங்கு சொல்லுகிறேன். இது சிலருக்கு ஏற்பாகலாம், ஏலாதும் போகலாம்.

“பழம் நீ” எனும் சுவையான மாம்பழத் தொன்மத்தை நான் நம்புகிறவன் இல்லை. அது பொருந்தப் புகலும் மூதிகக் கதை. நம்பிக்கையால், சமயக் கருத்தாளர் அதோடு ஒத்துப் போகலாம். நானும் அதைக்கேட்டுப் புன்முறுவல் பூத்து, எம் பிள்ளைகளுக்குக் கதையாய்ச் சொல்லவும் செய்வேன். ஆனாலும் வரலாற்று உண்மையெனக் கொள்ளேன். ஏனெனில், பழனி பெயருக்கு முன்னால், பொதினி என்ற பெயரும், திரு ஆவினன்குடி என்ற பெயரும் அவ்வூருக்கு இருந்ததை அறிவேன். ”பழனி” எப்போதெழுந்ததென என்னாற் சொல்ல முடியவில்லை. முருகாற்றுப் படையில் அப்பெயரில்லை. ஆவினன் குடி என்றே அங்கு சொல்லப் பெறுகிறது.

நக்கீரர் காலத்திலோ, ஏன் உரை எழுதிய நச்சினார்க்கினியர் காலத்திலோ கூட, பழனி என்ற பெயர் சொல்லப் படவில்லை. வேள் ஆவிக் குடி என்னும் பொருள் பொதினியை ஆவியரோடு சேர்த்துச் சொன்ன அகம் முதற் பாடலோடு பொருந்துவதால், பொதினி என்ற பெயர் முதலில் இருந்து, பின் அது ஆவிநன் குடியானது என்ற முடிவிற்கு வருகிறோம். அகநானூறு, முருகாற்றுப் படையினும் முந்து தொகுப்பப் பட்ட சங்க நூலாகும். திரு முருகாற்றுப் படையைச் சங்க காலத்தின் கடைசிக்குத் தள்ளுவார் உண்டு. நான் அம்முடிவிற்கு இன்னும் வந்தவன் இல்லை.

இனிப் பொதினியின் பொருளைப் பார்ப்போம். பழனிக்கு நீங்கள் போய் இருப்பீர்கள். அங்கிருக்கும் இயற்கை நம்மைச் சற்றே கூர்ந்து கவனிக்க வைக்கும். பின்னாலிருக்கும் மலைத் தொடரை இன்று பழனி மலைத்தொடர் (1800 - 2500 மாத்திரி உயரம்) என்கிறோம். கோடைக்கானலிலிருந்து பழனிக்கு நீண்ட மலைப்பாதை உண்டு. கோடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருந்து, வானம் தெளிவாயிருந்தால், பழனிக் குன்றைக் காண முடியும். சுற்றிவளைத்து வரும்போது அதிகத் தொலைவாய்த் தெரிந்தாலும், நேரே இறங்கினால், குறிஞ்சியாண்டவர் கோயிலிலிருந்து 16/18 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவே பழனிக் குன்று இருக்கும்.

பழனிக் குன்று அம்மலைத் தொடரின் விளிம்பாகும். பழனி ஊரே கூட கிட்டத் தட்ட 325 மாத்திரி உயரத்தில் மேட்டு நிலத்திற்றான் இருக்கிறது. பழனி மலைத் தொடர் எங்கணும் மழைக் காலத்தில் பெருகிவரும் அருவிகளும் ஓடைகளும் மிகுதியானவை. மலைத்தொடரின் வடக்குச் சரிவில் ஓடிவரும் நீர் பல கிளையாறுகளாய் அமைகிறது. அவற்றில் பழனி நகருக்கு மிக அருகில் ஓடிவரும் சண்முக ஆறும் ஒன்றாகும். அது பின் ஆன்பொருநை (=அமராவதி) ஆற்றில் சேருகிறது. வழிந்துவரும் மழைநீரைத் தேக்கி வைத்தால், பழனிக் குன்றிற்கு அருகிலேயே நன்செய் வேளாண்மை செய்ய முடியும், ஓரளவுக்கு தன்னிறைவான குடியிருப்பை (குடி என்றசொல் செயற்கைக் குடியிருப்பை உணர்த்தும் சொல்) ஏற்படுத்த முடியுமென எண்ணி, வேள் ஆவிக் குடியினரே ஓரு பேரேரியை பொள்ளித்து (தோண்டிச்) செயற்கையாய் உருவாக்கியிருக்கலாம். பொள்ளித்த ஏரி பொய்கை எனப் படும். அங்குள்ள ”சரவணப் பொய்கை” மூதிகத்தை முன்வைத்து இன்றும் பணம்பண்ணும் காட்சி உண்டு.

அந்த ஏரி பழனியின் இருப்பை, பொருளியலை, உறுதிசெய்யும் அமைப்பு ஆகும். ஊருக்கே கூட அந்த ஏரியாற் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதே என்கருத்து. வேள்ஆவிக் குடி ஏரி என்பதற்கு வடமொழிச் சார்பு கொடுத்து, வேளாவிப் புரி ஏரி என்று சொல்லிப் பின் வேயாவிப் புரி ஏரி. ஆக்கி இன்றைக்கு வையாபுரி ஏரி என்று மேலும் திரித்துச் சொல்கிறார். அந்த வேளாவி ஏரி தன் பரப்பளவில் மிகவும் பெரியது. அச்செயற்கை ஏரி யின்றேல், பழனி நகரேயில்லை.

பொள்தல்>பொள்ளுதல் = தோண்டுதல். பொளுநிய?பொளுனிய ஏரி பொளினி.  ளகரம் டகரமாவதும், தகரமாவதும் பேச்சுத் தமிழிலுள்ள பழக்கம். பொளினி>பொதினி. இனிப் பொள்ளுவதும் பள்ளுவதும் ஒரே பொருள்தரும் வினைச்சொற்களே. பள்தல்>பள்ளுதல்>பளுனுதல்>பழுனுதல் = பள்ளம் தோண்டல். பழுனி>பழனி என்பதும் பொய்கைப் பொருளைக் குறிப்பதாய் அகரமுதலிகள் குறிக்கும். பழனம் என்பதும் பொய்கையைக் குறிக்கும். திரு + ஆவினன் குடியை திருவாவினன் குடி என்றுசொல்லி வாவிக்கும் பொய்கைப் பொருளை ஒருசிலர் காட்டுவதுண்டு.

எப்படியோ, 3 சொற்களுக்கும் (பொதினி, திருவாவினன் குடி, பழனி என்ற 3 சொற்களுக்கும்) ஏரிப்பொருள் தானாக அமைந்திருக்க வழியில்லை. ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். பெரும்பாலான பழைய தமிழக ஊர்ப் பெயர்கள் இயற்கையை/ நிலத்தை ஒட்டிய செயற்கையோடு சேர்ந்து அமைந்திருப்பதும், நம் கருதுகோள் சரியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. பின்னால் ஏரியில் இருந்து குன்றிற்கும், பின் நகருக்கும் இப் பெயர் நகர்ந்திருக்கலாம். முடிவில் மலைத் தொடரையே நாம் பழனி மலைத் தொடர் என்று குறிக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 13, 2020

machine and related words

ஒருமுறை machine learning என்பதை எப்படித் தமிழிற் சொல்வது? - என்று கேட்டார், அதைச் சொல்ல நினைக்கும் போது, machine, engine, hickey, gadget, equipment, apparatus, tool, device, facility, இன்னும் சில கருவிகள் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணினேன்.

முதலில்  machine, engine பார்ப்போம். இவை எல்லாவற்றையும் பொறியெனச் சொல்லும் பழக்கம் நம்மில் நிறையப் பேருக்கு உள்ளது. அது சரியில்லை. Engine is a driver. machine can be either a driver (ஓட்டி) or a driven one (ஓடி). It justs converts one form into another. இருவளை (two wheeler), விலங்கிழுப்புச் சகடம், பல்வேறு வையங்கள் (wagons) ஆகியவற்றை வண்டியென்ற பொதுப்பெயர் கொண்டு அழைக்கிறோம். ஒவ்வொரு வண்டியிலும் ”ஓட்டி, ஓடி” என 2 பாகங்களுண்டு.

1. சகட்டில் (car) கன்னெயைக் காற்றில் எரித்து புகையுண்டாக்கி அதை உலக்கை-உருளைப் (piston-cylinder) பிணைப்பிற்குள் அனுப்பி அமைவது எந்திரம் (engine) என்னும் ஓட்டி அல்லது துரவு (drive).

2. சட்டகையும் (chassis) சக்கரங்களுஞ் (wheels) சேர்ந்தது ஓடி (driven machine).

ஓட்டியையும் ஓடியையும் கவைக்கும் முறை சகட்டிலும் இருவளையிலும் வேறுபடும். விலங்குச் சகடத்தில் ஓட்டி என்பது மாடு/குதிரையெனும் விலங்கைக் குறிக்கும். ஓடி என்பது  சட்டகையையும், சங்கரங்களையும் சேர்த்துக் குறிக்கும்..

காட்டாய், தெறுமப் புயவு மின்னாக்கி (thermal power generation) அல்லது அனல் மின் நிலையத்தில் உயரழுத்த நீராவி ஒரு சுழலியைச் (turbine) சுற்றுகிறது. அந்தச் சுழலியோடு ஒரு மின்னாக்கி இணைக்கப் பட்டு அலைமின்சாரத்தை (alternating current) உருவாக்குகிறது. இதில் சுழலி என்பது engine. மின்னாக்கி என்பது ஒரு electrical generating machine. இதேபோல் புனல்மின் நிலையத்தில் நீர்ச்சுழலி என்பது driver. மின்னாக்கி என்பது driven machine. தமிழில் எ(ல்)ந்திரம்> எந்திரமென்பது எற்றுதல் (= தள்ளுதல்) தொடர்பாய் எழுந்த சொல். இதற்கு இயக்குதற் பொருள் வரும்படி இய(ல்)ந்திரம் என்றுஞ் சொல்வர். எல்லுதல்/இயலுதல் என்ற இரு செயல்களுமே ஒரு machine ஐ, இன்னொரு machine இயக்குவது குறித்தது.. காட்டாக நாம் பயன்கொள்ளும் சீரூந்து என்பது 4 பேரோ, 8 பேரோ செல்லும் ஒரு சகடம் (car) ஆகும். இது வெறுமே ஒரு machine அல்ல. இதனுள் 2 machine கள் உள்ளன.  4 சக்கரமிருக்கும் சகடத்தை (machine 1) சகடத்தின் எந்திரம் என்னும் 2 ஆம் machine இயக்குகிறது.

அப்படியெனில் machine ஐ எப்படித் தமிழில் சொல்வது? இதற்கான விடை யெளிது. ஆனாற் கவனம் வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் சீராகச் செய்யவும், தன்னால் இயலாத பெரு வேலைகளை தன் சிந்தனையால், கருவிகள்/கட்டுப்பாடுகளாற் செய்யவுமே மாந்தன் machine ஐக் கண்டுபிடித்தான். இதில் முகன்மையானது அச்செடுத்தது போல் ஒப்பிட்டு மீளச் செய்யும் வேலையின் நேர்த்தி.

மா என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு அளவு, ஒப்பீடு, அதிகம், வலி ஆகியவை பொருட்பாடுகளாகும். .ஆங்கிலத்தில் machine ஐ, ”1540s, "structure of any kind," from Middle French machine "device, contrivance," from Latin machina "machine, engine, military machine; device, trick; instrument" (source also of Spanish maquina, Italian macchina), from Greek makhana, Doric variant of Attic mekhane "device," from PIE *magh-ana- "that which enables," from root *magh- "to be able, have power." என்று குறிப்பிடுவார்.

இந்த வரையறையில் முகன்மை ”மா” என்பதே. தமிழில் அன்னுதல் என்பது போலுதல் பொருள் கொள்ளும்.. மா+அன்னுதல் என்ற சொற்கள் புணரும் போது உடம்படுமெய்யாக யகரம், வகரம் பெரும்பாலும் பயன்படும் ஓரோ வழி ககரமும் சிலபோது பயன்படலாம். இங்கே அதைப் பெய்து மா+க்+ அ(ன்)னுதல் = மாக(ன்)னுதல் என்ற கூட்டுச்சொல்லை உருவாக்கலாம் ”ஒன்றைப் போல் இன்னொன்றைச் செய்துகொண்டிருந்தலை அது குறிக்கும். வலி, அதிகம் என்ற பொருளும் இதனுளுண்டு. ஒரு machine இப்படித் தானே இயங்குகிறது? machine = மாகனை அல்லது மாகனம். நான் சில காலமாய் மாகனத்தைப் பயின்று வருகிறேன். பலரும் இதைக் கேள்வி கேட்கிறார். என் விடை சிறியது. ”கருவி என்பது நம்மிடம் பலகாலம் இருந்தது. 200/250 ஆண்டுகளிற்றான் machine எனும் பெருங்கருவியை அறிந்தோம். machine ஐக் குறிக்கக் கருவியம் என்பதைக் காட்டிலும் மாகனம் எனக்குப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது.

பொறி என்றசொல் எந்திரத்திற்கு ஒரு மாற்றே (குறிப்பாக உள்ளக எரிப்பு இயந்திரத்திற்கு - internal combustion engine - அதுவொரு மாற்று.) அதன் பொருளை நீட்டி மாகனத்திற்கு இணையாகப் பயில்வதற்கு நான் தயங்குவேன். (இந்தத் தெளிவுகள் எனக்கு வர நெடுங்காலம் பிடித்தது. என்னுடைய பழைய ஆக்கங்களில் எந்திரம், பொறி என்ற சொற்களின் பயன்பாட்டில் சற்று குழப்பம் இருந்திருக்கிறது, இப்பொழுது 4,5 ஆண்டுகளாய் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கிறேன்.) என் பரிந்துரை machine learning = மாகனப் பயிற்றுவிப்பு. (மாகனம் பயில்கிறது. நாம் பயிற்றுவிக்கிறோம்.)

அடுத்தது hickey யும் gadget உம்.

hickey (n.) = "any small gadget," 1909, American English, of unknown origin. என்றே ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்லும். *gadget  என்பதற்கு, 1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism, " dim. of ga^che "staple of a lock." என்று சொல்வர். staple of the lock என்பதைக் கொக்கி என்றே தமிழில் சொல்கிறோம்; பூட்டைத்திறந்து காட்டி, "சாவியை இப்படிப்போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள்.

கொடுக்காப்புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப்புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இற்றை நகர்ப்புறத் தமிழர் சற்றும் அறியாப் பழம். நாட்டுப் புறங்களிலுங் கூட இப்போது அழிந்துகொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் இது அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும். வாலிற்குக் கூட கொடுக்கென்ற பொருளுண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை ஆகும். மேலைமொழிகளில் get என வருவது போல் கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமையமுடியும்.

கொக்கட்டை என்பதைச் சொல்வதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும். hickey ஐயும் அப்படி அழைக்கும் போது gadget ஐக் கொக்கட்டை என்றே அழைக்கலாம். இன்னுஞ் சில தொடர்புள்ள சொற்களுண்டு. எல்லாவற்றையும் கருவி என்றே ஒரேயடியாய் அழைப்பது நம்மில் பலருக்குள்ள சோம்பல் என்றுதான் தோன்றுகிறது. (எனக்கும் அது இருந்தது. இப்போது அது தவறு என்று உணர்ந்ததால் துல்லியங் கட்ட வேறு சொற்களைக் கீழே பரிந்துரைக்கிறேன்.

Equipment இது இருவகையாய் ஆனது. ஒன்று பொருள் தாங்குவது. இன்னொன்று செயல் செய்வதற்கானது. முதல்வகையைச் செய்கலன் என்றும், இரண்டாம் வகையை ஏந்தம் என்றுஞ் சொல்லலாம். முதல்வகை வேதியாலைகளிலும், இரண்டாம் வகை மாகனவியல், மின்னியல் போன்ற மற்ற மானுறுத்தல் (Manufacture = மானுறுத்தி) ஆலைகளில் பயன்படும்.

அடுத்தது apparatus (n.) "a collection of tools, utensils, etc. adapted as a means to some end," 1620s, from Latin apparatus "tools, implements, equipment; preparation, a preparing," noun of state from past participle stem of apparare "prepare," from ad "to" (see ad-) + parare "make ready" (from PIE root *pere- (1) "to produce, procure"). ஒரு பொருளைப் பண்ணுவதற்குப் பயன்படுவதால் இதைப் பண்ணம் எனலாம்.

அடுத்தது tool இதன் அடிப்படை tawlen என்ற பழஞ் செருமானியத்தில் உருவாகியது. taw (v.) ”to prepare" (leather), from Old English tawian "prepare, make ready, make; cultivate," also "harass, insult, outrage" to do, make," from Proto-Germanic *tawōjanan (source also of Old Frisian tawa, Old Saxon toian, Middle Dutch tauwen, Dutch touwen, Old High German zouwen "to prepare," Old High German zawen "to succeed," Gothic taujan "to make, prepare"), from Proto-Germanic root *taw- "to make, manufacture" (compare tool (n.)). தமிழில் ஒன்றைத் தக்கதாகுவதற்கு தகைத்தல் என்ற தன்வினையுண்டு. இன்னொன்றைத் தக்கதாக்க தகைவித்தல் என்ற பிறவினைச்சொல் உண்டு. இதில் விளையும் பெயர்ச்சொல்லான தகைவி tool க்குச் சரிவரும்.

அடுத்தது device ஒரு பொருளைச் செய்வதற்காக விதப்பாய்ச் செய்யப்பட்ட கருவி = device. Facility = ஏந்து (ஏல்தல் வினையில் கிளர்ந்த சொல் இது ஏல/இயலச் செய்வது)

Machine = மாகனை மாகுதல் என்பது மாத்தல்= பருக்குதல் என்றவினையில் கிளர்ந்த சொல்.. மாகு = பெரியது. மாகனை = பெரியதாய்ச் செய்ய உதவும் அலகு.

Unit = அலகு
Arrangement = அடங்கல், அடங்கு (ஒரு கூடைக்குள்/கட்டகத்துள் விதவிதமாய் ஒழுங்கு செய்வது)
Means of production = புதுக்க ஏது
Workshop = பட்டறை
Drive = துரவி (ஒன்றைத் துரத்துவது துரவி)
Vessel = கலன், ஏனம்
Utility = ஊடுழை
widget = இடுக்கை
Function = பந்தம்

அன்புடன்,
இராம.கி.

சொத்தாவணங்கள்

ஒரு சமயம்,   தி இந்து (தமிழ்) இதழில் “சொந்த வீடு” எனும்பகுதி 2ஆம் பக்கத்தில் ”சொத்து ஆவணங்களில் புழங்கும் சொற்கள்” என்ற கட்டுரை வெளிவந்தது. அது ஓவியா அர்ஜுன் என்பார் எழுதியது. அதிலுள்ள சொற்கள் சில தமிழாகவும், சில வேற்றுமொழிச் சொற்களாகவும் இருந்தன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். விளக்கம் அவருடையது. பிறைக் கோட்டினுள் என் தமிழாக்கத்தையும் சொல்தொடர்பான சில குறிப்புகளையும் கொடுத்துள்ளேன். இச்சொற்கள் பல்லவர், முற்காலப் பாண்டியர், பெருஞ்சோழர், பிற்காலப்பாண்டியர், விசயநகரப் பேரரசு, சுல்தான்கள் அரசு, கிழக்கிந்தியக் கும்பணி வழியே ஆங்கிலேய அரசிற்கு வந்து இற்றை இந்திய அரசமைப்பின் கீழ் புழங்குகின்றன. வெவ்வேறு வரலாற்றுக்காலத் தாக்கம் இச்சொற்களுக்குள் உண்டு. .

பட்டா: ஒரு நிலம் யார் பெயரில் உள்ளதென்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் ஆவணம். (இச்சொல் தமிழே. நில உரிமையாளருக்குக் கொடுக்கப்படும் ஆவணம் பட்டா.. இதன் படி வருவாய்த்துறையில் இருக்கும்.)

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டிலுள்ளது என்பது தொடர்பான விவரங்களடங்கிய வருவாய்த் துறை ஆவணம் (இதுவும் தமிழே. சிட்டையிலிருந்து உருவாகியது சிட்டா ஆகும். சிட்டை என்பது தமிழ்க்கணக்கு ஆவணங்களில் ஒன்றான முதற்குறிப்பு. சிட்டா என்பது வருவாய்த்துறை ஆவணம். நில உரிமையாளருக்கு இதன் படியைக் கொடுப்பர்.)

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப்பகுதியிலுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். (கிராமம் என்பது கம்மம்/காமம் எனும் தமிழ்ச் சொல்லின் சங்கத வடிவம். காமமென்ற சொல் பாகதத்திலுமுண்டு. இலங்கையில் பரவலானது. தமிழில் காமம் அரிதே பயிலும். ஊரென்பதே நம்மூரில் பெரிதும் புழங்கும். அடங்கலென்ற சொல் தமிழே. சிட்டை விவரங்களே ஊர்ப்பார்வையில் எல்லா நிலங்களுஞ் சேர்த்து அடக்கிக் காட்டப்படும். அடங்கலென்பது வருவாய்த் துறை ஆவணம். இதன் படியை நில உரிமையாளரிடம் கொடுக்கமாட்டார். அரசிடம் மட்டுமேயிருக்கும்.)

புல எண்: நில அளவை எண்

கிராம தானம்: கிராமத்தின் பொதுப்பயன். (’காமதானம்’ என்று சொன்னால், இற்றை நிலையில் தவறான பொருளுணர்த்தும். எனவே ஊர்க்கொடை என்று சொல்லலாம். தானம் தமிழே. ’தந்தது’ என்று பொருள்படும். காமக்காவற் பொருளில் ஒருகாலத்தில் ’காம ஆட்சி’ பயன்பட்டது. புத்த காஞ்சியின் காவல் தெய்வம் தாரா தேவியே காம ஆட்சியாவாள். இன்று இவளைக் காமாட்சி என்றாக்கிக் காமக்கண்ணி எனப் புரிந்து அம்மனாக்கி விட்டார்.)

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட நிலத்தைத் தானமாய் அளித்தல். [இது தெய்வத்தானம். பெருமானருக்குக் (ப்ராமணருக்கு) கொடுத்தது பெருமத்தானம் (ப்ரமதானம்). இன்றைக்கு மங்கலம் என முடியும் ஊர்களில் பெரும்பாலானவை ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலங்களே. பெருமானர் அல்லாதாருக்குக் கொடுத்த ஊர்கள் நெல்லூர்>நல்லூரென முடியும். சென்னை வேளச்சேரி ஒரு காலத்துச் சதுர்வேதி மங்கலம். சென்னை அண்ணாநகருக்கு அருகிலுள்ள திருமங்கலமும் அப்படியே. இற்றைச் சோழிங்கநல்லூர் ஒருகாலத்து நெல்லூர்.

அற்றுவிகம் (ஆசிவிகம்), செயினம், புத்தம் போன்ற வேத மறுப்பு சமயங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டவை பள்ளிச் சந்தம் எனப்பட்டன. பற்றி (பக்தி) இயக்கத்தின் விளைவாய், வேத மறுப்புச் சமயங்கள் நம்மூரில் குறைந்தபோது அவ்வாலயங்கள் பலவும் சில சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றப்பட்டன. அன்றேல், பள்ளிச்சந்த நிலங்கள் சிவ, விண்ணவக் கோயில்களுக்கு மாற்றியெழுதப் பட்டன. இன்றோ கோயில்களைச் சுற்றியுள்ள இது போன்ற நிலங்கள் பல்வேறு ஊர்ப் பெரியவர்களால் கவர்ந்துகொள்ளப் பட்டுள்ளன. பெரும்பாலானவற்றை அடையாளங் காண்பது சிக்கல்.]

கிராம நத்தம் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பயன்பாட்டுகாக ஒதுக்கப்பட்டநிலம். (ஊர்நத்தம் நல்ல தமிழ்ச்சொல். public பயன்பாடின்றி private புழக்கத்திற்கு மட்டுமானது நத்தம். private க்குச் சொல்லைத் தேடி இன்று பலர் அலைகிறார். என்னைக் கேட்டால் நத்தம் பொருத்தமாய் அமையும். தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.)

இனாம்தார்: பொதுநோக்கத்துக்காகத் தனது நிலத்தை இலவசமாய் அளித்தவரைக் குறிக்கப் பயன்படுத்துஞ் சொல். (நத்த நிலத்தை இலவயமாய் ஊர்க்கொடைக்குக் கொடுத்தவர். கொடையாளர்.)

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு எல்லைகளைக் குறிப்பது. [பலகோணப் பரப்பின் அளவும், பக்கநிலங்கள் யாருக்குச் சொந்தமென்பதும் இச் சொல்லின் பொருள். வியல்தல் = விரிதல்; வியம் = extent. வியத்தீரணம் என்பது சரியான தமிழாக்கம்.]

ஷரத்து: பிரிவு (பிரிவையே வைத்துக்கொள்ளலாம்.)

இலாகா: துறை (துறையையே வைத்துக்கொள்ளலாம்.)

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தல் (கிறுவுதல், கீறல் என்பவை கல்வெட்டில் பதித்தலைக் குறிக்கும்.. அக் காலத்தில் இது கிறயம் எனப்பட்டது. இன்றுங் கூடச் சிலர் அப்படி எழுதுவார். பொத்தகம் புத்தகமானது போல் மீத்திருத்தமாய் இது கிரயமாகிப் போனது. நல்ல சொல் கிடைக்க வல்லினம் பயன்படுத்தினாற் போதும்.)

இறங்குரிமை: வாரிசுரிமை. (ஒருவரின் வழி வருகிறவர் வாரிசு. நல்ல தமிழே.)

வில்லங்கச் சான்று: ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர் அதனை மறைத்து விட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம். (பல்வேறு மோசடிகளை இந்த வில்லாங்கச் சான்றே வெளிக் கொணரும். இப்பொழுது இச்சான்றுகளிலும் மோசடி நடக்கிறது.)   .     .                         
குத்தகை: ஒரு நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

தாய்ப்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம் இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்ததென்பதை அறிய உதவும் முந்தையப் பரிவர்த்தனை ஆவணங்கள். (பத்திரம் = ஏடு, ஆவணம். பரிவர்த்தனை = பரிவட்டனை. வட்டுதல் = கொடுத்து வாங்குதல். cycle of exchange.)

ஏற்றது ஆற்றுதல் = குறித்தவகை பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை (அனுபவ பாத்தியதை = நுகர்ச்சிப் பங்கு.)

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல் (சுவாதீனம் = தன்னுமை.)

ஐமாபந்தி = வருவாய்த் தீர்வாயம் (இத் தமிழ்ச்சொல்லையே பயன்படுத்தலாம்.)

நன்செய் நிலம்: அதிகப்பாசன வசதி கொண்ட நிலம் (வசதி = ஏந்து)

புன்செய் நிலம்: பாசனத்தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்

நல்ல தமிழச்சொல்லைப் பயன்படுத்தினால் பதிவு அலுவங்களில் ஏற்பார்களா என்பது கேள்விக்குறி. தமிழ் நாட்டில் தமிழ் அப்படித்தான் இப்போது உள்ளது. ”நல்ல தமிழா? வீசை என்ன விலை?” - என்று கேட்கும் நிலையில் தமிழர் பலரும் உள்ளார். இருந்தாலும் முயல்வோம்.

அன்புடன்,
இராம.கி.     

சிகிச்சையும் வைத்தியமும்

"சிகிச்சையும் வைத்தியமும் தமிழ்ச்சொற்களா?" என்ற கேள்வி ஒருமுறை எழுந்தது. இவை இரண்டும் இருபிறப்பிச் சொற்கள். இவற்றின் வேர் தமிழில் இருந்து பின் வடமொழியில் பழகியிருக்கின்றன. முதலில் சிகிச்சையைப் பார்ப்போம்.

சுல்>சொல் என்பது ஒளியை, மலர்ச்சியைக் குறிக்கும் வேர்ச்சொல். 2006 இல் கொன்றையும் பொன்னுமென்ற தொடரை எழுதினேன். அதன் நாலாம்பகுதியில் [http://valavu.blogspot.in/2006/01/4.html] இவ்வகைச் சொற்கள் வரும். சுல்லில் எழுந்த இருபிறப்பிகள் சுல்>சுல்+த்+த்+அம்= சு(ல்)த்தம்> சுத்தம் என்பதும் சுல்+க்+அம்= சு(ல்)கம்>சுகம் என்பதுமாகும். சுத்தம் என்பது தூய்மைப்பொருள் கொள்ளும். சுகம் என்பது நலப்பொருள் கொள்ளும். இரண்டு சொற்களுமே வடமொழியில் புழங்கியவை, ஆனால் தமிழ்வேர் கொண்டவை. சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் சோர்வில்லாமல் முகத்தில் ஒளிவிடுவது போல் இருக்கிறோமா என்று பொருள். health என்பதற்கு நாம் அச்சொல்லையே புழங்குகிறோம். மேலையர் ”கொழிதா இருக்கீங்களா?” என்று கேட்பார் கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம். கொழித்தல் = செழிப்புறுதல். to be on the increash, flourish. குல்>குலி>கொலி>கொழி. கொழி-த்தல் > கொழு-த்தல். கொழிவி-த்தல் = செழிப்பி-த்தல் = to heal. 

வித்தை என்பது தொடக்க காலத்தில் வில் வித்தையையே குறித்தது. விலங்கின் அருகே போகாது தொலைவில் இருந்தே அம்புவிட்டு விலங்கை விழுத்தாட்டுவது விலங்காண்டி மாந்தனுக்குப் பெருங்கலையாகத் தெரிந்தது. வில்+த்+தை = வி(ல்)த்தை> வித்தை. பின்னால் இதுபோல எல்லாவித அருங்கலை, அறிவுகள், படிப்புகள், எல்லாங் கற்றவர் வித்தைக் காரன் ஆனார். வித்தை விச்சையென்று பேச்சுவழக்கிற் சொல்லப்படும். சுகவிச்சை என்பது நோய்வாய்ப்பட்டவனை, காயப்பட்டவனைச் சுகப் படுத்தும் கலை. சுகவிச்சை>சிகிச்சை (cikitsaa) என்பது சங்கதத்தில் போனது. 

தமிழில் சாயுங்காலம் என்பதை ஒரு சாரார் ”சாய்கிறச்சே” என்று சொல்லி பெயர்ச்சொல் போலவே ஆளுவர். அது இன்னுந் திரிந்து சாய்கிரட்சை> சாயரட்சை>சாயரக்ஷை என்று சங்கத வண்ணம் கொள்ளும். இதுபோல் பல சொற்கள் வடப்பூச்சு பெற்றுள்ளன. நாமும் அவற்றில் மயங்கி அவற்றைச் சங்கதச் சொல்லென்றே சொல்வோம். சுகவிச்சை>சிகிச்சையான கதை இப்படித் தான். எந்தச் சங்கத அகரமுதலியிலும் இதற்கு வேர் கிடையாது. ஆனால் பாகதம், சங்கதத்தில் இது நன்றாகவே புழங்கும். (சாமவிதான பிராமணா, மனுநீதி, யஜ்னவல்க்கீயம், மகாபாரதம் போன்றவற்றில் இது பயன்பட்டிருக்கிறது.) இத்தகைய சொற்களை இரு பிறப்பிகள் என்போம். தோற்றம் இங்கிருக்கும் ஆனால் புழக்கம் அங்கிருக்கும். (நடுச்செண்டர் என்கிறோமே, அதுவும் ஒருவகை இருபிறப்பி தான். பாதி தமிழ், பாதி ஆங்கிலம். புழக்கம் மட்டுமிங்கே. இது போன்ற சொற்களும் பேச்சுத்தமிழில் நிறையவுண்டு.) சிகிச்சையைச் சிலர் “ஸ்பஷ்டமாய்” ஒலிக்கவேண்டும் என்றெண்ணிச் சிகிழ்ச்சை என்பார். குமரிமாவட்டத்தில் இது அதிகம்.

அடுத்தது வைத்தியம். வித்தை போல வில்லில் கிளைத்த இன்னொரு சொல்லுண்டு.. வெளிப்பாட்டுப் பொருளில் அது வரும். செடியில் வெளிப் பட்டுக் காய்ந்து உலர்ந்து விழுந்த பூ ”வீ” எனப்படும். காய்க்குள், பழத்துள் வெளிப்படுவது வில்+த்+து = வித்து. வித்துக்கு விதை என்றும் பெயருண்டு. வித்தை மீண்டும் மண்ணிலிட்டால் (வித்திட்டால் என்றுஞ் சொல்வோம்) செடி, தளிர் போன்றவை வெளிப்படும். வெளிப்படுவதை முளைத்தல் என்றுஞ் சொல்வோம். வித்து என்பது அடிப்படையில் விதையை மட்டுமின்றி மரஞ் செடி போன்றவற்றையும் உணர்த்தும். (அறிவு தொடர்பான வடமொழிச் சொற்கள் இந்த வெளிப்பாட்டுப் பொருளிலேயே வரும். ஆனால் அவர்கள் காட்டும் வேர் பொருந்திவராது. தமிழ்வேரே சரியாகப் பொருந்தும்.)

முல் என்றாலும் வெளிப்படுவது, தோன்றுவது என்று பொருள் கொள்ளலாம். முல்> முள்> முளை என்றும் அச்சொல் திரியும்.முல்> மூல்> மூலிகை என்பது மண்ணிலிருந்து வெளிப்படும் மரஞ் செடி கொடிகள். பல்வேறு மூலிகைகளையே அன்று மருந்தாய்க் கொண்டார். மூலிகை> முலிகைக்கும் ஆங்கில medicine க்கும் தொடர்புண்டு. அதேபோல் முல்> முலுந்து>முருந்து> மருந்து என்பதும் மூலிகையோடு தொடர்புடையதே. மருந்து கொடுப்பவன் மருத்துவன் ஆவது போல் வித்துக் கொடுப்பவன் வித்துவன்/ வித்தியன் ஆவான். ”வித்தியன்” ”வைத்தியனாய்” வடக்கே பலுக்கப் படும். இதுவும் ஓர் இருபிறப்பி. நான் தொடர்ச்சியாகச் சொல்லி வந்துள்ளேன். இங்கிருந்து அங்கு போயிருக்கிறது. அங்கிருந்து இங்கு வந்திருக்கிறது. இரண்டையும் மறுப்பவன் நானில்லை. ”இந்தையிரோப்பியம் தனி, தமிழியம் தனி” என்று சொல்லி ”தமிழியம் இந்தையிரோப்பியத்திடம் கடன் வாங்கியது, ஒன்றும் தரவில்லை” என்பவரே இதை மறுக்கிறார்.
       
சும்மா பாவாணரைத் திட்டுவதற்கு மாறாகப் பாவாணரையும், அவர் வழி வந்தோரையும் ஆழ்ந்து படித்தால் நான் சொல்லும் மொழிக்குடும்பு உறவு புரியும். இல்லையென்றால் எல்லாமே தலைகீழாகத் தான் தென்படும். ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். காதை மூடிக்கொள்கிறவருக்கு நான் ஒன்றுஞ் சொல்லமுடியாது.

வித்துவம் (= மருத்துவம்) என்ற சொல்லின் பொருள் பற்றிச் சிலர் ஐயுறுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பெயர் பெற்றதொரு சிவநெறிக் கோயிலையும், இன்னொரு விண்ணெறிக் கோயிலையும் அவற்றின் ஊர், இறைவன் பெயர்களையும் வேர்ச்சொல் வழி புரிந்துகொண்டால் ஐயம் வராது. வைத்தீஸ்வரன்கோயிலென இன்று சங்கதம் ஊடாகச் சொல்லப்படும் ஊரின் பழம்பெயர் புள்ளிரிக்கு வேளூர். இதைப் புள்ளிருக்குவேளூர் என்று திரித்துப் புள் (சடாயு)+ இருக்கு (வேதம்)+ வேள் (முருகன்)+ ஊர் (சூரியன்) என்று பிரித்து ஒரு கதையைப் பொருந்தப் புகல்ந்து சங்கதத் திருப்பம் நடக்கும். அவ்வூர் இறைவர் பெயர்களுக்கும் இதற்கும் பொருத்தமே இருக்காது. எல்லாம் மூதிகக் கதைகளாய்ச் சொல்லப்படும். இதுபோன்ற மூதிகங்கள் நம்மூரில் பல கோயில்களில் சங்கதத் தாக்கத்தால் சொல்லப்படும். அவற்றை எல்லாம் உண்மையென எண்ணி நாமும் தடுமாறிப் போவோம். இப்பெயர்த் திரிப்பு தேவார மூவர் காலத்திற்கு முன்பே நடந்திருக்கலாம்.

இதற்கு மாறாய் புண்ணின் வேர்ச்சொல் புள்ளாவதால் (புள்ளப்பட்டது புண்) புண்ணாகவே பொருள்கொள்ளலாம். இரித்தல்= நீக்குதல், விலக்குதல்; எனவே புள்ளிரிக்குதல் = புண்ணைக் குணப் படுத்தல். என்று பொருளாகும் புள்ளிரிக்கு வேள் என்பவர் புண்ணைக் குணப்படுத்தும் வேள். எனவே பண்டுவர். வினை தீர்த்தான் என்ற இன்னொரு பெயரும் இங்கு இறைவருக்கு உண்டு. உடலுக்கு வந்த வினை தீர்ப்பவர். இன்றும் வினையென்ற சொல்லுக்கு நோய், வலி, கெடுதல் பொருள்கள் கொள்ளப்படுகின்றன. வினைதீர்த்தானென்பது பண்டுவருக்கு இன்னொரு பெயர். நினைவு கொள்ளுங்கள். தானாக ஏற்படும் புண், அறுவையால் ஏற்படும் புண் என இரண்டையும் குணப்படுத்துபவர் பண்டுவராவார். வித்தென்பது முன் சொன்னபடி மூலிகை மருந்து. வித்துவர்= மூலிகை மருத்துவர். வித்தீசர்= மருந்து தரும் ஈசர். வித்தீசரை வித்தீஸ்வர்> வைத்தீஸ்வரெனச் சங்கதத்தில் பலுக்குவார். மீண்டுமதைக் கடன்வாங்கி ’அன்’ ஈற்றை நாம் சேர்ப்போம். இறைவன் பெயர் வைத்தீஸ்வரனாகும். வினை தீர்த்தான், வித்தீசனோடு புள்ளிரிக்கு வேள் என்பனவும் ஏரணத்திற்குப் பொருந்திவரும். எந்த மூதிகத்தையும் நாம் இங்கே உள்ளே கொண்டு வரவில்லை. மருத்துவரும், பண்டுவரும் ஒரே ஆளாவதுண்டு. இக்காலப் பட்டமும் Medicino Bachelor and Bachelor of Surgery (MBBS) என்றே அமையும்.

இனி விண்ணெறிக் கோயிலுக்கு வருவோம். திருவித்துவக்கோடு என்பது கேரளத்தில் பட்டம்பியிலிருந்து ஒரு மைல் தொலைவில், பாரதப்புழைக் கரையிலுள்ள ஊர். இதைக் குலசேகர ஆழ்வார் விற்றுவக் கோடென்பார். இங்குள்ள கோயில் 108 தலங்களில் ஒன்றாகும். பெருமாள் பெயர் உய்யவந்த பெருமாள். உய்தல்= உயிர்வாழ்தல். நோய்ப்பட்ட பற்றியாளர் (பக்தியாளர்) சுகமாகி உய்வதற்கு, வந்த பெருமாளென்ற பொருள். நாலாயிரப்பனுவலின் 691 ஆம் பாசுரத்தில், பெருமாள் திருமொழியில்,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளத் துயர்தரினும் விற்றுவக்கோட். டம்மா,நீ
ஆளா வுளதருளே பார்ப்பன் அடியேனே

என்ற பாட்டு வரும். ”என்னதான் வலிதரும் அளவிற்கு வாளாலறுத்துச் சுட்டாலும், மருத்துவனிடமிருந்து விலகாத நோயாளன் போல், என்னதான் நீ துன்பந் தந்தாலும் வித்துக்கோட்டு அம்மானே, உன் அருளை விட்டு விலகுவேனோ?” என்பார் ஆழ்வார். பத்துப் பாசுரங்களும் வலி, துன்பம், துயரம் ஆகியவற்றைச் சொல்லி அவற்றிலிருந்து உய்யவந்த பெருமாளை வாழ்த்தும். வித்துவன் என்பது நல்ல தமிழென்று பெருமாள் திருமொழியைப் படித்தாவது புரிந்துகொள்ளலாம்.     

இனி ஆயுள்வேதத்தில் வரும் வேதத்தை 4 வேதங்களோடு தொடர்புறுத்துவதும் தவறே. வித்தம் என்ற சொல்லே இங்கு பேச்சுவழக்கில் வேதமாயிற்று. வித்தம் = மருந்து நூல். வித்தம் தெரிந்தவன் வித்தன். ஆயுள்வித்தன் = ஆயுளுக்கான மருந்து தருகிறவன். சங்கதத்திலும் வைத்தியனென்ற சொல்லுக்கு புலமையாளன், மருத்துவன் என்ற பொருளுண்டு. வேதம் என்ற சொல் வைதீகம் என்று கூட்டுச்சொற்களில் திரியும். சங்கதத்தை மேடாகப் பார்த்துத் தமிழைப் பள்ளமாய்க் கருதுவோர்க்கு இது புரிவது கடினம். எல்லாவற்றையும் வேதமென்று சொல்ல முற்படுவது ஒருவித ஓரப்பார்வையே.

இன்னும் ஓரிiரு செய்திகள் சொல்ல மறந்தேன். பண்டுவம் என்பது பண்ணுதல் என்னும் கைவேலையையொட்டிப் பிறந்தது. மேலை மொழிகளிலும் surgery என்பது கைவேலையை ஒட்டியே பிறந்தது. [surgery (n.) c. 1300, sirgirie, "medical treatment of an operative nature, such as cutting-operations, setting of fractures, etc.," from Old French surgerie, surgeure, contraction of serurgerie, from Late Latin chirurgia "surgery," from Greek kheirourgia, from kheirourgos "working or done by hand," from kheir "hand" (from PIE root *ghes- "the hand") + ergon "work" (from PIE root *werg- "to do"). இதில் வரும் kheir "hand" என்ற கிரேக்கச்சொல் நம் “கையைப்” போல உள்ளதைப் பார்த்து வியக்காதிருக்க முடியாது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியத்திற்கும் உறவுண்டெனச் சொன்னால் கவனித்துப் பார்க்கத் தான் இங்கு ஆட்களில்லை. ”கண்ணைமூடிப் பாதை கடந்து விடுவோம்” என்பவருக்கு மேற்கொண்டு என்னசொல்ல?]

எப்படி வித்துவம் வித்தியமாகியதோ  அதுபோற் பண்டுவம் பண்டிதமாகும். சங்கதத்தில் நுழைந்த வித்தியம் வைத்தியமாகி வித்தை தெரிந்தவன் என்றும், மருத்துவனென்றும் எப்படிக் குறித்ததோ, அதே போல் பண்டிதன் என்பது புலவனையும் பண்டுவனையும் சேர்த்தே குறிக்கும். வித்துவானென்ற சொல் ஒருகாலத்தில் தமிழ்புலவர்க்குப் பட்டமாயிருந்தது. அதை ”வட மொழிச் சொல்” எனத் தவறாய் முடிவுகட்டிப் பல தமிழ் ஆர்வலரும் ”புலவர்” என்று பெயர் மாற்றச் சொன்னார். அதுவும் மாறியது. வித்துவான் என்பதை வித்துவன் என்றே வைத்திருக்கலாம். கருணாமிர்த சாகரம் எழுதிய மு. ஆபிரகாம் பண்டிதர், தாழ்த்தப் பட்டோரால் இன்று மீண்டும் கண்டெடுத்துப் போற்றப்படும் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோர் பண்டிதரென அழைக்கப்பட்டது அவரின் புலமையாலா, மருத்துவப் பின்புலத்தாலா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஆய்வு செய்யவேண்டிய புலம் அது. ”பண்டுவம்/ பண்டிதம் மட்டுமே தமிழ், வித்துவம்/வித்தியம் தமிழில்லை” என்று சிலர் கூற முயல்வது எனக்கு முரணாய்த் தெரிகிறது. வெறும் நம்பிக்கையின் பேரில் ”ஒன்றைத் தமிழில்லை” என்று சொல்ல இப்படி அணியமாவது விந்தையிலும் விந்தை. இதிற் சான்றுகள் வேறு கேட்கிறார். குமுகாயத்தைப் பார்த்தாலே போதுமே? கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு?

அன்புடன்,
இராம.கி.   



ஒலிவி (phone)

ஒருமுறை  head phone, ear phone க்கான சொற்களை ஒரு நண்பர் கேட்டிருந்தார்.  அதுவரை யாருந்தொடா ஒலிச்சொல் பற்றிக் கேட்டிருந்தார். நம்மூருக்கு telephone வந்து ஏறத்தாழ 70/80 ஆண்டுகளாகின. அப்போது நடந்த விந்தையைக் கருவிவழிப் புரியாது பேசும்/கேட்கும் வினை வழியே நம்மில் பலரும் புரிந்துகொண்டார். தமிழ்ச்சொல் ஆக்கையில், பேச்சை மட்டுங் கருதிக் கொண்டு, கேட்பதை மறந்து தொலைபேசியென்றே  நாம் சொல்லத் தொடங்கினோம். அதைக் கருவி நோக்கிற் சொல்லவில்லை.

கருவி நுட்பம் அப்போது பலருக்குந் தெரியாது, நுட்பந் தெரிந்தவரும் டெலிபோன் என ஆங்கிலம் பேசிச் சென்றார். தமிழில் இதைச் சொல்ல, நுட்பியல் வளர, கருவிகளை இங்கு செய்ய, அப்போது யாரும் எண்ணியதில்லை. அது பொருளியல் வளர்ச்சி, நுட்பியற் கல்வி அறியாக் காலம். எனவே ’தொலைபேசி’ என்ற பயன்பாட்டுச்சொல்லே பெரிதும் பரவியது. இப்போது நுட்பியற் கல்வியைத் தமிழில் வளர்க்க வேண்டும் எனில், சண்டித்தனஞ் செய்யும் இவை போன்ற கணிசமான, தவறான, சொல்லாக்கங்களை மறுபார்வை செய்ய வேண்டும். (ஆனால் கேட்பதற்குத் தான் ஆட்கள் இல்லை. இராம.கி. வேண்டாத வேலை செய்வதாய்ப் பலரும் எண்ணிக்கொள்கிறார். இன்னும் ஆழமான சொற்கள் நம்மிடம் இல்லாததால் தான் head phone க்கும், ear phone க்கும் நாம் இப்போது அல்லாடுகிறோம். என்னைக் கேட்டால் ஏற்கனவே பழகிவிட்டதென்று சொல்லித் தொலை பேசியை மேலும் தொடருவதில் பயனில்லை. (வழக்கம் போல் என் பரிந்துரை இவ்வம்பலத்தில் எடுபடாது. இருப்பினும் முயல்கிறேன்.)

ஆங்கிலத்தில் phone-ற்கு ஒலியென்றே பெயர். ஆங்கிலத்தில். "elementary sound of a spoken language," 1866, from Greek phone "sound, voice," from PIE root *bha- (2) "to speak, tell, say." என்பார். *bha- (2) "to speak, tell, say." என்ற இந்தையிரோப்பிய வேரில் கிளைத்ததாய்க் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளேன். கேட்பதையும் ஆங்கிலத்தில் phone என்று தானே சொல்கிறார்?. பேச்சில் மட்டும் வரையறை இனங் காட்டுவது ஒருபக்கச் சார்பாய் எனக்குத் தெரிகிறது. ஒலியென்பது ஒல்லுங் குறிப்பில் எழுந்தது. ஒல்லல்= ஒசையெழுப்பல். ஓல்>ஒலி= ஓசை. பேசினாலும் ஓசையே, கேட்டாலும் ஓசையே. ஒலி என்பது இரண்டிற்கும் பொதுவானது. நம் ஒலிக்கும் இந்தையிரோப்பிய phone க்கும் தொடர்பு உள்ளதென்றே நான் கருதுவேன். அதையிங்கு வாதாடக் கூடாது. வேறிடத்திற் செய்யவேண்டும். இப்போதைக்கு phone-க்கு ஒலியென்று தமிழில் சொல்கிறோம் என்பது  போதும்.

இற்றை அறிவியலில் அதிர்ச்சி, அலையென்றே ஒலி புரிந்து கொள்ளப் படுகிறது. ஒலிவழி பயன்படுத்தும் சில சொற்களை

phoneme (ஒலியன்),
phonetics (ஒலியெழுகை),
phonics (ஒலிகை),
phonogram (ஒலிக்கிறுவம்),
phonograph (ஒலிக்கிறுவி),
phonolite (ஒலிக்கல்),
phonology (ஒலியியல்),
phonophobia (ஒலிப்பயம்),
phony (வெற்றொலி)

என்று ஒலி வழியே சொல்லலாம். அப்படிச் சொல்வதால் ஒரு குழப்பமும் வராது. இணையான தமிழ்ச் சொற்களைப் பிறைக்குறிக்குள் கொடுத்துள்ளேன். இந்தப் பார்வையில் telephone இல் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நாம் பேசுகிறோம். telephone க்குள் ஏதோவொரு உறுப்பு அதிர்கிறது. அந்த அதிர்ச்சி மின்காந்த அலையாக மாற்றப் படுகிறது. பின் நேரடியாகவோ, அன்றேல் வானலையாகவோ அனுப்பப்பட்டு, இன்னொரு பக்கக் கருவியால் வாங்கப்பட்டு மீண்டும் அதிர்ச்சி/ஒலியென மாற்றப் படுகிறது. காதில் ஒலியையுணர்கிறோம். அதாவது நம் ஒலி- அதிர்ச்சி- மின்காந்த/வானலை- அதிர்ச்சி- ஒலி என மாற்றம் பெறுகிறது. நாம் ஒலிக்கிறோம். நம் ஒலியைக் கருவி வாங்கி, இன்னொரு பக்கம் ஒலிவிக்கிறது. எனவே ஒலிக்கவும் ஒலிவிக்கவுஞ் செய்யும் கருவியை ஒலிவி என்றே பொதுவாய்ச் சொல்லலாம். அப்பொழுது மாந்தப்பார்வையில் அன்றி கருவிப்பார்வையில் சொல்லமையும். கேட்கவும் சொல்லவும் சிறிய சொல்.

இனிக் கருவி சார்ந்த சில சொற்களை மட்டும் இங்கு குறித்துள்ளேன். (சில முன்னொட்டுச் சொற்களுக்கு விளக்கஞ் சொல்லவில்லை. அவற்றை விவரங் கேட்டால் சொல்கிறேன்.)

cellphone = சில்லொலிவி;
dictaphone = சொற்றொலிவி;
earphone = காதொலிவி;
electrocardiophone = மின்வழிக் குருதயவொலிவி;
electroencephalophone = மின்வழிக் கவாலவொலிவி;
electrophone = மின்னொலிவி;
encephalophone = கவாலவொலிவி;
gramophone = கிறுவவொலிவி;
handphone = கையொலிவி;
headphone = தலையொலிவி;
holophone = முழுதொலிவி;
kaleidophone = கலைதொலிவி;
linguaphone = மொழியொலிவி;
megaphone = மாகொலிவி;
microphone = நூகொலிவி;
mobile phone = நகரொலிவி,
payphone = பணவொலிவி;
picturephone = படவொலிவி;
radiophone = வானலையொலிவி;
saxophone = சாக்சோவொலிவி;
smartphone = சூடிகையொலிவி;
speakerphone = பேச்சொலிவி;
spectrophone = காட்சியொலிவி;
streophone = திசையொலிவி;
telephone = தொலையொலிவி;
videophone = விழியவொலிவி

இதில் கருவி சாராத, -phone என முடியும் வேறு சொற்களைக் குறிக்கவில்லை. இரண்டையும் பொருள்பார்த்துப் புரிந்து அவற்றில் வருவது ஒலியா, ஒலிவியா என்று குறிக்கவேண்டும்.

“தம்பி, அந்த காதொலிவியை எடு; பாட்டைக் கேட்கலாம்.”
”என்னோட சில்லொலிவியை யாரெடுத்தா?  நான் வச்ச இடத்திலே இல்லையே?”
”இந்தத் தொலையொலிவி ரொம்ப நாளா வேலைசெய்யலே? பழுது பார்க்கோணும்.”
:இந்தக் காலத்துலெ, சில்லொலிவி விழியவொலியாயும் இருக்கு”
”அந்தத் திசையொலிவியோடே வெள்ளத்தை (volume) இவ்வளவு கூட்டணுமா? தெரு முழுக்கக் காது கிழிஞ்சிடும்”

இப்படி இயல்பாய்ப் பலவற்றை நல்ல தமிழில் சொல்லலாம். மனம் இருந்தால், வழியுண்டு.

அன்புடன்,
இராம.கி.


.

Sunday, July 12, 2020

தமிழும் ஒருங்குறியும் - 3

இலங்கையின் ”தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” (Tami Information Technology International) என்ற நிறுவனம் Zoom வழி நடத்திய இணைய வழி உரையாடலில் நேற்று நான் உரையளித்தேன், இங்கே அதைப் பிரித்து 3 பகுதிகளாய்த் தருகிறேன். இது மூன்றாம் பகுதி. தமிழ்க் கணிமையில் ஆர்வமுள்ளோர் படியுங்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இலங்கை நண்பர்களுக்கும் குறிப்பாக நண்பர் சி.சரவணபவானந்தனுக்கு என் நன்றி. தமிழ்கூறும் நல்லுலகம் இந்நிலை அறிந்துகொள்ளட்டும்.
--------------------------------------

இனித் தமிழ்க் கட்டை தொடர்பாய் நடந்த  மாற்றங்களைப் பார்ப்போம். முதல் மாற்றமாய், 2003 இல் sha எழுத்தை நுழைக்கச் சொல்லி உத்தமம் ஒரு முன்னீடு கொடுத்தது.  இன்றுவரை அவ்வெழுத்தை தமிழ்பேசும் எந் நாட்டிலும் யாருங் கற்றுக் கொடுக்கவில்லை. ஏதோ சில மணிப்பவள நூல்களில் அச்சாகியுள்ளது என்று சொல்லி இம்முன்னீடு எழுந்தது. இம் மூன்னீட்டை உத்தமத்தின் பொது உறுப்பினர் யாரும் கவனிக்கவில்லை, மாற்று யோசனை சொல்லவுமில்லை. பொதுமக்களுக்கும் தெரியாது. ஆனாலும் இவ்வெழுத்து தமிழ்க்கட்டைக்குள் குறியேறிவிட்டது. (discuss printed salvation here.)

”sha” (0BB6) விற்கு மாறாய் ”ச”, ”ஷ” என்றடித்து அடிக்குறிப்பில் ”இங்கே ச, ஷ, எழுத்துக்களைப் பயில்கிறோம், ஊற்றாவணத்தில் இப்படி இருந்தது” என்று ஶ படம் போடாது, தேவையற்றுக் குறியேற்றி, என்ன சொல்ல? விந்தை உலகம். முன்னீட்டாளர் கல்வெட்டு நூல்களே படித்ததில்லை போலும். இதே எழுத்து அங்கும் கிரந்தப் பகுதியிலுண்டு. text இல் ஷ எழுதி அடிக் குறிப்பில் ஶ படம் போட்டிருப்பார். அவருக்குத் தெரிந்த தீர்வு உத்தமத்திற்குத் தெரியவில்லை..

SMP இல் போகவேண்டியதை BMP க்குக் கொணர்ந்து,  கந்தர கோளம் பண்ணி, இப்போதென்ன நடக்கிறது தெரியுமோ? ”எழுத்து இருக்கிறதா? பயன்படுத்து” என நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய்  ஶ வின் பயன்பாடு கூடிப்போகிறது. கூகுள் கணக்குப்படி இன்று 24,40,000 தடவை பயனாகிறது. தவறான குறியேற்றம் கொடூர மாற்றத்தை ஒரு மொழிக்குக் கொணரும். historical எனக் கொணர்ந்து முடிவில் நடப்புக்கு இவ்வெழுத்து வந்தது நமக்கு ஒரு பாடம். 

இரண்டாம் மாற்றம் 2006 இல் நடந்தது. இதற்கும் உத்தமமே தொடக்கம். ”தமிழ் ஓம்” வேண்டும் என்று இம் முன்னீடு எழுந்தது. வழக்கம்போல் யாருங் கண்டு கொள்ள வில்லை. அரிதில் பயன்படும் குறியீடு BMP இலா? என்ன கொடுமை, சரவணா? SMP இல் இருக்கவேண்டியதைக் costly real estate ஆன BMP இல் உட்கார வைத்துக் கந்தர கோளம் பண்ணினார். இது போன்று பலவும் நடந்துள்ளன.

அடுத்தது நீட்டிக்கப் பட்ட தமிழ் ( extended Tamil). தமிழெழுத்துக்களைக் கொண்டு சங்கதம் எழுதும்படித் தமிழ்க்கட்டையில்  க2, க3, க4 ....... என மேற்குறி (superscript) முறையில் 26 சங்கத எழுத்துக்களை நுழைக்கச் சொல்லி சூலை 2010 இல் ஒரு முன்னீடு எழுந்தது.  மலேசியாவிலிருந்து முத்தெழிலன் நெடுமாறன், அமெரிக்காவிலிருந்து இராதாகிருஷ்ணன் ஆகியோர், ”சாத்தாரமாய் இருக்கும் superscript, subscript வைத்தே இதைச் செய்யலாமே? இதற்கு எதற்கு தனியாகக் குறிப்புள்ளிகள்?” - என்று கேள்வி கேட்டார். இதற்கப்புறம் இம்முயற்சி நின்றது.

எனிலும் கிரந்த முயற்சி நிற்கவில்லை. தமிழ்க் கல்வெட்டுகளின் orthographic principle அறியாதவர் தூண்டுதலால் இந்திய அரசை நகர்த்தி அகுதோபர் 2010 இல் கிரந்தக் கட்டைக்குள் 7 தமிழ்ச் சிறப்புக் குறியீடுகளைச் சேர்க்கும்படி ஒரு முன்னீடு போனது. கிரந்தம் என்பது தமிழகத்தில் எழுந்த நம் எழுத்துத் தான். ஆனால் அது சங்கதம் எழுதப் பிறந்த எழுத்து. அதற்குள் தமிழெழுதும் தேவை யென்ன? தமிழகத்தில் அரசியலெதிர்ப்பு வலுத்தது. அரசியலார் உள் நுழைந்தார் நவ 2010 இல் முதல்வர் கலைஞரே ”ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு மடல் எழுதி ஆலோசனைக் குழு ஒன்று இதை ஆய்வு செய்யவேண்டும் அதுவரை நிறுத்தி வையுங்கள்” என்றார்.  சனவரி 2011 இல் உத்தமம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு மடலெழுதியது. “கிரந்தக் கட்டைக்குள் 7 குறிகளை நுழைப்பதில் உள்ள சிக்கல்களை” நீதிபதி மோகன் தலைமையிலான ஆலோசனைக் குழுவிற்குப் பல ஆர்வலரும் விரிவாய்க் கூறினார். ஆலோசனைக் குழு தீவிரமாய் உரையாடித் தன் பரிந்துரையைத் தமிழக அரசிடம் சொன்னது. தமிழக அரசு, இந்திய அரசை வேண்டிக் கொண்டது. இப் பரிந்துரையின் பேரில், மே 2010 இல் இந்திய அரசே தன் முன்னீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.



அடுத்தது பின்ன, சின்னங்களுக்கான குறியேற்றம். சூலை 2012 இல் இம் முன்னீடு திரு இரமண சர்மாவிடமிருந்து போனது. ஆர்வலரான அவர் தனக்குக் கிடைத்த விவரங்களைக் கொண்டே வைத்தார். எல்லா மறு பார்வைக்கும் அவர் அணியமாகவே இருந்தார். இக்குறியேற்றம் இற்றைத் தமிழுக்குத் தேவை இல்லை தான். ஆயினும் வரலாற்று வரிதியான முன்னீடு. நம் இலக்கியங்களை ஏற்கனவே ஒருங்குறி உதவியில் மின்னேற்றியது போல் 60000/70000 தமிழ்க் கல்வெட்டுக்களையும் மின்னேறுவது கட்டாயம் ஓர் ஆய்வுத் தேவை. அதற்குப் பின்ன, சின்னக் குறியிடு தேவை. அவ்வகையில் திரு.சர்மாவைப் பாராட்ட வேண்டும். ஆனால், இதைச் சரியாகச் செய்ய யாரோடு கலந்தாய வேண்டும் என உள்ளதல்லவா? கல்வெட்டியலார், வரலாற்றாளர், தமிழறிஞர் ஆகியோர் அல்லவா இதில் முகன்மை? அவரை விடுத்து 4 IT enthusiasts தம்முள் கலந்தாடிச் செய்தால் சரி வருமா? “இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து. அதனை அவன்கண் விடல்” என்று தானே வள்ளுவன் சொன்னான்?


துறை வல்லுநரைக் கலக்காது செய்தது தவறென்று சொல்லி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தமத்தில் வலியுறுத்தியும் அதைச் செய்யாது, நாள்கடத்தி spelling, பெயர் வேறுபாடு, transliteration என்று திசை திருப்பி 2 ஆண்டுகளை கடத்தியது கண்டு மனங்குன்றி, சில தனி ஆர்வலர் (குறிப்பாக, ஆல்பர்ட் பெர்னாண்டோ, இர.வாசுதேவன், இரா. சுகுமாரன், நாக. இளங்கோவனோடு அடியேன்) முயன்று ஏராள முயற்சிகள் எடுத்து, அழுத்தங்கள் கொடுத்து, தமிழக அரசின் வழியாக 2014 இல் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். 2015 சூலையில் ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் தமிழக அரசு மறுப்புக் கொடுத்து, பின் இந்திய அரசும் நம்மோடு சேர்ந்து மறுப்புக் கொடுத்தது.

இதன்பின், துறைவல்லுநர் சார்ந்த ஆலோசனைக் குழு ஏற்படுத்தி, 2 ஆண்டு அலைச்சலில் கல்வெட்டு ஆவணங்களுக்குள் புகுந்து ஒவ்வொரு குறியீடாய்ச் சரிபார்த்து, தேவையான estempageகளைப் படியெடுத்தால், முன்னீட்டின் 55 குறியீடுகளில் 33 பிழையிருப்பது புரிந்தது. திரு. இரமண சர்மாவை அழைத்துச் சொன்ன போது, அவரும் எம்முடன் கூடவந்து இப்பணியில் மகிழ்வோடு கலந்து கொண்டார். எல்லோருமாய்ச் சேர்ந்து 51 குறியீடுகளை இறுதி செய்து, 2017 இல் தமிழக அரசின் வழி,  Finalized proposal to encode Tamil fractions and symbols கொடுத்தோம். இதன் வழி, 51 குறியீடுகள் SMP இல் ஏற்றப்பட்டன. .துறை வல்லுநருடன் சேர்ந்து எளிதில் முடிந்திருக்க் கூடியதை  ஒற்றுமையின்றி இனி இழுத்தடிக்கக் கூடாது என்பதே இதில் நாம் கற்ற பாடம்.

இதன்பின், வெவ்வேறு ஒருங்குறி விதயங்களைச் சரிவரச் செய்யும் முகத்தான், தமிழக அரசே ஆண்டிற்கு 12000/14000 வெள்ளிகள் கொடுத்து 2015 சூலையில் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் இணை உறுப்பினர் (Institutional Voting Member) ஆனது.

இதற்கடுத்து 2015 அகுதோபரில் மார்ட்டின் ஹோஸ்கென் என்பார் படகருக்காக நுக்தா முன்னீட்டைக் கொடுத்தார். வல்லின எழுத்துகளுக்கு அதிரொலி தரும் வகையில் ஒரு அடிப்புள்ளி (underdot) கேட்டிருந்தார். ”இந்த அடிப்புள்ளியை இப்போதுள்ள பொது அடிப்புள்ளி வைத்தே பெறலாமே? ஏன் தனிக் குறிப்புள்ளி?” என்று கேட்டு சனவரி 2016 இல் மறுப்பு மடல் ஒன்றைத் திரு. நாக. இளங்கோவனும் நானும் எழுதினோம். தமிழக அரசின் சார்பாக தமிழ் இணையக் கல்விக் கழகம் இதை ஏற்றுக் கொண்டது.

அடுத்து மார்ச்சு 2017  இல் அன்சுமான் பாண்டே என்பார் வட்டெழுத்திற்காக preliminary proposal கொடுத்தார். கல்வெட்டியலாரைக் கலந்ததில் ”வடிவத்திலும் கருத்தீட்டிலும்” பல பிழைகள் இருந்தது கண்டு, ”முன்னீட்டை” நிறுத்தி வைக்கச் சொல்லி தமிழ் இணையக் கல்விக் கழகத்திடமிருந்து மடல் சென்றது. இதற்கான மறு முன்னீடு த.இ.க.வில் நிபுணர்களக் கொண்டு இப்போது நடக்கிறது. கூடிய விரைவில் இம் முன்னீடு செல்லும்.   

அண்மையில்   ஏப்ரல் 2020 இல் தமிழ் ற, ழ வைத் தெலுங்குக் கட்டையில் நுழைக்க முயற்சி நடந்தது. ஏற்கனவே றகரத்திற்கும் ழகரத்திற்கும் ஆன தெலுங்குக் குறியிடுண்டு. தவிர, தமிழ்க் குறியீடுகளை நுழைக்காமலே தமிழ் எழுத்தை தெலுங்கு உயிர்மெய்க் குறியீடுகளுடன்  சேர்த்து ஆவணம் படைக்க முடியும். ”பின் ஏன் இக்குறியேற்றம்? வெறுமே Script extension இல் சேர்த்தால் பற்றாதா?” என மறுகேள்வி கேட்டு சூன் 2020 இல் தமிழ்நாட்டரசு அனுப்பியது.

மேலே நான்சொன்ன இத்தனை முயற்சிகளையும் பார்த்தால், தமிழ்க் கட்டைக்குள் உள்ள வெற்றிடங்களை நிரப்பி வட இந்திய மொழிகள் போல் தமிழை ஆக்க எவ்வளவு முயற்சிகள் நடக்கின்றன என்பது உங்களுக்கு விளங்கும். இதுபோல், 7 சிறப்புத் தமிழெழுத்துகளை வேறு எழுத்து வரிசையுள் கொண்டுபோகவும் முயற்சிகள் நடக்கின்றன, இனியும் நடக்கும். superset கருத்தீடு அவ்வளவு பெரியது. விடாது முயல்வர். தொடர்ந்து தடுக்கவேண்டும்.

ஆனால் வெறும் கூச்சலால் அல்ல. போராட்டத்தால் அல்ல. ஆழ்ந்த சிந்தனையால், இடைவிடாத ஊக்கத்தால், கூர்த்த மதியால் இதைச் செய்ய வேண்டும். நாம் மற்ற மொழியினருக்கு எதிரிகள் அல்லர் நம் மொழியை, நம் எழுத்தைப் பாதுகாக்கிறோம். அவ்வளவு தான். தமிழக அரசு, (எந்தக் கட்சி ஆண்டாலும் சரி) நமக்கு உதவியாகவே உள்ளது. இந்திய அரசும் நம்மைத் தடை செய்யவில்லை. அதன் TDIL = Technology Development for Indian Languages நிறுவனம் நாம் கேட்கும் உதவிகளைச் செய்ய என்றும் அணியமாகவே உள்ளது. ஆர்வலர்கள் தாம் முன்வர வேண்டும்.

அகவை கூடிய முதியோரே இனியும் ஒருங்குறி வேலையைச் செய்து கொண்டிருக்க முடியாது. இளைஞர், நடுவயதினர் எனப் பலரும் முன்வர வேண்டும். தமிழ்க்கணிமையில் நான் குறைந்த ஆட்களையே காண்கிறேன். விரல் விட்டு எண்ணலாம் போலும். வெறுமே அரட்டை அடிக்க முகநூல் பக்கம் வருவோரே அதிகமிருக்கிறார்.  உருப்படியான பணிசெய்ய ஆட்களைக்  காணோம். செய்ய வேண்டிய பணிகள் நம்முன் மிகுந்துள்ளன.

1. வட்டெழுத்து வேலையை முடிக்கவேண்டும்.
2. கிரந்தத்திற்குத் தனிக்கட்டை வந்துவிட்டதால், ஒரே ஆவணத்தில் input driver மூலம் 2 எழுத்துக்களையும் கையாளலாம். எனவே ஶ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றை மதிப்பிழக்கச் (deprecate) செய்யவேண்டும். நுட்பியல் பார்வையில் நாம் கேட்பது ஞாயமானது. பெரும்பாலும் சேர்த்தியம் ஒப்புக்கொள்ளும்..
3. அளபெடைக்கான joiner குறியீடு வாங்க வேண்டும்.
4. குற்றியலுகரம், குற்றியலிகரத்திற்கான சந்திர பிந்து வாங்கவேண்டும். (குமரி மாவட்ட வழக்கம்.)
5. இன்னும் விட்டுப்போன பின்ன, சின்னங்களைத் தேடி அவற்றை SMP இல் குறியேற்ற வேண்டும்.
6. இசைக்குறிகள் , தாளக்குறிகள், வேறு கலைக் குறிகள் - SMP.
7. Translieration/ Transcription க்கான முயற்சிகள். இதைக் குறியேற்றத்தில் செய்யாது வேறு வழிகள் உண்டா என்று பார்க்கவேண்டும். (Discuss)

நம் இலங்கை நண்பர்களுக்கு,  உங்களுடைய நாட்டில் University of Colombo School of Computing - Language Technology Research Laboratory ஒரு laison member ஆய் உள்ளது. அவர்களோடு  தொடர்பு கொள்க. நீங்களும் laison member ஆக வழி தேடுங்கள். மேலே சொன்ன 7 வேலைகளில் நீங்களும் சிலவற்றைச் செய்யலாம்.

இரு நாட்டின் ஆர்வலர்க்குப் பொதுவாய்ச் சொல்வது ஒருங்குறிச் சேர்த்தியச் செய்திகளை வாரத்திற்கு ஒருமுறை பாருங்கள். அவர் ஆவணங்களைப்  படியுங்கள்  அவர் document register ஐத் தொடர்ந்து அவதானியுங்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளில் என்ன நடக்கிறது என்று கவனங் கொள்ளுங்கள். மற்ற Brahmi derived scripts மேலும் ஒரு மேலோட்டப் பார்வை இருக்கட்டும். எங்கிருந்து எது வரும் என்று சொல்வது கடினம்.

அன்புடன்,
இராம.கி.         .