Tuesday, March 24, 2020

பதியம் - பஜன்

 மின்தமிழ் மடற்குழுவில், "ஒன்றே மலேசியா! ஒன்றே மலேசிய இந்தியர்கள்! (https://groups.google.com/forum/#!topic/mintamil/jSFAPL3AgkY)" என்ற இழையில் நண்பர் நா.கண்ணன் ”பஜனை என்பதே தமிழ்ச் சொல் இல்லை! பஜ் எனும் சமிஸ்கிருத வார்த்தையிலிருந்து பஜன் வரும்” என்று சொல்லியிருந்தார். (சங்கதத்தில் பஜன.) இக் கருத்து இன்னும் பலரிடமும் உண்டு. என் கருத்து சற்று வேறுபடும். இதைப் பொதுப்பட எல்லோருக்கும் தெரிவிக்க விழைவதால், மின்தமிழுக்கு மட்டுமின்றி மற்ற மடற்குழுக்களுக்கும் ஒருகால் இதை அனுப்பி வைத்தேன். இப்போது முகநூல். பொறுத்தருள்க. பாணினியின் தாது பாடம் 33 இல் உட்பகுதி 29 இல் உள்ள bhaj = to honour, adore எனும் தாது வழி, பஜனையைச் சிலர் இனங்காட்டுவார். கீழே 125 ஆண்டுகளுக்கும் முந்தைய மோனியர் வில்லியம்சு அகரமுதலியிலிருந்து ஒரு விளக்கத்தை வெட்டியொட்டுகிறேன்.

भज् [ bhaj ] [ bhaj ] Root cl. [1] P. Ā. ( Lit. Dhātup. xxxiii , 29) [ bhájati ] , [ °te ] ( 2. sg. as Impv. [ bhakṣi ] Lit. RV. ; pf. P. [ babhā́ja ] Ā. [ bhejé ] Lit. RV. ; 2. sg. [ babhaktha ] Lit. ŚBr. ; [ bhejitha ] Lit. Pāṇ. 6-4 , 122 ; aor. P. 2. 3. sg. [ abhāk ] Lit. RV. Lit. Br. ; [ abhākṣīt ] , [ °kṣus ] Lit. BhP. ; Subj. [ bhakṣat ] Lit. RV. ; Ā. [ ábhakṣi ] , [ °kta ] Lit. RV. ; Prec. Ā. [ bhakṣīyá ] Lit. RV. ; 3. sg. [ °kṣīṣṭa ] Lit. Br. ; [ °kṣīta ] Lit. SV. ; fut. [ bhakṣyati ] , [ °te ] Lit. Br. ; [ bhajiṣyati ] , [ °te ] Lit. MBh. ; [ bhaktā ] Gr. ; inf. [ bhaktum ] Lit. Br. ; [ bhajitum ] Lit. MBh. ; ind.p. [ bhaktvā ] Lit. AV. , [ °tvāya ] Lit. RV. ; [ -bhajya ] and [ -bhā́jam ] Lit. Br.) , to divide , distribute , allot or apportion to (dat. or gen.) , share with (instr.) Lit. RV. ; (Ā.) to grant , bestow , furnish , supply Lit. ib. ; Ā. ( rarely P.) to obtain as one's share , receive as ( two acc.) , partake of , enjoy (also carnally) , possess , have (acc. , Ved. also gen.) Lit. ib. ; (Ā. , rarely P.) to turn or resort to , engage in , assume (as a form) , put on (garments) , experience , incur , undergo , feel , go or fall into ( with acc. , esp. of abstract noun e.g. [ bhītim ] , to feel terror ; [ nidrām ] , to fall asleep ; [ maunam ] , to become silent) Lit. MBh. Lit. Kāv. ; to pursue , practise , cultivate Lit. Mn. Lit. R. Lit. Suśr. ; to fall to the lot or share of (acc.) Lit. MBh. Lit. R. ; to declare for , prefer , choose (e.g. as a servant) Lit. MBh. ; to serve , honour , revere , love , adore Lit. MBh. Lit. Kāv. : Caus. [ bhājáyati ] , [ °te ] (aor. [ abībhajuḥ ] Lit. ŚBr. , [ ababhājat ] Gr.) , to divide Lit. Sūryas. ; to deal out , distribute Lit. Gaut. ; to cause any one (acc.) to partake of or enjoy (acc. or gen.) Lit. RV. Lit. ŚBr. ; to put to flight , pursue , chase , drive into (acc.) Lit. Bhaṭṭ. ; to cook , dress (food) Lit. Vop. : Desid. [ bibhakṣati ] , [ °te ] Lit. MBh. (cf. √ [ bhikṣ ] ) : Intens. [ bābhajyate ] , [ bābhakti ] , Lit. Gṛ. ( cf. Gk. 1 , 2 , 3 ; Lat. (fāgus) ; Goth. Old S. (bo1k) ; Germ. (Buch) , (Buchstabe) ; Eng. (buck-) , (beech) . )

மேற்பத்தியின் நடுவே வரும் to serve , honour , revere , love , adore Lit. MBh. Lit. Kāv. என்ற கருத்து மகாபாரதத்தில் இடம் பெற்றதாய்ச் சொல்லப் பெறும். இதற்கு முன் வேறு குறிப்பிருந்தால் அதை மோனியர் வில்லியம்சு குறித்திருப்பார். அப்படி அவர் குறிக்காததால் மகாபாரதந் தான் இப்பொருளில் முதற் சொல்லாட்சி கொண்டது என்று அறிய முடிகிறது. .பாரதக் காப்பியம் நெடு நாட்கள் வாய்மொழியாய் இருந்து பொ.உ.300/400 வில் தான் முதன்முதல் எழுத்துற்றது (http://en.wikipedia.org/wiki/Mahabharata; இராம.கி.யின் http://valavu.blogspot.in/2013/02/1.html யையும் படியுங்கள்.)

இதே பொழுதில் பத்திக் காலம் என்பது தெற்கே தொடங்கிவிட்டது. முதல் நூலான செயபாரதத்தை விரித்து, வழிநூலான மாபாரதமாக்கியதில் (பத்தி நோக்கில் தெற்கில் எழுந்த) பாகவதம் பெரிதும் தாக்கம் வகிக்கிறது. வடக்கே எழுந்த பூர்வ மீமாம்சமும், உத்தர மீமாம்சமும் திருமேனி வழிபாட்டை என்றுமே வலியுறுத்தவில்லை. அருச்சா (திருமேனி) வழிபாடு, பத்தி (பற்றி), பத்திமை (பற்றிமை) போன்ற கருத்துக்கள் தெற்கேயெழுந்த வழிபாட்டின் கூறுகள் ஆகும். இவ் வழிபாட்டின் ஊடே பாடுவதும் ஆடுவதும் கூட தென்னகப் பழக்கந்தான். வேத சமயங்களும், செயினம், புத்தம் போன்ற வேதமறுப்பு சமயங்களும் தங்கள் சமயச் சடங்குகளின் நடுவே பாடலையும் ஆடலையும் ஏற்றவையல்ல. (அவற்றில் முழக்கமிடுவர், மந்திரஞ் சொல்வர், ஓதுவர், பேருரைகள் பயில்வர். ஆனால் பாட்டும், ஆட்டமுங் கிடையாது. வடக்கே பல காலங் கழித்துத் தென்னாட்டார் தாக்கத்தால் இது வந்தது.)

தென்னகத்தில் எழுந்த அற்றுவிகமும் (= ஆசீவிகமும்), சிவநெறியும், விண்ணவ நெறியும் (இதன்வழி வடக்கில் பிறந்த பாகவதநெறியும்) ஒருநாளும் பாடல், ஆடலைப் புறக்கணிக்கவில்லை. சிவநெறி தம் இறைவனை அம்பலத்தாடி ஆகவே ஓருருவிற் படைத்துக் கொள்ளும்.  இக் கூர்மையான வடக்கு/தெற்கு வேறுபாட்டை நாம் மறந்துவிடக் கூடாது.

பற்றுதல் என்பது பிடித்துக்கொள்ளுதல். இறைவனைப் பற்றிக் கொள்ளுதல். (அது குரங்குப் பாவனையா, பூனைப் பாவனையா என்பது முகன்மை யல்ல.) பற்றின்வழிப் பிறந்த சொல் பற்றி. இனிப் பார்ப்போம். றகரம் பேச்சுவழக்கில் தகரமாவது தமிழரின் இயல்பு. கூடவே ’த்தி” என்பது வடக்கே போகும் போது ”க்தி” ஆகும். பற்றிக்கு பஜ் என வேர்சொல்வது இயல்பாய்த் தெரிய வில்லை. பற்று> பற்றி> பத்தி> பக்தி என்றே சங்கதச் சொல் கிளர்ந்தது. அதை மாற்றிப் பஜ்> பக்தி> பத்தி> பற்றி என்று தலை கீழாகக் காட்டுவது முரண்பாடாய்த் தோன்றுகிறது.

(தமிழில் தொடக்கம் என்று சொன்னால் துருவித் துருவிக் கேள்வி கேட்கும் நம்மில் பலரும் சங்கதச்சொல் என்றவுடன் மோனியர் வில்லியம்சோடு நிறுத்திக்கொண்டால் எப்படி? குறிப்பிட்ட வடசொல் எந்த நூலில் முதலில் வந்தது? என்ன பொருளில் முதலில் ஆளப்பட்டது? தொடர்புள்ள மற்ற சொற்கள் எவை எவை? இதற்குக் காட்டும் சான்றுகள் இடைச்செருகலா? மூலமா? இது போன்ற சொற்கள் மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் உள்ளனவா? - என்ற பல படியான கேள்விகளை ஏனோ கேட்கமாட்டேம் என்கிறோம். ”சாமி” சொன்னால் சரியாய் இருக்கும் என்ற போக்கில், “சங்கதம்” என்று சொல்லிவிட்டால் ஒருவிதப் பற்றியோடு ஏற்றுக்கொண்டு விடுகிறோம். அடிமைத்தனம் விடுத்துச் சங்கதம் பற்றிக் கேள்விகள் கேட்க என்று நாம் அணியமாவோமோ? தெரியவில்லை.)

பத்தியுள்ள தன்மை பத்திமையாகும். திருநாவுக்கரசர் தன் ஆறாந் திரு முறைத் தேவாரத்தில் திருப்புள்ளிருக்கு வேளூர் - திருத்தாண்டகம் 6.54.3 ஆம் பாட்டிற் பேசுவார்.     

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

மாணிக்க வாசகரும் தம் திருவாசகம் எண்ணப்பதிகம் முதற்பாட்டில்

பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருருவாய சிவபெரு மானே செங்கம லமலர் போலும்
ஆருருவாயவென் னாரமு தேயுன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே

என்று சொல்வார். பற்று/பற்றியுள்ளவன் பற்றன்> பத்தன்> பக்தன் ஆனான். பற்றிப்பாட்டு> பத்திப்பாட்டு> பக்திப்பாட்டு ஆயிற்று. பற்றிமையாற் பாடும் பாட்டு பற்றிமைப் பாட்டு. சிவ நெறியின் 4 குரவரும், விண்ணவ நெறியின் 12 ஆழ்வாரும் பாடிய பாடல்கள் எல்லாமே பத்திப்பாடல்கள் தான். பற்றி> பத்தி> பத்தியம்> பதியம் என்ற சொல்லும் பத்திப் பாடல்களையே குறித்தது பதியம் பதிகமும் ஆனது. பதிகங்கள் பெரும்பாலும் பத்துப் பாடல்கள் கொண்டதால் (அதேபொழுது 10 இற்கு மேலும் 11, 12, 16, 20. என்று பாட்டு எண்ணிக்கையுண்டு. அதேபொழுது பெரும்பாலும் 10 என்பது உண்மையே), இற்றை அகரமுதலிகள் பதியத்தை 10 பாடல்கள் கொண்ட தொகுதி என்றே பொதுவாய்க் குறிக்கும். சொறபிறப்பின் படி பதியம், பத்தாய் மட்டும் இருக்கத் தேவையில்லை. அவை பற்றியப் பாடல்கள் என்பதே அடிப்படையில் உண்மை. பற்றியப் பாடல்கள் பத்தன் (=பற்றன்) பாடல்களாகவும் புரிந்து கொள்ளப்பட்டன.

பதியம் என்ற சொல் பொதுவான சாமி பாட்டுக்களைக் குறித்ததால், திருப் பதியம் (=திருப்பதிகம்) என்ற சொல் சிவ சமயக்குரவர் மூவர் பாட்டையே குறித்தது. இவருள்ளும் திருஞான சம்பந்தர் பாட்டு திருக் கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாட்டு தேவாரம் என்றும், சுந்தரர் பாட்டு திருப்பாட்டு என்றும் வழங்கப் பெற்றது. தேவாரம் என்ற சொல் பின்னால் மொத்தத்தையும் குறித்தது பின்வந்த புரிதலாகும். இராசராச சோழன் காலத்தில் தேவார மொத்தத்தையும் திருப்பதியம் என்றழைத்தார். அப்படியே கல்வெட்டுக்களிற் பதிந்திருக்கிறார். ஆழ்வார்களின் நாலாயிரத் தெய்வப் பெருபந்தமும் (நாலாயிரத் திவ்யப் ப்ரபந்தமும்) பற்றின் தொடர்புடையவையே. பந்தத்தின் பொருள் பற்று என்பதே. பெரு பந்தம் = பெரும்பற்றில் எழுந்த பாடல் தொகுதி; பெருபந்தம், சங்கதவோசையில் இது ப்ரபந்தமாகும். தெய்வம் திவ்யமாகும். பாட்டு தமிழாக இருக்கையில். பெயர் மட்டும் சங்கதமாகிவிடுமா, என்ன? தெய்வப் பெரும்பந்தம் என்று சொல்லலாம்.(நாம் விதம் விதமாய் தமிழ்ச் சொற்களை இழந்துள்ளோம்.)

பத்தன் பாட்டு வடக்கு ஏகையில் ”பாட்டை” விட்டு பத்யனாகியது போலும்.  பத்தன் என்ற சொல் தமிழில் ஆளைக் குறித்திருக்க வடக்கே பாட்டையே (பதிகப் பொருளில்) குறித்தது போலும். (என் ஊகம் தான்.) பத்யன், வட பாகத வழக்குகளில் பஜ்ஜ ஆகும். (இதற்கு ஏராளம் எடுத்துக்காட்டுகள் உண்டு. ஒன்று மட்டுங் காட்டுவேன். நம்முடைய நட்டுமம்> நத்தும> மத்தும> மத்திம> மத்யம> மஜ்ஜிம என்றாகும். புத்த நூலாலான மஜ்ஜிம நிகாயம் நடுவாந்தரமான நீளத்திலுள்ள உரைகளின் தொகுதி.) பஜன் என்பதை மீண்டும் கடன் வாங்கி நாம் பஜனை ஆக்கியுள்ளோம். அவ்வளவு தான். பஜனைப் பாட்டின் மூலத் தமிழ்ச் சொல் பத்தன் பாட்டு / பத்திப் பாட்டு / பதியப் பாட்டு / பதிகப் பாட்டு என்பதே.

இவ்விடத்தில் நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் இதை ஏற்கனவே நன்றாகப் புரிந்துள்ளார் என்பதைக் குறிப்பிடவேண்டும். பார்க்க: https://365paa.wordpress.com/2012/01/12/190/ என்ற இடுகையில் அவருடைய பின்னூட்டு. கீழே அவர் பின்னூட்டிலிருந்து சிலவற்றை வெட்டியொட்டி யிருக்கிறேன்.
---------------------------------
பக்தி என்பது வடமொழிச் சொல்லா?
பக்தி என்பதன் மூலச் சொல் பஜ்-பஜனம் (பஜனை/வழிபாடு)-ன்னு சிலர் சொல்லுவார்கள்!

எப்படி பஜ்-பக்தி ஆச்சு-ன்னே தெரியல! ஒட்டவும் இல்ல!

ஆனால்…”பத்தி” என்பது நற்றமிழ்ச் சொல்!
முத்தைத் தரு “பத்தி” என்பது அவனோட திருப்புகழ்!

பத்தி = அதைச் செய்வது = பத்தர்!
பத்தர் ஆவிப் பெருமாள் என்றே இருக்காரு! திருக்கண்ணமங்கை என்னும் ஊரில்!
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை – என்பது ஆழ்வார் அருளிச் செயல்!

எங்கள் அப்பர் பெருமான் இன்னொரு படி மேலே சென்று…
பத்தனாய்ப் பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னைநீ இகழ வேண்டா
-ன்னு ஈசனையே மிரட்டுவாரு!:)

இப்படி, பத்தி, பத்தர் என்பது தமிழில் பலகாலம் புழக்கத்தில் இருக்கு!
ஆனா “பக்தி” என்னும் வடமொழிச் சொல்லு தான் “பத்தி” ஆச்சு-ன்னு ஒரே போடாப் போட்டுருவாக! தரவெல்லாம் குடுக்க மாட்டாக!
ஆனா தமிழைத் தாங்குபவன் எவனோ, அவனே இளைச்சவன்! அவன் தான் கடேசீ வரைக்கும் தரவு குடுத்துக்கிட்டு இருக்கணும், பத்தி என்னும் சொல்லுக்கு!:((
--------------------------------

அன்புடன்,
இராம.கி.

No comments: