Sunday, March 29, 2020

இந்தியா என்ற சிந்து நாட்டின் பொருள்

 உடன் இணைத்துள்ள படத்தில், இந்தியாவின் பெயர் ”சிந்துநாடு” என்று சொல்லப்படும்.

சிந்து என்பது ஆற்றின் பெயர் தான். ஆனால் சிந்தின் பொருளென்ன? - என்று இவ்விடத்தில் கேட்பது நல்லது.  முன்னால், “குளிர்ச்சொற்கள்” என்ற இடுகையில் (https://valavu.blogspot.com/2009/09/blog-post.html) சிந்தின் சொற் பிறப்பைச் சொல்லியிருந்தேன் இந்த இடுகையில் மற்ற குளிர்ச்சொற்களை விடுத்து, சிந்து தொடர்பானவற்றை மட்டும் வெட்டியொட்டுகிறேன். இடுகையின் முடிவில் வருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். முடிவில் இந்தியா என்ற நாட்டின் பொருள் இது தானா என்று அசந்து போவீர்கள். சுவையாரமான இடுகை.
    .     
”நீர்ப்பரப்பு கூடக்கூட நீர்ச்சூடு குறையும்” என்பதால் சிறுத்தலை, சூட்டுக் குறைவோடு பொருத்துவார்கள். சில்>சிலிர்>சிலிர்தல். பிறவினையில் இது சிலிர்த்தல் ஆகும். [இப் பிறவினைச் சொல்லால் நடுக்கம், திகைப்பு போன்ற உணர்வுகளைக் குறிப்பர். அவையும் குளிர்ச்சிப் பொருளின் நீட்சி உணர்வுகளே.] சில்-இடுதல் சில்லீடு (chill) எனும் பெயர்ச்சொல் உருவாக்கும். chill: O.E.ciele, cele "cold," from P.Gmc. *kal- "to be cold," from PIE base *gel- "cold."

சில்லிட்ட நீரையே ஆண்டின் பல மாதங்கள் வடபுலத்தார் பயனுறுத்துவதால் சில்>சல்>சலம்>ஜலம் என்று திரிவில் நீர்ப்பொருளைச் சங்கதம் சுட்டும். [சலசல என்ற ஒலிப் பொருளில் ”சலம்” பிறந்ததாய்ச் சொல்வது இன்னொரு விளக்கம்.] ஜலத்திலிருந்து ஜலீலம் என்ற சங்கத நீட்சி ஏற்படும். மேலை நாடுகளில் சில போது நீரும் பனிக்கல்லும் சேர்ந்து காற்றோடு பெய்யும் மழை வருவதுண்டு. இதை sleet என்பார். சில்லின் நீட்சியாய் பனிக்கல்லைச் சில்லுக்கல் எனலாம். [sleet ஐ சில்லுக்கல் மழை என்று தமிழில் எளிதாய்ச் சொல்லலாம். கல்லை ஒதுக்கிச் சிலிதை என்றுஞ் சொல்லலாம்.]

சில்லின் நெருங்கிய திரிவில் சல்>சல்நம்>சன்னம் ஆகி thin - சிறுமை காட்டுவது போல, மெய் சில்லிட்ட நிலையை சல்நி>சன்னி எனும் சொல் அடையாளம் காட்டும். சில்>சின்னி என்பதும் அதே நிலை காட்ட முடியும். ஒரு நீர்ப்பொதி சில்லுறும் போது, சிலும்பும் (சில்> சிலு>  சிலும்பு), சில்கும், சீகும், சீகுறும். (சீகரம் இப்படி எழும்.) சிதறும் (சில்தல்> சிதல்> சிதர்> சிதரு> சிதறு. சிதர், சிதரம் = மழைத்துளி ). பின் சில்ந்தியும் போகும் (>சிந்தும். சிந்தல்= சொரிதல்). சிந்திய பொருளின் சூடும் குறையும்.

சிந்து என்பது துளி, நீர், ஆறு, கடல் என்பதோடு வெள்ளை நிறத்தையும் குறித்தது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பனியும் வெள்ளை தானே? சுல் எனும் வேர் வெள்ளையைக் குறிக்கும். சுல்> சுல்லு> சுள்ளி என்பது வெள்ளியைக் குறிக்கும். சுல்லு> சுல்லம்>சு ல்வம் என்பது சங்கதத்தில் வெள்ளியைக் குறிக்கும் (ஆங்கில silver). வெள்ளை நிறத்து ஆண் விந்து சுல்> சுல்க்கு> சுக்கு> சுக்கிலம் எனப்படும். வெள்ளை நிறத்து வெள்ளிக் கோள் சுல்> சுல்க்கு> சுக்கு> சுக்ர என்ற திரிவில் சங்கதப் பெயர் கொள்ளும். சுல்> சுவ்> சுவேது எனும் வடமொழி வளர்ச்சியும் வெள்ளையைக் குறிக்கும். சுவேதாம்பரர், வெள்ளாடைச் செயினரைக் குறிக்கும் சொல். இன்றைக்கு கேரளத்தின் பெரிய ஆறான பெரியாறு சுள்ளியம் பேராறு என்றே சங்க இலக்கியத்தில் பேசப்படும். நீரக ஏகனிச் செறிவு (hydrogen ion concentration) கூடிப் போய் களரி அரங்கில் (alkali range) வருமாகில் ஆறு பால் நிறம் காட்டும். பால் நிறம் வெள்ளி நிறம் தானே?

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளைச் சிந்து வகை என்று குறித்துள்ளார். வெள்ளை நிற இருவாட்சி (Tuscan jasmine) சிந்து என்று சொல்லப் படும். செல், சி(ந்)தல், சிதலை என்ற சொற்கள் வெண்ணிறக் கறையானைக் (termite) குறிக்கும். சிந்தின் சகரத்தைப் போக்கி இந்தெனும் பழக்கம் நமக்கு  உண்டு. சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்த்ர என்றும் வடவர் சொல்லியிருக்கிறார். இந்த ஒலி வேறுபாடுகளோடு

இந்து கமலம், சந்த்ர காம்பியம், சித அம்புஜம் = வெண்டாமரை,
இந்த்ர புஷ்பம் = வெண்தோன்றி,
இந்த்ரபம் = வெட்பாலை

என்னும் சில சித்த மருத்துவப் பெயர்களைப் பார்த்தால், ”இந்து, சிந்து, சந்து, சந்த்ர” என்ற சொற்களுக்கும் வெண்மைக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சிந்தாற்றின் உயர்பகுதிகளில் கரைகளை ஒட்டிய பாறைகளில் படிவமாய்க் கிடைக்கும் உப்பு சிந்துப்பு எனப்பெறும். [சகரம் தவிர்த்து இந்துப்பு என்றும் இதைச் சொல்வர்.] வடக்கே இந்தி மொழியில் ”சந்தா நமக், சிந்தா நமக்” என்றும் இதைச் சொல்வார். நம் சித்த மருத்துவ அகராதிகளில் ”சந்திர லவணம், சிந்து, சிந்துசாரம்” என்றும் இது சொல்லப்படுகிறது.

இந்த உப்பின் கதையைச் சற்று விரிவாய்ப் பார்ப்போம். கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென்னிந்தியா வடகிழக்கே நகர்ந்து ஆசியாவை முட்டியது என்பார். இரண்டிற்கும் இடைப் பட்ட டெதிசுக் கடல் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து ஆவியாகிப் போனதாம். இதனால், பழங்கடலின் உப்பு செறிந்து, படிகமாகிப் பல மாத்திரிகள் (meters) உயரத்திற்குப் பள்ளங்களை நிறைத்து, பாறையானதாம். மேலும் மேலும் ஆசியாவோடு மோதியதால், உப்புப் பாறைகளுக்கும் மேல் வண்டலும் மண்ணும் படிந்து, கூடவே நில மடிப்பு விழுந்து, உயர்ந்து, குன்றுகள், மலைகள் ஏற்பட்டனவாம். இம்மலைகளின் தொடரே இமய மலைத் தொடர் ஆகும். காலம் செல்லச் செல்ல, இமய மலை மேல் பனிப் பாறைகள் உருவாகி, வெப்பம் கூடும் காலத்தில், பனியுருகி மேற்கே வழிந்து வளைந்து, சிந்தாறு ஏற்பட்டுத் தென்மேற்கில் ஓடியதாம். அப்பொழுது, அது வண்டல்களை வாரிக் கொள்வதோடு அன்றி, பனிப்பாறைகள் ஆற்றின் இருபுறத்தும் மூடிநிற்க வழி ஏற்படுத்திப் போனது. பனிப்பாறைகளின் கீழே பனியுருகி நிலப்பாறைகளின் புரைகள் (pores) வழி ஊடுறுவிக் கசிந்து, அங்கிருந்த உப்பைக் கரைத்து கீழ்ப்புரைகள் வழியாய் வெளிப்பட்டு, சில இடங்களில் தொடர்துளிகளாய் ஆண்டு முழுக்கச் சொரிந்திருக்கிறது. செறிந்த உப்புக் கரைசலில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நீர் ஆவியாகும் போது நிலப் பாறையோரங்களில் புரைகளுக்கு அடுத்து சரஞ்சரமாய் உப்பு மீண்டும் படிகமாகித் தொங்கிக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்து வரும் இப் புவிச்செயல்கள் 50000  ஆண்டுக் கணக்கிலும், அதற்குப் பின்னும் படர்ந்த இந்திய முதன்மாந்தருக்கு புரியவா செய்யும்? அவர் பார்த்ததெல்லாம் பனிப் பாறைகளும், அவற்றிற்குச் சற்று கீழே சரமாய்த் தொங்கும் உப்புப் படிவங்களும் தானே? கடற்கரை இலாக் குறிஞ்சி நிலத்தாருக்கு, கடலுப்பின் பகரியாய்ச் சிந்துப்பு பயனுற்றது. அம்மாந்தரின் பார்வையில், சிந்துப்பு என்பது பாறைகளில் பனிபடர்ந்து சொரிவதால் இயல்பாய் விளையும் உப்பு. (Rock salt is formed naturally on mountains and rocks, being solidified from falling dew. It is an impure chloride of sodium.) உலகின் விந்தை விளைவுகளில் சிந்துப்பும் ஒன்று. இற்றைப் பாக்கித்தானில் உப்பு அரங்குப் (salt range) பகுதிகளில், ஆற்றிற்கும் உப்பிற்கும் உள்ள பொதுக் கரணியத்தால் இப்பெயர் ஏற்பட்டது. அப் பொதுக்கரணியம் என்ன?

சிந்து எனும் சொல் துளி, நீர், ஆறு, கடல், வெள்ளை மட்டும் குறிக்காது, மிகுந்து சில்லிட்ட நீர் அல்லது பனித்துகள் என்பதையும் குறித்திருக்கும் என்று கீழ்வரும் பல கரணியங்களால் ஊகிக்கிறோம். அக் கரணியங்களில் முதலானது: ”ந்நு, ந்து” என்ற பலுக்கற் திரிவுகள் இருந்தாலும் தமிழிய மொழிகளில் இணைச்சொற்களாகி ஒரே பொருளைச் சுட்டி அமைவதாகும்.. காட்டு: வந்நு/வந்து, பந்நு/பந்து. (நகர ஈறு னகரம் ஆவதையும் இங்கு சேர்த்து எண்ணலாம்.) சில்>சின்>சின்னு என்ற வளர்ச்சி ஏற்படுமானால் சின்னு/சிந்து என்ற திரிவும் தமிழில் அமையக் கூடாதா, என்ன?

snu என்னும் சங்கத வேர்ச்சொல்லிற்கு dripping, trickling, sprinkling என்ற பொருட் பாடுகளைச் சொல்வார். சில்>சின் எனும் தமிழ்வேரில் கிளைத்த சின்னம், சீந்தல் என்ற தமிழ்ச்சொற்கள் மழைத்தூறலைக் (drizzling) குறித்ததாய் அகராதி நிகண்டு பதிவு செய்யும். கோவை, நீலமலை மாவட்டங்களைச் சீத நாடென்று சொல்லிக் கொடுந்தமிழ் 12 நாடுகளில் ஒன்றாய்க் காட்டுவார். சீந்து, சீந்தல், சீதம் ஆகிய தமிழ்ச் சொற்களின் முந்திய வடிவாய்ச் சிந்து என்ற சொல்லே அமைய முடியும். அதற்குப் பனிப்பொருள் (cold, chill) இருந்திருக்க பெரிதும் வாய்ப்புண்டு. தூவப்பட்ட (sprinkle) பனித்துகள், உருகி நீரானால், அது சொட்டும் (drips), துளித்து விழும் (trickles) தானே?

snu என்ற சங்கதச் சொல்லை ஒட்டிய மேலைச் சொற்கள் பலவும் உள்ளன. snow: O.E. snaw "snow," from P.Gmc. *snaiwaz (cf. O.S., O.H.G. sneo, O.Fris., M.L.G. sne, M.Du. snee,Du. sneeuw, Ger. Schnee, O.N. snjor, Goth. snaiws "snow"), from PIE *sniegwh -/*snoigwho- (cf. Gk. nipha, L. nix (gen. nivis), O.Ir. snechta, Welsh nyf, Lith. sniegas, O.Prus. snaygis, O.C.S. snegu, Rus. snieg', Slovak sneh "snow") என்று அவை அமைந்திருக்கின்றன. ஓராண்டில் ஆறேழு மாதங்கள் பனி நீரைத் தங்கள் மேனிமேற் சொரிந்து கொண்ட வடபுலத்தார் snu என்ற சொல்லோடு தொடர்புறுத்திக் குளித்தலை ”ஸ்நாயதி” என்று சொல்லி ஈரப்படுதல் என்று பொருள் கொண்டார். வடக்கே குள்ளக் குளிக்க முடியாது; ஓரளவு ஈரப்படுத்திக் கொள்ளவே முடியும். [The cognate in Skt., snihyati, came to mean "he gets wet."] சுடுநீரால் தான் ஆண்டின் பல மாதங்கள் அவர் குளிக்க முடியும்.

சிந்திற்கும் பனிக்கும் தொடர்பில்லை எனில், சிந்தாறு என்ற கூட்டுச்சொல் ஏற்பட வாய்ப்பேயில்லை. [சிந்து எனுஞ் சொல்லை ஈச்சமரத்தோடு தொடர்பு காட்டி திரு. நா. கணேசன் பொருள் சொல்வார். அதையேற்க எனக்குப் பெருந் தயக்கமுண்டு. இன்னுஞ் சிலர் சிந்தின் சங்கத வேராக ஸித் எனும் சொல்லைக் காட்டுவர். அந்த வேர் சிந்தின் விதப்பான பொருளாகாது. பொதுமையான பொருளாய் உள்ளது. எப்பொழுதும், ஆற்றின் பெயர்கள் பொதுமையில் இல்லாது விதப்பாகவே இருப்பதை நாம் காண்கிறோம். காட்டு: பொன்னி, கன்ன பெருநை, தாம்ப பெருநை, வெள்கை>வைகை]

சிந்தாற்றின் சிறப்பே, மக்கள் புழங்கும் உயர்பகுதிகளில், வடந்தைப் பருவத்தில் (வாடை, வடந்தல்> vadanther> vidanther> winther> winter) ஆற்றின் கரையோரங்கள் பெரிதும் பனி பொழிந்து பாறைகளாவது தான். பனிப்பாறை படர்ந்து கிடக்கும் சிந்தாற்றின் மேற்பகுதிகளை மிகப் பழங் காலத்தில் மாந்தர்களால் அணுக முடிந்திருக்க வேண்டும். அற்றை நிலையில், மீள மீள வெம்மை கூடும்போது பனிப்பாறை உருகி, நீராய் மாறிப் போவதையும் பின் வெம்மை குறையும் போது, நீர் உறைந்து பனிப்பாறை ஆவதையும் அவர் பட்டறிந்திருக்க வேண்டும். சிந்தியதும், உருகியதும் நீர்த்துகளே என்ற புரிதல் அவர்க்குப் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும். இச் சிந்தனைகளின் வழி ஓர்ந்து பார்த்தால், சிந்தாற்றின் பொருள் பனியாறு என்பதாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம். [கூடவே silver river - வெள்ளாறு என்ற புரிதலும் இருந்திருக்க வேணுமென ஊகிக்க முடியும். தென்னகத்திலும் 4 வெள்ளாறுகள் வேறு காரணம் பற்றியுள்ளன. சிந்து என்பது வெள்ளைப் பனி. இவை வெறுமே வெள்ளாறுகள்.]

சிந்தாறு = பனியாறு என்ற அதே அணுகலைக் கொள்ள முடியாத அளவிற்கு, காடுகள் மிகுந்து, மலைப்பாதைகள் அமையாது, கங்கை, தொழுனையின் (யமுனை) மேற்பகுதிகள் இருந்திருக்கலாம். வடபுலத்து மாந்தர், தம் நாகரிக வளர்ச்சியில் சிந்தாற்றங்கரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்த பின் தான், கங்கை, தொழுனைக் கரைக்கு மெதுவாய்ப் பெயர்ந்திருக்கிறார். எனவே பனியைச் சிந்தாற்றோடு மட்டுமே தொடர்புறுத்தியிருக்கலாம். கங்கை, தொழுனையின் நீர் மலையின் கீழ்மட்டங்களில் மட்டுமே அணுகக் கூடியதாய் இருந்ததால், பனியைக் காணாது வெறுமே சில்லிட்ட நீராய் மட்டுமே வடபுல மாந்தர் இவ்வாறுகளை உணர்ந்திருக்கலாம்.

முன்சொன்னது போல், சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்து, சாந்தென்றும் நீளும். சந்தின் நீட்சியாய்ச் சந்தன் என்ற பெயர் குளிரும் இரவிற்குரிய, பால்வண்ணம் காட்டும், நிலவின் பெயராய் வடபுலத்தில் அமையும். சந்த>சந்த்ர என்று சங்கதத்தில்  இன்னுந் திரியும். சிந்து, சகரம் தவிர்த்து இந்தாகி மீண்டும் நிலவைக் குறிக்கும். நிலவைக் குறித்த சொல் இன்னுந் திரிந்து இந்த>இந்த்ர என்றாகி வெள்ளை நிறத் தேவர் தலைவனைக் குறிக்கும். அத்தலைவன் ஏறும் விலங்கையும் வெள்ளை யானை என்று தொன்மஞ் சொல்வார். (வெள்ளையானை இனம் இன்றும் இந்தியாவின் வடகிழக்கில், பர்மாவில், தாய்லந்தில், கம்போடியாவில் உண்டு.) அவன் பார்வைக் குளிர்ச்சிப் பார்வை என்றும் இந்நாடுகளின் தொன்மங்கள் கூறும்.

குளிர்வது, நிலவிற்கு இயல்பானதால், தண்ணவன், நிலவைக் குறிக்கும். [தண் எனும் வேர் பற்றி இக்கட்டுரையில் அலசவில்லை.] இது போல ஒரு குறிப்பிட மரக்கட்டைகளை அரைத்துப் பெற்ற கலவை குளிர்ச்சி தருவதால், நிறம் வெள்ளையன்றி வேறாயிருந்தும், சந்து சந்தனம் என்ற சொற்களைப் பெறும். பின் அக்குளிர்ச்சி உடலைச் சார்வதால் சார்ந்து>சாந்து>சாந்தம் என்று பெயரும் வேறுவகையிற் கொள்ளும். சாரம்>ஆரம், சாரல்>ஆரல் நீட்சிகள் இன்னும் அடுத்த சொல்வளர்ச்சி நிலைகள் ஆகும்.

ஆக இந்தியா என்பது பனிநாடென அந்தக் காலத்தில் பெயரிடப் பட்டுள்ளது. பனிநாடு - சிந்துநாடு = இந்தியா. இந்தப் பொருள் தமிழால் மட்டுமே உய்த்து உணர முடியும். தமிழின் வழியின்றி இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது என்று எத்தனை முறை சொல்வேன்?

அன்புடன்,
இராம.கி. 

5 comments:

Anonymous said...

மிகவம் ஆழமான ஆய்வு. சிறப்பு...

Anonymous said...

ஏதேதோ கூறி ஏமாற்றி வேண்டா.உளறல் ஆய்வு.

Anonymous said...

சிறப்பு..

Anonymous said...

தங்களுடைய அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும் வியப்பை ஏற்படுத்துகின்றன. தமிழுக்கு அரும்பணியாற்றுபவர்கள் வெகு சிலரே! அதில் நீங்களும் ஒருவர். தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Anonymous said...

மிக ஆழமான ஆய்வு ங்க ஐயா. நன்றியும், பேரன்பும் ங்க.