Wednesday, November 29, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 6


முன்னால் சொன்ன வெவ்வேறு எழுத்து முறைகளுக்கு அணைவாக ஒரு படத்தை மேலே கொடுத்திருக்கிறேன். படத்தில் உள்ள வரிசைப்படி இனிக் கீழே பார்ப்போம்.

1. முதலாம் எழுத்து முறை:

இந்த எழுத்து முறைக்குக் காட்டாக, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்து மாங்குளம் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 314, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) கல்வெட்டை அப்படியே பெயர்த்து இங்கு எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி "சாத்தன்" என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

இந்த எழுத்து முறையில் "சாத்தன்" என்ற சொல்லின் சில இடங்களில் இருக்கும் உயிர்மெய்யை உடைத்து மெய்யையும் உயிரையும் தனித்துக் காட்டியும், இன்னும் சில இடங்களில், நெடில் உயிர்மெய்யை உடைத்து அதற்குப் பகரமாக (substitute) குறில் உயிர்மெய்யும், அடுத்து ஓர் உயிரும் வருமாறு காட்டியும் "ச அ த் த் அ ன்" என்று எழுதியிருக்கிறது. பொதுவாக இந்த முறையில் ச், ச, சா, போன்றவற்றிற்கு இடையே ஓர் ஒழுங்கு இன்றிருப்பது போல் அல்லாமல், ஒரு குழப்ப நிலையே இருந்திருக்கிறது. காட்டாக, இங்கே சாத்தன் என்று எழுதியதில் முதல் எழுத்தாகச் ச என்ற குறில் உயிர்மெய்யும், அடுத்து ஓர் அகரமும் வருவதைப் பார்க்கலாம்; இரண்டையும் கூட்டி சா என்று படிக்க வேண்டும். இதே போல, நாலாவது எழுத்தான த் என்பதையும், ஐந்தாவது வரும் அகரத்தையும் கூட்டி, த என்ற உயிர்மெய்க் குறிலாகப் படிக்க வேண்டும். இன்னுஞ் சில இடங்களில் மேலே சிறு கோடு கொண்ட எழுத்து மெய்யெழுத்தைக் குறிப்பதாகவும் வரலாம். இது போன்ற குழறுபடிகள் கல்வெட்டை எழுதிய சிற்பியின் குறைந்த எழுத்தறிவு காரணமாகவும் ஏற்படலாம். இருந்தாலும், எழுத்து முறையில் தட்டுத் தடுமாறிக் (trial and error) குழப்பங்கள் இருந்து, பின்னால் எங்கும் ஓரிமை (uniformity) ஏற்பட்டுத் தீர்வுகள் கண்டு, சரி செய்யப்பட்டன என்று அறியவேண்டும். ஓர் இயல்மொழிக்கு எழுத்துருவ வளர்ப்பு என்பது இப்படித்தான் அமையும். தமிழ் எழுத்துமுறையைக் கடனாக வாங்கியிருக்க வாய்ப்புக்கள் குறைவு என்றும் இந்த வளர்ப்பைப் பார்த்துச் சொல்லுகிறோம்.

2. இரண்டாம் எழுத்து முறை:

இந்த இரண்டாம் எழுத்து முறைக்கான காட்டாக, இரும்பொறைச் சேரர் காலத்துப் புகழூர்க் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 405, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) இங்கும் கல்வெட்டை அப்படியே பெயர்த்து எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி சாத்தன் என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

இந்த எழுத்து முறையில் மேலே படத்தில் உள்ளதை "சா த் த ன்" என்றே நான்கு எழுத்தாகப் படிக்க வேண்டும். மூன்றாவதாக வரும் புள்ளியில்லாத அடிப்படைத் தகர வடிவு இங்கே மெய்யெழுத்தையே குறிக்கிறது. சா என்பதற்கும், த என்பதற்கும் ஒன்றே போல ஒரு சிறுகோட்டை மேலே போட்டிருப்பதையும் கவனியுங்கள். அந்தக் கோடு ஓரிடத்தில் ஆகாரத்தையும், இன்னொரு இடத்தில் அகரத்தையும் உணர்த்துகிறது.

மேலே காட்டிய முதல் இரு எழுத்து முறைகளிலும் அகர உயிர்மெய்க்கும், ஆகார உயிர்மெய்க்கும், மேலே ஒரு சிறுகோட்டைக் காட்டும் ஒரே உருவம் அமைந்து இருக்கலாம்; இப்படி ஒரே உருவம் அமைவதால், கல், கால் போன்று பொருள் தரும் வகையில் உள்ள தமிழ்ச் சொற்களைப் படிப்பதில் குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் முகமாகத் தமிழ் எழுத்துமுறையில் சில மாற்றங்கள் எழுந்தன. அவற்றைக் கீழே பார்ப்போம்.

அதே பொழுது, காலத்தால் முந்திய இந்த இரு எழுத்து முறைகளின் மூலம், முகன்மையாக உணரவேண்டிய ஓர் உண்மையும் இருக்கிறது. அதாவது, தொடக்கத்தில் பல தமிழ்க் கல்வெட்டுக்களில் புள்ளியில்லாமலே தான் மெய்யெழுத்தை ஓர் அடிப்படை உருவத்தின் வழியாகக் குறிக்கும் வழக்கம் நெடுக இருந்திருக்கிறது. (புள்ளி என்பது இந்த எழுத்து முறைக்களுக்குப் பின் ஓரிரு நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.) அந்த அடிப்படை வடிவின் மேலும், கீழும், பக்கவாட்டிலுமாய் ஒன்று அல்லது இரண்டு சிறு கோடுகளை இழுத்து உயிர்மெய் எழுத்துக்களைக் காட்டியிருக்கிறார்கள்.

"மெய்யெழுத்தில் இருந்து தான் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகி இருக்கின்றனவே ஒழிய, அகர உயிர்மெய்களில் இருந்து அல்ல" என்ற அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளா விட்டால், இந்த முதலிரு முறைகளின் அடிப்படையையும், பின்னால் எழுந்த மாற்றங்களையும், தீர்வுகளையும் சரியானபடி புரிந்து கொள்ள முடியாது; பெருமிக்கும் தமிழிக்கும் உள்ள வேறுபாட்டையும் கூடச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது.

3. மூன்றாம் எழுத்து முறை:

இந்த மூன்றாம் எழுத்து முறைக்கான காட்டாக, அதியமான் நெடுமான் அஞ்சி காலத்து ஜம்பைக் கல்வெட்டைச் சொல்ல முடியும். (காண்க பக்கம் 398, Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century A.D., Iravatham Mahadevan, published by Crea-A, Chennai, India and The Department of Sanskrit and Indian Studies, Harward University, USA) இதிலுமே கல்வெட்டை அப்படியே பெயர்த்து எழுதாமல், அதில் பழகியிருக்கும் முறைப்படி சாத்தன் என்ற சொல்லைக் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

மேலே சிறு கோடு கொண்ட அடிப்படை உருவத்தை ஆகார உயிர்மெய்க்கு வைத்துக் கொண்டு, ஒரே அடிப்படை உருவத்தை மெய்யெழுத்திற்கும், அகர உயிர்மெய்க்குமாய் கையாண்ட பெருமி/தமிழி முறையே இந்த முறை. தமிழி முறையில் "சா த் த ன்" என்று படிக்கும் போது, இரண்டாவது, மூன்றாவது எழுத்துக்கள் ஒரே மாதிரியாக, புள்ளியில்லாத அடிப்படைத் தகர வடிவைக் காட்டுவதைக் கவனியுங்கள். முதல் தகரம் மெய்யெழுத்தையும், இரண்டாவது தகரம் அகர உயிர்மெய்யையும் குறிக்கிறது. (தமிழ் போன்ற மொழிகளில் தமிழ்ச் சொற்களுக்கு இடையே இருக்கும் மெய்ம்மயக்க ஒழுங்குகளால் இது சரியானபடி விளங்கிக் கொள்ளப் படும்.) ஆனால் பெருமியிலோ மெய்யெழுத்தே இல்லாமல் எல்லாமே உயிர்மெய்யாய்க் கொண்டு, இது "சாததன" என்று படிக்கப்படும்.

இரண்டு வேறுபட்ட பழக்கங்களைக் கொண்ட மொழிகள் ஒரே எழுத்து முறையைப் பயன்படுத்தும் போது, தனித் தனி இடங்களில் இருக்கும் வரை குழப்பம் இல்லை. என்றைக்கு இரண்டு விதமான மெய்ம்மயக்க ஒழுங்கு கொண்ட இந்த இரு மொழிகள் (தமிழும், பெருகதமும்) ஒன்றை ஒன்று ஒரே இடத்தில் ஊடுறுவத் துவங்கியதோ, அன்றைக்குத்தான் "எப்படிப் படிப்பது?" என்ற குழப்பம் விளையும். மேலும் மெய்யெழுத்திற்கும், அகர உயிர்மெய்க்கும் ஒரே வடிவம் காட்டியதால், "அகர உயிர்மெய்யே அடிப்படை; அதில் வெவ்வேறு குறியீடுகளைச் சேர்த்து மற்ற உயிர்மெய்களை உருவாக்குகிறோம்" என்று ஒரு தவறான புரிதலும் வடபுலத்தில் எழுந்திருக்கிறது. [முன்னால் சொன்ன, காலத்தால் முன்னெழுந்த, முதலிரு முறைகள் வடபுலத்தில் கையாளப் படவே இல்லை. தென்னகத்தில் மட்டுமே இருந்த அந்த முந்தைய முறைகளை அறிந்திருந்தால், "மெய்யெழுத்தோடு பல்வேறு குறியீடுகள் சேர்த்துத் தான் உயிர்மெய்கள் எழுந்தன" என்று வடபுலத்தார் அறிந்திருப்பார்கள்.]

4. நான்காம் எழுத்து முறை:

மூன்றாம் எழுத்து முறையில் ஏற்பட்ட குழப்பத்திற்குத் தீர்வாக இன்னும் மூன்று முறைகள் எழுந்திருக்கின்றன. முதல் வகைத் தீர்வு ஆந்திரத்தில் எழுந்த பட்டிப் போரலு முறை. இந்த முறையில் அடிப்படை உருவத்தையே மெய்யெழுத்தாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தில் மேல் உள்ள சிறு கோடு சேர்ப்பதை அகர உயிர்மெய் என வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தின் மேல் உள்ள சிறுகோட்டை இன்னும் கொஞ்சம் நீட்டி ஒடிந்தாற் போல கீழ் நோக்கி வளைத்து இன்னொரு சிறுகோட்டை காட்டுவது ஆகார உயிர்மெய்யைக் குறிப்பதாகவும் ஆக்கி, மூன்று வகைகளுக்கும் வேறுபாடு காட்டுவது இந்த முறையின் வழக்கமாய் இருக்கிறது. (பார்க்க, மேலே உள்ள படத்தில் 4 வது வரி, குறிப்பாகச் சா என்ற எழுத்தைப் பாருங்கள். மெய், அகர உயிர்மெய், ஆகார உயிர்மெய் ஆகியவை நன்கு வேறுபடுத்தப் பட்டு சற்றும் குழப்பம் இல்லாத முறையாகப் பட்டிப் போரலு முறை இருந்திருக்கிறது; இந்த முறையானது இரண்டாவது எழுத்து முறையிலும், மூன்றாவது எழுத்து முறையிலும் இருக்கும் குழப்பங்களைப் புள்ளியில்லாமலேயே தீர்க்கிறது. [ஆனாலும் இந்த முறை வளராது போனதின் காரணம் ஏதென்று தெரியவில்லை.] ஒரு வேளை பட்டிப் போரலு முறை இந்தக் காலத்திற்கும் வளர்ந்திருக்குமானால்,

க, க| கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ

என்று தோற்றம் காட்டியிருக்கும். "மெய்யெழுத்தை அடிப்படையாக வைத்துத்தான் உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்கள் எழுந்தன, அகர உயிர்மெய்யை வைத்து அல்ல" என்ற உண்மையும் நமக்கு ஆணித்தரமாகப் புரியும். அப்படிப் புரிந்த நிலையில், முட்டாள் தனமான புது இலக்கணமெல்லாம் ஒருங்குறிக்காரர்கள் கொண்டு வந்து காட்டிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.)

5. ஐந்தாம் எழுத்து முறை:

இந்த முறை தான் வடபுலத்து முறை என்னும் இரண்டாம் வகைத் தீர்வு. இது அசோகன் காலத்தில் ஏற்படவில்லை; எழுத்துக்கள் ஓரளவு திரிந்த பொழுது, குத்தர் (குப்தர்) காலத்தில் தான் ஏற்பட்டது; இருந்தாலும் சொல்ல வந்த எழுத்து முறை புரிய வேண்டும் என்று பழைய பெருமி எழுத்துக்களை வைத்தே இங்கு காட்டியிருக்கிறேன். மேலே உள்ள படத்தில் ஐந்தாவது வரியை நோக்குங்கள். இந்த முறையை இந்தக்கால நகரி எழுத்திலும், நம்மூர் கிரந்த எழுத்துக்களிலும் பரவலாகப் பார்க்கிறோம். எங்கெல்லாம் மெய்யும், இன்னொரு உயிர்மெய்யும் சேர்ந்து வருகின்றனவோ, அப்பொழுது ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுவதே இந்தத் தீர்வு ஆகும்.

காட்டாக தஙக என்ற சொல்லை எழுதும் போது, ங வை எழுதி அதற்குக் கீழே க வை எழுதிக் கூட்டெழுத்தாகக் காட்ட வேண்டும். அப்படி எழுதிய கூட்டெழுத்தில் மேலே உள்ள ஙகரத்தை ங் என்னும் மெய்யெழுத்தாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதே போல மந்தி என்பதை எழுத, நகரத்தையும் தகரத்தையும் ஒன்றின் கீழ் ஒன்றாய் எழுதிப் பின்னால் இகரத்தைச் சுட்டிக் காட்டக் கீழ் நோக்கி ஒரு சிறு கோட்டைக் காட்ட வேண்டும். இதில் கூட்டெழுத்தின் மேல் உள்ள நகரம் ந் என்னும் மெய்யெழுத்து என்றும், அதன் கீழ் உள்ளது தி என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை சொல்லின் கடையில் வரும் மெய்யெழுத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் வேலை செய்யும். கடையில் வரும் மெய்யெழுத்தைக் குறிக்க வேறு உத்தி பயன்படும். ஏனென்றால், வடபால் மொழிகளில் மகரமே பெரிதும் சொல்லின் கடையில் வரும் மெய்யெழுத்தாய் அமையும். அதற்கு ஒரு தனிக் குறியீட்டைப் போட்டு நிலையைச் சரி செய்து கொள்ளுவார்கள்.

6. ஆறாம் எழுத்து முறை:

இந்த எழுத்து முறைதான் தொல்காப்பியத்தில் சுட்டிக் காட்டிய முறை; அதாவது மூன்றாம் எழுத்து முறையில் இருந்த சிக்கலுக்கு மூன்றாம் வகைத் தீர்வு. மேலே உள்ள படத்தில் ஆறாவது வரியைப் படியுங்கள். இதில் அடிப்படை உருவத்தின் மேல் சிறு கோடு போடுவதை ஆகார உயிர்மெய்யாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தை அகர உயிர்மெய்யாய் வைத்துக் கொண்டு, அடிப்படை உருவத்தின் மேல் புள்ளியிடுவதை மெய்யெழுத்தாய் வைத்துக் கொண்டு, தீர்வு காண்பார்கள். (இப்படித் தீர்வு கண்டதாலேயே உயிர்மெய் எழுத்துக்கள் மெய்யெழுத்தின் திரிவாகப் பிறந்தன என்ற அடிப்படை உண்மை மாறி அகர உயிர்மெய் எழுத்தில் இருந்து தான் மற்ற உயிர்மெய் எழுத்துக்கள் உருவாயின என்று பிழைபடப் புரிந்து கொள்ளக் கூடாது. [ஆங்கிலத்தில் சொல்வது போல, what has been attempted is a local solution for a local problem and one should not interpret this as a global solution of a different imagined problem ; local optimum should not be confused with a global optimum]

இந்த எழுத்து முறையானது, வழக்கமான மெய்ம்மயக்கங்கள் மட்டும் அல்லாது, பாகதச் சொற்கள் தமிழில் ஊடுறுவியதால் ஏற்பட்ட புதுவித மெய்ம்மயக்கங்களையும் குழப்பம் இல்லாது படிப்பதற்காக எழுந்த ஒரு தீர்வு. இதே தீர்வை எகர - ஏகாரங்களுக்கும், ஒகர - ஓகாரங்களுக்கும், மகர எழுத்தின் உருவத்திற்குமாய்ப் பிற்காலத்தில் பயன்படுத்தினார்கள். இந்த மூன்றாம் வகைத்தீர்வில் புள்ளியை வைத்ததாலேயே, எழுத்துக்களின் அடிப்படை மாறிவிடாது.

இவ்வளவு ஆழமாக கல்வெட்டியல் வழி அன்றைய எழுத்து வளர்ச்சியை அறிந்த பின்னால், தொல்காப்பியத்திற்குள் மீண்டும் போக வேளை வந்துவிட்டது. (ஒருசிலர் கல்வெட்டியல் உண்மைகளை உணரத் தலைப்படாமலே தொல்காப்பியத்தைக் கொண்டுவந்து பிழைபடப் புரிந்து கொள்லுகிறார்கள்.]

தொல்காப்பியர் காலம், கி.மு. 700-500க்குள் இருக்க வேண்டும் என்று தான் ஆய்வின் வழி தோன்றுகிறது. அந்தக் காலத்தில் வேதம், சமணம், புத்தம் ஆகிய சமய நெறிகள் தெற்கே பரவத் தொடங்கியிருக்க வேண்டும். நம்மூர் உலகாய்தமும், ஆசீவகமும் வடபால் போய்ச் சேர்ந்திருக்கின்றன. இந்தப் பரவல்களின் காரணமாய்க் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகதமும், (பின்னால் சங்கதமும்), தமிழும் உறவாடத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை எழுதுபொருள் என்பது கல்லும், உளியும் மட்டுமல்லாது, பானையும் ஆணியும், தாழை மடலும் பித்தியும், பனை ஓலையும் எழுத்தாணியும் என விரிந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொல்காப்பியர் தனக்கு முன்னால் ஏற்கனவே இருந்த எழுத்து முறையை அவருடைய இலக்கண நூலில் விவரிக்கவே இல்லை; எது எதில் மாற்றம் எழப் புலவோர் வழி வகுத்தாரோ, அதை மட்டுமே சொல்லுகிறார். இப்போது, 14-ஆம் நூற்பாவிலிருந்து மீண்டும் அடுத்த பகுதியில் தொடங்குவோம்.

அன்புடன்,
இராம.கி.

படத்திற்கான சோதனை











அன்புடன்,
இராம.கி.

Monday, November 27, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 5

(பேச்சுநடையில் எழுதினால் புரியாது போய்விடுகிறது என்று சிலர் கூறியதால் இங்கு நடையை மாற்றிக் கொள்ளுகிறேன்.)

தொல்காப்பியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம் இடையில் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. என்னை மன்னியுங்கள், ஏனென்றால் குறியேற்றங்கள் பற்றி ஆர்வம் கொண்டவர்கள், அதுவும் ஒருங்குறி, ஒருங்குறி என்று தொங்கிக் கொண்டிருக்கிறவர்களில் பலர், ஒரு தவறான தேற்றத்தைப் (theory) பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். "அகரமேறிய மெய்யில் பல்வேறு குறியீடுகளைச் சேர்த்துத் தான் தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்தன" என்றும், "இந்தக் குறியீடுகள் எல்லாம் vowel maathra" என்றும் ஒரு புதுத் தேற்றைக் கொண்டு வந்து ஒருங்குறிக்கு ஓர் அடிவாரம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். (அடிவாரம் என்ற தமிழ்ச்சொல் தான் அட்டிவாரம் என்று நமக்குச் சற்று வடபுலத்தில் ஆகிப் பின் இன்னும் வடக்கே போய், கங்கைச் சமவெளியில் டகரம் மெலிந்து தகரம் ஆகி, முடிவில் அஸ்திவாரமும் ஆயிற்று. தமிழ் மூலம் தொலைத்த சொற்களில் இதுவும் ஒன்று. காலப் போக்கில் எப்படி எல்லாம் தமிழர்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது.)

தமிழ்க் குறியேற்றக்காரர்களுக்குக் கொஞ்சம் வரலாற்றைச் சொல்லும் முகமாக இந்தப் பகுதிக்கு வருகிறேன்.

சென்ற இருபதாம் நூற்றாண்டில், பழைய கால எழுத்து முறை, கல்வெட்டு போன்றவை அவ்வளவாகப் பலருக்கும் தெரியாது இருந்தன. இவை பற்றிய தரவுகளும் பெரிதும் பரவாமலே இருந்தன. தொல்காப்பியம் படித்து, அதற்கு விளக்கம் எல்லாம் சொன்ன, அந்த நூற்றாண்டின் முன்பாதியில் இருந்த, பெரும்பாலான தமிழறிஞர்களுக்கு அப்பொழுது தெரிந்தது எல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதியிருந்ததும், ஓரளவு வட்டெழுத்தும், இன்னும் அதிகம் போனால் பேரரசுச் சோழர் (imperial chozAs) கால எழுத்துக்களும் தான். மேலும் கொஞ்சம் ஆர்வம் கொண்டவர்களுக்கு வேண்டுமானால், பல்லவர் கால எழுத்தமைப்பு தெரிந்திருக்கும். பல்லவர்களுக்கும் முந்திய தமிழ்க் கல்வெட்டுக்கள் 1930களில் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருந்தாலும், அதைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் அரிது. ஆய்வு செய்தவர்கள் இன்னும் அரிது. அந்தத் தமிழறிஞர்களில் பலரும் வட்டெழுத்தே தமிழ் எழுத்தின் தொடக்கம் என்றும், தாங்கள் ஓலைகளில் படித்த முறையில் தான் தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் இருந்திருக்கும் என்றும் எண்ணினார்கள். ஆனால் கல்வெட்டு எழுத்துக்கள் பற்றிய ஆய்வு பின்னால் சென்ற முறையோ வேறு. அதுவரை இருந்த புரிதல்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடும் நிலைக்கு இன்று வந்திருக்கிறோம்.

இந்த நிலைக்கு வந்த வகையில், அந்தக் காலத்திய வரலாற்றுப் பார்வை பற்றியும் நான் சொல்ல வேண்டும். இந்திய வரலாற்றையும், மற்றப் பண்பாட்டுச் செய்திகளையும் சரியாக அறிய விடாது தடுத்ததில், ஒரு மூடத் தனத்திற்குப் பெரும் பங்குண்டு. "வேதத்தை மிஞ்சியது எதுவும், எங்கும் இல்லை; சங்கதம் தான் அதன் வெளிப்பாடு" என்ற எண்ணத்தால், தங்களின் பெற்றோர்-குருமாரின் ஆழ்ந்த அழுத்தத்தால், எங்கும், எதிலும், அந்தப் பின்புலத்தையே படித்தவர்கள் (குறிப்பாகப் படித்தவர்களில் பெரும்பாலோரான பெருமானர்கள்) தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் படித்தவர்களைப் பெருமை செய்த மற்றவர்களும் அதையே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த எண்ணம் மணிப்பவள நடை பெருகிய 15ம் நூற்றாண்டுகளில் இருந்தே தென்னகத்தில் இருந்து வந்தது. மேல்நாட்டார் நம்மை ஆட்சி செய்த போதும், இந்த எண்ணம் மேல்நாட்டார் இடையே புகுத்தப் பட்டது. ஏதொன்றையும் சங்கத ஆடி (mirror) வழியே தான் படித்தவர்கள் பார்த்து வந்தார்கள். "திறந்த மனத்தோடு, எந்தவித முன்கருத்தும் இல்லாமல், தரவுகளைச் சேகரித்து, பின் அதனுள் இருக்கும் ஓரிமையை (uniformity), அந்தத் தரவுகள் கிடைத்த இடங்களின் பின்புலம் (background) வழியே, பார்ப்போம்" என்ற எண்ணமே எழாமல், குழம்பிக் கொண்டே ஒரு ஐந்நூறு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள். இது, இந்திய ஆய்வாளார் ஆனாலும் சரி, வெள்ளைக்காரர் ஆனாலும் சரி, நடைமுறை பிறழாமல் இருந்திருக்கிறது.

"அதெப்படி வெள்ளைக்காரர் புரியாமல் இருந்தார்?" என்று கேட்டால், "ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால், சங்கதப் பின்புலத்திற்கு ஆட்பட்ட இந்தியப் பண்டிதர் பலர் அருகில் இருந்தார்கள்; துபாசிகள் என்பவர்கள் இந்தப் பண்டிதர்கள் தானே?" என்ற உண்மையை மறுமொழியாகச் சொல்லவேண்டும். இதன் விளைவாக, எல்லாமே இந்தியத் துணைக்கண்டத்தில் வேத மயமாய்ச் சங்கதத்தின் வழி பார்க்கப் பட்டன; இந்தப் பார்வைக்கு, அதுநாள் வரை இட்டுக் கட்டிய கதைகளும் கூடப் பெரிதாக உதவின. இவற்றிற்கு மாறாய், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் புறனடைப் பின்புலங்கள் (background of exceptions) அரிதாகவே அமைந்தன. இன்றைக்கும் கூட இந்தப் பின்புலக் குழப்பங்களைச் (obscurantism) சரியாக உணராத ஓர் ஆய்வாளர், இந்திய வரலாற்றில் உருப்படியான வேலைகளைச் செய்ய முடியாது. உண்மையிற் சொல்லப் போனால், எல்லாவற்றையும் சங்கதம் வழியாகவே பார்க்கும் மூடப்பார்வை என்று குறைகிறதோ, அன்று தான் இந்தியாவைப் பற்றிய வரலாற்றுத் தெளிவு ஆய்வாளர்களுக்குப் பிறக்கும். இந்தியா என்பது சங்கதத்தையும் மீறியது; பரந்தது; ஆழமானது. சங்கதம் என்பது அதற்குத் தடைக்கல்லாக ஆகிவிடக் கூடாது.

(வேடிக்கை என்னவென்றால், பண்டிதர் என்ற சொல்வளர்ச்சியிலும் கூடச் சங்கதப் பார்வையைத் தான் பெரும்பாலான படித்தோர் கொண்டு வருகிறார்கள். அந்தச் சொல்லின் தமிழ்ப் பின்புலம் என்பது கடைசி வரை இவர்களுக்குப் புரிவதில்லை.

பட்டது என்பது வாழ்ந்து அறிந்தது. பட்டு அறிந்ததை (அநுபவித்ததை) இன்றைக்குப் பட்டறிவு என்று நாம் சொன்னாலும், பட்டுவித்தல்>பட்டித்தல் என்பதைப் பட்டு உணர்வது என்றே அன்று புரிந்து கொண்டார்கள். பட்டித்தலில் இருந்தே படித்தல் என்ற வினைச்சொல் வந்திருக்க வேண்டும்; அதாவது படித்தலின் மூலம், தமிழ் மாந்தராகிய நாம், நம் முன்னோர் முன்னால் உணர்ந்த, முன்னால் அறிந்த, பழையதைத் தெரிந்து கொள்ளுகிறோம். பட்டித்தல்>பண்டித்தல்>பண்டிதர் என்ற வளர்ச்சி இயல்பானதே. பண்டை என்ற சொல்லுக்கே அறிவு என்ற ஒரு பொருளைத் தமிழ் அகரமுதலிகள் கூறும். பழையதை, நாம் பட்டுத்தானே அறிந்து கொள்ளுகிறோம்?)

எத்தனையோ குழப்ப வாதிகளுக்கு நடுவே, "தமிழ்நாட்டில் கிடைத்த பழைய பெருமிக் கல்வெட்டுக்கள் தமிழைத் தான் குறிக்கின்றன; அவற்றைப் பாகதமாகப் படிப்பது தவறு; அந்தக் கல்வெட்டுக்களுக்குள் தமிழுக்கென்ற சில விதப்பான குறியீடுகள் இருக்கின்றன" என்று முதலில் சொன்னவர் கே.வி.சுப்பிரமணிய அய்யர். அவரில்லை என்றால் அப்போது புதுத் தெளிவு ஏற்பட்டிருக்காது. (பெருமிக் கல்வெட்டுக்கள் பல்லவருக்கும் முந்தியவையாகக் கிடைத்திருக்கின்றன; அதே போலத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களும் கிடைத்திருக்கின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைக்கும் இது போன்ற கல்வெட்டுக்களைப் பிரம்மி என்று வடமொழிப் பலுக்கலோடு சொல்லுவது தேவையில்லை. தஞ்சைப் பெருவுடையாரைப் பிரகதீசர் என்று வடமொழிப் படுத்துவது போல் பெருமி என்பது தான் பிரம்மி என்று வடமொழிப் படுத்தப் படுகிறது. கூடவே "பிரம்மன் தோற்றுவித்த எழுத்து" என்று சொல்லும் பெருமானக் கட்டுக் கதைகளை எல்லாம் நாம் நம்ப வேண்டியதில்லை. இதே போல "ஆடல் அரசனான இறைவன் தமருகம் உருட்டினான், 51 எழுத்துக்கள் பிறந்தன; அவற்றில் 33 யைத் தமிழர்கள் வைத்துக் கொண்டார்கள்" என்பது போன்ற தமிழ்நாட்டு வேதச் சிவநெறியில் ஆழப் பதிந்திருக்கிற கதைகளையும் நாம் ஒதுக்கிவிடலாம். அவையெல்லாம் சமய நெறிகளால் கொள்ளும் நம்பிக்கைகள். இது போன்ற சங்கத உயர்ச்சிக் கதைகள் நாம் செய்யும் ஆய்வை முன்னே செல்லவிடாமல் தடுக்கும் வலிமை கொண்டவை. இதற்கு மாறாக, "பெருமி என்பது பெரிதாகி வந்தது, முந்தியது" என்ற பொதுமைப் பொருளைப் புரிந்து கொண்டால் போதும். அதாவது "எழுத்து பெருமி; மொழி பெருகதம் அல்லது பாகதம்" என்று புரிதல் நமக்குப் போதும்.)

பெருமியையை முதலில் எழுந்த வரியெழுத்தாகக் கொண்டு, தமிழ்நாட்டுக் கல்வெட்டில் இருந்த பழைய எழுத்துக்களையும் தமிழ்பிரம்மி என்று சொன்னவர்கள் பலர் உண்டு. "அசோகன் பிரம்மி தான் தொடக்கம், அது செமிட்டிக் எழுத்துக்களை மாதிரியாய்க் கொண்டு உருவாக்கப் பட்டது. அசோகன் பிரம்மியில் இருந்து தான் தமிழ்பிரம்மி வந்தது" என்று அவர்கள் சொல்வார்கள். கே.வி.சுப்பிரமணியருக்கு அடுத்து, "பெருமி எழுத்தும் தமிழ் எழுத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை" என்றும், "பெருமி என்று சொல்லப் பட்டுவந்த எழுத்து, தமிழ் போன்ற மொழிக்கு என முதலில் எழுந்து, பின்னால் வடபுலத்தில் அசோகர் போன்ற பேரரசர்களால் பரவியிருக்கலாம்" என்றும், எழுத்துப் பிறப்பு வரலாற்றையே தலை கீழாகப் புரட்டிப் போட்டவர் திரு. தி.நா.சுப்பிரமணியன். இவர் நம்மூர் கல்வெட்டியலின் ஒரு முன்னோடி. இதே போன்ற கருத்தை இலங்கையில் பெற்ற அகழாய்வுச் செய்திகளும் உறுதிப் படுத்துகின்றன. அசோகருக்கும் முன்னால் கி.மு. 500/600 ஆண்டுகளைச் சேர்ந்த பெருமிக் கல்வெட்டுக்கள் அங்கு கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிலும் இதே அளவு காலப் பழமை கொண்டு எழுத்துப் பொறிப்புகள் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரிலும் அண்மையில் கிடைத்துள்ளன. இந்திய எழுத்து என்பது தெற்கே பிறந்து வடக்கே போயிருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லும் வகையில் இன்று தரவுகள் கிடைத்திருக்கின்றன.

இந்தக் காலத்தில் தமிழ் பிராம்மி என்று சொல்லுவதைக் காட்டிலும், மாறாகத் தமிழி என்றே பலரும் பழந்தமிழ் எழுத்துக்களைச் சொல்லிவருகிறார்கள். (இந்தச் சொல் ஒரு மீட்டுருவாக்கம் தான். 'லலித விஸ்தாரம்' என்ற புத்த நூலிலும், 'பன்னவனசுதா' என்ற சமண நூலிலும் "திராவிடி" என்ற தனித்த எழுத்து முறை சொல்லப் படுகிறது. எப்படித் தமிழ என்பது தமிள, தமிட, திராமிட, திராவிட என்று திரிந்ததுவோ, அதே செயலாக்கத்தின் படி தமிழி என்பதுதான் திராவிடி என்று ஆயிருக்க முடியும் என்று உய்த்து உணருகிறோம்.)

தமிழி எழுத்துக் கீற்றுப் படிப்பில் தி.நா.சு.விற்கு அப்புறம் பெரும் பங்கு ஆற்றியவர் திரு. ஐராவதம் மகாதேவன். (அவருடைய அண்மைக்காலப் பொத்தகமான "Early Tamil Epigraphy: from the earliest times to the sixth century A.D" என்பது கட்டாயமாகப் படிக்க வெண்டிய நூல்.) இவர்களுக்குப் பின்னால், இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கிவ்ட் சிரோமணி, கே.வி.ரமேஷ், கே.வி.ராமன், சு.இராஜவேல், கா, ராஜன் எனப் பலரும் கல்வெட்டியலுக்குப் பங்காற்றியிருக்கிறார்கள். இவர்களுடைய பலவாறான பங்குகளை விவரித்துக் கொண்டு போகாமல், முகன்மையான செய்திகளை மட்டும் இங்கு கூறுகிறேன்.

திரு. தி.நா.சுப்பிரமணியனுக்கு அப்புறம், அவருக்கு ஆதரவாய் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் புள்ளியியல் பேராசிரியர் கிவ்ட் சிரோமணி "தமிழி எழுத்து பெருமிக்கு முந்தியதாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு" என்று தன்னுடைய முன்னீட்டைச் சொல்லியிருக்கிறார். தவிரப் புள்ளி என்ற குறியீடு பிற்காலக் கல்வெட்டுக்களில் வந்ததையும், அதைக் கணக்கில் கொள்ளாமல் இருந்தது தவறு என்றும் உணர்த்தியவர் கிவ்ட் சிரோமணி. முன்னாள் தமிழக அகழாய்வுத் துறை நெறியாளர் நாகசாமி "தமிழி எழுத்து பெருமிக்கு முந்தியதாக இருக்கலாம்" என்பதை ஒப்பவில்லை. பெருமியே முந்தியது என்பார். திரு. ஐராவதம் மகாதேவனும் பெருமியே முந்தியது என்பார். ஆனால், நாகசாமிக்கு அடுத்து வந்த தமிழக அகழாய்வுத் துறை நெறியாளார் நடன.காசிநாதன் "தமிழி பெருமிக்கு முந்தியதாகலாம்" என்ற கருத்து உடையவர்.

இதே கருத்தை கே.வி.ரமேஷ், கே.வி.ராமன், சு.இராஜவேல், கா, ராஜன் ஆகியோரும், அதே போல "சிங்களத்தில்/ஈழத்தில் கிடைக்கும் பெருகதக் கல்வெட்டுக்கள் அசோகன் பெருமிக்கும் முந்தியவை" என்று பரமு. புஸ்பரட்ணம் போன்ற அறிஞர்களும் கருதுகிறார்கள்.

ஆனாலும் தமிழை அப்படி எழுத்தில் உயர்வு காணுவதை மாற்றுக் கருத்து ஆய்வாளர்கள் ஒப்ப மாட்டார்கள். அதன் விளைவாக, இனி அடுத்த தடத்திற்கு வாதம் போகும். "இலங்கையில் இருக்கும் பெருகதப் பொறிப்புக்கள், ஆதிச்சநல்லூருக்கும் முந்தியவை, எனவே அவை பாடலியில் இருந்து நேரடியாகப் பெற்றவை" என்று வாதம் வைப்பார்கள். மறுபடியும் வாதம் தொடரும். இந்தச் சுற்று நமக்கு வாய்த்ததாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். வத்தல குண்டுவுக்கு அருகில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களைக் கண்டுபிடித்த செய்தி வந்தவுடம் மீண்டும் ஓயாத வாதம் தொடங்கிவிட்டது. இரண்டு சாராரின் வாதங்களும் அறிவின் பாற்பட்டதாய் இருக்கும் வரை சரி என்று விட்டுவிடலாம்; கொஞ்சம் உணர்வு கலந்த வாதங்களும் அடியூன்றுகளும் கூடிவரும் போது தடுமாறிப் போகிறோம்.

கிடைத்துள்ள தமிழிப் பொறிப்புகளில் ஐந்து வகைத் தமிழியை இதுவரை இனங் கண்டிருக்கிறார்கள்.
ஐந்துவிதமான எழுத்து முறைகள் பின் வருமாறு: (இங்கே படத்தைப் போட முடியாமல் இருக்கிறது. அடுத்த பதிவில் முயலுவேன்.)

1. முதல் முறை என்பது உயிர்மெய்களுக்கு இடையில் ஒரு சில இடங்களில் உயிரையும் மெய்யையும் தனித்து எழுதிக் காட்டிய முறை. இப்படி இருக்கும் கல்வெட்டுக்களில் ஒரே எழுத்து மெய்யாகவும், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரமாகவும் தோற்றமளிக்கலாம். இடம்பார்த்து அவற்றில் மெய் எது என்று கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில் மெய், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரம் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காண்பது சரவலாய் இருக்கிறது.

2. இரண்டாவது முறையில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தையும், ஆகாரத்தையும், ஒரே தோற்றம் கொண்டு இருப்பதாய்க் காட்டுவார்கள். இந்த முறையில் "கல்" என்பதற்கும் "கால்" என்பதற்கும் வேற்றுமை காணமுடியாது. அதாவது ககரத்திற்கும், காகாரத்திற்கும் வேறுபாடு தெரியாது; அவற்றை இடம் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.

3. பட்டிப்போரலு முறை.
இந்த முறையிலும் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தைக் குறிப்பார்கள்; உயிர்மெய் ஆகாரத்தில், மேலே சொன்ன சிறுகோடு, செங்குத்தாக கீழ்நோக்கி வளைந்து, இன்னொரு சிறுகோட்டையும் ஒட்டிக் காட்டும். இந்த முறையில் மெய்யெழுத்து, அகரமேறிய மெய், ஆகாரம் ஏறிய மெய் ஆகிய மூன்றிற்கும் உரிய வேறுபாடு இருக்கும். கல்வெட்டில் ஒரு குழப்பம் இருக்காது; ஆனாலும் இந்த முறை ஏனோ பரவாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

4. பெருமி /தமிழி முறை:
இந்த முறையில் மெய்யெழுத்திற்கும், அகரமேறிய மெய்க்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாகக் காட்டிக் கொண்டிருக்கும். மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு தோற்றம் காட்டுவது உயிர்மெய் ஆகாரத்திற்கு மட்டுமே அமையும். தமிழ் போன்ற மொழியில் இப்படி மெய்யெழுத்துக்கும், அகரமேறிய மெய்க்கும் ஒரே எழுத்து அமைந்தது அவ்வளவாகக் குழப்பம் தராது, ஏனென்றால் மெய்ம்மயக்கம் என்ற ஒழுங்கு இந்த மொழியில் இருந்தது. மாணிக்கம் என்ற சொல்லில் வரும் க் என்னும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாமல் இருக்கிறதென்று வையுங்கள். இருந்தாலும் படித்துவிடுவோம். ஏன்? க்க என்ற கூட்டில் முதலில் வருவது மெய் என்றும் அடுத்து வருவது அகரமேறிய மெய் என்றும் நமக்குப் புரிந்துவிடும். இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககர என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும். இதே முறையில் க்க, ங்க, ட்க, ண்க, ம்க, ய்க, ர்க, ல்க, ழ்க, ள்க, ற்க, ன்க என்ற மெய்க்கூட்டுக்களில் பின்னால் வருவது உயிர்மெய் தான், மெய்யல்ல என்பது புரிந்துவிடும்.

இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய் க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நக், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும். மொத்தத்தில் தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயிலும் போது, வடபுலத்துக் கடன்சொற்கள் புழங்காத போது, மெய்யெழுத்தும் அகரமேறிய மெய்யெழுத்தும் ஒரே போல் தோற்றம் அளித்தாலும், அவ்வளவு சரவல் தமிழுக்குத் தராது. ஆனால் கடன் சொற்கள், குறிப்பாகப் பெருகதச் சொற்கள், கூடிவரும் போது, தமிழ் வரிகளைப் படிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது.

5. தொல்காப்பிய எழுத்துமுறை
இந்த நிலையில் தான் ஐந்தாவது முறை வந்தது. இந்த முறை வந்த போது பெருகதச் சொற்கள் தமிழுக்குள் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இது போன்ற குழப்பத்தைத் தவிர்க்க, இந்த ஐந்தாவது முறையில் மெய்யெழுத்தைக் குறிக்கப் புள்ளியிட்டார்கள்; புள்ளியில்லாத, வேறு குறியீடுகள் தொட்டிருக்காத எழுத்து அகரமேறிய மெய் என்று ஆயிற்று, அதே போல, மேலே சிறு கோடு கொண்ட எழுத்து ஆகாரம் ஏறிய மெய்யாகக் கொள்ளப் பட்டது. இந்த ஐந்தாவது முறையைத் தமிழ்ப் புலவோர் அறிமுகப் படுத்தினார்கள். அதைத் தொல்காப்பியர் ஆவணப் படுத்தினார்.

ஐந்து முறைகளும் ஒன்றின் பின்னால் ஒன்று எழுந்தவை அல்ல. அவற்றில் ஒரு சில சம காலத்தில் ஒன்றோடு ஒன்று இழைந்து இருந்தன. முடிவில் கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை குறைந்து சங்க கால இறுதியில் தான் ஐந்தாம் முறை மட்டும் நிலைத்தது. இதில் முதல்வகை கி.மு. 1000 யை ஓட்டியது என்றும், இரண்டாவது வகை அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்தது என்றும். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது வகைகள் கி.மு.500, 600 களைச் சேர்ந்தது என்றும், கடைசி மூன்றும் தொல்லியல் (archeology) ஆய்வுகளின் படி பார்த்தால் சம காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றும், தமிழை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர்கள் (இராசவேலு, நடன.காசிநாதன், இராசன் போன்றோர்) சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தொல்காப்பிய காலம் (கி.மு.700-500) என்பது மூன்றாம் வகைத் தமிழியின் காலத்தோடு ஒத்து வருகிறது.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 24, 2006

புறத்திட்டு வாகைகள் (project phases)

testing பற்றி நண்பர் இளங்கோவன் ஒரு பொழுது கேட்டதற்குத் தொடர்ச்சியாய் நடந்த உரையாடல் (பார்க்க பொன்னும் சோதனையும் என்ற பதிவு.). இந்த உரையாட்டில் ஒரு புறத்திட்டு (project) நகரும் போது உள்ள வெவ்வேறு வாகைகளைத் (phases; இதை stages என்று சொல்லும் போது நிலைகள் என்று சொல்லலாம்) தமிழில் சொல்லுவது பற்றி அவர் கேட்டிருந்தார். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1) Inception

conceive/conception என்பதைக் கருவுறுதல் என்று சொல்லுவது போல inceive/inception என்பதை வித்திடுதல் என்று சொல்லுவதே சரியாக வரும். தொடங்கு என்ற சொல்லை start என்பதற்கு மட்டுமே வைத்துக் கொள்ளுவது நல்லது. introduction என்பதற்கு (முன்)தொடக்கம் என்று சொல்லலாம். இனி, initiation என்ற சொல்லை ஈனித்தல்/ஈனிப்பு என்று சொல்லலாம். (initiation என்பதும் ஒருவகையில் ஈனுதல் தான், தாய் குழவி ஈனுவது போல). Initiation Phase = ஈனீட்டு வாகை. inception என்பதற்கும் initiation என்பதற்கும் உள்ள வேறுபாடு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். வித்திட்டுக் கரு வளர்ந்து, ஈனிப்பது வரை அக வளர்ச்சி - தாய்க்குள்ளேயே நடப்பது; அதற்கு அப்புறம் உள்ளது, வெளிப்பட்டபின் நடப்பது, புற வளர்ச்சி.

2) Elaboration

உழுதல்>உழைத்தல் என்று தமிழில் பொருள் விரிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் labor என்று வந்த உடனேயே, நமக்கு உழைப்பு என்பது நினைவிற்கு வரவேண்டும். இவை இரண்டும் ஒன்றிற்கொன்று சரியான இணைச் சொற்கள். உழவாரப் பணி என்றால் சிவனியக் குரவர் அப்பர் தான் நம் மனத்திற்கு வருகிறார். உழவாரம் என்பது ஒரு கருவி கூட. கடின உழைப்பும் உழவாரம் என்றே சொல்லப்படும். புல், பூண்டு இல்லாமல் ஒரு தளத்தை நறுவிசாகச் செய்வதே உழவாரப் பணி. உழவாற்றல் என்பதும் இப்படி ஒரு கடின உழைப்பே. உழவாற்று = elaborate. உழவாற்றம் = elaboration. ஆங்கிலச் சொற்பிறப்பில், கீழே வருவது போல் காட்டுவார்கள்.

elaboration - 1578, in a physiological sense relating to tissue development, from L. elaborationem (nom. elaboratio), from elaborare "work out, produce by labor," from ex- "out" + laborare "to labor." Elaborate in the sense of "conducted with attention to detail" is from 1649.

3) Expansion

விரிவாக்கம் அல்லது விரிவாக்குதல் என்பதை "Expansion" என்பதற்கு மட்டுமே வைத்துக் கொள்ளுதல் நல்லது. expand - 1422, "spread out, spread flat," from Anglo-Fr. espaundre, from L. expandere "to spread out," from ex- "out" + pandere "to spread." Sense of "grow larger" first recorded c.1645. Expansionist "one who advocates the expansion of the territory of his nation" is from 1862.

4) Development phase

ஆக்க நிலை என்று இதைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் வளர்ப்பு வாகை என்று சொல்லுவேன். growth என்பதற்கும் development என்பதற்கும் ஒரு குழப்பம் நம்மில் பலருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. growth என்பது வித்திட்ட பின் கரு வளர்வது போல் உள்ள ஓர் இயல் வளர்ச்சி (natural growth; இது அகத்தில் நடைபெறுவது.) development என்பது திட்டமிட்டு, வளர்வின் ஒவ்வொரு நிலையிலும், மாந்த உள்ளீடு இருந்து, வளர்ப்பது. growth என்பது வளர்ச்சி; development என்பது வளர்ப்பு; இந்த நுணுகிய வேறுபாட்டை விட்டு விடக் கூடாது. வளர்த்தல், வளருதல் என்ற வேறுபாட்டையும் அறிக. "பிறத்தியார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழியை நோக்குங்கள். இனி evolution phase என்பது எழுவு வாகை. வளர் நிலை என்று சொல்லுவது மேலே growth, development என்ற சொற்களின் நொதுமல் (neutral) வெளிப்பாடு. அதாவது, தன்வினையும் இல்லாது பிறவினையும் அல்லாத ஒரு நொதுமலான பேச்சு. அது இங்கே பொருந்தாது. எழுவுதல் என்று சொல்லுவதில் எப்பொழுதுமே ஒரு தொடர்ச்சி உண்டு. "சூரியன் கீழ்வானத்தில் எழுகிறான்" என்னும் போது அந்த வினை தொடர்ந்து கொண்டு இருப்பதை உணருகிறோம், அல்லவா?

5) Testing phase = சோதிப்பு வாகை; சோதிப்பு பற்றி வேண்டியது பேசியாகி விட்டது.

6) Cessation Phase = ஒழிவு வாகை என்பது சரியாக இருக்கும். (இங்கும் ஒழிவு என்பது தானாக முடித்தல்; நாம் முடிக்கும் போது ஒழிப்பு என்று வரவேண்டும்; ஆனால் இந்தக்காலத் தமிழில் கெடுதல் பொருள் வந்துவிடும். எனவே கவனமாகக் கையாளவேண்டும்.)

7) Closing Phase = முடிப்பு வாகை என்று பிறவினையாகச் சொல்ல வேண்டும் தன் வினையான முடிவு வாகை என்ற தொடர் ending phase என்பதற்கு இணையாக வரும்.

Quality Control என்ற சொல்லுக்குத் தரக் கட்டுப்பாடு என்பதே இருக்கட்டும். இங்கு மாற்றுக் காண்பது குழப்பத்தை விளைவிக்கலாம்.

Zero Defect என்பதைச் சுழிய மறு என்று சொல்லலாம்; மறு = defect என்ற சொல் நெடுநாட்களாய் நம்மிடம் உள்ள சொல்; முகத்தில் மறு ஏற்படுவதும் ஒரு defect தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும்? மறுவில்லாத பண்டம் = defectless object.

சுழி/சுழியம் என்று zero விற்கு இணையாய்ச் சொல்ல (எண்ணைச் சொல்லும் போது சுழி என்றும், கருத்தைச் சொல்லும் போது சுழியம் என்றும் ஒரு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம்), நாம் எல்லோரும் ஏன் தயங்குகிறோம்? சுழியத்தின் மருவுதலைத் தயங்காமல் பலுக்கி சூன்ய என்று இந்திக்காரன் அருமையாகச் சொல்லுகிறான். நாமோ புழையம் என்பதன் மருவான பூஜ்யத்தையே பிடித்துக் கொண்டு தொங்குகிறோம். தமிழ்ச்சொல்லை ஒதுக்குகிறோம். குறைந்தது புழையம் என்றாவது சொல்லலாமே? நல்ல தமிழ் பழகுவதில் ஏன் அப்படி ஒரு நாணம்?

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 23, 2006

பொன்னும் சோதனையும்.

முன்பு ஒருமுறை நண்பர் நாக. இளங்கோவனுக்கும் எனக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் (2003) நடந்த உரையாடல் இது. அவர் testing பற்றிக் கேட்டிருந்தார். பேசாமல் சோதனை/சோதித்தல் என்றுநான் சொல்லி விட்டுப் போயிருக்கலாம் தான். இருந்தாலும் தொடர்புடைய சொற்களான examine, exact, essay, போன்றவற்றையும், பொன், மாற்று, சரி, எடுத்தல், நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல் போன்றவை பற்றியும் சொல்ல, ஓரிடத்தில் வாய்ப்புக் கிடைத்ததால் இதை எழுதினேன். இங்கு மீண்டும் பலருக்கும் பயன்படும் என்று கருதிப் பதிகிறேன்.

ஒரு பொருளைத் தரம் பார்க்கவேண்டிய தேவை முதலில் எழுந்ததே பொன் என்னும் மாழையால் (metal) தான். இயற்கையில் எளிம (element) நிலையில் கிடைக்கும் அரிய பொருள்களில் ஒன்றானது பொன்.

சிலபோது பொன்னெனும் இம்மாழை, அஃகுதையாகக் கிடந்தாலும் (oxide; அஃககம் = oxygen; அஃகு = ஊறுநீர்; ஊறப்போடுகிற காய் ஊறுகாய்; ஊறுகின்ற நீர் அமிலமாகக் காடித்துப்போய்க் கிடக்கும். அமிலத்திற்குக் காரணியாக ஒரு காலத்தில் oxygen என்ற எளிமம் கருதப்பட்டது. எனவே பொருள்நீட்சியில் அஃககம் என்பது oxygen ஆயிற்று. இதுபோல நீரின் காரணியான hydrogen-யை நீரகம் என்றுநாம் தமிழில் சொல்கிறோம்.), பெரும்பாலும் எளிம நிலையிலேயே ஆற்றுப் படுகைகளில் பொன் கிடைத்தது. [நம்மூரில் பொன்னியான காவிரிப் படுகை இப்படிப் பொன் கிடைத்த படுகை தான்; ஆற்றிற்குப் பெயர் வந்ததும் பொன் மாழையை ஒட்டித் தான். குவலாள புரத்தை (Kolar) ஒட்டி ஓடும் இந்த ஆற்றுப்படுகையில் பொன்னைக் கண்டது தமிழர் வரலாற்றில் மிகவும் பெருத்த செய்தி.]

பொன்னாகிய இம்மாழை எளிதில் வளையக் கூடிய, அவ்வளவு வன்மை (strength) இல்லாத, மெல்லிய மாழை. தமிழர் பொன்னை முதலில் அறிந்ததால் தான் பொன் என்ற சொல், விதுமையாக முதலிற் தங்கத்தை உணர்த்திப் பின் நாளா வட்டத்தில் பொதுமையாக எல்லா மாழையையும் உணர்த்தியது. செம்பொன் (copper), வெள்பொன் (silver), இரும்பொன் (iron) எனப் பொன்னுக்கு அடுத்துத் தோன்றியவை எல்லாவற்றிற்குமே பொன் என்பது சொல்லீறாக மாறிற்று.

வெறும் பொன்னை அடுத்து, காலத்தால் தமிழ்மாந்தன் அறிந்த மாழை தான் செம்பொன் எனப்படும். இயல்நிலையில் (natural) செம்பொன்  பெரும்பாலும் அஃகுதை (oxide) அல்லது கந்ததையாகவே (sulphide) கிடைக்கிறது. இந்த அஃகுதையைக் கரிமத்தோடு சேர்த்து ஓர் உலையில் போட்டு, உயர் வெம்மையில் (high temperature) வினைக்க (react) வைத்து, செம்பொன் எளிமத்தையும், கரிம-இரு-அஃகுதையையும் (carbon-di-oxide) உருவாக்குகின்ற நுட்பத்தை தன்னேர்ச்சியாக மாந்தன் கண்டு பிடித்தானா என்பது தெரியாது. (செம்புக் கந்ததையைக் காற்றில் எரித்து, கந்தக-இரு-அஃகுதை உண்டாக்கிச் செம்பைத் தனியே பிரிப்பதே இந்தக் காலத்தில் பெரும்பாலும் நடக்கிறது.)

எளிதாகப் பானை சுடும் சூளையில் கிடைக்கும் வெம்மையே, இந்தச் செம்பொன் செய்யும் நுட்பத்திற்குப் போதுமானது ஆகும். இந்த அரிய உண்மையை (The first widely used metal was copper, which can be reduced from its ores by a kiln not more efficient than that needed for pottery) டி.டி.கோசாம்பி தன் The Culture and Civilisation of Ancient India என்ற நூலில் எடுத்துரைத்திருப்பார். (அக்கால சுமேரிய, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் மட்டுமே இக்கூறுகளைக் கொண்டிருந்தன. எகிப்திய நாகரிகம் செம்பொன் பொருட்களைக் கொண்டிருந்தது; ஆனால் நுட்பம் பயன்படுத்தியதற்கான கூறுகள் அங்கு நமக்குத் தெரியவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் வடக்கே இருக்கும் இராசத்தான கேத்திரிச் சுரங்கம் பழங்காலத்திலும் பயன்பட்டிருக்க வேண்டுமென்று சிந்து சமவெளி நாகரிகக் கூறுகளால் அறிந்து கொள்கிறோம். அண்மையில் சிங்களத்தைச் சேர்ந்த ஒரு அகழ்வாராய்ச்சி வல்லுநர், ஈழத்தீவில் அக்காலத்தில் செம்பொன் கிடைத்திருக்கக் கூடிய கூறுகளை எடுத்துரைத்திருக்கிறார். தாம்பர பெருநை (தாமிர வருணி) என்பது நம்பக்கத்து ஆற்றிற்கு மட்டும் அல்லாது, அந்தப் பக்க நிலத்திற்கும் கூடப் பெயராக இருந்தது. தாம்பர பெருநைக்கும் தாம்பரத்திற்கும் உள்ள தொடர்பு மேலும் செய்யப் படவேண்டிய ஓர் ஆய்வு. ஆதிச்ச நல்லூர் புதைகுழிகளில் இரும்புப் பொருள்கள் மட்டுமல்லாது செம்புப் பொருள்களும் கூட ஒன்றிரண்டு கிடைத்திருக்கின்றன. செம்புக் காலம் நம் பக்கம் தெற்கே நடைபெறவே இல்லை என்பதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கிறது.)

செம்பை பொன்னோடு கலந்து அதன் வன்மை(strength)யைக் கூட்டி மாழைக் கலவையை உருவாக்கி நகைசெய்யத் தொடங்கிய பின்தான், கலவையின் தரம் அறியவேண்டிய தேவை ஏற்பட்டது. (இக்காலத்தில் வெள்ளி, நாகம், நிக்கல், உரோடியம், பல்லேடியம் போன்றவற்றைப் பொன்னோடு கலக்கிறார்.) பொற்கொல்லர் என்போர் நம்மூரில் தட்டார் என்றும் சொல்லப் பட்டார். கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால், பொற்கொல்லர் என்பது ஓர் இரட்டைக் கிளவிச் சொல் என்பது புலப்படும். கொல்லர் என்றாலே தமிழில் "பொன்னைக் கையாளுபவர்" என்ற பொருள் வந்துவிடும். ஏனென்றால் கொல் என்பதே பொன்னைக் குறிக்கும் சொல் தான். பிற்காலத்தில் கொல்லர் என்ற அச்சொல் இன்னும் விரிவடைந்து விதுமை (specific) நிலையில் இருந்து பொதுமை (generic) நிலை ஆகி, மாழை வேலை செய்பவருக்கெல்லாம் ஒரு பெயராய் ஆனது. எனவே பொற்கொல்லர் என்ற பெயர் "நல்ல எண்ணெய்" போலக் கூட்டுச்சொல்லாய் எழுந்து, தங்க வேலை செய்பவரைக் குறித்தது. தட்டார் என்ற சொல் தட்டு = பொற்கிண்ணம், பொற்குவை பற்றியும், பொன்னைத் தட்டி நகை செய்வதாலும், வந்த பெயர். தட்டாரைப் பத்தர் என்றும் சொல்லுவது உண்டு. பத்தர் என்ற சொல்லும் கூட ஒரு குவை, அல்லது கிண்ணத்தையே, குறிக்கும்.

பொன்னின் தூய்மை அறிய எழுந்த சொல் தான் மாற்று (to metre, to measure) என்பதாகும். இதன் பொருள் அளவை என்பதே. பத்தரை மாற்று என்பது தூய பொன். இன்றைக்கு வெள்ளைக்கார முறையில் தூய பொன்னின் அளவையாக 24 காரட் என்று குறிப்பார். தூய பொன்னில் அரச முத்திரையை பொதித்த காரணத்தால், அது ஆணைப் பொன்னும் ஆயிற்று. (பேச்சு வழக்கில் ஆணைப்பொன் என்ற கூட்டுச்சொல் ஆணிப்பொன்னாயிற்று. இதேபோல ஆணிமுத்து என்பதும் ஓர் உயர்முத்து; அதுவும் அரச முத்திரை பெற்றது போலும்; ஆணத்தி என்பவர் அரச உயரதிகாரி). நம்மூர் நாட்டுப் புறங்களில் நகை செய்வதற்கு இன்றுங்கூட, 18 காரட் தங்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கி, 22 காரட் தங்கத்தையே நாடுவார். அதேபொழுது நகரத்தில் உள்ளவர் பெரிதும் 18 காரட்டிற்குப் பழகி விட்டார். குதிரைப் பொன் என்பதும் உயர்பொன்னைக் குறிக்கும் சொல் தான்; அதை முன்பு கொன்றை பற்றிச் சொன்ன கட்டுரையில் சொன்னேன்.

கையில் உள்ள கலப்புத் தங்கத்தில், எவ்வளவு பொன், எவ்வளவு செம்பு இருக்கிறது, என்று தெரியவேண்டும் அல்லவா? இதற்கு இரண்டு முறைகள் உண்டு. ஒன்று திண்ணிமையை (density; திண்ணிமையை அடர்த்தி என்றும் கூறுவது உண்டு.) அளந்து கண்டுபிடிப்பது; இன்னொன்று உருகு வெம்மை (fusion temperature) வைத்துக் கண்டு பிடிப்பது.

முதலில் திண்ணிமை வழிக் கண்டு பிடிப்பதைப் பார்ப்போம். தங்கம் செம்பைப் பார்க்கத் திண்ணியது (19.3 Kg/litre. ) செம்பின் திண்ணிமை, தங்கத்தைப் பார்க்கக் குறைந்தது (8.92 Kg/litre). ஒரே பருமன் கொண்ட இரு பொருட்களின் திண்ணிமை வேறுபாட்டைப் பொறுத்து அவற்றின் எடைகள் மாறுபடும். எடைபார்த்துப் பொன்னின் தரத்தைக் கண்டுபிடிப்பதையே examination என்று மேலை நாட்டில் முதலில் சொன்னார். எடை சரியாக இருந்தால் அதை exact என்று சொல்வார். இப்படி எடையைக் காணும் முறையை assay என்பார். இக்காலத்தில் வேதியல் முறையில், கொடுத்துள்ள பொருளில் உள்ள கூம்புனைகளின் (component - கூடிச் சேர்ந்த புனைகள் கூம்புனைகள்) செறிவைக் (concentration) கண்டுபிடிப்பதைக் கூட assay என்றுதான் சொல்கிறார்.

பார்த்தீர்களா? பொன்னின் தரம் அறிவதிலிருந்து எவ்வளவோ தொலைவு தள்ளி examination என்ற சொல் நடைமுறையில் வந்துவிட்டது? இப்பொழுது எல்லாவிதமான தரம் பார்த்தலையும் examination என்று அழைக்கிறார். ஆளைத் தரம்பார்த்தலும் கூட examination தான். examination க்கு இணையாகத் தேர்வு என்ற தமிழ்ச்சொல் தெரிவு என்பதை உணர்த்துகிறது. examine என்ற சொல்லின் ஆங்கிலச் சொற்பிறப்பை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

examine - c.1303, from O.Fr. examiner "to test, to try," from L. examinare "to test or try," from examen "a means of weighing or testing," probably ult. from exigere "weigh accurately" (see exact). First record of examination in the sense of "test of knowledge" is from 1612; shortened form exam first attested 1848.

இனி exact என்பதற்கு நாம் புழங்கும் தமிழ்ச்சொல்லைப் பார்ப்போம். தமிழ்ப் பழக்கத்தில் கூலங்களை அளக்கும் ஒரு படியில், அரிசியோ, பருப்போ, பொடியோ ஏதோ ஒரு குறுணைப் பொருளை அளக்கும்போது, படியில் நிறைந்த கூலம் கூம்பாகிக் காட்சியளிப்பதை கையால் தட்டிப் படி விளிம்பின் அளவுக்கு, அதைச் சரித்து அளப்பதை, சரியான அளவு என்கிறோம். சரிப்பதால் அது சரியானது. நாம் சரி என்று பொதுவாகச் சொல்லும் சொல்லாட்சி கூட இப்படிப் பருமன் அளவையில் தான் வந்தது. exact என்பதற்குச் சரியென்ற சொல்லையே நாம் புழங்குகிறோம். சரியான சில்லறை = exact change. [ஒரு வேறுபாட்டை உணர வேண்டும். நம்மூர் exact = சரி என்பது பருமனளவையில் வந்தது. மேலையருடைய exact என்பது, எடுத்தல் அளவையில் வந்தது.] exact -ன் ஆங்கிலச் சொற்பிறப்பை, இங்கு கொடுத்துள்ளேன்.

exact (adj.) - "precise, rigorous, accurate," 1533, from L. exactus, pp. of exigere, lit. "to drive or force out," also "demand, finish, measure," from ex- "out" + agere "drive, lead, act." The verb (1380, implied in exaction) is older in Eng. and represents the literal sense of the Latin. Exacting "too demanding" is from 1583. Elliptical use of exactly for "quite right" not recorded before 1869. Exacta as a type of horse-racing bet is first attested 1964, said to have originated in N.Y.

எடுத்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இன்னும் நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல், தாங்குதல், தரித்தல், பொறுத்தல், பரித்தல் போன்றவை உள்ளன. ஒவ்வொன்றும் தமக்குள்ளே சிறிது வேறுபட்டவை. கீழே இந்த வரிசையில் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் கொடுத்திருக்கிறேன்.

எடுத்தல் அளவு மாந்தனால் எடுக்க/தூக்க முடிகிறதா என்று பார்க்கும் அளவை. அந்த அளவைமுறை தொடங்கிய போது அவ்வளவு துல்லியம் இல்லாததாய் இருந்தது. "இக் கல்லை என்னால் தூக்க முடிகிறது; இதை என்னால் தூக்க முடியவில்லை." எனவே இரண்டாம்கல் முதற்கல்லை விடப் பளுவானது என்று முடிவுசெய்துகொள்ளும் முறை. இத்தகைய அளவு முறையில் மாந்தனின் பின்னூட்டு என்பது பெரிதும் ஊடுறுவிக் கிடக்கிறது. இந்த அளவையில் இருந்து, மாந்தனை முற்றிலும் தனித்துப் பிரிக்க எழுந்தது தான், துலை (balance = தராசு) என்ற கருவி. துலை என்பது தூக்கு என்றும் இன்னொரு வகையால் சொல்லப்பெறும். ஒரு பக்கம் எடை போட்டு இன்னொரு பக்கம் கிணற்றில் இருந்து நீரிறைக்கும் ஏற்றம் கூட துலை போன்ற ஒரு கருவி தான்.

ஒரு நெம்பு கோலின் நடுவில் கூர்ந்த ஊசியைப் பொருத்தி நெம்பு கோலின் இரு முனையிலும் இரண்டு தட்டுக்கள் அல்லது பல(ங்)கைகளில், ஒரு பக்கம் தரப்படுத்திய எடைகளையும், இன்னொரு பக்கம் எடையறியாப் பொருளையும் வைத்து, நெம்புகோலின் அசைவு நிற்கும்வரை காத்திருந்து, நின்று நிலைக்கும் போது ஒரு பக்கம் உள்ள தரப் படுத்திய எடைகளில் இருந்து இன்னொன்றின் எடையை அறிகிறோம் அல்லவா? அந்த முறைக்கு நிறுத்தல் அளவை என்றுபெயர். நில்+து> நிற்று>நிறு. இன்னொரு வகையிலும் நிறைதல் / நிறைத்தல் என்ற கருத்து வழங்கும். அது பருமன் அளவையின் வழியாக வருவது. ஒரு படி நிறைகிறது; ஒரு லிட்டர் நிறைகிறது. இத்தகைய சொல்லாட்சி குறைந்த அளவே இருக்கிறது.

பருமனுக்கும், எடைக்கும், நம்மூரில் ஒரு குழப்பம் தொடர்ச்சியாக நிலவி வந்திருக்கிறது. எடுத்துக் காட்டாய் கன அளவு என்ற சொல்லைச் சொல்லலாம். இது எடையைக் குறிக்கிறதா? பருமனைக் குறிக்கிறதா? ஓர்ந்து பாருங்கள்.

இதுவரை நிறுத்தலைப் பார்த்தோம். இனிச் சுமத்தலைப் பார்ப்போமா? சுமை, சும்மாடு போன்றவை சுமத்தலுடன் தொடர்பானவை. சும், சும்மை என்பவை மிகுதியைக் குறித்து, அதன் வழியாகப் பருமனைக் குறித்து, முடிவில் கனத்தையும், எடையையும், குறித்தன.

தூக்குதல் என்பது துலையோடு தொடர்பு கொண்டது. தூக்குதல் என்பதன் வேர் தூல். தூல்ங்குதல் என்பது தொங்குதலே; தொங்கிக் கிடக்கும் எல்லாமே தூக்கு என்று சொல்லப்பட்டன. தொங்கும் காரணத்தால் துலை>துலாம் என்ற சொற்கள் ஏற்பட்டன. தூலி>தூளி = தொங்கும் துணித் தொட்டில்;

வியல வைத்தல் என்பது விரிய வைத்தல்; இதுவும் பருமச் செயலை ஒட்டி வந்தது. வியல்ங்குதல்>வீங்குதல் என்றும், வியல்க்குதல்>வீக்குதல் என்றும் திரியும். இந்தையிரோப்பிய weigh க்கு அருகில் உள்ள தமிழ் வினைச்சொல் இது தான்.

இனித் தரித்தல், தாங்குதல் போன்றவை துல் என்னும் வேரில் இருந்தும், பொறுத்தல், பரித்தல், பாரம் போன்றவை புல் என்னும் வேரில் இருந்தும் பிறந்தவை. அவற்றைப் பற்றி இங்கு சொல்ல முற்படவில்லை.

இப்படி எடையை ஒட்டி வரக்கூடிய பல தமிழ்ச் சொற்களும் பருமன் கருத்தில் எழுந்து, கொஞ்சம் நீட்சி கொண்டு, எடைப் பொருளைக் காட்டுகின்றன. இந்தக் குழப்பம் பிற மொழிகளிலும் இருக்கிறது. மாந்தனால் எடையையும் பருமனையும் பிரித்தறிய, நெடுங்காலம் பிடித்திருக்க வேண்டும் போலும்.

முடிவில், கடைசியாக ஒரு செய்தி.

எடை பார்ப்பதில் மட்டுமல்லாமல், பொன்னை உருக்கி அதன் உருகுநிலை வெம்மையை அறிந்தும் கூடப் பொன்னின் தரஞ் சொல்லலாம். முற்றிலும் பொன்னாக இருந்தால் 1063 பாகை செல்சியசிலும், செம்பாக இருந்தால் 1083 பாகை செல்சியசிலும் மாழைகள் உருகும். அதே பொழுது, பொன் - செம்புக் கலவை அதன் தரத்திற்கு ஏற்ப வெவ்வேறு வெம்மையில் உருகும். பொன்னில் செம்பைக் கலக்கக்கலக்க, கலவையின் உருகு நிலை 1063 deg. க்கும் கீழே குறைந்துகொண்டே வரும். கிட்டத்தட 22% கலக்கும் போது, மிகக் குறைந்த உருகு நிலையை (கிட்டத்தட்ட 905 deg.) அது அடைந்துவிடும். அதன் பின் மேலும் செம்பைச் சேர்க்கும்போது உருகுநிலையானது மீண்டும் கூடத் தொடங்கும். ஆகச் செம்பை 18/19 காரட் வரை சேர்க்கையில், கலப்புத் தங்க உருகுநிலை குறையுமென்று தெரிந்தால், இத் தரக் கண்டுபிடிப்பின் உள்ளுறை(content)யைத் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த தங்கத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து, ஒரு சிறு கிண்ணத்தில் (இக் கிண்ணத்தைக் குவை; தட்டம் என்றும் சொல்வதுண்டு) வைத்து உருக்குவதால், உருகுநிலையைக் கொண்டு, தங்கத்தின் தரத்தைக் கண்டு கொள்ளலாம். (அதாவது 18 காரட் தங்கம், 22 காரட்டை விடக் குறைந்த வெம்மையிலே உருகிப் போகும்.) இப்படித் தட்டை வைத்துத் தரம் கண்டுபிடிப்பதற்கே, தட்டச் சோதனை என்று பெயர். ஆங்கிலத்தில் test என்பது இத்தட்டத்தையே குறிக்கிறது.

test என்பதற்கு இணையாய்த் தமிழில் நாம் சோதனை என்றே சொல்கிறோம். முன்பு கொன்றைக் கட்டுரையில் சொன்னது போல, சோதித்தல் என்பது சோதிநெருப்பில் வாட்டிச் சோதிப்பதையே உணர்த்தும். தமிழில் சோதனை என்ற சொல்லின் புழக்கம் கூட, வெகுவாக நீண்டு, எங்கோ வந்துவிட்டது. ஆன்மச் சோதனை என்பதற்கும், நெருப்பிற்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறது?

test என்பதின் ஆங்கிலச் சொற்பிறப்பு இப்படி வரும்.

test - c.1395, "small vessel used in assaying precious metals," from O.Fr. test, from L. testum "earthen pot," related to testa "piece of burned clay, earthen pot, shell," and textere "to weave." Sense of "trial or examination to determine the correctness of something" is recorded from 1594. The verb in this sense is from 1748. The connecting notion is "ascertaining the quality of a metal by melting it in a pot." Test-tube is from 1846.

ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், ஒவ்வொரு கதையும் பொருளும் இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 12, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 2

helicopter யை உலங்கு வானூர்தி என்று ஈழத்தார் அழைப்பது பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார்.
--------------------------
உலங்கு வானூர்தியை வேறு சொல்லால் அழைக்கமுடியுமா என்று கூறவும். ஏனெனில் தும்பியின் வடிவமான உலங்குவானூர்தியைத் தும்பி சம்பந்தப்பட்ட சொல்லால் அழைத்தால் நன்றாக இருக்கும் அத்தோடு உலங்கு வானூர்தி என்பது நீண்ட வார்த்தையாக உள்ளது.
-------------------------

இராம.கி மறுமொழி:

உலங்கு வானூர்தி என்ற சொல்லை ஈழத்தார் கட்டுரைகளிலும், பதிவுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கும் helicopter -க்கும் உள்ள தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உலங்கு என்ற சொல்லை அகரமுதலிகளில் தேடிப் பார்த்தால், வேறு ஏதேதோ பொருட்பாடுகள் (திரண்ட கல், கொசு, புழு, திரட்சி, வலிமை, துன்பம், பிணம், பட்டாடை, வாசல், நீர், காற்று, அகற்சி) போடப்பட்டு இருக்கின்றன. ஈழத்தில் இந்தச்சொல் எப்படி வந்ததென்று தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது. என்னுடைய பரிந்துரைக்குப் போகுமுன் அந்தச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய helix என்ற சொல்லையும் சரியான படி புரிந்து கொள்ளுவோம்.

Helicopter

1861, from Fr. helicoptere "device for enabling airplanes to rise perpendicularly," thus "flying machine propelled by screws." The idea was to gain lift from spiral aerofoils, and it didn't work. Used by Jules Verne and the Wright Brothers, the word transferred to helicopters in the modern sense when those were developed, 1920s. From Gk. helix (gen. helikos) "spiral" (see helix) + pteron "wing" (see petition). Nativized in Flemish as wentelwiek "with rotary vanes." Heliport is attested from 1948, with second element abstracted from airport.

Helix

1563, from L. helix "spiral," from Gk. helix (gen. helikos), related to eilein "to turn, twist, roll," from PIE base *wel- "to turn, revolve" (see vulva).

தமிழில் spiral என்பதைப் புரி என்ற சொல்லால் சொல்லுகிறோம். வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு என்ற சொல்லாட்சிகளைப் பார்த்தால் அது புரியும். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension)மட்டுமே விரியும். helix என்பதோ, குத்துப் பரிமானத்தில் (vertical dimension) விரியும்.

தமிழில் சுழிப்பு என்பது வட்டத்தை முதலிற் குறித்தாலும் வேகமான நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படும் சுழிகையாகவே அது காட்சியளிக்கும். "அந்தச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டான்" என்னும் போது நம்மை அறியாமல் helix என்பதைப் பேச்சில் உணர்த்துகிறோம். சுல் என்ற வேரில் இருந்து சுழி எழுந்தது போல சுரி என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் எழும். சுரிகுழல் என்பது helical ஆகச் சுருண்டு கொண்டு கிடக்கும் முடிக்கற்றையைக் குறிக்கும். சுரிமுகம் என்பது குத்துத் திசையிலும் சுருண்டு கொண்ட சங்கைக் குறிக்கும். நத்தையின் கூட்டைக் கூடச் சுரிமுகம் என்று அழைப்பர். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw)என்று சொல்லும் போது திருகு என்ற சொல்லும் helical motion - யைக் குறிக்கிறது. முறுக்கு என்ற சொல்லும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இந்தக் கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகை என்பதையே helix-க்கு இணையாக வைத்துக் கொள்ளலாம்.

இனி helico+pter என்பதில் வரும் pter என்பதைப் பட்டம்>பத்தம்>பத்ர = pter இலை, இறகு என்ற வளர்ச்சியோடு பொருத்தலாம். இங்குமே தொடக்கம் தமிழாயும், முடிவு சங்கதமாயும் இருக்கும் இருபிறப்பிச்சொல் பெறப்படும்.

இன்னொரு வகையில் பார்த்தால் படபட என்ற இரட்டைக்கிளவிச் சொல் அசைதல் என்ற பொருளைக் கொடுப்பதைப் பார்க்கலாம். படபட என்ற ஒலி பொதுவாக வடக்கே போகப் போக பதபத என்று ஆகும். தெற்கே வரவரப் பறபற என்று ஆகும். படபட எனல், பதபத எனல், பறபறத்தல் ஆகிய எல்லாமே அசைத்தல், விரைவாகச் செல்லுதல் என்ற பொருள்களைக் குறிக்கும். தமிழில் பறத்தல், பறவை, பறல் என்ற சொற்கள் எழுந்தது இப்படித்தான். பக்கச் சிறகுகளை படபட என்று அடித்து அசைப்பதால் தானே பறக்க முடிகிறது?
பக்பக் என்ற இரட்டைக் கிளவிக்கும் அடித்துக் கொண்டது, அசைத்துக் கொண்டது என்றே பொருள் கொள்ளுகிறோம். "மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது". பக்கு எனல் என்பதும் விரைவுக் குறிப்பைத் தரும்.

பக்கு>பக்கம் = பறவையின் சிறகு
பக்கம்>பக்ஷம் (சங்கதம்) = பறவையின் சிறகு
பக்ஷி = பறவை
பக்கம்>பக்தம் (சங்கதம்)>பத்தம் (பாகதம்) >பத்ரம் (சங்கதம்)
பத்ரி (சங்கதம்) = பறவை
படபட> பதபத>பதகம், பதங்கம், பதசம், பதமம் (நாலும் சங்கதம்) = பறவை

தமிழ், சங்கதம், பாகதம் ஆகிய மூன்றுமே ஒன்றை ஒன்று சொல்லாட்சிகளில் ஊடுருவி இருக்கின்றன. இதை விடுத்து "எல்லாமே சங்கதம் என்ற மேட்டில் இருந்து தமிழ், பாகதம் என்ற மடுக்களுக்குப் பாய்ந்தன" என்ற ஆளுமை உணர்வு பலருக்கும் பரந்து கிடக்கிறது. குறிப்பாக பெருவோட்ட (mainstream) இந்தியவியலிலும், மொழியியலிலும் இது ஆழப் பதிந்திருக்கிறது. ஒழுங்கான புரிந்துணர்வுக்கும், ஆய்வுக்கும் அது வழி வகுக்காது. எத்தனை முறை தான் சொல்லுவது?

பறத்தல் என்ற வினைச்சொல்லில் இருந்து இன்னொரு ஈற்றை வைத்து பறனை (plane) என்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் பரிந்துரைத்தார். சிறிய சொல்லான அதைப் பலரும் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். அதை ஒட்டி வான்பறனை (aeroplane) என்றும் சொல்லிவருகிரோம். வானூர்தி என்பதை aircraft என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

சுரிப் பறனை என்ற சொல் helicopter க்கு இணையாக அமையும். இன்னும் சுருக்க வேண்டுமானால் சுரினை என்றே சொல்லலாம். (தும்பியின் வடிவு என்பதைக் காட்டிலும், சுரிப் பறனை சுரிகை இயக்கத்தால் பறக்கிறது என்பது முகன்மையான செய்தி. தும்பி என்பதோ, பறவைகளைப் போலச் சிறகை அசைத்தே பறக்கிறது. வெறும் வடிவ ஒற்றுமை மட்டுமே பார்ப்பது இங்கு சரிவராது.)

மேலும் பறனையும், சுரினையும் ஒரே போல அமையும்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 11, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 1

என்னுடைய வலைப்பதிவில் compiler பற்றிய ஒரு நண்பரின் கேள்வி:

1985 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் கொம்பைலர் (கொம்பைலருக்குத் தமிழ் என்ன? ) ஒன்றைத் தொடங்கியதாம். அதன்மூலம் தமிழில் சிறுசிறு கணக்குகளைச் செய்யும் வகையிலும் அந்தக் 'கொம்பைலர்' அமைக்கப்பட்டதாம். பின்னர் அந்தத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டதாம். இது உண்மையா? அந்தக் கைவிடப்பட்ட தமிழ்க் கொம்பைலரை எங்காவது பெறமுடியுமா? சில தமிழ் ஆர்வலர்கள் அதைத் தேடிக்கொண்டுள்ளனர்.
--------------------------------
இராம.கி.யின் மறுமொழி:

அண்ணா பல்கலைக் கழகத்தின் அந்த compiler பற்றிய செய்தி எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் இந்த நண்பருக்கு விடை சொல்லுங்கள்.

நான் compiler என்பதற்கான இணைச்சொல்லை இங்கு தர முயலுகிறேன்.

compiler என்பதற்கு அண்ணா பல்கலைக் கழக, வளர்தமிழ் மன்ற வெளியீடான "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யில் 'தொகுப்பி' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் integrater க்கு என்ன சொல்வது?" என்று பார்த்தால் 'ஒருங்கிணை' என்று போட்டிருக்கிறார்கள். "அப்படியானால் make it uniform என்பதை எப்படிச் சொல்வது?" என்று தொடர்ச்சியான கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன. பொதுவாக, differentiation என்பதற்கு வகைப்பு என்றும், integration என்பதற்கு தொகை/தொகுப்பு என்றே 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிவியல் கட்டுரைகளில் பலரும் சொல்லி வருகிறோம். (வளர்தமிழ் மற வெளியீட்டிலேயே integration என்பதற்குத் தொகுப்பு என்று போட்டிருக்கிறார்கள்.) எனவே compile என்ற சொல்லிற்கு தொகுப்பி என்று சொல்லாமல் வேறு சரியான சொல்லைப் பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது.

compile என்பது com+pile என்ற இருசொற்களின் கூட்டுச் சொல். com என்பது குவிதல் என்ற பொருளைக் காட்டும். குவித்த pile, compile. தமிழில் சொல் தேடும் போது பெரும்பாலும் இந்த com என்னும் முன்னொட்டைத் தவிர்த்தாலும் பொருள் குறையாது.

pile என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று கட்டடங்கள் கட்டும் போது போடும் கடைகால். [பெரிய பெரிய உறுதிபெறு கற்காரை(reinforced concrete)களால் ஆன ஊன்றுகோல்களின் மேல் தான் பெரிய கட்டடங்கள் நிற்கின்றன. தமிழில் பொல்லு என்றாலே தடி, ஊன்றுகோல் என்றுதான் பொருள். பொல்லின் பெரியதைப் பொல்லம் என்று சொல்லலாம். எனவே பொல்லங்களின் மேல் கட்டடங்கள் நிற்கின்றன என்று சொல்லும் போது பொரூல் குறைவதில்லை.]

pile என்பதற்கு இன்னொரு பொருள் a tidy heap, esp. as made of a number of things of the same kind placed on top of each other என்பதாகும். இங்கே இந்தப் பொருளை ஒட்டித்தான் compile என்பதற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

பொல் என்னும் வேரடிக்கு பெருகுதல், அதிகப்படுதல், மிகுதல் என்ற பொருள்கள் உண்டு. பொல்லுதல் என்பதும் இந்தப் பொருள்களே கொள்ளும். மிகுதலின் இன்னொரு பரிமானமாய் இணைத்தல், சேர்த்தல், தைத்தல் என்ற பொருட்பாடுகளும் எழும். பொல்லம் என்ற சொல் தைக்கை, இணைக்கை, சேர்த்துத் தைக்க உதவும் சிறுதுண்டு ஆகியவற்றைக் குறிக்கும். பொலுகுதல் என்பதும் அதிகப்படுதல் என்றே பொருள் கொள்ளும். பொலுவு என்பது profit. பொலிசை என்பது வட்டித்துப் பெருகும் தொகை [interest என்னும் சொல்லுக்கு இணையாய் கல்வெட்டுக்களில் பயிலும் சொல்.] "பொலியோ பொலி" என்பது அறுவடையான நாளில் கதிரில் இருந்து கூலங்களைப்(grains) பிரித்து அளக்கும் போது, விளைச்சல் பெருக்கத்தைக் களத்து மேட்டில் கொண்டாடும் முகமாய் உழவர்கள் முழங்கும் சொலவம் (slogan). பொலிதல் என்பது செல்வ வளத்துடன் இருத்தல், உடல் நலத்தோடு இருத்தல் என்ற நிலையில் பெருகிய தன்மையையே குறிக்கும். பொலிதலின் திரிவான பொழிதலும், மிகுதியாகத் திரண்டு கொட்டுவதைக் குறிக்கும். "மழை பொழிகிறது". மரங்களின் திரட்சி செறிந்து கிடக்கும் போது அந்த இடத்தை, சோலையை, பொழில் என்றே சொல்லுவோம்.

இனிப் பெருகியது பொல்தியது என்று சொல்லப் படும். பொல்தில் இருந்து விளைந்தது பொது என்னும் சொல். பொல்து>பொது. மக்கள் கூட்டத்தைப் பொதுமக்கள் என்று சொல்லும் போது திரண்ட மக்கள் என்றே நாம் பொருள் கொள்ளுகிறோம். பொது என்ற சொல் இ என்னும் ஈற்றைச் சேர்த்துக் கொண்டு பொதி என்ற இன்னொரு சொல்லை உருவாக்கும். மூட்டை, குவியல், திரட்சி என்ற பொருள்கள் கிடைக்கும். body என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாய் இதைத் தான் கையாளுகிறோம். [ஏனென்றால் பொதிதல் என்ற வினைச்சொல்லிற்கு மிகுதியின் நீட்சியாய் நிறைதல் என்ற பொருள் வந்துவிடும். "ஆள் பொதி பொதி என்று இருக்கான் பார்த்தியா?" என்ற சொல்லாட்சியை உன்னித்து நோக்குங்கள்.] பொதி கூடிப் போய் அதிக எடையோடு ஊதிப் போய் இருப்பவனை பொதுக்கை (obese) என்று சொல்லுகிறோம். facist என்பவரைக் கூட பொருள்நீட்சி கருதி பொதுக்கையர் என்று சொல்லலாம்.

பொதுக்கை என்ற சொல் சற்றே திரிந்து பதுக்கை என்று ஆகி கற்குவியல் என்ற பொருள் கொள்ளும். இன்றையச் சேலம், தருமபுரி, திருவண்ணாமலைப் பக்கங்களில் பெருங்கற்காலப் புதை குழிகளைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த புதைகுழிகளின் மேல், பெரிய கற்பாளத்தை வைத்து மூடி அதற்கும் மேல் கற்குவியலைக் கொட்டி வைத்திருப்பார்கள். இந்த விதமான புதைகுழிகளைப் பதுக்கை என்று சங்கப் பாடல்கள் குறிக்கும்.

பொது என்னும் அடியில் இருந்து நெருங்குதல், நிறைதல், தழைத்தல் என்ற பொருளில் பொதுளுதல் என்ற வினை பிறக்கும். பொதுளித்தல் என்பது செறிவூட்டுதல் என்ற பொரூளில் செறிவு (concentration) கூடிய நிலையைக் குறிக்கும். பொதுளி என்ற பெயர்ச்சொல் செறிவுற்றது, செறிவூட்டு என்ற பொருள் கொள்ளும். பொதுவில் இருந்து இன்னொரு நீட்சியாய் பொதும்பு என்ற சொல் மரச்சோலையையும், பொதை என்ற சொல் செடிப்புதர்களையும் குறிக்கும்.

பொல் எனும் வேரில் இருந்து உருவான பொதுளி என்ற சொல்லையே இங்கு compiler என்ற சொல்லுக்கு இணையாகப் பரிந்துரை செய்கிறேன். மரச்செறிவைப் போல நிரல் ஆணைகளின் செறிவை ஏற்படுத்துவது பொதுளி.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 10, 2006

சோதிடம், நிமித்தகம், ஆரூடம்

"சோதிடம், நிமித்தகம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?" என்று ஒரு நண்பர் அண்மையில் என்னுடைய வேறொரு பதிவிற்கான பின்னூட்டில் கேட்டிருந்தார். அதற்கான மறுமொழி அவ்வளவு சுருக்கமாகச் சொல்லக் கூடியது அல்ல. தவிரவும் இக் கேள்வி பலருக்கும் பொதுமையானது என்பதால் என் மறுமொழியை ஒரு தனிப்பதிவாகவே இடுகிறேன். (இதுபோன்ற மற்ற சில பின்னூட்டுக் கேள்விகளுக்கு இன்னும் மறுமொழி சொல்லாமல் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சொல்வேன்.)

முதலில் சோதிடம் என்பதைப் பார்ப்போம்.

சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு. சோதி என்ற இந்தச் சொல் தமிழில் ஒளி, சொலிப்பு, நெருப்பு என்று பொதுவாகக் குறித்தாலும் (பார்க்க: கொன்றையும் பொன்னும் என்ற இராம.கி. கட்டுரை), விதப்பாக, வானில் சொலிக்கின்ற கோள்களையும், விண்மீன்களையும் குறிக்கிறது. (அதேநேரத்தில் சொலிப்பு என்ற தமிழ்ச்சொல்லையே ஜொலிப்பெனப் பலுக்கும் அளவிற்கு நம்மில் சிலரின் வடமொழி விருப்பம் போயுள்ளது.)

சோதியின் வழிச்சொல்லான சோதியம் (விண்ணில் ஒளிவிட்டிருக்கும் விண்மீன்கள், கோள்களை வைத்துக் கணித்தல்) என்பது முதலில் வான நூலையே (Astronomy) குறித்தது. காட்டாக, புறநானூற்றில் 30-ஆவது பாட்டு, சோதியம் எனும் வானியலையே குறிக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழந்த மண்டிலுமும்
வளிதிரிதரு திசையும்
வரிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
(புறம் 30)

(தமிழரறிந்த வானவியல் பற்றி தொடரைக் ”காலங்கள்” என்ற தலைப்பில் முன் மடற்குழுக்களில் எழுதத் தொடங்கினேன். இவ்வலைப்பதிவின் தொடக்க காலத்திற்கூட, அத்தொடர் தகுதரத்தில் (TSCII) மீள்பதிப்பாய் வெளியானது; என் தனிக் காரணத்தால் பாதியோடு நின்று போன அத் தொடரை என்று முடிப்பேனென்று இப்போது சொல்ல முடியவில்லை.)

சோதியம் என்ற தமிழ்ச் சொல்லே வடக்கே சோதிஷம்>ஜோதிஷம்> ஜ்யோதிஷம் என்றாகிப் பின் மீண்டும் தமிழில் சோதிடமாக வந்துசேர்ந்தது. ஒருகாலத்தில் வானியல் என்ற அறிவியலாய் நின்ற சோதியம், பின் நிமித்திகத்தோடு சேர்ந்து, "கோள்நிலை, கோள்களுக்குப் பின் நிற்கும் விண்மீன்கள் நிலை ஆகியவற்றை வைத்து, மாந்தருக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும்?" என்று சொல்லும் கலையாக, வான்நிமித்திகமாக (astrology) உருமாறிப் போனது. (இப்படி அந்நூலின் குறிக்கோளே மாறிய பின்னும் கூடச் சோதிடம் என்றசொல்லே புழக்கத்தில் இருந்தது. தொடக்க காலத்தில் அது வான்நூலைக் குறித்ததெனில் இன்று பலரும் வியக்கவே செய்வர். அதே நேரத்தில், சோதியம் என்ற சொல்லையே மூடநம்பிக்கை எனவுணர்ந்து அதனுளிருக்கும் பழந்தமிழர்/இந்திய வானியல் அறிவை பெரும்பாலோர் புறக்கணிக்கிறோம்.)

இந்திய வானியல் என்பது, இன்று பெரிதும் வடமொழிக் கலைச்சொற்களால் குறிக்கப் பட்டு, தன் கருதுகோள்கள், கணக்கெடுப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. [அது குத்தர்(குப்தர்) காலத்தில் ஓர் இயக்கமாகவே, தமிழ் போன்ற வழக்குமொழிகளிலிருந்து வடமொழி என்ற படிப்பு மொழிக்குப் பெயர்ப்புச் செய்ததால் உருவான விளைவு.] அதேபொழுது, சங்க இலக்கியங்களில் அறிவர் / கணியர் / வள்ளுவர் என்ற வல்லுநர் (திருக்குறள் எழுதிய வள்ளுவர் பற்றிய அடையாளக் கேள்வி சட்டென எழலாம்; இப்போதைக்கு அதைத் தேக்கி வையுங்கள்; பின் ஒருமுறை பார்க்கலாம்.) பற்றியும், அவருடைய வானியல் அறிவைப் பற்றியும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறிப்புக்கள் பரக்கவுள்ளன. கூடவே, வடமொழியில் உள்ள வானியற் கலைச்சொற்களை அலசிப் பார்த்து அவற்றின் வேரைத் தேடினோமெனில், வடமொழி வேர்கள் ஏற்கும்படியாய்க் கிடைக்காதும், ஆழப்பார்க்கையில் தமிழ்வேர்களே கிடைப்பதும் நம்மை வியக்க வைக்கும்.

இந்த அறிவர் / கணியர் / வள்ளுவரின் மெய்யியலாக, அவருக்குப் பின்னால் ஆசீவிகம் என்ற தமிழ்நெறி இருப்பதும் கூர்ந்து அறியத் தக்கது. (இன்றைக்கு ஆசீவிக நெறி அழிந்து போயிருப்பினும், அவற்றின் மிச்சசொச்சம் செயின நெறி, சிவ நெறி, விண்ணவ நெறிகளில் ஓரளவு கலந்தே கிடக்கின்றன. ஆசீவிகத்தின் பங்களிப்பை முற்றிலும் மறைத்து ஆசீவிகப் பள்ளிகளையும், அவர்களின் ஆக்கங்களையும் செயினரின் பங்களிப்பாகவும், சமணர் என்ற பொதுச்சொல்லில் அவரை ஆட்படுத்துவதும் கால காலமாய் நடந்துள்ளது.) பொதுவாக, அணுவியம் (atomism), ஊழியல் எனப்படும் நியதிக் கொள்கை (determinism), வினைமறுப்பியம் (முற்பிறவியின் தாக்கம் இப்பிறவிக்கு உண்டு என்ற கருமத்தை மறுப்பது) எனும் 3 கொள்கைகளின் வழி ஆசீவிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சங்ககாலத்தில் இக்கொள்கைகள் பரவி யிருந்ததற்குச் சான்றாக பல பாடல்கள் கூறமுடியும். (அதைச் சொன்னால் இங்கு நீண்டு போகும். எனவே அதற்குள் நான் போகவில்லை.)

ஆசீவிகக் கொள்கைகளில் முகன்மையானது நியதிக் கொள்கை. அக் கொள்கையின் படி, "இவ்வுலகம் ஓர் ஒழுங்கின்பால் கட்டுப்பட்டது. இந்த ஒழுங்கும் கூட, நமக்கு முன்னே கட்டப்பட்டது (pre-ordained)". இக் கட்டுதலை, இயற்கை  தானாகக் கட்டியதா, அன்றி கடவுளெனுங் கருத்தா கட்டியதா என்ற கேள்விக்குள் நாம் போகவேண்டியதில்லை (இருவேறுபட்ட கருத்தாளர் இருந்திருக்கிறார். ஆசீவிகம் கடவுள் மறுப்பாகவும் இருந்துள்ளது. மாறாக அதிலிருந்து, முன்சொன்னதுபோல், கடவுளைநம்பும் மதங்களும் சிந்தனை எடுத்தாண்டுள்ளன.) "ஏற்கனெவே எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்ட பிறகு, நடப்பது நடந்தே தீரும்" என்ற நிலையை, நியதி என்று சொல்வார். "ஊழில் பெருந்தக்க யாவுள" என்ற குறட்கருத்து ஆசீவிகத்தின் அடிப்படை உள்ளதே. "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்பது சிலம்பின் அடிக்கருத்துகளில் ஒன்று. (சிலம்பைச் சமண நூல் என்பதா என்ற கேள்வி எழுவது ஊழ்வினைக் காரணம் பற்றியே.) பொதுவாக, ஊழ்வினையை முற்பிறப்பு வினை என்று பொருள் கொள்வது பிறழ்ச்சியானது. ஊழ்வினை என்பது pre-ordained action என்பதையே குறிக்கும். அதற்கும் முற்பிறப்பிற்கும் தொடர்பில்லை. ஆசீவிகம் ஊழோடு வினைமறுப்பையும் சேர்த்துச் சொல்கிறது.

இக்கால அறிவியல், நுட்பியற்காரருக்கு கணிதவழி சொன்னால் ஊழ், நியதிக் கொள்கை இன்னும் புரியக் கூடும். நியதிக் கொள்கை என்பது கலன (calculus) நூலில் தொடக்க மதிப்புப் புதிரிகளைப் (initial value problems) போன்றது. ஒரு வருதையான வகைப்புச் சமன்பாடும் (ordinary differential equation), அதன் தொடக்க மதிப்பும் (initial value) கொடுத்துவிடின், காலகாலத்திற்கும் இயக்கம் நடந்துகொண்டே இருக்குமென்று கலனவியலில் புரிந்து கொள்வோம் அல்லவா? காட்டாக, மக்கள்தொகைப் பெருக்கத்தின் ஓர் எளிய மாதிரியாக (simple model)

dx/dt = kx; x(0)= a

என்ற சமன்பாட்டைச் சொல்வார். அதாவது, பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம் (instantaneous rate of growth), அந்தப் பொழுதில் வளர்ந்துள்ள தொகையைப் பொறுத்தது என்று இச்சமன்பாட்டின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இச்சமன்பாட்டை வழக்கமான தொகைக் கலன (integral calculus) முறையில் இனம்பிரித்து தொகையேற்றிச் (if integrated) சுளுவி எடுத்தால் (solve)

x = a*exp (kt)

என்ற சமன்பாடு கிடைக்கும். இதில் exp(kt) என்பது kt என்பதன் இயல் மடக்கைக் (natural exponentiation or exponentiation of the number e) குறிக்கும். மேலும், k என்ற புறமதிப்பை (parameter) அல்லது நிலையெண்ணைப் (constant) பொறுத்து, a என்னும் தொடக்க மக்கள் தொகை, மடங்கி மடங்கிப் (exponential) பெருத்துக் கொண்டே போகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நியதி அல்லது ஊழ்க்கொள்கையின் அடிப்படை புரியும்.

"இன்றைக்கு இருக்கும் உலக நிலை, நடப்புக்கள் என்பவை என்றோ தீர்மானிக்கப் பட்டவை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றின் வளர்ச்சியும் கோள்நிலைகளையே பொறுத்தது (அதாவது k என்ற புறமதிப்பைப் - paramter -போல.) என்று நியதிக் கொள்கை கருதிக் கொள்கிறது. அதன் விளைவால், எந்தவொரு மாந்தனும் பிறக்கும் போது இருந்த கோள்நிலைகளைக் கணித்து வைத்துக் கொண்டால், அவன் வாழ்க்கையின் வெவ்வேறு கால நிலைகளில் "குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்குமா, நடக்காதா?" என்று சொல்லிவிடலாமாம்.

அதே நேரத்தில், இதழுக்கும், கோப்பைக்கும் நடுவில் எவ்வளவோ துளிகள் சிந்தலாம் என்ற மொழிப்படி, இதுபோன்ற நியதிக் கொள்கையை மீறி எத்தனையோ நடக்கலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது; (அது சரிதான் நியதிக் கொள்கை ஆசீவிகத்தின் ஒரு பகுதி. முழுப்பகுதி அல்ல. நான் ஆசீவிகத்தை வேறொரு தொடரில் விளக்குவதாய்ச் சொல்லிவந்துள்ளேன். செய்வேன். சற்று பொறுங்கள்)  ஆனாலும் நியதிக் கொள்கை மாந்த வரலாற்றை வெகுகாலம் நடத்தியிருக்கிறது. அண்மையில் இழுனாச் செயற்பாடுகளைப் (non-linear processes) பற்றியும், கசகு (chaos) பற்றியும், வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effet) பற்றியும், இன்னும் இதுபோன்றவை பற்றியும் அறியாத மட்டும், அறிவியலின் முகன்மைப் பகுதியான பூதியல் கூட நியதிக் கொள்கையின் படிதான் பல இடங்களில் வேலை செய்து கொண்டிருந்தது. (இந்தக் கட்டுரையில் நியதி பற்றியே பேசுகிறேன்.)

இந்திய நியதிக் கொள்கையின் படி, ஊழ் என்பது நான்கு நிலைகளில் இயங்குமாம். (கீழே வரும் செய்திகள் தமிழக ஆய்வரண் வெளியிட்ட வெங்காலூர் குணா எழுதிய ”வள்ளுவத்தின் வீழ்ச்சி” என்ற நூலை ஒட்டியது. இந்திய மெய்யறிவியல் பற்றிய, குறிப்பாக ஆசீவிகம், விதப்பியம் (வைஷேடிகம்) பற்றிய, அருமையான நூல் அது. நூல் கிடைக்குமிடம்: பஃறுளி பதிப்பகம், 183, வேங்கடரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.)

அவை
------------------------
ஆவதாம் (அதுவாம் அது)
ஆமாங்காம் (அதுவாம் வகை)
ஆந்துணையாம் (அதுவாம் துணை)
ஆங்காலத்தாம் (அதுவாம் பொழுது)

சினை (முட்டை) கருவாகி, கரு குழந்தையாகி, குழந்தை அரிவையாகும் (20 முதல் 25 அகவையாகும் பெண்) எவ்வளர்ச்சி (evolution), ஈன்களில் (genes) அமைந்துள்ள செய்திக் கோவையின் (message) படி ஏற்படும் இயற்கையைத் தான் "அதுவாம் அது (this is it)" என்று கூற்று சுட்டிக் காட்டுகிறது.

"இந்தச் சினை அரிவைப் பெண்ணாகும், இன்னொரு சினை அப்படிப் பெண்ணாகாது" என்று வகைப்பதும் இயற்கையே (அதுவாம் வகை - classification).

"அரிவையாக வேண்டுமானால் இவ்வளவு திரட்சி, இன்னின்ன சூழ்நிலைகள் இருக்க வேண்டும்" என்று துணைகளை விதிப்பதும் இயற்கையே (அதுவாம் துணை - auxillary conditions).

அரிவையாவது இன்ன பருவத்தில் என்பதும் இயற்கையே (அதுவாம் பொழுது - timing).
---------------------------------
நிமித்திகத்தின் அடித்தளமும் கூட இதுதான். அதாவது நியதிக் கொள்கை (determinism). "நியந்து கொள்ளப் பட்ட உலகில் ஓரளவு தான் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்ற முடியும்" என்ற புரிதல் நியதிக் கொள்கையின் வழியாய் அறியப் படுவது. இன்றைய அறிவியலின் படி நியதிக் கொள்கையைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்க முடியும்.

வான்நிமித்திகத்தின் படி, நாம் பிறந்த போது கோள்கள் இருந்த நிலையை வான நூலின் படி ஒரு படமாகப் பிடித்து, ஒரேவிதமான படப்பிடிப்புகளை எல்லாம் ஒரு தனி வகையாகப் பார்த்து, அந்த வகையில் இருப்பவருக்கு இன்னவிதமான வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவது வான்நிமித்திகம். [அந்தப் படப்பிடிப்பைத் தான் சூல்தகம்>*சொல்தகம்>சாதகம் என்று சொல்வார். சூல்தல் = கருவுறுதல். சூல்த்தல் = கருவாக்குதல் (பிறவினை); சூலி, சூற்பெண்டு = கருவுற்ற பெண். கரு வளர்ச்சியுற்றுப் பிறக்கும் செயலை சூனித்தல்>சினைத்தல் என்று சொல்லுவார்கள். இதே போல கனித்தல் என்ற சொல்லும் பருவ நிலை எய்தி உருவாதலைக் குறிக்கும். கனித்தல் / ஈனித்தல் / சினைத்தல் என மூன்று வினைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சினை என்ற சொல் பொதுவாக அஃறிணையில் கன்று, மகவு என்பதைக் குறிக்க, சூனு என்ற சொல் வடமொழியிலும், sun/sonne என்ற சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளிலும் மகனைக் குறிக்கப் பயன்படும். இதே போல, சூல்த்தம்>சூத்தம்>சூத்ரம் = சொல்ல வருவதை சுருக்கமாய், எல்லாம் அடங்கிய கருப் போலச் சொல்லுதல்.]

இனி நிமித்தம் என்பதைப் பார்ப்போம். நிமித்தம் என்பதற்குக் காரணம், சகுனம் என்று பலபொருள் சொல்வார். தொல்காப்பியத்தில் சில இடங்களில் இச்சொல் ஆளப்படுகிறது. குறிப்பாக, அகத் திணையியலில் உரிப்பொருள் பற்றிப் பேசும்பொழுது 960 ம் நூற்பாவில்,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊட்ல் இவற்றின் நிமித்தம் என்று இவை
தேருங் காலை திணைக்கு உரிப் பொருளே

என்று வரும். இங்கே நிமித்தம் என்பதற்குக் காரணம் என்ற முதற்பொருள் குறிக்கப் பெறும். இதே போல 1037ம் நூற்பாவில்,

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

இதில் சகுனம் என்ற பொருள் குறிக்கப் படும். மேலும், 1050 ம் நூற்பாவில் "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" என்னும் போது காரணம் என்ற பொருளும், 1123ம் நூற்பாவில், "ஆவொடு பாட நிமித்தம் கூறலும்" என்னும் போது மீண்டும் சகுனம் என்ற பொருளும் வரும். தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்த சங்க நூல்களிலும் கூட இச்சொல் காரணம், சகுனம் என்று பொருள்களில் ஆளப்பட்டிருக்கிறது.

நிமித்தம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார். ஆனால் நிமித்த என்பதின் சொற்பிறப்பு அறிய மோனியர் வில்லியம்சு வடமொழி சொற்பிறப்பு அகரமுதலிக்குப் போனால், வழக்கம்போல சொல்லை உடைத்து, நி-மித்த என்று பிரித்து, மித்த என்னும் பகுதி மா என்னும் வேரில் இருந்து எழுந்திருக்கலாம் என்று ஊகமாகப் போட்டுள்ளார். விளக்கம் முழுதும்படித்தால் நம்மால் ஏற்கமுடிய வில்லை. "சரி, தமிழில் பிறந்து திரிந்து கிடக்குமோ?" என்ற ஐயம் உடன் எழுகிறது.

நிமித்தம் என்பதற்கு, திவாகரத்தில் நிபம், பொருட்டு, ஏது, திறன், வாயில் என்று சொற்களை இணையாகக் கொடுத்து "காரணந் தெரிசொல்" என்று பொருள் சொல்வார். [பின் வரும் நிகண்டுகளில் நிபம் என்ற சொல்லையே காணோம்.]

காரணம் என்பது கரு என்னும் சொல்லடியிற் பிறந்ததென்று  சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்றாகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம். கருத்தல் என்பது தோன்றுதல் பொருளைக் குறிக்கும். காரணம் தமிழாக இருக்கையில், ”கரு”வில் ஏற்பட்ட காரியமோஓர் இருபிறப்பிச் சொல். ”கருமம்” அதற்கு இணையான தமிழ்ச்சொல்.

இதேபோல இயல் எனும் சொல்லடியில் பிறந்த வினைச்சொல் இயல்தல்; இதற்குப் பொருள் ஏற்படுதல், உண்டாகுதல் என்பதாகும். இயல்தலின் திரிவு ஏல்தல். ஏல் எனும் அடியில் கிளைத்ததே எற்படல் என்ற கூட்டு வினைச்சொல். இனி, ஏல்து என்னும் சொல்லடி ஏல்து>ஏது என்றாகும். ஏது என்ற சொல் காரணம் என்ற பொருளைத் தருவது இப்படித்தான். ஏது சாற்றம் என்ற கூட்டுச்சொல் hethusAsthra என வடமொழியில் திரியும். Logic என்று பொருள். இதைக் கற்கக் காஞ்சிபுரத்திற்கு புத்தர் காலத்தில் வந்திருக்கிற செய்தி புத்த நூல்களில் தெரிகிறது.

காரணத்தோடு தொடர்புடைய பொருட்டு என்ற சொல்லை 2,3 வகையாய்ப் பயன்படுத்துகிறோம். "எதன் பொருட்டு இவர் இப்படிக் கத்துகிறார்?" எனும் போது காரணம் என்ற பொருளும், "அப்படி எல்லாம் அவர் நினைத்தால் எனக்குப் பொருட்டில்லை" என்னும் போது "மதிப்பிற்குரியது" என்ற பொருளும் காணப்படுகிறது.

"ஒன்றின் வாயிலாய் இன்னொன்று பிறக்கும்" என்னும் போது, வாயில் என்ற சொல்லும் காரணப் பொருளைப் பெறுகிறது. திறவு/திறன் என்ற சொல்லும் கூட வாயில்/கதவு என்ற பொருளின் வழியாகக் காரணத்தை உணர்த்துகிறது.

இனி நிமித்தத்திற்கு வருவோம். தமிழில் தன்வினைச் சொல்லான நிற்றல் என்பதன் பொருளை நாம் அறிவோம். அதைப் பிறவினையாக்கும் போது நிருவுதல்>நிறுவுதல், நிருமுதல்>நிருமித்தல், நிற்பு+ஆட்டுதல் = நிற்பாட்டுதல்>நிப்பாட்டுதல் என்றெல்லாம் வட்டாரத்திற்கு ஏற்பச் சொற்கள் எழும். இவை எல்லாவற்றிற்கும் நிற்கவைத்தல் என்றே பொருள் கொள்கிறோம். இதே பொருட்பாட்டில் தான் ஏல் + படுதல் = ஏற்படுதல் என்ற கூட்டு வினைச்சொல் எழும். ஏற்படுதல் என்பது தன்வினையாகும் போது, அதன் பிறவினையாய் ஏற்படுத்தல் என்ற சொல் எழும். நிருமித்தல் என்பதும் ஏற்படுத்தல் என்பதும் ஒரே பொருட்பாடு உடையவையே.

ஒன்றை ஏற்படுத்தினால், இன்னொன்று விளையும் என்ற பொருளில் ஏற்பாடு என்ற சொல் காரணமாயும், ஏற்படுவது விளைவாயும் கொள்ளப் படுகிறது. சிலபோது இவ்விளைவை நிருமானம்>நிருமாணம் என்கிறோம். நிருமித்தம், ஏற்பாடு போன்ற சொற்களுக்குக் காரணப்பொருள் உண்டாவதை மேற்கூறிய கருத்துக்களின் வழியாகப் புரிந்து கொள்ளலாம். . இனி பெருநை>பெண்ணை என்று ஆவதுபோல, பெருமான்>பெம்மான் என்று ஆவது போல, நிருமித்தம் என்பது நிம்மித்தம்>நிமித்தம் என்று திரியும். [இந்த நிருவுதல் என்பதன் வழியாக, நிருபாதானம் = முதற்காரணம் இன்மை, நிருபாதி = காரணம் இன்மை, நிருபாதிகம் = காரணம் அற்றது என்ற இருபிறப்பிச் சொற்களும் உருவாகி இருக்கின்றன.]

வாழ்வின் ஒவ்வொரு விளைவுகளுக்கும் நிமித்தம்(=காரணம்) கண்டு பிடித்துச் சொல்லுவதும், இந்நிமித்தம் ஏற்பட்டுவதால், இன்னது விளையும் என்பதும் நிமித்திகத்தின் புலனமாகும். இந்நிமித்திகத்தில் செய்கணம் (=சகுனம்) என்பதும் ஆழ்ந்து பார்க்கப் படுகிறது. எப்படி இலக்கியத்திற்கு இலக்கணம் ஆதாரமோ, எப்படிக் கருமத்திற்குக் காரணம் ஆதாரமோ, அதே போல செய்கைக்கு அணம் செய்கணம்>செகுணம்>செகுனம்>சகுனம் ஆதாரம் என்று முன்னோர் நம்பினார். (இச் செகுனம் என்பது இற்றை அறிவியலில் signal என்று சொல்லப்படும்.) பலநேரம் இது அறிவியலின்படி இருந்தாலும், ஓரோ வழி மூட நம்பிக்கையாயும் இது அமைந்துவிடுவது உண்டு.

மேகம் கருத்தால், மழை வரும் என்பது பட்டறிவு. இதில் மழை என்பது செய்கை. கருத்த மேகம் என்பது செய்கணம் அல்லது நிமித்தம். கருத்த மேகத்தைப் பார்த்து மழை வரும் என்று சொல்வது நிமித்திகம். இன்னொரு எடுத்துக்காட்டையும் கூறமுடியும். ஒரு இடத்தில் பெரும் நில அதிர்வு ஏற்படப் போகிறது; அந்த அதிர்வு ஓர் அலையுயரம் (amplitude), அல்லது பருவெண் (frequency) காட்டினால் தான் மாந்தரால் அறியமுடிகிறது. அதற்குள் பெரும் அழிவுகள் ஏற்பட்டுவிடக் கூடும். மாறாக ஒரு சில பறவைகள் (புள்கள்), நுண்ணுயிரிகள், குறுவிலங்குகள் போன்றவை, மிகச் சிறிய அதிர்வுகளால் கூட அங்குமிங்கும் ஓடத்தொடங்கும் அல்லது பறக்கத் தொடங்கும். அதைக் கவனித்து இன்னும் இத்தனை மணி நேரத்தில் பெரிய நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று சொல்வதும் நிமித்திகம் தான். அதே போல மழை வரப் போகிறது என்று கணித்துச் சொல்லுவது, இம்முறை வெய்யில் அதிகமாய்  வாட்டும் என்று முன்கூடச் சொல்வது, கடல் பொங்கும் என்று ஆருடம் சொல்வது என்பவை எல்லாமே நிமித்திகம் தான்.

நாளாவட்டத்தில், பல்லி கவுளி சொல்லுவது, பூனை குறுக்கே போவது என்று மூடநம்பிக்கைகளுக்குப் போய்ச் சேரினும். தொடக்கத்தில் நிமித்திகத்தில், இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் ஈடுபாடு இருந்தது புலப்படுகிறது.

நிமித்திகத்திற்குப் பக்கவலுவாக சோதியத்தைச் சேர்த்து வான்நிமித்திகம் வந்தது எப்பொழுது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; ஆனால் சங்க காலத்தில் இக்கலை ஏற்பட்டுவிட்டது என்பது பல பாடல்களால் தெரிகிறது. காட்டாக, "எரிமீன் விழுந்தது; சேர அரசன் இறக்கப் போகிறான்" என்று நிமித்திகம் கூறும் புறநானூற்றின் 229ம் பாடல்,

ஆடியல் அழற்குட்டத்து
ஆரிருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய
நிலைநாள்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல்நாள்மீன் துறைபடியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பி னானே
(புறம் 229)

வழியாக, வான்நிமித்திகத்தின் தாக்கம் சங்க காலத்தில் இருந்ததைத் தெளிவாகவே அறிகிறோம். இதுபோன்ற பாடல்களில் இருக்கும் வானியல் அறிவு ஒருபக்கம் நம்மை வியக்க வைக்கும் போது, இன்னொரு பக்கம் நிமித்திகத்தின் ஊடுருவலையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இனி மூன்றாம் சொல்லுக்கு வருவோம். ஆரூடம் என்ற சொல்லிற்கும் வடமொழியில் வேரில்லை, ஆரூடம் என்பது முதலில் வான்நிமித்திகத்தின் விதப்பான முறையாகவே உணரப்பட்டது. அதாவது சூல்தகம் (=சாதகம்) பார்க்காமல், கேட்கவரும் நேரத்தில் "ஓரைகள் (ராசிகள்) எந்த அளவிற்கு உச்சம் பெற்றிருக்கின்றன; இந்நேரத்தில் கோள்கள் எப்படிப் பாதிக்கும்?" என்று கணித்து நிமித்திகம் சொல்வதே ஆரூடம் என்று அறியப் பட்டது. நாளாவட்டத்தில் எல்லாவிதமான ஊக வேலைகளையும் (guesswork) கூட ஆரூடம் என்று சொல்லத் தொடங்கினார். எண் சோதிடம் கூட இன்னொரு கிளையாகப் பிரிந்தது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலனைச் சொல்லி, அந்த எண்களுக்குக் கோள்நிலைகளோடு தொடர்புறுத்தி, எண்களை தாயக் கட்டைகள், சோழிகள் மூலம் போடவைத்து, மொத்தத்தில் பெரிய ஊக வேலைகள் இங்கு நடந்து கொண்டிருந்தன.

ஆரூடம் என்பதை ஆர்+ஊடம் என்ற கூட்டுச் சொல்லாகப் பிரித்தே சரியான சொற்பிறப்பு காண்கிறார். ஏர்தல்>ஏறுதல், ஊர்தல் = ஏறிநகருதல்; ஏகாரம்/ஊகாரம் போன்றவை ஆகாரமாய்த் திரிவது தமிழில் இயற்கையே. ஏறிவந்து ஒருவர் நிமித்திகரிடம் ஆரூடம் கேட்கும் போது, கோள்கள் ஓரைகளின் உச்ச நிலையில் இருப்பதை ஒட்டி, அதனூடாகப் பலன்சொல்வது ஏரூடம்> ஆரூடம் ஆகும். இதைப் ப்ரசன்ன சோதிடம் என்றும் வடமொழிப் படுத்திச் சொல்வார். அண்மையில் கேரளாவில் அய்யப்பன் கோவிலில் சோழிகளைப் போட்டு ப்ரசன்னம் பார்த்த குழப்பம் செய்தித் தாளில் படித்திருப்போமே? இந்த ஆரூடம், ப்ரசன்னம் பார்ப்பது கேரளத்தில் மிகுதியானது. தமிழகத்தில் குறைவு.

இப்படிச் சோதியம், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சற்றே வேறுபட்டாலும், எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒன்றிற்கு மாற்றாக இன்னொரு சொல் புழங்குவது இன்று வழக்கமாகிப் போனது.

இக்கட்டுரை நெடுகிலும், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சரியா, மூட நம்பிக்கையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இதை மறந்து விடாதீர்.

அன்புடன்,
இராம.கி.