Friday, July 31, 2009

இடியப்பம் - 3

மா என்ற சொல்லைப் பற்றியும், அதே பொருள் சுட்டும் ”அருப்பம், பிட்டம், நுவணை, பிண்டி, இடி” போன்ற சொற்களின் பிறப்பையும், சேவை, noodle ஆகிய சொற்களின் பிறப்பையும் விளக்குவதாகச் சொல்லியிருந்தேன்.

முதலில் வருவது அருப்பம். அரிசியின் சொற்பிறப்பைத் தெரிந்து கொண்டால், அருப்பம் பிறந்தவகை உடனே புரியும்.

அல் என்னும் வேருக்குச் “சில், துண்டு” என்ற பொருள்களுண்டு. அல்>அல்கு>அல்குதல் என்பது ”சிறுத்தல்” என்ற பொருள் கொள்ளும். லகர, ரகரத் திரிவில் அல்>அர்>அரி>அரிசி என்றாகும். சிறுத்துக் கிடப்பதால் அரி என்றும், அதையே நீட்டி அரியி>அரிசி என்றும் சொல்லியிருக்கிறார்கள். [வரகிற்கும் அரிக்கும் தொடர்பு இல்லை. வறகு>வரகு என்பது புன்செய் நிலத்தில் விளையும் பயிர்.] ”வ்ரிஹி” என்ற சங்கதச் சொல்லைக் காட்டி, ”அதிலிருந்துதான் அரி வந்தது; கோதுமை, பார்லி, அரிசி என எல்லாவற்றையும் குறித்தது” என்று சிலர் குறிப்பார்கள். ஆனால் மற்ற எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் வ்ரிஹி போன்ற சொல் பொதுவான கூலத்தை (தான்யத்தை) உணர்த்தியதில்லை. ஆனாலும் ”சங்கதமே முதல்” என்று முழக்குகிறவர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் நெல்லைக் குறித்துத் தமிழில் வரியெனும் சொல் இருக்கிறது. [தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் வரி உண்டு. பனியார் என்னும் திராவிட மொழியில் வெர்சி என்பதும் கோண்டியில் வர்ஞ்சி என்பதும் உண்டு.] வரியில் இருந்து வெகு எளிதில் திரிந்து வ்ரிஹி ஏற்பட முடியும். இருப்பினும் மறுப்பார்கள். அது என்னவோ, தமிழ் என்று வரும்போது, ”மற்ற தமிழிய மொழிகளில் இது போன்ற சொல் இருக்கிறதா? இல்லை எனில் இது கடன்” என்று கவனமாய்ச் சொல்பவர்கள் சங்கதத்திற்கு மட்டும், இந்நெறியைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாகச் “நான் சொல்கிறேன், கேட்டுக்கொள்” என்பதே பாடமாய் இருக்கிறது..

இன்னுஞ் சிலர் ”தென்மேற்குச் சீனம், இந்திய வடகிழக்கு மாநிலங்கள் வழியாகவும் அரிசி இந்தியத் துணைக்கண்டத்துள் வந்தது, முண்டா மொழியில் இருந்து கடன்பெற்றது” என்பார்கள். அதற்கான தரவுகள் மிகவும் குறைந்தே இருக்கின்றன. என்னுடைய இன்றையப் புரிதலில் அரியைத் தமிழ்ச்சொல்லாகவே கொள்கிறேன்.

இதே சிறுமைக் கருத்தில் தான் அல்>அர்>அரு>அருப்பு>அருப்பம் = சிறியது, நுண்ணியது என்று பொருள் கொள்ளும்..

அடுத்தது பிட்டும், பிண்டியும் ஆகும். ஒரு மாவுப்பொருளை, ஆகச் சிறு அளவிற்கு பிளந்து கொண்டே போனால் பிள்+து = பிட்டு கிடைக்கும். இந்தச் சொற்பிறப்பில் மெல்லினம் ஊடொலிக்க, பிள்+ந்+து = பிண்டு>பிண்டி என்ற சொல் பிறக்கும். முன்னோருக்குச் செய்யும் ”நீத்தோர் நினைவுச் சடங்கில்” எள், அரிசி, பால், தயிர் சேர்த்து உருண்டை பிடித்து வைக்கும் பிண்டமும், பிண்டி என்றே சொல்லப்படும். ஒரே உருவமும், ஒலிப்பும் கொண்ட இரு “பிண்டி”களும் இருவேறு வகையில் பிறந்தவை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இடி என்பது உரலில் அரிசியை உலக்கையால் இடித்துப் பெறும் மாவாகும். மாவிடித்தல் சங்க காலம் தொட்டே நம்மிடம் இருந்திருக்கிறது. ”இடிக்கலப்பு அன்ன நறுவடி மாவின் வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்” என்பது மலைபடுகடாம் 512 ஆம் வரி. இருண்ட மத்தளம் போன்ற பலாப் பழத்தைப் பேசிய பாணர், "இடித்த மாவாய்த் திரைந்து வடியும் சேறு கொண்ட மாம்பழத்தை" இங்கு பேசுகிறார். [மாம்பழங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மாவுச் சேறாய் விளங்கும் பழம் (பங்கனப்பள்ளி இந்த வகை), இன்னொன்று நார்நாராய் இருக்கும் பழம் (ரொமானி என்று இந்தக் காலத்தில் சொல்லுவார்கள்.) [அல்போன்சா இரண்டும் கலந்தது. பங்கனப் பள்ளியைக் காட்டிலும் நார் அதில் கூட உண்டு.] ”மாவு போல் சதை கொண்ட பழம்” என்று சொல்ல, மாவுப் பண்டங்களை நெடுங்காலம் பழகியிருக்க வேண்டும். தமிழில் செயற்கைப் பொருள் இயற்கை நிகழ்வுக்கு உவமமாய்ச் சொல்லப் படுவது மிகவும் அரிது. இடித்தல் வினை சங்க காலத்தில் இருந்து பேசப்படுவதால் தான் மாவுப்பொருட் சிற்றுண்டிகள் நம்மிடம் நெடுங்காலம் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

இடித்தல் வினை மாவிற்கு மட்டும் பயன்படுவது அல்ல. மா இடிப்பது போல அவல் இடிப்பதும் உண்டு. இதுவும் உரல்-உலக்கையைக் கொண்டு செய்வது தான். ”பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை” - அகநானூறு. 141, 17-18; பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை - குறுந்தொகை 238. ஈரம் உலராப் பச்சரிசியை நெல்லின் கதிரோடு எடுத்து முறித்து உதிர்த்து இடித்துப் பெறூவது பாசவல் (= பச்சையான அவல்). இதுபோக உலரவல் என்பதும் உண்டு. இடிசல் என்ற சொல் நொறுங்கிய அரிசி முதலிய கூலங்களைக் (தானியங்களைக்) குறிக்கும். இடிப்பு என்ற பெயர்ச்சொல் மாவைக் குறிக்கும். பின்னால் இடி என்ற சொல்லும் மாவைக் குறித்திருக்கிறது. ”இடிபு = இடிகை, நொறுங்கல் ஞாற்சி.... ஆட்டம் இடிபு,,,நுந்தை எனவும் ஒட்டிக் கொள்க” என்று தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 145 ஆம் நூற்பாவிற்கு இளம்பூரணர் உரையில் இடிபு என்ற தொழிற்பெயர் வரும். ”மாவாகில் .... கூறிடல் அப்பமும் இடியப்பமும் கொழுக்கட்டையே” என்று நீரரர் நிகண்டில் 5,4 நூற்பாவில் வரும். இடியல் என்ற சொல்லுக்குப் பிட்டு என்ற பொருளும் உண்டு. திருநெல்வேலிப் புராராணத்தில் நாட்டுப் படலத்தில் ”எட்டடுக்குத் தாம்பாளமாம் இடியாப்பம் நெய் தோசை” என்று வரும்.

ஆக இடித்தல் என்பது தமிழன் வாழ்வில் மிகவும் நாட்பட்டது. உரல்-உலக்கைக் கருவியை ஒருவன் தன் வாழ்வில் கைக்கொண்ட பின்னால், எல்லாக் கூலங்களையும் அதில் போட்டு இடித்துப் புதிது புதிதாய் ஏதேனும் செய்யக் கை குறுகுறுக்காதோ? அப்படிச் செய்தால், இடியப்ப மாவு நம்மூரில் வாராதோ? உரலையும் உலக்கையும் சிந்து சமவெளி நாகரிகத்திலேயே கண்டு பிடித்திருக்கிறார்களே?. ஆட்டுரலும், அதன் குழவியும் கருங்கல்லில் இருப்பது நம்மூர்ப் பழக்கம் தானே? உரல் இருந்தால் மா நம்மூரில் இல்லாது போகுமா?

கூலங்களை மட்டும் அல்லாது, கிளிஞ்சல்களை உரலில் போட்டு இடித்து சுண்ணம் செய்யும் தொழிலும் இங்கு இருந்தது. [முத்துக் குளித்த தென்பாண்டிநாடு, கிளிஞ்சல்களைச் சும்மாவா விட்டிருக்கும்? கிளிஞ்சல் சுண்ணத்தால் ஆனது என்று தெரிந்த பிறகு, “குறித்தல் - தவறுதல்” முயற்சிகள் தொடராதோ? “பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்” - மதுரைக்காஞ்சி 399; ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் - சிலம் 1, 57 என்ற வரிகளும் சுண்ணாம்பு இடித்த கதையைச் சொல்கின்றனவே? ”அஞ்சனப்பூழி அரிதாரத்து இன்னிடியல்” என்று சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக் குரவையில் கொளுச்சொல் பகுதியின் இரண்டாம் அடியில் இடியல் என்னும் சொல் சுண்ணப் பொடியைக் குறிக்கும். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட வீடுகளுக்கு வழவழச் சுண்ணாம்புச் சாந்து பூசும் வழக்கத்தால், சுண்ணாம்புக்கு கிளிஞ்சலை இடிக்கும் தொழில் 60 ஆண்டுகளுக்கு முன்னாலும் கூட இருந்தது. செட்டிநாட்டுப் பக்கம் உள்ள சுண்ணச் சாந்து இன்றும் வியக்கத் தக்க வகையில் வழவழப்பாக, வெள்ளைவெளேரென்று காட்சியளிக்கும். [ஆனால் இந்த 60 ஆண்டுகளில் சுண்ணச்சாந்து செய்யும் முறை வினைஞர்க்கு (technicians) மறந்து போய், மீண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேர்வார்ந்த முறையில் தலை தூக்கி எழுகிறது.]

இனி நுவணை, மாவு என்ற சொற்களைப் பார்ப்போம். அரிசியிடிப்பில் குருணை, நொய் என்ற சொற்கள் எழும். குருணை பெரியது, நொய் சிறியது. “ஏடி, நொய்யாய் அரைக்கப் (இடிக்கப்) படாதோ? ரொம்பக் குருணையா இருக்கே?” என்ற பேச்சை எண்ணிப் பாருங்கள். நொய்யி/நொசி/நொசிவு என்பவை நொய்தலுக்கு உறவு; ஆங்கில nice-ற்கு இணையானது. நொய்ந்தது மெலிவதால், நோய் எனும் பெயர்ச்சொல் எழும். நொடித்தல் நொய்தலோடு சேர்ந்ததால், நொட்டம்>நட்டம்>நஷ்டம் கிளைக்கும். நொள்ளலும் நொய்தலோடு தொடர்புள்ளது தான். நொய்தல்>நொகுதல்>நொகை = negative என்பதும் இதே வினையில் எழலாம். பொதிவாய்ப் (positive) பார்ப்பதற்கு மாறாய் நொகையாய் (negative) ஒருசிலர் பார்ப்பார் இல்லையா? பொதிவெண்களும் (positive numbers), நொகையெண்களும் (negative numbers), பலக்கெண்களும் (complex numbers) இல்லாக் கணிதம் இன்று ஏது? நுல்>நுள்>நுய்>நொய்>நொய்வு என்ற சொற்பிறப்பு ஆழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. நுல்>நுள்>நுண்>நுணுகுதல் என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம் நுய்>நுய்வு>நுவ்வு>நூ என்பது சிறிய எள்ளைக் குறிக்கும். நூ என்னும் ஓரெழுத்தொருமொழி இற்றைத் தமிழில் வழக்கின்றிப் போனாலும், தெலுங்கில் நிலைத்து நிற்கிறது. நூநெய் = எள் நெய் = எண்ணெய். அதோடு நுவ்வு>நுவல்>நோல்>நோலை என்று திரிந்து எள்ளுருண்டையைக் குறிக்கும். இன்னும் வேறுவகையில், நுவ்வு>நுவல்>நுவள்>நுவணை என்ற வளர்ச்சியில் நுட்பம் என்னும் பொருளையும் குறிக்கும்.

நுவ்வுதல்>நூவுதல்>நூகுதல் திரிவில் “micro" வுக்கு இணையாய் நூகு எனும் முன்னொட்டுப் பிறக்கும். நுவ்வுதலில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் நுவணை. இடித்த மா என்ற பொருளில் “மென் தினை நுவணை யுண்டு” என்ற வரி ஐங்குறுநூறு 285ஆம் பாடலில் வரும். சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு தான் ஆகப் பழமையானது என்று சொல்லுவார்கள். அதன் காலம் கி.மு.500-200 கணக்கில் இருக்கும். இங்கே இடித்த திணை மா குறிக்கப் படுகிறது. நுவணை என்பது நுவணம் என்றும் திரிந்து இடித்த மாவைக் குறிக்கும். [நுவணை என்ற ஒரே சொல் இடித்த மா என்னும் பூதியற் பொருளையும் (physical substance), நுட்பம் என்னும் வழிமுறையையும் குறித்தாலும், நுண்மைப் பொருள் இரண்டிலும் ஊடுருவி நிற்கிறது.]

நுய்>நொய்>நொய்வு என்ற சொல் நொவ்வு>நவ்வு என்றும் ஒலிப்புத் திரிவில் மாறும். அடுத்து படுதல்>பாடு என்றும், பெறுதல்>பேறு என்றும் வினைச்சொல்/பெயர்ச்சொல் உருவாவது போல நவ்வுதல் வினைச்சொல் நாவு எனும் பெயரை உருவாக்கியிருக்க வேண்டும். [குறித்துக் கொள்ளுங்கள்: வேண்டும் என்றே என் ஊகத்தைச் சொல்லியிருக்கிறேன். காரணம் இருக்கிறது.]

நகர, மகரப் போலி என்பது தமிழில் மிகுதியாய் உண்டு. நுப்பது/முப்பது நுடம்/முடம், நுனி/முனி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதே வழக்கில் நாவு>மாவு ஆக மாறும். முன்னே சொன்ன காரணம் இதுதான். மாவு எனும் பெயர்ச்சொல் பொடி, துகள் என்ற பொருளில் அகரமுதலிகளில் இருக்கிறது. ஆனால், அதற்குப் பின்புலமாய் ஒரு வினைச்சொல்லும் மகர எழுத்தில் தொடங்கக் காணோம். நகர. மகர போலியை இங்கு உருவகித்தால் ஒழிய, வினைச்சொல் கிடைப்பதில்லை. எனவே நொய்வு>நொவ்வு>நவ்வு>*நாவு>மாவு என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ”காயங் கொண்டன மாவிருந்து” என்பது மலைபடுகடாம் 126 ஆம் வரி. அரிசியைப் புடைப்பதை நெல்லைப் பக்கம் நாவுதல் என்றே சொல்லுவார்கள். அதன் பொருள் கொழித்தல் to winnow and clear grain from stones என்றாகும். கொழிக்கும் வினையில் அளவு வாரியாகத் திண்மச் சில்லுகள் பிரித்து, துகள்கள் பறந்து போக, அரிசியும், கல்லும் தனித்துப் பிரிக்கப் படும். அதாவது கொழித்தல் வினையில் மூன்று புதுக்குகள் (products) கிடைக்கும். ஒன்று கல், இரண்டு அரிசி, மூன்று நாம் ஒதுக்கும் துகள். நாவு என்னும் சொல் கல்லைக் குறிப்பதில்லை. நாவு பொடியையே குறித்திருக்க வேண்டும் என்பதை நெல்லை வழக்கைக் கொண்டே முடிவு செய்கிறோம்.

மாவைப் பார்த்த நாம், மாவும் நீரும் கலந்த கலவையை இழையாக மாற்றி உருவாக்கும் சில சிற்றுண்டிகளைப் பார்க்கலாமா?

முதலில் வருவது தேங்குழல். பலரும் அது தேன்போல இருப்பது என்று சொல்லுவார்கள். இத்தனைக்கும் அது இனிப்புக் கிடையாது, அப்புறம் எங்கே தேன் வந்தது? உண்மையில் தேங்குழலுக்கான உரலில் ஈரமாவை வைத்து அதன் மேல் குழவியை வைத்து அழுத்தும் போது நீளமாக இழை வருகிறது. இந்த இழையைக் கொதிக்கும் எண்ணெயின் மேல் விழவைத்துச் வட்டமாய் சுற்றிச் சுற்றித் தேங்குழலை வார்ப்பார்கள். வேறு ஒன்றுமில்லை. தீர்தல் என்றால் தமிழில் நீளுதல் என்று பொருள். [சூடாமணி நிகண்டு]. தொடர்ந்து வருதலை தொயர்ந்து வருதல் என்று சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். “இப்படி விடாமத் தொயர்ந்துக்கினே வந்தா என்ன செய்யுறது?” தொயர்தல்>துயர்தல்>தியர்தல்>தீர்தல், தவிரத் தொய்தல் என்பது துவளுதற் பொருளைக் குறிக்கும். துவளும் பொருள் நீளும். தொய்யவிடுதல் = கயிறு போன்ற நீண்ட பொருளைத் தளரவிடுதல்] ஒரு குழல் போல இங்கே மாவு தொய்வதால் இது தொய்ங்குழல்>தெய்ங்குழல்>தேய்ங்குழல்>தேங்குழல் என்றும், தீர்ங்குழல்>தீங்குழல்>தேங்குழல் என்றும் நடந்திருக்கலாம். எது என்று உறுதி சொல்ல மேலும் தரவுகள் வேண்டும்.

அடுத்தது சேவை. இங்கும் நீட்சிப் பொருளே உண்டு. சேய்மை என்ற சொல்லுக்கு நீளம் என்னும் பொருளை(யாழ்ப்பாண அகராதி காட்டும். சேய்வு>சேவு>சேவை = நீண்டது. காரச்சேவு என்ற பயன்பாட்டையும் இங்கு நோக்கலாம். சந்தகம் என்ற சொல் கொங்கு வட்டாரத்தில் புழங்கும் சொல். [சந்தவம் என்பது திருச்சி வட்டாரத்தில் புழங்கும் சொல்.] நொளுநொளுத்தல் எப்படி நீளம் என்ற சொல்லை உருவாக்கியதோ, அதே போலச் சொளுசொளுத்தல் என்பது இன்னொரு வகை நீளச் சொல்லை உருவாக்கும். சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள். சோடி, ஜோடியானது போல் தான் இது. மழையால் தரை கூழ்போற் குழைந்து, சேறாதலைச் சொளுசொளுத்தல் என்று தென்பாண்டி நாட்டிலும், யாழ்ப்ப்பாணத்திலும் சொல்லுவார்கள். சோறு குழைவதும் கூடச் சொளுசொளுத்தல் என்று சொல்லப் பெறும். ஒல்லியாகிப் போனவன் “சொள்ளைப் பயல்” என்று சொல்லப்படுவான். [மெலிந்தது நீளும் என்பதைக் கவனத்திற் கொள்க.] சொள்ந்தது சந்தது என்று எளிதிற் திரியும். பின் நீண்டது என்ற பொருள் கொள்ளும். சந்தகம், சந்தவம் = இடியப்பம். சந்தகை = இடியப்பக் குழல், சந்தகைப் பலகை.

அடுத்தது noodle = "narrow strip of dried dough," 1779, from Ger. Nudel, of unknown origin. W.Flem. noedel and Fr. nouille are Ger. loan-words. The older noun meaning "simpleton, stupid person" (1753) probably is an unrelated word, as is the slang word for "head" (attested from 1914). என்னால் நீட்டல், நீடல் என்ற வினைச்சொல்லை எண்னாது இருக்க முடியவில்லை. யாராவது ஒருவர் இத்தாலிக்குப் போய் எப்படி noodle பெயரோடு வந்து சேர்ந்தது என்று ஆய்ந்து பார்க்கட்டும்.

விக்கிப் பீடியாவில் பார்த்த செய்தியை முழுமை கருதி இங்கே வெட்டி ஓடுகிறேன்.

“Rice noodles are noodles that are made from rice. Their principal ingredients are rice flour and water. However, sometimes other ingredients such as tapioca or corn starch are also added in order to improve the transparency or increase the gelatinous and chewy texture of the noodles.

Rice noodles are most commonly used in the cuisines of East and Southeast Asia, and are available fresh, frozen, or dried, in various shapes and thicknesses. In Tamil Nadu and parts of Kerala, Sri Lanka, Singapore, Malaysia, Idiappam, a type of rice noodles. Idiappam is usually freshly made at home and tend to be far more tender with distinctive texture, as against the dried form of Chinese noodles. A variation of Idiappam, known as sevai in Tamil Nadu, is used as the base in savoury preparations; it is also called santhakai or sandhavai in the Coimbatore region of Tamil Nadu. A similar mode of preparation called savige is popular in Karnataka.

Shāhe fěn (沙河粉, also called hé fěn)
Chee cheong fun (豬腸粉)
Rice vermicelli (米粉, mǐ fěn; also called "rice sticks")
Guilin rice noodles (桂林米粉)
Silver needle noodles (银针粉)
Mixian (米线, from Yunnan Province)
Ba'nh canh
Ba'nh phở
Shavige (ಶಾವಿಗೆ)
Idiappam (இடியாப்பம்)
Sevai (சேவை|சேவை/சந்தகை/சேமியா)

Dishes using la mian are usually served in a beef or mutton-flavored soup, but sometimes stir-fried and served with a tomato-based sauce. Literally, 拉 (lā) means to pull or stretch, while 麵 (miàn) means noodle. The hand-making process involves taking a lump of dough and repeatedly stretching it to produce many strands of thin, long noodle.

China
Small restaurants serving Lanzhou-style la mian are very common in eastern Chinese cities. They tend to serve a variety of low cost meals, with a choice of la mian, 'dāo xīao mìan' (刀削麵, knife-sliced noodles) and perhaps Xi'an-style 'paomo' (泡饃, steamed bread). Noodles may be served with beef or mutton, either in soup or stir-fried. Many of these la mian restaurants are owned by Hui ethnic families from Gansu, Qinghai and Xinjiang[citation needed], (in Xinjiang they are known as "laghman" in Uyghur), and serve only halal food (thus no pork dishes).

Another typical variety of la mian is Shandong lamian (山东拉面), from the eastern province of Shandong.

Japan
La mian was introduced in Japan (Chinatowns of Kobe or Yokohama) during the Meiji era. Ramen is the Japanese pronunciation of the term; however, ramen is prepared very differently from la mian.

Korea
The Korean term ramyeon (라면) is derived from la mian.

Central Asia
In Central Asia the dish has thicker noodles and is significantly spicier, and is known as laghman. It is most popular in Kyrgyzstan, where it is considered the national dish. It is also popular in Northern Afghanistan, where chick peas are added to it and in the Chitral and Gilgit regions of Pakistan where it is known as Kalli or Dau Dau.

In Chinese, the most commonly used names are:

fěn sī (粉絲): with fěn meaning "powder" and sī meaning "thread"
dōng fěn (冬粉): with the literal meaning of "winter powder"
They are also marketed under the name saifun, the Cantonese pronunciation of the Mandarin xì fěn (細粉; literally "slender powder"), though the name fan2 si1 (粉絲) is the term most often used in Cantonese.

Production
In China, the primary site of production of cellophane noodles is the town of Zhangxing, in the city of Zhaoyuan (招远市), which is administered by the prefecture-level city of Yantai, in the eastern province of Shandong. However, historically, the noodles were shipped through the port of Longkou (which is also under the administration of Yantai), and thus the noodles are known and marketed as Longkou fensi (simplified: 龙口粉丝; traditional: 龍口粉絲).[1]

Use

Cellophane noodles have a clear see-through color when cooked. It is generally much longer than rice vermicelli.
Ants climbing a tree (蚂蚁上树)
Japchae (잡채)In China, cellophane noodles are usually made of mung bean starch and are a popular ingredient used in stir fries, soups, and particularly hot pots. They can also be used as an ingredient in fillings for a variety of Chinese jiaozi (dumplings) and bing (flatbreads), especially in vegetarian versions of these dishes. Thicker cellophane noodles are also commonly used to imitate the appearance and texture of shark's fin in vegetarian soups. Thicker varieties, most popular in China's northeast, are used in stir fries as well as cold salad-like dishes. A popular soup using the ingredient is fried tofu with thin noodles (油豆腐线粉汤; pinyin: yóu dòu fu-xiàn fěn tāng). A popular Sichuan dish called ants climbing a tree (蚂蚁上树; má yǐ shàng shù) consists of stewed cellophane noodles with a spicy ground pork meat sauce.

-----------------------------------------------

கடன் வாங்கிய உண்டியெனில் சீனப்பெயர் நம்மூரில் ஏற்பட்டிருக்குமே! நீட்சிப் பொருளில் தேங்குழல், சேவை, சந்தகம் ஏற்பட்டிருக்காதே? அதே போல “இடியப்பம்” என்ற மாவைக் குறித்த சொல்லும் ஏற்பட்டிருக்காதே?

எனக்குப் பிடித்த இடியப்பம் பற்றி இங்கு எழுதியது மனநிறைவாய் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, July 30, 2009

இடியப்பம் - 2

முன்னே இடியப்பம் - 1 ல் நான் எழுதியதற்கு, இன்னொரு பார்வையாய், நண்பர் மணிவண்ணன் ஒரு மடலைத் தமிழ் உலகிற்கும், தமிழ் மன்றத்திற்கும் அனுப்பி வைத்தார். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

------------------------------------------------------------------
இடியப்பம் சீன இறக்குமதியோ என்ற ஐயம் எனக்கு உண்டு. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் என்ற சீன திருத்தலப் பயணி இந்தியாவுக்கு வந்தபோது சீனர்களைப் போல் அவித்து உண்பதற்கான தின்பண்டங்களோ அல்லது பாத்திரங்களோ இந்தியாவெங்குமே அவர் காணவில்லை என்று குறிப்பிட்டதாகப் படித்திருக்கிறேன். இடியப்பம், பிட்டு, இட்டலி, என்ற அனைத்துமே அவிக்கப் படாமல் வறுத்துச் சுட்ட பண்டங்களாய் இருந்திருக்கக் கூடும் அல்லது அவை இல்லாமலே இருந்திருக்கக்கூடும்.

இடியப்பம் பிழியும் கருவியே சீனாவிலிருந்துதான் உலகெங்கும் பரவியிருப்பதாக ஒரு கருத்து உண்டு. இத்தாலியர்களின் பாஸ்தா சீனாவிலிருந்து இறக்குமதியானது என்று மார்க்கோ போலோ குறிப்பிட்டதாக ஓர் அணியினரும், இல்லை இல்லை ஏற்கனவே ஏழாம் நூற்றாண்டில் அரபியர்கள் பாஸ்தாவை ரோமாபுரிக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்று இன்னோர் அணியும் வாதிடுவதாக விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. எனினும், திட்டவட்டமாக சேமியா போன்ற ஒரு பண்டம் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் உண்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதைப் போலத் திட்டவட்டமாகத் தமிழகத்தில் இடியப்பம் செய்ததற்கு ஆதாரம் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இட்டலி, பிட்டு, இடியப்பம் செய்யக்கூடிய கருவிகள், பாத்திரங்கள் பழங்காலத்தில் இருந்திருந்தால் அகழ்வாராய்ச்சியனர் கண்டுபிடித்திருப்பார்கள் இல்லையா?

மிளகுத்தண்ணி சூப்பு என்பது ரசம்தான். ஆனால் அது பண்டைத்தமிழர்களுக்குத் தெரிந்த ஒன்றாக இருக்கலாம். சாம்பார் மராத்தியர்களின், குறிப்பாக தஞ்சை மராத்திய மன்னர்களின் நன்கொடை என்பார்கள்.

கபாப் போன்ற உணவும், புலவு அல்லது பிரியாணி போன்ற ஓர் உணவும் சங்கப் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருப்பதாக நினைவு. அன்றைய புலவு இன்றைய பிரியாணி போலத் தக்காளியும், காரட்டும், உருளைக் கிழங்கும், மிளகாயும் கலந்தவை அல்ல. ஏனென்றால் இந்த நாலு காய்களுமே போர்த்துகீசியரால் இந்தியாவுக்குத் தென்னமெரிகாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை. அதிலும், மிளகாய் இறக்குமதி போர்த்துக்கீசியரின் சதி. ஒவ்வொரு மிளகும் ஒரு குண்டுமணித் தங்கத்தின் விலைக்கு ஐரோப்பாவில் விற்றுப் பணம் செய்து கொண்டிருந்த வெனிசிய வணிகர்களும் போர்த்துக்கீசியரும் தங்களுக்குத் தேவையான அளவுக்கு, மலிவு விலையில் இந்தியாவில் முதலில் கொள்முதல் செய்ய முடியாமல் போனதற்குக்கு காரணம் காரப் பைத்தியங்களான இந்தியர்கள் தாங்களே மிளகைப் பெருமளவில் உண்டதுதான்.

தென்னமெரிக்க மிளகாய் நஞ்சா உணவா என்று தெரியாமல் இருந்த காலத்திலேயே அதன் கார குணம் இந்தியர்களுக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்த போர்த்துக்கீசியர் தந்திரமாக மிளகாயை விற்றுப் பண்ணிய பணத்திலேயே மலிவு விலையில் கிடைத்த மிளகை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவில் விற்றுப் பெரும்பொருளை ஈட்டினர்.

தென்னகத்தின் மிளகுப் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளை விக்கிப்பீடியாவின் (http://en.wikipedia.org/wiki/Black_pepper) கட்டுரையில் காணலாம்.

தமிழர்கள் முத்து, மிளகு, மயிற்பீலி இவற்றைப் பெருமளவில் ஏற்றுமதி செய்து ஈட்டிய பெரும்பொன்னைச் சும்மா வீட்டில் வைத்து அழகு பார்க்கவில்லை.

'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி' (புறம் 56)

நம் பழந்தமிழர் குடி பெருங்குடி. குடம் குடமாகக் குடித்த குடி. அன்றைக்கும் இறக்குமதிச் சரக்கு மேல் நமக்கு ஒரு தனிப் பிடிப்பு இருந்திருக்கிறது. இன்றும் டாஸ்மாக் கடையின் முன் விடிகாலையிலிருந்து தவமிருக்கும் தமிழ்க்குடிமக்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப் பட்ட குடிமகன் ஒருவர் நான் சென்று கொண்டிருந்த மகிழுந்தின் முன் ஓடி வந்து முகப்புக் கண்ணாடி மீது மோதி முட்டி எதிர்ப்பக்கம் உருண்டு விழுந்து திடுக்கிடச் செய்ததும் உண்டு. பின்னர் ஒன்றுமே நடக்காதது போல் தள்ளாடி எழுந்து ஓடியதைப் பார்த்துத் தமிழ்க்குடியின் திறனை எண்ணி அயர்ந்ததும் உண்டு.

அன்புடன்,

கணிஞன் மணிவண்ணன்
--------------------------

மேலே உள்ள மணியின் மடலுக்கு மறுமொழியாய் மீண்டும் சில கருத்துக்களை நான் சொன்னது இங்கு இரண்டாம் பகுதியாய் வருகிறது.

“இடியாப்பம் தமிழராய்க் கண்ட உணவா? அது சீனத்தில் இருந்து வந்த இறக்குமதியாய் இருக்கலாமே?” - என்ற கேள்விகளை எழுப்பி, யுவான் சுவாங் பயணத்தைக் கொண்டுவந்து, காட்டியிருக்கிறீர்கள். "யுவான் சுவாங் இடியப்பத்தைக் கொண்டு வந்தாரா?” என்று யாரும் அறுதியிட்டு இதுவரை சொன்னதில்லை. அதே பொழுது 4000 ஆண்டுகளுக்கு முன் சீனத்தில் இருந்த ஒருவிதமான சேவை (noodles) சற்றும் எதிர்பாராத வகையில் விந்தையாக வெற்றிடம் அமைந்த ஒரு ஏனத்தில் இருந்து தொல்லாய்வில் கண்டுபிடிக்கப் பட்டது உண்மைதான்.

பி. பி.சி தளத்தில் இருந்து தேடிக் கிடைத்ததை கீழே கொடுத்துள்ளேன்.

----------------------------
Oldest noodles unearthed in China

Late Neolithic noodles: They may settle the origin debate

The remains of the world's oldest noodles have been unearthed in China. The 50cm-long, yellow strands were found in a pot that had probably been buried during a catastrophic flood. Radiocarbon dating of the material taken from the Lajia archaeological site on the Yellow River indicates the food was about 4,000 years old.

Scientists tell the journal Nature that the noodles were made using grains from millet grass - unlike modern noodles, which are made with wheat flour. The discovery goes a long way to settling the old argument over who first created the string-like food. Professor Houyuan Lu said: "Prior to the discovery of noodles at Lajia, the earliest written record of noodles is traced to a book written during the East Han Dynasty sometime between AD 25 and 220, although it remained a subject of debate whether the Chinese, the Italians, or the Arabs invented it first.

Lajia is a very interesting site; in a way, it is the Pompeii of China. "Our discovery indicates that noodles were first produced in China," the researcher from the Institute of Geology and Geophysics, Chinese Academy of Sciences, Beijing, explained to BBC News. The professor's team tells Nature that the ancient settlement at Lajia was hit by a sudden catastrophe.

Among the remains are skeletons thrown into various abnormal postures, suggesting the inhabitants may have been trying to flee the disaster that was enveloping them. "Based on the geological and archaeological evidence, there was a catastrophic earthquake and immediately following the quake, the site was subject to flooding by the river," explained co-author Professor Kam-biu Liu, from Louisiana State University, US. It was in amongst the human wreckage that scientists found an upturned earthenware bowl filled with brownish-yellow, fine clay. When they lifted the inverted container, the noodles were found sitting proud on the cone of sediment left behind. "It was this unique combination of factors that created a vacuum or empty space between the top of the sediment cone and the bottom of this bowl that allowed the noodles to be preserved," Professor Kam-biu Liu said.

The noodles resemble the La-Mian noodle, the team says; a traditional Chinese noodle that is made by repeatedly pulling and stretching the dough by hand. There is evidence that a sudden calamity overtook the Lajia site

To identify the plants from which the noodles were made, the team looked at the shape and patterning of starch grains and so-called seed-husk phytoliths in the bowl. These were compared with modern crops. The analysis pointed to the use of foxtail millet (Setaria italica) and broomcorn millet (Panicum miliaceum) "Our data demonstrate that noodles were probably initially made from species of domesticated grasses native to China. This is in sharp contrast to modern Chinese noodles or Italian pasta which are mostly made of wheat today," Professor Houyuan Lu said.
-----------------------------

மேலே உள்ள செய்தி ஒருபக்கம். அது போன்ற கண்டுபிடிப்பு நம்மிடம் இல்லைதான். அதேபொழுது, மாவுப் பொருள்களால் ஆன தமிழர் சிற்றுண்டிகள் பற்றிய வேறு செய்திகளைச்

சுட்டிக் காட்டினால் மேலும் சில விளக்கங்கள் கிடைக்கும் என்பதால் எழுதுகிறேன். மாவுப் பொருள்களை வைத்துச் சிற்றுண்டி செய்வது தமிழர்க்கும் பன்னெடுங்காலமாய் இருக்கும் பழக்கம் தான். காட்டுகளைப் பார்ப்போம்.

1. கேப்பைக் கூழ் [புன்செய் நிலங்கள் பெருகிய இடங்களில் இன்றும் உள்ள உணவு இது. சங்க இலக்கியத்திலும் சொல்லப்படுவது. கேப்பைப் பிட்டும், கேப்பைக் கொழுக்கட்டையும் கூட மாவுப் பொருளை வைத்துச் செய்வதே. மாவுப் பொருள் அன்றிக் கூழும், பிட்டும், கொழுக்கட்டையும், செய்ய முடியாது.]

2. இட்டவிக் கலவை: [இது ஒரு களிமிதவை. (என்ன அருமையான சொல் தெரியுமா? suspension க்கு நிகரானது. கொஞ்சம் ஆழ்ந்த ஓர்தலுக்கு அப்புறமே, இந்தச் சொல் நமக்குப் புலப்படுகிறது. தமிழில் கலைச்சொல்லுக்கு எவ்வளவு தேடுகிறோம்? “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” - அகநானூறு 86.1.) முதல்நாள் ஆட்டிய மாவை நொதிக்க வைத்து அடுத்தநாள் இட்டவி அவிக்கிறோம். "இந்த இட்டவி தமிழருடையது அல்ல, பேரரசுச் சோழர் காலத்தில் இந்தொனேசியாவில் இருந்து கடன்பெற்று வந்த rice cake தான் இது” என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். என்னைப் போன்றவர்க்கு அந்தக் கூற்றை ஏற்கப் பெருந்தயக்கம் உண்டு. இது போன்ற களிமிதவையைச் செய்வதொன்றும் பெரிய நுட்பம் அல்லவே? ”அதை இன்னொருவரிடம் இருந்துதான் கற்கவேண்டும்” என்பது எனக்குப் புரிபடுவதில்லை. மேலும் இட்டவிக் கலவையில் உள்ள அரிசி/பருப்பு விகிதம் ஒன்றும் பெரிய சூள்த்திரம் அல்ல. ”அதைத் தானாய் அறியமுடியாது” என்று சொல்வது வெறும் ஊகமாகவே எனக்குப் படுகிறது. அதோடு, நொதிக்க வைக்கும் நுட்பம் என்பது “செய்துபார்த்துச் செய்துபார்த்து”, வெறுமே, குறித்தல்-தவறுதல் முறையில் (hit and miss) கண்டுபிடிக்கக் கூடிய நுட்பம்தான். ”இன்னொருவர் சொல்லிக் கொடுத்தால் தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும்” என்பதும் எனக்கு வியப்பாய் இருக்கிறது.

இட்டவி செய்வதில் முகன்மையான படிமுறைகள் (processing steps) மூன்றாகும்.

2.1. நாலு பங்கு புழுங்கலரிசியும் ஒரு பங்கு உளுந்தும் சேர்ந்த கலவையைச் சரியான மிதவைப் பாகுமைக்குத் (suspension viscosity) தக்க ஒத்திசைவாக ஆட்டிக் கொள்ளுதல். [இதில் முகன்மையானது கலவையுள் இருக்கும் துகள்களின் குருணையளவு (grain size). அது கூடியிருந்தாலும் சரியான நொதிப்பு (fermentation) நடக்காது, நொய்ந்து போயிருந்தாலும், நொதிப்பு கூடிப்போய், அடுத்தநாள் மிகுந்த கரி-இரு-அஃகுதைக் குமிழிகள் (bubbles of carbon-di-oxide) ஏற்பட்டு மாவுக்கலவை பொங்கிப் போகும். [இந்த மாவுக் கலவையை வைத்து இட்ட இட்டவியும் தட்டையாகிப் போகும்.] எந்தப் புழுங்கலரிசி, எந்த குருணையளவுக்கு அரைபட வேண்டும் என்பது கைப்பக்குவத்திலேயே தெரிகிறது. அதோடு களிமிதவையை தெளிய விடாமலும் வைக்கவேண்டும். இதற்காக, அவ்வப்பொழுது ஆட்டிய மாவைக் கலக்கிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இல்லையெனில் அரிசிக் குருணை கீழும், பருப்புக் குருணை மேலும், நீர் அதற்கு மேலுமாய்த் தக்கி (தக்கல் = settling) மிதவை பிரிந்து போகும்.

2.2. நொதிப்பு நடப்பது இருவேறு வகை உயிரிகளால் என்று கூறுகிறார்கள் முதல்வகை: காற்றில் மிதந்து கிடக்கும் (அல்லது நம் உள்ளங்கையில் இருக்கும், Saccharomyces cerevisiae போன்றதொரு) கொதியம் (yeast/giest - a microbe which makes the batter boil. மறக்காதீர்கள் நொதியம் = enzyme கொதியம் = gist, yeast ). இரண்டாவது வகை: Lactobacillus போன்றதொரு பட்டுயிரி (bacterium). உயிர்வேதியற்காரர்கள் இந்த இரண்டு வகை நொதிப்பிற்குள் எது முகன்மையானது என்று முடிந்த முடிவிற்கு வரவில்லை.

2.3. அடுத்தது இட்டவித் தட்டில் ஆட்டிய மாவை இட்டு ஆவியில் வேகவைப்பது. .

இந்த மூன்று படிமுறைகளிலும், இந்தொனேசிய முறை பெரிதும் மாறுபட்டதாகவே நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இருந்தாலும் நம் இட்டவி இந்தோனேசியாவிற்குக் கடன்பட்டதாகவே சிலர் சொல்லுகிறார்கள். இந்திய ”நாணும் (naan), லெபனான் பருத்தும் (bread) கிட்டத்தட்ட ஒன்றே போல் இருப்பதால் ஒன்று இன்னொன்றில் இருந்து கடன்வாங்கியது" என்று கூறமுடியுமா? இவையெல்லாம் தற்செயலாய் நடந்த ஒக்குமைகளாய் இருக்கக் கூடாதா? [இட்டவிக் கலவையும் தோயைக் (தோசைக்) கலவையும் கூடக் கிட்டத்தட்ட ஒன்றுதானே?]

3. கும்மாயம் [பச்சரிசி 2 பங்கு, உளுத்தம் பருப்பு 1 பங்கு, பயற்றம் பருப்பு 1 பங்கு கொண்ட மாக் கலவையோடு வெல்லப் பாகும் நெய்யும் சேர்த்து குழைய வேகவைத்து செய்வது. பச்சரிசிக்குப் பகரியாய் கேப்பை மாவையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பயற்றம் பருப்பைத் தவிர்க்க முடியாது. கும்மாயம் என்ற உணவு மணிமேகலை காலத்திற் கூட இருந்தது. மணிமேகலை சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதை வரி 185. கும்மாயத்தை வைத்து சமண - புத்த சமய உரையாடல்களை நீலகேசி காட்டும். மிகுந்த சுவையான வாதம் அது. இன்னொரு நாள் பார்ப்போம். கும்மாய மிதவை இட்டவி மிதவையைக் காட்டிலும் பாகுமை (viscosity) கூடியது. அது கிட்டத்தட்ட அரைத் திண்மமாகவே (semisolid) காட்சியளிக்கும்.]

4. பிட்டு [பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியாதார் யார்? பிட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒரேவித அரிசிமாவைப் பயன்படுத்துவர். மாதத்தில் 4,5 நாட்களாவது பிட்டு இல்லாத காலையுணவு தென்பாண்டி, கேரளம், ஈழம் ஆகியவற்றில் உண்டோ? ”பிட்டு செய்தவனுக்கு இடியப்பம் செய்யத் தெரியாது, அவன் கடன்பெற்றான்” என்றால், ஏரணத்தில் எங்கோ இடிக்கிறது.]

5. தேங்குழல், முறுக்கு [இதற்கான பக்குவம் 4 பங்கு பச்சரிசி, 1 பங்கு :உளுத்தம் பருப்பு மாவு எடுத்துக் கொண்டு நீரோடு பிசைந்து, அதை தேங்குழல்/முறுக்கு உரலில் வைத்து அழுத்தி இழையாக்கிப் பின் சூடாக்கிய எண்ணையில் சுடவைத்துப் பொன்போலச் சிவந்தவுடன் எடுத்து வைப்பதுதான். தேங்குழல், முறுக்கு உரலில் இருந்து வெளிவந்த இழையைக் கையால் திருக்கி, முறுக்கு ஏற்றித் தட்டையான பலகையில் வைத்துச் சுருளாக்கிச் செய்வது. இதற்குப் பொறுமையும் நேர்த்தியும் வேண்டும். தேங்குழல், முறுக்கு போன்றவற்றில் எண்ணெய் ஏறாமல் செய்வது ஒரு கலை. சீடையில் உளுத்தம் பருப்பிற்கு மாறாய் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்து கொள்ளுவார்கள். இடியப்பம்/ தேங்குழல்/ முறுக்கு/ சீடை எல்லாமே மாவைக் கலந்து பிசைந்து கொள்ளுவதும், பின் உரலில் போட்டு இழையிழையாய்ப் பிழிவதும், என்று பார்த்தால், ஒரேவகை நுட்பம் தான் புலப்படுகிறது. இவையத்தனையும் கடன் பெற்றவையா?]

இத்தனை மாவகைப் பொருள்களும் வெறுமே 6/7 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் அதாவது பல்லவர் காலத்திற்கு (யுவான் சுவாங் காலம்) அப்புறம் தான் நமக்குத் தெரிந்தன என்பது ஏற்றுக் கொள்ள இயலாத வகையில் உள்ளது. இவற்றின் காலம் சங்க காலத்திலும் முற்பட்டும் இருக்கலாமே?. இயல் பொருள் (raw material) மாவாகிப் பின் அதை உரலில் போட்டு இழையாக்கிப் பின் எண்ணெயில் பொரித்தோ, ஆவியால் சூடாக்கியோ உண்டி செய்வது, கொஞ்சங் கொஞ்சமாய் நம்மூரிலேயே குறித்தல் - தவறுதல் முறையில் முறையில் உருவாக்கக் கூடியதுதானே? ”மீறி சீனத்திற்கும், நமக்கும் சேவையில் ஒருப்பாடு இருப்பதும், இட்டவியில் நமக்கும் இந்தோனேசியாவுக்கும் ஒருப்பாடு இருப்பதும் ஒரு தன்னேர்ச்சி (accident)” என்றே எனக்குத் தோன்றுகிறது. இரண்டுமே மாவால் செய்யும் உண்டிகள் தான். ஒன்றில் இந்தொனேசியவிற்கும், இன்னொன்றில் சீனத்திற்கும் கடன் பட்டோம் என்பது முரணாய்த் தெரிகிறது. இரண்டும், நம்மூரில் அடுக்களை அறிவியலில் எழுந்த நுட்பங்களாய் ஏன் இருக்கக் கூடாது? அதே பொழுது, சரியான தரவுகள் கிடைத்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ள நான் அணியமாய் இருக்கிறேன்.

இனி மா என்ற சொல்லைப் பற்றியும், அதே பொருள் வரும் ”அருப்பம், பிட்டம், நுவணை, பிண்டி, இடி” போன்ற சொற்களின் பிறப்பையும், சேவை, noodle ஆகிய சொற்களின் பிறப்பையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 29, 2009

இடியப்பம் - 1

இடியப்பம் பற்றிய ஓர் உரையாடல் மின்தமிழ், தமிழுலகம், தமிழ்மன்றம் ஆகிய மடற்குழுக்களில் அண்மையில் எழுந்தது. இடியப்பம் என்ற சொல் எப்படி எழுந்தது என்றும் அங்கு சொல்லியிருந்தேன்.

இடியப்பத்திற்கு மாவு செய்வதை மாவு இடித்தல் என்றே தென்பாண்டி நாட்டில் சொல்லுவார்கள். பெரும்பாலான வீடுகளில் இடிப்பதற்கு உதவியாய் உரலும், உலக்கையும் இருக்கும். உரல் என்பது குந்தாணி என்றும் சொல்லப் பெறும். குந்தாழி>குந்தாணி. குந்தம் = உலக்கை.

புழுங்கல் அரிசியை நீரில் போட்டு அலசிப் பின் நீரை ஒரு வேட்டி கொண்டு வடிகட்டி, சற்று ஈரப் பதத்தோடு இருக்கும் அரிசியை உரலில் போட்டு உலக்கை கொண்டு இடித்து (உலக்கைக்கே கூட இடிமரம் என்ற சொல் உண்டு.), பின் அதைச் சலித்து குருணையைப் போக்கி (குருணையை மீண்டும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளலாம்.) மாவை 3 நாட்கள் நிழலில் பரப்பி உலர வைத்துப் பின் அரைமணி நேரம் வெய்யிலில் போட்டு உலர வைக்க வேண்டும். பின்பு அதை இடியப்பம் செய்யப் பயன்படுத்தலாம். நாலைந்து மாதங்கள் மாவைச் சேமித்து வைத்திருக்க நினைத்தால் வெய்யிலில் உலர வைப்பதற்குப் பகரியாய் ஒரு வாணலியில் போட்டு இளஞ்சூட்டில் வறுத்தெடுக்கலாம்.

இடிதல் = முனை முறிதல், தன்வினைச் சொல், to be broken as a garain of rice.
= முறிதல் (பிங்) to break in two, part in two (செ.அக.)

இல்>இள்>இடு>இடி = குத்துதல், துளைப்படல், உடைபடுதல், துன்புறுதல்

இடித்தல் = தூளாக்குதல் பிறவினைச் சொல், to pound in a mortar; to bray with a pestle; to reduce flour. "பொற்சுண்ணம் இடித்து நாமே” (திருவாசகம் 9,1)

ம:இடிக்குக; க:இடி,இடகு, டிகா,டீகு, துட: இட், து: எடபுனி, எடுபுனி, எட்புனி; தெ: டீகொனு; கொலா:இட்

இடி. பெயர்ச்சொல் மா (பிங்); flour, esp. of rice or millet. சுண்ணம் (பிங்), powder, dust, anything pulverised

ம: இடி; கோத: இரி; துட: ஈரி

இடிசல் = நொறுங்கின தவசம்.

இடிசாந்து = இடித்துத் துவைத்த சுண்ணாம்பு

இடிசிலைச்சாறு = இலையை இடித்துப் பிழிந்த சாறு.

இடித்தடு = பிட்டு. loose confectionary made of flour "நரைத்தலை முதியோள் இடித்தடு கூலி கொண்டு” கல்லாடம் 46. இடித்து + அடு = இடித்தடு

இடியப்பு = இடியும் அப்பும் சேர்ந்த கலவை. இடி = அரிசி மாவு. அப்பு = நீர். (அப்பு என்பது தமிழே என்று சொல்லாய்வறிஞர் ப. அருளி தன் “யா” என்ற பொத்தகத்தில் நிறுவுவார்.)
இடியப்பில் மிகுந்த மாவும் இருக்கக் கூடாது. மிகுந்த நீரும் இருக்கக் கூடாது. மாவும் நீரும் சரியான கலவையாக வேண்டுவது, கைப்பக்குவத்திலேயே அமையும். அந்தக் கலவைதான் இடியப்பக் கட்டையைத் தாழியில் வைத்துப் பிழியும் போது சரியானபடி இழைகளாய்க் கொடுக்கும். எது கூடினாலும் இடியப்பம் நன்றாய் இருக்காது. தமிழ்நாட்டில் பொதுவாய் நெல்லை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் சரியான கலவைப் பக்குவம் தெரிந்திருக்கிறது. எனவே இங்குதான் இடியப்பம் நன்றாக இருக்கும்.

இடியப்பம் = இடியப்பை எடுத்து இடியப்பத் தாழியில் போட்டு கட்டை கொண்டு அழுத்தி இழைகளாய் இட்டவித் தட்டில் பிழிந்து பின் இட்டவி செய்வது போல் ஆவியில் இட்டு வேக வைக்க வேண்டும். முன்னே சொன்னது போல் கலவை சரியாக இருந்தால் தான் இழைகள் ஒடியாது நீண்டதாய் அமையும். இல்லையென்றால் தொட்டாலே பொடிப் பொடியாய் உதிர்ந்து போகும். அப்புறம் ஒருவகைப் புட்டாகிப் போகும்.

பேச்சுவழக்கில் இடியப்பம் என்னுஞ் சொல் இடியாப்பமாயும் மாறும்.

வேக வைத்த இடியாப்பத்தில் தேங்காய்ப்பால், சர்க்கரை போட்டு இனிப்பு இடியாப்பமும், அதற்கு மாறாய்ச் சற்று தயிரைப் போட்டுப் பிசைந்து புளிப்பேற்றி [பிசையும் போது இழைகள் உதிராமற் பார்த்துக் கொள்ளவேண்டும்.] பின் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு வறுத்தெடுத்ததை இடியாப்பத்தில் கலந்து உப்பு இடியாப்பமும் செய்வது உண்டு.

உப்பு இடியாப்பத்தோடு கூடவே தொட்டுக் கொள்ள வேறு சில நீர்மச் சேர்மங்கள் உண்டு [பச்சடி, வெங்காயக் கோசு, அவியல், கறிக் குழம்பு.... இன்ன பல.]

அன்புடன்,
இராம.கி.

Friday, July 10, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 8

முந்தையப் பகுதியில் காதம்/காவதம் என்ற அளவீட்டையொட்டிய தமிழிலக்கியச் சான்றுகளைப் பார்த்தோம். இனி, அருமையான சான்றாகக் கிடைத்த சோழன் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டொன்றைப் [Annual Report on Epigraphy 442/1922] பார்ப்போம். இந்தக் கல்வெட்டின் ஊற்றுப் படியை (original copy) நான் பார்க்கவில்லை. ஆனால், ”கல்வெட்டுக்கள் காட்டும் கலைச்சொற்கள்” என்ற பொத்தகத்தின் 198 ஆம் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பார்த்தேன். (டாக்டர் ஆர்.கே.அழகேசன், தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாம் தளம், இராயப்பேட்டைநெடுஞ்சாலை, சென்னை 600014). செங்கற்பட்டு மாவட்டத்துக் ’கயாற்’ என்னும் ஊரில் இந்தக் கல்வெட்டுக் கிடைத்திருக்கிறது. [இந்த ஊர்ப்பெயர் எனக்கு விளங்கவில்லை. அதோடு, சென்னைக்கருகில் இவ்வூர் எங்கிருக்கிறது என்பதும் தெரியவில்லை.] இந்தக் கல்வெட்டில். ”நந்தாவிளக்கு எரிப்பதற்குரிய தருமம் தடைப்படின் பாவஞ் சேரும்” என்பதைக் கூறுமிடத்தில்,

”இத் தர்மத்துக்கு பிழைக்க நிற்பார் கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதத்திலும் பாவம் செய்தான் செய்த பாவம் கொள்வதாக ஒட்டிக் குடுத்தோம் ஸபையோம்”

என்றதொரு வாசகம் வருகிறது. கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதம் என்னும் பொழுது, ”வாரணாசிக்குச் சென்று கங்கையாடும்” பழக்கம் இங்கு உணர்த்தப் படுகிறது. கங்கைக்கும் குமரிக்கும் இடைத்தொலைவு 700 காதம் எனில், தென்புல வாய்ப்பாட்டின் படி, அது 700*6.7 = 4690 கி.மீ. என்றாகிறது. இது உறுதியாய் அதிகம். மாறாக, இத்தொலைவு வட, தென் புலங்களில் வேறாகி, முன்னே சொன்ன ”கோல் அளவு” குழப்பத்தால், கணக்கீடு மாறியிருக்குமோ என்று தோற்றுகிறது. அதாவது நம்மூரில் பெருங்கோல் (=தண்டம்) என்பது 11 அடி. கோல் (=தண்டு, ஓராள் உயரம்) என்பது 5 1./2 அடி. ஆனால் வடக்கே, 5 1/2 அடிக் கோலே குரோசத்திற்கு அடிப்படையாய் இருந்து, கணக்கிட்டிருக்கிறார்கள். [அர்த்த சாற்றம் சொல்லும் அளவும் 5 1/2 அடிக்கே பொருந்துகிறது.] வடபுல வாய்ப்பாட்டை ஒட்டி அளந்தால், ஒரு காதம் (அல்லது குரோசம்) என்பது 3.35 கி.மீ ஆக அமைகிறது. அப்பொழுது 700 காதம் என்பது 700*3.35 = 2345 கி.மீ என்றாகும்.

இன்றைக்குக் குமரியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7ஐப் பிடித்து வாரணசி போகும் தொலைவு [235+66+78.09+90.01+1937.83=] 2397.33 கி.மீ ஆகிறது. பெரும்பாலும் பழைய பெருவழித் தடங்களை ஒட்டியே இற்றைப் பெருவழிகளும் அமைவதால், கிட்டத்தட்ட இதே பாதை ஆதித்ய கரிகாலன் காலத்திலும் இருந்திருக்கக் கூடும் என்றால், இந்த ஒக்குமை [2345 கி,.மீ - பழைய மதிப்பீடு, 2397 கி.மீ - இன்றையத் தொலைவு] நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது. [இதில் உள்ள ஒரே இக்கு, (risk) கோல் என்ற அளவீட்டின் வரையறையை மாற்றுவதே. வட, தென் புலங்களுக்கு இடையிருந்த கோல் குழப்பம் பற்றி முன்னாலேயே பேசியிருக்கிறோம். இந்தச் சான்றே, வடபுல வாய்ப்பாடு பேரரசுச் சோழர் காலத்தில் தென்புலத்தில் பயன்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.]

இதே 700 காவதத் தொலைவு இன்னொரு முகன்மையான குறிப்பில் (சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், வேனிற்காதை 1-2 வரிகள்), கடற்கோள்களுக்கு முந்திய பழம் பாண்டிநாடு பற்றிய பலரும் ஏற்கத் தயங்கும் அடியார்க்கு நல்லாரின் உரையில், வருகிறது. [இந்தக் கதையை நம்பாமல் தூக்கியெறிந்த தமிழறிஞர் அதிகம். ஆனாலும் இக்கதை மீண்டும் மீண்டும் இன்னொரு பகுதியினரால் அலசப் படுகிறது. கடலியல், தொல்லியல், பற்றிய செய்திகளும், புரிதல்களும் எழ, எழ, இக்கதையும் மீண்டு எழும்.]

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் கொடுத்த உரை கீழ்க்கண்டவாறு அமையும். [பழைய உரைநடை, படிப்பவர் கொஞ்சம் பொறுத்துப் போங்கள்]

-------------------
”நெடியோன் குன்றம் = வேங்கட மலை, தொடியோள் = பெண்பாற் பெயரால் குமரி என்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையெனின், முதலூழி யிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்மதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான்.

அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவம் என்றாரென்றுணர்க.

இஃது என்னைப் பெறுமாறெனின், ’வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ (11:18-20) என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும். ....................”
------------------

சரி, இந்த நீளுரையை இன்றையக் கடலியல், தொல்லியல் அறிவைக் கொண்டு அலசுவது இயலாத செயலாகும். ஆனால், ”பழம் பாண்டிநாட்டில் வடக்கே இருந்த குமரியாற்றிற்கும், அதன் தெற்கெல்லைக்குச் சற்று வடக்கிருந்த பஃறுளியாற்றிற்கும் இடைத்தொலைவு 700 காவதம்” என்பதை நாம் இன்னொரு விதமாய் அணுகி ஓர்ந்து பார்க்கலாம்.

அதாவது சில சொற்களின் பொருட்பாடுகள் காலத்திற்குக் காலம் மாறுபடுவது நடந்திருக்கிறது. ஒரே பொருளை உணர்த்திய இருவேறு சொற்கள் நாளாவட்டத்தில் இரு பொருட்பாடுகளை உரைக்கலாம். இதே போல இருவேறு பொருட்பாடுகளை உரைத்த இரு சொற்கள் காலவோட்டத்தில் ஒரே பொருட்பாட்டை உணர்த்தலாம். கூவுதலும், காவுதலும், ஓசுதலும் ஒரே பொருட்பாட்டை வினைச்சொல்லின் வழி உணர்த்துவதால், கூப்பீடு, காவதம், யோசனை ஆகிய மூன்று பெயர்ச்சொற்களும் கூட மிக முற்பட்ட காலத்தில் ஒரே அளவீட்டைக் குறித்த வெவ்வேறு சொற்களாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது. அவற்றிற்கான வேறுபாடு ஒருவேளை பின்னால் நிலைத்ததோ, என்னவோ?.

மேலே குமரி - வாரணாசித் தொலைவைக் கணக்கிட்டபோது, [வடபுலக்] காதம், [தென்புலக்] காதம் ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்று புரிந்தது போல, அடியார்க்கு நல்லாரின் உரையில் வரும் 700 காவதவாற்றைப் புவியியல் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கையில், ”கூப்பீடு என்பது இன்னும் குறைவாய் 500 சிறுகோலுக்கு இணையாய் ஒருகாலத்தில் இருந்திருக்கலாமோ?” என்றும் எண்ணத் தோன்றுகிறது. இப்படி எண்ணினால், 700 காவதம் என்பது இன்னும் குறைச்சலாய் 1172.5 கி.மீ தொலைவுக்கு இணை என்று புரிபடும். தவிர, இத்தொலைவை இன்றையக் குமரிக்கு நேர்தெற்கு என்று கொள்ளவும் வேண்டியதில்லை. இது வடகிழக்கில் நீண்டு, கிழக்கில் திரும்பி, பின் தெற்கு நோக்கி வளைந்ததாகவும் கொள்ள முடியும். ஏனெனில், முதற் கடற்கோள் நடப்பதற்கு முன் இன்றைய இலங்கைத் தீவு தமிழ்நாட்டோடு நிலத்தால் தொடர்பு கொண்டே இருந்தது; அதோடு அந்தக் காலத்தில் பாற்கடல் / பாற்குடா (Palk bay) என்று இன்று சொல்லப்படும் கடற்பகுதி இருந்தது இல்லை. அதாவது, இன்றையக் கோடிக்கரை, தனுக்கோடி, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகியவற்றிற்கு இடையே கடல் கிடையாது. பஃறுளி என்ற ஆறும் இன்றைய இலங்கைத் தீவிற்குச் சற்று தெற்கே இருந்திருக்கலாம். தவிர குமரிக்குச் சற்று தெற்கே 250 கி.மீ அளவிற்கு நிலமும், இன்றைய இலங்கைக்குத் தெற்கில் 150 கி.மீ நீளத்திற்கு நிலமும் இருந்திருக்கின்றன என்பது பழைய கடல்மட்ட முகப்புக்களைப் (maps) பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய பழம் நிலக்கிறுவத்தில் (geography) பழங் குமரியாற்றங்கரையில் [அது இன்றையக் குமரி முனைக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.] இருந்து இலாட வடிவில் கடலை ஒட்டி வடகிழக்கிற் போய், பின்னால் சுற்றிக் கிழக்கில் வளைந்து, அப்புறம் இலங்கைக் கடற்கரையை ஒட்டியே தெற்கே போனால் பஃறுளியாற்றைத் தொடும் வகையில் 1172.5 கி.மீ தொலைவு அமையக் கூடலாம்.

ஒருகாலத்தில் தென்னிலங்கையில் இருந்த உரோகண அரசு மிகவும் நாள்பட்டது. அது தேவனாம்பிய தீசன் காலத்துக்கும் பழமையானது. அந்த அரசு தன்னைப் பாண்டிய அரசாகவே கருதிக் கொண்டது என்று மயிலையாரும் கே.கே.பிள்ளையும் சொல்லுவர். ஒருவேளை அந்த அரசு பழம் பாண்டிநாட்டின் எச்சமாய்க் கூட இருந்திருக்கலாம். பஃறுளி என்னும் ஆறு பழைய உரோகணத்திற்குத் தெற்கில் இருந்ததாய், ஓர்ந்தால், குமரிக்கும், பஃறுளிக்கும் இடைப்பட்ட தொலைவு நம் கண்முன் வேறு காட்சியைக் கொடுக்கும். நான் சொல்லுவது ஒரு கருதுகோள் தான். எண்ணிப் பார்க்கலாம்.

மேலே ”கூப்பீடு என்பதன் தொலைவு வெவ்வேறு காலங்களில் மாறுபட்டு இருந்திருக்குமோ?” என்று ஐயுறுவதற்கு, இன்னொரு போல்மமும் (model) நம்மைத் தூண்டுகிறது. காலத்தின் நீட்சியைக் குறிக்கும் “யுகம்” என்ற சொல், இந்தியத் துணைக்கண்டத்தில் காலத்திற்குக் காலம் பொருள் வேறுபாடு காட்டியிருக்கிறது. கி.மு. 1500 - 1200 அளவில், யுகம் என்று சொல் 5 ஆண்டுகளையே (சமவட்டம், பரிவட்டம், இடவட்டம், அணுவட்டம், உத வட்டம் என்று அந்த ஐந்தாண்டுகளுக்குப் பெயர் சொல்லுவார்கள்.) குறித்திருக்கிறது. பின்னால் முன்செலவத்தைக் (precession) கணக்கில் கொண்டு ஒக்க நாட்கள் (equinox) அல்லது முடங்கல் நாட்கள் (solstice) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மெதுவாய் நகரும் காலத்தை யுகம் என்ற சொல் குறித்திருக்கிறது. இந்த யுகம் கிட்டத்தட்ட 2160 ஆண்டுகள் ஆகும். இன்னும் சிலகாலம் கழித்து நான்கு யுகங்கள் என்று சொல்லும் வகையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வருமாப் போலக் கலியுகம் 432000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், த்ரேதாயுகம் 1296000 ஆண்டுகள், க்ருதயுகம் 1728000 ஆண்டுகள் என்றும் பகுத்திருக்கிறார்கள். ஆக யுகம் என்ற சொல்லுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருட்பாடுகள் இருந்திருக்கின்றன. இதே போலக் காதம்/காவதம் என்றசொல்லுக்கும் வெவ்வேறு பொருட்பாடுகள் வெவ்வேறு காலங்களில் இருந்திருக்கலாமே?

முதற்சங்க காலம்:

1 கூப்பீடு = 500 சிறு கோல்.

இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]

1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)

கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]

1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் இது பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் வடபுல வழக்கதிற்கு மாறியிருக்கலாம்).

இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும்.

இந்தப் பேரழிவு எப்பொழுது நடந்திருக்கலாம்? அடியார்க்கு நல்லார் சிலம்பையும், நக்கீரரின் இறையனார் பொருளுரையையும், இளம்பூரணரின் முகவுரையையும் பின்புலமாக்குகிறார். சிலம்பிற்கு முன் இந்தச் செய்தி எந்நூலில் பேசப்பட்டது என்று ஆணித்தரமாய்ச் சொல்ல முடியவில்லை. [இந்தச் செய்தியைப் பேசும் கலித்தொகையின் காலம் சிலம்பை ஒட்டியே சொல்லப் படுகிறது] எனவே குத்து மதிப்பாக நமக்குக் கிடைத்த ஆவணங்களின் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இச்செய்தி பேசப் படுகிறது என்று கொண்டால், முதலில் இச்செய்தி பேசப்பட்ட காலம் 2000 + X என்பதாக அமையலாம். இந்த X தான் நம்முடைய அறியாமையைக் குறிக்கும் குறி.

முதற்சங்க காலம் என்பது ”4440 ஆண்டுகள்” என்று மேலே உணர்த்தப் படுகிறது. எனவே பெருங் கடற்கோள் முதலில் நடந்தது 4440 + X + 2000 = 6440 + X ஆண்டுகளுக்கு முந்தியிருக்க வேண்டும். இற்றைக்கு 18000 ஆண்டுகளுக்கு முன், அதாவது கடைசிக் குளிரல் மீகுமத்திற்குப் (Last Glacial Maximum) பின் [glacial: 1656, from Fr. glacial, from L. glacialis "icy, frozen, full of ice," from glacies "ice," from PIE base *gel- "cold" (cf. L. gelu "frost"). Geological sense apparently coined by Professor E. Forbes, 1846.], கடலளவு இன்று இருப்பதைக் காட்டிலும் 120 மீட்டர் குறைந்து இருந்தது. அதன்பின் சுற்றுச் சூழலில் பெரும்மாற்றம் ஏற்பட்டு, துருவங்கள், இரோப்பா, வட அமெரிக்கா, இமயமலை, இமயமலைக்கும் வடக்கில் இருந்த ஆசியப்பகுதி ஆகிய இடங்களில் இருந்த பெரும் பனிப்பாறைகள் கொஞ்சங்கொஞ்சமாய் உருகத் தொடங்கி, கடல்மட்டம் உயர்ந்து கொண்டே வந்து. இற்றைக்குப் 15000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகும் வீதமும் கூடி கடல் திடீரென்று பெரும்வேகத்துடன் உயரத் தொடங்கியது. இதன் காரணமாய் உலகெங்கும் உள்ள கடற்கரைகள் சுருங்கத் தொடங்கி, அன்றைய நெய்தல் நிலங்களுக்குள் கடல்நீர் புகுந்து நிலத்தை அமிழ்த்திக் கொண்டே வந்தது. அந்தந்த இடங்களின் இடக்கிறுவத்தைப் (topography) பொறுத்து நெய்தல்நில அழிவுகள் சட்டென்றோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ நடந்திருக்கலாம். கடல் உயரும் வீதம் இற்றைக்கு 8000 ஆண்டுகள்ளுக்கு முன் மீண்டும் குறையத் தொடங்கி 6500 ஆண்டுகளுக்கு முன் பெரிதும் குறைந்து விட்டது. உண்மையில் இன்றும் நம்மைச் சுற்றியுள்ள கடல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. [அது கோள வெதுப்பினால் (global warming) நடைபெறுகிறது என்று அறிவியலார் சொல்லுகிறார்கள். கோள வெதுப்பு என்பது மிகப்பெரும் புலனம். இங்கு ஒரு கட்டுரையின் ஒரு பத்திக்குள் அதைப் பேசமுடியாது. எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

கடலுயர்வு வீதத்தைப் பார்க்கையில், இற்றைக்குப் 15000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, 6500 ஆண்டுகள் வரையுள்ள காலத்தில் தான், இன்னும் குறுக்கிச் சொன்னால் 15000 - 7500 ஆண்டுகளுக்கு முன்னால், மேலே சொன்ன கடற்கோள் நடந்திருக்கலாம். அதாவது முன்னால் சொன்ன அந்த X என்பது பெரும்பாலும் 1000-1500 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இந்தக் காலம் சுமேரியர்கள் கடற்கோள் ஏற்பட்டதாகச் சொல்லும் காலத்தோடு ஒத்து வருகிறது. அதாவது சுமேரியாவில் கடற்கோள் எப்பொழுது ஏற்பட்டதோ, அதையொட்டிய காலத்திலே பழந்தமிழ் நாட்டிலும் கடற்கோள் ஏற்பட்டிருக்கலாம். வேறு காலங்களில் நடந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாம் கடற்கோளால் மிகச் சிறிதான நில அழிப்பு ஏற்பட்டு, இலங்கைத்தீவு இந்தியப் பெருநிலத்தில் இருந்து பிரிந்ததாக அமைந்திருக்கலாம். இது ஒரு கருதுகோள் தான். கடலியல் ஆய்வுகள் தமிழக, ஈழக் கடற்கரையில் நடந்தால் தான் உறுதியாக ஏதும் சொல்ல முடியும்.
.
இனி மணிமேகலைக் காப்பியத்தின் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் யோசனை என்னும் தொலைவு பற்றி வரும் வரிகளைப் பார்ப்போம்.

“பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத்
தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த
மணிபல்லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணியிழை தன்னைவைத் தகன்றது தானென்”

மேலே பூங்கொடி என்பதும் ஆயிழை என்பதும் மணிமேகலையைக் குறிப்பன. மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தன்னோடு பொருத்தித் தழுவி தென்திசை பக்கம் சென்று மணிபல்லவத்திடை மணிமேகலையை வைத்து அகன்றது. இந்தப் பயணம் “அந்தரம் ஆறா” - அதாவது விசும்பின் வழியாக - நடந்தது. ”திரையுடுத்த மணிபல்லவம்” என்பதால் அது கடலை ஒட்டிய இடம் என்று தெரிகிறது. இது ஒரு தீவா, தீவக் குறையா (=தீபகற்பமா)என்பது தெரியவில்லை. [பல அறிஞரும் இதைத் தீவு என்றே சொல்லுகிறார்கள்.]

பூம்புகார் என்பதன் அஃக அலகு பெரும்பாலும் 11 பாகை 8 நுணுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றையச் சீர்காழி 11 பாகை 14 நுணுத்தமாயும், இன்றைய மயிலாடுதுறை 11 பாகை 6 நுணுத்தமாயும் இருப்பதால், அன்றையப் பூம்புகார் மதிப்பீட்டளவில், 11 பாகை 8 நுணுத்தமாய் இருக்கலாம்..[அன்றையப் பூம்புகார் சற்று இடம் மாறியும் இருந்தால், சற்று முன்னே பின்னே அமையலாம் அல்லவா?]

அடுத்து நாம் பார்க்க வேண்டியது “ஆறைந்து யோசனை” என்ற சொல்லாட்சியாகும். இதை மூன்று விதமாய்ப் பொருள் கொள்ளலாம். முதல் விதம் 1 யோசனை = 8000 பெருங்கோல்.

முதல் முறையின்படி, யோசனையை 4 காதமாய் ஏற்றுக் கொண்டு, ”ஆறைந்து = 30” யோசனை என்று புரிந்து கொண்டால், 30*26.82 = 804.6 கி.மீ என்றாகிறது. இதை அஃக அலகிற்கு மாற்ற, 804.6/111.13333 = 7 பாகை 14.4 நுணுத்தம் என்று அமையும். புகார் அலகில் இருந்து இதைக் கழித்தால், மணிபல்லவம் என்பது புவி நடுவண் கோட்டில் (equator) இருந்து 3 பாகை 53.6 நுணுத்தத்தில் இருப்பதாய் ஆகும். இந்தக் கூற்று முற்றிலும் பொருளற்று இருக்கிறது. ஏனெனில் அந்த அஃகத்தில் இப்பொழுது நிலமின்றிக் கடலே இருக்கிறது. இன்றைய ஈழத்தின் நெய்தல் நிலங்கள் 2300 ஆண்டுகளுக்கு முன் கடற்கோளில் அழிந்திருந்தாலும், அதற்கு அப்புறம் அழிந்ததாய் வரலாறே கிடையாது. கடந்த 2300 ஆண்டுகளில், அங்கும் இங்குமாய் மிகச் சிறிய அளவிலே கடல்நீரில் நிலங்கள் முழுகியிருக்கிறது. அவ்வளவு தான். அதோடு, ஈழத்தின் ஆகத் தென்பகுதியாக இன்றைக்கு இருக்கும் மாத்துறை (Matara) என்னும் நகரம் கூட, 5 பாகை 57 நுணுத்தம் என்னும் அஃக அலகிற் தான் இருக்கிறது. இதற்கும் தெற்கில் 4, 5 கி.மீ.களில் கடல் வந்துவிடுகிறது. எனவே இந்தச் செய்திகளை ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், 30 யோசனை என்ற பொருட்பாடு சரியாகப் பொருந்தவில்லை.பின் ஏன் சீத்தலைச் சாத்தனார் “ஆறைந்து யோசனை” என்று கூறினார்? ஆகத் தென்புல வாய்ப்பாடு என்பது மணிமேகலையின் கூற்றை விளக்கப் பயன்படவில்லை.

இனி வடபுல வாய்ப்பாட்டைப் பார்ப்போம். இதன்படி ஆறைந்து யோசனை = 30*13.41 = 402.3 கி.மீ என்றாகும். இது அஃக அலகில் 402.3/111.13333 = 3 பாகை 44.4 நுணுத்தம் என்று அமையும். புகார் அலகில் இருந்து இதைக் கழித்தால், 11 பாகை 8 நுணுத்தம் - 3 பாகை 44.4 நுணுத்தம் = 7 பாகை 23.6 நுணுத்தம் என்று அமையும். அதாவது மணிபல்லவம் என்பது இலங்கையின் மேற்குக்கரையில் கிட்டத்தட்ட Chilaw என்னும் ஊருக்குச் சற்று தெற்கில் அமையும். இதுவும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இனி மூன்றாவது முறையாய் 1 கூப்பீடு = 500 சிறுகோல் என்ற வாய்ப்பாட்டில் பார்த்தால், ஆறைந்து யோசனை என்பது 30*6.705 = 201.15 கி.மீ என்றாகும். புகாரைக் கூர்ந்தமாய் வைத்து ஒரு வட்டம் போட்டால், யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள பல தீவுகளை இந்த வட்டம் தொட்டுக் கொண்டு போகும். அந்தத் தீவுகளில், அல்லது அதற்கு அருகில் உள்ள கடலில் ஆய்வு செய்தால், பழைய மணிபல்லவத்தை தேடிப் பார்க்க முடியும்.

மூன்றாவது முறையின் படி, 30 ஓசனை = 201 கி.மீ. = 201/111.13333 = 1.809 பாகை = 1 பாகை 48.5 நுணுத்தம் அஃக அலகு வேறுபாடு.

எனவே மணிபல்லவம் என்பது (11 பாகை 8 நுணுத்தம்) -.(1 பாகை 48.5 நுணுத்தம்) = 9 பாகை 20.5 நுணுத்தம் அஃக இலகில் இருந்திருக்க வேண்டும்.

முதல் இரு முறைகளையும் பார்க்க, மூன்றாம் முறை என்பது ஓர் இயல்தொலைவைக் காட்டுகிறது. எந்த முறை இந்தக் கட்டிற் சரியென்று கடலாய்வு, தொல்லாய்வுகள் மூலமே சொல்ல முடியும்.

கணக்கீட்டிற்கு அப்புறம் இருக்கும் உசாத்துணைச் செய்திகளையும் இங்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்றைய யாழ்ப்பாணத்தின் அஃக அலகாக 9 பாகை 45 நுணுத்தம் சொல்லப்படுகிறது. மணிபல்லவம் என்பது சம்புகுலப் பட்டினம் என்று சொல்லப் பட்டதாகப் படித்திருக்கிறேன். மயிலை சீனி வேங்கடசாமியும் இதைச் சொல்லுவார். மணிபல்லவம் என்பது பெரும்பாலும் இன்றைய நாகனார்த் தீவு> நயினாத் தீவாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அதன் அஃக அலகு என்னவென்று தெரியவில்லை. கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆகத் தமிழ் நீட்டளவைகள் மூலம் ஈழத்தில் புத்த பீடிகை, அஃகயக் கலம் (அக்ஷயப் பாத்திரம்) இருந்த இடத்தை ஓரளவு சரியாகவே சுட்டிக் காட்ட முடியும்.

[இன்றையக் கொடுங்கோன்மைப் புத்தர்கள் தான் அங்கு பீடிகை இருந்ததையும், தமிழர்களும் 2300 ஆண்டுகளுக்கு முன்னாலும் அங்கு இருந்தார்கள் என்பதையும் மறைத்து, இனப்போர் நடத்தி, நம் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். புத்த பகவானை அவர்கள் மறந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. சரி, அவர்களை விடுங்கள், அங்குள்ள தமிழர் நிலைப்பை மற்ற தமிழர்கள் என்று, எக்காலத்தில் உறுதி செய்வோம்?]

அன்புடன்,
இராம.கி.

Thursday, July 09, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 7

புகாருக்கும் மதுரைக்கும் இடையுள்ள தொலைவு பற்றிய கணக்கீட்டையும், அதையொட்டிய வரலாற்றுச் செய்திகளையும் பற்றிப் பேசிய இந்த உரையாடல் ஒரு மடற்குழுவில் முன்பு நடந்த போது, நண்பர் ஒருவர் தொடர்புடைய கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்: ”இருவரில் ஒரு சோழன் முடி சூடியவனாகவும் மற்றவன் ஆளுனராகவும் இருந்து இருக்கலாமே? முடிமன்னர் மூவர் என்றுதானே சொல்லப்படுகிறது?” இதற்கான விடை, நீட்டளவைக்கு வெளியிருந்தாலும், வரலாற்றுத் தொடர்புகருதி இங்கே அதைச் சொல்ல முற்படுகிறேன். நண்பர் சொல்லுவது ஒருவகையில் உண்மைதான். புகார்ச்சோழனே அந்த மூவேந்தரில் ஒருவனாய்ச் சிலம்பில் சொல்லப்படுகிறான். காட்டு: ஆய்ச்சியர் குரவை உள்வரி வாழ்த்து.

பொன் இமயக் கோட்டு புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையான் என்பரால்

என்னும் வரிகள். புகார்ச் சோழனையே வேந்தனாய்ச் சிறப்பிக்கின்றன. வாழ்த்துக் காதையின் அம்மானை வரியும், வள்ளைப்பாட்டில் வரும் முதற் பாட்டு அதையே செய்கிறது.

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழிக் கொடித் திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழி தடவரைந்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்

இந்தப் பாடலும் புகார்ச் சோழனையே உயர்த்திப் பேசுகிறது. ஆக, முடிவேந்தன் என்ற சிறப்பு, சிலம்புக் காலத்தில் புகார்ச் சோழனுக்கே இருந்திருக்க வேண்டும். அதே பொழுது, முற்றிலும் கருப்பு-வெள்ளையாய் நிலைமை இருந்ததாய்ச் சொல்லமுடியாது என்பதை வேனிற் காதையின் தொடக்கத்தில் நாம் அறிகிறோம்.

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
களிகெழு வஞ்சியும், ஒலிபுனற் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
இன்னிள வேனில் ”வந்தனன் இவன்” என (1-7)

என்ற வரிகளில் நாலு தலைநகரங்கள் பேசப்பட்டிருக்கின்றன. புகாரோடு உறையூரும் இங்கே ஒருங்கே நிற்கிறது. இப்படிச் சோழர் இருவேறு பட்டுக் கிடந்த நிலை சேரனுக்கு ஏற்படவில்லை. ஒரு வேந்தனே, சேரலன் என்றும், பொறையன் என்றும், காப்பியத்துள் பேசப்படுகிறான். [எனவே இரு வஞ்சி நகரங்களும் அவன் வசம் தான் சிலம்புக் காலத்தில் இருந்திருக்கிறது.]. பாண்டியன் நிலையும் ஏமத்தோடு இருக்கிறது. மதுரையோடு கொற்கை நகரும் அவன் வசம் தான். சோழன் கதை தான் உடைந்த நிலையாய்த் தெரிகிறது. [There is a challenger to the throne of Pukar holding fort at Uraiyuur and he had the backing of the mighty Cheran, his cousin.]

”வெறுமே உறையூர்ச் சோழன் ஆளுநனாய்” இருந்திருந்தால், இங்கு உறையூர் விதப்பாய்ப் பேசப்படுமோ? கொற்கை, காப்பியத்துள் தனித்துப் பேசப்படுகிறதா? அல்லவே? வெற்றிவேற் செழியன் நெடுஞ்செழியனின் தம்பியோ, மகனோ என்பது நமக்குத் தெரியாது. அவன் கொற்கையில் ஆளுநனாகவே இருந்திருக்கிறான். நெடுஞ்செழியன் இறப்பதற்கு முன் வெற்றிவேற் செழியன் காப்பியத்துள் பேசப்படுவதேயிவில்லை. அதோடு, வழக்குரை காதையில் “நற்றிறம் படராக் கொற்கை வேந்தே” என்று நெடுஞ்செழியன் கண்ணகியால் விளிக்கப் படும் போது, நெடுஞ்செழியன் தான் கொற்கைக்கும் வேந்தன் என்பதும், வெற்றிவேற் செழியன் வெறும் ஆளுநன் என்பதும் நமக்கு உறுதிபடத் தெரிந்துவிடுகிறது. அது போலப் புகார்ச் சோழன் உறையூருக்கும் உரிமையாளன் என்று காப்பியத்தில் எங்கணுமே சொல்லப் படவே இல்லை. மாறாகப் ”பீடார் உறந்தை” என்று புகாரோடு வரிசை வைத்தே சொல்லப் படுகிறது.

எனவே ”உறந்தையும் ஒரு சோழனால் ஆளப்படுகிறது. ஆனால் உறந்தைச் சோழன் புகார்ச் சோழனோடு முரண்பட்ட பங்காளிச் சோழன்” என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியிருக்கிறது. அது செங்குட்டுவன் பற்றிய மற்ற சங்கப் பாடல்களாலும் உறுதி செய்யப் படுகிறது. [உறையூர்ச் சோழன் தன்னுடைய ஒன்பது உறவினரோடு சண்டை செய்து தன் நிலத்தை அடைவதற்குச் செங்குட்டுவன் போரில் உதவியிருக்கிறான்.] செங்குட்டுவனுக்குப் பின்னால், இந்த உறையூர்ச் சோழன் பெரிய ஆளாய் ஆகியிருக்கலாம். அது வேறு செய்தி. [ஒருசில தமிழறிஞர்கள் இவன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியாய் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நான் இன்னும் ஆயவேண்டும்.]

இருவேறு சோழர்கள், அவர்களின் ஆட்சியெல்லைக் குறுக்கம், என்பது பற்றி அந்த மடற்குழுவிற் பேசிக் கொண்டிருந்த போது, இன்னொரு நண்பர் அதே உரையாடலில் சோழநாட்டு எல்லை பற்றிய தனிப்பாடல் ஒன்றைக் கொடுத்திருந்தார். இதுபோலத் தொண்டை, சோழ, பாண்டிய, சேர நாடுகளின் எல்லைகள் பற்றியும் நான்கு பாக்கள் இருக்கின்றன. இவை பெருந்தொகை என்னும் திரட்டில் வருகின்றன. [என்னால் பெருந்தொகைத் திரட்டை நேரே தேடிப் பார்க்க முடியவில்லை.] இந்த வெண்பாக்களை கொடுமுடியார் நான் முன்பு கொடுத்த அவர் பொத்தகத்தில் கொடுத்திருக்கிறார். இதில் மூன்று பாடல்களை “தமிழக வரலாறும் பண்பாடும்” என்ற பொத்தகத்திலும் [பேரா. வே.தி.செல்லம், மணிவாசகர் பதிப்பகம்], 4 பாக்களை ”பழந்தமிழ் மாட்சி” என்ற பாவாணர் பொத்தகத்திலும் பார்த்தேன்.

பிழைகள் திருத்திய அந்தப் பாக்கள் வருமாறு:

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கும் உவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு

- பெருந்தொகை

கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதஞ்
சோணாட்டுக்(கு) எல்லையெனச் சொல்.

- பெருந்தொகை மற்றும் சோழமண்டலச் சதகம்

வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

- பெருந்தொகை

வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதச்
சேரநாட் டெல்லையெனச் செப்பு

- பெருந்தொகை 2091

இந்தப் பாடல்கள் 3 ஆம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1178-1218) காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். பெருந்தொகைத் திரட்டைப் பார்த்துத்தான் ”ஆசிரியர் கம்பரா?” என்று முடிவு செய்யவேண்டும். இப்போதைக்கு அப்படியே ஏற்றுக் கொள்ளுவோம்.

ஆக இந்த எல்லைகள் 12 ஆம் நூற்றாண்டு முடிவில் இருந்த எல்லைகள் போலும். இந்த நூற்றாண்டிலும் ”சேர நாட்டு எல்லையெனச் செப்பு” என்று சொல்லுவதால், அந்த நாட்டை மலையாள நாடு என்று சொல்லும் பழக்கம் வரவில்லை என்பது தெரிகிறது. [கேரளம் என்று ஒருவேளை பலுக்கியிருக்கலாம்; உறுதிபடச் சொல்லமுடியவில்லை.] இந்த தொலைவுகள் எல்லாம் தென்வடலான அளவுகளையே குறிக்கின்றன. கொடுமுடியார் கொடுத்த நீட்டளவைகளை வைத்துக் கணக்குப் போட்டால், 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நால்வகை நாடுகளின் எல்லைகள் பற்றி இன்னும் கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

கிழக்குக் கடற்கரையை வைத்துப் பார்த்தால் கீழே பாண்டியநாடு, நடுவே சோழநாடு, அதற்கும் வடக்கே தொண்டை நாடு. இந்தத் தொலைவுகளைக் கூட்டினால் மொத்தத் தொலைவு [56+24+20=] 100 காதம் ஆகும். குமரி முனையின் அஃகம் (latitude) "8 பாகை (degree) 4 நுணுத்தம் (minutes)" என்று ஞாலப் படத்தால் (world map) அறிகிறோம். இனி மேலே அளவிட்ட 100 காதத்தை அஃக அலகிற்கு மாற்றுவோம்.

வட, தென் துருவங்களின் வழியாக அமையும் புவியின் சுற்றளவு 40008 கி.மீ. இதில் 4 இல் ஒரு பங்கு (அதாவது 10002 கி.மீ) நம்பக்கம் உள்ள புவி நடுவண்கோட்டில் (equator) இருந்து வடதுருவம் வரைக்கும் உள்ள தொலைவைக் குறிக்கும். 90 அஃகப் பாகை என்பது இந்தத் தொலைவைக் குறிப்பதால், 1 பாகை என்பது 111 133333 கி,மீ யைக் குறிக்கும். இதையே தென்புல வாய்ப்பாட்டைக் கொண்டு தலைகீழ்க் கணக்கிற் போட்டால், 100 காதம் (= 670 கி.மீ) என்பது 6. பாகை, 1.73 நுணுத்தத்தைக் குறிக்கும். [வடபுல வாய்ப்பாடு இங்கு கொஞ்சங் கூடப் பொருத்தமாய் இல்லை.]

அப்படியானால், கி.பி.1200 அளவில் தமிழகத்தின் வடயெல்லை (8பா. 4நுணு) + (6பா 1.73நுணு) = 14பா 5.73நுணு ஆகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? இந்தக் காலத்தில்,

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியின் அஃகம் = 13பா. 40 நுணு.
கதிரி என்னும் ஊரின் அஃகம் = 14பா. 7 நுணு
கூடூரின் அஃகம் = 14பா. 9 நுணு.

ஆக, கி.பி. 1200 அளவில் தமிழ்நாட்டு எல்லை திருப்பதிக்கும் வடக்கில் இருந்திருக்கிறது. இராயல சீமாவின் ஒரு பகுதி தொண்டைநாட்டைச் சேர்ந்தது போலும். சித்தூர் மாவட்டமும், நெல்லூர் மாவட்டமும் 1954 இல் நடந்த ”பொட்டி சீராமுலு”வின் போராட்டத்திற்கு அப்புறம் தானே ஆந்திரத்தோடு சேர்ந்தது. ஆக அதுவும் ஒரு காலத்தில் தொண்டைநாடுதான். மொத்தத்தில் இந்தியா விடுதலை பெற்றபின்னால், தமிழகத்தின் ஒரு பகுதியாய் இருந்த தொண்டைநாட்டு நிலத்தில் இருந்து பெரிதும் இழந்திருக்கிறோம் என்பது புரிகிறது.

அதே பொழுது, சேரநாட்டின் நீளம் 80 காதம் என்று கொடுத்திருப்பதால், அதன் அஃகத் தொலைவு 4பா. 38நுணு ஆகும். சேரநாட்டின் தென்முனை என்றுமே குமரியில் இருந்ததில்லை. மேலே பாவில் சேரநாட்டு எல்லைக்குச் சொன்ன தென்காசிக் குறிப்பை எடுத்துக் கொண்டு அதற்கு நேர் மேற்கே இருக்கும் கடற்கரையூரைத் தென் எல்லையாகக் கொண்டால், சேர நாட்டின் தென் எல்லை என்பது 8பா. 58 நுணு ஆக அமையும். இதோடு, 4பா. 38நுணுவைக் கூட்டினால்,

கி.,பி.1200ல், சேரநாட்டின் வடயெல்லை என்பது 8பா.58நுணு + 4பா38நுணு =13பா.36நுணு ஆக அமையும். இந்தக் காலத்தில்,

மேற்குக் கடற்கரையில் உள்ள காசரகோட்டின் அஃகம் = 12பா. 30நுணு
மங்கலா புரத்தின் (மங்களூர்) அஃகம் = 12பா. 52நுணு
உடுப்பியின் அஃகம் = 13 பா. 20நுணு.

என்று அறிகிறோம். அதாவது, சேரநாட்டின் வடயெல்லை உடுப்பிக்கு வடக்கிலும், கிட்டத்தட்ட உடுப்பி மாவட்டத்தின் வட எல்லை வரையிலும், 12 ஆம் நூற்றாண்டில் நீண்டிருக்கிறது. இன்று கன்னடம் பேசும் இடங்கள் [தக்கண கன்னடம், உடுப்பி மாவட்டங்கள் - பழைய நன்னன் நிலம்] அன்று கைமாறியிருந்திருக்கிறன, கூடவே அரச மொழியும், அதிகாரங்களும் மாறியிருந்திருக்கலாம். இந்த மாற்றம் எப்படி நடந்தது என்று ஆய்வை யாராவது செய்ய வேண்டும்.

கி.பி. 1200ல் சேர, சோழ நாடுகளுக்கு இடையில் முற்றிலும் நிலத்தால் அடைபட்ட கொங்குநாடு பற்றியும் அதன் எல்லைகள் பற்றியும் நமக்குத் தெரியாது. ஒரு நண்பர் கோட்டைக்கரை பற்றிச் சொல்லியிருந்தார். அது சோழநாட்டிற்கும் கொங்குநாட்டிற்கும் இடைப்பட்ட எல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் கி.பி. 1200ல் இருந்த சேரமான் பெருமாள் அரசு ஒருகாலத்தும் ஆன்பொருநைக் கரூரைத் தன் ஆளுகையில் வைத்ததில்லை. அந்தக் காலத்தில் கொங்குச் சோழர் என்ற கிளைக்குடியே கொங்கு நாட்டை ஆண்டு வந்தது.

மேலே உள்ள 4 வெண்பாக்களையும், தென்புல வாய்ப்பாடையும், அஃக அலகுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, இன்னும் அதிகமான புரிதல் கிடைக்கிறது. [அதாவது, தமிழன் நிலமிழந்தது ஒரு தொடர்ச்சியான கதை போலும். இன்றைக்கும் இதே கதைதான் தமிழகத்திற்குத் தெற்கில் கொடூரமாய் நடந்து முடிந்திருக்கிறது. தமிழனின் வாயும் வயிறும் எரிந்து கிடக்கின்றன. உலக ஆதரவோடு, ஓர் இனக்கொலையே நடந்து முடிந்திருக்கிறது. அதையொட்டித் தொடர்ந்து நடக்கின்ற மிரட்டல்களின் காரணமாய், என்ன செய்வதென்று தெரியாமல் தமிழர் தேம்பிக் கிடக்கிறார்கள்.]

இற்றை அறிவியல் அறிவோடு, தமிழிலக்கியச் செய்திகளைப் பொருத்திப் பார்த்தால், புதிய அணுகுமுறை நமக்கு அமையலாம். அந்த வகையில் பழந்தமிழ் நீட்டளவைகளைச் சீர்படுத்திப் புரியவைத்த கொடுமுடியாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 08, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 6

இதுவரை சிறுகோல், கோல், பெருங்கோல் என்ற அளவைகளையும், அவற்றைப் புரியுமாப் போல சில சான்றுகளையும் முன்னிருந்த பகுதிகளில் பார்த்து வந்தோம். அடுத்து வரும் அளவு கூப்பீடு (இது கூப்பிடு தூரத்தின் சுருக்கம். எங்கள் ஊர்ப்பக்கம் ”பெருசுகள்” இப்படிச் சுருக்கிச் சொல்லுவதை இளம்பருவத்தில் கேட்டிருக்கிறேன்.) இது கிட்டத்தட்ட ஒரு கல் (=மைல்) தொலைவு தான். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூப்பீட்டிற்கும் ஒரு கல் வைத்திருப்பார்கள் போலும். 500 தண்டம் ஒரு கூப்பீடு என்ற அளவை கொடுமுடி சண்முகம் தன் நூலில் பதிவு செய்திருந்தார். இதன் படி 1 யோசனை என்பது 8000 தண்டம் (பெருங்கோல்) = 16000 கோல் ஆகும். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், இதைக் கேள்விக்கு உட்படுத்துமாப் போல இந்தியாவின் தலைசிறந்த கணித மேதை ஆரிய பட்டாவை எடுத்துக் காட்டி, முனைவர் சண்முகம் தன் பொத்தகம் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் - I ” - இல் 131 ஆம் பக்கத்தில் 8000 நரன் = 1 யோசனை என்ற குறிப்பையும் குறித்திருப்பார். நரன் என்ற வடவர் அளவீடு ஓராள் உயரத்தையே குறிக்கும். 8000 நரன் = 1 யோசனை என்ற ஒக்குமையையை வைத்து ஆரியபட்டா பல வானியற் கணக்குகளைப் போட்டிருப்பதும், அவற்றின் இயலுமையும் நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கின்றன.

சிறுகோல், கோல், பெருங்கோல் பற்றிய புரிதற் குழப்பங்களைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறதா? இங்கே இரண்டு வேறுபட்ட கணக்கீடுகள் (8000 பெருங்கோல் ஒரு யோசனையா? 8000 கோல் ஒரு யோசனையா?) முரண்படுவதை மீண்டும் சந்திக்கப் போகிறோம். அடுத்து வரும் பெருந்தொலைவுச் சான்றுகளைக் [சிலம்பில் வரும் புகார் - மதுரைப் பயணம், ஆதித்த கரிகாலன் கல்வெட்டில் வரும் குமரி - வாரணாசித் தொலைவு, மணிமேகலையில் வரும் புகார் - மணிபல்லவத் தொலைவு] ஆகியவற்றைக் கணக்கிடும் போது, உண்டாகும் தீர்வுகளை இயற்தொலைவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, முன்னாற் சொன்ன கொடுமுடியாரின் பரிந்துரையை எல்லாவற்றிலும் ஏற்காது, வடபுல ஒக்குமையை எடுத்துக் கொள்வதே சில சமயங்களில் சரியான தீர்வுகளைத் தரும் என்று நான் எண்ணுகிறேன். எனவே அடுத்து வரும் பகுதிகளில் 500 கோல் = 1 கூப்பீடு என்பதை வடபுல வாய்ப்பாடு என்றும் 500 பெருங்கோல் = 1 கூப்பீடு என்பதைத் தென்புல வாய்ப்பாடு என்றும் கொள்ளுகிறேன். இப்படிக் கொள்ளுவதற்குக் கரணியம் உண்டு. வடபுலத்தில் வடபுல வாய்ப்பாடு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. தென்புலத்தில், தென்புல, வடபுல, வாய்ப்பாடுகள் இரண்டுமே வெவ்வேறு காலங்களில் பயன்பட்டிருக்கின்றன. அந்தந்தச் சான்றுகளைப் பார்க்கும் போது விரிவாக இதைச் சொல்லுகிறேன்.

இப்போதைக்கு இந்த வாய்ப்பாடுகளை பட்டியலிடுவோம். அதாவது,

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு

நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):

500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

கூப்பீட்டிற்கு அடுத்தது காதம். காதம் என்பதைக் காவதம் என்றும் பழம் இலக்கியத்தில் பதிவார்கள். காவுதல் என்பதும் கூப்பிடுதல் தான். இதே காதம்/காவதம் என்னும் கலைச்சொல் வடக்கிலும் (குரோசம் என்று) பரவியிருக்கிறது. குரோசம் என்பது நம்முடைய குரைதல்/கரைதல் (காகம் கா, கா என்று கரைகிறது - to cry) என்ற வினையோடு தொடர்பு கொண்டது. குரையம்>குரயம்>குரசம்>குரோசம். காதம்/காவதம்/குரோசம் ஆகிய சொற்களின் வேர் தமிழில்தான் இருக்கின்றன. தேடி அறிவதற்குத் தான் ஆட்களைக் காணோம்.

காதம் என்னும் அளவீடு கற்பனையோ, அன்றி வெறும் இலக்கியங்களில் வரும் நீட்டல் அளவையோ அல்ல என்பதை நிறுவுமாப் போல, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தொலைவுக் கற்கள் 1970 களில் கிடைத்தன. ஒரு கல், அதியமான் கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் இடது புறத்தில், சிறிது தொலைவில் பதிகால் பள்ளம் என்ற இடத்தில் (கிட்டத்தட்ட இதன் புவியியல் இருப்பு அலகு, 12 பாகை.7’ 20” வடக்கு, 78 பாகை.13’ கிழக்கு என்பதாகும்.), “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 29” என்ற குறிப்போடு கிடைத்தது. [இதைத் தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டு பிடித்தனர்.]

அடுத்து, தருமபுரிக்கு வடக்கே கிருட்டிணகிரி சாலையில் மாட்லாம்பட்டியின் கிழக்கே ஒரு கல் தொலைவில் கெங்குசெட்டிப்பட்டி அருகில் முத்தனூரில் ஒரு கிணற்று மேட்டில் (புவியியல் இருப்பலகு - கிட்டத்தட்ட 12 பா. 13’ 20” வடக்கு, 79 பா. 13’ கிழக்கு) 27ஆவது காதம் குறிக்கும் கல் கிடைத்தது. [இதனை 1.7.78 சனிக்கிழமை அன்று புலவர் மா.கணேசனும், புலவர் பா.அன்பரசுவும் சேர்ந்து சென்று கண்டிருக்கிறார்கள். இச்செய்தி 14/7/78 வெள்ளி தினமணியிலும், The Indian Express, Friday, August 25, 1978, - இலும் வெளியாகியிருக்கிறது.] இதே போல வட ஆர்க்காடு மாவட்டம், திருப்பத்தூர் அருகே, கொண்டமநாயக்கன் பட்டியில் காணப்பெற்ற கல்லில் “நாவற்றாவளத்திற்கு 20 காதம்” என எழுதப் பெற்றிருந்தது. [”தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும்”, ச.கிருஷ்ணமூர்த்தி, தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை 1988 - என்ற நூலிலும், ”தருமபுரி மண்ணும் மக்களும்”, த.பழமலய், பெருமிதம் வெளியீடு, 37, இளங்கோ வீதி, சீனிவாச நகர், வழுதிபிராட்டி கி.அ.நி. கண்டர்மானடி து.அ.நி., விழுப்புரம் மாவட்டம் - என்ற நூலிலும் இக்கற்களைப் பற்றிய செய்தி இருக்கிறது.]

அந்தக் கற்கள் தகடூரில் இருந்து நாவற் தாவளம் வரை செல்லும் “அதியமான் பெருவழி”க் கற்கள் என்று ஆய்வாளர் சொல்லுகிறார்கள். [கற்களில் அதியமான் பெருவழி என்று எழுதியிருக்கிறது. தாவளம் = தாழுமிடம், தங்குமிடம், வணிகர் சந்தை, station, depot, lodge, நாவற் தாவளம் நாவற் தோப்பிற்கு அருகில் உள்ள தங்குமிடம். இது போல வேம்படித் தாவளம், மஞ்சுபுளித் தாவளம், வண்டித் தாவளம், திருவனந்தபுரம் தாவளம் (திருவனந்தபுரம் வான்புகல் நிலையம்) எனப் பல தாவளங்கள் இருந்திருக்கின்றன. நாவற் தாவளம் என்ற இடம் எங்கிருக்கிறது என்று இன்னும் காணப்படவில்லை. ஆனால் தகடூருக்குக் கிழக்கில் வட ஆர்க்காடு திருப்பத்தூரையும் தாண்டி இது இருந்திருக்க வேண்டும்.]

தவிர, இந்தப் பெருவழியை, அதியமான் குடியைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாள் என்ற குறுநிலத் தலைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்பதும் தொல்லாய்வின் வழியாகத் தெரிகிறது. இந்தக் கற்களில் 29, 27 என்பவை தமிழெண்களில் எழுதியிருப்பது போக இன்னொரு குறியீட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, 20 ஐக் குறிக்க இரண்டு பெரியகுழிகளும், 7 அல்லது 9 ஐக் குறிக்க 7 அல்லது 9 சிறு குழிகளும் இருந்திருக்கின்றன. படிக்காதவரும் குழிகளைத் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும் போலும்.

29 ஆம், காதக் கல்லிற்கும், 27 ஆம் காதக் கல்லிற்கும் இடையே வளைந்து வளைந்து போகும் இன்றையப் பாதையின் தொலைவு கிட்டத்தட்ட 9 மைல் ஆகும். அதே பொழுது வெறுமே பாகைகளை வைத்து கணக்குப் போட்டால் இது குறைந்த தொலைவாய் 11.113333 கி.மீ (=6.906 மைல்) மட்டுமே இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பெருவழி பாகைக் கணக்கு வழி போட்ட நேர்கோட்டுப் பாதையாய் இருக்கத் தேவையில்லையாதலால், பாதை வளைவுகளையும் சேர்த்து உண்மைத் தொலைவு 6.906 மைலுக்கும் கூடவே இருக்கலாம்.

அந்தக் காலப் பெருவழியில் 27 ஆம் காதத்திற்கும் 29 ஆம் காதத்திற்கும் இடையான தொலைவு 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் நெருங்கியே இருக்க வேண்டும். முன்னால் நாம் பார்த்த தென்புல நீட்டளவை வாய்ப்பாட்டின் படி கணக்குப் போட்டால், 2 காதம் என்பது 8 மைல் 1760 அடி = 8 1/3 மைல் (=13.412 கி.மீ) என்று ஆகிறது. இது 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் இடைப்பட்டு வருகிறது. அந்த அளவில் இந்த இரண்டு காதக் கற்களும் தென்புல நீட்டளவைக் கணிப்பை உறுதி செய்கின்றன.

வணிக மையங்களை இணைப்பவை பெருவழிகள் (trunk roads). இது போன்ற பெருவழிகள் காரைக்கால் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, கொங்கர் பெருவழி, வடுகப் பெருவழி, பெண்ணாற்றுப் பெருவழி [இது தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, தகடூரில் இருந்து திருக்கோவிலூர் வரை இருந்திருக்கிறது.], இராசகேசரிப் பெருவழி [இது கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது]. மகதேசன் பெருவழி [சேலம் மாவட்டம் ஆறுகழூரில் இருந்து காஞ்சிபுரம் வரை சென்றது.] என்ற பெயர்களில் முன்னாளில் இருந்தது வரலாற்று ஆய்வில் தெரியவருகிறது.

மேலே தொல்லியல் மூலம் காவதக் கற்களைப் பற்றிப் புரிந்து கொண்ட நாம், அதே காவதத்தை வைத்தே, இனிப் புகார் நகரின் அகலத்தைப் புரிந்து கொள்ள முயலுவோம். சிலம்பு நாடுகாண் காதையில் 32 - 36 ஆம் அடிகள்

”தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயிற் கடைமுகங் கழிந்து
குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர் பொருந்தி” (32-36)

என அமையும். அதாவது ”சோலைகள் நிறைந்த காவிரியின் சங்குமுகத்திலுள்ள [காவிரி கடலிற் சேருமிடம் சங்குமுகம்; சங்குதல் = சேருதல். வட்ட வட்டமாய்ப் புரிபோலச் சுண்ணம் (calcium) சேர்ந்து உயிரோடு அமையும் நீருயிரியில் இருந்து சங்கைப் பெறுகிறோமே? சங்கு தமிழகத்தில் இருந்துதான் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் சாற்றிப் போனது. (சாற்றுதல் = to sell) சங்கு குளித்தல், முத்துக் குளித்தலோடு சேர்ந்து தானே நடைபெற்றது? எத்தனை காலத்திற்குச் ”சங்குதல் (=சார்தல், சேர்தல், சார்ங்குதல்>சங்குதல்)” என்ற வினைச்சொல் தமிழில்லை என்று சிலர் சொல்வார்களோ, தெரியாது. சங்கு முகத்தைச் சங்கமம் என்று திரித்து சங்கதத்தில் இனங் காட்டுவார்கள். சங்குமுகத்திற்கு மாற்றாய் ஆற்றுமுகம் என்ற ஒன்றும் தமிழில் உண்டு. [ஆற்றுமுகம் = ஆற்றுத்துறை.] புனலாடும் துறையில் இருந்து மேற்கே நடந்து, காவிரியின் வடகரையை ஒட்டிய மலர்வனத்துள் நுழைந்து ஒரு காவதம் கடந்து கவுந்தியின் பூமரத் தோட்டத்திற்கு கோவலனும் கண்ணகியும் வருகிறார்கள்” என்ற செய்தியை இந்த வரிகளின் மூலம் அறிகிறோம். பொதுவாய் முனிவர்கள், துறவிகள் ஆகியோர் எந்தவொரு நகருக்கும் வெளியே புறஞ்சேரியில் தான் பள்ளிகளை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கொண்டால், புகாரின் உள்நகர அளவை இங்கே நாம் குத்துமதிப்பாக எடை போடலாம்.

”இங்கே சங்குமுகத்தில் இருந்து புகாரின் நகர மேற்கு எல்லை ஒரு காத தூரத்தில் இருந்திருக்கிறது” என்று மேலே அறிகிறோம். [இங்கு வடபுல வாய்ப்பாடு மிகவும் சிறிய ஊரை இனம் காட்டுகிறது. மாறாகத் தென்புல வாய்ப்பாடே சரியான இயற்தொலைவு காட்டுகிறது. புகாரை நகரமாய்க் கொள்ள 1 காதம் = 4.166 மைல் = 6.7 கி.மீ என்னும் தென்புல வாய்ப்பாடே வகை செய்கிறது]. நகரின் நீளம் நமக்குத் தெரிவதற்குத் தரவு ஏதும் கிடையாது. இருந்தாலும் பொதுவாய் கடற்கரையை ஒட்டி வளரும் எந்த நகரமும். 2:1 என்ற விகிதத்தில் நீள, அகலங்கள் இருப்பதும், ஊருக்கு நடுவே ஒரு ஆறு குறுக்கே போகுமானால், ஆற்றிற்கு வடக்கே ஒரு காதமும், தெற்கே ஒரு காதமும் இருப்பதும் நடக்கக் கூடியது என்று கொண்டால் [இன்றையப் பெருநகரமான சென்னையும் அப்படியே இருக்கிறது.], புகார் நகரம் 2 சதுரக் காதம் இருந்திருக்கலாம் என்ற பட்டுமையான (possible) ஊகம் ஒன்றைச் செய்ய முடியும். [அதாவது புகாரின் பரப்பளவு 89.78 சதுர கி.மீ இருக்கலாம்.] இந்தத் தென்புலக் கணக்கில் புகார் என்பது அந்தக் காலத்திற்குப் பெரிய நகரம் தான்.

காவதம் என்ற அளவீட்டை வைத்து, இனிப் புகாரில் இருந்து மதுரையின் தொலைவையும், அதைக் கணக்கிடுவதிற் பெறப்படும் அருமையான வரலாற்றுச் செய்திகளையும் பார்க்கலாம். [நீட்டளவை பற்றிய என்னுடைய இந்தத் தொடரே சிலப்பதிகாரத்தில், புகாரில் இருந்து மதுரைக்குக் கண்ணகியும், கோவலனும், கவுந்தியடிகளும் போன பயணத்தைக் கணக்கிடப் போய் எழுந்ததே.]

புகாரின் சங்குமுகத்திலிருந்து [ஒருவேளை அதற்கு அருகில், பட்டினப்பாக்கத்தில், கோவலன் மனை இருந்திருக்கலாம்.] புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் மேலே நாடுகாண் காதையில் 32 - 36 ஆம் அடிகளில் சொன்னது போல் காவிரியின் வடகரையை ஒட்டி ஒருகாத தூரம் கடந்து கவுந்தியின் பள்ளியை அடைகிறார்கள். அங்கிருந்து காவிரிக்கரை ஒட்டியே நகர்ந்து, உறையூர் வந்து, பின் தென்கரைக்கு மாறி, கொடும்பாளூர் வந்து, அங்கிருந்து செல்லும் மூன்று வழிகளில் இடைப்பட்ட வழியை தேர்ந்தெடுத்து, மதுரைக்கு வருகிறார்கள்.

இந்தக் காலத்தில் யாரும் பூம்புகாரில் இருந்து திருச்சிராப்பள்ளி (அதாவது உறையூர்) போய், அங்கிருந்து பெரிதாய்ச் சுற்றிக் கொண்டு, புதுக்கோட்டை (=கொடும்பாளூர்) வழி மதுரை போக மாட்டார்கள். பூம்புகாரில் இருந்து நேரே தஞ்சாவூருக்குப் போய், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு வந்து பின் திருமயம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை போவதுதான் மிகவும் குறைந்த தூரமாய் அமையும். அடுத்த குறைந்த தூரம் பூம்புகாரில் இருந்து காவிரிக்கரையோரம் திருச்சிராப்பள்ளிக்கு வந்து, பின் விராலிமலை, வளநாடு, துவரக்குறிச்சி, மேலூர் வழியாய் மதுரை போவதாகும். (கொடும்பாளூர் இந்த வழியிலும் ஒட்டி வரும்.) ஆகக் கூடிய தொலைவு, பூம்புகாரில் இருந்து காவிரிக்கரையோரம் திருச்சிராப்பள்ளிக்கு வந்து, பின் அங்கிருந்து (அதாவது உறையூரில் இருந்து) புதுக்கோட்டை (=கொடும்பாளூர்), திருமயம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை போவதாகும். ஏதோவொரு காரணத்தில், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் மூன்றாவது வழியில் சுற்றி வளைத்துப் போயிருக்கிறார்கள். [அந்தக் காலத்தில் விராலிமலை வழி இருந்ததா, ஒருவேளை அடர்காடுகள் அதைத் தேர்ந்தெடுக்க வொட்டாது தடுத்தனவா என்றெல்லாம் நமக்குத் தெரியாது.]

கவுந்தியடிகளைச் சந்திப்பதற்கு முன்னம் வீட்டிலிருந்து ஒரு காத தூரம் நடந்தவுடனேயே, கண்ணகிக்குக் கால்வலித்து விடுகிறது. ”மதுரை எங்கே?” என்று கணவனைக் கேட்கிறாள். பாவம், செல்வந்தர் வீட்டுப் பெண், இம்மென்றால் தேரும், பல்லக்குமாய்ப் போயிருந்திருப்பாள் போலும், நெடுந்தூரம் நடக்கப் பழகாதவள், புகாரை விட்டு அகலாதவள், மதுரையைப் பற்றிக் கேள்விப் பட்டு ஆனால் பார்த்திராதவள், “மதுரை யாது?” என்று ஒரு காதத் தொலைவிலேயே கேட்டது வியப்பில்லை. இப்பொழுது கணவன் மெல்லிதாக நகைத்துச் சொல்கிறான்: “ரொம்பத் தூரம் இல்லையம்மா, நம்முடைய அகண்ட நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காத தூரம் தான் இருக்கும், போயிறலாம், கொஞ்சம் பொறுத்துக்கோ” இளங்கோவின் வரிகளில்

இறுங்கொடி நுசுப்பு ஓடி நைந்து அடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க
மதுரைமூதூர் யாதென வினவ
ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்
நாறு ஐங்கூந்தல் நணித்து என நக்கு (38-43)

என்று அமையும். இதைப் படிக்கும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆறைங்காதம் என்பது இங்கு பேதைப்பெண்ணை ஆற்றுப்படுத்தச் சொல்லிய ஒரு சொல்விளையாட்டு, இது உண்மையில் 30 காதத்தைக் குறிக்கிறது. அது புகாரில் இருந்து மதுரை வரையுள்ள தூரம் கூட அல்ல. [அப்படித் தவறாகப் புரிந்து கொண்ட தமிழறிஞர்கள் மிக மிக அதிகம். காதம் என்ற சொல்லின் அளவீடு அந்தக் காலத்தில் உறுதிப்படாத கரணியத்தால் தடுமாறியிருக்கிறார்கள்.] இளங்கோ, கோவலன் வாயிலாய்த் தெளிவாகச் சொல்லுகிறார்: “ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்”, அதாவது ”சோழ நாட்டின் எல்லைக்கு அப்பால் 30 காதத்தில் மதுரை உள்ளது”.

அதோடு இந்தத் தொலைவு கோவலனின் போக நினைத்த பாதையின் தொலைவே யொழிய, அவர்கள் முடிவாகப் போன பாதையின் தொலைவும் அல்ல. கவுந்தியைச் சந்தித்த பின்னால்,
கோவலன் தான் நினைத்த பாதையிற் செல்லவே இல்லை. கவுந்தி தேர்ந்த பாதையிலே தான் கோவலனும், கண்ணகியும் போகிறார்கள். அந்தப் பாதையோ, சுற்றி வளைத்துக் கொண்டு, உறையூர் போய், பின் கொடும்பாளூர் வந்து, அப்புறம் மதுரை போகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காகக் கவுந்தியடிகள் உறையூருக்கு அழைத்துப் போய் அங்கு தங்கிப் பின் கொடும்பாளூர் வழி மதுரை போகிறார். [ஒருவேளை உறையூர் என்பது சமணப் பள்ளிகளின் (செயினம், ஆசீவகம், புத்தம் ஆகியவற்றின் பள்ளிகள் நிறைந்த) இடமாக இருந்திருக்கலாம். [இந்த இயலுமை நீலகேசிக் காப்பியத்தின் வழியாகத் தெரியவருகிறது. ஒருசில உறையூர் அரசர்களே கூட ஆசிவக நெறியாளர்களாய் இருந்திருக்கலாமோ என்ற ஐயமும் பேரா.க.நெடுஞ்செழியன் போன்றோருக்கு எற்படுகிறது. பேரா. க.நெடுஞ்செழியனின் “ஆசீவகம்” பற்றிய நூல்களைப் பார்த்தால் இது விளங்கும்.] ஆங்காங்கு தங்கிப் போன காரணத்தால், உறையூர் தமக்கு வாய்ப்பாக இருக்கும் என்று கவுந்தியடிகள் ஒருவேளை எண்ணியிருக்கலாம். இன்னும் அதிக விளக்கம் கொள்வதற்கு முன்னால், அன்றைய சோழ அரசியல், நாடுகளின் எல்லைகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது முகன்மையானது.

இந்தக் காலத்தில் இரு வேறு சோழ அரசுகள் இருந்தன. அவை இரண்டுமே சிறிதானவை. ஒரு சோழ அரசு புகாரைச் சுற்றியது. இன்னொரு அரசு உறையூரைச் சுற்றியது. சேரன் செங்குட்டுவன் தான் இந்தக் காலத்தின் மிகப் பெரிய அரசன். பாண்டியன் நெடுஞ்செழியனும் செங்குட்டுவனுக்குச் சளைக்காமல் அதே பொழுது, செங்குட்டுவனை விடச் சற்றே சிறிய நிலத்தைக் கொண்டவன். சோழன் கரிகாலன் சிலம்புக் கதைக்கும் முந்தியவன். சிலம்பைப் பற்றிய குழப்பம் கொண்ட பலரும் புகார்க் காண்டம் கரிகாலன் காலத்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். [இப்படி எண்ணிக் கொண்ட தமிழறிஞரும் மிகப் பலர்.] அது முற்றிலும் தவறு. புகார்க் காண்டத்தில் சோழன் கரிகாலன் இளங்கோவால் இறந்த காலத்திலேயே பேசப்படுகிறான்; நிகழ்காலத்தில் பேசப்படவே இல்லை.

புகாரைத் தலைமையிடங் கொண்ட சோழன் [இவன் பெயர் மாவண் கிள்ளி என்று மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாய் அறிகிறோம்.] இவன் சேரன் செங்குட்டுவனைச் சற்றும் மதியாதவன். [வஞ்சிக் காண்டத்தில் இவன் சேரனை மதியாத நிலை புலப்படுகிறது.] இவன் செங்குட்டுவனால் மட்டுமல்ல, நெடுஞ்செழியனாலும் கூடப் பெரும் நிலத்தை இழந்திருக்க வேண்டும். ஏனென்றால் உறையூருக்கு மிக அருகில், திருவரங்கத்தில், கோவலனைச் சந்திக்கும் மாடல மறையோன், சோழனின் புகழ் பாடாமல், தென்னனின் புகழ் பாடுகிறான். பொதுவாய் எந்தவொரு நிலத்திலும், அடியவர்கள் ”hail the king” என்ற தோரணையில் பேச்சைத் தொடங்கும் போது, அந்தந்த நிலத்து வேந்தனை அல்லது அரசனைப் பற்றிப் பாடுவதே சங்க இலக்கிய மரபு. [தான் எந்த நாட்டைச் சேர்ந்தவனோ, அந்த நாட்டரசனைப் பாடமாட்டார்கள்.] மாடலன் சேரநாட்டவன் - குடமலையில் இருக்கும் மாங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவன் - இங்கு திருவரங்கத்தில் இருந்து கொண்டு தென்னன் புகழ் பாடுகிறான் என்றால் திருவரங்கமும் (அதற்குக் கிழக்கிலும் கூடச் சில தொலைவு) பாண்டியனின் ஆட்சிக்குக் கீழ் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதோடு அல்லாமல், ”புகார்ச் சோழனின் நிலம் பெரிதும் குறைந்திருக்க வேண்டும்” என்ற உண்மையை நாடுகாண் காதையில் வரும் மற்ற செய்திகளாலும், ஏரண முடிவாலும், உணர்ந்துகொள்ளுகிறோம். [அதன் விளக்கத்தைக் கீழே தருகிறேன். சற்று பொறுத்திருங்கள்.]

இதே பொழுது, உறையூரைத் தலைமையிடங் கொண்ட சோழனின் நிலம் புகார்ச் சோழனின் நிலத்தைக் காட்டிலும் கூட இன்னுஞ் சிறியதாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் உறையூர் ஆன்பொருநைக் கரூருக்கு மிக அருகில் உள்ளது. பாண்டியன் நிலம் பெரிதாகவும், புகார்ச்சோழனின் நிலம் மிகச் சிறிதாகவும் இருக்கையில் அங்கிருக்கும் புவிக்கிறுவம் (geography), உறையூர்ச் சோழனின் நிலத்தை இன்னுஞ் சிறிதாகவே காட்டும். அதே நேரத்தில் ஆன்பொருநைக் கரூருக்கு அருகில் இருந்த சேரநாட்டு எல்லையைத் தொட்டுக் கொண்டு, அதன் நீட்சி போல உறையூர்ச் சோழனின் குறுநிலம் இருந்திருக்கலாம். உறையூர்ச் சோழன் செங்குட்டுவனின் மைத்துனன் என்பது சிலம்பின் வஞ்சிக் காண்டத்தால் தெரிகிறது. அவன் இயற்பெயரைச் சொல்லாமல் அவன் தாத்தனின் (இவன் செங்குட்டுவனுக்குத் தாய்வழித் தாத்தன்) பெயராய் ஞாயிற்றுச் சோழன் என்று குலப்பெயர் மட்டுமே, சிலம்பிற் குறிக்கப் பட்டிருக்கிறது. முன்னே சொன்னது போல் செங்குட்டுவன் மைத்துனனும் ஒரு கிள்ளியே. அவன் பங்காளிகள் ஒன்பது பேருடன் சண்டையிட்டு, நிலத்தை இந்தக் கிள்ளிக்காகப் பிடுங்கிக் கொடுத்தது செங்குட்டுவனே என்பதும், சிலம்பின் சமகாலத்தில் உறந்தையும், புகாரும் சோழர் தலைநகர்களாய்ச் சொல்லப் படுவதால், புகார்ச் சோழன் சேரனை உறவினனாய் ஏற்றிருக்க மாட்டான் என்பதும் பதிற்றுப் பத்தால் வெளிப்படுகிறது. உறையூர்ச் சோழனின் கிழக்கு, வடக்கு, வடமேற்கு எல்லைகளையொட்டிச் சேரர் நிலமும், தெற்கில் பாண்டியர் நிலமுமாய் இருந்து முற்றிலும் நிலத்தால் அடைபட்ட மிகக் குறுகிய பகுதியாய் உறையூர்ச் சோழ அரசு இருந்திருக்கலாம். மொத்தத்தில் உறையூர்ச்சோழன் செங்குட்டுவனின் கீழுள்ள ஒரு குறுநில அரசனாகவே அன்று இருந்தான் என்று நாம் கொள்ள முடியும்.

உறையூர்ச் சோழனுக்கும், புகார்ச் சோழனுக்கும் இருந்த நிலங்களை இணைக்க எந்தப் பெருவழியும் இருந்ததாய்த் தெரியவில்லை. ஒருவேளை காவிரி ஆறு மட்டும் மெல்லிய இழையாய் இந்த இரு சோழ நிலங்களையும் இணைத்ததோ, என்னவோ?

புகார்ச் சோழனின் நிலத்தைத் தெற்கிலும், தென்மேற்கிலும் வளைத்து எல்லை கொண்டது பாண்டியனாய் இருக்கலாம். அதே பொழுது வடமேற்கிலும், வடக்கிலும், அவனை எல்லை கொண்டது சேரன் செங்குட்டுவனாக இருந்திருக்கலாம். செங்குட்டுவனின் மாற்றாந்தாய் அண்ணனான பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஒரே நாளில் குணகடல், குடகடல் நீரை யானைகள் மூலம் கொண்டுவந்து ஒரு பகலிற் புனலாடியதாகப் பதிற்றுப் பத்தில் பாலைக் கௌதமனார் பாடிய மூன்றாம் பத்தின் பதிகம் சொல்கிறது. எனவே குண, குட கடற்கரைகள்
இரண்டுமே சேரரின் ஆளுகைக்குள் இருந்திருக்கலாம். அதாவது புகார்ச் சோழனின் நிலம் கிழக்கில் கடல், வடக்கு-வடமேற்கில் சேரர் நிலம், தெற்கு-தென்மேற்கில் பாண்டியர் நிலம் என்று மூன்று பக்கம் சிக்கிக் கொண்டிருந்திருக்கலாம்.

இந்தப் பின்புலத்தோடு சிலம்பிற்கு வருவோம். நாடுகாண் காதையின்

காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் (154-155)

154-155 ஆம் அடிகள் மூலம் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் ஒரு நாளைக்கு ஒரு காவதம் (6.7 கி.மீ) நடந்தார்கள் என்பதையும், ஆங்காங்கு தங்கி ஓய்வெடுத்தே சென்றார்கள் என்பதும் புலப்படுகிறது. [இவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு உறையூர் வாய்ப்பானதாய் இருந்தது போலும்.]

இனி, இன்றைக்குப் பெறப்படும் தொலைவுகளை மனத்திற் கொண்டு, மேலே சொன்ன ஆறைங்காதத்தை உள்வாங்கிப் பார்ப்போமா?.

இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை வரை செல்லும் தொலைவு = கிட்டத்தட்ட 100 கி.மீ
இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை உள்ள தொலைவு = 53.75 கி.மீ.

திருச்சிராப்பள்ளியில் இருந்து, காவிரிக் கரையை ஒட்டியே தஞ்சாவூர் வரை கிழக்கு நோக்கிச் சாலை ஒன்று போகிறது. காவிரியாறு தஞ்சாவூருக்கு அப்புறம் சற்று வளைவு எடுத்து வட கிழக்காய்ப் போய் கடலை அடைகிறது. வரலாற்றில் சென்ற 2000 ஆண்டுகளில் காவிரி ஆறு தஞ்சாவூருக்கு அப்புறம், வெவ்வேறு ஆற்றுப் படுகைகளையும், கிளையாறுகளையும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்றைக்கு இருக்கும் ஆற்றுப் போக்கே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று உறுதியாகக் கூற முடியாது. இருந்தாலும், திருச்சிராப்பள்ளிக்கும், தஞ்சாவூருக்கும் இடையே காவிரியின் ஆற்றுப் போக்கு வரலாற்றில் மாறவில்லை என்பதைக் கல்லணையைக் கொண்டே உணர முடியும். எனவே காவிரிக் கரையோரம் நடந்து வந்து அடிகளும், கோவலனும், கண்ணகியும், தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி (=உறையூர்) தொலைவை உறுதியாகக் கடந்திருப்பர் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் தொலைவு = 54.6 கி.மீ.

தஞ்சாவூருக்கு அப்புறம் புகாருக்கான தொலைவு கிட்டத்தட்ட 100 கி.மீ என்று பல்வேறு விரிவான நில முகப்புகளின் (land maps) மூலம் மதிப்பீடு செய்யலாம். இதுவரை பார்த்த பகுதித் தொலைவுகளைப் பட்டியலிட்டுப் பின் கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் (நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத்தின்) தொலைவை மதிப்பிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து உறையூருக்கு = கிட்டத்தட்ட 54.6 கி.மீ
உறையூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 53.75 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ [மறந்து விடாதீர்கள், பழைய மதுரை எரிபட்டுப் போனது. இன்றைய மதுரை வெற்றிவேற் செழியனுக்கு அப்புறம் சற்றே இடம் மாறி எழுந்து நிற்கிறது. இந்தக் கரணியத்தாலும் 100 கி.மீ என்பது சற்று மாறுபடும். ஆனாலும் அதைத் தரவு இல்லாத கரணியத்தால் ஒதுக்குகிறோம்.]

ஆக, கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் தொலைவு மதிப்பீடு = நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத் தொலைவு மதிப்பீடு = 100+54.6+53.75+100 = கிட்டத்தட்ட 308.35 கி.மீ [கொடுமுடி சண்முகம் தன் பொத்தகத்தில் இதை 300 கி,.மீ என்று மதிப்பிடுவார்.]

இனி உறையூர் வராமல், தஞ்சாவூர் வழி நேரே கொடும்பாளூர் வரும் தொலைவு = 57.39 கி.மீ என்பதனால், புகாரில் இருந்து மதுரைக்கு செல்லக் கூடிய ஆகச் சுருக்கமான தொலைவைக் கீழ் வருமாறு கணக்கிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 57.39 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ

கோவலன் போக நினைத்த பாதையின் தொலைவு = 100+57.39+100 = கிட்டத்தட்ட 257.39 கி.மீ [கோவலன் நினைத்த பாதையிற் போகாமல் கவுந்தியடிகள் தேர்ந்த பாதையில் மூவரும் போனதால், கிட்டத்தட்ட 51 கி.மீ அதிகமாய் அவர்கள் பயணம் போயிருக்கிறார்கள்.]

இதில் புகார்ச் சோழநாட்டிற்கு வெளியே உள்ள தொலைவு = 30 காதம் = 201 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 100.5 கி.மீ. ஆகும்.

எனவே புகாரில் இருந்து புகார்ச் சோழநாட்டின் எல்லை = 257.39 - 201 = கிட்டத்தட்ட 56.39 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 156.89 கி.மீ ஆகும். முன்னாற் சொன்னது போல் உறையூருக்குச் சற்று தொலைவில் திருவரங்கத்தில் மாடல மறையோன் தென்னவன் புகழ் பாடுவதைக் கருத்திற் கொண்டால், தென்னவன் நிலம் புகார்ச் சோழன் நிலத்திற்கும், உறையூர்ச் சோழன் நிலத்திற்கும் இடையில் ஆற்றை ஒட்டி சற்று அகலமாகவே இருந்திருக்க வேண்டும். வடபுல வாய்ப்பாட்டின் பார்த்தால், புகார்ச்சோழனின் எல்லை உறையூரின் கோட்டையையே தொட்டுவிடும் போல் இருக்கிறது. எனவே தென்புல வாய்ப்பாடே இங்கு சரியாக அமைகிறது.

இதை வைத்துப் புகார்ச் சோழநாடு எவ்வளவு சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது எண்ணிப் பாருங்கள். ஆறைங்காதம் என்ற தொடர் தான் புகார்ச் சோழ நாட்டின் எல்லை பற்றிய புரிந்துணர்வை நமக்கு அவிழ்த்துக் காட்டியது.

என்னவொரு வியப்புப் பாருங்கள். காதம் என்ற அளவீட்டை வைத்துக் கொண்டு சிலம்பில் வரும் “ஆறைங்காதத்தை” அலசினால் ஒரு பெரிய வரலாற்று உண்மையே வெளிவருகிறது.

இரண்டு சோழரும் கிட்டத்தட்டக் குறுநில அரசர் போலவே இருந்திருக்கிறார்கள். [ஒருவன் செங்குட்டுவனின் மைத்துனன், இன்னொருவன் செங்குட்டுவனை ஏசிக் காட்டும் எதிராளி] அதே பொழுது, சேரனும், பாண்டியனும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். அதிலும் சேரன் பெருங்கொடி கட்டி ஓகோ என்று உச்சத்தில் இருந்திருக்கிறான். தமிழ் மூவேந்தரின் தான் தான் உச்சம் என்று எண்ணிக் கொண்ட இவன் வீறுகொண்டு வடபுலத்திற்குப் படையெடுத்துப் போனது வியப்பில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும்; சிலம்பிற்குள் இருக்கும் குறிப்புக்களை நாம் வெறுஞ் சாத்தாரமாகக் கொள்ளமுடியாது. அதற்குள் வரலாற்றுக் குறிப்புக்கள் ஏராளமாய்க் கிடக்கின்றன. நாம் தான் ஆய்ந்து அறியவேண்டும். இந்தக் காதக் கணக்கீடு ஒரு சோற்றுப்பதம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 07, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 5

முழத்திற்கு அடுத்தது கோல். இந்தப் பகுதியில் சிறுகோல், கோல், பெருங்கோல் (=தண்டம்) ஆகிய எல்லாவற்றையும் பார்க்கப் போகிறோம். கோல், கம்பு, கழி, தண்டு, தடி ஆகிய பல மரக்கிளைச் சொற்களும் திரட்சிப் பொருளிலேயே உருவாகியுள்ளன. விதையிலிருந்து முளைத்துச் செடியாகிப் பின் மரமாகும் போது தண்டுப் பகுதிகள் திரட்சி பெறுகின்றன. திரட்சி கூடும்போது அந்த உறுப்புகளுக்கு வலுவும் கூடுகிறது.

குல், கும் ஆகிய வேர்கள் திரட்சி, சேருதல், கூடுதல் ஆகிய பொருள்களைத் தர வல்லன. கும்முதல் வினை திரளும் வினையையும் குறிக்கிறது, கும்> கொம்> கொம்மை என்பது திரட்சியைக் குறிக்கும். கும்>குமர்>குமரி என்பது உடலால் சிறுத்த சிறுமி, பருவம் வரும போது, உடல்திரட்சி அடைவதைக் குறிக்கிறது. கும்மித் திரண்டு எழுந்த பெண் என்ற பொருளிலேயே குமரி என்று அழைக்கப் படுகிறாள். குமர்ப் பருவம் = பெரிய பெண் பருவம். அதேபோல, ஒரு கண்டத்தின் முனையாய் குறுகிக் கூர்ந்துபோகாது, அகண்டு திரண்டு இருந்ததோடு, முனையாயும் ஆகிப் போனதால், தமிழகத் தென்முனை குமரி முனை என அழைக்கப் படுகிறது. கும்> கொம்> கொம்பு என்பது மரக்கிளையைக் குறிக்கும். இதே சொல் ஒகர, அகரப் பலுக்கற் திரிவில் கம்பாக ஒலித்தும் அதே பொருளைக் குறிக்கும். கம்பு + இ = கம்பி என்றாகி, மாழைக் கம்புகளையும், அதன் நீட்சிகளையும் குறிக்கும்.

கும்மல்> குமியல்> குவியல் என்ற வளர்ச்சியும் திரட்சிப் பொருளையே குறிக்கும். மகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலியானவை.

குல்> குலை என்ற சொல்லும், இலை, காய், கனி ஆகியவை எண்ணிக்கையிற் திரண்டதைக் குறிக்கும். குல்>குலம் என்பது ஒரே குடிவழியில் திரண்ட மக்களைக் குறிக்கும். குல்> குலவுதல் = கூடுதல் என்பதும் திரட்சியால் உருவானதுதான். ஏன், குலவுதல்> கலவுதல்> கலவி என்பது கூட ஆண், பெண் கூடலைக் குறிக்கும் சொல் தான். குல்> குற்று> குத்து> கொத்து என்ற சொல்லும் இலைக்கொத்து, காய்க்கொத்து, கனிக்கொத்து போன்றவற்றை, அவற்றின் திரட்சி கருதியே குறிக்கும். குல்> குர்> குரல் என்ற சொல் நெற்கதிர் போன்ற பயிர்க்கதிர்களைக் குறிக்கும்.

குல்>குல்வு>குல்வுதல்>குவ்வுதல் என்பது கூடுதலைக் குறிக்கும். குவ்>குவை என்பதும் திரளும் குவியலைக் குறிக்கும். குவ>குவவு என்பதும் திரட்சியைக் குறிக்கும். குவ்> குவல்> குவால் என்பவையும் நிறைவு, திரட்சியைக் குறிக்கும் சொற்கள் தான். துவல் எனும் சொல் எப்படி நிறைவைக் குறிக்கிறதோ அப்படியே குவல் என்பது திரட்சியைக் குறிக்கும். குவல்> குவள்> குவடு> கோடு என்ற சொல் திரண்ட சிகரத்தைக் குறிக்கும்.

கோல் என்ற சொல் குல்> குவல்> கோல் என்ற வளர்ச்சியில் திரண்ட மரக்கிளையைக் குறிக்கும். குல்> குழு> கழு> கழி என்ற சொல்லும் மரக்கழியையை, விதப்பாக மூங்கில், கரும்பு போன்றவற்றின் தண்டைக் குறிக்கும்.

இனிச் சிறுகோலுக்குப் போவோம். முன்னே கொடுத்த வாய்ப்பாட்டைப் பார்த்தால் 1 சிறுகோல் என்பது 24 பெருவிரலுக்குச் சமம் என்பது புரியும்.

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

இந்த வாய்ப்பாடு சிலம்புக் காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கிறது என்கிறாற் போல் சிலம்பின் அரங்கேற்று காதையில் வரும்

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரலாக (99-100)

என்ற 99-100 ஆம் அடிகள் பதிவு செய்யும். இங்கே சிறுகோலே உணர்த்தப்படுகிறது என்பது 24 (பெரு)விரல் என்பதில் இருந்து விளங்குகிறது. [விரற்கிடையாய் இருந்தால் 48 என்று சொல்லப் பட்டிருக்கும். தவிர, 24 விரற்கிடை என்பதே பொருள் என்றால், சொல்லப்படும் அரங்க அளவு கூத்திற்கு உகந்ததாய் ஆகாமல், மிகச் சிறியதாய் இருந்திருக்கும். எனவே கூடுகை [= கூடிவரும் பொருள், இதைத்தான் ஆங்கிலத்தில் context என்று சொல்கிறார்] பார்த்துப் புரிந்து கொண்டால், இது பெருவிரலாகவே இருக்க முடியும்.]

சங்க காலத்திலும் புழக்கத்தில் இருந்திருக்கக்கூடிய இவ் வாய்ப்பாட்டை வெறும் எண்ணுதியாய்ப் (numerical) புரிந்து கொள்ளாமல், மனக்கண்ணில் காட்சி தோன்றுமாப் போல, பூதியற் போல்மம் (physical model) ஒன்றை உருவகிக்கலாமா? அரங்கேற்று காதையில், மாதவி ஆடிய கூத்தரங்கின் அளவு

”எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் ........................” (101-106)

என்ற வரிகளால் சொல்லப்படும். அதாவது, கூத்து மேடையின் அகலம் 7 சிறுகோல் (= 19 அடி 3 அங்) இருந்ததாம், அதன் நீளம் 8 சிறுகோல் (= 22 அடி) இருந்ததாம். அரங்கப் பலகையின் (stage) மட்டம் (இதைக் குறட்டுயரம் என்று கொடுமுடியார் சொல்வார்.) 1 சிறுகோல் (= 2 அடி 9 அங்.) உயரத்தில் அமைந்ததாம். பொதுவாய், அரங்கப் பலகையின் மேல் மேடைத் தூண்களும், அந்தத் தூண்களின் மேல் உத்தரங்களும் அமர்த்தப் பட்டிருக்கும். உத்தரங்களை ஒட்டிக் கயிறுகளைப் பிணித்திருப்பார். அந்தக் கயிறுகளில் எழினிகள் (திரைச்சீலைகள்) தொங்கும். [உத்தரங்கள் இல்லாத பழைய வீடுகள் நம் நாட்டுப்புறங்களில் உண்டோ?] உத்தரங்களுக்கும் மேலே அமைவது உத்தரப் பலகை. இதை விதான மட்டம் (=ceiling) என்றும் கட்டுமானவியலிற் கூறுவார். உத்தரப் பலகைக்கும், அரங்கப் பலகைக்கும் இடைப்பட்ட அரங்குயரம் = 4 சிறுகோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி. இப்பொழுது கூத்தரங்கத்தை உருவகிக்க முடிகிறதா? மாநெடுங்கண் மாதவி நடமாடிய கூத்தரங்கு உண்மையிலேயே அந்தக் காலத்திற்குப் பெரியது தான்.

கல்வெட்டாய்வாளர் திரு.சு.இராசுகோபால் எடுவிப்பில் (editing) வெளிவந்த “Kaveri - Studies in Epigraphy, Archaeology and History” [பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2001] என்ற பொத்தகத்தில் பேரா. ஒய்.சுப்பராயலுவின் ”Land measurements in Medieval Tamilnadu" என்னும் கட்டுரையில் பல்வேறு மாவட்டங்களில் கிடைத்த, கி.பி.800 இல் இருந்து 1350 வரையிலும் இருக்கும், நில அளவீடுகளைக் குறிக்கும் 51 கல்வெட்டுக்களைக் கொண்டு ஒரு புள்ளி விவரம் குறித்திருப்பார். அதன் மூலம் 11 அடிப் பெருங் கோல் (=132” = 16 சாண்) என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 57 விழுக்காடு பரவலான புழக்கத்தில் 550 ஆண்டுகள் வரையும் இருந்தது என்பதும், இது பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பெரிதும் புழங்கியது என்றும், பாண்டியர் வந்து 18 சாண் கோலாய் மாற்ற முயன்றும், அது நிலைக்காமல், 16 சாண் கோலே பெரும்பான்மைப் புழக்கத்தில் இருந்தது என்பதும் தெரிகிறது.



அடுத்து துலை பற்றிய செய்தியைப் பார்ப்போம். அந்தக் காலத் துலை ஒரு சிறுகோல் நீளம் இருந்திருக்கலாம். [அதாவது 2.75 அடி அல்லது 24 விரல். நடுவில் இருக்கும் துலைமுள்ளில் இருந்து இருபக்கமும் 12 விரல் தொலைவில் எடைகள் தூக்கும் பலங்கைகள் தொங்க வேண்டும்.]

சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

என்ற 118 ஆம் குறட்பா இதைத்தான் குறிக்கிறது. இந்தப் பாவில் “கோல்” என்ற சொல் துலையையும் குறிக்கிறது, ”சிறுகோல்” என்னும் அளவையும் குறிக்கிறது.

அடுத்து ”புகார் நகரில் வானகிரிப் பகுதியில் ஒரு தூம்பு அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அதன் வாய் அகலம் 84 செ.மீ (33 அங்குலம்) அதாவது ஒரு சிறுகோல் அளவு ஆகும். செந்தர அளவு தொன்றுதொட்டு இருந்ததற்கு முதன்மைச் சான்று இதுவாகும்” என்று கொடுமுடியார் குறிப்பிடுவார். கோலுக்கு வில் (=தனு) என்ற இன்னொரு பெயரும் வழங்கியது. [ஒருவேளை, அந்த நாள் வில்லின் நாண் நீளம் ஒரு கோலோ, என்னவோ? ஆய்வு செய்யப் படவேண்டிய செய்தி.]

அடுத்து நாம் பார்க்கப் போவது, ஓர் ஆளுயரம் எனச் சொல்லப்படும் கோல் = 2 சிறுகோல் = 5 1/2 அடி. ஒரு சாத்தாரத் தமிழரின் செந்தர உயரமென்று இதைத் தான் அக்காலத்தில் கொண்டார் போலும். ஓராள் உயரத்தைச் செங்கோல், தண்டு என்று சொல்வது ஓரோவழி வழக்காகும். குறளில் கோல் எனும் சொல்லாட்சி செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களில் ”மன்னவன் கோல்” என்று ஆளப்படுகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

இங்கே மன்னவனின் கோல் 2.75 அடியாக இருக்க வழியில்லை. 11 அடியாகவும் இருக்க முடியாது. இது பெரும்பாலும் ஓராளுயரமாய் 5 1/2 அடி இருக்கவே வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் fathom என்ற அளவு ஒரு காலத்தில் 5 1/2 அடியைக் குறித்தது. பின்னால் அது 6 அடியையும் குறித்தது. இவ்வழக்கும் வடவர் வழக்கும் ஒன்றாகிறது. அர்த்த சாற்றத்தில் இவ்வழக்கே சொல்லப்படும். . “தனு இரண்டதுவோர் தண்டம்” என்ற கந்தபுராணம் அண்டகோ.6 ஆம் கூற்று 5 1/2 அடி வழக்கைப் பின்பற்றியது. [தனு - வில் - என்ற சொல் 5 1/2 அடி நீளத்தையும் குறித்து, 2 3/4 அடி நீளத்தையும் குறித்திருப்பது வெவ்வேறு வட்டார வழக்குப் போலும்.]

முருகனைத் தண்டபாணி என்று சொல்லும்போது, அவன் கையில் வைத்திருக்கும் தண்டு 5 1/2 அடி உயரம் கொண்டதாகவே இருக்கலாம். முருகன் கை வேலும், தமிழர் வேலும் கூட 5 1/2 அடி உயரமே இருத்தல் இயலும். [ஐயனார் கோயில்களில் நேர்ந்து கொண்ட அல்லது நேர்ந்து கொள்ளும் வேல்களை அளந்து பார்க்க வேண்டும்.] இக்காலத்தில் சவளம் எறிவது பற்றியும் ஈட்டி 8 முழம் என்பதில் மிக்குயர்ந்த உயரம் பற்றியும் சென்ற பகுதியிற் பேசினோம்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567

என்ற குறளில் வரும் ”கையிகந்த தண்டம் - கையில் இருந்து வெளிப்பட்ட தண்டம்” கூட 5 1/2 அடி அளவினதாக இருக்கவே வாய்ப்பு உண்டு. 11 அடித் தண்டமாய் இருக்க வழியில்லை. இதேபோல தண்டச்சக்கரம் என்ற சொல்லால் குயவனது திருகையும், கோலும் உணர்த்தப் படும் போது, அந்தக் கோலும் 5 1/2 அடி தான் இருக்க முடியும். தண்டஞ் செய்து வணங்குதல், தண்டனிட்டல் ஆகியவற்றிலும் ஓராள் உயரமே சொல்லப் பட முடியும். ஓர் உலக்கை என்பதும் கூட ஆளுயரம் உள்ள கோலையே குறிக்கும். மொத்தத்தில் தண்டத்தைக் குறிக்க இரு வேறு பட்ட வழக்கு (5 1/2 அடி, 11 அடி) நம்மிடை இருந்து பின்னால் 5 1/2 அடித் தண்டமே வடவர் பால் பரவியது போலும். எனவே நாம் பழைய ஆவணங்களில் கோல், தண்டம் என்ற சொற்களை ஆளும் இடங்களில் கூர்ந்து பார்த்து வேறுபாடு தெரிந்து பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் தான் பல சோழர் காலக் கோயில்களின் பீடச் சுவர்களில் அங்கு பயன் படுத்தப்பட்ட அளவீடு பூதியலாகவே குறிக்கப் பட்டது போலும். காட்டாகப் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டா புரம் சிவன் கோயிலில் 1 தண்டம் = 11 அடி அளவீடு குறிக்கப் படும். இன்றைக்கும் மாளிகை வீடுகளில் ஒரு தளத்திற்கும், இன்னொரு தளத்திற்கும் இடையே விடப்படும் உயர இடைவெளி பெரும்பாலும் 10.5 அடியாய் இருப்பது, தண்டம் என்னும் அளவுகோலின் திரிவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

இனி நம்மூர்த் தண்டத்திற்கும் இரட்டை மாட்டுவண்டிச் சக்கரத்திற்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்போம். வட்டத்திற்கும் விட்டத்திற்கும் இடையே உள்ள ”பை (pi)” என்னும் தொடர்பு நெடுநாளைக்கு முன்னேயே தமிழர்க்குத் தெரிந்திருக்க வேண்டும். சங்க காலத்திற்கு அப்புறம் [விருத்தப் பாக்கள் எழுந்த காலத்தில்] இருந்த காக்கைப் பாடினியார் பாடியதாக வரும்

விட்டமோர் எழு செய்து திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டிச் செய்யின் திகைப்பன சுற்றுத் தானே

என்ற பாட்டில் விட்டத்தில் இருந்து வட்டச் சுற்றின் நீளத்தைக் கண்டுபிடிக்கும் வகை சொல்லப் படும். வட்டச்சுற்று = 2*(7+4)*D/7. ஆக (22/7) என்னும் பின்னம் வெகு நாட்கள் முன்னாலேயே தமிழர்க்குத் தெரிந்துள்ளது. ஆனால் எந்தக் காலத்தில் இருந்து இக் குணகம் [factor] தெரிந்ததென்று முடிவுசெய்யத்  தொல்லியலே  உதவிசெய்ய வேண்டும். [வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க,

வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி

என்ற தனிக்குறட்பா உதவி செய்யும். மேலே தாக்குதல் என்ற வினை பெருக்குதலை உணர்த்துவதைக் “கணக்கதிகாரம்” என்ற நூல் வழியாகவும் அறியலாம். குழி என்பது பரப்பைக் குறிக்கும் சொல். இதைத் தண்டச் சதுரம் என்று சொல்லியிருக்கிறார்.]

இனி இரட்டை மாட்டுவண்டிச் சக்கரத்திற்கு வருவோம். பொதுவாய் இந்த வண்டிச் சக்கரத்தின் விட்டம் இன்றுங் கூட 5.25 அடியே இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், மேலே உள்ள குணகமான (22/7)-ஓடு பெருக்கினால் சக்கரத்தின் சுற்றளவு 16.5 அடி (அதாவது 1.5 தண்டம்) ஆகிறது. எனவே சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றினால், வண்டி 1.5 தண்டம் நகருகிறது. இரட்டை மாட்டு வண்டிகள் பொதுவாகப் பார வண்டிகளாகவே நம்மூரில் அமையும். அவை ஆட்கள் போவதற்கான வண்டிகள் அல்ல. சக்கரம் ஒரு சுற்றுப் போக, 1 தண்டம் நகர வேண்டுமானால், சக்கரத்தின் விட்டம் 3.5 அடி இருக்க வேண்டும். [ஒருவேளை அந்தக் கால ஒற்றை மாட்டு வண்டிகள்/ஒற்றைக் குதிரை வண்டிகளின் சக்கரம் இந்த அளவா என்று தெரியாது. இது போன்ற ஒற்றை மாட்டு வண்டிகளில் நான் போயிருக்கிறேன். அவை இரட்டை மாட்டு வண்டிச் சக்கரங்களைக் காட்டிலும் சிறியவை. ஆனால் அவற்றின் விட்டம், சுற்று ஆகியவற்றை அளக்க வேண்டும் என்று அப்பொழுது தோன்றியதில்லை. இப்பொழுது நாட்டுப்புறங்களில் யாரேனும் அளந்தால் பயனுள்ளதாய் இருக்கும்.]

முன்னே சொன்னது போல், விரல் என்னும் அளவிற்கு இருந்த குழப்பம், சிறுகோல் (= 2 3/4 அடி = 33 அங்குலம்), கோல் = (தண்டு, ஓராள் உயரம் = 5 1/2 அடி), பெருங்கோல் = (தண்டம் = 11 அடி) என்ற மூன்று அளவைகளிலும் உண்டு. அவை மூன்றையும் கோல் என்ற ஒரே சொல்லால் வெவ்வேறு இடங்களில் அழைத்திருப்பதால், இடம், பொருள், ஏவல் பார்த்துச் சரியான அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காட்டாக, உத்தரமேரூரில் கி.பி.921 ஆம் ஆண்டில் பராந்தக சோழன் ஏற்படுத்திய கல்வெட்டில் உள்ள செய்திகளைப் பார்ப்போம்.

1. ஸ்வஸ்திஸ்ரீ [II*] மதிரை கொண்ட கோப்பரகேசரிபன்ம[ர்*]க்கு யாண்டு பதினாறாவது நாள் இருநூற்று இருபத்திரண்டு காலியூர்க் கோட்டத்து தன்கூற்று உத்தரமேருச் சது[ர்*]வவே[திமங்கலத்து] மாஸபையோம் எழுத்து எம்மூர்த் தெற்கில் பரமேஸ்வர வதி நீராயிட்டு காலியுங் களறும் உள்ளிட்டு மற்று[ம்*] எப்பேர்ப்பட்ட சாதியும் இசங்குவது அரிதாயிட்டு பரமேஸ்வர வதியான முக்கோலோடும் குறை

2. மேற்க்கடைய குடிகள் பக்கல் ஸுப்ரஹ்மண்ய வாய்க்காலுக்கு வட(க்)கிழக்கு மேக்கு இருகோல் அகலங் குழி கொண்டு பழை வதியிலும் ஒருகோல் ...................... ற்காடேய் முக்கோல் அகலத்தால் வதி அட்டிக் கீழ்க்கடை நீர் போவதா[க]வும் ஸுப்ரஹ்மண்ய வாய்க்காலுக்குத் தெற்க்கு ஒரு கண்[ணா]று குடிகள் பக்கல் கிழக்கு மேற்க்கு ஒரு கோல் அகலங் குழி கொண்டு இவ்வொரு கண்ணாறு வதியிலே

3. ஒரு கோலுமாக இருகோல் அக[ல*]ங் கொண்டு வதி யட்டுவதாகவும் அதன் றெ[ற்*]க்கு ஆஸுரியார் எரியளவும் பழையவதியிலே இரு கோல் அக[ல*]த்தால் வதி அட்டுவதாகவும் ........................... வனாக்காய் ஊர்மேல் நின்ற திருவடிகளே கடைக்காட்சியாக இவனே இவதி அட்டிவிப்பானாகவும் இப்பரிசு குடிகள் பக்கல் கொள்ள வேண்டும் பூமிக்கு இவ்வாண்டு தோட்டவாரியஞ் செய்கின்ற தோட்டவாரிய

4. ப்பெருமக்களே பூமி விலைக்குக் [கொ]ண்டு வதிக்கு வேண்டும் ப்ர்யப்பட்டு திருவடிகள் கடைக்காச்சியால் வதி யட்டுகவென்று [மா]ஹாஸபையைத் திருவடி பணித்த ................... ஊரின் றெ[ற்*]க்கு முதற் கண்ணாற்றில் மாதவச்சேரி ஸபையோர் பக்கல் வதி அட்டுவதாக விலைக்குக் கொண்ட குழி இருபத்தெட்டும் பந்தல் பாடகத்து வதி யட்டுவதாகக் கொண்ட குழி கிழக்கு மேக்கு இரு கோலால் தெற்க்குவடக்கு ப

5. தினா[லு*]க் கோலால் விலைக்குக் கொண்ட குழி இருபத்தெட்டும் பந்தல் பாடகத்து வதி யட்டுவதாகக் கொண்ட குழி கிழக்குமேற்க்கு இரு கோலால் தெற்குவடக்கு பதினை[ங்கோலா]ல் வந்த குழி மு[ப்]ப(த்)தும் ஊரின் றெ[ற்]க்கு இரண்டாங் கண்ணாற்று கொரஞ்சி ஸ்ரீதர து[ர்க்க]ய க்ரமவித்தர் பக்கல் விலைக்கு கொண்ட குழி கிழக்குமேற்க்கு இருகோலால்தெ[ற்*]க்குவடக்கு பதினைங்கோலால் வந்த குழி முப்ப

6. தும் ஆஸுரி உருத்ரகுமாரக் க்ரம[வி]த்தர் பக்கல் கிழக்கு மேக்கு [இ]ருகோலால் தெக்குவடக்கு பதினைங்கோலால் விலைக்குக் கொண்ட குழி முப்பதும் ஊரின் றெ[ற்*]க்கு மூன்றாங் கண்ணாறுக் காரம்பிச்செட்டு பரமேஷ்வரதஸபுரிய பட்டர் பக்கல் கிழக்குமேற்க்கு இருகோலால் தெற்க்கு பதினைங்கோலால் கொண்டகுழி முப்பதும் ஆதம்பத்து பசருத்ர க்ரமவி

7. த்தச் சோமாசியார் பக்கல் கிழக்கு மேற்க்கு இருகோலால் தெ[ற்*]க்கு வடக்குப் பதினைங்கோலாற் கொண்ட குழி முப்பதும் ஊரின் றெ[ற்*]க்கு நாலாங் கண்ணாற்று உறுத்த போசர்ஸோமதேவபட்டர் பக்கல் கிழக்குமேக்கு இருகோலால் தெற்க்குவடக்கு பதினைங்கோ[லா]ற் கொண்ட குழி முப்பதும் ஸுரஸாரம்பி [நாரா]ய.......... புரிய[பட்ட]ர் பக்கல்

8. கொண்ட குழி கிழக்கு மேற்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏ[ழ*]ரைக் கோலால் கொண்ட குழி பதினை..................க்ரமவித்த சோமாசியார் மகனார் தோணவிஷ்ணுக்ரமவித்தர் பக்கல் கொண்டகுழி கிழக்குமேர்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொண்டகுழி பதி

9. னைந்தும் ஊரின் றெ[ற்*]க்கு அ[ய்*]ந்தாங் கண்ணாற்று உறுப்புட்டுர் சேட்டகுன்றக்ர[மவித்தன் ம]கன் கொண்டகுமாரசர்ம்மன் பக்கல் கிழக்கு மேற்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொண்டகுழி ஏழரையும் [மா]ங்களூர் நாராயண சேட்ட க்ரமவித்

10. தர் பக்கல் கிழக்குமேர்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொ[ண்ட*] குழி ஏழரையும் அக்கிப்புறத்து நாராயணக்ரமவித்தர் பக்கல் கிழக்குமேர்க்கு ஒரு கோலால் தெற்க்கு ஏழரைக்கோலால் கொண்ட குழி ஏழரையும் நந்திகாமத்து களமாய்ததஸ

11. புரியன் பக்கல் கிழக்குமேற்க்கு ஒரு கோலால் தெற்க்குவடக்கு ஏழரைக் கோ[லா]ல் கொண்ட குழி ஏழரையும் ஊரின் றெ[ற்*]க்கு ஆறாங் கண்ணாறு அய்யக்கி இளைய ஜ்யேந்த்ர ஸ்வாமி க்ரமவித்தன் பக்கல் கிழக்குமேற்க்கு ஒரு கோலால் தெற்க்குவடக்கு இருகோலால் கொண்ட குழி இ

12. ரண்டுமாக வதி அட்டுவதாக ஊர்மேனின்ற திருவடிகளே கடைக்காச்சியால் தோட்டவாரியப் பெருமக்கள் வதி அட்டுவதாக விலைக்குக் கொண்ட குழி இருநூற்றுஎழுபது குழியும் விலைக்கு கொண்டு இறை இழித்திக் குடுத்தோம் இவ்வதி சந்த்ராதித்தவத்

13. செல்ல தோட்டவாரியஞ் செயும் பெருமக்களே கடைக்காண்பாராக பணித்தோம் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலத்து ஸபையோ[ம்*] இது கூறியுள்ளிருந்து பெருமக்கள் பணிக்க எழிதினேன் மத்யத்ஸன் சிவதாஸன் உத்தரமேரு ஆயிரத்திருநூற்று

14. வ அலங்காரப் பிரியனேன்.II

மேலே உள்ள கல்வெட்டின் மூலம் நாம் புரிந்து கொள்வது 4 செய்திகள் ஆகும்.

1. வதி என்பது பேரூர்களில் இருக்கும் வண்டிச்சாலை. [கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் பரமேஸ்வர வதியைப் போல் இன்னும் 7 வதிகள் உத்திரமேரூரில் இருந்திருக்கின்றன. பதிதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து பாதை எனுஞ்சொல் ஏற்பட்டது போல் பதிதல்>வதிதல்>வதி என்ற பெயர்ச்சொல்லும் ஏற்பட்டது. இக்காலத்தில் பாதை எனுஞ் சொல் புழக்கத்தில் இருக்கிறது. வதி என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ஆனால் வழி என்னும் இன்னொரு சொல் இருக்கிறது.] வதி என்பது குறைந்தது 3 கோல் அகலமாவது இருக்க வேண்டும் என்று இக்கல்வெட்டால் அறிகிறோம். ஒரு கோல் ஓரொழுங்கை (one lane) என்று கொண்டால், போக ஓர் ஒழுங்கை, வர ஓர் ஒழுங்கை, கடந்து செல்ல ஓரொழுங்கை என்று இதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு சிறு தேர், அல்லது மாடிழுக்கும் பாரவண்டிக்கு 11 அடி அகலமாவது இருக்க வேண்டும். [”திண்தேர் குழித்த குண்டுநெடுந் தெருவில்” என்று தேரோடும் தெருக்களைப்- பெரும்பாணாற்றுப் படையின் 396 ஆம் வரி குறிக்கும்.] இங்கு 3 கோல் = 3* 5 1/2 = 16 1/2 அடி என்று இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இங்கு ”கோல்” என்னும் சொல் தண்டம் அல்லது பெருங்கோலையே குறிக்கிறது போலும். அதாவது உத்திரமேரூர் வதிகள் 33 அடி அகலத்தோடு இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் பெரும் அரச வீதிகளின் அகலம் 5 தண்டம் என்றே கொடுமுடியார் குறிப்பிடுகிறார். அதாவது 55 அடி. இரண்டு தேர்கள் எதிர் எதிரே போக இடம் இருக்க வேண்டும். இந்தக் காலத்து 100 அடி (கிட்டத்தட்ட 10 தண்டம்), 200 அடிச் (கிட்டத்தட்ட 20 தண்டம்) சாலைகளை அந்தக் காலத்தில் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். பெருவழிகள் என்பவை பெருங்கோலின் (தண்டத்தின்) மடங்கால் அமைந்த நெடுஞ்சாலைகளோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ”பெரு” எனும் முன்னொட்டிற்கும் தண்டத்திற்கும் உள்ள இணைப்பைப் பார்த்தால் இது புரியும். தவிர மயமதம் என்னும் கட்டிடக்கலை நூல் தேரோடும் வீதிகள் 1, 2, 3, 4 அல்லது 5 பெருங்கோல் அகலம் இருக்கவேண்டும் எனக் கூறுகிறதாம். [தமிழில் அறிவியற் கருத்துக்கள் - வி,மி, ஞானப்பிரகாசம், பக்கம் 168, க.ப. அறவாணன் (பதிப்பு) பாரி நிலையம், சென்னை 1975] மொகெஞ்சசொதராவில் உள்ள பெரிய தெருக்களும் 33 அடி அகலம் வரை இருப்பதாகச் சிந்துவெளி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (சிந்துவெளித் தொல்தமிழ் நாகரிகம் - பி. இராமநாதன், கழக வெளியீடு, 2000, பக்கம் 33]

2. சாலைக்காக வாங்கும் நிலத்தின் நீள அகலம் சொல்லிக் குழிக் கணக்குக் காட்டுவதால், 1 கோல் சதுரம் என்பது ஒரு குழி என்று நீட்டல் அளவில் இருந்து பரப்பளவிற்கான உறவு புரிகிறது. 1 கோல் சதுரம் = 1 தண்டச் சதுரம் = 1 குழி = 121 சதுர அடி.

3. முதற் கண்ணாற்றில் மாதவச்சேரி ஸபையோரிடம் 58 குழியும் (2*14 + 2*15 = 58 குழி), இரண்டாங் கண்ணாற்று கொரஞ்சி ஸ்ரீதர துர்க்கய க்ரமவித்தர், ஆஸுரி உருத்ரகுமாரக் க்ரமவித்தர், மூன்றாங் கண்ணாறுக் காரம்பிச்செட்டு பரமேஷ்வர தஸ புரிய பட்டர், ஆதம்பத்து பச ருத்ர க்ரமவித்தச் சோமாசியார், நாலாங் கண்ணாற்று உறுத்த போசர ஸோமதேவ பட்டர் ஆகியோரிடம் 150 குழியும் (2*15 + 2*15 + 2*15 + 2*15 + 2*15 = 150 குழி) ஸுரஸாரம்பி [நாரா]ய.......... புரிய[பட்ட]ர், .........க்ரமவித்த சோமாசியார் மகனார் தோண விஷ்ணு க்ரமவித்தர் ஆகிய இருவரிடம் 30 குழியும் (2*7.5 + 2*7.5 = 30 குழி) அ[ய்]ந்தாங் கண்ணாற்று உறுப்புட்டுர் சேட்ட குன்ற க்ரமவித்தன் மகன் கொண்டகுமார சர்ம்மன், மாங்களூர் நாராயண சேட்ட க்ரமவித்தர், அக்கிப்புறத்து நாராயண க்ரமவித்தர், நந்திகாமத்து களமாய்த தஸபுரியன் ஆகிய நால்வரிடம் 30 குழியும் (1*7.5 + 1*7.5 + 1*7.5 + 1*7.5 = 30 குழி), ஆறாங் கண்ணாறு அய்யக்கி இளைய ஜ்யேந்த்ர ஸ்வாமி க்ரமவித்தனிடம் 2 குழியும் (1*2 = 2 குழி) ஆக மொத்தம் 270 குழியை உத்தரமேருச் சதுர்வேதி மங்கலச் சபையார் வாங்கி 151 கோல் (= 1661 அடி) நீளத்திற்குச் சாலையைப் புதிதாகப் போட்டிருக்கிறார்கள்.

4. மழைநீர் தேங்காமல் அருகில் இருக்கும் வாய்க்காலுக்கு வடியும் வகையில் சாலை அமைத்திருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.