Monday, March 30, 2020

Brand = பொரிம்பு

2010 இல்  ”Brand என்பதை தமிழில் எப்படி சொல்லலாம். Branding, Brand Equity, Branded Products என்றெல்லாம் வரும்போது பயன்படுத்த முடிவதாக ஒரு சொல்லை வழங்கினீர்கள் என்றால் மகிழ்வேன்” என்று நண்பர் செந்தில் நாதன் கேட்டிருந்தார். வெகுநாளைக்கு முன்னால் பொரிம்பு என்ற சொல்லை brand என்ற சொல்லிற்கு இணையாகப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கான சிந்தனையைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் brand என்பதற்குக் கீழ்வருமாறு போட்டிருப்பார்கள்.

O.E. brand, brond "fire, flame; firebrand, piece of burning wood, torch," and (poetic) "sword," from P.Gmc. *brandaz (cf. O.N. brandr, O.H.G. brant, O.Fris. brond "firebrand, blade of a sword," Ger. brand "fire"), from base *bran-/*bren- (see burn). Meaning of "identifying mark made by a hot iron" (1550s) broadened 1827 to "a particular make of goods." Brand name is from 1922. As a verb, brand is attested from c.1400. Related: Branded; branding.

நெருப்பில் பொரிந்து போய்விட்டது (பொரிஞ்சு போயிருச்சு) என்று தமிழில் சொல்லும்போது to burn என்பதைத் தான் குறிக்கிறது. to be parched, baked என்னும் பொருளில் ’செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரி போல’ என்பது பிரபுலிங். பிரபுதே. 54 இல் வரும் ஒரு கூற்று. மேலும், தீய்தல் என்ற பொருளில் to be blacked by fire, singed, scorched or burnt by the sun 'பொரிந்தன கலவைகள்’ என்று கம்பரா. மிதிலைக் காட். 50 இல் வரும். வாணப்பொரி மிகுந்து சொரிதல் என்ற பொருளில் to throw out sparks as Roman candle or a whirling firebrand என்ற பொருளில் ‘பொரிந்தோடின...... கருங் கோளரிக் கிளையான் விடு சரமே’ என்று கம்பரா. நிகும்பலைய. 12 இல் வரும். [இன்றுங் கூட இந்தக் கடைசிப் பொருளில் தீபாவளியின் போது ’வாணவேடிக்கை/புசுவாணம் பொரிப்பொரியாகத் தெறித்தது’ என்று சொல்லுகிறோம்.)

பொரிதலின் செயப்பாட்டு வினையான பொரித்தல் = பொரியச் செய்தல் என்ற பொருளில் to fry 'நெய்யுறப் பொரிந்த’ என்ற படி புறம் 397 இல் வரும். ”கத்திரிக்காய்ப் பொரியல்” என்று நாம் சொல்லும் போது to fry a vegetable என்று பொருள் கொள்ளுகிறோம். பொரி, பொரிக் கஞ்சி, பொரிக்குழைப் பிண்டி, பொரிகடலை, பொரிகறி, பொரிகாரம், பொரி விளங்காய்  என்ற பல சொற்கள் (30 ற்கும் மேற்பட்டவை) தமிழில் இருக்கின்றன. 

இதே பொருளில் பொரியின் திரிவான பொறியும் உண்டு. (தீச்சுடர் சிதறுதல்).

நான் பொரி என்ற சொல்வடிவையே தேர்ந்தெடுத்து பொரியுதல் என்ற வினையை to brand என்பதற்கு இணையாகக் கொள்கிறேன். அதன் பெயர்ச் சொல் பொரிம்பு என்றாகும். மற்ற சொற்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

Brand = பொரிம்பு (பொரிந்து போன குறியீடு, பொரிக்கப் பட்ட குறியீடு என்று பொருள். உடம்பிற் பொரிந்து போன தழும்பு என்கிறோம் அல்லவா? பொரி தழும்பு என்ற நீள்சொல் இங்கு பொரிம்பென்று சுருக்கிச்சொல்லப் படுகிறது. பொரிம்பு என்ற சொல்லை இச் சிந்தனையில் தான் உருவாக்கினேன்.)
Branding = பொரியுதல் (செயப்பாட்டுவினை இங்கு சட்டெனப் புரிய வேண்டும்.)
Brand equity = பொரிம்புப் பங்கு (கூட்டுச் சொல்)
Branded products = பொரிம்புப் புதுக்குகள் (கூட்டுச் சொல்)

(product என்பதற்கு புதுக்கு, விளைப்பு என்ற இரண்டையுமே பயன்படுத்தி வருகிறேன். ஆங்கிலத்திலும் அந்தச் சொற்கள் வேளாண்மையில் கிடைக்கும் பொருட்கள், கைவினையாற் புதியதாய் அமைபவை என்றே தொடக்கப் பொருள் உண்டு.)

அன்புடன்,
இராம.கி.

2 comments:

நன்னிச் சோழன் said...

ஐயா தமிழில் இடாகு என்னும் சொல் உள்ளதே அது எந்தப் பொருளில் வரும் ஐயா

இராம.கி said...

கால்நடைக்குப் போடும் சூட்டுப் புள்ளி.