Wednesday, March 25, 2020

trans terms

ஒருமுறை transistor க்கு முகநூல் சொல்லாய்வுக் குழுவில் தமிழ்ச்சொல் கேட்டிருந்தார். எப்போதுமே நான் ஒருசொல் மட்டும் பார்ப்பதில்லை. தொடர்பான பல சொற்கள் பார்த்தே என் பரிந்துரைகள் உருவாகும். வழக்கம் போல் என் பரிந்துரை ஏற்கப்படவில்லை. தமிழர் பலருக்கும் நான் சொல்வது பெருஞ்சரவலாய் உள்ளது. ஏனெனில் தமிழியமொழிக் குடும்பம் இன்னும் பெரிய நாசுதிராட்டிக் பெருங் குடும்பப் பகுதியென நான் சொல்கிறேனே? இந்தையிரோப்பிய மொழிகளும் இப் பெருங்குடும்பத்தின் இன்னொரு குடும்பமென்கிறேனே?

400/500 ஆண்டுகளுக்கும் மேல், விசயநகரப் பேரரசு காலத்தில் இருந்தே சங்கதம் திணிக்கப் பட்டுள்ளது. அதனால் இங்கு பெருமிதம் குலைந்தே போனது. அதற்குத் தோதாய் மேலையருக்கும் அடிமைப்பட்டோம். அவர்க்கு, நம்மில் ஒரு சாரார், சங்கதம் போற்றுவார் என்பதால், “துபாஷியாய்” இருந்து ஏதேதோ மேலையருக்குச் சொல்லிக்கொடுத்தார். இப்போது நடப்பது எல்லாம் அந்த முந்தையோதலுக்கு மறுப்போதல் தான். அது சிலருக்குத் தலைவலியாகிறது. தமிழ்/தமிழிய மொழிகள் என்பவை ஏதோ ஒரு தனித்த தீவு போலவும், பொ.உ. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன் அது மூங்கை மொழி யென்றும், சங்கதத்திலிருந்தே எல்லாவற்றையுங் கடன் பெற்றதென்றும் வையாபுரியார் சொன்னது இவர்க்கு வேதமாகியது. அதற்கப்புறம் வந்த தெ.பொ.மீ., கமில் சுவலபில், வழிப்பட்டோர் இதற்கு “ததாஸ்து” என்று சொன்னார். இவர்க்கெல்லாம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் களஞ்சியமே ஆதார ”ஸ்ருதி”யாகும்.

அதைமீறிச் சிந்தித்தால் இவர்க்காகாது. இவருக்கு வில்லியம் சோன்சு, மாக்சு முல்லர் ஆகியோரின் இந்தையிரோப்பியக் கூற்று முகன்மையானது. அண்மைக் காலத்தில் எழுந்த புதுப் பட்டகைகள் (facts) இவர்க்கு ஆகவே ஆகாது. அதுவும் பாவாணரெனில் தள்ளிவைக்கப் படவேண்டியவர் என்று சொல்வர். எனவே ஆயிரமாயிரமாய் ஒப்புமை காட்டினும், அதெல்லாம் ”இராம.கி.யின் கற்பனை, வலிந்த உருவாக்கம்” என்று தன்மதிப்பு நயன்மங்களையே (value-juudgement) முன்வைப்பார். ஐயா, இது எப்படிச் சரி? கொஞ்சமாவது ஆய்வு, ஏரணம், நொதுமல் தன்மை என்பது வேண்டாமா? என்றால் , ”அவனை நிறுத்தச்சொல், நான் நிறுத்துகிறேன்” என்ற தளபதி, நாயகன் பட உரையாடல் போல் ஏதோவொன்று வந்துபோகும். மொத்தத்தில் இது அறிவுப்புலத்தில் நடக்கும் ஓர் அரசியலாட்டம். இந்த அரசியலாட்டத்தில் கழகங்கள் சோர்ந்து விட்டன. சோராதோர் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். 

நான் trans- சொற்களுக்கு வருகிறேன். trans- என்பதற்கு ஆங்கிலச் சொற்பிறப்பியலில் word-forming element meaning "across, beyond, through, on the other side of, to go beyond," from Latin trans (prep.) "across, over, beyond," perhaps originally present participle of a verb *trare-, meaning "to cross," from PIE *tra-, variant of root *tere- (2) "cross over, pass through, overcome." In chemical use indicating "a compound in which two characteristic groups are situated on opposite sides of an axis of a molecule" என்று பொருள்சொல்வர். .

trare/tere என்ற வினைச்சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் துரவு/பெயர் என்பதே. இதைத் திரிதலென்பது சரி வராது. மாறாகத் துரவுதல்./பெயர்தல் என்பது சரிவரும். ஓட்டிச் செல்தல், பெயர்தல், என்ற இதற்குப் பொருளுண்டு. காட்டாகப் புறம் 14-4 இல் ”தோட்டியான் முன்பு துரந்து” எனும் பயன்பாடு உண்டு. போதலென்ற பொருளும் பிங்கலத்தில் சொல்லப்படும். கீழுள்ள பல சொற்களிலும் துரவுதல்/பெயர்தல் எனுங் கருத்து ஊடு வரும். வினை, கிறுவம், இடம், வடிவம், பிடி, உரு, வரம்பு, கலம், காட்சி, மொழி, எழுத்து, குறி, மடை, நாடு, தோற்றம், நடை, பதி, புகல், நிலை, கிடை/வரி போன்ற ஏதோ வொன்று பெயர்வதைக் குறிக்கும் சொற்களைக் கூர்ந்து பாருங்கள். ’பெயர்வு’ என்பது பலருக்கும் பழகியது. அதே பொழுது ’துரவு’ என்பது கலைச்சொல்லாகப் பயன்பட வாய்ப்புக்கொண்டது. துரவைத் துரனென்றும் பயனுறுத்தலாம். இங்கு சொல்லப்படும் trans+resistor = transistor இற்கு துரவுத்/துரந் தடையமென எளிதாகச் சொல்லலாம். துரந்தடையம் = transistor.

Trans (adj) = பெயர்வு/ துரவு/ துரன்
transaction வினைப்பெயர்வு/ வினைத்துரவு (இருவரிடை பெயரும்/நடக்கும் வினை)
trans-atlantic= அட்லாண்டிக் பெயர்வு, அட்லாண்டிக் துரவு (அட்லாண்டிக்கின் இருபுறம் உள்ளது)
trans-continental = கண்டத்தில் பெயர்வு, கண்டத்தில் துரவு (கண்டத்தின் ஊடே பெயர்ந்தால் என்று பொருள்படும். கண்டப்பெயர்வு என்றுசொல்லக்கூடாது. அது கண்டமே பெயரும் என்றுணர்த்தும். வேற்றுமையுருபு இங்கு முகன்மை.)
transcribe கிறுவப் பெயர்வு/ கிறுவத் துரவு (பேசுவதைக் கிறுவத்தில் பெயர்ப்பது.) 
transcript = பெயர்க் கிறுவம், பெயர்த் துரவம் (பேச்சு பெயர்க்கப்பட்ட/துரவப்பட்ட கிறுவம்) .
transcription = கிறுவப் பெயர்ச்சி, கிறுவத் துரவம் (பேச்சிலிருந்து கிறுவத்திற்குப் பெயர்க்கும் தொழில்)
transfer இடப் பெயர்வு/  இடத் துரவு 
transference = இடப் பெயர்ச்சி, இடத் துரவம் (இடம் பெயர்ந்த நிகழ்வு)
trans-figure = வடிவப் பெயர்வு, வடிவத் துரவு (வடிவம் என்பதை இங்கும் உருவத்தைக் கீழும் பயனுறுத்தியுள்ளேன்.)
trans-fix = பிடிப் பெயர்வு, பிடித் துரவு (பிடி என்பது fix க்குச் சரியாகலாம் என்று கொண்டேன்.)
trans-form = உருப் பெயர்வு, உருத் துரவு
trans-gress = வரம்புப் பெயர்வு, வரம்புத் துரவு
trans-ship = கலப் பெயர்வு, கலத் துரவு
transient காட்சிப் பெயர்வு/ காட்சித் துரவு
transition பெயர்ச்சி, துரவம்
transitive பெயர்கிற/ துரவிய (பெயர்ந்த/பெயரும்)
translate மொழிப் பெயர்வு/ மொழித் துரவு
transliterate எழுத்துப் பெயர்வு/ எழுத்துத் துரவு (ஒருவகை எழுத்திலிருந்து மற்றொரு எழுத்துக்கு எழுத்துப்பெயர்ப்பு)
transmit குறிப் பெயர்வு/ குறித் துரவு (குறியீடுகளை துரவுகிற/பெயர்த்துகிற காரணத்தால் இங்கே இப்படி வருகிறது.)
transmute, மடைப் பெயர்வு, மடைத் துரவு (உருவம், இயல்பு, உள்ளீடு என ஏதோவொன்று மடுத்துக்கிடந்தது பெயர்கிறது.) 
transnational நாடு பெயர்ந்தவர்
transparent தோற்றப் பெயர்வு/ தோற்றத் துரவு (தோற்றமும் காட்சியும் கிட்டத்தட்ட ஒன்றானாலும். காட்சி நம் கண்ணைப் பொறுத்தது. தோற்றம் எல்லோர் கண்ணிற்கும் நிரவலாய்த் தோற்றுவது.) 
transpire நடைப் பெயர்வு/ நடைத் துரவு
transplant = பதிப் பெயர்வு, பதித் துரவு (plant = பதித்தல்)
transport புகற் பெயர்வு/ புகற்றுரவு - இடப்பெயர்வு, துறைப்பெயர்ச்சி
transpose பொதி/நிலைப் பெயர்வு/ பொதி/நிலைத் துரவு
transverse =  கிடை/வரிப் பெயர்வு, கிடை/வரித் துரவு

அங்க வேதியலில் சில பூண்டுகளுக்குப் (compounds) பெயரிடுகையில் cis-, trans- என்று இருவேறு முன்னொட்டுக்கள் பயனுறுத்துவர். ஒரே பக்கம் இருக்கும் இரு வேறு அலங்கக் குழுக்களைக் (organic groups) கொண்டிருந்தால் cis-carotene இசைக்குருத்தியமென்றும், ஒன்றிற்கெதிராய் மறுபக்கத்தில் இருந்தால் trans-carotene துரன்குருத்தியம் என்றும் சிக்கலில்லாது சொல்லியுள்ளேன் பொதுவாக இதுபோல் முன்னொட்டுக்கள் ஒருதுறை சார்ந்தவை என்று கொள்ளக்கூடாது. துறைகடந்த அளவில் அவை பயன்படவேண்டும். துறை சார்ந்து பாத்தி கட்டுவதை நான் என்றும் மறுத்தே வந்திருக்கிறேன். துரனுக்கு இன்னொரு பயன்பாடும் கணிதத்தில் கிடைக்கும். transcendental number, transcendental function என்பவற்றிலும் ’துரன்’ எனும் முன்னொட்டு பயன்படும். transcend = துரனேறிய; transcendental number = துரனேற்ற எண், மீதுர எண், transcendental function = துரனேற்று வங்கம். transcendence = துரனேற்றம்.

அன்புடன்,
இராம.கி.


No comments: