இதுவும் 5 ஆண்டுகளுக்கு முன் எழுதிய குறிப்பு. வலைப்பதிவில் சேமிப்போம் என்று மீள வெளியிடுகிரேன். ஒருமுறை 5 ஆண்டுகளுக்கும் முன்னால் மடற்குழுக்களில், நண்பர் வேந்தன் அரசு, "வேது என்றால் சூடு. கெமிஸ்ட்ரி வெப்பத்தின் அடிப்படையில்தான் இயங்குது. அதனால் வேதியியல் சரியான சொல்லே. நீங்க ஜீன், ஜெனிடெக்ஸ், ஜெனோம் இவற்றுக்கு என்ன சொல் பரிந்துரைக்கிறீர்?" என்று கேட்டிருந்தார். அவர் கேள்வியைப் படித்து நான் வியந்து போனேன். என் வியப்பு “வேது என்றால் சூடு” என்பது பற்றியதாகும். அதைப் பேசுவதற்கு முன்னால் genetics, gene, genome பற்றிப் பார்த்துவிடுவோம்.
ஈனியலை genetics -ற்கும், ஈனை gene -ற்கும் பயனுறுத்துவதாய்ப் பல முறை முன்னால் சொல்லியிருந்தேன், genome என்பது ஆங்கிலத்தில் ஒரு கூட்டுச்சொற் சுருக்கமாகும். gene + chromosome என்பதில் முதற்சொல்லின் பின்னெழுத்தையும், கடைச்சொல்லின் முன்னெழுத்துக்களையும் ஒதுக்கி genome என்றானது. தமிழில் chromosome என்பதைச் சில காலம் குருமியம் என்றே எழுதிவந்திருக்கிறேன். நம் ”குருமமும்” கிரேக்கரின் chroma வும் ஒரே நிறப்பொருளைச் சுட்டிவந்தன. (பார்த்தீர்களா? மறுபடியும் ”இராம.கி. ஆங்கிலவொலிப்பு” என அவதூறு சொல்ல சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது..எனக்கோ உறுத்துகிறது, ஒப்புமையிருந்தால் சொல்லாதிருக்க முடிவதில்லை.)
குருமியத்தின் ஈற்றை ஈனோடு சேர்த்து genome-ஐ ஈனியமென்று சுருங்கக் குறிக்கலாம். மரபணு, மரபணுவியல் போன்ற சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. (நுட்பத்தோடு தேவையற்ற தொழிலைச் சேர்ப்பது போல்) ஊடு வந்து பொருள் திரிக்கும் அணுவென்ற இடைச்சொல் இங்கு தேவையா? மரபென்று மொட்டையாய்ச் சொல்வதிலும் எனக்கு ஒருப்பாடில்லை. மரபென்பது வெறும் பழக்கத்தால் வருவது. அதற்கும், உயிரூட்டங் கொடுக்கும் genetics வழிக்கும் தொடர்பேயில்லை. gen-என்று தொடங்கும் பல ஆங்கிலச்சொற்களுக்கு இணையாக ஈனை வைத்துத் தமிழ்ச்சொற்களை ஆக்கமுடியும். மரபால் இது முடியாது.
[திரு.நா.கணேசன். ஒரு குறுக்குச்சால் ஓட்டி, obstetrics க்கு ஈடாக ஈனியலைச் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்வது director ஐத் தவறாக இயக்குநரென மொழியாக்கி ஊரெல்லாம் தடுமாறுவதை ஒக்கும். operator என்பவரை இயக்கர், இயக்குநரென்று சொல்லலாம் ஏனெனில் ஓர் எந்திர, கட்டக இயக்கத்தை, செயலைச் செய்பவர் operator.ஆனால் director என்பவர் நிறுவனஞ் செல்லும் திசையை, நெறியைத் தொடர்ந்து காட்டி வழிப்படுத்துபவர். அவரை நெறியாளுநர் என்பதே சரியாகும். (ஒரே நிறுவனத்தில் operator உம், director உம் இருப்பார். இருவரையும் குறிப்பிடத் தெளிவான சொற்கள் தமிழில் வேண்டும். கொஞ்சங் கொஞ்சமாய் நெறியாளுநர், நெறியாள்கை போன்ற தமிழாக்கங்கள் பரவி வருகின்றன.) ஆனாலும் 1970 களிலெழுந்த திராவிடச் சிந்தனையாளர் ”கலைஞர் சொன்ன தமிழாக்கம்” என்று சொல்லி ”தாம் பிடித்த முயலுக்கு 3 கால்கள்” என்பதாய்க் கடைசி வரை இயக்குநர் என்று சொல்வதில் அடம் பிடிப்பார். தம் தப்பைத் திருத்திக் கொள்ளவும் மாட்டார்.
obstetric (adj.) என்பதை 1742, from Modern Latin obstetricus "pertaining to a midwife," from obstetrix (genitive obstetricis) "midwife," literally "one who stands opposite (the woman giving birth)," from obstare "stand opposite to" (see obstacle). The true adjective would be obstetricic, "but only pedantry would take exception to obstetric at this stage of its career." [Fowler]. Related: Obstetrical என்று ஆங்கிலச் சொற்பிறப்பியல் சொல்லும். இத் துறை செவிலியலின் (nursing) ஒரு பகுதி. மகப்பேற்றுச் செவிலியல் என்று சொல்லலாம். இன்னுஞ் சுருக்கவேண்டுமெனில், மகச் செவிலியல் எனலாம். ஈனெனும் அருமையான வினையடியை இதற்குப் பயனுறுத்த வேண்டாம்.]
இனி, வேதியியல் பற்றிய, குறைபட்ட, ”சூட்டுப்” புரிதலுக்கு வருவோம். வேதிப்பொறியியல் படித்ததோடன்றி, தமிழார்வத்தால் ”வேதியல்” பற்றிச் சிலகாலம் ஆய்ந்து மேய்ந்துள்ளேன். என் 2 சல்லிக் கருத்து கீழே இருக்கிறது..
chemistry என்பது மேலையருக்கு எகிப்து வழியே அறிமுகமானது. (http://en.wikipedia.org/wiki/Etymology_of_chemistry) ஏதேதோ எண்ணெய்கள். மூலிகைகள், வேதிப் பொருட்களை வைத்து உடம்பைப் பல காலம் அழியாது காப்பற்றும் வித்தையை ஒருவகை அறிஞர் பழம் எகிப்தில் செய்திருக்கிறார். இவர் மருத்துவரா, இரசவாதம் தெரிந்தவரா என்பது எல்லாம் நமக்குத்தெரியாது. அவரைக் குறிக்கும் எகிப்திய வார்த்தை கூட நமக்குத் தெரியாது. வெறும் வடிவியலையும் (geometry), ஓரளவு பூதியலையும் (physics) சிறப்பாகப் பேணிய கிரேக்கருக்கு வேதியியல் தெரியாது. எனவே வேதிப் பொருள் கையாண்ட எகிப்தியர் அவருக்கு நூதனமாய்த் தெரிந்தார். இந்நூதனக் கலைக்கு khmium/எகிப்தியம் என்றே கிரேக்கர் பெயரிட்டுள்ளார். (khmi/chemi என்றால் எகிப்து/கருமண் என்றே பொருள்.) ஒவ்வொரு chemist உம் ஒரு வகையில் எகிப்தியனென்று நாங்கள் வேடிக்கையாகச் சொல்வோம். தவிர ”அல்கெமி” என்பது நடுக்கடல் நாடுகளில் தாழ்ந்த மாழைகளிலிருந்து பொன்னையுருவாக்க முயன்ற இரசவாதத்தையே குறித்தது.
நம் நாட்டிலும் இதே நிலை தான். alchemy என்பது இங்கும் இரசவாதத்தோடே தொடர்புற்றது. இரசாயனம் = இரச + அயனம் என்றாகும். இரசமென்று சங்கதத்திற் சொல்வதை இதளென்றே தமிழிற் சொல்வோம். அயனமென்பது செலவு. உத்தராயனம் தக்கிணாயனம் என்கிறோமே அதிலும் அயனம் என்பது, செலவையே குறிக்கும். இதளின் வழி செல்லுமறிவு இரசாயனம். இதைச் செய்யப் பச்சிலைகளும், மண்ணூறல்களும் (minerals), சாறுகளும் பயன்பட்டன. இதில் வெப்பம், தீ, காந்தம், ஒளி போன்ற ஊடுழைகளும் (utilities) பயன்பட்டது உண்மை. ஆனால் ஊடுழைகள் அவற்றின் முதன்மைக் காரணம் ஆகா. அவை வழிக் காரணங்களே. வேதென்ற சொல் வேறென்பதன் இன்னொரு வடிவம் ஒரு பொதியை இன்னொரு பொதியாய், குறிப்பாய்ப் பொன்னாய் ஆக்குவதே வேறித்தல்/வேதித்தலாகும். இதைப் புடமிடுதல் என்றுஞ் சொல்வர். இதன் தொடர்பான பல சொற்களுண்டு. கீழே பாருங்கள்.
வேதகப்பொன் = புடமிட்ட பொன்.
வேதகம் = வேறுபடுத்துகை. வேறுபாடு, புடமிடுகை, புடமிட்ட பொன், இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்,,வெளிப்படுத்துகை;
வேதகன் = ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன்
வேதனம் = பொன்
வேதி = தாழ்ந்தவற்றை உயர்பொருளாக மாற்றுகை.
வேதிகை = வேறுபடுத்துகை
வேதித்தல் = வேறுபடுத்தல், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுதல்,தீற்றுதல்
வேது = வெம்மை,சூடான ஒற்றடம், காரமருந்து, வேறுபாடு
வேது கொள்ளுதல், வேது செய்தல், வேது பிடித்தல் = ஆவி, புகை முதலியவற்றால் உடலை வெம்மை செய்தல், ஒற்றடம் கொடுத்தல், நீராவியால் உடலை வேர்க்கச் செய்தல்
வேதை = இரச வாதம்
வேதை சிந்தூரம் = உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து
வேள்தல் என்பது இன்னொரு வகையில் பார்த்தால் வேண்டுதல் என்பதாகும்; (வேண்டுதலே வடபுலத்தில் வேதம் என்றானது. நம்மூரிலும் ஐயனார் கோயிலில் நமக்காக வேண்டுதலைச் செய்பவர் வேளகாரர்.) வேண்டுதலுக்காகச் செய்வது வேள்வி (வேள்வி செய்யாது வேறு வேலை செய்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ளும் பார்ப்பார் வேளாப் பார்ப்பார்.) வேள்வியில் ஆகுதியைப் (ஆகுவது ஆகுதி) போட்டு வெந்து போனது வேதுப் பொருளானது. வெய்து>வேது ஆயிற்று. வெப்பம் என்ற பொருள் இப்படியும் வந்தது.
ஒரு பொதியை (body) இன்னொன்றாய் வேதித்து (வேறிட்டு) ஆக்கிக் காட்டுவதே chemistry ஆகும். (ஒரு பொதி என்பது அதன் பூதிக் குணங்களால் (physical properties), இயல்புகளால் வரையறுக்கப் படுவது. ஒரு பொதி இன்னொரு பொதியாக வேறுபடும் பொழுது பூதிக் குணங்களும் மாறிப் போகின்றன.) எனவே வேறுபடுத்தலை அடிப்படையாக்கும் வேதியல் என்பது chemistry யைக் குறிக்கச் சரியான சொல்லே. நான் அதை எங்கும் மறுத்தவனில்லை. ஒன்றிற்கு இரண்டாய் இன்னொரு சொல்லும் இருக்கட்டும் என்றே இயைபியல் என்ற சொல்லை நான் கோவை நுட்பியல் கல்லூரியில் 1969 இல் சொன்னேன். இயைபென்பது ஒரு பொதி இன்னொரு பொதியோடு பொருந்தி, இயைந்து போவது. வினையென்ற சொல்லின் இன்னொரு வெளிப்பாடு இயைபு = reaction. From a process point of view, chemistry is a science of reactions. வேதியியலுக்கு எவ்வளவு ஆளுமையுண்டோ, அதேயளவு ஆளுமை இயைபியலுக்கும் உண்டு.
[1969 இல் இயல்பியல் (physics), இயைபியல் (chemistry) என்ற 2 சொற்களை கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து பரிந்துரைத்தோம். அது என்ன போகூழோ தெரியாது, ஆகச் சரியான இயைபியல் நாட்டில் புழங்காமலே போனது, இயல்பியல் என்பதோ ஏதோ குழறுபடியில் இயற்பியலாய்த் திருகிக் கொண்டது. இத்தனைக்கும் இயற்பு என்ற சொல்லே தமிழில் கிடையாது. இயல்பு என்பது இயற்பென்று எப்படியானது? தெரியாது. இதுவரை எந்தத் தமிழறிஞரும் அதைக் கேள்விகேட்டதில்லை. ஆனால் பயன்படுத்தி வருகிறார். நாடெங்கும் தவறான சொல் புழங்கிப் போன நிலையில், மனம் வெதும்பி, இயல்பைப் பரிந்துரைத்த அடியேனே, பூதியல் (physics) என்ற புதுச்சொல்லை 1980/90 களில் பரிந்துரைத்தேன். இப்பொழுது பூதியல் என்றே நான் பயில்கிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து அதைப் பயில்கிறார். ”இயற்பியல் என்ற தவறான சொல் என்று தொலையும்?” என்று எனக்குத் தெரியாது
[அப்புறம் இன்னொன்று. ஒரு காலத்தில் 50 ஆண்டுகள்முன் வேதியலென்று எழுத மாட்டோம்; வேதியியல் என்றே எழுதுவோம். இப்பொழுதெல்லாம் வேதியலென்று பலரும் எழுதுகிறார்.} வேதியியல் என்றே தொடர்ந்து எழுதி வந்திருந்தால் வேது = வெப்பம் என்ற பொருளில் சொல் எழுந்ததாய் பலரும் குழப்பங் கொண்டிருக்க மாட்டார். கணியைச் சிலர் கணினி என்று எழுதுவது போன்ற குழப்பம் இதுவாகும். கணினிக்குப் பொருளுண்டு. கணிணிக்குப் பொருளில்லை; ஆனாலும் மெத்தப் படித்த தமிழறிஞரே கணிணி என்று தவறாக எழுதுகிறார். குழப்பம் தவிர்க்கவே நான் இப்போது கணியென்ற சொல்லைப் பெயராகவும் பரிந்துரைக்கிறேன்.]
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment