Friday, September 20, 2019

சிலம்பு ஐயங்கள் - 23

பலருமெழுப்பிய குறுக்குவினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக் காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாங் கேள்விக்கு ஆன நீளவிடையில் தோய்ந்து விட்டேன். படித்தோரின் பொறுமைக்கு நன்றி. அடுத்த கேள்விக்கு வருவோம். ”கானல்வரியில் மாதவி மாலையைப் பாடுவதில் ஏதேனுங்குறிப்புண்டா? ’மாலை’ வசந்தமாலையைக் குறிக்குமா?” என்று திரு.முகுந்தன் ஐயப்பட்டது சரிதான். வசந்தமாலையெனும் முழுப்பெயரன்றி, மாலையெனும் விளிப் பெயர் சொல்லி கானல்வரி முழுக்கச் சிலேடையாய் ”பேறு காலத்தில் நம் வீட்டில் நடந்த கள்ளங்கள் எனக்குத் தெரியும், நீ இப்படிச் செய்யலாமா?” என்று கோவலனுக்குச் சுருக்கென உறைக்கும்படி மாதவி உணர்த்துவாள்.

”மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்பதன் பின்வரிகளில், எத்தனை மாலைகள் வரும் தெரியுமா? தவிர, கணவன் எனத் தான் நினைத்தவன் செய்ததைக் குத்திக் கேட்பாள். குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, கோவலன் முணுக்கெனச் சினந்து போவான். புகார்க் காண்டத்தில் வசந்த மாலையின் சூழ்க்கும இருப்பு மேலோட்டமாய்ப் படிப்போருக்கு விளங்காது. ஆழ்ந்தோருக்கே விளங்கும். இச்சுருக்க மறுமொழியோடு நகர்வதற்கு என் மனம் ஒப்பவில்லை கானல்வரியின் பின்பகுதி விளக்காப் படாவிடில் சிலம்பின் முகனக் காதை புரியாது. அது ஏதோ பாட்டுங் கேளிக்கையுமான பகுதியென்றே பலரும் எண்ணுகிறார். கிடையாது. நெய்தலின் சோகம் அதனுளுண்டு. முன்சொன்ன தமிழாசிரியர் திரு.பழநியைத் தவிர வேறு யாரும் கானல்வரிக்குப் பொருள் எழுதி நான் கண்டது இல்லை. அவர் நூலைப் பார்த்தே நானும் புரிந்தேன். இப்பொருளை நானும் வேறிடத்தில் எழுதியதில்லை.   

வசந்தமாலை, மாதவி என்ற இரு பெயர்களுமே தமிழரை மயங்கடித்த குருக்கத்தியைக் குறிக்கும். 2009 இல் எழுதிய ”கண்ணகி. கோவலன், மாதவி - பெயர்ப்பின்புலம்” என்ற என் கட்டுரைத் தொடரைப் படியுங்கள். (இதுவும் திரு.நா.கணேசனை மறுத்தெழுதியது தான். சிலம்பு பற்றிய கணேசன் மடல்களைப் படித்தால் ஒன்று புலப்படும். சிலம்பை இழித்துரைப்பதில் அவருக்கென்னவோ அவ்வளவு விருப்பம். தான் சொன்னதைச் சரியென நிறுவ, எந்த வானத்தையும் வில்லாய் வளைப்பார். அதிற் பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency) என எதுவும் பாரார்.)

http://valavu.blogspot.in/2009/03/1.html
http://valavu.blogspot.in/2009/03/2.html
http://valavu.blogspot.in/2009/03/3.html
http://valavu.blogspot.in/2009/03/4.html
http://valavu.blogspot.in/2009/03/5_29.html
http://valavu.blogspot.in/2009/03/6.html

பசந்தத்தில்/வசந்தத்தில் மாலுவது (மலர்வது/மயங்குவது) வசந்த மாலை. இக்கூட்டைச் சுருக்கி வசந்தாள், வசந்தி, வாசந்தி என்றெல்லாம் இன்று பெயர்வைத்துக் கொள்வார். ஆனாற்பலரும் அச்சொற்கள் குருக்கத்தியைக் குறிப்பதை உணரார். வசந்த காலத்தைக் குறித்ததெனக் குறைப்படப் பொருள் சொல்வார். ”ஜலசமுத்ரத்தைச்” சுருக்கி சமுத்ரமென்பார் பாருங்கள். அதுபோற் குறைப்புரிதல் அதுவாகும். மயக்கந்தருபவள் மாதவி; வசந்தத்தில் மால்க்குபவள் வசந்த மாலை. வசந்தாள், வசந்தி, வாசந்தியென்று சுருக்கி விளிப்பது போல் மாலையென்றும் அவள் பெயரைச் சுருக்கலாம். ”மாலை” யெனும் விளிப் பெயரைத் தன் கானல்வரியினூடே இருபொருள் படப் பலவிடங்களிற் பொருத்தி மாதவி கோவலனைக் குத்திக்காட்டுவாள்.

கானல்வரிப் பாட்டிற்கான உரையாசிரியர் விளக்கங்களை வேங்கடசாமி நாட்டார் நூலிற் பார்த்துக்கொள்ளலாம். வசந்தமாலை குறித்தெழும் உட்பொருளை மட்டுமே இங்கு குறிக்கிறேன். குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த) தாரம்(நி) பொருந்திய தமிழிசை அடிப்படை அறிய எழுசுரங்கள் பற்றிய என்தொடரைப் படிக்கப் பரிந்துரைப்பேன்
.
http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

கோவலன் முதலில் கானற்பாணியில் (முல்லையந்தீம்பாணி -மோகனம்- போல் இதுவும் ஒரு திறப்பண் தான். ச க1 ம1 த1 நி1 என்ற 5 சுரங்களில் இப்பண் அமையும்.) யாழால் கருவியிசை எழுப்பி, பின் “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுவோச்சி” என்று கானல்வரிப் பாட்டை இசையோடு தொடங்குவான். தன் வரிகளின் உள்ளடக்கமாய், ”என் நடத்தையைக் கண்டு கொள்ளாதே! அப்படி இப்படித்தான் நான் உன்னோடு இருப்பேன்” என்று சொல்வான். அவன் பகுதி வரிகளைத் தவிர்த்து மாதவியின் கானல்வரி மறுமொழிக்கு மட்டுமே இங்கு பொருள் சொல்கிறேன்.

இதுபோல் இரண்டாம் பொருள் (இறைச்சிப் பொருள்) கொள்ளலில் ”காவேரி வழியே மாதவி மனச்சான்றோடு பேசுகிறாள்” என்றே கொள்ள முடியும். அதைக் கோவலனும் புரிந்து கொள்வான். அப்புரிதலில் தான் கோவலனுக்குக் கோவமெழும். கானல் வரி படிக்கும் நாம் உள்ளிருக்கும் உருவகத்தை விடாது பிடித்துக்கொள்ள வேண்டும். முதலில் வருவது 3 தாழிசையால் ஆகும் ஆற்று வரி யென்பர். ஆற்றைப் பாடுவது போல், மாதவி தனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவிற் போட்டுடைப்பாள். (முந்தைக் கடலாடு காதையின் கடைசி அடிகளின் படி) காட்சியோரத்தில் அமளிக்கு (படுக்கைக்கு) அருகில் வசந்த மாலை வருத்தத்தோடு நிற்கிறாள். (ஏதோ, நடக்கப்போகிறது என்று குறு குறுத்த அவள் நெஞ்சம் வருத்தபடாது என்செய்யும்?

கீழேவரும் தாழிசைகளில் இரு பொருள்கள் உள்ளன. ஒன்று இயற்பொருள். இன்னொன்று இறைச்சிப் பொருள். இயற்பொருள் மாலை நேரத்தையும். இறைச்சிப் பொருள் வசந்தமாலையையுங் குறிக்கும். பாடுவோளுக்கும், கேட்போனுக்கும், அருகிலிருந்து கவனிப்போளுக்கும் புரிந்து தான் பாட்டு வெளிப்படுகிறது. மூவரிடையே நடப்பது ஒரு நாகரிகமான சண்டை. இருவர் தம் கருத்தைச் சொல்கிறார். ஒருத்தி உம்மென்று வருந்திநிற்கிறாள். என்ன இருந்தாலும் மாதவி வசந்தமாலைக்கு இயமானியல்லவா? இனிப் பாட்டினுள் வருவோம்.

வேறு
25.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

26.
பூவார்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி

27.
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி

”ஏ, காவேரி (மாதவியின் மனச்சான்று), வண்டுகள் பக்கத்தில் வந்து சிறக்க ஒலிசெய்ய, மணிகளையும், பூவாடைகளை போர்த்துக்கொண்டு, கருங்கயற் கண்ணை (இக்கண்தான் முதலிற் கண்ணகியிடமும், பின் மாதவியிடமும் கோவலனைக் கவிழ்த்தது.) விழித்து, அசைந்து, நடந்து வந்தாய். ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன்கணவனின் செங்கோல் (அதாவது நேரொழுக்கம்) வளையாதென்று அறிந்தே..

ஏ காவேரி, பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்களாட, அதுபுரிந்து குயில்கள் இசைபாட, விரும்பத்தக்க வசந்தமாலை (காமர் மாலை) உடன் வந்து அருகே அசைய நீ நடந்தாய், ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன் கணவனின் நாமவேற்றிறங் (புகழ்பெற்ற வேற்றிறம்; வேறொன்றும் இல்லை சொல்தவறான் என்று ஊரில் கோவலனுக்கிருந்த மதிப்பு) கண்டு அறிந்தே.

ஏ காவேரி, அவன் குலமகவை வளர்க்கும் தாயாகி (மேகலை பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனபின் கானல்வரி நடந்தது) அவர்குலம் வாழவைக்கும் பேருதவியில் ஒழியாதிருந்தாய். (கண்ணகிக்குப் பிள்ளையில்லை. மேகலையே கோவலன் குடிக்கு முதற்பிள்ளை, இனியும் பிள்ளைகள் பிறந்து குடி தழைக்கலாம் என உணர்த்துகிறாள்). ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? ஆழியாளும் வெய்யோன் போன்ற அவன் அருளால் தன் உயிரோம்பும் என்றே.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 19, 2019

சிலம்பு ஐயங்கள் - 22

இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப் பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குமே தெரியாது. இன்றுங் கூடக் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் ஒருவன் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும் கூடப் பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் உண்மையில் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் ஈழம் எங்கும் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன்= வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்; செங்குட்டுவன்= செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை சில பெயர்கள் மக்கள் வழக்காற்றில் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.

(ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே. இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ என்று சொல்லக் கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்ல வேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் இதுபற்றி அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக் கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு. சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு. வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? ...நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம், ஏராளம்.) 

சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணம் உண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான ஊன்றுகோள்களில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்கு வரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத் தரவுகளை வறட்டுத்தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகர முடியாது. சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.

குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப் பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். கங்கைக் கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயது வரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறு என்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடு நாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார்.

என் கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” பின் எப்படி நம்புகிறீர்கள்? அதையும் தூக்கி எறியலாமே? இந்த ப்ரசத்திகளை நம்புவீர்கள், பதிற்றுப்பத்தின் பதிகங்களை நம்பமாட்டீர்கள் என்றால் அது ஓர் ஓரவஞ்சனை தானே? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லிச் சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச் சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட் படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவு தான் காரணம்.   

இன்னொரு பக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக் கூட்டிச் செங்குட்டுவன் வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச் சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்த நூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன் பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர்போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலை படுகிறது. இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம். .

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக் காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டிய நாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன் மகனை சோழ வளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச் சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக் கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாய் இருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந் தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.

சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைச் சேரர் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கும் மேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர் கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்ய முடியா நிலையே இருந்தது. அந்தக் காலத்தில் கடல்வணிகம் தமிழர்க்கு முகன்மையானது. கொங்கணரை அடக்கியதற்கும் அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக் கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா? 

அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்கு மேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர் வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர் பார்வையில் அதைப் படித்த அறிஞர் மீக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்துவந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகல் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராய வேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக் கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவே என்பது என் கருத்து] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்கு வஞ்சியைத் தொலைத்து அந்துவஞ் சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.

அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ் சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலில் இருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம்பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு.112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும்.   

[சசிகாந்த் போல் ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்ததால் கன்ன பெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கம் ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை சோழர் ஒப்புக் கொள்ளார். தவிர, இவரையும் கடந்து வந்தால் கல்வெட்டில் சோழரைக் கடந்ததாய்ச் செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர் கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழி தான் காரவேலன் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங் கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோல் உழிஞைப்போர் அற்றைநிலையில் கடல்வழி படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா? மிகுந்த ஐயம் வருகிறது.]

கொடுங் கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ் பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப் பகுதிகளில் ஆட்சி செய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்க நாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.

கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ் கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனியாரும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்கால, தமிழ் பேசினார். பின் கொஞ்சங்கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர் தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசி வரை (1950 வரை) தமிழராகவே தங்கிப் போனார். இந்திய விடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப் பட்டார். இப்பகுதிகளின் வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபோதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார்.  கொங்கணர்,  கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைக்குத் தெற்கிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்திய மலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடம் எஞ்சியது. காரவேலன் தன் பாகதக் கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக் குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகத குமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவு படுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.

”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன் செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்ட முடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரிய மன்னருக்கு எதிரே நீயொருவனே நின்ற போர்க்கோலம் என் விழியில் அப்படியே நிற்கிறது” என்று வில்லவன் கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பதை  அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம் பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று நாம் சொல்வதில்லையா? (ஆயிரம் என்பது தமிழ்வேர் கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங்கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்> ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும்  இருப்பினும் வேறொரு தொடரில் சொல்லியுள்ளேன் (http://valavu.blogspot.com/2018/08/7.html) 

நாலாங் கேள்வியில் நெடுங்காலம் செலவழித்துவிட்டோம். இனி அடுத்த கேள்விக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, September 13, 2019

சிலம்பு ஐயங்கள் - 21

சேரர் குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தி சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கிருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயரும் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் அண்ணனைச் செங்குட்டுவன் என்றாரே?) ஆதன் குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் சோழ வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் சோழ நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவன் ஆவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரேசெய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரலெனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என் செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கி இருக்கிறார். அதே பொழுது ஒருவருக்கொருவர் முரணிப் பொருதியும் இருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெருவது ஆயிற்றே?       

இனி இரும்பொறைக் கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை தான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்கு முந்தைய சேரர் கருவூரிலில்லாதது தெரியும். (சங்ககாலம் என்றாலே கொங்குவஞ்சியை வலிந்து இழுப்போருக்குத் தான் இச்செய்தி புரியாதுள்ளது.) அடுத்து அந்துவன்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-149. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திருந்தபோது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங் காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” என வரும். பலரும் ஒருதந்தையை அடையாளங் காண்பதிற் சரவற்படுவர். பெரும் முயற்சிக்கு அப்புறம் அது விளங்கியது.

தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக் குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண் விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்று குறிப்பார். வலியுள்ள ஆண் மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும் போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்று அமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டி வைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச் சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.

”வேளிரைத் தொலைத்து நிலஞ் சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன் பட்டன. சங்ககால முடிவில் சிச்சிறிதாய் வேளிர் ஒழிக்கப்பட்டார். Eventually the segmentary states were unified into 3 large states. சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்று வரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழு வரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப் பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினும், உச்சகட்டம் நடுவிலிருந்த காலந் தான். இப்புரிதலை அடையாமற் செய்வதற்காகவே சங்க காலம் பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டென்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத் தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான். இந்நிகழ்ப்பிற்குள் பல தமிழாசிரியரும் சிக்கிக் கொண்டார். நிகழ்ப்புக் கொண்டோர், மோரியர் பங்களிப்பையும் குறைத்தே பேசினார். குப்தரையே தூக்கிவைத்தார். தொல்லியல் செய்திகள் இவற்றைக் குப்புறத் தள்ளி மோரியர் பங்கை உணரவைத்தன. தமிழ்ர்பங்கும் எதிர் காலத்தில் வெளிப்படும். கீழடி, பொருந்தல், கொடுமணம், பட்டணம் போன்றவை தொடர்ந்தால்...... எனவே தான் இதுபோலும் ஆய்வுகள் நடைபெறாது தடுக்க ஒருசில நிகழ்ப்பாளர் முயல்கிறார். 

அடுத்துச் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் சேரலப் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே

என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் கார வேலன் சூறையாடியாதற்குப் பழிவாங்கும் ...முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம் இதில் புதைந்துள்ளது. மொத்தத்தில் வாழியாதன், அவன்மகன், பேரன் ஆகிய மூவருமே நெடுஞ்சேரலாதனையும், அவன்மகன் செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்த காலமே ஆண்டார். ஆனாற் சேரர் குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையிலும் உறுதி செய்யப்பட்டது புகளூர்க் கல்வெட்டின் மூலமாகும்.

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்

என்று வரும் புகளூர்க் கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறையைக் குறித்தது. பெருங்கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலம் என்பது கற்பனை யில்லை. [“சங்க இலக்கியம் என்பது room போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற் செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் இதே). அதேபோற்றான் “சிலம்பு  என்பது ஒரு கற்பனைப் புதினம். 6 ஆம் நூற்றாண்டில் room போட்டு யோசித்தார்” என்று திரு.நாகசாமியும், திரு. திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார்.

மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று இவர் சொல்கிறார். தேமேயென்று நாமெல்லோருங் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.] “இளங் கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக் காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவனோ பொ.உ. 3 ஆம் நூற்றாண்டு என்று சொல்வார். பொதுவாகத் திரு.ஐராவதம் மகாதேவனுக்கும், மற்ற கல்வெட்டாய்வாளருக்கும் சங்ககாலக் கல்வெட்டுக்களில் 2.3 நூற்றாண்டுகள் வேறுபாடுண்டு. பொருந்தல் ஆய்விற்கு அப்புறம்தான் மகாதேவனிடம் சில மாற்றங்கள் தென்பட்டது. ஆனால் முன் சொன்ன நிகழ்ப்பாளரோ, மகாதேவனின் பழங்கூற்றையே பிடித்துத் தொங்குவர். அது அவர்களுக்கு ஏந்து இல்லையா?] 
 
அடுத்து வருவது வாழியாதனின் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப்பாதையின் காணிப்பரான (Supervisor) அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதி செய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கும் அடையாளம் ஆகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.

மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமான் அஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்து கிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ் சேரல் இரும்பொறையுடன் போர் உடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.

கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.

என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒரு தம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச் சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம் பத்தின் பதிகம் அடையாளங் காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம் பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப்புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல்பான தந்தை குட்டுவன்சேரல் இரும்பொறையே. 

இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசி கீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலஞ் செய்துவரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்த நான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். உன் வீரர் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்தாய். முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார். (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள்.) . .

http://valavu.blogspot.in/2010/09/1.html
http://valavu.blogspot.in/2010/09/2.html
http://valavu.blogspot.in/2010/10/3.html

அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே இவன் ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம் பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ் செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர்மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.

இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இரு வேந்தரையும், விச்சிக் கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன் பின், சோழ வளநாட்டில் பங்காளிச் சண்டை பெருகியது. உறையூர் மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித் தவிப்பதை என்னால் ஏற்க இயலாது. கோப்பெருஞ் சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொர் இடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழிருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்கவர்ந்து பலருக்கும் பிரித்துக்கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கு அப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டு வந்தவன் சிலம்பின் படி செங்குட்டுவனே ஆவான்).

தவிரக் கொங்கு வஞ்சியில் சதுக்க பூதத்தை நிறுவிச் சாந்தி வேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம்.  (சாந்திசெய்தல் என்பது குறிப்பிட்ட படையல்கள் மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள்மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச் சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்க பூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்க பூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்க பூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
   . 
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 12, 2019

சிலம்பு ஐயங்கள் - 20

முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம். (செங்குட்டுவனைப் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்.)

சங்ககாலச் சேரரில் சுள்ளியம் பேரியாற்றங் கரைக் குடவஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன்குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரைக் கொங்கு வஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சிபுரிந்தார். குட வஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுது பிரிந்தன? தெரியாது. அதேபொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வக் கடுங்கோவிற்கு வாழியாதன் என்ற பெயருமுண்டு.) நமக்குக் கிடைத்த பாடல்களின்படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். (இவன் போக, மாவலியாதன்/ மகாபலி, பெருகலாதன்/ ப்ரஹ்லாதன் என்ற தொன்மத்தாரும் இவர் குடியினரே என்பார்.) 2 கிளையாரின் ஆட்சிக்காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியலாம். ஒரு சேரன்காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச்செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வட படையெடுப்பு நடந்தது என்று கொண்டு மற்ற சேரரின் காலத்தைச் சிலம்புக் கால ஆய்வின் மூலம் நான் குறித்தேன்.

மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு என்பது மூன்று வேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிர்கள் ஆண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்தவரை ”த்ராமிர சங்காத்தம்” என்பது நீண்டகாலந் தொடர்ந்தது. என்றைக்குக் கொங்கு வேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவு கொண்டாடிச் சேரர் தம் பக்கம் கொங்கு வேளிரை தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அதைப் பயன்படுத்திப் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ் சேரல் இரும்பொறை காலத்தில் இது பெரும்பாலும் நடந்திருக்கலாம். கொங்குக் கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார்.

காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அக.31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்கவேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப்படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistensy) நாடுவதால் நான்செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிது சிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப் பத்தில் இல்லாத சேரர் காலத்தை இன்னும்நான் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப்பிரிவுகளை ஒருவித முன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம். It has still not reached a definitive stage.

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-153 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன்காலத்தில் அசோகமோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே சுங்கர்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே. பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புவதில்லை. அப்படிச்சொல்வது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. காலப்பொருத்து இன்றிக் கௌரவர்க்குச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதங் கொடுத்தாரென்பது விழுமிய  வழியாகவும் பொருந்தவில்லை. ”நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்து, போரில் இறந்தவருக்காகச் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போல்” என ஊருக்குணர்த்திச் சேரன் நட்பும்சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்போம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.

உதியன் சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொங்குவஞ்சியில் இவனாண்டான் என்பது நம்பக் கூடியதாய் இல்லை.) இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 110. இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) முத்த மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாகப் பெற்றான்.

இவள்வழி களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென இருவர் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை. (=சோணாட்டுக்காரி; பொன் போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. சோழருக்கும் பொன்னிறத்திற்குமான இனக்குழுத்தொடர்பை நாம் இன்னும் உணர்ந்தோம் இல்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைக் காணின், ஐயை விதுப்பெயராயும், நற்சோணை பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்பட வில்லை. அக்காதை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ என்பார் செங்குட்டுவன் தம்பியென என்னால் நம்ப முடியவில்லை. (நான் அப்படிக் கொள்ளவும் இல்லை.)

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். இந்த மணக்கிள்ளி யார்? - என்பது அடுத்த கேள்வி. மருவல்= தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage- போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங் கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். (சிவகங்கைப் பக்கம் மருவீடு என்ற சொல்லுண்டு.) மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடியோர் காரணம் புரியாது இயற்பெயர் ஆக்கினார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலேயுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச் சோழன் தித்தனாவான். யா என்பது இருளைக் குறிக்கும் இற்றல்= போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/ போக்குகிறவன். யா>ஞா> நா என்ற திரிவில் யாயிற்றன் என்பவன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்> ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்பது வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப் பெயர்கள் சங்ககாலத் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர் பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச் சோழனாவான்.

அதேபொழுது தித்தனின் மகன் பட்டஞ்சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோவொரு காரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம் வேறாகி உறையூரை விட்டு விலகித் தந்தையின் வள நாட்டுத் துறையான கோடிக் கரையில் வீரவிளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சில காலங் கழிப்பான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/ வழிகளில் வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்ற பெயரில், வெளியன் உறையூரை ஆண்டான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் ஆனவன்  தித்தன்வெளியன் எனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப் படும் போர் மச்சான்-மைத்துனன் இடையே ஏற்பட்டதாகும். பெருவிறற் கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச்சண்டைகள் கூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு தன் மாமன்மகனைப் (இவன் பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக்காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்த பிறகாவது, சிலம்பைச் சங்கம் மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பி ஒழிவதை நிறுத்தலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டங் கொள்ளாதவன். அண்ணன் நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டு காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்த போதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்து தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கு அப்புறம் சேர இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப் பொறுப்புக் கொண்டவரே நீண்ட காலம் ஆண்டார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்முறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலமே வேந்தன் ஆகியுள்ளான்.. 

அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” என்பது ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின்னால், மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்க வேண்டும். [இங்கே தமிழகப் பட்டஞ்சூட்டு முறை பற்றிச் சொல்லவேண்டும், முடிசூட்டல் என்பது இளவரசுப் பட்டத்திற்கு மட்டுமே. குறிப்பிட்டவன் எப்போது  அரசனானான் என்பது தமிழ்முறைப்படி தெரியவராது. அரசன் இறந்தபின்னால் இளவரசரில் மூத்தவன் ஆட்சிக்கு வருவான். அதற்கு எந்தப் பெரிய கொண்டாட்டமும் இராது. (Ruling is a continuous affair.) இதனால் ஆட்சிஒ பருவங்கள் என்று கூறப்படுபவற்றில் overlap என்பது இருந்துகொண்டே யிருக்கும். நான் சொல்வதைக் கூர்ந்து ஓர்ந்துபார்த்து அறியுங்கள்.]  இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரலே வானவரம்பன் என்ற பட்டஞ்சூடி அரசுகட்டில் ஏறியிருக்கலாம். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமெனவும் ஊகிக்கிறோம். 

புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். இந்த முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் தமிழாசிரியர் பலரும் குழம்பித் தடுமாறுவார்] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் என்பான் வேறு, பெருஞ்சேரலாதன் வேறென்று புரியும். ஆழவாய்ந்தால் 62 ஆம் பாவில் இறந்ததாய் விவரிக்கப்படுவோன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் என்பவன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் ஒரு பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ் சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டையும் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் சுட்டும் குறிப்பு மட்டுமே வரும். 

செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காண்போம். ஆடுகோட்பாட்டிற்கு பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டு வந்தவனெ”னப் பொருள் சொல்லும். பழங்காலப் போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டு வருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.

பெரும்பாலும் இவன் காலம் பொ.உ.மு. 106 - 69 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வருவான். அதுவுமின்றி வானவரம்பன் என்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 11, 2019

சிலம்பு ஐயங்கள் - 19

"காட்சிக்காதை 163 ஆம் வரியில்வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று 4 ஆவதாய் ஒரு குறுக்குக் கேள்வி எழுந்தது: முன்கொடுத்த விடையின் தொடர்ச்சியிது. இதில் சுங்க அரச குடியினரையும் கனக அரச குடியினரையும் பார்க்கப் போகிறோம்.

புஷ்யமித்ர சுங்கன் காலம் பொ.உ.மு. 185-149 (பெருகதத்த மோரியன் ஒரு படை அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த போது, சூழ்ச்சியால் அவனைக் கொன்று, அவனிடம் சேனைத்தலைவனாய் இருந்த புஷ்ய மித்திரன் ஆட்சிக்கு வந்தான். அவந்தியின் பெருமானர்குலஞ் சேர்ந்த இவனே இந்தியாவில் வேதமறுப்புச் சமயங்களின் ஆளுமையைத் தடுத்து நிறுத்தி, வேதநெறிக்கு முன்னுரிமை கொடுத்து, மீண்டும் தழைக்க வைத்தவன். இவனையும், இவன் மகனையும் வேதநெறியார் சிறப்பாகவே கருதியிருக்க வேண்டும். ஏனெனில் குப்தர் காலத்திய அரசவை இவரைப் போற்றியுள்ளது. புஷ்யமித்ரன் காலத்தில் புத்தமதம் ”மத்தியதேசத்தில்” இல்லாது போய், வடமேற்கே இற்றை ஆப்கனித்தானுக்குத் துரத்தப்பட்டதெனவும் ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் அதேபொழுது வேதமறுப்புச் சமயங்களுக்கான ஆதரவை இவன் முற்றிலும் நிறுத்திவிடவில்லை. இந்த அரசனின் ஆளுமை நருமதையாறு வரைக்கும் இருந்தது.)

அக்னி மித்ரன் காலம் பொ.உ.மு. 149-141 (இவன் புஷ்யமித்ரனின் மகன். வேத நெறியைத் தூக்கிப்பிடித்த பிற்காலக் குப்தர்களின் அவைசேர்ந்த காளிதாசர் எழுதிய ”மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தின் நாயகன் இவனே. புஷ்ய மித்ரனின் நடவடிக்கைகளுக்கு இவனும் பொறுப்பானவன். வேதநெறிக்கு மறுமலர்ச்சி கொடுத்தவனென்பதால் இவன் காளிதாசனின் நாயகன் ஆனானோ, என்னவோ? ) 

வசுஜ்யேஷ்டன் காலம் பொ.உ.மு. 141-131
வசுமித்ரன் காலம் பொ.உ.மு. 131-124
பத்ரகன் காலம் பொ.உ.மு. 124-122
புலிந்தகன் காலம் பொ.உ.மு. 122-119

வஜ்ரமித்ர பாகபத்ரன் பொ.உ.மு. 119-83 (இவன்காலத்தில் மகதம் ஆட்டங் கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்திலுள்ளது. இங்கே அசோக மோரியன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சி புரிந்தார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் சிறிது சிறிதாகச் சுருங்கியது. மகதப் பகுதிகளைக் கவர்ந்து கொள்ள கலிங்கர், நூற்றுவர் கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என்று பலரோடு சண்டைகள் தொடங்கி விட்டன. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயி” இலக்கணத்திற்கு பதஞ்சலி மாபாடிய (மகா பாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம்) சுங்கர்கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சிமுடிவில் நூற்றுவர் கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் தான் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சேரன் வந்துள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்புக் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். சிலம்பில் 2 படையெடுப்புகள் குறித்துக் காட்டப்படுகின்றன.

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்”

இங்கே கோமகளென்றது இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் மனைவி நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசி ஆகலாம். இன்றும் தெற்கிலிருந்து அலகாபாத், கயை, வாரணாசி போய் ஆடுவதில் தமிழர் பலரும் அளவற்ற ஆர்வங் கொள்கிறாரே? அது அன்றும் நடந்திருக்கலாம். சேரன் சிவநெறியாளன். விண்ணவப் பெருஞ்சோற்றை (ப்ரசாதம் என்று சங்கதப் படுத்துவர். அதையே சொல்லி நம் தமிழ்ப்பெயரை மறந்துவிட்டோம்.) தலையில் வாங்கமறுத்தவன். ஆனால் தோளிலேற்க ஒருப் பட்டவன். மகதக்குழப்பதிற் தானும்புகுந்து விளையாட முடியும் என்னுங் காரணத்தால் கண்ணகி கதையை தன் அரசமுயற்சிக்குச் சேரன்  பயன் படுத்தினான். (வடக்கிலிருந்து intelligence info வந்தது வஞ்சிக் காண்டத்திற் சொல்லப்படும்.) There must have been an empire building politics with these expeditions. We should not be very naive to these aspects. Cheran was as intelligent as our modern leaders are. 

தேவபூதி காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்க அரசன். அளவுக்கு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இவ்வரசனை இவன் முதல் அமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொல்வான். அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ரபூதி என்ற பெயரும் இருந்திருக்கலாம். பாகதச் சான்றுகள் கொண்டு இதை உறுதிசெய்ய வேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரன் ஆகலாமோ?” என்ற ஐயம் கட்டாயம் எழுகிறது.
 
செங்குட்டுவன் பொ.உ.மு.80 இல் படையெடுத்தபோது பெரும்பாலும் இவ் அரசனுடன் போர்புரிந்திருக்கலாம். மகதம் தமிழர்க்குப் பகைநாடு என்பதை இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்” என்றவரிகள் தெளிவாக வெளிப் படுத்தும். அதன்பின்னரே ”யாரின்மேல் செங்குட்டுவன் படை எடுத்தான்” என்பது எனக்கு விளங்கியது. மகதம்பற்றிப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டமாய்ச் செருகி உராய்ந்து பார்க்கப் பார்க்க, உள்ளிருக்கும் படம் விளங்கிற்று. செங்குட்டுவனின் படைபலம் தெரிந்து அவனைத் தம்கைக்குள் வைத்து அவன்மூலம் மகத அரசிற்கு ஊறு விளைவித்துப் பின் தாம் கைப்பற்றிக் கொள்ள முற்பட்டே நூற்றுவர்கன்னர் செங்குட்டுவனுக்கு உதவியிருக்கிறார்.

”இமயத்திலிருந்து பத்தினிக்குக் கல்லெடுக்க நீங்கள் போகவேண்டுமா? நாங்கள் செய்யமாட்டோமோ?” என்பதெல்லாம் சரியான அரச தந்திரம் (tactics). தடந்தகை (strategy). தவிர நூற்றுவர் கன்னருக்கும் சேரருக்கும் நெடு நாள் உறவு இருந்திருக்கலாம். புறம் 2 இல் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது, ”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்து ஒழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக் குறிக்காது நூற்றுவர்கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப் பாடும் எனக்குண்டு. புறம் 2 பற்றிய கட்டுரையை என் வலைப்பதிவில் பாதிவரை எழுதிப் பின் முடிக்காது விட்டேன்.   

தவிர, செங்குட்டுவன் படையெடுப்பின்போது பெயருக்கு தேவபூதி மகத அரசனாயிருந்து கட்டுப்பாடு முதலமைச்சனிடமே கூட இருந்திருக்கலாம். சேரன் போரிறுதியில் பிடித்துப்போனது வசுதேவக் கனகனா, அன்றி அவன் தந்தையா என்பது தெரியவில்லை. ஆரிய அரசர் என்போர் மகதங் காக்க இவனுக்குப் பின்னிருந்தோராவர். அவர் ஆயிரம் பேர் என்பது ஒருவிதப் பேச்சு வழக்கு. “இவனுக்குப் பின்னால் ஆயிரம் பேர் நின்றார் தெரியுமா?” என்று இன்றும் உரையாடலிற் சொல்கிறோமில்லையா? அதைப் போல் இதைக் கொள்ளவேண்டும். உறுதியான எண்ணிக்கையென்று கொள்ளக் கூடாது.)  கனக அரச குடியினர் (இவரைக் கனவர் என்றுஞ் சொல்லலாம். பொதுவாக வடவரின் பெயர் அப்படியேவா நமக்கு மட்டுப்படுகிறது? கன்வன் என்று பிராமியில் எழுதுவது கனவன் என்றே தமிழியிற் படிக்கப்படும். வகரமும் ககரமும் தமிழிற் போலிகள் நாவற்பழம் நாகற்பழம் ஆகிறதே? எனவே கனவன் கனகனாவது இயற்கையே.)

வசுதேவன் காலம் பொ.உ.மு.75-66 (விசயன், வசுதேவனென்று பெயர் வைப்பது மகாபாரதத் தாக்கத்தால் இயல்பாயிருந்தது. கனக அரசர் விண்ணவப் பெயரையே கொண்டிருந்தார். சிங்கள அரசன் விசயனின் மகன் வசுதேவன் என்பதை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். சிலம்பில் கனகன் விசயன் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் என்பது போல், இனக்குழுப் பெயர் முதலிலும், இயற்பெயர் முடிவிலும் வந்திருப்பதாய்க் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர் இது புரியாது கனகன், விசயன் என்று இரு பெயராகவே சொல்லித் தருவர். இது என்ன குப்பன், சுப்பன் போலவா? சேரன் ஒருவன், செங்குட்டுவன் இன்னொருவனா? சிறைப்பிடித்த ஆரிய அரசர் எல்லோரையும் கண்ணகி கோயில் குடமுழுக்கில் சேரன் விட்டுவிடுவான். அதற்கு அப்புறம் வசுதேவக் கனகனோ, அன்றி அவன் தந்தையோ வடக்கே விதிசா/பாடலிபுத்தம் போய் தேவபூதியைக் கொன்று கனக அரசை நிறுவ முயற்சி செய்திருக்கலாம்.

பாகதச் சான்றின்றிச் சிலம்பாற் கொண்ட கருதுகோள்களை நாம் நிறுவிக்க இயலாது. சுங்க, கனக அரசரின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னுங் கிடைக்கவில்லை. பாகத நூல்கள் குறைந்தே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படுகின்றன. சங்கத நூல்களே எங்கு பார்த்தாலும் இழைகின்றன. மோரியர் வரலாறு எழுதினால், அதன்பின் குப்தர் வரலாற்றிற்கு, பொதுவான வரலாற்றாசிரியர் ஓடிவிடுகிறார். இடையில் பெருத்த இடைவெளி இருப்பது யாருக்கும் தோன்றவில்லை. சங்ககால வரலாறு எழுதவேண்டுமெனில்  இவ்விடைவெளி பாகத வாயிலாய் நிரப்பப்பட வேண்டும். அன்றேல் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்கவேண்டும். 
 
பூமிமித்ரன் காலம் பொ.உ.மு.66-52
நாராயணன் காலம் பொ.உ.மு.52-40

சுசர்மன் காலம் பொ.உ.மு.40-30 [பஞ்சதந்திரம் எழுந்தகாலம் இவன் காலமே. “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற கட்டுரைத்தொடரை என் வலைப் பதிவிற் படியுங்கள். பஞ்சதந்திரத்தை வைத்தும் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்தால் தமிழர் வரலாறு “காலி” என்றெண்ணி திரு நாகசாமியும் அவர் சீடரும் முயல்கிறார் போலும். ”சிலம்பு 6 ஆம் நூற்றாண்டு நூல்” என்ற தன் கருத்தை வலியுறுத்தி, அவர் சொன்னார், இவர் சொன்னாரென வழக்கம் போல் இலக்கியக் காணிப்பை மட்டுமே தொகுத்துத் தற்குறிப்பேற்றஞ் செய்யாது ஏரண வரிதியோடு (with logical flow) ”இவ்விவற்றால் இப்படி, இதுபோல் அமைகிறதென்று” தானே அலசிச் சான்றுகள் கொடுத்து ஒரு கட்டுரையை நண்பர் நா.கணேசன் என்றெழுதப் போகிறார்? தெரியாது]

http://valavu.blogspot.in/2013/02/1.html
http://valavu.blogspot.in/2013/02/2.html
http://valavu.blogspot.in/2013/02/3.html

இனி சேரர் குடிக்கும் காட்சிக்காதை 156-164 வரிகளுக்கும் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 10, 2019

சிலம்பு ஐயங்கள் - 18

 இனி மகதத்தின் பல்வேறு அரசர் காலங்களுக்கு வருவோம்.

அலெக்சாண்டர் இந்தியாவின்மேற் படையெடுத்தது பொ.உ.மு.327/326 என்பர். (இது ஒரு வரலாற்று முற்றைப் புள்ளி (absolute marker). இதை வைத்தே வரலாற்று ஆசிரியர் இந்திய வரலாற்றைக் கணிக்கிறார்.)

சந்திரகுத்த மோரியன் காலம் பொ.உ.மு.321 - 297 (இவனுக்கு முந்தைய நந்தர் காலத்தைக் குறிக்கும் சங்கப் பாடல்களும் உண்டு. குறிப்பாய் மாமூலனார் பாடல்கள். சங்க இலக்கியத்தை ஒழுங்காகப் பொருத்தாத காரணத்தால் சங்ககாலத் தமிழர் வரலாற்றை, இன்றுங்கூடத் தப்பும் தவறுமாய்ப் புரிந்து கொள்கிறோம். கமில் சுவலபில் கணிப்பிலிருந்து வெளியே வந்தாலொழிய இது புரியாது.)

பிந்துசார மோரியன் காலம் பொ.உ.மு. 297 - 273 (இவனே தென்னகத்தின்மேல் படையெடுத்தவன். இவன் படையெடுப்பைப் பற்றியும் சுற்றிவளைத்துச் சங்கப்பாடல்கள் உண்டு. தமிழ் மூவேந்தரைத் தோற்கடிக்க முடியாமல் இவன் படைகள் திரும்பிப் போயின.)

தேவானாம்பியதசி அசோகன் காலம் பொ.உ.மு. 268 - 232 (இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4 ஆண்டுகள் ஒரே குழப்பம். மகதநாடு வேந்தனில்லாது இருந்தது. கணக்கின்றித் தன்னுடைய பல சோதரரைக் கொன்றே அசோகன் பட்டத்திற்குவந்தான். இந்தியவரலாற்றில் இவன் முகன்மை மன்னன். தவிரத் தமிழ்மூவேந்தரின் இருப்பையும் அதியமான்கள் இருப்பையும் தன் கல்வெட்டுக்களிற் பதிவு செய்தவன். இவன்செய்த கோத்தொழில் தமிழ் மூவேந்தரால் பாராட்டப்பட்டது போலும். ஏனெனில் தேவானாம்பிய தசி என்றபட்டம் அப்படியே தமிழாக்கப்பட்டுச் சேரருக்கு முன்னொட்டு ஆக்கப் பட்டதென்பார். மயிலை சீனி வேங்கடசாமியார்.

”இமையவர் அன்பன்” என்பதே திரிந்து இமையவரம்பனாகி ”இமையத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. அதே போல் வானவரன்பன் வானவரம்பனாகி ”வானத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. இமையவரம்பனும், வானவரம்பனும் மாறி மாறிச் சேரருக்கு முன்னொட்டு ஆயின. தேவானாம்பிய என்ற பாகத முன்னொட்டை இலங்கையரசன் தீசனும் அப்படியே வைத்துக்கொண்டான். சேரரோ அதைத் தமிழ்ப்படுத்திச் சூடிக் கொண்டார். There must have been a mutual admiration society. வேத, சிவ, விண்ணவ நெறிகளும், வேதமறுப்பு நெறிகளும், பல்வேறு மெய்யியல்களும் விரவிக் குடவஞ்சியில் சமயப்பொறை இருந்தது சிலம்பு/மேகலையால் தெரிகிறது. வேதமறுப்புச் சமயங்களை ஆய்ந்தால் ஒழிய தமிழர் வரலாறு புரிபடாது.)
   
தசரதன் காலம் பொ.உ.மு. 231 -224 (இவன் அசோகனின் முதல் மகனல்லன். அடுத்த மகன். அசோகனின் இரண்டாவது அரசி முதல் மகனைச் சதி தீட்டிக் கொன்றுவிடுவாள். எப்படி இராசேந்திர சோழனுக்கு அப்புறம் அவனுடைய ஒவ்வொரு மகனும் ஏதோவகையில் கொல்லப்பட்டு சோழர் குடிவழி முற்றிலும் அழிந்து தெலுங்குச் சோழராட்சி இங்கு ஏற்பட்டதோ, அதேபோல ஆழமான சூழ்ச்சி அசோகனின் மகன்களுக்கும் நடந்திருக்கிறது. கொல்லாமைக் கொள்ஐ பரப்பிய இவ்வளவு புத்தம், செயினம், அற்றுவிக நெறிகளுக்கு நடுவே இவ்விதக் கொலைகளும், அசோகனுக்குப்பின், நடந்தன. ஆழ்ந்து பார்த்தால் வரலாறு என்பது மிகவும் மருமமானது.)

சம்பாதி காலம் பொ.உ.மு. 224 - 216 (இவனும் அசோகனின் மகனே. தசரதன் இருக்கும்போதே இவன் ஒருபக்கம் ஆளுநனாய் இருந்து பின்னால் அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள்வான்.)

சலிசுகா காலம் பொ.உ.மு. 215 - 202 (இவன் சம்பாதியின் மகன்)
தேவ வர்மன் காலம் பொ.உ.மு.202-195
சடா தன்வன் காலம் பொ.உ.மு.195-187

பெருக தத்தன் காலம் பொ.உ.மு.187-185 (இவனைத்தான் சேனை அதிபதி சுங்கமித்திரன் கொலைசெய்து தன்குடியை மகத அரசிலேற்றினான். இப் பிரகதத்தனுக்குத் தான் பெரும்பாலும் கபிலர் குறிஞ்சிப் பாட்டைச் சொல்லி யிருக்கலாமென ஊகிக்கிறோம். கபிலர் போன்றவர் ஒரு குறுநில மன்னனுக்காகக் குறிஞ்சிப்பாட்டை பாடினாரென்பது ஐயமாக உள்ளது. சேர, சோழ, பாண்டியருக்கு இணையான வேந்தர் அக்காலத்திற் சிலரே இருந்தார். மகதமே எல்லாவற்றிற்கும் தலைமையானது. அப் பெருகதத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டு சொல்லுவது கபிலருக்கு நன்மை பயக்குமல்லவா?)

இனிச் சுங்கருக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, September 09, 2019

சிலம்பு ஐயங்கள் - 17

"காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாவதாய் ஒரு குறுக்குக் கேள்வி எழுந்தது: இதன் விடை சற்று நீளமானது. அதைச் சொல்லுமுன் சங்ககாலச் சேரர் வரலாற்றையும், அதற்குதவியாய் இணையத்திலுள்ள மகத அரசர் காலங்களையும் சற்று ஆழமாய்ப் பார்க்கவேண்டும்.

சிலப்பதிகாரக் காலத்தில் வடக்கே மகத அரசே பேரரசாயிருந்தது. (என் ”சிலம்பின் காலம்” நூலையும் படியுங்கள்.) மகதத்தோடு பொருதாதவன் அக் காலத்தில் வடக்கே மேலெழ முடியாது. அல்லா விடில் மகதத்திற்கு அடங்கிக் கப்பங் கட்டவேண்டும். தெற்கிருந்து படையெடுத்துப் போனவன் (இப் படையெடுப்பை இதுவரை எந்த வடவரும் ஏற்றதில்லை. பாகதச் சான்றுகள்  ஏதும் இதுவரை நமக்குக்  கிடைக்கவில்லை. வெறுமே “தமிழ் வாழ்க” என்று நாம் கூப்பாடு போடுவதிற் பயனில்லை. சிலப்பதிகாரத்தைச் சரியாய்ப் பொருத்தித் தேட வேண்டும். இல்லாவிட்டால், வேறு சிலர் போல் 5/6 ஆம் நூற்றாண்டுப் புதினம் என்று சொல்லித் திரிய வேண்டும். அப்படிச் சொல்ல நிறையத் தமிழரே முன்வருகிறார்.) மகதத்தைச் சண்டைக்கு இழுக்காது தமிழன் வடக்கே போய்வந்தானென்பது கட்டுக்கதையாகி விடும் ”இளங்கோ வடிகட்டிய பொய் சொல்கிறார்” என்று கருதவில்லையெனில், கதைக்காலம் மகதத்தோடு பொருந்த வேண்டும்.

கதையை 5, 6 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் வஞ்சிக் காண்டத்தையே மறுக்கிறார். “எல்லாமே கப்சா, இதுவொரு புதினம்” என்பார் ஒரு நாளும் வஞ்சிக் காண்ட முகன்மையைப் புரிந்தவரில்லை என்று பொருளாகும். அவர் தமிழரை இழிவுசெய்கிறாரென்பது இன்னொரு ஆழமான பொருள். அப்படி மறுக்கிறவர் ”சேரன் யாரோடு போர்செய்திருப்பான்?” என்பதையாவது ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். இளங்கோவென்ற எழுத்தாளர் கற்பனைக் கதை சொல்லியிருந்தால், மதுரைக் காண்டத்தோடு முடிப்பதே சரியான உச்ச கட்ட உத்தியாகும். அதற்கப்புறம் காதையில் ஓரிரு காட்சிகளைச் சொல்லி “சுபம்” என முடித்திருக்கலாம். (அப்படியே சிறுவயதில் இரவெலாம் நான் விழித்துப்பார்த்த 15 நாள் கண்ணகி கூத்துக்கள் நடைபெற்றன. இக் கூத்துகளை 3,4 முறை பார்த்துள்ளேன். கோவலன் கதையெனும் நாட்டுப்புறக் கூத்துப்பாட்டும் அப்படித்தானிருக்கும். வஞ்சிக்காண்டம் இருக்காது.)

ஒரு கதையை எங்கு முடிக்கவேண்டும் என்பதற்கு உளவியல் தொடர்பாய்க் கதையிலக்கணமுண்டு. அக்கதையிலக்கணம் மீறிச் சிலப்பதிகாரமுள்ளது. கண்ணகி பாண்டியனைப் பழிவாங்கியதும் மதுரையை எரித்ததும் கூடச் சிலம்பின் முடிவல்ல. மதுரைக்காண்டத்தில் முடிவது சிலம்பு அணிகலனின் அதிகரிப்பால் வந்தது. வஞ்சிக்காண்டத்தில் முடிவதோ, சிலம்பெனும் மலையரசின் அதிகாரம். அது வடக்கே போய் வெற்றி கொண்டு தமிழகத்திற் தன்னைப் பேரரசனாய்க் காட்டிக்கொள்கிறது. அதனாற்றான் சிறைப்பிடித்த ஆரியவரசரை மற்ற வேந்தருக்குக் காட்டச் சொல்கிறான். சிலம்பென்ற சொல்லிற்கு காப்பியத்தில் இரு பொருளுண்டு. ”இளங்கோ வஞ்சிக் காண்டத்தை ஏன் நூலில் வைத்தான்? அதிலென்ன சொல்ல விழைகிறான்? உட்கருத்தென்ன? ஒரு காட்சி, காதை, காண்டம் நூலில் ஏன் வருகிறது?” என்பதே கட்டுக் கதைக்கும், காப்பியத்திற்குமான வேறுபாடு.

சிலம்பில் வரும் ஆரியவரசர் பெரும்பாலும் மகதத்திலும், மகத்தைச் சுற்றியும் இருந்தவரே. வடக்கென்றவுடன் நம்மையறியாது தில்லியையும், தில்லிக்கு வடமேற்கையுமே எண்ணிக் கொள்கிறோம். அது பிற்காலப் பார்வை. பழங்காலத்தில் வடக்கென்பது வாரணாசி, பாடலி புத்தம் சுற்றிய பகுதிகளே. சங்க காலத்திற் கங்கையே வடக்கின் வற்றாத ஊற்று பாடலி புத்தத்தை தக்க சீலத்தோடு உத்தரப் பாதையும், தென்னாட்டோடு தக்கணப் பாதையும் கலிங்கத்தோடு கடற்கரைப் பாதையும் இணைத்தன. மூன்றாம் பாதை அக்காலத்தில் தமிழகத்தை இணைக்கவில்லை. பெரும்பாலான பயணங்கள், படையெடுப்புக்கள் உத்தர, தக்கணப்பாதைகளின் வழியே நடந்தன. இற்றை அவுரங்காபாதிற்குத் தெற்கே கோதாவரி வடகரைப் படித்தானத்தில்> பயித்தான்> பைத்தான்)  தக்கணப் பாதை முடிந்தது. மோரியருக்கான தண்டல் நாயகராய் படித்தானத்திலிருந்து, பின்பு ஆளுநர் ஆகவும் மன்னராகவும் நூற்றுவர்கன்னர் (சாதவாகன்னர்) மாறினார். நூற்றுவர்/ சாத்துவருக்கு, நொறுக்குபவர் என்ற பொருளுண்டு. நூறென்ற எண்ணிக்கைப் பொருள் கிடையாது. சிலம்புக்காலத்தில் நூற்றுவர் கன்னரும், அவருக்கு மேலிருந்த மகதக் கனக அரசரும் வலியிழந்திருந்தார்.

மொழிபெயர் தேயக் கருநாடக, வேங்கடவழி (காடுவிரவிய வேகுங்கடத்தில் மக்கள்வதிவது மிகக்குறைவு)  தகடூரூடே மூவேந்தர் நாட்டிற்கு தக்கணப் பாதையின் தொடர்ச்சியிருந்தது. Plus there was a standing Tamil army to protect the language-changing country as per Maamuulanaar. மொழிபெயர் தேயத்தைத் ”திராமிர சங்காத்தம் 1300 ஆண்டுகள் காப்பாற்றியது என்றும், தானே சங்காத்தத்தை உடைத்ததாயும்” கலிங்கக் காரவேலன் தன் கல்வெட்டிற் குறிப்பான். மொழி பெயர் தேயத்தை ஒட்டியதால் நூற்றுவர்கன்னர் நாணயத்தின் ஒருபக்கம் தமிழும், இன்னொரு பக்கம் பாகதமும் இருந்தது. நூற்றுவர் கன்னர் தாம் சுருங்கிய காலத்தில் ஆந்திர அமராவதிக்குத் தலைநகரை மாற்றிக் கொண்டார். நூற்றுவர்கன்னர் தொடங்கியது படித்தானம்; முடிந்ததோ அமராவதி. கன்னருக்குப் பின் படித்தானத்தில் கள அப்ரர்>களப்ரர்  அரசு ஏறினார். பின்னாளில் அவரே மூவேந்தரைத் தொலைத்தார். சங்க காலத்தில் தொண்டைநாட்டின்மேல் கலிங்கம் வரை கடற்கரை தவிர்த்த நிலம் தொண்டகக் காடு (>தண்டக ஆரண்யம்) எனவாயிற்று. பின் இக்காடழிந்து இற்றை ஆந்திரமானது. காடு அழித்த காரணத்தால் பல்லவர்க்குக் காடவர்/ காடுவெட்டி என்ற பெயர் வந்தது.
      .
தகடூரிலிருந்து வயநாடு வழியே குடவஞ்சிக்கும், கொங்குவஞ்சி வழியே உறையூருக்கும், பொதினி (பழனி) வழியே மதுரைக்கும் பாதைகளிருந்தன. (இன்றும் பாதைகள் இப்படித்தான்.) குறிப்பிட்ட இக் கூட்டுச்சாலைகள் இருந்ததாலேயே அதியமான்கள் வடக்கே அறியப்பட்டார். காரணமின்றி அசோகன் சத்தியபுத்திரரைச் சொல்லவில்லை. மகதத்திலிருந்து தமிழகம்வர தகடூர் அதியமானைத் தாண்டி வரமுடியாது. இன்று சிங்கப்பூரை மீறி இந்தியப் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடலுக்குள் எந்தக் கப்பலாவது போகமுடியுமா? அதன் தடந்தகை இருப்பாற் (strategic existence) சிங்கப்பூர் பெரிதாகப் பேசப்படுகிறது. அப்படியே தான் தகடூரின் இருப்பு தமிழகத்தில் இருந்து வடக்கே போவதற்கு ஒருகாலத்தில் இருந்தது.

(சங்கப் பாடல்களில் பாதிக்குமேல் பாலைத்திணைப் பாடல்கள். அவற்றிற் பெரும்பகுதி வணிகத்திற்போன செய்திகள் தாம். வணிகரெலாம் எங்கு தான் போனார்? முடிவில் எல்லாமே மகதத்திற்குத் தான். அதேபோல் மகதத்தில் இருந்தும் தமிழகம் வந்தார். அவருக்கு வேண்டிய பொன் (வட கொங்கிற்- பிற்காலத் தென்கருநாடகம் - கிடைத்தது. எவன் கொங்கைக் கவர்ந்தானோ அவனே தமிழரிற் பெருவேந்தன்), மணிகள் (தென்கொங்கிற் கிடைத்தன. கொங்கு வஞ்சி இதனாலேயே சிறப்புற்றது), முத்து (நித்தில்>நிதி என்ற சொல் முத்திலெழுந்தது. பாண்டிநாடு முத்திற்குப் பெயர் போனது), பவளம் (சோழ நாட்டிற் கிடைத்தது.) இன்ன பிற செல்வங்கள் (குறிப்பாய்ச் செலாவணிச் சரக்குகள்-exchange goods) கிடைக்கவேண்டுமெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வராது முடியாது. எந்த நாடு செலாவணிச் சரக்குகளை அதிகம் கொண்டதோ, அதுவே அக்கால வணிகத்தில் வென்றது. மகதத்தை விடச் சிறு பரப்பே கொள்ளினும், செலாவணிச் சரக்குகளால் தமிழர் அக்காலத்தில் தனிப்பெரும் நிலை கொண்டார்.
 
இவ்வணிகத்தில் கொங்கு வஞ்சியும், தகடூரும் முகன்மையாயிருந்தன. அதை யாரும் மறுக்கவில்லை. தொல்லியல் வெளிப்பாடுகள் அதையே  காட்டின. மணிகளுக்கும், மாழைகளுக்கும் கொங்கு மண்டலம் பெயர் பெற்றது. அதை வைத்துச் ”சேரர் தலைநகரே இங்குதான் இருந்தது” என்பது சற்று அதிகம். வானத்திற்கும் புவிக்குமாய் கோட்டை கட்ட முயல்வதாகும். கொங்கு வஞ்சி என்றுமே குட வஞ்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வேண்டுமென்றே கொங்கு வஞ்சியைத் தூக்கிப் பிடிப்பவர் ஆய்வின்றிப் பேசுகிறார். (ஒவ்வொருவரும் தம் வாழிடங்களைத் தூக்கிப் பிடிப்பதற்காய் ஏரணத்தைக் கடாசுவது பொருளற்றது. ”திருச்சியிலிருந்து மதுரைக்கு காரைக்குடி வழிதான் எல்லோரும் போனார்” என்று நான் சொன்னால் பலருஞ் சிரிப்பார். விராலி மலை வழியே குறைத்தொலைவுப் பாதை என்பது உள்ளமை நடைமுறை. மக்கள் மதிப்பார்.) கொங்கு வஞ்சி வாணிகத்தில் தகடூரோடு தொடர்புற்றது இயற்கையே. ஆனால் சிலம்பை ஆழப் படித்தால் குட வஞ்சியின் சிறப்புப் புரியும். (கொஞ்சம் பொறுக்க வேண்டும். இப்பொழுது தானே 4,5 ஆண்டுகள் முன் தொல்லியலார் முசிறிப் பட்டணத்தைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து சிறு தொலைவிற் குட வஞ்சி கிடைத்துவிடும்.)

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 08, 2019

சிலம்பு ஐயங்கள் - 16

இப்பொழுது ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்ற கூற்றில் ”தீத்திறத்தார் யார்?” இக்கேள்வியைப் புரிந்துகொள்ள என் வஞ்சினமாலைப் பதிவைப் பாருங்கள் அதிலிருந்து சிலவற்றை வெட்டியொட்டி, சில வாதங்களைக் கூடச்சேர்த்து கீழே விடையளிக்கிறேன். (http://valavu.blogspot.in/2015/11/blog-post.html)  . .
 
சிலம்புச்சுவடியில் பெரும்பாலான காதைகளில் யாப்பு எதுவென வெளிப் படும். வஞ்சினமாலையில் மட்டும் அப்படியில்லை. ஆய்வின் மூலமே ஒற்றையடிகளில் நாற்சீரும், இரட்டையடிகளில் முச்சீர் தனிச்சீரும், கடையடியில் இருசீர், ஓரசைச்சீரும் பயிலும் நேரிசைக் கலிவெண்பாவை அறிகிறோம். ஆழ்ந்துபார்த்தால், 19 இடங்களில் அடிகள் சிதைந்திருப்பதும், சிலவிடங்களில் யாப்புத்தட்டுவதும் கூடப் புலப்படும். பிழைகளோடு இளங்கோ இவற்றை யாத்திருக்க முடியாது. வேறேதோ நடந்திருக்கலாம். ஓலைக்கட்டின் ஆயுள் 150/200 ஆண்டுகளெனில், உவே.சா.விற்குக் கிடைத்தது 10-14 ஆவது எடுவிப்பாக (edition) இருக்கலாம். இச்சிதைவுகள் அரும்பதவுரை எடுவிப்பிலேயே தென்படுவதால், பெரும்பாலும் 4/5 ஆவது படியெடுப்பில் ஓலைகள் செல்லரித்துப் போயிருக்கலாம். மிஞ்சியவற்றைத் தொகுத்து, தொடரறுந்த இடங்களிற் தோன்றிய சொற்களைப் பெய்து, புது ஓலைப்படி உருவாகியிருக்கலாம். ஆக வஞ்சினமாலையில் இடைச்செருகலுக்குப் பெரிதும் வாய்ப்புண்டு.] கீழ்வரும் 6 அடிகள் செல்லரித்துள்ளன. காட்சி நாடகத் தனமாயிருந்ததாலும், எதெல்லாம் இடைச்செருகலென்று சொல்ல முடியாதுள்ளோம். பொருள் சொல்கையில் குத்துமதிப்பாகவே சொல்ல வேண்டியுள்ளது.. 
 
  ......................................................................- வட்டித்த
  நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
  (---------------------------------------------------)- 
  பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் - கோலத்து
  (----------------------------------------------------)
  மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி
  (-----------------------------------------------------)- 
  மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
  (-----------------------------------------------------)- 
  பாயெரி யிந்தப் பதியூட்டப் பண்டேயோர்
  (-------------------------------------------------------) 
  ஏவ லுடையேனா கியார்பிழைப்பா ரீங்கென்னப்
  (-----------------------------------------------------)-

வானத்தில் நீலநிறம் கூடிப்போனது. ஆயினும் செக்கர் வானக்கீற்றுகள் அங்கங்கே இடைகாட்டுகின்றன.. அந்நேரத்தில் வெள்ளைப் பல்கொண்ட பால்நிறத்து பார்ப்பனன் போல் (பார்ப்பனன் = வெள்ளை நிறத்தவன். இந்தக் காலத்தில் மேலையரை வெள்ளைக்காரர் என்பது போல் அக்காலத்தில் பால் நிறத்தவரைப் பார்ப்பனர் என்று சொல்லியுள்ளார்.) அக்கினி தோன்றி, “பத்தினியே! பிழைநடக்கும் நாளொன்று வரும். அப்போது இந்நகரை எரியூட்ட வேண்டுமென முன்னே எனக்கோர் கட்டளையுண்டு. இதில் யார் பிழைக்க வேண்டுமெனச் சொல்” என்கிறான். இதில் அங்கியைப் பார்ப்பனனாய்க் காட்டும் ”பல்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பன” என்ற வரியை எடுத்துவிட்டு,

......................................................................-வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
----------------------------------------------  - கோலத்து
மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி

என்று பார்த்தாலும் குறைவில்லாத பொருள் கிடைக்கிறது. தேவையின்றி ல் அழனிக்கு (அங்கிக்கு/அக்னிக்கு) பார்ப்பனத்தோற்றம் கொடுக்கப் படுகிறதோ என்ற எண்ணம் எழாமலில்லை. (இப்படிப் பல தெய்வங்களுக்கும் பார்ப்பனத் தோற்றங் கொடுப்பது வேதநெறிப்பட்ட சிவ, விண்ணவ நெறியினரின் பழக்கம்.) ஐம்பூதங்களை உருவகஞ் செய்கையில் ஒரு சமண ஆசிரியன் நெருப்பைப் பார்ப்பனனாய்க் காட்டுவானா? இத்தனைக்கும் ஐம்பூதங்களை மெய்யியற் கூறுகளாய் ஆக்கியவை சாருவாகம்/பூதவாதம், (நிரீச்சுர) சாங்கியம், அற்றுவிகம், செயினம், புத்தம், விதப்பியம் (விஶேஷிஸம்) போன்ற வேதமறுப்பு மெய்யியற் பார்வைகளே. கி.மு.800-கி.பி.250 காலப் பருவத்தில் அவை வேதநெறியை ஆழமாய் எதிர்த்தன. குப்தர் காலத்திற்றான் வேதமறுப்புச் சமயங்கள் ஓய்ந்துபோய், வேதநெறி சார்ந்த சமயங்கள் புத்தாக்கம் பெற்றன. உபநிடதங்களுக்குளும் ஐம்பூதச் சிந்தனை வந்தது வெகுநாள் கழித்தாகும். இனி வஞ்சினமாலையின் கடைக்காட்சிக்கு வருவோம். இங்கும் பாட்டில் ஓரடியைக் காணோம். எதெது இடைச்செருகல் எனச் சொல்லமுடியவில்லை. ”பார்ப்பாரையும், பசுவையும் விட்டுவிடு” என்று புறனடை சொல்வது சங்ககாலத்தில் நடந்திருக்குமா? தெரியவில்லை.
 
  பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
  (------------------------------------------------------------)-
  மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
  தீத்திறத்தோர் பக்கமே சேர்கென்று - காய்த்திய
  பொற்றொடி யேவப் புகையழல் மண்டிற்றே
  நற்றேரான் கூடல் நகர்.

பசு என்பது காப்பற்ற வேண்டிய விலங்கென நான் படித்தவரை எந்தச் சங்க இலக்கியமுஞ் சொல்லவில்லை. கி.பி. 400 களுக்கப்புறம் வேதநெறி கலந்த சமயங்களால் புராணங்கள் எழுந்தபோதே அச்சிந்தனை வந்தது. ஆழ்ந்து ஓர்ந்துகாணின் பெரும்பாலும் இங்கு இடைச்செருகலுண்டு. எப்படி இத்தனை பேரை விட்டு மற்றவரை நெருப்புச் சூழமுடியும் என்பதும் பகுத்தறிவிற்குப் புறம்பாய்த் தெரிகிறது. ஏரண முறைப்படி ஓர்ந்துபார்த்தால் இந்த அடிகளிற் சில கேள்விகள் எழுகின்றன.

பார்ப்பார் முதலில் வருவதால், தீத்திறத்தோருக்கு ”வேள்வி செய்தோர்” என்று பொருள்கொள்ள முடியாது. அப்படிக் கொண்டால் கூறியது கூறலாகிவிடும். ”தீத்திறத்தார்” என்பதற்கு. இவ்விடத்தில் ”தீவினை செய்தோர்” என்று பொருள் கோடலே சிறந்ததாய்த் தோன்றுகிறது. தீவினையாளருக்கு எதிர் நல்வினையாளர் தானே? ”நல்வினையாளரைக் கைவிட்டுத் தீவினையாளர் பக்கம் சேர்க” என்ற பொருள் சரியாகவே பொருந்துகிறது. நல்வினையாளர் வகையை ”அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி”யென விரிப்பதும் சரிதான். ஆனால், மாந்தர் வரிசைக்குள் பசு ஏன் வந்தது? (தொல்காப்பிய மரபியலில் விலங்குவரிசையில் முன்னுக்குப்பின் முரணாய் வருண வரையறைகள் வரும். அவற்றையும் இடைச்செருகல் என்றே ஆய்வாளர் கணிப்பர்.) மற்ற விலங்குகள் இங்கு ஏன் வரவில்லை?

“காவிரியின் சோமகுண்டம், சூரிய குண்டம் எனும் பொய்கைகளில் (இப் பொய்கைகளை நினைவுறுத்தி இன்றும் காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் பட்டினத்தார் தலமான திருவெண்காட்டுச் சிவன்கோயிலில் சோம, சூரிய தீர்த்தங்கள் உண்டு.) நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரோடு கூடி இன்புற்று, மறுமையிலும் போகபூமியிற் பிறந்து கணவனைப் பிரியாது இருப்பர்” என்று சொன்ன தேவந்திக்கு ”அப்படிச் செய்வது எமக்குப் பீடன்று” என்று சமயஞ் சார்ந்து மறுமொழி சொன்ன ஒரு சமணத்தி ”பசுவைக் காப்பாற்று” என்று ஒற்றையாய்ச் சொல்வாளா? அன்றி அதற்கு மாறாய், ”எல்லா விலங்குகளின் உயிரையுங் காப்பாற்று” என்பாளா?

தவிர, அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி என்ற பொதுப்படை மாந்தப் பிரிவு இருக்கையில் பார்ப்பனரென்ற வருணப்பிரிவு ஏன் உள்ளே வந்தது? பார்ப்பாரைக் காப்பாற்றச் சொல்லி எந்தச் சமண வழிகாட்டலும் இல்லையே? பொதுப் படைக்கும், வருணத்திற்கும் ஆன வேறுபாடு சிலம்பு ஆசிரியருக்குத் தெரியாதா, என்ன? வேதம் முறைசெய்யும் பார்ப்பனரோடு வேதமறுப்பு வழக்காடும் சமண ஆசிரியன் (காடுகாண் காதையில் கவுந்தி மாங்காட்டுப் பார்ப்பானோடு வழக்காடி வேறுபாதை எடுப்பதைக் கவனியுங்கள்) ”பார்ப்பனருக்கு விலக்குக் கொடு” என்பானா?

தவிரப் பெண்டிருக்குப் பெயரடையாய்ப் ”பத்தினி” வருகையில், அறவோருக்குப் பெயரடையாய் முதற்சீர் வந்ததை மாற்றி, இடைச்செருகலில் ”பார்ப்பாரெ”னப் பதமாற்றம் நடந்ததோ?.(புறம் 34 ஆம் பாடலைப் பதிப்பிக்கையில் “குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்ற சரியான பாடம் இருக்கையில், அதையெடுக்காது “பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்று பாடத்தை உ.வே.சா. பதிப்பித்த குழப்பங்களும் தமிழிலுண்டு. பதிப்பிப்பில் இரண்டும் இரு வேறு பார்வைகள். ”குரவருக்கு ஆன” சுவடியைக் கண்டுபிடிப்பதில் ஏராளம் தேடுதல்களும், வாக்கு வாதங்களும் நடந்துவிட்டன. ”அதுபோன்ற திருகல்கள் வேறிலக்கியங்களில் நடந்தனவா?” என இன்றுந் தெரியாது.)

பார்ப்பாரெனும் தேமாச்சீரை எடுத்து அறவோருக்குத் தேமாச்சீர் அடையையும், ”பசுப்” என்ற நிறையசையை எடுத்துவிட்டு பத்தினிப் பெண்டிருக்கு இன்னொரு நிரையசையை முன்னொட்டாய் இட்டாலும் பொருள் சீராகவே வரும். ஆகப் பார்ப்பார், பசு என்ற சொற்கள் இடைச் செருகல் எனும் ஐயம் என்னுள் வலுக்கிறது.  We should be true to the original authors. We cannot insert our individual religious perceptions into Ilango's mouth. ஆய்வின் படி பார்த்தால், இப்போதுள்ள வஞ்சின மாலையின் கடைசி 5 வரிகள் சமண நெறியாளரின் கூற்றை உணர்த்த வில்லை. ஏதோ ஒரு நுணுகிய மாற்றஞ் செய்யப்பட்டிருக்கிறது. நமக்குத் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 07, 2019

சிலம்பு ஐயங்கள் - 15

இதுவரை 14 பகுதிகள் முகுந்தன் கேள்விகளுக்கே ஆகிவிட்டன. இனிவரும் பகுதிகளில் பலரெழுப்பிய குறுக்கு வினாக்களுக்கு விடையளிக்க முற்படுவேன். முதற்கேள்வி முகுந்தன் எழுப்பியது. ”நெடுஞ்செழியன் மகன் தீக்கிரையாகினான் என்று எப்படிச்சொல்கிறீர்கள்?” என்றும் ”அதற்கான வரிகள் எங்குள்ளன?” என்றுங் கேட்டார். நேரடி வரிகள் கிடையா. ஆனாற் சுற்றிவளைத்து ஊகிக்கலாம்.  பாண்டிய இனக்குழு கொற்கையிலிருந்தே முதலில் எழுந்தது என்பதை இக்கட்டுரையின் நடுவே உரைத்திருந்தேன். நினைவு கொள்ளுங்கள்.
---------------------------------------------
இந்தியாவிற்குள் 70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் நுழைந்த போது (A Journy of Man - A Genetic  Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப் பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங் காலம் முன்னே தெற்கேகிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணிவரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) நெய்தலார்வழித் தோற்றம், பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(> நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications) எனக்] கோரைப்பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளால் உறுதிப்படும்.
---------------------------------------------
பொதுவாகச் சங்ககாலத்தில் பாண்டியனென்பது இனக்குழுப்பெயர். செழியன் மாறன் என்பவை பட்டப்பெயர்கள். வேல், வழுதி - இயற்பெயர் முடிபுகள்  செழியன், மாறன் என்ற குடிப்பெயரை பாண்டிக் கொடிவழியார் மாறிமாறி வைத்துக்கொண்டார். மாறனும் செழியனும் தண்பொருநை யாற்றின் (தாமிர பரணியின்) முடிவிற்கிடக்கும் கோரைப்பகுதியால் எழுந்த பெயர்கள். (மாறு = கோரை; செழி>செடி = புதர். கோரைப்புதரைக் குறிக்கும்.) செழியன்<செடியன்>செடையன் பின்னாளிற் சடையனும் ஆனது. வெற்றி வேற் செழியனில் வரும் வேல் என்பது இயற்பெயர் முடிபு. பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலில் ”மாணிக்க வாசகர் தானைவேல் வாகைமாறனிடம் அமைச்சராய் இருந்தார்” என்ற செய்தி வரும். (அரி மர்த்தன பாண்டியன் என்பதெலாம் பிழை மிகுந்த “திருவிளையாடற் புராணத்தால்” ஏற்பட்ட குழப்பம். பல திருவிளையாடல்களில் திருவாலவாயுடையார் புராணமே கற்பனையைக் குறைத்துச் சொல்கிறது. பிழைமிகுந்த திருவிளையாடற் புராணமே பலரும் படிப்பதால் பிழைகளே பரவிக்கொண்டுள்ளன.) இங்கும் வேலென்பது இயற்பெயர் முடிபு. 

இன்னொரு வகையில் வேள்விக்குடிச் செப்பேட்டில் நாலாம் ஏட்டின் முன் புறத்தில் 45-46 ஆம் வரிகளில் ”கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்” என்ற பெயர் வரும். இவன்தான் களப்பாளரை எதிர்த்துப் பாண்டிக்குடியை மீளஆட்சிசெய்ய வைத்தவன். இவன் இயற்பெயர் கதிர்வேல். இதே போல் கனகவேல் என்றபெயரை வேறு பாண்டியர்க்கு ஆன பெயரா வேறெங்கோ படித்துள்ளேன். எந்த இடம் என்று இப்போது நினைவிற்கு வரவில்லை. ஆக, வெற்றிவேல், தானைவேல், கதிர்வேல், கனகவேல் போன்ற இயற்பெயர்கள் பாண்டியருக்கு இருந்துள்ளன. ஆழ்ந்து பார்த்தால், திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி போலவே இன்னொரு இயற் பெயராய் வேல் இருந்ததில் வியப்பேயில்லை :-)

மூவேந்தர் தத்தம் மூத்த மக்களுக்கே பொதுவாய் இளங்கோப் பட்டம் சூட்டுவர். ஏதோ காரணத்தால் இளங்கோவிற்கு ஊறு ஏற்பட்டால், அடுத்த மகனுக்கோ, அன்றேல் சோதரனுக்கோ, சோதரன் மகனுக்கோ பட்டஞ் சுட்டுவார். முற்காலச் சோழரும் பிற்காலப் பாண்டியரும் பங்காளிச் சண்டையிற் சீரழிந்தது வரலாற்றிலுண்டு. ”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” எனும் கொலைக்களக் காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோ வேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவர வந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக் கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையில் இருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதே பொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மை யிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப் பட்டதும் உண்மை. சில போது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநன் ஆகலாம்.

இந்நிலையில் கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை என்று மதுரைக்காண்டம் நகரும். முடிவில் யார் அரசனானான்? உரைபெறு கட்டுரை மூலம் ”அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது” என்ற கூற்றால், வெற்றிவேற்செழியனே நெடுஞ்செழியனுக்கப்புறம் அரசு கட்டில் ஏறியது புலப்படும். அப்படியானால் மதுரை இளங்கோ என்னவானான்? 

மதுரை எரிபடுகையில், நெடுஞ்செழியனுக்கு 50 அகவையிருக்கலாம் (கோப்பெருந்தேவியோடு காமத்தால் ஊடியவன் 60 அகவை என்பது சற்று அரிது. சிலம்புக் காலத்தில் அவனை முதிர்ந்தவனாய்க் கொள்வதை ஏற்க முடியாது.) மதுரையிலிருந்த அவன்மகன் 20/25 அகவைக்குள்ளிருக்கலாம். நேரியவாய்ப்பில் நெடுஞ்செழியனின் பின் அவனே மாறனெனும் பெயரோடு வேந்தனாக வேண்டியவன். ஆனால் அடுத்தேறியவனோ வெற்றிவேற் செழியன் எனப்பட்டான். இவன் நெடுஞ்செழியனின் 2 ஆம் மகனாயிருப்பின் இவனகவை 20க்கும் குறைந்திருக்கும். பின்னால் அகம் 149 இல் எருக்காட்டுத் தாயங்கண்ணனார் தெரிவிப்பது போல் தும்பைப்போர் செய்து, வஞ்சியில் இருந்து கண்ணகி படிமத்தைக் கவர்ந்துவர ஏற்பாடு செய்பவன் 20க்கும் குறைவான அகவையில் இருக்க முடியாது. அதற்குப் பட்டறிவும் தந்திரமும், சூழ்ச்சியும் வேண்டும். மாறாக வெற்றிவேற் செழியன் நெடுஞ்செழியனின் தம்பியாக இருப்பானேயானால், நிகழ்வுகள் முற்றிலும் அச்சாகப் பொருந்துகின்றன. எனவே அரண்மனை எரிப்பில் நெடுஞ்செழியன் மகன் இறந்திருக்கலாம் என்றே கொள்ள வேண்டியுள்ளது. கொற்கையிலிருந்த தம்பியே இன்னொரு செழியனாய்ப் பெயர் கொண்டு பட்டமேறினான்.

[சிலம்பின் காலம் கி.மு.75 என்று நான் சொன்னதற்கு அகம் 149 உம் ஒரு காரணம். சிலம்பு கி.பி. 5/6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாத கூற்று. வெறுமே “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று பழம் ஆசிரியர் கூற்றுக்களையும் 2 ஆம் நிலை ஆவணங்களையும் வைத்துக் கொண்டு தட்டாமாலை சுற்றாது, தாமே ஊற்றாவணங்களை (original documents) வைத்து ஏரணத்தோடு (logic) ஒன்றின் கீழ் ஒன்றாய் தன் தேற்றத்தை (thesis) மாற்றுக்கருத்தார் நிறுவினால், அவருக்கு எதிர்நின்று உரையாடலாம். அதைவிடுத்து இலக்கியக் காணிப்பையே (literature survey) செய்துகொண்டு இருப்பவரோடு என்னசெய்ய? “இராமா, ஓடிவா, இக் கயிற்றைத் தாவு. ஆங்... தாண்டிட்டான். இப்படித்தான் தாண்டோணும்” என்பது போல் திரு. நா.கணேசன். செய்யும் வேடிக்கையைப் பார்த்துப் போக வேண்டியது தான்.] 

சங்ககாலத்தில் நாமறிந்து, நம்பி நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய பல செழியரைப் பார்க்கிறோம். இன்னும் சில செழியரைப் பற்றியுங் குறிப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறைப் படுத்தி யார் முன், யார் பின் என்பதில் இன்னுங் குழப்பமிருக்கிறது. நானும் ஆய்வை முடித்தேன் இல்லை. கொற்கையில் இருந்த தம்பிக்கு வயது 40-45 இருக்கலாம். பஞ்சகாலம். நாட்டிற்பலரும் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்து இருந்த காலம். நெடுஞ்செழியன்மேல் பலருக்கும் கோவமிருந்தது. வார்த்திகன் காரணமாய் ஒரு முறையும், கோவலன்/கண்ணகி காரணமாய் மறு முறையும் மதுரையில் கலகம் விளைகிறது. அரசன் உயிர் துறக்கிறான். அரண்மனை எரிக்கப் படுகிறது. (எரிப்பு கண்ணகி கொங்கையின் பாசுபரகால் அல்ல. அது ஓர் இலக்கிய உருவகம். விவரங் கெட்ட ”விமரிசகரே” ”கொங்கை என்ன பாசுபரசா?” என்று கேலிசெய்து பேசுவர்.) மேலே கூறிய உரைபெறு கட்டுரை வாசகத்தில் ,”அன்றுதொட்டு” என்பதை அரண்மனை எரிக்கப்பட்ட நாளிலிருந்து என்று பொருள் கொள்ளலாம். அடுத்து 2/3 மாதங்கள் நாட்டில் குழப்பம் நிலவியிருக்கலாம்.

பஞ்சத்தால் (”பஞ்சமென்று எப்படிச் சொல்கிறீர்?” என்று ஒருமுறை புவியியலாளர் நண்பர் சிங்கநெஞ்சன் கேட்டார். உரைபெறு கட்டுரையால் தெள்ளெனத் தெரிகிறது.) அடிபட்ட மக்களை ஆற்றுப்படுத்த பொற்கொல்லரைக் கொன்று, களவேள்வி (இச்சொல் ஓர் ஆழமான குறிப்பு. போருக்கு அப்புறஞ் செய்யும் வேள்வி போல brutal repression மூலம் கலகத்தை அடக்கிச் செய்யப்படும் வேள்வி. என்று இங்கு குறிக்கப் படுகிறது) செய்து தன் அதிகாரத்தால் வெற்றிவேற் செழியன் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுகிறான். [தமிழ்வேந்தரை ஏதோ அருளாளரென்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவரிலும் அறம்வழுவி நின்றவர் பலரும் இருந்தார். வெற்றிவேற் செழியனும் அப்படிப்பட்டவனே.] 

2 ஆங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பது போல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா எனில், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படிக் கூட்டக்குறிப்பு இருந்ததா என்று பார்க்க வேண்டும். [மேலே வணிகரைக் குறிக்கும் சொல்லில் ஐஞ்ஞூற்றுவர் என்பதே சரி. இன்றும் காரைக்குடிக்கு அருகே மாற்றூர் நகரத்தார் கோயிலின் ஈசர் ஐஞ்ஞூற்றீசரென்றே அழைக்கப்படுவார். ஆயிரத்து ஐஞ்ஞூற்றீசரல்ல. திசையாயிரம் என்பது ”எல்லாத்திசைகளும்” என்றே பொருள்கொள்ளும். நானா தேசம் என்பதும் இதே பொருள்தான். அதேபோல ஆயிரவைசியர் என்றொரு கூட்டமுண்டு. 1500 வைசியர் கேள்விப்பட்டதில்லை. நீங்கள் சொன்ன முன்மொழிவு எண்ணிப் பார்க்கவேண்டியது. ஆனால் வேறொரு ஆதாரம் வேண்டும். சமணரில் எண்ணாயிரம், பார்ப்பனரில் எண்ணாயிரம் என்பதையுங் கூட சொற்பொருள் காணாது உட்பொருள் காணவேண்டும். 
     
இனி மூன்றாங் கேள்வியில் ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்பதைப் புரிந்துகொள்ள வஞ்சின மாலைக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   

Friday, September 06, 2019

சிலம்பு ஐயங்கள் - 14

நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்>நுளு>நுழு>நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச் சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது குறைந்தது தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்துகிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப்பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்ட நேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.   

”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதம் எனவே எண்ணியிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப் பாவை மறந்துவிடாதீர். ஒற்றிற்கு மதிப்பு இல்லை என்பதால் மல்  என்பது ஓரெழுத்து.)

”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,
“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”

நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும்.  (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர் சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகளுண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டுவந்து சேர்ப்பர். [ஆகுதல்>ஆய்தல் என்பது ஆகுஞ் செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச்சொல் ஆய என்றாகும்.) இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்று மாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப்போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்றுமட்டுமே இம்மந்திரம் பொருள்தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்று சொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ் மந்திரம் வேண்டுமெனில் மேலே கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.

இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில்  ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிக் குறிப்புச் சொல்வர்.. மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத்தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இது புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள் கொடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பர். (இணையத்தில் எங்குதேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும் வரை புத்தனைப் பீடிகைகளாலே மக்கள் தொழுதார். புத்தனின் செங்காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப்பதுமம் என்பது இரட்டை உவமம் அவ்வளவு தான்.

இதேபோல் மந்திரங்கள் செயினத்திலும், அற்றுவிகத்திலும் இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். தீர்த்தங்கரரை அழைத்தும், இயக்கிகளை அழைத்தும் மந்திரங்கள் இருக்கலாம் (அவையெலாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக்கொள்வேன். இனி காடுகாண் காதையின் முடிவிற்கு வருவோம்.

கோவலனைப் பொறுத்தவரையில் காடுகாண் காதையில் வசந்தமாலை தன் முன் நேரேவந்ததாகவே முதலிலுணர்கிறான். (ஆனால் வசந்தமாலையாய்த் தோற்றமளித்த கானுறை தெய்வமே நேரே வந்தது.) கோவலனிடம் அத் தெய்வம் கேட்டதற்கு கோவலன் என்ன செய்திருக்கலாம்? கண்ணகியையும் கவுந்தியையும் கானுறைதெய்வ வளாகத்திலிருத்தித் தான்மட்டும் வசந்த மாலையோடு நகர்ந்து வேறெங்கோ போக எண்ணலாம். அன்றேல் “இவள் ஏன் தன்னைத் தேடிவந்தாள்?” என்று குடையலாம். மாதவியை நாடியும் போகலாம். அன்றேல் ”நடந்தது நடந்ததே; மாதவியோடும் இனி வாழேன்; இவளோடும் குலவேன். என் மனையாளொடு மதுரைக்குச் செல்வதே சரி” யென்று திருந்தியும் அமையலாம்.

இந்நிலையிற்றான், ”இந்த வலியகாட்டினுள் மயக்கும் தெய்வமும் உண்டு” என மாங்காட்டுப் பார்ப்பான் கூறிய சொற்கள் நினைவிற்கு வருகின்றன. “ஒருவேளை ’ஐஞ்சில் ஓதி’போல் வந்து எனைக் கானுறைதெய்வம் குழப்ப முற்படுகிறதோ?” என ஐயுறுகிறான். (ஐஞ்சில் ஓதி= ஐந்தாகிய கூந்தல். பொதுவாய்ப் பெண்கள் முடியை மூன்றாய்ப் பிரித்துச் சடைபின்னுவர். கலை நயம் பொருந்தியோர், அக்காலத்தில் தங்குழலை ஐந்தாய்ப் பிரித்துச் சடை பின்னிக்கொள்வர். மாதவியும் வசந்தமாலையும் இப்படிச்செய்வார் போலும்.) சோதனையிற் தப்பிக்கக் கொற்றவையை விரும்பி அழைத்துத் “தாயே காப்பாற்று” எனக் கோவலன் சொல்வது முற்றிலும் இயல்பான செய்கை. நம்மிற்பலர் எண்ணங்குழம்பிய நிலையில் இன்றும் விருப்புத்தெய்வத்தை விளித்து, “தெய்வமே! காப்பாற்று” என்கிறார் அல்லவா? ”காப்பாற்று” என்ற பின், சோதனை தொடருமோ?

கோவலன்கூறிய மந்திரம் பாய்கலைப்பாவை மந்திரம் ஆதலின், கானுறை தெய்வம்/ வனசாரினி கோவலனிடம் தன்னுருவைக் காட்டி ”உன்னைச் சோதிக்கவே மயக்கினேன். நான் செய்ததை கான மயிற் சாயல் கொண்ட நின் மனைவிக்கும். புண்ணிய முதல்விக்கும் உரைக்காது இங்கிருந்து செல்” என்றதாம். பாய்கலைப் பாவை என்பது கொற்றவையைக் குறிப்பதாய்ப் பல்வேறு உரையாசிரியர் கூறுவர். ஆனால் அடியார்க்குநல்லார் “அந்தரி” என்று வேறு சொல் தொடுத்துச்சொல்வார். அந்தரி என்பவள் கொற்றவையா இயக்கியா? சற்று தடுமாறுகிறோம். ஏனெனில் 11 ஆம் தீர்த்தங்கரரான ஸ்ரேயம்ஸநாதருக்கு இயக்கி/மாணவி ஆன கௌரி கலைமானை ஊர்தி ஆக்கியவள்.(http://www.lchr.org/a/42/m9/sasandevs/) ஒருவேளை இக்கௌரியும் கொற்றவையும் ஒன்றோ, என்னவோ? தவிர, காடுகாண்காதையை அடுத்து வேட்டுவவரியில் கலைமானைக் கொற்றவை ஊர்தியாக்கிப் பல அடிகள் வரும். புலி/சிங்கமும் கலைமானும் கொற்றவை ஊர்திகளாய்ச் சொல்லப் பட்டவை. நமக்குத் தெரியாத ஊடாட்டங்கள் சமணத்திற்கும் வேதநெறிப் பட்ட சிவ, விண்ணவ நெறிகளுக்கும் இடை இருந்துள்ளன. நாம் இற்றைப் புரிதலிலேயே பேசிக்கொண்டுள்ளோம். 

பொய்கையிலிருந்து தாமரையிலைத் தொன்னையால் நீரெடுத்து வந்து, தளர்ந்திருந்த கண்ணகி மடந்தைக்குக் கொடுக்கிறான். (மடந்தைப் பருவம் என்பது 13-19 வயதிற்குள் இருக்கும். கண்ணகிக்கு 17 வயது இருக்கலாமென்று முன்னே சொன்னேன்.) கோவலன் நீர்கொடுத்த பின் ”வெய்யில் ஏறுகிறது. தீயகாட்டின் வழி இனிச் செல்வதரிது” என்றெண்ணிய கவுந்தி, குரவம், மரவம், கோங்கம், வேங்கை நிறைந்த இடைவழியே, மயக்குஞ் சாலைப் பரப்பில், நடப்போர் தவிர வேறுயாரும் இல்லாநிலையில், [மாரி வளம் பெறா வில்லேருழவர், கூற்றைவிட மிகுந்த வலியொடு வில்லேந்தி, வேற்றுப் புலம் ஏகினும் நல்வெற்றி தந்து அதனாற் கழிபேராண்மைக் கடன் எதிர்பார்த்து இருக்கும் நெற்றிக்கண்ணுடையவளும், விண்ணவர் மகளும், குற்றமற்ற சிறப்புடைய வான்நாட்டவளும் ஆன] ஐயை கோட்டத்திற்கு கோவலன், கண்ணகியொடு வந்தடைகிறார்.

மூன்று வழிகள் சேருமிடத்தில் கானுறைதெய்வக் கோட்டமிருந்தது. அது இற்றை மதுரை மேம்பாலத்திற்கு அருகிலென முன்னால் ஊகித்திருந்தோம். இக் கானுறை தெய்வக் கோட்டமே முதல்நாள் மூவரும் தங்கிய இடமாகும். ஒருநாளைக்கு ஒரு காதமே (4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ) இவர் நடப்பதாலும், ஐயைக் கோட்டம் மதுரைக் கோட்டைக்குச் சற்றுமுன் இருக்கலாம் என்பதாலும் [பொதுவாகக் கொற்றங்களுக்கு - கோட்டைகளுக்கு- அருகிற் சற்றுமுன் ஐயைக் கோட்டங்கள் (கொற்றவைக் கோட்டங்கள்) இருப்பது தமிழக வழக்கம். இன்றும் இடிந்த கோட்டைகளுக்கு அருகில் இதுபோல் அம்மன்கோயில்களைக் காணலாம்], இற்றை மேம்பாலத்தில் இருந்து வைகை வடகரையில் கிட்டத்தட்ட 7/7.5 கி.மீ. நடந்து வந்தால், பழமதுரைக்கருகில் வரலாமென்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.. இவ்விடத்திற்குத் தெற்கே ஆற்றைத் தாண்டிப் பழமதுரை இருக்கலாம். இன்று தொல்லியல் மூலம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் சிலைமான் கீழடிப்பகுதி இக்கணக்கோடு சரியாய்ப் பொருந்துகிறது. ஒருவேளை பழ மதுரையைத் தொல்லியல் நெருங்கிவிட்டதோ, என்னவோ? 
 .. 
காடுகாண் காதையை நாம் பெரிதுங் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆழ்ந்து படித்தால் இதுவரை புரியாத தமிழர் வரலாறு இப்போது பெரிதும் புரியும். அதைப் புதினமென்று என்னாற் கொள்ள இயலாது. அப்படிச் செய்பவர் தன் கண்ணை மூடிக்கொள்கிறார் என்றே சொல்லுவேன். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடாமா, என்ன?

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 05, 2019

சிலம்பு ஐயங்கள் - 13

 காடுகாண்காதையில் வரும் கானுறை தெய்வம் ஓர் இனக்குழுத் தெய்வம். அவள் (அலர்மேல்மங்கை, குசுமாண்டிணி, இலக்குமி, அம்பிகா எனும்) பூங்கண் இயக்கியாகவோ, (பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி எனும்) கொற்றவையாகவோ, அன்றி பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலமாலினி, ஜீனவாணி போன்ற இயக்கிகளில் ஒருவராகவோ ஆகலாம். அற்றுவிக, செயின, புத்த, சிவ, விண்ணவ நெறிகள் இனக்குழுத் தெய்வங்களை ஒருபால் ஏற்று, மறுபால் தமக்கேற்ப அவரை மாற்றியதும் உண்டு. [நாடுறைத் தெய்வங்களும் மாறியுள்ளன. நமக்குத் தெரிந்தகாஞ்சி காமக்கண்ணி ஒரு காலத்தில் புத்தநெறியில் பரவிய தாராதேவி தான். இன்றவள் காஞ்சி காமாட்சியாய் (காம அக்ஷி; காமத்தை/க்ராமத்தைக் காப்பவள்) மாறிக் காட்சியளிக்கிறாள். இத்தகை மாற்றங்கள் தமிழ்நாட்டில் ஏராளம்] இவற்றைக் கும்பிடுவதாலேயே சமயநெறி வழுவியதாய் யாரும் எண்ணுவதில்லை. (மாங்காடு, திருவேற்காடு, பெரிய பாளையம்,  சமயபுரம் போகக்கூடாதென்று சொல்லுங் கூட்டம் எவ்வளவு?)

பொதுவாய்ப் பல சமயங்களும் இனக்குழு நிகழ்வுகளை ஒருபக்கம் கவனியாது காட்டி, மறுபக்கம் அமைதியாய் அவற்றை ஒத்து, தம் நடை முறைகளை வளர்க்கின்றன; செழிக்கின்றன. இற்றைக்காலக் கிறித்தவ, இசுலாம் நெறியினருங் கூட இவற்றைச் சிலபோது விலக்காது தம் நெறிக்குத் தக்க உருமாற்றிக்கொள்வர். கூர்ந்துபார்த்தால் எல்லா நெறிகளிலும் இவ்வகை நீக்குப்போக்குகளுண்டு. பெரும்பாலும் மதத் தீவிரவாதிகளே இனக்குழுப் பழக்கங்களை அடியோடு ஒதுக்கச்சொல்வர். (தீவிரவாதிகள் எம் மதத்தில் தான் இல்லை?) எனவே சமணனான கோவலன் (அவன் செயினனா, அற்றுவிகனா, புத்தனா? - சிலம்பிற் தெரியாது.) கானுறை தெய்வத்தைத் தொழுவதும் மந்திரஞ் சொல்லுவதும் கொஞ்சங் கூட வியப்பன்று. அவன் சொன்னதைப் புரிந்துகொள்ளுமுன் மந்திரங்கள் பற்றிய இடைவிலகல் நமக்குச் சரியான புரிதலைத் தரும். 

எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்று அமைவதாகவே சிற்றகவையில் நாம்பார்த்த கதைப்படங்களாலும் (cartoons), பாட்டிகதைகளாலும், அம்புலிமாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைகாட்சிகளாலும் எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் அப்படிக் கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டன. தமிழில் ஓம்பதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்புதலெனில் விருந்தினருக்கு உணவிட்டுக் காப்பாற்றல் ஆகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்து வருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று”, என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம்வல்ல இறைவனிடங்கூட, வேண்டுகிறோம். தடுத்தாட் கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்> ஒல்>ஒ>ஓ>ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ”ஓம்” முழுக்கமுழுக்க நல்ல தமிழ்ச்சொல். அதைச் சங்கதமென நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் ”ஓம்” இருந்தேதீரும். 

["எனைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந்தீவில் உள்ளன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவதாக்கி, ம் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற்(சுவத்திக)குறி அமைத்தார் என இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறுவார். மதிவாணனோ சிந்துசமவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.]
     .     
கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி
வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்
காண்டகு மரபின அல்ல மற்றவை

என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங் கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து விண்ணவ மந்திரம்  ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேத நெறி கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம்நடைமுறைகளும், இன்னும் தமிழ்வழியே உள்ளன. ஆழ்ந்து பார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசை மாறிய தமிழ் மந்திரங்களே. வடக்கு வேதமந்திரங்கள் இவற்றிலிருந்து  வேறுற்றவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்கள் சொல்வர்.)
      .
முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன்கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரம். (கட்டளைப் பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பது தான் இம் மந்திரப் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” எனும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரில் உள்ளவன் ஆவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையைப் பாருங்கள். http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html 

இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்>நுள்வு>*நுவ்வு>*நும்மு>நுமு>நமு என்ற சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்தபொருள் மென்மையாகிப் பின் வளையும், வணங்கும். குழைதற் பொருளில் திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)

இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
  இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
  துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
  தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்
  பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!
   
என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணை முலைகள் குழைந்துபோயின” என்பார். நமுத்துப்போவதை நமத்துப் போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப் போதல்>நமர்த்துப்போதல் என்றும் பேச்சு வழக்கிற் சொல்லப்படும். ரகரமும் லகரமும் பலவிடங்களிற் போலிகள். நமர்த்துப் போதல் நமல்த்துப் போதலும் ஆகும். தான்கொண்ட பற்றியாற் குழைந்து போனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற் பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே. சங்ககால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச்சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன்காட்டைத் திருவாய் மொழியின் மூன்றாம் பத்தில் மூன்றாம் பதிகத்தில் ஏழாம்பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”

என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழும் என்பது ”வணங்கியெழும்” என்று பொருள் கொள்ளும். நமனுதலுக்கும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக் கோயில்நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த சிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புகவிடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காசி விசுவநாதர் கோயிலில் (செல்வ வளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என்ற உலக வழக்கம் பொறுத்து) நமனிகைக்குள் யாரும் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டுள்ளேன்.) பாலால் முழுக்காட்டலாம். வில்வமுமிடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம்.  தென்புலப் பழக்கமோ மிகக் கட்டுப்பெட்டியானது. எல்லோரையும் விடாது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 04, 2019

சிலம்பு ஐயங்கள் - 12

பழமதுரைக்குச் சற்று முன்னுள்ள கானுறைத்தெய்வம் அதன் கோட்டத்திற்கு அருகில் கோவலனை ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறது. அவனுடைய மறைந்த பக்கத்தைக் காப்பியம் படிப்போருக்குப் படம்பிடித்து வெளிப் படுத்துகிறது. சிலம்பை ஆழ்ந்துபடிக்காது, கோவலன் கண்ணகி, மாதவியோடு மட்டுமே புகார்க்காண்டத்தைப் பொருத்தியவர் இன்னொரு பங்காளரும் இதனுள் பொதிந்தது கண்டு சற்று அதிர்ந்துபோவார். ”இதை எப்படி உணராது போனோம்?” என்ற கேள்வியெழும். இளங்கோ ஒரு தேர்ந்த காப்பிய ஆசிரியன். 

கானுறை தெய்வங் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவன் என
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங்கு அருங்கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென்று என்முன்
மாதவி மயங்கி வான்துயர் உற்று
மேலோர் ஆயினும் நூலோர் ஆயிலும்
பல்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடை போன்ம் எனச்\
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத்து உதிர்ந்து வெண்ணிலாத் திகழும்
தண்முத்து ஒருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற்று என்னையும் துறந்தனள் ஆதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங்கு உரைப்பர்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்.
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாது என

என்ற வரிகளைப் படித்தால், கானல்வரியின் பின் கோவலன் மாதவியிடம் இருந்து விலகியதன் பொருள் விளங்கும். மாதவி இளஞ்சிவப்பு. நிறத்தாள் குருக்கத்திப் பெயராள். (குருகு, குருக்கத்தி, குருங்கு, வசந்த மல்லிகை, வசந்த மாலை, வசந்தி, வாசந்தி, புண்டரவம், வாலாகினி, எருக்கத்தி சோகைநீக்கி, கத்திகை, காந்தி, அதிகத்தி, அதிகாந்தி, அதிகம், அதிமத்தம், அதிகமாலி, முத்தம், முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம், மாதவி என்று ஏராளமான பெயர்கள் குருக்கத்திக்கு உண்டு. தமிழரைப் பெரிதும் மயக்கிய ஒரு பூ குருக்கத்தியாகும். இக்காலத்தில் இதைப் பொருட்படுத்துவார் அரிது. இதை விளைவிப்பதும் அரிது. தமிழர் தம் மரபிலிருந்து விலகி நெடுநாட்கள் ஆகிவிட்டன போலும்.)

மாதவிகண்கள் கண்ணகியைப் போன்றவை. அதேபோது அழகுக்கண்ணகி மாநிறத்தாள்; (சிவப்பு - கருப்பு ஊடாட்டம் தமிழரிடை மிக அதிகம்.) செந் நிறக் கோவலன் மாநிறக் கண்ணகியோடு குடும்பம் நடத்தியது பெரும்பாலும் 5 ஆண்டுகள் இருக்கும். கானல்வரியின் போது கோவலனுக்கு அகவை 21, கண்ணகி மடந்தைக்கு 17, மாதவி மங்கைக்கு 13. (இந்த அகவைக் கணக்கை ”சிலம்பின் காலத்தில்” காரணத்தோடு விவரித்திருப்பேன்.) மாதவியோடு கோவலனிருந்தது ஓராண்டிற்குள் தான் இருக்கும். அதற்குள் பிள்ளை பிறந்துவிடுகிறது. மேகலை பிறந்த ஓரிரு மாதங்களில் கோவலன் மாதவியிடம் இருந்து பிரிந்து விடுகிறான்.) 6 மாதப் பிள்ளைத்தாய்ச்சியோடு உடலுறவு தவிர்ப்பது தமிழர் குமுகாயத்தில் ஒருவிதக் கட்டுப்பாடு. அளவிற்கு மீறிய காமவுணர்வு கொண்ட கோவலனால் இதைத் தாங்கிப்பிடிக்க முடிய வில்லை. மாதவியறியாமல், வசந்தமாலையோடு தொடுப்பு ஏற்படுகிறது. அதை இளங்கோ வெளிப்படையாய்ச் சொல்லவில்லை. ஆனாற் குறிப்பால் உணர்த்துகிறார். நாம் தான் சிலம்பைக் கூர்ந்து படிக்காதுள்ளோம்.

நாட்கழித்து இலேசுபாசாக அதையறிந்த மாதவி கோவலனுக்கும் வசந்த மாலைக்கும் ஏற்பட்ட உறவைத் தவறென்று கானல்வரியில் குறிப்பால் உணர்த்துகிறாள். (மேலே சொன்னேனே? வசந்த மாலைக்கும் குருக்கத்திப் பொருளுண்டு. பசந்த காலத்தில் மலர்வது வசந்த மாலை. பசந்தம்>வசந்தம்) அதற்கான குறிப்புகள் சிலம்பிலேயுள்ளன பலரும் எண்ணுவது போல் கானல் வரி ஏற்பட்டது கண்ணகியால் அல்ல. இல்லக்கிழத்தி கேள்வி கேட்டாளா? இல்லையா? தெரியாது. ஆனால் காதற் கிழத்தி கானல்வரியிற் கேட்கிறாள். ”தன்னை ஐயுறுகிறாள்” என்ற குற்றவுணர்ச்சியோடு தான் ”கண்டு கொள்ளாதே” என்று பொருள்படும்படி,

”கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி”

என்று கோவலன் உரைக்கிறான்.

”கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”

என்று மாதவி இசைப்பாட்டு (எசப்பாட்டு) பாடி, “எனக்கு எல்லாந் தெரியும். உன் செங்கோல் வளைந்துவிட்டதே?” என்று உவமையால் உணர்த்துகிறாள். இதைக்கேட்ட ஓர் ஆணாதிக்க வாதிக்குக் கோவம் வராதா என்ன? ”என் மனைவியே என்னைக் கேள்வி கேட்டதில்லை. கணிகை கேட்கிறாளே?” என்று கோவப்பட்டு ஆணாதிக்கக் கோவலன் மாதவியை விட்டு விலகுகிறான். (ஆ.பழநியின் ”சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” நூலைப் படியுங்கள். கானல்வரி ஓர் இசைப்பாட்டென நகர்வோரே மிகுதி. ஆனால் கதைப்போக்கை மாற்றுவதே கானல்வரி தானென்று பழநி அலசியது போல் வேறெவரும் அலசி நான் பார்த்ததில்லை. சிலம்பை ஒழுங்காய்ப் புரிந்துகொண்டோர் மிகவும் குறைவென ஏன் சொன்னேன் என்று இப்பொழுது புரிகிறதா?)

வீட்டுக்கு வருகிறான். நடந்தது எதையும் தன் மனைவிக்குச் சொல்லவில்லை. அவளுங் கேட்கவில்லை. ”சீரழிந்து போனவனை இனியும் சீர்கெட விடுவதிற் பலனென்ன? தானும் உடனிருக்கப் புதுவிடத்திற் வணிகம் தொடங்கலாமே?” என்றே கண்ணகி புகாரை விட்டு நீங்குகிறாள். எல்லோருஞ் சொல்வதுபோல் கண்ணகி ஒன்றும் முட்டாளல்ல. ஒரு பெண்ணியக்க வாதிம் அல்ல. ஒரு சட்டாம்பிள்ளையும் அல்ல. வெறும் சாத்தாரப் பெண். ஆனாற் புத்திசாலி. அலைந்து திரிந்து வந்தவனை மேலும் விரட்டுவதில் பொருளுண்டோ? உள்ளமை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டாமா? அவள் அழுதுபுலம்பி உதவிகேட்டுப் பெற்றோரிடம் போகவில்லை. மாமன், மாமியிடமும் போக வில்லை. தானே துணிந்து முடிவெடுக்கிறாள். ”தன்னால் அவனை மாற்ற முடியும்” என்று நம்புகிறாள். ஊரைவிட்டுச் செல்லமுயலும் கோவலனுக்குச் சிலம்புதந்து ஊக்குவிக்கிறாள். Given the circumstances, this is the most sensible thing to do. After all nobody is perfect. Had she not lived with him for 5 years? Of course he meandered. But he has now come back and wants to re-start his life through a second chance. Why not make a try?

கோவலனுக்கு முன்னால் வயந்தமாலையின் வடிவில் தோன்றி, “என்னை நயந்த காதலால் நான் கேட்பதை நல்குவான்” என்று கொடி நடுக்குற்றது போல் அவன் காலடியில் விழுந்து அருங்கண்ணீர் உகுத்து,

”[வேனிற் காதையில் தாழைமடலில் எழுதி என் வாயிலாய் முன்னனுப்பிய]
வாசமாலை (மாதவி)யின் மாற்றம் (மடல்) உன்னை மறைமுகமாய்க் குத்திக் கிளறியதாற் கோவப்பட்டாயோ? எந்தத் தீமையையும் நான் உனக்குச் செய்ய வில்லை. (நம்முள் நடந்ததை மாதவியிடம் சொல்லவில்லை.) அவளிடம் (கானல் வரியின் வழி) நீ தப்பாகப் பேசினாய், எனவே ’கொடுமை செய்தாய்’ என அவள் புரிந்துகொண்டாள்.

பெருந்துயருற்று அவள் என்முன் மயங்கிவிழுந்து,
’குமுகாயத்தில் மேலோராயினும், படித்தவராயினும்,
பல்வேறு வழிவகை தெரிந்தவராயினும்,
தம்மைப் பிடித்த பிணி எனக் கொண்டு
பின்தள்ளி விலகும் கணிகையர் வாழ்க்கை மிக இழிந்தது’ என்றாள்.
அடுத்துச் செவ்வரிபடர்ந்த.தன் செழுங்கடை மழைக்கண்ணிலிருந்து
முத்துப் போல நீருகுத்து,
வெண்ணிலாவாய்த் திகழும் தன் முத்துவடத்தை
தன்கையாலே அறுத்துவீசி,
வெகுண்டு என்னையும் துறந்தாள்
(என்னை வெளியே போகச்சொன்னாள்).

வெளியே வந்து உசாவிய போது, எதிர்வழிப் பட்டோர்
நீ மதுரை மூதூர் மாநகர் போந்ததை உரைத்தார்.
புகாரிற் புறப்பட்ட சாத்தோடு உடன்வந்து
அவரிடமிருந்து இங்கு பிரிந்து தனியாக உழந்துநிற்கிறேன்.

எல்லோருக்கும் பகுத்து அருளும் பண்புள்ளவனே,
எனக்கு நீ தரும் பணிமொழி யாது?”

என்று கானுறைதெய்வம் விருப்போடு சென்றுசொன்னது. வசந்தமாலையின் உருவமெடுத்து இதைச் சொல்லும்போது ”கோவலன் எப்படி மறுவினை செய்கிறான்? அவன் உறுதியென்ன? என்று தெய்வம் அறியவிரும்புகிறது. படிப்போருக்கும் முதன்முறையாக வசந்தமாலை - கோவலனின் கள்ளக் காதல் வெட்டவெளிச்சம் ஆகிறது. காடுகாண் காதை கோவலனுக்குள் இருக்கும் கமுக்கத்தைக் காண வைக்கும் காதை. காடுகாண் காதை புரியாதவருக்குப் புகார்க் காண்டம் புரியவே புரியாது.

அன்புடன்,
இராம.கி.