ஒருமுறை ’சகரம்’ பற்றிய பேச்சு எழுந்தது. சங்கதத்திற்கும்/பாகதத்திற்கும், தமிழுக்கும் இடையே எழுத்தளவில் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. இப்போதெல்லாம் பலரும் சங்கதம் ஒழுங்கானது போலும், தமிழ் ஏதோ ஒழுங்கில்லாதது போலும் ஒன்றைப் போலவே இன்னொன்றை மாற்றத் துடிக்கிறார். இரண்டும் இரு வேறு மொழிகள். எப்படிக் கொக்கையும் (hockey), கால்பந்தும் வெவ்வேறானவையோ, அது போல தமிழ் எழுத்தும், சங்கத எழுத்தும் வெவ்வேறானவை. ஒன்றுபோல் இன்னொன்றைச் செய்ய முற்படுவது தவறு. கொக்கைப் பந்தை காற்பந்து போல் ஆடுவதை ஒக்கும்.
சங்கதம்/பாகதத்தில் ’ஓரெழுத்து ஓரொலி’ என்ற வழக்கம் பெரும்பாலும் உண்டு. ஆங்கிலத்தில் இதை one to one relation என்று கூறுவார். தமிழில் அப்படிக் கிடையாது. தமிழில் உறவுள்ள பலவொலிகளுக்கு ஓரெழுத்து. ஆங்கிலத்தில் சொல்வது போல் many to one relationship. மேலை மொழிகளிலும் இப்படித் தான். இதொன்றும் தவறான பழக்கமில்லை. முற்றிலும் சரியான பழக்கமே. ஓரெழுத்தைப் பார்த்தவுடன் அதுவரும் இடம் (சொல் முதலா? சொல்லிடையா? சொற்கடையா?), முன்வரும் ஒலி, அது அமைந்திருக்கும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் ஒலிக்கிறோம்.
Sound of a Tamil letter = function of (shape of the letter, prior sound, environment)
Most of the letter reform proposals stem from the lack of understanding of the above relation and the practice in Tamil. This is purely because of few Tamil Teachers who don’t teach the pronunciation rules properly.
எந்த வல்லினத்திற்கும் மூன்றுவிதமான ஒலிகளை தமிழ்ப்பேச்சுவழக்கில் நாம் இனங்காட்டுகிறோம். வெடிப்பொலி (plosive), கனைப்பொலி அல்லது அதிரொலி (voiced), உரசொலி (frigative) என்று அவற்றைச் சொல்வோம்..
k, g, h
c, j, s
t, d, d'
th, dh, dh'
p, b, b'
தமிழில் d', dh', b' ஆகிய உரசொலிகளை நாம் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. h, s என்னும் இரு உரசொலிகளே நம்மிடம் இப்பொழுது உள்ளன. இதற்கு முன்காலத்தில் மற்ற மூன்று உரசொலிகள் இருந்தனவா என்று தெரியாது. ஆனால் ஒலியியற் பேராசிரியர் புனல்.கே.முருகையன் அப்படி இருந்திருக்கலாமென எண்ணுகிறார்.
அடிப்படையில் நம்மால் உயிரையும், உயிர்மெய்யையும் மட்டுமே பலுக்க முடியும். எந்த மெய்யெழுத்தையும் நம்மால் பலுக்க முடியாது. அதைப் பலுக்க எளிதாக, முன்னாலோ, பின்னாலோ ஓர் உயிரைச் சேர்த்து அந்த ஒலியை உணர்த்துகிறோம். உயிர் முன்னால் வந்தால் அதை மூடிய அசை (closed syllable) என்று சொல்கிறோம். பின்னால் வந்தால் அதைத் திறந்த அசை (open syllable) என்று சொல்லுகிறோம். தமிழ்நாட்டுத் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் அந்தக் காலத்தில் எங்களுக்கு மூடிய அசையாகவே சொல்லிக் கொடுத்தார்கள். இக், இங், இச், இஞ், ....... இப்படி இ-யை முன்னே கொண்டு வந்து சொல்லித் தருவார். அ- வைத்துச் சொல்லித் தருவதும் உண்டு. ’இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா, இஞ்ஞன்னா ........” என்றும் அமையும். அந்த .’ன்னா’ என்பது சொல்வதற்கு எளிமை கருதி நாமிடும் ஓசை. இதே ’....ன்னா’ என்பது சிங்கள எழுத்துச் சொல்லிக் கொடுக்கும் போதும் உடன் வருமாம். [கேட்டபோது நான் வியந்து போனேன். இந்தக் கேடுகெட்ட உறவுக் காரப் பயல்கள், இவ்வளவு மொழி ஒற்றுமையை நம்மோடு வைத்துக் கொண்டு, நம்மை ஒழித்தொழிக்க முயல்கிறாரே?]
வடக்கே நான் அறிந்த வரை மூடிய அசையிற் சொல்லிக் கொடுப்பது கிடையாது. திறந்த அசையில் தான் சொல்லிக் கொடுப்பார் க, ங, ச, ஞ...... இப்படிச் சொல்லித் தருவதில் சிக்கலுண்டு. அகரமேறிய மெய்யும், மெய்யும் ஒன்றோ என மாணவன் மருளுவான். [இப்போது மொழியியலாரையே அது மருள வைத்து abugida theory என்றவொன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. மெய்யின் அடிப்படையை யாரும் வடக்கில் உணரமாட்டார் போலிருக்கிறது].
இனி உயிர்மெய்யைப் பலுக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வோர் உயிர் மெய்யிலும் அதன் ஈற்றில் ஓர் உயிரொலி சேர்ந்தே வருகிறது. எனவே குறிப்பிட்ட உயிர்மெய்க்கு முன்னால் மெய் வருகிறதா (வல்லினம் வருகிறதா, மெல்லினம் வருகிறதா, இடையினம் வருகிறதா), உயிர் வருகிறதா என்பதை நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்.
வல்லினம் என்பதிலுங் கூட இன்னுஞ் சில கூறுகள் உண்டு. நிலையெழுத்தும் வருமெழுத்தும் ஒன்றுபோல் இருப்பது ஒருவகை. இன்னொரு வகை நிலை யெழுத்தும் வருமெழுத்தும் வேறுபடுவது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நிலையெழுத்து க் என்று வையுங்கள். வருமெழுத்து ககர உயிர்மெய்யாய் இருந்தால் க்க என்று கூட்டொலி [நினைவிற் கொள்ளுங்கள், கூட்டொலி], சங்கதத்தில் வரும் இரண்டாவது க போல ஒலிக்கும். பக்கம் என்ற சொல்லை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். தமிழில் இரண்டாவது க கிடையாது. எனவே இதை முதல் க் போல் எண்ணிக் கொண்டு க்க்-அ என்ற எல்லா ஒலிகளையும் சேர்த்து அதன் இயல்பான ஒலியிலேயே பலுக்குவோம். க் - இன் இயல்பான ஒலி உங்களுக்குத் தெரியும். [புரிய வைக்க வேண்டுமானால் அடுகு வரைவு (audiogram) ஒன்றை நான் காட்டவேண்டும். இங்கு ஒன்று சொல்ல வேண்டும். ஒரு சிலர் சகரத்தின் இயல்பான ஒலியை ச்(ச) என்று எழுதிக் காட்ட முயல்கிறார். அது தவறு. அந்த ஒலிக்கு ஓரெழுத்து வடிவம் தான். வெறும் ச்.
இனி நிலையெழுத்து ட் என்று வையுங்கள். வெட்கம் என்ற சொல் இங்கும் ட்க்-அ என்ற ஒலிகள் சேர்த்து ஒலிக்கப்படும். மாறாக தமிழரில் ஒரு சிலர் இதே போன்ற ஒலியமைப்புக் கொண்ட பட்சி என்னும் வடமொழிச்சொல்லை ட்சி என்று பலுக்காது ட்ஷி என்று பலுக்குவதைப் பார்த்து இருக்கிறேன். இதே பழக்கத்தில் கட்சி என்பதும் கட்ஷி என்று பலுக்கப்படும். இப்படி ஓரோ வழி பலுக்குவது சிலரின் பழக்கம். அது பெரும்பான்மையோர் பழக்கம் அல்ல.
இனி நிலையெழுத்து மெல்லினம் என்றும், வருமெழுத்து வல்லினமென்றால், தமிழிலக்கணத்தின் வரையறுப்பால் அது இன எழுத்தாக மட்டுமே இருக்க முடியும். பங்து என்ற சொல் தமிழில் அமையவே அமையாது. பங்கு என்றோ பந்து என்றோ மட்டுமே அமைய முடியும். இச் சொற்களில் வரும் கு - வும் து-வும் அதிரொலியாக (voiced) மட்டுமே அமையமுடியும்.
இனி நிலையெழுத்து இடையினம் என்றும், வருமெழுத்து வல்லினமென்றால், [காட்டு: வல்சி = உணவு என்ற பழஞ்சொல்] முடிவில் வரும் சி சற்று மெலிந்து உரசொலியாக (frigative) அமையும். அந்த சி யை வலிந்து எப்பொழுதும் போல் பலுக்க முடியாது. அப்படிச் செய்தால் அது வல்ச்சி ஆகிவிடும். பொருள் குலைந்து போகும்.
இனிச் சகரத்திற்கு வருவோம். ககரத்தில் நடந்த அதே முறையில் தான் இங்கும் பலுக்க வேண்டும். முதலில் வரும் சகரம் ச் என்றே பலுக்கப்படும். இடையில் வரும் சகரம் முன்னே சொன்னது போல் நிலையெழுத்து ச் என்று இருந்தால் (மச்சம்) ச்ச என்றும், நிலையெழுத்து ஞ் என்று இருந்தால் அதிர் ஒலியாகவும் (நெஞ்சு), நிலையெழுத்து இடையினமாய் இருந்தால் [காட்டு: காய்சின வழுதி] சி என்பது உரசொலியாகவும் பலுக்கப் படும்.
முதலில் வரும் சகரம் எப்பொழுதும் தன் இயல்பான வெடிப்பொலியோடு தான் ஒலிக்கவேண்டும் என்று சொன்னேன். [எப்படி முதலில் வரும் ககரம் இயல்பான வெடிப்பொலியோடு ஒலிக்கிறதோ, அதே போல முதலில் வரும் சகரம், தகரம், பகரம் போன்றவையும் வெடிப்பொலியாய் ஒலிக்க வேண்டும்.] ஆனாலும் இற்றைத் தமிழ்நாட்டில் தென்பகுதி மக்களே இதைச் சரியாகப் பலுக்குகிறார். வடபகுதி மக்களில் மிகப் பலர், இக்காலத்தில், ஒரு சாரார் தாக்கத்தால், திரைப்பட, தொலைக்காட்சித் துறையின் தாக்கத்தால், வெடிப்பொலியை உரசொலியாக மாற்றிப் பலுக்குகிறார். இப்போக்கு சிச்சிறிதாகக் கூடி வருகிறது. இதனாற்றான் சென்னை என்பது, ஸென்னை என்று பலுக்கப்படுகிறது. இது தவறு. சில கருநாடக இசைப் பாடகர், இன்னுஞ் சீரழிந்து, ஸகரத்தை ஷகரமாகக் கூடப் பலுக்குகிறார்.
இந்த ஒலிப்புப் பிழைகள் இனிமேலும் நடக்காது இருக்கவேண்டிய தேவை இப்பொழுது பெரிதும் உண்டு. இந்த ஒலிப்புப் பிழைகள் கூடக்கூடத் தமிழில் இருந்து இன்னொரு பேச்சுவழக்கு எழுந்து விடும்.
அன்புடன்,
இராம.கி.
1 comment:
செயலலிதா ஸென்னை என்றுதான் பலுக்குவார்
Post a Comment