Monday, March 23, 2020

பல்வேறு பந்தாட்டங்கள்

ஊரெல்லாம் சூடணி வெருவிப் பயம். கொஞ்சம் எண்ணத்தை வேறுபக்கம் செலுத்துவோம் என்று இந்தக் கேள்விக்குள் வருகிறேன். அண்மையில் “Cricket, Squash, Volleyball, Baseball, Hockey” ஆகியவற்றிற்கான தமிழ்ச்சொற்களைத் தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். ”உதைப் பந்தும் கொக்கையும் (Foot ball and the Hockey)” என்றதொரு கட்டுரையை வெகுநாட்கள் முன் எழுதத் தொடங்கிப் பின் நிறுத்தியிருந்தேன். அதில் இக்கேள்வியின் ஒரு பகுதியான hockeyயைத் தொட்டிருந்தேன். இப்போது அதைத் தேடியெடுத்துத் தக்க படி மாற்றி cricket, baseball, volleyball, squash ஆகிய விவரங்களையும் சேர்த்துப் பதிகிறேன்.  (இதில் வராத உதைப்பந்துத் துறட்டு (football tournement) பற்றி இந்த இடுக்கைக்குச் சற்றுமுன் வேறொரு இடுகையை இட்டிருக்கிறேன். ஆர்வம் உள்ளோர் அதையும் படியுங்கள்

முதலில் Hockey:

உதைப்பந்தாட்டம் பாராதவர் எவரும் உண்டோ? (இதைக் காற்பந்தாட்டம் என்றே பலர் சொல்வார். ஆயினும் உதைப் பந்தாட்டம் என்பதும் பொருத்தமாகவே தெரிகிறது. நீர்வீழ்ச்சியை விட ”அருவி” கூடுதற் பொருத்தம் கொள்ளாதோ?) ஓர் அணிக்குப் பதினொருவராய் ஈரணிகள் எதிர் நின்று, ஒரு காற்றடைத்த பந்தைக் காலால் உதைத்து, எதிராளியின் கவட்டைக்குள் (goal post) பந்தைச் செலுத்தும்படி ஆடுவர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த அணி கூடுதலாய்க் கவள் (goal)களைப் போடுகிறதோ, அதுவே வென்றதாய்க் கருதப் படும்.. .இது போல ஒரு சிறைக்கு (side) பதினொரு பேராய் அணி சேரும் இன்னொரு விளையாட்டு hockey ஆகும். [நான் field hockey பற்றிப் பேசுகிறேன்; ice hockey அல்ல.]

காலால் உதைப்பதற்குப் பகரியாய் ஆட்டக்காரர் இதில் வளைதடிகளைக்  கொண்டு பந்தடிப்பார். இதிலும் ஒவ்வோர் அணிக்கும் ஒரு கவட்டையுண்டு. எதிரணிக் கவட்டைக்குள் குறிப்பிட்ட நேரத்தில் பந்தைச் செலுத்துவதே இங்கும் ஆட்ட இலக்காகும். எந்த அணி கூடுதற் கவள்களைப் போடுகிறதோ, அதுவே வெற்றி பெற்றதாகும்.   Hockeyயை ”வளைதடிப் பந்தாட்டம்” என்று தமிழிற் சொல்லிக் கேட்டுள்ளேன். ஒருகால் பயனுறுத்தியும் உள்ளேன். பின்னால் ஓர்ந்து பார்க்கையில் ”நீர்வீழ்ச்சி” போல் சுற்றிவளைத்து, ஏன் ”வளைதடி” என்கிறோம் என்பது புரிய வில்லை. பொதுமை வளைவை காட்டிலும், hockey stick இன் விதப்பான கொக்கி வளைவை வைத்துத் தமிழ்ப் பெயரைச் சொல்லி யிருக்கலாம். ஏனோ செய்யாது போனார். 

hockeyயின் பெயருக்கு முன் ஒரு பொதுப்போக்கைப் பார்த்து விடுவோம். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ”தொடர்பு இல்லை” என யாரோ ஒரு பெரியவர் அற்றைத் தரவுகளாற் சொன்னாலும் சொன்னார், பலரும் அதை வேதவாக்கென நம்பி, தமக்குத் தெரிந்த கொஞ்சத் தமிழ்ச் சொற்களையும், ஏழெட்டு முன்னொட்டுக்களையும் வைத்து அப்படியிப்படி வித விதமாய் ஒட்டுப் போட்டு, “விளக்கம், வரையறை” தருவது போல் கலைச் சொற்களைக் கூட்டுச் சொற்களாக்கி, புதுப்புது தமிழாக்கத் தோசைகளைச் சுட்டு, சரளமாய் விட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்படி விளையும் கூட்டுச்சொற்கள் அனுமார் வாலாய்க் காட்சியளிப்பதைக் கண்டு, எதிரணியினரும் ”பார்த்தீர்களா? தமிழில் எதுவுமே சரியாய்ச் சொல்ல வராது, இதற்குத் தான் ஆங்கிலச் சொற்களை அப்படியே வைத்து மணிப் பவள நடையில் தமிங்கிலம் பயில்வதே சிறந்தது. ஆங்கிலம் இப்படித் தான் பிற சொற்களை எடுத்து வளர்ந்தது, உலகமயமாக்கல், அது இது......” என ஒரு நீள் கதை சொல்லி ஆற்றுப் படுத்துவார். ”தமிழன் கண்டுபிடிக்காத எதற்கும் தமிழ்ப் பெயர் சொல்லக்கூடாது. ஆங்கிலச்சொல்லை அப்படியே பயில வேண்டும்” என்பது இவரின் கண்டிப்பு. பாவம், நம்மூர் முப்பாட்டன்கள் பெயர் வைத்த ”முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, தக்காளி, முள்ளங்கி போன்றவை என்னாகும்?” என்று தெரிய வில்லை. காபேஜ், பொடேட்டோ, டொமாட்டோ, ராடிஷ் என்று இவரெழுத ஏன் தயங்குகிறார்? - என்றும் புரியவில்லை. இவருடைய நொட்டைக் கண்டுபிடிப்பு எங்கே போனது?

இரு அணியினருக்கும் இடையே நடுவில் நின்று, “குறை, மொழியிடமில்லை. நம்மிடம் தாம் உள்ளது. தமிழில் பழம் ஆக்கங்கள், இலக்கியம் என எதையுமே படிக்காது உள்ளோம். எது நம்முடையது என்று கூட நமக்குத் தெரியவில்லை. அதனால் தான், ”அது இல்லை, இது இல்லை” எனநம் இளையோர் எண்ணிக் கடன் வாங்க முற்படுகிறார், இதற்கு மாறாக, ”நம் தமிழ்ச் சொற்றொகுதி கூட்டிப்   பழஞ்சொற்களையும், மற்ற தமிழிய மொழி வழக்குகளையும், வட்டார வழக்குகளையும் தெரிந்து, மற்ற மொழிக்குடும்பங்களோடு “தொடர்பு இல்லை” எனும் வறட்டுக் கூற்றைத் தூக்கி யெறிந்து, தமிழின் வேர்ச் சொற்களை ஆழப் புரிந்து, யாரையும் குறைத்து மதிப்பிடாமல், முன்முடிவு இன்றி, கலைச்சொல்லாக்கம் செய்யலாமே?” என்றால், ஏதோ செவ்வாய்க் கோளில் இருந்து புதிதாக வந்திறங்கிச் சொல்லக் கூடாததை நான் சொல்வதாய்ப் பலரும், ஏன் நெருங்கிய நண்பரும் கூட, எண்ணிக் கொள்கிறார்.

[இன்னொரு பக்கமோ, தமிழ் வேர்ச்சொற்களையும், விகுதிகளையும், இலக்கண உறுப்புக்களையும் ஒரு கணியின் மையச்செலுத்திக்குள் இட்டு, சொவ்வறை (software) எழுதினால் “சூ, மந்திரக் காளி” போல் "மையச் செலுத்திக்கு (central processor)” வெளியே தமிழ்க் கலைச்சொற்கள் மழைபோலக் கொட்டும்" என்றும் சிலர் எந்திரத்தனமாய் எண்ணிக் கொள்கிறார்.] நான் கூறும் நடு வழி ஓர் எளிய முறை அல்ல. மிகச் சின்னச் சொல்லையும் கூடப் பெரிதும் முயன்றே, ஆய்வுகள் செய்து, பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் கரும்பலகையில் எழுதியதை ஈரத் துணியால் அழித்து புதிதாய் எழுதுவது, கடின வேலை தானே? :-)
       
Hockey இக்கு, ஆங்கிலச் சொற்பிறப்பியலில் ”after an isolated reference from Ireland dated 1527 ("The horlinge of the litill balle with hockie stickes or staves ..."), the word is next recorded 1838 from W. Sussex; of unknown origin, perhaps related to M.Fr. hoquet "shepherd's staff, crook," dim. of O.Fr. hoc "hook." The hooked clubs with which the game is played resemble shepherds' staves” என்பார். “hook" என்ற குறிப்பைப் பார்த்தவுடன், ”அடடா, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைகிறோமே?” என்பது தான் எனக்கு நினைவிற்கு வந்தது. இதே பொருளில், இதே பயன்பாட்டில், இதே ஒலிப்பில், தமிழில் ”கொக்கி” உள்ளது. இங்கு அதைப் பயன்படுத்தினால் சட்டென்று பொருந்தும்.

”கொக்கி”க்கு அகரமுதலிகளில் 5.6 பொருட்பாடுகள் சொல்வார். அவற்றில் முதலிரண்டும் கொளுவி (hook, clasp. as of a necklace or ear ring), துறட்டி நுனியிற் செருகும் இருப்புக் கருவி (hooked knife attached to a long bamboo, for cutting leaves and twings) என்று வரும். குல்>கொல்>கொள்>கொள்கு>கொட்கு>கொட்கி>கொக்கி எனச் சொற்பிறப்பு அமையும். குல்லெனும் வேர் வளைவைக் குறிக்கும். குக்குதலும் வளைதல் பொருளை உணர்த்தும். இத்தனைக்கும் மேலை மொழிகளிலும் வேறு மொழிகளிலும் A.S. hoe, hooc; Du.hock, haak; Ice.haki; Gr.haken; Ohgr. hako; Lowgr. hake; E hook; Fin. kokka (hook). Est. kook; Hung.kajko; Mong.glygle; Jap. kagi, Indones kaitan; ME.kok; Ice.haki; Dan.hage; Swed. hake; Gr.haken; A.S. haca என்பார்.

தமிழிய மொழிகளில் ”ம. கொக்கி; க. கொக்கெ, கொக்கி, கொங்கி; தெ.கொக்கி, கொகெமு; து. கொக்கெ, கொங்கி; கோத. கொக்ய; துட. க்விக்ய்; பட. கொக்கி; நா. கொகாங்கி (வளைந்த குந்தாலி)” எனப் படுகிறது. என்னைக் கேட்டால், இச் செய்திகள், தரவுகளின் பின்புலத்தில், சொல்லுதற்கு எளிதாயும், கூட்டுச்சொற்கள் அமைய வாய்ப்பாகவும் hockey ஐக் கொக்கை (ஆட்டம்) என்றே சொல்லிவிடலாம்.   மற்றசில மொழிகளோடும் இச்சொல் இணைகாட்டும். நம் மொழி உறவுகளும் அதனால் புரியும். (கொக்கை என்று சொல்லத் தயங்கினால், குக்கை என்று கூடச் சொல்லலாம்.) ஆனாலும் இது போன்ற என் பரிந்துரைகளை ஏற்கப் பலரும் தயங்குகிறார். என்ன சொல்வது? விதிநினைந்து முட்டிக்கொள்வது தவிர்த்துப் போக்கிடம் இல்லை. [தமிழில் 100க்கு 99 சொற்கள் மூன்றசைகளுக்கும் கீழேதான் உள்ளன.]

என்ன இது, உதைப் பந்து, கொக்கை என்று பேசுகிறேனே? எதற்கு அடி போடுகிறேன் என்று பார்க்கிறீர்களோ? வேறொன்றுமில்லை. மேலோட்டமாய்ப் பார்த்து, [11 பேர் கொண்ட இரு அணிகள், ஒரு பந்து, கவட்டைகள், கவள்கள், குறிப்பிட நேரம், ஆட்ட வேகம் இவற்றைப் பார்த்து] உதைப் பந்தையும், கொக்கையையும் ஒரேவித ஆட்டமாய் ஆக்க யாரேனும் முயன்றால் என்ன சொல்வீர்கள்? அப்படி ஆக்கினால் ஏற்றுக் கொள்வீர்களோ? ஒவ்வோர் ஆட்டத்திற்கும் அதற்கென ஒழுங்கு உள்ளது இல்லையா? மேலோட ஒப்புவதால், கிட்டியாட்டமும் (cricket), பதியாட்டமும் (base ball) ஒன்றாகுமோ? அதேபோல அமெரிக்க உதைப்பந்தையும் (American football), மற்ற உதைப்பந்தையும், ஒன்றாக்கிக் கந்தரகோளம் பண்ணலாமோ?

அடுத்தது cricket (n):

இதிலும் என் பார்வை வேறுபட்டது தான். இதை open-air game played by two sides of 11 with bats, balls, and s, 1590s, apparently from Old French criquet "goal post, stick," perhaps from Middle Dutch/Middle Flemish cricke "stick, staff," which is perhaps from the same root as crutch" என்று சொல்வார். சிற்றகவையில் கிட்டிப்புள் ஆடினோமே? நினைவு இருக்கிறதா? அதன் விரிவே இவ்வாட்டம். விரிவு எப்படி நடந்ததென்று தெரியாது. ஆனால் இரண்டிற்கும் மிகுந்த இணையுண்டு. முதலில் கிட்டிப்புள்ளைப் புரிந்து கொள்வோம். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81

கிட்டிப்புள் என்பது அளவால் சிறிதான அதேபொழுது கனமான மரத்துண்டு . இதைப் புள்ளென்றே சொல்வர். கிட்டிக்கோல் அல்லது தண்டில், சற்று நீண்ட ஆனால் புள்ளைவிடக் கனங் குறைந்தது, ஆங்கிலத்தில்  crutch என்பது ஊன்று கோல். இரு கூர்முனை கொண்ட புள்ளைக் காற்றில் தூக்கிப்போட்டு அல்லது கீந்துகுழியிலிருந்து நெம்பிக் காற்றில் பறக்கவிடும் செயலுக்குப் புள்ளுதல் என்று பெயர். கிட்டுதலென்பது புள்ளின் பரவளைப் (parabola) பாதையில் ஊடே உட்புகுந்து அடித்தலாகும்,  இவ்வாட்டம் இந்தியாவில் பன்னூறு ஆண்டுகளாய்ப் பழகியது. பல இடங்களுக்கும் பரவியது. ஆனால் எப்பொழுது இது தோன்றியதென்று தெரியவில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் இதற்கான சொற்கள் உண்டு. .

வேறுநாடுகளில் இந்த ஆட்டம் எப்படிப் பரவியதென்பதும் நமக்குத் தெரியாது. ஆங்கிலநாட்டில் கிட்டிப்புள் போன்றதை ஆடியுள்ளார். அதில் புள் என்பது பந்தாய் மாறியிருக்கிறது. பந்தைப் பறக்கவைக்கும் வினையைப் இன்றும் புள்ளுதல் என்றே சொல்கிறார். [bowl (v) "to roll a ball on the ground," typically as part of a game or contest, mid-15c., from bowl "wooden ball" (see bowls). Specifically in cricket, "deliver the ball to be played by the batsman," from 1755; the cricket sense is source of late 19c. figurative expressions bowl over "knock down" (1849), etc.] எத்தனை பேருக்குப் cricket இல் புழங்கும் புள்ளின் பெயர்த் தோற்றம் புரிந்திருக்கிறது.? - என்பது கேள்விக் குறி.

மரப்புள்ளிற்கு மாறாக ஓக் மரத்தின் மேலுள்ள கறுக்குப் பட்டையால் (cork) செய்த தோற்பந்தாய் அது மாறியிருக்கிறது. அடிப்பவரே பந்தைப் புள்ளிய பிறகு (பறக்கவிட்ட பிறகு) அடிப்பதற்கு மாறாய், புள்ளுபவர் (பறக்க விடுபவர்) ஒருவராயும் கிட்டுபவர் (அடிப்பவர்) இன்னொருவராயும் அங்கு மாறியுள்ளார். அதேபோல் ஆட்ட வளர்ச்சியில் பந்தானது ஓக் மரப் பட்டையில் இருந்து கடின உரப்பர்க் கறுக்கிற்கும் (rubber cork) மாறியுள்ளது.  இன்றுங் கூடப் பல்வேறு ஆட்டங்களில் புள்ளாக மாறிப் பறக்கும் பந்துகள் ball என்றே அழைக்கப் படுகின்றன.   தொடக்கத்தில் தண்டில் கட்டையாகிப் பின் சிச்சிறிதாய்ப் பட்டையாய் மாறியது. எனவே மட்டைப் பந்து என்றது சரி தான். ஈழத்தார் துடுப்பாட்டம் என்பார். எது நிலைக்குமோ அது நிலைக்கட்டும். நான் மட்டையாட்டம் என்று நெடுநாள் பழகிவிட்டேன். இவற்றை விடக் கிட்டியாட்டம் (cricket), புள் (ball) இன்னும் மிகச் சரி.

கிட்டுபவரின் பின்னால் 3 தும்புகளும் (stump) அவற்றின்மேல் இரு மரப் புள்களும் வைக்கப்படும். (இக்காலக் கிட்டியாட்டத்தில் இன்னும் மரப்புள்கள் உள்ளதே வியப்பைத் தருகிறது.  ஒருவேளைத் தொடக்கத் தொடர்ச்சி போலும்.) 3 தும்பு, 2 புள்கள் சேர்ந்த கட்டுமானம் ஒரு கோட்டைக்கதவில் பொதிந்த விழுதைப் புதவம் (wicket gate) போல் காட்சியளிக்கும். தவிர புதவத்தின் மேல் பந்துபடுகையில், ஏதோ ஒரு புள்ளோ அல்லது தும்போ கீழ் விழுவதால் விழுதைப் பெயரும் சரி தான். (ஒருகாலம் சொற்பிறப்பியல் புரியாது விழுதையை  கிட்டியெனச்  சொல்லியுள்ளேன். இப்போது மாறுகிறேன்) வீசும் பந்தைக் கிட்டியர் (= மட்டையாளர் = batsman) அடிக்க முற்படுவார்.  [புள்ளெறியரை வீச்சாளர் (bowler) என்றும் சொல்லியுள்ளேன்.]

கிட்டியர் அடித்து எகிறிய பந்து மேலே பறந்துவர, மாற்றணியார் பிடித்தால் கிட்டியர் ஆட்டத்தில் வெளியேற வேண்டும். அன்றித் தரையிலடித்த பந்தைத் தடுத்துநிறுத்தும்  விளையர்/ களத்தர் (fieldsman) விழுதையர் (wicket keeper) நோக்கி பந்தை வீசியெறிவார். அவர் விழுதையைச் சாய்க்க முனைவார். விழுதை சாய்வதற்குள் கிட்டியரும் மாற்றுக் கிட்டியரும்  22 கோல் (yard) பட்டிகைக்குள் (pitch) முடிந்தவரை ஓடி, ஓட்டங்களைச் (runs) சேர்ப்பார். குதிப்புக் (bounce), வறள் பட்டிகை (flat pitch), சுழற்பந்து (spin bowling), காலோடு (leg bye), விழுதையடி (hit wicket) உள்ளாங்கு (innning) எனக் கணக்கற்ற சொற்கள் கிட்டியாட்டத்தில் உண்டு,  வேறுமுறை பார்ப்போம்.  இந்திய அணி பற்றிய கிடுக்கத்தை (criticism) ஒருமுறை வைத்தேன் https://valavu.blogspot.com/2007/03/blog-post_25.html இனி கிட்டியாட்டத்தின் அமெரிக்க வேற்றத்திற்கு வருவோம்.

baseball (n.)

ஓரணிக்கு 9 பேராய் ஆடும் இவ்வாட்டத்தை in the modern sense of a game of ball for teams of nine, 1845, American English, from base (n.) + ball (n.1). Earlier references, such as in Jane Austen's "Northanger Abbey," refer to the game of rounders, of which baseball is a more elaborate variety. The modern game was legendarily invented 1839 by Abner Doubleday in Cooperstown, N.Y. Base was used for "start or finish line of a race" from 1690s; and the sense of "safe spot" found in modern children's game of tag can be traced to 15c. (the use in reference to the bags in modern baseball is from 1868). Baseball as "ball with which the game of baseball is played" is by 1885 என்று விவரிப்பர். 

கிட்டியாட்டப் புள்ளெறியர் இங்கே பட்டிகையர்  (pitcher) எனப்படுவார். கிட்டியர் நிற்கும் இடத்தைப் பதி (base) என்பார். அவரின் கிட்டி, நம்மூர் மட்டை போல் இருக்காது. செண்டாகத் தோற்றங் காட்டும். எனவே பதியாட்டத்தைச் செண்டாட்டம் என்றும் சொல்லலாம். இந்த ஆட்டத்தை விவரிக்க நான் இங்கே முற்படவில்லை. இதுவும் கிட்டியாட்டம் போல் விருவிருப்பு உடையது தான் நாலைந்து ஆட்டங்கள் பார்த்தால் இரண்டிற்குமும் உளள ஒற்றுமை, வேற்றுமை புரிந்துவிடும் .

அடுத்தது  volleyball (n.) இதன் விளக்கமாய், 1896, from volley (n.) in the sporting sense + ball (n.1). So called because the ball must be returned before it hits the ground என்றும், volley (n.) 1570s, "discharge of a number of guns at once," from Middle French volee "flight" (12c.), from Vulgar Latin *volta, fem. noun from Latin volatum, past participle of volare "to fly" (see volant). Sporting sense of "a return of the ball before it hits the ground" (originally in tennis) is from 1851, from notion of hitting the ball in flight. என்றும் volley (v.) 1590s, "discharge in a volley," from volley (n.). Sporting sense (originally in tennis) of "to return the ball before it has hit the ground" is from 1819 என்றும் சொல்வர்.

இந்த ஆட்டத்தின் அடிப்படை, ஓர் அணியார் பந்தைக் கையால் தூக்கி யெறிந்து மாற்றுக் களத்திற்குப் பரவளைவாய்ப் போகவைத்து, வலைக்கு அந்தப்பக்கம் உள்ள மாற்றணியார்  பந்து தரைக்குப் போகவிடாமல் தடுத்து பந்தை வாங்கி மீள உயர்த்தி  பரவளைவாய்த் தூக்கி அடித்து முதலணிக்கே அனுப்புவதும் என மாறி மாறி இரு களங்களுக்கும் சென்றுகொண்டே யிருக்கும். எவரொருவர் பந்தத் தரையில் தவற விட்டோரோ, அவரின் மாற்று அணிக்குப் புள்ளி உயரும். குறிப்பிட்ட புள்ளிகள்  வந்துசேர்ந்த பின் ஆட்டம் முடிந்ததாய்க் கருதப்படும். பொதுவாய் 3 இல் 2 ஆட்டம் வென்றவர் போட்டியில் வென்றதாய்க் கருதப்படுவார். இதைக் கைப்பந்து என்றே இளமையில் சொல்லக் கேட்டுள்ளேன். இன்னொரு பெயர் வளையாட்டம்/

முடிவில் squash (v.) "to crush, squeeze," early 14c., squachen, from Old French esquasser, escasser "to crush, shatter, destroy, break," from Vulgar Latin *exquassare, from Latin ex "out" (see ex-) + quassare "to shatter" squash (n.2) 1610s, "act of squashing," from squash (v.). The racket game called by that name 1899; earlier (1886) it was the name of the  ball used in it. Squash is a racket and ball sport played by two (singles) or four players (doubles squash) in a four-walled court with a small, hollow rubber ball. The players alternate in striking the ball with their racquets onto the playable surfaces of the four walls of the court. The objective of the game is to hit the ball in such a way that the opponent is not able to play a valid return.

இதில் இரு அணிக்காரரும் ஒரு சுவரைப் பார்த்தவாறு அடித்துக் கொண்டு இருப்பது. ஒரு அணியார் அடித்த பந்து சுவரில் பட்டு மீள எகிறி வரும்போது அது தரையில் விழுந்துவிடாது, இன்னொரு அணியார் அடிக்க வேண்டும். இதில் ஆடப்படும் பந்து சொவ்வையான உரப்பரால் (soft rubber) செய்யப் பட்டிருக்கும். பந்தை அடிக்கும் bat அகற்பட்டை (racquet) போல் இருக்கும்.

racquet (n.)
"handled hitting device used in tennis, etc.," c. 1500, probably originally "tennis-like game played with open hand" (late 14c.), from Middle French rachette, requette (Modern French raquette) "racket for hitting; palm of the hand," perhaps via Italian racchetta or Spanish raqueta, both often said to be from Arabic rahat, a form of raha "palm of the hand," but this has been doubted. Compare French jeu de paume "tennis," literally "play with the palm of the hand," and compare tennis).

உரப்பர் பந்தை சுவரில் ஓங்கி அடிக்கும் போது அது கசங்கிக் குலைந்து போய்,  மீண்டும் எம்பி தன்னுருப்பெற்று வருவதால், இந்த ஆட்டம் கசவாட்டம் என்றே சொல்லலாம்.







2 comments:

கவிஞர்.வீ.சிவ ஓவியம். said...

ஐயா வணக்கம்,
கோலி விளையாட்டத்தில் - பித்தில் அல்ல - காய் ஒட்டி,வட்டக் கோட்டுக்குள் உருட்டிய காயை குறிபார்த்து வட்டிக் கோட்டில் நின்று வல்லா ஆகாமல் அடிப்பது ஒரு முறை.இதில் வல்லா என்பது தவறு,பழுது .அதை ஒரு விளையாட்டின் தவறுக்கு ஈடாக எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது?.

கவிஞர்.வீ.சிவ ஓவியம். said...

ஐயா,
வணக்கம்.பித்து விளையாட்டில் 'தம்பளம்' போடுதலை எவ்வாறு ஆங்கிலத்தில் அழைப்பது?.தப்பளம் என்பது பித்து ஆட்டத்தில் 10 ம் குழிப் போட்டவுடன் எதிரியின் காயை அடிப்பது.அது தொலைவில் இருந்தால் ஏதேனும் வேறு குழியில் தம்பளம் போட்டுப் பின் காயைத் தெறிக்கலாம்.
வீ.சிவ ஓவியம்
பள்ளத்தூர்.