Wednesday, March 25, 2020

Antibody

அறிவியலிற் சில சொற்கள் வெவ்வேறு புலனங்களுக்கும் பொதுவானவை அவற்றைப் பொதுவாக வைப்பதே தமிழில் அறிவியல் வளர உகந்தது. இதைப் பலகாலஞ் சொல்லிவருகிறேன். ஒவ்வொரு துறையினரும் தனித் தனியே பாத்தி கட்டினால் அறிவியற்றமிழ் வளராது. இதைப் புரிந்து கொள்ளத் தான் ஆட்களைக் காணோம். பொதுவான சொற்களில் body யும் ஒன்று. ஒரு பூதியலாளனும் (Physicist), உயிரியலாளனும் (biologist), மருத்துவனும் (medical practitioner) இதைப் பயன்படுத்துவது வெவ்வேறெனக் கொள்ளலாகாது. இதுவரை பார்த்த அளவில் body = பொதி என்பது எல்லாத்துறைகளிலும் சிக்கலின்றிப் பயன்படுகிறது. gen ஐக் கணமென்றும் gene ஐ ஈனென்றும் பயன்படுத்துகிறேன். anti என்ற முன்னொட்டை, antibiotics பற்றிச் சொன்ன போது “ஈரி” என்ற பின்னொட்டாய்ப் பயன்படுத்தினேன்.

எனவே antibody யைப் பொதியீரி என்றும், antigen ஐக் கணவீரி என்றுஞ் சொல்லலாம். பொதிகளை ஈருவது பொதியீரி. பொதிகள் உயிரிகளாய் மட்டுமிருக்கத் தேவையில்லை. அவை பெருதங்களாய்க் (proteins) கூடவும் ஆகலாம். அவை மொத்தையானவை; எனவே பொதியாகின. பொதிந்து இருப்பது பொதி. பொதி கணக்காய் இருக்கிறானென்பது கனத்த body கொண்டவனைச் சொல்வது தான். கணவீரி ஒரு வெருவியாகவோ (virus), பட்டுயிரியாகவோ (bacteria) இருக்கலாம். எந்தெந்த உயிர்கள்/உயிரிகள், கணங்களை உருவாக்கக் கூடியனவோ அவையெலாம் ஈரப் படுகின்றன. ஒவ்வொரு பொதியீரியிலும், கணவீரிகளை பொருந்துமிடஞ் (antigen binding site) சொல்லப்படும். பொதியீரிகள் இத்தகைய பொருந்துமிடங்களைக் கொண்டே கணவீரிகளை ஈருகின்றன. 

விக்கிப்பீடியாவில் Antibodies பற்றிவரும் ஒரு பத்தியை கீழே மொழி பெயர்த்துக் காட்டியுள்ளேன்.
------------------------------
Antibodies (also called immunoglobulins) are large Y-shaped proteins. They are found in the blood or other body fluids of vertebrates. Antibodies are the key element in the adaptive immune system. The antibody recognizes a unique part of the foreign target called an antigen.[1][2] Each tip of the "Y" of an antibody contains a structure (like a lock) that fits one particular key-like structure on an antigen. This binds the two structures together. Using this binding mechanism, an antibody can tag a microbe or an infected cell for attack by other parts of the immune system, or can neutralize its target directly.[3] The production of antibodies is the main function of the humoral immune system.[4][5]

Each antibody is different. They are all designed to attack only one kind of antigen (in practice, this means virus or bacteria). For instance, an antibody designed to destroy smallpox is unable to hit the bubonic plague or the common cold.Though the general structure of all antibodies is very similar, that small region at the tip of the protein is extremely variable. This allows millions of antibodies with different tip structures to exist. Each of these variants can bind to a different antigen.[1] This enormous diversity of antibodies allows the immune system to recognize an equally wide variety of antigens.[6]
--------------------------------------
அடிப்படையில் Y வடிவப் பெருதங்களான (proteins) பொதியீரிகள் [இவற்றை நோயெதிர்க் கோளங்கள் (immunoglobulins) என்று சொல்வதுமுண்டு], முதுகெலும்பு விலங்குகளின் குருதியிலும், மற்ற பொதி நீர்மங்களிலும் (body fluids), உடலின் சரிசெய் இகலிக் கட்டகத்திலும் (adaptive immune system;immune என்பதை இகலுதல் = எதிர்த்தல் பொருளில் பயன்படுத்துகிறேன். இதை நோயெதிர்ப்பு என்றும் ஒருக்கால் சொல்லியுள்ளேன்), முகன எளிமங்களாய் உள்ளன. பொதியீரி "Y" களின் ஒவ்வொரு முனையிலும் (பூட்டுப் போல்) ஓர் அமைப்பு உள்ளதால், கணவீரித் (antigen) திறவி (key) போன்ற அயலெயினத் (foreign target) தனிப்பகுதியை அடையாளங் கண்டு, அவை பொருந்திக் கொள்ளலாம்.

இகலிக் கட்டகத்தின் (immune system) வேறு பகுதிகள், ஒரு நூகியையோ (microbe), தொற்றுச் சில்லையோ (infected cell), தாக்கியழிக்க, பொதியீரிகள், இப் பொருந்து மாகனியத்தைப் (binding mechanism) பயனுறுத்தி, உள்வருவதைத் தொட்டு, அடையாளங் (tag) காட்டலாம். வேண்டுமெனில் எயினத்தை (target) நேரடியாய் நொதுக்கவும் (neutralize) செய்யலாம். இதுபோன்ற பொதியீரிகளை உருவாக்குவதே நம்முடலில் உள்ள பொதிநீர்ம இகலிக் கட்டகத்தின் (humoral immune system) முகன வங்கமாகும் (function).

ஒவ்வொரு பொதியீரியும் ஒரு குறிப்பிட்ட கணிவீரியைத் தாக்கவே (நடை முறையில் இது ஒரு குறிப்பிட்ட வெருவி அல்லது பட்டுயிரி ஆகும்) அடவு (design) செய்யப் படுகிறது. காட்டாகச் சின்னம்மையை அழிப்பதற்காக அடவுசெய்யப்பட்ட பொதியீரி, கொள்ளை நோயையோ (bubonic plague), வெறும் தடுமனையோ, ஒடுக்காது. எல்லாப் பொதியீரிகளின் பொது அமைப்பு ஒன்றுபோல் இருந்தாலும், பெருத முனையின் சிறுமண்டலமானது மிகவும் வேறுபட்டது. இதனால் நுல்லியன் (million) கணக்கான பொதியீரிகளை வெவ்வேறு முனை அமைப்புகளோடு நாம் உருவாக்கலாம். ஒவ்வொரு வேறியும் (variant) ஒவ்வொரு கணவீரியோடு பொருந்த வைக்கலாம். பொதியீரிகளின் இந்தப் பெருமாண்ட வேறுபாடு, மிகவிரிந்த வேறுபட்ட கணவீரிகளை இகலிக் கட்டகம் (immune system) அடையாளங் காண வழிசெய்கிறது.
-----------------------------------------

அன்புடன்,
இராம.கி.