Thursday, June 22, 2023

ஆலயம்

 ஆலயம் என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆல்> ஆலு> ஆலு-தல் = சுற்றுதல். ஆலை = சுற்றி இயங்குவது. சுற்றி வருவது; ஆலத்தி> ஆரத்தி;  திருவிளக்கை இறைப் படிமத்தின் முன்னோ, திருமணத்தில் மாப்பிள்ளை முன்னோ, மேலிருந்து கீழ்வரை வலம் வருவது போல் சுற்றிக் காட்டுவது. திருச்சுற்றுகளைக் (சுற்றுமதில், சுற்றாலை) கொண்ட பெருஙகோயில். temple having prahAra. இக் கோயில்களில் 2,3 சுற்றாலைகள் கூட இருக்கலாம். திருவரங்கம் போன்ற கோயில்களில் 5 சுற்றாலைகள் இருக்கலாம்.

Monier-Williams Sanskrit-English Dictionary கீழே உள்ளவாறு போட்டிருப்பர். இதில் ஆ என்பது முன்னொட்டு. லயம் என்பதற்கு √lī என்பதைத் தாதுவாகக் காட்டுவர் வால்மீகி இராமாயணத்தைத் தொடக்கமாய்க் காட்டுவர். வால்மீகி இராமாயணம் பொ.உகத்தில் தான் முழுமையானது. ஆலய என்ற சொல் வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் கிடையாது. வேதநெறியாளருக்கு இறையைக் குறிக்கும் எந்தப் படிமமும் கிடையாது. நடு கல் பழக்கமும் வேத நெறியாருக்குக் கிடையாது. அவருக்குச் சுடுகாடு உண்டு. இடுகாடு கிடையாது. வேத நெறி என்பது பூர்வ மீமாம்சத்தில் தொடங்கி உத்தர மீமாம்சையில் நகரும். இதற்கும் இற்றைச் சிவ, விண்ணவ நெறிகளுக்கும். அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய சமண நெறிகளுக்கும் தொடர்பு கிடையாது.  

தமிழியர் பண்பாட்டில் இடு காடும், நடு கல்லும் தொடக்கம். பின்னால் நடுகல் வழிபாடே, கோயில் வழிபாடாய் மாறி வளர்ந்தது. நம்மூரில் பல கோயில்கள் பள்ளிப்படையாய் இருந்து கிளர்ந்தவை. இந்தியா வந்ததால் வேத நெறியார் இங்குள்ள பழக்கத்தோடு கொஞ்சங் கொஞ்சமாய் ஒன்றுபட்டு மாறி, நம் ஆலயத்தை அவர் கடன் கொண்டார். மோனியர் வில்லியம்சு கொடுத்த விளக்கம் கீழே உள்ளது: ஆலயம் என்ற சொல்லை அவர் கோயிலுக்கு மட்டுமின்றி எல்லாக் கட்டிடங்களுக்கும் பயில்வார். காரியாலய என்று அலுவலகத்தைக் குறிப்பார். நாம் கோயிலுக்கு மட்டுமே குறிப்போம்.    

1) Alaya (अलय):—[=a-laya] m. (√lī), non-dissolution, permanence, [Rāmāyaṇa iii, 71, 10] ([varia lectio] an-aya)

2) [v.s. ...] mfn. restless, [Śiśupāla-vadha iv, 57.]

3) Ālaya (आलय):—[=ā-laya] a See ā-√lī.

4) [=ā-laya] [from ā-lī] b m. and n. a house, dwelling

5) [v.s. ...] a receptacle, asylum, [Rāmāyaṇa; Yājñavalkya; Kathāsaritsāgara etc.]

6) [v.s. ...] (often ifc. e.g. himālaya, ‘the abode of snow.’)

ஆனாலும் ஆலயம் போல் பல சொற்களுக்கு ஒரு சிலர் ஆதாரமே இன்றி சங்கதத்தை அடையாளம் காட்டுகிறார். 

என்று தான் சங்கத விளக்கத்தை விட்டு தமிழுக்கு நாம் வருவோம்?


Bonfire

சொல் எனும் குழுவில் 19/06/2023 அன்று, திரு. சிதம்பரநாதன் ரெங்கசாமி என்பார் ”Bonfire என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?. சொக்கப்பனை என்று சொல்லலாம், ஆனால் அது பெரும்பாலும், ஆன்மிகம் சார்ந்ததாக உள்ளது.” என்று கேட்டிருந்தார்.  

உடனே, திரு. ரவீந்திரன் வெங்கடாசலம், “வெயில் கொளுத்தும் தமிழ்நாட்டில் bonfire எல்லாம் கிடையாது; அதனால் சொல்லும் இல்லை. சாற்றுத்தீ எனலாம்” என்று எல்லாம் தெரிந்தாற்போல் முன்னிகை கொடுத்தார். இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. விடை தெரியாதெனில், பேசாது இருந்திருக்கலாம்”. இப்படி தமிழையும், தமிழரையும் இழித்து முன்னிகை கொடுக்க வேண்டாம். 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரை தமிழில் உள்ள எல்லாத் தமிழ்-அகராதிகளிலும், “குளிர்காய்தல்” என்ற சொல் இதைக் குறிக்கும். இன்னும் விளக்கம் தரவேண்டின், “ கொள்ளி, எரி, நெருப்பு, தீ, சொக்கம்” என்று ஏதோ ஒன்றைக் கடைசியில் சேர்த்திருக்கலாம். மொத்தமாய் ”குளிர்காயற் கொளுந்து/கொளுத்து” என்றுகூடச் சொல்லலாம்.

தமிழர் ஐந்திணைகளில் வாழ்வதாய்ச் சொல்கிறோம். ஒவ்வொரு திணையிலும் வெதணம் (climate) மாறும். மருதம், முல்லையில் இருப்பது குறிஞ்சியில் மாறலாம். தமிழகத்தின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. 3000 அடிக்குமேல் உள்ள ஊர்களில் மக்கள் இன்றும் குடியிருக்கிறார். சங்க காலத்திலும் இதுபோல் இருந்தார். குறிஞ்சி நிலத்தில் துலாம் (ஐப்பசி) வந்தாலே அதிகாலையில் சற்று நடுக்கம் இருக்கும். கூதிர்காலம் எனும் பெரும்பொழுதின் கடைசியில் அதாவது நளி (கார்த்திகை)மாதத்தில் இன்னும் நடுக்கம் கூடும். பெரும்பாலான மரங்களின் இலைகள் குவிந்து கொள்ளும் காலத்தையே கூதிர்காலம் என்பார். 

கூதிருக்கு அடுத்தது முன்பனிக் காலம். இக் காலத்தில் நம்மூரில் 0 பாகை செல்சியசிற்கும் கீழே வெம்மை (temperature) போவதில்லை. ஆனால் 15,20 பாகைக்காவது போகலாம். அதுவும் குளிர்தான். எல்லோராலும் அதைத் தாங்கிவிட முடியாது. அப்போது அதிகாலை நேரத்தில் குப்பை, கூளங்களைச் சேகரித்து எரியூட்டிக் குளிர்காய்வது ஏழைகள் பலருக்கும் உள்ள பழக்கம். குளிர் காய்தல் என்ற சொல் அப்படி நம்மிடை எழுந்தது. 

bonfire என்பது மேலைநாடுகளில் மட்டும் உள்ளதல்ல. நம் கோடைக்கானலிலும், ஒற்றைக் கல் மந்திலும், மூணாற்றிலும், வயநாட்டிலும், நீலமலையிலும் உள்ள பழக்கம் தான். நம்மூராருக்கு ice கூடத் தெரியும். அதற்கும் அவர் ஒரு சொல் வைத்திருந்தார். ஆலங்கட்டி, ஆலி என்பது ice ஐக் குறிக்கும். ஆலியும் ice  உம்  ஒன்று தான். அதிகக் குளிர்நிலைக்கு சில்,சிலீர் என்றும், சிந்து என்றும், சொற்கள் கொண்டிருந்தார். இன்னும் பல குளிர்ச் சொற்கள் நம்மிடம் இருந்தன.            

நம்முடைய எட்டாம் மாதமான நளி (கார்த்திகை) கார் (மழை) திகையும் மாதம். இன்னொரு வகையில் இது (நெருப்பில்) காயும் திகையும் கூட. இதைச் சாரற் காலம் என்றும் சொல்வர். ஐப்பசி (துலை), கார்த்திகை (நளி) குளிர் காயும் காலம்.

சொக்கப்பனை என்பது சொக்குவதற்கான, எரிப்பதற்கான பனையோலை. சொக்குதல் = எரித்தல்.  ”சொக்கப்பனை கொளுத்து” என்பதே கார்த்திகைத் திருவாதிரையில் ஆடும் பண்டிகை. பண்டிகையையும் பொருளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது..