Thursday, August 05, 2021

Extremophile

 ஒரு சமயம் இதற்கு இணை கேட்டார். ”உச்சம்” என்பது அதற்குச் சரியாய்த் தென்படவில்லை. ”superlative, supreme. maximum, summit, climax, ultra, utmost, excessive” போன்ற எத்தனையோ நெருங்கிய பொருட் சொற்களுக்கும் உச்சம் எனலாமே? extreme இன் விதப்பென்ன? -என்று பார்த்து, நம் மரபில் தேடவேண்டும். மேலே ஒவ்வொரு சொல்லுக்கும் இல்லாவிடினும், 90/95 % சொற்களுக்காவது நுணுகிய வேறுபாடு காட்டித் தமிழில் சொல்லமைய வேண்டும். ஆங்கிலம் வெல்வது அதன் பரந்துபட்ட, விதப்பான, நுணுகி வேறுபடும் சொல்வளத்தாற்றான். ஒரு சொற்றொகுதி பார்த்தால், அதன் common minimum பொருளைத் தமிழிற் கொண்டு வந்தால் போதும் என்பது தமிழை என்றும் 2 ஆம் நிலையில் வைக்கும். அப்புறம், “அது, இது, வந்து, போய், அந்த மாதிரி, இந்த மாதிரி” என்று ஒப்புக்குச் சப்பாணியாகவே நம் சொல்லாகம் முடியும். நாம் முன்நின்று விளக்காது தானே முன்நின்று விளக்கும் படி ஆங்கிலச்சொல் எவ்வளவு செய்யுமோ, அதே அளவு துல்லியமாய்த் தமிழில் சொற்கள் அமையவேண்டும்.  

எள்>எய்>எய்தல், அம்பெய்தலிற் கிளர்ந்தது. எல்லாத் தமிழிய மொழிகளிலும் சிற்சில மாறுபாடுகளுடன் இதுவுண்டு. வேண்டுமானால் பர்ரோ-எமெனோவிற் தேடுங்கள். எயினரென்போர் அம்பெய்தும் வேடர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் படும் குழு. எயில்= கோட்டைகளில், குறிப்பாகக் கோட்டை மதில்களில் அம்பெய்யத் துணையாக அமையும் இல். எயிறு= அம்புபோல் கூர்ந்த சிங்கப்பற்கள்; கடைவாய்க்கும், முன்பற்களுக்கும் நடுவிலுள்ளன. எய்வு>ஏய்வு>ஏவு ஆகி எய் கலையை உணர்த்தும். இன்று ஏவுகணை பற்றியும் பேசுகிறோம். ஏவுதல்> ஏகுதல்= செல்லல். ஏகுதலுக்கும், go விற்கும் தொடர்பு இருப்பதாய் உணர்கிறோம். ஆனால் அதை நம்பத்தான் நம்மில் ஆளில்லை. இந்தையிரொப்பியனோடு தமிழை இணைவைத்துப் பேசலாமா? ஐயையோ, என்னவோர் அவச்சாரம்?!

 எள் என்ற சொல்லில் எழுந்தது “எட்டு”. நடக்கும்போது ஒரு காலுக்கும் இன்னொன்றுக்குமுள்ள இடைவெளி; இதை எடுப்பென்றுஞ் சொல்வார். எகரந் தொலைத்து ஸகரம் நுழைத்து ஆங்கிலத்தின் step என்பது வந்து சேரும். எட்டல்= முன்செல்லல். எற்றல்= முன்தள்ளல். எள்க்குதல்> எட்குதல்> எக்குதல்= தள்ளுதல். (சிவகங்கைப் பக்கம் புழங்கும் வழக்குச் சொல். திரைப்படக் கொட்டகைகளிலோ, கோயில்களிலோ, மக்கள் கூட்டங்களிலோ, எக்கித் தள்ளி நெரிபடாதோர் எவரேனும் உண்டோ? ’முக்கு/முனங்கு’ என்ற சொல் முனைக்கு ஆனதுபோல் சிவகங்கைப் பக்கம் எக்கு என்ற சொல் முனை குறிக்கும். எக்கு என்பது, target ஐயுங் குறிக்கும். இதன் இன்னொரு சொல்லான இலக்கையும் ’லெக்கு’ என்று பேச்சுத்தமிழில் சொல்வார். சத்தியமாய் சிவகங்கைப் பக்கத்து மக்களுக்குச் செருமனோ, டச்சு மொழியோ தெரியாது. (eche = corner in German, and Dutch.) 

இத்தனை காரணங்களால் எக்கத்திற்கு extreme என்னும் பொருளுண்டு. ஆங்கிலத்தில் extreme (adj.) early 15c., "outermost, farthest;" also "utter, total, in greatest degree" (opposed to moderate), from Old French extreme (13c.), from Latin extremus echeutmost, farthest, last; the last part; extremity, boundary; highest or greatest degree," superlative of exterus (see exterior). In English as in Latin, not always felt as a superlative, hence more extreme, most extreme (which were condemned by Johnson). Extreme unction preserves the otherwise extinct sense of "last, latest" (15c.) என்பார்.

”எக்கச் சக்கம்” என்பதை நம்மில் எல்லோரும் பயன்படுத்தியிருபோம். எக்கம் = extreme. சக்கம்= சறுக்கத்தின் இடைக்குறை= பெரும்பள்ளம். எக்கச் சக்கம் என்பது நிரவலை (average) விட்டு ஏறயிறங்கப் பெருகி தாறுமாறாக ஒழுங்கின்மையோடு அமைவது (நிரவலுக்கு இன்னொரு சொல். தார்>தாறு), “எக்கச் சக்கமாய்ப் பேசுகிறார்”; ”எக்கச் சக்கமாய் ஆகிப் போயிற்று”. ”எக்குத் தக்கு” என்றாலும் அதே பொருளே. தக்கு= தாழிடம். எக்குத்தப்பு= extreme உம் அதன் மாற்றும். தக்கணம்= இமையமலை நோக்கின் தாழிடம். வடக்குயர்ந்தது, தெற்கு தாழ்ந்தது என்பது புவிக்கிறுவக் (geography) கூற்று. 

எக்கர் = காற்றால் ஏறிக்குறையும் மணற்குன்று. எக்களித்தல்= வயிற்றுள் இருப்பதை வெளித்தள்ளல். எக்கழுத்தம்= மனத்துளுள்ள எல்லையற்ற இறுமாப்பு; எக்களித்தல்= extreme மகிழ்ச்சி. எக்காளம் = extreme ஓசை. ஊதுகருவி. எக்கி= நீரிறைத்து வெளித்தள்ளும் இக்கால இறைப்பிக்கு (pump) அற்றைப் பெயர். எக்கிடுதல் = தாராளாமாகக் கொடுத்தல் (தாரென்பது இங்கும் நிரவலைக் குறிக்கிறது. தார் ஆளம் என்றவுடன் ”நிரவலுக்கும் கூட” என்ற பொருள் வந்து விடும்.) எக்குறுதல்> எகுறுதல்> எகிறுதல் என்று திரியும். ஒரு extreme வந்து அதையும் கடத்தலே எகிறுதலாகும். extreme என்ற பெயரடை வரும் எல்லாவிதமான கூட்டுச்சொற்களுக்கும் இது பொருந்திவரும். phile என்பதை விழை எனலாம். பெரிய விளக்கம் தேவையில்லை. 

இனி என் பரிந்துரை extremophile organism= எக்குவிழை உயிரி.. இனிச்சில விதப்புகள்.

Acidophile= காடிவிழை; 

Alkaliphile= களரிவிழை; 

Anaerobe= காற்றுவிழையா; 

Cryptoendolith= பாறையுள் கரந்துறை; 

Halophile= உப்புவிழை; 

Hyperthermophile= மீத்தெறுமவிழை; 

Hypolith= பாறைத் தாழ்குளிர்; 

Lithoautotroph= மண்ணுறிஞ்சித் தோய்வி; 

Metallotolerant= மாழை தாளுவி; 

Oligotroph= ஒல்லகத் தோய்வி; 

Osmophile= ஊடுவிழை; 

Piezophile= அழுத்தவிழை; 

Polyextremophile= பல்லெக்குவிழை; 

Psychrophile/Cryophile=  ஊதைவிழை/ உறையாலிவிழை; 

Radioresistant= கதிரியந்தாங்கி; 

Thermophile= தெறுமவிழை; 

Thermoacidophile= தெறுமக்காடிவிழை; 

Xerophile= உலரிவிழை

அன்புடன்,

இராம.கி.