Monday, May 11, 2026

ஒளிக் குவறை (photo camera)

Depth of Field - புல(த்தின்) ஆழம் 

Shutter - கவ்வி 

Aperture -  ஒளித்துளை

Exposure - ஒளிப்பொதிவு

Photo sensor - ஒளியுணரி

Light Sensitivity- ஒளியுணங்கு 

Lens - உள்ளு, வில்லை

Focal length - குவிநீளம்

Focal distance - குவித்தொலை

Focal point - குவிப்புள்ளி

Camera - குவறை, ஒளிக்கூடு

Candid shot - காணெடுப்பு 

Focal plane - குவித்தளம்

Sunday, May 10, 2026

Raksha, Raksha, Naga

கோராவில் ஒருவர் “what is the etymology of the words Raksha/Rakkha(Rakshasa), Yaksha/yakkha and Naga/Naka? Are they Tamil or Sankrit?” என்று கேட்டிருந்தார். அவருக்குத் தமிழ் தெரியுமாம். இருப்பினும் இச்சொற்களை அறிந்தார் இல்லை. தமிழில்,

 அரட்டு-தல் = அச்சமூட்டு-தல்

அரக்குதல் = வருத்துதல், அழித்தல் என்ற வினைகளில் அடியெழும்  பெயர்ச்சொற்கள் இவை. 

இவற்றை அறிய எந்தத் தொல்கதையும் நமக்குத் தெரிய வேண்டியதில்லை. வெறும் பொருள் போதும். அரக்கு-தலின் வழி,   

அரக்கு> அரக்கன்

அரக்கு> அரக்கி 

அரக்கு> அரக்கதன்> ராக்கதன்> இராக்கதன் என்ற  சொல்லும் பருத்தவன், அச்சமூட்டுபவன் என்ற பொருளில் வரும்.

இனி அரக்கு> அரக்கத்தி> அரக்கச்சி> அரக்க்சசி? அரக்க்ஷசி> ராக்க்ஷசி> ராக்சஷி>இராட்சசி

அரக்கு> அரக்காயி> ராக்காயி

யா = கருப்பு; யாக்கன் = கருப்பன்; யாக்கி = கருப்பன்

யாக்கன்> யக்கன். யக்ஷன்

யாக்கி> யக்சி> யக்ஷி 

அடுத்து ய> ஞ> ந திரிவில் கருப்பைக் குறிக்கும் யா என்ற சொல் நா என்றும் திரியலாம். 

யா>நா; யாக்கன்>யாகன்>நாகன்= கருப்பன்

Thursday, February 19, 2026

வித்தகரும் பொறுதியும்

 எளிமையான குறள் அல்ல. ஒரு மணி நேரம் குழுவாகப் படித்தபோதும், தெளிவான பொருள் கிடைக்கவில்லை. உங்கள் புரிதலை பகிர வேண்டுகிறேன்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (குறள் 235)
- என்று நண்பர் நாஞ்சில் பீட்டர் அவருடைய காலக்கோட்டில் கேட்டிருந்தார். அதற்கு நானளித்த மறுமொழி கீழே:
-----------------------------------------
நுந்துதலுக்குத் தூண்டலெனும் பொருளுண்டு. நுந்துதல்>நந்துதல் என்ற திரிவில் தூண்டலோடு, தழைத்தல், வளர்தல், செருக்கல், விளங்கல் என்ற பொருள்களும் வந்துசேரும். விளங்கலின் பொருள் புகழ் தானே? (நந்துதலுக்கு கெடுதல், சாதல், அவிதல், மறைதல், நிந்திக்கப்படுதல் என்ற தலைகீழ்ப் பொருள்களுமுண்டு. இங்கே தலைகீழ்ப்பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில் நத்தத்திற்கு அடுத்த சொல் கேடு. எனவே நேர்படு பொருளே கொள்ளவேண்டும்.) நந்துதலென்ற வினைச்சொல் நத்தமென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். நத்தம், இக்காரணத்தால் புகழென்று பொருள்கொள்ளும். கேட்டிற்கு இங்கே வேறுபாடென்ற பொருளையே கொள்ளமுடியும். மற்றபொருட்கள் பொருந்திவராது. வேறுபாடு என்பது இங்கே இகழுரையே.
சாக்காடு = சாகக் கிடக்கும் நிலை. சாவுக்குச் சற்றுமுந்தையது. சிலருக்குச் சாக்காடென்பது சில நொடிகளில், நுணுத்தங்களில் (minutes), நாட்களில், மாதங்களில், ஆண்டுகளில் நடக்கலாம்.. யாருக்கு எது நடக்குமென்று என்று உறுதியாய்ச் சொல்லமுடியாது. தெரிந்தவர், பெரியவர், உற்றார் ஆகியோர் சாகக்கிடப்பவர் அருகுவந்து கிடப்பவர்செய்த நல்லதையே, புகழ்ச்செயல்களையே பேசுவார். சாகக்கிடப்பவர் எவ்வித எதிர்வினையுமின்றிக் கேட்டிருப்பார். ஆனால் இது மட்டுமா சாவீட்டில் நடக்கும்? கிடக்குமிடத்துக்குச் சற்று வெளியே, கிடப்பவரோடு வேறுபட்டுள்ள ஊரார் அவர்செய்த மற்ற செயல்களையும் பேசுவார்/தூற்றுவார். இறக்கக் கிடப்பவர் காதில் அது விழக்கூடாதென்றே நம்மூரில் முயல்வார். தூற்றல் கேட்டால், உணர்ச்சிமேலிட்டு, சாக்காட்டாளரின் உடலுறுப்புகள் தம்செயற்பாட்டை முடித்துக்கொள்ளலாம். சாவு உடனே ஏற்படலாம். ஆனால் வித்தகரோ, புகழுரைகளையும், இகழுரைகளையும் பொருட்படுத்த மாட்டார். அதற்கான மனவுறுதியும், பொறுதியும் அவர்க்குண்டு. இப்பொறுதியே இக்குறளில் பேசப்படுகிறது.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
”புகழுரைபோல், இகழுரையும் உளதாகும் சாக்காடு வித்தகர்க்கு மட்டுமின்றி மற்றோருக்கு அரிது”. எனவே ”நமக்குப் புகழ்வந்ததென அகங்காரங் கொள்ளாதீர். இகழுரைகளும் வந்துசேரும். இவற்றைத் தாங்கும் பொறுதி நமக்கு வேண்டுமெனில் வித்தகராகுங்கள்” என்றுணர்த்துகிறார் வள்ளுவர்.
அன்புடன்,
இராம.கி

Thursday, February 05, 2026

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி

 நான் அறிந்தவரை திராவிட மொழிகளுக்கான சொற்பிறப்பியல் பேரகரமுதலி என்பது பாவாணர் ஆய்வின் வழி உருவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மட்டும் தான். ஆனால் அது வேறு வழியில், தமிழுக்காக மட்டும் உருவாக்கப் பட்டது. இப்போது உள்ள நிலையில் செ.சொ.பே. எல்லாத் தமிழ்ச் சொற்களுக்கும் சொற்பிறப்பு தருவதில்லை. இந்த அகரமுதலியின் உள்ளக ஒத்திசைவு (internal consistency) இன்னும் சரிபார்க்கப் படவில்லை. ஏராளம் அதில் சரி செய்ய வேண்டும். என்னைக் கேட்டால், digital முறையில் இதை ஒரு குழு சரிபார்க்க வேண்டும். தேடக்கூடிய தரவடியாய் (searchable database) இது மாறவேண்டும். வெறுமே தாள் வடிவில் கண்ணித்த (scanned paper version) pdf ஆக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. தவிர, இப்போது இருப்பதற்கும் மேலாக, மற்ற திராவிட மொழிகளின் இணைச்சொற்கள் (cognates) அதில் சேர்க்கப்பட வேண்டும்.

Friday, January 30, 2026

சிராவத்தியும் சிராப்பள்ளியும்

கீழே வருவது 16 சனபதங்களைக் குறிக்கும் ஒரு படம். அதில் உள்ள சிராவஸ்தியைக் குறித்து இந்த இடுகையில் பேசுகிறேன். பாடலிபுத்ரம், வேசாலி, காசி போன்று உச்சத்தில் வைத்துப் பேசப்படும் ஓர் ஊர் சிராவஸ்தியாகும் . தமிழ், பாகதமொழிகளின் வழியே தான் அந்த ஊடின் பெயரைப் புரிந்துகொள்ள முடியும்.

பள்> ப(ள்)ளி-த்தல்> படு-த்தல்< பது-த்தல்> பதி-த்தல் = வதி-(த்தல்).
பது-> பதம், பதி = நிறைய மக்கள் வதியும் ஒரு நகரம்.
பள்ளு> பள்ளி> பட்டி என்ற பதியோடு தொடர்புள்ள சொற்களையும் இங்கே எண்ணிப் பார்த்துக் கொள்க.
சிர(வ)ம் = தலை (பாகதச் சொல்).
சிரா + வ(த்)தி = சிராவஸ்தி = கோசலம் என்ற சனபதத்தின் தலைநகர். இதைச் சேகேதம் என்றும் சொன்னார். இது இற்றை அயோத்திக்கு அருகில் உள்ள ஊர்.
அதுபோல் சிராப்பள்ளி = சிராப்பட்டி = அக்காலச் சோழர் தலைநகரான உறையூருக்கு அருகில் உள்ள (அற்றுவிகர், செயினர், புத்தர் என்ற) எல்லாச் சமணருக்கும் பொதுவான, பார்சுவருக்குச் சொந்தமான, தென்னகத் தலைமைப்பள்ளி இருந்த இடம்.
சிராவத்தியில் மற்கலி கோசாளரும், வர்த்தமான மகாவீரரும், சித்தார்த்த புத்தரும் பெரும் எண்ணிகையில் நாட்களைக் கழித்துள்ளனர். சிராவத்தியில் தான் தக்கணப் பாதை முடிந்தது. உத்தாப் பாதையும் இந்நகரைத் தொட்டுப் போனது.
அதேபோல் சிராப்பள்ளியும் தலைமையிடம் தான். சிலம்புக் காதையில் கோவலன், கண்ணகியைக் கூட்டிவரும் குந்தியார் இங்கு தான் தங்குவார். இற்றைத் திருச்சியில் அமையும் மலைக்கோட்டை, அருகிலுள்ள திருவரங்கம், திருநாவல்கா (-திருவானைக்கா) போன்றவற்றைச் சேர்ந்த பள்ளியை அறிய சிலம்பை ஆழ்ந்து படியுங்கள்.
தவிர, அற்றுவிகத்தின் தோற்றுநரான மற்கலி கோசாளர் பிற்ந்தவூர் திருப்பிடவூர் (திருப்பட்டூர்). சிராப்பள்ளிக்கு அருகில் தான் உள்ளது. அற்றுவிகருக்கு நெருக்கமான திருவெள்ளறையும் சிராப்பள்ளிக்கு அருகில் தான். அற்றுவிகத்திற்கு நெருக்கமான இன்னொரு ஊர் சித்தண்ண வாசல் அதுவும் இன்னொரு பாதையில் சிராப்பள்ளிக்குச் சற்று தொலைவில் உள்ளது. தமிழரின் நடுப்பட்ட ஊரும் சிராப்பள்ளி தான். சிராவத்தியும் சிராப்பள்ளியும் பெரிதும் தொடர்புடைய ஊர்கள். ஆழ்ந்து ஒப்பிட்டால் இத் தொடர்பு விளங்கும்.
அற்றுவிகர் அழிந்தபின், புத்தர் இலங்கைக்கு நகர்ந்த பின்னால், சிராப்பள்ளி என்பது வெறும் செயினப்பள்ளி ஆனது. தேவார காலத்திற்கு அப்புறம், நெடுங்காலம் அது அப்படியே அறியப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், இந்த ஊர் Trichinoppalli என்றும் விளிக்கப் பட்டது. அதாவது திருச்சிராப் பள்ளி என்று சிவ்நெறியாளரால் அழைக்கப்பட்ட ஊர் திருச்செயின>திருச்சினாப் பள்ளி என்றும் ஆனது. இதைச் சாரணர் பள்ளி என்றும் அழைத்தார். நீலகேசியின் தலைவி அற்றுவிகப் பூர்ணரோடு வாதம் செய்தது குக்குட நகரில் (கோழியூர் = உறையூர்) உள்ள சாரணர் பள்ளியில் தான்.

https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/pfbid02PhMwabm7hKm4ua3YjpCTabHEqZaRYtfKUfueUfWN6FPpWgkZvfmac8dY8Tja7obMl?notif_id=1769726277304372&notif_t=feedback_reaction_generic&ref=notif

Friday, January 09, 2026

சுந்தா நிலம் (Sundaland) என்ற கண்டம்

தென்கிழக்கு ஆசியா இன்று வெவேறு நாடுகளாய்ப் பிரிந்து இருந்தாலும், ஒரு காலத்தில் அவை சுந்தாநிலம் என்ற கண்டத்தில் இருந்து பிரிந்த நிலங்கள் என்று சொல்வர். இணையத்தில் பார்த்தால், சுந்தாநிலத்தின் சொற்பிறப்பாய், பெரும்பாலும் சங்கதத்தில் உள்ளதாய்ச் சொல்லப்படும் சுத்தத்தை அடையாளம் காட்டுவர்.  

The name "Sunda" originates from the Sanskrit word "Cuddha," meaning white. During the Pleistocene era, there was a large volcano named Mount Sunda located north of Bandung in West Java என்ற விளக்கம் தான் அது. தமிழ்வேர் பற்றிய இயலுமைக் குறிப்பே அங்கு இராது. குப்தப் பேரரசிற்கு முன்னால், துணைக்கண்டத்திற்கு வெளியே, சங்கதம் பெரிதாய் கடல் தாண்டிப் போகவில்லை. தமிழ் குறைந்தது பொ.உ.மு 2350 இல் இருந்நே நகர்ந்துள்ளது.

சுல்> சொல் என்பது ஒளியை, மலர்ச்சியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல். 2006 இல் எழுதிய “கொன்றையும் பொன்னுமெ”ன்ற தொடரின்  நாலாம் பகுதியில் [http://valavu.blogspot.in/2006/01/4.html] இவ்வகைச் சொற்கள் வரும். சுல்லில் எழுந்த இருபிறப்பிகள் சுல்>சுல்+த்+த்+அம்= சு(ல்)த்தம்> சுத்தம் என்பதும் சுல்+க்+அம்= சு(ல்)கம்>சுகம் என்பதுமாகும். சுத்தம் என்பது தூய்மைப்பொருள் கொள்ளும். சுகம் என்பது நலப்பொருள் கொள்ளும். இரண்டு சொற்களுமே வடமொழியில் புழங்கியவை, ஆனால் தமிழ்வேர் கொண்டவை. சுத்திகரிப்பு = தூய்விப்பு. சுல்> சு(ல்)து > சுதை என்ற வளர்ச்சியில் சுண்ணாம்புக்கல்.    சுதை = அமிழ்தம் சுதையணைய வெண்சோறு = கம்ப ராமாயணம், குலமுறை. 18. சுதை = பால்,  சுவை, சுண்ணாம்பு, வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து (மணி 6:43, வெண்மை; விண்மீன், மின்னல், நெய் ஏனம்

சுர> குரு= வியாழன்; சுரகை = சுண்ணாம்பு சுள்>  சுர்> சுரம் = காய்ச்சல்;சுள்ளுதல் = காய்தல்; சுளுந்து   தீப்பந்தம்; சுள்ளி = நெருப்புக் குச்சி

சுல்லு = வெள்ளி

சுல் என்பது வெளுப்பைக் குறிக்கும் வேர்ச்சொல். சுல்>சுல்த்து என்பது மறுவுள்ள ஒரு துணியை வெள்ளையாக்குவது. இங்கும் சங்கத முறையில் சுத்திகரம் என்ற தொழிற்பெயர் எழும். தூய்விப்பு என்பது முற்றிலும் தமிழ்.

செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்ற சொற்கள் தமிழில் health ஐப் பொதுவாய்க் குறிக்கும். இந்தச் சொற்களின் உள்ளே புலப்படுவது பொன்நிற ஒளியே.  ”அவன் முகத்தைப் பாருங்கள். ஓர் ஒளி தெரிய வில்லையா? அவன் செழிப்பாய்/ கொழுமையாய்/ பொலிவாய்/ நலமாய்/ சுகமாய் இருக்க வேண்டும். இல்லெனில் அவன் முகம் இருளாகாதோ?” என்பது நாட்டுப் புறத்தார் மரபும் கூற்றுமாகும். (இத்தனை சொற்களையும் ஒதுக்கி இன்று சிலர் ஹெல்த் எனக் குறிக்க முற்படுவது முட்டாள் தனம். பல நாளிதழ்களும் அதையே செய்கின்றன. இல்லாவிடில் சுகாதாரம் என்கின்றன. ”ஆதாரம்” அங்கு எதற்கு? புரியவில்லை. சுகத்தின் ஆதாரம் சூழமைவு இல்லையோ? health, cleanliness ஐ விட மேம்பட்டதில்லையா? ”நன்றாய் இருங்கள்” எனில், “clean-ஆய் இருங்கள்” என்றா பொருள் கொள்கிறோம்? அதனின் மேம்பட்ட பொருள் அல்லவா நலம்? மேற்சொன்ன சொற்களில் துல்லியம் நமக்கு வேண்டாமா?.

கொல்>சொல் = சொலிப்பு, ஒளி; சொலித்தல் = ஒளி தருதல்; சொலிதை/ சொலிப்பு = வெளிச்சம். சொல்>solar = சூரியன் ஒளி; சொல்+ஐ = சொலை> சோலை> சுவாலை= flame; சொலி> சுவாலி = ஒளியிடு; இதை ஜ்வாலையாக்கி வடமொழி போல் சிலர் பலுக்குவர். நாமும் அங்கிருந்து இங்கு வந்தது போலும் என எண்ணிக் கொள்வோம். இப்படி நாம் தடுமாறும் சொற்கள் மிகப் பல. சொலை> சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. சோலை மலை = அழகர் கோயில்; சொல்=ஒளி, நெல் (மஞ்சளாய் இருக்கும் கூலம்). சொல்> சொன்> சொன்றி = சோறு;  சொல்பட> சொற்பட> சொப்பட = நன்றாக. வெளிச்சம் பட; சொற்படுதல் = பலன் மிகுதல்.

சொல்+நம் = சொன்னம்> சொர்னம்> சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு இங்கு உள்ளே வந்து சேரும். 

சொர்ணம்> சுவர்ணம்> சுவர்ணகா = வடமொழியில் கொன்றைக்கு உள்ள பெயர். 

சொன்னம்> சொன்னல்> சொனாலி = வங்காளியில் கொன்றைக்குப் பெயர். 

சொன்னல்> சொந்தல்> சொந்தால் என்றும் வங்காளியில் வரும். அசாமியிலே சொனாறு என்பார், (அந்தக் காலத்தில் அறுபதுகளில், "சோனாரே, சோனாரே" என ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்பாட்டு வரியுண்டு, ஆராதனா என நினைக்கிறேன். ”தங்கமானவளே” என்று காதலியைக் கூப்பிடுவான்.) 

சொன்னம்> சொன்னகாரன் =  பொன் வேலை செய்யும் தட்டான்; 

சொல் +நை = சொன்னை> சோனை> சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்தில் (பீகாரில்), பாடலிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டில் முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்;

சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' என்பது இரட்டைக் கிளவி. தூய தங்கம் என்றும் பொருள் கொள்ளும். ) 

சொக்கு = தூய்மை; சொக்கம் = தூய்மை சொள்> சொகு> சொக்கம்; சொக்க வெள்ளி = தூய வெள்ளி. 

சொக்கத் தாண்டவம் = தூய நட்டம்; மதுரைச் சொக்கன் பொன்னானவன்; அதுதான் அவன் நிறம்; 

சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான் என்று பொருள்; 

சொக்கம்> சொர்க்கம் = 'பொன்னுலகு' எனும் கற்பித மேலுலகு; இங்கும் வடமொழிப் பலுக்கு வருவதால் குழம்புகிறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் குறைத்துப் புழங்கிய நாட்டில் சொக்கம் என்ற சொல் எழவே எழாது. பொன்னுலகு எனும் கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதமே.

சொக்கம்> சொகம்> சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் ”சோர்விலாமல் முகத்தில் ஒளிவிடுகிறாற் போல் இருக்கீங்களா?” என்று அருத்தம். 

health இற்கு இப்போது நாம் அச் சொல்லையே புழங்குகிறோம். (இதிலும் சிலர் சொக்கம், சொகம், சுகம் என்று சொல்லாமல் சௌக்கியம் என்று சங்கதமுறையில் ஒலிப்பார். நானும் சிலபோது அறியாமலும், சிலபோது அறிந்தும் சௌக்கியம் பயின்றுள்ளேன். அவ்வளவு சங்கதத் திரிவுகளை நம் முன்னோரும், உறவினரும், ஆசிரியரும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். மிகவும் சரவல் பட்டே இந்தத் தப்பான பழக்கங்களில் இருந்து வெளிவந்து சொக்கம், சொகம், சுகம் போன்றவற்றைப் பயில வேண்டியுள்ளது.)  

மேலையன் ”கொழிதா இருக்கீங்களா?” என்கிறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்; 

சொக்கத்தில் விளைந்த இன்னொரு சொல் சொகுசு = நேர்த்தி, இதம், சிறப்பு. சொகுசுப் பேருந்து என்கிறோமே? சொகுசையும்  வடசொல் என்று சிலர் தவறாய்க் கொள்வர்.

Sundaland என்பதை சொலிதை நிலம் என்று சொல்வேன்.



Thursday, January 08, 2026

Rajasekar Pandurangan என்பார் முகநூலில் தொடங்கிய உரையாடல்

 "தமிழ் தேசியம்" என்ற சொல்லில் உள்ள நேரடி வடமொழி சொல்லான தேசியம் என்பதை ஏற்போர். தமிழின் திசை சொல்லான திராவிடத்தை எதிர்க்கும் மனநிலை ஏன்? - என்று முதலிலும், 

“இவர்கள் கூறும் தமிழ் தேசியத்தில் "தேசியம்", (தேஷ் தேசி சுவதேசி) என்று வடமொழியில் உள்ளதை குறிப்பிட்டால் தமிழில் இருந்து தான் வடமொழி உருவாகியது என்று ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றை முன்வைப்பர்கள்” - என்ற உங்கள் கட்டுரைக்கு நடுவிலும் வரும் 2 கூற்றுக்களைப் பார்த்தேன்.

சற்று அதிர்ந்து போனேன். உங்கள் முழுக் கட்டுரையையும் என்னால் மறுத்துக் கிடுக்க (critisize) முடியும் என்றாலும், நேரமின்மையால் அதைத் தவிர்க்கிறேன். பொறுமையாகச் சற்று ஆய்ந்திருந்தால் அடிப்படை உண்மை உங்களுக்கு விளங்கியிருக்கும். desh என்ற சொல் இந்தியத்   துணைக்கண்டத்தில் மட்டுமே உண்டு. இந்தையிரோப்பியனில் அதற்கு இணையான cognates கிடையாது. கூகுள் செய்தால், கிடைக்கும் விடையை கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்து விடுங்கள். அப்புறம் என் விடை கீழே உள்ளது. காரணமில்லாது, ஒரு காலத்தில் திராவிடம் என்ற கருத்தை ஏற்ற எம் போன்றவர் இப்போது எதிர்க்கவில்லை.இனி எம் விடை.   

-----------------------------      

என் கேள்வி

Are there other Indo-european words corresponding to the word "desh" in Sanskrit?

-----------------------------

அதற்கு கூகுளின் செய் தெள்ளிகை சொல்லும் விடை கீழே.

There are no direct cognates of the Sanskrit word "deśha" (देश), meaning "land, place, or country," in most other branches of the Indo-European language family. 

"Deśha" is an Indo-Aryan term, and while Sanskrit is an ancient Indo-European language, not all of its specific words have direct parallels in the European branches (such as Germanic, Romance, or Slavic languages). 

The term and its derivatives are primarily found in languages of the Indian subcontinent and neighboring Indo-Iranian regions, such as: 

Hindi, Bengali, and other modern Indo-Aryan languages use variations of desh (as seen in names like Bangladesh, "Land of Bengal").

Persian and Avestan, which belong to the Indo-Iranian branch, are close linguistic relatives and share a significant amount of vocabulary and grammatical structure with Sanskrit. 

The concept of a "place" or "land" in other Indo-European languages generally stems from different Proto-Indo-European (PIE) roots. For instance, English "land" comes from a different Germanic root, and Latin terra (leading to Romance language words like tierra or terre) also has a separate origin. 

Linguists use comparative methods to find cognates based on systematic sound changes from a hypothetical common ancestor (PIE), and in this case, no common PIE root for "desh" has been reconstructed across the diverse European and Indo-Aryan branches. 

-------------------------------

இனி என் விடை கீழே தேசம் / தேசியம் என்பது தமிழில் எப்படி உருவானது என்று மட்டும் சொல்கிறேன். இதை https://valavu.blogspot.com/2008/04/2.html என்ற இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். இங்கு சிலவற்றை மட்டும் வெட்டி, ஒட்டியுள்ளேன் 

---------------------------------    

திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச்சொல் துல்>தில் என்பதே. 

தில்> திர்> திரு> திருக்கு, 

தில்> திர்> திரு> திரும்பு, 

தில்> திர்> திரு> திருத்து 

எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். அதே போல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசிவந்த ஒருவன் மேற்கொண்டு அதே படி போக முடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா? திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.

திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச்சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லையும்  உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருள்களும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பது கூடத் தில் எனும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு. 

திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.

ஆகத் தேசம் என்ற சொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.

தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.

ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய்  திசை அறியப்படும். திசையன்விளை =  தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.

அன்புடன்,
இராம,கி.