Saturday, August 14, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 5

இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

இந்த 8 வரிகளுள் வடபுலத்து இனக்குழுக்களின் இடையுள்ள முரணும், வடபுலத்தரசர் ஒருசாரார்க்குச் சார்பாகச் செயற்பட்டதும், இந்தச் செவியுறையிற் குறிப்பாகத் தென்புலத்து அரசனுக்கு உணர்த்தப்பட்டுப் புதுவகை நயன்மை (justice) ஒன்று நிலைநாட்டப் படும். அதன் விளைவாக ஆட்சி நடத்தும் நெறி இங்கு மாறத் தொடங்குகிறது. ஆக, வேத நெறித் தாக்கம் என்பது உதியன் சேரல் காலத்தில் தமிழகத்தில் நன்றாகவே நுழைந்து விட்டது.

இவ்வரிகளைப் புரிவதற்கு இந்தியத் துணைக்கண்டத்துள் நடந்த பல்வேறு மாந்தப் பரவல்களை நினைவுகொள்ள வேண்டும். [கொஞ்சம் பற்றற்ற நிலையில் இச்செய்திகளை அணுகுங்கள். நான் இனச் (race) செய்திகளை எழுதவில்லை. இனக்குழுச் (tribal)செய்திகளைச் சொல்லுகிறேன்.]

கிறித்துவுக்கு முன்னாலிருந்த காலங்களில் இந்தியாவிற்குள் குறைந்தது 4 தடவையாவது வெவ்வேறு மாந்தக் கூட்டங்கள் நுழைந்திருக்கலாம் என்று இற்றை ஈன் அறிவியல் (genetic science) கூறுகிறது. [நான் இற்றைப் புரிதலைச் சொல்கிறேன். நாளைக்கு இன்னும் தரவுகள் கிடைக்கும்போது அறிவியல் முடிவுகள் மாறலாம்.]

இற்றைக்கு 55000/60000 ஆண்டுகளுக்கு முன், முதல் மாந்தப் பரவல் நடந்தது என்று சொல்லுவார்கள். ஆப்பிரிக்காவிற் தொடங்கி எத்தியோப்பியா, சோமாலியா வழியாக அரேபிய ஏமனுக்குள் நுழைந்து பின் அங்கிருந்து துபாய் இணைப்பு வழியாக ஈரானுக்குள் நுழைந்து அப்படியே கடற்கரை வழியாக, மகான் (இற்றை கராச்சிக்கு அருகில் உள்ள சிந்துதேசம்), குசராத், மராட்டியம் என்று மேற்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் நுழைந்து பின் தெற்கே கன்னடம், கேரளம், தமிழகம் வரை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து ஆந்திரம், கலிங்கம், வங்காளதேசம் போய், பர்மா, தாய்லந்துக் கடற்கரைகள் வழியாகத் தென்கிழக்கு ஆசியா, பாப்புவா நீயூ கினி, ஆசுத்திரேலியா வரை இந்தப் பரவல் நடந்து முடிவில் அங்குள்ள பழங்குடிகளாயினர். இவர்களை நெய்தலார் (coastal people) என்று சுருக்கமாய் அழைப்பார்கள்.

நெய்தலார் எச்சம் நம்மூரில் உண்டு. நம் பிரான்மலைக் கள்ளரும் இந்த எச்சத்தைச் சேர்ந்தவர் தான். நெய்தலாரை ஆண் குருமியங்களின் (male chromosome) அடிப்படையில் M180 என ஈனியலிற் சொல்வார். இந்தியாவைப் பொறுத்தவரை நெய்தலாரே முதல்மாந்தக் கூட்டத்தார். M130 என்பது இந்தியாவின் தென் கிழக்குப் பகுதி மாநிலங்களில் (கன்னடம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்கம் போன்ற மாநிலங்களில்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் சற்று தூக்கலாய் உள்ளது. [உடனே மொழிக்குடும்பம் வேறு, இனம் என்பது வேறு என்று அச்சடிப்பு முழக்கம் செய்யச் சிலர் முன்வரலாம். ஆனால் விளக்கிச் சொல்ல வேறுவகை எனக்குத் தெரியவில்லை.] M130 என்போர் இந்தியரிடையே கிட்டத்தட்ட 10/15% இருக்கின்றனர். அவர் பெரும்பாலும் திராவிடமொழி பேசுபவராய், பழங்குடிகளாய் இருக்கின்றனர்.

இரண்டாம் பரவல் கிட்டத்தட்ட 30000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவர்கள் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்கே இருக்கும் கணவாய்கள் வழியாக நுழைந்து நம்மூர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் விரவியவர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M20 என்று சொல்லுவார். M20 என்பது இந்தியாவெங்கணும் விரவிக்கிடக்கும் ஒரு ஈனாகும். இதை இந்திய ஈன் என ஆணித்தரமாகச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலோருக்கு இந்த ஈன் இருக்கிறது. இது இல்லாத இந்தியர் மிகவும் அரிதானவர்.

மூன்றாவது பரவல் கிட்டத்தட்ட 9000/10000 ஆண்டுகளுக்கு முன் முற்பட்டது. இவரும் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்குக் கணவாய்கள் வழியாகத் தான் நுழைந்தனர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M17 என்று சொல்வார். M17 என்பது இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களிலும், நடு மாநிலங்களிலும், மற்ற பகுதிகளில் உயர்சாதி மக்களிடமும் விரவியுள்ளது. M17 என்பது இந்தோ-இரோப்பிய மொழி பேசுகிறவரோடு தொடர்புடையது என்றும் சொல்லவேண்டும்.

நான்காம் பரவல் வரலாற்றுக்காலத்தில் கிட்டத்தட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முன்நடந்தது. இவருக்கும் M17 காரருக்கும் ஈனளவில் வேறுபாடு உள்ளதாய்ச் சொல்லமுடியாது. சில பண்பாட்டு வேறுபாடுகளே தென்படுகின்றன. [நான்காம் பரவல் தொல்லியல், மாந்தவியலின்படி உணரப்பட்டது. ஈனியல் வழி உறுதி செய்யப் பட்டதில்லை. மற்ற 3 பரவல்களும் ஈனியலால் உறுதி செய்யப் பட்டவை. நான்காம் பரவலுக்கும் மூன்றாம் பரவலுக்கும் வேறுபாடு காண்பது கடினம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.] முன்றாம், நான்காம் பரவலாளர் இந்தியரில் 8/10% இருக்கின்றனர்.

இந்த நால்வேறு கூட்டத்தார் தம்முள் கலந்து உருவாகிய இனமக்களே இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மக்களாவர். எவ்வளவோ கலந்து போன பின், ”இவர்தான் அவர்” என்று இந்தியருள் அடையாளங் காணுவது மிகவும் சரவல் எனினும் பாழாய்ப்போன சாதி முறைத் திருமணங்களால் கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு சில வேறுபாட்டுத் தன்மை அறியக் கூடிய அளவில் வேரூன்றி விட்டது. அதனால் ”இந்த ஈன்களின் பரவல் நாடெங்கணும் எப்படி விரவியுள்ளது?” என்று ஓரளவிற்குச் சொல்ல முடிகிறது.

நாலாம் கூட்டத்தார் இந்தியாவிற்குள் நுழைந்தபோது ஏற்கனவே நுண்கல் நாகரிகத்திலும் (neolithic culture), ஓரளவு பெருங்கற்படை நாகரிகத்திலும் (megalithic culture) இருந்த (M130, M20 ஆகிய இரண்டும் கலந்து கிடந்த) பழங்குடிகள் முல்லை, குறிஞ்சி நிலங்களிலும், மாட மாளிகைகள் கட்டி நிலைத்த நாகரிகத்தில் (M130, M20 நிறையவும் M17 கொஞ்சமுமாய்க் கலந்து கிடந்த) அன்றைய மேற்தட்டு மக்களும் (இவர்தான் மூன்றாம் கூட்டத்தை இன்றைக்குப் பகராளுமை - representation - செய்பவர்) இருந்தனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நாலாம் கூட்டத்தார் நுழைந்தபோது, மூன்றாம் கூட்டத்தார் இயற்கையூறுகள் காரணமாகத் தம் வாழ்விடங்களை இழந்து இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மருத, நெய்தல் நிலங்களுக்கு நகர்ந்து விட்டார். சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனது. மூன்றாம் கூட்டத்தார் மற்றவிரு கூட்டத்தாருடன் பெரும்பாலும் இணங்கிப் போய்க் கலந்துவிட்டனர்.

அப்படி மூன்றாம் கூட்டத்தார் கலந்ததின் பின் இந்தியாவில் நுழைந்த நாலாம் கூட்டத்தார் முல்லை நாகரிகத்திலேயே ஆழ்ந்திருந்தார். அவரின் வாழிடங்கள் மருதத்திற்கும் முல்லைக்கும் இடைப்பட்டதாய் இருந்ததாகவே, வேத நூல்கள் சொல்லுகின்றன. நகரம், அரண்மனை, பெரும் மாளிகைகள் என்று அவர் மேற்கட்டுமானம் கட்டுவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகவேண்டிய நிலையில் நாலாம் கூட்டத்தாரின் நகர்ச்சி இந்தியாவின் வடமேற்கிருந்து கங்கைச் சமவெளியை நோக்கி நடைபெற்றது. [அதன் வெளிப்பாடு வேதம், ஆரண்யம், ப்ராமணம், உபநிடதம், புராணம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கொண்டே போகும். இருக்கு வேதத்திற்கு அப்புறம் அவருக்கு எல்லாமே கங்கைச் சமவெளி நோக்கிய பயணங்கள் தான். அப்போது, ஆற்றுக்கு நெருங்கிய இடங்களைவிட்டால், கங்கைச் சமவெளி பெரிதும் காடாகவே விந்தியமலை வரைக்கும் இருந்தது. இன்னுஞ் சொன்னால் அன்றைக்கு ஆந்திரமும், சத்திசுகரும், பீகாரும், சார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும், உத்திரப்பிரதேசமும் கூடப் பெரும்பாலும் காடுகள் என்பதை உணரவேண்டும்.

நாலாம் கூட்டம் எனப்படும் ஆரியரும், அதற்கு முன்னிருந்த மூன்று கூட்டத்தாரும் தம்முள் ஓரளவு கலந்தார். ஆனால் சாதிப் பாகுபாடு ஏற்பட்டுப் போன காரணத்தால் இக்கலப்பு முழுமையடையவில்லை. அதனால் மேல் தட்டுக் கூட்டத்தில் நாலாம் கரையினரின் பண்புகள் கூடவும், கீழ்த்தட்டுக் கூட்டத்திலும், பழங்குடிகளிடமும் மற்று 3 கரையினரின் பண்புகள் கூடவும் கலந்து விரவின. புறனடைகள் (exceptions) இரண்டு தட்டுக்களிலும் உண்டு. வடபுலத்துப் பழக்கமாய் 4 வருணம் என்ற நிலைப்பாடு உருவாகி அது கொஞ்சங் கொஞ்சமாய் இந்தியாவெங்கணும் பரவத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாய்க் கீழ்த்தட்டு மக்களின் மொழிகள் மேற்தட்டு மக்களின் மொழியான இந்தோ-யிரோப்பியன் மொழிக்கு முன் சரியத் தொடங்கின. மொழிக்குடும்பங்கள் கலக்கத் தொடங்கின. முரண்பாடுகளும் பெருத்து வந்தன. வேதமொழியும் பழந்தமிழும் கலந்து பாகதங்களும், மற்ற திராவிட மொழிகளும் உருவாகின. வேதமொழி, பழந்தமிழ் ஆகிய இரண்டும் இரண்டு எல்லைகளாக, இரண்டுக்கும் நடுவில் பல மொழிகளின் பரம்பல் ஏற்பட்டது. தமிழுக்கு நெருங்கிய மொழிகள் திராவிட மொழிகளாயின. வேதமொழிக்கு நெருங்கிய மொழிகள் பாகதங்களாகின. சங்கதம் என்பது பாகதங்களுக்கு இடையே ஒரு கலவை மொழியாக, செந்தரப் படுத்தப்பட்ட படிப்போர் மொழியாக உருவாகியது. [சங்கதத்திலிருந்து பாகதம் உருவானது என்ற கொள்கையை நான் ஏற்பவனில்லை. எப்படி வழக்குத் தமிழில் இருந்து செந்தமிழ் உருவானதோ, அதுபோலச் செங்கதம் என்பது ஒரு புலவராக்கம். அதற்குமேல் அது ‘சுயம்பு, சிவசூத்திரம், உடுக்கையொலிகள், கிளியொலிகள் blah blah.....’ என்ற தொன்மத்தை நான் ஏற்பதில்லை.]

நூலறிந்த பெருமானரே முதலிற் சங்கதத்தை உருவாக்கினர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் அறுவகைத் தொழில்களைச் செய்யும் வருணத்தோராய் அவர் அறியப்பட்டனர். முதல் வருணத்துப் பெருமானருள் முனிவர் என்ற கூட்டம் ஆரியக் குமுக நலத்திற்கு நல்லது என்று சொல்லி அவ்வப்பொழுது வேள்விகள் நடத்தி வந்தது. அந்த வேள்விகளில் விலங்குகளைப் பலி கொடுப்பது பெருத்து வந்தது. வேள்விச் செய்முறைகளின் அளவு இருக்க இருக்கப் பெரிதானது. அரசன் செய்யும் ஒவ்வொரு வேள்விக்கும் கொட்டிக் கொடுக்கவேண்டிய பொருட்கள் மலையாய்ப் பெருகின. முல்லைநிலத்து நாகரிகத்தில் இருந்து வந்த கீழ்த்தட்டு மக்கள் என்னதென்று செய்யத் தெரியாமல் வேள்விகளைப் பெரிய இடையூறாகக் கருதத் தொடங்கினர். ஒரு மாடு, இரண்டு மாடு பலிகொடுப்பதைப் “போய்த் தொலையட்டும்” என்று பலரும் அமைந்து போகலாம். ஆனால் அது 10, 100 என்று விரிவடையும் போது, பல்வேறு விலங்குகள் என்று அகலும் போது, ஆகுதியாகும் வெண்ணெய், கூலங்கள் இன்ன பிறவும் கூடும் பொழுது, ஊர்கள், ஊர்களையொட்டிய காடுகளில் இது அதிர்ச்சியையும், கலகத்தையும் கொண்டுவரத்தான் செய்யும்.

[இப்பொழுது சத்திசுகர், ஒரிசா, சார்க்கண்ட், வங்கம் போன்ற பகுதிகளில் பழங்குடியினருக்கும் வெளியிலிருந்து வரும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் தகறாறுகள், உள்நாட்டு வளங்கள் அந்த அந்த மக்களுக்குப் பயன்படாது வெளியாருக்குப் பயன்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல்களை அன்றைய நாகரிக வழக்கங்களோடு சேர்த்துவைத்து எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதன் பரிமானம் புரியும்.]

புதுக் குடியேற்றத்தாருக்கும், பழங்குடியினருக்கும் இடையே முரண் ஏற்பட்டால் புதுக்குடியேற்றத்தாரின் வேள்விகள் பழங்குடியினரால் சிதைக்கப்படத்தான் செய்யும். அதன் விளைவால் பழங்குடியினர் அரக்கரென்று சொல்லப்படுவார்கள். பழங்குடித் தலைவர் அசுரர் தலைவர் எனப்படுவார். நான்காவது கூட்டத்தார் ஆரியர்/தேவர் என்று ஆவார். ஆரியர்கள்/தேவர்கள் செய்வதெல்லாம் அரசருக்குச் சரியாகவே தெரியும். நிலைமை அப்படி இருந்தது. தங்கள் வேள்விகள் தடுக்கப் படுவதால் தம் இனக் கூட்டத்துத் தலைவனை, தம் அரசனை, இந்த முனிவர்கள் வேண்டத்தான் செய்வார்கள். முனிவருக்கு இணங்கி அரசர்கள், தாங்களோ, தங்கள் படைத்தலைவரை அனுப்பியோ, பழங்குடியினருக்கு எதிராகப் போரிட வைத்து முனிவர்களின் வேள்விகளைக் காப்பாற்றுவார்கள். வேறு என்னத்தை வடபுலத்து அரசர் செய்திருக்க முடியும்? [கி.மு.1500-இல் இருந்து கி.மு.800 வரைக்குங் கூட it was always ”they and us” between the Aryas and the indigeneous ethnic locals in the Bharatvarsha.]

இத்தகைய வேறுபாடு தெற்கே கிடையாது. ஏனென்றால் கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் கிடையாது “அவர்களும் நாங்களும்” என்ற சிக்கல் கிடையாது. வெவ்வேறு மாந்தப் பரவல்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட நீண்ட காலக் கலப்பில் ஒருவருக்குள் இன்னொருவராய் ஆகிப் போனார்கள். முல்லை நிலத்துப் பழங்குடிகளுக்கும், மருத நிலத்து மக்களுக்கும் ஒரே வேந்தன் தான். அதன் விளைவால் ஒருவரைக் கொன்று, அவருடை பசுக்களைக் கவர்ந்து இன்னொருவர் வேள்வியில் ஆகுதியாக்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை. வெட்சிப் போரும், கரந்தைப் போரும் தென்னகக் குடிமக்களுக்குள் இருந்தன தான். ஆனால் அதற்கான வழிமுறைகளும், அதை ஒழுங்கு செய்யும் நெறிமுறைகளும் கூட வெட்சியார், கரந்தையார் இருபாலருக்கும் தெரிந்தன. இந்தப் போர்களைக் கையாளும் முறை தெரிந்திருந்த காரணத்தால் இருவேறு இனக்கூட்டத்து வெறுப்புச் சிக்கல்களை கி.மு.1000/800 களுக்கு அருகில் தென்புலத்து வேந்தர் பார்த்ததில்லை. There was law and order. There was no day-light robbery possible. There were ways and means to solve the issues. வடபுலத்து அரசருக்கோ establishing law and order என்பது முகன்மையான பணியாய் இருந்தது. Wherever new immigration takes place by forcible entry, law and order becomes a major issue.

இப்படி ஒரு காட்சியைத்தான் இராமாயணத்தில் விசுவாமித்திரன் வழியே நாம் அறிகிறோம். அவன் செய்ய நினைக்கும் வேள்வியைத் தாடகையும், அவள் மக்களும் செய்யவிடாது தடுக்கிறார்கள். தாடகை பக்கத்திலிருந்து எத்தனை விலங்குகள், உயிரினங்கள் வேள்விக்காகப் பிடித்து இழுத்துவரப்பட்டு முனிவன் ஆசிரமத்தில் அடைக்கப் பட்டன, கூலங்களைக் கொண்டுதரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் என்ற செய்தியை இராமயணம் நமக்குத் தெரிவிக்கவில்லை. தாங்கள் பாதிக்கப் படாமல், தாடகையும் அவள் மக்களும் விசுவாமித்திரன் வேள்வியைத் தடுக்கவேண்டிய காரணம் என்ன? ”அவர்கள் வேள்விக்கு ஊறுசெய்தார்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும்” என்று மட்டுமே ஆரியர் பார்வையில் இருந்து செய்தி தெரிவிக்கப் படுகிறது.

தருவணத்துள் யானியற்றும் தகைவேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் செய்யும் அடைகாம வெகுளியெனும்
நிருதர் இடைவிலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி

என்று (கம்பனில் சொல்லுவது போலத்) தயரதனிடம் கேட்டுப் பெற்று இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரன் கூட்டிவருகிறான். காட்டில் தாடகை வதைப் படலம் நடைபெறுகிறது. அதன் பின்

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்

என்று வேள்விப் படலம் சொல்லுகிறது. தாடகையின் மக்கள் மாரீசனும், சுபாகுவும் கொல்லப் படுகிறார்கள். விசுவாமித்திரன் வேள்வி காக்கப் படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ”மத்திய தேசத்தில், ஆர்யா வர்த்தத்தில்” திரும்பத் திரும்ப நடக்குமானால், கண்ணினைக் காக்கும் இமை போல வேள்விகள் காக்கப் படுமானால், காடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், அடம் பண்ணிக் கொண்டிருந்த தாடகை வழியினர் அடங்கிப் போக மாட்டார்களா, என்ன? அப்புறம் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களின் ஆசிரமங்களிற் கிடக்கும் பெண் புள்ளிமான்கள் அங்குமிங்கும் அலைய வேண்டிய தேவையென்ன? பழங்குடிகள் எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இமையம், பொதியம் போல் எதற்கும் அசையாத போர்த்தலைவர்கள் வழிநடத்தும் போர்ப்படைகள் வேள்வி நடக்கும் பர்ணசாலையைச் சுற்றி இருக்கும் போது எந்தப் பழங்குடிகள் உள்நுழைவர்? மான்கள் நன்றாகவே அமைதியாகத் தூங்கும். முத்தீ நன்றாகவே ஓம்பப்பட்டு வேள்விகள் இனிதே முடிவடையும்.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்லவேண்டும். முனிவர்கள் பெரும்பாலும் எந்த அரசனுக்கும் அடிபணியாத காட்டு இடைவெளிகளிலேயே இருந்திருக்கிறார்கள். They were on no-man's land like the pioneers in the American wild west. Just like the american Indians and European immigrants got into a conflict, here also conflict arose.

இத்தனை பின்புலத்திற்குப் பின் மேலேயுள்ள கடைசி 8 வரிகளுக்கு வருவோம். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் தன் நாட்டை விட்டு ஆளில்லா நிலவெளிக்கு (no-man's land) வந்திருக்கிறான். யாரோ ஒரு கூட்டத்தாரைக் காப்பாற்றவேண்டும். அப்படிக் காப்பாற்றும் போது தன் நாட்டில் இல்லாத அதே பொழுது காடுகளில் வதியும் (தன் குடிமக்களைப் போன்ற இன்னொரு) இனக்குழுவோடு போரிடும் நிலைக்கு வந்து சேருகிறான். அவன் மனம் தடுமாறுகிறது. தான் செய்வது சரியா? ”யாரோவொருவருக்கு வாக்குக் கொடுத்ததற்காக, ஒரு பாவமும் செய்யாத வேற்று நாட்டுப் பழங்குடி மக்களோடு போருக்குப் போகிறோமே?” என்று கலங்குகிறான். ”இது சரிதான்” என்று வடபுலத்து நிகழ்வை எடுத்துக் காட்டி நயன்மை சொல்லப் பார்க்கிறார் முரஞ்சியூர் முடிநாகனார். It appears to be a perverted justification. But still we don't know the truth.

"என்ன நடந்தாலும் சரி கறந்த பால் புளித்தாலும், பகலே இருளாய் மாறிபோனாலும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் நால்வேத நெறி கூட மாறி போனாலும்,உன்னைச் சுற்றிய வீரர் மனந்திரியாது இமையமலை, பொதியமலை மாதிரி அசையாது உயர்ந்து விளங்கியிருக்கும் நிலையைப் பார்! அத்தகைய வரிசையில் ”எப்படி இளமான்களும் துயிலும் வகையில் ஆசிரம வேள்விகளைக் காக்கும் தொழிலை வடபுலத்தரசர் செய்கிறாரோ?” அது போல எம் அரசே! நடுக்கமிலாது நிற்பாயாக! அரச ஒழுங்கைக் காப்பாற்றுவாயாக!”

இந்த ஐந்து பகுதிகளில் பாட்டின் பொருளைச் சொல்லிவிட்டேன். வடநாட்டுத் தாக்கம் கூடிவரும் பருவத்தில் உதியஞ் சேரல் ஆண்டிருக்கிறான். இனக்குழுக்களின் மோதல் தெற்கிலும் தோன்றத் தொடங்கிவிட்டது. Southern Royalty was also getting into brahminised practices.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 13, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 4

அடுத்துள்ள 4 வரிகள் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

மேலுள்ளதை ஆழ்ந்துபடித்தால் பாண்டவ, கௌரவ பாரதப்போரின் 2 பக்கப் படைக்கும் சேரன் உணவளித்துப் புரந்ததாய் உரைகாரர் சொல்வது நம்ப முடியாததென்று புலப்படும். ஏனெனில் இவ்வரிகள், “ஐவரோடு சினமுற்று தும்பைப் போரில் பொருது களத்து ஒழிந்த நூற்றுவருக்கு பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தது” பற்றிச் சொல்லுகின்றன. [அலங்குளைப் புரவி ஐவர் என்ற கூட்டுச்சொல் இங்கு கருத்தாவைக் குறிக்கவில்லை. ”பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மர்” என்பது தான் இங்கு கருத்தா. ”பொருதுகளத்தில் ஒழிதல்” என்பது கருமம் / வினை. அதைப் பின்பற்றும் கருமம்/வினை ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்” என்றாகும். மீண்டும் பாடல் வரிகளை ஆழ்ந்து படியுங்கள்.]

வரிகளைப் படித்தவுடனேயே ”அறந் தவறிப் பாண்டவர் நிலத்தைப் பற்றிக் கொண்ட கௌரவருக்கா, பெண்ணை இகழ்ந்து, பழி செய்த கௌரவருக்கா, சேரர் பெருஞ்சோற்று மிகுபதம். கொடுத்தார்?” என்ற நயன்மைக் கேள்வி நமக்குள் எழும். ”18 நாள் பாரதப் போர் உண்மையில் நடந்ததா?” என்ற கேள்வி பின்புறம் நிற்க, அப்போர் மோரியருக்கும் முன்பு நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்ற கால நிலையை வைத்துப் பார்த்தால், ”வானவர் அன்பன்” என மோரியரைப் பின்பற்றித் தன்னை அழைத்துக்கொண்ட சேரலாதன் எப்படிப் பாரதப் போர் காலத்திலிருந்தான்? - என்ற கால முரணும் நமக்குள் கேள்வியாய் எழும். இக் காலமுரணைத் தவிர்க்க வேண்டுமெனில், ”ஒருவேளை கௌரவர் பாண்டவர் என்று இங்கே அடையாளப் படுத்தியதே தவறோ? இது வேறு வரலாற்றுச் செய்தியோ?” என்ற எண்ணமும் எழும். மொத்தத்தில் ஏரணப்படி (logicaly) பார்த்தால் இங்கே மாபாரதக் கதையைத் துணைக்கு அழைத்ததே தவறு என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.

சண்டைக்கு இழுத்து வஞ்சிப் போரிட்டது யாரோ ஒரு ஐந்துபேர். அவருக்கு எதிராய்த் தும்பைப் போரிட்ட 100 பேரும் இப்போரில் இறந்து போனார். தொன்மத்தில் வேண்டுமெனில் நூற்றுவர் என்பார் கௌரவராகலாம்; வரலாற்றில் நூற்றுவர் வேறொருவராய் இருக்க முடியாதா? அவர் யார்? நூற்றுவர் என்பது ஏன் ஒரு சொல் விளையாட்டாய் இருக்கக் கூடாது? ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருளென்ன? - என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி ஒரு விளக்கம் தும்பைப் போரியற்றிய, சேரரையொட்டிய ஓர் அரசமரபினர் பற்றிச் சொல்ல முடியும். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்கலாம்.

பல்வேறு காரணங்களால் செங்குட்டுவனின் கடைசிக் காலம் கி.மு.75க்கு அருகில் என்றே முடிவு கொள்ளவேண்டியுள்ளது. கனகவிசயர் எனும் கன்வர் மேலும், சுங்கர் மேலும், செங்குட்டுவன் படையெடுத்தது ஏறத்தாழ கி.மு.80 ஆக இருக்கலாம். வேறெந்தக் காலமும் இப் படையெடுப்பிற்குப் பொருந்த வில்லை. ”இளங்கோ பொய் சொல்லவில்லை, வரலாற்றுச் செய்தி மட்டுமே சொன்னார்” என்று கொண்டால், சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் கி.மு.80க்கு அருகில் தான். [விளக்கம் வேண்டுவோர் ”சிலம்பின் காலம்” என்ற என் தொடரைப் படிக்க வேண்டுகிறேன்.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

உளுத்துப் போன கயவாகுக் கதையை வைத்துச் சிலப்பதிகாரத்தைக் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு இழுக்கும்போக்கை அங்கு கேள்விக்கு உள்ளாக்குவேன்.]

பதிற்றுப்பத்தின் பதிகச் செய்திகளால் செங்குட்டுவன் அரசு கட்டிலில் வீற்றிருந்தது 55 ஆண்டுகள் என்றாகிறது. அப்படியானால் அவன் பட்டத்திற்கு வந்தது கி.மு.130 என்றாகும். குட்டுவனுக்கு முன் குடக்கோச் சேரனாய் இருந்தது இவன் தந்தை நெடுஞ்சேரலாதனே (மற்ற உறவினரெல்லாம் சேர நாட்டின் பகுதிகளை ஆளுநர்போல் ஆண்டிருக்கிறார். மைய அரசை ஆண்டது நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனுமே.) நெடுஞ் சேரலாதன் ஆண்டது 58 ஆண்டுகள். நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் செங்குட்டுவனுக்கும் இடையே அரசன் - இளவரசன் என்ற மேற்படுகை ஆண்டுகள் (overlap years) 20 என்று கொண்டால் நெடுஞ்சேரலாதன் குடக்கோ ஆனது கிட்டத்தட்ட கி.மு.168 என்று ஆகும். இனி அவனுக்கும் அவன் தந்தை உதியன் சேரலுக்கும் இடைப்பட்ட மேற்படுகை ஆண்டுகள் 20 என்று கொண்டு, உதியஞ் சேரல் தனியே ஆட்சி செலுத்தியது 25 ஆண்டுகள் (ஒரு நிரவல் ஆட்சிக்காலம் - average ruling period) என்றுகொண்டால் கிட்டத்தட்ட உதியஞ் சேரல் பட்டத்திற்கு வந்தது கி.மு.193 என்றாகும். அதாவது பெரும்பாலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதியஞ் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாம் கொள்வோம். [இக் கருது கோள் 5, 10 ஆண்டுகள் இப்பக்கம், அப்பக்கம் போகலாம். இப்போதைக்கு இத் துல்லியம் போதும்.]

அக்காலத்தில் கி.மு..185 ல், மகதத்தில் ஆட்சிபுரிந்தவன் மோரியரின் கடைசி அரசன் பெருக தத்தன் (=ப்ருகத்ரதன்) ஆவான். இவனே, இவன் அமைச்சன் சுங்கன் புஷ்ய மித்திரனால் கொலை செய்யப் படுகிறான். [கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு இம் மகதநாட்டுப் பெருகதத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தவே பாடப்பட்டிருக்கலாம். உரையாசிரியர் இவனை வெறுமே ஆரிய அரசன் என்று சொல்லி வந்துள்ளார்.] சுங்கன் இப்படி அரண்மனைக் கொலைசெய்து அரசுகட்டில் ஏறியதை ஏற்காத சாதவா கன்னர் (இவரே மோரியரின் தண்ட நாயகராய், தக்கணப் பாதையின் வாயில்காப்போராய், படித்தானத்தில் - பயித்தான் paithan - அரசு வீற்றிருந்தவர்) சுங்கரை எதிர்த்துப் போரிட்டு வந்தார். சுங்கருக்கும் சாதவா கன்னருக்கும் இடையே இருந்த போர் ஒரு வஞ்சி - தும்பைப் போர் தான். சுங்கர் செய்தது வஞ்சிப் போர்; சாதவா கன்னர் செய்தது தும்பைப் போர்.

சாதவா கன்னரே நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப் படுபவர். சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்ன = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், ”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்ல முடியும். சிலம்பும் அப்படியே மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்கல்/நூறல் எனும் பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைச் சாத்திட்டான்" என இற்றைத் தமிழ் வழக்கிலும் சொல்கிறோம் அல்லவா?

அச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்கல் எனும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான் [வடபால் மொழிகளில் பழகும் சொல்]. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (= சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். [ஆனாலும் சொல் விளையாட்டில் நூற்றுவர் என்பதை 100 பேர் = ஈரைம்பதின்மர் என்று இடக்கரடக்கலாய்க் கூறமுடியும்.] இன்னும் சிலர் சாதவா கன்னரெனப் படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார். அப்படிச் சொல்பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சரியான சொற்திரிவு சதம்> சதவர்> சாதவர்> சாதவா= நூற்றுவர் என்றேயாகும்.

கன்னர் என்பது கர்ணி என்றும் திரியும். இங்கே ”காது, கன்னக் குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான். பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல் ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் (சாரல் பூசியவர் சாரலர்>சேரலர், கோழி = பொன்னிறம்-மஞ்சள்/குங்குமம் பூசியவர் கோழியர்>சோழியர், பாண்டில் பூசியவர் பாண்டியர்) சொல்வது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 என்று சொல்வார். கன்னரின் முதலரசன் சீமுகன். இவரின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. சாதகர்ணி I இற்கு முன் தும்பைப் போரில் தோற்று, பலர் இறந்திருக்கலாம்.

சிலம்பைப் படித்தால், சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் நல்ல உறவு நெடுநாட் பட்டு இருந்தது புரிகிறது. 2, 3 தலைமுறைகளாய் உதியன் சேரல் காலத்திருந்தே இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். ”தம் நண்பருக்கு ஆனது தமக்கானது” எனக் கன்னரின் தொடக்கத் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்திருக்கலாம். அத் தும்பைப்போரில் இறந்தவர்க்காகச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். இது வேறெங்கும் பதிவு செய்யப்படாத வரலாற்றுச் செய்தியாய் ஏன் இருக்கக் கூடாது?

இனிப் பெருஞ்சோற்று மிகுபதம் என்பதற்கு வருவோம். பொதுவாகத் தமிழர் வாழ்வில் முன்னோர் வழிபாடு என்றுமுண்டு. ( மற்ற திராவிடர் வாழ்விலும் இருந்திருக்கலாம்.) எடுத்துக் காட்டாக இன்றைக்கும் தென்பாண்டி நாட்டில் சிவகங்கைச் சீமையில் வீட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் [ஒரு திருமணம் என வையுங்களேன்.] தம் முன்னோரை நினைந்து அவர் ஆசி வேண்டிக் குறிப்பிட்ட விழவிற்கு சில நாட்கள் முன் ”படைப்பு” என்ற ஒன்றைச் செய்வார்கள். இது முன்னோர் வழிபாடு. முன்னவர் ஆணெனில் வீட்டில் அவர் நினைப்பில் வைத்திருக்கும் கோடிவேட்டியையும், துண்டையும் நீர்நிலையில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பங்காளிகள் எல்லாம் அதைக் கொண்டு வந்து உலர்த்திப் பின் மடித்து வேட்டியை படையல் செய்யும் இடத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு துண்டை தலைப்பாகைக் கட்டுபோல் அழகுற ஆக்கி, கூடவே உருத்திராக்க மாலை அணிவித்து அந்த முன்னாள் ஆவி அங்கு குடிவந்தது போலவே செய்வார். இதேபோல இறந்து போன முன்னவர் பெண் (பாட்டி என்று கொள்ளுங்கள்) எனில் கோடிச்சேலையை நீரில் அமிழ்த்திக் கசக்கிப்பிழிந்து பின் உலர்த்தி அவரைப்போல் உருவகம் செய்து தாலி அணிவித்து, முன்னாற் பாட்டி அங்கு எழுந்தருளுவது போலவே செய்து வைப்பார். தாத்தனுக்கோ, பாட்டிக்கோ வேண்டப்பட்ட உணவு வகைகளைப் பண்ணி கூடவே படையற் பண்ணிகாரங்களைச் செய்து முன்னோர் ஆவிக்குப் படையலிட்டு பின்னாற் கூடியிருக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் பெருஞ்சோறு படைப்பார். படைப்புச் சோற்றைத் தான் பெருஞ்சோறு என்பார்.

முன்னோர் படையல் முறைதான் இன்றுங் கூட சிறுதெய்வக் கோயில்களான ஐயனார் கோயில்களிலும், காளி கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கருப்பர் கோயில்களிலும் திருமேனிகளுக்கு முன் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். பின்னால் இது ஆகம சமயத்திலும் பரவி பெருமான மயம் ஆக்கப்பட்ட கோயில்களிலும் (Brahminised temples) கூட நடைமுறையானது. நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு சிறு தெய்வக் கோயிலும் நம் நாட்டில் பெருமானமயம் ஆகிக் கொண்டே வந்தாலும் பெருமானர் அல்லாத (non-brahmin) பழக்க வழக்கங்கள் ஏதோ வகையிற் தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. ஆக ஒரு இனக்குழு நடவடிக்கை (tribal practice) கொஞ்சங் கொஞ்சமாய் சமய நடவடிக்கை (religious temple practice) ஆனது. ”ப்ரசாத்” என்று வடமொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறாரே அது கூடப் “பெருஞ்சோறு” என்பதன் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பே. கோயில்களின் ஆகம நெறிமுறைகளுக்கும் வேத நெறிக்கும் எத்தொடர்புங் கிடையாது. இந்து மதம் என்பது வேத நெறியும், ஆகம நெறியும், இனக்குழுப் பழக்கங்களும் கலந்த ஒரு கலவை நெறி. வேதநெறித் தாக்கம் அதில் சிறு பகுதி. எல்லாவற்றையும் வேதம் வழி பார்ப்பதைப் போல முட்டாள்தனம் கிடையாது. ஆனாலும் பல ஆராய்ச்சியாளர் அம் முட்டுச்சந்திற்குள் போய்விழுகிறார். அரச பாட்டைக்கு வரமாட்டேம் என்கிறார்.

இது போக, முன்னோர் இறந்த, குறிப்பாகத் தந்தை தாயர் இறந்த நாளின் போது (அதாவது அதே நாள்மீன் ஏற்படும் நாளில்) தமிழர் “பிண்டம் மேய பெருஞ்சோறு கொடுப்பதும்” உண்டு. [தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வஞ்சித் திணை பற்றிய குறிப்பில் 9 ஆம் துறையாக ”பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலை” சொல்லப்பெறும்.] பிண்டம் என்பது எள்ளுச் சோற்றுருண்டை. இதை இக்காலத்தில் பெருமான மயச் சடங்குகள் கூடிப் போன காரணத்தால் ”தர்ப்பணம் செய்தல்” ”திதி கொடுத்தல்” என்று சங்கத வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்வார். அடிப்படை வழக்கம் தமிழர் வழக்கம் தான். இதைச் செய்வதிற் பூசாரிதான் மாறிவிட்டார். பழம் அறிவருக்குப் (பறையருக்குப்/ பண்டாரத்திற்குப்/ குயவருக்குப்) பகரியாய் இப்போது பார்ப்பனர் வந்துவிட்டார். அதனாலேயே இது பார்ப்பனர் வழக்கம் ஆகிவிடாது. [இன்றுங் கூட பெருஞ்சோற்று விருந்தின் முதல் மரியாதை எங்கள் பக்கம் பறையர் எனும் அறிவருக்குத் தான்.]

இன்னொரு விரிவாகத் தென்பாண்டி நாட்டில் பெரும்பகுதியில் ஆடி அமையுவாவின் (ஆடி அமாவாசையின்) போது நீர்நிலைகளுக்கு அடுத்திருந்து (கடல், ஆறு, ஏரி, குளம் இப்படி அது விரியும்) மூன்று தலைமுறை முன்னவர்க்குப் பிண்டம் மேயப் பெருஞ்சோறு கொடுப்பதுண்டு. ஆடிமாதம் தமிழ்நாடெங்கணும், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் இது நடக்கும். குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடி அமையுவாவிற் பிண்டங் கொடுத்துப் பெருஞ்சோறு படைப்பது பெரிதும் உண்டு. பெருஞ்சோறு கொடுப்பதற்கு அரசனாய் இருக்க வேண்டியதில்லை. வசதியிருக்கும் எவனும் இதைச் செய்யலாம். செல்வநிலைக்குத் தகுந்தாற்போல் பெருஞ்சோற்றின் செழுமை மாறும். அவ்வளவு தான்.

“பெருஞ்சோற்று மிகுபதம்” என்பது இரட்டை வழக்கு. பெருஞ்சோறு என்றாலும் மிகுபதம் என்றாலும் ஒரே பொருள் தான்.

இங்கே நூற்றுவர் கன்னரின் முன்னோருக்கு படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத் தான்” என்று ஊருக்கே உணர்த்திச் சேரன் நட்பரசோடு சொந்தம் கொண்டாடுகிறான். அவ்வளவுதான். “சேரனே! நூற்றுவர் கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் செய்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றென்று பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று புலவர் வியக்கிறார்.

நூற்றுவர் கன்னர் மேல் சினந்து படையெடுத்து வஞ்சிப்போர் செய்த அந்த ஐவர் யார் என்று என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் சேரருக்கு வேண்டிய அவந்தியரசராய் இருக்கமுடியாது. பெரும்பாலும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 12, 2010

புறநானூறு 2 ஆம் பாட்டு - 3

முதலில் வருவன கீழுள்ள 8 வரிகள்:
.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

மேலுள்ள வரிகளுள் சாங்கியம், உலகாய்தம்/பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய மெய்யியலாளர் சொல்லும் ஐம்பூதத்து இயற்கை விவரிப்பு அடங்கியுள்ளது. இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும், பொருண்மைகளும் ஐம்பூதத்தால் ஆனவை என்பது நம்பா மதங்களைச் சேர்ந்த மெய்யியலாரின் வாதமாகும். பின் எழுந்த நம்பும் மதங்களான சிவ, விண்ணவ நெறிகளும், ஏன் வேத நெறியும் கூட இந்த ஐம்பூதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே பொழுது ஐம்பூதத்தைப் படைத்தவன் இறைவன் என்று கற்பித்துக் கொண்டு அமைந்து போயின. வேதநெறிக்கு எதிரெழுந்த புத்த, செயின நெறிகளும் கூட ஒருவகையில் இக்கருத்தை உள்வாங்கின. ஆனால் கி.மு.600 க்கு அருகில் எழுந்த சாங்கியம், உலகாய்தம் / பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய நெறிகளே ஐம்பூதத்து இயற்கை பற்றித் தெளிவாகப் பேசின. [ஓர் இடை விலகலாக வேறொன்றைச் சொல்லவேண்டும். ஏதேனும் மெய்யறிவியல் பற்றிச் செய்திகள் சங்க இலக்கியத்தில் வந்தாலே அதை வேதநெறி வழியாகப் பார்ப்பதும், இல்லையெனில் செயினம் என்பதுமான அச்சடிப்பு வேலை நெடுநாட்களாகத் தமிழாய்வில் நடந்துகொண்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்களும், நம்பா மதங்களான சாங்கியம், உலகாய்தம்.பூதவாதம், அற்றுவிகக் கருத்துகளும் அங்கொன்றும் இங்கொன்று மாய் விரவியுள்ளன. அதை ஆய்ந்து முற்காலத் தமிழர் மெய்யியலை அடையாளம் காணத்தான் ஆளில்லை. Not everything is always black and white. There are lots of grades of grey in between. It takes courage to discern them.]

மண்திணிந்த நிலன்; நிலன் ஏந்திய விசும்பு; விசும்பு தடவும் வளி; வளி தலைப்பட்ட தீ; தீ முரணிய நீர் என்று ஒன்றிற்கொன்று தொடர்புறுத்தி ஐம்பூதத்தைச் சொல்வார். [வடநாட்டு உலகாய்தத்தில் ஐம்பூதங்கள் கிடையாது விசும்பு தவிர்த்த 4 பூதங்களே அங்குண்டு. எங்கெலாம் இந்தியக் கொள்கைகளில் 5 பூதங்கள் பேசப்படுமோ, அங்கெலாம் தென்னகத் தாக்கம் இருந்ததாய்ப் பொருள்கொள்ள வேண்டும். ஐம்பூதக்கருத்து ஒரு கதைக் குறியீடாகும் (tell-tale sign). ஐம்பூத இயற்கை சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவது நம்மை வியக்க வைக்கிறது. ஆயினும் ”தமிழரா? - சொந்த மூளையிலாத விவரங் கெட்டவர்: என்ற வாதம் இடைவிடாது இந்திய அறிவுய்திகளால் - அறிவுஜீவிகளால் - வைக்கப் படுகிறது.] ஐம்பூதத்திற்கு இணையாய் முறையே பகைவரைப் பொறுத்தலும், பகை வெல்லுதற்கான ஆலோசனைகளின் அகற்சியும், உடல், மனங்களின் வலிமையும், வலி வழி பெறப்படும் ஒறுத்தலும், கருணையும் சொல்லப்படுகின்றன. ”இவ் ஐம்பெரும் தகைகளை உடையவனே!” என்று சேரன் இப் பகுதியில் புகழப் படுகிறான்.

அடுத்த பகுதியைப் பார்ப்போம். இது

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

என்று அமையும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலத்தில் அவன் நாடு குணகடலில் தொடங்கி குடகடல் வரை விரிந்து பரந்திருந்தது. ”உன் குண கடலில் பிறந்த ஞாயிறு அங்கிருந்து பெயர்ந்து மேற்கே ஏகி வெள்ளிய நுரை பொங்கும் மேற்குக் கடலிற் குளித்துப் புத்துருவம் கொள்ளும் நன்னாட்டின் தலைவனே!” என்று சேரன் மேலும் சிறப்பிக்கப் படுகிறான்.

அதாவது இவன் குறுநிலத் தலைவன் இல்லை. அகண்ட ஆட்சிநிலத்திற்கு உரிய வேந்தன். வடக்கிருந்த எவ்வேந்தனுக்கும் இவன் சளைத்தவன் அல்லன். He can challenge anyone up north. He had two seas on both sides of his kingdom. Now this denotes a few things in terms of trade. நிலத்தொடர்பால் வடக்கே மகதநாட்டின் தக்கணப் பாதையைப் பிடித்து சாவத்தி (இன்றைய அயோத்தி) வரை போய் வடபுலத்து வாணிகத்தை நடத்திக் கொள்ள முடியும். [சிலம்பின் காலம் என்ற என் தொடரை வாசகர் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தக்கணப் பாதை என்பது தமிழக- வடபுல வாணிகத்திற்கு இன்றியமையாதது. இதன் முகன்மையை நாம் இன்னும் உணரவில்லை.] மேற்குக் கடல் வழி எகிப்து, பாபிலோனியா, எலாமைத், பாரசீக நாடுகளின் வாணிகத்திற் கலந்து கொள்ள முடியும். கிழக்குக் கடல் வழி தென்கிழக்காசியா, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிகஞ் செய்ய முடியும். இப்படி மூவேறு திசைகளில் வணிகஞ்செய்ய வாய்ப்புக் கிடைத்த நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் ஒரு சிலவே. அப்படியிருந்தவை வளங் கொழித்துச் சிறந்திருந்தன. சேரனின் வணிகச் சிறப்பைச் சொல்ல இந்த மூன்று வரிகள் சிறப்பானவை அல்லவா?

அடுத்த பகுதி:

வான வரம்பனை நீயோ பெரும

என்று ஓரடியால் அமையும். ”வானவரம்பன், இமையவரம்பன்” என்ற சொற்களுக்கு “வானத்தை எல்லையாகக் கொண்டவன், இமையத்தை எல்லையாகக் கொண்டவன்” என்று பல உரையாசிரியர் பொருள் கொள்வார். உண்மையில் எந்நாளும் வானத்தையோ, இமையத்தையோ சேரர் எல்லையாகக் கொண்டவரில்லை. சேரர் இமையம் வரை பலமுறை படையெடுத்துப் போயிருக்கிறார். பாண்டியர், சோழருங்கூட  அதுபோற் செய்திருக்கிறார். அவையெலாம் வஞ்சிப் போர்களே. வடக்கே பல வேந்தரையும், மன்னரையும் தமிழ்வேந்தர் வெற்றி கொண்டுள்ளார் என்பது மட்டுமே உண்மை. வடக்கே எல்லை கொண்டார் என்பது உண்மையல்ல.

“வானத்தை எல்லையாகக் கொண்டவர், இமையத்தை எல்லையாகக் கொண்டவர்” என்பது போன்ற தேவையற்ற உயர்வு நவிற்சி சொல்லுவது தமிழ் வரலாற்றிற்கு நம்பகமிலாத் தன்மையையே வரவழைக்கும். மயிலை சீனி வேங்கடசாமி இக்கூட்டுச் சொற்களை ஏற்றதில்லை. அவர் “வானவர் அம்பன், இமையவர் அம்பன்” என்று பிரித்து, ”அம்பனை” ”அன்பனின்” பேச்சுவழக்குத் திரிபாகக் கொண்டு 2 சொற்களுமே ”தேவர் அன்பன்” என்று பொருள் படுவதாய்க் கொள்வார். இது அசோகர் காலத்திற்குப் பின் மோரியக் குடிவழியினர் “தேவனாம்ப்ரிய” என்று தங்களை அழைத்துக் கொண்டது போல் நாம் கொள்ளலாமென அவர் சொல்வார். சிங்கள அரசன் மூத்த சிவன் மகனான தீசனும் அசோகரின் பாதிப்பால் தன்னை தேவனாம்பிய தீசன் என்று அழைத்துக்கொள்வான். ”தேவன அம்பியன்” என்பது ”தேவன் அம்பன்” என்பதோடு தொடர்புறுவதை நோக்கலாம். அன்பன்> அம்பன் என்ற சொல்திரிவு தமிழுக்கும் பாகதத்திற்கும் இடைப்பட்டதாகலாம். நாம் அன்பு என்று அழைப்பது பாகதத்தில் அம்பு ஆகலாம். பொதுவாக பேரரசன் அசோகனின் தாக்கம் அவன் காலத்தின் பின் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் இருந்தது போலும். புத்த, செயின, அற்றுவிக மதங்களின் தாக்கமும் தெற்கே பெரிதாக இருந்திருக்க வேண்டும். வேதநெறி போலவே, இம் 3 மதங்களும் மாந்தநிலைக்கு மேற்பட்டு தேவ நிலை இருப்பதாகவும் அந்நிலைக்குப் போவது ஆதன்களின் (atmans) முயற்சியால் முடியுமென்ற கருத்தையும் கொண்டிருந்தன. ”தேவர்களின் அன்பைப் பெற்றவன்” என்று சொல்லிக் கொள்வதில் அக்கால அரசர் பெருமிதங் கொண்டனர் போலும். “வானவர் அன்பன் நீ தானோ, என் வேந்தே?” என்ற பொருளையே இந்த வரிக்கு ஈடாய் நாம் சொல்ல முடியும்.

அன்புடன்,
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 2

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
--------------------

இப்பாடல் பாடாண் திணை சேர்ந்தது இதன் துறையைச் செவியறிவுறூஉ என்றும் வாழ்த்தியல் என்றும் இலக்கணத்தில் வகைப்படுத்துவார். இது பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடலாகும்.

அது என்ன பாடாண் திணை? - என்று கேட்டால் நாம் புறத் திணைகளின் வகைப்பாட்டிற்குள் போக வேண்டும். ”வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய ஆறு திணைகளுக்கு அப்புறம் வருவது பாடாண் திணை. வேடுவச் சேகர வாழ்க்கைக்கும் (hunter-gatherer life), பயிர்த்தொழில் வாழ்க்கைக்கும் (feudatory life) பொதுவான புறத்திணைப் பாகுபாடுகள் இங்கு பாவிற்குக் களன்கள் ஆகின்றன.

முதலில் வருவது வெட்சி. இது ஓர் இனக்குழுக் கூட்டத்தின் பசுக் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தார் கவ்விக் கொள்வதும், அதைத் தொலைத்தவர் மீட்டுக் கொள்வதும் பற்றிய களமாகும். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த புறப்பொருள் வெண்பாமாலை இப்படி மீட்டுவருவதை ஒரே திணைக்குட் பொருத்தாது, ”கரந்தை” எனத் தனிப்பெயர் கொடுத்து அழைக்கும். தொல்காப்பியம் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பார்க்கும்.

வஞ்சி என்பது மாற்றரசனை அச்சுறுத்திப் போர்செய்தலைக் குறிக்கும். சிலப்பதிகாரத்திற் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று அங்குள்ள அரசரை அச்சுறுத்தி நடத்திய போர் வஞ்சிப் போராகும். இது வலிமையை நிலை நிறுத்தும் காரணத்தால் நடக்கும் போராகும். இதன் முடிவு கப்பங் கொள்ளுதலும், அடிபணிதலுமாய் அமையும்.

உழிஞை, மாற்றான் கோட்டையை முற்றுகையிடலும் அதைக் கைப்பற்றலும் ஆகும். முன்னே வெட்சியின் எதிராய் கரந்தையைக் காட்டியது போல உழிஞையின் எதிராய் நொச்சித் தனித்திணையை புறப்பொருள் வெண்பா மாலை காட்டும். தொல்காப்பியரைப் பொறுத்தவரை நொச்சி, தனித்திணை அல்ல. அது உழிஞையின் பகுதியே.

தும்பை, வஞ்சிக்கு எதிரானது. தன் வலிமையைப் பொருளாகக் கருதிவந்த அரசனை எதிர்த்துச்சென்று அவனோடு போரிடுவது. தொல்காப்பியம், புறப் பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டுமே தனித்து அடையாளங் காட்டும்.

வாகை என்பது வெறுமே வாளாலும் தோளாலுமன்றி தம் இயல்புகள் ஒட்டிய மற்ற போட்டிகளில் இருவேறு சாரார் பொருதுவதையும் வெற்றிபெறலையும் குறிக்கும்,

காஞ்சி என்பது வாகைக்கு மாறாக, பொருதலை விட்டொழித்து, “இவ்வுலகம் நிலையற்றது, இதில் ஒருவருக்கொருவர் பொருது கொள்ள வேண்டுமா? பொருதாமலேயே நீ நிலைப்பாய்” என நீத்தார் நெறி பற்றிப் பேசுவதாகும்.

பாடாண் என்பது இதுவரை மேலே பேசப்படாத பாடுபொருட்களை, ஆனால் பாடிப் பரவத்தக்க புறத்திணை நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதாகும்.

இனிச் செவியறிவுறூஉ என்பது என்ன? இதைச் செவியுறை என்பதுமுண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 1371 ஆம் நூற்பாவில் செவியுறையின் வரையறை சொல்லப்பெறும்.

செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே

”பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை” என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்வதைச் செவியுறை என்பார். இவ்வரையறையை ஆழ்ந்து புரிந்துகொள்வது புறநானூற்று 2 ஆம் பாடலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ”அரசனே! நீ செயற்கரிய செயல்கள் செய்தவன், பகைவர் மேற் சினந்துகொள்ள உரிமையுள்ளவன். ஆனாலும் இந்நேரத்தில் அடங்கி ஆக்கமுடையவனாய் இருத்தல் வேண்டும்” என்று முரஞ்சியூர் முடிநாகனார் சொல்லவருகிறார் - என்ற குறிப்போடு பாடற்பொருளைப் பார்ப்போம். பொருள் புரியத் தக்க, இப் பாட்டை 5 பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன்.

1. முதல் 8 வரிகள் “ஐம்பூதத்து இயற்கை போன்றவன் சேரலாதன்” என்று உரைக்கின்றன.
2. அடுத்த 3 வரிகள் “அகன்ற நாட்டிற்கு உரியவன் சேரன்” என்று அவன் ஆட்சியின் அகண்டதன்மையைக் குறிக்கின்றன.
3. அடுத்த ஒருவரி “வானவர் அன்பன்” என்று மோரியருக்குப் பின் சேரர் பெற்ற/அழைக்கப்பட்ட பட்டத்தைக் குறிக்கிறது.
4. அடுத்த 4 வரிகள் தாம் நாவலந்தீவின் பெரும் வீரர் கொடிவழியைச் சேர்ந்தவன் என்று சொந்தங் கொண்டாடும் விதத்தில் முன்னோர் நினைவாக “பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்த” சிறப்பைக் குறிக்கின்றன.
5. கடைசி 8 வரிகளில் தான் அரசனுக்கு உணர்த்தப்பெறும் செவியறிவுறூஉ இருக்கிறது. எந்த நிலையில் இந்தச் செவியுறை எழுகிறது என்று நம்மாற் சொல்லமுடியவில்லை. ஆனால் இமயமும் பொதியமும் போல நடுக்கம் இல்லாதவராய் யார்வந்தாலும் எதிர்நின்று வேள்விகளைக் காக்கக் கூடியவர் போல ஆயத்தநிலையில் இருக்கச்சொல்லும் அறிவுறுத்தல் தெளிவாக நமக்குப் புரிகிறது.

செவியுறை என்பது கிட்டத்தட்ட psychological counselling. ”அரசே! நீ எப்பேர்ப் பட்டவன், அதைச் செய்துள்ளாய், இதைச் செய்துள்ளாய், எல்லாவற்றிற்கும் உகந்தவன் நீ? இருப்பினும் கோவப்படலாமா? செருக்குக் கொள்ளலாமா?  கொஞ்சம் பக்குவமாய்ப் பார்த்துச் செய்யப்பா” என்பது உளவியற் கலந்துரை இல்லாது வேறென்ன?

பாட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இன்னும் ஆழமாய்ப் போவோம்.

அன்புடன்,சி
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

ஒரு முறை ctamil மடற்குழுவில் புறநானூற்று 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் என்பது கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்ததே இந்தியப் பண்பாடு” என இன்னொரு சாராரும் த்ததம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல்களை எழுப்பிக் கொண்டார். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல்  இங்கு எடுக்கவில்லை.] இதுபோல் உரையாடல்கள் காலகாலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர் இன்னும் ”துபாஷிகள்/பண்டிதர்” சொன்னதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டில் இருந்து பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொண்டிருப்பாரோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north எனும் புரிதலையும் என்று மாற்றிக் கொள்வாரோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை , இந்திய நடுவண் அரசினர் வேறு கொடுத்துத் தொலைத்து விட்டார் :-) அதைக்கண்டும் பலருக்குப் பற்றி எரிகிறது. வேறொன்றுமில்லை.  It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகிறது.

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங் காலம் உறவாடியவையே. இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை தான்” என்ற பார்வையை நடுநெறியாளர் ஒரு நாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒரு பக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரை மாறாதிருப்பதை எம் போன்றோர் மறுத்துச் சொல்லி வந்தோமே ஒழிய, எல்லாமே தமிழென எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கை வாதிகள் (fascists) என்று சாயம்பூசுவது தொடர்ந்து நடந்துவந்தது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலைத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே! இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி பலரும் தாசானு தாசராய் ஆகிப் போனது இன்று நேற்று நடப்பதல்ல.

[யாரோ ஒருவர் அழகாய்ச் சொன்னார்: காசுமீரத்தில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்றுவரும், ஏதோ தமிழர் இந்தியர் இல்லாதது போற் சொல்லப் படும். இம்மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையெனில் 500க்கும் மேற்பட்ட மீனவர் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்றால் மட்டும் குதிப்பது ஏன்?]

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியம் வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இங்கு இருந்திருக்கிறார். அவருக்கு வேதத்தைத் தூக்கி வைக்கும் பணி உள்ளபோது, ”எல்லாமே சங்கதம்” என முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது இன்றுவரை மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை கமில் சுவலபிலும் மறுத்தது இல்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் சிலருக்கு இப்போது எதிராளியாகத் தெரிகிறார்.] சங்ககால வாழ்க்கை முறையை Burton Stein வரையறுத்த Segementary State ஆகவே பார்ப்பதும்  மாற வில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்தார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்குட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயல்பாய் நிறுத்திக் கொள்வார். நானறியச் சங்ககால மூவேந்தர் அரசுகள் எப்படிப்பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என ஆய்ந்து பார்க்க யாரும் முன்வந்ததில்லை.]

தமிழ்நாட்டு ஆய்வாளரோ, இதன் ஆழங்காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகத்திறம், புதுக் கவிதையும் லிமெரிக்கும்” என விளிம்புநிலை ஆய்வுகளிலே கவனஞ் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆய்வுப்பட்டத் தலைப்புகளைக் கேட்டால் கண்ணீர் வடிக்கவே தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற்போல் எத்தனை நாட்கள் சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல்வழி வருகின்றன. கல்வெட்டியல் மூலம் எழுகின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீள் ஆய்வு செய்ய தமிழியலில் யாருமே அணியமாயில்லை. இல்லையெனில் அச்சு அடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டின் பின் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டுப் போலத் தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பாரா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை?- என எனக்கும் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளன. அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடல் தலைவர் வடக்கே போனதாய்ச் செய்திகள் வரும். அப்படி வடபுலத்தில் எங்கே தான் வணிகம் செய்யப் போனார்? வடுகர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாரமாய் இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெலாம் எங்கே செலாவணியாகின? வடக்கிருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் கொஞ்சங் கூட இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் எனில் மோரியருக்கும் முந்தியவராய் சங்க காலத் தமிழர் இருந்திருக்க வேண்டுமே? அப்படியெனில் சங்க இலக்கியக் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை நாமே எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறாரே ஏன்? Are we so worthless? Was every thing here a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிடினும் அதற்கெதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டி 3 பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கிருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக்கூறுகளும் இருந்ததையும், அப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று  இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) யார் சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்துணர்வது எப்போது? ”மகத அரசுகள் எப்போதும் தமிழக அரசுகளுக்கு பகையாய், அதேபோது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்விமேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்று வரை மேலைத்தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் உள்ளது. நம்முடைய  மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கையாகவே (fascist) புரிந்துகொள்ளப் படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும், அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.