Wednesday, March 25, 2020

antibiotic

antibiotic என்பதற்கு இன்னுஞ் சரியான சொல் நம்மிடமில்லை. biocide, biolysis என்பவற்றிற்கும் இதற்குங் கூட வேறுபாடு காட்டவேண்டும். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில், "destructive to micro-organisms," 1894, from French antibiotique (c. 1889), from anti- "against" (see anti-) + biotique "of (microbial) life," from Late Latin bioticus "of life" (see biotic). As a noun, first recorded 1941 in works of U.S. microbiologist Selman Waksman (1888-1973), discoverer of streptomycin. Earlier the adjective was used in a sense "not from living organisms" in debates over the origins of certain fossils (1860) என்று சொல்வர்.

biotic என்பதை வெகு எளிதில் உய்தலோடு தொடர்புறுத்தலாம். ஆனால் ”உய்” எனும்போது ”இர்” ஈற்றைத் தேவையில்லாது சேர்க்கவேண்டாம். உய்யை உயிரியோடும் தொடர்புறுத்த வேண்டாம். உய்கின்ற நிலை என்றே பொருள் கொள்ளலாம். (தேவையற்ற அசைகள், எழுத்துக்களை நாம் பல நேரம் சொல்லாக்கத்திற் சேர்த்துக் கொள்கிறோம். அலுவலகத்தை அலுவம் என்றாலே போதுமே? பொருள் புரியாதா? ’அகம்’ என்பது, ’அம்’ ஆகாதா, என்ன? மின்சாரத்தில் சாரம் தேவையா? தொழில்நுட்பத்தில் தொழில் தேவையா? அப்படி ஓர்ந்து பாருங்கள். சொற்சுருக்கம் வேண்டுமெனில் எழுத்துச்சுருக்கமுந் தேவை.) உய் என்றாலே life என்ற பொருள் வந்துவிடும். ஈர்தல் = வெட்டுதல், கொல்லுதல், முடித்தல். ஈர்>ஈறு என்பது ஆங்கில end சங்கத அந்தம் ஆகியவற்றோடு தொடர்புடையது தான். உய்யீரி என்பது antibiotic இற்குச் சரிவருமென்றே எண்ணுகிறேன். சுருக்கமான சொல்லாயும் இருக்கும். பொருளும் மாறாது.

antibiotic resistance = உய்யீரித் தடை

biocide (n.) உய்ச்சிதை
"destruction of living tissue or living species," 1947, from bio- + -cide. An older word for it was biolysis.

-cide -சிதை
word-forming element meaning "killer," from French -cide, from Latin -cida "cutter, killer, slayer," from -cidere, combining form of caedere "to strike down, chop, beat, hew, fell, slay," from Proto-Italic kaid-o-, from PIE root *kae-id- "to strike." For Latin vowel change, see acquisition. The element also can represent "killing," from French -cide, from Latin -cidium "a cutting, a killing."

biolysis (n.) உய்யிழிதி
1865, "the destruction of life," later more specifically "dissolution of a living organism, resolution of a dead organism into its constituent matter" (1880s); see bio- + -lysis. Related: Biolytic.

-lysis -இழிதி; இழிந்துகொண்டு போவது = கொஞ்சங் கொஞ்சமாய் உள்ளிறங்கிக் கரைவது. இழிதல் என்றாலும் அழிதல் தானே?
scientific/medical word-forming element meaning "loosening, dissolving, dissolution," from Greek lysis "a loosening, setting free, releasing; dissolution; means of letting loose," from lyein "to unfasten, loose, loosen, untie," from PIE root *leu- "to loosen, divide, cut apart."

மேலே உள்ளதை 13/10/2017 இல் மின்தமிழ் மடற்குழுவில் எழுதினேன், இதற்கு இராசு சரவணன் என்பார் 15/11/2017 இல் மறுவினை ஆற்றியிருந்தார்.  அது வருமாறு:
---------------------------------
Anti என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரிடையான தமிழ்ச்சொல் இல்லை. ஆனால் அதே பொருள்தரும் வேறு சொற்கள் கண்டறிந்து பயன்படுத்தலாம். Anti என்ற முன்னொட்டு கொண்டுவரும் சொற்களுக்குத் தமிழின் இயல்பிற்கு ஏற்பச் சொற்களை உருவாக்குவது வரவேற்க்கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்தாலும் ஒரு முயற்சியாக Anti என்ற பொருளைத் தரும் சொற்கள் தமிழில் உள்ளனவா என்று முயன்று பார்க்கலாம்.

ரொம்ப அடம்பிடிக்கிறான் என்று சொல்வோம் ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக/எதிராக இன்னொருவரின் நிலையை அடமென்று சொல்வோம்.

அடம்² atam, n. < hatha. 1. Obstinacy, pertinacity;பிடிவாதம்.

அடம் அழுத்தமாக (அதிகமாக) மாறும்போதும், அதாவது பிடிவாதம் அதிகம் ஆகும்போது அது எதிர்ப்பாக மாறுகிறது. அடம் என்பது அழுத்தமாக மாறும் போது அடத்தை அழுத்தி அட்டம் என்கிறார்கள்.

அட்டம்¹ aṭṭam, n. [T. aḍḍamu, K. aḍḍa, M. aṭṭam.] 1. Opposition, cross direction; குறுக்கு.

அடம் > அட்டம் Obstinacy > Opposition என்று தன்மை மாறுகிறது.

எதிர்ப்பான (Opposition) நிலையைக் குறிக்கும் அட்டம் என்ற சொல்லையே Anti என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தலாம். அட்டம் என்ற முன்னொட்டு எளிதாக எல்லா சொற்களின் முன்னே எளிதாகச் சேர்க்கலாம்.

எனவே அட்டம் (anti) என்ற முன்னொட்டைக் கொண்டு

Antibodies = அட்டப்பொதிகள் (Body என்பதற்கு பொதி)

AntiVirus = அட்டவெருவி

என்று அழைக்கலாம்.

குறிப்பு : Anti என்ற முன்னொட்டை கொண்டு சுமார் 780 ஆங்கிலச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன.
--------------------------------------------
என்று சொன்னார். இது பதிவு செய்யப்படவேண்டியது என்பதால் இங்கு இணைத்தேன்.

அன்புடன்,
இராம.கி.

No comments: