Sunday, October 20, 2013

வடமொழி என்பது சங்கதமா?

----------------------------------------
தொல்காப்பியத்தில் “வடமொழி” என்ற சொல்லுக்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்று நிறைய உரையாசிரியர் உரையெழுதிச் சென்றிருக்கிறார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாகக்
கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அது பிராகிருதம் என்றே பொருள் கொள்கின்றனர்.


”..5.2.1 வடமொழி தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுகிறார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளையும் குறிப்பதாயிருக்க வேண்டும் என்று தெ.பொ.மீ.  குறிப்பிடுகிறார்...”

1. உண்மையில் “வடமொழி” என்பது சங்கதம் மட்டும்தானா? அல்லது பாகதம் என்பதையும் சேர்த்தேப் பொருள் கொள்ள வேண்டுமா?

2. ஆம், அப்படி சேர்த்தே பொருள் கொள்ள வேண்டும் என்றால், "கிடைத்த கல்வெட்டுகளின்படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே முற்கால (கி.மு) கல்வெட்டுக்கள் இருக்கின்றன! சங்கத கல்வெட்டோ, மிகவும் பிந்தியது! தொல்காப்பியம் எழுந்த காலம் கி.மு.என்று கொண்டால், அக்காலத்தில் சங்கதத்தில் எழுந்தக்  கல்வெட்டுக்கள் இல்லை. அதிகாரப்பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் என்று கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார். எழுத்து இல்லாத மொழிக்கு இலக்கணம் படைக்க முடியுமா?"
குழும அன்பரின் கருத்தையறிய அவா.
---------------------------------------

என்று ”தமிழ்மன்றம்” மடற்குழுவிற் திரு.பானுகுமார் இராசேந்திரன் ஒருமுறை கேட்டிருந்தார். தமிழர் பலருக்கும் இக்கேள்வி எழக் கூடும் என்பதால், என் மறுமொழியை 3 மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் சேர்த்தே இடுகிறேன். நண்பர் பானுகுமார் பொறுத்துக் கொள்வாராகுக.
 
மொழிவளர்ச்சி என்பது சிக்கிலா நூற்கண்டிற் நீள வலிப்பது போல், எண்ணுதியாய் (quantitative) நிகழ்வதில்லை. கால மாற்றத்தில் மொழி பேசுவோர் எண்ணிக்கை கூடக்கூட எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியில் மொழி வேறுபாடு கூடுகிறது. ஓரிடத்துப் பேச்சு அங்கு மட்டுமே விதப்பாகி (specialized), இன்னோரிடத்திற் புரிந்தோ, புரியாமலோ போகலாம். ஒருசொல் -  பல்பொருள் தன்மையும், பல்சொல் - ஒருபொருள் தன்மையும் மொழியில் மிகுத்து ஏற்படலாம். இதுவரையில்லாது விதப்பான, பொருட்பாடுகள் கூட ஏற்படலாம். (நாற்றத்தின் பொருள் இன்று மாற வில்லையா?) மொழித்தொனி கூட, இடத்திற்கிடம் மாறலாம். (தமிழீழம், தென்பாண்டி, வடதமிழகத் தொனிகள் வெவ்வேறானவை. இத்தகை மொழி கேட்ட ஓரிரு நுணுத்தங்களிற் (minutes) பேசுவோர் ஊற்று யாருக்கும் புரிந்து விடும்.) இப்படி வேறுபடுவதைத் தான் ”இயல்மொழிக் கிளைப்பு, முரணியக்க மொழிவளர்ச்சி (dialectic language development)” என்று சொல்கிறோம்.

வடவேங்கடம் தென்குமரிக்கிடையில், ஒரேமாதிரி புரியவேண்டிய மொழி ஏதோ காரணங் கருதிப் பிரிய, ”நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழ் (சென்னைத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழின் இன்னொரு வகை), யாழ்ப்பாணத் தமிழ்” என வட்டார அடிப்படையிற் கிளைகளுக்குப் பெயரிடத் தொடங்குகிறோம். கிளைமொழிகள் ஏற்படுவது, அடிப்படையில் இயல்பு வளர்ச்சியே. பின்னால் இக் கிளைமொழிகள் வட்டாரங்களுக்கிடையுள்ள போக்குவரத்துக் குறைவால், கால இடைவெளியால், நுட்பியல் பரிமாற்றங்கள் வளராததால், வெவ்வேறு பொருளியல் வணிக ஆட்சித் தாக்கங்களால், வேண்டி விழையும் அரசியல் குமுக நடைமுறைகளால், தனி மொழிகளாய் மாறத் தலைப்படுகின்றன.

2000/3000 ஆண்டு கால வரலாற்றிற் தமிழுக்கும் அப்படி நடந்துள்ளது. வேங்கடத்திற்கப்பால் அருவத் தமிழும், மங்களூரை அண்ணிய கொங்கணத் தமிழும், வட கொங்கின் கங்கர் தமிழும், குடநாட்டுச் சேரலத் தமிழும் முறையே தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் என வெவ்வேறு கால கட்டங்களிற் திரிந்து, எழுத்தும், சொல்லும், பொருளும் வேறுபட்டு பங்காளி மொழிகளாயின. இவை நம் குடும்ப மொழிகளே, ஆனாற் பங்காளிகள். மொழித் தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கெவ்வளவு உண்டோ, அதே உரிமை இவருக்குமுண்டு.

இவ்விடங்களிற் புழங்கிய தமிழ், வேறுமொழிகளாய் மாறியதை இன்னோர் ஆய்வர் வலிந்துமறுத்து, முந்துதிராவிடம் (proto Dravidian) என்றோ, தொடக்கத் திராவிடம் (early Dravidian) என்றோ மாற்றுப்பெயரிற் குறிக்கலாம். நான் அப்படிச் செய்யேன். நெருப்பை அழல் என்பதால் வாய் வேகாது. அதைச் சங்கதப்படுத்தி அழனி>அக்னி (இருக்கு வேதத்திற் புழங்குகிறது.) என்று சொல்லவேண்டியதில்லை. முந்து/தொடக்கத் திராவிடம் என்பது கிட்டத்தட்ட 95/98 % தமிழ் தான். திராவிடம் என்பதைத் தயங்காமற் தமிழியம் என்பவன் நான். கல்விச்சாலை அரசியலை (academic politics) நீக்குப்போக்கோடு காப்பாற்ற ’முந்து திராவிடம்’ எனச்சிலர் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன்.

கி.மு.200 களிற் தொடங்கிய, இன்றை மராட்டிய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி யாற்றங்கரையிலிருந்த படித்தானத்திலிருந்து ஆண்ட நூற்றுவர் கன்னர் அரசில் நாணயம் தமிழ், பாகதம் என்ற 2 மொழிகளிலும் அச்சடிக்கப் பட்டிருந்தது. அதுவொன்றே தமிழின் ஆட்சியெல்லை 2200 ஆண்டுகளுக்கு முன் விந்தியம் வரை இருந்ததை விளக்கும். விந்திய மலையையே விண்டு மலை என்று வெங்காளுர் குணா விளக்கம் சொல்வார். சுவையாரமான சரியான விளக்கம். இன்னொரு நாள் சொல்கிறேன். (தமிழின் ஆட்சியெல்லை மூவேந்தர் ஆட்சியெல்லையை விடப் பெரியது. இன்றுங் கூடத் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ்நாட்டைவிடப் பெரியது.) தவிரச் சங்க இலக்கியத்தில், குறிப்பாக மாமூலனார் பாடலில் வரும் ’மொழிபெயர் தேயம்’ என்ற தொடர் மூலம், தமிழும், இன்னொரு மொழியும் - அது பாகதம் என்று நாணயவியல், கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். - நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஒரே நேரத்தில் ஆட்சி மொழிகளாய்த் துலங்கியது விளங்குகிறது. அப்புறம் என்ன ’முந்து திராவிடம்’ ? யாரை ஏமாற்ற? கொஞ்சமும் தடுமாற்றமின்றி, நாம் ’பழந்தமிழ்’ என்கலாமே?

இந்திய வரலாற்றில் வடபுல/தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டங்களை அறிய வேண்டுமெனில் நூற்றுவர்கன்னர் ஆட்சியைப் பல கோணங்களில் ஆய வேண்டும். தாய்வழி உறவு கொண்ட அவர் (கி.மு.230 - கி.பி.220), பாகதத்தைக் கொண்டாடியுள்ளார். [நம் அகநானூறு போலவே அங்கும் ’அகம் எழுநூறு’ என்ற தொகுப்புநூல் எழுந்தது. அகம் என்பது கஹ என்றும், எழுநூறு  என்பது ‘சத்தசை’ என்றும் பாகதத்திற் கூறப்படும்.) தமிழரிடையே பரவிய பெருங்கதை கன்னரின் அரசவையிற்றான் எழுந்தது. (பெருங்கதை உச்செயினியை ஒட்டிய உதயணன் கதையை விவரிக்கிறது.) கன்னர் கல்வெட்டுகளைப் பார்த்தால் வேதநெறியைப் போற்றிய அதே நேரத்தில் வேதமறுப்பு நெறிகளையும் அவர் புரந்தது புலப்படும். தமிழரைப் போலவே சமயப்பொறை அங்கும் மிகுந்திருக்கிறது. வடக்கே மகதம் போகும் வணிகச் சாத்துகள் படித்தானம் (இற்றை அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) வழியாகவே சென்றுள்ளன. தவிர, அவ்வரசின் மேற்குத் துறைமுகங்கள் மேலை நாட்டு வணிகத்திற்குக் கால்கோலியுள்ளன.  இன்னும் பல ஒற்றுமைகள் தென்படுகின்றன.

நூற்றுவர் கன்னர் ஆட்சியில் தென்கிழக்கு திசையிற் பாகதமும், அருவத் தமிழும் ஊடாடிப்பிறந்த மொழியே தெலுங்காகும். நம் பழந்தமிழருக்கு அது வடுகு. பாகதர்க்கு அது தெலுகு/ தெனுகு; [தெல்திசையைத் தெற்கு, தென் திசை என்கிறோமல்லவா? இதைத் தக்கணமென்றுஞ் சொல்வதுண்டு. தெலுங்கெனுஞ் சொல்லைத் ’திரிகலிங்கின்’ திரிவாகக் கொள்வது ஆதாரம் இலாக் கூற்று.] இந்த வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே நமக்கு ஒரு மொழியுண்மையைத் தெரிவிக்கிறது.

நூற்றுவர் கன்னர் தொடர்பாலும், பின்னர் வந்த சளுக்கியர் தொடர்பாலும், கன்னடமும் ஒரு காலத்தில் ’வடுகெ’னப்பட்டது. படகர் என்பார் தமிழ்ப் பலுக்கின் படி வடகரே. சிலம்பிற் பயிலும் “கொடுங்கருநாடர்” என்ற சொல்லே ”கொடுகித் திரிந்த மொழிபேசும் கருநாடர்” என்பதைத் தான் குறிக்கிறது. [”எதிலிருந்து கொடுகியது?” என்ற கேள்வியைச் சேர்த்துக்கேட்டுப் பாருங்கள்; பழங்கன்னடத் தொடக்கம் தமிழில் என்பது புரியும். சிலம்பின் காலத்தில் தமிழ் அங்கு கொடுகித் திரியத் தொடங்கிவிட்டது. ஆனால் அது வட்டார மொழி நிலை. (சிலம்பைப் படிக்காதவர் செம்மொழி விருது கொடுக்க முனைந்தார்.)  கேள்விகேட்கத் தாம் நம்மிற் பலருந் தயங்குகிறோம்.]

வேங்கடம் என்பது சங்ககால முடிவுக்காலத்தில் ஒரு மலை மட்டுமல்ல. இன்று இராயல சீமை எனப்படும் வெம்மைநிலப் பகுதியையும் சேர்த்தே குறித்தது. வெய்யில் கொளுத்தும் வேம்+கடமும் வேங்கடமானது; (சங்க காலத் தொடக்கத்தில் வேங்கடம் என்பது விண்டு>விண்டிய>விந்திய மலை. அதை வேறு கட்டுரையில் சொல்வேன்). சங்ககால இறுதியில் வேங்கடந் தாண்டுவது இராயல சீமையைத் தாண்டுவது என்றே பொருள்படும். அக்காலத்தில் கடற் பக்க ஆந்திரப் பகுதி பெருங்காடாய் இருந்தது. (அக்காட்டின் ஊடே சாலை அமைத்து வடக்கேபோனது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தில் ஏற்பட்டது ஆகும்.) சங்க காலத்தில் வடக்கே போகும் சாத்துக்கள் எல்லாம் இராயல சீமையின் பாலைப் பகுதி கடந்து கர்நாடக வழி படித்தானம் (>பைத்தான்) போய், தக்கணப்பாதை வழியாக மகதம் போயின. சங்க இலக்கியத்தில் நூற்றிற்குப் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்கள் தானே? (தக்கண, உத்தரப் பாதைகளைப் புரிந்துகொள்ளாது இந்தியாவின் தொன்மை வரலாறு புரியாது. தமிழாய்வும் விளங்காது. நம்மூர்த் தமிழறிஞர் இதை என்று உணர்வாரோ தெரியாது.) அன்று பாலையைத் தாண்டி மகதம் போகாது, அன்றேற் கடல்வழி மேற்கு நாடுகளுடனும், தென்கிழக்கு நாடுகளுடனும் வணிகஞ் செய்யாது,தமிழர்  பொருள் சம்பாதிப்பது எப்படி?

விந்தியத்திற்குத் தெற்கிருந்த தமிழ்மொழி எப்படிப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்ததோ, அது போல பாகதமும் பல மொழிகளாய்த் திரிந்தது. (கத்துவது, ஒலிப்பது கதம். ”என்ன கதைக்குறே?” என்று ஈழத்தில் கேட்பார்இல்லையா? கதைத்தல் = பேசுதல்; பா கதம் = பரவலான பேச்சு. இதைப் பெருகதம் - prakrit - என்றுஞ் சொல்லலாம். தமிழ் என்று இன்று தனித்துச் சொல்லுவதில் எத்தனை அருகதை இருக்கிறதோ, அதே போலப் பாகதம் என்பது தனித்தே நிற்கக் கூடிய மொழி. அதை மறைத்துச் சங்கதத்திலிருந்து பாகதம் பிறந்ததென்பது பெயரனிலிருந்து தாத்தன் பிறந்தான் என்று சொல்லுவதையொக்கும். செந்தமிழிலிருந்து தமிழ் வந்தது என்று சொல்லுவது எவ்வளவு தவறோ அதே தவறு செங்கதத்திலிருந்து பாகதம் வந்தது என்பதாகும்.)

1. பாஷை,(பேச்சென்பதே பாஷையானது. இக்காலத்தில் பேச்சு வேறு, பாஷை வேறென்று சிலர் புரிந்துகொள்ளுகிறார். இரண்டும் வெவ்வேறு பலுக்கல்கள்; அவ்வளவு தான். பாஷை என்பது கி.மு.1500 - 1200 களைச் சேர்ந்த வேத மொழியை அடிப்படையாகக் கொண்டு, சுற்றியிருந்த வழக்கு மொழிகளின் பங்களிப்போடு, இற்றைக்கால இலாகூரைச் சுற்றி இந்தியாவிலும், பாகித்தானிலும் உள்ள இடத்தில் இருந்த பேச்சாகும். இதன் செய்யுள் மொழி சந்தஸ் என்று சொல்லப்பட்டது. பாணினி இந்த சந்தஸ்/பாஷா மொழிக்குத் தான் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இலக்கணம் எழுதினான்.),

2. மகாராட்டி (இது படித்தானத்தை மையமாகக் கொண்டு கவித்துவம் நிறைந்ததாய்க் கையாளப்பட்ட மொழி, பாகத இலக்கியங்களில் கவிதை மொழியாக மகாராட்டியையே பெரிதும் பயன் படுத்தியிருக்கிறார்),

3. மாகதி (இற்றைத் தென் பீகாரில் 2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தை யொட்டி மகத அரசிற் பரவலாகப் பேசப்பட்ட கிளை மொழி, தமிழ், தமிழர் என்பது போல் மாகதி, மாகதர் என்றாகும். பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகர் போன்றோர் பெரிதும் புரந்த மொழி. தொடக்க கால புத்தத்தின் பேச்சு மொழியும் இதுவே. புத்தத்தின் எழுத்து மொழியான பாலி இதிலிருந்தே பள்ளிகளின் செம்மொழியாகக் கிளைத்தது. இன்று வரை தேரவாதபுத்தம் பாலிமொழியை இலக்கிய மொழியாய்ப் பயனுறுத்துகிறது. கி.பி.500 களில் எழுந்த மகாயான புத்தம் சங்கதங்கலந்த பாலியைப் பயன்படுத்தியது),

4. அர்த்த மாகதி (பாதி மாகதி என்று பொருள் கொண்டது. மகதத்தின் வடக்கே வச்சிரத்தில் பெரிதும் புழங்கிய மொழி. இதையே மகாவீரர் பேசினார். தொடக்க கால செயினத்தின் பரவலான மொழி இதுவே. திகம்பர செயினம் இன்றும் பல்வேறு வகையில் அர்த்த மாகதியைக் காப்பாற்றி வருகிறது. அதே பொழுது சுவேதாம்பர செயினம் சங்கதம் கலந்த அர்த்த மாகதியை ஏற்றுக் கொண்டுவிட்டது.),

5. அங்க மொழி (இற்றை வங்கத்தின் முந்தையக் கட்டம்.)

6. மைதிலி (இன்றும் பீகாரில் இது பரவலான பேச்சு மொழி. மிதிலைப் பக்கது மொழி. பல எழுத்தாவணங்கள் இம்மொழியில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இற்றை இந்தித் தாக்கத்தால் இவ்வெளிப்பாடு நடைபெறாதுள்ளது. இந்த ஆவணங்கள் வெளிவரவேண்டும்.),

7. சூரசேனி (வட மதுரையைச் சுற்றிவளர்ந்த பேச்சு மொழி. இற்றை இந்தி மொழி என்பது சூரசேனியின் அடியில் வளர்ந்த காரிபோலியின் திரிந்த வடிவமே. சூரசேனி>காரிபோலி>இந்தி.  இந்திமொழி இந்திய அரசின் முற்றாளுமையில் இன்று பெரிதும் பரவிக்கொண்டுள்ளது. பாகதத்தின் பழைய கிளை மொழிகள் கொஞ்சங் கொஞ்சமாய் அழிந்துகொண்டுள்ளன.),

8. கூர்ச்சரி (இற்றை குசராத்தியின் முந்தை வடிவம்)

என்று ஆங்காங்கு வடபுலத்தில் திரிந்தது. (ஒரு காலத்தில் இவை கிளை மொழிகளைக் குறித்துப் பின் காலவோட்டத்திற் தனி மொழிகளாகின.)  இன்னும் பல்வேறு மொழிகள் (பஞ்சாபி, காசுமிரி, இராசத்தானி, ஹர்யான்வி போன்றவை) இவற்றிலிருந்து பிறந்துள்ளன.

பல்வேறு கிளை மொழிகளைக் கலந்து பாணினிக்கு அப்புறம் கி.மு.300 களில் வடமேற்கிருந்த பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிப் படிப்பாளிகள் ஒரு கலப்பு மொழியைப் (சம் கதத்தை = கலப்புப் பேச்சை) உருவாக்கினர். சங்கதத்திற்கு எழுத்துரு கொடுத்தது கி.பி.150 களிற்றான். பாகத எழுத்தை (பெருமி எழுத்தை brahmi script) அப்படியே எடுத்துக் கொண்டார். வெவ்வேறு அரசுகளில் வெவ்வேறு எழுத்து முறைகள் பயன்பட்டன. சங்கதம் என்ற பெயரைக் கூடப் பாணினி பகர மாட்டான். அவன் பாஷா, சந்தஸ் என்றே, தான் பயிலும் மொழி பற்றிச் சொல்லியுள்ளான். பின்னால் குப்த அரசின் ஆட்சி மொழியாக மாறிச் சங்கதம், செங்கதம் என்றும் (செம்மையான பேச்சாகவும்) மாறியது. சங்கதம்>செங்கதம் தெற்கே வந்து பல்லவர் ஆட்சியில் பாகதத்தை வெளியேற்றி ஆட்சியில் அமர்ந்தது. சாத வாகனருக்குக் கீழ் அதிகாரிகளாயிருந்த பல்லவர் இராயல சீமையிலிருந்து வந்து புது அரசாட்சியை ஏற்படுத்தினர். தெற்கே பல்லவர் ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழெழுத்திலிருந்து கிரந்தம் உருவாக்கி சங்கதம் எழுதினார்.

குப்த அரசு பெற்ற சிறப்பின் காரணமாய், அதன் அகண்ட வளர்ச்சியால்,  வெவ்வேறு வட்டாரங்களிலிருந்த இலக்கியங்கள் சங்கதத்திற்குப் பெயர்க்கப் பட்டன. பல மொழிபெயர்ப்பு நூல்கள் சங்கதத்திலுள்ளன. (பெயர் பெற்ற பஞ்சதந்திரமும் ஒரு மொழிபெயர்ப்பு நூலே. பெருங்கதை சங்கதத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.) இன்று எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென  உரைபரப்புகிறார். வெற்றிபெற்றோர் வரலாறெழுதுவது போல் அவற்றைக் கொள்ளவேண்டியுள்ளது. குப்தர் அவையில் காளிதாசன் முதற்கொண்டு பல்வேறு புலவரும் இலக்கியம் படைத்தனர். சங்கதத்தின் உச்ச கட்டம் குப்தர் ஆட்சியிலேயே ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாய் மற்ற வட்டாரமொழிகளை விழுங்கத் தொடங்கி சங்கதம் எங்கும் பரவத் தொடங்கியது. வடமொழி என்ற சொல் குப்தர்காலத்திற் சங்கதத்தையே குறித்தது.

ஆனாற் சங்க காலத்திற் அது பெரும்பாலும் பாகதத்தையும், படித்தோர் வழி சிறுபான்மை பாஷா/சந்தஸையும் குறித்தது அது இடத்தை வைத்துப் பெயர் இட்ட பழக்கம். அக்காலத்திற் தென்மொழி என்பது தமிழ். ஏனெனில் மற்ற தெற்கத்தி மொழிகள் கிளைமொழிகளாய் இருந்தன. இன்று தென்மொழி என்று பொதுப்படத் தமிழைச் சொல்வது சரியாயிருக்குமா? 

வடபுலத்திருந்து வெகுதொலைவில் உள்ள நமக்கு ”வடக்கே இருந்த/இருக்கும் மொழி” எனும்போது இடத்தைவைத்துப் பெயரிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் வரலாற்றுப் பொருள் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டது. காலந்தவிர்த்து தனித்தாற்போல் இச்சொல்லிற்குப் பொருள்கூற முடியாது.

பல்லவர் தாக்கத்தின் பின் பாகதமென்ற புரிதல் தமிழகத்திற் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்துபோனது. பின்னால் ஏற்பட்ட கருத்து மாற்றத்தைச் சங்க காலத்திற்குக் கொண்டுபோய் வலிந்து பொருள் சொல்வது தவறு.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 01, 2013

'விமானம்’

"விமானம் என்றாலே மேலே பறப்பதுதானே?.... ஆகாயம் என்றால் மேல் வெளி.... அப்படியிருக்க விமானத்தை ஏன் ஆகாய விமானம் என்று சொல்ல வேண்டும்?" என்று அண்மையிற் சிங்கையைச் சேர்ந்த திரு. இளங்குமரன் தமிழுலகம் மடற்குழுவிற் கேட்டிருந்தார். ஆகாயவிமானத்தின் சொற்பிறப்பறியக் கோயில்கள், தேர்களின் கட்டுமானங்கள் பற்றிப் படிக்கவேண்டும். எனக்குத் தெரிந்ததை இங்கு உரைக்க முற்படுகிறேன். நம் மரபுகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; அகல் காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளி உணர்த்தி, ஆகாயமாகும். விமானமென்பது தமிழ், சங்கதம் என்ற இரு மொழிகளின் கலப்புச் சொல்லாகும். ஆகாய விமானமெனுங் கூட்டுச் சொல்லில், சிலவிடத்து ’ஆகாயத்தைத்’ தொகுத்து, ’விமானமே’ தனித்து நின்று, பறக்கும் ஊர்தியைக் குறிப்பதும் உண்டு. ஆனாற் தொகுப்பு அறியாதோர்க்கு இது குழப்பந் தரலாம். [சில காலம் முன் வரை குழப்பம் வாராதிருக்க, நல்ல தமிழில் வானூர்தி என்றும் புழங்கினர். இப்போது அப்புழக்கம் குறைகிறது. அதனினும் விலகி எங்களிற் சிலர் அட்லாண்டா பெரி. சந்திரசேகரன் பரிந்துரைத்த “பறனை”யையே சுருக்கம், தெளிவு, பயன்பாட்டுப் பெருக்கம் கருதிப் பயில்கிறோம். (பறவையைப் போல்மாக்கிச் செய்தது பறனையாகும்.) பறத்தல் வினை விதப்பானது. மற்ற எளிய ஆற்றங்களிலிருந்து (actions) பிணைத்துப் பெறவியலாத் தன்மை கொண்டது. ’சர்வகலாசாலை’ சரிந்து, ’பல்கலைக்கழகம்’  பரவியது போல, எதிர்காலத்தில் ’விமானமும், வானூர்தியும்’ விலகிப் ’பறனை’யைப் பழகின் நல்லது.]

’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பதால் ஒவ்வொரு சொல்லிற்கும் பிறப்பும், பொருள்மரபும் இருக்கின்றன. இத்தொடர்ச்சி அறியாமற், சொற்புழக்கம் புரியாது. ”மொழி ஒரு
கருவி; கருத்துப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இருக்கிறது” எனும் வறட்டுப்பேச்சாளர், மொழிமரபு தெரியாது, நற்றமிழை நக்கலிக்கிறார்; தமிங்கிலத்திற்கும் பரிந்துவருகிறார். முகலுங் காலத்தே (modern times) தமிழ்மரபுகளை மறந்து, பிழைப்பிற்காக வடநாட்டு மரபுகளையும், சமயத் தூண்டலாற் சங்கத மரபுகளையுந் தானே நாம் விழுந்து விழுந்து கற்கிறோம்? இதற்கு மிஞ்சினால் மேனாட்டுப் படியங்களும் (fashions), நுட்பியல்களும் நம்மை உருப்படுத்துமென எண்ணுகிறோம். இம்மரபுகளையும், படியங்களையும், நுட்பியல்களையும் தேடக் கூடாதென்று நான் சொல்ல மாட்டேன். அதேபோது பெருமிதம் ஊட்டும் நம் மரபுகளைக் குறைத்தும் எண்ணமாட்டேன்.

[கட்டடக்கலை பற்றி ஆர்வமுள்ளோர் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3. என்னும் அருமையான தொடரைப் படியுங்கள். வள்ளுவர் கோட்டக் கற்றேர் பற்றிய கட்டுரை .http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1116 என்ற இடத்திலிருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் அடித்தானம் பற்றி ஆழ அறிய http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1018 என்னுஞ் சுட்டியையுந் தொட்டுப் படியுங்கள்.] (அடித்தானம் என்ற சொல்லைத் திருப்பிப் போட்டு அதிட்டானம்>அதிஷ்டானம் என்று சங்கதமாக்கியது வேறொரு கதை. இன்று சிற்ப ஆய்வாளரே தடுமாறித் தமிழ்ச்சொல்லறியாது சங்கதத் திரிவையே ஆளுகிறார். மூலத் தமிழ்ச்சொல் முற்றாக அழிந்தது. தமிழ்-சங்கத மோதல், திரிவுகளில் இப்படி நாமிழந்த தமிழ்ச்சொற்கள் ஏராளம். இதை இன்னொரு பொழுதிற் பேசுவோம்.)

’ஜல சமுத்ரம்’ எனும் இன்னோர் இருபிறப்பியை அறிந்தால், ’ஆகாய விமானம்’ புரியும். ஜலமெனுஞ் சொல் தமிழ் மூலம் காட்டுவது தான். நீர் மிகுத்தோடும்பொழுது ”சலசல” என்று ஓசை எழும்பும். (சரசர, சலசல என்ற ஒலிக்குறிப்புகள் பல தமிழ்ச்சொற்களை உருவாக்கியிருக்கின்றன.) அதன் விளைவாய்ச் சலம்>ஜலம் என்ற பெயர் கொள்ளும். (ஜலம் வடமொழிச் சொல் என்போர் சற்று பொறுக்க வேண்டும். இது போன்ற ஒலிக்குறிப்புச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.)

’ஜலசமுத்ரம்’ இன்று ’சமுத்ரம்’ எனச் சுருங்கிப் பொருள் கொள்ளப்படுகிறது. ’சமுத்ரம்’ என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பறியத் தமிழில் வாராது முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ் வினையடி சேருதற்பொருள் தரும். குமிதல் தன் வினையாகக், குமித்தல் பிறவினையாகும். குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்துவைத்தது குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். தென்மொழி /வடமொழிப் பரிமாற்றங்களில் [இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருசிலர் சொல்வது போல் ஒருவழி மட்டுமே அல்ல. சங்கதம் மேடு, தமிழ் பள்ளம் என்போருக்கு ஒரு நிகழ்ப்பு (agenda) இருக்கிறது.] குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம் குமுகம் அவர்கள் சமுகமாய் உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி, அவர்கள் புழக்கில் ரகரம் ஊடுருவிச் சமுத்ரம் ஆகும். ஜலமும் சமுத்ரமும் சேர்ந்து ஜல சமுத்ரம் (நீர்க் குமிப்பு) என்ற கூட்டுச்சொல் உருவாகும். நாளாவட்டத்தில் பழக்கத்தால் ’ஜல’ தொகுக்கப் பட்டு ’சமுத்ரம்’ தனித்து நின்று கடலைக் குறித்தது. ’ஜல சமுத்ரம்’ போல ’ஜன சமுத்ரம்’ என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனித்தாற் குமித்தல் புரியும். [சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு என்றாகும்.] நீர்க்கடல் என்பதில் நீரைத் தொகுத்து கடல் என்றே சொல்கிறோம். குடல்>கடல் என்பது சேர்க்கையைத் தான், குமித்தத்தைத் தான் குறிக்கும். சமுத்ரம் என்பதற்கு நேரிணை கடல்.  

விமானம் என்பது (விதப்புப் பொருள்கொளும்) சங்கத ’வி’ முன்னொட்டும். ’மானம்’ எனும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்ததாகும். [இதே போல பூதி/விபூதி, செயம்/விசெயம், ஞானம்/விஞ்ஞானம், வாதம்/விவாதம் எனப் பல வி-முன்னொட்டுச் சொற்கள் இருபிறப்பிகளாகின்றன. காட்டாக ’விபூதி’யை எடுத்துக்கொள்ளுங்கள். பூழ்தி>பூதி என்ற தமிழ்ச்சொல் புழுதியின் திரிவாய் நொசிந்த வெண்சாம்பலைக் குறிக்கும். வி-பூதி என்ற விதப்பான (specific) பூழ்தியை - திருநீற்றை - சிவன்கோயிலிற் கொடுக்கிறார். ’ஆன்மா நிலைபெற்றது, அதை மூடும் உடம்பு நிலையில்லாதது;  முடிவில் எல்லா மெய்களும் சாம்பலாகின்றன’ என்றுகுறிப்பது விபூதியாகும். முப்பட்டையாய் நெற்றியிலணிந்து சிவநெறியாளர் ’நிலையிலாமையை’ ஊரிற் பறை சாற்றுவர். இதேகருத்தில் விண்ணவத்தில் திருமண் அணிகிறார்.  அதுவும் நிலையிலாமைக் குறிப்புத் தான். சமயப்புரிசைகள் ஒவ்வொன்றிற்கும் உட்கருத்திருக்கிறது. இந்தக் காலத்தில் விவரந்தெரியாது கேலிபேசி எல்லாந் தொலைக்கிறோம்.]

மானம் என்பது அளவு, மதிப்பென்ற பொருள் கொள்ளும். [மானித்தல் தமிழில் அளத்தற் பொருள் கொள்ளும். ’செரிமானம் (= உணவு செரிக்கும் அளவு), தன்மானம் (=தன்னைப் பற்றிய மதிப்பு), பரிமானம் (ஒரு பொருளைச் சுற்றும் - பரிக்கும் - அளவு), பெறுமானம் (= பெறும் மதிப்பு), வருமானம் (வரும் பண அளவு; ஆகாறு என்ற சொல் வருமானத்திற்கு இணையாய்க் குறளிற் பயில்வது தெரியுமோ?)’ போன்ற சொற்களால், மானத்தின் பொருள்புரியும். it is a measurable quantity.]

கோயில்களிற் பல்வேறு மாடங்களுண்டு. எல்லாவற்றையும் சகட்டு மேனிக்குக் கோபுரம் என்பது சரியல்ல. உண்மையில் வாயில்கள் மேலிருக்கும் உயர்மாடங்கள் மட்டுமே கோபுரங்களாகும் (கோ புரம் = இறை மாடம். மடுத்தது மாடம்; இக்காலத்தில் தரைத்தளத்திற்கு மேல் மடுத்ததை மாடியென்று சொல்ல முற்படுகிறோம். தனி balcony-யும் ஒருவகை மாடந் தான்); காட்டாக,  மதுரைக்கோயிலில் சித்திரைவீதி 4 திசை வாயில்களின் மேலிருப்பவை அரச கோபுரங்களாகும். உள்ளே ஆடி வீதியில் சொக்கர் கோயில் வாயில்களில் இருப்பவை அந்தந்த வாயிற் கோபுரங்களாகும். இதே போல் மீனாட்சி கோயிலில் ஆடிவீதிக்கு முகங்காட்டும் இரு கோபுரங்கள் இருக்கின்றன. இவை தவிரச் சில சின்னக் கோபுரங்களும் கோயிலுள் இருக்கின்றன.

ஆனால் கருவறைகள் மேல் இருக்கும் மாடங்களை விவரமறிந்தோர் கோபுரம் என்னாது, விமானம் என்றழைப்பர். விமானம், கோபுரம் இரண்டிலும் 3,5,7.. என மாடங்கள் இருந்தாலும் விமானத்திற்கும் கோபுரத்திற்கும் கட்டுமான வேறுபாடிருக்கும். கோயில் விமானக் கட்டுமானம் “எத்தனை நிலை மாடம்?” என்று கேள்வி மூலம் உலகோர் வழக்கில் அளக்கப் படுகிறது.  காட்டாகச் சீரங்கம் அரச கோபுரம் 13 நிலை மாடமாகும். மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் 160 3/4 அடிகள் உயர்ந்ததாகும். 

பருந்துப் பார்வையிற் பார்க்கின், கோயில் விமானங்கள் மூலத் திருமேனிகள் இருக்குமிடத்தைக் குறிக்கின்றன. (எல்லாக் கோயில்களிலும் உயர்விமானம் 13 நிலையாய் தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கிறது. அது அங்குள்ள கோபுரங்களைக் காட்டிலும் பெரியது.) பழங்காலத்தில் ’இறைவன்’ என்பது கடவுளையும், அரசனையும் சேர்த்தே குறித்தது. ”கோயிற்” சொல்லிலும், கோயிற் புரிசைகளிலும், நிர்வாக நடைமுறைகளிலும் இந்த ஒக்குமை (equality) விளங்கும். அரசன் கோயிலும், தெய்வக் கோயிலும் அக்காலத்திற் பலவகையில் ஒன்று போலிருந்தன. இற்றைக் கோயில் மதில்கள் அற்றைக் கோட்டை மதில்களை மறுபளித்தன. (என் வலைப்பதிவில் ஆங்கிலத் தளபதி அக்னியூ காளையார்கோயில் மதிலை முற்றியதைத் தெரிவித்தேன்.) எனவே அரசன் கருவறையும் விமானம் கொண்டிருக்க வேண்டும். அரசன் ஊருலவும் ஊர்தியும், இற்றைக் கோயிற்றேர் போல் விமானங் கொண்டிருந்திருக்கலாம்.

இற்றைக் கோயிற்றேர்களையும், கோயில் வையங்களையும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? வையம் என்றவுடன் தடுமாறவேண்டாம். வள்> வளை>வயை>வையை>வையம் என்பது சிலம்பிற் பயிலப்படுகிறது. 50 ஆண்டுகள் முன் நாட்டுப்புறங்களிற் கூட்டு வண்டியைக் குறித்த இச்சொல் இன்று வழக்கற்றுப் போனது. நம் ’வையமும்’ சங்கத ’வாகனமும்’ பொருளாலும், ஒலிப்பாலும் உறவுற்றவை. வாகனத்தையொட்டிய இந்தையிரோப்பியச் சொற்கள் (1520s, from Middle Dutch wagen, waghen, from Proto-Germanic *wagnaz (cf. Old English wægn, Modern English wain, Old Saxon and Old High German wagan, Old Norse vagn, Old Frisian wein, German Wagen), from PIE *woghnos, from *wegh- "to carry, to move" (cf. Sanskrit vahanam "vessel, ship," Greek okhos, Latin vehiculum, Old Church Slavonic vozu "carriage, chariot," Russian povozka, Lithuanian vazis "a small sledge," Old Irish fen, Welsh gwain "carriage, cart;" see weigh) பலவும் இருக்கின்றன. அடிப்படையில் இழுப்பதற்கே இவ்வாகனங்கள் பயன்பட்டன. இழுக்கும் வாகனங்கள் ஊர்திகள் என்றுஞ் சொல்லப்பெறும். 

பின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை, வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும். தூக்குவாகனங்களின் அடியில் மூங்கில்களைக் கட்டிக் கோயில் விழாக்களிற் ”பற்றியோர்” தோள்மேல் தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன. முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்துகொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும் கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application) வெளிப்படும்.  

ஊருலவர் திருமேனி கொண்டு செல்வதில் இன்னொரு மரத் தூக்கு வாகனம் பற்றியுஞ் சொல்லவேண்டும். குட்டைமிசை போல அடித்தட்டும், அடித் தட்டிற்குக் கீழே 4 கால்களும், மேலே 4 தூண்களும், 4 தூண்களுக்கும் மேலே மூடியதுபோல் ஒரு மேற்றட்டும். மேற்றட்டுப் பக்கங்களில் 4 தாழ்வாரமும் (தாழ்வாரங்களைத் தான் கவோதம் என்பர். கவ்விய உத்தம் = கவ்விய உயர்ச்சி. கவோதம் கபோதமாகத் திரிந்து வடமொழி உருக்காட்டும். நாமும் மயங்கித் தமிழில்லையோ என்று தவிப்போம். கோயிற் தொடர்பான பல சிற்பச்சொற்களை இடைக் காலத்தில் இருபிறப்பி ஆக்கி வைத்திருக்கிறார்.) சேர்ந்து இவ்வாகனமிருக்கும். (மயிலாப்பூர் அறுபத்துமூவர் திருவிழாவில் 63 நாயன்மார் திருமேனிகளை இதுபோலும் தூக்கி வருவதை ஒவ்வோர் ஆண்டும் தொலைக்காட்சியிற் பார்க்கிறோமே, நினைவு வருகிறதா?) ஏராளமான நாட்டுப்புற வீடுகளிலும், கோயில்களிலும் கவோதக் கட்டுமானம் இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் sun-shade என்கிறார்களே? அதுதான் இது. தவிர மழைத்தூறல்கள் உள்ளிருப்பதை அணுகாதிருக்கவும் இவை வழிசெய்யும்.

ஆக 4 கால்கள், 4 தூண்கள், 1 கீழ்த்தட்டு, 1 மேற்றட்டு, 1 கவோதம் அடங்கிய கட்டுமானத்தில் திருமேனிகளை நிறுத்தி 4 கால்களில் கயிறால் மூங்கில்களைக் கட்டித் தூக்கிச் செல்ல முடியும். இவ்வாகனத்திற்குச் சப்பரம் என்று பெயர். மேலே கூம்பாது சப்பையாக இருக்கிறதல்லவா? பெயர்க் காரணம் அப்படி எழுகிறது.

இழுப்பு வாகனங்களில் வெறுமே 4 மரச்சக்கரங்களும் தேர்க்கால் அச்சுகளும் (தேக்கும், இலுப்பையும் மர வேலைக்குப் பெயர் போனவை) இவை சேர்ந்த தேர்த்தட்டும் கொண்டது சகடை எனப்படும். (இதுவும் இலுப்பையாலானது. சகடை, வண்டி, தேர் செய்ய மரந் தேர்ந்தெடுப்பது பெருங்கலை. சகடையைப் புரிந்து கொண்டால் தேர்க்கட்டுமானம் புரியும்.) சகடு சக்கரத்தையும், சகடை இதுபோல் வண்டியையும் குறிக்கிறது. சகடமென்ற சொல்லும் சகடையைக் குறித்தது. [இன்று ’சகடம்’ மறைந்து எல்லாமே வண்டியானது. எத்தனை சொற்களை நாம் இழக்கிறோம், தெரியுமா? தமிழ்ச்சொற்றொகுதி மறப்பதும் தமிங்கலம் எழக் காரணமாகும்.]

எப்படிக் கோயில் அடித்தானம் பல்லுறுப்புக்களைக் கொண்டதோ அது போலத் தடித்த தேர்த்தட்டும் பல்லுறுப்புகள் பெற்று சிற்ப வேலைப்பாடு கூடி, முழுச்சகடையும் ‘தேரடி’ என்ற பெயர் கொள்ளும். தேர்த்தட்டின் பரிவட்டப் (circumference) பரப்பு பல்வேறு வாகுகளையும், ஒயில்களையுங் காட்டும். இது சதுரமாகவோ (நாகர வகை), எண்கோணமாகவோ (திராவிட வகை), 12, 16 கோணமாகவோ (வேசர வகை) அமையக் கூடும் தேர்த்தட்டின் தடிமன் இரண்டாள் உயரங் கூட இருக்கலாம். திருவாரூர் ஆழித்தேரும், சீவில்லிபுத்தூர் தேரும் மிகப் பெரிதானவை. தேர் செய்யும் தாவதி (ஸ்தபதி = பெருந்தச்சன்) பலவும் செய்து பட்டறிவு கொண்டவராயின் நுணுகிய சிற்ப வேலைகளால், பழனச் (=புராண) செய்திகள் தேர்ச்சிற்பங்களில் விரவும்.

தேர்த்தட்டைச் சுற்றிலும், இடுப்பளவிற்கு, விழையுயரமாய் எழும்பும் மதிற்சுவர் கொடிஞ்சி எனப்படும். [கொடு+இஞ்சி = கொடிஞ்சி, வளைந்த மதிற்சுவர். இதைக் கிடுகென்றும் அழைப்பர். கொடிஞ்சில்/கிடுகு போன்றவற்றால் தேரில் நிற்போர் தம் இடுப்பிற்குக் கீழுள்ள உடலை ஓரளவு அம்புவீச்சிலிருந்து காத்துக்கொள்ளலாம். தேர்செய்யும் நுட்பியல் ஒருசில அகவை முதிர்ந்த தாவதிகளோடு தங்கிப்போய், இன்று தேர்ப்பாகங்கள் பற்றிய கலைச்சொற்களின் உறுதியான பொருட்பாடு பலருக்கும் தெரியாது போனது. இணையத்தில் இதுபற்றிய செய்திகள் தப்பும் தவறுமாய்க் கிடக்கின்றன. தமிழுக்குப் பணிசெய்ய விழையும் ஆர்வலர் மரபு சார்ந்த நிபுணர்களிடம் பேசித் தெளிவறிந்து இவற்றை இணையத்தில் ஆவணப் படுத்த வேண்டும்.] இவையெல்லாம் நம் மரபு. 

தேர்த்தட்டின் மேலிருக்கும் நடுப்பகுதி துணைப்பீடம் அல்லது பார் எனப் படும். அதில்நிற்கும் வில்லாளியின் பார்வை, முன்னிருக்கும் எதையும் நோக்கிச் செயற்படும் வகையில் தடுப்பின்றி இருக்கவேண்டும். துணைப் பீடத்திற்கும் கொடிஞ்சிக்கும் இடையில் தேரோட்டி நிற்பார். தேர்த்தட்டின் மற்ற இடங்களில் போராயுதங்கள் விரவிக் கிடக்கும். தேர்த்தட்டின் கீழே பாதம் என்பது ’வெளித்திட்டு சிற்பவேலைப்பாடுகளைக்’ (projected sculpt work) கொண்டிருக்கும். கொடிஞ்சிக்கும் முன்னால் தேரடியில் தேர்நுகம் பிணைக்கப் பட்டிருக்கும்.

தேர்கள் அலங்கார ஊர்தியாக மட்டுமின்றி, போரிலும் பயன்பட்டன. அலங்கார ஊர்தி கனமாகவும், போர் ஊர்தி எடை குறைந்தும் இருந்தன. பொதுவாகச் சகடைகள் மாடுகளால் இழுக்கப்படும்போது, மாந்தர்கள் ஓட்டுந் தேர்கள், குதிரைகளால் இழுக்கப்படும். (இற்றைக் கோயில் தேர்களில் உள்ள குதிரைப் பொம்மைகள் இதையுணர்த்தும்.) தேரோட்டுபவன், தேர்ப் பாகன், தேர்வலவன் என்றும் அழைக்கப்பட்டான். தேர்ச்சக்கரங்கள் தொடக்க காலத்தில் முழு வட்ட மர உருளைகளாய் இருந்தன. சக்கரங்களுக்கு இருப்புப் பட்டை வார்த்து, இழைத்து, நெரித்து, அணைக்கும் மாழை நுட்பம், பெருங்கற் காலத்தே, கொங்கிற் கிடைத்த இருப்புக் கனிமத்தாற் தமிழர்க்குத் தெரிந்தது, நாட்டுப் புறமெங்கும் கொல்லர் பட்டறைகள் (பட்டடை>பட்டறை என்ற சொல் எழுந்ததே தேர்ப்பட்டை வேலையை வைத்துத் தான்.) வாள், வேல் மட்டுமல்ல, பட்டைகளும் செய்து கொண்டிருந்தன. நாளாவட்டத்திற் சங்க காலத்திலேயே ஆரங் கொண்ட சக்கர அடவுகள் (spoked wheel design) வந்து விட்டன. சக்கரங்களைத் தேர்க்கால்கள் என்றுங் குறிப்பர்.

சக்கரங்களும், ஆரங்களும், தேர்க்கால் அச்சுகளும், அச்சாணிகளும், தேர்த் தட்டும், பாரும், கொடிஞ்சி/கிடுகும், பாதங்களும், தேர்நுகமும் கொண்ட தேரடி மொத்தத்தில் ஓர் உறுதியான கட்டமைத் தொகுவம் (structural integrity) கொண்டிருக்க வேண்டும். இதிற் சிறிது ஆட்டங்காணினும், உறுதியில்லாது போனாலும், தேரடியோடு மேற்கொண்டு சப்பரம், விமானம் எனும் இரண்டு கட்டுமானங்கள் ஒன்றிணைந்து உருவாகுந் தேர் தடுமாறிப் போகும். 

நாட்டுப்புறங்களில் கோயில் திருவிழா நடக்கும் போது சகடைகளில் கடவுட் திருமேனிகளை நிறுத்தி வைத்து, மாடுகளாலோ, மாந்த ஆற்றலாலோ இழுப்பார். (சகடைகளுக்கு வடங்கட்டியிழுத்து நான் எங்கும் பார்த்ததில்லை. தேர்களுக்கே, உராய்வு/இழுப்பு/நகர்ச்சி பொறுத்து 2,4 வடங்கள் கட்டுவது உண்டு.) சகடை, தேரளவிற்குக் கனமாகவும் மீ எடை கொண்டதாகவும் இருக்காது. ஆனாலும் தூக்கு வையத்தையும், அதன் மேலிருக்கும் ஊருலவர் திருமேனியையும் வைத்திழுக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். இப்பொழுதெல்லாம் சகடைகள் பெரும் நகரக் கோயில்களிலும், மிகுந்த வறிய கோயில்களிலும் இருப்பதில்லை. நடுத்தரச் செழிப்புள்ள நாட்டுக் கோயில்களிலேயே இருக்கின்றன.

சிலபோதுகளில் கோயிற் சகடையின்மேற் சப்பரத்தை நிறுத்திக் கயிறுகளாற் பிணைத்துத் திருமேனி உலாக்கள் வருவதுண்டு. செல்வஞ் செழிக்கும் கோயில்களில் சப்பரமும், சகடையும் மர வேலைப்பாட்டில் சேர்ந்தே உருவங் கொண்டு, கயிற்றுப் பிணைப்பில்லாது அமைவதும் உண்டு. அதையும் சப்பரம் என்பார். விதந்து சப்பர வண்டி என்பதுமுண்டு. இழுத்துப் போகும் சப்பரமும், தூக்கிப்போகும் சப்பரமும் பயன்முறையால் வேறுபடும். சப்பர வண்டியின் கீழ்த்தட்டுக் கனமாக இருந்து மரச்சிற்ப வேலைப்பாடு சேர்வதே தேரடி எனப்படுகிறது. தேரடி, கனமாகக் கனமாக மாந்த ஆற்றலில் இழுப்பது சரவற்படும். 2,4 என வடமிட்டு பலர் தேரை இழுப்பார்.  

[புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தேர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் செவ்வாய்க் கிழமையே நடைபெறும். அதனால் தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்றே சொல்லுவார்கள். ஊரே திரண்டு கொண்டாடும் விழா இது. ஊர்க்கோயில் வழமையில் சாதிச் சண்டைகள், ஊர்ச்சண்டைகள் எழும் அதிரடி அவலமும் உண்டு. ஊர்ச்செவ்வாயில் ஒருவேளை ஊரே இரண்டுபட்டுக் கூடப் போகலாம். எங்கள் பக்கத்திலுள்ள கண்டதேவி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.]

பொதுவாக தேரடிகளின் கீழ்த்தட்டுக் கட்டுமானமும் சிற்ப வேலைப்பாடுந் தான் இற்றைக் காலத்தில் அவற்றைப் பார்க்க வைக்கின்றன. இந்தத் தேரடிகளுக்கு மேல் தான் விழாக் காலத்திற் கூம்புகள் [சப்பரத்திற்கு மேலெழும்பும் வெட்டுக் கூம்புகள் (frustum of a cone; இந்தக் கூம்புகளின் அடிச்சுற்று வட்டமாய் இருக்காது. இவை சதுரமாகவோ, பல்கோணமாகவோ இருந்து, தேர்த்தட்டோடு இணங்கும் வகையில் அழகு காட்டி நிற்கும்.) கொடுங்கைகள் (கூம்புகளின் பக்க முனைகளிற் பொருத்தப்படும் மரக்கைகள்), கூவிரம் (கூம்புகளுக்கு மேற் குவிந்து பொருந்தும் அரைக்கோளம்), கலசம் (கூவிரத்திற்கும் மேல் பொருத்தப்படும் கூர்மையான பகுதி; ஒரு காலத்தில் மரத்தாலானது; இந்தக் காலத்தில் மாழையாகவே பொருத்தப்படுகிறது.) போன்றவற்றை உறுப்பாகக் கொண்ட விமானத்தை பயன்பாட்டிற்குத் தக்க உயர்த்தியும், குறைத்தும் எழுப்பித் தேர்களை உருவாக்குகிறார்கள்.

விமானத்திற் கூம்பு கட்டும் வேலைப்பாடு விமானத்துள்ளே பல தூண்களையும், சட்டங்களையும், உத்தரங்களையும் கொண்டிருக்கிறது. (முற்றிலும் கட்டமைப் பொறியியல் - structural engineering - தழுவியது கூம்பையும் கூவிரத்தை மூடினாற் போல் தேர்ச்சீலை வேயப்படுகிறது. தேர்ச்சீலையில் பல பின்னல் வேலைப்பாடுகளும் ஓவிய மெருகேற்றலும் கலந்திருக்கும். விமானத்தின் பரிவட்டத்தில் அழகிய வண்ணந்தீட்டிய ஆல வட்டங்களையும், தோரணங்களையும் தொங்கவிட்டு அலங்கரித்திருப்பார். (பீடுநடையோடு நகர்ந்துவரும் தேரழகு பார்த்துப் பருக வேண்டியதாகும். ’திருவாரூர்த் தேரழகு’ என்பது சொலவடை.) 

சகடை, சப்பரம், விமானம் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த கட்டுமானமே ”தேர்” எனப்படுகிறது. (இந்த 3 கட்டுமானங்களுக்கும் பாகங்கள் உண்டு.) தேர் எனுஞ் சொல்லிற்கு ”உயர்ந்தது” என்ற பொருளுண்டு. ’த’கரம் இல்லாத சொல்லும் ’ஏல்ந்து, ஏர்ந்து’ காணப்படும். ஒருவகை உயர்மரத்தை தேக்கு என்கிறோமே? நினைவு வருகிறதா? தேர்ந்தது உருவத்திலும் கருத்திலும் உயர்ந்து நிற்கிறது.

சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே உருள்-உருளி-உருளம் என்ற இணையும் உண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும், இரண்டாம், மூன்றாஞ் சொற்கள் வண்டியையும் குறித்தன. எப்படிச் சோளம்>சோழம் என்பது வடகிழக்கிற் தெலுங்கில் போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்கள்) இன்னும் வடக்கே போய்த் தகரமாய்த் திரிகிறதோ, அது போல உருளம்>உருடம்>(உ)ருதம் என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலி ஏறி ரதமாகும். தமிழரில் பலரும் ரதம்/தேர் வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட் சொற்களே. ரதத்தையொட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவிருக்கின்றன. இன்னும் பார்க்கின், நம் சக்கரத்திற்கும் மேலை மொழிகளில் இருக்கும் chariot, car என்பதற்கும் கூட ஆழ்ந்த தொடர்புண்டு. (மூலந் தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணை பேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க நம்மில் எத்தனை பேர் முன்வருவர்? மரபோடு பொருத்தா விடின், மகிழுந்து என்ற சுற்றிவளைத்துக் கால காலத்திற்கும் புழங்க வேண்டியது தான்; அன்றேல் கார் என்று கடன்வாங்கி எழுத வேண்டியது தான்.  

நம்மூர்களிற் தேரடி நிலைகொள்ளும் இடங்கள் தேர்நிலைகள், தேர்முட்டிகள் எனப்படும். தேர்நிலையம் என்பதை இணைப்படுத்தியே பேருந்துநிலையம் என்ற சொல் 60/70 ஆண்டுகள் முன் எழுந்தது. தேரடிகளை தகரம் போட்டு மூடி வைத்திருப்பர். விழாக்காலங்களில் தேரடி வீதிகளில் மற்ற கட்டுமானங்கள் சேர்ந்து தேர் உருவாகும். (அண்மைக் காலங்களில் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் - Bharath Heavy Electricals Limited - உதவியுடன் பல கோயிலார் தேர்ச் சக்கரங்களை முழுக்க எஃகாக மாற்றி வருகிறார். திருவாரூர் ஆழித்தேரிற் தொடங்கிய நுட்பம் இன்று பல தேர்களுக்கும் வந்துவிட்டது. கூடவே சக்கரங்களுக்குத் தாங்கிகளையும் (bearings) பொறுத்துகிறார்கள். தேர் செல்லும் வீதிகள் கற்காரை (concrete) பாவியும் மாறிவருகின்றன. தேர்களை இழுப்பது எளிதாகி வருகிறது. இற்றைத் தொழில்நுட்பம் கொஞ்சங் கொஞ்சமாய் பழைய தேருக்குட் புகுவது சுவையாரமான செய்தியாகும்.) 

சிவ, விண்ணவக் கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா போன்றே, நாக பட்டினம் அன்னை வேளாங்கன்னி, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் போன்ற கத்தோலிக்க  ஆலயங்களிலும்  சப்பரத் திருவிழா நடைபெறுகிறது.

இவ்வளவு நேரம் தேர்கள், தேரின் பாகங்கள் [தேரடி (இதன் பாகங்களான சக்கரங்கள், ஆரங்கள், தேர்க்கால் அச்சுகள், அச்சாணிகள், தேர்த்தட்டு,  பார், கொடிஞ்சி/கிடுகு, பாதங்கள், தேர்நுகம்),  சப்பரம் (இதன் பாகங்களான கால்கள், தூண்கள், கீழ்த்தட்டு, மேற்றட்டு, கவோதங்கள்) ,  விமானம் (இதன் பாகங்களான கூம்பு, கொடுங்கை, கூவிரம், தேர்ச்சீலை, கலசம்)]பற்றிப் பேசினோம்.

இனி வேறொரு விரிவு பற்றிப் பார்ப்போம். பறவைகள் மாந்தனை என்றுமே ஈர்த்தவை. சிறகுகளைப் ”பக்பக்” (பக் என்ற ஒலிக்குறிப்புச் சொல்லிலிருந்தே பக்கி>பக்சி>பக்‌ஷி>பட்சி என்ற சொற்கள் தமிழிலும் பாகதத்திலுமாய் மாறிமாறிப் புகுந்து உருவாயின.) என்று அடித்துக்கொள்ளும் செயல் (தமிழில் ’பறபற’ என்ற ஒலிக்குறிப்பே பறவை என்ற சொல்லை உருவாக்கியது.) பறத்தலுக்குத் துணையாய் இருப்பதால், தேரில் தேரடியில்லாத சப்பரமும், விமானமும் கொண்ட பகுதியில் இறக்கைகளைப் பொருத்தி வானத்திற் பறக்க முடியும் என்ற கருத்தீடு பரவத் தொடங்கி விமானம் என்ற சொல்லின் பொருட்பாடு மேலும் வியல்ந்தது. சப்பரம் விமானத்துளே பொருந்தியதாயும் அடவு விரிந்தது புப்பக விமானம், எந்திர விமானம், மயில் போன்ற அமைப்பு என்ற தொன்மங்கள் எல்லாம் இப்படியெழுந்தவையே. இவை உண்மையிலே இருந்தனவா, வெறும் கற்பனையா என்பது ஆய்விற்குரிய விதயம்.

இற்றைப் பறனைகளும் தம்முடைய சிறகுகளை விரித்து, வளித்தாரைகளின் (jet streams) ஆற்றலால் பறக்கின்றன. இவற்றை விமானம் என்பது பொருத்தந் தான். அதே பொழுது, பறனை என்பது நாம் எளிதாகச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. (சப்பரம் போல் அமைப்பிற்றான் இப்பொழுது பயனாளர் பயணிக்கிறோம். பயணி இருக்கைகள் பார்/துணைப்பீடத்திற்கு இணை யானவை. கொடிஞ்சிக்கு அருகில் தேரோட்டி/தேர்வலவன் இருந்தது போல் இன்று பறனையோட்டி/பறனை வலவன் இருக்கிறார். கொடிஞ்சி என்றசொல் cockpit ற்கு இணையானது. தேர்ச்சீலைபோல் இன்று பறனை சுற்றி வனையும் மாழைத்தகடு / நார்த்தகடு இருக்கிறது. விமானத்திற்குள் உள்ள சட்டகங்கள் இன்றும் கட்டமைத் தொகுவம் அளிக்கின்றன. அக்காலத்துக் கூவிரம், கலசம் போலப் பறனையின் வால்ப் பகுதி உயர்ந்து இருக்கிறது. குதிரை / சிறகுக்குப் பகரியாய் தாரை எந்திரப்பொறி பறனையைப் பறக்கச் செய்கிறது.)

உலகமெங்கணும் தேர்கள், சகடங்கள், உருளங்கள் ஒன்றுபோலவே காட்சி யளிக்கின்றன. இவையெலாம் எங்கோ ஓரிடத்தில் நுட்பியலாய் எழுந்தன போலும். பிற்கால வளர்ச்சியான பல்வேறு வண்டிகளும் பறனைகளும் இத் தேர்களிற் தொடங்கியவையே. இவற்றைச் செய்வதில் நமக்கும் ஒரு மரபு இருக்கிறது. இது தெரிந்தால் இற்றை நுட்பியலை நம் வயப்படுத்துவதில் உதவியாய் இருக்குமென்றே இக்கட்டுரை எழுதினேன். தேர் நுட்பங்கள் ஏதோ மேலை நாட்டிற் கடன் வாங்கியவை, நாமெங்கோ காட்டு விலங்காண்டிக் காலத்தில் மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டிருந்தோம் என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். (’திராவிடம்’ பேசும் ஒருசில தமிழர் இத் தாழ்வு மனப்பான்மையை ஊக்குவிக்கிறார். நம் மரபுகளை ஆழ்ந்து ஆய்வு செய்வதற்கு மாறாய் தாம் வேறெங்கோ பெற்ற அரைகுறை அறிவை கிளிப்பிள்ளையாய் வெளிப்படுத்துவதே சிலருக்குக் கடமை ஆகிறது. கோயில் தொடர்பாய் எது இருந்தாலும் அதை மறுதலிப்பதே சிலருக்கு வாடிக்கையானது.)  பழங்காலப் போக்குவரத்துப் பொறியியலில் நம் பங்களிப்பு கணிசமானதே.

அன்புடன்,
இராம.கி.