Monday, March 30, 2020

Certain Biotech Words

அகுதோபர் 2015 இல் முனைவர் கோபால் பாண்டி என்பார் தமிழ் உலகம் மடற்குழு வழியே ஒரு தமிழாக்க உதவி கேட்டார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக உயிர்நுட்பியற் பள்ளியின் தாவர உயிர்நுட்பியற் துறையில் இருந்து (Department of Plant Biotechnology) இப்படியொரு உதவிகேட்டது மகிழ்ச்சி அளித்தது. (plant - ஐ நிலத்திணையென ஒருசாராரும், தாவரமெனும் பழஞ் சொல்லைப் பயிலலாமென வேறாரும் சொல்கிறார்.)அவர் கேட்ட சொற்கள் உயிர்நுட்பியலுள் ஆழமானவை. பொதுப்போக்கிற் சொல்ல முடியாது. ஓரளவு உயிர்வேதி நுட்பியல் (biochemical technology) படித்தததால் என்னாற் புரிந்து கொள்ளமுடிந்தது. அவர் கேட்ட சொற்களுக்கு வருவோம்.

1. ஒருவரோடு இன்னொருவருக்கு ஒட்டிக்கொள்ளும் நோய் வெருவியைத் (virus) தொற்றென்கிறோம் அல்லவா? ஆங்கில விளக்கமாய், epidemic (adj.) c. 1600, "common to or affecting a whole people," originally and usually, though not etymologically, in reference to diseases, from French épidémique, from épidemié "an epidemic disease," from Medieval Latin epidemia, from Greek epidemia "a stay in a place; prevalence of an epidemic disease" (especially the plague), from epi "among, upon" (see epi-) + demos "people, district" (see demotic) என்றுசொல்வர்.

epidemic - ஐ நாளிதழ்களும், தாளிகைகளும் தொற்றுநோயென்றே சொல்கின்றன. இதில் தொற்று என்பது பெயரடை முன்னொட்டாகவும் நோய் என்பது பெயராகவும் ஆகிறது. நோய் பற்றிப் பேசுகையில், தொற்று முன்னொட்டாவது சரி. ஆனால் பல்வேறு நோய்கள் தொற்றுவதால், தொற்றின் மாகனியம் (mechanism) பற்றிப் பேசும்போது தொற்றைப் பெயராக்கி, நோயைப் பெயரடையாக்க வேண்டாமோ? இப்புரிதலோடு, epidemiology (n.) என்பதை "study of epidemics, science of epidemic diseases," 1850, from Greek epidemios, literally "among the people, of one's countrymen at home" (see epidemic) + -logy என்று பார்ப்போம். தொற்றுப்பொதுமை பேசுவதால், நோய்த் தொற்றியலே Epidemiology க்குச் சரியாகும்.

2. அடுத்தது Genomics. தமிழில் chromosome என்பதைச் குருமியமென்றே நான் எழுதிவந்திருக்கிறேன். நம் ”குருமமும்” கிரேக்கரின் chroma வும் ஒரே நிறப் பொருளைச் சுட்டிவந்தன. தவிர ஈனை gene க்கும் ஈனியலை genetics க்கும் இணையாய்ப் பயன்படுத்தியிருக்கிறேன். குருமியத்தின் ஈற்றை ஈனோடு சேர்த்து genome-ஐ ஈனியமென்று சுருங்கக் குறிக்கலாம். [பலருஞ் சொல்லும் மரபணு, மரபணுவியல் போன்ற சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. (நுட்பத்தோடு தேவையற்ற தொழிலைச் சேர்ப்பதுபோல்) ஊடுவந்து பொருள் திரிக்கும் அணுவென்ற இடைச்சொல் தேவையா? கண்டதற்கு எல்லாம் அணுவென்பது நம்மூரில் மரபாகவே ஆகிவிட்டது.

gene க்கு இணையாக மரபென்று மொட்டையாய்ச் சொல்வதிலும் எனக்கு ஒருப்பாடில்லை. தொல்காப்பியத்தில் மரபியலென்று வருகிறது. அது genomics - ஐயா குறிக்கிறது? ஓர்ந்து பாருங்கள். மரபென்பது வெறும் பழக்கத்தால் வருவது. ஒன்றைத் திருப்பித்திருப்பிச் செய்துகொண்டிருந்தால் அது நம் மரபாகிவிடும். மரபென்று சொல் மருவுதல் (=தழுவுதல்) வினையில் எழுந்தது.. மருவு>மருபு>மரபு என்றாகும். அதற்கும் உயிரூட்டங் கொடுக்கும் genetics வழிக்கும் தொடர்பேயில்லை. gen என்றுதொடங்கும் ஆங்கிலச்சொற்களுக்கு இணையாக ஈனை வைத்துத் தமிழ்ச்சொற்களை ஆக்கமுடியும். மரபால் இது முடியாது.] இப்பொழுது Genomics என்பதை ஈனியவியல் என்று சுருக்கமாய்ச் சொல்லலாம்.

3. protein என்பதை புரதமென எழுத்துப் பெயர்த்தே இது வரை பயின்றோம். அப்படி நாம் தொடர்ந்திருக்கத் தேவையில்லை. proto என்ற முன்னொட்டின் அடிப்படையில் முதன்மைப் பொருளிற்றான் protein என ஆங்கிலத்திற் பெயர் இட்டார். ”பெரியது” என்பதற்கு big-ஓடு முதன்மைப் பொருளும் தமிழிலுண்டு. ”இவர் பெரியவர்” என்றால் ”முதன்மை ஆனவர், மூத்தவர்” எனப் புரிந்து கொள்கிறோம். எனவே புரதமென்பதைப் பெருதமென்றே நல்லதமிழிற் சொல்லலாம். அது முதன்மைப் பொருளோடு தமிழ்ச் சொல்லாகவும் இருக்கும்.

அடுத்தது proteome என்ற தொகுதிச்சொல். இதை The proteome is the entire set of proteins expressed by a genome, cell, tissue or organism at a certain time. More specifically, it is the set of expressed proteins in a given type of cell or organism, at a given time, under defined conditions. The term is a blend of proteins and genome என்று ஆங்கிலத்தில் விளக்குவர். பெருதத்திலிருந்து இதைப் பெருதியமென்று சொல்லலாம். அப்பொழுது ”Proteomics is the large-scale study of proteins, particularly their structures and functions” என்ற வரையறையில், Proteomics பெருதியவியல் ஆகும்.

4. தமிழிற் சில்லெனிற் சிறியது, நுணுகியது. உயிரிலா நுண்பொருளையும் சில்லென்பதால் உயிர்ச் சில் bilogical cell ஐச் சிறப்பாகக்குறிக்கும். (ஈன்களைப் படியெடுத்துக் குருமியங்கள் இரட்டையாகிச் சில் பெருகும் முன்), ஊட்டுப் பொருள்களை (feed materials) உள்ளிழுத்துச் செரித்து (digest) கழிவுகளை சுவர் வழி பொழிவித்து உயிர்ச்சில் தள்ளும். பொழிவித்தல் = வெளித்தள்ளல். [மழை பொழிகிறது = அடைமழை பெய்கிறது.] (செரிப்)பொழிதைகள் என்பவை உள்ளேகும் ஊட்டுப்பொருட்கள் செரிந்தபின், சில்லுக்குள் உருவாகிச் சுவர்வழி பொழிந்து வெளியேறும் பொருள்களாகும். இவற்றை metabolites என்பார். சுருக்கம் வேண்டுமெனில் செரியெனும் முன்னொட்டை விட்டுவிடலாம்.

செரித்துப்பொழிக்கும் வினையை ஆங்கிலத்தில் metabolism (n.) in physiology sense, 1878, from French métabolisme, from Greek metabole "a change," from metaballein "to change," from meta- "over" (see meta-) + ballein "to throw" (see ballistics) என்று சொல்வர். தமிழிற் செரிப்பொழிவு எனலாம். அடுத்து “Metabolomics is the scientific study of chemical processes involving metabolites. Specifically, metabolomics is the "systematic study of the unique chemical fingerprints that specific cellular processes leave behind", the study of their small-molecule metabolite profiles" என்று ஆங்கிலத்திற் சொல்வர். தமிழில் Metabolomics செரிப் பொழிவியல் எனலாம்.

5. அடுத்தது Epigenomics. இதற்குமுன் Epigenetics என்பதையும், epi என்ற முன்னொட்டையும் புரிந்துகொள்ளவேண்டும். epi- before vowels reduced to ep-, before aspirated vowels eph-, word-forming element meaning "on, upon, above," also "in addition to; toward, among," from Greek epi "upon, at, close upon (in space or time), on the occasion of, in addition," from PIE *epi, *opi "near, at, against" (cognates: Sanskrit api "also, besides;" Avestan aipi "also, to, toward;" Armenian ev "also, and;" Latin ob "toward, against, in the way of;" Oscan op, Greek opi- "behind;" Hittite appizzis "younger;" Lithuanian ap- "about, near;" Old Church Slavonic ob "on"). A productive prefix in Greek; also used in modern scientific compounds (such as epicenter).இம்முன்னொட்டு மேலென்று தமிழிலுமிருக்கிறது.

தவிர, epi என்ற சொல்லோடு தொடர்புடைய உம்பர் என்பதுமுண்டு. தமிழில் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். (post-modernism என்பதைப் பின் நவீனத்துவம் என்று பல எழுத்தாளர் பயில்வர். அதை நான் ஏற்பவன் இல்லை நவீனத்தின் நல்ல தமிழை வைத்து ”முகனப்பின்னியல்” என்றே நான் சொல்வது வழக்கம்.) இங்கே ஈனுக்கும் மேல் என்  பொருள் வரும்படி epigenetics என்பதை ஈனுக்கு மேலியல் என்று சொல்லலாம். ”க்கு என்பது தொகையாக விளங்கும்படி வைத்து ஈன்மேலியல் என்றும் சொல்லலாம்.

Epigenetics is the study, in the field of genetics, of cellular and physiological phenotypic trait variations that are caused by external or environmental factors that switch genes on and off and affect how cells read genes instead of being caused by changes in the DNA sequence. இனி Epigenomics என்பதை ஈனிய மேலியல் என்று சொல்லலாம்.

Epigenomics is the study of the complete set of epigenetic modifications on the genetic material of a cell, known as the epigenome. The field is analogous to genomics and proteomics, which are the study of the genome and proteome of a cell (Russell 2010 p. 217 & 230).

எனவே என் பரிந்துரை:

1)       Epidemiology = நோய்த்தொற்றியல்
2)       Genomics = ஈனியவியல்
3)       Proteomics = பெரிதியiவியல்
4)       Metabolomics = செரிப்பொழிவியல்
5)       Epigenomics = ஈனியமேலியல்

என்பவையாகும். இவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.

அன்புடன்,
இராம..கி.

No comments: