Friday, January 29, 2021

Versus

Versus என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன? - என்று தமிழ்ச்சொல்லாய்வுக் களத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான என் விடை இது.

-----------------------------   

versus (prep.)

mid-15c., in legal case names, denoting action of one party against another, from Latin versus "turned toward or against," past participle of vertere "to turn," from PIE *wert- "to turn, wind," from root *wer- (2) "to turn, bend."

வாழ்தல் = வழிப்படுதல்; வாழகை>வாடகை>வாரகை = ஓரிடத்தில் அல்லது ஒருவீட்டில் வாழ்தலுக்குக் கொடுக்கும் தொகை. வாழம்>*வாடம்>வாரம் = ஒரு குறிப்பிட்ட நிலத்தை விளைச்சலுக்காக எடுத்து வழிப்படுத்துவதற்குக் கொடுக்கும் தொகை அல்லது பகுதி விளைச்சல். இப்படி ஒரு தொகை கொடுப்பதால் வரம்பிற்குள்ளான உரிமையானது வாடகை, வாரத்தின் மூலம் கிடைக்கிறது. எனவே வாரத்திற்கு = (வரம்புடன் கூடிய) உரிமை என்ற பொருளும் வந்து சேரும். வரியும் (tax) ஒருவகை வாரமே. (அரசாங்க உரிமை). “நடையல்லா வாரங்கொண்டார்” என்பது கம்பராமாயணம் மாரிச.180. 

வாரத்திற்குப் பங்கு என்ற பொருளுமுண்டு. “வல்லோன் புணரா வாரம் போன்றே” - தொல்காப்பியம் பொருள் 622. உரை. 

முடிவில் வாரத்திற்கு (உரிமையின் சார்பால் எழும்) தடைப்பொருளுமுண்டு, (impediment, obstacle. ”வாரம் என் இனிப் பகர்வது” - கம்பரா. அயோத், மந்திரப் 39. 

வாரத்திற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு. 

வாரம்படுதல் = ஒருபக்கம் சார்தல். to be prejudiced or biased, to show partiality.  குற்றவாளியின் வாரம் போல். குற்றவாளிக்கு மாற்றுவாரமும் உண்டு. வீட்டில் தாழவாரம் என்பது ஒரு பக்கம் சாய்ந்த கூரை. இந்தப்பக்கம் அந்தப்பக்கத்திற்கு வாரமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.  

வாரம் பிரித்தல் = விளைச்சலைக் குடிவாரம், மேல்வாரம் என்று பிரித்துக்கொள்ளுதல். 

வாரித்தல் = தடுத்தல் to hinder, obstruct. ஆணையிட்டுக் கூறல் to swear.

வாரிப்பு = தடுப்பு/

வாரி = தடை impediment, obstruction.

வாரிது>வாரிதம் = தடை, obstacle. வாரிதத்தை வாரிதை என்றும் சொல்லலாம்.

வாரியிறைத்தல்/வாரிவிடுதல் = சிதறவிடுதல், எனவே அழித்தல்

வாருதல் = கவருதல் “மாதர் வனைதுகில் வாரு நீரால்” (கம்பரா. ஆற்று. 15)  

வழக்கு என்பது உரிமை கோருதல். அந்த வழக்கே versus இக்குச் சரியான இணைச்சொல்.  வாடகை, வாரம், வரித்தல், வாரித்தல், வாரிதம், வாருதல், வழக்கு போன்றவை தொடர்புள்ள சொற்கள் இந்தத் தொடர்பைப் புரியாது சொல்லாக்க முனையவேண்டாம். (வழங்குதலில் எழும் வழக்கும், சட்டச்சிக்கலில் உரிமை வழிவரும் வழக்கும் வேறுபட்டவை).

X versus Y = X வழக்கு Y (விரித்துச் சொன்னால், X ஓடு Y க்கான வழக்கு)

அன்புடன்,

இராம.கி.  

Wednesday, January 13, 2021

கடலை

 (வேர்க்) கடலைக்கான (Peanut) சொற்பிறப்பை ஒரு நண்பர் தனிமடலில் கேட்டார். நல்ல கேள்வி. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இதைச் சொல்ல மறந்துவிட்டார். ஏன் மறந்தார்? - என்று தெரியாது, ஆனால் ”கடலைக்கட்டி, கடலைக்கம்பி, கடலைக்காடி, கடலைக்காய், கடலைக் கொட்டை, கடலைச்சுண்டல், கட;லைப் பட்டாணி, கடலைப் பணியாரம், கடலைப் பயறு, கடலைப்பருப்பு, கடலைப்புளிப்பு, கடலைமணி, கடலையிடல், கடலையுருண்டை, கடலையெண்ணெய்” ஆகிய கூட்டுச்சொற்களைக் கொடுத்துள்ளார். வேர்க்கடலை, நிலக்கடலை, கச்சான், கலக்கா, மல்லாட்டை, மணிலாக்கொட்டை என்றெலாம் அழைக்கப்படும் peanut நம்மூரில் உருவானதல்ல. நடுத் தென்னமெரிக்காவில் உள்ள  பிரசீலில் எழுந்து போர்த்துகேசியரால் உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கடலை அதுவாகும், 

Peanut (n.) 1807; see pea + nut. Earlier, and still commonly in England, ground nut, ground pea (1769). The plant is native to South America; Portuguese traders took peanuts from Brazil and Peru to Africa by 1502 and it is known to have been cultivated in Chekiang Province in China by 1573, probably arriving with Portuguese sailors who made stops in Brazil en route to the Orient. பிலிப்பைன்சு நாடும் போர்த்துக்கேசியர் குடியேற்றத்திற்கு ஆட்பட்டதே. அதன் தலைநகரான மணிலா வழியாக 16 ஆம் நூற்றாண்டில் நமக்கு அறிமுகம் செய்யப் பட்டது. வேர்க்கடலைக்கு முன்  நம்மூர்க் கடலைகளைப் பார்க்கவேண்டும். 

அதற்கும் முதலில் pea (n.) என்ற சொல்லைப் பார்த்துவிடுவோம். "the seed of a hardy leguminous vine," a well-known article of food, early or mid-17c., a false singular from Middle English pease (plural pesen), which was both single and collective (as wheat, corn) but the "s" sound was mistaken for the plural inflection. From Old English pise (West Saxon), piose (Mercian) "pea," from Late Latin pisa, variant of Latin pisum "pea," probably a loan-word from Greek pison "the pea," a word of unknown origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார், Klein எனும் சொற்பிறப்பியலார் Thracian or Phrygian என்ற நடுக்கடல் நாடுகளைச் சேர்ந்த பழங்கால மொழிகளிலிருந்து கிளைத்திருக்கலாம் என்பார்..

எனக்கு வேறுமாதிரித் தோன்றுகிறது. தமிழில் வித்து என்பது வித்யு> விஜ்ஜு> bijju>biiju என வடக்கே திரியும். கிரேக்க pison க்கும், சங்கத biiju விற்கும் தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது. பயற்று விதைகளைத் தமிழில் பருப்பு என்றே சொல்வோம். பாசிப்பருப்பு ( mudga- green gram), கருப்பு உளுந்து (māṣa- black-gram), கடலைப் பருப்பு (caṇaka- bengal gram), பட்டாணிப் பருப்பு (kalāya-field pea), எள்ளு (tila-sesame), ஆளி (atasī-linseed), கடுகு (sarṣapa- mustard) and மஞ்சிராகப் பருப்பு (masūra-lentils. இது வடக்கே துவரம் பருப்பிற்குப் பகரியாய்க் கொள்ளப்படும். இராகம் = அரத்த நிறம். மஞ்சு = மஞ்சள் நிறம். மஞ்சள், இரத்த நிறங்கள் கலந்த பருப்பு.)

கடலைப் பருப்பை,  கூர்ச்சரம்,  இராசத்தானம், அரியானம், உத்தர/மத்தியப் பிரதேசங்கள், பீகாரில் சணா (Chana) என்றும், பஞ்சாபில் சோலே ( Chhole) என்றும், மேற்கு வங்கத்தில் சோலா (Chola) என்றும்,  ஒடியாவில் பூத்து (Boot) என்றும், அசாமில் புத்மா (Butmah) என்றும்,  மராட்டியத்தில் அர்பரா ( Harbara) என்றும், ஆந்திரத்தில் சணகலு (Sanagalu) என்றும், கருநாடகத்தில் கடலெ (Kadale) என்றும், கேரளத்தில் கடல (Kadala) என்றும்  சொல்லப்படும். தமிழில் சணகம், சணாய் என்றும் சொற்களுண்டு. இரண்டாய்ப் பிளந்து பொட்டிய கடலையைப் பொட்டுக் கடலை என்பார். சங்கதச் சாரக சங்கிதையில்  சணக (Chanaka) என இச்சொல் பயிலும். இதன் விதப்புகளை, இந்தியாவில் வங்கக் குருமம் (Bengal gram. குருனை = grain, குருமம் = gram; பருப்பு = dal) என்றும், மேல்நாட்டில் garbanzo or garbanzo bean or Egyptian pea என்றும் சொல்வார். நடு ஆங்கில மொழியில் cycer என்றும், இலத்தீனில் cicer என்றும். கிரேக்கத்தில் krios, Macedonian கிளை மொழியில் kikerros என்றும்,  ஆர்மீனியனில் siseṙn என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Cicer arietinum என்று தாவரவியலில் சொல்லப்படும் கடலையானது, Fabaceae குடும்பத்தில், Faboideae துணைக் குடும்பத்தில், உள்ள ஆண்டுப் பயறாகும். (annual legume (n.) - plant of the group of the pulse family from French légume (16c.), from Latin legumen "pulse, leguminous plant," of unknown origin.  பொதுவாகக் குருனைகளைக் காட்டிலும் குருமங்களில் பெருதம் (protein) அதிகம். மரக்கறி சாப்பிடுவோர் குருமம்/ பருப்பை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பார். கடலைப் பருப்பு, மிக முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் பயிராக்கப் பட்டது. இந்தியாவில் பயிராகும் பருப்புகளில் 40% க்கும் மேல் விளைவது கடலைப் பருப்பே. 

நடுக்கிழக்கு நாடுகளில் 7500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடலைப்பருப்பின் முந்தைய எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டூள்ள்ளன. கடலைப் பருப்பில் 2 வகைகளுண்டு.  பெரிதானதைக் கொண்டைக் கடலை (கொண்டை போல் மொத்தையானது.  வெளிர் தேன் நிறக் காபூலிக் கடலை - light tan Kabuli என்பர்) என்றும் , வெவ்வேறு நிறங்களில் சிறியதாய் இருப்பதைத் தேசிக் கடலை என்றும் சொல்வர், இரண்டாம் வகைப் பருப்பைச் செடி/கொடிகளிலிருந்து பறிக்கையில் பருப்புத் தோல் பச்சையாகவும். காய்ந்தபின் தேன் (tan), பீது (beige), புள்ளி (speckled), அடர் புகல் (dark brown) கருப்பு (black) என வெவ்வேறு நிறத் தோல்களும் கொண்டிருக்கலாம்.. https://agmarknet.gov.in/Others/bengal-gram-profile.pdf என்ற ஆவணத்தையும் படியுங்கள்.

இனிக் கடலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். செடி, கொடிகளில் காய்க்கும் கடலைப் பயறுகள் பருப்பிற்கு மேல் தோல்கொண்டதோடு, கடினமான தோடும் (pod) கொண்டிருக்கும். தோடுக்கும் தோல்போர்த்திய பருப்பிற்கும் இடையே சிறிது இடைவெளியிருக்கும். பறித்துக் காயப்போட்ட பின், இடை வெளி சற்று பெரிதாகும். அப்போது தோடோடு பருப்பைக் குலுக்கும் போது குடுகுடு சத்தம் எழும். குடுகுடு>கடுகடு என்பதைக் கடலுதல் = ஒலித்தல் என்பார். கடலும் ஒலியைச் செய்யும் பயறுகள் எல்லாமே கடலைகள் தாம். சங்கதத்தில் śimbīdhānya (grains with pods) என்றழைப்பார்.   பாசிப்பருப்பு, கருப்பு உளுந்து , கடலைப் பருப்பு பட்டாணிப் பருப்பு, எள்ளு, ஆளி, கடுகு , மஞ்சிராகப் பருப்பு  ஆகிய எல்லாமே தோடு கொண்ட கடலை வகைகளே. வெளிநாட்டில் இருந்து வந்த வேர்க்கடலையும் தோடுள்ளதே. காய்ந்த வேர்க்கடலையைத் தோடோடு சேர்த்துக் குலுக்கையில் தோட்டிற்குள் கடகட சத்தம் எழும்.

கடகட என்பது கணகண, சணசண என்றும் ஒலிக்கும். சணகம் என்ற சொற் பிறப்பு புரிகிறதா? கடகட>என்பது கக்கட என்றும் சொல்லப்படும். கக்கட> கக்கர என்பது   Macedonian கிளைமொழியில் உள்ள சொல்லான kikerros என்பதற்கு அருகிலுள்ளது. இதிலிருந்து cicer என்ற இலத்தின் சொல்லும், Cicer arietinum என்ற தாவரப்பெயரும் பிறக்கும். நம்மூர்க் கடலைப் பெயரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அன்புடன்,

இராம.கி. 


Monday, January 11, 2021

முலை - 2

முலையை அடுத்து முலையிருக்கும் தளமான மார்பிற்கு வருவோம். இது மார்புக்கூட்டின் முன்பக்கம் (frontside of the chest). மார்பும் முலைச் சொற்பிறப்போடு தொடர்புற்றதே. முல்> மல் >மல்கு>மல்கு-தல்= பெருகிக் கிடத்தல். அதிகமாதல், நிறைதல், செழித்தல், மல் = வளம், மல்லை = வளம், பெருமை; மல்லல் = மிகுதி, பொலிவு, அழகு; நிலத்தில் மல்லிப் பெருகியது மலை. உடல் தசைகள் வளர்ந்து பெருகுவதை மல்லாகுதல் என்பார். மல் ஆனவன் மல்லன்,. மல்+தொழில்= மற்றொழில்= இருவேறு மல்லர் தம் வலிகாட்டிப் போர்புரிதல். மல்காத்தல்= மல்லாத்தல்= மல்லார்தல்= தன் மல்லைக் காட்டி மேனோக்கிக் கிடத்தல், மலர்ந்தாற் போல் கிடத்தல். (”மல்லாக்கப் படுக்காதே ஒருக்களிச்சுப் படு” என்று பெரியோர் சொல்வார்,.) , மல்ங்கியவள் (முலை எழத்தொடங்கிய நிலையில் உள்ளவள் ம(ல்)ங்கை>மங்கை எனப்படுவாள். 

மல்>மர்>மறு>மறம். மல்லைக் காட்டிப் போர்புரிவோன் மறவனென்றும். பெண் மறத்தி என்றும் சொல்லப்பட்டாள். மறவன், மறத்தி காட்டுந்திறன் மறமானது. மல்லம்= மல்லிக் கிடக்கும் கிண்ணம். (முலைக்கு இன்னொரு பெயர்), பள்ளி யறை; மலுந்துகிடத்தல்= மகுந்துகிடத்தல்.(சிவகங்கைப் பக்கம் பயிலும் சொல். நிறைந்துகிடப்பது என்று பொருள் கொள்ளும். மலர்= முலை போல் விரிந்தது. மலிதல், மலிர்தல்= மிகுதல், நிறைதல், விம்மல், to become large,பரத்தல். மலிபு= மிகுதி. முலையில் பால் ஒழுகுவதால், முல்லின் திரிவான மல்லில், ”மலிர்தல் = நீர் ஒழுகுதல்; மலிகு =நீர் ஒழுக்கு” போன்ற சொற்கள் எழும். ”மலிகு” என்ற தமிழ்ச்சொல் milk ஓடு இணைவு காட்டும். பிள்ளைபெற்ற பெண்ணே, முலைப் பால் கொடுக்கமுடியும். பிள்ளை பெறவியலா, பால் கொடுக்கவியலாப் பெண் குமுகத்தில் மலடு எனப்பட்டாள். மலடி= மலடான பெண். மலடன்= பெண் பிள்ளைபெறுவதற்கு விந்துகொடுக்க இயலாத ஆண். மலட்டு ஆ = ஈன முடியாத பசு. மலட்டாறு = நீர் வற்றிய ஆறு. (இங்கே நீரும் பாலும் ஒப்பிடப் படுகின்றன.) 

மல்>மள்>மழ = மல்லி விரியும் இளமை  மளமள= விரைவுக்குறிப்பு. பெருக்கம் குறிக்கவும் பயன்படும். ”மளமள என வளர்ந்தான்”. மளமள>மடமட. ”மடமட என நடந்தது”, மளிகை= விற்கவேண்டிப் பெருகிக்கிடக்கும் பலசரக்கு. மள்> மளு> மளுகு> மருகு> மருவு> மருபு> மார்பு. மார்பு என்ற சொல் முலையின் நீட்சியாய் வளர்ந்தது. மார்பை மாரென்றும் சுருங்கக் குறிப்பார். மார்க்கச்சை= முலைக்கச்சை. மார்பிற்கு வேறு சொற்களாய் அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்பவற்றைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சு சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பைத் தருகிறது. மார்புக்கு மேல் முலை, முலைக்கு மேல் முலைக்கண். மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். அகலமும், ஆகமும் ஒரேமாதிரி எழுந்தவை. உடம்பின் வெளித்தெரி உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம். 

மார்பின் 2 பரிமானக் குறிப்பு நெஞ்சு. துணி நெய்கையில் வார்ப்புநூலும் (warp thread) ஊட்டுநூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படும்,. நெய்வு> நெசவு. நெய்ந்தது> நெய்ஞ்சது> நெஞ்சு. நெஞ்சாங்கூடு = நெஞ்சோடு சேர்ந்த என்புக் கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப்பொருளை அழுத்தும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவித சொற்பிறப்புக் கொண்டவை.  மருவுதல்= மார்பில் தழுவுதல். மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். மருவீடு = சம்பந்தி குடும்பம். மருவுகை= marriage. தமிழ், இந்தையிரோப்பிய உறவைப் பாருங்கள். ஆணும் பெண்ணும் தழுவும்போது, இணையும் பகுதி மருவு>மார்வு>மார்பு எனப்பட்டது. குறிப்பிட்ட விட்டத்திற்குச் செடியின் தண்டு வளர்ந்த பின், வளைக்க முடியாத திண்மையை அது பெறும். அதன்பின் அதை மருவ மட்டுமே முடியும். செடி மரமானதாய்ச் சொல்வோம்.. மருவக்கூடியது  மரம். மருவும் தேவையின்றி இளமையில் இருந்தபோது வளைத்துச் செழித்தது செழி>செடி. மருவுதலுக்கு வேறு திரிவுமுண்டு. மகரம் வகரப்போலி ஆகையால் மருவுதல்>மருமுதல் ஆகும். அதில் உருவான பெயர்ச் சொல் மருமம். மருமம், மம்மம் என்றும் திரியும். மம்மல் (mammal) என்பது முலையுள்ள பாலூட்டி விலங்கு .உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும்.

மல்>மள்>மளு>மடு என்பது பசுவின் முலையைக் குறிக்கும். மடு>மடி என்ற நீட்சியும் அதே பொருள் கொள்ளும். masto, mazo போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் மடுவொடு தொடர்புற்றவை. மடு கொடுக்கும் பருவங் கொண்டவள் மடந்தை. மங்கைக்கு அடுத்த பருவம். மடுத்தலுக்கு பால் ஊட்டுதல் என்றும் பொருள்.. பின்னால் உணவூட்டதலுக்கும் இச்சொற்பொருள் நீண்டது. மடு> மடை, மடைத்தல், மடைப்பள்ளி  போன்ற சமையல் தொடர்பான சொற்கள் இப்படிக் கிளைத்தவையே. முள்>மள்>மட்டு என்பது ஒரு காலத்தில் பாலைக் குறித்திருக்கலாம் என ஊகிக்கிறோம் . இன்று அந்தச்சொல் தேன், கள், சாறு, பருகம், ,மதுச் சாடி, மணம் என்ற பொருட்பாடுகளையே குறிக்கிறது. முட்டு> மட்டு  என்பது ”நிறைந்தது” என்றும் பொருள் கொள்ளும். மட்டு>மட்டம்= கள். மட்டு>மத்து>மத்தம்= களிப்பு. .மத்து> மது - தேன், கள், பால் (இதுவும் இக் காலத்தில் பாலைக் குறிக்கவில்லை.) மத்தன்= பித்துப் பிடித்தவன்; மத்து = மயக்கம். மாந்தப் பாலுக்கு மாறாய், பசுவின் மடுவழி பாலைக் கறக்கிறோம். இப்படி மடுக்கொடுக்கும் விலங்கு மாடு என்றே சொல்லப்பட்டது, முதலில் பசுவைக் குறித்துப் பின் காளையையும் குறிக்கும் பொதுப்பெயராயிற்று.

மடு, மடியைப் புரிந்துகொண்டால், ஏராளம் கலைச்சொற்களைப் படைக்க முடியும். கீழே மடுவைப் பயன்படுத்தியுள்ளேன். (மடியையும் பயனுறுத்தலாம்.) முதலில் வருவது gynecomazia (s) = கன்னுமடு ஆகல் , The abnormal proliferation or enlargement of the glandular component of breast tissues in males: Gynecomazia is strictly a male disease and is any growth of the adipose (fatty) and glandular tissue in a male breast. Not all breast growth in men is considered abnormal, just excess growth. gyneco என்பதைக்- கன்னுகை எனலாம். கன்றுதல்>கன்னுதல்= குட்டிபோடுதல்.. கன்னி = பிள்ளை பெறக் கூடியவள். இன்று இப்பொருளோடு, மணமாகாதவள் என இன்னொரு வரையறை சேர்க்கிறோம். கு also gynaeco-, before a vowel gynec-, word-forming element meaning "woman, female," from Latinized form of Greek gynaiko-, combining form of gynē "woman, female," from PIE root *gwen- "woman."

அடுத்தது mastoplasia மடுப் பெருகை, mastoplastia (s) (noun). Enlargement of the breasts or the development of breast tissue: A mastoplasia is considered to be an abnormal multiplication or an increase in the number of normal cells of mammary gland tissue.

mazodynia மடுத் தினவு (s) (noun), A mazodynia is a pain in the breast.

mazologist மடுவியலார் (s) (noun), Someone who studies the animal class of Mammalia which refers to warm-blooded creatures that have body hair and feed milk to its young.

mazology மடுகளியல் (s) (noun), The branch of zoology that studies mammals which is a class of vertebrates with characteristics; such as, fur, blood, four-chambered hearts, and complex nervous systems.

mazomancy மடுக்குறிகை (s) (noun). Divination or predicting the future while observing babies when they are nursing. 2. Etymology: derived from the Greek mazos, "breast" and manteia, "prophecy".

mazomantist மடுக்குறியாளர் (s) (noun), Someone who predicts the future while watching a baby nursing milk from his or her mother.

mazopathy (s) மடு நோய் (noun), Any disease of the placenta or of the female breast.

mazophile (s) மடு விழையர் (noun), Someone who is sexually stimulated or excited by female breasts.

mazophilous (adjective) மடு விழை Pertaining to or referring to mammary mania or an excessive interest in breasts.

mazophily (s) (noun) மடு விழையம் A clinical term that is expressed when a person is sexually stimulated by female breasts and it is probably one of the most universal forms of sexual desires among normal men and teenage boys.

mazoplasia (s) மடுச் சிதைவு  degenerative condition (gradual deterioration) of breast tissue.

tetramastia, tetramazia (s) (nouns). நால்மடு A condition characterized by the presence, normal or abnormal, of four breasts or mammary glands: There are some animals that have tetramastias; however, it is extremely unusual for a human to have them.

mastoid (adj.) மடுகை "breast-shaped, teat-like, resembling a (female) breast or nipple," 1732, from Greek mastoeides "resembling a breast," from mastos "(woman's) breast" (see masto-) + -oeides "like," from eidos "form, shape" (see -oid). As a noun, 1800, from the adjective.

masto- மடு.மடி before vowels mast-, word-forming element meaning "female breast, mammary gland," from Greek mastos "woman's breast," from madan "to be wet, to flow," from PIE *mad- "wet, moist, dripping" (source also of Latin madere "be moist;" Albanian mend "suckle;"

இப்போது சொல்லுங்கள். முலை செகையுறுப்பா? ஆண்டாள் தவறா? எனக்குத் தோன்றவில்லை. ”பார்வையிலிருக்கிறது நம் புரிதல்”. [அவையில் சொல்லக் கூடாத பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.] 

அன்புடன்,

இராம.கி. 


Sunday, January 10, 2021

முலை - 1

 குத்து விளக்கெறியக் கோட்டுக்கால் கட்டில்மேல் 

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் 

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்  

வைத்துக் கிடந்த மலர்மார்பா ! வாய்திறவாய் ;  

மைத்தடங் கண்ணினாய் ! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் ; 

எத்தனை ஏலும் பிரிவாற்ற இல்லாயேல் 

தத்துவ மன்று தகவேல் ஓர் எம்பாவாய் 

என்ற ”திருப்பாவை 19 இன் பொருள் புரிகிறதா? பெண் பக்தியாளரும், புலவருமான  "ஆண்டாள் "   பாடியது. எவ்வளவு SEXY யாகயுள்ளது !!! மார்கழியில் இப்பாடலையே கடவுளுக்காகப் பாடுகிறார் !!!!!” என்று ஒரு முகநூல் இடுகையில்  பகுத்தறிவுத் திராவிடர் ஒருவர் கேலிபேசினார். அதிர்ந்துபோனேன்.  ஒருவேளை இவர் ”கவிதைக்கு வீசை விலை?” கேட்பவரோ? - என்று கூடத் தோன்றியது.  காலமெலாம் அகம், புறம், பேசிய தமிழரிடை,  இன்னுஞ் சொன்னால் தமக்கும் இறைவனுக்கும் நடுவே நாயகநாயகி பாவத்தைப் பொருத்திப் பற்றியியக்கம் வளர்த்த தமிழரிடை, ”உடல் வருணணையே செய்யக் கூடாது, கட்டுப் பெட்டியாய்த் தோத்திரம்  மட்டுமே பாடு” என்கிறாரா? - என்றும் தோன்றியது. வேறொரு நண்பர் கேட்டு இங்கு முலைத்தொடர் எழுத முற்படும் நானும் இவருக்குச் “செகையாளாய்த் (sexist)" தெரிவேனோ? - என்று விதவிதமாய்ச் சிந்தனை என்னுள் எழுந்தது.

ஆண்டாள் ஆபாசமெனில், (ஆப+ஆச= ஆபாச= முறையற்றது. சங்கதத்தில், “ஆப்”= அற்று. ஆச= ஆனது= முறை.)  நாமெங்கு போகிறோம்?  ”எது காதல்? எது காமம்? எது முறையற்றது?” என்பது இவர்க்கு கொஞ்சமேனும் விளங்கி யிருக்குமா? தெரியவில்லை. (எல்லா முறையற்ற செயல்களுக்கும் ”உரிமம் (licence)"வேண்டி நான் முழங்கவில்லை.) வாழ்வு முழுக்க வறட்டுப் பகுத்தறிவு பேசி  இலக்கியம் மறந்தவர்க்கு என்னதான் சொல்வது? வெறுமே நகர வேண்டியது தான், ஆணடாளைப் பார்ப்பனரென வையக் ”கொங்கைமேல் வைத்துக் கிடந்தது” ஒரு சாக்காய் அமைந்தது போலும்,  ”கொங்கைமேல் கிடந்தது எது? ஓர்ந்து பார்த்தாரோ? பஞ்ச சயனமென்றது தவறா? நப்பின்னை யாரென இவர்க்குத் தெரியுமா? இயல்பு இல்வாழ்க்கை பேசும் இப்பாட்டு ”சிறுபிள்ளைகளுக்குச் சொன்னதெனத் தவறாய் எண்ணிக் கொண்டாரோ?” புரியவில்லை.   

இப்போதெலாம் ”விக்டோரியத் தூயவியம்” வலிந்து இங்கு பரப்பப் படுகிறதோ?- என்ற ஐயமும் என்னுள் எழுந்தது. ”குலப்பெருமைக் (honor) கொலைகள், வெவ்வேறு சாதியார் மோதல், சாமியார் பின்னோடல்” எனக் குமுகாயம் சீரழிவதைக் காணுகையில், தமிழ்க்குமுகத்தில் அடித்தானவியம் ( fundmentalism) விரவிக்கொண்டு வருவதும் புலப்பட்டது. (வரலாற்றைப் பார்த்தால் 300, 400 ஆண்டுகள் இதில் ஆழ்ந்து தோய்ந்து தமிழ்க் குமுகம் சீரழிந்தது புலப்படும்.) இதேபோக்கு எதிர்காலத்தில்  நீடிக்குமெனில், சங்க இலக்கியத்தையே தூக்கி நாம் கடாசவேண்டுமோ என்றுதோன்றும். இந்நிலை தூண்டுவதில் தூயவிய இந்துத்துவரும், பகுத்தறிவுத் திராவிடரும் இப்புலனத்தில் ஒரேமாதிரி இயங்குகிறார் என்றே எண்ணவேண்டி உள்ளது,  இந்துத்துவர் கவிஞர் வைரமுத்தைச் சாடியதற்கும், பகுத்தறிவர் ஆண்டாளைச் சாடுவதற்கும் என்ன வேறுபாடு? 

”முலை”ப் புரிதலென்பது இன்றுநேற்று எழுந்ததல்ல. ஆகப் பழஞ்சொல். (பெண்ணோடு ஆணுக்கும் முலையிருப்பினும் (பருத்தது breast), இரு பாலருக்கும் பல்வகை உடற்கூற்று வேறுபாடுகளுண்டு, பெண்முலை சற்று விதப்பானது. ”கண்ணும் தோளும் முலையும் பிறவும்”- தொல்காப்பியம் சொல். கிளவி: 62/1; ”முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்” என்பது அதேநூலில்- பொருள். புறத்: 24/16. எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலும் 189 இடங்களில் ”முலை” பேசப்படும். முலைபற்றிப் பேசியவரெலாம் செகையாளரா? காப்பியங்கள், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராமகாதை, இற்றைக் கவிஞர், எழுத்தாளர் வரை நம்மூரில் முலை தொடர்ந்து பேசப்பட்டது. கீழே சொல் விளக்கம் பார்த்தால் புரியும். ஆயினும் ”ஆண்டாள் சொல் SEXY” என்று சொல்ல முற்படுவது விந்தையான குற்றச்சாட்டு, இரோப்பா போய்வந்த பின் பெரியார் வெளியிட்ட திருமணக் கருத்துகளை எல்லாம் திராவிட நண்பர் மறந்தார் போலும்.  

சரி, முலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். முல்லி, முன்வந்தது முலை. நகிலமும் நுல்>நுகு>நுகில்>நகிலம்= முன்வந்தது என்றாகும். குல்> குள்> கொள்> கொண்+கை= கொங்கை, இது மேட்டைக் குறிக்கும். குல்> குள்> கொள்> கொண் +மை= கொண்மை> கொம்மை. இதுவும் மேட்டுப்பொருளில் எழுந்ததே. பறம்பு= மலை போன்றது.  ஆண்முலைக்கிலாத பெண்முலையின் விதப்பான துளையை ஒட்டிச் சொற்கள் அடுத்தெழும்பும். குள்>குய்>குயம்= துளையுள்ளது,  முலைத்துளை வழியே குழவிக்குத் தாய் பால்கொடுக்கிறாள் குல்> குரு> குருக்கண் என்பதும் ”துளையுள்ளதே”. சுல்> சொல்> சொள்> சொட்கு> சொக்கு> சொக்கம்> சொர்க்கம் = பால் சொட்டும் துளை. துல்>துன்>துனம்>தனம் = துளையுள்ளது, 

இன்னொரு வழியில் குல்> குள்> கொள்> கொண்> கொண்+கை = கொங்கை, = பால்கொண்டது என்றும் பொருளுண்டு. அதேபோல் கொம்மையும் ”பால் கொண்டதே”. நகிலமும் “பால் கொண்டதெனும்” பொருள் காட்டும்.. இன்னொரு கூட்டுச்சொல்லுமுண்டு. பயம் = பால். உதரம்= உதிக்குமிடம், வயிறு போன்றது. பயம்+உதரம்= பயோதரம்= பாலிருக்கும், உதிக்கும் இடம். பயம்தரும் மாடு பய மாடு. பயு>பசு என்பது தமிழே. அறியாதோர் இதைச் சங்கதமென்பார். பயசெனினும்  பாலே. முலைக்கோள= முலையைக் கொள்ளல்= பால் குடித்தல்; முலைக்கொள் = பால்குடி. நம் முலைக்கொள்ளும் இந்தையிரோப்பியனின் milk உம் தொடர்பு காட்டுகின்றன. மேலையர் milk இன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கார், முலை sexy உறுப்பா? தாயை உணர்த்தும் சினையுறுப்பா? இரண்டும் தான். பாலுட்டிகளான மாந்தரின் பிறப்பையும், உடலமைப்பையும் நாமே கேலிசெய்யமுடியுமா?  Why do we feel ashamed about breast? கொஞ்சம் உரியல் (real) நிலையை உணர்வோமே? முலையால் நாம் ஏராளம் சொற்களைப் பெற்றுள்ளோம்.  

அன்புடன்,

இராம.கி.


Friday, January 08, 2021

மாதுளை

இரானில் பொ.உ.மு.2500 இல்  தொடங்கி பின் எப்போதோ இந்தியா வந்த Punica granatum (பெர்சியனில் அந்நார்)  இன் தமிழ்ப்பெயரான ”மாதுளை”யின் சொற் பிறப்பியலை நேற்றொரு நண்பர் கேட்டார், பெர்சியப் பெயர், அழனியைக் குறிக்கும் anNar (அரபிச்சொல்) வழி  எழுந்திருக்கலாமெனச் சிலரும், பழத் தோலின் துரு (anar; பெர்சியன்) நிறப் பொருத்தத்தால் ”அந்நார்” எழுந்து இருக்கலாமெனச் சிலரும். பண்டை மெசபட்டோமிய அக்கேடியன் சொல் nurmû வோடும்,  சுமேரியன் சொல் nur அல்லது nurma வோடும் தொடர்பிருக்கலாமென சிலரும் சொல்வர். துருக்கி, அசேரி, இந்தி, பஞ்சாபி, உருது, குருது, புசுட்டோ போன்ற மொழிகளில் இன்றும் ”அந்நார்” திரிந்தவண்ணம் பயில்கிற்து,  

பல் விதைகளும், செவ் வழுக்கையும் (red-pulp) கொண்ட, பெரு உருண்டைப் பழத்தை பொ.உ. 1300 இலிருந்து  pomegranate என அழைக்கிறார். இலத்தீனில் ”பல்விதைப் பழம் (pomum granatum)” என்பார்,. pome= apple,fruit; grenate= having grains, from granum= grain (from PIE root *gre-no- "grain"). தமிழில் மொழிபெயர்த்தால் இது ”பல்குருணைப்” பழமாகும். பல மொழிகளிலும், தமிழிலும் கூடப் பழப்பெயர் அளவிறந்த விதையிருப்பால்  ஏற்பட்டுள்ளது. எப்போது இப்பழம் நம்மூர் வந்தது என்று தெரியவில்லை.  2300-2000 ஆண்டுகள்  காலப் பெரும்பாணாற்றுப் படையின் 308, 307 ஆம் அடிகளில், “சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து” என்று மாதுளங்காய் பேசப்படும். சிலம்பின் மதுரைக்காண்டம் 16/25 இலும் :”வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய்” என்று இதே மாதுளங்காய் பேசப்படும். 

”ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல” என்பது அப்பர் தேவாரம் 201/3.  ”உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ - நாலாயி” என்பது நாலாயிரப் பனுவலின் பெரியதிருமொழி :45/1. ”தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்” என்பது அதே பெரியதிருமொழி 73/2. ”மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச” என்பது இராமகாதை, பால காண்டம் மிகை:0 4/1. மாதுளையோடு கழுமுள் என்ற சொல்லையும் நிகண்டுகள் அடையாளங் காட்டும். பரல், காழ், வித்து என்பவற்றோடு ”முத்தும்”விதைகளை உணர்த்தும் முத்துப் பரல், முத்து வித்து எனும் சொல்லாட்சிகள் பார்த்தால் மாதுளையின் சொற்பிறப்பினுள் முத்தின் முகன்மை புரியும்.

முழுமுழு, மொழுமொழு, கொழுகொழு, கழுகழு என்பன ”உருள்” உணர்த்தும் இரட்டைக் கிளவிகள். ”முழு” என்பது நிறைவையும். கோண மூலையிலாத உருண்மையையுங் குறிக்கும். முழுத்து> முழ்த்து> முட்டு> முத்து என்பது ”முழு”வின் இயல்பு வளர்ச்சி, முட்டு>முட்டை, அடுத்த வளர்ச்சி.;  மொழு> மொழுத்து> மொழ்த்து> மொட்டு> மொத்து >மொத்தை= உருண்டை. இது வித்தையுங் குறிக்கும். முடிமழித்த தலையை மொட்டை என்கிறோமே? மழித்தல் கூட மொழுவித்தலில் பிறந்த சொல்லே. மொத்தம்= முழுமை.  மோத்தை= இளந்தேங்காய்; மொட்டு விரியாத பூ; மழுத்திருப்பது> மகத்திருப்பது> மாத்திருப்பது.> மாத்திரை= குளிகை. அளவைக் குறிக்கும் மாத்திரையும், குளிகையைக் குறிக்கும் மாத்திரையும் வெவ்வேறு பொருளன.

மொத்துளம்பழம்= முத்துகள் நிறைந்த பழம். முத்து விதப்பால் பழப்பெயர் உண்டானது, மொத்தளம்பழம்>மோதுளம் பழம்>மாதுளம்பழம்>மாதுளை. மோது,  உருண்டையைக் குறிக்கிறது. மோதகம்= கொழுக்கட்டை (”மோதகம்” சங்கதமெனச் சிலர் தவறாய் எண்ணுவார்.  அது தமிழே.) ”கவவொடு பிடித்த வகை அமை மோதகம்/தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க” என்பது மதுரைக் காஞ்சி 626,627. ”காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்” என்பது சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் :6/137. “முட்டா கூவியர் மோதக புகையும்” என்பது மதுரைக் காண்டம்: 13/123. முன்சொன்னது போல் குளிகை= உருண்டை; பெருங்குளிகையைக் குறிக்கும் கோளத்திற்கும் உருண்டைப் பொருளுண்டு. கொழுகொழு>கழுகழு = உருண்டையாக கள்>கழு>காழ் = விதை; கழுமும் உள் = விதைகள் நிறைந்தது; கழுமுள் = விதைகள் உள்ளியது, இச்சொல்லும் மாதுளம்பழம் போன்ற சொற்பிறப்புக் கொண்டதே. 

பரல், பல்லுக்கான பெயர், முத்துப்போல் பல் என்கிறோமில்லையா? பல், பல்+து= பற்று எனும் வினையின் பகுதி. (பல்= வெண்மை என்பது வழிநிலைப் பொரூள். கருத்துமுதல் காரணத்தால் சொற்கள் எழாது. பொருள்முதல் காரணத்தாலே சொற்கள் எழுகின்றன. பற்களின் முதல்வினை பற்றுதல் எனில்,  துண்டாகல் அடுத்தவினையாகும். துண்டி, துண்டாக்கும் பல்லிற்கு வேறு பெயராகும். துண்டி>தண்டி என்பது, சங்கதத்தில் தண்டின்> தந்தின் எனத்திரியும். தண்டி>தாடி>தாடை என்பது பல்லுள்ள எலும்புப்பகுதி, தந்தம் பல்லுணர்த்தும் சங்கதச்சொல். தாடிமாஃ என்பது பரல் போன்றமைந்த மாதுள மொட்டுக்களுக்கான பெயர். It's called daDim (दाडिम्) or daDimi (दाडिमी) in sanskrit. This is the root from where the Hindi/Marathi word 'dalimb' originates. dantabeeja दन्तबीज (the teeth seeded one) and rakhtabeeja रक्तबीज ( the red seeded one).

அன்புடன்,

இராம.கி.


Tuesday, January 05, 2021

கணையம் (pancreas)

இச்சொல்லுக்கான சொற்பிறப்பியலை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். pancreas இன் பொருட்பாட்டைப் பார்க்குமுன், கணையத்திற்கான முந்தைப் பொருட் பாடுகள் என்ன என்று பார்க்கவேண்டும். அதில் முகன்மையானது முரட்டுக் கோட்டைக் கதவுகளை ஒட்டிவரும். ஒற்றைக் கதவாயின், நிலைச்சட்டத்தோடு (door frame) சேருமிடத்திலோ, இரட்டைக் கதவாயின், கதவுகள் சேருமிடத்திலோ நாம் பெரும்பாலும் தாளிடுவோம். தாள், தாள்ப்பாள்/தாழ்ப்பாள் என்பன தனித்த ஓருறுப்புகள் அல்ல. சில வளையங்களும், ஒரு தண்டும் சேர்ந்த கூட்டுச் சினையுறுப்பாகவே தாளைப் பயனுறுத்துவோம்.  

ஒற்றைக்கதவில் 2,3 வளையங்களையும்  நிலைச்சட்டத்தில் ஒரு வளையத்தையும் பொருத்துவர். இவ்வளையங்களுக்குள் சேர்ந்தாற்போல் தண்டு போகும். தண்டு ஒரே தடிமனில் இருக்கத் தேவையில்லை. தலை(க் குண்டு) பெரிதாகி உடல்சிறுத்து முடிவில் வால் ஒல்லியாகியும் இருக்கலாம். வளைய விட்டங்கள், தண்டின் குறுக்குச்செகுத்தம் (cross section) போகுமளவிற்கு இருந்தால் போதும், ஒரு தாளில் படம்போட்டு நான்சொல்வதைப் புரிந்து கொள்க. இதேபோல் தாழ்ப்பாளை இரட்டைக் கதவமைப்பிலும் செய்யலாம். இவ்வமைப்பில் று ஒவ்வொரு கதவிலும் ஒன்றுக்கு மீறிய வளையங்கள் இருக்கும். தாளிலுள்ள தண்டு, அடிப்படையில் நீண்ட கூம்புத்தண்டு தான்  

இது 2 கதவுகளை அல்லது 1 கதவு, நிலைச்சட்டத்தை இணைக்கிறது. இணைப்பதைக் கணுத்தல் என்றும் சொல்லலாம். கரும்பின் ஒவ்வொரு பகுதியும் கணுக்கியே வளர்கிறது. ஒவ்வொரு joint ஐயும் கணு என்கிறோம். கணுவின் வினைச்சொல் கணு-த்தல் என்றாகும்.  கணுவில் விளையும் இன்னொரு பெயர்ச்சொல் கணை. கள்>கண்>கணை என்பது கட்டும் தண்டு. இரு கதவுகளையோ, ஒரு கதவு-நிலைச்சட்டத்தையோ இது கட்டலாம். கள் எனும் வேர் கூட்டப்பொருளில், சேர்ப்புப் பொருளில், எழுந்தது. கணையில் பெரியது கணையம். தொடக்க காலத்தில் கணையம் என்பது, இரும்பால் ஆனதில்லை. பெரும் மரங்களால் ஆனது. இரும்புப் பயன்பாடு கொஞ்சங் கொஞ்சமாய்க் கூடியபின் ஏற்பட்டது. 

கோட்டைக் கதவுத் தாள்களில் பயன்படும் கணையத்தைக் கணையமரம் என்றும் சொன்னார். கணையமரத்தால் பூட்டப்பட்ட கோட்டைக் கதவுகளை உடைக்க ஒரு காலத்தில் யானைகள் பயன்பட்டன. பின் யானைகள் மோதி கதவுடைப்பதைத் தவிர்க்க, வலுவெதிர்ப்புத் தடந்தகை (defense strategy) ஆகக்  கதவுகளில் கூர்க்கூம்புகளைப் பதிக்கத் தொடங்கினார். பின் வலுக்காட்டும் தடந்தகை (offence strategy) ஆகப் யானைத் துதிக்கைகளில் பெருமரங்கள் பொருத்தி கோட்டைக்கதவுகளில் மோதத் தொடங்கினார். இதற்கு மாறாய் இன்னொரு வலுவெதிர்ப்புத் தடந்தகை எழுந்தது. நான் ஒவ்வொன்றாய் விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால் நீளும்.  ஒன்று மாற்றி ஒன்றென இத்தடந்தகைகள் வளர்ந்து கொண்டே போயின. கோட்டைப்போர்களில் (உழிஞை, நொச்சிப் போர்களில்) முதல்தொடக்கம் கோட்டைக் கதவை மூடித் தாளிடும் கணையமே. கணையம் பேசும் பாடல்கள் மிகுதி. 

இரும்புக் கணையம் கொல்லன் வார்ப்படத்தில் செய்யப்பட்டது. இன்றும் கணக்கற்ற கோயில்களில் கணையங்கள் (அவை நீண்ட உருளைத் தண்டுகளாகவோ, சதுரக் (square) குறுக்குச் செகுத்தம் (cross section) கொண்ட தண்டுகளாகவோ, செவ்வஃகக் (rectangular) குறுக்குச்செகுத்தம் கொண்ட பட்டைத் தண்டுகளாகவோ  அமையலாம்) அரசகோபுரக் கதவுகளை மூடி யுள்ளன. சாமணமாய் கோயிற் கதவுகளை மூடமுடியாது. பெரும் முயற்சி வேண்டும். நம் ஊர்ப்புறங்களில் பெருஞ்செல்வர் மாளிகைகளில், அரண்மனை வீடுகளில், இன்றும் கணையங்கள் உண்டு. செட்டிநாட்டில் பெரும்பாலான வீடுகளில் இவையுண்டு.  உடன் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறு கணையை, விழியத்திற் காணும் படி கொடுத்துள்ளேன்.    https://www.facebook.com/watch/?v=1544571135592605. இன்னும் பென்னம்பெரிய கணையங்களைக் காட்டும்படி உங்களிடம் படம் இருந்தால் படிப்போர் கொடுங்கள்.



இப்போது கணையத்தோடு, pancreas க்கு ஏற்பட்ட உறவைப் பார்ப்போம். அடிப்படையில் இது ஓர் ஒப்பீடே. உடன் இணைத்துள்ள படங்களைப் பாருங்கள். கதவுகளைக் கணுக்கும் கணையம் போலவே ஒரு தலை, ஒரு கழுத்து, ஒரு உடல், ஒரு வால் இருக்கும் pancreas நம்முடைய கோட்டைக் கதவுக் கணையத்தோடு ஒப்புமை காட்டும். உடல் கணையம் என்பது உதரத்தில் (abdomen) உள்ள ஓர் உறுப்பு.  நாம் சாப்பிடும் உணவை   உடற் சில்களுக்கான எரிமமாய் (fuel for body cells) மாற்றும் உறுப்பாய்க் கணையம் வேலை செய்கிறது. செரிமானத்திற்கு உதவும் வகையில் இக்கணையத்தில் ஒரு புறச்சுரப்பி (exocrine) வங்கமும். (function) குருதிச் சர்க்கரையைக் கட்டுறுத்தும் (control) வகையில் ஓர் அகச்சுரப்பி (endocrine) வங்கமும் வேலை செய்கின்றன.  

ஆங்கிலத்தில் pancreas (n.) என்பதற்கு gland of the abdomen, 1570s, from Latinized form of Greek pankreas "sweetbread (pancreas as food), pancreas," literally "entirely flesh," from pan- "all" + kreas "flesh" (PIE root *kreue- "raw flesh"), probably so called for the homogeneous substance of the organ என்று சொற்பிறப்பியல் சொல்வார்.  *kreue- எனும் PIE வேருக்கு, “*kreuə-, Proto-Indo-European root meaning "raw flesh" என்று விளக்கம் சொல்வார். It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit kravis- "raw flesh," krura- "raw, bloody;" Greek kreas "flesh;" Latin crudus "bloody, raw; cruel," cruor "thick blood;" Old Irish cru "gore, blood," Middle Irish cruaid "hardy, harsh, stern;" Old Church Slavonic kry "blood;" Old Prussian krawian, Lithuanian kraūjas "blood;" Old English hreaw "raw," hrot "thick fluid, serum" என்றும் சொல்வர்.

https://valavu.blogspot.com/2021/01/heart-blood-4.html என்ற என் முந்தை இடுகையில் குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை என்றும், blood க்கு மாற்றான gore (n.1) என்பதையும் பற்றிச் சொன்னேன். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin பற்றியும் சொன்னேன்.  

இதையே, பேர்பெற்ற சொற்பிறப்பியலார் SKEAT தன் விளக்கத்தில்,  GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார். 

இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம்  என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என இச்சொல் குருதியோடு தொடர்பு காட்டும். cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கும், குரு சார்ந்த அடையாளங் கண்டோமே? அதையும் நினைவு கொள்ளுங்கள்.  pancreas என்பதைக் ”முழுக்குருவம்” என்றும் பயன்பாடு கருதிச் சொல்லலாம். கணையம் என்ற உருவ ஒப்புமைப் பெயருக்கு மாற்றாய், இது பயன்பாட்டுப் பெயராய்  அமையும்.  pancreas ஓடு தொடர்புடைய மற்ற சொற்கள் creatine - குருவணை. குருதியில் இது எவ்வளவு இருக்கிறதென்று பார்ப்பர், நலமுள்ள ஆணுக்கு இது 0.7-1.3 mg/dL அளவிலும்,  பெண்ணுக்கு 0.6-1.1 mg/dL அளவிலும் இருக்கவேண்டும். creosote = குருவஞ் சேமி; cruel = குருவல்;  crude, raw = கரடு.

அன்புடன்,

இராம.கி. 






Monday, January 04, 2021

Dating

 "Dating ... தமிழ்ச்சொல் தாருங்களேன்!" என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு நானளித்த பரிந்துரை. 

-------------------

இதை அரும்பொழுக்கு என்று சொல்லலாம். காதல் அரும்பும் நிலை  என்பது முகிழ்ப்பதற்கு அடுத்த நிலை. அதேபொழுது அலர்வதற்கு முந்தைய நிலை. அரும்பும் நிலையில் ஒரு சிலர்க்குத் தெரியும். அலரும் நிலையில் பலருக்குத் தெரிந்துபோகும். சிலபோதுகளில் காதல் அரும்புவது முற்றிலும் நடவாது வெம்பியும் போகலாம். எதுவானாலும் அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே அது தெரியும். மிக நெருங்கிய நண்பர்க்கு சிலபோது அரும்பொழுக்கு தெரியலாம். அரும்பு +ஒழுக்கு = அரும்பொழுக்கு. dating என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் சரிவராது. எனவே இப்படிச் சொல்கிறேன்.

---------------------

இன்னும் சுருக்கவேண்டுமெனில் அரும்பல் என்று கூடச் சொல்லலாம். “அவன் இப்பொழுது கொஞ்சநாளாய் ஒரு பெண்ணுடன் அரும்பலில் இருக்கிறான்.”


Saturday, January 02, 2021

கோள்கள்

நண்பர் ஒருவர் கோள்களுக்கான தமிழ்ப்பெயர்கள் கேட்டிருந்தார். இது எல்லோருக்கும் பயன்படக்கூடியது என்பதால் இங்கு இடுகிறேன்.

கதிரவனைச் சூரியன் என்று சொல்வதில் தவறில்லை. சூரியன் தமிழே. சுள்>சுர்>சூர்>சூரியன்.

புதன் (இதை அறிவன் என்றுஞ் சொல்வர். என்னைக்கேட்டால் புதன் தமிழே. புத்தியின் வேர்ச்சொல் புல்.  பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருளகன்று வெளிச்சம்/தெளிவு வருகிறது என்றுதானே பொருள்? புலவன்= அறிவில் தெளிந்தவன்.  புலமை= அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்ற சொற்களின் ஊடேயுள்ள லகரத்தில் வரும் உயிர்மெய் இழிந்து புத்தன், புத்தி ஆகும்.  புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி எனப்படும். காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge(அறிவு). Discerning the right from wrong is புத்தி..புத்தன்>புதன் என்று இச்சொல் மேலும் வளர்ச்சி காணும்). 

புதனுக்கு அடுத்த கோள்கள் வெள்ளி, புடவி எனும் புவி (இது சங்கதத்தில் ப்ருத்வி ஆகும். பும்மி/பொம்மி நிற்பது பூமி. இதுவும் தமிழ் தான்.), செவ்வாய், வியாழன். இவையெல்லாம் முற்றிலும் தமிழ்ச்சொற்களே. வியாழனுக்கு அடுத்தது சனி (இதைக் காரி என்றும் நிறங்கருதிச் சொல்வர். சனி என்பது தமிழ்மூலங் கொண்ட வடசொல். சுள்>சுண்>சுணங்குதல் = வினையில் சோர்தல், காலந் தாழ்த்தல். சுணை-தல்>சுனை-தல்= குழைதல், தாழ்-தல். சூரியனைச் சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இக்கோள் மெதுவாய்ச் சுணங்கிச் சுற்றும். சுணைக்கும் கோள் சுணை>சுனை>சனி என்று வடக்கே சொல்லப்பெறும். நாம் சுணை என்றே தமிழ்வடிவில் சொல்லிக் கொள்ளலாம்). 

அடுத்துள்ள 3 கோள்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. அவற்றை வானவம் (யுரேனசு = sky), வாரணம் (நெப்டியூன் = god of sea), வளவம் (புளுட்டோ. = god of wealth) என்று அஃறிணையாக்கிச் சொல்லலாம்.


Friday, January 01, 2021

குருதயமும் (heart) குருதியும் (blood) - 4

 குருதயத் தொடரில் தசை பற்றி ஏன் பேசவேண்டும்? - எனச் சிலர் கேட்கலாம். வேறொன்றுமில்லை. உடலுறுப்புகளைத் தசைவழி இயக்குகிறோமல்லவா? அதனால் பேசுகிறோம்.. குருதய இயக்கங் கூடத் தசைகளாலும், வேதிமாற்ற வெடிப்பியக்கத்தாலும் நடைபெறுவதே. முன்சொன்ன “லப்டப்”, ”குடுகுடு> குருகுரு” ஓசை கூட இப்படித்தான் எழுகிறது. எலும்பியக்கங்களுங் கூடத் தசைகளால் நடக்கின்றன. தசைகள் இயங்க, வளர, புதுப்பிக்கத் தேவையான சத்தைக் குருதியே கொணர்கிறது. ”ஊன்  தசை, தடி, தூ, பிசிதம், புளிதம், புலால், புலவு, புண் வள்ளுரம், விடக்கு” என்று தசைக்கு ஈடாய்ச் சூடாமணி நிகண்டு அடுக்கும். பிற்காலச் சொல்லான புளிதம் தவிர மற்றவை திவாகரம், பிங்கலத்திலுமுண்டு, இவற்றின் சொற்பிறப்புகள் எளிதே. 

உல்> ஊல்> ஊன் என்பது ”பற்றியதெனப்” பொருள்படும். (எலும்பைப் பற்றியது ஊன்). துள்>தள்>தயை>தசை= திரண்டது; துள்>தள்>தடு>தடி= திரண்டது. துள்> தூ= திரண்டது. புல்>புலவு= திரண்டது, புல்>புலால்= திரண்டது, புல்>புள்> புளிது> புளிதம்  = திரண்டது. புல்>புள்>புண் திரண்டது; பூதியும் பெரியது என்பதால்  திரண்டதென்றே பொருள் கொள்ளும் , பிள்> பிய்> பிய்து> பிய்தம்> பிசிதம் என்பது திரண்டதைப் பிள்ளக் கூடியது. இதே பொருளில், வள்ளுரம்= வள்ளக் கூடிய உரம் என்பதும் வரும்; வள்ளுதல்= வகிர்தல். குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை.  விள்> விளக்கு> விடக்கு= பிளக்கக் கூடியது. வள்ளுதலும் விள்ளுதலும் ஒரு பொருட்சொற்களே. இதுபோக இற்றி, இறைச்சி என்பவையும் உண்டு. இற்றுதல் = முறித்தல். இறைத்தல்= இற்றக்கூடியது இறைச்சி. அடுத்து எலும்பை மூடியது முடை. முடைநாற்றமென இக்காலம் சொல்கிறோம். முடையும் இந்தை யிரோப்பிய meat உம் தொடர்புள்ளவை.  உல்> ஊல்> ஊழ்> ஊழ்த்தல் என்பதும் பற்றிக் கொண்டதையே குறிக்கும். உல்> ஊல்> ஊன்> ஊன்றுதலை இதோடு எண்ணிப் பாருங்கள். 

[ஊழ்தலின் கருத்துத் தொடர்பாய்த் தமிழிலக்கியத்தில் ஊழ்= நியதி= விதி என்பது, பற்றுக்கருத்தோடு தொடர்புற்று ஏற்படும். உயர்கணித வகைப்புச் சமன்பாடுகளைச் (differential equations) சுளுவெடுக்கையில் (to solve), தொடக்கக் கட்டியங்களையும்  (initial conditions), பிணிப்புக் கட்டியங்களையும் ( boundary conditions) விதிப்பார்கள். அவற்றை ஓர்ந்தால், அவை ஊழ்க் கட்டியங்கள் என்பது புலப்படும். ஊழைக் கட்டினால், எந்தச் செலுத்தமும் (process) வரையறுக்கப் (defined) பட்டுவிடும். உடலியல் தொடர்பான இக்கட்டுரையில் மெய்யியல் வேண்டாமெனத் தவிர்க்கிறேன்.அற்றுவிகம் (ஆசீவிகம்) பேசும் வேறு கட்டுரையில் இதை விளக்குவேன்.] 


அடுத்துக் குருதய இயக்கம் பார்ப்போம்.  உடலின் பல பாகங்களிலிருந்து வரும் அஃககம் (oxygen) இழந்த குருதி, உள்ளகக் குவி வழிநம் (interior vena cava) மூலமும், உம்பர்க் குவி வழிநம் (Superior Vena cava) மூலமும் வல அட்டத்துள் (right atrium. அட்டம்= மேல்/முன் அறை) நுழைந்து, முக்குயப்பு வாவி (Tricuspid valve) மூலம் வல வளைக்குள்  ( right ventricle) நுழைந்து, அழுத்தம் கூடியபின், புழைமுறு வாவி (pulmonary valve) வழி புழைமுறு எழுதைக்குள் (Pulmonary Artery) புகுந்து நுரையீரலுக்குப் போகும். அங்கு அஃககம் ஏறிய குருதி,  புழைமுறு வழிநம் (Pulmonary vein) மூலம்  இட அட்டத்துள் (Left Atrium) நுழைந்து மிடை வாவி (Mitral valve) மூலம் இட வளைக்குள் (Left venticle) நுழைந்து  எழுதை வாவி (Aortic valve) மூலம், எழுதத்துள் (Aorta) நுழைந்து, முடிவில் வெவ்வேறு உடற்பாகங்களுக்கு நாளங்கள் வழியே இறைக்கப் படுகின்றன  

(மேலுள்ளதில் cusp, pulmonary க்கான  கலைச்சொற்களைப் புரிந்து கொள்க. வெவ்வேறு 2 புள்ளிகளில் தொடங்கும் வளைவுகள் மூன்றாம்  பொதுப் புள்ளியில் முடிந்தால்,  முன்றாம் புள்ளியை cusp (a pointed end where two curves meet) என்பார்.  பானை செய்கையில், குயப்பின் (cusp) மூலமே குழிக்கிறோம். இனிப் pulmonary. எடையிலா நுரைபோல் அமைந்த நுரையீரல் (Lung), ஒரு பக்கம் காற்று நுண்ணறைகளும் இன்னொரு பக்கம் காற்றை ஈர்க்கும் குருதி நுண்குழாய்களும் கொண்டது. lung (n.) human or animal respiratory organ, c. 1300, from Old English lungen (plural), from Proto-Germanic *lunganjo- (source also of Old Norse lunge, Old Frisian lungen, Middle Dutch longhe, Dutch long, Old High German lungun, German lunge "lung"), literally "the light organ," from PIE root *legwh- "not heavy, having little weight" (source also of Russian lëgkij, Polish lekki "light;" Russian lëgkoje "lung") என்று சொற்பிறப்பியல் சொல்வார். 

இங்கு  நுரை என்பது, எடையிலாமையைக் குறிக்கும். நுரைக்குப் பகரியாய் இலவம்>இலகம் பஞ்சையும் உருவகிக்கலாம். இன்னொரு வகையில் இலுத்தல்> ஈல்த்தல்> ஈழ்த்தல்> ஈர்த்தல் என்பதையும், இலு>இழு>இழுங்கு என்பதையும் ஓர்ந்துபார்க்கலாம், நுரையைத் தொக்கி இழுங்கு (lung) என்றும் சொல்லலாம். இலகம், இழுங்கம் எனும் 2 சொற்களில் முன்னதை நான் பரிந்துரைப்பேன். இன்னொரு வகையில் புழை (= நுண்ணறை) நிறைந்தது புழைமம். இலகம், புழைமம் எனும் 2 சொற்களை நுரையீரலோடு சேர்த்தால் உடலியல் படிப்பு எளிதாகும். 

இலகம், குருதயம், உடற்பாகங்கள் என்று சுற்றும் குருதியில் பால்மம், வெள்ளணு, சிவப்பணு, சில பெருதங்கள் (proteins) உள்ளன. பெருதங்களிற் சில, குருதிக் குளுகலை (clotting) உண்டாக்கலாம். மாந்தவுடல் காயப்படும்/ வெட்டுறும் போது, குருதி சிதறுவதை, குளுகுவதைத் தவிர்க்கமுடியாது.   நீர்ம நிலையிலிருந்து அரைத் திண்மச் சளி ( gel) நிலைக்கு குருதி மாறுகையில், குருதிக் குளிகை (blood clot) ஏற்படும். அளவிற்கு மீறிய குருதியிழப்பைத் தடுக்கக் குளுகல் (Clotting) நடப்பது ஒருவகையில் நல்லதே, பேச்சுவழக்கில் குளுகலை அடைப்பு என்பார். குளிகை என்பது அடிப்படையில் கரடுதட்டிய உருண்டையே. நாளங்களுள் நகராக்  குளிகை எத்துயரையும் தராது; நகரும் குளிகையோ, தானே கரையாததால்,  பெரும் ஊற்றை (danger) விளைவிக்கும். இரத்த வழிநங்களிலும் (veins), எழுதைகளிலும் (arteries) உடற்சிக்கலையும், உயிருக்கு உலைவையும் கூட ஏற்படுத்தலாம். 

இக்குளிகைகள் குருதயத்திற்கோ,  இலகத்திகோ செலின், குருதியோட்டம் தடுத்து,. மருத்துவ அவக்கரம் (medical emergency) ஏற்படுத்தலாம்.  எழுதைக் குளுகல் சட்டெனச் சிக்கல் கொடுக்கும். வழிநக் குளுகலோ மெதுவாகச் சிக்கல் கொடுக்கும். அரிதாய் அமையும் பெருஞ்சிக்கல் வழிநக் குளுகலை , ”ஆழ் வழிநத்  திரம்பல் (deep vein thrombosis) என்பார். இதுபோன்ற ஆழ்சிக்கல் பெரிதும் கால்களில் தான் நடக்கிறது. தவிர, மேற்கைகள், இடைக்குழி (pelvis), நுரையீரல், மூளை ஆகியவற்றிலும் நடக்கலாம். மூளைக்குள் நடக்கும் குருதிக் குளுகலால், மூளையியக்கமே கூடத் தட்டுப்படலாம் (இதைத் ”தட்கிறது” எனவும் சொல்லலாம். பலரும் ”தட்(டு)கை” என்று சொல்லத் தயங்கி ”stroke” என்பார்.). இது போலும் மூளைத் தட்டுகையில், கனத்த திடீர்த் தலைவலியும், பேச்சு, காட்சித் தடுமாற்றமும் உண்டாகும்,

இனி இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள சில குருதிச் சொற்களைப்  பார்ப்போம். முதலில் வருவது blood க்கு மாற்றான gore (n.1) என்பதாகும். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார்.  இதையே, SKEAT தன் விளக்கத்தில்,  

GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார். 

இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம்  என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என்று இச்சொல் குருதியோடு தொடர்புடையது.cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கு குரு சார்ந்த அடையாளங் கண்டோமே, அதையும் நினைவு கொள்ளுங்கள்.  

அடுத்தது hemoglobin (n.) also hæmoglobin, coloring matter in red blood cells, 1862, shortening of hæmatoglobin (1845), from Greek haimato-, combining form of haima (genitive haimatos) "blood" (see -emia) + globulin, a type of simple protein, from globule, formerly a word for "corpuscle of blood." இதற்கு இணையாய்ச் செங்கோளம் என்று சொன்னேன்.

குருதியின் அடிநீர்மமான plasma (n.) வைத் தமிழில் பால்மம் என்போம். (1712, "form, shape" (a sense now obsolete), a more classical form of earlier plasm; from Late Latin plasma, from Greek plasma "something molded or created," hence "image, figure; counterfeit, forgery; formed style, affectation," from plassein "to mold," originally "to spread thin," from PIE *plath-yein, from root *pele- (2) "flat; to spread.") 

பால்மத்திற்கு இன்னொரு சொல்லாய் serum (n.) என்பதை இந்தை யிரோப்பியனில் சொல்வார். ( 1670s, "watery animal fluid," from Latin serum "watery fluid, whey," from PIE verbal stem *ser- "to run, flow" (source also of Greek oros "whey;" Sanskrit sarah "flowing, liquid," sarit "brook, river"). First applied 1893 to blood serum used in medical treatments). சில மரங்களில் கீரினால்>கீறினால் கிடைக்கும் நீரைப் பால் என்றே தமிழில் சொல்வதுண்டு. பனம்பால், தென்னம் பால், போல அரப்பைப் (rubber) பாலும் உண்டு. இதைக் கீரம்>கீறம் என்றும் சொல்லலாம். இந்தக் கீரம் தான் வடக்கே கடனில் போய், க்ஷீரம் ஆகும். மீண்டும் கடன்வாங்கி குடிக்கும் பாலுக்கே சிலர் பழகுவார். க்ஷீரம் ஆங்கிலத்தில் serum ஆகியிருகிறது. நாம் பால்மம் என்றோ, கீரம் என்றோ பயிலலாம். ஏன் நம் சொல்லை விட்டுக்கொடுக்க வேண்டும்?     

இதுபோக, குருதியின் செம்மை நிறம் கருதி செங்க விளவம் (sanguine fluid) என்ற சொல்லும் புழங்கும். sanguinary (adj.) "characterized by slaughter," 1620s, possibly from French sanguinaire, or directly from Latin sanguinarius "pertaining to blood," from sanguis (genitive sanguinis) "blood," of unknown origin. Latin distinguished sanguis, the generic word, from cruor "blood from a wound" (related to English raw, from PIE root *kreue-).

இந்த வரையறைக்குள் வரும் cruor என்பது முன்சொன்ன கோரத்தோடு தொடர்புடையது,  

இன்னும் ஒரு சொல். vital fluid. இதை வாழ்வு விளவம் எனலாம். வாழ்வதற்குத் தேவையான விளவம். இன்னும் பல சங்கதச் சொற்களும் உண்டு, அவற்றை விளக்க இன்னொரு பகுதி வேண்டும்.

அன்புடன்,

இராம.கி.