Sunday, February 06, 2011

ஒருங்குறி - சொற்பிறப்பு

பொதுவாக எல்லா நிறுவனங்களிலும், (நிறுவனங்களாய் ஆகிப் போன இயக்கங்களிலும் கூட) அங்கொருவர் இங்கொருவராய் சில சட்டாம் பிள்ளைகள், தங்கள் ஆளுமைகளைக் காட்டிக் கொண்டே யிருப்பார்கள். ஏதோ நிறுவனச் சட்ட ஒழுங்கை இவர்கள் மட்டுமே கட்டிக்காப்பது போல் நடந்து கொள்வார்கள். தமிழ் உரிமை பாதுகாக்கும் இயக்கங்களும் கூட இதில் விலக்கில்லை. பிரம்பு வைத்துக் கொண்டிருக்கும் சட்டாம் பிள்ளைகள் “தாங்கள் சொல்வதும், தங்கள் தலைவன் சொல்வதும் தான் சரி” என்று அடம் பிடிப்பார்கள். மற்றவர்களைத் தங்கள் கருத்திற்கு வளைக்க எண்ணிவிட்டால், பிரம்பையோ, புளியம்விளாறையோ எடுக்கவும் தயங்க மாட்டார்கள். “ஏலேய், இந்தாப் பாரு, கப்சிப்புன்னு இருக்கோணும், தெரியுமா? பேசச் சொன்னாத்தான் வாயைத் தொறந்து பேசணும், இல்லைன்னா, சூத்தைப் பொத்திக்கிட்டு மூலையிலெ உட்காரணும். கேள்வி கேட்க வந்திட்டான் பாரு, கேள்வி. எங்களுக்குத் தெரியாதோ?” என்று அதிகாரம் பண்ணியே பழக்கப் பட்டவர்கள்.

இவர் போன்ற சட்டாம் பிள்ளைகளை இளமைக் காலத்தில் திண்ணைப் பள்ளியில் படித்த போது நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் எங்கள் கண்டனூரில், “அரசுப் பாடத்திட்ட வழி” சொல்லிக் கொடுக்கும் “சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளி” என்ற தனியார் பள்ளியோடு 2, 3 திண்ணைப் பள்ளிகளும் இருந்தன. நான் எங்கள் அத்தை வீட்டிற்கு அருகில் நாலாவது வீதியில் இருந்த ”புளியமரத்தடித் திண்ணைப் பள்ளியில்” மூன்றாவது வரை படித்தேன். பிறகு அங்கிருந்து மாறி, “அரசுப் பாடத்திட்டத்” தொடக்கப் பள்ளிக்கு மாறிக் கொண்டேன். அகவை முற்றிய ஓர் ஆசிரியர் தான் திண்ணைப் பள்ளியில் முன்று வகுப்பிற்குஞ் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உதவியாக சட்டாம் பிள்ளை இருப்பார். ஆசிரியர் கையிற் பிரம்பு இருக்கிறதோ, இல்லையோ, சட்டாம்பிள்ளை கையிற் பிரம்பு எப்பொழுதும் இருக்கும். ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றிச் சுழன்று சொல்லிக் கொடுப்பார். அவர் இல்லாத இரு வகுப்புகளை சட்டாம்பிள்ளை பார்த்துக் கொள்வார். பாடஞ் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், பிள்ளைகளைக் கட்டுக்குள் வைப்பதாற்றான் சட்டாம்பிள்ளை ஈடுபடுவார்.

பொதுவாய்ச் சட்டாம்பிள்ளை என்றாலே அந்தக் காலப் பிள்ளைகளுக்குச் “சிம்ம சொப்பனம்”. ஆனாலும் குசும்புகள், ஏமாற்றுகள், விளையாட்டுகள், எதிர்ப்புகள், கேள்விகள், பின் அடி வாங்கல், தண்டனை பெறல் என எல்லாமும் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் நடக்கும். பெற்றோரும் சட்டாம் பிள்ளை தேவைதான் என்பது போல நடந்து கொள்வார்கள். எனக்கும் சட்டாம்பிள்ளைகளுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம். [இப்படி எதிர்த்தே பழக்கப் பட்டதால் தான் இடதுசாரிச் சிந்தனை என்னுள் வளர்ந்ததோ, என்னவோ?] இந்த இடைவிடா முரண்பாடுகளால், சட்டாம்பிள்ளைகளிடமிருந்து பெரும்பாலும் விலகி நிற்பேன். இவர்களிடம் தெரியாத்தனமாய்ச் சிக்கிக் கொண்டதில்லை. (எல்லாம் இளமையில் பட்ட அறிவு)

இது போன்ற சட்டாம்பிள்ளைகளை, இளமையில் மட்டுமல்லாது, அகவை கூடிய போதும் பல நிறுவனங்களில், இயக்கங்களிற் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர்களை விட்டு விலகியே இருந்திருக்கிறேன். சட்டாம் பிள்ளைகள் எனக்கு என்றுமே நெருங்கியவர்களாய் ஆனதில்லை. சென்ற வாரம் அப்படி ஒரு சட்டாம் பிள்ளையை மீண்டும் காண வேண்டிய நேர்ச்சி ஏற்பட்டது. அது இளமைக் கால நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டது.

சனவரி 30 ஆம் நாள், நண்பர் இரா.சுகுமாரனின் அழைப்பில் அவர்களுடைய புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய “தமிழொருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில்” கலந்து கொண்டு திரும்பினேன். அந்த மாநாட்டில் என்னுடைய பங்களிப்பைப் பேச்சாக அமைக்காது, ஒரு பரத்தீடாக (presentation) அமைத்திருந்தேன்.

பரத்தீட்டின் ஊடே “உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கும் எண்களைக் கொடுத்து அவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார்கள். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத்தொகையாய் ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்று ஒருசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்குகுறி என்று சொல்ல முயலுகிறார்கள். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற் சிக்கனம் போல சொல்லில் எழுத்துச் சிக்கனம் தேவை.)” என்று சொல்லிப் பாவணரையும் துணைக்கு அழைத்திருந்தேன்.

வேறொன்றுமில்லை, கொஞ்சநாளாகவே, இதை விளக்கிச் சொல்லித் தவறான சொற்களை முளையிலேயே தவிர்க்க வேண்டுமென்ற முனைப்புத் தான். பொதுவாகத் தான் பரிந்துரைத்த சொல் தான் நிலைக்க வேண்டும் என்று விழையும் ஆளல்ல நான். எது நாட்படக் குமுகத்தில் நிலைக்கிறதோ, அது நிலைத்துப் போகட்டும் என்று அமைந்து போகிற ஆள். ஆனால் ஒரு சொல்லை ஏன் பரிந்துரைத்தேன் என்பதை விளங்கச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணுவேன்.

நான் பேசிமுடித்து மற்றோரும் பேசிமுடித்து, நன்றி நவிலலுக்கு முன் அகவை முதிர்ந்த பழம் தமிழாசிரியர் ஒருவர் மேடைக்கு எழுந்து போய், “ஒருங்கு குறி என்பது தான் சரி. ஒருங்குறி என்பது தவறு. ஒருங்கு குறி என்று நான் தான் மாற்றியமைக்கச் சொன்னேன். கணிஞர்கள் கணியோடு தங்கள் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் என்று வந்தால், அதைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம், புதுக் கலைச்சொற்களை நாங்கள் உருவாக்குவோம்” என்ற தொனியில் முன்னே நான் சொன்ன கருத்தை மறுத்து நறுக்கென்று ஒரு குட்டை என்மேல் வைப்பது போற் பேசி நகன்றார். எனக்குச் சட்டாம் பிள்ளைகள் பற்றிய நினைப்புச் சட்டென்று வந்தது.

”சரி, நமக்கும் அகவை கூடிய பெரியவர், போராளி இவரைப் போய் மேடையில் மறுத்துப் பேசி ஏதாவது இரண்டுங்கெட்டான் ஆகிவிடக் கூடாது” என்று நான் அமைந்துவிட்டேன். ஆனாலும் வீட்டிற்குத் திரும்பி வரும் போது என்னுட் சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருங்குறி என்ற சொல் பழகுதமிழிற் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படிச் சட்டாம்பிள்ளைகள் புகுந்து நாட்டாமை செய்தால் எப்படி? [இந்தக் commissor களைக் கண்டாலே எனக்குச் சுரம் ஏறிப் போகும்.]

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் இயல்பியல் - physics - என்ற சொல்லைக் கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து நாங்கள் பரிந்துரைத்து அது "இயற்பியல்" என்று தப்பும் தவறுமாகத் தமிழ்கூறு நல்லுலகெங்கும் பரவிவிட்டது. "இயற்பு" என்ற சொல்லே தமிழிலில்லை என்று யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. ஆனாலும் இதைச் சரிசெய்ய நான் யார் - என்று அதன் போக்கில் விட்டுவிட்டேன். இந்தச் சொல்லும் அப்படிக் குதறப் பட்டால் என்ன ஆவது? இந்தச்சொல்லின் பிறப்பை மேலுஞ் சரியாக விளக்கிச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா? தமிழ்கூறு நல்லுலகம் எதை ஏற்றுக் கொள்ளும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் தவறான புரிதல் இருக்கும் போது அதைச் சரி செய்வது நம் கடமை என்றெண்ணினேன். அதன்விளைவால் ஒருங்குறி என்ற சொல்லின் சொற்பிறப்பை இப்பதிவில் விளக்குகிறேன்.

ஒல் என்னும் வேருக்குக் கூடற் பொருள் உண்டு. கூடும் பொருட்கள் தான் சேரும், கலக்கும், பிணையும், இணையும், பொருந்தும். அதனாற்றான் ஒல்>ஒல்லுதல் என்பது பொருந்தற் பொருளைக் குறிக்கும் வினைச்சொல் ஆயிற்று. ஒல் என்னும் வேர் ஒர்>ஒரு என்று திரிந்து ஒருதல் என்ற தன்வினையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தன் வினைச்சொல் இற்றை மொழியிற் காண்பதில்லை. அதன் பிறவினையான ஒருத்தல் என்ற சொல் மட்டுமே இற்றை மொழியிற் தங்கி ஒற்றைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. ஒருத்தலில் இருந்து பிறந்த பெயர்ச்சொற்கள் தாம் ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர் ஆகியவையாகும். அதே போல ”ஒருப்படுதல் = ஒன்றுபடுதல்” என்ற செயப்பாட்டு வினை இற்றை மொழியில் இருப்பதால், ஒருதல் என்ற செய்வினையும் ஒருகாலத்தில் நம் மொழியில் இருந்திருக்க வேண்டும் என்று உய்த்தறிகிறோம். ஒருப்படுதல் என்ற வினையில் இருந்து ஒருப்படுத்துதல் என்ற இன்னொரு வினைச்சொல் பிறக்கும். ஒருப்பாடு என்ற வினையடிப் பெயர்ச்சொல்லும் நமக்கு ஒருதல் என்ற தன்வினை ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டியதை உணர்த்துகிறது. தவிர ஒற்றுமை என்று பொருள்படும் ஒருப்பு என்ற பெயர்ச்சொல்லும் ஒருதல் என்ற தன்வினை ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டியதன் கட்டாயத்தை நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகளும் உண்மையாய் இருக்கவேண்டுமானால் கீழே வரும் சொற்பிறப்புகள் இயல்பாக வேண்டும்.

ஒல்>ஒரு>*ஒருதல்
ஒல்>ஒரு>*ஒருதல்>ஒருப்பு
ஒல்>ஒரு>ஒருத்தல்
ஒல்>ஒரு>ஒருத்தல்>ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர்
ஒல்>ஒரு>ஒருப்படுதல்
ஒல்>ஒரு>ஒருப்படுதல்>ஒருப்பாடு
ஒல்>ஒரு>ஒருப்படுத்தல்>ஒருப்படுத்துதல்

இனி வாழ்தலில் இருந்து ”வாழும் நிலை”, செய்தலில் இருந்து ”செய்யும் வகை” போன்றவை ஏற்படுவது இயற்கையென்றால், “ஒரும் நிலை” என்பதும் ஏற்படத்தான் வேண்டும். இதன் பொருள் ”ஒற்றுமைப் படும் நிலை” தானே? இதிலிருந்து மேலும் ஒரு வினைச்சொற் திரிவு ஏற்பட்டு ஒருமுதல் என்பது பிறக்கும். இந்தத் திரிவு எல்லாச் சொற்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சில வினைச்சொற்களுக்கே ஏற்படுகின்றன. எழுதலில் இருந்து எழும்புதல்/எழுமுதல் என்ற சொற்கள் பிறக்கின்றனவே, அதுபோல இதைக் கொள்ளலாம். ஒருமுதலின் இருப்பை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதை இன்னொரு வகையிற் பார்க்கலாம். ஒருமுதலின் பிறவினைச் சொல்லான ஒருமித்தல் என்பது இருக்கிறதல்லவா? பிறவினைச்சொல் இருந்தால் தன்வினைச்சொல் இருந்திருக்க வேண்டுமே? ஒருமுதலிற் பிறந்த பெயர்ச்சொல் தான் ஒருமை. இனி, ஒருமையை ஏற்பவர் ஒருமுதலை ஏற்காது இருப்பரோ?

ஒல்>ஒரு>ஒரும்
ஒல்>ஒரு>ஒரும்>ஒருமுதல்
ஒல்>ஒரு>ஒரும்>ஒருமுதல்>ஒருமித்தல்
ஒல்>ஒரு>ஒரும்>ஒருமை

தெள்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

- புறம் 189 திணை பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

ஒருமை என்ற பெயர்ச்சொல்லில் இருந்தும் ஒருமைப்படுதல் என்ற வினைச்சொல் பிறக்கும். பின் ஒருமைப்பாடு என்ற பெயர்ச்சொல் பிறக்கும்.
ஒல்>ஒரு>ஒருமை>ஒருமைப்படுதல்
ஒல்>ஒரு>ஒருமை>ஒருமைப்படுதல்>ஒருமைப்பாடு

ஒருதல் என்ற சொல் ஒருவுதல் என்ற இன்னொரு வினையை உண்டாக்கி ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லையும் ஒற்றுமைப் பொருளிற் காட்டுகிறது.
ஒல்>ஒரு>ஒருவந்தம்

ஒருவுதல் ஒருகுதல் என்றும் திரிகிறது. அதிலிருந்து ஒருகை என்ற பெயர்ச்சொல்லை அதே ஒற்றுமைப் பொருளில் உருவாக்கியிருக்கிறது.
ஒல்>ஒரு>ஒருகுதல்
ஒல்>ஒரு>ஒருகுதல்>ஒருகை

ஒருகுதலின் பிறவினையாய் ஒருக்குதலும், ஒருக்குதலின் தன்வினையாய் ஒருங்குதலும் உருவாகின்றன.
ஒல்>ஒரு>ஒருகுதல்>ஒருக்குதல்
ஒல்>ஒரு>ஒருங்குதல்

இன்னொரு வளர்ச்சியில் ஒல்>ஒல்+ந்+து>ஒன்று>ஒன்றுதல் என்பதும் ஒற்றுமை என்ற பெயர்ச்சொல்லும் உருவாகும்.

இப்பொழுது சொல்லுங்கள் ஒருங்குதல் மட்டும் தான் வினைச்சொல்லா? ஒருதல், ஒருத்தல், ஒருப்படுதல், ஒருப்படுத்துதல், ஒருமுதல், ஒருமித்தல், ஒருவுதல், ஒருகுதல், ஒருக்குதல் போன்ற இத்தனையும் சற்றே மாறுபட்ட அதே பொழுது அடிப்படையில் ஒரே கருத்தை உணர்த்தவில்லையா? இந்த வளர்ச்சியில் ஒரும் குறியை ஒருங்குறி என்று சொன்னால் என்ன குறைந்து போயிற்று? எந்தவகையில் ஒருங்கு குறி என்பது சிறப்புற்றது?

ஒருவுதல்/ஒருகுதல், ஒருங்குதல் என்பது போல் மரு>மருவு>மருகு>மருங்குதல் என்பது தழுவற்பொருளை உணர்த்திச் சொற்திரிவு காட்டும். நெரு>நெருங்கு என்பதும் இதைப் போன்ற திரிவுதான். நெரு>நெரி>நெரிசல் என்ற பெயர்ச்சொல் வளர்ச்சியையும் இங்கு நோக்கலாம்.

நண்பர்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஒருங்குறி என்று சொல்லலாம். சட்டாம் பிள்ளைகளின் நாட்டாமையை நாம் பொருட்படுத்த வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.