Wednesday, March 25, 2020

Global positioning system

ஒருமுறை வல்லமை மடற்குழுவை நடத்தும் அண்ணா கண்ணன், GPS க்கு இணையாகத் தமிழ்ச்சொல்லைக் கேட்டிருந்தார். மின்தமிழில் அதைப்பற்றி ஒரு இடுகையிட்டேன். அது ஏனோ வெளிவரவில்லை. என்ன தப்பு செய்தேன் என்றும் விளங்கவில்லை. என்னுடைய கணியிலும் அதைச் சேமித்து வைக்க வில்லை. எனவே மீண்டும் எழுதவேண்டியதாயிற்று. இனிச் சொல்லுக்கு வருவோம்.

தமிழில் அறிவியல் எனும்போது இருவகைப் போக்குகள் காணப்படுகின்றன. ஒன்று பொதுக்கள அறிவியல் (popular science), இன்னொன்று அடிப்படை அறிவியல் (basic science). இரண்டிற்கும் இங்கே இடமுண்டு. தமிழில் அறிவியல் நடை வளரவேண்டுமெனில் அடிப்படை அறிவியலிற் கலைச்சொற்கள் எழ வேண்டும். பொதுமக்களை அறிவியல் நோக்கி  இழுக்க வேண்டுமெனில், அடிப்படை அறிவியற்சொற்களை விளக்கும்முகமாக எளிமைப்படுத்தும் எழுத்துக்கள்/கட்டுரைகள் வேண்டும். இதை முன்பின்னாகச் செய்து கொண்டிருந்தோம் எனில் தமிழில் அறிவியல் நடை வளரவே வளராது. வெறுமே பொதுக்கள அறிவியல் விளிம்பு நிலையிலேயே நம்நடை இருந்து கொண்டிருக்கும்.

உயரறிவியலில் இருக்கும் சொற்சிக்கனம் நமக்குக் கைப்படாமலே போய் விடும். துல்லியமான கலைச்சொற்களைப் படைத்தால் தான் புதுக்கருத்துச் சிந்தனை, புது அறிவியற் படைப்புகள் எழும். பொதுக்கள அறிவியலில் மட்டுமே நின்று கொண்டிருந்தால் காலத்திற்கும் வெளியார் படைப்பைத் தமிழில் விளக்கிக்கொண்டிருந்தே காலம் போகும். தமிழில் அறிவியல்நடை வளர வேண்டும் என்று விரும்புவோர் கலைச்சொற்கள் உண்டாக்குவதில் சற்று கவனஞ் செலுத்த வேண்டும்.

Global positioning என்பது பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு கட்டகம் [கட்டப்பட்டது கட்டகம் = system. எங்கெல்லாம் system என்னும் ஆங்கிலச்சொல் பயன்படுகிறதோ, அங்கெல்லாம் கட்டகம் என்பதை துறைகள் தாண்டியும் எல்லாப் புலங்களிலும் பயில முடியும். சில ஆண்டுகளாய் இதை அப்படியே பயிலுகிறேன். இந்தச் சொல்லுக்கு வந்துசேர எனக்கு நெடுநாட்களாயின. இன்னும் ”அமைப்பு, சேர்மானம், அது இது” என்று பலசொற்களைப் பயில்கிறோம். என்னைக் கேட்டால் கட்டகம் என்பது முழுப்பொருளை எல்லாத் துறைகளிலும் தருகிறது. தமிழிற் கலைச்சொற்கள் என்பதை ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியாகப் பாத்தி கட்டியது போல் உருவாக்கும் மனப்பான்மையை நாம் விலக்கவேண்டும். துறைக்கென்று இருக்கும் சொற்கள் 100 இல் ஒன்றாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது 100க்கு 10 என்றால் நம்மிடம் ஏதோ தவறிருக்கிறது என்று பொருள்.]

to pose என்பதன் பிறவினையாகப் to position என்ற சொல் ஆங்கிலத்திற் பயிலும். பொதிதல் என்பது தமிழில் தன்வினை; ஓரிடத்தில் ஒரு பொருள் பொதிந்து போதல் (தங்கிப் போதல்). பொதித்தல் என்பது பிறவினை. நகையில் வைரத்தை, முத்தை, பவளத்தைப் பொதிக்கிறோம் இல்லையா? அது போல ஏதோ ஒரு பொதியை (body) ஓரிடத்தில் மாந்த முயற்சியில் பொதிக்கிறோம். பொதிதலில் எழுந்த பெயர்ச்சொல் பொதிப்பு. பொதித்தலில் எழுந்த பெயர்ச்சொல்லும் பொதிப்புத் தான். [இங்கே வினைச்சொல்லில் தான் வேறுபாடு காட்டமுடியும்; பெயர்ச் சொல்லில் முடியாது.] பொதிவிப்பு என்பது பட்டுவ வாக்கில் (passive voice) எழுந்த பெயர்ச்சொல். தமிழில் கூடிய மட்டும் பட்டுவ வாக்கைத் தவிர்ப்போம். வேறுவழி இல்லையேல் சொல்லுவோம். ஏதொன்றையும் ஆற்றுவ வாக்கில் (active voice) சொல்லுவதே சிறப்பாக இருக்கும்.

கோளப் பொதிப்புக் கட்டகம் (Global positioning system) என்பதே அவர் கேட்டதற்கு என் பரிந்துரை. கோப்.பொ.கம் என்பதை [உத்தமம் - INFITT என்பது போல] GPS என்பதற்கு நிகரான எழுத்துச் சுருக்கப் பெயராக நான் பரிந்துரைப்பேன். கோப்பொகத்தை விவரிக்கும் போது புவியிடங்காட்டி, இடஞ்சுட்டி என்றெல்லாம் விவரித்துச் சொல்லலாம். பொதுக்கள அறிவியலில் விவரிப்பதற்கும், விளக்குவதற்கும் பயன்படக்கூடிய சொற்களுக்குக் கலைச்சொற்கள் என்ற மகுடஞ் சூட்டிப் பார்ப்பது நம்மை நெடுந்தொலைவு கூட்டிச் செல்லாது. அப்புறம் உங்கள் உகப்பு.

நான் சொல்லுங் கருத்தை நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி. நம் சொற்களில் துல்லியம் கூடவேண்டும். நமக்குத் தெரிந்த 3000 சொற்களையே வைத்துக் கொண்டு புரட்டிப் போட்டு முன்னொட்டு பின்னொட்டு வைத்துச் சொற்களைப் படைப்பது குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவது போல. தயவு செய்து நம் சொற்தொகுதியைக் கூட்டிக் கொள்வோம் என்று எல்லோரையும் வேண்டியழைக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

No comments: