Thursday, August 29, 2013

கணிநுட்பியலும் தமிழும்

இப்பொழுதெல்லாம் நுட்பக் கட்டுரை எழுதுவதென்றால் 100க்கு 90/95 தமிழர்கள் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். (இந்தப் பழக்கம் மடற்குழுக்களிலும் கூடி வருகிறது.) தமிழில் எழுதுவது கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறது. தமிழ்க் கணிமை, இணையம் என்று பாடுபடும் உத்தமத்தின் மாநாட்டுக் கட்டுரைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற ஆண்டு 10/15 விழுக்காடு தமிழ்க் கட்டுரைகள் என்றால் இந்த ஆண்டு 1/2 % ஆகவாவது மேலும் இருக்க வேண்டாமா? அப்படி ஆவதாய்த் தெரியவில்லையே? அண்மையில் 2013 மாநாட்டுக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். நொந்து போனேன். அவற்றிலும் அதே கதைதான். (ஆங்கிலம் புறநடையாய் இருக்கவேண்டிய மாநாட்டில் தமிழ் புறநடையாய் இருக்கிறது.)

தமிழிற் கலைச்சொற்கள் இல்லை என்பதெல்லாம் ஆறிய பழங்கஞ்சி. தேடினாற் கிடைக்காதது ஒன்றுமில்லை. (தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தைப் பிறைக்குறிக்குள் போட்டுக் கொள்ளுங்கள்; எந்தக் குறையுமில்லை.) தமிழை ஏன் புழங்கமாட்டேம் என்கிறோம்? அந்தத் தொகுப்பிற் கலைச்சொற்கள் அவ்வளவு தேவைப்படாக் கட்டுரைகளும் கூட ஆங்கிலத்திற்றான் இருக்கின்றன. தமிழகம் என்றில்லை; ஈழம், மலேசியா, சிங்கப்பூர் என்று வெவ்வேறு நாட்டுப் பேராளர்களும் ஆங்கிலத்தில் எழுதவே விரும்புவது போற் தெரிகிறது. அகவை முற்றிய காலத்தில் ”இந்தத் தமிழைத் தொலைத்து முழுகினால், என்ன?” என்று எனக்குத் தோன்றுகிறது.

”எமக்கு ஆங்கிலந் தெரியும், இந்த நுட்பங்கள் கரதலையாய்த் தெரியும், இவற்றை ஆங்கிலத்திற் சொல்லவுந் தெரியும்” என்று கேட்போருக்கு/பார்ப்போருக்கு ஆடம்பரத் தோற்றங் காட்டுவது தான் நம் குறிக்கோளா? இக்கட்டுரைகளைப் படிப்பது தமிழரும், தமிழ் தெரிந்த பிறமொழியாளரும் தானே? அப்புறமென்ன? தமிழிற் கட்டுரையிருந்தால் குறைந்து போகுமா? அல்லது தமிழிற் சொல்ல நமக்கு வெட்கமா? ”படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்றால் அப்புறம் எதற்கு விழுந்து விழுந்து தமிழுக்குப் பணிசெய்து கொண்டிருக்கிறோம்? அன்றாட வாழ்க்கையிற் தமிழுக்குத் தேவையில்லாத போது, அலுவல் வேலைகளை ஆங்கிலத்தில் வைத்துத் தமிங்கிலர் ஆகும் போது, 10/15 ஆண்டுகளாய்த் தமிழிற் சந்தை ஏற்படுத்தாத போது, அதற்கு அரசிடம் நாம் வேண்டுகோள் வைக்காத போது, மொத்தத்திற் தமிழையே நம் வாழ்க்கையிற் பயன்படுத்தாத போது, தமிழுக்குச் சொவ்வறை படைப்பதும், நுட்பியல்களைக் கொண்டு வருவதும் எதற்கு?

இதில் தமிழ் மக்களும் சும்மா இருக்கிறார்கள், தமிழக அரசும் அப்படித்தான் இருக்கிறது, தமிழ்/கணி அறிஞர்களும் அப்படியே இருக்கிறார்கள். ”பாப்பாத்தியம்மா, மாடு வந்தது; தொழுவத்திற் கட்டினாற் கட்டிக்க. கட்டிக்காட்டிப் போ” என்ற போக்கு யாருக்கு வேண்டும்? உப்பிற்குச் சப்பாணியாய் நாம் ஏன் இருக்கிறோம்? தமிழக அரசின் எந்தத் தளமாவது தமிழிற் கையாளும் வகையில் இருக்கிறதா? தமிழக அரசின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு வந்த மாநாட்டுக் கட்டுரைகளும் ஆங்கிலத்திற்றான் இருக்கின்றனவே? அரசின் ஆதரவில் பணம் செலவழிக்கும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர், ஆய்வாளர்கள் தமிழில் ஏன் எழுத மாட்டேம் என்கிறார்? தனியார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் ஆர்வத்திற்றானே தமிழ்க் கணிமையில் வேலை செய்கிறார்? அப்புறம் தமிழிற் கட்டுரை படைத்தால் நிர்வாகம் இவர்களை மதிக்காதா?

தமிழுக்குத் தடை வேறு யாருமில்லை, தமிழராகிய நாம் தானே? ”அவன் கெடுத்தான், இவன் கெடுத்தான்” என்று ஏன் இன்னொருவரை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கிறோம்? நாம் எழுதும் கட்டுரையைத் தமிழில் எழுத நாம் அணியமாயில்லை, அப்புறம் ”தமிழுக்கு அதைச் செய்துவிடுவோம், இதைச் செய்துவிடுவோம்” என்று பதாகை தூக்கி முழக்குவதிற் பொருளென்ன?  

சரி, எந்தப் பென்னம் பெரிய, வெளிநாட்டு, உள்நாட்டுச் சொவ்வறை நிறுவனமாவது தமிழிற் சொவ்வறை படைக்கிறதா? நாம் தானே அது இது என்று தனித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம்? தமிழிற் சந்தை இருந்திருந்தால் இந்த நிறுவனங்கள் எல்லாம் ஓடிவந்திருக்குமே? இந்த நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்டுரையாவது மாநாட்டிற் படைக்கப் பட்டதா? இந்த மாநாடு நடந்ததாவது அவர்களுக்குத் தெரியுமா? அதைப் பொருட்டாக அவர்கள் மதித்திருப்பார்களா? சரி, சில ஆர்வலர்களாற் தூண்டப்பெற்று தமிழிற் தனியே சொவ்வறை படைத்து எதுவாவது பாராட்டிச் சொல்லும் வகையில் விற்றிருக்கிறதா? இந்தச் சொவ்வறைகளை வாங்கும் தேவையோ, எண்ணமோ, ஆதரவு மனப்பான்மையோ, நமக்கு ஏற்பட்டிருக்குமா? தமிழிற் சொவ்வறைச் சந்தை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறோமா? அதற்கு வேலை செய்யாது வெறுமே மாநாடு நடத்தி என்ன பயன்?

நுட்பியல் தெரிந்த நாமே தமிழில் எழுதத் தயங்கினால் அப்புறம் தமிழ் எப்படி நுட்ப மொழியாகும்? வீட்டுக்குள் அரைகுறைத் தமிழ், வீட்டை விட்டு வெளியே வந்தால் தமிங்கிலம் இணைப்பு மொழி, ஆங்கிலம் அலுவலக மொழி, அவ்வப்போது மற்ற தேவைகளுக்குப் பிறமொழிகள் என்றால் அப்புறம் என்னத்துக்கு கணித்தமிழை மெனக்கிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? எல்லாம் நேரத்தைப் போக்கவா? தமிழ்நாட்டிற் தமிழெங்கே பயன்படுகிறதென்று யாராவது சொல்லுங்களேன்?

நம் புலம் எது? நாம் நிலைக்க வேண்டிய காரணம் என்ன?

அன்புடன்,
இராம.கி

பி.கு. இப்படித் திறந்து எழுதிய இராம.கி.யைச் சினந்து கொள்வதாற் பயனில்லை. ஒரு செயற்திட்டம் உருவானாற் பலனுண்டு..

Saturday, August 03, 2013

சில ஆற்றுப் பெயர்கள்

15 ஆண்டுகளுக்கு முன், திரு.நா.கணேசனுக்கும் எனக்கும் இடையே நடந்த தனிமடற் பரிமாற்றத்தில், ஆறுகளின் பெயர்கள் பற்றி சில கருத்துக்கள் தெரிவித்திருந்தேன். அது பலருக்கும் பயனளிக்கும் என்றெண்ணி 1999 திசம்பரில் http://www.egroups.com/group/agathiyar/?start=3146 என்ற பொதுமடலாய் வெளியிட்டேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, வலைப்பதிவிற் சேகரிக்காது போனேன். பின்னால் வேறெதோ தேடப் போய், இணையத்திற் சிக்கியது. ”அடாடா, ஆக்கங்களைச் சேகரிக்கத் தானே வலைப்பதிவு தொடங்கினோம்? பெருமாண்ட இணையத்தில் குறிச்சொல் இன்றிச் சட்டென்று எதுவும் அகப்படாதே?” என்று தோய்ந்து, கிடைத்ததை மறுசீராக்கி, இப்போது வலைப்பதிவிற் சேர்க்கிறேன். தமிழுலகம், தமிழ்மன்றம், தமிழாயம் மடற்குழுக்களிலும் வெளியிடுகிறேன். பொறுத்தருள்க.
--------------------------------
முதலில் தமிழ்ச் சொற்பிறப்பு பற்றிச் சில செய்திகள். (பாவாணருக்குக் கடன்பட்டிருக்கிறேன்.)

ஆ,ஈ,ஊ,ஓ,ஐ போன்ற உணர்வொலிகள் (emotional sounds), ஏ,ஏய்,ஓ,ஏலா,எல்லா போன்ற விளியொலிகள் (vocative sounds), கூ(கூவு), கா....கா(காகம்), இம்(இமிழ்), உர்(உரறு), ஊள்
(ஊளை), குர்(குரங்கு), மா(மாடு), சீத்து(சீறு), ஓ(ஓசை), கர்(கரை), சர..சர(சாரை), சல்(சலங்கை-சதங்கை), கீர் - கீசி போன்ற ஒப்பொலிகள் (imitative sounds), ஊம், சீ,பூ போல் எழுதமுடிகிற குறிப்பொலிகள், மொச்சுக் கொட்டுதல் (smacking), முற்குதல் (clucking), வீளை (whistle) போன்ற எழுதமுடியாக் குறிப்பொலிகள் (symbolic sounds), ஆ-அ-அங்காத்தல், அவ்-கவ்- வவ் போன்ற வாய்ச்செய்கையொலிகள் (simple mouth opening sounds), இங்கு-இங்கா=பால், சோ-சோய்-சோசி=சோறு, டும்டும், பீப்பீ போன்ற குழவி வளர்ப்பொலிகள் (nursery sounds) போன்றவை பல தமிழ்ச் சொற்களின் தோற்றத்திற்குக் காரணமானவை. 

 ஆ,ஈ,ஊ என்று சேய்மை, அண்மை, முன்மைக் கருத்துக்களை சுட்டுஞ் சுட்டொலிகள் (deictic sounds) போன்றவை தமிழ்ச் சொற்பிறப்பிற்கு அடிப்படை ஒலிகள் என்பார் பாவாணர். அதிலும் சுட்டொலிகள், (குறிப்பாக ஊ எனும் முன்மைச் சுட்டொலியே) 75% க்கும் மேலான தமிழ்ச்சொற்களுக்கு அடிவேர் என்றுஞ் சொல்வார். அவர் காட்டும் முறையில் பலபோதுகளில் நான் வேறுபட்டாலும், பாவாணர் கோட்பாட்டு அடிப்படையை ஏற்றுக்கொள்வேன். இதை இம்மடலில் ஆராயப் புகுவது வெகுதூரம் உன்னிப்பு நோக்கிக் கொண்டுசெல்லும். எனவே இப்போது அதைச் செய்ய முற்படவில்லை. கணேசன் கூறிய ப்/வ் சிக்கலுக்கு வருவோம். 

”உ” விலிருந்து உல் முதலடியும், பின் க்,ச்,த்,ந்,ப்,ம் எனும் மெய்களோடு குல்,சுல்,துல்,நுல்,புல்,முல் என்னும் வழியடிகளையும் (1 + 6 = 7) பாவாணர் குறிப்பிடுவார்.
இந்த அடிகளெல்லாமே முன்மைக் கருத்தை முதலிற் குறித்து கால முன், இட முன், முன்னிலை, முன்னுறுப்பு, முற்பகுதி போன்றவற்றைக் காட்டும். முன்மைக்கருத்து என்பது மிக விளைவிப்பானது (productive). இதிலிருந்து பல கருத்துக்கள் ஏற்படலாம்; ஏன் கருத்து வளர்ச்சியால் எண் படிகளின் வழி ஒரு சொற்சுழற்சியே ஏற்படலாம். அதாவது, ”முன்வரல் (தோன்றல்) - முற்படல் - முற்செலவு - நெருங்கல் - தொடல் - கூடல் - வளைதல் - துளைத்தல் ..... மீண்டும் முன்வரல் - என்ற நீள்சுருளாகும் (helix) எண்படிச் சுழற்சியில் ஒவ்வொரு படியிலும் நெருங்கிய கருத்துக்கள் கிளர்ந்து சொற்கள் மாறிமாறி எழுந்துவரும் என்பது அவர் துணிபு.

இச்சொற்பிறப்புக் கோட்பாடு எம்மொழியாளரும் வைக்காத ஒன்று. இதில் சிறப்பென்ன என்றுகேட்டால், மேற்கூறிய 7 வகைச் சொல்லடிகளிலிருந்தும் 7 கருத்துச் சுழற்சிகள் ஏற்படுவதேயாகும். அதனால் எதுகைச் சொற்கள் 7 சுருள்களிலிருந்தும் ஒரே பொருளில் வருவது எளிது. இத்தகைய பல்லடிச் சுருள்களின் கருத்துப்பெருக்கந் தான் தமிழ்ச் சொல்வளத்திற்குக் கரணியம் ஆகும். உல்லெனும் வேரடி போல் வளம் இல்லாததெனினும் இல்லெனும் அண்மைக்கருத்து வேரடியிலிருந்து ”பின்மை - பிற்படல் (இறங்கல்/கீழுறுதல்) - பிற்படுத்தல் (இழுத்தல்)” போன்ற கருத்துக்களிற் சொற்கள் பிறக்கலாம். ஆனால் உல், இல் போலல்லாது (சேய்மைத் தொடர்ச்சி சேய்மையாகவே ஆனதால்) அல்லென்பதிலிருந்து இதுபோன்ற சொற்கள் பிறக்காதாம்.

இனிமேற்றான் "பெண்ணை எனுஞ் சொல் வேணி எனுஞ் சொல்லாகத் திரியுமா? என்ற கணேசனின் கேள்விக்கு விடை வருகிறது. "வகரம் உகரத்தோடு கூடி மொழி முதலில் வாராததால், உகரச் சுட்டடிச் சொற்கள் இற்றைக் காலத்து வகரமுதலாய் இருக்குமாயின், அவை பகர, மகரச் சொற்களின் திரிபென்று அறிதல் வேண்டும்." இதன் படி வண்டியெனும் சொல் பண்டி எனுஞ்சொல்லின் திரிவாகும். முழுங்கு-விழுங்கு, முடுக்கு-விடுக்கு என இன்னுஞ் சொல்லலாம். எந்நிலையில் பகர/மகரங்களில் இருந்து வகரத்துக்குச் சொல் திரிந்தது என்பது சொல்வரலாற்றின் பாற்பட்டது. சில மகர-வகரத் திரிவுகளை இங்கு காட்டுகிறேன்.

முள்>விள்-விளர்-விளரி = இளமை,முற்றாமை
 விள் -விளை -விழை -விழைச்சு = இளமை
விழை-விடை= இளம் பறவை, இளம் காளை
விடை - விடலை = இளைஞன், வீரன்

மழ-(வழ)-வழை=புதுமை
முல்-முள்-மள்-வள்-வரு-வார்-வா-வ. (வருதல்)
முள்-(முடு)-விடு; விடுத்தல் =முற்செல்லுதல்
முள்-(முய்) - (முயம்) - வியம்= முற்செல்லுதல்

நான் மேலுங் கொடுத்துக் கொண்டே போகலாம். இனி திரு. கணேசன் கேட்ட ப்/வ் திரிவுகளில் சிலவற்றைக் காட்டுவேன்.

பரம்-வரம்-வரன் =மேலானது (பார்க்க: உரனென்னுந் தோட்டியான் என்னும் குறள் 24) .
பர-வர-வார்=உயர்ச்சி
பறண்டு -வறண்டு; பறட்டு - வறட்டு, பில்லை-வில்லை=துண்டு, பிசுக்கு -விசுக்கு -விசுக்காணி = சிறியது, சிறிய துண்டு.
புல்-பல்-பால்-வால் - வாலுலகம்=வெண்மணல்,வான்மை=தூய்மை, வாலறிவு =தூய அறிவு.
புள்-பிள்-விள் - விள்ளுதல் = கலத்தல், விரும்புதல்
 பிள்-விள்-விடு;விடுதல் =பிளத்தல்
பிள்-விள்-விடு-வெடு-வெடி
புள்-பிள்-விள்-விள். விளவுதல், விரிவிதல்,விரல்,விருவு,விடர்
புள்-பிள்-விள்-விய்-வ்யம்-வியன் - வியல்-வியலன் - வியாழன்
புள்-பிள்-விள் -விடு -விடர் =குகை
படு-படி-படிவு-வடிவு-வடிவம்
புரி-பரி-வரி; வரிதல் = கட்டுதல்; வரித்தல் = கட்டுதல்;வரி = கட்டும் அரசிறை
பிதிர்தல் -விதிர்தல்
வெள்-வெட்டு-வேட்டு
புள்-புய்-பிய்-(பெய்)-பெயர் - பேர்
பகு-வகு-வகுதி
பாடி-வாடி
பழி-(வழி)-(வயி)-(வய்)-வை; வயை-வசை;வயவு-வசவு
படி-பதி-வதி-வசி-வாசம்
பழமை -வழமை
பழக்கம் -வழக்கம்

இன்னும் பல சொற்களை குறிக்க முடியும். எனினும் விரிவு கருதி விடுக்கிறேன். ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். இச் சொல்வரலாற்றில் ஒரு சிக்கல் உள்ளது. வகரத்திலிருந்து
தலைகீழாகப் போகும்போது முன்னது பகரமா, அன்றி மகரமா என்று சிலபோது சிக்கல் ஏற்படலாம். காட்டாக,

புல்- பொல்-பொள்-பெள் -வெள்-வெள்ளி
முல்- முள்-விள் -வெள்-வெள்ளி -வெளி

என்று இரு வேறு சொற்றொகுதிகள் அமையும். இவற்றை மேலோட்டமாகப் பார்க்கின், முல், புல் ஆகிய இரண்டுமே வேரடியாகத் தோற்றும். It may seem immaterial as to which one
(mul or pul) is the root, since both have the same meaning. However, deep research may be necessary to identify the correct path. பெண்ணை/வேணி சிக்கலைப் பற்றிய என் கருத்தை இனி அடுத்துக் காணலாம். பெண்ணை எனுஞ் சொல்லின் ஆதி வேரடி புல் என்பதே. புல்-பல்-பல்கு-பலுகு-பலு-பரு-பெரு என்று விரியும். இவையெல்லாமே மிகுதற் பொருளில் வரும். பலவாதல், பல்குதல், பருகுதல்,பெருகுதல் என எல்லாமே மிகுதற் பொருள்பெறும். புல்-புள்-புழு; புழுத்தல் என்பதும் மிகுதல் தான். புல்-(புள்)-(பள்)-பண்-பண்ணை = தொகுதி,மிகுதி. பண்ணை என்பது பண்ணையம் என்றுமாகும். வயலும் தோட்டமும், துரவும் மிகுந்தவரே பண்ணையார். பண்ணை-பணை=பெருமை; பணைத்தல் = பருத்தல், மிகுதல். அடி பெருத்த மரம் பணை-பனை மரம் ஆயிற்று. இது போல, நீர்வரத்து மிகுந்ததால் ஆறு பெண்ணையாயிற்று. இன்னொரு வகையில் பார்த்தால், நெருநல் நென்னல் ஆனது போல பெருநை - பெண்ணை ஆயிற்றெனலாம்.

பெருநை-பொருநை என்பதும் ஆற்றிற்குப் பொதுப் பெயரே. generic பெயரை தனிப்பெயராக நெல்லையின் தாம்பர பெண்ணைக்குச் சொல்வார். இன்னுங் கொஞ்சம் குளிர்ப் பொருள்
ஏற்றித் தண்பொருநை என்றுஞ் சொல்வதுண்டு. தாம்பரம் என்பது தமிழ்ச் சொல்லே. தாம்பரம் சிவப்பென்றே பொருள் படும்.

தும் -தும்பு-துப்பு =சிவப்பு,பவழம்
துப்பு -துப்பம் =அரத்தம்
தும்பு-தோம்பு =சிவப்பு
தோம்பு- (தாம்பு)-தாம்பரம் = சிவப்பு,செம்பு
தாம்பரம்-தாம்பரை-தாமரை = செம்மலர்வகை
தாமரை-மரை.

நாட்டுப்புற மக்கள் தாமரையைத் தாம்பரை என்றே இன்றும் வழங்குவர். தாம்பர பெருநை தாம்பர பெருணை ஆகி தாம்பர ப(ரு/ர)ணி ஆகியுள்ளது. சிலர் பலுக்கும் முறையில் அது தாம்பர வருணி என்றுமாகும். நீங்கள் ஊகிப்பது போல தாம்பர பெருணை - தாம்பர பெருணி - தாம்பர வெருணி - தாம்பரவேணி என்றுமாகலாம். (வெருணி, வேணியாகும் சொல் திரிபு முறை (c1v1c2v2c3v3 > c1V1c3v3) குறித்து ஏற்கனவே இணையத்தில்  எழுதியுள்ளேன்.)

இதே போல கொங்கு நாட்டில் கரூருக்கு அருகில் உள்ள ஆன்பெருநை - ஆன்பொருநை என்றும் அழைக்கப் படுவது உண்டு. ஆற்றிற்கு வரி/வரை என்றும் விரி என்றும் பொதுமைச்
சொற்கள் உண்டு. காட்டு: கோதாவரி, காவிரி. இதனால் பெருநை - பெருவரி என்றும் அழைக்கப் படலாம். ஆன் பெருநை ஆன் பெருவரியாகலாம்.  வட மொழியில் ஆன்பெருவரி - ஆன்பெருவதி-ஆம்ப்ருவதி-ஆம்ப்ரவதி-ஆம்ப்ராவதி-ஆமராவதி-அமராவதி எனப் பலுக்கும் முறையால் அமைவது இயற்கையே.

இதேபோல கரும் பெருநை - கருண் பெருநை - கருண் பெருணை - கருண் பெருணி -கருண் வெருணி - க்ருஷ்ண் வேணி - க்ருஷ்ண வேணி என்று ஆவதும் இயல்பே.

தாம்பர பெருநை, ஆன்பெருநை, தென்பெருநை, வடபெருநை, கரும்பெருநை என்பவை எல்லாம் அந்தந்த ஆற்றின் சிறப்பைக் குறித்து, பின் ஆறெனும் பொருள்படும் பெருநைப் பொதுச்
சொல்லைக் கொண்டுள்ளன. அக்காலத்தில் பொதியமலைக் காட்டின் செறிவால் இரு பருவ மழையிலும் (ஆண்டின் பலநாட்களிலும்) பொதியிலின் புது வெள்ளம் பெருக்கெடுத்தால் அது தாம்பரமாக (சிவப்பாக)த்தான் காட்சியளிக்கும். அடர்ந்த காட்டிற்குள் குறுகிய தூரமே போகும் ஆறு (கான்யாறு) ஆன்(காடு)யாறாகவும், ஆன்பெருநையாகவும் காட்சியளிக்கும்.

இனி, நெடிய தூரத்தில் ஆறு தோன்றிப் பருவகாலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து மெதுவாய்ப் போகும் ஆறு தெளிந்தே காணப்படும். அவ்வாற்றின் போக்கு (flow rate) குறைந்து, படுகைப்
பரப்பு விரிந்தால் பாசிகளும் செடிகளும் ஆற்றுப்படுகையில் வளர்வது இயற்கை. அப்பொழுது அந்த ஆறு கருப்பாய்த் தெரியும். கரும்பெருநை அப்படி ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு மலைச்சாரலைப் பிளந்து, அருவியாய்க் கொட்டி விரிந்து வருவதே தமிழிற் சொல்வரலாற்றின் படி 'விரி' என்றாகும். இன்றைக்கும் 'புகையின கல்'லிற்கு (ஹொஹனேக்கல்) அருகில்
அறுத்துக் கொண்டு விரிகிற ஆறு தானே காவிரி? அவ்விடமெல்லாம் கா - காடு தானே? காவிரி என்பது பொருத்தமே.

நீண்ட நெடும் ஆறான கோதாவரியின் சிறப்பே அதன் பெருக்குத் தான். வரிந்துகட்டித் தடங்கொள்ளும் அதை வரி என்பது பொருத்தமே. அதன் படுகை பல்லூழி மாறாவகையில் (காவிரி
தன் படுகையைப் பல முறை மாற்றிக் கொண்டதுபோல் அல்லாது) குற்றமில்லாது இருப்பது அதன் சிறப்பு. கோது - குற்றம், வளைவு என்ற பொருள் கொள்ளூம். கோதாவரி ஒரு கோதாத (=மாறாத) ஆறு. கோதாவரிக்கு வடமொழி கலந்த தமிழில் விருத்த கங்கை, விமலை என்ற பெயர்களை சூடாமணி நிகண்டு கூறும். ஒரு முதிய ஆற்றை (முதிய, மாறாத படுகை கொண்ட ஆற்றை) விருத்த கங்கையென்று அழைத்து இருக்கிறார்; விமலம் என்பதும் குற்றமில்லாதது / மாற்றமில்லாதது என்றே பொருள்படும்.

இதே போல வேகமாக வந்த வரி வெள்ளை நுரை காட்டிவரும். வெள்கை வரி வேகவரி என்று ஆகி வேகவதி என்று திரிந்து வேகை என்று சுருங்கி வடமொழித் தாக்கில் வைகை/வையை என்று உருமாறிப் போய்விட்டது. (அதேபொழுது காஞ்சிக்கு அருகிலுள்ள இன்னொரு வேகவதி வெள்கா என்று ஆழ்வார் காலத்தில் அழைக்கப்பட்டது. வெள்கா>வெஃகா என்றாகும்.)  நாமும் பொருள் விளங்காமல்
'வை-கை/ கையை வச்சாத் தண்ணி வரும்' என்று வேடிக்கைப் பொருள்சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பருவ காலத்தில் மட்டும் வெள்ளம் வந்து பரந்த படுகையில் ஆழமில்லாது சென்று பின் சில நாட்களில் வெய்யிலால் உலர்ந்து, வெறும் நிலத்தடி நீரை மட்டுமே கொண்டிருக்கும் ஆறு
வேய்ப்பாறு; இன்று வைப்பாறு என்று கூறப்பட்டு தூத்துக்குடி/மதுரை மாவட்டங்களைப் பிரித்துக் கொண்டு வறண்ட புவியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து வெள்ளையான,தெளிவான ஆறு துங்கவரை. துங்கம்-தெளிவு. துங்கவரை-துங்கவதை-துங்கபதை-துங்க பத்ரை (வழமையான வடமொழிச் சொற்றிரிவு)
ஓ -வென்று இரைச்சல் போட்டு, நருந்து கொண்டே வரும் 'வரை' நருவரை - நருவதை-நருபதையாகும். நருபதை இக்காலத்தில் நருமதை என்றும் அழைக்கப் படுகிறது. ஏற்கனவே சொன்னது போல 'வதை>’மதை' யாகவும் மாறலாம். நருதல் = இரைச்சல் போடுவது. நருபவன் - நரலுபவன் = பேசுபவன்; எனவே நரன் = மனிதன். குரங்கிலிருந்து வேறுபட்டவன் இதே போல தால் என்பதும் இரைச்சலே. தால் வரி -தாவரி-தாவதி - தாபதி - தாப்தி. வட இந்தியாவில் 'வதி/வதை' என முடியும் ஆறுகள் எல்லாவற்றிற்கும் சொல் மூலம் தமிழில் உள்ள 'வரி/வரை'யே.

இனி யமுனை என்பதும் சங்க இலக்கியத்தில் தொழுநை என்றே கூறப்படும். இதன் சொல் வரலாறு இன்னும் அறிந்தேனில்லை. கங்கையின் சொல் தோற்றமும் அறிய வேண்டும்.

சிந்து பற்றி திரு கணேசன் indology list -இல் எழுதியதைப் படித்திருக்கிறேன். 'ஈந்து' என்று ஈச்ச மரத்தை ஒட்டிச் சிந்து என்னுஞ் சொல் பிறந்ததாக எழுந்த அவர் கருத்து மாறுபட்டதாக
உள்ளது. நான் அறிந்த வரை சிந்து என்பதற்கு நீர் என்பதே பொருள். சிந்துதல் என்று வினைச் சொல்லே இருக்கிறது. சிந்துதல்-சிதறுதல் என்பதெல்லாம் ஒரு பொருட்சொற்களாகும். சாதாரணமாக தமிழில் வினை சொல் பரந்து பட்டுப் பயன்படும் பொழுது அதனை ஒட்டிய பெயரும் தமிழாகத் தான் இருக்கும். சப்த சிந்து என்னும் பொழுது சிந்து என்பது ஆறு என்னும் பொதுமைப் பொருளில் அல்லவா பயன்படுகிறது? முயன்றால் சிந்துவின் கிளை ஆறுகளுக்கும் சரியான சொல் மூலம் காண முடியும். சிந்து பார்க்க: குளிர்ச்சொற்கள் என்ற என் வலைப்பதிவு இடுகை. http://valavu.blogspot.in/2009/09/blog-post.html

தமிழில் நெகிழும் பொருள்கள் நீளுதலால், நெகிழ்ச்சிக் கருத்தில் இருந்து நீட்சிக் கருத்துத் தோன்றிற்று. செங்குத்து,படுகை என்னும் இருவாகிலும் நீட்சி நிகழும்.

நெகிழ்-நீள்-நீளம், நீள்-நீட்சி,
நீள்-நீர் = நெகிழும் (நீளும்) பொருள்
நீர் - நீல் - நீலம் = கடலின் நிறம்.

எகிப்தின் பேராறான நீல ஆறும் இதே பொருள் கொண்டது தான். வழக்கம் போல் மடல் நீண்டுவிட்டது. நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
 இராம.கி.