Sunday, August 20, 2006

பஞ்சு

அண்மையில் சம்பந்தம் பற்றி சொல் ஒரு சொல் பதிவில் ஒரு பின்னூட்டு இட்டிருந்தேன். பின்னால் பழைய கட்டுரைகளைக் குடைந்து கொண்டிருந்த போது, 20/10/2001 ல் நண்பர் கணேசனோடு தமிழ் இணையம் (tamil.net) மடற்குழுவில் "பஞ்சு" என்ற சொல் பற்றி உரையாடிக் கொண்டிருந்த இடுகை மீண்டும் கிடைத்தது. அப்பொழுது சவுதியில் இருந்தேன். இப்பொழுது அதைச் சற்றே சரி செய்து இங்கே இடுகிறேன். உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய திரு. கணேசனுக்கு,
--------------------------------------------
At 04:53 PM 10/20/2001 +0000, you wrote:

பஞ்சு: சொல்லாராய்ச்சி ------------------------------ பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இழை என்றபொருள்கள் உண்டு. விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், இழை போன்றன செய்யப்படும். பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்தன: கன்னடத்தில், 1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.) 2)பஞ்சிகெ = The ball or roll of cotton from which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக). தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று தரலாம். விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று வரும் (பெருங்கதை), ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ என்று கன்னடத்தில் ஆகும். இது போலவே பந்து -> பஞ்சு என்றானதாகத் தெரிகிறது. பந்தி என்றால் இழைபோல வரிசையான அணி. பந்திப்பாய் = மிகக் குறுகலான, ஆனால் மிக நீண்ட பாய். இந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும் காணலாம். பஞ்சம் = வரட்சி, வறுமை. கன்னடத்தில் பஞ்ஜெ என்றால் மலடி/வறடி. சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி. பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு. நிலமகள் அழுத காஞ்சி - புறம்; நிலம் என்னும் நல்லாள் - குறள். பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல் பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள் *பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து வந்திருக்கவேண்டும்). வந்தி என்னும் வறுமைக் கிழவி பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும். பந்திலிருந்து இழைத்தெடுப்பது திரி, நூல்; கன்னடம் துணி வெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக் பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும் சொல்வர். பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இளைப்பதை வந்தி/பஞ்சை என்ற சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் இளைக்கும் தாய் தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர். பஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? அறிய ஆவல். அன்புடன், நா. கணேசன்
-------------------------------------------------
பஞ்சு பற்றிய உங்கள் மடல் கண்டேன். ஏற்கனவே பாலாவுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்ட பயன்/ஊதியம் பற்றிய மடல் அரைகுறையாகக் கிடக்கிறது. அடுத்து counsel என்பதற்கு என்ன சொல்வது என்று ஆசீப் கேட்டிருந்தார். இதற்கு விடை எழுந்தும், அதை எழுத்தில் வடிக்காது இருக்கிறேன். இயற்கையாகவே உள்ள வேலைப்பளு. (அது தடைப்பட்டுப் போனால், "எதற்காக வந்தாய் இந்தியாவில் இருந்து?" என்ற கேள்வி எழும். சம்பளம் வாங்குகிறேனே!) நடுவே அவ்வப்போது இணையத்தில் சூடான வாக்குவாதங்கள் வரும் போது, மொழியியல் பற்றி எழுதுவது தடைப் பட்டுப் போகிறது. இது மாதிரி மடல்களுக்கு உடன் விடையிறுக்க வேண்டிய கட்டாயம். என்ன பண்ணுவது? உங்களுக்கு விடையிறுப்பதில் சுணக்கம்.

இனி சொல்லுக்கு வருகிறேன்.

தஞ்சைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப.அருளி தன் "தமிழ், சமற்கிருதம் அற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற பொத்தகத் தொடரின் மூன்றாவது தொகுதியில் பந்து என்ற சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறார். மொத்தம் 5 தொகுதிகள்; படிக்க வேண்டிய, படி எடுக்க வேண்டிய பொத்தகங்கள். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில் நான் படியெடுக்க முனைந்த போது, என்னால் மூன்றாம் தொகுதியைப் பெறவே முடியவில்லை; மற்ற நான்கை மட்டுமே படி எடுக்க முடிந்தது. பல காலம் முயன்றும், அந்தத் தொகுதி மட்டும் அகப்படவே மாட்டேன் என்கிறது. ஒருவேளை தொலைந்து போனதோ, என்னவோ?

எனவே, நானறிந்த வகையில் தொடருகிறேன்.

முதலில் நாம் காணவேண்டிய வேர்ச் சொல் "பல்"

இதைப் பற்றி புலவர் இரா. இளங்குமரன் "தமிழ் வளம் - சொல்" என்ற பொத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்தச் சொல் முதலில் வெண்மைப் பொருளைக் குறித்து, பின் "பல்" என்னும் உறுப்பைக் குறிப்பதாயிற்று.

கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; பற்களோ நிறையவே இருக்கின்றன. பொருள் நீட்சி பெற்று பல்>பல என்று பன்மைப் பொருளைக் குறிப்பதாயிற்று. பல்லுக்கு நாம் நிறையவே கடன் பட்டிருக்கிறோம். இப்படிப் பல்கிய சொற்கள் பலப் பல. அதில் சில சொற்களை மட்டும் இப்பொழுது பார்ப்போம்.

முதலில் "பத்து"

தமிழில் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் (வட இந்திய மொழிகள், இந்தையிரோப்பிய மொழிகள் ஆகியவற்றிலும் கூட) சில மாந்தனின் உறுப்புக்களில் இருந்து கிளர்ந்தவை தான். (இந்த எண்ணுப் பெயர்கள் பற்றிய நீண்ட கட்டுரை அவற்றின் பெயர்கள், குறியீடுகள், வளர்ச்சி இதையெல்லாம் விவரிக்கும் வகையில் பாதி எழுதப் பட்டதோடு கிடக்கிறது. "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று கிடக்கும் அந்தக் கட்டுரைக்கு என்று விடிவு பிறக்குமோ? அறியேன். இருப்பினும் இங்கே பத்தை விளக்குமுன், மற்றவை பற்றி கீழே சுருக்கமாக எழுதுகிறேன்; ஒருவேளை புரிபடாமற் போனால், மன்னியுங்கள். முழு விளக்கம் அந்தக் கட்டுரையில் தான் இருக்கிறது.)

முதலில், ஒன்று என்ற எண், ஊனோடு தொடர்பு கொண்டது (மரக்கறிக்காரர்கள் மன்னிக்க! ஊன் தான் மாந்தனை உருவாக்கியது.);
இரண்டு என்பது ஈருவதோடு (துமிப்பதோடு) தொடர்பு கொண்டது;
மூன்று என்பது மூக்கு/துயிக்கை (ஆமாங்க, யானைத் துதிக்கை தாங்க) ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது.(துய்=முக்குத்துளை; துய்ம்பு>தூம்பு = துளையுள்ள குழாய்; தூம்பு>தூப்பு> tube; இரண்டு துளை கொண்ட மூக்கு மூன்று தோல் கொண்டது; குறியீடும் அப்படித்தான்; துய்>த்ருய்>த்ரி என வட மொழியில் மாறும். தமிழில் மூக்கு என்ற சொல்லை ஒட்டியே மூன்று என்ற சொல் கிளர்ந்தது.)
ஐது என்ற சொல் கய்யு (கை)/செய்யோடு தொடர்பு கொண்டது. (செய்கு, சகரம் இழந்து அய்கு/அய் ஆகும். இன்னொரு பக்கம் கன்னடம், துளு வழியே இது பய்யோடும் தொடர்பு கொள்ளும் பய்=ஹய்=அய். )
நாலு என்பது நலிந்த (குறைந்த) கையோடு தொடர்பு கொண்டது; நலி+கை>நலிகை>நாலிகை>நாலுகை>நாலு (ஏற்கனவே பலமுறை நான் சொல்லுவது போல, பாமரரிடம் தான் சரியான சொல் இருக்கிறது; படித்தவர்கள் நீட்டி முழக்கி வடிவத்தைக் குலைத்து விடுகிறோம். பொத்தகம் ஒரு எடுத்துக் காட்டு; ககரம் மெலிந்து ஒலித்து, சில பொழுது முற்றிலும் இல்லாமல் போவதற்கு தென் தமிழ்நாடு நல்ல காட்டு: அவுக வர்றாக> அவுஹ வர்றாஹ>அவா வர்ரா))
ஆறும்,ஏழும் எழுந்த வகை உணரச் சற்று நேரம் பிடிக்கும். ஒரு+கை> ஒறுகை> அறுகை> அறுகு> அறு> ஆறு என்று ஆனது (இங்கும் ககரம் காணாமல் போகிறது); இதே போல, இரு+கை> இருகை> இலுகை> எலுகை> எழுகை> எழுகு> எழு> ஏழு என்று ஆனது. (ககரம் மறைந்து போகிறது)
அடுத்தது எட்டு; அய் +துய்>அய்தூ>அய்து>எய்து>எள்து>எட்டு; எள்+ந்+து>எண்டு>எண்ணு
அப்புறம் பத்து என்பதைப் பார்ப்போம். அதற்குப் பின் ஒன்பதிற்கு வருவோம். பல்+து>பல்து>பஃது>பத்து (பல்>பன்; பன்னிரண்டு என்ற எண்ணின் முன்னொட்டு) பத்து>பது; பது+இன்னொன்று = பதினொன்று
தொள்+ந்+பது>தொண்பது (குறைந்த பத்து; தொள்ளுதல் = குறைபடுதல்) தொள்+ந்+து>தொண்டு = குறைந்தது (அதாவது பத்திற்குக் குறைந்தது)
தொண்பது> ஒன்பது

மொத்தத்தில், "ஊன், ஈர், மூ/துய், கய், பல்" இந்த ஐந்தை வைத்துத் தான் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் தோன்றி இருக்கின்றன.

இதே நிலைதான் இந்தையிரோப்பிய மொழிகளிலும்.
பல்லில் இருந்து பத்து வந்தது போல தந்தத்தில் இருந்து வந்தது தான் ten.
தொண்டு துவண்டது போல, நொண்டு நுவண்டு போனது; நுவனு>nine ஆனது.
அய்கும் துய்யும் சேர்ந்தது தான் அய்குது>eight.
செய்யும் துவமும் சேர்ந்தது தான் septa;
செய்யும் ஏகமும் சேர்ந்ததுதான் செய்யெக்ஸ்>-six
அய், பய்(பை) (பண்ணுதலின் அடி பய். பின்னால் பய்>பள்>பண்>பண்ணு என்று ஆகும்) ஆகி five ஆனது.
ஊறு ஏற்படுவது குறைவு ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுவது தான். ஊறு>four; துய்>த்ருய்>த்ரி>three;
துமி>துவி>two;
ஊண்>ஊணு>ஒண்ணு>one;
ஊண்>ஊட்டு>உகட்டு; உள்>ஊண்; உள்>உள்கு>உள்கம்>ஊக்கம்>ஏகம்

மேலே உள்ளதை விரித்துச் சொல்லாத வரை, நீங்கள் ஏற்கப் போவதில்லை. எனவே, அதைப் பிறிதொருமுறை சொல்லுகிறேன்.

இப்பொழுது பல்லிற்கு வருவோம்.

பல்>பல்து = பெருகுதல்
பல்து>பலுது>பருது>பருத்து+இ=பருத்தி = பருத்துக் காணப்படும் பொருள். அதுபோல, பத்து + ஐ = பத்தை, வெள்ளைப் பூண்டில், சுளையாகப் பருத்துக் கிடப்பது பத்தை இதைப் பல் என்று சொல்வாரும் உண்டு. "வெள்ளைப் பூண்டு ஒரு பல்லுக் கொடுங்க"
பல்லைப் போன்ற கொட்டையையும், பலவாகச் சுளையும் கொண்ட கனி பலாக் கனி. பலாச் சுளை போல, பருத்தியிலும் பருத்திச் சுளை உண்டு.

பருத்தி எடுக்கப் பயன்படும் கொலுக்கு, பல் பல்லாக இருக்கும். இப்படி பல்லப் படுவது தான் ginning and combing. பல்ல(பன்ன)ப் பட்ட பருத்தி பன்னல். (ginned cotton). இதனால், பருத்திக்கே பன்/பன்னு/பஞ்ஞு என்ற பெயர்கள் உண்டு. பஞ்ஞு என்ற பழந்தமிழ்ச் சொல் சேரநாட்டில் ஒரு விதமாகப் பலுக்கப் பட்டு, மற்ற இருநாடுகளிலும் பஞ்சு என்று இன்னொரு விதமாக வழங்கப் பட்டது.

அதே பொழுது பெருகிப் போனது பொத்தை/பொந்தை என்றும் அழைக்கப் பட்டது. அவன் பொந்தையாக பொதுப் பொது என்று இருக்கிறான் என்றால் பெருத்து இருக்கிறான் என்று பொருள்.
பொந்து= பெருத்துக் கிடக்கும் தன்மை;
பொந்து>பந்து= பெருத்து உருண்டு கிடக்கும் பொருள்;
பந்தில் பெரியது பந்தம் (தீவட்டிப் பந்தம்); பந்தம் என்றால் கட்டு, முடிச்சு என்றும் பொருள் (பொன்/பொற்காசு முடிச்சு). இந்தப் பொற்காசு முடிச்சை போட்டியில் வைத்து விளையாடுவதால் அது பந்தயம் ஆயிற்று.

பந்து என்ற சொல்லின் அடிப்பொருள் பல்ல(பன்ன)ப் படாத பருத்திக்குப் பொருந்தும். பஞ்சு என்பது விதை எடுத்து சீவி, நூற்பதற்கு அணியமாக உள்ள பொருளைக் குறிக்கும். இந்த நுணுகிய பொருள் வேறுபாட்டை நாம் உணர வேண்டும். (பருத்தி raw cotton; பஞ்சு refined cotton).
பன்னியது இந்தையிரோப்பிய மொழிகளில் spinning என்றும் ஆயிற்று. (நாம் நூற்றல் என்றே சொல்லுகிறோம்.)

பருத்தி, கொட்டை (cotton), பஞ்சு (sponge), நூல், பனுவல், இழை (இது தான் filament, file என்பதோடு தொடர்பு கொண்டது. நாம் file என்பதைத் தமிழ்ப் படுத்த இழையை விட்டுக் கோப்பைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்), திரியீடு (thread), பாவு (warp), ஊடு (weft), துணி இன்னும் நெசவு பற்றிய சொற்களையெல்லாம் உலகத்திற்குக் கொடுத்து, முடிவில் நாம் தொலைந்து நிற்கிறோம்; இனிமேல் தான் மீட்க வேண்டும் அய்யா. ஏகப் பட்டது பொருள் தெரியாது போய்விட்டது.

பஞ்சைப் பற்றித் தெரிந்த தமிழன், இந்தப் பருத்திப் பஞ்சிழையைக் காட்டிலும், இலகுவான, நொய்வான (denier குறைந்தது) பஞ்சை ஒரு மரத்தில் கண்டான். அது இலவம் பஞ்சாயிற்று. (இங்கே கொட்டை கிடையாது; உடனே பருத்தி வராமல், பஞ்சு என்ற சொல் வந்து விட்டது பாருங்கள்). அந்த மரம் இலவம் பஞ்சு மரம் ஆகி, நாளடைவில் இலவ மரம் ஆனது.

நீங்கள் சொன்ன பந்திப் பாய். அதுவும் பல்லோடு தொடர்பு கொண்டதுதான்.

பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள்
பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!)
பல்+ன்+து = பந்து= அடுத்தடுத்த வரிசை (பற்கள் இருப்பதைப் போல)
பந்து+அம் = பந்தம்= நமக்கு அடுத்தடுத்து உள்ளவன் = சொந்தக்காரன்
பந்து+இ = பந்தி = அடுத்தடுத்து வரிசையாய் இருப்பது; (அந்தத் திருமண வீட்டில் 10 பந்தி நடந்துதான் என்றால் அவ்வளவு வரிசைச் சாப்பாடு நடந்தது என்று பொருள்.)
பத்தி என்றாலும் வரிசைதான். (சிவகங்கை மாவட்ட வழக்கு. "தம்பி, பத்திலெ உக்காருங்க" - இங்கே பந்தி என்ற பொருள் கிடையாது. இது வேறு வரிசை. செட்டி நாட்டில், வளவில் இருந்து இரண்டாம் கட்டுக்கும் பந்திக் கட்டுக்கும் இடையில் உள்ள குறுகிய இடமும் பத்தி என்றே அழைக்கப் படும்.) பந்திக்குப் போடும் பாய் பந்திப் பாய்.

அடுத்தடுத்து அணிசேர்த்து வரிசையாக்கும் வேலை விரிவாக்கப் பட்டு, ஓலை வேய்வதற்கும் பயன்பட்டது. (வேய்வு>weave; மறுபடியும் பாருங்கள் நெசவுச் சொல்). ஓலை வேயப் பட்ட கொட்டகை, பந்தப் பட்டதால் (கட்டப் பட்டதால்) பந்தல் என்று ஆயிற்று. ஓலையில் வேய்வது ஒரு கட்டு, வரிசை, பிடிப்பு, பற்று; இப்படிப் பன்னுவது பின்னுவதும் ஆயிற்று. பின்னல் = embroidery; பந்தனை = கட்டு.

அடுத்தது பஞ்சம். இங்கே பேராசிரியர் ப. அருளி தெரிவிக்கின்ற செய்திகளை முதலில் பார்ப்போம்.
----------------------------------------------------------
"புய்" என்னும் பழம் பெரும் மூல வேரில் இருந்து கிளம்பி "பொய்" என்னும் அரிய கிளை வேர் கிளைத்தது.
இதன் பொருள் = துளை என்பதே.
புய்+அல் =புயல்= பொழியும் மழை, நீர், முகில், கடுவளி
புய்>பெய் = பொழி
புய்>பொய்>பொயி>பொழி = துளை வ்ழி ஒழுகு
புய்>பொய்>பொயி>பொசி = துளை வழி ஒழுகு (நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோட புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்)
முந்தையத் தமிழ மாந்தன் துளித்துளியாக மேல் நின்று கீழ் வீழ்ந்த மழைத் துளிகளைக் கண்ணுற்று, இத்துளிகள் இவ்வாறு விழ, துளைகள் வழியாகவே ஒழுக்கு நிகழ வேண்டும் என்று தவறாகக் கருதினான் என்ற வரலாற்றை, இச்சொல் தோற்றங்களின் பாங்கு தெரிவிக்கின்றது.

பொய் = உள்ளீடின்மை, துளை ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய கிளைவேர்

பொய்= துளை, பொந்து, மரப் பொந்து, உண்மையின்மை, பொய் சொல்லுகை, பயன்படாமை, கெடுதல், அவிதல், தவறுதல், வஞ்சித்தல்'
--------------------------------------------------

இனி நம் சொல்லுக்கு வருவோம்.

மழை பொய்த்துப் போனது; வானம் பொய்த்துப் போனது. இடம் பொசிந்து போனது (அழிந்து போனது.)
பொய்ந்து>பொய்ஞ்சு>பொசிஞ்சு
பொய்ஞ்சம்>பொஞ்சம்>பஞ்சம் = அழிந்த நிலை; பயன்படாது போன நிலை; கெட்டுப் போன நிலை; அவிந்து போன நிலை, தவறிப் போன நிலை.
இப்படிப் பயிர் விளையாது இருந்த காலமும் பஞ்ச காலம் ஆயிற்று. பயிர் போன்று குழவி பெறாத தாயும் கன்னடத்தில் மலடி என்ற பொருளில் பஞ்சகி என்று அழைக்கப் பட்டாள் போலும். ஆக இந்தப் பஞ்சம் பொய் என்னும் வேரில் கிளைத்தது.

மேலே கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, August 19, 2006

காய்கறிகளும் கலப்பு வழக்கமும்

இந்து நாளிதழ் (ஆகசுடு 18) படித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேட்டில் இன்றையக் காய்கறிவிலை (ஒரு கிலோவுக்கு) கொடுக்கப் பட்டிருந்தது. படித்த போது, ஒன்றிரண்டு காய்கறிகளின் தமிழ்ப் பெயர் குத்துமதிப்பாகத் தான் நினைவிற்கு வந்தது. எங்கு தேடினும் சட்டென்று மட்டுப் படவில்லை. என்ன ஆயிற்று எனக்கு?

கொஞ்சம் கொஞ்சமாய் வேரழிந்து, மரபு தடுமாறிப் போகிறோமோ என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

ஒரு பக்கம் ஆங்கிலச் சொற்களின் தடுமாற்றம், இன்னொரு பக்கம் இணையான தமிழ்ச் சொற்களைத் தேடுதல் எனக் கொஞ்சம் அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த அலைச்சலைப் பார்த்த போது, மொத்தத்தில் ஒரு கலப்பு வழக்கத்திற்கு அணியமாகிறோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மெல்லத் தமிழ் இனி.......

கத்திரிக்காய் Brinjal Rs 4.00
Common Hedge (இந்தப் பெயரைப் படித்தவுடன் பெருந்தடுமாற்றம். இது முள்ளங்கியாக இருக்குமோ என்று ஓர் அய்யம்.) Rs 5.00
வெள்ளரிக்காய் Cucumber Rs 5.00
அவரைக்காய் Field beans Rs 10.00 (இதை அந்தக் கால ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிகள் sabre beans என்று அழைக்கின்றன. field beans என்று எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை.)
புடலங்காய் Snake Gourd Rs 4.00
வள்ளிக் கிழங்கு (அல்லது கருணைக் கிழங்கா தெரியவில்லை; ஏனென்றால் white yam என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்) Yam Rs 7.00
களைக் கோசு Kales root Rs 7.00 (இதுவும் நான் புரிந்தது சரிதானா என்று தெரியவில்லை)
முருங்கைக் காய் Drumstick Rs 6.00
பாகற் காய் Bitter gourd Rs 5.00
கொத்து அவரங்காய் Cluster Beans Rs 5.00
முட்டைக் கோசு Cabbage Rs 4.00
குருக் கிழங்கு Carrot Rs 15.00 (ஆங்கிலப் பெயரையே 100க்கு 99 பேர் பயன்படுத்துகிறார்கள்; உருளைக்கிழங்கு, தக்காளி என்றெல்லாம் புதுப்பெயர் வைத்தவர்கள், இதை ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. குரு = அரத்தச் சிவப்பு)
பச்சை மிளகாய் Green Chillies Rs 10.00
இஞ்சி Ginger Rs 12.00,
விதை அவரை Beans Rs 15.00 (இதையும் ஆங்கிலப் பெயரே சொல்லி அழைக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.)
அக்காரக் கிழங்கு Beetroot Rs 4.00 (பெரும்பாலும் ஆங்கிலப் பெயர் தான் சொல்லி அழைக்கிறார்கள்;அக்காரம் = இனிப்பு)
உருளைக் கிழங்கு Potato Rs 9.00 (தமிழ்ப்பெயர் நிலைத்துவிட்டது.)
பெரிய வெங்காயம் Onion Bellary Rs 5.00 (பெரிய வெங்காயம் என்பதைத் தென் தமிழ் நாட்டில் தான் சொல்லுகிறார்கள். வட தமிழ் நாட்டில் பெல்லாரி தான்.)
சின்ன வெங்காயம் Onion Small Rs 12.00
வெண்டைக் காய் Ladys finger Rs 7.00 (தக்காளி என்பது எந்த மொழிச்சொல் என்று தெரியவில்லை. ஒருவேளை போர்த்துக்கீசியச் சொல்லாக இருக்குமோ?)
சீமைத் தக்காளி Tomato Hybrid Rs 5.00
உள்ளூர்த் தக்காளி Tomato local Rs 4.00
வாழைக் காய் Plantain (100 nos) Rs 200.00

அன்புடன்,
இராம.கி.

Friday, August 11, 2006

தில்லை - 5

"தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லியிருக்கும் நம்மில் பலர், தென்னாட்டிற்கு மறுதலையாக வரும் "எந் நாடு" என்பது எதைக் குறிக்கிறது என்று ஓர்ந்து பார்த்திருப்போமா என்பது அய்யப்பாடே. இங்கே தென்னாடு என்பது முன்னால் நான் சொன்ன தக்கணத்தையே குறிக்கிறது; தென்னாடுடைய சிவன் என்ற பெயரும் தக்கண மூத்தோனையே குறிக்கிறது. தக்கண மூத்தோன் பற்றிய விவரிப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியத்தில் காட்சியளிக்கின்றன. தென்னாட்டுச் சிவநெறி கொஞ்சம் கொஞ்சமாய் வடபுலத்து நாடுகளில் பரவிய போது, முதலில் இலிங்க வழிபாடு என்ற கருத்தீடு அங்கு ஏற்றுக் கொள்ளப் படவில்லை; அதனால், ஒரு சில வேத வாக்கியங்களில் அந்தக் கருத்தீட்டைச் "சிசுனதேவ வழிபாடு" என்று கேலி செய்து முற்றிலும் இழிவு படுத்தியதும் உண்டு. பின்னால் தக்கண மூத்தோன் என்ற மாந்தவகைப் படிமம்/குறியீடு அறிமுகமான போது தான், சிவநெறியைக் கவனிக்கத் தலைப்பட்டனர். இன்றைக்கும் வடபுலத்தில் அது போன்ற படிமங்களே பரவிக் கிடக்கின்றன. வடபுலத்தாரைத் தம்வயப் படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும்.

[திராவிடம் என்றாலே முறைப்பும், மனம் நிறைந்த வெறுப்பும், இன்றைக்கு ஒரு சிலருக்கு வருகிறதே, அவர்கள் நம் சிவன் கோயில்களில் எழுகின்ற "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்ற இந்தப் பதாகை முழக்கத்திற்கு (அது கிட்டத் தட்ட ஒரு tribal முழக்கம் தான்; இதே போல, "வெற்றிவேல், வீரவேல்" என்பதும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்பதும் இந்தக் காலத்திலும் தமிழர்கள் ஓர் இனக்குடியினர் என்றே உணருகின்றனர் என்பதை நிறுவிக் கொண்டு இருக்கின்றன.), பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தர்கள் என எல்லோருமாய் எழுப்பும் நிறைந்த முழக்கத்திற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பார்களா, என்ன? திராவிடத்தை ஒழிக்க வேண்டுமானால், இவர்கள் சிவன் கோயிலை அல்லவா ஒழிக்க வேண்டும்? தக்கண மூத்தோன் என்ற கருத்தீட்டை அல்லவா நிறுத்த வேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிற்கொன்று தொடர்பு உடையவை தான். தென்னாடு என்பது தமிழ்ச்சொல்; தக்கணம் என்பது இருபிறப்பி; திராவிடம் என்பது தமிழம் என்ற சொல்லின் பாகதத் திரிவோடு, பின் தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்ட சொல்.]

சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் உருவகித்தவர்கள் தென்னாட்டார்களே! வேதங்களிலும், அவற்றை ஒட்டி எழுந்த விளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் தான் துர்க்கை என்பார்கள்; கொற்றை = கோட்டை = துருக்கம்; துருக்கம் என்பது துர்க்கை என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும்.) என்பவை எல்லாம் விளிம்பு நிலையில் அன்றி முதன்மைத் தெய்வங்களாய்ச் சொல்லப் படுவதே இல்லை. தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்கள் ஆன சேயோன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவை ஆகியவற்றிற்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன், போன்ற ஒருசில வடபால் தொன்மங்களோடு பொருத்தினாலும், அவையெல்லாம் விளிம்பு நிலைப் பொருத்துகளாகவே இருந்தன. (சுப்ரமண்யன் என்ற சொல்லைக் கண்டு நாம் மருள வேண்டாம்; சிவ பெருமான் என்ற தமிழ்க் கூட்டுச் சொல் தான் வட நாட்டுப் பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்" என்று ஆகும்; பின் அப்பனுக்கும் மகனுக்குமாய் கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" என்னும் முன்னொட்டுச் சொல் சு என்னும் ஓரெழுத்தொரு மொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் என்பது நீண்டு ப்ரம்மண்யன் என்று ஆகும். முடிவில் நம் சொல்லையே நாம் அடையாளம் காண முடியாமல் தவிப்போம். சு எனத் தொடங்கும் இருபிறப்பிச் சொற்கள் எல்லாமே சிவ - red- என்ற முன்னொட்டில் கிளைத்தவையே. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சு வழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சள் அணிவது தென்னாட்டுப் பழக்கமே. அந்த அளவு ஏன்? தாலி அணிவதே கூடத் தென்னாட்டுப் பழக்கம் தான்.)

வடபுலத்தில் கங்கைக் கரையில் வேள்வி நெறி பரவிய போது, அரசருக்கும், பெருநிலக் கிழார்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவர்களை அண்டியே வேதக்காரர்கள் வேள்விகளைச் செய்து இருக்க முடிந்தது; அதே பொழுது, பொது மக்களோ, வேத நெறியில் ஈடுபடாமல், தங்களுடைய ஆளுமைக்குத் தகுந்தாற்போல், சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார்கள். இந்தச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவுதல் தென்புலத்திலும் நடந்தது. இப்படி மேல்தட்டிற்கு ஒன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்று என்ற சமய இடைவெளி வேதக் காரர்களுக்குப் பெரிதும் இடைஞ்சலாய் அமைந்தது. அவர்களைப் பொதுமக்கள் சற்று தள்ளியே வைத்திருந்தார்கள்.

கி.மு. 600 களுக்குச் சற்று முன்னால் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது எனக்குத் தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களின் இடையே ஆசீவகம், செயினம், புத்தம் போன்றவை எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசர்களும், மற்றோரும் வேறு வழியின்றி நெறி மாறத் தொடங்கினார்கள். அதுவரை தியை (ஒளியுள்ள வானம் - dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்>வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) இன்னும் இது போல பல சிறு தெய்வங்களையே பரவிக் கொண்டிருந்த வேத நெறிக்காரர்கள், ஆகம நெறியைப் (ஆகி வந்த நெறி ஆகம நெறி. இது ஒரு மரபு நெறி தான். ஆனால் தென்புலம், மற்றும் பொதுவான வடபுலம் ஆகியவற்றின் தொடர்பான நெறி) பார்க்கத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு கலவை நெறி எழத் தொடங்கிச் சிவநெறி (அதே போல விண்ணெறி) என்பதாய்ப் பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. இந்தக் கலவை நெறி உருவான பின்னால் தான், குருக்கள்மார்கள் மக்களிடையே ஏற்றுக் கொள்ளப் படும் நிலைக்கு வந்தார்கள். [எப்பொழுதுமே வெளியில் இருந்து வந்து திணிக்கப் பட்டு மக்களுடன் ஒன்றாத மதம் மக்களிடையே நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்துக் கொண்டு ஒன்று படும் மதம் தான் மக்களை ஈர்க்கும்.] வேத ஆகமக் கலவை நெறி எழுந்த கதை இது தான்.

வேளுகின்ற சடங்கைச் செய்வது வேள்வி. அந்த வேள்வியைச் செய்தவர்கள் வேள்தர்கள் (>வேதர்கள்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்) [வித் என்னும் கருத்து முதல் வேரில் இருந்து வேதம் என்ற சொல் பிறந்ததாகக் கருத்துமுதல் உரையாளர்கள் சொல்லப் புகுவார்கள்; அது பொருந்தப் புகல்வது என்று மட்டுமே நான் சொல்லுவேன். வேள்தல் = வேண்டுதல் என்ற வினைச்சொல்லைத்தான் நான் இங்கே அடிப்படையாகக் கொள்ளுவேன். ஏனென்றால், இன்றைக்கும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத் தான் செய்கிறோம். வேண்டுதல் என்பது வேத நெறியா, சிவ நெறியா, விண்ணெறியா என்று பாராது இருக்கும் பொதுமைச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பில்லா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் இன்றைக்குச் சாமியாடி என்று அழைப்பார்கள்.), இன்றைய வரைக்கும் வேளன்>வேளான் என்றே கூறப்படுகிறான். காட்டாக, சிவகங்கை மாவட்டத்தில் பல அய்யனார் கோயில்களில் உள்ள பூசாரியார், வேளார்>வேளகாரர் என்றே அழைக்கப் படுகிறார். அது போலச் சங்க இலக்கியத்தில் வேள்விகளைச் செய்யாது வேறுதொழிலில் ஆட்படுத்திக் கொண்ட பார்ப்பாரை வேளாப் பார்ப்பார் என்றே சொல்லுவார்கள். இந்தச் செய்திகளை எல்லாம் ஒருங்கே எண்ணிப் பார்த்தால், வேளுதல் என்ற வினைச்சொல்லின் ஆழம் தெளிவாகப் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாமலும் இறைவனை வேண்ட முடியும் என்பது இன்னொரு வகை நெறி. வேள்வி என்பது முன்னால் சொன்னபடி, மேற்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. வேள்வி என்பதில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமே உண்டு. வெறுமே பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

முன்னால் சொன்ன கலவை நெறியை உருவாக்கிய பின்னால் தான், வேதக் காரர்கள் ஆசீவகத்தையும், செயினத்தையும், புத்தத்தையும் எதிர்த்து தங்கள் பக்கம் பொது மக்களைத் திருப்ப முடிந்தது. வடபுலத்தில் வேதப் பழக்கம் என்பது கி.மு.600 களுக்கு அண்மையில் தான் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதப் பட்டன. மெய்யியற் பொருட்பாடுகள் கூறப் பட்டன. வேதக் காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தெற்கே வரத் தொடங்கினார்கள். சங்க காலத்திலேயே பார்ப்பனரின் தாக்கம் தமிழகத்தில் இருக்கிறதே என்று ஒருசிலர் கேட்பார்கள்; இதில் பெருமைப் படவும் ஒன்றுமில்லை; வெட்கப் படவும் ஒன்றும் இல்லை. வேதக் காரர்களின் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு படுவம் (fact). அவ்வளவுதான்.

வேத நெறி பின்பற்றும் மரபாளர்கள் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவர்களுடைய விதியாளர்களால் தாலி கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். (ஓரளவு பார்ப்பனர் அல்லாத தென்னாட்டுப் பெண்களையும் திருமணம் செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். குறிப்பாக மராட்டியப் புடவைக் கட்டுமுறை நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது.) முறைப்பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கம் ஏற்கப் பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானர் அல்லாதாரோடும்) உடனிருந்து விருந்துண்ண அனுமதிக்கப் பட்டனர். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவையெல்லாவற்றையும் ஆபஸ்தம்ப சாற்றமும், பௌதாயண சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. இப்படி விளங்கங்களை நான் எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், வேதக்காரர்களில் ஒருசிலர் வேதம் என்பது ஏதோ ஒரு தான்தோன்றி - சுயம்பு - என்பது போல் பல்வேறு மூதிகங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டிருப்பதை மறுப்பதற்காகத் தான். பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்றைக்கு மிகவும் அரிதாகி விட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே வழக்கமாகிப் போய்விட்டது.

நாவலந்தீவின் பல பண்பாட்டுப் பழக்கங்களும் இது போலத் தென்னாட்டு. வடநாட்டுக் கலவை வழக்கங்கள் தான். இன்றைக்குத் தங்களின் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப் படுகிற சில மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன்னே வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்பது என்றாவது ஒருநாள் வெளி வந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குள் நுழையும் போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, அல்லது தாயையோ, உடன்படிக்கும் மாணிவர்களிடையே அறிமுகம் செய்து வைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழியைப் பற்றியே பொய் சொல்லிக் கொண்டு திரியும் சில முட்டாள்களையும், தங்களின் தாய்வழிக் கொடி பாண்டித் தமிழர்களிடம் இருந்தே பிறந்தது என்று "மகாவம்சம்" சொல்லுவதை வாய்ப்பாக மறந்து, தங்களுடைய தந்தைவழிக் கொடியான ஆரியத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே விண்ணாரம் பேசிக் கொண்டு, அதே நேரத்தில் தாய்வழி உறவான தமிழரை ஈழத் தீவில் இருந்தே விரட்ட முற்படுகின்ற, ஒரு சில சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாது இருக்க முடியவில்லை.)

இது போன்ற பெருமானர்களின் பரவலை மூன்று அலையாகப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளர்களிடையே வேறுபாடு உண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரி சாரியாய் பெருமானர்கள் தெற்கே பரவியது கி.பி.500க்குப் பிறகு தான். அதற்கு முன்னால் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னால் என்றே நான் கருதுகிறேன். இந்த அலையின் உயர்ச்சியாய், அதன் ஊடே செயினரும் [குறிப்பாக பத்ர பாகு (இன்றையக் கர்நாடகத்தில் இருக்கும் சமண வெள்ளைக் குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்), உடன் அரசு துறந்து வந்த சந்திர குத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர்கள் எனப் படித்தானத்தில் இருந்து தகடூரும், காஞ்சியும் இன்னும் மற்ற ஊர்களுக்கும் வந்து சேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தவர்களில் பலரும் தமிழ்க் குமுகாயத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள்; பெருமானர்களுக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் சில ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம் பின்னால் ப்ரம்ம தேயம் என்று திரிவு கொள்ளும்.) தரப்பட்டன. பின்னால் அந்த ஊர்களின் பெயரே அந்தந்தப் பிரிவினருக்குப் பெயராயின. காட்டாக இன்றைய மரபுப் பெருமானர்களில் (smartha brahmins) பெரு கணம் (ப்ருகச்சணம்) என்ற பிரிவினர் கண்டரமாணிக்கம், மலைநாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்திய மங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்கள்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) என்ற பிரிவினர் அத்தியூர், அறிவர் பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்ற ஊர்களில் குடியேறினார்கள். (இன்னும் ஒரு முகன்மையான பிரிவினர் வடமர்கள்; ஆனால் அவர்கள் பெரும் அளவில் வந்தது குத்தர்கள், பல்லவர்கள் காலத்தில் தான். அவர்களைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.)

இதே போல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளுநாட்டில் நுழைந்து அங்கு 32 ஊர்களிலும், பின்னே சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக்களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்லுவார்கள். நம்பூதிகளைப் போலவே சில பழக்கங்கங்கள் கொண்ட தீக்சிதர்கள் தில்லையிலும், இன்னொரு வகையான சோழியர்கள் திருக்கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்கள்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார்கள் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவர்கள் எல்லாம் எப்போது வந்தவர்கள், எப்படி உருவானவர்கள், என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து குறித்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடம் இருக்கின்ற மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. (எப்படி மாலத்தீவில் அந்த ஊர் மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன்னால் தங்களுக்கு வரலாறே இல்லாதது போல் ஆக்குகிறார்களோ, அதே போல இதைச் சொல்லலாம். மலேசியாவிலும் கடார மாநிலம், மற்றும் ஜோகூர் மாநிலத்தில் இருக்கும் கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பரமேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதற்கு முன்னால் இருந்தால் சின்னங்களை, கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட முயன்று கொண்டிருக்கிறார்களோ அது போல இதைச் சொல்லலாம். பெருமானர்களே கூட "அல்லிருமை - அத்வைதம்" என்ற மெய்யியலைப் பெரிதாகக் கருதியதால், இந்த வரலாற்றுத் தொலைப்பைப் பற்றிக் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதிசங்கரரைப் பற்றியும், அவருக்கு முன்னால் இருந்த வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்று கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதும் என்று இவர்களுக்கு ஆகிவிட்டது; மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்ன பிற ஒரு பொருட்டாகவே பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.)

நம்பூதிகள் மட்டும் ஒரு விதி இலக்கு. அவர்களின் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித் தேடி, அதைக் கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் வடமொழிப் பாதிப்பை உயர்த்தி வந்தாலும், தங்களின் தமிழ் வடமொழிக் கலப்பைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுவதில்லை. சங்க இலக்கியத்திலேயே அவர்கள் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வவேதத்தைப் பின்பற்ற மாட்டார்கள். அதன் காரணத்தாலேயே தக்கண பதத்திற்கு வெகு காலம் முன்பே, கி.மு.500க்கு முன்பே, வந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.) இவர்களைப் போலவே இருக்கும் தீக்சிதர்கள் பற்றியும் சோழியர் பற்றியும் இனி அடுத்த பதிவில் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 06, 2006

தில்லை - 4

பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம் போல வாய்க்குள் குடித்து விட்டு, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும், அங்கே சிலபோது கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய்மையான நீர்) தலையில் தெளித்துக் கொள்ளுவது உண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்று கூடச் சொல்லுவார்கள்.) சிவன் கோயிலில் ஏன் இப்படித் திரு நீர் (திரு நீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம் என்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடிவதற்குச் சற்று முன்னால், இறைப் படிமத்திற்கு முன் வைத்திருந்த பூசை நீரை நம் தலையில் தெளித்துக் கொள்ளுகிறோம். அது ஏன்?

கோயில் குட முழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்தது போக மீந்த தெளிநீரை, குருக்கள் மேலே கோபுரத்தில் இருந்த வாக்கில் தெளிக்கிறார். கூட்டம் அந்தத் துளிகள் தம் மேல் படாதா என்று முட்டி, மோதி, வாங்கிக் கொள்ளப் பார்க்கிறது. அது என்ன அந்தத் தெளிநீரைத் தம்மேல் பெற்றுக் கொள்ள அவ்வளவு முனைப்பு?

இப்படி வழிபாடு ஒட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

இந்தக் கால வேத - ஆகமக் கலவை நெறியில் (இதை இந்து மதம், சனாதன தருமம் என்றே பலர் சொல்லுகிறார்கள்; நான் வேதாகம நெறி என்றே சொல்ல விழைகிறேன்.), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலாத வகையில், பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் இருந்து வந்த பழக்கங்கள், எவை வேத நெறியின் வழி வந்தன என்று நாம் அடையாளம் காண முடியும் என்றாலும், முற்றிலும் செய்வது சரவல் தான்.

பொதுவாக (வேத நெறி மதங்களுக்கு மாறாக இருக்கும்) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார்கள். ஆனால், ஊற்றுகை (original) வேத நெறிக்காரர்களோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டும் என்றால், வேள்விக் குண்டத்தில் "ஆகுதி"யாகப் போட்டு விடுவார்கள். (இன்றைய மரபாளர்களில் - ஸ்மார்த்தர்களில் - ஊற்றுகை வேத நெறிக் காரர்களாய் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. பலரும் ஏதோ ஒரு கலவை நெறியைத்தான் பின் பற்றுகிறார்கள். பழம் போக்கில் பார்த்தால், ஊற்றுகை மரபாளர்கள் சிவன் கோயில், விண்ணவன் கோயில் என எந்தக் கோயிலுக்குள்ளும் வர மாட்டார்கள். இவர்கள் உத்தர மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்; கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்கள்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறு எந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழிக்குள் அருத்தம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.) நெருப்பு என்னும் இடையாளி, நாம் வேண்டும் தெய்வத்திடம் அதைக் கொண்டு செல்வதாக வேதக்காரர்கள் விளக்கம் சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லாவற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவர்களின் புரிதல். ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேத நெறிக்கே உள்ளது.

ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாமல் அவர்கள் வழிபாட்டில் கொண்டு வருவார்கள். குறிப்பாக நீர் என்னும் பூதம். ஒரு படையல் செய்தால் அதைத் தெய்வப் படிமத்தின் முன்னே காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்து விடுவார்கள். நாம் விழையும் அந்தத் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப் பூருவமாய் எடுத்துக் கொள்ளுவதாய் ஆகமக் காரர்களுக்கு ஓர் ஐதீகம். பிறகு அந்தப் படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர்கள் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இந்தச் சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ளுவார்கள்.

கருப்பர் சாமிக்கு ஆடு வெட்டினாலும் கூட ஆட்டைப் பலிபீடத்திற்கு (பலி பீடங்கள் உண்மையிலேயே நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்குத் தான் இருந்தன. இன்றைக்குச் சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் என்ற எண்ணத்தால் உந்தப் பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப் புறக் கோயில்களில் இன்றைக்கும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொண்டு வந்து காட்டி சற்று நீரைத் தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார்கள். பலிகொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ்சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து, பின் படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையத்தில், ஆரணி ஆற்றுப் படுகையில், கிடா வெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என்று விளங்கும். பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளாவட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்து சேருகின்ற நடைமுறைகளைக் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படியாக முழுதும் மாறி விட்டன. பெரிய பாளையம் மிக விரைவில் மாறிக் கொண்டிருக்கிறது. கிடா வெட்டுவது இப்பொழுது கோயிலுக்கு வெளியில் வெகு தொலைவில் தான்; இன்னும் சிறிது நாளில் இந்தப் பழக்கம் நின்றே போகக் கூடும். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீரைத் தெளிக்கிறார்கள்? (ஒரு சிலர் குறும்புத் தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்லுவார்கள்:-)).

வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படித்தான் இறைப்படிமம் முன்னால் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுகிறோம். ஆலாதனை>ஆராதனை ஆகும். இசைக் கச்சேரியில் ஆலாவனை செய்பவரும் இப்படி ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரங்களைப் பாடுகிறார். கோயில்களில் நாம் கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், அது இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு நாம் ஆளாகி விடுகிறோமாம். இறைப்பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது என்பது ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சுவிட்டாச்சுப்பா?" என்று சொல்லுகிறோம் அல்லவா? அதன் உட்பொருளைக் கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்றைக்கு வடபுலத்திலும் இது பரவிக் கொண்டு வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுகிக் கொண்டு இருப்பதாக வைத்திருப்பார்கள்.] கோயிலுக்கு அருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுந்திருப்பது, நீரில் குளித்துப் பின் சாமியைக் கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு நாம் மிகவும் முகன்மை கொடுப்போம்.

நீரின் குணங்கள் பல. நீருக்கு அமைந்த பெயர்ச் சொற்களும் கூட ஒவ்வொரு குணத்தால் தான் அமைந்தன. காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கின்ற குணத்தால், ஈரம் என்ற சொல்லின் நீட்சியாய் ஏற்பட்ட சொல். (இதே போலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் நான் சொல்ல இங்கு வருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரே ஒரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

நீரின் மேற்பரப்பு என்பது ஏனத்தின் வடிவத்திற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர அது மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கவும் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளுவது என்பது குதிப்பது. துள்ளும் போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும் போது கொடுக்கும் இழுவிசையைத் தந்த விசை - tensile force - என்கிறோம். tensile force என்பதை மிக எளிதாகத் தந்த விசை என்று கூறலாம். compressive force = அமுக்கு விசை.) நீரைத் தெளிக்கும் போது பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் அது துளியாகிப் போகும். துள்ளுவதில் இருந்து துளி பிறக்கும் கதை இது தான்.

துள்ளுவது தளும்புவதற்கும், பின் தொள தொளப்பதற்கும் வழி வகுக்கும். தந்த விசை கூடக் கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளுதற்குக் காரணம் ஆகுமோ, அதே போல தொள்ளுவதும் இந்த தந்த விசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவது தான். துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் ஒரு இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் என்று பொருள். துளுத்தம்>தூள்த்தம்>தூத்தம் என்று பலுக்கப் படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction)அது தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் என்று ஆகும்

தெளிப்பது என்பது பிறவினை; தெறிப்பது என்பது தன்வினை. (தெறி என்பதன் வேர் துல்>துறு>தெறு என்றும், தெளி என்பதன் வேர் துல்>துள்>தெள்>தெளி என்றும் விரியும்.) இப்படித் துண்டு துண்டாகப் பிரிவுதும், பின் பிரிந்தவை கூடி பெரியதாய் ஆவதும் நீருக்கும், நீரைப் போன்ற நீர்மங்களுக்கும் உள்ள குணம்.

இன்றைக்குத் தீர்த்தம் என்றால் தான் பலருக்கும் புரிகிறது. அதன் தமிழ் ஆழம் முற்றிலும் புரிபடாமல் போகிறது. வேத நெறியில் தெளிக்கின்ற பழக்கமே கிடையாத போது, தெளித்தம்>தீர்த்தம் என்று அல்லாது, வேறு எப்படித் தீர்த்தம் என்ற சொல் தோன்றியிருக்க முடியும்?

தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrete பண்ண வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrete என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லாமல் இந்த நாவலந்தீவில் எங்கணும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பது இல்லாமல் இல்லை. ஒரு குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள இரண்டு பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன. தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)

இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. தீக்ஷிதர்கள் என்பவர்கள் வேத நெறியையும் ஆகம நெறியையும் கலந்த சமய நெறியில் உருவானவர்கள். அந்தக் கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லை நகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அதன் வளர்ச்சியின் உச்ச கட்டம் தில்லையில் தான். அந்த வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன் என்ற கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.

"தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட்பொருளைப் பார்த்தால், "அது என்ன, எந்நாட்டவர்க்கும்? யார் அந்த எந் நாட்டவர்?" என்ற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறது. இதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 02, 2006

தில்லை - 3

தில்லை - 1 என்னும் பகுதியில், என் நினைவில் இருந்த படி 4 புலியூர்களைச் சுட்டி, அவற்றில் இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லியிருந்தேன். இப்பொழுது, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட, பு.மா. ஜெய செந்தில்நாதன் தொகுத்த, "திருமுறைத் தலங்கள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, விட்டுப் போன புலியூர் பெயர்களையும், நான் செய்திருந்த தவறொன்றையும், கண்டுபிடித்தேன். அடுத்த செய்திகளுக்குப் போகுமுன் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.

முதலில் நான் செய்த தவறு. இன்றைய மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் தான் என்றாலும், சிவநெறி பற்றிக் குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இந்தப் பெரும்புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக்காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத் தானத்திற்கு வலப்புறமாகப் பிரியும் கிளைச் சாலையில் 4 கி.மீ சென்றால் இருக்கின்ற ஊர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். {பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, நான் தெளிவு பெற வேண்டும்.]

பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியில் இருக்கும் இன்னொரு புலியூர் ஓமாம் புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே இருக்கின்றன. வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. பா. முரளிதரன் சொன்னது சரி. கொள்ளிடக் கரையில் ஓமாம் புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச் சாலை உள்ளது. இங்கு தக்கண மூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் ஒரு தொன்மம் இருக்கிறது. ஓமம் என்பது வேள்வி தான்; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர். ஒமமாம் புலியூர் என்பது ஓமாம் புலியூர் என்று திரிந்திருக்கிறது.

இனி நடுநாட்டில் இருக்கும் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூரின் ஒரு பகுதியாய் இன்று இருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். அது முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியது தான். கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் > கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை என்பது கொல்லை என்பதைக் குறிக்கும்; புழைக்கடை என்று சொல்லுகிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு தான் எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். சமணம் பெரிதும் ஓங்கி இருந்து பின் அழிந்த தலமும் இது தான்.

நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இது இராசேந்திரப் பட்டணம் என்று அழைக்கப் படுகிறது. விருத்தாசலம் - செயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள ஊர். வெள்ளெருக்கம் இங்கு தல மரம். "வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" என்ற பாடலை நினைவு கொள்ளுங்கள்.

இந்த ஐந்து புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பது தான்.) இந்த ஐந்து புலியூர்களிலும் வேள்வி என்பது பெரிதாகப் பேசப்படுகிறது.

இவை போகத் தொண்டை நாட்டில் உள்ளதாகச் சென்னைக் கோடம்பாக்கத்தைப் பற்றி நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 என்ற வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார்கள். அது தொண்டைநாடு என்பதாலும், அங்கு பாடல் பெற்ற சிறப்பான சிவன் கோயில் இல்லாது போனதாலும், கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.

இந்த அளவில் சென்ற பகுதியில் எழுப்பிய "இறைவனுக்கு ஏன் வெவ்வேறு தோற்றங்கள்?" என்ற கேள்விக்குப் போவோம்.

இறைவன் என்பவன் ஒருவன் தான்; ஆனாலும் அவனைப் பலவாறாக உருவகம் செய்து அழகு பார்ப்பது நாவலந்தீவில் பலருக்கும் உள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றுதான் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் சேயோனை நுணுகிப் பார்த்து ஒரு காலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகம் செய்வர்; பின் அவர்களின் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே இன்னொரு ஆனைமுகன் வந்து சேருவான். கொற்றவை என்பவள் தாய் ஆவாள்; இது போல மாயோனும் பல்வேறு தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்ளுவான்; இப்படி எல்லாமே நம்மை ஈர்க்கும் பல்வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும் செய்யும் ஒன்று. அந்த வகையில் நடவரசன் என்று கருத்தீடு, தென்னாடுடைய சிவன் என்ற கருத்தீட்டில் இருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப் பட்டது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இது எதில் இருந்து குறிப்பாக எழுந்தது என்னும் போது தான் தில்லை வனமும், இன்றையக் கோயிலின் உள்ளே இருக்கும் மூலத் தானமும் [நடவரசன் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போன்ற திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.

இறை பற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகளும் தான். சிவச் சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர்கள்(ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர்கள் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர்கள் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் மிக நெடுங்காலம் தமிழர்கள் எண்ணிப் பார்க்காதவையே. அந்நாளில், சமயம் பற்றிய கேள்விகளைக் கொள்கை வழியாகக் கேட்கத் தொடங்கியவர்கள் உலகாய்தர்களே (உலகை ஆய்பவர்கள் உலகாய்தர்கள் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆயுதம் என்பதும் ஆய்தல் என்பதும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடுதல்) பின்னால் உலகாய்தச் சிந்தனையின் எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர்கள் சாங்கிய நெறியாளரும், விதப்பிய (விஷேசிஷம்) நெறியாளரும், ஆசீவக நெறியாளரும், செயின நெறியாளரும், புத்த நெறியாளரும் தான். இந்த மாற்றுச் சிந்தனையாளரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும் முகத்தான் வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத் தக்க எடுத்துக் காட்டு திருமூலரின் திருமந்திரம்; இந்தக் கருத்துக்கள் முளைவடிவில் திருவாசகத்திலும் இருக்கின்றன.).

பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூற்றாண்டில் மிகுந்து இருந்தது மகதப் பேரரசில் தான். தமிழகம் சற்று காலம் இந்த மெய்யியல் உரையாடல்களில் உள்நுழையாமல் தொய்வில் இருந்தது உண்மையே. இந்தக் கேள்விகள் கேட்பதற்கு முன்னால், வட புலத்தில் வேத நெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் என்பது அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக் காரர்கள் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயற்சித்தாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறு மொழியாகவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், அரசனையும் பொதுமக்களையும் தங்கள் பக்கம் பெருத்த அளவில் அணி திரட்டத் தொடங்கினார்கள். பேரரசுகளும், குடியரசுகளும் வேத நெறியில் இருந்து மாறத் தொடங்கின. இதனால், அதுவரை அரசச் சார்போடு இருந்த வேத நெறி பெரிதும் ஆடி போயிற்று. சாரி, சாரியாக வேத நெறியாளர்கள் இடம் பெயரத் தொடங்கினார்கள். இனி வேதநெறியாளர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதுமாய் ஆட்கொள்ளவில்லை. அந்த மாநிலங்கள் எல்லாம் பெருங்காடுகளாய்த் தான் அன்று இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக இருபாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகின்ற பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதே போல கிட்டத்தட்ட நேபாள எல்லையில் இருக்கும் சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இந்தப் பாதையில் இருந்து அசந்தா வெகு தொலைவு இல்லை.) வழியாக கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி ஆகிய ஆறுகளைக் கடந்து, கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானம் (prathisthana>paithan) வரை வந்து சேருவது தக்கணப் பாதை. (இந்தி, மற்றும் மராத்தியில் படித்தானம் என்பது பைத்தான் என்றே சொல்லப் பெறும்; வடமொழியில் இது பிரதித்தானம் ஆகும். இந்தக் கால அவுரங்காபாதிற்கு அருகில், கிட்டத்தட்ட 50 கி.மீ.யில் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஊர் படித்தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலைநகர். இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)

இது தவிர கங்கைக் கரையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசியின் வழி கோசத்தை அடைய முடியும். இதே போல இன்னொரு நீட்சி, தெற்கே படித்தானத்திற்கு நேர் மேற்கே இருக்கும் துறைமுகமான சோபாரா. [இன்றைய மும்பைக்கு மிக நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்து சேரும். சோபாராவுக்குச் சற்று முன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத்தின் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர் முகத்தில் இருக்கின்ற பாருகச்சையும் (Bhaarukaccha>Broach) முகன்மையானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொன்ன இரு பெரிய பாதைகளையும், பாடலியில் இருந்து வாரணசி போகும் சிறு தொலைவையும், படித்தானத்தில் இருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். படித்தானத்தின் முகன்மை நமக்கும் பெரிது தான். நம் சிலப்பதிகாரத்திலும் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவி பெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழியே தான்.

மகதமும், அதைச் சுற்றியுள்ளவர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேத நெறியாளர் பலரும் தக்கண பதம் (தெற்குப் பாதை) வழியாக தக்கணம் வரத் தொடங்கினார்கள். தென்னகத்திற்குள் வேத நெறியாளர் படித்தானம் வழியாகத் தான் நுழைந்தனர். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்க்கையைக் கழித்த காரணமாகத் தான், கங்கைக்கு அடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர்களின் பரவுதலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவர்களால் மிகப் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேத நெறியாளர்களின் பெண்களின் புடவைக் கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகத்தான் அமைந்திருக்கும். படித்தானத்திற்கு அருகில் ஓரிரு நூற்றாண்டுகளாவது தங்கியிருந்திருக்க வேண்டும். விசுவாமித்திரர் கதை, பரசுராமர் கதை, சுக்கிராச்சாரியர் கதை, அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டி வந்த கதை போன்றவை, வேத நெறியாளர் தக்கணத்திற்கு வந்து சேர்ந்து தென்குமுகாயத்தில் ஒன்று கலந்த செய்திகளைத் தொன்மங்கள் வழியாக உறுதி செய்கின்றன.)

படித்தானத்தில் இருந்து கருநாடக மாநிலம் (கடம்பர்களின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்து சேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சி வரும் பாதையையும், அதே போலத் தகடூரில் இருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரை தொடங்கும் போதே தயங்கித் தயங்கித் தான் எழுதத் தொடங்கினேன். படிப்பவர்கள் தயவு செய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர்கள் மூன்று பெரும் அலையாய் தக்கணத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்து கொள்ளத் தேவையானவையே. பெருமானர்களின் மூன்று அலைகளைப் பற்றியும், தக்கண மூத்தி என்னும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் இனி அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.