Wednesday, March 18, 2020

சூடணி வெருவி COVID-19

வறட்டிருமல் (dry cough), சளி (cold), குறைமூச்சு (shortness of breath), மூச்சுத் தடுமாறு ( breathing difficulty), சீவயீரல் படியாளங்கள் (respiratory symptoms) காய்ச்சல் (fever) என்ற அறிகுறிகள் கண்டாலே  ஊரெலாம் பயம். அடுத்து தமக்கும் வருமோ? Corona virus COVID-19 எனும் ஒட்டுவாரொட்டி தமக்கும் தொற்றுமோ? - என எங்கு நோக்கினும் மக்கள் வெருவிக் கிடக்கிறார். தொற்று வாராதிருக்கப் பல்வேறு செந்தர நலப் பரிந்துரைகளும் அளிக்கப் படுகின்றன.  சரியான கைகழுவல், இருமுகையில், தும்முகையில் வாய், மூக்கை மூடிக் கொள்ளல், கறி, முட்டைகளை முற்றிலும் வேகவைத்தல் எனப் பலவும் இங்கு சொல்லப்படுகின்றன. இருமல், தும்மல் போன்ற சீவயீரல் படியாளங்களை வெளிப்படுத்துவோர் அருகில் போகாதிருப்பதும் நல்லது என்கிறார். ஆனால் இது பற்றிய அறிவியல் செய்திகள் எல்லாம் அதிட்டக் குறைவாய், ஆங்கிலத்திலேயே உள்ளன. (https://www.who.int/health-topics/coronavirus).

தமிழில் இது சொல்வோர் மீக்குறைவு. சொல்வோரும் பொதுமலாக்கும் (popularization) பாணியிலே சொல்கிறார். தொற்றி, தீநுண்மி, நச்சுநுண்மி, நோய்நுண்ணி என ஏதேதோ அழைக்கிறார். பொதுப் பெயரில் இப்படி அழைப்பது bacteria-வா? virus-ஆ? fungus-ஆ? அன்றி வெறும் infection-ஆ? என எதுவும் விளங்கவில்லை. பெயரிடலின் முதலடிப்படை ”விதப்பா? பொதுமையா? என்ன விதப்பு? ஏன் விதப்பு?” என்ற கேள்விகளே. இப்படி எதுவுங் காணாது பொதுப்பெயரிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. 16 ஆம் நூற்றாண்டில் potato பார்த்தவருக்கு, அதன் வடிவு விதப்பாகத் தெரிந்து உருளைக்கிழங்கு என்றார். இன்றுவரை அப்படியே சொல்கிறோம். இக் காலத்தில் விதப்பு நோக்காது பெயரிடுவது ஏதோமாதிரி உள்ளது. பொதுமல் ஆக்கும் பாணி  ஒருவகையில் நல்லது தான். ஆனால் அப்படியே நின்று கொண்டால், ”தமிழில் எதையும் ஓரளவிற்கு மேல் சொல்ல முடியாது, தமிழில் கலைச்சொற்கள் இல்லை” எனத் தேங்கிவிட மாட்டோமோ?

அறிவியலில் ”பொதுமலாக்க” அளவிலேயே  பலரும் தமிழை நிறுத்தி விடுகிறார். சுற்றி வளைத்த சொற்றொடர்களே இங்கு கலைச்சொற்களாய் வேடமிட்டுத் திரிகின்றன. மீறி எதைச் சொல்லினும், “பாமரருக்குப் புரியாத இலக்கிய நடையில் தனித்தமிழில் எழுதுகிறாய், தமிழ் வாக்கியத்துள் ஆங்கிலச் சொற்களை (பிறைக்குறி இல்லாது) நம்சொல் போல் கிரந்த எழுத்தின் வழி ஏன் கலந்தெழுதக் கூடாது? ” எனச் சல்லியடித்து ”தமிங்கிலம் பழகெ”ன அருள்வாக்கும் சொல்லி நம்மைக் கட்டிவிடுகிறார். புது மலையாளம் உருவாக்குவதில் அவ்வளவு விருவிருப்பு போலும்.  ஆங்கிலம் தெரியாத, அதேபொழுது அறிவியல் நாடும் விழையோருக்கு, உரிய விவரங்களை நற்றமிழில் எப்போது நாம் சொல்வோம்? இக் குறுங்கட்டுரை அதற்கு முயல்கிறது. கட்டுரையின் தமிழாக்கம், கலைச்சொற்கள், அவற்றின் விளக்கம் ஆகிய மட்டுமே என் பங்களிப்பு. அறிவியல் கருத்துகள் விக்கிப் பீடியாவில் இருந்து பெற்றவை. பிழைக்கு என்னை அடையாளங் காட்டுங்கள். பெருமைக்கு அதை ஏற்றுங்கள்.

வெருவி என நான் சொல்வது virus ஐக் குறிப்பதே. ஆங்கிலச் சொற்பிறப்பியல் பார்த்த பின்தான் சொல்கிறேன். இன்று வைரசு, வைரல் என்று ஆங்கில ஐகார ஒலிபெற்றாலும், 500 ஆண்டுகள் முன் அவை இகர ஒலிபெற்றுப் பலுக்கப்பெற்றன. வெருவி ”விள்” வேரில் கிளைத்தது. விளம்> விடம்> விரம் என்றும் விளம்>வியம்>விஷம் என்றும் வடக்கே திரியும்.  விளம் விணம்>வெணமென மேலை மொழிகளில் திரியும். விர்ரென, விருவிரு, விருவிருப்பு  என்பவை நஞ்சேறும் குறிப்பை தமிழிற் குறிக்கும். விரியன் பாம்பு (viper), நஞ்சுள்ள பாம்பையே குறித்தது. அதேபோல் விருச்சிகத்தின் (-தேள்; scorpion) விருச்சு, நஞ்சைக் குறிப்பதே. தேள்கொடுக்கில் நஞ்சுள்ளது.  வியளம்> வியாளம் = நச்சுப் பாம்பு, வியளம், விரியன்,விருச்சு ஆகியவை தமிழே. ரகரம் பயின்றதால் அவை தமிழில்லை என்றாகாது. அதேபொழுது,  விரு>விரம் என இற்றைத் தமிழ் அகரமுதலிகளில் நேரடிச் சொல்லில்லை தான். அச்சப் பொருளில் விரு, வெரு தொடர்பில் வேறு சொற்களுண்டு.

விரு>விரள்> விரள்தல் = அச்சப்படல்; விரள்+து= விரட்டு> விரட்டல்= அச்சுறுத்தல்.  வெருட்டல் = அச்சூட்டல். விரு>விரசல் = சொல்லாற் கடிந்து வெருட்டல். விள்>விரு>வெரு>வெருவு= நஞ்சு. உடலையும் உயிரையும் நொய்ய>நோய>நோக வைப்பது நொய்ஞ்சு>ந(ய்)ஞ்சு>நஞ்சு. எப்போதும் நச்சு நம்மை அச்சுறுத்தும். நச்சும் அச்சமும் தொடர்புள்ளவை. வெருவிற்கு நஞ்சென்றும், அச்சமென்றும் பொருள் உண்டு. வெருவி= நஞ்சு ஆவது, அச்சம் தருவது, ஓர் உயிரியின் சில்களுள் (cells) நுழைந்து தம்மைப் படியெடுக்கும் தொற்றாளி (infectious agent). அச்சுறுத்தும் போலுயிரி (near-life organism). விலங்குகள், தாவரங்கள், (பட்டுயிரிகள்/ bacteria, தொல்லுயிரிகள்/ archea சேர்ந்த) நூகவுயிரிகள் (micro-organisms) என எல்லா வாழுருவுகளுள்ளும் வெருவிகள் தொற்றும்.  ( வெருவி என இராம.கி. அறியாது சொல்லிவிட வில்லை. நம் சொந்தமரபில் கூடியமட்டும் நிலைக்கலாமென்று கருதியே நுண்மிகளுக்குள் நான் போகவில்லை. ”தொற்றி” எனக்குப் பொது.)

பல்வேறு வெருவிகளை இங்கு எண்ணிப் பார்க்கலாம். எல்லாருக்கும் எளிதில் காய்ச்சலைக் கொண்டுவரும் இன்வுளுயன்சா வெருவிகள் (Influenza viruses) பொதுவாக இருமல், தும்மலில் பரவுகின்றன. குளிர்காலத்தில் பரவும் நோரோ வெருவி (Norovirus) உருள வெருவி (rotavirus) போன்றவை வெருவி வயிற்றுக் கோளாறாலும் (viral gastroenteritis), மலம்-வாய்த் தடத்தாலும் (faecal–oral route), ஒருவருக்கொருவர் தொடும் உணவு, குடிநீர் போன்றவற்றாலும் மிடைப் பெயருகின்றன (transmitted). எல்லோரும் பெரிதாய்ப் பயந்துகொள்ளும் மாந்த நோயெதிர்ப்புக் குறைவு வெருவி (human immunodeficiency virus- மா.நோ. வெ/ HIV) செகுவினைத் (sexual) தொடர்பாலும் ஏற்கனவே தொற்றுப்பட்ட குருதியை இன்னொருவருக்கு ஏற்றுவதாலும் பரவுகிறது,  இவை ஒரு வகை என்றால் அண்மையில் கண்ட, பெரும் அச்சத்தை உருவாக்கும் சூடணி வெருவிகள் (Corona virus) இன்னொரு வகை.

சாத்தாரச் சளியில் (common cold) இருந்து ந.கி.சீ.சே (MERS-CoV நடுக்கிழக்கு சீவயீரல் சேர்ந்தம் - Middle East Respiratory Syndrome), தீ.அ.சீ.சே (SARS-CoV தீவிர அஃகுறு சீவயீரல் சேர்ந்தம் Severe Acute Respiratory Syndrome) வரை பல  நோவுகளுக்குக் காரணமாகி, விலங்கு-மாந்தரிடை பரவும் இயல்பு (zoonotic) கொண்ட,  சூடணி வெருவிகளை (Corona viruses- CoV) நூகுயிரியியலார்  (microbiologists) புதுவிதமாய் வகைப் படுத்துவார். தீ.அ.சீ.சே. (SARS-CoV) என்பது சிவெட் பூனைகளில் (civet cats) இருந்தும் வௌவாலில் இருந்தும் மாந்தருக்குப் பரவியது. ந.கி.சீ.சே (MERS-CoV) என்பது பந்தய ஒட்டகங்களில்  இருந்து மாந்தருக்குப் பரவியது. இன்னும் மாந்தரைத் தொற்றாது, விலங்குகளை மட்டுமே சுற்றிவரும்  சூடணி வெருவிகளும் உலகிலுண்டு.

இவ்வகையில் இதன்முன் அடையாளங் காணாக்  கோவிட் 19 (Corona virus COVID-19) 2019 இல் முதன்முதலாய் மாந்தருக்குப் பரவியது.   தீவிரக் கட்டுகளில் (serious cases), இத்தொற்று பூளைக் குலைநோய் [pneumonia; நுரையீரலுக்கு இன்னொரு பெயர் பூளை; பூளை= இலவம்பஞ்சு. தொட்டுப் பார்த்தால் இலவும்பஞ்சுபோல் இருக்கும். ஆங்கில lung உம் நம் ’இலவமும்’ தொடர்புடையன. இப்படி நான் சொல்வது பலர்க்கும் வியப்பாகலாம். ஆங்கிலச் சொற்பிறப்பியலில் lung இன் தோற்றம் தெரியாதென்பார்] ஆகவும்,  தீ.அ.சீ. சே.( SARS-CoV) ஆகவும் , சிறுநீரகப் பழுதாகவும் மாறலாம். சிலபோது இறப்பையும் இவ்வெருவி ஏற்படுத்தலாம்.  மேலும் பல செய்திகளை https://en.wikipedia.org/wiki/Corona virus இல் அறிந்துகொள்ளுங்கள்.

சூடணி வெருவிகள்  அரபவெருவி அரையலத்தில் (realm Riboviria), நீடுவெருவல் ஒழுங்கையில் (order Nidovirales), சூடணிவெருதைக் குடும்பில் (family Coronaviridae), ஊற்றுச் சூடணிவெருநைத் துணைக்குடும்பில் (subfamily Orthocoronavirinae) உள்ளன.  மூடிவலைத்த இவ்வெருவிகள் (enveloped viruses), பொதியுணர்வும் (positive-sense) தனியிழையும் (single-stranded) வாய்த்த அரப நெற்றுக்காடி ஈனகமும் (RNA genome), எழுகைச் சமத்திகையில் தோற்றும் நெற்றுக்கொப்பரையும் (nucleo-capsid of helical symmetry) கொண்டவை, (வெருவி என்றதால் தான் வெருவல், வெருதை, வெருநை, வெரியன் எனும் வழிப் பெயர்களை - derived nouns- என்னால் உருவாக்க முடிந்தது. ”நுண்மியில்” இது மிகவும் கடினம். ”ஒவ்வொரு நுட்பியலாரும், அறிவியலாரும் தத்தம் புலனத்திற்குப் பாத்தி கட்டாதீர்” என இதற்காகவும் சேர்த்தே சொல்கிறேன்.)

சூடணிவெருவிகளின் ஈனகம் (genome) ஏறத்தாழ 27-34 கிலோ அடிவைகள் (kilobases) கொண்டது. இதுவரை மாந்தருக்குத் தெரிந்த அரபநெற்றுக் காடிகளில் இதுவே பெரியது. சூடணி வெருவி (corona virus), corona ("crown"/"halo")-வை முன்னொட்டாய்க் கொண்டது.  முடியைக் கூம்பாக்கி அதைச்சுற்றி பூமாலையோ (கோயில்களில் கொண்டைமாலை என்பர்) , மணிமாலையோ, தங்கக்கூடோ அணிவது சூழணி> சூளணி> சூடணி ஆகும். சூடணியின் தொங்கடங்களைச் சூளா/சூடா மணி என்பார்.  அணி, மணி சேர்ந்தது மணிமுடி. பயன்பாட்டால், கவிகை, சூடிகை எனப்படும். மூடியிற் சூடும் அணிகளும், மணிகளும்  முடிசூட்டில் குறிக்கப் படும். சூடுதல், பிற வினையாய்ச் சூட்டுதலாகும். வடக்கே போகப்போக டகரம், ரகரமாகும். சிறிது ஓர்ந்து பார்த்தால் corona-சூடணி ஆகிய சொற்களின் தொடர்பு புரியும். வழக்கம்போல் நம் சொற்களைத் தொலைத்துப் பிறசொற்களைத் தூக்கிப் பிடிப்பது நம் தலையெழுத்து, ஒரு தமிழ்நாளிதழும் இதை விடவில்லை.

சில்களுள் சென்று இனம்பெருக்காத் தனி வெருவிகளை, இருபரிமான மிடைப்பெயர்வு மின்னி நூகக்காட்டியால் (two-dimensional transmission electron microscopy) காணும்போது, வெருவியின் கோளப்பரப்பில் பல்வேறு செண்டு வடிவ பெருத ஈட்டிகள் (club-shaped protein spikes) குத்திட்டது போல் தெரிவதால்,   வெரியன்கள் (virions = virus particles) என்றும் அழைப்பார்.  கோளமும் கோளத்தின் மேல் அஃகங்களும் (முட்களும்) அமையும், சாமியார்கள் அணியும், அஃகமணிக் (உருத்திராக்கக்) கொட்டையை இங்கே எண்ணிப் பாருங்கள். வெரியன்களின் தோற்றம் உடனே புரிந்துபோகும். தொற்றுற்ற சில்களுக்குள் இல்லாத போதும், சில்லைத் தொற்றும்போதும், பந்துறாத் துகளாய் (independent particle) உள்ள வெருவியும், வெரியன் எனப்படும். வெரியனுள்,


(i) [வெருவிக்காக வேலைசெயும் பெருதக் கட்டுமானக் குறிப்பு கொண்ட]  அஃகிலரப நெற்றுக்காடி (DNA) மூலக்கூறாகவோ, அரப நெற்றுக்காடி (RNA) முலக்கூறாகவோ அமையும் ஈன்பொருணை (genetic material);
(ii) ஈன் பொருணையைச் (genetic material) சுற்றியமைந்து அதைக் காப்பாற்றக் கொப்பரை (capsid) வடிவில் அமையும் பெருதப்பூச்சு (protein coat); ஒருசில கட்டுகளில்
(iii) கொழுப்புகளால் (lipids)ஆன வெளி வலைமூடி (outside envelope).

என மூவேறு பகுதிகளுண்டு. வெருவித் துகள்களின் வடிவம், எழுசுரிகை யாகவோ (helical), சம முக்கோணத்தாலான 20 முகங் (icosahedral) கொண்டோ, இன்னும் அதிகமாய்ப் பலக்கிய (complex) கட்டுமானங் கொண்டோ அமையலாம். பெரும்பாலான மீச்சிறிய வெரியன்களை ஒளி நூகக் காட்டியால் (optical microscope) காணமுடியாது பெரும்பாலான பட்டுயிரிகளின் அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ நூறில் ஒருபங்கே வெருவிகள் இருக்கும். வாழ்வின் எவ்வளிப்பு (evolutionary) வரலாற்றில்  வெருவிகளின் தோற்றம் சற்று தெளிவில்லாதது.

சில்களின் உள்ளும் வெளியும் நகரும் வழியில்,  அஃநெக்காடியின் (DNA) பொதிமத் துண்டுகளாய் (plasmids—pieces) ஒருசில வெருவிகள் எழுந்திருக்கலாம். இன்னுஞ் சில பட்டுயிரிகளில் இருந்து பிரிந்தும் உருவாகி யிருக்கலாம்.  முகன வழிமுறையான செகைப்பெருக்கம் (sexual reproduction) போலவே ”கிடைமட்ட ஈன்பெயர்வு வெருவிகள்” (horizontal transmission viruses)தம் எவ்வளிப்பில் (evolution) ஈனியல் பரப்பை விரிக்கின்றன. இந்த வெருவிகள் ஈன்பொருணையை தம்முள் வைத்திருப்பதால், அவை பெருக்கமுங் காட்டுவதால், இயல்தேர்வின் மூலம் எவ்வளிப்பதால் (evolve), சிலர் அவற்றை உயிருருக்கள் (life - forms) என்பார்.  வேறு சிலரோ, உயிர் வாழ்விற்கு தேவையான சில்கட்டுமானம் (cell structure) வெருவிகளுக்குக் கிடையாது என்பதாலும்.  உயிரிகளெனச் சொல்வதற்குத் தேவையான எல்லாமுமின்றி , ஒருசில தகைகளை (qualities) மட்டுமே கொண்டிருப்பதால், ”வெருவிகள் உயிரிகள் அல்ல; வாழ்வின் ஓரத்தில் தங்கி தம்மைப் பெருக்கிக்கொள்ளும் ஒருங்கங்கள் (organisms)” என்பார். இரண்டும் இருவேறு பார்வைகள்.


2 comments:

ந.குணபாலன் said...

மெத்தப் பெரிய உபகாரம் ஐயா!
காலத்துக்கு ஏற்ற வியளம்.


வியளம் என்ற சொல் அறிவிக்கப்படும் தகவல்/காவி வரும் கதை என்ற கருத்தில் பாவிக்கப்பட்ட சொல்.

என்று எரிச்சல்/நக்கலுடன் கேட்டால் “ தேவையற்ற கதை காவி வந்திருக்கிறாயோ?”
(கொண்டோடி முத்தர்) எனப் பொருள் படும்.

(ஈழத்தில் இது ஒரு 50-100 வரியங்களுக்கு முந்தின நடப்பு)
தெருவிலே சேமக்கலம் அடித்தபடி ஒருவர் வருகிறார். “என்ன வியளம்?” என்று கேட்கப்படுகிறது.
அப்போது சேமக்கலக்காரர் இன்னார் மோ(ட்)சம் போய்விட்டார் என்று, அல்லது ஊராட்சி தீர்மானம்/கட்டளை பற்றி
அல்லது நீதிமன்ற தீர்ப்பின் படி ஒரு வளவு ஏலத்துக்கு விடப்படும் எனத் தகவல் தெரிவிக்கிறார்.

79இல் என் தகப்பனாரின் சாவுச்சேதி பக்கத்தூரில் சேமக்கலமடித்து அறிவிக்கப்பட்டது.
இன்றும் இந்தமாதிரி நடப்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை.

இந்த வியளத்தின் தோற்றம் தெரியவில்லை.
வியம் - ஏவல் என்று அகரமுதலி சொல்கிறது. வியளம் என்பது வியம் என்ற வினையடியிலிருந்து வந்த தொழிற்பெயர்ச்சொல்லாயிருக்குமோ?

ந.குணபாலன் said...

இதிலே 4 ம்வரியில் முதலில் துவங்குவது விடுபட்டுப்போயுள்ளது.

அது பின்வருமாறு: “என்ன வியளம் பறையிறாய்?”