Tuesday, August 21, 2007

நுணலும் அடவும்

இரவெல்லாம் ஓயாது எகத்தாள மழைப்பொழிவு;
மழைகுறையத் தூறலிடை, மடுவெங்கும் நீரொதுங்க,
எங்கேயோ தோட்டத்தில், ஏறிவரும் நுணலோசை;
நள்ளிரவில் துயில்விலக்கி, நான்விழிக்கும் கவனிப்பு;

o0o

குக்கூகுக் குக்கூகுக் கூடிவரும் குழுத்தாளம்;
எப்படித்தான் மழைப்பொழிவு இங்கதிகம் ஆகிவிட்டால்,
குக்குவக்கும் தவளையெலாம் குரலெடுக்கச் செய்திடுமோ?
சுரந்துவர உள்ளோடும் சூழ்க்குமத்தை யாரறிவார்?

o0o

நுவலுகின்ற நுணப்பாலே, நுணலென்று சொன்னார்கள்;
திவலைகொளும் நீர்ப்பரப்பின் திரையோங்கித் தனைக்காக்கும்
தவளையதின் குரலெடுப்பு தவழரவிற் கெதிரொலிப்பா?
எத்தனைநாள் ஆடுபுலி ஆட்டமிங்கே நடந்திருக்கும்?

o0o

நடைபழகக் காலையிலே நகருகின்ற சாலையெலாம்,
சீருந்தும், இருவளையும், சிதைத்தொழித்த நுணற்தேய்ப்பு;
நீர்தவிர்த்து, நிலம்நாடி, நேர்ந்ததுதான் எதற்காக?
தன்னேர்ச்சி தமக்கென்றே தெரியாத தடுமாற்றோ?

o0o

என்னதொரு அடவு இது, என்முன்னே எழும்காட்சி?

அன்புடன்,
இராம.கி.

சீருந்து = car
இருவளை = two wheeler
அடவு = design
தன்னேர்ச்சி = accident

Saturday, August 18, 2007

வலைச் சொற்கள் (webterms)

வலைச் சொற்கள் (webterms) என்ற தலைப்பில் wall paper, banner, ring tone, mobile, gadget, widget, screen saver ஆகியவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களை விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார்கள். அதற்கான பரிந்துரையை அங்கு பதிந்தது போக, இங்கும் பதிந்து வைக்கிறேன்.

* wall paper
சுவர்த் தாள் என்றே இதைச் சொல்லலாம். [அப்படிச் சொல்லக் கூச்சப் படவேண்டாம்.] சுவரில் பொதிக்க வேண்டிய தாள் சுவர்த் தாள் தானே? அந்தச் சுவர் மெய்யான சுவராகவோ, மெய்நிகர் சுவராகவோ இருக்கலாம்; அதனால் என்ன? நான் இப்படிச் சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு. திரைப்படமும் விளம்பரங்களும் வந்த நாளாக, ஒரு 60, 65 ஆண்டுகளில், தமிழ்கூறு உலகம் எங்கணும் wall poster - சுவரொட்டி பற்றிச் சொல்லி வருகிறார்கள் தானே?

இந்தச் சுவரொட்டி என்ற சொல்லின் கருத்து நன்கு நமக்கு ஊறிவிட்டது. அதை ஒட்டி, சுவர்த் தாள் என்பதும் நமக்கு எளிதில் புரிபடும். இன்னும் துல்லியம் கருதினால், wall poster என்பதை சுவர்ப் பொதிப்பு என்றும் கூடச் சொல்ல முற்படுவேன். ஏனென்றால், ஒட்டுதலைக் காட்டிலும் பொதிதல் = பொருத்துதல் என்ற வினை நன்றாக பொருந்தும். பின்னணி என்ற சொல் இங்கு பொருந்தி வராது. அது பின்னால் அணி செய்தல் (= வரிசைப்படுத்தி அடுக்குதல்) என்று வேறு ஓர் ஆழமான பொருளை உணர்த்தி, background என்று கொண்டுவந்து விடும்.

* banner
பதாகை என்ற சொல் பலநாட்களாய் இருப்பது தான்.

* ring tone
கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி. [கறங்குதல் அல்லது கலிங்குதல் = ஒலித்தல்; எவ்வளவுநாள் தான் மணியோசை என்று ஒப்புமைச் சொல்லையே சொல்லிக் கொண்டு இருப்பது? நம்முடைய சரியான சொற்களை மறுபடியும் புழங்க விடுவோமே? எங்கெல்லாம் ring என்று ஒலிக்குறிப்பு வினைச் சொல் வருகிறதோ, அங்கெல்லாம் கறங்குதலைப் (அல்லது கலிங்குதலைப்) புழங்கலாம். கொஞ்சம் கூடத் தயக்கம் வேண்டாம்.]

* mobile
நகர் (இடை) பேசி. mobile person = நகராளி; cell phone = செல்(லிடை) பேசி

* gadget
1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism," dim. of ga^che "staple of a lock."

தமிழில் staple of the lock என்பதைக் கொக்கி என்றுதான் சொல்லுகிறோம்; பூட்டைத் திறந்து காட்டி, "சாவியை இப்படிப் போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இந்தக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள்.

கொடுக்காப் புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப் புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இன்றைக்கு நகர்ப்புறத் தமிழர்கள் சற்றும் அறியாத பழம். நாட்டுப்புறங்களிலும் அழிந்து கொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும்.

வால் என்பதற்குக் கூட கொடுக்கு என்ற பொருள் உண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை. மேலை மொழிகளில் get என்று வருவது போல கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமைய முடியும். கொக்கட்டை என்பதைச் சொல்லுவதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும்.

* widget
"gadget, small manufactured item," c.1920, Amer.Eng., probably an alteration of gadget, perhaps based on which it.

எங்கோ ஓரிடத்தில் இடுங்கி, ஒட்டிக் கொண்டு கொடுக்காய் இருக்கும் ஒரு பொருத்தை, இடுக்கை என்றே சொல்லலாம். விக்கிப்பீடியாவிற்குள் போனால், widget என்பதற்கு கீழே உள்ள விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். இடுக்கை என்று நான் பரிந்துரைக்கும் சொல் அவைகளுக்கும் பொருந்தியே வருகிறது.
---------------------------------
Widget may refer to:
Widget (economics), a placeholder name for an object or, more specifically, a mechanical or other manufactured device
In computing:
Widget engine, such as Dashboard widgets for Apple's Mac OS X v10.4, Windows Vista Sidebar, KlipFolio or Yahoo! Widgets (aka Konfabulator)
GUI widget, a component of a graphical user interface that the user interacts with
Web widget, a third party item that can be embedded in a web page
Mobile widget, a third party item that can be embedded in a mobile phone
Widget (beer), the nitrogen widget in cans and bottles of beer
Widget (comics), a character in Marvel Comics
Widget (name), in-house name for the Delta Air Lines corporate logo
Widget (TV series), a 1990's animated television series
Widget (tool), a small scraping tool consisting of a blade and a handle, used to remove paint from glass
Widget (Burnout move), A swift horizontal karate chop to the throat, best delivered to the throat or trachea.

The term was first applied to user interface elements during Project Athena in the 1980s. The word was chosen because "all other common terms were overloaded with inappropriate connotations" and ஖ since the project's Intrinsics toolkit associated each widget with a window of the underlying X Window System ஖ because of the common prefix with the word window. [1]
-------------------------------------

* screen saver
A screensaver is a computer program originally designed to conserve the image quality of computer displays by blanking the screen, or filling it with moving images or patterns when the computer was not in use. Today, screensavers are primarily used for entertainment or security purposes.

அந்தக் காலத்தில் இருந்த cathode ray display களில் ஒரே படத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தால் அப்படியே அந்தப் படத்தை அழிக்க முடியாமல் கணித்திரை பொரிந்து பொட்டுவிழுந்தாற் போல தொடர்ச்சியாய் நிழல் தோற்றம் காட்டக் கூடும். to "save" the screen from burn-in என்பதற்காக இந்த screen saver நிரலிகள் எழுந்தன. இவற்றைக் கணித்திரைக் காப்பிகள் அல்லது கணித்திரைச் சேமிகள் என்று சொல்லலாம். நாளாவட்டத்தில் தமிழ்ப் புழக்கம் கூடினால், கணி என்பதை விட்டுவிடலாம். அப்பொழுது திரைச் சேமிகள் என்பது பழகிவிடும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 13, 2007

வேங்கடத்து நெடியோன் - 3

பின்னால் வந்த எல்லா ஆழ்வார் பாடல்களிலும், "வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்" என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஆழ்வார் பாடல்களில் வேங்கடத்தை ஒட்டி எங்கும் குறிக்கப் படவே இல்லை. பெரும்பாலும், அந்தப் பெயர் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே, விண்ணவர் வழக்கில், எழுந்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, பேரரசுச் சோழர்களின் பிற்காலக் கல்வெட்டுக்கள், பிற்காலப் பாண்டியரின் கல்வெட்டுக்கள், விசயநகரப் பேரரசின் கல்வெட்டுக்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால், இன்னும் நான் செய்யாதிருக்கிறேன். (புறனடையாக, திருமலை - திருப்பதி தேவத்தானத்தார் வெளியிட்ட "முந்தையக் கல்வெட்டுக்கள்" என்ற தொகுதியை மட்டும் பார்த்துச் சில செய்திகளைக் கீழே சொல்லியிருக்கிறேன்.)

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் எப்படி எழுந்திருக்க முடியும்? வடமொழிப் பொருளாய் srinivaasa என்பதற்கு மோனியர் வில்லியம்சில் abode of Sri என்று "திருமகள் இவனுக்குள்ளே குடியிருப்பதைச்" சொல்லுகிறது. அதாவது "திரு வாழும் இடத்தான்" என்றே ஸ்ரீநிவாசனுக்குப் பொருள் கொள்ளுகிறது. [தஞ்சாவூர்ப் பக்கம் "திருவாழத்தான்" என்று சொல்வார்களே, நினைவுக்கு வருகிறதா?] ஆனால் சொற்பிறப்பு அதில் காட்டப் படவில்லை. இந்தச் சொல் பயிலும் இடங்களாய், kaavya, chandomanjari, bhaagavata puraana ஆகிய மூன்றும் அந்த அகரமுதலியில் காட்டப் படுகின்றன.

வாய்மொழியாய் தொன்மக் கதைகளாய் இருந்த வடமொழிக் காவியங்கள் எழுத்து வடிவில் எழுந்தது குத்தர்கள் (=குப்தர்கள்) காலத்தில், சங்க காலத்திற்குப் பின்னால் (கி.பி 300-400) தான்; சந்தமஞ்சரியின் காலம் எனக்குத் தெரியவில்லை; தேடிப் பார்க்க வேண்டும். பாகவத புராணம் சேர்ந்த 18 புராணங்கள் பிற்காலத்தில் கி.பி. 600-1400 க்குள் எழுதப் பட்டதாகத் தான் பல ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்ரீ - நி - வாசன் என்பதைப் பிரித்து திருமகள் மார்பில் உறைபவன் என்று தலை கீழாகச் சொல்வதும், பொருந்தாதைப் பொருந்தச் சொல்வதாகத் தெரியும் சமய விளக்கம் ஆகும். [பல சமய விளக்கங்கள், நம் வரலாற்றைப் புறம் தள்ளி, தமிழ் வழக்கைப் புறம் தள்ளி, ஏன் வடமொழி இலக்கணத்தையும் கூடப் புறம் தள்ளி, சொல்லப் படுகின்றன. அந்த விளக்கங்களைக் கேட்பவர்களும் ஏதேனும் அவக்காரம் வந்துவிடுமோ என்று எதிர்க் கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டு விடுகிறார்கள். எல்லாமே chaltha hai என்று ஆகிவிடுகிறது.]

நாம் மேலும் நினைவு கொள்ள வேண்டியது "மேல் திருப்பதியில் தாயாருக்கு இடம் கிடையாது, அங்கே பெருமாள் மட்டும் தான்" என்ற செய்தியாகும். மேலே மூலவரின் பெயர் திருவேங்கடமுடையான் என்றே இருக்கிறது. (அது ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது.); வேங்கடாசலபதி என்பது வேங்கட மலையானைப் பாதி வடமொழியாக்கி இருபிறப்பிச் சொல்லாய்க் கூப்பிடுவது; பாலாஜி என்பது மிக, மிக அண்மைக் காலப் பெயர். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறோம். மேல் திருப்பதியின் ஊருலவருக்கு (=உற்சவருக்கு) மணவாளப் பெருமாள் என்றுதான் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; இந்தக் காலத்தில் அதையும் வடமொழியாக்கி கல்யாண வெங்கடேசர் என்று சொல்லுகிறார்கள்; தமிழ்ப்பெயர் போயே போயிந்தி. ஆனாலும் வேங்கடமுடையான் என்ற கருத்து வடமொழிப் பெயர்ப்பின் உள்ளே நின்று தொனிக்கிறது.

தாயார் அலர்மேல்மங்கை (பத்மாவதி என்பது அப்படியே வடமொழிப் பெயர்ப்பு) திருச்சானூரில் தனித்து இருப்பதாக மரபு. (தமிழ்ப் பேச்சுவழக்கில் இது அலமேலு என்று சுருங்கும்.)

கீழ்த் திருப்பதியில் உறையும் பெருமாளுக்குக் கல்வெட்டுகளின் படிக் கோவிந்தப் பெருமாள் என்றே பெயர். (இன்றைக்கு அதையும் கோவிந்தராசனாக்கித் தமிழல்லாத தோற்றம் காட்டுகிறார்கள். இந்தக் கோவிந்தன் பேரில் தான் திருமலையில் பற்றாளர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கூறுகிறார்கள்.) கீழ்த் திருப்பதியில் உள்ள தாயாருக்குப் புண்டரீக வல்லி என்று பெயர். இதுவும் அலர்மேல் மங்கையின் இன்னொரு வடமொழிப் பெயர்ப்புத் தான்.

காலவோட்டத்தில் வெவ்வேறு காரணங்களால், மூலவருக்கே பேர் மாற்றம் செய்த கதைகள் தமிழ்நாட்டுக் கோயில் வரலாறுகளில் நெடுகவே உண்டு. (முட்டாள் தனமாக, தமிழ்ச் சொல்லின் மூலப் பொருள் புரியாமல், வேறொரு வழிப் பொருளைக் கொண்டு, அதை வடமொழிக்கு மாற்றி அதற்கும் ஒரு தொன்மம் படைக்கும் கூத்துக்கள் நிறையவே உண்டு. திருமரைக்காடு, திருமறைக்காடாகி, வேதாரண்யம் என்று மொழிமாற்றம் பெற்ற கதை பலருக்கும் தெரியும். இது போன்ற கதைகள், காதில் பூவைத்திருப்பவர்கள் இருக்கும் வரை, தொடரும்.) காட்டாக, சென்னை முகப்பேரியில் (முகப்பு ஏரி = முகப்பேரி) இருக்கும் சந்தான சீனிவாசப் பெருமாளுக்கு பழைய பெயர் ஒன்று உண்டு. அந்தக் கோயிலில் இருக்கும் 18 ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைப் படித்தால் மூலவரின் பழைய பெயர் ஆதிகேசவப் பெருமாள் என்று இருந்திருப்பது புலப்படும். ஆனால் வணிக மயமாகிப் போன இன்றைய நாளில் அதற்குப் பெயர் சந்தான சீனிவாசப் பெருமாள் என்று ஆகிவிட்டது. (கோயிலுக்குள் வணிகம் வளர, வளர, கல்வெட்டுக்கள் வெகுவிரைவில் அழிந்து கொண்டிருக்கின்றன. வணிக நோக்கில் நம் கோயில்கள் அழிவது ஏராளம், ஏராளம்.)

எப்படி என்றால், நாம் 40 ஆண்டு கால வரலாற்றிற்கு முன்னால் போக வேண்டும். 1968ல் சென்னையில் ஒரு பெரிய பொருட்காட்சி நடத்தினார்கள். அப்பொழுது அண்ணா நகர் என்னும் குடியிருப்பு உருவாக்கப் பட்டது. இந்தப் பெருமாள் கோயில் ஒரு தனியார் நிலத்தில், அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பொறுப்பில், இன்றைய அண்ணா நகர் ரவுண்டானாவிற்கு அருகில் 1968 -ல் இருந்தது. பின் அண்ணா நகர் அமைந்த போது, நிலம் கொள்முதலில் அப்படியே கல், கல்லாகப் பெயர்த்து, இன்றைய முகப்பேரிக்குப் போயிருக்கிறது. (இத்தனைக்கும் கோயில் 8, 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.) முகப்பேரிக்குப் போன பிற்பாடு தான், மூலவர் பெயர் மாறியிருக்கிறது. முகப்பேரி என்ற புது இடத்தின் பொருளையே மாற்றி யாரோ ஒரு விவரமானவர், "எதில் மக்கள் சிக்குவார்கள்?" என்று பார்த்து, "மகப்பேறு கொடுப்பவர்" என்று ஒரு கதையை இட்டுக் கட்டி, முகப்பேரிக்கு மாறாய் மகப்பேறு என்று இல்லாத பொருள் சொல்லி, மேலும் "சீனிவாசன் என்றால் ஆட்கள் கூடுவார்கள்" என்ற உந்துதலில் "சந்தான சீனிவாசப் பெருமாள்" என்று கூட்டுப் பெயரை உருவாக்கி, அதுவரை இல்லாத ஒரு தொன்மத்தையும் உருவாக்கி, 1993 - 94 ல் அண்ணா நகரெங்கும் ஒரு பெரிய பரப்புரை செய்து, கூட்டம் கூட்டி, இன்று கோயில் ஓகோ என்று இருக்கிறது. (எனக்குப் பிடித்த பெருமாள் கோயில்களில், மூலவரின் திருமேனிகளில், இதுவும் ஒன்று என்பது வேறு புலனம். நான் சொல்ல வருவது இப்படி இட்டுக் கட்டும் தொன்மங்கள் பற்றியே ஆகும்.)

நெடியோன் கோயில் எப்படி ஸ்ரீநிவாசன் கோயில் ஆனது? மீண்டும் ஸ்ரீ - நி - வாசன் என்ற வடமொழிப் பிரிப்பிற்கு வருவோம். வாசன் என்பவன் வசிக்கிறவன். "திரு மார்பில் இருக்க, வசிக்கிறவன்" என்றால் அது மிகவும் பொதுமையாக இருக்கிறது; திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் தான், மேலே சிலம்பின் காடுகாண் காதை 11:41-51- இற் சொன்னது போல், விண்ணவன் என்பவன் "நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு" இருக்கிறான். "நலங்கிளர்" என்று சொல்லும் போது திருமகள் ஆரத்தில் இருக்கிறாள் என்று பொருள். திருவும் நலமும் ஒன்றுதான்.

தவிர, பதிதல் என்பற்குத் தமிழில் உள்ள பொருள் "ஓரிடத்தில் இருப்பதும், வசிப்பதும் தான்". பதிதல்>வதிதல் என்று திரியும். வதிதல் என்பது வடமொழிப் பலுக்கில் வசித்தல் என்று ஆகும். திருப்பதியான் என்பதே தமிழ் முறைப்படி ஸ்ரீநிவாசன் என்ற பொருள்தான் கொள்ளும். ஆனால் திருப்பதி என்பது திருமலை அல்லவே? அது மலையடிவார ஊர் அல்லவா? மேலே இருக்கும் திருமேனிக்கு திருப்பதியான் என்ற பெயரை நாம் எப்படிச் சொல்லுவது? திருமலையான் என்றல்லவா சொல்ல வேண்டும்? (திருமலையான் என்ற பேரும் பல விண்ணவர்களுக்கு இருக்கிறதல்லவா?) திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை. திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் (ஆழ்ந்த பொருண்மையில் அல்ல) ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்.

ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது.

வேங்கடத்தில் இருப்பவனுக்கு என்று ஓர் ஓரிமை (uniqueness) இருக்க வேண்டுமே? அது என்ன? ஆறு அரத்து (=அறுத்து) வந்த அரங்கத்தில் இருப்பவன் அரங்கன் என்று ஆனதைப் போல, கீழே தலத்தில் சாய்ந்து கிடப்பவன் தல சயனப் பெருமாள் (கடல் மல்லையில் இருக்கும் பெருமாள்) என்று ஆனது போல, ஒரு விதப்பான பெயர் அல்லவா வேங்கடத்தில் இருப்பவனுக்கு அமைய வேண்டும்? ஸ்ரீநிவாசனில் அப்படி ஒரு விதப்பு இல்லையே? "திருவானவள் தன்னுள்ளே வசிக்க இருப்பவன்" என்பது ஒரு தட்டையான பெயராய், இருக்கும் இடத்திற்குப் பொருந்தாத பெயராய், அமைகிறதே? இத்தனைக்கும் அருகில் திருமகள் இல்லாமல் அங்கே அவன் தனித்து நிற்கிறானே? அப்புறம் எப்படி ஸ்ரீநிவாசன் என்று வரும்? ஆனாலும் அந்தப் பெயர் இன்று வழக்கில் இருக்கிறது.

இனி நி என்ற வடமொழி இடைச்சொல்லிற்கும் வருவோம். அதற்கு என்ன பொருள்? மோனியர் வில்லியம்சில் down, back, in, into, within என்ற பொருண்மைகளைக் கொடுத்து இந்தச் சொல் வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லின் முன்னொட்டாய் சேர்க்கப் படும் என்றும், சில போது எதிர்மறைப் பொருள் கொண்டு தரவும் இது சேர்க்கப் படும் என்றும் குறித்திருக்கிறது. அப்படியானால், இடைச்சொல்லின் பொருள் பார்க்கும் போது, ஓடு, உடன் என்ற பொருட்பாடுகள் இல்லாத நிலையில், திருவோடு உறைபவன், திருமகள் கேள்வன் என்ற இணைச்சொற்களாய்க் காட்டப்படுபவை எல்லாம் பொருத்தம் இல்லாதவையாகவே தோன்றுகின்றன.

ஸ்ரீநிவாசன் என்ற பெயரைக் கல்வெட்டுக்களில் பதிவு செய்ததை, திருப்பதியை ஒட்டி உள்ள கல்வெட்டுக்களில் பார்த்தால் அது மிகுந்த ஆண்டுகள் கழித்து, விசயநகர அரச காலத்தில் தான் பதிவு செய்யப் படுகிறது. காட்டாக, திருமலை-திருப்பதி தேவத்தானம் 1998ல் வெளியிட்ட "முந்தைய கல்வெட்டுக்கள்" என்ற பொத்தகத்தில் 199 ஆம் கல்வெட்டாய், திருமலைக் கோயிலின் முதற் சுற்றாலையில் (=பிரகாரத்தில்) ஆவணப் பதிவு அறையின் (record room) வெளியோடியில் (verandah) வடக்குச் சுவரின் வெளிப்பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் 4 வது வரியில், "திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதலியார் திருக்கலிகன்றிதாஸர் அகரமான ஸ்ரீநிவாச புரத்தில்" என்ற குறிப்பு வருகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1444 அளவில் இருக்கலாம்.

இதே கல்வெட்டில் திருமலைப் பெருமாளின் பெயர் வேங்கடமுடையான் என்றே குறிக்கப் படுகிறது. முதலியார் என்ற வழக்கு அந்தக் காலத்தில் சாதியைக் குறிப்பிடும் சொல் அல்ல; அதற்கு முன்னவர், முதலாகக் கருதப்படும் பெரியவர், என்றே பொருள் உண்டு. கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் இயற்பெயர். கலிகன்றிதாஸர் என்பது கலிகன்றிக்குத் தாஸர் என்று பொருளில் ஒரு விண்ணவப் பார்ப்பனரைக் குறிக்கிறது. அகரம் என்ற தமிழ்ச்சொல் இன்று அக்ரஹாரம் என்று திரிக்கப் பட்டு வடமொழி போல் தோற்றம் காட்டும் அருமையான தமிழ்ச்சொல். அகரம் என்பது இங்கே பார்ப்பனர் குடியிருப்பு.

ஆக 1444 ல் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீநிவாசபுரம் என்பது கீழ்த்திருப்பதியின் அருகே உள்ள குடியிருப்பு. திருப்பதியான் என்ற பொருளை ஸ்ரீநிவாசன் என்ற சொல் தரும் என்று முன்னே குறித்திருந்ததை நினைவு கொள்ளுங்கள். அடுத்து அதே பொத்தகத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எண் 201 இலும் இந்த ஸ்ரீனிவாசபுரம் குறிப்பிடப்படுகிறது. தவிர அந்தக் குடியிருப்பினுடைய இயற்பெயரும் சித்தக் குட்டை என்றும் 201- ஆம் கல்வெட்டில் சொல்லப் படுகிறது.

பொதுவாகப் பல்லவர் காலத்தில் இருந்து, சோழ, பாண்டிய, விசய நகர அரசு வரை, அரசர்கள் பல்வேறு காரணங்களுக்காக, ஓர் இயல் ஊரை அங்கு ஏற்கனவே இருப்போரிடமிருந்து வரி காரணங்களால் வலிந்தோ, பணம் கொடுத்து வாங்கி மெலிந்தோ, பெற்று, பார்ப்பனருக்குத் தானமாய்க் கொடுப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்பொழுது விண்ணவன் கோயிலைச் சேர்ந்த பார்ப்பனருக்கு உரிமையாய் அமைந்தால் அந்த ஊர் திருவிடையாட்டம் என்று சொல்லப் படும். [சிவன் கோயிலுக்குக் கொடுத்தால் தேவதானம் என்றும், அல்லிருமைப் (அத்வைதப்) பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது பெருமதேயம் (ப்ரம்ம தேயம்) என்றும், சைனருக்குக் கொடுக்கும் போது பள்ளிச்சந்தம் என்றும் சொல்லப் படும்.] இந்த 201 ஆம் கல்வெட்டின் படி சித்தக் குட்டை என்னும் ஊரே ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயரில் திருவிடையாட்டமாய் மாறியிருக்கிறது. (சித்தக் குட்டை என்ற பெயர் சைன, ஆசீவகம் பற்றி ஓர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. ஆய்வு செய்ய வேண்டும்.)

202- ஆம் கல்வெட்டிலும், 217 - ஆம் கல்வெட்டிலும் (இதன்படி, ஸ்ரீநிவாசபுரம் என்னும் குடியிருப்பு திருப்பதியில் தென்சீர்மையில் சிங்கர் கோயில் தெருவுக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.) 224 - ஆம் கல்வெட்டிலும் (ஸ்ரீநிவாச புரத்தில் வீர நரசிம்ஹப் பெருமாள் கோயில் இருந்தது.) மேற்கொண்டு சில செய்திகளை அறிகிறோம்.

ஆக ஸ்ரீநிவாசபுரம் என்ற சொல் கீழ்த் திருப்பதியை ஒட்டியே இருந்திருக்கிறது. "எப்பொழுது திருமலையின் மூலவருக்கு இந்தப் பெயர் போனது?" என்ற கேள்விக்கு நான் பார்த்தவரை விடை தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். விசயநகரக் கல்வெட்டுக்களிலும் கூட திருமலையின் மூலவர் வேங்கடமுடையான் என்றே அழைக்கப் படுகிறார்.

இனி, நான் சொல்லப் போவது ஒரு முன்னீடு (proposal) மட்டுமே; இது முடிந்த முடிவு அல்ல. எனவே யாரும் பாய்ந்து வந்துவிடாதீர்கள். எந்த ஓர் ஆய்விற்கும் முதலில் முன்னீடு வேண்டும். பின்னால் அதை நிறுவிக்கலாம், அல்லது, தூக்கிப் போடலாம். எது சரி என்று எனக்கு இப்பொழுது தெரியாது.

பொதுவாய், நெடியோன், உயர்ந்தோன் என்பதைத் தமிழில் நிவந்தோன் என்றும் சொல்லலாம். நிவத்தல் என்பது உயர்தல், வளர்தல், மேலாதல். இவை அத்தனையும் திருவிக்கிரம அவதாரத்தில் நடந்தவையே. நிவத்தலின் இன்னுமொரு வடமொழித் திரிவாய் நிவேதனம் என்ற சொல் கிளர்ந்து தெய்வத் திருமேனிகளின் முன்னால் தமிழ் ஆகம முறைப்படி படையலை உயர்த்திக் காட்டுவது குறிப்பிடப்படும். (படையலை உயர்த்திக் காட்டுவது வேதமுறையே கிடையாது. அது ஆகம முறை. வேத முறையில் கீழ்நோக்கிச் சாய்த்து ஆகுதி ஆக்க வேண்டும்.)

(வேதமுறை வேறு, ஆகம முறை வேறு என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்தலாம், இது என்ன குழப்பம் என்றும் நினைக்கலாம். வேதநெறிக்காரர்கள், அல்லிருமைக்காரர்கள், கோயிலுக்குள் புகுந்தது எல்லாம் பின்னால் வந்த மரபு. வரலாற்றின் ஒரு பொழுதில் இந்த வேதம், ஆகமம் ஆகிய இருவேறு முறைகளும் தனித்தே வைக்கப் பட்டு இருந்தன. பின்னால் ஏதோ ஓர் உந்துதலில், சேர்ந்து போயின. இந்தக் கால சிவநெறி, விண்ணவ நெறி ஆகியவற்றில் இருக்கும் கோயிலொழுகுகள் ஆகமநெறி, வேதநெறிப் பழக்கங்களின் கூட்டுக் கலவையே ஆகும்.)

நிவேதத்தை மீண்டும் தமிழில் கடன் வாங்கி நிவேத்தியம்>நைவேத்தியம் என்று சொல்ல முற்படுவார்கள். தமிழ்ப் பலுக்கோடு இருக்க வேண்டுமானால் நிவந்தம் என்றே நைவேத்தியத்தைச் சொல்லலாம். நமக்கும் நம் ஆகம முறைகள் ஒழுங்காய்ப் புரிபடும். [கோயிலுக்கென முன்வந்து உரிமையாய் விடும் நிலமும் கூடத் தமிழ்க் கல்வெட்டுகளில் நிவந்தம் என்றே குறிக்கப் படும். முன்வருவதும் தமிழ்மரபில், ஓர் உயர்ச்சி தான்.]

இனி, விந்த மலை என்பது, விஞ்ச மலை என்று போலி ஒலிப்புப் பெறுவதைப் போல, அய்ந்து என்பது அஞ்சு என்று ஆவதைப் போல, நிவந்தன்>நிவஞ்சன் என்று ஆகிப் பின்னால் நிவாஞ்சன்>நிவாசன் என்று மூக்கொலி இல்லாமல் ஆவதும் மொழிப் பலுக்கலில் இயல்பாக அமையக் கூடியது தான். (வந்தாங்க என்பது எங்கள் பக்கம் வந்தாக என்று ஆவது எப்படி? வைதாங்க/வைஞ்சாங்க/வைதாக என்பதெல்லாம் வசை என்னும் பெயர்ச்சொல்லை எப்படி உருவாக்குகிறது?) அப்படி நிவாசன் என்று ஆகும் போது நெடியோன் என்ற பொருளும் நீண்டு நிலைக்கிறது. ஆனால் இதற்குச் சான்று? இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பின் சொல்லுகிறேன். அதே பொழுது, "திருமகளைத் தன் மார்பில் இருக்க வைத்திருப்பவன்" என்ற பொருள் ஏரண முறையில் பார்த்தால் சரியென்று தோன்றவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திருமலையான், "நெடியோன்" என்றுதான் தொன்றுதொட்டு 2500 ஆண்டுகளாய் தமிழில் அழைக்கப் பெறுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

இதுவரை மேலே சொன்னவற்றில் நான் தொடாத ஒரு புலனமும் உண்டு. திருமலையான் நெடியோன் மட்டும் தானா அல்லது இரண்டுருவின் கலப்பா என்ற அய்யத்தைப் பற்றியது. (இங்கே கருத்தியல் கலப்பைச் சொல்லவில்லை; அந்தத் திருமேனியில் நம் கண்களுக்குத் தெரியக் கூடிய சிற்பக் கூறுகளையே பார்க்கச் சொல்லுகிறேன். அந்தப் பெரிய நாமம் .......) கீழே உள்ள பாடலை ஆழ்ந்து படியுங்கள். இது இயல் விவரிப்பா, அன்றி மனத்துள் எழுந்த கருத்தியல் உருவகமா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

- பேயாழ்வர், மூன்றாம் திருவந்தாதி 63.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 09, 2007

வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். [அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவு செய்யப் படும். இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 08, 2007

வேங்கடத்து நெடியோன் - 1

அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும், அதில் வந்த பின்னூட்டுக்களையும் படித்த போது, "உடனடியாக எழுதாது, கொஞ்சம் ஆற அமரச் சரிபார்த்து, உறுதி செய்து, பின் எழுதலாம்" என முன்னிகை தருவதைத் தவிர்த்தேன். அச் சரிபார்ப்பு இப்பொழுது ஓரளவு முடிந்த நிலையில், சொல்லாய்வு, முற்கால வரலாறு ஆகியவை சேர்த்து, இந்தப் பதிவில் சொல்கிறேன்.

நமக்குக் கிடைத்த தரவுகளில், வேங்கடத்தை  முதலில் குறிப்பிட்ட சான்று தொல்காப்பியத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து" என்று தொடங்கும் பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்தில் உள்ளது. இதில் வேங்கடம், மலையை மட்டும் குறித்ததா என உறுதி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு வடஎல்லையில் இன்றுள்ள வேங்கடமலை ஆயின், அது வடகிழக்கில் மீச்சிறிய இடங்குறித்ததாய் அமையும். தவிர, இற்றை வட எல்லையே சங்க காலத்தில், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்தில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. மாமூலனாரையும், காரவேலன் கல்வெட்டையும் படித்தால், அற்றை வட எல்லை இன்னும் வடக்கே என்றே தோன்றுகிறது. இதுவரை செய்த என்னாய்வில் அது எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. 

வட எல்லை வடகிழக்கிலுள்ள மீச்சிறு எல்லையைக் குறிக்காது கிழக்கிருந்து மேற்கு வரை ஓர் அகண்ட பட்டையைக் குறித்தால் வட எல்லை என்பதில் நல்ல பொருளுண்டு. தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூ.) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லார். ஆனால் 14 ஆம் நூ. நச்சினார்க்கினியரோ நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலையாக வேங்கட மலையைக் கூறுவார். 19, 20 ஆம் ஆண்டு உரையாசிரியரும், தமிழாசிரியரும் நச்சினார்க்கினியர் அளவிற்கு இளம்பூரணரை ஓதாக் காரணத்தால் நெடியோன், திருமாலாய் மட்டுமே எண்ணப்படுகிறான். 

திருமாலை மட்டுமின்றி, சிவன், அனுமன், ஏன் சாத்தார நெட்டையன்,  உருவகத்தால் நெடிதுயர்ந்த குன்று-மலை என ‘நெடியோன்’ குறிக்கலாம். சிவனை மதுரைக் காஞ்சி , “மழுவாள் நெடியோன்” என்று சொல்லும். அவனை மாதேவன், பெருந்தேவன் என்பது கூட அவனின் நெடுமையாலும், , பெருமையாலும் ஆகலாம். 

வேங்கடம் என்பதைச், சங்கப் பாடல்களில் 14 இடங்களில் (அகம் 27, 61, 83, 141, 209, 211, 213, 265, 393, புறம் 381, 385, 389, 391) காணலாம். உரையாசிரியர்களின் கூற்றுகளைத் தவிர்த்து, பொருள்களை ஓர்ந்து பார்த்தால், இற்றைத்  திருமலை மட்டுமின்றி, வேறொரு  மலைத் தொடரையும், அதை ஒட்டிய பகுதிகளையும் குறித்திருக்கலாம். 

அதாவது வேங்கடம் என்பது மலை, தொடர், அதைச்சுற்றிய பகுதிகள் என விரிந்தே பொருள்கொள்ள வேண்டும். அப்பகுதிகள் எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அடுத்த கேள்வி. இற்றை வேங்கடப் பகுதிகள் சங்க காலத்தில் (கி.மு. 600 - கி.பி. 300) நமக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய், திரையனுக்குக் கீழும் (இவன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன்னோனாய் இருக்கலாம்), மாவண் புல்லி என்ற குறுநில அரசனுக்குக் கீழாயும், ஆதனுங்கனுக்குக் கீழாயும் (இவன் மோரிய அரசன் பிந்துசாரனின் படையெடுப்புக் காலத்தில் இருந்துள்ளான். இவன் பற்றிய செய்தி அறதப் பழைய காலம்.) இருந்ததாக அடையாளப் படுகின்றன. இக் குறுநில மன்னரின் தொடர்ச்சிவரிசை நமக்குக் கிட்டவில்லை. எனினும், இப் பகுதிகள் தமிழ்பேசும் பகுதிகளாய் இருந்தன என்றே அறிகிறோம்.

இந்தப் 14 பாடல்களிலும், ஓரிடத்தில் கூட, வேங்கடத்தின் திருமால், திருமால் கோயில் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப் படாதது வியப்பையே அளிக்கிறது. "பரங்குன்றைக் குறிக்கும் போதெல்லாம், விட்டு விடாது, முருகனைச் சேர்த்துக் குறிக்கும் சங்கப் பாடல்கள், வேங்கடத்தைச் சொல்லும் போது மட்டும், கூடவே திருமால், திருமால் கோயிலைக் குறிக்காது போனது ஏன்?" - என்பது நமக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. இத்தனைக்கும் வேறு பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேயமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும். அதோடு வேங்கடம் என்ற சொல், வெறும் மலையை மட்டும் அல்லாது, வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.

(இயற்பொருளின் படி, வேகும் கடம் என்பது, வெய்யிலால் சுட்டெரிக்கும் இடம் என்பது, வேங்கடம் என்றாகும்; கடம் என்பதற்கு பாவம் என்ற பொருள் கூறி சமய உணர்வில் விளக்கப் பார்ப்பது வேண்டாத வேலை. எல்லாவற்றிற்கும் சமயத் திருகையே - twist - விளக்கமாய் அளித்துக் கொண்டிருந்தால் வரலாறு என்பது சரியாய் விளங்காமல் போகும். பாவம் - புண்ணியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் மெய்யியல் வழியாக வந்தவை. மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. 2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.)

தென்னிந்தியாவிலேயே கோடைகாலத்தில் மிகுந்து வேகும் பகுதி ஆந்திரத்தில் இருக்கும் இராயலசீமைப் பகுதியே ஆகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சங்க இலக்கியத்தில் பாலையாகக் குறிப்பிடப்படும் வேங்கடப் பகுதி, ஒரு பெரிய நிலப்பரப்பாய், குறிப்பாகக் கண்ண பெண்ணை (கிருட்டிணா) ஆற்றில் இருந்து வட பெண்ணை ஆறு வரைக்கும் இருக்கும் இந்தக் கால இராயல சீமைப் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பார்கள். இது மொழிபெயர் தேயம். தமிழும் வடுகும் ஒன்றிற்கொன்று ஊடுறுவிய பகுதி.

தவிரப் பொருள்வயின் பிரிவது என்பதை "வணிகம் கருதியே பிரிந்திருக்க வேண்டும்" என்று கொண்டால், அந்த வணிகம் நிலம்வழி நடந்தது என்றால், அது வடக்கு நோக்கி இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அந்த வணிகத்தில் வடவெல்லை மகதமாகவே கி.மு.600-400 களில் அமைந்திருக்கலாம். மகதத்திற்கும், தமிழ்கூறு உலகத்திற்கும், பிந்துசாரன் (= மோரிய அரசன் அசோகனின் தந்தை) காலம் தவிர்த்து, நந்தர், மோரியர் என்று வரும் காலங்களில் கனிவான உறவு குறைபடாமலே இருந்திருக்கிறது. தவிர, அந்தக் கால மொழிபெயர் தேயமாய் தமிழகத்திற்கு அடுத்தாற்போல இருந்தவை, வட மேற்கே இருந்த நூற்றுவ கன்னரின் (= சாதவ கன்னரின்) அரசும், வடகிழக்கே இருந்த கலிங்க அரசுமே ஆகும்.

நூற்றுவர் கன்னரை தோழமை கொண்ட தமிழரசர் என்றே சிலம்பு பேசுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் கல்வெட்டும், தமிழ் மூவேந்தரின் நீண்ட காலக் கூட்டணியைப் பகைமை இல்லாமலேயே குறிக்கிறது. எனவே நூற்றுவர் கன்னர் அரசின் வழியாகவும், கலிங்க அரசின் வழியாகவும் மகதம் வரை செல்லும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். குடிலரின் (=கௌடில்யரின்) பொருள்நூல் (=அர்த்த சாத்திரம்) தெரிவிக்கும் ஒரு சில வணிகப் பண்டங்கள் தெற்கிருந்து போனவையாகவே தெரிகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் கிடைக்கும் நந்தரின் அரசுச் செய்திகளும் மகதத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு மேம்பட்டே இருந்திருப்பதை உறுதிப் படுத்துகின்றன.

பழந் தமிழகத்தில் இருந்து (இது இன்றையத் தமிழகமும், கேரளமும், தென்கன்னடமும் சேர்ந்த ஒருபகுதி.) வடக்கே போக இரண்டு வழிகள் தான் உண்டு. ஒருவழியில், எருமைநாட்டைக் கடந்து (= மைசூர் நாடு; அதுவும் அன்று முழுமையாய்த் தமிழ் பேசி இருந்த நிலம் தான். இன்றையத் தென்கன்னட நாடு முழுமையும் அன்றைக்குத் தமிழ் பேசும் நிலமாய்த் தான் இருந்தது. இதைக் கல்வெட்டுக்களும், கன்னட மொழி வளர்ந்த நிலையும், கன்னட இலக்கியங்கள் பிறந்த வரலாறும் தெளிவாகவே உணர வைக்கின்றன.) சமண வெள்ளைக்குளம் (=ஸ்ரவண பெலகுளா) வழியாக இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் இருக்கும் நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகரான படித்தானம் போய் அங்கிருந்து மகத அரசின் தக்கணப் பாதையைப் பிடிக்க வேண்டும். (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்; நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை இருக்கிறது. படித்தானத்திற்குச் சற்று அருகில் தான் எல்லோரா மற்றும் அசந்தா மலைக் குகைகளும் இருக்கின்றன.)

மகத அரசின் தக்கணப் பாதை கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானத்தில் தொடங்கி, அசந்தா, எல்லோரா வழியாக, வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசருக்கு வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, அப்புறம் உஞ்சைக்குப் (உச்செயினி) போய், மேலே பில்சா வந்து, பின்னால் நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பிக்கு வந்து, அதற்கு அப்புறம் அயோத்தி என்ற சாகேதத்தில் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேரும். (சாவத்தி என்பது கோசலத்தின் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள். இராமாயணக் கதையில் வரும் கோசலம் இராமனின் தாய் பிறந்த நாடு. மகத அரசின் பேர்பெற்ற முதலரசன் பிம்பிசாரன்; அவனுடைய மைத்துனன் ஒரு கோசலத்து மன்னன் தான். மகத்திற்கும் கோசலத்திற்கும் இருந்த உறவு 18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுச் சீமைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே இருந்த மாமன் - மச்சான் உறவு போன்றுதான்; ஒருசமயம் இழைந்து கொள்ளுவார்கள்; மறுசமயம் அடித்துக் கொள்ளுவார்கள்.)

தெற்கிருந்து வடக்கே போவதற்கு இன்னொரு வழி, வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்த வேங்கடப் பகுதியைக் கடந்து அமராவதி வந்து (புத்த நெறியின் தென்பகுதித் தலைமைப் பீடம் போன்றது.) அங்கிருந்து கலிங்கம் வழியாக மகதத்துள் வந்து சேருவது. அமராவதியில் இருந்து படித்தானத்திற்குக் குறுக்கில் ஒரு கிடைப் பாதையும் உண்டு.

பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுகிறவர்கள் இந்தப் பாதைகள் போன போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஒழுங்காக இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

சங்க கால வேந்தர்களும், பின்னால் பேரரசுச் சோழர்களும் கொங்கு நாட்டையும் (>கங்க நாடு), அதிகன் நாட்டையும் (அசோகனின் கல்வெட்டில் குறிக்கப் படும் சத்திய புத்த நாடு) கைக்குள் வைத்துக் கொள்ளாத பொழுது, இந்த வேந்தர்கள் நாட்டு வணிகர்கள், இரண்டாவது வழியான வேங்கடப் பகுதி வழியாகக் கலிங்கம் போய்த்தான் மகதம் செல்ல நேரிடும். நாட்டில் செல்வம் கொழிக்க விரும்பிய தமிழக அரசருக்கு மாராட்டியம், கலிங்கம் ஆகிய இரண்டில் யாரோ ஒருவர் இவர்கள் பக்கம் சார்ந்து இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது.

முன்பு சொன்னது போல், வேங்கடப் பகுதியின் வடக்கு என்பது இன்றையத் தெற்கு ஆந்திரத்தையே, அதாவது வடுகு மொழி பெரிதும் பேசும் தேயத்தையே குறிப்பதாகத் தோற்றுகிறது. அந்தக் கால வடுகு என்பது நமக்கு வடக்கில் உள்ள மொழி என்றே புரிந்து கொள்ளப் பட்டது; அதே பொழுது, பாகத மொழி பேசிய நூற்றுவர் கன்னருக்கு அது தெனுகு (தெற்கு) மொழியாய் ஆனது. தெனுகு (=தெலுகு; தெனுங்கு; தெலுங்கு) பேசும் இடத்திலும் தமிழ் மொழி அங்கங்கே ஊடாகப் விரவி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நூற்றுவர் கன்னர்கள் தங்கள் காசுகளின் ஒருபக்கம் தமிழிலும் பொறித்திருக்க மாட்டார்கள் அல்லவா? வேங்கடம் என்பது தமிழ் கூறும் உலகிற்கு எல்லையாக இருக்குமானால், அந்தப் பெயரையே வைத்து எல்லை ஒட்டிய பகுதிகளையும் குறிப்பது மாந்தருக்கு இருக்கும் வழக்கம் தான். இது எப்படியென்றால், இன்றைக்கும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவமாடு என்று குறிப்பதைப் போல என்று கொள்ள வேண்டும்.

[தமிழ்நாட்டின் வடபகுதி மண்டலங்களாய் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டைப் பழங்காலத்தில் குறிப்பார்கள். பழைய ஆர்கா நாடு>அருகா நாடு (>அருவா நாடு) தான் இன்றைய வட ஆர்க்காடும், தென் ஆர்க்காடும் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். ஆர்கா நாடு>ஆர்க்காடு என்று ஆனது. அருவா வடதலை என்பது இன்றைய ஆந்திர மாநிலம் சேர்ந்த சித்தூர், நெல்லூர் மாவட்டங்களாகும். (அவை இரண்டும் பெரும்பான்மையர் தமிழ் பேசிய இடங்களாய்த் தான் 1956/57 வரை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த மாவட்டங்களையும், இது போல கன்னடமாநிலத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் நாம் இழந்த பகுதிகளும் உண்டு. இப்படிப் பெரிதும் ஏமாளிகளாய் இருந்தாலும், தமிழர் ஏதோ இந்திய இறையாண்மையில் ஒன்று படாதவர்கள் போலவே சித்தரிக்கும் கூத்தும் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.)

அருவா நாடு, அருவா வடதலை நாடு ஆகிய இரண்டுமே தெலுங்கருக்கு அண்மையில் இருந்த காரணத்தால், அருவாளர் என்ற சொல் (அருவம் ஆடு>அரவம் ஆடு = அரவமாடு; ஆடும் ஆளும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் தான். ஒன்று தெலுங்கிலும், இன்னொன்று தமிழிலும் பரவலாகிப் போனது.) மொத்தத் தமிழரையும் குறிப்பிடும் சொல்லாய் ஆனது. இதே போல தென்கேரளத்தில் பாண்டி என்ற சொல் மொத்தத் தமிழரையும் குறிக்கும் சொல்லாக அமையும்; திகிளர் என்ற சொல் கன்னடத்தில் மொத்தத் தமிழரையும் குறிப்பதாக அமையும். பொதுவாக எல்லைப் புறத்துச் சொல், மொத்தப் பரப்பாளரையும் குறிப்பதாக அமைவது குமுகவியல், மாந்தவியலில் இயற்கையே.]

அப்பொழுது வேங்கடம் என்பது பகுதிதானா. மலை இல்லையா என்றால், இரண்டும் தான் என்றே விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.