Sunday, March 29, 2020

appeal

பலநேரம் நாம் தொடர்புச்சொற்களை ஒருங்கே காணாது பாத்தி பாத்தியான அணுகுமுறையிற் சொல்லாக்கி விடுகிறோம். இது தவறான நடைமுறையே.  முன்னொட்டு/பின்னொட்டுப் பிணைக்கும் சொல் அமைப்பில் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். முன்னொட்டு, பின்னொட்டுப் புரிந்து சொற்களைப் படைப்பதில் இற்றைத் தமிழ் நடைமுறையில் பலருக்கும் பெருத்த குழப்பம் இருக்கிறது.

இந்தையிரோப்பியக் குடும்பில் முன்னொட்டு என்பது பெரிதும் இயற்கை யானது. பல்வேறு முன்னொட்டுக்களை விதம் விதமாய் ஒட்டிப் பொருள் வேறுபாட்டை எளிதிற் கொணர்ந்து விடுவர். dispel, expel, impel, propel, repel என்பவை அப்படி உருவானவை தான். appeal (v.) என்பதும் இப்படி எழுந்தது தான், ஆனால், சற்று ஒலிப்பு மாற்றம் நடந்துள்ளது.

appeal (v.)
early 14c., originally in legal sense of "to call" to a higher judge or court, from Anglo-French apeler "to call upon, accuse," Old French apeler "make an appeal" (11c., Modern French appeler), from Latin appellare "to accost, address, appeal to, summon, name," iterative of appellere "to prepare," from ad "to" (see ad-) + pellere "to beat, push, drive" (from PIE root *pel- (5) "to thrust, strike, drive").

appeal (v.) ஓடு சேர்ந்து இன்னும் இரு சொற்கள் அதே பொழுது ஒலிப்பு மாறாது உண்டு,

appellant (n.)
"one who appeals from a lower to a higher court," 1610s, from Anglo-French, French appellant, noun use of present participle of French appeller "make an appeal" (Old French apeler), from Latin appellare "appeal to" (see appeal (v.)).,

appellate (adj.)
"pertaining to appeals," 1726, from Latin appellatus, past participle of appellare "appeal to" (see appeal (v.)).

மேலேயுள்ள எல்லாச் சொற்களுக்கும் அடிப்படை pellere எனும் இலத்தீன் வினையாகும். ஒரு குழாயின் வாயில் வெளியாகும் நீர்மத் தாரையைப் ”பீச்சி யடிக்கிறது” என்கிறோமே? நினைவில் வருகிறதா? இற்றைப் பேச்சுவழக்கிற் பீச்சலென்று திரித்தாலும், சங்க காலத்தில்  இது பிலிற்றல்>பிலித்தல்> பிலிச்சல்>பீச்சல் என்றே பலுக்கப்பட்டது. பிலிற்றின் மூலம் கொள்கல உள்ளடக்கத்தைப் புறந்தள்ளுவதை dispel என்ற சொல் காட்டுகிறது. இதைப் புறந் தள்ளு, ஒதுக்கித் தள்ளு என்று சொல்கிறோம். இடம், பொருள், ஏவல் புரிந்த இடத்தில் வெறுமே தள்ளு என்றுகூடச் சொல்கிறோம். பிலிறி யொதுக்கு என்பது சிறப்பாக இருக்கும். பிலிற்றின் (பீச்சின்) மூலம் கொள்கல உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதைத் தான் expel என்ற ஆங்கிலச் சொல் காட்டுகிறது. இதை வெளித்தள்ளு, வெளிப்பீச்சு என்கிறோம் ஆனாலும் பிலிறித் தள்ளல்/பீச்சித் தள்ளல் என்பது சிறப்பாக இருக்கும்.

விளவக் கண்டங்களை (fluid quanta) விளவத்தின் உள்ளேயே வீசியெறிந்து அலசுவதை impel என்ற சொல் காட்டுகிறது. இதை அலசு என்றே இப்பொழுது சொல்கிறோம். இங்கும் நுட்பியல் ஒழுங்கு கருதி உட்குதல்= உள்ளே வைத்தல் என்ற பொருளால் பிலிறுட்கல் என்று சொல்லலாம். விளவக் கண்டங்களைத் தாரையாக்கி விளவக்கலனிலிருந்து பிலிற்றி, அதன்மூலம் விளவக் கலனையே எதிர்த்திசையில் உந்தவைப்பதை propel என்றசொல் காட்டுகிறது. விளவப் பிலிற்றலால் ஒருபக்கம் தள்ளுஞ் செய்கையைத் தடுத்து எதிர்ப்பதை repel என்ற சொல் காட்டுகிறது. இதை எதிர்த்தள்ளு என்றே சொல்கிறோம். (வெறுமே எதிரென்றுஞ் சொல்வதுண்டு.) இங்கும் ஒழுங்கு கருதி பிலிற்றெதிர்/ பீச்செதிர் என்று சொல்லலாம். இவற்றை வரிசைப் படுத்தினால்,

dispel = பிலிற்றொதுக்கு
expel = பிலிற்றித்தள்ளு
impel = பிலிற்றியுட்கு
propel = பிலிற்றியுந்து
repel = பிலிற்றெதிர்

என்றமையும் இதே பாணியில் தான் appeal, appellant, appellate ஆகியவற்றிற்குச் சொற்கள் அமைக்கலாம்,  (appeal க்கு எல்லோரும் சொல்லும் “மேல் முறையீடு” என்பதை நான் விளக்கமாகவே கொள்வேன். அது கலைச்சொல் அல்ல. நாம் எது கலைச்சொல், எது விளக்கம் என்பதில் தடுமாறுகிறோம்.)

appel>appeal = பிலிற்றேற்று.
appellant = பிலிற்று ஏற்றாளி
appellate court = பிலிற்று ஏற்று நயமன்றம்

முடிந்தால், http://valavu.blogspot.com/2014/02/blog-post.html என்ற இடுகையைப் படியுங்கள். ஆங்கிலம் பல்வேறு துறைகளுக்குப் பொதுவாகத்தான் தன் சொற்களைப் படைத்துக் கொள்கிறது. நாம்தான் பொறியியல் (engineering), மருத்துவம் (medicine), மானகை (management), வழக்காடல் (law practice) என வெவ்வேறு துறைகளுக்குத் தனித்தனிச் சொல்தேடிப் பாத்திகட்டிக் கொள்கிறோம். சொல்லாக்கத்தில் பல்லாண்டு இயங்கிவரும் நான் இதைச் செய்யவேண்டாம் என்று நெடுநாள் சொல்லிவருகிறேன். கேட்கும் பலரும் முன்வரத் தயங்குகிறார்.

அன்புடன்,
இராம.கி.

No comments: