Wednesday, March 25, 2020

கவண்

அண்மையில் “நவீன காலத்தில் பயன்படுத்தப்படும்  படைக்கலங்களுக்கான சொற்கள் யாவை?” - என்ற கேள்விக்கு யாரோ ஒருவர் தமிழ் கோராத் தளத்தில் விடையிறுத்திருந்தார். அதில் gun என்ற சொல்லிற்குச் சுடுகலன் என்ற சொல் ஈழத்தில் பயின்றதாய்ச் சொல்லியிருந்தார். அப்பொழுது எனக்கு  சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 208 இல் வரும்”கருவிரல் ஊகும் கல்லுமிழ் கவணும்” என்ற வரி நினைவிற்கு வந்தது.  இதை விளக்க வேண்டும் எனில் விரல், கை, கயிறு, கவை, கவைக்கூடு, கவவு, கவான், கவலை, கவளம், கவுளி, கவளி. கவட்டை, கவடி,  கவரவிளக்கு, கவுரி என்பவற்றைப் பார்த்தால் கவண் என்ற சொல் புரிந்துபோகும்.

பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல்.  விரிக்கும் செய்கையிற் பிறந்தசொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து அகல்வதும், விரல்கள் தானே? விரல்கள் இன்றேல், பொருள்களைப் பற்றுவது ஏது? பிடிப்பது ஏது? கவ்வுவது ஏது? கவவுவது ஏது? கவர்வது ஏது? கவிப்பது ஏது? கட்டுவது ஏது? கள் என்னும் வேருக்குக் கூடுதல், கட்டுதல், பற்றுதல், பிடித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. கள்ளுதல் வினையிற் பிறந்தது கை என்பார்கள். ளகர-யகரத் திரிவில், கள்>கய்>கெய்>கை என்பது பிறக்கும். [கள்>கய்>கயில்>கயிர்> கயிறு என்பதும் கட்டுதற் பொருளிற் பிறந்தது தான்.] 

இன்னொரு விதமாய்ப் பார்த்தால் கள்>கள்வு>கள்வுதல்>கவ்வுதல் என்ற திரிவில் பற்றுதற் பொருள் பெறப்படும். வகர, யகர உடம்படு மெய்கள் மாறியும், ஒரே பொருள் காட்டும் சொற்கள் தமிழிற் பல. ”அவ்வை/அய்யை, கோவில்/கோயில், செய்/செவ் ஆகியவை வகர-யகரப் போலியிலும் ஒரே பொருள் காட்டுவது போல், கவ்வும் கய்>கையும் கூட ஒன்றே போற் பிறந்தவையோ என்ற ஓர்மை எழும். 

கவ்வுதலிலிருந்து பிறந்த கவை என்ற சொல்லும் கூட fork என்னும் பொருளை அழுத்தமாய் உணர்த்தும். நான்கு விரல்கள், ஒரு பெருவிரல், ஓர் உள்ளங்கை சேர்ந்தது தானே கை எனும் உறுப்பு? ஒரு மரத்தில் கிளைகளும், அவை கணுக்கிய (connected) இடத்தின் அடிக்கொம்புமாய்ச் சேர்ந்து fork - யை  உணர்த்துவது போன்றே, உள்ளங்கையின் தொடர்ச்சியாய் கணுக்கையும், பின் முழங்கையும் சேர்ந்து விரல்களோடு fork - யை உணர்த்தும் அல்லவா? கவ்வில் பிறந்த சொற்கள் மிகப்பல.

கை எனும் சொல்லைக் கவ்வுதலோடு பொருத்தினோம் அல்லவா? கையின் பெருவிரலும், மற்ற விரல்களில் ஏதேனும் ஒன்றோ, அல்லது ஒன்றிற்கு மேலோ, ஒருங்கிணைந்து, கவை (fork) போலச் செயற்றிப் பொருள்களைப் பற்றுகிறோம் தானே? கவ்வுதல், வவ்வுதல், அவ்வுதல் ஆகியவை கை, பல்/வாய் ஆகியவற்றின் மூலம் ஒரு பொருளைப் பற்றும் செயலைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள். இச்சொற்களின் நுண்ணிய வேறுபாடுகளை மறந்து, இற்றைத் தமிழில், ஒன்றுமாற்றி இன்னொன்றாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கவ்வுதற் சொல் ஆழமானது. ”சாணி”ன் சொற்பிறப்புப் புரிய வேண்டின், கவ்விற் பிறந்த மற்ற சொற்களையும் அறிந்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இவை ஒரு தொகுதி.

முதலில் வருவது கவை. கவ்வு எனும் பகுதியில் இச்சொல் பிறக்கும். மரங்களிற் தான் எத்தனை கவைகள்? இவை, கிளையென்றும் சொல்லப் பெறும். கவைத்தல் = கிளைவிடுதல், இரண்டாய்ப் பிரிதல். மாந்தரின் தோளோடு, முழுக்கை பிணையும் அக்குளில், கவை போன்ற கட்டுமானம் (மூட்டு) அமைவதால், அக்குளைக் ”கவைக்கட்டு/கவைக்கூடு” என்றும் சொல்லுவார்கள். [கவைக்கூடு, தென்பாண்டி வழக்கில் கபைக்கூடு> கம்பைக்கூடு>கம்புக்கூடு என்றும் அமையும். “கம்புக்கூட்டில் ஒரு பொக்குளிப்பான் வந்துருச்சு.”]

கவ்வுதலில் இருந்து ”கவவுதல்” பிறந்து, கைகள் ஒன்றிப் பற்றுதலையும், உடல்கள் அணைந்து முயங்குதலையும், குறிக்கும். (“காதலர்ப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்” - சிலம்பு மங்கல வாழ்த்துப் பாடல் 61 ஆம் அடி.)

கவ்>கவ்வான்>கவான் என்பது கவைந்து கிடக்கும் பக்க மலை. இச்சொல் கவை கவையாய், வளைவளையாய்ப் பிரியும் arch like foundation க்கு இணையாய்க் கட்டிடவியலில் அணைகள், பாலங்கள் கட்டுவது பற்றிச் சொல்லுவார்கள். கவான்கள் வைத்துப் பல பாலங்கள் உலகிற் கட்டப் படுகின்றன.

ஒரு பாதை இரண்டாய்ப் பிரியும் இடம் கவ்>கவல்>கவலை என்ற சொல்லாற் குறிக்கப்படும். [கவல்/கவலை என்பதும், கூடல் என்பதும் ஒரு junction தான். கூட்டுச்சாலை என்றும் சில பகுதிகளிற் சொல்கிறார். எப்படி ”அருவி”யைத் தொலைத்து ”நீர்வீழ்ச்சி”யை உருவாக்கினோமோ, அதுபோலக் கவல்/கவலை, கூடல் ஆகியவற்றைத் தொலைத்துச் சந்திப்பு என்ற சொல்லை இக்காலத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். “திருச்சி சந்திப்பு” - ஐ அறியாதார் யார்?]

ஒரு (பாதைக்) கவலையில் நிற்பவருக்கு, ”எப்பக்கம் போயின், போக விழையும் ஊர் வந்து சேரும்? அதுவா? இதுவா?” என்ற குழப்பம் ஏற்படும் மனநிலையையும் (மனக்) கவலை என்ற உருவகத்தாற் சொல்வதுண்டு. இன்று பலருக்கும் கவலை என்றால், பருப்பொருள் உருவகம் தோன்றாமல், உளவியற் கருத்தே முன்னாற் தெரிகிறது. மேலும் ககர, சகரப் போலியில் (மனக்)கவலை (மனச்)சவலை என்றும் சொல்லப் பெறும். வளைவுப் பொருள் இன்னும் நீண்டு சவளுதல் என்பது துவளுதலையும் குறிக்கும். நேரே நிற்க முடியாமல் துவண்டு போகும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்று நாட்டுப்புறத்திற் சொல்லுவார்கள்.

கவல்>கவள்>கவளம் என்ற சொல் வாயால் கவ்விக் கொள்ளும் உணவு அளவைக் குறிக்கும்.

கவள்>கவுள் என்னும் சொல் முகத்தில் மேற்தாடையும், கீழ்தாடையும் சேரும் இடத்தைக் குறிக்கும். இந்த இடத்தின் உள்ளே தான் உணவு கவ்வப் படுகிறது. இந்தக் கவுளின் மேலுள்ள தோற்பகுதி கன்னமென்றும் அழைக்கப் படுகிறது.   

நூறு வெற்றிலைகளைச் சேர்த்து, மேலும் கீழும் வாழைமட்டை வளைத்துக் கட்டியது கவளியாகும். கவளுவது, கட்டிவைப்பது என்றும் பொருள் நீளும். பொத்தகக் கவளியும் (= பொத்தகக் கட்டு) அதேபோல உருவகப் பெயர் கொள்ளும்.

மடங்கிக் குவிந்த கை போல் தோற்றம் அளிக்கும் சோழி, கவ்>கவ>கவறு என்றே சொல்லப் பட்டது. கவறு (=சோழி) குப்புற விழுந்தால் அதன் மதிப்பு ஒன்று என்றும், மல்லாக்க விழுந்தால் சுழியம் என்றும் கொண்டு, 6 சோழியோ, 12 சோழியோ போட்டு, எத்தனை சோழி குப்புற விழுந்தன என்று எண்ணிப் பார்த்து அத்தனை கட்டம் முன்நகர்வது என்று சூதாட்டங்களிற் கருதியதால் சூதாட்டம், கவறாட்டம் என்றும் சொல்லப்பட்டது. கவறு என்ற தமிழ்ச்சொல் cowry என்று உலகெங்கும் பரவியிருப்பதே, இச் சூதாட்டங்களின் தொடக்கம் நாவலந்தீவு தானோ என்று எண்ண வைக்கிறது. சோழி என்ற சொல்லும் கூடக் கவளி>சவளி>சோளி>சோழி என்று ஆனது தான். சோழி போட்டுப் பார்த்துச் சொல்லும் ”ப்ரஸ்ண ஜ்யோதிஷம்” என்னும் மலையாளச் சோதியம், சோழி போட்டுக் கணக்கிடும் பழங்கணக்கு முறைகள், எல்லாம் இந்த கவளி/கவறு கொண்டே செய்யப் படுகின்றன.   

இத போல 2 நீண்ட தாடைகளைக் பயன்படுத்தி மீனைக்கவ்வும் பறவை மீன் கொத்தி எனப்படுகிறது மீன்கவ்வும் செயல் செய்வதால் இது கவுதம் ஆகும். (= kingfisher). கவுதப்பறவையை Kingfisher Airlines காரர்  இலச்சினையாகக் காட்டினார். 

கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில் இடுப்பின் கீழ் இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்று சொல்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

எந்நேரமும் கூடும் ஒரு கவட்டைப் போலவே அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியில் இருந்து பாடிக் கொண்டே ஏறிவருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப்போடும் ஆட்டத்தைக் கவடி என்று சொல்கிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்றசொல் விடாது சொல்லப்படும். கவடி>கபடியாகி இன்று இந்தியத் துணைக்கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

கவடி/கவட்டையைத் தோளில் தூக்கிச் செல்வது காவடி. இரண்டு பக்கம் மூங்கிற்பட்டையைக் கவைத்துச் சுமை தூக்குவது காவுதல் என்று சொல்லப் பட்டது. இது போன்ற கவையால் பண்டங்களைக் காவிக் கொண்டு போனதால், பெரும் வணிகனுக்குக் காவிதி என்ற பட்டமும் வழங்கப் பட்டது.

கவடிக் கிடக்கும் கிளிஞ்சல்/சிப்பிக்குள் முத்து இருப்பதால், கவடம்>கவாடம் என்பது முத்தையும் குறிப்பதாயிற்று. கவாடபுரம் என்பது பழம்பாண்டியர் தலைநகர் முத்துக் குளிக்கும் இடத்தைக் குறித்திருக்க வேண்டும். இன்றையக் கொற்கைக்கும், காயலுக்கும் கிழக்கே கடலுள் அமிழ்ந்த இந்நகரைக் கடலாய்வுதான் அடையாளம் காட்ட வேண்டும். 

ஓர் அடிமரத்தில் இருந்து கவைகளாய்க் கிளைபிரிந்து விளக்குகளைக் கொண்ட அமைப்பு, கவர விளக்கு எனப்பட்டது. கவர விளக்கு நிலத்தில் நிலைக்கலாம், விதானத்திலும் தொங்கலாம். சர விளக்கும், கவர விளக்கும் வெவ்வேறு வகையானவை. [chandelier என்பதற்குச் சரவிளக்கு என்று மட்டுமே சொல்லுகிறோம். ஓரோ வழி கவர விளக்கு என்றும் சொல்லலாம்.] 

கவ்வுதலில் இருந்து கவர்தல் என்னும் வினைச்சொல் பற்றிக் கொள்ளுதலைக் குறிக்கும். கவர்ந்து கொண்ட பொருள் பற்றிக் கொண்டதும், பின் மறைந்துக் கொண்டதும் ஆகும். இதே வளர்ச்சியில் முடுதல் பொருளில் கவிதல் என்ற வினைச்சொல் கிளைக்கும்.

கவர்தல் வினையில் இருந்து கவரி என்பது மூடும் பொருளைக் குறிக்கும். இமைய மலையில் இருக்கும் ஒருவிதமான யாக் எருமை உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்றே சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா எனப்பட்டது, மா (=விலங்கு) என்பது மான் என்றும் பழங்காலத்திற் சொல்லப்பட்டது. கவரிமான் எனில் ஏதோ ஒரு வகை மான் (deer) என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் கவரிமான் என்பது ஒருவகை யாக் எருமை. [மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - குறள் 969.] 

கவள்>கவண் என்று திரிந்து, வேறொரு சொல்லும் உருவாகும். சிறு கவட்டையில் உரப்பர் பட்டையைக் (rubber band) கட்டி, அதிற் சிறு கல்லை வைத்துப் பட்டையை இழுத்துத் தெறிக்க வைத்து, ஒரு விலங்கையோ, கனியையோ, விழுத்தாட்டுகிறோம் அல்லவா? அக்காலத்தில் உரப்பர் பட்டைக்கு மாறாய், வேறொரு நெகிழ் நார் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ”கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்” என்று அகநானூறு 292 பேசுகிறது. இந்தக் கவண் எனும் கருவி எப்படிச் செயற்படுகிறதோ, அதேமுறையில் தான் இன்றைய gun-உம் வேலை செய்கிறது. நான் கவண் என்ற சொல்லையே gun க்கு இணையாய்த் தமிழிற் பரிந்துரைத்தேன். துவக்கு, துப்பாக்கி என்பவற்றை வேறு கருவிகளுக்கு இணையாய்ப் பயன்படுத்தலாம். [gun, rifle, revolver இன்ன பிறவற்றை வேறுபடுத்த வேண்டாமா?]

சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 208 இல் ”கருவிரல் ஊகும் கல்லுமிழ் கவணும்” என்ற வரி வரும். அதற்குப் “பற்சக்கரம் விரல் கொண்டசைந்து கல்லையுமிழும் கவணும்” என்ரு பொருள் வரும். கரு என்ற சொல் தமிழிற் பற்சக்கரத்தையுங் குறித்திருக்கிறது.; விரல்= lever. அற்றைக் கல்லுமிழ் கவணின் மாகனியத்தை (mechanism) விளக்கும் ஒரே தமிழ் இலக்கியப் பழம் வரி இது தான். கவணின் வரையறை இதிற் புரிகிறதா? இதுவும் இற்றை gun உம் வெளியிட்டு மாகனியத்தில் (release mechnism) ஒன்றென்றே நான் சொல்வேன். பலரும் நம்பத் தான் மறுக்கிறார். இதையேற்றால், போர்த்தந்திர உத்திகளில் தமிழர் பெரிதும் உயர்ந்துவிடுகிறார். தமிழர் அப்படி உயரலாமோ? என்ன சொல்கிறீர்கள்?:-))) இந்தக் கருவியைத்தான் ”பாகுபலி” திரைப்படத்தில் ”கிறுவியல் உத்திகள்" (graphics techniques) மூலம் காண்பித்தார். பூதியல் கருவி (physical equipment) எப்படிச் செய்யப் பட்டிருக்கும்?

அன்புடன்,
இராம.கி.


1 comment:

நன்னிச் சோழன் said...
This comment has been removed by the author.