திருக்குறளைச் சில காலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த் துறை ஆட்சித் தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப் பிழைகள் உள்ளதாய்” ஒரு முடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்கும் இங்கும் உள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படி யிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இங்கு தான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்து கொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்டினார்களாம்.
தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்று பிற்பகல் ஓய்விலிருந்தார். கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தார். துபாசி விதயத்தைச் சொன்னார். கேட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப் படித்து, அதிலேயே பிழை கண்டு வெள்ளைக்காரர் ஒருவர் திருத்தஞ் சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச் சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறு வழியின்றித் திண்ணையில் அமரச் சொல்லி, “என்ன விவரம்?” எனக் கேட்டாராம். துரை தான் வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான் கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டாராம். ”அறத்துப் பாலில் நடுவு நிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்,
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
எச்சத்தால் காணப்படும்
என்று வருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளை குட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறிய முடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்ல வில்லையே? தவிர 2 ஆம் அடியில் பாருங்கள், எதுகை தட்டுகிறது. இதுபோன்ற எதுகை தட்டும் குறள் வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமா? எனவே தான் இதை மாற்றி
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
மக்களால் காணப்படும்
என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்த கணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத் தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப் பெரிய வெள்ளைத் துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள் தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்று விட்டாராம். அந்தக் கதை தான் இங்கு எனக்கு ஞாவகம் வருகிறது.
ஒருசில மெத்தப் படித்த மேதாவிகள், ”தமிழில் பல்வேறு ஒலிகளைக் கையாள முடியவில்லை. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த வேண்டும்” என்று சொல்ல முற்படுகிறார். இவர்கள் தமிழ் மொழியைத் திருத்தப் போகுமுன், தம் அடிப்படைத் தமிழறிவைக் கூட்டிக் கொள்வது நல்லது. அரைகுறை அறிவில் உளறக் கூடாது. அப்புறம், அந்த வெள்ளைத் துரையின் நிலையே வந்து சேரும்.
தமிழில் வல்லின மெய்களில் ஓரெழுத்துக்கு ஓரொலியென என்றும் அமைவதில்லை. (சங்கதம். நகரியைப் பிடித்துக் கொண்டு அப்படியே தமிழில் அமைக்க முற்பட்டால் தமிழில் 33 அடிப்படை எழுத்துகள் இராது. 51 எழுத்துக்கள் வந்து சேரும். பேசாமல் கிரந்தத்திற்கு மாற வேண்டுமென வெளிப்படையாகவே இவர்கள் சொல்லலாமே? நாங்களும் மலையாளம் விருத்தம் 2.0 என்று அதைப் புரிந்து கொள்வோம். அப்படி விழைவோர் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதிக் கொள்ளலாம். தமிழில் எழுதுவதானால் தமிழ் விதிகளைக் கடைப்பிடியுங்கள். .
கால்பந்து ஆடவேண்டுமானால் அதன் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு விதிகளை உள்ளே கொண்டுவந்து கந்தரகோளம் பண்ணக் கூடாது. மட்டைப் பந்தோ, கொக்கிப் (hockey) பந்தோ வேண்டுமெனில், அந்தந்த ஆட்டத்தில் அந்தந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மீறிக் கலந்தால் ஆட்ட நடுவர் வழுச் செய்ததாய்ச் சொல்லி விளையாடுவோரை வெளியில் தான் நிற்க வைப்பார். அதே போல பரத நாட்டியம் ஆடுமிடத்தில் குத்தாட்டம் ஆட முடியாது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையுண்டு. அதே போல ஒவ்வோர் இசைக்கும் ஒரு முறை இருக்கிறது. கலப்பிசை, கலப்பு நாட்டியம் வரக்கூடாதென நாங்கள் யாரும் சொல்லவேயில்லை. ”அதைத் தமிழெனச் சொல்லாதீர். வேறெதோ பெயரிட்டுக்கொள்ளுங்கள். உமக்குத் தோன்றிய படி நடந்துகொள்ளுங்கள். அதை யாரும் மறுக்க மாட்டார். தமிழைக் கொஞ்சம் விட்டு விடுங்கள்” என்று மட்டுமே சொல்கிறோம். தமிழில் வல்லின மெய்யெழுத்துகளுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட ஒலிகளுண்டு. அம்மெய் சொல்முதலில் வருகிறதா, சொல்லிடையில் வருகிறதா என்று பார்க்க வேண்டும். இடையில் வருவதிலும் 3 வகைகள் உண்டு.
1.சொல் தொடக்கத்திலும், சொல்லிடையில் தம்மின வல்லின மெய்களைத் தொடர்ந்து வரும்போதும், வல்லின மெய்கள் தம் இயல்பான ஒலியைப் பெறும்
2. சொல்லிடையில் ஒரு மெல்லினம் வந்து அதைத் தொடர்ந்து அதன் இனமான வல்லினம் தென்படின், குறிப்பிட்ட வல்லினம் அதிரொலி பெறும்.
3. சொல்லிடையில் ஓர் உயிர்மெய் வந்து, அதைத் தொடர்ந்து இன்னொரு வல்லின உயிர்மெய் வருமானால், இரண்டாவது உயிர்மெய் (ககரத்திற்கும், சகரத்திற்கும்) சற்று உரசியோ, (டகரம், தகரம், பகரத்திற்கு) சற்று அதிர்ந்தோ ஒலிக்கும். இவ்வகையை உயிரிடையொலிப்பு (intervocalic pronunciation) என்று சொல்வர்.
காட்டுகள்:
க 1. கடல் (Kadal), மக்கள் (MakkaL) - இயல்பொலி 2. மங்கை (Mangai) - அதிர்வொலி 3. மகள் (MahaL) - உரசொலி
ச 1. சடை (Chadai), மிச்சம் (Michcham) - இயல்பொலி 2. மஞ்சள் (ManjaL) - அதிர்வொலி 3. காசு (Kaasu) - உரசொலி
ட 1 டாடா (taada), பாட்டன் (Pattan). - இயல்பொலி 2. பண்டை (PaNdai) - அதிர்வொலி 3. பாடு (Paadu) - அதிர்வொலி
த 1. தள்ளை (ThaLLai), வித்தை (Viththai) - இயல்பொலி 2. விந்தை (Vindha)i - அதிர்வொலி 3. விதை (Vidhai). - அதிர்வொலி
ப 1.பட்டம் (Pattam), கப்பல் (Kappal) - இயல்பொலி 2. வேம்பு (Veembu) - அதிர்வொலி 3. சாயுபு (Chayubu) - அதிர்வொலி
டாடா என்றெழுதினால் தமிழ் மரபுப் படி taada என்று தான் ஒலிக்கும். டாட்டா என்றெழுதினால் தமிழ்மரபுப் படி Tata என்றொலிக்கும்.
மேலே சொல்லியது ஒலிப்பு பற்றி மட்டுமே. தமிழ்ப் பேச்சில், தமிழெழுத்தில் இன்னொரு விதியும் உள்ளது. ”மொழி முதலில் என்ன எழுத்துக்கள் வரும்?, மொழிக் கடையில் என்ன எழுத்துகள் வரும்?” என்பது பற்றியது.
அதையேற்றால் டாட்டா என்பது தமிழ்முறைப் படி தவறு. தாட்டா என்று தான் சொல்ல முடியும். அப்படிச் சொல்ல உங்களுக்கு முடியாதென்றால் டாட்டா என்று சொல்லிப் போங்கள், நாங்கள் புரிந்து கொள்வோம். அல்லது (இ)டாட்டா என்று எழுதுங்கள். அதையும் புரிந்து கொள்வோம். உகப்பு உங்கள் கையில். செய்வதைப் புரிந்து செய்யுங்கள் என்று மட்டுமே நாங்கள் சொல்கிறோம்.
நாங்கள் ஒன்றும் தமிழ்மொழிக்குப் பட்டாப் போட்டுக் கொண்டு வரவில்லை. சும்மா தொணதொண என்று கீறல் விழுந்த தட்டாய் குறைப் பாட்டை எழுத்துச் சீர்திருத்த வாதிகள் போட்டுக்கொண்டு இருக்கிறார். இவரை அறிந்து கொண்ட நாள் முதலாய் இதே பாட்டைக் கேட்டுச் சலித்துவிட்டது. ”ஒரு சிறு ஒலிப்பு விதியைக் கூடக் கற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் தமிழைத் திருத்த முற்படுவேன்” என்று முனைந்து நிற்போருக்கு நாங்கள் என்ன சொல்வது?. எங்கள் மண்டையில் நாங்களே அடித்துக் கொள்வது தவிர வேறு வழியில்லை. ஆண்டவனே! இவர்களுக்கு புத்தியைக் கொடு!
அன்புடன்,
இராம.கி..
3 comments:
அருமை. அருமை.
மிகவும் அருமை ஐயா. நன்றி.
அருமை
Post a Comment