Sunday, October 03, 2021

cargo warehouse words

முதலில் cargo (n.) 1650s, "freight loaded on a ship," from Spanish cargo "burden," from cargar "to load, impose taxes," from Late Latin carricare "to load a wagon or cart," from Latin carrus "wagon" (see car). தமிழில் சகடு, சகடை, சகடம் என்ற சொற்கள் chariot, car என்பவற்றோடு தொடர்புடையவை பார்க்க: http://valavu.blogspot.com/2013/10/blog-post.html = சகட்டில் ஏற்றப்படுவது சகடேறு = cargo. 

அடுத்தது Godown. இப்படியொரு சொல்லே ஆங்கிலத்தில் கிடையாது. ஆனாலும் சிலர் சொல்லிப் பார்க்கிறார்.  நம்மூரில் புழங்கும், ”கிடங்கு” என்ற சொல்  தென்கிழக்கு ஆசியாவில் கடந்த 100,150 ஆண்டுகளில் நெல், தேயிலை, தேங்காய் வேளாண்மையை ஒட்டி ஏற்படும் விளைவைச் சேகரித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும் படி பரவியது. இது, பேச்சுவழக்கில் கிட்டங்கி என்றும் திரிந்தது. முடிவில் யாரோ ஒருவர் இச்சொல்லை உரோமன் எழுத்தில் திரித்து, Godown என்று எழுதிக்கொண்டார். நம்மில் பலரும் அதை ஆங்கிலம் என்று எண்ணித் தமிழ்ச்சொல் கேட்கிறோம். இது இந்தியன் இங்கிலீசு. இன்னுஞ் சொன்னால் தமிங்கிலீசு. இப்படித் திருத்திச் சொல்வதற்கு மாறாய், நம்மூர் “கிடங்கையே” சொல்லிப் போகலம்.

 அடுத்தது Warehouse வறை என்பது சரக்கு. உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுள் இச்சொல் உள்ளது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு.) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலரவைத்துக் கிட்டிய பொருட்களையே (பின் கிட்டாத நாட்பயன்பாட்டிற்காக) பண்டமாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒரு சில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கும் விற்றார். இப்படி உலர் பொருட்களிற்றான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னால் இதனோடு சேர்ந்துகொண்டது. 

உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்), கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்), கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்திற் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமிலாக் கூலத்தை வேளாண்மையிற் குறிக்கிறது.), சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு), சுக்குகள் (காய்ந்த இஞ்சி), சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை), சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்), துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்) பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்), பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்), வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.) எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டின. 

இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவும் ஆயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, இற்றைத் தமிழகத்தின் வடக்கில், ஆந்திர, கன்னட மாநிலங்களில் உள்ள பாலை நிலத்தைத் தாண்டும் பழக்கம் பண்டைத்தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த் தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் தென்படும் இராயல சீமையின் தாக்கத்தை நாம் இன்னும் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப் பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத் திணையில் வணிகம் பிணைந்தது பூகோளம் விதித்த கட்டுப்பாடு.

நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள் நம்மூரில் ஏராளம்.. வறட்டி என்பது வைக்கோலும் உலர் சாணமுங் சேர்ந்த கலவை. வறுவல்- வினையையும் பெயரையும் குறிக்கும். வறல், வறழ், வறள், வறை எல்லாம் வறுத்தலிற் பிறந்த சொற்கள். ஈரமண்ணிற் செய்து உலரக் காய வைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங் கலமல்ல. சுட்ட கலம். சுடாக் கலம் என்பது விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware என்பது சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. 

’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே 

         உதிரப்புனலில் உண்டை சேர்த்து 

வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் 

         வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’ 

என்ற பாட்டில் வருகிற வறையோடு என்ற பதத்தையும் இங்கு பாருங்கள். வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்” உணர்த்தப் படுகிறது. வறைமுறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறை முறுகல் ஆகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது. வறையோடு - பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது. தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பதும் (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும். வறையோடு கூடத்தைச் சேர்த்தால் வறைக்கூடம் என்பது Warehouse க்கு அப்படியே இணையாகும். பார்க்க: http://valavu.blogspot.com/2012/11/1.html

கடைசியில் Depot (n.) 1795, "warehouse or storehouse for receiving goods for storage, sale, or transfer," from French dépôt "a deposit, place of deposit," from Old French depost "a deposit or pledge," from Latin depositum "a deposit," noun use of neuter past participle of deponere "lay aside, put down," from de "away" (see de-) + ponere "to put, place" (past participle positus; see position (n.)). 

to post = பொதி-த்தல். position = பொதியம். deposit = பொதிப்பு. depot = பொதியில் 

கடைசியில் Store room = சேகரம். விதப்பான சேகரங்கள் விதப்பான பெயரைக் கொள்ளும். 

வெவ்வேறு பண்டங்கள், குறிப்பாகச் தங்கம், நகை, முத்து என வெவ்வேறு நிதிக்குவியல்கள் வைத்திருந்த இடம் பண்டாரம் 

கூலங்கள் (தானியங்கள்) சேர்த்துவைத்த இடம் களஞ்சியம்..


No comments: