இச்சொல் ஓர் இடத்தைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல். (எல்லாவற்றையும் சங்கதம் ஆக்குவதில் நமக்கு ஏன் இவ்வளவு அவக்கரம் என்று புரியவில்லை.) சீர்காழிக்குப் பக்கத்திலுள்ள பூம்புகாருக்குச் சம்பாபதி என்ற பெயருமுண்டு. சண்பை/சம்பை/சம்பா/சம்பம் என்பது அங்குவிளையும் யானைக் கோரையைக் குறிக்கும். சீர்காழிக்கே சண்பை என்ற பெயருண்டு. சீர்காழிக்குச் சற்று முன், சென்னை செல்லும் வழியில் தக்கால் என்ற ஊரில் இன்றும் இக்கோரை விளைகிறது. சாலையின் இரு மருங்கும் கோரை/பிரம்பத்தில் செய்யும் அறைகலன்களும், பாய்களும் அமோகமாய் விலைக்குத் தரப்படும். இதுபோன்ற பொருள்கள் வாங்குவதற்குத் தைக்கால் சரியான ஊர்.
சம்பங்கோரையைச் சேர்ந்தவர்கள் சாம்பவர்/செம்பியர். சோழர் இப்பகுதியில் இப்படித் தான் அழைக்கப்பட்டார். புகார் செம்பியருக்குத் தலைநகரானது. இதுபோன்ற விளைச்சல், அக் காலத்தில் சீர்காழி, பூம்புகார் போன்ற இடங்களிலும் இருந்திருக்கும். பதி என்பது இடத்தைக் குறிக்கும் அருமையான தமிழ்ச்சொல். பதி-தல். பதி-த்தல் என்ற வினைச்சொல் இதற்கு முன்னது. சம்பங் கோரை விளையும் பதி சம்பாபதியாகும். சம்பா நெல் என்பது சம்பங்கோரை அளவிற்கு உயர்ந்து வளரும் ஒரு நெற்பயிர். சம்பாவைச் சம்பு (>ஜம்பு) மரத்தோடு (நாவல் மரத்தோடு) சேர்ப்பதை நானும் ஒரு காலம் நம்பிக்கொண்டிருந்தேன். இப்பொழுது ஆய்விற்கப்புறம் அந்நம்பிக்கை குறைந்துவிட்டது.
இதே போல் கோரை/மாறு விளையும் இன்னொரு பகுதி தென்பாண்டிநாட்டில் தண்பொருநை (தாமிரபெருநை) ஆற்றின் கரையில் உண்டு. பழைய காயல்/முக்காணி/ஆத்தூர் அருகே (அக்காலக் கொற்கையுஞ் சேர்த்து) தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் விளைந்து கிடக்கும். மாறு ஓங்கி விளைந்து கிடந்த நாடாதலால் இப்பகுதி மாறோக்கம் என்ற பெயர் கொண்டது. மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண்புலவர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மாறு விளையும் நிலத்தைச் சேர்ந்தவன் மாறன். செழிப்பாக மாறு விளைந்ததால் அவன் செழியனும் ஆனான். செழியன்/ மாறன் என்ற பெய்ர் மாறி மாறித் தந்தை மகன்களுக்கு வரும். பாண்டியரின் தோற்றம் கொற்கைக்கு அருகில் தான். கொற்கை என்பதும் கோரையில் எழுந்த சொற்பிறப்பைக் கொண்டது தான்.
இருவேறு அரச குடியினரும் கோரை நிலத்திற்றான் எழுந்திருக்கிறார்.
சம்பாபதியின் தெய்வம் சம்பாபதித் தெய்வம் எனப்படும். இன்றும் அக்கோயில் இடிந்து கிடக்கிறது. பூம்புகாருக்குப் போனீர்கள் என்றால் பல்லவனீச்சுரம் சிவன் கோயிலுக்குப் பின்புறம் சம்பாபதி கோயில் 300/400 அடிகளில் ஒரு சோலைக்கு நடுவே இருக்கும். இதற்கு அருகில் இடிந்து போன நிலையில் சதுக்க பூதங்கள் இருக்கும். பல்லவனீச்சுரம் கோயிலுக்கு எதிரே பழைய உவவனத்தின் புத்தப்பள்ளி (தொல்லியல் துறையினரால் தோண்டி யெடுக்கப்பட்ட) இடிபாடுகளுடன் காட்சியளிக்கும். இந்த தொல்லியல் அகழ்விற்கு அருகில் அடுத்ததாய், இன்று செட்டிநாட்டு நகரத்தாரின் சத்திரம் இருக்கும்.
ஒரூமுறை பூம்புகார் போய்ப் பாருங்கள். பார்க்கவேண்டிய அகழாய்வு. தமிழாராகிய நாம், எப்போதும் வெட்டிப்பெருமை பேசுவதற்கு மட்டுமே உகந்தவர் போலும். இடிந்துபோய் நிற்கும் சம்பாதி கோயிலை, சதுக்க பூதங்களைக் காப்பாற்றுவதற்கு எந்தக் கழக அரசும் (இரு பெருங் கட்சிகளும்) நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே இருந்தால், இன்னுங் கொஞ்ச நாட்களில் இருப்பவையும் அழிந்துபோகும்.
சம்பாபதித் தெய்வம் சம்பாபதி அம்மன் என்றுஞ் சொல்லப்படும். நாளாவட்டத்தில் சம்பாபதி என்ற இடப்பெயர் அம்மனையும் தனியே குறிக்கத் தொடங்கியது. சிலம்பும் மணிமேகலையும் படிப்பது வெறும் பொழுது போக்குக்கு அன்று. இருப்பதை/இருந்ததைத் தெரிந்துகொள்வதற்கு என்று கொள்ளவேண்டும். (பதி= கணவன் என்ற சொல் சங்கதம். தமிழுக்கும் அதற்கும் தொடர்பில்லை.)
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment