Wednesday, October 20, 2021

மன்னித்தல்

 2018 இல் நிரஞ்சன் பாரதி என்பார் மின் தமிழ் மடற்குழுவில் ”அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?” என்று கேட்டிருந்தார்.  பின் அது தமிழமன்றம் மடற்குழுவிற்கும் வந்தது  தமிழ்மன்றத்தில் திரு நாக. இளங்கோவன் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

--------------------------------

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் உலவுகின்றது. மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது. மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.

“மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்

கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்……”

(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் – 88)

மன்றியுந் நின்ற மதிலர் என்றால் “போய்த்தொலை என்று கண்டித்து விடப் பட்ட மதிலர் போகாமல் நின்றார்” என்று பொருள். அப்படிப் போய்த் தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்” …. என்பது இங்கு பொருளாகும். அதே போல,

“கன்றித்தன் கண்சிவந்து கயிலைநன் மலையை யோடி

வென்றித்தன் கைத்தலத்தா லெடுத்தலும் வெருவ மங்கை

நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;

மன்றித்தான் ஊன்றினானேல் மறித்துநோக் கில்லை யன்றே”

(திருமுறை-4, கயிலாயம் – 47 – 5)

இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச, சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறிக் கதறுகிறான். அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதி யிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.

அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். “கடிது ஓச்சி, மெல்ல எறிக” என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது. மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல். 10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும்

மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர். 5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.

மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.

வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம். என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு,

என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.

ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே. மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.

பதிவு: நாக.இளங்கோவன்

-----------------------------

பின் நான் கொடுத்த முன்னிகை இது:

நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் சிறப்பு. 

மன்றித்தலை இன்னொரு விதமாயும் காணமுடியும். மன்று என்பது அரசன், தலைவன், நயதியர் (>நீதி) போன்றோருக்குமுன் வழக்கிற்காகக் கூடும் அவை. அறங்கூறவையில் குற்றங்குறித்துத் தீர்ப்புச்சொல்லுவதால். மன்றுதல் என்பதற்குத் தண்டனை தருதல் என்ற பொருளும் ஏற்பட்டது.  (எல்லா அகராதிகளிலும் இது இருக்கும்.) 

அடுத்து இல்லுதல் என்பது இல்லாதுபோகும் தன்வினை. இதை இன்றுதல் என்றுஞ் சொல்வோம். இற்றுதல் என்பது இல்லாது போகவைக்கும் பிறவினை.  ”இற்றுப்போனது” எனில் ”முடிந்துபோனது” என்று பொருள். இற்றுதல் என்பது இத்துதல் என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும். “என்னவாச்சு? அந்தக் கம்பி இத்துப்போச்சா?” எனில் அரிப்பாலோ (erosion), கரிப்பாலோ (corrosion) துருப் பிடித்துக் கம்பி இல்லாதுபோனது என்று பொருள்.

மன்று இற்றல்> மன்று இத்தல் என்பது மன்றித்தலாகும். மன்று இல்லாதுபோகச் செய்தலே மன்றித்தல். நயதி மன்றிற்குள் ஒரு வழக்கு வாராது அதற்கு வெளியே, இருதரப்பாரும் பேசி முடிவுசெய்து கொள்ளுவது மன்றித்தலாகும். ”நான் உன்னை மன்னித்தேன்” எனில் ”உன்னை அறமன்றிற்கு இழுக்காது விடுத்தேன்” என்பது பொருள். “மன்றித்தல்” என்பது “மன்னித்தல்” என்று பேச்சுவழக்கில் ஆகியுள்ளது. இற்றை மலையாளத்திலும் இந்தத் திரிவு உண்டு.

பொருளையும், வெவ்வேறு பயன்பாடுகளையும், சொற்றொகுதியையுங் காணாது, வெறூம் ஒலியொற்றுமையை வேறோரு மொழியில் கண்டு, அது போல் தமிழிருந்தால், தமிழ் பிந்தையது என்று சிலர் சொல்லிவிடுகிறார். இவ்வளவு அவக்கரப்பட வேண்டாம். பொறுமையோடு சற்று தேடிப் பார்க்கலாம்.


No comments: