Monday, October 11, 2021

TOMS, DICKS and HARRYS in regard to Archaeology

Every TOM, DICK and HARRY should not question Newtons and Einteins.

புவியைச் சுற்றிக் காற்று மண்டலம் இருக்கிறது. இக் காற்றுமண்டலத்தில் காற்று வீசிக்கொண்டே யிருக்கிறது. சூறாவளிகள் ஏற்படுகின்றன. காற்றில் தூசி பரவிக்கொண்டேயிருக்கிறது. ஓரிடத்தில் தூசி எழும்புவதும், இன்னோர் இடத்தில் படிவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. எந்தெந்த இடங்களில் மாந்தவாழ்வு நடைபெறுகிறதோ அங்குள்ள மாந்தர் அங்குசேர்ந்த தூசியைக் கூட்டிக் கூட்டி மெழுகித் தொடர்ந்து மட்டப்படுத்திக் கொண்டே இருக்கிறார்
எங்கெலாம் இதுபோன்ற மாந்த நடவடிக்கை நின்றுபோனதோ, அங்கெலாம் இந்தத் தூசியானது மேடிடும். குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் காற்றின் வேகத்திற்குத் தக்கத் தூசுபடியும் வேகம் அமையும் ஒவ்வொரு பத்தாண்டிலும் மேடு சிச்சிறிதாய் உயரும். நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகளில் இங்குச் சிறப்பான மாந்த நடவடிக்கை (காட்டாகக் கட்டிடக் கட்டுமானம், 2/3 அடிக்கு மேல் தோண்டாத வேளாண் நடவடிக்கை போன்றவை) இல்லாவிட்டால் இயற்கை வேகத்திலேயே மேடு கொஞ்சங் கொஞ்சமாய் உயரும்.
தொல்லாய்வினர் இதுபோன்ற ஆற்றங் கரைகளுக்குப் பக்கத்தில் உள்ள (மாந்த நடவடிக்கைக்குப் பெரிதும் உட்படாத) தனித்துத் தெரியும் மேடுகளையே தம் ஆய்வு செய்வதற்குத் தேடுகின்றார். அங்கேயே பெரும்பாலும் தோண்டத் தொடங்குகிறார். கீழடி போன்ற இடங்கள் அப்படி அமைந்தவையே. அவை ஒரு சிலர் எண்ணுவது போல் ஏதோ பெரும் ஆழிப் பேரலையால் அமைந்தவையல்ல. இயல்பான மண்மேடு ஆக்கத்தில் எழுந்தவை. இங்கு அமையும் மண்ணடுக்குகளில் ஒரு மட்டத்தில் கிடைக்கும் பொருள்கள் அந்தந்த இடைக்காலங்களில் எழுந்தவையே என்பதற்கு இந்த இயற்கை நடைமுறையே தான் காரணம்.
குறிப்பாக கிமு.600களிலிருந்து கி.பி. 150 கள் வரை அவ்விடம் தொடர்ந்து செயற்பட்டு இருந்திருக்கலாம். பின் மாந்த நடவடிக்கை குறைந்து போயிருக்கலாம். 400/500 ஆண்டுகளுக்கு அங்கு வெறுமே மண் மூடி யிருக்கலாம். (மதிரை இடம் மாறியிருக்கிறது.) மீண்டும் கி.பி.500 களில் அங்கு மாந்த இருப்புத் தொடங்கியிருக்கலாம். மீண்டுஞ் சிற்சில நூறாண்டுகளில் தடைப்படலாம். இப்படி அங்கு விட்டுவிட்டு, காலத்தால் அடுத்தடுத்து, மாந்த இருப்பும் விலகலும் இருந்திருக்கலாம். எப்படி இது அமைந்தது என்பதைப் பொறுத்துத் தொடர்ச்சியும், காலக் கலப்பும் சில இடங்களில் நடக்கலாம். இதையெல்லாம் மண்ணடுக்கு அமைப்புகளைக் கொண்டே தொல்லியலார் புரிந்துகொள்கிறார்.
இந்த அடிப்படையைப் புரிதுகொள்ளாது அல்லது வெளிப்படப் பொதுவில் சொல்ல மறுத்து பி.ஏ. கிருட்டிணன் போன்றோர், கரிமங் கண்டெடுத்த மண் அடுக்கிற்கும் எழுந்துப் பொறித்த பானைகளுக்கும் கணுக்கம் (connection) இல்லையென்று சொல்ல முற்படுவது ஒரு முழுப்பூசனியை பானைச் சோற்றில் மறைப்பதை ஒக்கும். தவிர ”குறிப்பிட்ட கி.மு. 3 ஆம் - 6 ஆம் நூற்றாண்டு மண்ணடுக்கில் கண்டுபிடிக்கப் பட்டதை கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று தானே சொல்லவேண்டும்?” என்றும் திரு. பி.ஏ. கிருட்டிணன் அடம் பிடிக்கிறார்.
இதற்கும் விடையுள்ளது. ”இந்தக் குறிப்பிட்ட மண்ணடுக்கு 0.5 மீட்டர் ஆழம் இருக்கிறது” என்று வையுங்கள். இம் மண்ணடுக்கின் அடியாழத்தில் காண்பவற்றைக் கி.மு.6 ஆம் நூற்றாண்டில் சேர்ப்பீர்களா? 3 ஆம் நூற்றாண்டிற் சேர்ப்பீர்களா? கற்றுத்தேர்ந்த தொல்லியலாருக்கு இதுகூடவா தெரியாது? திரு, பி.ஏ. கிருஷ்ணன் சொல்வது கொல்லன் கடையில் கோணியூசி விற்கப்போன கதையாகிறது. நான் ஒரு வேதிப்பொறிஞன். என்னிடம் வந்து ”உனக்கு வேதிப் பொறியியலே தெரியாது. நான் ஒரு தாளிகையாளன். வேதிப் பொறியியல் பற்றி நான் உனக்குச் சொல்லித் தருவதை நீ கேட்டுக் கொள்” எனும் கதை போலும் இருக்கிறது திரு. பி.ஏ. கிருஷ்ணனின் கூற்று.
அளவுக்கு மீறி தம் நுண்மாண் புத்தியைக் கற்றுக் குட்டிகள் நுழைக்காது இருப்பது நல்லது. ஓர் அளவிற்கு மேல், Every TOM, DICK and HARRY should not question Newtons and Einteins. Of course, all have their own inquisitive characters. But overcoming our inquisitiveness, we need to understand our limitations. After all, we are just TOMS, DICKS and HARRYS in regard to Archaeology.
அன்புடன்,
இராம.கி,

6

No comments: