இதுபற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவில் எழுந்தது. ”அகர இகரம் ஐகாரm ஆகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்க காலத்தில் ஐக்கொரு தனி வடிவம் இருந்திருக்கும்” என்றும், ”நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்கு மாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப் பட்டன. இச் சிக்கலுக்கு முடிவுகாண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப் பாராது தமிழின் உயிர், மெய் எழுத்து வடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் காண்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங் கூடச் சேர்த்துப் பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.)
[அதேபோது தொடர்புள்ள இன்னொரு புலம்பலை இங்கு சொல்லவேண்டும். உயிர்மெய்க் கீற்றுக்கள் எல்லாமே எழுத்துவடிவத் தொடக்கத்தில் மேலும், கீழும், பக்கவாட்டின் இருபுறமும் இழுக்கப்பட்ட கிடைக்கோடுகளின் மாற்று வடிவங்களேயாகும். ”எவ்விடத்தில் இடுகிறோம்?” என்பதைத் தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச் சிறுத்த, பொருட் படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க் கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும் விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கம் எது? எவற்றைக் குறிக்கின்றன? - என்றுகூட யாரும் எங்கும் பதியவில்லை. ஆயினும் எழுதுந்தேவை கருதி அக்காலத் திண்ணைப்பள்ளிகளில் ”உயிர்மெய்க் குறியீடுகள்” என்றே பெயரிட்டுச் சொல்லிக் கொடுத்தார். 65 ஆண்டுகளுக்கு முன் இளமையில் அப்படிக் கற்ற பட்டறிவு எனக்குண்டு.
இக்கால ஒருங்குறி ஆவணங்களில் இவற்றை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்று பிழையாய்க் குறிப்பர். ”கால்” என்பதே ஆகார உயிர்க் குறியீடெனில் ஆகார உயிரின் கீழ்மாட்டில் வருஞ் சுழி பின் என்ன குறியீடாம்? அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ள வில்லையே? மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேம் என்று அடம்பிடித்தால் எப்படி? தமிழிலக்கண வழிகாட்டல்களை மறுத்து ”தமிழெழுத்து வரிசையை அபுகிடா” என்று தப்புந் தவறுமாய் வரையறுத்த ஒருங்குறி ஆவணத்தைப் பின்பற்றி இற்றைத் தமிழாய்வாளர் பிழைச் சொற்களைக் கையாள்வது கொஞ்சங் கொஞ்சமாய் நம் மரபைப் போக்கடிக்கும். (ஒருங்குறிக்கு வால்பிடிப்போர் தூண்டுதலால் பலவிடங்களில் vowelized consonant markers என்பதற்கு மாறாய் vowel markers எனக் கேட்கையில் எமக்கு வருத்தமே எஞ்சுகிறது. வணிக வல்லாளுமை கொண்ட ஒருங்குறியின் போதாமையைப் பேசத் தொடங்கினால் மாளாது வேறு வழியின்றி இதைப் பொறுத்துக்கொண்டு எல்லோரும் ஆளவேண்டியுள்ளது.]
இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். படவெழுத்துக்களில் தொடங்கி, குத்துக்கோடுகள், கிடைக்கோடுகள், வளைவுகளாலான எழுத்துகளை உருவாக்கி மாறியபோது கல், மரம், ஓடு, மாழை போன்றவற்றிற் கீறியே தமிழர் எழுதினர். (சொற்பிறப்பியலின் படியும் இழுத்தது எழுத்து ஆயிற்று என்பார் பாவாணர். நம் ”எழுத்தும்” மேலையிரோப்பிய ”letter” உம் பொருளிணை காட்டுவதைச் சொன்னால் இராம.கி.க்கு எப்பொழுதுமே பொல்லாப்பு.) மரத்தில் எழுதியது பின் பட்டையில், ஓலையில் எழுதுவதற்கும் விரிந்தது. கல், மரம், ஓடு, மாழை போன்ற எழுது பொருட்களில் எழுதுவதற்கும், நெகிழும் ஓலையில் எழுதுவதற்கும் நுணுகிய வேறுபாடுள்ளது. ஓலையின் நீட்டுவாக்கில் நார்களுள்ளதால், எழுத்தின் கிடைக்கோடுகள் ஓலையைக் கிழித்துவிட வாய்ப்புகளுண்டு. இதைத் தவிர்க்கும் முகத்தான், ஓலைப் பயன்பாடு கூடக்கூட, எழுத்துக்களின் கிடைக்கோட்டு நீளங் குறைந்து, குத்துக்கோடுகள் வளைந்து எல்லா எழுத்துக்களும் வளைவுகளும் வட்டங்களும் கொள்ளத்தொடங்கின.
ஒரு நுட்பியலென்பது எழுத்துக்களை மாற்றவுஞ் செய்யும்; நிலை பெறவுஞ் செய்யும். கல்/மரம்/ஓடு/மாழை போன்றவற்றில் வெட்டியது சிற்சில மாற்றங்களுடன் எழுத்துக்களை ஓரளவு நிலைக்கவே வைத்தது. அதே பொழுது ஓலையிற்/தாளிற் கீறியது காலவோட்டத்தில் எழுத்துக்களை மாற்றியது. ஏனெனில் சுவடிகளைப் படியெடுக்கையில் ஒருவர் கையெழுத்துப் போல் இன்னொருவர் கையெழுத்து இருக்காது அல்லவா? ஓர் ஓலைச்சுவடியின் ஆயுட் காலம் ஏறத்தாழ 150 ஆண்டுகளே எனும்போது இன்றுள்ள சங்க இலக்கியங்கள் 13/14 ஆம் எடுவிப்புகள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இற்றையெழுத்தில் நாம் படிக்கும் சங்க இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்தில் முந்தை எழுத்து வடிவிலேயே இருந்தன. நம்மில் யாரும் 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சுவடியைப் பார்த்ததேயில்லை.
(இற்றை இகரங் கூடத் தாளால் மாறிய தோற்றமே காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டு இகரம் இதனினுஞ் சற்று மாறுபட்டது. இதைப் பேசினால் நம்மை வேறுபக்கங் கொண்டு செல்லும். என்னைக் கேட்டால் 13/14 ஆம் நூற்றாண்டு இகர வடிவிற்கு நாம் மாறினால் இற்றைத் தமிழ் அச்சு/கணியெழுத்துகளில் இருக்கும் வடிப்புச் சிக்கலைத் தீர்க்கலாம். வடிப்புக் கிறுவியலைப் பற்றி யெலாம் பேசும் அளவிற்குத் தமிழ்க் கணிமை வந்துவிட்டதா, என்ன?. தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலேயே எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம்?)
ஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சு நுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன் வந்த கணி நுட்பியலும், இவற்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புது நுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர் பெயரைச் சொல்லிச் சிறார் கல்வியைக் காரணங் காட்டிச் சீர்திருத்தம் பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு.
எழுத்துத் திரிவை மேலும் பார்ப்போம். வட்டார எழுதுபொருட் பயன்பாடு அந்தந்த நாடுகளுக்கேற்ப மாறியது. பனையோலை பெரும்பாலும் வறண்ட பாண்டியிலும், தென் சேரலத்திலுமே கிடைத்தது. அதற்காக வட சேரல, சோழ நாடுகளில் பனையோலை கிடைக்கவே இல்லையென்று சொல்ல முடியாது. விழுக்காட்டு மேனி தென்பகுதிகளிலே அதிகங் கிடைத்தது, அவ்வளவு தான். எப்பகுதிகளில் அதிக ஓலை கிடைக்க வில்லையோ, அங்கு இலக்கிய ஆவணங்கள் குறைந்தே பேணப்பட்டன. தமிழ்ச்சுவடிகள் தென்பாண்டியில் பெரிதுங் கிடைத்தது அப்படித் தான். ஓலை மிகா இடங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே மிகுந்தன. முன் சொன்னது போல் தமிழியெழுத்து பெரிதும் உருவம் மாறாது ஓலையிலா எழுது பொருட்களில் இருந்து வந்தது. அதே பொழுது ஓலை பெரிதும் பயன்பட்ட பாண்டியிலும், தென்சேரலத்திலும் தமிழி யெழுத்து கொஞ்சங் கொஞ்சமாய் வளைந்து நெளிந்து வட்டெழுத்தாய் மாறியது இயல்பான ஒன்றுதான். எல்லாம் கை பண்ணிய வேலை.
கடுங்கோன் வழியினரைத் தோற்கடித்து விசயாலய வழியினர் பாண்டியரை இல்லாமற் செய்த நிலையில் (குறிப்பாக இராசராசன் காலத்தில்) தம் ஆட்சி நன்கு செயற்பட எழுத்தை மாற்ற வேண்டிய தேவை சோழருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வட்டெழுத்தின் அளவு மீறிய வளைவால் எழுத்துக்களின் தனியடையாளங் குலைந்து பொருள் புரியாது போகும் நிலை ஏற்கனவே பாண்டி நாட்டில் இருந்தது. அரசாணை மூலம் வட்டெழுத்தைத் திருத்தாமல், சோழ எழுத்தையே பாண்டிய, தென் சேரல நாடுகளில் புழங்க வைக்கும் படி சோழர் ஆணையிட்டார். அதனால் வட்டெழுத்து முடிவுற்றது. தென் சேரலத்தில் மட்டும் மேல்தட்டு வருக்க அரண்மணைப் புழக்கங்களில் வட்டெழுத்து நீடித்தது.
1600களில் வட்டெழுத்துக் குழப்பம் போக்கும் வகையிலும், அளவிற்கு மீறிய சங்கதப் புழக்கத்தை நேரியப் படுத்தும் வகையிலும் வடசேரலத்தில் புழங்கிய கிரந்தத்திலிருந்து மலையாள எழுத்துக் கிளைத்து, தென்சேரலத்திற்கும் பரவியது. தனியெழுத்துப் புழக்கத்தாலேயே மலையாள மொழி என்பது நிலை பெற்றது. இல்லா விட்டால் அது தமிழின் வட்டாரக் கிளை மொழியாய் நிலைத்திருக்கும். (இப்பொழுதுங் கூடத் தமிங்கிலத்தைத் தனிமொழியாய் நிலைக்க வைக்கும் வாய்ப்பாகத் தமிழ் ஒருங்குறிக்குள் வேற்றொலி எழுத்துக்களைக் கொணரச் சிலர் விடாது முயல்கிறார். தமிழர் சற்றே கண்ணயர்ந்தாலும் மலையாளம் வேற்றம் 2.0 மீண்டும் ஏற்பட்டு விடலாம். ”ஐயையோ, சங்கதத்தைத் தான் நாங்கள் காப்பாற்றுகிறோம், தமிழுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை” என்று சிலர் சொல்வது வெறுங் கண்கட்டு வித்தை. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். நான் கிரந்தத்திற்கு எதிரியில்லை. ஆனால் தமிழுக்குள் கிரந்தம் தேவையற்று நுழைய வேண்டாம் என்பவன்.)
அதே பொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப் படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகர வரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப் பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதே போலப் பழந் தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப் புகுந்தால், வேறு புலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி> பெருமி, தமிழி> கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)
கடந்த நூறாண்டு காலக் கல்வெட்டாய்வின் மொத்தப் பலனாய், இன்று இணையமெங்கும் சுற்றிக் கொண்டிருக்கும், History of Tamil Script என்ற படம் தமிழி>பல்லவ>சோழ எழுத்தில் ஏற்பட்ட வெவ்வேறு உயிர், மெய்த் திரிவுகளை நமக்கு இனங் காட்டும். வெவ்வேறு எழுத்துக்கள் எக்கால கட்டத்தில் இற்றை வடிவத்திற்கு வந்து சேர்ந்தன என்பதைச் சற்று ஆழ ஆய்ந்தால் மேலுஞ் சில உண்மைகள் புலப்படும்.
காட்டாக உயிரெழுத்துக்களில் அ என்பது 8 ஆம் நூற்றாண்டிலேயே இற்றை வடிவத்திற்கு வந்துசேர்ந்து விட்டது. ஆ என்பது 13 ஆம் நூற்றாண்டில் இற்றை வடிவம் பெற்றிருக்கிறது. இ என்பது 12/13 ஆம் நூற்றாண்டில் நிலைத்த உருவம் பெற்று அச்சுத் தொழில் காரணமாய் 19 ஆம் நூற்றாண்டில் சட்டென இற்றை உருவம் பெற்றுள்ளது. அதாவது நிலைத்த உருவம் சட்டென மாறிப் போனது.. ஈ என்பது 12 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவங் கொண்டது. உ -வும் ஊ-வும், எ-யும் 5/6 ஆம் நூற்றாண்டுகளில், இற்றையுருவம் பெற்றுவிட்டன. ஐ- யும் ஒ -வும் 9 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவம் பெற்றன. ஏ, ஓ, என்பன வீரமாமுனிவருக்கு அப்புறம் வடிவம் பெற்றன. ஔ என்ற எழுத்து 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சுவடிவம் வந்தபிறகே உருவம் பெற்றிருக்கின்றது.
மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க், ங், ச், ஞ், த், ந், ய், ர், ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம் பெற்று முற்று முழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றுள்ளன. ழகரம் மட்டும் 17 நூற்றாண்டு தான் இற்றைவடிவம் பெற்றது. இதுவும் ஒருவேளை அச்சுத் தொழிலால் பெற்ற மாற்றமோ, என்னவோ?,
8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழராட்சி சோழநாட்டில் ஊன்றிப் பல்வேறு கல்வெட்டுகளை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக் காக்கத் தொடங்கியது. இக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப் பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத் தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம் வந்த அரசர் செந்தரப் படுத்தப்பட்ட எழுத்தையே பயன் படுத்தியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது. சோழரின் கல்வெட்டுப் பயன்பாடே இற்றைத் தமிழெழுத்தை உறுதிப்படுத்தியது.
இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புது வடிவம் என்பது புரியும். இந்தப் புரிதலோடு
-------------------
அகர இகரம் ஐகாரமாகும்
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
-------------------
என்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்ல வருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்? ஐ தேவை தான்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment