Wednesday, October 20, 2021

நெற்று

nucleus என்பது சொற்பிறப்பியலின்படி nut ஓடு தொடர்புடையது. nut என்றவுடன் எல்லோரும் தேங்காய்போல் ஏதோ பெரியதென எண்ணிக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. nut என்ற பெயருக்கும் அதன் பருமனுக்கும் தொடர்பு இல்லை. nut என்பது ஆங்கிலச் சொல்லும் அல்ல. அது இந்தியாவிலிருந்து மேலை நாகரிகம் போனது. அலெக்சாந்தர் வருமுன், கிரேக்கர், உரோமானியர் போன்ற மேலையர் தொடர்பு தெற்கே தமிழகத்தோடு தான் இருந்தது. நம்முடைய நெற்றுக்கும், அவர்களின் nutக்கும் நெருங்கிய தொடர்பு ண்டு. 

தேங்காய் நெற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது மட்டும் நெற்றல்ல. வேர்க்கடலையைக் கூட முற்றியது, முற்றாதது என்று பிரிப்பர். பீர்க்கங்காயிற் கூட நெற்று என்பது உண்டு. மீண்டும் முளைப்பதற்குரிய அளவில் முற்றிய காயையே நெற்றுக்காய் என்போம். முகர, நகரப் போலியில் முற்றியது நுற்றியதாகும். முற்றியதென்பது முழுவளர்ச்சி யடைந்தது. முற்று> முத்து என்றுந் திரியும். முத்தென்பது உருண்ட சிறுபொருள். கடலிற் கிடைப்பது மட்டுமே முத்தல்ல. பல்வேறு கூலங்களும் முத்துருவங் கொண்டவையே. ஊர்வன, பறப்பன போன்றவையும் முட்டைகளை ஈனுகின்றன. முட்டையும் ஒருவகையில், நெற்றுப் போலத் தான் (பறவையின்/ஊர்வதின் நெற்று). நுற்று>*நற்று>நெற்று என்பது இயல்பான பேச்சுத் திரிவு. அதே போல் ஓர் அணுவின் நடுவே நெற்றும் அதைச்சுற்றி மின்னிகளும் (electrons) வெவ்வேறு வட்டங்களிற் சுழல்வது ஓர் அறிவியல் உருவகம். சூரியக் குடும்பத்தில் சூரியன் ஒரு நெற்று. அவற்றைச் சுற்றி வரும் கோள்களும் தனித்தனி நெற்றுகளே. 

கீழே வாகை/உழிஞ்சில் நெற்றுக்கள் பற்றிய சொல்லாட்சியைப் பார்க்கலாம்.

”வாகை வெண் நெற்று ஒலிக்கும்” - குறுந் 7.5; ”நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்” - குறுந் 39.2; ”அத்த வாகை அமலை வால் நெற்று” - குறுந் 369.1; எ”வாடல் உழிஞ்சில் விளைநெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப” - அக.45. 1-2. அடுத்தது வேலங்காய் பற்றியது. ”சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர” அக.89-6-7. அடுத்தது கொன்றைக் காய் பற்றியது. ”ஒள் இணர்ச் சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளை நெற்று” அக, 115-11. அடுத்தது இன்னுஞ் சிறப்பு. முற்றிய பயற்றம் பருப்பின் நெற்று. ”பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் மைப்பயறு திர்த்த கோதின் கோல் அணை” புற. 297, 1-3. பயன்பருப்பு பற்றிய இன்னொரு சொல்லாட்சி நாலடியார் 2237 இல் வரும்.

முற்றல் சிறுமந்தி முறபட்ட தந்தையை 

நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்ந்திட்டுக்

குற்றிப் பறிக்கும் மலைநாட, இன்னாதே

ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.   

மேற்கூறிய கூற்றுகளில், ஒன்றிற் கூட தேங்காயைக் காணேனில்லை. நெற்றின் சொற்பிறப்பைப் பார்த்தால் முட்டைகளையும் இதிற்றான் சேர்க்க வேண்டிவரும். காரணமின்றி நான் சொல்லவில்லை.

இன்னொரு காட்டு அக.151. 9 இதில் வாகைக்காய் ”நெற்றம்” என்று குறிப்பிடப் படும். இதனினும் மிகமிச்சிறப்பு: நற்றிணை 107 இன் 4 ஆவது வரியில் வரும் ”இலைநீர் நெற்றம்”. என்ற சொல்லாட்சி. இது இலையின் மேலிருக்கும் நீர் முத்துக்களைக் குறிக்கிறது. திண்மப்பொருளைக் குறிக்க வில்லை. சில கருத்தாளர் சொல்லும் உறுதி, கெட்டியெல்லாம் இங்கு பொருட்டே யில்லை. உருண்டை என்பதே நெற்றின் பொருள். சிலரின் தயக்கம் இனியாவது போகட்டும். உருண்டு திரண்டு இருக்கும் நீர்த்துளி கூட நெற்றம் (முத்து) என்று அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே நெற்றின் அளவு என்பது பொருட்டேயில்லை. எந்த nucleus ஐயும் நெற்று என்றழைக்கலாம். அணு, கரு என மீண்டும் மீண்டுஞ் சொல்லிக் கொண்டே இருப்பது. குழப்பத்தையே கூட்டும். ”core of the nucleus” என்பதை ”நெற்றின் கரு” என்று நான் சொல்லி விடுவேன். குழப்பம் வராது. ”அணுக்கருவின் கரு என நீங்கள் சொல்லும் போது குழப்பம் வரும்.

நெற்றிற்கும் (nut) nucleus ற்குமான உறவை nut பற்றிய சொற்பிறப்பியலின் வழி அறிந்துகொள்ளலாம். nut (n): "hard seed," Old English hnutu, from Proto-Germanic *hnut- (source also of Old Norse hnot, Dutch noot, Old High German hnuz, German Nuss "nut"), from PIE *kneu- "nut" (source also of Latin nux; see nucleus). Sense of "testicle" is attested from 1915. Nut-brown is from c. 1300 of animals; c. 1500 of complexions of women. nucleolus (n.) ஒரு சொல்லை from Latin nucleolus, literally "a little nut," diminutive of nucleus (see nucleus) என்று சொல்வர். 

நெற்றைத் தரையில் சுற்றவிட்டால் பம்பரம்போல் சுற்றும். பம்பரத்தை நூலோடு பிணைத்துச் சொடுக்கித் தரையில் குத்தும்போது, அது 4 வித இயக்கங்ள் காட்டும். முதலில், கூரான அச்சில் இருந்த படி தன்னைத் தானே பம்பரம் உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்) இரண்டாவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதி வலயமோ போடும். இதுபோக மூன்றாவது விதமான இயக்கமும் உண்டு. கிறுவாட்டம் (gyration) என்ற இவ்வியக்கத்தைக் குறிப்பர். 4- ஆவது இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) எனக் குறிப்பர். nutation (n.) 1610s, "action of nodding," from Latin nutationem (nominative nutatio), noun of action from past participle stem of nutare "to nod," from PIE *neu- (2) "to nod" (see numinous). 

சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறியிறங்கிச் சுற்றி விளையாடி முடிந்த பின் ஏற்படும் கிறுகிறுப்பு கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றனவும் தொடர்புடைய சொற்கள்.) நாட்டுப்புற ஊர்களில் தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக்குடம் எடுப்பார்; இதுபோல முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்போதுகளில் சிலருக்கு மெய் மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது. 

தன்னினைவு உள்ள போது ஆடமுடியாதக் கிறுவாட்டம் மெய்மறந்து முருகனை நினைக்கும்போது தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடுகிறது. அதிலேதோ ஒரு துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக்கிறுகிறுப்பிலும் தலையில் வைக்கும் குடம் கீழேவிழாது நிற்கிறது. காவடி அசராது நிற்கிறது. கிறுவாட்டத்தில் கூடக் குறையத் தலையாட்டுவதையே நெற்றாட்டம் என்பார். (நெற்று = nut, nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்பது nucleus ஐ மிகச்சரியாகக் குறிக்கும். நெற்றுவதைத் தான் பேச்சுத்தமிழில் நொட்டுவதென்கிறோம்.) 

நெற்றை வெறுமே அணுவியல் தொடர்பாய்ப் பயனுறுத்தாது, எல்லாப் பயன் பாடுகளுக்கும் பொருத்தலாம். கலைச்சொல்லாக்கங்களில் ஒரு துறை சார்ந்து பாத்திகட்ட வேண்டாம் என்று நெடுநாள் நான் சொல்லிவருகிறேன். ஒவ்வொரு புலனமும் தனித்தனியென நம்முள்ளே படித்தவர் பாத்தி கட்டி வருகிறார். (எனக்கு இது சாதியுணர்வு போலவே தோற்றுகிறது.) நெற்றைப் பயனுறுத்திக் கீழே சிறு பட்டியலைக் கொடுத்துள்ளேன். இதுபோல் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்களுக்கு நெற்றும், நெற்றின் வழியான சொற்களும் பயன்படும். இதுவரை எந்தச் சிக்கலையும் நான் காணவில்லை. மீள மீள அணுவையும் கருவையும் வைத்து, அவற்றை மடக்கியும் (permutation) பெருக்கியும் (combination) சொற்களை உருவாக்க வேண்டாம் என உங்களைப் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். வளமான தமிழ்மொழி மலடல்ல.  

nucleus = நெற்று; 

nucleons = நெற்றுளி; 

nucleonics  = நெற்றுளியியல்; 

nuclide = நெற்றில்; 

nucleation = நெற்றுவித்தல்; 

nucleotide = நெற்றுளிதை; 

atomic nucleus = அணு நெற்று; 

cell nucleus = சில் நெற்று; 

nucleic acid = நெற்றுக் காடி; 

nuclear chemistry = நெற்றுழை வேதியல்; 

nuclear energy = நெற்றுழை ஆற்றல்; 

nuclear event = நெற்றுழை நிகழ்வு; 

nuclear facility = நெற்றுழை ஏந்து; 

nuclear family = நெற்றுழைக் குடும்பம்; 

nuclear fission = நெற்றுழைப் பிளவு; 

nuclear fuel = நெற்றுழை எரிவி; 

nuclear fusion = நெற்றுழை உருகு; 

nuclear material = நெற்றுழைப் பொருள்; 

nuclear medicine = நெற்றுழை மருந்து; 

nuclear parent = நெற்றுழைப் பெற்றார்; 

nuclear physics = நெற்றுழைப் பூதியல்; 

nuclear poison = நெற்றுழை நஞ்சு; 

nuclear power = நெற்றுழைப் புயவு; 

nuclear reactor = நெற்றுழை வினைக்கலன்; 

nuclear science = நெற்றுழை அறிவியல்; 

nuclear submarine = நெற்றுழை நீர்மூழ்கி; 

nuclear war = நெற்றுழைப் போர்; 

nuclear winter = நெற்றுழை வாடை(க்காலம்)

அன்புடன்,

இராம.கி.




No comments: