ஆழ்ந்து பார்த்தால் இது வட சொல்லாய்த் தெரியவில்லை. பதக (padaka) என்ற சொல் வடசொல்லாய் இருந்திருப்பின் அதைக் கடன் வாங்கும் தமிழ் பதகம் என்றே கடன் வாங்கி யிருக்கலாமே?. அதைப் பதக்கமென அழுந்திச் சொல்லும் தேவையென்ன? (உள்ளே தமிழ்த் தாக்கம் இருக்கக் கூடியது, உங்களுக்குப் புரியவில்லையா?) பதக என்ற சொல்லிற்குத் தொடர்பானதாய் மோனியர் வில்லியம்சில் எந்த வினைச் சொல்லும் கொடுக்கப் படவில்லை. தவிர, இது திவ்யாவதனாவின் பத பாடத்தில் இருப்பதாய் அங்கு குறிப்பிடப் படுகிறது. எந்த வேர்ச்சொல்லுங் கொடுக்கப் படவில்லை. நானறிந்த வரை திவ்யாவதனா என்பது பாணினிக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து எழுந்த சொற்றொகுதி நூல். அது சங்கதம் கடன் வாங்கிய சொற்களையும் சேர்த்தே பட்டியலிடும்.
மாறாகப் பதக்கமென்ற சொல் தமிழில் கழுத்திலணியும் அணிகலனையே குறிக்கும். நம்மூர்ப் பொன்னாசாரிகளை வினவினால் இது விளங்கும். பதக்கம் என்பது தங்கம், வெள்ளி போன்ற மாழையில் பல்வேறு அடவுகளில், வேலைப் பாடுகளில், வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றைப் பதித்து ஒரு சங்கிலியில் (அல்லது ஆரத்தில்) படக்கிப் (படங்கு அடிப்பாகம். படக்குதல் = பள்ளமாக்குதல்) பட்டையாகச் சேர்க்கக் கூடியதையே பதக்கமென்று தமிழிற் கூறுவர். (படக்கம்>பதக்கம்) பதக்கஞ் சேர்ந்த ஆரத்தைக் கண்டி, கண்டிகை என்றுஞ் சொல்வர்.
இது தவிர, பள்ளத்தில் படிவதை பதிதல் என்போம். பதிக்குஞ் செயலைச் செய்வது பாதம். பதிக்குஞ் செயல் பெறுவது பாதை. பாதத்தில் அணிவது பாதுகை. பதிதல்= முத்திரை அழுந்தல். பதிங்குவது பதுங்குவது என்றும் திரியும். பதுங்கு= பள்ளம். பதிவு= அழுந்துகை, பள்ளம், பதித்தது வெளியாருக்குத் தெரியாமல் இருந்தாலும் அதைப் பதுங்குதலென்பர். பதுங்கு பிடித்தல்= மேல்தளங்களில் சிறுகல் பாவுதல். படக்கம்>பதக்கம் என்பது போல், பதுக்கம்>பதிக்கம், பதுக்கம்>பதக்கம் என்றுந் திரியலாம். எப்படி இச்சொல் திரிந்தது என உறுதிபடச் சொல்லமுடியாது.
விளையாட்டுப் பதக்கங்களில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பது ஒருபக்கமெனில், இன்னொரு பக்கம் ”என்ன அமைப்பு, என்ன விளையாட்டு, என்ன இடம்” போன்ற விவரங்களும் முகன்மை தான். அவை தாம் பதிக்கங்களின் மேலுள்ள முத்திரையால் பதிக்கப்படுகின்றன. மாழையைக் காட்டிலும் முத்திரைக்கே மதிப்புக் கூட. எனவே படக்கம்>பதக்கம், படிக்கம்> பதிக்கம்> பதக்கம் என்ற சொல் பெரும்பாலும் தமிழாக இருக்கவே வாய்ப்பு அதிகம். பெரும்பாலான மாழை அணிகலன்கள் (குறிப்பாகத் தங்க அணிகலன்கள்) தெற்கிருந்தே உருவாகி வடக்கே போயின என்பது வரலாற்றுப் புரிதல். வடக்கே கிடைத்தது செம்பு மட்டுமே. வெள்ளியும் அங்கு சிறிதே கிடைத்தது. வயிரம், மணி, பவளம், முத்து என எல்லாமே இந்திய நாட்டில் தெற்கிருந்தே வடக்கு போயின. இவற்றின் வணிகத்தைத் தெற்கே நெடுநாட்கள் கட்டுப்படுத்தியது. எனவே பதக்கம் என்ற அணிகலன் சொல்லும் தெற்கிருந்து வடக்கு ஏகவே வாய்ப்பு அதிகம். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.
எக்கேள்வியும் இன்றி 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இணைய இழுனையில் இருக்கும் (on-line), “spoken sanskrit" அகர முதலியை முற்றும் நம்பி ”தமிழுக்குப் பதக்கம் இறக்குமதி” என்று சொல்லத் துணிந்தவர், இப்போது ”<தெற்கிருந்தே உருவாகி வடக்கே போயின என்பது > எனில், பதக்கம் எனும் சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளதா? அது என்று அறிமுகமானது?” என்றும் கேட்பார். இறக்குமதி என்னுமுன் ”சங்கத இலக்கிய மூலம் எதையாவது பார்த்தீர்களோ? இது போன்ற கேள்விகளை அங்கு கேட்டீர்களோ? சங்கதமெனில் கேள்வி கேட்பாடே இன்றி ஏற்கும்போது, தமிழெனில் பல்வேறு கேள்விகள் எழுமோ?.தமிழ்மேல் அவ்வளவு அவநம்பிக்கையா? இந்நிலை விதைத்தவர் யார்?” என்று கேட்கத் தோன்றுகிறது.
8 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் ”பதக்கம் கண்டிகை ஆரமாப் பகர்வர்” என்று வருகிறது..இதைடும் சிலர் ஏற்பாரா? ஏற்கமாட்டார். மாறாக ”தமிழ் இலக்கியத்தில் எங்குள்ளது?” என்று கேட்பார். நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியங்கள் என்பன நானறிந்தவரை அவையெழுந்த ஆண்டுகளின் அவ் வளவு தமிழ்ச் சொற்களையும் பட்டியலிடும் சொற் களஞ்சியங்கள் அல்ல. பலமுறை வெவ்வேறு உரையாடல்களிற் சொல்லி விட்டேன். சங்க இலக்கியம், அற்றைத்தமிழின் சிறுபகுதி. அது பதியாத சொற்கள் மிக மிகப் பல. இந்த இலக்கியங்களில் வினைச் சொல் இருந்தால், தொடர்புடைய பெயர்ச்சொல் இருக்காது, பெயர்ச்சொல் இருந்தால் ஒரு குறிப்பிட்ட விகுதி மட்டுமே யிருக்கும். இன்னொரு விகுதி இருக்காது. நான் இது போன்ற குறைகளைச் சொல்லிகொண்டே போகலாம்.
பொதுவாகச் சங்க இலக்கியம் என்பது ஓர் இயலுமையை மட்டுமே காட்டும். மற்ற இயலுமைகளை நாம் தான் உன்னித்து ஊகிக்க வேண்டும். ஆங்கிலச் சொற்பிறப்பியலிலும் கூட அப்படி ஒருபால் இயலுமை மட்டுமே காட்டுவார். ஆங்கிலத்திற்கோ, சங்கதத்திற்கோ காட்டாத கறார்த் தனத்தை தமிழுக்கு காட்டும் பலரின் பலக்குமை (complexity) எனக்குப் புரிவதில்லை. அது ஒருவகை உச்சநிலைப் பலக்குமையா (superiority complex) ? அன்றித் தாழ்நிலைப் பலக்குமையா (inferiority complex)? தெரியவில்லை. தமிழாய்வாளன் சட்டெனப் பொய் சொல்வான் என்பது சிலரின் கணிப்பா? - என்றும் தோன்றும். இதே கேள்விகளை ஒருசொல் சங்கதம் எனச் சொல்வோரை நோக்கியுங் கேளுங்கள். அப்போது தான் நீங்கள் நொதுமல் தன்மை பேணுகிறீர்கள்..
இருப்பினும் ”பதிந்த” என்ற சொல்லிற்கு சங்க இலக்கியத்தில் நான் கண்ட 2 காட்டுகளைத் தருகிறேன். என்னைப் பொறுத்தவரை பதிந்த (அதுவும் கடினமான ஒரு பொருள் நெகிழ்வான ஒன்றில் பதிந்ததைக் குறிக்கும்) என்பதைக் காட்டும் ஆழமான காட்டுகள். முதலில் வருவது ”குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி” எனும் மதுரைக் காஞ்சி 637 ஆம் வரி. ”தொடைக்கு இடையில் பதிந்த கூர்நுனை கொண்ட குறும்பிடி வாள்” இங்கு குறிக்கப்படுகிறது. அடுத்தது அகம் 253, 24-26 ஆம் வரிகள்.
”மாக விளிம்பில் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே”
”அகன்று விரிந்த வானத்தில் திலகமொடு (இங்கே நிலவின் கரும்புள்ளிகள் திலகமாய்க் குறிக்கப்படுகின்றன) பதிந்த திங்கள் போல, மத்தக மணி பதித்த காதணி மாட்டிய நின் திருமுகப் பார்வையை தலைவர் என்றும் நினைப்பார்” என்று தோழி தலைவிக்குச் சொல்வாள். இவ் வரிகள் மிக முகன்மையானவை. ஒரு பதக்கத்திலோ, காதணியிலோ, மோதிரத்திலோ, இருப்பதிலே பெரிய வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றையே பெரும்பாலும் பதிப்பர். அது தலைவி குடும்பத்தின் செல்வத்தைக் காட்டும் அடையாளம். பெரிய கல்லை ”மதக்க மணி” என 12/13 ஆம் நூற்றாண்டு உரைகாரர் சொல்வர். இதைச் சுருக்கி பதக்கத்தின் பொருளாய் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடாமணி நிகண்டு ”மதாணி” என்று காட்டும்.
”வானத்தில் பதிந்த நிலவு போல், உன் காதுக் குழையணியில் ஒண்சூட்டு அவிர்(கல்) பொருந்தியுள்ளது”. என்று தோழி தலைவியின் திருமுகத்தை விவரிக்கிறாள். குழையிருந்த நாட்டில், கழுத்தில் தொங்கும் பதக்கம் இருந்திருக்குமா, இருந்திருக்காதா? பதக்கமென்ற சொல்லுக்கு ஊன்றாய் நிலவு பதிந்த வானம் என்று சொல்லப் படுகிற்தே? அப்புறமுமா ஐயம்? ”பதிந்த” இருந்தால், “பதக்கம் என்ற சொல் இருக்காதோ”? தாயிருந்தால் தந்தை யிராரோ? (”சரி, ’பதிந்த’ தானே இருக்கிறது. ’பதக்கம்’ இல்லையே?” என்று இப்போது சிலர் கேட்டாலும் கேட்பார்.) நாம் எங்கே போய்க்கொண்டுள்ளோம் ஐயா? சங்கதத்தை நம்புவோம், தமிழை நம்ப மாட்டோமா? இனி .........தங்கல், .................துங்கல் என உருவாகும் சொற்களைப் பார்ப்போம். (யாப்பில் அகர உயிர்மெய்க்கு உகர உயிர்மெய் எதுகையாய் வரலாம்.)
அதங்கல் = கசங்கல், குதம்பல், கெடல், அடங்கல்; இதங்கல் = இதமாதல்; உதங்கல் = மேடாதல்; ஒதுங்கல் = விலகல்; கதுங்கல் = அதங்கல்; குதங்கல் = மலவாய் வழி வருதல்; சதங்கல் = சலங்கல், ஒலித்தல்; செதுங்கல் = சிதறல்; நதுங்கல் = அவிதல் கெடுதல், மறைதல்; நுதுங்கல் = நினைந்து இளகல், ஈரமாதல், நுது நுது என்றாதல்; பதங்கல் = திண்மப்பொருள் ஆவியாதல், குழியாதல், பதங்கு = குழி, ஒட்டுவரிசை, பிளந்த பனையின் பாதி. இந்தப் பதங்கில் தான் வயிரம், மணி, பவளம், முத்து போன்றவற்றைப் பதிப்பார். இந்த விளக்கத்தை ஒரு சங்கத அகரமுதலியில் கண்டுபிடியுங்கள். பார்ப்போம். பதக்கம் செய்வதற்கான செய்முறை இச்சொல்லில் இருக்கிறது. அதாவது நுட்பியற் செய்முறை இச்சொல்லில் புலப்படுகிறது. சங்கதத்தில் பதகம் என்ற பயன்பாடு மட்டுமே இருக்கிறது. பருத்தியுங் கொட்டையும் வளர்த்தவனை மூலன் என்று காட்டுவீர்களா? cotton என்ற சொல்லை வரித்துக் கொண்டவனை மூலன் என்பீரா?
பிதுங்கல் = அமுக்குதலால் உள்ளீடு கிளம்பல்; புதுங்கல் = புதுவாதல்; பொதுங்கல் = வருந்தல், விலகல், மறைதல், புகையில் பழுத்தல்; மதங்கம் = சிறு வாத்திய வகை, யானை, முகில், ஒரு மலை, ஓர் ஆகமம், கலம்பக உறுப்பு பதினெட்டனுள் ஒன்று; மதங்கல் = மயங்கல், வதங்கல், சோர்தல்; மிதங்கல் = நீரின் மேல் மிதந்து கிடத்தல்; முதங்கல் = முன்வருதல்; மெதுங்கல் = மெதுவாதல்; மொதுங்கல் = மொது மொது என்றாதல்; வதங்கல்/வதுங்கல் = வாடல், வருந்தல்; விதங்கல் = விதமாதல்; வெதுங்கல் = வெப்புறுதல்; இவ்வளவு சொற்களை ஏன் சொன்னேன் என்றால், பதங்கல் என்று ஏற்படுவது இயல்பே என்று நிலைக்காட்டத் தான்.
அன்புடன்,
இராம.கி.
.
No comments:
Post a Comment