Sunday, October 31, 2021

stroke

இந்தச் சொல், எழுத்துருவியல் துறையில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். upward stroke, downward stroke, stroke width, stroke contrast போன்றவை சில எடுத்துக் காட்டுகள். தேடிப் பார்த்ததில் 'கீறல்' என்னும் சொல்லே stroke எனும் சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல்லாகத் தென்படுகிறது. ”வேறு சொல் ஏதும் கிடைக்குமா? புதிய கலைச்சொல் பரிந்துரையாக இருப்பினும் நன்றே” என நண்பர் முத்து. நெடுமாறன் கேட்டிருந்தார். விடை சற்று பெரிது. எனவே தனிப்பதிவாகிறது. நண்பர் முத்து என் பதிவிற்கு வருமாறு வேண்டுகிறேன்.

எழுத்தென்பது எழுதுபொருள், எழுதுகருவியோடு தொடர்புற்றது. முதலிற் கருங்கல்லில் எழுதிப். பின்பு செம்பு, இரும்பு, ஓடு, ஓலையெனத் தமிழர் மாறினார். செம்பு ஆதிச்ச நல்லூரிலும், ஈழத்திலும், பின் வடபுலத்திலும் கிடைத்தது. இரும்பு சேலத்திலும் (கொங்கு), திருவண்ணாமலையிலும் (நடுநாடு) கிடைத்தது. பொ.உ.மு. 1800 அளவில் செம்பு நுட்பமும், பொ.உ.மு.1500-1200 களில் இரும்பு நுட்பமும் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. பொ.உ.மு. 490 இல் பானை ஓடுகளும், மாழைப் பொறிப்புகளும் பொருந்தலில் இருந்ததாலும், அண்மையில் நடந்த தொல்லியல் அகழ்வுகளின் காரணமாய்ச் சங்க இலக்கியக் காலத்தைப் பொ.உ.550-பொ.உ.250 என்று முன்தள்ள வேண்டி இருப்பதாலும், (எப்போது எழுந்ததென உறுதிசொல்ல முடியாவிடினும்) பனை யோலைப்பழக்கம் சங்ககாலத் தொடக்கத்தில் ஏற்பட்டிருக்கலாம். என்று எண்ணவேண்டியுள்ளது.
செய்தி பரிமாற, சிந்தனை விளக்க, கருங்கல், மாழை, ஓடு, ஓலை, தாழை மடல் போன்றவற்றில் கீறுவதும் பொறிப்பதுமே (பொளி>பொறி =. புள்ளியிடு) பழந்தமிழர் பழக்கம். கீறுவது என்பது கிறுவுதல் என்றுஞ் சொல்லப்படும். (ஒழுங்கிலாது கிறுவுவது கிறுக்குதல் எனப்படும்.) இது தவிர. தெரித்தல்/ தீட்டல், வரைதல்/ வரித்தல் என்ற சொற்களும் எழுதல், படம் போடுதலுக்கான பெயர்களாகும். கீற்றுக் கருவிகளாய் உளி, எழுத்தாணி போன்றவையும், தெரித்தல்/தீட்டல் கருவிகளாய்த் தோகை/தூலிகை போன்றவையும் (இவை பறவைச் சிறகுகளே காட்டு மயிற்பீலி. சிறகுகளின் அடி இள்ளிகளைப் - fibres - பிய்த்து நுனி இள்ளிகளை மட்டும் வைத்துக்கொண்டு மை தோய்த்து எழுதத் தோகைக் கருவி பயன்பட்டது. நுண்கம்பில் பருத்தி இள்ளிகளைக் கட்டிச் செய்தது தூலிகைக் கருவி), வரைதல்/வரித்தல் கருவிகளாய் கரி, சுண்ணம், தாவரப் பிழிவுகள் போன்றவையும் பயன்பட்டன.
முன் சுட்டிய எழுதுபொருள்களில் சிற்றழுத்தத்தோடு பொளித்துப் பள்ளம் ஏற்படுத்திக் தொடர்ந்திழுப்பதே தமிழெழுத்தின் தொடக்கமாய் இருந்தது. சொற்பிறப்பைச் சொல்கையில் இழுத்ததே பட எழுத்து ஆயிற்றென்பார் பாவாணர். படவெழுத்தே அசையெழுத்தாய் வளர்ந்தது. எகுபதியர், (ஈர மண் தட்டைகளில் எழுதிச் சூட்டும், உலர்த்தியும் காப்பாற்றிய) சுமேரியர், சிந்து சமவெளியர் எனப் பலரும் நாம் பயன்படுத்திய எழுதுபொருள்களையே அவரவர் பகுதி மரபிற்குத் தக்கப் பயனுறுத்தினார். பனையோலை, நம்முடைய விதப்பான பொருள். இது நடுவண் கிழக்கிலோ, எகுப்திலோ இருந்தது போல் தெரியவில்லை. சிந்து சமவெளியில் பனை இருந்திருக்கலாம். பனையோலை இல்லாத குளிரிடங்களில் பிர்ச்சு மரப் பட்டை எழுதப் பயன்பட்டது. பிர்ச்சுப் பட்டைகள் (குளிர்ப்பகுதியினரின் பொத்தகம்/book அப்படியானதே) பிரித்தெடுக்கப் பட்டு, பிசுறுகளைப் போக்கி மழித்தெடுத்து அவற்றில் தூலிகை/தோகை கொண்டு சாயந் தோய்த்து எழுதினர்.
வரி, பொறி, கீற்று, இலகை, அக்கரம், கணக்கு போன்றவை நம்மூரில் எழுத்தைக் குறிக்கும் வேறு சொற்களாகும். வரி என்பது மேற்சொன்ன வரைதல்/ வரித்தல் வினையில் எழுந்தது. (நண்பர் நாக. இளங்கோவன் அவர் ஆக்கங்களில் ’வரி’யைப் பயனுறுத்துவார்.) பொல்லல்>பொள்ளல் வினையில் பொறி எழுந்தது. கீறல் வினையில் கீற்று பிறந்தது.

இல்லுதல்>இலுதல்>இலக்குதல் வினையில் எழுந்த சொல் இலகை. (வட புலத்தில் இது இரகை>இரேகை ஆகும்.) இலக்கு= எழுத்து என்ற பொருளில், இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் எழுந்தன. இலக்கப் பட்டது இலக்கு. இலக்கை இயம்புவது இலக்கியம். இலக்கை அணங்குவது இலக்கணம். அக்கர என்ற பாகதச் சொல் அகரம் என்ற தமிழ்ச்சொல் கொண்டு உருவானது. அக்கர என்ற பாகதச் சொல் அக்ஷர என்ற சங்கதச் சொல்லாய் மாறும். இது போக, இலுதல் என்பது இழுதல் என்றுந் திரியும். to draw out என்று பொருள்
தமிழிய மொழிகளும் இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டவை என்று விடாது சொல்கிறேன். நம்பத் தான் ஆட்களைக் காணோம். வெறும் மிளகுத் தண்ணியையும், கட்டு மரத்தையும் மட்டுமே தமிழ் வழி போன உறவாய்க் கொள்வோரே அதிகம். அந்த அளவிற்கு மேலைத் தமிழறிஞரின் தாக்கம். வையாபுரியாரின் தாக்கம், நம்மிடம் உள்ளது. கேட்டால் சென்னைப் பல்கலைத் தமிழ்க் களஞ்சியத்தைச் சிலர் விவிலியம் போல் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். எப்படியாயினும் நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன். நம்முடைய கீறல், scribe, scripture, inscription ஆகிய இந்தையிரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றது. கீற்று, glyph ஒடு தொடர்புற்றது. கிறுவுதல், graph ஒடு தொடர்புற்றது. பொள், பொறி bore point என்பவற்றோடு தொடர்புடையவை. தெரிந்தல்/தெரிப்பு, draw வோடு தொடர்புற்றது. வரைதல், வரிதல் write ஓடு தொடர்புற்றது. இழுத்து/இழுப்பு letter, literature என்பவற்றோடு தொடர்புற்றது. மேலே சொன்ன எல்லாமே தன்னேர்ச்சி ஒத்திசைவு (accidental coicidences) என்று சிலர் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கில் தமிழுக்கும் இந்தையிரோப்பியன் மொழிகளுக்கும் சொல்லொப்புமை கண்டுள்ளேன். ஆனாலும் நம்ப மறுப்பார். (குதிரையை நீர்குடிக்கக் குட்டைக்குக் கொண்டு வரத்தான் முடியும். குடிக்க வைக்கவும் முடியுமா?).
என்னைக்கேட்டால் இழுக்குங் குறிப்பை வைத்து, குறிப்பாகப் பனையோலை கருதி, அதன் மாற்றான தாள் (காகிதம்), பின் கணித்திரை கருதி, இழுத்து அல்லது இழுப்பு என்ற சொல்லையே stroke -இற்கு இணையாய்ப் புழங்கலாம். அதாவது இழுப்புகள் அடங்கியது எழுத்து. கிடையிழுப்பு (horizontal stoke), குத்திழுப்பு (vertical stoke), வளையிழுப்பு (curved stoke) சுழியிழுப்பு (spiral stroke) என்று வெவ்வேறாய் வகைப்படுத்தலாம். நண்பர் செல்வமுரளி கூறிய கோடு (இதன் பொருள் வளைவு) என்ற சொல்லும் பயன்பட்டுப் பார்த்துள்ளேன். கிடைக்கோடு, குத்துக்கோடு, வளைகோடு, சுழிக்கோடு, நேர்கோடு என்றுஞ் சொல்லலாம். ஆனால் கோடு என்பதற்கு நீளமான line என்ற பொருளும் இருப்பதால் நானதைத் தவிர்க்கிறேன். line என்பதற்குச் சில இடங்களில் கோட்டிலிருந்து வேறுபடுத்தி இழுனை என்ற சொல்லையும் நான் ஆண்டிருக்கிறேன்.
சரி stroke என்ற சொல் எப்படியெழுந்தது? நான் சொல்லுவதை மறுபடியும் நம்ப மாட்டீர்கள். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் stroke (n.): "act of striking," c. 1300, probably from Old English *strac "stroke," from Proto-Germanic *straik- (source also of Middle Low German strek, German streich, Gothic striks "stroke"); see stroke (v.). The meaning "mark of a pen" is from 1560s; that of "a striking of a clock" is from mid-15c. Sense of "feat, achievement" (as in stroke of luck, 1853) first found 1670s; the meaning "single pull of an oar or single movement of machinery" is from 1731. Meaning "apoplectic seizure" is from 1590s (originally the Stroke of God's Hand). Swimming sense is from 1800. என்று போட்டிருப்பர். நாம் ”எழுதுவது” தொடர்பாய்ப் பார்க்கிறோம். இதன் தோற்றம் பொ.உ.1500 எனப்படுகிறது. பெரும்பாலான மேலையிந்தோயிரொப்பியச் சொற்களின் தோற்றம் இலத்தீன், கிரேக்கம் சார்ந்தது. இலத்தீன், கிரேக்கமோ எத்ரசுக்கன் தாக்கமுற்றது. அது இன்னும் போனால் phonecian சார்ந்தது. முடிவில் எகுப்து, இட்டைட், மித்தனி, சுமேரியா, பாபிலோனியா என வந்து நிற்போம். இப் பகுதிகள் எல்லாம் தமிழரோடு ஒரு காலம் தொடர்பு கொண்டவையே.
மேலையிந்தை யிரோப்பியச் சொற்களுக்கும் தமிழியச் சொற்களுக்கும் இடையே ஒப்புமை காண்கையில், மொழிமுதலில் s சேர்ப்பதைக் காணலாம். தவிர எல்லா இந்தையிரோப்பிய மொழிகளிலும் வல்லின மெய்யில் தொடங்கும் சொற்களில் முதல் உயிர்மெய்யை உடைத்து மெய்+ உயிர் என்றாக்கி இரண்டிற்கும் நடுவே ரகரம் நுழைத்துப் பலுக்குவது பல சொற்களில் காணப்படுகிறது. தோகையில் தோ என்பதை த்+ஓ எனக்கொண்டு, ஊடே ரகரம் சேர்த்தால் த்+ர்+ஒ = த்ரோ என்றாகும். தோகை>த்ரோகெ>troke என்றாகும். இதில் s ஐ முன்னே ஓட்டினால் stroke என்றாகும். இற்றைப் பலுக்கல் முறையில் ஸ்ட்ரோக் என்று சொல்லப்படும். அதாவது தோகைக் கருவியில் உருவாகும் இழுப்பையும் தோகை என்றே சொல்லியிருக்கிறார். செய்தொழிலும், செயப்படு பொருளும் ஒன்றாய்ச் சொல்லப் படுகின்றன. அது அவர் வழக்கம் அவ்வளவு தான்.
stroke இற்கான என் பரிந்துரை இழுப்பு/இழுத்து.
அன்புடன்,
இராம.கி.

No comments: