சாண்டில்யனின் ”கடல்புறா” படித்திருக்கிறீர்களா? முதலாம் குலோத்துங்கனின் பேரனும், விக்கிரமச்சோழனின் மகனுமான 2ஆம் அநபாய குலோத்துங்கன் (கி.பி.1133- 1150) காலத்துக் கதை அது. கடார இளவாசி காஞ்சனாதேவியையும், (கடார அரசனுக்கும் சீனத்திக்கும் பிறந்த) மஞ்சளழகியையும் கண்டுமயங்கும் கருணாகர பல்லவன், அதேகாலத்தில் அரபு அமீரோடும், சீன அகூதாவோடும் பழகுவான். கப்பல் தொடர்பான செய்திகளும், திசை காணப் பயனாகும் காந்தவூசி விவரங்களும் புதினத்தில் வரும். காந்தவூசிக்கும் முன்னால், தெளிந்த வானில் வடமீன், நாள்மீன்களைக் கண்டே கப்பலோட்டிகள் திசையறிந்து வந்தார். அதிலும் பல்வேறு சிக்கல்கள் உண்டு. புவி நடுவரைச் சுற்றிற்கு (equatorial circumference) வடக்கிலுள்ளவர், புவித்தெற்கில் நாள்மீன்களைப் பின்பற்றிச் சிறு தொலைவே நகரலாம். அதற்குமேல் முடியாது. அப்படி நகரும் போதும், சுறவ வரை (tropic of capricon) தாண்டி, வடமீனைக் காண முடியாததால், தென்கடல் பயணம் சரவலாகிப் போகும். தவிர, நாள்மீன் ஏதும் தெரியாததால், தென்துருவங் காண்பதும் கடினமே.
காந்தவூசிக் கருவி உருவாகும் வரை, பெரும்பாலான மாந்தர் வடநாடுகளை மட்டுமே அறிந்திருந்தார், காந்தவூசி கண்டபின்னரே, புவிக்கோள மேற் பரப்பில் 40,008 கிமீ நெடுவரைகளையும் (longitudes; துருவச்சுற்றுகள்/polar circumferences) குறுக்கில் 40,075.16 கி.மீ நடுவரைச் சுற்றையும், அதன் வடக்கு, தெற்கில் குறிப்பிட்ட இடைவெளியில் அமையும் விட்டங் குறைந்த கிடைவரைகளையும் (latitudes), கற்பித்தார். இவ்வரைகளாலும், காந்த ஊசியாலும் நிலைத்த வடதிசை என்பது பயணிப்போருக்குப் புலப்படத் தொடங்கியது. பயணத் திசைக் கோணமும். கோணத் தொலைவும் (நீர்த் தொலைவுக் கணிப்பைக் கீழே காண்போம்) ஏற்கனவே கப்பல் உலக்கைப் பொத்தகத்தில் (ship logbook) பதிந்திருந்தால் அவை கொண்டு முந்தைப் பயணத்தை மீளவும் செய்ய முடியும். முதற் பதிவில் தடுமாறினாலும். 4,5 முறை போய்வந்த பின்னால் பயணப்பாதையில் தெளிவைக் காணலாம்.
[வேதியாலை உலக்கைப் பொத்தகங்கள் (chemical factory logbooks), பயண உலக்கைப் பொத்தகங்கள் (transportation logbooks), வலைப் பதிவுகள் (weblogs) ஆகிய, இதேவிதமான நடைமுறை ஒப்பீட்டில் தொடங்கிவையே]. கப்பல் உலக்கைப் பொத்தகங்களும், (அவற்றின் பிழிவாய் உருப்பெற்ற) உலக முகப்புப் (world map) படங்களும், விவரச் செறிவிற்காகவே பெரிதும் களவாடப் பட்டு வந்தன. கப்பலின் நீகாமர் (pilots) உடன் வேலைசெயும் கப்பலோட்டிகளின் உயிர்களை விட, உலக்கைப் பொத்தகத்தையே பெரிதாய்க் கருதினார். திருட்டுலக்கைப் பொத்தகங்களால் தான் கொலம்பசு (Columbus) அமெரிக்காவிற்கும் வாசுகோட காமா (Vasco da Cama) நம் கோழிக் கோட்டிற்கும் செல்ல முடிந்தது. ஆத்திரேலியா போன வில்லெம் யான்சோன் (Willem Janszoon). சேம்சு குக் (James Cook) போன்றோரும் கூட, திருட்டுலக்கைப் பொத்தகங்களால் பயணம் செய்திருக்கலாம்.
[கடற்பயணங்களில் நீர்த்தொலைவு காண்பது எளிது. ஒரு நீளக் கயிற்றில் உலக்கையைக் கட்டி, கல நகர்ச்சியில் கடலிறக்கி, குறிப்பிட்ட நாழிகையில் (ஒரு பேச்சிற்கு 5 நாழிகை) எவ்வளவு நீளம் கடலில் கயிறு மிதக்கிறதென்று கணக்கிட்டு, கலவேகங் காண்பர். மாறும் வேகங்கள் தொடர்ந்து அளக்கப் படும். ஒரே வேகத்தில் கலம் போன நேரத்தை நாழிகை வட்டிலால் அறிவர், இரண்டையும் பெருக்கி நீர்த்தொலைவைக் கணிப்பர். இம்மதிப்பு வேலைக்கே கப்பலில் சில ஆட்கள் தேவையாவர். வானியல், கணக்கு, பூதியல் அறிவையும், காந்த ஊசிக் கருவியையும் (compass) சேர்த்துக் கணக்கிடல், பிழை, சரி பார்த்தல், ஆகியவற்றைச் செய்தே கி.பி 1100 அப்புறம் உலகில் பலரும் கப்பலோட்டினார்.)
ஏறத்தாழ கி.பி.1100 களுக்கப்புறமே சீனக் காந்தவூசிக் கருவி சிச்சிறிதாய் உலகிற் பரவியது. காந்தவூசிக்கு முன், மாந்தருக்குக் காந்தம் என்பது தெரியுமாவெனில் ஆமெனலாம். இரும்பு அஃகுதை மண்ணூறல் (Fe3O4 mineral) இருந்த இடங்களில் ஆற்றல் வாய்ந்த இடிமின்னல் விழுந்தால், அங்கிருந்த ferric oxide பாறைகள் உருகித் திரிந்து, இரும்புப் பொருள்களை ஈர்க்கும் காந்த வல்லமையைப் பெறும். இரும்பைப் பிரித்துக் கருவி செய்தது குறைந்தது கி,மு,1500-1200 என்பர். இரும்பு செய்த இடங்களில் எல்லாம் காந்தமேறிய இரும்பு அஃகுதையும் இருந்திருக்கும். எனவே காந்தவூசி நுட்பியல் தெரியாமலே கூட, காந்தப் புரிதல், அவ்வளவு முந்தைக் காலத்திலும் இருந்திருக்கலாம்.
உலகிற் சிலவிடங்களில், குறிப்பாகக் கிரேக்கம், சீனம், தமிழகம் போன்ற இடங்களில் மட்டுமே இதுபோன்ற பாறைகள் கிட்டின, கிரேக்கத்தின் தெசாலிப் பகுதியில் மக்னேசியாவில் கிடைந்த காந்த மண்ணூறலுக்கு Magnesian stone என்ற பெயரெழுந்தது, magnet (n.) என்ற பெயரும் இடப்பெயரால் எழுந்ததே. "variety of magnetite characterized by its power of attracting iron and steel," mid-15c. (earlier magnes, late 14c.), from Old French magnete "magnetite, magnet, lodestone," and directly from Latin magnetum (nominative magnes) "lodestone," from Greek ho Magnes lithos "the Magnesian stone," from Magnesia (see magnesia), region in Thessaly where magnetized ore was obtained. Figurative sense of "something which attracts" is from 1650s என்பர்.
magnet ஆகக்கூடிய Fe3O4, magnetite எனப்பட்டது, கிரேக்கம், சீனம், இந்தியா ஆகிய இடங்களில் கிடைத்த கல்லைத் தேய்த்து சிறு கரண்டி அல்லது ஊசிபோல் தேய்த்து, ஒரு முள்ளின் மேல் நிறுத்தி, ”கூர்ங்கை” வடக்கையும், ”அகப்பை ”தெற்கையும் காட்டுமாறு 12 ஆம் நூ.வில் இக்கருவியை வடிவமைத்தார். இதை முதலில் செய்தது சீனமே. கி.பி. 1100 க்கு முன் காந்த ஊசி கிடையாதா எனில் தெளிவான விடையில்லை. கி.மு, 4 ஆம் நூ.வில் ”The Sage of Ghost Valley” என்ற நூலில் காந்தவியம் (magnetism) எனும் கருத்து பேசப்படும், இருப்பு ஆணி ஈர்க்கும் செய்தி கி.மு. 2 ஆம் நூ. Lüshi Chunqiuவாலும், கி.பி. 1 ஆம் நூ. Lunheng ஆலும் உரைக்கப்பட்டது, 11ஆம் நூ.வில் காந்தவூசிக் கருவியை விவரித்து காந்த வடக்கின் விளக்கத்தை Shen Kuo என்பார் தந்தார். [காந்த வடக்கும் (magnetic north) வடிவியல் வடக்கும் (geometric north) வேறானவை. காந்த வடக்கு மெய் வடக்கைக் காண உதவும்.]
வடக்கு-தெற்கைக் காணித்த கல் என்பதால் இது காணிதக் கல் (lodestone, which in Middle English means "course stone" or "leading stone", from the now-obsolete meaning of lode as "journey, way") என்று பயன்பாட்டின் வழி, வெவ்வேறு மொழிகளில் அழைத்தார். தமிழிலும் அப்படியே அழைத்திருக்கலாம். (magnet என இட வழிப் பெயர் கிரேக்கத் தாக்கம் கொண்ட மொழிகளில் மட்டுமேயுண்டு.) காணித்தல்= காட்டல்; காணிக் கல்= எல்லைக் கல்; காணி= 1/5 வேலி. = 1/.80. காணிதம்> காண்தம்> காந்தம் என்று திரியலாம். (காண்க: காண்டு>காந்து>காத்திரம் = சினம். ”ண்த” என்பது மெய்ம்மயக்கத்தில் ”ந்த” எனவொலிக்கும்.) 5 ஆம் நூ. மணிமேகலையின் ”சமயக் கணக்கர் தம் திறங் கேட்ட காதையின்”. 55-56ஆம் அடிகளில்
உள்ளநெறி என்பது நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல்
என்பதே காந்தம் பற்றிய தமிழின் முதல் சொல்லாட்சி. இந்த அடிகளின் பொருள் ”உள்ளநெறி அளவையாவது, இருப்புத் துண்டின் திரிவால் கொள்ளத் தகுவது காந்தம் போன்றதாம்” என்றமையும். ”இரும்பு அஃகுதை மண்ணூறல் (Fe3O4) இருந்த இடங்களில் ஆற்றல் வாய்ந்த இடி மின்னல் விழுந்தால், அங்கிருந்த இரும்பு அஃகுதைப் (ferric oxide) பாறைகள் உருகித் திரிந்து, இரும்புப் பொருள்களை ஈர்க்கும் காந்த வல்லமை பெறும்” என்று முன்னாற் சொன்னதை மீண்டும் எண்ணிப் பார்த்தால், ”நாராசத் திரிவு” புரிந்துபோகும் ஆக 5 ஆம் நூ. இல் காந்தக் குறிப்பும் சொற் பயன்பாடும் தமிழில் இருந்தது என்பது உண்மை. ஈர்த்தல் பொருளுள்ள இன்னொரு சொல்லும் இச்சொல்லோடு மயங்கும்.
கா-தல் = ஒன்று இன்னொன்றைப் பற்றுவது. ஒருவர் இன்னொருவரைப் பற்றுவதும் கா-தலே. காவுதல் - பற்றி எடுத்தல். காவடி = தோளில் பற்றிக் கொள்ளும் அடி. காதலைக் கதுவுதல் என்றுஞ் சொல்வார். காதலர் தம்முள் மனமொத்துக் கூடுங் கூட்டத்தைக் காந்தருவம் என்பார். காந்து>காந்தை= மனைவி, காந்தன்= கணவன். இச் சொற்களைப் பலரும் சங்கதம் என்றே சொல்வார். கா-தல் தமிழெனில் விழைவைக் குறிக்கும் காந்தலும் தமிழே. காந்தலுக்கு நேர் எதிரான விலகுதலுக்கு வேகுதல் பொருளும் உண்டு,. காய்> காய்ந்து> காந்து. காந்தள் பூ செக்கச் சிவந்து காய்ந்து, நஞ்சாய் இருப்பினும் நம்மைக் கவர்ந்து ஈர்க்கும் பூ இதுவாகும். இக்காலத்தில் கார்த்திகைப்பூ என்பார், காந்தளே தமிழீழத்தின் தேசியப்பூ. தமிழநாட்டின் மாநிலப்பூ,
காந்தம் வலித்தல் என்பது காந்தம் இரும்பை ஈர்க்கும் செயலைக் குறிக்கும்.
பிரித்தல் பொருளில் எழும் இல்-தல்>ஈல்-தல்>ஈள்-தல்>ஈழ்-தல் வினைச் சொல்லை, நிலத்தை ஈழ்வதற்குப் பயனாக்குவது போல, இரு துருவங்களை இணைக்கும் நெடுவரைக் கோட்டைப் பிரிப்பதற்கும் பயனாக்க முடியும். அதாவது ஒவ்வொரு நெடுவரைக் கோட்டையும் நாம் “ஈழ முடியும்”. இப்படிக் ஈழ்ந்து கிடைத்த ஈழப் புள்ளிகளை ஒன்று சேர்த்தால் உலகின் நெடுவரைக் கோடுகளை இரண்டாய்ப் பிரிக்கும் நடுவரை வட்டம் கிடைக்கும். அதாவது புவிக்கோளம் வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம் என இரண்டாய்ப் பிரிக்கப்படும். எனவே பிரிக்கும் கோடு என்னும் பொருளில் தான், நடுவரை வட்டமானது, ஈலும் கோடு> ஈலக்கோடு> ஈளக்கோடு> ஈழக்கோடு (= இலங்கைக் கோடு) என்று இயல்பாய் அழைக்கப்பட்டது. இதே பொருளில் தான் ஆர்யபட்டா ”இலங்கை” என்ற கலைச்சொல்லால் நடுவரை வட்டத்தைத் தன் நூலில் அழைப்பார். (மறவாதீர் இலங்கைக்கோடு என்பது வேறு. இலங்கை நாடு என்பது வேறு.)
காந்தம் பற்றி நிறையச் செய்திகள் ஆங்கில விக்கிப் பீடியாவில் உள்ளன. தமிழில், அதை மொழிபெயர்த்துக் கொடுக்க யாரேனும் முன்வரலாம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment