Saturday, October 16, 2021

குறளை

 குல் என்பது வளைவுவேர்ச் சொல். வெவ்வேறு சொல்லாக்கப் பாதைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இதனடியில் உருவாகியுள்ளன. குல்> குன்> கூன் என்பது ஒரு பாதை. குல்> குள்> கூள் என்பது இன்னொரு பாதை. குல்> குள்> கொள்> கோள் என்பது மேலும் வேறொரு பாதை. கோட்டம், கோட்டயம், கோட்டி, கோட்டுதல், கோட்டுமா, கோட்டுமீன், கோட்டை, கோடரி, கோண், கோணம், கோணங்கி, கோணை எனப் பல சொற்கள் 3 ஆம் பாதை வழி உருவாகின. குள்ளில் உருவானதாய் இன்னும் வேறு சில பாதைகளுண்டு. இந்தக் காலத்தில்,  சொற்பிறப்பியல் என்னும் அறிவில், முதலில் நடப்பது இது போன்று வெவ்வேறு பாதைகளை வெளிக்காட்டும் வகைப்படுத்தமே. விளக்கமெல்லாம் அப்புறம் தான் ஏற்படும். 

வளைந்து நின்று நம் காதிற்குள் மூன்றாமவரைப் பற்றி யாரோ குறுகுறுப்பதும், நேர்மையின்றிச் சொல்லுவதும் கோளாகும். வளைந்து சொல்லப் படும் இப்பேச்சு உரியவர் அறியாது நடப்பதால் புறம் பேசுதல் என்றும் சொல்லப்படும். (இன்னொருவருடைய புறத்தில் நின்று, முதுகின் பின்னிருந்து, பேசுவது இழிவு தானே? ஆங்கிலத்தில் calumny, aspersion, backbiting, tale-bearing என்பார். 

calumny (n.) mid-15c., "false accusation, slander," from Old French calomnie (15c.), from Latin calumnia "trickery, subterfuge, misrepresentation, malicious charge," from calvi "to trick, deceive." PIE cognates include Greek kelein "to bewitch, cast a spell," Gothic holon "to slander," Old Norse hol "praise, flattery," Old English hol "slander," holian "to to betray," Old High German huolen "to deceive." The whole group is perhaps from the same root as call (v.). A doublet of challenge. 

இதோடு ’கோளைப்’ பொருத்தினால் ஒரே பொருள் வருவது நமக்குத் தென்படும். மீளவுஞ் சொல்கிறேன். பெரும்பாலும் தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும்  ஏதோ ஒரு முன்னுறவு இருப்பது போல்தான் எனக்குத் தோற்றுகிறது. அது வரலாற்றுக் காலத்திற்கும் முன்னே இருந்திருக்கலாம். .. 

கோள் போக, அதே பொருளில் குல்>குர்>குரு>குறு>குறள்>குறளை என வெளிப்படும் சொல்லுமுண்டு. குறள்தல், குறட்டலென்றும், குறள்ந்தல், குறண்டலென்றும் இலக்கண வழி திரியும். குறழ்தல்= குனிதல் “அவனங்கே பாராக் குறழா” என்று கலித் 65:10 இல் வரும். குறட்டு வாதம் = வலிப்பு நோய் வகை. வலியால் துடித்து வளைந்து கிடப்பது வலிப்பாகும். குறண்டுதல்= வளைதல். குறட்டு/குறண்டல் வாதம் கொண்டவன் நேர்பட நிற்க முடியாது. குறண்டற் கிழவன்= கூனற் கிழவன்; குறண்டற் பனங்கிழங்கு= சுருங்கிய/சுருண்டுவளைந்த பனங்கிழங்கு. குறண்டி= செவ்வழிப் பாலையில் (7 சுரங்கொண்ட இரு மத்திமத்தோடியில்) குறைப்பட்ட (6 சுரங்கொண்ட) பண்வகை.. குறண்டி வளையம்= தொட்டிற் சங்கிலி மாட்டும் S மாதிரி வளையம்; குறண்டிக் கால் = சப்பைக் கால்; குறண்டிப் பிடித்தல்= கருமியாய் இருத்தல். இவையனைத்திலும் வளைவுப் பொருளுண்டு.

குறளி= வாயை வளைத்துச் சொல்பவன்/பவள்/வது. ”வாயிலிடிக்குது குறளியம்மே” என்பது குற்றாலக் குறவஞ்சி 71. குறளி வித்தை= இயற்கைக்கு மாறாய் வளைந்து செய்யும் மாய வித்தை. குறளிக் கூத்து= = இயலுக்கு மாறாய்ச் செய்யும் குறும்புச் செயல்கள்; குறளிப் பந்தம்= ஏமாற்றுப் பந்தம்; குறளிப் பேய்/பிசாசு= ஏமாற்றுப் பேய்; குறளை= கோட் சொல் “பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென” என்பது மணிமே.30:68. குறளைக்கு வறுமையென்ற இன்னொரு வழிப் பொருளும் உண்டு ”வறுமையால் நட்பின் எல்லை தோன்றும்” என்ற பொருளில் “குறளையுள் நட்பளவு தோன்றும்” என்று திரிகடுகம் 37 ஆம் பாட்டில் வரும். நிந்தனை, குள்ளம் என்ற பொருள்களும் உண்டு. 

இயற்கையாய் குள்ளமானவனைக் குள்ளனென்பது உலகவழக்கு. (இயற்கை இளம் பிள்ளை வாதத்தாலோ, அல்லது செயற்கை வாதத்தாலோ) கால் வளைத்து குள்ளமாக்கப் பட்டவன் குறளன். இச்சொல்லை வெறுமே குள்ளன் என்று புரிந்துகொள்ளக் கூடாது. இரண்டிற்கும் நுணுகிய வேறுபாடு உண்டு. ’குறங்குதலுக்கு’ முன்னுள்ள ’குரங்குதலுக்கும்’ வளைதலென்ற பொருளுண்டு. குரங்கு = முதுகு வளைந்த விலங்கு. “கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு”  என்பது கொன்றைவேந்தன் வரி. (கோளைச் செவியுறுதல் கோட் செவி என்றழைக்கப் படும். கோளைச் செவியுறுதலோடு கோள் பேசுதலும் சேருவது காற்றோடு நெருப்புச் சேருவதற்குச் சமமாம்.) 

குறளைக்கும் குறளுக்கும் தொடர்புண்டா எனில் உண்டு/இல்லை. குறள் என்பது குள்ளமாக்கப்பட்ட தன்மை. குறளை என்பது நேர்மையற்ற முறையில் மாற்றாரைப் பற்றிப் புறம் பேசுவது. (குறளுக்குக் குறுமைப்பொருள் வேறு வகையில் உருவானது. திருக்குறளை இதில் கொணர்வது அடிப்படையில் குசும்பு வேலை.)  

அன்புடன்,

இராம.கி.


No comments: