இது எங்களுக்கு அருகிலுள்ள ஊர். அதனால் பேசுகிறேன். இவ்வூரை ஒட்டினாற் போல் தெற்கே ஓடுவது பாம்பாறு. அது பாம்பு போல் வளைந்து வளைந்து பம்பி ஓடுவதால் ஏற்பட்ட பெயர். கிட்டத்தட்ட நெற்குப்பைக்கும் முன்னால் அது தோன்றி 70 கி/மீ.க்கும் மேல் ஓடும் ஆறு அது. மழைக் காலத்தில் மட்டுமே ஓடும் காட்டாறு. சில போதுகளில் கரை புரண்டு ஓடுவதைக் கண்டுள்ளேன். 1000/2000 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு இன்னும் பெரிதாய் ஓடியதா என்ற விவரம் எனக்குத் தெரியாது. நான் படித்த தேவகோட்டை வழியாகவும் இவ்வாறு. ஓடி வந்ததால் இதைப் பற்றி ஒரு சில செய்திகளை ஆழ்ந்து அறிந்தேன்.
புனவாசலிலிருந்து 3,4 கி.மீ இல் கடல் வந்துவிடும். புனவாசலின் மட்பாங்கு நெய்தல் சார்ந்ததே. இங்குள்ள பழம்பதி நாதர் கோயில் மிகவும் பெயர் பெற்றது. அதற்குப் பெரும்பணி செய்தவர் தேவகோட்டை சமீன்தார் வீட்டினர். இராமநாத புரம் சேதுபதி மரபினருக்கு பல்வேறு நிதிவுதவிகள் செய்த காரணத்தால் தேவகோட்டையாருக்கு இங்கு பெருஞ்செல்வாக்கு ஏற்பட்டது. கோயில் பற்றி எழுதுவதென்றால் பல பக்கங்களுக்கு எழுதலாம். (கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளேன். பார்க்க வேண்டிய கோயில்.) இந்த ஊருக்குப் புனவாசல் என்ற பெயர் ஏற்பட்டிருக்க மூன்று இயலுமைகளே உண்டு.
1. புனம்+வாயில்> புனவாயில்>புனவாயல்>புனவாசல் (இங்குள்ள பூகோள அமைப்பில் இது சரி வராது.. புனம் என்பது மலைச்சாரலில் வளர்ந்து கிடக்கும் காடு. இங்கே அதுபோன்ற மலையும் காடும் கிடையாது. எப்போதும் இருந்ததில்லை.
2. புனல்+வாயில் = புனவாயில்>புனவாயல்>புனவாசல். புனல் = நீர். முன் சொன்னதுபோல் பாம்பாறு ஓராண்டின் பல நாட்களுக்கு ஓடும் ஆறல்ல. (அறுத்தது ஆறு புல்>புன்= துளை. புன்னித் துளைத்துப் போவது புனல்.) இந்த ஊருக்குப் பக்கத்தில் பெரும் மதகுகளை நான் கண்டதில்லை. புனல் வாயில்= மதகு என்பதற்கும் வழியிருப்பதாய்த் தோன்றவில்லை. ஆனால் இவ்வூரைச் சுற்றிலும் ஏராளம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் உண்டு. எல்லாம் மழைப் பிடிப்பை எதிர்பார்த்துள்ளவை. அவைகள் எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப் பட்டவையாகவும் தோன்றவில்லை. இங்குள்ள வேளாண்மை வானம் பார்த்தது. புன்செய் நிலங்களே 98/99 %. மதகுகள். இங்கு பெரிதாகி யிருந்தால் அதற்கேற்ற வேளாண்மைப்.பொருளியல் அமைந்திருக்கும். அப்படி அமையாததால் புனல்வாயிலென்று நீரையொட்டிப் பெயர் அமைந்ததாய்ச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு முன் பாம்பாற்றில் வெள்ளம் பெரிதாய் ஓடியிருக்குமா? பழம்புதலியல் (Paleobotany) ஆய்வுகள் இங்கு நடந்ததாய்த் தெரியவில்லை. அதெல்லாம் தெரியாமல், இங்கு பாலும் தேனும் ஓடியது என்று சொல்வது வெறும் ”புருடா”.
3. புல்>புன்>புன்னை>புனை + வாயில் = புனைவாயில்> புனவாயில்> புனவாயல்> புனவாசல். இதுவே ஏற்கக் கூடிய சொற்பிறப்பு. இங்கே இன்றும் புன்னை மரங்கள் (callophyllum ionophyllum epetulum) உண்டு. “வளம் தரும் மரங்கல் - பகுதி 4” (பி.எஸ்,மணி, என் சி பி எச், 1992 pak. 277-285) என்ற நூலைப் படியுங்கள். புன்னை எண்ணெய் இன்றும் இங்கு கிடைக்கும். அந்தக் காலத்தில் வழலைக் கட்டி / சவர்க்காரக் கட்டி செய்யப் புன்னை எண்ணெயைப் பயனுறுத்துவார். இன்றுமுள்ல இயற்கை புன்னையை குறித்துக் காட்டுகிறது. புன்னைமரம் படகுகள், கப்பல் செய்யப் பெரிதும் பயன்படும் மரம். இன்றும் அதற்குப் பயன்படுகிறது.
அதேபொழுது திருவையாறு, திருநெய்த்தானம், திருமழபாடிக்கு அருகில் கொள்ளிடக்கரையில் இன்னொரு புனவாசல் உள்ளது. அதன் பெயர் ஒரு வேளை நீரையொட்டி எழலாம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment