சில திங்கள்களுக்கு முன் ஒரு சிறுவனின் இரைப்பைக்குள் சிக்கிக் கொண்ட நாணயத்தை ஒரு சீன மருத்துவர் புத்திசாலித் தனமாய் வெளியே எடுத்த் செய்தி ஒரு விழியக் கோப்பின் வழி இணையமெங்கும் வெருவியாய்ப் (viral) பரவியது, இது எப்படி சாத்தியப் பட்டது என்ற பெரிய கேள்வியும் எழுந்தது.
ஒரு செரிமானக் கட்டகம் (digestive system) என்பது வாய், தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று போகும். இதில் உணவுக்குழல் (food pipe) என்பது இரைப்பையோடு சேர்ந்து கணுக்கிய அமைப்பு. ஆனால் தொண்டைக்கும் உணவுக்குழலுக்கும் இடையே நேரடித் தொடர்பு கிடையாது. தொண்டை உணவுக்குழலுக்கு நேர்மேல் இருந்தாலும் எந்தக் கணுக்கமும் (connection) கொள்ளாது அமைந்துள்ளது. உணவுக்குழலை மூடினாற் போல் ”ஓர்திசை திரும்பா வாவி (unidirectional non-return valve)” ஒன்றும் உள்ளது. அது இரைப்பையையும் அதோடு சேர்ந்த செரிமானக் கட்டகத்தையும் மூடி வைக்கிறது. செரிமானச் சாறுகளும் (digestion juices), உருவான வளிகளும் (gases) தானே வெளிவரா.
செரிமானக் கட்டகம் என்பது ஊதும அழுத்தத்திலோ (atmospheric pressure), அதற்கு மேலோ இயங்கலாம். (மேலே என்றால் பெரிதும் இல்லை. ஒருசில mm water column அழுத்தம் கூடியது) நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் மேற்சொன்ன வாவியின் வழி உள்ளே போகிறது. கவளத்தோடு நீரும் காற்றும் செல்லலாம். சாப்பாடு செரிமானம் ஆகி மேலும் சில வளிகள் (குறிப்பாய் கரிம இரு அஃகுதை-carnon-di-oxide) உருவாகலாம். இதனால் சிலருக்கு செரிமானக் கட்டகத்தின் அழுத்தம் (pressure) கூடவே இருக்கும். சாப்பிட்டுச் சிறிது நேரத்தில் அழுத்தங்கூடி தொந்தி பெரிதாவதும், செரிமானத்தின் பின்,தொந்தி குறைவதும் எல்லோருக்கும் நடப்பது தான். இரைப்பை அழுத்தம் கூடியவருக்கு ஏற்படும் சிக்கல்கள் பல்வேறு விதம். சிலருக்குச் சதா ஏப்பம் வரலாம். சிலருக்கு அதுமுற்றித் தூங்கமுடியாது போகலாம். சிலருக்கு Gastroesophageal reflux disease, or GERD என்ற சிக்கல் வரலாம். அவற்றை நான் இங்கு விவரிக்கவில்லை. இவையெல்லாமே அந்த வாவியின் குறைகள் பண்ணும் சிக்கல்கள் தாம்.
பொதுவாய்ச் சிறு பிள்ளைகளுக்கு செரிமானக் கட்டக அழுத்தம் (digestive system pressure) ஊதும அழுத்தமாகவே இருக்கும். சிறாருக்குத் தொந்தி இராது. இந்தக் குழந்தை விளையாட்டுத் தனமாய் தன் வாய்க்குள் போட்ட நாணயம் பெரும்பாலும் உணவுக் குழலுக்கு நேர்கீழே இரைப்பையின் தாழ்சுவரில் கிடந்திருக்கும். விழியத்தில் மருத்துவர் குழந்தையைப் படுக்கப் போட்ட நிலையைக் கவனியுங்கள்.
ஒரு சிறு நெகிழிக் (elastic) குழாயை வாய், தொண்டை வழியே உள்நுழைத்து இரைப்பையின் தாழ்சுவர் வரை அதைக் கொண்டுபோய் நாணயத்தோடு ஒட்டிவைத்து விடுகிறார். இப்பொழுது வெளித்தெரியும் நெகிழி முனையோடு ஓர் உறிஞ்சு குழலைச் (syringe) சேர்த்து நெகிழிக் குழலுக்குள் இருக்கும் காற்றை உறிஞ்சுகிறார் (sucks). இதனால் நெகிழிக் குழலின் காற்றழுத்தம் (ஊதும அழுத்தத்தை விட க்) குறைந்து நொகை (negative) அழுத்தம் ஆகிவிடுகிறது. இதனால் நாணயம் நெகிழிக் குழாயோடு அழுத்தமாய் ஒட்டிக் கொள்கிறது. இப்போது நெகிழிக் குழாயைச் சட்டென வேகமாய் இழுக்கையில் நாணயம் வாவியிதழில் (valve diaphragm) சிக்காது, வாய்க்கு வெளியிலும் வந்து விடும்.
வெறும் எளிதான பூதியல் விளையாட்டு (physics play).புத்திசாலி மருத்துவர்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment