இது 2017 இல் எழுதியது. முகநூலில் “சொல்லாய்வு” என்ற குழுவில் ஒருமுறை திரு, வெங்காலூர்க் குணாவை மிக மோசமாய்த் திட்டிப் பதிவுகள் எழுந்தன. அப்போது நானங்கு இட்ட இடுகை இது. இப்போது என் பல்வேறு இடுகைகளை என் வலைப்பதிவில் சேகரித்துக் கொண்டிருப்பதால், இங்கு வெளிப்படுகிறது.
-----------------------------------------------
முன்பே ஒருமுறை நான் சொன்னது தான். “தமிழின் தொன்மை” என்ற நூலை திரு. வெங்காலூர்க் குணா ஆகத்து 2016 இல் வெளிக்கொணர்ந்தார். நண்பர் “நாம்” சதாசிவம் சொல்லி, அந்த ஆண்டு திசம்பர் மாதமே அதை வாங்கிப் படித்துவிட்டேன். குறிப்பிடத்தக்க பொத்தகம் தான். ஆனால் குணாவின் எல்லா முடிவுகளையும் நான் ஏற்பவனில்லை. பேரா. க. நெடுஞ்செழியனோடு ஒருங்கு சேர்ந்தே தமிழார்வலர் பலரும் குணாவைப் பார்த்து வந்தார். பேராசிரியரோடு எனக்குப் பழக்கமுண்டு. குணாவோடு பழக்கமில்லை.
ஆயினும் வெங்காலூர்க் குணா என்னைப் படிப்பார். நான் அவரைப் படிப்பேன். எங்களுக்குள் அமைதியான சிந்தனைப் பரிமாற்றம் எப்பொழுதும் நடந்து கொண்டே இருந்தது. என் கட்டுரைகளிலிருந்து அவர் நூலில் மேற்கோள் காட்டியுள்ளார். அவர் நூல்களிலிருந்து நான் மேற்கோள் காட்டியுள்ளேன். அதே பொழுது என்னை அவர் முழுதும் ஏற்றவரில்லை. நான் அவரை முழுதும் ஏற்றவன் இல்லை. ஒருவிதமான மதிப்புக் கலந்த நெருக்கம் எங்களிடை உண்டு. வெங்காலூர்க் குணா பன்முகப் பார்வை கொண்டவர். அவருடைய பல்வேறு நூல்களைப் படித்தவன் என்ற முறையில் அவரை 4 வகைகளில் நான் பார்க்கிறேன்.
1. அருமையான தமிழ்ச் சொல்லாக்கங்களைக் கொடுத்தவர் (குறிப்பாக முக்கோணவியல், வானியல், வரலாறு, மெய்யியல், மாந்தவியல் தொடர்பில். ஏராளமான சொற்களை அவர் படைத்துள்ளார். அவை புழக்கத்திற்கும் வந்துள்ளன.)
2. வரலாற்றுச் சிந்தனையாளர் (சற்று புரட்சிகரமானவர். வடுகர் என்ற கோணத்தைத் தமிழரிடம் முதலிற் கொண்டுவந்து சேர்த்தவர் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த குணாவே. கருநாடகத் தாக்கம் குணாவிடம் இருக்கத் தான் செய்யும். கோலாரின் ஆழம் எங்கெங்கோ போகும். ஆனாலும் அவை புதிய சிந்தனைகள். இதுவரை அறியாதோருக்குப் புதுப்பார்வை கிட்டும். விசய நகர வரலாற்றையும், அது தமிழருக்குக் கொடுத்த தாக்கத்தையும் குணா இல்லாது புரிந்துகொள்ள முடியாது.
3. மெய்யியல் புரிதல் கொண்டவர் தமிழில் ஆசீவிகம் பற்றி புதிய ஒளி பாய்ச்சிய இருவரில் இவரும் ஒருவர். இன்னொருவர் பேரா.க.நெடுஞ்செழியன். முன்னால் பேரா. வானமாமலையின் வழி வந்த உலகாய்தப் புரிதலிலிருந்து ஆசீவிகம் நோக்கி நம்மைப் பார்க்க வைத்தவர். பேரா. முத்துமோகன் இயங்கியல் பார்வை நோக்கி தமிழரை நகரவைத்தாரெனில் ஆசீவிகத்திற்கும், சாங்கியத்திற்கும் எம்மை இட்டுச் சென்றவர் இவரிருவருமே. என் ஆசீவிகப் புரிதல் கூடுவதற்கும் சங்க இலக்கியத்திலுள்ள பல்வேறு வேதமறுப்புக் கூறுகளை இனங் காண்பதற்கும் இவர் இருவரையும் விட வேறு யாரையும் நான் துணைக்கொண்டிருக்க முடியாது.
4. தமிழ்த்தேசியப் பார்வையாளர். (இதில் பலருண்டு. குணாவின் பார்வை ஒரு ஓரப்பார்வை.).
ஏதோ ஒருவகையில் சொல்லாய்வுக் குழுவில் குணாவைப் பேசவேண்டின் அவர் சொல்லாக்கங்களுக்காகப் பேசவேண்டும். அதை விடுத்து அவருடைய வரலாற்றுச் சிந்தனைக்காகவும், தமிழ்த்தேசியப் பார்வைக்காகவும் அவருடைய பாவாணர் ஆதரவுப் போக்குக்காகவும், அவருடைய அன்பர் வேறெங்கோ வெளியிட்டதை இங்கு கொண்டுவந்து போட்டுத் திட்டுவதைக் கண்டால் சொல்லாய்வுக்குழுவின் அரசியல் போக்கு அதன் ஆய்வுப்போக்கை மீறுகிறதோ என்றே தோன்றுகிறது.
குணாவின் தொல்காப்பியக் கால முடிவுகள் சரியா, தவறா, முறையா, முறையற்றதா என்பது வேறெங்கோ பேசப்படவேண்டியது. அதை ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் அதைக் கொணர்ந்து அரசியலாட்டம் போடுவதில் என்ன தேவையுள்ளதென்று சற்றும் புரியவில்லை. குணாவோடு உரையாட விழைபவர், வாதாட விழைபவர், திட்ட விழைபவர், அவருடைய முகநூல் பக்கத்திற்குப் போய் அதைச் செய்யவேண்டும். அதைவிடுத்து சொல்லாய்வுக் குழுவில் புறம் பேசுவதால் பொருளில்லை.
”தமிழின் தொன்மை” வழி அவருடைய அண்மையக் கண்டுபிடிப்பு. விண்டிய (>விந்திய) மலையைத் தமிழருக்கு அடையாளங் காட்டியதுதான். விண்டிய மலை = இந்திய நிலப் பரப்பை இரண்டாய் விண்டிய மலை. தமிழில் அன்றி இம்மலைப் பெயரின் பொருள் புரியாது. பழம் இந்தியாவைப் புரிந்து கொள்ள தமிழ் ஒரு திறவுகோல். தொல்காப்பியர் கால வேங்கடமலை இதுவே என்பதை அவரின் நூல் வழி, முதலில் படித்த போது என்னால் ஏற்க முடியவில்லை. பின் படிக்கப் படிக்க நான் மதிக்கும். ந.சுப்புரெட்டியாருக்கும் மேல் இவர் காட்டிய தெளிவு பிடித்திருந்தது. மேலும் சங்க இலக்கியத்தை ஆழ ஆய்ந்தால், குணாவின் கூற்றுக்கு ஏற்பு இருப்பதாகவே எனக்குப் படுகிறது. வேங்கட மலையின் அடையாளம் முதலில் விண்டிய மலையில் தொடங்கிப் பின் தமிழர் சுருங்கச் சுருங்க அது நகர்ந்து வடபெண்ணை ஆற்றுக்கருகில், பேரா. சுப்பு ரெட்டியார்க்கு இணங்க வந்து, முடிவில் இன்றுள்ள திருமலை-திருப்பதிக்கு வந்துசேர்ந்துள்ளது. அதைப்பற்றி ஒரு தனிக்கட்டுரைத் தொடரே எழுத வேண்டும் என்றெண்ணியுள்ளேன். ஆனால் குணாவின் நுண்மாண் நுழை புலனை வியக்காதிருக்கமுடியவில்லை. குணா ஒரு மாணிக்கம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment