உலகின் பல மொழிகளில் சொவ்வறைகள் (software) எழுகின்றன. அவற்றிற்குத் தேவையும் (demand) உண்டு. அளிப்பும் (supply)உண்டு. இரண்டுக்கும் இடையில் ஒரு விலையுm உண்டு, தமிழில் மட்டும் இது நடப்பதில்லை. எல்லா இனத்தவரிடமும் இது நடக்கிறது. தேவையைக் கூட்டாமல், நாம் சொவ்வறை அளிப்புகளைக் கூட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறோம். ”அதில் வேலை செய்யவேண்டும், இதில் வேலை செய்யவேண்டும்” என்று புது வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே கனவு கொள்கிறோம். கவனம் செலுத்துகிறோம். தேவை என்பது தானாக வளருமென எண்ணிக் கொள்கிறோம். அப்படி நடப்பதில்லை. தேவையே இல்லாத நிலையில், அளிப்பும் தேவையும் ஒருநாள் கூட ஒன்றை யொன்று சந்திக்காது. முடிவில் எல்லாவற்றையும் இலவசமாய்த் தரவேண்டும் என்ற சூழ்நிலையும் கூப்பாடுமே நம்மூரில் எழும். தமிழ்க் கணிமை வேலையால் எந்த வருமானமும் கிட்டாதெனில், எந்தச் சொவ்வறை இங்கு எழும்பும்? தமிழ்க் கணிமை வளருமா? வளராது. தமிழ் சோறு போடும் என்று எப்படிச் சொல்ல வைப்பது?
இப்போது ஒரு மளிகைக் கடைக்குப் போகிறோமென வையுங்கள். அங்கு கடைக்காரர் தமிழில் விலைப் பட்டி (bill) கொடுக்கிறாரா? இல்லை. ஏன் கொடுப்பதில்லை? ஏனெனில் யாருங் கேட்கவில்லை. மக்கள் தமிழில் விலைப்பட்டி கேட்க ஒரு தூண்டுதல் இருக்க வேண்டுமே? அது அங்கு இல்லை. அரசு 2 வித விற்பனைவரி அல்லது சரக்கு-சேவை வரி ( GST) வைக்கிறது என்று வையுங்கள். தமிழில் விலைப்பட்டி எனில் ஒரு வரி, ஆங்கிலத்தில் கேட்டால் இன்னொரு வரி என்றிருந்தால் எப்படி இருக்கும்?.எண்ணிப் பாருங்கள். தமிழில் பெறுதிச் சீட்டு கேட்டால் 1% சலுகை என்றிருந்தால், தமிழில் விலைப்பட்டி கொடுங்கள் என்று மக்கள் கேட்பாரே? கடைக்காரரும் தமிழில் விலைப் பட்டியல் கிடைக்கும்படி வசதி ஏற்படுத்துவாரே? சில சொவ்வறைக் காரரிடம் அப்படி ஒரு தேவையை கடைக்காரர் வைப்பாரே?. சொவ்வறை செய்பவர் அதற்கு முயல்வாரே? மொத்தத்தில், சந்தையில் 4,5 தமிழ் சொவ்வறை கடைக்குத் தேவையான படி உருவாகும். தேவை உருவாக்கம் என்பதில் இதுவொரு காட்டு.
இன்னொன்றும் பார்ப்போம். ஒரு மின்னியியல் கடையில் ஏதோவொரு மின்னியியல் பொருள் வாங்குகிறோம். அதை வீட்டிற்குக் கொண்டுவந்து நிறுவ வேண்டும். இன்று ஒரு கருவியை நிறுவுவதற்கும், பேணுதற்கும் ஆன வழிகாட்டிப் பொத்தகங்கள் தமிழில் உள்ளனவா? இல்லையே? சீனம், தாய், கொரியன் என ஏதேதோ மொழிகளில் அவையுள்ளன இந்தியில்கூட உள்ளது. தமிழிலில்லை. அதையேன் அரசு கட்டாயப்படுத்தக் கூடாது? தமிழ்நாட்டில் என்ன பொருள் விற்றாலும் தமிழ்க் கையேடு இல்லெனில், விற்கமுடியாதென நம் மாநில அரசு சொல்லலாமே? உலகின் மற்ற நாடுகள் பலவும் இதைச் செய்கின்றனவே? தமிழ்நாட்டில் விற்கும், நகர்பேசி, மடிக்கணி, மின்னியியல் கருவிகளில் தமிழ் வல்லமை (enabled) இல்லெனில், தமிழ்நாட்டில் விற்க முடியாதென்று சொல்லட்டுமே? இத்தனை கும்பணிகளும் உடனடியாகத் தமிழ்க் கணிமையை நாடுமே? தமிழ் மொழிபெயர்ப்பை நாடுமே? மொழியாவணங்களுக்கான தேவை கூடுமே? எவ்வளவு தேவை இப்படி உருவாகும்? - என்று எண்ணிப் பாருங்கள்.
அதேபோல் இங்கு விற்கும் எல்லாச் சகடு (car)களிலும், தமிழ் வழி GPS வழிகாட்டி இருக்கவேண்டுமெனச் சொல்லலாமே? அதன் கையேடுகள் தமிழில் உருவாகுமே? இந்த GIS, GPS ஆகிய அமைப்புகள் தமிழில் உருவானால், நம் தமிழ்ப் பெயர்கள் நிலைக்குமே? எழுத்துப் பெயர்ப்பு (transliteration), கிறுவப் பெயர்ப்பு (transcription) பற்றிய வழிகாட்டல் ஏற்படுத்தினால் ஆங்கிலப் பெயராக்கம் என்பது எளிதாகும். தமிழ்>ஆங்கிலம் என்பது அடிப்படையில் எளிது. ஆங்கிலம்>தமிழ் என்பது தான் பெரும்பாலும் குழப்பம் தரும். google map இல் வரும் ஊர்ப்பெயர்களுக்கும் , தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்ட ஊர்ப் பெயர்களுக்கும் இடையே பெயர்க்குழப்பம் பெரிதும் உண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் என் ஊரின் பெயர் கண்டனூர். கூகுள் முகப்பில் , கந்தனூர் என்று இருக்கிறது. எங்கள் ஊருக்கு மட்டுமுள்ள சிக்கல் இதுவல்ல. கணக்கற்ற தமிழ் ஊர்களுக்கும் இதுபோல் சிக்கல் உண்டு. இது எழுத்துப் பெயர்ப்பு, கிறுவப் பெயர்ப்பு பற்றிச் செந்தரமில்லாததால் ஏற்படும் குழப்பம்.
இன்னும் சொல்லலாம். இங்கிருக்கும் எந்தப் பல்கலையிலும், கல்லூரியிலும், தமிழே தெரியாது ஆய்வேடுகள், பட்ட அறிக்கைகள் போன்றவற்றைச் சமர்ப்பித்து விடலாம். மாறாக, 5 பக்கச் சுருக்கம் தமிழில் இல்லையென்றால், உங்களுக்குப் பட்டம் கிடையாது என்று பல்கலைக் கழகங்கள் சொல்லலாமே? அப்படிச் சொன்னால், பெரும் மொழிப் புரட்சியே இங்கு ஏற்பட்டுவிடும். பட்டம் கிடையாதென்று சொல்லத் தொடங்கின், அதன்வழி எத்தனை தமிழ் ஆவணங்கள் உருவாகுமென எண்ணிப் பாருங்கள். ஆவணங்களை உருவாக்கத் தேவையான சொவ்வறைகள் பெருகுமே? எல்லாப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தமிழில் தான் தம் அலுவல் நடத்தவேண்டும் எனில் எவ்வளவு சொவ்வறைகள் உருவாகும்? எவ்வளவு தமிழ் தொடர்பான கல்விச் சொவ்வறைகள் உருவாகும் ?
நீதிமன்றங்களில் தமிழில் வழக்கு நடத்தும்படி கட்சிக்காரர் கேட்டுக் கொண்டால், தமிழில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏன் சொல்லக் கூடாது? எந்த மருத்துவ மனையிலும் மருந்துச் சீட்டுகள், மருத்துவ அறிக்கைகள், தொடர்புப் படிவங்கள் ஏன் ஆங்கிலத்தில் இருக்கின்றன? அவை ஏன் தமிழில் வரக்கூடாது? அரசின் சட்ட ருவமான ஆவணங்கள் ஆங்கிலத்தில் ஏன் எழுகின்றன? அரசே தன் அரசாணைகளை ஏன் பின்பற்றுவதில்லை? பின்பற்றினால், தமிழ்க் கணிமையின் தேவை கூடுமே? தமிழக அரசு ஓராண்டிற்கு ஏராளமான பல்வேறு வகை அறிக்கைகள், ஒப்பந்த விண்ணப்பங்கள், விளம்பரங்கள் எனத் தமிழ் நாளிதழ்கள், தாளிகைகளில் வெளியிடுகிறதே? மற்ற எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு, எந்த அளவு தமிங்கிலம் குறிப்பிட்ட தாளிகைகளில், தொலைக்காட்சிகளில், குறைத்துப் பயனாகிறது என்றுபார்த்து அரசு விளம்பரம் கொடுக்கலாமே? அரசு வலைத்தளங்களில் தமிழ் உள்ளீட்டைக் கூட்டலாமே? .
நான் மற்ற வகைகளிலும் இதுபோல் எடுத்துக் காட்டுகளைக் கொடுக்கலாம். இப்படித் தேவைகளைக் கூட்டுவதனால் மட்டுமே தமிழ் வளரும். வெறும் கவிய்ரங்கங்களாலும், பட்டிமன்றங்களாலும் தமிழ் வளராது. மீண்டும் மீண்டும் “தேவை அப்படியோ உயர்ந்துவிடும்” என்று நம்பிக்கை கொண்டு தமிழ் அளிப்பை மட்டும் கூட்டுவதில் நாம் வேலை செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இன்னுஞ் சொன்னால் போலித்தனமானது நம் சிக்கல் தேவையை உருவாக்குவதில் உள்ளது.
தமிழ்க் கணிமையின் தேவையைக் கூட்டாமல் தமிழ் முன்னே நகராது.
No comments:
Post a Comment