Monday, October 25, 2021

அலுவம்

office -இற்கு இணையாய்ப் பலரும் அலுவலகம் என்றே சொல்வார். நான் சற்று வேறுபடுவேன். ”அலுவல்” என்பது, ”அல்” வேரில், அலைதல்/அசைதல் கருத்தில் எழுந்தது. (அலைதலும் அசைவின் நீட்சியே.) அசைதல் கருத்தில், ”களைத்தல், சோர்வு” போன்ற கருத்துக்களும் எழும். 8 மணி நேர office பணி என்பது சோர்வு கொடுக்கும் என்பது பலரின் பட்டறிவு. “என்ன அலுத்து வருகிறாய். office இல் ரொம்ப வேலையோ?” என்பது இயல்பான நடைமுறைப் பேச்சு, அல்>அலு> அலு-த்தல் = களைத்தல், சோர்தல் வினையில் எழுந்தது. கன்னடத்தில் ”அல” என்றும், தெலுங்கில் ”அலயு” என்றும் பகுதி அமையும்.  மலையாளத்தில் பணி என்ற சொல்லடியின் வழி இதைக் குறிப்பர். அலுக்கு-தல் = சிறிது அசைத்தல்.  அலுக்குக் குலுக்கி = ஆட்டி அசைத்து; அலுங்குதல் = அசைதல். அலுசிலம்பல் = disorder, derangement, confusion. அலுத்துப் புலுத்து = மிகக் களைத்து; அலுப்பு = சோர்வு.  

அலு>அலுவல் = களைக்குமளவிற்கு உழைக்கும் வேலை. அலு-த்தல் வினைச் சொல்லில் கிளைத்த பெயர்ச்சொல் அலுவலாகும். அலுவல் + அகம் = அலுவலகம் என்பது 2 பெயர்ச்சொற்களை ஒன்று சேர்த்துக் கூட்டுப் பெயராக்கிச் சொல்லும் முறை. அலுவலின் முடிவில் வரும் அல் எனும் ஈறு இந்தக் கூட்டுச் சொல்லுக்குள் தேவையா? - என்பது எனது கேள்வி. அதற்கு மாறாய் அலு எனும் பகுதியோடு அம் எனும் ஈற்றைச் சேர்த்து அலுவம் எனலாமே? வேலை செய்து களைக்குமிடம் என்பது அதன் பொருளாகும். அலுவலகம் என்பதை விட அதே பொருளில் அலுவம் என்பது சுருங்க அமைந்து விடும். இன்னும் office ஓடு அமையும் பல கூட்டுச்சொற்களுக்கும் அது  வாகாய் அமையும்.  கீழே சில கூட்டுச்சொற்களைக் கொடுத்துள்ளேன்.

நாம் செய்யும் வேலை அலுவல். நாம் அங்கே அலுத்துப் போகிறோம்.

அலுவல் நடக்குமிடம் = அலுவம் (office). 

officer = அலுவர், 

office-holder = அலுவங் கொள்வோர் , ”அவர் மேயர் என்ற அலுவத்தைக் கையில் கொண்டுள்ளார். அதனால் அப்படித்தான் ஆடம்பரமாய், அணிமணிகளோடு இருப்பார்.” இங்கே அலுவலகம் என்று சொல்வது சரிவராது.) 

official = அலுவலார், 

office space = அலுவ வெளி, 

open office = திறவை அலுவம், 

private office = பிரிவை அலுவம், 

shared office = சேர்ந்த அலுவம், 

Corner office = மூலை அலுவம், 

office structure = அலுவக் கட்டுமானம், 

office building = அலுவக் கட்டிடம்,  

Office space planning = அலுவ வெளிப் பதியம்; 

Office supplies = அலுவ அளிப்புகள்; 

Office management = அலுவ மானகை; 

Office politics = அலுவ அரசியல்   

”இவற்றில் குறை எங்குள்ளது?” என்று எனக்குப் புரியவில்லை.   2 பெயர்ச் சொற்களைப் பிணைத்துச் சொல்லி இரு ஈறுகளை அடுத்தடுத்து எழுதுவது தான் இலக்கண விதியா?  அல் எனும் ஈற்றைப் போக்கி அகத்தை அம் என்றாக்கிச் சொல்வதில் என்ன தவறு?

நான் இன்னும் விளக்கங்களை நீளச் சொல்லிப் போகலாம். அது வேண்டாம் என்றும் தோன்றுகிறது. தயக்கம் என்பது பிடிவாதம் நோக்கிப் போகுமெனில், அப்புறம் ஒருவலோடு வாதிடுவதில் பயனில்லை. ”நீங்கள் உங்களுக்குப் பிடித்தபடி சொல்லிப் போங்கள். ஆர்வமிருப்போர் பயனுறுத்தட்டும்! -  என்று சொல்லி நான் நகர்கிறேன். 

என் போகூழ் அப்படி. நான் தமிழறிஞன் இல்லை. 

 

அன்புடன்,

இராம.கி. 

No comments: