Tuesday, September 25, 2018

vote/வாக்கு

ஒருமுறை இதைப்பற்றி நண்பர் திரு,பிரகாஷ் மின்தமிழ் மடற்குழுவிற் கேட்டிருந்தார். voting process என்பது நமக்கொன்றும் புதிதல்ல. இதைக் குடவோலை முறையென்று சொல்லி பெருஞ்சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டைப் பலருஞ் சொல்வர். இங்கே 2 செய்திகளைக் கட்டாயஞ் சொல்லவேண்டும்.

1. உத்தரமேரூர் கல்வெட்டிற்கும் 1000 ஆண்டுகள் முன்பே குடவோலைமுறை தமிழரிடை இருந்ததை மருதன் இளநாகனாரின் அக 77 ஆம் பாடல் 7-12 ஆம் வரிகள் தெரிவிக்கிறது. .
2. குடவோலை முறைகள் என்பவை அந்தக்காலத்தில் ஊர், மண்டலம், நாடு என எல்லாவற்றிற்கும் பொதுவானவையல்ல. ஒரு குறிப்பிட்ட குடியாருக்கு, தொழிலாளருக்கு, அவையாருக்கு மட்டுமே இவை இயல்பாயிருந்தன. இவரைச் சுற்றியும் முடியாட்சிகள் இருந்தன. அதாவது முடியாட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே குடியாட்சி முறை அந்தக் காலத்தில் நிலவிவந்திருக்கிறது. 

2 ஆஞ் செய்தியை முதலிற் பேசுவோம். உத்திரமேரூர் என்பது ஒரு சதுர் வேதிமங்கலம். பல்லவர் காலத்திலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை அரசின் ஆதரவோடு தனியாகப் பார்ப்பனருக்கென இவை இருந்தன. இவ்வூர்களில் காசு கொடுத்து வாங்கியும், அரசதிகாரத்தாற் பறித்தும் வந்த நிலங்கள் பார்ப்பனருக்குக் கொடுக்கப்பட்டன. தத்தம் நிலக்கிழமையாலும், பிறிதின் நிலக்கிழமையாலும் வேளாண்மை இங்கே நடைபெற்றது. இவற்றின் சேவை நிருவாகம் ஒரு குறிப்பிட்ட சபையாரிடம் இருந்தது. ஊரின் எல்லாப் பார்ப்பனரும் இதிற் கூடி முடிவெடுத்துப் வாரியப் பொறுப்பாளரைத் தேர்ந்தெடுப்பார். இதிலெல்லாம் தேர்தல், தகுதி, விலக்கு, பதவிக்காலம் என்ற கூறுகளிருந்தன. எவ்வளவு பணம், பெருமை இருந்தும் சபை நிருவாகத்திற் பார்ப்பனர் அல்லாதோருக்கு உரிமையில்லை. உத்திரமேரூர் பற்றி இணையத்தில் தேடின் ஏராளமான செய்திகள் கிடைக்கும். அற்றைத் தமிழகம் மட்டுமின்றிக் கேரள, கருநாடக, ஆந்திர மாநிலங்களிலும் இத்தகைய சதிர்வேதி மங்கலங்கள் இருந்தன. ஏன் அவ்வளவு எதற்கு? இதுபோன்ற மங்கலங்கள் சென்னையைச் சுற்றிலும் கூட இருந்தன. இற்றை வேளச்சேரி. அண்ணாநகர் பக்கமுள்ள திருமங்கலம், மணலி/மாதவரம் பக்கமுள்ள கொசப்பூர் எனப் பலவும் (இவற்றின் பெயர்கள் இன்று மாறினும்) ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலங்களே..

வேளாரென்றாலே வேதநெறி பின்பற்றி வேள்விசெய்பவரென்று பொருள் உண்டு; ”வேதம்” வேள்தல் வினையிற் பிறந்தது. (வித்>வேதம் என்ற சொற்பிறப்பை நான் ஏற்கேன்.) ஏனெனில் வேளாப்பார்ப்பான் எனும்வகையும் இலக்கியங்களிலுண்டு. இதுதவிர, வேளாரெனும் பார்ப்பனரல்லாத குயவர் வகையார் ஐயனார் கோயில்களில் இன்றும் பூசாரிகளாய் இருக்கிறார்.. (இவர்தாம் பார்ப்பனருக்கு முன்னிருந்த தமிழ் அறிவர்கள்) எனவே வேள்தல்= வேண்டுதல் என்பதே இதற்கு அடிப்படையாக முடியும். ஒருவகையார் நெருப்பு மூட்டி ஆகுதிகளையிட்டு பல்வேறு தெய்வங்களைப் போற்றிக் குமுகாயத்திற்கு நல்லது வேண்ட, இன்னொரு வேளார் நீர்தெளித்துப் பூசாற்றித் தம் தெய்வங்களையோ, கடவுள்களையோ (அறிவர், தீர்த்தங்கரர், புத்தரையோ) போற்றித் தம் குமுகாயத்திற்கு நல்லது வேண்டுவார். ஓரிடத்தில் நெருப்பு, .இன்னோரிடத்தில் நீர். அவ்வளவுதான் வேறுபாடு. பின்வந்த சிவ, விண்ணவ நெறியினர் நீரையும் (அதன் வழி ஆகமத்தையும்) நெருப்பையும் (அதன் வழி வேத நெறியையும்) கலந்து தம் செய்முறைகளை உருவாக்கிக் கொண்டனர். சிவனையும், விண்ணவனையும் கும்பிட்டது நெடுநாளுக்கும் முன்னால். ஆனால் இவற்றை நிருவாகப்படுத்திய நெறிமுறைகள் எழுந்தது பின்னால்.

பார்ப்பனரல்லா நிலக்கிழாருக்கும் தனியூர்களிருந்தன. அந்நெல்லூர்களை நல்லூரென அழைத்தார். இற்றை வேளச்சேரி தாண்டிய சோழிங்கநல்லூர் அது போன்றதே. தமிழ்நாடெங்கணும் பல்லவர்/ பெருஞ்சோழர் காலத்தில் இது போலும் பல நல்லூர்களிருந்தன. இங்கும் நிலக்கிழார் சபைகளுக்கே நிருவாக உரிமையுண்டு. இவற்றிற் பார்ப்பனர் கலந்து கொள்ளார். இங்கும் நிலங்கள் வாங்கப்பட்டன. அதிகாரத்தால் பறித்துக்கொள்ளவும் பட்டன. பார்ப்பனர் அல்லாதோருக்கும் கொடையுமுண்டு. இங்கும் சபையிற் பங்குபெறும் உரிமையாளர் தவிர, மற்றோர் சேவை செய்பவராகவே இருந்தார். மேட்டுக் குடி தவிர்த்த எல்லோருக்கும் சனநாயக உரிமை அன்றில்லை. மங்கலங்கள், நல்லூர்கள் என இரண்டிலுமே ஒருபக்கச் சனநாயகமே (partial democracy) அக்காலத்திருந்தது. நிலமிருந்தோருக்கு உரிமை. மற்றோருக்குத் தொண்டூழியம். 2 விதக் குடியிருப்புக்களையும் பல்லவருக்கு அப்புறம்வந்த பேரரசுகளும் ஏற்றுக்கொண்டன. தமிழகம் முற்றுமுழுதான நிலவுடைமைக்கு (feudalism) ஆட்பட்டது.

ஒருசில வினைகள் தவிர்த்து, மற்றவற்றை மைய அரசு செய்யமுடியாது. ஊர்த்தலைவரை எதிர்த்து இவ்வரசுகள் ஒன்றுஞ்செய்யா. (எல்லாமே அதிகாரக் co-optation மட்டுந் தான்.) நிலக்கிழமைக்கும் அரசிற்கும் முரணெனில், அரசப்படைகள் (இக்காலக் காவலர்படை போல) ஊருக்குள் உள்வந்திறங்கும். ஊர்ச்சபை கலைக்கப்படும். புதுத்தேர்தல் நடைபெறும். மைய அரசிற்குத் தோதானவர் அடுத்துத் தேர்ந்தெடுக்கப்படுவார். இல்லெனில் மங்கலமோ, நல்லூரோ சிலகாலம் செயலிழக்கும். இப்படியே இவைகள் அரசின் கட்டுக்குள் வைக்கப்பட்டன. இவற்றின் உச்சக்கட்டச் சிக்கலே சோழர் காலத்தில் பெரிதும் எழுந்த வலங்கை இடங்கைச் சிக்கல்களாகும். இராசேந்திர சோழனின் கடைப்பிள்ளை அதிராசேந்திரன் ஆட்சியில் 4 ஆண்டுகள் எழுந்த குழப்பத்தில் நாடு வலுவிழந்ததும், அதிராசேந்திரன் கொலைசெய்யப்பட்டதும், சோழக் கொடிவழியே அவனுக்கப்புறம் இல்லாது போனதும். சுவையாரமான வரலாற்றுச் செய்தி. மீண்டும் சட்டம் ஒழுங்கைக் கொண்டுவர இராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்கள் (இவனொரு வேங்கிச் சோழன்; தனிச்சோழன் அல்லன்) ஆட்சிக்கு வந்தான். He started as a martial law administrator, but ended as an emperor. 

இங்கே voting process பற்றியல்லவா பேசினேன்? மருதன் இளநாகனார் அக 77 ஆம் பாடல் 7-12 ஆம் வரிகளுக்கு வருவோம். இதைச் ”சிலம்பின் காலம்” நூலில் பக்கம் 105-107 இல் பேசினேன்.

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,

இவ்வரிகள் அக்காலக் குடவோலை முறையைக் குறிப்பிடும். பெருஞ்சோழர், பல்லவர்காலக் குடவோலை முறை பற்றிய உத்தரமேரூர் கல்வெட்டுக்களைப் பெருமைகொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை, அகம் 77 தெரிவிப்பதை, மறந்து விடுகிறோம். நானறிந்தவரை தென்புலத்தில் தேர்தல்கள் நடந்ததைக் குறிக்கும் முதன்மையான சான்று இதுவே. பாடலுக்கு வருவோம். பாடல் பாலைத்திணை சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரத்தைக் கடக்க விரும்பிய தலைமகன் போகும் வழியில் தான்காணும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான்பிரிந்து செல்ல முற்படுவதைக் கைவிடுகிறான். பாடலின் உள்ளே அருஞ்சுரக் கொடுமையின் விவரிப்பு இப்படி அமைகிறது.
--------------------------
அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”இனி மேற்கொண்டு நகரமுடியாது” என்று எண்ணும் போது, இறந்துபோனவர் உடம்பு சுரத்தின்பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ ஒரு செந்தலைக் கழுகு (Red-headed Vulture, S arcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக்கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப்போடுகிறது.
---------------------------
[கழுகுபற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” என்ற பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இக்கழுகு கருநிற உடல் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன சிவப்புநிறங் கொண்டவை. உயரப் பறக்கும்போது கருத்தவுடலின் பின்னணியிலான சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளங்காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள்காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போலப் பெருங் கூட்டமாய் இது திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்னப் பெருங்கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். மற்ற கழுகுகளை விரட்டி முதலில் தன்வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகரசன் (King Vulture) என்றும் அழைக்கப்படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழவியலாது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெப்பத்தின் கொடுமையால் மயங்கி விழுந்தபின் இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப் பட்டுள்ளது.”]

இறந்து போன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக் கழுகு (செஞ்செவி எருவை= செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமையாற் சொல்கிறார். இதிற்றான் மேற்சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. அக்காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவர் பெயரை ஓலைநறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார். முடிவில் குடத்தின் வாயின் மேல் துணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, அதன்மேல் களிமண்ணையோ, அல்லது பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்துப் பொதுவிடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியுடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.

எப்படிக் குடத்திலிருந்து ஒலைநறுக்குச் சுருள்களை ”குண்டுகுண்டான அரசு ஆவண மாக்கள் (இடைபெருத்த அரசதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள் இறந்த குடரிலிருந்து குடலுருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச்சுருள் உவமை. உள்ளே போடப்படும் ஓலைகளை உவப்போலை/ ஒப்போலை என்று குறிப்பிடுவர். இப்பாட்டில் அந்தப்பெயர் இல்லை தான். அகம் 77 எண்ணியெண்ணி வியக்கக்கூடியதொரு பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலைமுறை தமிழகத்தில் வழக்கிலிருந்தது என்பதே. குடவோலையின் பழையபெயர் குழிசி ஓலை. தமிழகம் மாற மாறச் சொற்களும் மாறிவந்துள்ளன. குழிசி குடமாகி இன்று கும்பமுமாகி நிற்கிறது கும்பம் சங்கதம் போனதும் சிலருக்கு அது உகப்பாகிவிடுகிறது. (குடமுக்கு கும்பகோணமாகிப் போனது. காலக் கொடுமை.). இக்குடந்தான் இக்காலத்தில் ballot box ஆக மாறியிருக்கிறது. இங்கும் சனநாயகத்தைப் பெரிதும் எதிர்பார்க்காதீர்கள். ஏதோவொரு குடியாருக்குள் மட்டுமிருந்த பழக்கம்

புத்தர்காலத்தில் சாக்கியரிடையே, கோலியரிடையே கூட இப்பழக்கம் இருந்தது. அவரின் சபைகளை மகா சனபதமென்பார். சபைகள் மகா சன பதங்களைத் தொலைத்தே மகதப் பேரரசு எழுந்தது. வேளிர்களின் சன பதங்களைத் தொலைத்தே நம்மூரில் மூவேந்தர் ஆட்சியெழும்பியது. வேதகாலத்திலும் சனபதங்கள்/சபைகள் இருந்ததாய் சங்கத நூல்களின் வழி அறிகிறோம். ஆக இந்தப் பழக்கம் நெடுநாட் பட்டது. (தமிழென்று சொன்னால் சிலருக்குப் பொத்திக்கொண்டு வரும். சங்கத்திலில்லாது தமிழுக்குச் சொன்னால் எப்படி அவராற் பொறுத்துக்கொள்ள முடியும் ? எனவேதான் இங்கே வடபுலப்பழக்கம் பற்றியுஞ் சொன்னேன். எனக்கு அது ஏமந்தரும் :-00000. என்ன? சனநாயகத்தின் உரிமை, கொஞ்சங் கொஞ்சமாய் மக்கள் இடையே விரிந்திருக்கிறது. இப்போதுள்ள வாக்களிக்கும் உரிமை இன்னும் கூட விரியலாம்; விரியவேண்டும். ஊடே ஆங்காங்கே படர்ந்திருக்கும் முற்றதிகாரங்கள் (dictatorships) குறைய வேண்டும்.

உவத்தல்= விரும்பல். இன்னாரை இப்பொறுப்பிலிருத்த விரும்புகிறோம். மேலைமொழிகளில் உகரம்போய் உவத்து, vote ஆகிறது. சரியான சொற்பிறப்புத் தெரியாது ஆங்கிலச் சொற்பிறப்பியலில்

vote (n.) என்பதை mid-15c. என்று காலங்காட்டி, "formal expression of one's wish or choice with regard to a proposal, candidate, etc.," from Latin votum "a vow, wish, promise to a god, solemn
pledge, dedication," noun use of neuter of votus, past participle of vovere "to promise, dedicate" (see vow (n.)). Meaning "totality of voters of a certain class or type" is from 1888.” என்று விளக்கஞ்சொல்வார். vow (n.) "solemn promise," c. 1300, from Anglo-French and Old French voe (Modern French vœu), from Latin votum "a promise to a god, solemn pledge, dedication; that which is promised; a wish, desire, longing, prayer," noun use of neuter of votus, past participle of vovere "to promise solemnly, pledge, dedicate, vow," from PIE root *wegwh- "to speak solemnly, vow, preach" (source also of Sanskrit vaghat- "one who offers a sacrifice;" Greek eukhe "vow, wish," eukhomai "I pray"). Meaning "solemn engagement to devote oneself to a religious order or life" is from c. 1400; earlier "to bind oneself" to chastity (early 14c.) என்று சொல்வர்.

என்னைப் பொறுத்த வரை இச் சொற்பிறப்பியல் தவறு. இன்னுஞ் சரியாய் மேலை மொழிகளைப் பார்க்க வேண்டும். அது என் துறையல்ல. நம் தமிழார்வலரும் அகம் 77 ஐ எல்லாம் ஆய்ந்தறியாக் காரணத்தால் மேலே சொல்லும் promise ஐப் பிடித்துக்கொண்டு வாக்கு என்றாக்கி விட்டார். அருவி இருக்க நீர்வீழ்ச்சியைப் புதிதாய் உருவாக்கவில்லையா? அதுபோல இங்கு ஆகியிருக்கிறது. நெறியாளரிருக்க இயக்குநரென்ற பொருத்தமில்லாத சொல்லை இக்காலத்தில் உருவாக்கி இருக்கிறோமே? அதுவும் இதே கதை தான். உவத்தல், உவப்பு என்பது சரியான சொல். ”மக்களே! உங்கள் உவப்பை எனக்குக் கொடுங்கள்/போடுங்கள் என்று கேட்கவேண்டும்.  ”வாக்குக் கொடுங்கள்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு கையிற்கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரத்தையும் வாங்கிக்கொண்டு  உவப்பை வேறொருவருக்குப் போட்டுவிடுவார். இந்த அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை போலும்.

ஆனால் 1967 இலிருந்து வாக்கிற்குப் பழக்கப்பட்டு விட்டோம். எனவே இப்பொழுது உவப்பென்று மாறப் பலருக்கும் தயக்கமாய் இருக்கும். (இந்த இராம.கி. க்கு வேறுவேலையில்லை. இருக்கும் சொற்களில் தப்புக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்.) தமிழில் அரைகுறை மொழிபெயர்ப்புகள் நிறையக் கிடக்கின்றன. மரபு தெரியாமலிருந்தால் இப்படித்தான் கோளாறுகள் வந்துசேரும். பின் வேறுவழியின்றி அவற்றோடு வாழவேண்டும். என் கூற்று வேறொன்றுமில்லை. கோளாற்றைச் சரிசெய்கிறோமோ, இல்லையோ? அது கோளாறென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? 
   
அன்புடன்,
இராம.கி.

1 comment:

Kotravan said...

அய்யா, அரிராசேந்திரன் பிறகு சோழக்கொடி அந்துப்போயிற்று என்பதை நான் மறுககிறேன்.
குலோத்துங்கச் சோழன் இல்லையெனில் இராசேந்திரன் மகன் வழிப் பேரன் அதாவது அரிராசேந்திரன் மகன் ஆண்டடிருப்பான். இவர்கள் இருவரையும் நாம் ஈனியல் வழி ஒப்பிடுவோம. அரிராசேந்திரனுக்கும், அங்கமகா தேவிக்கும்(குலோத்துங்கச் சோழன் அன்னை) இராசேந்திரனின் 50% ஈன்கள் மட்டுமே வந்திருக்கும். இதன்படி குலோத்துங்கனும் அரிராசேந்திரன் மகனும் இராசேந்திரனின் 25% ஈன்களையும் இராசராசனின் 12.5% ஈன்களையும் சமமாய் பெற்றிருப்பர். ஆகைய்ல் குலோத்துங்கனும் இராசேந்திரன் கொடிவழி தான். அப்பன் பொருட்டு கொடிவழி கணிப்பது பெண்ணடிமைத்தனம். ஆணைப் போல்
பெண்ணும் தம் தகப்பனிடம் இருந்தும் தாயிடம் இருந்தும் சமமான அளவு ஈன்களை பெற்றிருப்பர். அங்கமகா தேவியின் இணையன் வேற்றுக் குடியான் என்றால் அரிராசேந்திரன் இணையாளும் வேற்றுக்குடியாள் தான். அப்படி பார்த்தால் அரிராசேந்திரன் மகனும் தன் தாய்வழி பார்ப்பின் வேற்று பரம்மரை தான்.