Saturday, September 15, 2018

சாத்தன் - 5

அடுத்தது நொடை பற்றியதாகும். இதற்குமுன் பழங்குடி மாந்தரின் தென்னிந்தியப் பரம்பலைப் பற்றிச் சொல்லவேண்டும். இதில் தமிழரிடம் இரு வேறு கருத்துகளுண்டு. ஒன்று, குமரிக்கண்டத்திலிருந்து வடக்கே தமிழர் நகர்ந்ததாய்ச் சொல்வது. இன்னொன்று, இலாமைட்டுகளுடன் தமிழரைத் தொடர்புறுத்தி, ஆரியர்க்கு முன் இரானிலிருந்து வந்தாரென்பது, (ஈனியல் ஆய்வு இதை உறுதிப்படுத்தவில்லை.) குமரிக்கண்டக் கருத்திற்கும் ஆதாரம் பெரிதும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டு சேர்ந்த குமரிக்கண்டக் கூற்றுகளை எளிதில் மறுக்கும் வாதங்கள் பலவும் இற்றை அறிவுப் புலங்களில் எழுந்து விட்டன. இருப்பினும் நண்பர் ஒரிசாபாலு போன்றோர் இன்னும் முயல்கிறார். (அவrரையாவது ”கடலுக்குள் சென்று ஆய்வுகளில் ஈடுபடுகிறவர்” என்று ஆர்வத்தோடு பின்பற்றமுடியும். அதேபொழுது அவரின்றி வேறுபலர் ”தம் புயங்களைக் குறிச்சிப்பலகையில் தொங்கவிட்டுக்கொண்டு” வெற்றுக்கதை சொல்லிக் கொண்டுள்ளார். இவர்களின் கற்பனையில் மட்டுமே குமரிக் கண்டம் உள்ளது.  ஆய்விதழ் ஏற்பாக ஒரிசா பாலுவின் குழுவிலிருந்து ஏதெனுங் கட்டுரைகள் வெளிவந்தது போலும் தெரியவில்லை. ஒருவேளை முயற்சி கனிந்துவருகையில் இவையெல்லாம்  வெளிவரலாம். நானும் ஒரு காலத்தில் குமரிக்கண்டத் தோற்றம் சரியெனத் தான் எண்ணினேன். இப்போதோ, அறிவியல் ஐயம் பெரிதாய் எழுந்த காரணமாய் என் நம்பிக்கை மிகவுங் குறைந்து விட்டது.

”16000 ஆண்டுகட்கு முன், இற்றைக்குமரிக்குத் தெற்கே  250 கி.மீ அளவிற்குக் கூட நிலம் நீண்டிருக்கலாம்; ஒருவேளை ஒரு தீவுக்கூட்டம் மடகாசுகர் வரைக்கும் நீளலாம். ஒருவேளை இலங்கை தமிழ்நாட்டோடு சேர்ந்திருந்து இருக்கலாம்; இந்திய மேற்குக் கிழக்குக் கடற்கரைகள் ஆங்காங்கே சற்று அகன்றும் இருக்கலாம்” என்று மட்டுமே இப்போது சொல்லமுடிகிறது. ஏனெனில் கடல்மட்ட ஆதாரங்கள் அதற்குள்ளன. ஆனால் இந்துமாக்கடலில் ”கண்ட” அளவிற்கு எந்தவொரு பெருநிலமும் இருந்ததாய் என் சிற்றறிவிற்குப் புலப்படவில்லை. (அதேபொழுது கடலில் நான் ஆழ்ந்தவன் இல்லை தான்.) அத்தகைய பெருநிலமாய், அக்காலத்தில், தென்கிழக்காசியா, பாப்புவா நியுகினி, ஆத்திரேலியா சேர்ந்த ”சாகூலே” இயல்பாய்க் காண்கிறது. முதல் மாந்தன் எழுந்தது அங்கா? ஆப்பிரிக்காவிலா? இருவேறு இடங்களிலா? - எனும் வாதங்கள் அறிவியலுலகில் போய்க் கொண்டுதானுள்ளன. அவ் வாதங்களின் முடிவில் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவின் ஒற்றை முகன மாந்த எழுச்சிக்கே வந்துசேர்கிறார். நானும் இப்போதைக்குப் பெரும்பாலோரோடே நிற்கிறேன். ஈனியல்வழி அறிந்த அண்மைச் செய்தியையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

70000 ஆண்டுகட்குமுன் வறண்டுபோன ஆப்பிரிக்காவிலிருந்து முகன மாந்தர் [ஈனியலார் Dr Spencer wells இவரை நெய்தலார் (coastal people) என்பார்] கிளம்பி, எத்தியோப்பிய, சோமாலியக் கடற்கரையை ஒட்டி நகர்ந்து, அரேபியத் தீவக்குறை தாவி, இரானியக் கடற்கரை வந்து, இந்தியத் துணைக்கண்டம் நுழைந்து, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நெய்தல், குறிஞ்சி, முல்லை நிலஞ்சார்ந்து, வேடுவச்சேகர வாழ்வில் நெடுங்காலம் வாழ்ந்தார். அவரில் ஒரு பகுதியார் கடற்கரை வழி மேலும் நகர்ந்து பர்மா, தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியாவிற் சேர்ந்தார், பல்லாயிரமாண்டுத் தென்னக வாழ்வில் இங்கேயே தங்கிப்போன நெய்தலாரில் இனக்குழுக்கள் தோன்றி ஏராளமான போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, முரண், அழித்தொழிப்புகளும் ஏற்பட்டன. இதன் விளைவால் சிறு இனக்குழுக்கள் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரியனவற்றிற் கரைந்தன. பொ.உ.மு. 600 க்குமுன் (அது எந்தக்காலம் என்று தெரியாது.) சேர, சோழ, பாண்டியரெனும் முப்பெருங் குழுக்களே எஞ்சினர். ஊடிருந்த வேளிர் பொ.உ.500/600 வரை இப்பெருங்குழுக்களிற் கரைவதில் எதிர்ப்புக் காட்டினார். [பொ.உ.300 களுக்கு அருகில் குத்தர் காலத்தில் இனக் குழுக்கள் மாறிச் சாதிகளாய்ப் பெருக்கெடுத்தது தமிழரின் பெருத்த சோகக் கதை.] இனி மொழிக்கு வருவோம்.

தென்னக வாழ்புலத்தில் தங்கிய, பேச்சுத்திறன் கொண்ட நெய்தலார் தமிழ் மொழி பேசினாரா? அல்லது அவரின் பழைய ஆப்பிரிக்க மொழி தமிழுக்கு மாறியதா? அன்றி வேறொருவர் கொணர்ந்த தமிழை இவர் பயின்றாரா? என்பதை எலாம் அறிவியல் வழி இதுகாறும் யாராலும் அறுதியாய்ச் சொல்ல முடிவதில்லை. ஒலியியல் (phonology) பேராசிரியர் புனல் க. முருகையனின் ஆய்வின் படி ”தமிழ் ஒலியன்கள் 105” ஆகும். 118/120 ஒலியன்களைக் கொண்ட, பழமையான ஆப்பிரிக்கச் சொடுக்கு (click) மொழியான San க்கு அருகில் அது எண்ணிக்கையில் வந்துவிடும். எனவே தமிழையும் தொடக்ககால மொழி போற் கருதலாம் தான். ஒலியன்கள் தொடர்பான இவ்வாதத்தை வேறு கட்டுரையில் தான் பேசவேண்டும். இதில் முடியாது. ”நினைவு தெரிந்தவரை தமிழர் இங்கிருந்தார்; இவரிற் பலர் கடலழிப்பில் அழிந்துபோனார்; மீந்தவர் பழந்தமிழ்நாட்டில் தொடர்ந்தாரெ”னும் இலக்கியக்குறிப்பு மட்டுமே நம்மிடம் உண்டு. ஓர்ந்துபார்த்தால் அது கொஞ்சமும் பற்றாது. பலரும் தொல்லியல், மாந்தவியல், ஈனியல், பண்பாட்டியல் எனப் பல்வேறு அறிவுப்புலங்களிற் சான்றுகளுண்டா என்று கேட்பார். எனவே அவற்றில் சிவவற்றையாவது நாம் உறுதிசெய்யவேண்டும். (பாவாணர் அன்பர் பலரும் அருள்கூர்ந்து என்னை இக்கருத்தில் மன்னியுங்கள். 50000, 60000 ஆம் ஆண்டுக் காலச்செய்தியை வெறும் இலக்கியங் கொண்டு நிறுவ முடியாது. என்மேல் சினமுறுவதிலோ, என்னோடு முரணுவதிலோ, பலனில்லை.)

சங்ககால வரலாற்றிற்குச் சற்றுமுன்கூட (மூவேந்தர் தொடக்கு பொ.உ.மு.600 க்கு முன்னென ஊகிக்கிறோம்) பழைய, நடு, புதுக் கற்காலம் வரை (ஏன் பெருங்கற்காலம் வரை) இனக்குழுக்களாகவே தமிழரிருந்தது தொல்லியல், இலக்கியம் போன்றவற்றால் தெரிகிறது. இனக்குழுப் பாதுகாப்பிற்காக மூவேறு வகையார் குழுக்களுள் எழுந்தார். அவருள் முதல் வகையாரைச் சூலத்தார் (=வேலார்; சூல்த்த> சூல்த்த்ர என்பது சங்கதம். வேலர்> வேளர்>வேளாளர் தமிழ்) என்றும், 2 ஆம் வகையாரை வில்லியர் (=அம்பார்; வில்லியருக்கு அவர் கையாண்ட, கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்ட தமிழ்ச்சொல் வாணியராகும். இதன் சங்கதச்சொல் கீழே) என்றும், 3 ஆம் வகையைக் கத்தியர் (=அரையர்; இன்னும்பல சொற்களுண்டு. சங்கதத்தில் கத்திய>க்ஷத்திய>க்ஷத்ரிய ஆகும்) என்றுஞ் சொல்லலாம். கடலுள் மீன் பிடிக்கச் சென்ற நுளையரும் 2 ஆம் வகை சேர்ந்தவரே. [இவரைப் பரதர் என்றுஞ் சொல்வர். நுளையென்பது துளைப்பொருள் சார்ந்து வலையைக் குறிக்கும். நுள்ளல்>நுளல்>நுளைதல்= நீருட்புகுதல். நுளுதல்>நுழுதல், முழுங்குதலைக் குறிக்கும். நுளையரை முழ்க்குவர்>முக்குவர் என்பர். இக்காலத்தில் நுளையரை மீனவரென்பதால், மற்றசொற்கள் பலருமறியாது வழக்கிழந்தன.] 

முன்சொன்ன சூலத்தார்/வேலார், வில்லியர்/நுளையர், கத்தியர்/அரையர் ஆகியோரில் முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை மிகமிகக் குறைந்த நாலாம் வகையாரான பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தாரென்பது ஒருதலைச்செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்தவர் இணைந்துகொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியல் அதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக் குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்த இடத்தில் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலை வில்லியரும், மீன்பிடித்தலை நுளையர்/பரதவருஞ் செய்தார்.

நாளாவட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதும் போர்செய்ய முற்படாது, சிலபோது உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் ஒவ்வொரு கூட்ட வில்லியரும் நுளையரும் முற்பட்டார் இதனாற் கொஞ்சங் கொஞ்சமாய் இனக்குழுக்கள் இடையே பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதில் ஏற்பட்ட பண்டமாற்றில் குறிப்பிடத்தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார். வில்லறிவு, வில்+தை= விற்றை>வித்தை>விச்சை ஆனது. வில்லியர், வித்தையர்>விச்சையர் ஆனார். (விச்சைய>விசய>வைஸிய என்று சங்கதத்தில் ஆகும்.) வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர், பண்டமாற்று எனும்) இருவேறு வில்லியர் செயல்களைத் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம் பயின்ற சொல் போர்த்திறமையையும், றகரம் பயின்ற சொல் பண்டமாற்றையும் குறித்தது. (இவ் வேறுபாட்டை இன்றும் பயில்கிறோம்.)  பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப்பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.] பரந்து வலையிடும் பரதவர் பரயவுந் தொடங்கினார்; பரதரும் ஆனார். இன்றும் மலையாளத்தில், ”இது எந்தா விலையாணு? பரயு” என்ற சாத்தாரப் பேச்சு உண்டு.

வில்லியர்க்கும் நொடையருக்கும் ஒப்புமைகளுண்டு. வில்லியர்போலவே நுளையர்>நுடையர்>நொடையருக்கும் வணிகப்பொருள் சொல்வார். வில்லியர் நிலத் தாரங்களையும், நுளையர் கடல் தாரங்களையும் விற்று வணிகஞ் செய்தார். (கடல் தாரங்களில் சோழிகளென்ற நாணயங்கள் மட்டுமின்றி முத்து, பவளமெனும் உயர்விலைப்பொருட்களும் இருந்தன.) நுள்>நூள்>நூழ்>நூழிலர்= செக்கெண்ணெய் வணிகர்; விற்றல் போலவே நொடுத்தலும் அமையும். (நா நயமின்றி, மறைத்து நொடுப்பது நொட்டல் ஆயிற்று. சிறு பிள்ளைகள் தம் விளையாட்டினூடே நொட்டலை உணர்த்த ஆள்காட்டிவிரலை மீன்பிடிக் கொக்கிபோல் வளைத்துக் காட்டுவர். நொடித்தல்= (விலை) சொல்லல். நொடுவின் மரூஉவான மொடுவிற்கு அதிகவிலை என்று பொருள். விலை போலவே நொடை அமையும். நொடைமை= விலைமை; நொடையாட்டி= விலைசொல்லும் மகளிர்.

நொடை என்பது கடலிற் கண்டெடுத்த பொருளுக்கும், அதைப் பதப்படுத்திய பொருளுக்குமான பெயர். அவ்வளவு தான். நொடுத்த(1), நொடுத்து(4), நொடை(13), நொடைமை (1) எனும் சங்க இலக்கியச் சொற்பயன்பாடுகள் அனைத்திலும் இதே பொருளைப் பெறுவோம். இன்னொன்றும் இங்கு சொல்ல வேண்டும். நொடையின் பொருள் பின்னாற் பொதுமைப்பட்டு மற்ற தாரங்களின் விலையையும் குறிக்கத் தொடங்கியது. 5.24 இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரத்தில் ”கள் நொடையாட்டியர்” என்ற பயன்பாட்டைக்  காணலாம். அதாவது பனங்கள், தென்னங்கள்ளின் விலை கூட நொடையெனச் சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக திரு.வேந்தனரசு சொல்லும் cost பொருள் ஒருக்காலும் அதற்கு அமையாது.

இத்தொடரை முடிக்குமுன் இன்னும் ஒரு பகுதி உள்ளது. சற்று பொறுக்க வேண்டும். 

அன்புடன்,
இராம.கி.

No comments: