Saturday, September 22, 2018

கவி

"கவி, தமிழ்ச்சொல்லா? சமசுகிருதத்தில் கவி, குரங்கைக் குறிப்பது. உண்மையா?" என ஒருமுறை முகநூல் சொல்லாய்வுக் களத்தில் கேள்வி யெழுந்தது. இதற்கு நேரடியாய் மறுமொழிக்க முடியாது. கவி/கபி என்பன வடமொழித்தோற்றங் காட்டினும், அவற்றின் ஆழத்தில் தமிழ்வேர் கொண்டவை. அதேபொழுது தமிழில் அன்றாடப் புழக்கம் கொள்ளாதன. கவியெனும் வினைச்சொல்லிற்கு ”மூடு, வளை, கருத்தூன்று, இடி, கவிழ்,” என்றும், பெயர்ச்சொல்லிற்கு ”குரங்கு, பூனைக்காலி, முருங்கை, பள்ளம், அளை/குகை, பாவலன், பாட்டு” என்றும் பொருள்சொல்வர். குரங்கு, பாவலன் பற்றியே இங்கு கேள்வியெழுந்தது.

தமிழில் குரங்கிற்கென 14 சொற்களுண்டு..அவை எல்லாம் ”மரக்கிளை, வால், நிறம், கூட்டம்” என்ற பொருள்களோடு தொடர்புடையவை. முதலில் அரி யென்ற சொல்லைப் பார்ப்போம். இது அல்>அர்>அரு>அரி என வளரும் அல்குதல்= தங்குதல். குரங்கு என்பது பெரும்பாலும் கிளையில் தங்குகிறது. அடுத்தது ஊகம்; கிளையில் தங்கும் குரங்கு அசையவும் செய்யும். உல்குவது (அசைவது) ஊகம்; உல்குதல்>உகுதல்>ஊகுதல்>ஊகம்; இது உகமென்றுஞ் சொல்லப்படும். உல்லலிற் பிறந்த வேறு சொற்கள் உந்தல், ஊஞ்சல் போன்றன. மூன்றாவது சொல் கடுவன் என்பதாகும். .கிளை விட்டுக் கிளை தாவி, மரம் விட்டு மரந் தாவி, மிக விரைவில் ஒரு குரங்கு நெடுந்தொலைவு கடக்கும். கடுகுவது (விரைவது) என்பதால் இது கடுகன்>கடுவன் என்றானது. விரைந்தோடும் பூனை, புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றிற்கும் கடுவன் எனும் பெயருண்டு. மேலைச்சொல்லான cat என்பது கூட கடுவனோடு தொடர்புடையது தான்.

அடுத்தது இவ்விழையின் பேசுபொருளான கப்பி/கவி. தமிழில் கப்பு/கொப்பு, கம்பு/கொம்பு, கவ்வு/கவை என்பவை மரக்கிளைக்கான சொற்றொகுதிகள். கப்பில் (கிளையில்) இருப்பது கப்பி. விலங்குகளின் பல பெயர்கள் இயற்கைத் தோற்றத்திலேயே அமையும். நாம்காணும் எல்லாக் குரங்குகளுக்கும் இயல் இருப்பிடம் மரக்கிளையே. ”கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப” என்று இப்புரிதலை தொல்காப்பியம் மரபியல் 12ஆம் நூற்பா உறுதியாக்கும். கவனங் கொள்லுங்கள். இப்பொருளைச் சங்கதஞ் சொல்வதில்லை. ஆயினும் ’கபி’யைச் சங்கதமென்றே பலருஞ் சொல்ல முனைகிறார். கப்பி என்பது, கபி/கவி என வடக்கே திரியும். பகரவீறு வகரவீறாவது தமிழிலும், வடக்கிலும் உண்டு. இதற்கு அடுத்தசொல் காருகம். உகத்தின் விதப்பு வகை காருகம் = கரிய உகம் = கருங்குரங்கு.

அடுத்தசொல் நாம்பெரிதும் பயன்படுத்துங் “குரங்கு” என்பதாகும். குல்>குர> குரங்கு என்பது வளைவைக் குறிக்கும். குரங்கிற் (கிளையிற்) தொங்கும் விலங்கு குரங்கெனப் பட்டது. தொங்கும் பொருளும் அதற்குண்டு. இனி அடுத்து வருவது கோகிலம் என்ற சொல். வெகுநாள் பழகிய குரங்கு, மரத்தில் மட்டுமின்றி நம் தோளிலும் கூட அமரும். கோகு= தோள். கோகில் இலங்குவது கோகிலம். அடுத்தது கோடரம் என்ற சொல்; கோடு = கிளை. மரக்கொம்பிற்கு இன்னொரு சொல் கோடு. அரம் என்பது தங்குவதைக் குறிக்கும். கோட்டில் தங்குவது கோடரம். இனி வரும் 2 சொற்கள் குரங்கின் விதப்பை நிறத்தாற் குறிப்பன. குரங்கெனும் பொருட்பாடு இவற்றுள் உள்ளடங்கியிருக்கும். இடம்பார்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாகம்= கருங்குரங்கு; பிலவங்கம் = பொன்னிறங் கலந்த செங்குரங்கு. அடுத்த சொல் மந்தி. குரங்குகள் பொதுவாய்க் கூட்டங் கூட்டமாய்த் திரியும். மந்து= கூட்டம். (ஆட்டு மந்தையைக் கவனியுங்கள்.) மந்தி = கூட்டக் குரங்கு. இதேபோல், மந்தன்> மாந்தன்= கூட்டமாய் அலைபவன் என்றுசொல்லும் மாந்தனுக்குச் சொல்லப்படும் மன்னுதல்= நிலைத்லெனும் கருத்துமுதல்வாதப் பொருளை நான் ஏற்பதில்லை. ஐம்புலன் சொற்களே பயன்பாட்டில் நீண்டு அறுபுலன் கருத்தை உணர்த்தின என திரு பக்கிரிசாமி வழி நான் சொல்வேன். (அதைச் சொன்னால் இங்கு கட்டுரை நீளும்.)

அடுத்தது மரக்கடம். மரத்தைக் கடப்பது மரக்கடம். இதை வடமொழி கடன் வாங்கி மர்க்கட என்றாக்கும். மோனியர் வில்லியம்சு அகரமுதலியில், இச் சொல்லிற்கு எச்சொற்பிறப்பும் காட்டப்படவில்லை. அடுத்தது வால் கொண்டதால் ’வாலி முகம்’ ஆகி, பின் வலிமுகம் எனக் குறுகும். முடிவில் வருஞ் சொல் வானரம். இது வால்கொண்ட நரத்தைக் குறிக்குஞ் சொல். நரலுவது நரம். நரலுதல்= பேசுதல். நரன் = பேசும் மாந்தன். வால்நரம் என்பது மாந்தனோடு ஒட்டும் சிம்பன்சி, உராங்குடாங், கொரில்லா போன்ற பெருங் குரங்களுக்கு முந்து நிலை ஆகலாம். இனி monkey, ape, simian (adj.) போன்ற வெளிச்சொற்களைப் பார்ப்போம். இவற்றிற்கு மூலந்தெரியாதென்றே மேலையர் சொல்வர். Barbary apes of Gibraltar மட்டுமே இரோப்பாவின் விதப்புக் குரங்கு என்பார். குரங்கின் மேலைச் சொற்கள் பெரும்பாலும் இந்தியா, ஆப்பிரிக்கா போன்றவற்றிலிருந்து இந்தோயிரோப்பிய மொழிகளுக்குப் போயிருக்கலாம். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் நான் வரவேற்பேன்.   

monkey (n.) 1520s, likely from an unrecorded Middle Low German *moneke or Middle Dutch *monnekijn, a colloquial word for "monkey," originally a diminutive of some Romanic word, compare French monne (16c.); Middle Italian monnicchio, from Old Italian monna; Spanish mona "ape, monkey." In a 1498 Low German version of the popular medieval beast story Roman de Renart ("Reynard the Fox"), Moneke is the name given to the son of Martin the Ape; transmission of the word to English might have been via itinerant entertainers from the German states. The Old French form of the name is Monequin (recorded as Monnekin in a 14c. version from Hainault), which could be a diminutive of some personal name, or it could be from the general Romanic word, which may be ultimately from Arabic maimun "monkey," literally "auspicious," a euphemistic usage because the sight of apes was held by the Arabs to be unlucky [Klein]. The word would have been influenced in Italian by folk etymology from monna "woman," a contraction of ma donna "my lady."

இதுவும் மர்க்கட போன்றதொரு சொல்லாகவே நான் கருதுகிறேன். என் சொற்பிறப்பியற் பரிந்துரை: மர்க்கடம் போலவே, மரங்கழி>மர்ங்கழி> ம(ர்)ங்கயி>monkey என்பதாகும். கழிதல் = கடத்தல். கழி>கயி இப்படியாதற்கோர் எடுத்துக்காட்டாய் நம்மூர் வாழைப்பழத்தைச் சொல்லலாம். தென் தமிழகத்திலிருந்து, வடக்கே ஆற்காடு, சென்னை என்று போகப்போக இது வாயப்பயமாயும் பலுக்கப் படும். ழகரவீறு, யகரவீறாவது பல்வேறு திராவிடச் சொற்களில் நடந்துள்ளது. அடுத்தது ape. இதற்கும் என் பரிந்துரை கப்பி> ஹப்பி>அப்பி என்பதே. அப்பி மேலைப்பலுக்கலில் ape ஆகலாம்.   

ape (n.) Old English apa (fem. ape) "an ape, a monkey," from Proto-Germanic *apan (source also of Old Saxon apo, Old Norse api, Dutch aap, German affe), probably a borrowed word, perhaps from Celtic (compare Old Irish apa, Welsh epa) or Slavic (compare Old Bohemian op, Slovak opitza), and the whole group probably is ultimately from an Eastern or non-Indo-European language. The common word until the emergence of monkey in 16c. More technically, in zoology, "a simian; tail-less, man-like monkey" 1690s. The only native apes in Europe are the Barbary apes of Gibraltar, intelligent and docile, and these were the showman's apes of the Middle Ages. Apes were noted in medieval times for mimicry of human action, hence, perhaps, the other figurative use of the word, to mean "a fool" (c. 1300). To go ape (in emphatic form, go apeshit) "go crazy" is 1955, U.S. slang, said to be from the armed forces. To lead apes in hell (1570s) was the fancied fate of one who died an old maid. Middle English plural was occasionally apen. Middle English also had ape-ware "deceptions, tricks."

இன்னும் ஒரு சொல் simian (adj.) என்பது. இதற்கான விளக்கமாய் ஆங்கிலத்தில் "characteristic of monkeys or apes," c. 1600, from Latin simia "ape," from simus "snub-nosed," from Greek simos "snub-nosed" (like the Scythians), also a masculine proper name, of unknown origin. Biological meaning "pertaining to monkeys" is from 1863. The noun meaning "an ape or monkey" first is attested in 1880,: என்று சொல்வர். இது சப்பை மூக்கு என்பதோடு தொடர்பு உடையது. மேடுபள்ளம் இல்லாத முகமே. சப்பை முகமாகும்.

தமிழில் சப்பை, சப்புதலெனும் அடித்தலோடு தொடர்புடையது. சப் எனும் ஒலிக்குறிப்புச் சொல் இங்கே உள்ளது. ”சப்பென்று அடித்தான். அவனை அடியடியென்று போட்டுச் சப்பிட்டான்.” சப்புதல், செப்புதலென்றும் செம்புதல் என்றும் செம்முதலென்றும் ஆகும். ”இப்படிப் போட்டு செம்மினா என்ன ஆகுறது?” செம்மிய முகம் = ஒரு பக்கம் சப்பையாகிய முகம். செங்குரங்கு என்றொரு வகையுண்டு. அதைச் செந்நிறங் கொண்டதாய் மட்டுமே பலருங் குறிப்பர். அது தவறு. செம்மிய முகங் கொண்டது கூடச் செங்குரங்கு ஆகலாம் குறுந்தொகையில் ”யாயும் ஞாயும் யாராகிரோ?” பாடலில் வரும் ”செம்புலத்திற்கு” செந்நிறம் தருவதற்கு மாறாய், ”சம புலம்” என்று கொண்டால் இன்னுஞ் சிறந்த பொருள் கிட்டும். இணையத்தில் என் பெயரோடு சேர்த்து ”செம்புலம்” என்று கூகுள் செய்தால் ஒரு காலத்தில் திண்ணையில் நானெழுதிய கட்டுரை கிடைக்கும். படித்துப் பாருங்கள். செம்முதல் = சப்பை ஆக்குதல் என்பதும் இதனோடு தொடர்புடையதே. simian = செம்மிய. monkey, ape, simian எனும் மூன்றிற்கும் நான் மேலே கூறியவை பரிந்துரைகளே; முடிவுகள் அல்ல. வழக்கம் போல் இராம.கி.யைச் சாடவேண்டாம்.

இனிப் பாவலனுக்கு வருவோம். கல் என்பது ஒலிக்குறிப்பு. கலகல, கலீர், கல்லென என்பவற்றில் ஓசைப்பொருள் வருகிறது. இதைக் கொல் என்றுஞ் சொல்வோம். கல்லான்>கல்லன்= ஒலி கேளாதவன். கல்லல்= ஒரே நேரத்தில் பலர் பேச எழுமொலி. அதனாலெழும் குழப்பம், கல்லவடம்= கல்லும் வட்டம், பறைவகைகளில் ஒன்று; கல்லவல்= கற்கவல்ல பா. கல்லார், கல்லாதார்= படிக்காதவர். கல்லி = படித்தவன். “குழந்தை கல்லியாய்ப் பேசுகிறது.”= குழந்தை படித்தவன்போற் பேசுகிறது. கல்லி>கெல்லி>கேலி= நகையாட்டு. கல்லுதல்= ஒலித்தல். கல்லெனல்= பேரோசைக்குறிப்பு, அழுதற் குறிப்பு; கலி= ஓசை; கலிப்பாட்டு= துள்ளும் ஓசைப்பாட்டு. கல்லோலம்= கல்லென்று ஒசையிடும் அலை;

கல்வி = கற்கை. ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பர். (நானும் அத்தகைப் பள்ளியில் சிற்றகவையிற் படித்தேன். 3 ஆம் வகுப்பில் அரசினர் கல்விமுறையில் வரும் தனியார் தொடக்கப்பள்ளிக்கு மாறினேன்.) திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரும், ஓரிரு சட்டாம் பிள்ளைகளும் இருப்பர். எழுத்து, செய்யுள், கணக்கு போன்றவை அங்கு சத்தமிட்டே சொல்லிக் கொடுக்கப்படும். ஆசிரியரோ, சட்டாம் பிள்ளையோ சொல்ல மாணவர் திருப்பிச் சொல்வர். என் தாத்தா என்னைச் “சத்தமாய்ப் படி”யென்றே சொல்வார். படிப்புக்குக் கல்விப் பெயர் இந்தச் சத்தங் கருதியே உள்ளார்ந்து ஏற்பட்டது. பள்ளி முழுதும் கல்லெனும் ஒசை கேட்டுக்கொண்டிருக்கும். கல்லிப் படிப்பதால் அது கல்வியாயிற்று. கல் எனும் ஏவலோடு உகரவீறு சேர்ந்து கல்வு ஆகிப் பின் கல்வி ஆனது. கல்வு> கல்வு> கல்வி. ஒப்பு நோக்குக: செல்> செல்வு(அழகு)> செல்வி. கல்வியோடு தொடர்புடைய சொல் கிட்டத்தட்ட எல்லாத் திராவிட மொழிகளிலும் உள்ளது. (இன்றும் என் வீட்டிற்கு அருகிலுள்ள CBSE பள்ளிக்கூடத்தில் கல்விச் சத்தம் ஓரோ பொழுதில் வானத்தைப் பிளக்கிறது. முகனக் (modern) கல்வி, ஓசையின் பங்கைப் பெரிதுங் குறைத்தாலும் அதை முற்றிலும் விலக்கவில்லை.)

கல்வியில் விளைந்த கூட்டுச்சொற்கள் பற்பல. அவற்றை இங்கு நான் விவரிக்கவில்லை. கற்பு= படிப்பு. இதுதான் இதன் முதற்பொருள். மாறாக பெண்ணின் மணவொழுக்கம் தொடர்பாய்ப் பிற்காலத்திற் பேசியது பொருள் மாறி வந்தது. உடல்வரிதியாய் இதைச் சொல்வது முறையற்றது. பெண்ணுக்கு ஓரொழுக்கமெனில் ஆணுக்கும் அதுவுண்டு. பெரியோரும், பெற்றோரும், கணவனும் கற்றுத் தந்தற்கு மாறாது வாழ்தலே சங்க காலத்தில் கற்போடு வாழ்தல் எனப்பட்டது. கற்பு= கற்றது. இதற்குச் சொல் திறம்பாமை என்று பெயருமுண்டு. கற்றல்= கல்லுதல்.               

கல்லி என்பதுபோல் கல்வி ஒரு காலத்தில் படிப்பையும், படித்தவனையுங் குறித்திருக்கலாம். இக்காலத்தில் படிப்பை மட்டுமே குறிக்கிறது. பேச்சு வழக்கில் கல்வி>கவ்வி>கவி என்றாகிப் படித்தவனைக் குறித்திருக்கிறது. வெட்கம் என்பதை வெக்கம் என்கிறோமே, அதைப் போல இதைக் கொள்ள வேண்டும். மெய்யொலி மயங்கல் பற்றித் தொல்காப்பியத்தில் வரும். இப்பழக்கம் பாகதத்திலும் உண்டு. இலக்கியம், இலக்கணம், யாப்பு, இசை என்று பலவற்றைப் படித்தவன் கவி. இது வடமொழி வழக்கம். மோனியர் வில்லியம்சு அகரமுதலியில் gifted with insight, intelligent, knowing, enlightened, wise, sensible, prudent, skillful, cunning, thinker, man of understanding, leader sage, seer, prophet என்றெல்லாம் பொருள்சொல்லி, a singer, bard, poet என்ற மற்ற பொருள்கள் வேதத்திலில்லையென்று சொல்லும். இதுவொரு முகன்மைக் கூற்று. கவியின் முதன்மைப் பொருள் தமிழின் படியும் சங்கதத்தின் படியும் படித்தவனே.

கவியின் ஆக்கம் கவித/கவிதா. தமிழில் இது தற்பவமாய்க் கவிதையாகும். கவிதைக்கும் பாட்டுக்கும் வேறுபாடுண்டு. நம்மூர் புதுக்கவிஞர் இவ் வேறுபாட்டை அறிந்தோரோ, என்னவோ தமிழிற் பாட்டு/ பா என்பது எப்போதும், பாடத் தெரிந்தவர் கூற்று. இவர் படித்தவராய் இருக்கத் தேவையில்லை. நம்மூர்ப் பாட்டி பாடுவது கூடப் பாட்டுத் தான்; பண் தான். பாடத் தெரிந்தவர் பாணர்/பாடினி. இவர் பாடுவது கவிதையில்லை. ஓசையின்றிப் பாட்டில்லை. கவியின் பெருவாக்கத்தைச் சங்கதத்திற் காவ்ய என்பர். காவ்ய என்பதற்கும் அங்கொரு வரையறையுமுண்டு. ஆனால் அது செய்யுளாய் இருக்கத் தேவையில்லை. தமிழிற் காப்பியம். (கற்பு கப்பு ஆகிப் பின் காப்பாகும். கற்று வந்தது காப்பு.) என்பதற்கும் ஒரு வரையுறை உண்டு. காப்பியத்தைக் காவ்யத்தின் தற்பவமாய்ச் சொல்வது பிழை. இரண்டுமே வெவ்வேறு முறையில் கல்வு, கற்பு என்ற தமிழ்ச் சொற்களில் இருந்து கிளர்ந்தவை. காப்பியம் இன்றும் தமிழில் உள்ளது காவ்யம் சங்கதத்திலுள்ளது.

அன்புடன்,
இராம.கி.  

2 comments:

Kotravan said...

அப்படியானால் கவி என்பது தமிழ்ச்சொல்லா?..
நீங்களே கூறுகிறீர், கவிதை கவிதா என்பதன் தற்பவம் என்று.
பறகு ஏன் நாம் ஏன் கவிதையை புதுப்பா என விளிக்கக் கூடாது?
காலப்போக்கில் பா வகைகள் மாறுகின்றன.. இக்காலத்தில் கவிதை எனப்படும் புதுப்பா வகை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏன் இதை நாம் புதுப்பா எனவும் இதை ஆக்குபவர் பாணர் எனவும் வழங்கப்படக்கூடாது?

Kotravan said...

அய்யா காலம் மற்றும் நீலம் என்பவைக்கான நிகர்த் தமிழ்ச்சொல் ஆக்கித்தர முடியுமா?